short story

*
ஈருடல் ஓருயிர்

எஸ். சங்கரநாராயணன்
(

தானறியாத அசதியில் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அதற்கு உடம்பு சரியில்லை. மூச்சு விடும்போதே நெஞ்சில் கர் புர்ரென்று சளிக்கட்டு கேட்கிறது. இருந்த சளிக்கு உடம்பில் சூடு அதிகப்பட்டு லேசான ஜுரம் வேறு.. இரவு நெடுநேரம் வரை கண் திறக்காமல் சிணுங்கிக் கொண்டே இருந்தது. மாத்திரையோ மார்பில் தடவிவிட்ட மருந்தோ பெரிதும் பயன்படவில்லை.

     எப்படியும் டாக்டரிடம் கூட்டிப் போனால் தான் சரியாகிறது. என்னதான் கைவைத்தியம் என்று போராடினாலும் டாக்டரிடம் போய் அவரது தட்சிணையை வைத்துவிட்டால் அநேகத்தரம் சரியாகி விடுகிறது. அவள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள். பத்து மணியளவில் தான் டாக்டர் வருவாள். நல்லவேளை. குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. அவள் விறுவிறுவென்று வீட்டு வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள். பத்துப் பாத்திரங்களே தேய்ககாமல் கிடந்தன. வீடே கூட்டவில்லை இன்னும். அவளுக்கே வீட்டைப் பார்க்கப் பிடிக்கவில்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் என்னவேலை ஓடுகிறது...  அதுவும் குழந்தைக்கு முழிப்பு வந்துவிட்டால் அது அழ ஆரம்0பிக்கிறது. பால் கொடுத்தால் வேண்டாம் என்று புறக்கணிக்கிறது. அம்மாவின் உடல்சூடே ஆறுதல் அதற்கு. அம்மாவை விடாமல் ஒட்டிப் படுத்துக்கொண்டு மார்பையோ புடவையையோ பிடித்துக் கொண்டு எப்படித் தூங்குகிறது… இன்னும் பேச்சு வரவில்லை. அதற்குள் என்ன சூட்சுமமாய் இயங்குகிறது.

     குழந்தை நன்றாகத் தூங்கும்வரை காத்திருப்பாள் அவள்.  குழந்தையின் தலையை ஆதரவாய்த் தடவிக் கொடுப்பாள். உச்சந் தலையைத் தடவத் தடவ சாதாரண நாளிலேயே அதற்கு தூக்கம் சொக்கும். அதன் பிஞ்சுக் கைகளில் இருந்து மெல்ல புடவையை உருவிக் கொள்வாள். அதற்கு சத்தம் கேட்காமல் அடிமேலடி வைத்து அந்த அறையைவிட்டு வெளியேறுமுன்… சட்டென்று உடல் பதற விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிடும். பொல்லாத போக்கிரிக் குட்டி! அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும். திரும்பப் போய் அந்தப் பூவை அள்ளிக் கொள்வாள். எப்போதும் அப்படிப் பக்கத்திலேயே இருக்க வேண்டும் அதற்கு. இதுபற்றி அவளிடம் ஒரு பெருமிதமான அலுப்பு இருந்தது.

     குழந்தையை விட்டுவிட்டு வேலைக்கு என்று இறங்கவே அவளுக்கு இஷ்டம் இல்லை. மூணுமாத பிரசவ விடுப்பு முடிந்து விட்டது. இனி சம்பளமில்லாத விடுப்பு தான், என்றானதும் அவள் வேலைக்குத் திரும்பப் போகவேண்டிய நிலை இருந்தது. அப்படியும் ஒரு மூணுமாதம் சம்பளமில்லாமல் வீட்டில் இருந்தாள். குழந்தை வளர்கிறதையும், அது முகம்பார்த்துச் சிரிக்கிறதையும் பார்க்கப் பார்க்க மனசெல்லாம் பாலாய்ப் பொழிந்தது அவளுக்கு. இப்போது சப்தங்களை கிரகிக்கவும் சிறு சப்தங்களை அதுவே உருவாக்கவும் பிரக்ஞை வந்திருந்தது அதற்கு. பசி என்றால் முன்பெல்லாம் தன்னைப்போல அழும். இப்போது பிரக்ஞைபூர்வமாய் அது அழுதது. அது அவளுக்குப் புரிந்தது. குழந்தை அழுவதைப் பார்த்ததும் பதறி என்ன கைவேலை இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு ஓடிவருவாள் அவள். அவள் கிட்டே வந்ததும் சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்கும் பார். என்ன சாமர்த்தியமாய் இருக்கிறது இது, என்று ஆனந்தத் திணறலாய் இருந்தது அவளுக்கு. வேண்டுமென்றே திரும்ப முகத்தை மறைத்துக் கொண்டால் திரும்ப அழ ஆரம்பிக்கும். ‘‘ஏய் கள்ளழுகைக் குட்டி!‘‘ என்று தூக்கிக்கொள்ளும் போது விரலைப் போட்டு குதப்பிக்கொண்டே சிரிக்கும். இதற்குத்தான் எத்தனை அறிவு என்று மனம் கிறுகிறுக்கும். ‘ஆமா அது ஆய் போனாக்கூட அத்தனை அறிவோடச் செய்யறதுன்னு உனக்குப் பூரிப்பு‘ என்று கிண்டலடிப்பார் இவர். இவருக்கு வேற வேலையென்ன!

     பசியற்ற நேரங்களில் தானறியாமல் அது சில சப்தங்களை எழுப்பும். கிர்ர்ர். பிறகு திரும்ப அந்த சப்தம் தொண்டையில் எப்படி உற்பத்தியாகிறது என்று கண்டுகொள்ள முயற்சி செய்யும். அதையே திரும்பத் திரும்ப அது சொல்லிப் பார்த்துக் கொள்ளும். அது சப்தங்களை உணர ஆரம்பித்ததும் அதை அவள் ஊக்குவிக்க ஆரம்பித்தாள். அதைப்பார்க்க குனிந்து அதே சப்தங்களை அவள் எழுப்பிக் காட்டினாள். அதே ஸ்தாயியில் அவளும் அதே சப்தத்தை குழந்தையைப் பார்த்து எழுப்பினாள். குழந்தை சிரித்தது. பின் உற்சாகமாய் சிறிது கழித்து அம்மாவை முகத்தைப் பார்த்தபடி அதே சப்தத்தை அது இழுத்தது. கிர்ர்ர். ரொம்பப் பேசத் தெரிந்தாற் போல பாவனை அதற்கு. அவளும் திரும்ப அதே சப்தத்தை எழுப்பி எழுப்பி அதைப் பேச வைத்தாள். சுற்றிலும் உலகமே அப்போது அவளுக்கு மறந்து போயிருந்தது. குழந்தையோடு விளையாடுவது பரவச போதையாய் இருந்தது.

     பிறகு அவள் இந்த சப்தங்களை குழந்தைக்கு மாற்றிக் காட்டினாள். கிர்ர்ர். அதை சற்று நீட்டி இழுத்துச் சொன்னாள். கொஞ்சம் குழம்பி, ஆனால் குழந்தை சட்டென்று அதை உடனே உள்வாங்கிக் கொண்டது. அதுவும் சிறிது நேரத்தில் அதே சத்தத்தை வெளியேற்றியது. அம்மாவுடன் பெரிதும் பேசுகிறதாய் அதற்கு எண்ணம். பெற்றவளுக்கோ வானத்தில் மிதக்கிற பிரகாசம். இப்போது அவள் கிர்ர்ர்ர்ர் என்று சத்தம் இழுத்து விட்டு உடனே சட்டென்று சுருக்கி கிர் என்று அதன்முன் குனிந்.து நிறுத்தினாள். சிறு அதிர்ச்சி தருவதைப் போல. பயமற்ற சிறு அதிர்ச்சி. முதலில் விக்கென்று விக்கி உடனே மீண்டு அது சிரித்தது. குழந்தை சிரிக்கிறபோது அதன் முகமெல்லாம் கண்ணெல்லாம் கன்னமெல்லாம் அந்தச் சிரிப்பு வழிந்தது. கெக் கெக் என்ற அவளது சிரிப்புச் சத்தம் அறைகளை நிறைத்தது. சிரிப்பு ஓய்ந்ததும் திரும்ப அம்மா அந்த அதிர்ச்சியைத் தரமாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன் அம்மாவைக் குறிப்புப் பார்வை பார்த்தது. இந்தக் குட்டி மூளைதான் எத்தனை குறும்பாய் ஊடாடுகிறது! திரும்ப அதை அவள் செய்தாள். கெக் கெக் என்று குழந்தை வயிற்றை எக்கிச் சிரிக்கிறது. இதை ரசிப்பதில் குழந்தைக்குக் கொஞ்சம் ஆர்வம் வற்றுகிறாப் போலிருந்தால் அவள் இப்போது குழந்தைக்குப் பழகிவிட்ட அந்த அதிர்ச்சியைத் தந்தபடியே, அதன் தொப்பையை அமுக்கிக் கொடுத்தாள். கூச்சம் தாளாமல் குழந்தை உற்சாகப்பட்டு திரும்பச் சிரிக்க ஆரம்பித்தது.

     எல்லா விளையாட்டும் ஓய்ந்து குழந்தை சோம்பிக் கிடந்தது பார்க்க சகிக்கவில்லை. ஒருநாள் முழுக்க ஜுரம். கைவைத்தியத்துக்குக் கட்டுப்பட்டு விடும் என்றிருந்தது பிசகோ என்று பட்டது. அவளுக்கு வருத்தமாய் இருந்தது. நேற்றே டாக்டரிடம் கூட்டிப் போயிருக்கலாம். அம்மா பார்த்துக்கொள்வாள் என்று குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு அங்கிருந்து… நேரமாகி விட்டது… ஆட்டோ பிடித்து அவள் அலுவலகம் போனாள். அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. அம்மா வீட்டில் போன் இல்லை. பேசவும் முடியாதிருந்தது. செல் வாங்கிக்கொள்ளவில்லை அம்மா. அவள் அந்தக்கால மனுஷி. வாங்கிக்கொடுத்தாலும் தூக்கி வைத்துவிடுவாள்… அம்மாவிடம் குழந்தை பற்றி தகவல் கேட்கவும் முடியாதிருந்தது. அதற்கு ரொம்ப முடியவில்லை என்றால் அம்மாவை பக்கத்துப் பலசரக்குக் கடை பிசிவோவில் இருந்து கூப்பிடச் சொல்லிச் சொல்லியிருக்கிறாள். பிசிவோ எண்ணையும் வாங்கிவைத்துக் கொண்டிருந்தாள்.

     அவள் படும்பாடு, அம்மாவுக்கு எல்லாம் வேடிக்கை போலிருந்தது. “சளிக்கட்டு தாண்டி. அதுக்கு இந்த அலட்டல் அலட்டிக்கறியே…“ என்று புன்னகைத்தாள். சட்டென்று அம்மாமேல் கோபம் தான் வந்தது. சமாளித்துக் கொண்டாள். இப்போது அவள் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன் என்று உதவிசெய்கிற நிலையில் அவளால் கோபித்துக்கொள்ள முடியாது. இவர்கள் எங்களையெல்லாம் வளர்த்த முறை தெரியாதாக்கும், என்ற ஆத்திரம் உள்வெம்மையாய்ப் பரவியது. எனக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது… அவள் சிறிது மூச்சு வாங்கிக்கொண்டாள். ஒருவேளை அம்மா சொல்வது உண்மையாய் இருக்கலாம். அவள் தனக்குள் புன்னகை செய்துகொள்ள முயன்றாள். கல்யாணம் ஆனதும் எப்படி வேறாளாய்ப் போனேன்… அம்மாவிடம் தொப்புள்கொடி அறுத்துக் கொண்டாற் போல பிரமை சூழ்ந்தது. என்னுலகம் கிளை பிரிந்துவிட்டது. என் ஞாபகங்கள் பிரக்ஞைகள் கிளை பிரிந்துவிட்டன. ஆ, கைக்குழந்தையின் முன்னால் கணவன் பற்றிய கவனங்களே ஒருமாற்று குறைந்து தான் போனது! அது உண்மைதான்.

     அலுவலகத்தில் அவளுக்கு பக்கத்து சீட் சியாமளாவுடையது. அவள் குழந்தைக்கு எட்டு மாதமாகிறது. குழந்தையை அலுவலகம் எடுத்துக்கொண்டு வந்துவிடுவாள். கீழே க்ரீச் இருக்கிறது. அங்கே விட்டுவிட்டு அவ்வப்போது போய்ப் பார்த்துவிட்டு வரலாம். அதற்குப் பசிக்கிற நேரம்பார்த்துப் போய்ப் பால் கொடுத்துவிட்டு வரலாம். குழந்தையின் நியதிகள் அவளுக்குத் தெரியும். டைப் அடித்துக்கொண்டே யிருப்பாள். இப்ப மூச்சா போயிருக்கும், ஆயா துணி மாத்தினாளோ இல்லையோ… என்று எழுந்துபோய்ப் பார்த்துவிட்டு வருவாள். மேலேயிருந்து போன் பண்ணி குழந்தைக்கு பிஸ்கெட் எடுத்துத் தரும்படி சொல்வாள்.

     இப்படி போன் அழைப்புகள் ஆயாவுக்கு எரிச்சல் ஏற்படுத்தும். தெரியும். தன் வேலைகளை இன்னொரு நபர் நினைவு படுத்துவது யாருக்கும் உவக்காதுதான். தவிரவும் அங்கே சியாமளாவின் குழந்தை மாத்திரம் அல்ல, நிறையக் குழந்தைகள் இருக்கின்றன. ஆயாவுக்கு இருப்பதோ இரண்டு கைதானே? எத்தனை வேலைதான் செய்ய முடியும்? எப்பவாவது ஆயாவுக்கும் சியாமளாவுக்கும் இதைப்பற்றி வாக்குவாதம் வருவது உண்டு.

     “எது சொன்னாலும் உனக்கு எரிச்சல் வருது ஆயா. உனக்குக் கொஞ்சம் பொறுமை வேணும்“ என்றாள் சியாமளா.

     “உங்களுக்கும்…“ என்று அப்போது ஆயா பதில் சொன்னாள்.

     எல்லாம் இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பேச, யாருக்குப் பரிந்துபேச தெரியவில்லை. நாளைக்கு ஆயாவிடம் நானும் குழந்தையை ஒப்படைத்தால் இவள் சரியாய்ப் பார்த்துக்கொள்வாளா, என்கிற கவலைதான் அப்போது மனசில் வந்தது.

     “எத்தனையோ ஆயா பாத்தாச்சி. நம்ம க்ரீச்சுக்கு ஒரு நல்ல ஆயா கிடைக்க மாட்டேங்கறாளே…“ என்றாள் சியாமளா இவளைப் பார்த்து. லேசாய்த் தலையாட்ட ந்னைத்து மௌனமாய் அவளையே பார்த்தாள் இவள். “ஆமா, இந்தச் சம்பளத்துக்கு வேற எவ வேலைக்கு வருவா?“ என்று ஆயா முதுகுக்குப் பின் முணுமுணுப்பது கேட்டது.

     குழந்தையைத் தானும் க்ரீச்சில் போட்டுவிடும் யோசனை நேற்று ராத்திரி பூராவும் தோணிக்கொண்டே யிருந்தது. ஜுரம் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆயாவே ஜுர சமயம் குழந்தைகளைக் கொண்டுவர வேண்டாம், என்பாள். அது மத்த குழந்தைகளுக்கும் பரவி விடக் கூடாது, என்பது ஆயாவின் கவலை. அது சரிதான்.

     அம்மா பெரியண்ணாவுடன் இருந்தாள். அவன்வீடுதான் எப்பவும் அவளுக்கு ஒசத்தி. “இங்கவந்து ரெண்டுநாள் இரு“ என்றால் இருக்கமாட்டாள். அங்கேதான் அவளுக்கு ஒட்டுகிறது. மாப்பிள்ளை முன்னால் இங்கே அவள் வேற்று மனுஷியாய் சங்கோஜப்பட்டாப் போலிருந்தது. மருமகளை இப்படி அவள் ஏனோ நினைக்கவில்லை! அம்மா காபி சாப்பிடும் போது மாப்பிள்ளை எதிரே வந்தால் சட்டென எழுந்து நின்று முந்தானையை இழுத்துப் போர்த்திக்கோள்வாள். அத்தனை மரியாதை. அவளையும் மாப்பிள்ளையையும் ஒண்ணாய் உட்கார்த்தி வைத்துச் சாப்பாடு போடுகிறாள். ஆனால் ஒருநாளும் கூடஉட்கார்ந்து சாப்பிட மாட்டாள். “ஏம் மாமி நீங்களும் கூட உட்கார்ந்திடலாமே“ என்று இவர் சொல்லத்தான் செய்கிறார். கூச்சத்துடன் சிரிக்கிறாள் அம்மா.

     அம்மா இந்தவயதிலும் வெட்கப்படுவது என்னவோ போலிருக்கிறது. எங்களுக்கெல்லாம் இப்பவே அந்த சபைக்கூச்சம் இல்லாமலாச்சு. படித்தது, வேலைக்குப் போனது என்று பெண்கள் சற்று பெரிய சுற்றாய் வளைய வருகிற காலம் இது- மதியங்களில் கூட அலுவலகத்தில் ஆண்களோடு சேர்ந்து அரட்டை அடித்தபடி சாப்பிடுகிறார்கள் பெண்கள்.

     கல்யாணம் ஆன புதிதில் மனம் இப்படி அம்மாவைத் தேடவில்லை, என்ற நினைப்பு திடீரென்று எழுந்தது. அப்போதெல்லாம் தனிமை வேண்டியிருந்தது. அவளும் கணவனும் மாத்திரமேயான உலகம் ஆனந்தமாய் இருந்தது. குழந்தை பிறந்ததே பெரியண்ணா வீட்டில் தான். சிறிய நகரத்துவீடு. வாடகைவீடு. அத்தனை ஜனம் அங்கே இருக்க சிரமந்தான். தண்ணிக் கஷ்டம் வேறு. இவர்தான் வரும்போதெல்லாம் “நம்ம வீட்டுக்கு வந்துரு. நம்ம வீட்டுக்கு வந்துரு“ என்று தவித்தார். சீமந்தம் முடிந்த ஒருமாதத்தோடு அம்மா அவளைத் தன்னுடன் வரும்படி சேர்த்துக் கொண்டாள். அதிலிருந்து மனுசன் ‘பட்டினி‘. அதுதான் கிடந்து தவிக்கிறார், என்று சிரிப்பு வந்தது.

     “தனியா நான் எப்படிக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியும்?“ என்றாள் அவள்.

     “உங்க அம்மாவும் வந்து நம்மகூட இருக்கலாமே?“ என்று இவர் யோசனை சொன்னார்.

     “அவ இங்கியே என்னை இருக்கச் சொல்றா“ என்றாள் அவர் கன்னத்தைத் தடவிக் கொடுத்தபடி. அவர் “சிரிக்காதே. நான் உங்க அண்ணனோட பேசறேன்“ என்றார். அவர் ஒரு கணக்குப் போட்டார். அடேயப்பா, எல்லாரும் அவரவர் தேவை என்று எப்படியெல்லாம் கணக்குப் போடுகிறார்கள், என்று ஆச்சர்யமாய் இருந்தது அவளுக்கு. பெரியாண்ணாவும், இவள் பிரசவம் என்று வந்து உட்கார்ந்ததில் தனிமைக்குத் தவித்திருப்பான். ஆக அம்மாவை அழைத்துப் போக மாப்பிள்ளைக்குச் சம்மதம் கிடைத்துவிடும், என்பது அவர் கணக்கு.

     “அம்மா நீ வேணா கொஞ்சநாள் ருக்மணியோட இருந்துட்டு வாயேன்?“ என்றான் ராஜாமணி. அம்மா அவனைப் பார்த்தாள். பிறகு காலண்டரை எடுத்து வைத்துக்கொண்டு இவள் புறப்பட் ‘நல்ல நாள்‘ பார்க்க ஆரம்பித்தாள்.

     அண்ணாவுக்கு இரண்டு குழந்தைகள். அவைகள் தான் பாட்டி கிளம்பிப் போவதற்கு முகம் சுண்டின. “போய்ட்டு இன்னும் ஒருமாசம் ரெண்டுமாசத்ல வந்துர்றேண்டி கண்ணுகளா. நீங்க நன்னாப் படிக்கணும்.கேட்டதா?“ என்று குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள் பாட்டி.

     அவள் கிளம்பி வந்தவுடன் கணவனுக்கு போன் பண்ணினாள். வீட்டில் இங்கே போன் இருக்கிறது எத்தனை சௌகர்யம். அவரே வந்து கூட்டிச் செல்வதாய்த்தான் இருந்தது. அலுவலகத்தில் யாரோ ‘வி.ஐ.பி‘ வருவதாக அழைப்பு வந்து போய்விட வேண்டியிருந்தது. “ஆட்டோ பிடிச்சி வந்துரு. வந்த உடன்னே எனக்கு போன் பண்ணு“ என்று சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

     அன்றைக்கு சாயந்தரம் இவர் வரும்போதே மல்லிகைப் பூ வாங்கி வந்தார். அதைப் பார்த்ததும் “ஓகோ சாருக்கு மல்லிப்பூ வாரமா?“ என்று கிண்டல் செய்ய வாய் வந்தது. பக்கத்தில் அம்மா, என்று மௌனம் காத்தாள். அம்மா ஒரு பார்வை பார்த்தாள். எதோ சொல்ல நினைத்தாள். மாப்பிள்ளை அதை கவனித்து விட்டார்.

     “என்ன மாமி?“ என்று கேட்டார் அவர்.

     அம்மா இழுத்துப் போர்த்திக் கொண்டு எழுந்து நின்றாள். இவள் முகத்தைப் பார்த்தபடி “இல்ல. பச்ச உடம்பு. அதோட இந்தச் சமயத்ல மல்லிப்பூவெல்லாம் வேணாம். குழந்தைக்கு அந்த வாசனைல்லாம் ப்டாது...“ என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

     மாப்பிள்ளை முகம் அசடு வழிந்தது. “சாமிக்குப் போடுங்கோ“ என்று சாமி படத்தின் முன்னே பூவை வைத்துவிட்டு அவர் உள்ளே போவதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. காபி கொடுக்கப் போனபோது அருகே இழுத்துக் கொண்டார்.

     “சுவாமிக்கு மல்லிப்பூ வாரமா?“ என்று கேட்டாள் ருக்மணி.

     “இல்ல. உங்கண்ணாவுக்கு…“ என்றபடி அவர் பெருமூச்சு விட்டார்.

     சொன்னபடி இரண்டு மாதத்துக்கு மேல் அம்மாவுக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. அண்ணாவீட்டுக்குக் கிளம்பியே விட்டாள். ஆத்திரமாய் வந்தது. இவரே தாள மடியாமல் “ஏம் மாமி இருந்துதான் போங்களேன்?“ என்று சொல்லிப் பார்த்தார். “இல்ல. எப்பிடியும் ருக்கு இன்னும் மூணு மாசம் லீவு போடறா. குழந்தையும் கொஞ்சம் பெரிசாயிட்டது. தனியே குளிப்பாட்ட கொள்ள இவளுக்கு முடியறது. ஆத்திர அவசரம்னா கூப்பிடுங்கோ. வந்து பாத்துட்டுப் போறேன். அங்க ஜமுனாவும், வேலைக்கும் போயிண்டு குழந்தையும் வெச்சிண்டு திண்டாடறாளோல்யோ. குழந்தைக்கு முடியலன்னா தகவல் சொல்லுங்கோ. அல்லது அங்க வந்துருங்கோ. எப்படியும் டாக்டர் அங்கதானே இருக்கா?“ என்று அம்மா இவளைப் பார்த்தபடியே பேசினாள். அதற்குமேல் அம்மாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

     அம்மாமேல் அப்போது அவளுக்குக் கோபம்தான் வந்தது. என்றாலும் தனியே தானே குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், இவளை எதிர்பார்க்கக் கூடாது, என்கிற வீம்பும் வந்தது கூடவே. முதலில் தனியே குழந்தையைப் பார்த்துக்கொள்வது சிரமமாய்த்தான் இருந்தது. எதிர் ஃப்ளாட் மாமியிடம் அம்மா கூடமாட அத்தியாவசியத்துக்கு உதவும்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத் தான் கிளம்பினாள்.

     தனியே தானும் குழந்தையுமான நாட்கள் அற்புதமாய்த்தான் இருந்தது. குழந்தை தூங்கும்போது தூங்கி அது எழுந்துகொள்ளும் போது எழுந்துகொள்ள வேண்டியிருந்தது. அதற்குத் தூக்கம் வர0வில்லை என்றால் இரவெல்லாம் கொட்டமடித்தது. இப்போது குழந்தை வெளிச்சம் பார்த்து சிரிக்க ஆரம்பித்திருந்தது. வெளிச்சம் அதைப் பரவசப் படுத்தியது. பார்வை கவனக்குவிப்பு இல்லாமல் அது வெளிச்சத்தையே பார்த்தவண்ணம் இருந்தது. இப்போது பார்வை நிலைகொள்ள ஆரம்பித்தது. தன்னைப்போல் அதன் உலகம் விரியத் துவங்கியது, பாராசூட் விரிந்தாப் போல! காதுகளுக்கு ஒலிகள் பழக ஆரம்பித்திருந்தன.

     மகாலெட்சுமி என்று குழந்தைக்குப் பெயர் வைத்தாலும் எப்படியோ எல்லாக் குழந்தைக்கும் போலவே அதற்கும் தன்னைப்போல பட்டப்பேர் அமைந்துவிட்டது. ஜுஜு. இப்போது ஜுஜு என்ற அழைப்புக்கு அது திரும்பிப் பார்த்தது. அது தன் பெயர்தான் என்று அதற்குப் புரிந்தாற்போல் இருந்தது. ஒலிகளைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது அது. கைகால் அசைப்பு பற்றிய கவனங்களும் அதற்கு வந்திருக்கலாம். இதெல்லாம் எங்கே எப்படித்தான் அது கற்றுக்கொள்கிறதோ என்றிருந்தது. உடனே “பகவானா?“ என்று இவர் கிண்டலடிப்பார்.

     இன்றைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டதில் சற்று ஆசுவாசமாய்க் கிளம்பலாம், என்று அவள் நேரங்கழித்து எழுந்துகொண்டாள். இரவெல்லாம் தூங்க முடியாமல் அவதிப்பட்டது குழந்தை. நெற்றியில், நெஞ்சில், மூக்கைச் சுற்றியும் என்று அம்மா சொன்னபடி அவள் சுண்ணாம்புப் பத்து போட்டாள். துர்நீரை அது இழுத்துவிடும். ஆரத்தி கரைத்தாப் போல சிவப்பாய்ப் பத்து. அதைப் பார்த்ததும் இவளுக்குத் திகைப்பாய் இருந்தது. “மகாலெட்சுமின்னு அழகாப் பேர் வெச்சிட்டு, துர்க்கையாட்டம் ஆக்கிப்பிட்டியே?“ என்கிறார் இவர். குழந்தைக்கு உடம்பு சரியில்லை, இப்படி பட்டுக்கொள்ளாமல் பேசுகிறாரே, என்று ஆத்திரமாய் வந்தது அப்போது.

     “நான் இங்கே தனியா ஒரு மனுஷி அல்லாடறேன். வேடிக்கையா இருக்கு உங்களுக்கு“ என்கிறபோது கண்ணீர் கொட்டிவிட்டது. “ஐம் சாரி. வேணா இப்பவே டாக்டர்கிட்டே காட்டிறலாம். இப்ப மணி என்ன? எட்டரை. பரவால்ல. போலாம். வண்டில பின்னல உட்காருவியா?“ என்றவர் குழந்தையைப் பார்த்துவிட்டு “இந்த பத்தெல்லாம் அழிச்சிட்டு வரணும்“ என்றபோது சிரிப்பு வந்துவிட்டது. இந்த ஆம்பிளைங்களிடம் ரொம்ப சிரித்துவிடவும் கூடாது. குழந்தை தூங்கிட்டதா, என்று பார்த்துவிட்டு “நீ என்ன டயர்டா இருக்கியா?“ என்று தோளில் அழுத்துவார்.

     வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மணி பார்த்தாள். பத்து. எதற்கும் டாக்டர் இருக்கிறாளா, என்று போன் பண்ணி சரிபார்த்துக் கொண்டாள். “வாங்களேன்?“ என்று டாக்டரே எடுத்துப் பேசியது ஆறுதலாய் இருந்தது. விறுவிறுவென்று குளித்து புடவைக்கு மாறினாள். கண்ணாடி பார்த்து நெற்றியில், உச்சி வகிட்டில் குங்குமம் வைத்துக்கொண்டாள். பவுடர் தீற்றி யிருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டாள். சிறிது பர்ஃப்யூம் அடித்துக் கொண்டாள். திரும்ப முகம் பார்த்துக் கொண்டாள்.

     அதுவரை குழந்தை எழுந்துகொள்ளவே இல்லை. சிணுங்கவே இல்லை. அமைதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தது. அதைத் தூக்கி ஈரத் துண்டால் துடைத்து விட்டபோது குழந்தைக்கு நன்றாக வியர்த்திருந்தது. ஜுரம் விட்டிருந்தது. சளி அடங்க ஆரம்பித்து அந்த கர்ர் புர்ர் நெஞ்சடைப்பு இல்லை. அவளுக்குத் திருப்தியாய் இருந்தது. பத்து போட்டது நல்ல விஷயந்தான். திரும்ப மணி பார்த்தாள்.

     வேலைக்குக் கூட போய்விடலாம். பெர்மிஷன் சொல்லிவிடலாம் என்றிருந்தது. அதற்குள் குழந்தை விழித்துக்கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தது. “அடிக் குஞ்சலமே“ என்று முத்தமிட்டாள் அதை. திறந்து மார்பைக் காட்டினாள். தட்டாமல் பால் குடிக்க ஆரம்பித்தது குழந்தை.

     அம்மாவிடம் விட்டுவிடலாமா, க்ரீச்சில் விடுவதா, என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
**

+ 91 97899 87842

Comments

  1. ஈருடல் ஓருயிர் - இந்த மாதிரி ஒரு கதை படித்து வெகுநாளாயிற்று. நுணுக்கமான கவனிப்புகளை சித்தரித்துள்ளார். குழந்தையைக் கொஞ்சுவதை விவரித்துள்ளவை சூப்பர். இப்படியெல்லாம் குழந்தையைக் கொஞ்சக்கூட இப்போது நிறைய பேருக்கு - பெற்றோர்களுக்கே கூட - தெரிவதில்லை. “இப்போது“ என்ற வார்த்தை எல்லாரும் பாடும் குற்றப் பாட்டாக தோன்றினால் அதற்கா நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. உண்மை அதுதான். அலர்ஜி, எச்சில், இன்பெக்ஷன் என்று ஆயிரம் சொல்லி தொட்டிலையே சின்ன ஐ.சி.யு போல வைத்திருக்கும் இயந்திரத்தனம் அலுப்பூட்டுகிறது. வேலைக்குப் போகும் ஒரு இளம்தாயின் அல்லாட்டத்தை பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு சொல்லிப்போவது போல சொல்லிப் போகிறான். குழந்தைக்கு காய்ச்சல் விட்டவுடன் கிரச்சா அம்மாவா என்று எண்ணும் தாய் - நிதர்சனமான வரிகள். இந்த வரியை எழுதும்போது கூடு எங்கோ ஒரு தாய் இப்படியான உணர்வின் ஊசலாட்டத்தில் இருப்பாள். குழந்தைகள் கொஞ்சி வளர்க்கப்பட வேண்டியவர்கள். அதில் கட்டுப்பாடே தேவையில்லை. தரையில் மண்ணை விரலால் சப்பித் தின்னும் குழந்தைகளைக் காணவே முடியவில்லை. (பெற்றவர்கள்தான் மண்ணைத்தின்னுட்ருக்காங்க).. குழந்தை பற்றிய வர்ணனையே இல்லை. ஆனால் கொஞ்சல் பற்றி சொல்லும்போது நமக்கான குழந்தையை நாம் மனதில் உருவாக்கிவிடுகிறோம். இந்தக் கதையில் எனக்கு பிடித்ததே இந்த அம்சம்தான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog