short story

மீனாக மாறியவன்

எஸ். சங்கரநாராயணன்

கிராமமெல்லாம் முகம் மாறி ரொம்பக் காலமாச்சு. இப்போது அந்தப் பழைய முகத்தைப் பார்க்க எத்தனை ஆசையாய் இருக்கிறது... 

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு முகம் இருந்தது. சட்டென்று அடையாளங் காண்கிற முகம். அணிகிற வஸ்திரங்களின் அடர்சாயம் போல. கிழவன்கோவில் என்றால் கொடுவாள் மீசைக்கார முனி. காவல்தெய்வம். அதன் கோவில்கொடை. திருநாள்க் கொண்டாட்டம்...
 

திறந்த வயல்வெளியும் அங்கே புதுசு புதுசாய்க் கோடையில் பறவைகள் வந்தடைவதுமான 'மாந்தோப்பு'....
 

இப்போதுபோல அப்போது பத்து நிமிஷத்துக்கொருதரம், பதினைந்து நிமிஷத்துக்கொருதரம் பஸ் கிடையாது. இத்தனை வாகனப்புகை கிடையாது. ஊர் சுத்தமாய் இருந்தது. எப்பவாவது வரும் பஸ். வரப்போக அதன் பின்னால் கிளம்பும் புழுதி. ஊய்யென்று அதன் பின்னால் ஓடிச்செல்லும் பொடிசுகள். ''வாங்கண்ணே, வாங்க மாமா, செளக்யந்தானே?'' என்று ஏற்றிக் கொள்கிற கண்டக்டர்.
 

எங்கள் ஊருக்கு என்ன அடையாளம்?
 

ஆ, ஹிக்கிரிகிரி! ஆச்சரியம். ஒரு கிறுக்குப்பயலை வைத்து, அதுவும் எங்கிருந்தோ எப்படியோ மழைத்தண்ணீர் போல வந்து ஊரில் சேர்ந்து கொண்டவனை கிராமத்தின் முகமாகச் சொல்வது, அது நினைவில் தங்குவது விநோதமானதுதான்.
 

அவன் பேர் யாருக்கும் தெரியாது. அவன் ஊரும், அவனைப் பற்றிய விவரங்கள் எதுவுமே யாருக்குமே தெரியாது. என்றாலும் அவனும் மனிதன் என்கிற அளவில் எப்படியோ ஊரின் ஓர் அங்கமாகிப் போனான், என்று தோன்றுகிறது.
 

யாரோடும் பேசமாட்டான். மேற்சட்டை போடாத உடம்பு. யாரிடமும் கைநீட்டி நின்று காசு கேட்க மாட்டான். தெருத் தெருவாகச் சுற்றித் திரிவான். கோயில்மாடு என்று சுதந்திரமாய்ச் சுற்றித் திரிகிற அந்த மனிதனைப் பற்றி எல்லாருக்கும் ஒரு பிரியம் எப்படியோ வந்திருந்தது. பசித்தால் ஏதோவொரு வீட்டு வாசலில் வந்து நிற்பான். ''ஹிக்கிரிகிரி!'' என்று விநோதமாய் ஒரு சத்தம் எழுப்புவான். அப்போது விரல்கள் பத்தையும் ஒரு விநோதமான மடிப்பில் சுருட்டி வாயை மறைத்துக் கொள்வது ஞாபகம் இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டு அம்மாவோ, யாராவது ஒரு பெண்மணியோ ஒரு தையல் இலையிலோ வாத இலையிலோ சோறும், அதன் தலையில் ஊற்றிய பழைய குழம்பும் கொண்டுவந்து தர, அதை அந்தத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடுவான். அவன் சாப்பிடுவதில் காணாததைக் கண்ட அவசரம் இராது. ருசித்துச் சாப்பிடுவான். ரொம்ப உற்சாகமாகி வி ட்டால் சாப்பிடும்போதே ஒரு சத்தம் கொடுப்பான். ''ஹிக்கிரிகிரி!'' எங்கள் ஊர்ப் பிள்ளைகளுக்கும், எல்லாருக்குமே பிடித்த, பழகிப்போன சத்தமாக அது ஆகியிருந்தது.
 

எங்கள் ஊரை அவன் நேசித்தான். நாங்களும் அவனை நேசித்தோம் என்பது அவன் காணாமல் போகும்வரை எங்களுக்குத் தெரி யாது. எங்கள் கிராமத்து தேவதையாக எத்தனை கம்பீரமாக சுதந்திரமாக வளையவந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே அனைவருக்கும் ஒரு சிரிப்பு. இளம் பிள்ளைகள், வாலிபப் பசங்கள் அவனைப் பார்த்ததுமே, ஊய்யென்று பஸ் புழுதி போலக் கிளம்பி ''ஹிக்கிரிகிரி'' என்று குரல் கொடுப்பார்கள். அவன் திரும்பி அவர்களைப் பார்ப்பான். அவனும் சட்டென்று விரல்களை விநோதமாய் மடித்துச் சிறு துள்ளலுடன் சுருட்டி, அதே சப்தமெழுப்புவான். ''ஹிக்கிரிகிரி!'' அதுதவிர அவனிடம் வேறு பேச்சே கிடையாது. அவனது பாஷை அது. வேறும் அலைத் தளும்பல். ஹிக்கிரிகிரி!
 

ஊரணிக்கரைப் பிள்ளையார்த் திண்ணையில் வாசம். மேலேயிருந்து நிழலைக் கொட்டும் ஆலமரம். அதன் சொகமான காற்று. எந்த மனுசனுக்கும் எந்த வெயிலுக்கும் அங்கே வந்தால் தூக்கம் சொக்கும். ஊர்மாடுகளெல்லாம் பிரியமாய் வந்தடைந்து கால்பரப்பி கூட்டங் கூட்டமாய் உட்கார்ந்து அசைபோடும் இடம் அது. அவன் எழுந்து சிலசமயம் கூத்துமேடை ராஜாபோல திண்ணையில் நடப்பான். இடுப்பில் அட்டைக்கத்தி இல்லாத ராஜா. மேற்சட்டை கூடவும் போடாத ராஜா. இங்குமங்குமாய் உலாத்தியபடி அவன் அப்படியென்ன யோசிக்கிறானோ? யாருக்குத் தெரியும்?
 

சில சமயம் தனிமையான அமைதியான சப்தமற்ற தருணங்களில் படித்துறையில் இறங்கி தண்ணீர் தழுவுகிற முதல் சில படிகளை வேடிக்கை பார்த்தபடி நிற்பதை கவனி க்கலாம். பெளர்ணமி வெளிச்சம். பால்மழை. கஷ்கத்தில் கிச்சு கிச்சு மூட்டினாப் போலக் கரைப்படிகளைச் சிரிக்க வைக்கும் அலைகள். அந்தத் தண்ணீருக்குள்ளிருந்து கிளுகிளுவென்று மேலேறிவரும் காற்று முட்டைகள். மீனின் மூச்சுக் காற்று அது, என அவனுக்குத் தெரியுமா?... அந்த அமைதிக்கு கரைநோக்கி மேலே வந்து கரையோரம் நடமாடும் மீன்கூட்டம். அவைகளை வெகு சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருப்பான். தன்னைப் பார்க்கவென்றே அவை வருகிறதாய் அவன் ஒருவேளை நினைத்துக் கொண்டிருக்கலாம். அவன் நீரில் இறங்கியோ குளித்தோ யாரும் பார்த்ததில்லை. என்றாலும் அவன் சுத்தமாய் இருந்ததாகவே நாங்கள் உணர்ந்தோம். கிராமத்துப் புழுதியுடன்!
 

ஊரில் வருஷா வருஷம் புதுமழை பெய்ததும் ஊரணிக்கும் ஊரெல்லை ஓடைக்கும் புதுத்தண்ணி வரும். ஊரையே உற்சாகப் படுத்திக் கொண்டு உள்நுழையும் தண்ணீர். அப்போது அவனையும் பிடிக்க முடியாது. அவன் நடையில் ஒரு துள்ளல் - தெரிப்பு தெரியும். வேகம் - விறுவிறுப்பு தெரியும். கண்ணில் என்ன பிரகாசம்! இன்னமும் இதோ உள்ளே அது பத்திரமாய் இருக்கிறது. அந்தக் குரலுங்கூட, என்பதையும் விஸ்தரிக்க வேண்டியதில்லை.
 

புதுத்தண்ணி வரவர புது மீன்களின் வரத்தும் அதிகமாகி யிருக்கும். இருளைத் தழுவிக் கிடக்கிற கரைநோக்கி அலைதழுவிக் கிடக்கிற படிகளில் கூட்டங் கூட்டமாய் மேலே வந்து பார்க்கிற மீன்கள். திடுமென டிரில் மாஸ்டரின் உத்தரவின் பேரில் அவையனைத்தும் விஷ்க்கென ஒரு திரும்பு திரும்பி உள்ளே மறையும் சத்தத்துக்கு அவனுள் ஒரு சிலிர்ப்பு வெட்டும். மாட்டின் உடம்பில் ஏற்படும் தோலின் அதிர்வு போல.
 

வருஷா வருஷம் ஊர்ப் பொதுவில், அந்த மீன்களுக்குக் குத்தகை விடுவார்கள். இந்தப் பிள்ளையார் மேடைப்பக்கம்தான் ஊர் கூடி ஏலம் நடக்கும். அநேகமாக அதுவும் ஒரு பெளர்ணமி ராத்திரியாகத்தான் இருக்கும். ஆடும் மாடும் மீன்களும் காற்றும் நடமாடித் திரியும் அந்தப் பிரதேசம் வெறிச்சிட்டு விடும். அவனும் - ஹிக்கிரிகிரி - அப்போது காணாமல் போயிருப்பான். அப்போது மாத்திரம் ஊருக்குள் யார்வீட்டு மாட்டுத் தொழுவத்திலாவது திண்ணையிலாவது படுத்துக் கொள்வான். மீன்களை வேட்டையாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. மனுசன் - அதிக அறிவுள்ள மனுசன் - இப்படியெல்லாம் பண்ணினால், அப்பிராணி மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டால், அதுங்க பாவம் என்ன பண்ணும், என அவன் வருத்தப் பட்டாப் போலிருக்கும். தனக்குள் என்னென்ன யோசனைகள் வைத்திருந்தானோ அவன்.
 

அப்போதெல்லாம் ஊர்ஜனங்கள் ஒத்துமையாய் இருந்தார்கள். கோயில் குருக்கள் முதல் வயல்வேலை சம்சாரி முனுசாமி வரை அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். கோயில் குருக்கள் மாட்டுக்காரனை டேய் போட்டு அழைப்பதில் ஒரு பிரியம் இருக்கும். ''நம்ம வீட்டெருமை கன்னு போட்டது சாமி'' என்று சாமியப்பன் சொல்ல, ''பேஷ். வெள்ளைக்கிழமை, விசேஷம். உன் தொழுவம் பெருகட்டும்டா'' என்று குருக்கள் மனசார வாழ்த்துவதைப் பார்க்கலாம். கிராமத்துப் புழுதியெல்லாம் போய் தார்ரோட்டில் வாகனப்புகை வந்து ஊரே மாறிப் போயாச்சு.
 

ஊரில் புதுப் பணக்காரர்கள் முளைத்தது ஞாபகம் வந்தது. அதான் மனம் இத்தனை சுத்தியடிக்கிறது. அப்போதுதானே பிரச்னை வந்தது. அது ஜாதிக் கலவரம் இல்லை ஸ்வாமி. பணக்கலவரம். அதுமாத்திரம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை வெளிப்படையாகச் சொல்ல எல்லாருக்கும் பயம். குடிகாரனிடமும் பணவெறி பிடித்துத் திரிகிறவனிடமும் யார் பேசுவார்கள்? பேசினால் அவர்களுக்கு ஏறுமா?
 

மணவாளன் கையில் எப்படியோ பணம் புரண்டது. அது கள்ளச் சாராயம் காய்ச்சியோ, ஏழை பாழை வயிற்றில் அடிச்சோ எப்படி யெல்லாமோ சம்பாதிச்ச பணம். இல்லாட்டி இத்தனைச் சுருக்கில் இத்தனைப் பணமும், ஊர் எல்லையில் சம்சாரிகளின் நிலத்தையெல்லாம் பேரம் பேசியும் அடித்துப் பிடுங்கியும் சுத்தி வளைத்திருக்க முடியுமா அவரால்?
 

மீன் குத்தகை பத்திப் பேசவந்தால் புதுப்பணம் பத்தியும், ஜாதி சமாச்சாரத்தையும் யோசனை பண்ணாமல் முடியாது.
 

வருஷா வருஷம் போட்டியில்லாமல் பஞ்சாயத்துத் தலைவர் சிவகுருநாதன் குத்தகை எடுத்துவிட்டுக் கோயிலுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவார். ஊரில் அவரை எதிர்த்துப் பேசியோ மரியாதைக் குறைவாய் நடத்தியோ பார்க்க முடியாது. ஊர்ப் பெரியதலை அவர்தான். நாட்டாமை - நியாயஸ்தர் அவர்தான். தமிழில் சினிமாக்கள் ஆட்சி வந்ததும், நாட்டாமைகள் எப்படியோ வில்லன்களாகிப் போனார்கள். எல்லார் வீட்டுக் கல்யாணத்துக்கும் அவர் வகை என்று பெரியசீர் போகும். ஊர்க்கோவிலுக்குக் கொடை என்றால் பெரிய நோட்டு அவர் முதலில் வைப்பார். அவர் பணத்தைத் தக்க வைத்துக்கொள்ள, அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள, என்று அதற்கும் ஆயிரம் தர்க்கவாதங்கள் பண்ணலாம். இந்தக் காலத்தில் அதை மறுக்கவும் வேணாம். விஷயம் என்னன்னா, அது ஜாதிப் பிரச்னை இல்லை! அது முக்கியம்.
 

ஏலநாளில் பஞ்சாயத்துக் குத்தகையில் சிவகுருநாதனுக்கு எதிராக ஒரு குரல். அது மணவாளனின் குரல் என யூகிப்பதில் சிரமம் இல்லை. ஊர் அதற்கப்புறமே அத்தனை சுரத்தா ய் இல்லை. பணக்காரனைச் சுத்தி நாலுபேர். பைத்தாரனைச் சுத்தி நாலுபேர் என்பது சொலவடை.
 

ஊர் ரெண்டுபட்டது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
 

செய்தித்தாளிலெல்லாம் எங்க ஊர் பத்திச் செய்தி வந்தது. எங்கள் ஊருக்குள் முதல்முறையாகப் போலிஸ் வந்தது. நொந்தவன் அப்பிராணி அத்தோடு சில கயவாளிகளையும் அது அள்ளிக்கொண்டு போனது.... நாய்வண்டி போல.
 
வெளியிறங்க முடியவில்லை. வேலை கீலை என்று போய்வருகிறவர்கள் பயந்து பயந்து நடமாட வேண்டிய சூழ்நிலை. எப்படி இருந்த ஊருக்கு இப்படி சீக்கு வந்துவிட்டதே. 

புதுத்தண்ணியும் புதுப்பணமும் பலிவாங்கும் என்று சொல்வார்கள். பண வரத்து ஊரையே ரெண்டாக்கி விட்டது. ஒரு பக்கம் சிவகுருநாதன் - பரம்பரைப் பணம். அவர் ஜாதிக்காரர்கள்.... இன்னொரு பக்கம் மணவாளன். அவர் ஆட்கள். குத்தும் வெட்டும் கொலையும்...
 

பக்கத்தூர் கிழவங் கோவில் கொடையில் முக்கியமான அம்சம் கிடாவெட்டு. ஐயோ நாங்கள் அந்தப் பக்கம் போக மாட்டோம். பதறும் குறும்பாட்டைப் பிடித்து வைத்துக் கொண்டு கழுத்தில் அரிவாளால் ஒரே போடு. தலை தெரித்து விழுமாம். சில சமயம் சாமியாடி ஒருத்தன் ஒரு குட்டியைப் பிடித்துத் தூக்கி, பல்லால் கடித்து அதன் ரத்தத்தை உறிஞ்சியபடியே உடலை விட்டெறிவானாம். நாங்கள் பார்த்ததில்லை. இதை நின்று வேடிக்கை பார்க்க முடியுமா என்ன? டவுசர் நனைஞ்சிரும் பார்க்கிறபோதே.
 

பிள்ளையார் சாதுவான கடவுள். ஊரணிக்கரைப் பிள்ளையார் முன்னிலையில் ஒருவன் குத்துப்பட்டுக் கிடந்தான்.
 

அவன் மணவாளனின் சகா என்று பேசிக் கொண்டார்கள். காட்டில் தீ பற்றிக் கொண்டால் என்னாகும்? அந்தக் கதை ஆகிவிட்டது.
 

விஷயம் விஷம்போல ஜிவுஜிவுத்துப் பரவியது. ஊரெங்கும் காலரா போல அந்த வியாதி, வெக்கை பரவியது. விலுக்கென்று எப்படியோ எங்கெல்லாமோ தீப்பற்றி எரிகிறது. ஊரே கலகலத்துப் போகிறது. மரங்களே நடுங்கின. அறுவடை வயல்களும் இந்தத் தீக்கு விதிவிலக்கல்ல. ஊருக்கெல்லாம் நிழலை வாரிக்கொடுக்கும் ஓடையோரத்து விருட்சங்களே அந்தச் சூட்டில் பட்டையுரிந்து திகைத்தாப் போலிருந்தது.
 

இடையில் நாங்கள் அவனை - ஹிக்கிரிகிரி - மறந்து போயிருந்தோம். கிராமத்தின் முகமே மாறிவந்தது. அதன் உக்கிரம், கொடூரம் சகிக்கக் கூடியதாய் இல்லை. ஊரில் அத்தனை அக்கிரமங்களுக்கும் மணவாளனின் ஆட்கள் சிவகுருநாதனையும், சிவகுருநாதனின் ஆட்கள் மணவாளனையும் காரணம் காட்டினார்கள். இடையே ஹிக்கிரிகிரி என்ன ஆனான், எங்கே போனான், யார் கண்டது? யாருக்கு அவன் நினைவு வந்தது. அவன் பசிபற்றி யாருக்கு யோசனை வந்தது... எல்லாருக்கும் அவரவர் பற்றிய பயம். உயிர்ப்பயம். அவரவர் பெண்டாட்டி பிள்ளைகள் குடும்பம் பற்றிய பயம்.
 

இரவுகளில் இப்போதும் அந்த அமைதி இருந்தது. என்றாலும் இது வேறு மாதிரியானது. திக்கென்ற அடிவயிற்றுக் குளிருடன் பயத்தில் விக்கித்துத் திணறும் குழந்தையின் வாய்மூடல் அது. அது மெளனமாகுமா? புயல் வருகிற அறிகுறி அல்லவா அது?
 

ஹிக்கிரிகிரி தனித்து அந்த இரவில் நடக்கிறான். ஊரே பயந்து நடுங்கிக் கதவைச் சாத்திக் கிடந்தது. அவனுக்குப் பசிக்கிறது. ஏதோவொரு வீட்டு வாசலில் ஹிக்கிரிகிரி நின்று ஒரு நிமிடம் பார்க்கிறான். ஜன்னல்களும் சாத்திக் கிடக்கின்றன. கதவு திறக்கப்படவில்லை. ஊருக்குச் சீக்குப் பிடித்திருந்தது... அவன் வாசலில் நின்றபடி பசிக்கிற வயிற்றைத் தடவியபடி திடீரென்று கத்துகிறான். ''ஹிக்கிரிகிரி!''
 

நேரமாகிறது. கதவு திறக்கப்படவே யில்லை. காத்திருந்ததுதான் மிச்சம். அவன் நாலுவீடு தாண்டித் தள்ளாடி நடக்கிறான். பசி. வயிற்றைத் தடவிக் கொள்கிறான்.
 
யானைப்பசி. யானைத் தள்ளாட்டம். இன்னொரு வீட்டு வாசலில் நிற்கிறான். அந்த வீட்டின் தாயை, அவள் குழந்தையை அவனுக்குப் பிடிக்கும். அம்மா நானும் உன் குழந்தைதானே?... வெளியே பூட்டு தொங்குகிறது. எங்கே அவர்கள்? ஊரைவிட்டு எப்போது ஏன் வெளியேறினார்கள்?
 

ஏமாற்றமாய் இருந்தது. கவலை. அவனும் ஊரைவிட்டுப் போய்விடுவான், என்று நாங்கள் உள்ளே படுத்தபடி யோசித்துக் கிடந்தோம். யாரும் கதவைத் திறக்க நினைக்கவில்லை. ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து ராப்பாடி - குறி சொல்லி உடுக்கையடித்தபடி வரும் குடுகுடுப்பைக்காரன் - ராப்பாடியை வேடிக்கை பார்க்கிறதைப் போல வேடிக்கை பார்க்க ஆசைப்பட்ட குழந்தைகளைத் தாய்மார்கள் இழுத்துப் பொத்திக் கொள்கிறார்கள்.
 

அவனது தனித்த திகைத்த குரல் ஊரெங்கும் கேட்கிறது. அதுதான் நாங்கள் அவன் குரலைக் கடைசியாய் கேட்டது.
 

மறுநாள் ஹிக்கிரிகிரியைக் காணவில்லை.
 

அவன் ஒருவேளை ஊரைவிட்டுப் போயிருக்கலாம், என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம்.
 

மறுநாள் ஊரில் புதுப் பிரச்னை கிளம்பியது. ஊரணிக்கரை முழுக்க நாற்றம் சகிக்க முடியவில்லை. ஊரணியில் கூட்டங் கூட்டமாய் மீன்கள் செத்து மிதந்தன. ஊரணித் தண்ணியில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள். யார் இதைச்
 
செய்திருப்பார்கள்?
 

மணவாளன் புதுக்குத்தகை எடுத்ததில் ஆத்திரப்பட்டு பண்ணையாரி ன் ஆட்கள் இதைச் செய்ததாக ஆத்திரத்துடன் மணவாளன் மீசையை முறுக்கினான். விஷயம் இன்னும் உக்கிரமாகும் போலிருந்தது. ஊரின் பயம் அதிகரித்தது. விவகாரம் இத்தோடு அடங்காது... இன்னும் முற்றும் போலிருந்தது.
 

திடீரென்று பிரச்னையில் புதுத் திருப்பம் ஏற்பட்டது. சிவகுருநாதனின் ஆட்கள் ஒரு புதுக்கதை கிளப்பி விட்டார்கள்...
 

எங்கே ஹிக்கிரிகிரி? அவனை ஆளையே காணவில்லை. அவன்தான் - சோறு கிடைக்காத ஆத்திரத்தில் ஊரணியில் விஷயத்தைக் கலந்துவிட்டு ஊரைவிட்டே போய்விட்டதாக குருநாதன் தரப்பில் பேசினார்கள்.
 

அப்போதுதான் ஊருக்கே ஹிக்கிரிகிரியின் ஞாபகமே வந்தது. அவன் இல்லை என்பதே பிரக்ஞையில் உறைத்தது.
 

யாருக்குமே அந்த வாதத்தில் நம்பிக்கை இல்லை. சே, அவன் அப்படிச் செய்திருக்க நியாயமே இல்லை. அவன் அப்பிராணி, அவன்மேல் பழிபோடுதல் அபாண்டம், என்று எல்லாருமே நினைத்தோம். நினைத்தோ மே யொழிய யாருமே பேசவில்லை. என்ன பேச? அவனவனுக்கு பயம். எதையாவது பேசி, யாருடைய எதிர்ப்பையும் சம்பாதிக்க அவனவனுக்கு அவனவன் குடும்ப பயம்.
 

ஹிக்கிரிகிரிதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றார் குருநாதன்.
 

அவன் ஆளையே கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஊரைவிட்டு வெளி யேறி விட்டதாய் நாங்கள் நினைத்தோம். ஊரே ஊனமாகி விட்டதாய் துக்கமாய் நினைத்துக் கொண்டோம். ஐயோ இவன் வரமாட்டானா, என்று குழந்தைகள் நினைத்தன. அந்தகச் சத்தம் - ஹிக்கிரிகிரி - அதை எப்படி மறக்க முடியும்?
 

விஷயம் ரெண்டுநாளில் எல்லாருக்கும் தெரிந்தது.
 

ரெண்டாவது நாள் ஹிக்கிரிகிரியின் ஊறிய உடல், ஊதிய பிணம் ஊரணிக்கரையில் ஒதுங்கியது.
 

பசித்துத் தள்ளாடி ஊரணிப்பக்கம் ஹிக்கிரிகிரி நடக்கிறான். அம்புபட்ட பிராணியின் நடையின் தள்ளாட்டம். எப்படியோ ஊரணிக்கரை வந்து சேர்கிறான். மெல்ல அவன் ஊரணிக்கரை படிகளில் இறங்கி, பசியுடன், அந்தத் தண்ணீரைப் பருக ஆரம்பிக்கிறான்.
 

அப்போதுதான் அவன் மீனாக மாறியிருக்க வேண்டும். மனிதவாசம் பார்த்து பயந்து விஷ்க்கென அவன் நீரடிக்குப் பதுங்கி யிருக்க வேண்டும்.
 

அப்போதுதான் அவன் வயிறு நீரால் நிரம்பி யிருக்க வேண்டும்.
 

அப்போதுதான் புதுத் தண்ணீருக்குப் பலிவாங்கும் பசி அடங்கியிருக்க வேண்டும்.
 




Comments

Popular posts from this blog