மொழிபெயர்ப்பு இலக்கியம்
ஒரு மிகையதார்த்த

காலகட்டம்
·    


ஆங்கில மூலம்
சடாதல் எஸ். பட்டாச்சாரியா
• • •
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்


* * *
·    நாங்கள் எப்பவும் கண்காணிக்கப் படுகிறோம். புரட்சிப்படைகள் நாங்கள் அரசு சார்ந்து செயல்படுகிறதாக நினைக்கின்றன. அரசாங்கமோ நாங்கள் புரட்சிக்காரர்கள் பக்கம், என்று நினைக்கிறது
* * *



மலையில் இருந்து இறங்கி வந்தான் அவன். வயது 50. குதிரைவாலாட்டம் பின்முடி குஞ்சம்.. தாடி. நல்ல உயரம். திடகாத்திரம். அவன் முதுகில் ஒரு மூட்டை. கூட ஒரு உக்கிரமான பெரிய பழுப்பு நாய்.

     குண்டுவெடிப்புகள் கேட்டபடி யிருந்தன. அதை சட்டைசெய்யாமல் கிளம்பியிருந்தான். மலையின் அந்தப் பக்கம் அவன் போனதே கிடையாது. இப்போ இந்த சமயம் அங்கே தனியாய்ப் போகிறாயா, வேண்டாம் என்று நிறையப்பேர் அவனை எச்சரித்தார்கள். ஒரு சிலர் அவனோடு துணைக்கு வரவும் முன்வந்தபோது புன்னகையுடன் மறுதலித்து விட்டான். ''பாரப்பா, யுத்தம்னறது நம்ம வாழ்வின் ஓர் அங்கமா ஆயிட்டது. எது எப்படின்னாலும் கவலைப்படாதீங்க. எனக்கு அங்கே தெரிஞ்சாட்கள் உண்டு...'' என்றான் அவன்.

     பாதுகாப்பில்லாத அந்த இடம்வரை இப்போது அவன் கிளம்பிப் போகவேண்டிய காரணம் என்ன... அவன் சிரித்து வேடிக்கைபோலப் பேசினான். ஆ, அது ஒரு ரகசியக் காரியம்.

     அவன் போகும் பகுதியில் மலைவாழ் மக்களின் ஒரு பிரிவுக்கும் மற்ற பிரிவுக்குமாய் வகுப்பு மோதல்களும், நாட்டுப் படைகளுக்கு எதிரான கலவரங்களும் அடிக்கடி நிகழவே செய்கின்றன. என்றாலும் அவன் போயாக வேண்டும்.

     சமவெளியை அடைந்ததும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டான். கடுமையான பயணம் தான். காலை ஆறு மணிக்குக் கிளம்பியது, மலையிறங்கி வர மூணு மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அந்த நாயும் அவன் அருகிலேயே படுத்துக்கொண்டது. பழைய நினைவுகளின் அலைபுரட்டலுடன் திரும்பி மலையைப் பார்த்தான். சிறிது தண்ணீர் குடித்தான். நாய்க்கு பிஸ்கெட்டுகளை எடுத்துப்போட்டுவிட்டு ஒரு புத்தகத்தை வெளியே எடுத்து சிறிது வாசித்தான். சில வரிகளைக் கூட வாசிக்க முடியவில்லை. களைப்பாய் இருந்தான். மரத்திண்டில் அப்படியே சாய்ந்தபடி கண்ணை மூடிக்கொண்டான். எங்கோ குண்டுகள் வெடிக்கும் சத்தத்தில் திரும்ப கண்ணைத் திறந்தபோது, எதிரே ஒரு இளம் பெண், வயது இருபத்தைந்து இருக்கலாம், சைக்கிளில் வந்திருந்தாள். அவன் பக்கமாய்க் காலை ஊன்றி அவனையே வெறித்தபடி யிருந்தாள். புன்னகைத்தான். ''குழந்தே, இந்தப் பக்கம் தங்க விடுதி எதுவும் இருக்கா?''

     பிரியமான அந்தக் குரல். பரிவான பார்வை. அவள் யோசித்தாள். கைக்கடிகாரத்தை ஒருதரம் பார்த்துக்கொண்டாள். ''எங்கருந்து வர்றீங்க நீங்க?'' புன்னகையுடன் அவன் தனக்குப் பின்னால் மலையைக் காட்டினான்.

     ''மலைக்கு அந்தப் பககத்து மனுசர்கள் ரொம்ப நல்லவங்க, அப்டின்னு எங்க அம்மா சொல்லுவாள்.'' அவனது மூட்டையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டாள். ''வாங்க.''

     பாம்பு போல் வளைந்து நெளிந்து போன பாதை சகதியாய்க் கிடந்தது. அதிக சனம் இல்லாத ஊரின் மக்கள் அவனை புருவத்தூக்கலுடன் பார்த்தார்கள். நம்ம பேட்டையில் இன்னொரு சக ஜீவனா என தெரு நாய்கள் சில இவனது நாயைப் பார்த்துக் குரைத்தன. அந்த ஊர் அவனுக்குப் பிடித்திருந்தது. லேசாய் என்னவோ கிராமிய மெட்டு வாயில். ஒரு வீட்டின் முன்னால் அவள் நின்றாள்.

     ஒரு காலத்தில் பார்த்துப் பார்த்து அருமையாய்க் கட்டியிருப்பார்கள். இப்போது காலத்தாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் சோபையிழந்திருந்தது அந்த வீடு. வெளி முற்றமே கூட புதர்மண்டி உயரமாய்க் காட்டுச் செடிகள் மறைத்துக் கிடந்தது. அவள் கதவைத் திறந்தாள். வெளியே பார்க்க உள்ளே பரவாயில்லை என்றாலும் சுத்தம் இல்லை. விறுவிறுவென்று அவனை எல்லா அறைகளுக்கும் அழைத்துக் காட்டினாள் அவள். குளியல் அறை, சமையல் அறை, கூடம், சாப்பாட்டு அறை, படுக்கை அறைகள், உக்கிராணம்... இத்தியாதி.

     ''இது உங்க வீடு. வசதி பண்ணிக்கிடுங்க. நான் மதியம்தான் வருவேன்...'' சொன்னபடியே வெளியேறி, சைக்கிளில் ஏறி போய்விட்டாள்.


***
வீடே ஒரே குப்பை கூளமாய் முடை நெடியடித்துக் கிடந்தது. ஜன்னல்களை மறைத்தவாக்கில் இருந்த அலமாரிகளை நகர்த்தி சன்னல்களைத் திறந்துவிட முயன்றான். சூரிய வெளிச்சத்தில் வீடெங்கும் தொங்கும் சிலந்தி வலைகள் கண்ணில் பட்டன. சமையல் கூடத்தில் நிறைய பயன்படுத்தப்படாமலேயே வீணாய்ப்போன சாமான்கள். அழுக்காய்ப் பாத்திரங்கள். அவற்றைத் தொட்டே பலநாட்கள் ஆகியிருக்கும். ஒரு பாடாவதி குளிர்பதனப் பெட்டி. குளிர்விக்கும் தன்மையை அது எப்பவோ இழந்திருக்கும். சாப்பிட வகைவகையாய் அடைத்திருந்தது. என்றாலும் இப்போது அவற்றை வாயில் வைக்கக் கொள்ளாது. அவனுக்கு அவளையிட்டுப் பாவமாய் இருந்தது. இங்க எப்பிடித்தான் இவ இருக்காளோ.

     படுக்கை அறை எப்படி இருக்கிறது பார்க்கலாம்... தலையணை அடியில், பாதி தெரிந்தும் பாதி மறைந்துமாய், ஐயோ கைத்துப்பாக்கி. என்ன மாதிரி பெண் இவள்... அவளது இந்த மகா உபசரிப்பை, நான் ஏற்றுக் கொண்டது தப்போ.

     கண் தன்னைப்போல சுவரின் அந்த பெரிய கறுப்பு வெள்ளை புகைப்படத்தைப் பார்த்தது. இளம் பெண் ஒருத்தி குழந்தை ஒன்றை தூக்கி வைத்தபடி. இப்படி அப்படி நகர்ந்து பலவிதமாய் அதை ஒரு ஓவியக் கண்காட்சியில் போல ரசனையாய்ப் பார்த்தான். பழைய காலங்களை அவை முன்கொண்டு வந்தன. ஜே என் யூவில் அவன் படித்த காலங்கள். (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்). அப்போது ஹென்ரி மூரின் தாயும் சேயும் சிலைகளை மணிக்கணக்கில் பார்த்து ரசிப்பான். ஆனால் இந்தப் படம், அது அவனை தன்னைப்பற்றி யோசிக்கும்படி செய்துவிட்டது. அப்படியே அடங்கினாப்போல படுக்கையில் அமர்ந்தான். மனசில் திடுதிப்பென்று கவியும் உணர்ச்சி. அதுவரை இல்லாத சந்தோஷமும், துக்கமும். ஒரே சமயத்தில் அழுத்துகிறது. நினைவுகளை உதறித் தள்ளினான்.. இந்தப்படம் பாதி கதையைத் தான் சொல்கிறது...

     ஆனால் ஆச்சர்யகரமாக அலமாரியின் புத்தக அடுக்குகள் தூசிதட்டி நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. மஞ்சள்தட்டிப்போன தாளில் சில கையெழுத்துப் பிரதிகள். நாடகப் பிரதிகள். அவற்றை உருவி பக்கங்களைப் புரட்டிப் பார்த்தான். அதன் வரிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாய் வாசித்துப் பார்த்தான். சிரிப்பு வந்தது.

     புத்தக அடுக்குகளின் அருகில் தோல் உறையிட்டு மூடிய ஒரு கிதார்மீது இடித்துக்கொண்டான். ஆகாவென்று அதை எடுத்து சிறு முத்தம் ஒன்றை ஈந்தபடி அதன் தந்திகளைச் மீட்டினான்.

     ஆனால் நாய்க்கு அந்த இடம் பழகாமல் அலைபாய்ந்தது. அவன்பாட்டுக்கு அந்த வீட்டின் இண்டு இடுக்குகளையெல்லாம் ஆய்ந்து அலசிக்கொண்டிருந்தான்.

     பாழடைந்த லாயம்... என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். ஏ அப்பா, ஹிராகிள்ஸ், சூராதி சூரா, சுத்தம் செய்யவேண்டும். வேலையை ஆரம்பி.


***
கொறிக்கவும் மேலும் சில சாமான்களுடனும் மதியம் அவள் வீடு வந்தால்... கிதார் இசை. சத்தம் இல்லாமல் உள்ளே வந்தாள். வீடே சுத்தமாய் இருந்தது. பொருட்கள் அதனதன் இடத்தில்... உணவுமேசையில் புதிய மலர்களுடன் பூச்சாடி. அம்மா இருந்தவரை அப்படிப் பழக்கம் அங்கே இருக்கத்தான் இருந்தது. அவன் வாசிப்பை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து, வீடு எப்பிடி ஆய்ப்போச்சு பாத்தியா, புன்னகை செய்தான். தன்னை அவள் பாராட்டுவாள் என்கிற எதிர்பார்ப்புடனான புன்னகை. ஆனால் அவளோ தன் மொத்த வாழ்க்கையுமே நிலைகுலைந்து போனாப்போல இடிந்துபோய் இருந்தாள். அவனைத் தாண்டி வேறு அறைக்குச் சென்றுவிட்டாள்.

     இருவரிடையே தாளமுடியாத கனமான மௌனம். அவன் அப்படியே அமர்ந்திருந்தான். திடுதிப்பென்று அவள் அழும் சத்தம். எழுந்து உள்ளே போனான். அவள் தலைமீது ஆதரவாய்க் கை வைத்தான். அவளோ ஒரு குழந்தையாய்த் தேம்பிக் கொண்டிருந்தாள்.

     ''ஏய் ஒபாமா மாமா என்ன சொல்லீர்க்கார் தெரியுமா உனக்கு?''

     சட்டென அழுகை நின்றது. அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான்.

     ''வேலையில்லா திண்டாட்டம்னு ஆகிப்போனபோது, சும்மாங்காட்டியும் அழுதிட்டிருந்தால் கோடிஸ்வரன் ஆகிவிட முடியுமா?''

     அவளுக்கு சிரிப்பு வந்... தாலும் அடக்-க்கிக்கொண்டாகிறது.

     அவளருகே மண்டியிட்டு அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். ''என்னை மன்னிச்சிரு அம்மணி'' என்றான். ''ரோலிங்கின் அடுத்த நாவலின் நிலைக்களனா வெச்சிருந்தே வீட்டை. அதைக் கலைத்துவிட்டேன். அடுத்தபடி என்னமாச்சிம் குண்டக்க மண்டக்க பண்ணி உன்னை நோகடிக்கு முன் நான் இடத்தைக் காலிசெய்து விடுகிறேன்...''

     சட்டென அவள் எழுந்துகொண்டு அவனையும் எழுப்பினாள். நேரே அவன் கண்ணைப் பார்த்தாள்.

     ''நான் உங்களை அப்பான்னு கூப்பிடட்டுமா?''

     ''அதுக்கென்ன, அப்படியே கூப்பிடு. ஆனால் அழுவாச்சி குழந்தை எனக்கு வேண்டாம்.''

     அவள் மலர்ந்து சிரித்தாள். ரெண்டுபேரும் அப்படியே அன்பில் கட்டுண்டவர்களாய்க் கட்டியணைத்துக் கொண்டார்கள். அவள் காதருகே அவன் சொன்னான். ''குழந்தே சமைச்சி வெச்சிருக்கேன். சாப்பிட வர்றியா?''

     நாய் அவர்களை ஆச்சர்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.

     இருவரும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள். அவன் சமையல் அற்புதமாய் இருந்தது. அவளுக்கு ஒரே உற்சாகம். அவன் சமையலை ஆகா ஓகோவென்று கொண்டாடினாள். ''இப்படியொரு சாப்பாடு சாப்பிட்டு எத்தனையோ காலமாச்சு'' என்றாள். ''இதுவும் அதுக்குப் பிடிச்ச உணவு சாப்பிட்டது இன்னிக்கு. வேக வெச்ச இறைச்சி...'' அப்பா நாயைக் காட்டிச் சொன்னார். ''இது பேர் பிரின்ஸ். இதுக்கு வயசு ஒரே வாரம் இருக்கும் போது இவன் அம்மாவை யாரோ சுட்டுக் கொன்னுட்டாங்க. அப்பலேர்ந்து இவன் என்கூடத் தான் இருக்கிறான்.''

     அவள் எழுந்து பிரின்ஸைக் கட்டிக்கொண்டாள். அதுவும் அவளோடு ஈஷியது.

     ''நான் எங்க அப்பாவைப் பார்த்ததே இல்லை'' என்றாள் அவன் கண்ணைப் பார்த்தபடி. ''அவர் ஒரு வீதிநாடக பிரச்சாரக் கலைஞர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் கைப்பட எழுதிய சில நாடகப் பிரதிகளை அவர் கையெழுத்திலேயே இன்னும் வைத்திருக்கிறேன். கல்லூரிகளுக்கு இடையேயான நாடகப் போட்டி ஒன்றில் அவரது 'சொர்க்கத்தில் நரகம்' என்ற நாடகத்தை நான் மேடையேற்றி, முதல் பரிசு கிடைத்தது எனக்கு. இந்தப் பக்கத்து எல்லாப் பத்திரிகைகளும் அதைப்பற்றி விலாவாரியா செய்தி வெளியிட்டார்கள். அவருடைய சில நாடகங்களைத் தொகுத்து நூலாகக் கொண்டுவரப் போகிறேன். பிழை திருத்தி அச்சுக்குக் கொடுத்து விட்டேன். விரைவில் அது வெளிவரப் போகிறது.''

     ''அருமையான யோசனை. ஆனால் உங்க அப்பா... அவங்களுக்கு என்ன ஆயிற்று?''

     ''உடம்பு முடியாத யாரோ சிநேகிதனைப் பார்க்க என்று ஒருநாள் கிளம்பிப் போனார். திரும்பி அவர் வரவேயில்லை. தனக்குத் தெரிஞ்ச இடம் தெரியாத இடம்னு அனைத்திலும் அவரை எங்க அம்மா தேடிவிட்டாள். அரசுக்கு எதிரான கலகக்காரர்களின் பதுங்கிடங்களில், பக்கத்து நாடுகளில் எல்லாம் கூட அவரை சலித்துத் தேடிச் சலித்தாள்.''

     சிறிது மௌனத்துக்குப் பின் அவள் தொடர்ந்தாள். ''சொல்லவே சங்கடமாய் இருக்கிறது. என்னிடம் அம்மா சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள். எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அத்தனை ஒத்துப்போகல்ல என்றெல்லாம் ஊரில் வதந்தி. அப்பாவோட சிநேகிதர் கூட அம்மாவுக்குத் தொடுப்பு, என்று கூட... நீங்க அதை நம்பறீங்களா?''

     அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. என்ன பதில் அவன் சொல்ல முடியும்?

     திடீரென்று வானம் பொத்துகிட்டு தலைமேல் மழை ஊத்தினாற் போலிருந்தது.

     அவள் தொடர்ந்தாள். ''அப்பா காணாமல் போனதுக்கு அம்மாவுக்கும் ஒரு பங்கு இருக்கலாம்னு கூட சில பேர் சந்தேகப்பட்டார்கள். இதுதவிர நிறையக் கதைகள் வேற உலா வந்தன. போலிஸ் விசாரணையில் அவர் இறந்துபோனார். பதுங்கிவாழும் கலகக்காரர்களை என்கவுன்டர் பண்ணுகையில் அப்பாவும் இறந்துவிட்டார். ஒரு கவர்ச்சி நடிகையுடன் அவர் ஓடிப் போயிட்டதாகக் கூட பேச்சு...

     ... ஆனால என்னைப் பொறுத்தமட்டில், அவங்களுக்குள்ள பணப் பிரச்னை இருந்திருக்கிறது. அம்மாவோட அத்தனை நகைகளையும் விற்றுவிட வேண்டியதாகியிருக்கிறது. அப்பாவுக்கு நிரந்தமான வருமானம் என்று இல்லை. அம்மாவை அடிக்கடி பணம் கேட்டுப் பிடுங்கியிருக்கிறார்... நாடகம் போடறது ஒண்ணே குறின்னு அதற்காக சிநேகிதர்கள் கிட்டயெல்லாம் கைநீட்டி கடன். இது அவங்க இடையே பெரிய பிளவை, திரும்ப ஒட்டிவர முடியாத பிரிவை ஏற்படுத்தி யிருக்கும்னு தோணுது.''

     பேசாதிருந்தான் அவன். ஒரு கறைபோல இவள் இப்போது நிதர்சன சாட்சி போல இருக்கிறாள் என்பது அவனைத் துன்பப்படுத்தியது. கடைசியாக பட்டுக்கொள்ளாத பாவனையில் அவன் சொன்னான். ''குழந்தையே, நாம வாழ்கிறது ஒரு மிகையதார்த்த காலகட்டத்தில். நாம் கேட்கிற உண்மையில் ஜோடனையும், ஜோடனையில் உண்மையும் கலந்தே நமக்கு வாய்க்கிறது...''

     ''ம். எனக்கு ஒரு எண்ணம்...'' கனவில் போல அவள் பேசினாள். ''ஒருநாள் அப்பா தன்னைப்போல திரும்பி வருவார். நீங்க பாத்திருக்கீங்களா, நாடகம் முடிஞ்சப்பறம் அந்த இயக்குநரும், கலைஞர்களும் ஒண்ணா மேடைக்கு வருவார்கள். ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பார்கள்...''

     ஆகாவென்றிருந்தது அவனுக்கு. ''மனசார கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டால், கடவுள் அதை சீக்கிரமே நிறைவேத்திவிடுவார் அம்மா...''

     அவள் தொடர்ந்தாள். ''ஒரு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து அம்மா தலைமையாசிரியர் ஆனாள். நான் இப்ப அதில்தான் ஆசிரியர் வேலை பார்க்கிறேன். ஆறு மாசம் முன்னால் அவள் மார்பகப் புற்றுநோயில் இறந்து போனாள். என் பேர் டாலி. முகம் நான் அறியாத அப்பாவின் ஒரே பெண். என் அதிர்ஷ்டம்... உங்களை அப்பான்னு வாய்நிறைய கூப்பிடுகிற வாய்ப்பு.''

     அவன் சந்தோஷமான புன்னகையுடன் தலையாட்டினான்.

     ''நீங்க ரொம்ப அலுப்பா இருக்கீங்க அப்பா. போய்ப் படுத்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க...''

***
ஒருமணி நேரத்தில் அவள் எழுப்பினாள். ''சூடா காப்பி...'' என்றாள். அவர்கள் பேச்சின் நடுவே தூரத்து குண்டுச்சத்தம் நிறுத்தற் குறிகள் இட்டது.

     ''உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?'' அவள் கேட்டாள்.

     ''ம். ஆனால். அவரைப் பற்றி பெரிசா என்னால புரிஞ்சிக்க முடியவில்லை. கடவுள் ரொம்ப மர்மமான ஆசாமி.'' அவன் புன்னகைத்தான்.

     ''அம்மா...'' என்றாள். ''கடைசி காலங்களில்... படுத்த படுக்கை. பெரும்பாலும் மருந்தின் மயக்கத்தில் தான் இருந்தாள். ஆனாலும் எந்த நிலைமையிலும் அவள் உதடுகள் என்னவோ சொல்லி துடித்தபடியே இருந்தன. எப்ப நினைவு திரும்பினாலும் அவள் சொல்வாள்... அவர் வருவார், கண்டிப்பா வருவார்... என்னிடம் கூட அவள் கேட்பாள். அவர் வந்தாரா?... அப்படியே மயக்கக் கிறக்கத்துடன் என் கூட யாராவது நிக்கறாங்களான்னு பார்ப்பாள். ஏமாத்தமாய்க் கண்ணைத் திரும்ப மூடிக்கொள்வாள். கடைசியா ஒருதரம் தன்னை அவர், கிருஷ்ணர் வந்து பார்ப்பார்னு அவள் ஆசையுடன் காத்திருந்தாள்...

     ஒருநாள் அழவே அழுதுட்டாள். அவருக்கு நான் ஒரு பொருட்டாவே இல்லையோ என்னமோ. அடுத்தநாள் அவள் தேறியிருந்தாள். மனசில் ஆறுதல் வந்திருக்கலாம். முகத்தில் களை வந்திருந்தது. அவள் தேடிய முடிவுகாலம் வந்துவிட்டதான, அதைக் கண்டுகொண்ட ஒரு தெளிவு அது... என்கிற முகத்தின் புன்னகை. என்னைக் கட்டிக்கொண்டு அவள் சொன்னாள். உலகத்தில் அன்புதான் எல்லாமே... எனக்கு அப்போது அது விளங்கவில்லை. அடுத்த கணம் அம்மா இறந்துவிட்டாள்.

     பிற்பாடு அம்மாவோட சிநேகிதி ஒருத்தி எனக்குச் சொன்னாள். பகவான் கிருஷ்ணர் அம்மாவோட கடைசி காலத்தில் அபயஹஸ்தம் கொடுத்தாராம். கடைசிவரை அம்மா கிருஷ்ணநாமத்தை விடாமல் உச்சாடனம் பண்ணிக்கிட்டிருந்தாள்.

     ... என்ன யோசிக்கறீங்க?'' என்றாள் புன்னகையுடன். ''என்னடா இவ, லூசுப்பிறவி. புது ஆள் ஒருத்தரை வீட்டுக்குக் கூட்டிவந்து வெச்சிக்கிட்டு... அவரை அப்பான்னு அழைச்சிக்கிட்டு... கன்னாபின்னான்னு என்னவோ அவர்கிட்ட பினாத்திக்கிட்டு...''

     அவன் சிரித்தான். ''அதெல்லாம் ஒண்ணுமில்ல. மகளின் யோசனைகளை, உணர்வுகளை, நம்பிக்கைகளை பகிர்ந்துக்கலைன்னா, அப்பா வேற எதுக்கு இருக்காரு.''

     கதவை யாரோ தட்டும் சத்தம். அவள் வெளியே போனாள். யாரோ ஒரு பெண் குரல் அவளுடன் கிசுகிசுப்பாய்ப் பேசிக்கொண்டிருந்தது. கதவைச் சாத்திவிட்டு யோசனையுடன் அவள் உள்ளே வந்தாள்.

     அதற்குள் பேர் எழுதிய சீட்டு ஒன்றை அவன் கையில் எடுத்து வைத்திருந்தான். ''இந்த மனுசரை எங்க பார்க்கலாம்?'' அதை வாங்கிப் பார்த்தவள் முகத்தில் வியப்பு. கொஞ்ச நேரம் அவள் பேசவில்லை.

     ''இந்த மனிதர்... இப்பதான் அரைமணி முன்னால் சுடப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரி அதைத் தான் வந்து சொல்லிட்டுப் போகிறாள்.''

     அந்தக் காகிதத்தை சுக்கு நூறாகக் கிழித்தான் அவன்.

     ''இவரைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?''

     ''அவரை நான் நேரில் பார்த்தது இல்லை'' என்றாள் அவள். ''ஆனால் ஒவ்வொருவரும் அவரை ஒவ்வொரு விதமாய்ச் சொல்கிறார்கள். செல்வாக்கு மிக்கவர்.. சண்டையிடும் குழுக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நல்ல பாலமாக அவர் செயல்பட்டதாகச் சொல்கிறார்கள். அம்மாவின் பள்ளிக்கு அரசு நிதி ஒழுங்காக வரும்படி அவர் ரொம்ப உபகாரமாய் இருந்தார். பள்ளியின் சகல சிக்கல்களிலும் அவர் தலையிட்டு தீர்த்து வைத்தார். போதைப்பொருளோடு அவர் சம்பந்தப்பட்டதாக சிலர் சொல்லுவார்கள். ஆயுதக் கடத்தல். இளைஞர்களை கலகப்படைக்குச் சேர்த்தல். ஆள் கடத்தல். மிரட்டி பணம் பறித்தல்.... எல்லாம் அவர் செய்வதாக ஊரில் பேச்சு உண்டு. நீங்க ஏன் அவரைப்போய்ப் பார்க்க விரும்பினீர்கள்?''

     ''தன்னை சீக்கிரம் வந்து பார்க்கும் படி சங்கேத செய்தி அனுப்பியிருந்தார் எனக்கு. எப்படியோ... இந்தப் பயணத்தில் எனக்கு நான் எதிர்பார்த்ததை விட நிறையவே செய்திகள் கிடைச்சிட்டது.''

     வெளியே இருட்டிவிட்டது. ''இங்க எதும் பிரச்னையானா ராத்திரி மின்சாரம் இருக்காது.'' அவள் விளக்கு ஒன்றை ஏற்றினாள். போய் ஜன்னல்களை சாத்திவிட்டு வந்தாள். கையில் ஒரு நோட்டுப்புத்தகம். இரண்டு பேனாக்கள். அந்த நோட்டில் எழுதிக்காட்டினாள். ''வாயால் அல்ல, நாம் எழுதிக்கொள்ளலாம். இங்கே சுவருக்கும் காது உண்டு.''

     ''கொஞ்சநாள் முன்னாடி...'' அவன் எழுதினான். ''ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் படிச்சேன்... நம்ம நாட்டின் இந்த வட கிழக்குப் பகுதி, அதுதான் தேசத்தின் வளம் மிக்க பகுதின்னு போட்டிருந்தான். ஆனால் யானை தன் தலையிலியே மண்ணை வாரிப் போட்டுக்கறாப்போல, இப்ப நம்மை நாமே ஜரூரா அழிச்சிக்கிட்டு வர்றோம்...''

       ''நேத்து ராத்திரி...'' அவள் எழுதிக்காட்டினாள். ''ஒரு பயங்கரமான கனா. எதோ நதி, அதில் என் கையை முக்குகிறேன். அந்தத் தண்ணீர் அப்படியே சிவப்பாயிட்டது. அம்மா எப்பவுமே சொல்லுவார்கள். நல்ல கனவு பலிக்காது. ஆனால் மோசமான கனவு... பலிச்சிரும்.''

     ''இந்த வீட்டில் எப்பலேர்ந்து இருக்கிறாய்?''

     ''எனக்கு 18 வயசில் நானும் அம்மாவும் இங்கே வந்தோம். அதும் முன்னாடி நகரத்தின் பிரதான பகுதியில் தான், இங்கருந்து ரெண்டு கிலோமீட்டரில் இருந்தோம். இந்தப் பகுதியை விட்டே வெளி மாநிலத்துக்குக் காலிபண்ணிப் போனவர்கள் கிட்டேயிருந்து அம்மா இந்த வீட்டை வாங்கினாள். இங்க இப்ப பெரியவர்கள் மாத்திரமே வாழ்கிறார்கள். இளைஞர்கள்... செத்திருக்கலாம். சிறையில் இருக்கலாம். தலைமறைவு வாழ்க்கைக்குப் போயிருக்கலாம். அல்லது வெளி மாநிலத்துக்கே இடம் மாறியிருக்கலாம். இங்க எனக்கு மாப்ளைன்னு யாருமே அமைய வாய்ப்பே இல்லாமலாச்சு....'' எழுதிவிட்டுச் சிரித்தாள்.

     ராத்திரிச் சாப்பாடு வரை எழுத்தாலேயே பேசிக்கொண்டார்கள். சாப்பாடு ஆனதும் தனித்தனி படுக்கை அறைகளுக்குப் பிரிந்தார்கள். விளக்கை ஊதி அணைக்கு முன் இரவு வணக்கம் சொல்ல வந்தாள். ''உங்களோட ... வாயில் விரல் சப்பியபடி கதை கேட்டுக்கிட்டே தூங்கலாமான்னு இருக்கு.'' அவன் சிரித்தான். ''அது நடக்கவே நடக்காது. பிரின்ஸ் ரொம்ப ஆங்காரம் பிடிச்சது. என்னுடன் தான் மாத்திரமே தூங்கணும் அதுக்கு.''

     ரொம்ப நேரம் அவனால் தூங்க முடியவில்லை. பிரின்ஸை வருடித்தந்தபடியே யோசித்துக் கிடந்தான். இதுக்கு இதன் அப்பா யாரென்று தெரியுமா? அது இப்ப இதுக்கும் ஒரு விஷயமே இல்லை. இதன் அப்பாவுக்கும் அப்படித்தான்... அவை விலங்குகள். ஆனால் நாம அப்படி இருக்க முடியுமா என்ன? நாம் மனிதர்கள்!


***
பாதி ராத்திரியில் பிரின்ஸ் படுக்கையை விட்டு எம்பிக் கீழே குதித்து குரைக்க ஆரம்பித்தது. வாசல் கதவை யாரோ திறக்கச் சொல்லி ஆவேசமாய் உதைக்கிற சத்தம். ''யார் உள்ளே? திறங்க கதவை.''

     ''யாரு?'' அவள் கேட்டாள். கையில் டார்ச்சின் மங்கலான ஒளி நடுங்கியது.

     ''ராணுவம்.''

     கதவைத் திறந்தாள். அவளையே குருடாக்கும் வெளிச்சம் உள்ளே நழைந்தது. பிரின்ஸ் அவர்கள் மேல் தாவ முயன்றது. ''அப்பா பிரின்ஸைப் பிடிச்சிக்கோங்க'' என்று கத்தினாள்.

     நவீன ஆயுதங்களுடன் சுமார் பத்து பேர். சிலர் யாரும் வெளியே தப்பிவிடாமல் வாசல் பக்கம். சிலர் வீட்டுக்குள் தேடுதல் வேட்டை. பரபரவென்று எல்லா அறைகளிலும் தேடிப் பார்த்தார்கள்.

     பெரிய மீசையுடன் ஓர் அதிகாரி. சுருட்டிவிட்ட மீசை நுனி மிடுக்காய் தேள்க்கொடுக்காய்த் தெரிந்தது. அப்பாவைப் பார்த்து கைத்துப்பாக்கியைப் பிடித்தான் அவன். ஊவென அலறினாள். ''வேணாம்'' என அப்பாவை மறித்து மறைக்க முயற்சி செய்தாள். அதிகாரி சிரித்தபடி கைத்துப்பாக்கியை விலக்கினான். அதை அப்பாவிடம் திருப்பித் தந்தான். ''பொம்மைத் துப்பாக்கி. சீனத் தயாரிப்பு. நீயே வெச்சிக்க...'' அவர்கள் வெளியேறுவதை இருவரும் வியர்க்க விறுவிறுக்க பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பக்கத்தில் அமர்ந்தபடி அவர்கள் காபி அருந்தினார்கள். பிரின்சுக்கு குக்கி பிஸ்கெட்டுகள். மேசையில் அந்த கைத்துப்பாக்கி கிடந்தது. ''தெருவில் கிடந்து எடுத்து வந்தேன். நிசத் துப்பாக்கியாக்கும்னு நினைச்சிருந்தேன் இதை...'' பாவம் அப்பா எப்படி வெலவெலத்திருப்பார். என்னால்... அவளுக்குச் சங்கடமாய் இருந்தது.

     அவன் பேசவில்லை. போய் குளிர்ந்த காற்றுக்காக ஜன்னலைத் திறந்... கையில் துப்பாக்கியுடன் சட்டென யாரோ இருளில் பதுங்கியதைப் பார்த்தான். ஜன்னல்களை மறைச்சாப்போல அலமாரிகளை இவள் வைத்திருந்தாள். நான் திரும்ப நகர்த்தி வைத்தது தப்பு, என நினைத்தான். ஜன்னல் மூடியே இருக்கட்டும். திரும்பினான் அவன்.

     திடீரென்று எதோ சத்தம். ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே எதோ வந்து மேசையில் தட்டி விழுந்தது. மெழுகுவர்த்தியை ஊதிவிட்டு மேசையடியில் பதுங்கிக் கொண்டார்கள். உள்ளேவந்து விழுந்த அந்தப் பொருளை பிரின்ஸ் வாயில் கவ்வி எடுத்துவந்து அவனிடம் கொடுத்தது. அடுத்த அறைக்குப் போனார்கள். இன்னொரு வர்த்தியை ஏற்றிக்கொண்டார்கள். ஒரு காகிதம் சுற்றிய கல். ''உடனே வெளியேறுங்கள்'' என காகிதத்தில் குறிப்பு. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

     ''உங்களை இழக்க என்னால முடியாது அப்பா. இது ரொம்ப மோசமான பகுதி. நீங்க காலையில் கிளம்பிப் போங்க.''

     ''இல்ல. அது முடியாது. நான் இப்பவே கிளம்பறேன்...''


***
ஜுலை மாத வானம் வெளியே நிர்மலமாய்க் கிடந்தது. சூரியன் உதிக்க இன்னும் நேரம் இருந்தது. அவர்கள் மலையை நோக்கிக் கிளம்பினார்கள்.

     ''அப்ப, ரொம்ப காலம் முன்னால ...'' என்றான் அவன். ''சில ஜெர்மன் படங்கள் பார்த்திருக்கிறேன். என்ன அழகான தலைப்புகள் அவை. ஃபியர் ஈட்ஸ் தி ஸோல் (புலி அடிக்கு முன்னே கிலி அடிக்கும்) - லவ் இஸ் கோல்டர் தேன் டெத் (காதலுக்கு மரணமே தேவலை) இப்படியெல்லாம்... அந்தக் கதைகளே மறந்துட்டது, ஆனாலும் தலைப்புகள் மனசில் நிக்குது.''

     ''அப்பா.''

     ''ம்.''

     ''உங்களைப் பார்த்த கணத்தில் இருந்து, எனக்கு என் பலமும் தன்னம்பிக்கையும் திரும்ப ஊற ஆரம்பிச்சிட்டது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களோட கிளம்பி வந்திட்டேன் அப்பா.''

     ''உனக்கு பலம் வந்திருக்கிறாப் போலவே, நானும் இதயத்தில் என் சுமைகள் கரைந்துபோனதாக உணர்கிறேன்...'' அவன் புன்னகைத்தான்.

     ''எப்பிடி அப்பா அது... ''

     ''உன்னை ஒரு கேள்வி கேட்கவா?''

     ''தாராளமா.''

     ''நீ எதும் சமுதாயப் பணின்றா மாதிரி வெச்சிக்கிட்டிருக்கிறாயா?''

     ''ஓ. வட கிழக்கு சமாதானக் குழுவில் நான் உறுப்பினர்.''

     ''அமைதி என்பது ரொம்ப சிக்கலாகவே இருந்து வருகிறது. எல்லாரும் உன்னை நம்புகிறார்களா?''

     ''ச். நாங்கள் எப்பவும் கண்காணிக்கப் படுகிறோம். புரட்சிப்படைகள் நாங்கள் அரசு சார்ந்து செயல்படுகிறதாக நினைக்கின்றன. அரசாங்கமோ நாங்கள் புரட்சிக்காரர்கள் பக்கம், என்று நினைக்கிறது...''

     ''உங்கள் அடுத்த செயல்திட்டம் என்ன?''

     ''இந்த நெருக்கடியில் இறந்து போனவர்கள், மற்றும் காணாமல் போனவர்களைப் பற்றிய குறிப்புகளோடு அவர்கள் புகைப்படமும் தொகுத்து ஒரு ஆவண நூலாகக் கொணர நினைக்கிறோம் அப்பா.''

     ''நல்ல முயற்சி. பொது மககளிடம் இவர்களை ஞாபகப்படுத்துவது என்பது முக்கியம்.''

     அதிகாலையின் ஜில்லிப்பான காற்று. அந்த அழகிய மலைச் சூழல். மரங்களின், பூக்களின் கோலம். வண்ணப் பறவைகளின் ஓலம். உடலையும் மனதையும் ஆத்மாவையும் புத்துணர்ச்சி கொள்ளச் செய்தன.

     ''அப்பா?''

     ''சொல்லு.''

     ''நீங்க வேட்டையாடியிருக்கீங்களா?''

     ''இல்லை. கொல்லுவது எனக்குப் பிடிக்காது.''

     வழியில் ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்த்ததும் ஓய்வுக்காகத் தங்கினார்கள். அவன் மடியில் அவள் படுத்துக்கொண்டாள். அவள் தலையை அவன் வருடிவிட்டான். ''என் வாழ்க்கையிலேயே இப்ப மாதிரி நான் சந்தோஷமா இருந்ததே இல்லை அப்பா.'' கண்களை மூடிக்கொண்டாள். பிரின்ஸ் அவர்களைப் பார்த்துவிட்டு, தானும் அவன் மடியில் இடம் பிடிக்க அடம் பிடித்தது.

     ''அப்பா ஒரு கதை சொல்லுங்க.'' வாயில் விரல் போட்டுச் சப்பியபடியே அவள் சிரிக்கிறாள்.

     புன்னகைத்தான் அவன். மனசில் யோசனை. காலையில் அவனை அவன்அம்மா எழுப்புகையில் பாடும் ஒரு பாடல் நினைவுக்கு வர, மெல்லப் பாடினான். படபடவென அவள் கைதட்டினாள். திடீர்ச் சத்தத்தில் பிரின்ஸ் உதறி எழுந்துகொண்டது. ''அருமையான குரல் உங்களுக்கு.''

     காய்ந்த இலைகளும், குச்சிகளும் கூடு கட்ட பறவைகள் அலகில் எடுத்துச் செல்வதை அவள் பார்த்தாள். ''நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க அப்பா.''

     ''நீ நிறைய செய்ய வேண்டியிருக்கு. இந்த உள்நாட்டுப் போரில் நிராதரவாய் விடப்பட்ட பெண்களுக்காக நான் ஒரு என் ஜி ஓ (அரசு சாரா அமைப்பு) நடத்திக் கொண்டிருக்கிறேன். கைவினைப் பொருட்கள் செய்ய, முடைதல், பின்னுதல் வேலைகளுக்குப் பயிற்சி தந்து அவர்கள் சுயமாய் சம்பாதிக்க வாழ வழிவகை செய்கிறேன். அந்த சாமான்கள் எல்லாம் நம் நாட்டிலும் வெளிநாட்டிலுமாக விலை போகின்றன. அநாதைக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கவும் எனக்கு யோசனை இருக்கிறது.''

     ''நான் உங்கள் பள்ளியில் வேலை பார்க்கலாமா?''

     ''நிச்சயமா.''

     ''அப்பா.''

     ''சொல்லு.''

     ''நாம இன்னும் எவ்வளவு நேரம் இப்பிடி கண்ணாமூச்சி ஆடணும் அப்பா?''

     ''என்ன சொல்றே?''

     ''நீங்கதான் என்னோட நிசமான அப்பா. உங்களை முதலில் பார்த்தபோதே என் உள்ளுணர்வு சட்னு சொல்லிவிட்டது அதை. இத்தனை வருஷமா உங்க முகம் எனக்கு ஞாபகம் இருந்திட்டே தான் இருக்கு. வலது புருவத்தின் மேல் உள்ள வெட்டு, அதுகூட ஒத்துப்போகிறது. ஒரு பெண்ணின் நோட்டத்தில் இருந்து உங்களால் எப்படி தப்பித்துக்கொள்ள முடியும்? உங்க அன்றாட வாழ்க்கை பத்தியும் பழக்க வழக்கம் பத்தியும் அம்மா எல்லாம் சொல்லியிருக்கிறாள். என்ன இப்ப தாடி வெச்சி, சிறு பின்முடி போட்டிருக்கீங்க. அது உங்க அடையாளத்தை மறைக்கப் பத்துமா என்ன?''

     புன்னகை செய்ய முயன்றான் அவன். ஆனால் அவன் முகத்தைத் திருப்பிக் கொள்வதை அவள் பார்த்தாள். அழுகிறானா என்ன?

     ''அழுவாச்சி அப்பா எனக்கும் வேண்டாம்.'' புன்னகைத்தபடி அவன் கண்களைத் துடைத்துவிட்டாள்.

     அப்படியே நிற்கவைத்து அவனது ரெண்டு கைகளையும் விரிக்கச் செய்தாள். பிரேசில் மலை உச்சியில் இயேசு கிறிஸ்து அவன். ''கீழே சமவெளி பாருங்கள் அப்பா. மேலே வானம் பாருங்கள்... இப்ப நாடக பாணியில் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லுங்கள். நானே உங்கள் பெண்... இந்த உலகம் அதை நிரந்தரமாக அறிந்துகொள்ளட்டும்!''

     வசனத்தை மறந்துபோன புதிய நடிகன் போல பேச்சற்று அப்படியே நின்றான் அவன். அவள் அவனை அரவணைத்துக் கொண்டாள்.

     ''உன் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் நானே தான் காரணம் என் பெண்ணே...''

     ''இல்ல அப்பா. விதியின் முன் நாம் செய்ய ஏதும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஒரு பெண்பிள்ளை இருக்கிறது என்று உங்களுக்கு எப்பவாவது தெரியவந்ததா?''

     ''புகைப்படம், அதைப் பார்க்கிற வரை தெரியாது. பார்த்தபோது தான்...''

     ''தெரிந்தபின்... இப்ப எப்பிடி இருக்கு?''

     ''பெருமிதமாய் இருக்கிறது...'' அவன் நெஞ்சு விம்மியது. ''இது என் வார்த்தைக்கும் ஆனந்தத்துக்கும் மேலான பெரிய விஷயம். இனி நான் தனியன் அல்ல. ஆனால் தனியான... அம்மாஇல்லாத அப்பா.''

     மனசில் பொங்கி அலைநுரைக்கும் சிந்தனைகள். இந்த நீர்வீழ்ச்சியைப் போல. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டபடி அவர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     ''உங்க பெண்ணா நான் எப்பிடித் தெரியறேன் அப்பா? எல்லாரும் நான் உங்க ஜாடையா இருக்கிறதாச் சொல்வார்கள்...''

     அவளைக் கிட்டத்தில் ஊடுருவிப் பார்த்தான். முகத்தில் விரவியிருந்த முடிகளைப் பிரித்துவிட்டான். நெற்றியில் முத்தம் ஒன்றை ஈந்தான்.

     மலையில் மீண்டும் குண்டுவெடிப்புகள் அதிர்ந்தன. கிளம்பினார்கள்.

     ''இந்தத் துப்பாக்கி சூடுகள்... இன்னும எவ்வளவு காலம் தான் இப்பிடியே போயிட்டிருக்கும் அப்பா?''

     ''நாம உயிரோட இருக்கிற வரைக்கும்,'' என அவன் புன்னகைத்தான்.

     ''25 வருஷம் முந்தைய உங்கள் நம்பிக்கைகள், இன்னமும் அவற்றை நம்பறீங்களா அப்பா?''

     ''ஆமாம். குரலற்றவர்கள் சார்பாக குரல் கொடுத்தல். எப்பவுமே அது தேவையாகவே இருக்கிறது.''

     ''எதிர்காலம் பத்தி என்ன சொல்றீங்க அப்பா?''

     ''தபாரும்மா. மனித வரலாறு என்பது என்ன? தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுதல். மத்தவன் கலகம் பண்ணறான். அவனுக்கும் தேவை அடையாளம். இவனுக்கும் தேவை அதே. நீயும் நானும் காலத்தின் காயங்களுக்கான களிம்புகள் தானே.''

     ''அப்பா.''

     ''சொல்லு.''

     ''நீங்க பார்க்க வந்தீங்களே, அந்த நபர், உங்க பழைய சிநேகிதரா?''

     சிரித்தான். ''ஆமாம். ஆனால் இறந்தவர்களைப் பற்றி நான் ஏதும் பகிர்ந்துகொள்வது சரியில்லை.''


***
பின்குறிப்பு - அன்றிரவு அப்பா சுடப்பட்டார். பிரின்ஸ் அப்பாவைச் சுட்டவனைக் கொன்றுவிட்டது. சில நாட்களுக்குப் பிறகு என் ஜீ ஓவை டோலி பொறுப்பெடுத்துக் கொண்டாள். தன் பெற்றோர்களின் நினைவாக அவள் ஒரு பள்ளிக்கூடமும் துவங்கினாள். அத்தோடு ''அன்பே அனைத்தும்'' என்கிற நாடகத் தொகுதி ஒன்றையும் அவள், புதிதாய் முன்னுரை எழுதி வெளியிட்டாள்.
·   

·  
A Surreal Time Frame
Satadal S. Bhattacharya
Courtesy - Indian Literature May/June 2010 - issue No 257



Comments

  1. உணர்ச்சிகரமான கதை.உன்னதமான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  2. உணர்ச்சிகரமான கதை.உன்னதமான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா பிற பதிவுகளையும் வாசிக்கக் கோருவேன்...

      Delete

Post a Comment

Popular posts from this blog