Saturday, February 28, 2015

சைலபதியும் இலக்கியச் சூழலும்

சொற்களின் மீது எனது நிழல் – 
சிறுகதைகள் சைலபதி
பக். 160 விலை ரூ 120/-
*
நிவேதிதா பதிப்பகம் சென்னை வெளியீடு
அலைபேசி 91 89393 87296 email - 
nivethithappathipagam1999@gmail.com


சைலபதியும் 
இலக்கியச் சூழலும்

*
எஸ். சங்கரநாராயணன்

சைலபதியின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘சொற்களின் மீது எனது நிழல்‘ வெளியாகியிருக்கிறது. நேற்று (27,02,2015) இலக்கிய வீதி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து அவருக்கு ‘அன்னம்‘ விருது அளித்து கௌரவித்தது. அதே நாளில் இந்தத் தொகுதியும் வெளியிடப்பட்டது. இலக்கிய வீதி இனியவன் வெளியிட்டார். முதல் பிரதி நான் பெற்றுக் கொண்டேன்.

 எந்தக் காலத்திலும் இல்லாத அளவில், தமிழ்ச்சூழல் கவலை தருகிறதாய் இருக்கிறது. இந்தக் காலத்தில் எழுத வந்ததே கூட சிரமமான விஷயமாய் இருக்கிறது. மூத்த தலைமுறையினர் எல்லாருக்குமே, எங்க காலம் ஆகா, உங்க காலம் சுகமில்லை… என்கிற புலம்பல் இருக்கும். நான் சொல்வது அந்த மாதிரி அல்ல. இலக்கியத்தில்  பொதுவாக அரசியல் தலையீடு குறைவாகவே, அலட்சிக்கத் தக்கதாகவே இருக்கும். அதன் உச்சகட்ட தலையீடு, அதிகாரப் பிடிப்பு இப்போது உள்ளது.

அதென்ன தலையீடு?

இப்போது விமரிசகர்ள, இதைத் தான் எழுது, என்கிறார்கள். இப்படித்தான் இதை நீ எழுது, என்கிறார்கள். இதை நீ எப்படி எழுதலாம், என்கிறார்கள். இதை இப்படி எப்படி நீ எழுதலாம், என வருகிறார்கள். என்ன எழுதப்பட்டிருக்கிறது, என்பதைத் தாண்டி, யார் எழுதினார்கள், ஏன் எழுதினார்கள் என்றெல்லாம் யூகங்களை வாரியிறைத்து ஒரு முட்டு மோதல். கற்பிதங்களை வாகசர்கள் மீது திணிக்கும் விமரிசகர்கள். எழுத்தாளனின் பின்னணியில் செயல்படும் மனம், என அதற்கு வியாக்கியானம். விமரிசகனின் பின்னணியில் செயல்படும் ‘திரிந்த‘ மனத்தைப் பற்றிச் சொன்னவர்கள் இல்லை.

நான் சொல்லப் பார்க்கிறேன் இப்போது. படைப்பை ஒரு முன் வரைவுடன், தன் எதிர்பார்ப்புடன் அணுகுவதே இப்போது விமரிசன பாணி என்கிற அளவில் நிலைப்பட்டு வருகிறது. இது இலக்கியத்தில் ஆரோக்கியமான போக்கு அல்ல. எழுத்தாளனை விட விமரிசகர்கள் பெரியவர்கள் என கொக்கரிக்கிறார்கள். பின் நவீன கதையாடல்களில் இது வலியுறுத்தவும் படுகிறது. எழுத்தாளன் எழுதியவுடன் மரணித்து விடுகிறான், என்று வாசகனுக்கு, ‘தன்‘ மரணத்தை நினைவூட்டி பயமுறுத்துகிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி உட்பட, உனக்கான சமூக முகம் இங்கே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்த அதிகார மையத்தை மீற இயலாது. மனிதனுக்கு விமோசனமே இல்லை, என பின் நவீன வாதிகள் வாதிடுகிறார்கள். பக்கவாதம் தான் இது. வெறும் உசுப்பேத்தி விடும் கலகக்குரல் தான் இது. ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கும்மாளம். பலர் ஒன்றிணைந்து வாழும் சமூக அமைப்பில் சட்ட திட்டங்கள் ஒழுங்குகள் தேவை தான். அவை அன்றி இவர்களும் நானும் ஒரே மேடையில், அல்லது ஒரே குடையடியில் இப்படி விவாதம் செய்யக் கூட முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என அமைதி காணும் சாமானியனைத் துன்புறுத்த இவர்களுக்கு ஏன் தோன்றுகிறது. பயந்தவர்களிடம் போணி பண்ணும் வியாபாரமா இது.

கம்யூனிஸ்டுகளுக்கு கம்யூனியம் பேச சிறந்த இடம், ஜனநாயக நாடு தான். அங்கே தான் அவனுக்கு பேச்சுரிமை பேணப்படுகிறது, என நான் வேடிக்கையாய்ப் பேசுவேன். பின் நவீன வாதிகளுக்கும் இது பொருந்தும்.

வாசகனைத் தெளிவிக்க அல்ல, குழப்பிவிட என்று விமரிசகர்கள் கிளம்பினாப் போலிருக்கிறது. கவலை அளிக்கும் விஷயம் இது. விமரிசன ஆதிக்கம் எப்பவுமே இலக்கியத்துக்கு நல்லது அல்ல. இலக்கியத்தில் இருந்து விமரிசனம் என அமைவதே இயல்பு.

எப்படி அப்படி நிகழ்ந்தது?.. என்பதையும் யோசிகக வேண்டும். மரபு வழியாக புதுக்கவிதை என்கிற பாணியை உலகம் எட்டியபோது, புதுக்கவிதை எழுத வந்தவர்கள் மரபின் சாரத்தை உணர்ந்தவர்களாய் இருந்தார்கள். அதன் பின்னான தலைமுறை மரபின் செழுமையை உணராமலும், அதையே கேலியடித்தும் படைப்புகள் தர ஆரம்பித்தபோது, இலக்கியம் அதன் மேல்மட்ட அளவிலேயே மழைத்தண்ணீராய் ஓட ஆரம்பித்து விட்டதை உணர முடியும். படைப்புகளை, படைப்பாளரின் வாழும் சூழல் சார்ந்து ஒரு வட்டம் போட்டு, இதான் இவன், இப்படித்தான் இவன் எழுதுவான், என எல்லாவற்றையுமே அலட்சியப்படுத்தி, அல்லது குற்றப்படுத்திப் பார்க்கிற பாவனைகள் வந்துவிட்டன. தன் சூழலை விட்டு வெளியே வந்து ஓர் எழுத்தாளன், தன் படைப்பு வீர்யத்துக்கு என்ன நியாயம் செய்துவிட முடியும்? அடுத்தவனின் சட்டையைத் தேவையற்று மாட்டித் திரிகிற நிலைமைக்கு எழுத்தாளன் பலவந்தப்படுவது கவலை அளிக்கிறது.

தவிரவும், ‘சமுதாயப் பிரச்னை‘ பேசும் இன்றைய எழுத்தாளனுக்கு பெரிய வாசிப்புப் பின்னணியோ, பிரச்னையின் நிஜமான தீவிரமோ, அக்கறைசார்ந்த பொறுப்போ அத்தனைக்கு இல்லை. அவனது படிப்பறிவு குறைவு. பட்டறிவும் குறைவாகவே இருக்கிறது. ஆக விவாதிக்க வரும் விஷயம் பற்றி அவர்களுக்கே அரைகுறையான அல்லது ‘எனக்குத் தெரியும்‘ என்கிற வீம்பும் இறுமப்பு சார்ந்த பிரமையும் தான் படைப்பில் காணக் கிடைக்கிறது. அதனால் அவர்கள் படைப்பில் காட்டுகிற ‘நியாயமின்மை‘, சமூகத்தின் எதிர்ப்புக் குரலுக்கும் காரணமாகி விடுகிறது.

இந்த சூழலில் தான் சைலபதியின் கதைத் தொகுதி ‘சொற்களின் மீது எனது நிழல்‘ வெளியாகியுள்ளது. தன் இயல்பில் தான் கண்டு கேட்டு உணர்ந்த விஷயங்களை, சாதிச்சாயம் இன்றி, அரசியல் கட்டமைத்த சமூகப் பார்வை இன்றி அவர் வாழ்க்கையின் தன்னொழுங்கில் முன்வைக்க முயல்கிறார், என்பதே ஆறுதலாய் இருக்கிறது. அதுவே முதற்கட்ட அளவில் கவனிக்கத்தக்க விஷயமாய் இருக்கிறது. பக்கச் சார்பு அற்ற கதைகள் என்ற அளவிலேயே தேடிப் பார்க்க வேண்டியிருக்கிற இலக்கிய சூழலில், சைலபதி தன் அடையாங்களுடன் அடையாளப் படுகிறார். கெடுபிடிகளால் அசைப்புறாமல் அவர் எழுத வேண்டும். இதை அவர் உணர்ந்திருக்கிறாரா? இன்னும் பெரிய வட்டத்துக்குள் அவர் வருகையில் அவர் இதைக் கடைப்பிடிப்பாரா?

என் கவலைக்குக் காரணம் உண்டு. ‘மழித்தலும் நீட்டலும்‘ என்கிற சிறுகதை. ஐயர் பாத்திரம் ஒன்று. சவரக்கடை நடத்தும் சாத்தன்… இரு பாத்திரங்கள். சாத்தனின் மகனின் சமூக ரீதியான செயல்பாடுகளைக் கிண்டல் செய்யும் ஐயர். அவன் முன்னேறி விடுவான், என்பதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை, என்கிற சிறுமை. அதைப் புரிந்துகொண்டான் சாத்தன், என முடியும் கதை.

இந்தக் கதைக்காகவே கதைச்சூழல். இப்போது சவரக்கடைகள் நவீன முகம் அடைந்துவிட்ன என ஆரம்பிக்கிற கதை, ஆனாலும் பழைய சவரக்கடை ஒன்று, பழைய சாத்தன்… என உட்சுருள்கிறது. இதுதான் இலக்கிய அரசியல்  ந்ர்ப்பந்திக்கும், ‘இதை எழுது. இதை இப்படி எழுது‘ கட்டளை. வழக்கொழிந்த விஷயங்களை பூதக்கண்ணாடி கொண்டு தேடி முன்னிறுத்தி, நான் சமுதாயப் புரட்சிக்குப் பங்களிக்கிறேன், என்கிற பாவனை…

ஆனால் அநேகக் கதைகள் தன்னியல்பில் இந்தத் தொகுதியில் உலா காண்பது ஆறதல் அளிக்கிறது. மரபுசார்ந்த சிந்தனைவியூகத்துடன் இவர் பாத்திரங்கள் நடமாடுகின்றன. கனவுகள் உண்டு. ஆனால் அதிதங்கள் அற்ற பாத்திரங்கள். பிரமைகள் அல்ல. நம்பிக்கை சுமந்து அதை தாமே வேடிக்கை பார்க்கிற பாத்திரங்கள். முனி வருகிறது. இறந்தவனின் சாபம் வருகிறது. இறந்தவர்களுக்கு அக்கறையுடன் ‘காரியம்‘ செய்ய இவர் பிரியப்படுகிறார். அதைப்பற்றிய உங்கள் விமரிசனத்துக்கு கதையில், அதன் யதார்த்தப் பின்னணி மீறிய கருத்துத் திணிப்பு இல்லாத அளவில், நல்ல முற்றம் அமைக்கப் பட்டிருக்கிறது. யதார்த்தப் படைப்புகளில் தான் அது சாத்தியமும் ஆகிறது.


உத்தி சார்ந்த முறுக்கல்கள் இல்லாமல், இன்றைய சூழலில் யதார்த்தக் கதைகளை அவர் எழுதுகிறார். ஆறுதல் அளிக்கும் விஷயம் இது. சைலபதி விமரிசன அரசியலுக்குள் அலைப்புற மாட்டார், என நான் நம்புகிறேன்.

No comments:

Post a Comment