Monday, January 5, 2015

நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன்
வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி


*
பதிப்புரை

சங்கராபரணம்


96-ம் ஆண்டு.

தினமணி கதிரில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். ஞாநி தினமணி கதிர் பொறுப்பாசிரியராக இருந்தார். 'எஸ்.சங்கரநாராயணன் எவ்வளவு அருமையாக எழுதுகிறார்... ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான இடம் ஏன் கிடைக்கவில்லை' என்று கேட்டார். அந்த உரையாடலின் போது எஸ்.சிவகுமார், கவிஞர் ராஜமார்த்தாண்டன் ஆகியோர் இருந்தனர். அபிப்ராயங்கள் வளர்ந்தன.

நான் அந்த இடத்தில் இருந்தேன். அவர்கள் எல்லோரையும்விட சங்கரநாராயணன் எனக்கு நல்ல நண்பர். சில நேரங்களில் நல்ல ஆசானாக இருப்பவர். எனக்கு அந்த விவாதம் தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதலாக இருந்தது.

இறுதியில் ஞாநி கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. 'திறமைமட்டும் இருந்தால் இலக்கியத்தில் புகழின் உச்சத்தை அடைய முடியாதா? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?'

என்னவெல்லாமோ செய்கிறார்கள். கேள்விப்படுகிற விஷயங்கள் கூச்சத்தைத் தருகின்றன. ஓர் எழுத்தாளன் செய்யக் கூடாததை எல்லாம் செய்து, எழுதிப் பிழைக்கிறார்கள். சங்கரநாராயணன் அப்படியானவர்களில் ஒருவராக இல்லாததே பெருமை.

எஸ்.சங்கரநாராயணன் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியவர். 75 நூல்களுக்கு மேல் எழுதியவர் என்பதைவிட, முக்கியமானது ஒன்று உண்டு. பல இளம் எழுத்தாளர்களை அவர்களின் முதல் சிறுகதைகளிலேயே இனம் கண்டு, எழுதத் தூண்டுகிறவர். பல எழுத்தாளர்களுக்கு இல்லாத இந்தக் குணம்தான் அசாதாரணமானது. இலக்கிய உலகில் அவருக்கு அது ஏற்படுத்தியிருக்கும் இடம், மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத பாக்கியம்.

***
சிறுகதை எத்தனை அபூர்வமான கலைவடிவம்?
ஒரு நல்ல சிறுகதையின் முதல் வரியே நம்மை புதிய சூழலுக்குப் பழக்கிவிடுகிறது.

'தேவகி அக்காவை பொண்ணு பார்க்க வந்தார்கள்." வம்சம் என்ற இந்தத் தொகுப்பின் முதல் கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

'கிளிமூக்கு மங்கலம் நேர்வழி போனால் மூணரை கிலோ மீட்டர். குறுக்கு வழியில் போனால் முந்திப் போய்விடலாம்..'

இது இரண்டாவது கதையின் ஆரம்பம்.

ஹென்றியின் கடைசி வரி ஒட்டுமொத்த கதையையும் புரட்டிப் போடுவதுபோல, நல்ல சிறுகதை எல்லாமே நம்மைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் நல்ல ஆரம்பத்தோடுதான் தொடங்குகின்றன. சங்கரநாராயணன் கதைகள் எங்கே ஆரம்பிக்கப்பட வேண்டுமோ அங்கே ஆரம்பமாகி, எங்கே முடிய வேண்டுமோ அங்கே முடிகின்றன.
எழுத்தாளனுக்கு இதைவிட வேறு என்ன கொடுப்பினை வேண்டும்?

***
எழுத்தாளர் சங்கரநாராயணன் எனக்கு சிறுகதை எழுதக் கற்பிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் நான் எழுதிய சிறுகதைகள் மூலமாகவே அந்தக் கற்பித்தல் தொடங்கும். பத்திரிகையில் நான் எழுதிய சிறுகதை ஒன்று வெளியாகும். அந்தக் கதையைத் தொட்டு பத்து கதைகளையாவது சொல்வார். கதையோடு கதைகளை உரசிப் பார்த்துக்கொள்வதற்கான ஓர் அனுபவம் அது. ரஷ்ய, ஜெர்மன், லண்டன், அமெரிக்க… என கதைகள் விவாதம் விரியும். அனுபவமும் விரியும்.

மிக வேகமாக படிக்கவும் எழுதவும் தெரிந்தவர். எனக்குத் தெரிந்து எழுத்து அவருக்குத் தவம். இப்படிச் சொல்வது பழைய உவமைதான். என்றாலும் இதைவிட பொருத்தமான உவமை என்னிடம் இல்லை. எழுத்தைத் தவமாக நினைக்காத எத்தனையோ பேருக்கு அந்த உவமை வீணாகிவிட்டது என்றும் நினைக்கிறேன்.

நான் பத்திரிகையில் இருப்பதால் தொடர்ந்து அவரிடம் இருந்து கதைகள் வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன். கேட்டதும் கொடுப்பவர் கிருஷ்ணர் மட்டுமா, சங்கரும்தான். ஓவியரிடம் படம் வரையச் சொல்லிவிட்டு கதை கேட்கலாம். அவ்வளவு வேகம். இவர் விஷயத்தில் வேகம், விவேகம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

***
இவருடைய எழுத்துக்களின் ரசவாதம் அபரிமிதமானது. இருட்டில் லாரியில் பயணம் செய்வதை எழுதினால் (லாரி) நமக்கு குளிரும் குலுக்கலும் ஏற்படும். கட்சிக்காரர்கள் ஸ்ட்ரைக் நடத்தினால் பதற்றம் தொற்றிக்கொள்கிறது (கதவடைப்பு). ஒரு சூழ்நிலைக்குள் நம்மை லாகவமாக அழைத்துச் செல்வதில்- கதையின் மனச் சித்திரத்தை உருவாக்குவதில் - எஸ்.சங்கரநாராயணன் சூரர்.

திருட்டு என்ற கதை. அதில் இருட்டும் திருட்டும் போட்டிபோட்டு விரட்டும். திருடனின் உத்தி, அவனுடைய மனஓட்டம்... இப்படியாக விவரித்துச் செல்கிறார். நாமும்கூட நேர்மையான போலீஸ் அதிகாரி இருப்பதுபோல ஒரு நேர்மையான திருடனாக இருக்கலாம் போல ஆசை ஏற்படுகிறது. 247 எழுத்துகளை வைத்துக்கொண்டு இவர் செய்யும் ரசவாதம் இது.

இந்தத் தொகுப்பில் சௌந்தர்ய லஹரி, பழையன புகுதலும் புதியன கழிதலும், மேளா ஆகியவை மனப் பிறழ்வைச் சுற்றிச் செல்லும் கதைகள். பைத்தியங்களில்தான் எத்தனை வகை?

புத்திசாலியாக இருந்தாலும் வேலை கிடைக்காது என்கிற சேக்ஸ்பியரும் வெங்காயமும் கதை, எத்தனை புத்திசாலித்தனமான கதை?

வம்சம், துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை, நாங்கள், ஊதல் உதைபட வாழ்தல், ஒலிச்சித்திரம், மெழுகுவர்த்தி, ரசாபாசம் போன்றவை யூகிக்க முடியாத திருப்பங்கள் கொண்டவை. ஆனால், யாரும் யூகித்துவிடக் கூடாது என்ற பிரயத்தனம் தொனிக்காதவை. அதுதான் கதையின் முடிவின்போது ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

***
சமகால எழுத்தாளர்கள் பலரை எனக்கு நேரடியாகத் தெரியாது. அவர்களில் பலரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் சங்கரநாராயணன். அவர்களில் சிலரைப் பற்றிய அபிப்ராயங்களை என் மனத்தில் உருவாக்கிவிட்டவரும்கூட.

அவை பெரும்பாலும் என் சொந்த அனுபவத்திலும் சரியாகத்தான் இருந்தது. இருவரும் ஒரே மாதிரி யோசிக்கிறோமா? இல்லை. இருவருக்கும் சில அலைவரிசை பொருத்தம்.

***
என்னை முதன்முதலாக சிறுகதை எழுத்தாளராக அங்கீகரித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் எஸ்.சங்கரநாராயணன் ஒருவர். புகழேந்தி தங்கராஜ், பாவண்ணன் போன்ற சில முதல் முக்கியமானவர்கள் உள்ளனர்.

என்னைப் பதிப்பாளராக அங்கீகரிப்பதில் ஒரே முக்கியமானவர் சங்கரநாராயணன் மட்டும்தான். ஒரே நேரத்தில் இரண்டு நூல்களைப் பதிப்பிக்கக் காரணமாக இருக்கிறார். எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் எழுதிய 'எல்லா கோட்பாடுகளும் அனுமானங்களே' என்ற கட்டுரைத் தொகுப்பும் 'நன்றி ஓ ஹென்றி' சிறுகதை தொகுப்பும் என்னைப் பொக்கிஷம் புத்தக அங்காடியின் 'அதிபரா'க்கி உள்ளன. அவருக்கு நன்றி.

ன்னுடைய சிறுகதை தொகுப்பு ஒன்றுக்கு அவர்  எனக்கான ஆற்றுப் படை ஒன்றை முன்னுரையாக எழுதினார். இது அவருக்கு நான் சூட்டும் ஆபரணம்

அன்புடன்,
தமிழ்மகன்
4.1.15


2 comments:

  1. பதிப்புரை நிறைய விஷயங்களைச் சொல்லாமல் சொல்கிறது . அது சரி , மொத்தம் எத்தனை ஓ க்கள் புத்தகத்தில் ?

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி சப்ரா - 22 கதைகள் என்று நினைக்கிறேன்... எலலாமே கச்சிதமான வடிவமைப்பு கண்ட கதைகள்... புத்தகக் கண்காட்சிக்கு வாருங்கள்... ஸ்டால் 419 கரிகால் சோழன் சாலை புத்தகக் கண்காட்சி ஒய் எம் சி ஏ திடல் நந்தனம்... சனவரி 09 முதல் 22 வரை

    ReplyDelete