short story












கல்கொக்கு



எஸ்.சங்கரநாராயணன்

*
ப்படியும் வீடு திரும்ப இரவு நேரமாகி விடுகிறது. சுடுகாடு. ஊராட்சி எல்லை போர்டு. டிரான்ஸ்ஃபார்மர். கடந்து புத்துக்கோயில் வாசலில் இறங்கவே கால் கூசி பயந்து கிடக்கும். பஸ்சும் போய்விட்டால் ஜிலோவென்றிருக்கும். விட்டு விட்டு வாகனங்கள் பால்லாரி போல வெளிச்சம் சிந்திப் போகும். தவளை குதிக்க, நீர் பிரிந்து நீர் சேர்ந்தாப் போல, திரும்ப இருட்டு சூழும்.

     அவன் மனைவியின் கனவு அது. வீடு வாங்குவது. சொந்த வீடு என்பது மன வலிகளுக்கு ஒத்தடம் தான்.

     குளிரான காற்று. விளக்கவியலாத அதன் வாசனை. தனிமை. மகா தனிமை அது. ரெண்டு பக்கமும் வயல்கள். ஒரு காலத்தில் வயற் பசுமைக்கு நடுவே வெள்ளைக் கொக்குகள் தட்டுப்படும். இப்போது விவசாயமே பட்டுப்போய் மனைகளாகி வெண் கற்கள் நின்றன. கல்கொக்குகள் போல.

     ஒரு ஐம்பதடி நடை. வலப்பக்கமாக இறங்கும் சிறு சந்து. விஸ்வரூபம் எடுத்தாப் போல முள் கிளம்பி கன்னத்தைக் கீச்சுவதாக ஆடியது. இரவுப்போதில் சடைசடையான அதன் காய்கள் பாம்பென அச்சுறுத்தின. புதர்களில் இருட்டு தீவிரப்பட்டு அடர்ந்திருந்தது. யாரோ அமுக்கிப் பிடித்தாப்போல. காலடியில் செம்மண் சரளை தள்ளாட்டியது. இங்கிருந்து வீடு சேர பத்திருபது நிமிடம். பகலில் தூரம் தெரியாது. ராத்திரியில் நீளங்கள் அதிகரித்து விடுகிறது. காலம் பலூனாய் உரு பெருகிவிடுகிறது.

     சில நாட்கள் நிலா துணை வரும். தனி அனுபவம் அது. மூளைக்குள் டென்னிஸ் பந்துகள் துள்ளும். தன்னைப்போல வாயில் பாட்டு வரும். மனசைப் பட்டமாய்ப் பறக்க விடுகிற பாடல்கள். எம். எஸ். விஸ்வநாதன், எம்ஜியார் கூட்டணி. குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்... ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்... கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... முதல் பாட்டு முடிய அடுத்த பாட்டு. வாய் மணக்கும் எம்ஜியார் திருப்புகழ்! வாலியும் கண்ணதாசனும் வார்த்தைப் பூ இரைந்தார்கள். சில சமயம் பாட்டோடு தாளமும் இசையுமே வாயில் பீரிடும். டட் டர்ர டட்ட பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா! இடையே மேகம் வெட்டி வெண்மையொளி உள்பதுங்குவதும் உண்டு. குதிரையை லகான் கொண்டு இழுத்தாப் போல மனம¢ பின்வாங்கினாலும் உற்சாகத்துக்குக் குறைவிராது.

     அன்றைய நாள் அப்படி இல்லை. அலுப்பாய் இருந்தான். நெடுஞ்சாலையில் விண்வெளிக்காரனின் கவச முகம் போன்ற சோடியம் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தெருவைக் கடந்து வலப்பக்கச் சந்தில் இறங்கியபோது விளக்கணைந்தது. திடுக்குற்றான். மகா இருள். நிலா இல்லை. நட்சத்திரங்களே இல்லை. நிலக்கரிச் சுரங்கம் இப்படித்தான் இருக்குமாய் இருந்தது. முகம் அருகே உரசிய முள்ளைத் தலைகுனிந்து தவிர்த்தான். இன்னும் எத்தனை முள் நீட்டி மறைக்கிறதோ தெரியாது. அடுத்த அடி தெரியாத இருள். கையைத் தூக்கினால் கை தெரியாத இருள்..

     இப்ப என்ன செய்வது? உள்ளே கப்பென்று எதோ கவ்வியதாய் உணர்ந்தான். ஒரு வேட்டைநாய்க் கவ்வல். உலகம் சட்டென்று ஆபத்தானதாகி விட்டது. வாழ லாயக்கற்றதாகி விட்டது. கால் அடுத்த அடி எடுத்து வைக்க மறுத்தது. சிறு நடுக்கமும். சண்டி மாடு. எப்பவுமே அவன் அத்தனை தைரியசாலி என்று சொல்ல முடியாது. வளர்ப்பு அப்படி. இருட்டு. மகா இருட்டு. இருட்டில் எதுவும் நிகழலாம். தான் பாதுகாப்பற்று இருப்பதாய், நிராயுதபாணியாய், கையறு நிலையாய் இருப்பதாய் ஒரு திகைப்புடன் உணர்ந்தான்.

     சின்ன வயசிலிருந்தே இருட்டாகி விட்டால் அவன்அம்மா வெளியே அவனை அனுப்பவே மாட்டாள். தலைச்சன் பிள்ளை. யாராவது தூக்கிப்போய் நரபலி தந்துவிடுவார்கள்... என்றெல்லாமான விபரீதக் கவலைகள். ரொம்ப பயந்தவள் அம்மா. அவனையும் அவள் தன் பயத்துடன் வளர்த்தாள். பயத்தை ஊட்டியே வளர்த்தாள். யாம் பெற்ற பயம் பெறுக இவ் வையகம். அவனும் அதை நம்புகிறாப் போலவே ஆகிப்போனது.

     இந்த இருள். அவன் கால்கள் கட்டப்பட்டு விட்டாப் போலிருந்தது. உலகில் எதுவுமே இல்லை இப்போது. அவன் மாத்திரமே. அவனாவது இருக்கிறானா? தெரியாது. அதைச் சொல்ல யாராவது கூட வேண்டாமா? யாருமே இல்லை. அவனே இல்லை. இல்லை இருக்கிறானா, என்று தெரிந்துகொள்ள ஒரு ஆவேசத்துடன் முயன்றான். சட்டென தொண்டையை விரித்து கமற முற்பட்டான். சத்தமே யில்லை. நான் இருக்கிறேனா என்று தன்னையே தொட்டுப் பார்த்தான். ரெண்டு பக்கமும் வயல் மனைகள். நடுவே ரஸ்தா என ஞாபகம் இருந்தது. இனி நினைவுகளால் அவன் இயங்க வேண்டும். வழியை காலால் விசாரித்துப் போகவேண்டும்... வீடு வரை... இருபது நிமிட நடை. வெளிச்ச அடையாளங்களுடன் இருபது நிமிடம். இந்த இருட்டில் எத்தனை நேரம் ஆகுமோ தெரியாது. நடையா? காலையே அசைக்கவே எடுத்து வைக்கவே முடியவில்லை.

     தெருவில் எடுத்துப்போட்ட சாக்கடையாய் இருள். கருப்புக் கசடு. கலிஜ். உடம்பே பிசுபிசுப்பாய் உணர்ந்தான். ச்சே இது வியர்வை. கெட்ட வாசனை வருகிறதா? சாக்கடை வாசனை? ச்சேச்சே. அதெல்லாம¢ இல்லை. இந்த மனசு... கொஞ்சம் விட்டால் பீதியை உட்பெருக்கி ஆளைச் சுருக்கி விடுகிறது. உடம்பு சிலிர்த்தது. எதுவும் நிகழலாம். இதுவெல்லாம் குட்டிச் சாத்தானின் வேலையாகக் கூட இருக்கலாம். பேய்கள் இருட்டில் அபார தைரியம் பெறுகின்றன. தலை வரை போர்த்தியபடி கஞ்சி நிறத்தில் காற்றில் மிதந்து அவை வருகின்றன. சினிமாவில் அவை ஜோராய்ப் பாடுகின்றன.

     குட்டிச்சாத்தான். கொள்ளிவாய்ப் பிசாசு. பில்லி. சூன்யம். செய்வினை. மனுசாளை இம்சிக்க எத்தனையெல்லாம் இருக்கிறது லோகத்தில். பேய்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் எப்படி தலைச்சன்களை அடையாளம் தெரிகிறது தெரியவில்லை. விக்னம் இல்லாத உடம்புதான் அவர்களுக்குத் தேவை. நரபலி அப்பதான் பலிக்கும். அதனால் தான், நாம பிள்ளைங்களுக்கு காது குத்துகிறோம். கதைகள். காது குத்தும் கதைகள்! இவை பொய்கள்தான். பேயே பொய்தான். இருந்தாலும் பயந்து கிடக்கிறதே. ராத்திரி பயம். பகலில் சிரிப்பு... ஆனால் மொத்தத்தில் சுவாரஸ்யம். அம்மாவுக்கு எத்தனையோ பேய்க்கதைகள் தெரிந்திருக்கிறது. இந்நேரம் அவை ஞாபகம் வந்திருக்க வேண்டாம். ஆனால் இப்படித்தான் ஆகிப்போகிறது. எப்போது வேண்டாமோ தப்பாமல் அப்போது அது ஞாபகம் வந்துவிடுகிறது. கால்கள் வெடவெடவென்று நடுங்குவதை உணர்ந்தான். உடம்பு திடீரென்று சில்லிட்டாப் போலிருந்தது.

     நடக்கவா, அசையவே முடியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே நின்று கொண்டிருப்பது? உதவிக்கு யாரும் அந்த வழியில் வரவும் இல்லை. வந்தாலும் அவர்களை எப்படி நம்புவது? மனிதனின் வக்கிர உணர்வுகள் தலைதூக்கி மக்கள் இருட்டில் அபார தைரியம் பெறுகிறார்கள். வர்றவன் திருடனாக வழிப்பறிக் கொள்ளையனாக இருக்கலாம். அட என்ன பயம். நம்மிடம் எதுவும் இல்லையே, என்று இருக்க முடியாது. எதுவும் இல்லாத எரிச்சலில் அவன் மேலும் ஆத்திரப்பட்டு நம்மைக் காயப்படுத்தி விடலாம்.

     பேய்கள் கூட மனுச ரூபத்தில் தான் வருகின்றன.

     இருட்டு எனும் கிணற்றுக்குள் விழுந்து கிடந்தான் அவன். காப்பாற்ற யாரும் வரும்வரை, வந்து அவனை அவர்கள் இருட்டுக் கிணற்றில் இருந்து மீட்டு, தூக்கி மேலே கொண்டுவர வேண்டும். அல்லது அவன் காத்திருந்தாக வேண்டும். வெளிச்சம் வரும் வரை. வெளிச்சம் எப்போது வரும்? வருமா? வெளிச்சம் எப்படியோ மனுசாளுக்கு அபார தைரியம், அசட்டு தைரியம் கொண்டுவந்து விடுகிறது. ராத்திரி பூரா அந்த இருட்டில் காய்ச்சல் படு போடு போடுகிறது. செத்திருவம்னே ஆகிவிடுகிறது. காலை வெளிச்சக் கீற்று உள்ளே நுழைய நுழைய தெம்பு ஊறி மனுசன் நிமிர்கிறான். நாக்கு ருசி கேட்கிறது.

     இருட்டிடம் பூட்டுகள் இருக்கின்றன. வெளிச்சத்திடம் சாவிகள் இருக்கின்றன.

     இதொன்றும் அறியாமல் இவள், என் மனைவி வீட்டில் ஹாயாகத் தூங்கிக் கொண்டிருப்பாள். வீட்டின் டிஷ் ஆன்டென்னா, நம்பூதிரியின் ஓலைக்குடைபோல வீட்டின் கூரையில். அந்தக்கால பஞ்ச தந்திரக் கதைகளில் இந்த ராட்சசனின் உயிர் அந்தக் கிளியில், என்றெல்லாம் கதைகள் சொல்வார்கள். இவையும் அம்மா சொன்ன கதைகள் தான். நம்ப முடியாத கதைகளை யெல்லாம் அம்மா நம்பும்படி, தானே நம்பி அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். பஞ்ச தந்திரக் கதைகள் போல, இந்தயுகப் பெண்களின் உயிர் டி.வி. பெட்டியில் இருக்கிறது. எழுந்தவுடன் டி.வி.யை ஆன் பண்ணிவிட்டே அவள் பாத்ரூம் வரை போகிறாள்.

     ஹ இப்படி கரெண்ட் காலைவாரினால் டி.வி. இருந்து என்ன பயன்? அது பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. அவனிடம் மொபைல் ஃபோன் இல்லை. வைத்துக்கொள்ளவில்லை. பெரிய செலவு ஒண்ணுமில்லை. என்னவோ அவன் வைத்துக்கொள்ளவே தோணவில்லை. அவசரம் என்று அவனை யார் கூப்பிடப் போகிறார்கள், என விட்டுவிட்டான். இப்போது அவனுக்கே அவசரம். அவனால் கூப்பிட முடியாமல் போய்விட்டது. செல் ஃபோன் இருந்தால் கூட அவளைக் கூப்பிட முடியாது. வீட்டில் தொலைபேசியும் இல்லை. அலைபேசியும் இல்லை. என்ன, பென்சில் டார்ச் வெளிச்சமாய் செல் ஃபோன்கள் சிறு வெளிச்சம் காட்ட உதவும். சிலர் சிகெரெட் லைட்டர்கள் வைத்திருந்தார்கள். அதை எடுத்து அவர்கள் சிகெரெட் பற்றவைத்துக் கொள்கையில், இந்தத் ... எப்ப மூக்கைச் சுட்டுக்குவானோ என்றிருக்கும். எப்பவுமே அடுத்தாளைப் பற்றிய நல்ல விஷயங்கள் எதிர்பார்ப்புகள் நம்மிடம் இல்லை.

     மனசை வேடிக்கை காட்டி அலைக்கழிக்கப் பார்த்தான். பயத்தில் இருந்து விடுபட மறுத்தது. இருட்டுக் கசம். நிசம் என்று அதுவரை நம்பிய அனைத்தையும் அழித்து பொய்யாக்கி விட்டது இருள். அல்லது இது தான் நிசமோ? உலகில் நிசம் என்று எதுவுமே கிடையாதோ. எல்லாம் மாயை தானோ, என மயங்கியது. எல்லாம் மாயை என்றால் இதுவும், இந்த நினைவும் மாயையாகவே இருக்கும். அப்ப எல்லாமே நிசம் என்றாகி விடாதா?

     இருட்டு குழப்பங்களை விளைவிக்கிறது. வெளிச்சம் தெளிவு தர வல்லது.

     அடிப் பிரதட்சிணம் செய்கிறாப் போல அடிமேல் அடி வைத்து உஷாராய் நடக்க ஆரம்பித்தான். இப்படி இங்கேயே இருந்துவிட முடியாது. எதாவது செய்தாக வேண்டும். கடும் இருள். திக்கு திசை தெரியாத இருள். நேர்கோட்டில் நடக்க முடியாது. எந்த திசைக்கு சரிகிறோம் தெரியாது. வண்டிப்பாதை தான் இது. தானறியாமல் ஓரங்களில் ஒதுங்க முள் கீச்சிவிடும். வயலில் அவன் இறங்கிவிடக் கூடும். வீட்டைப் பார்க்கப் போகாமல் வேறு பக்கமாய் அது அவனை அழைத்துப் போய்விடக் கூடும். ஆனாலும் வேறு என்ன வழி இருக்கிறது? அவனுக்கு வழியே தெரியவில்லை. போவது தான் வழி. வீடடைதல் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயமாய் ஆகியிருந்தது.

     தற்செயலாக அரைக்கை சட்டை இல்லாமல் முழுக்கை அணிந்திருந்தான். குளிருக்கு இப்போது இதமாய் இருந்தது. தனிமை தெரியாமல் இருக்க எதுவும் பாடலாம். சிலாள் விசிலடித்தபடி போவான். வந்த நாள் முதல் இந்த நாள் வரை... என்று சிவாஜியின் விசில் பாட்டு. என்னாத்துக்கு சிவாஜி விசில் அடிக்கிறான். இருட்டில் பயந்துட்டாப்லியா? அவனுக்கு தொண்டையில் இருந்து சத்தமே வரவில்லை. அப்படியே விசில் கிளம்பினாலும் அதில் நடுக்கம் இருக்கத்தான் இருக்கும்.

     எதிரே பேயும் பாடியபடி வந்தால் என்ன செய்வது?

     மாட்டிக்கிட்டமடா, என்றிருந்தது. தெரு என்கிற அமைப்பு இருந்தாலும், இருமருங்கும் வீடுகள் தொடர்ச்சியாய் இல்லை. கிழவியின் வாய் போல விட்டுவிட்டு நின்றன வீடுகள். தெரு விளக்குகள் இன்னும் போடவில்லை. அந்தப் பகுதி இப்போது தான் ஊராக உருக்கொள்ள ஆரம்பித்திருந்தது. கர்ப்பத்தில் இருந்தது ஊர். அங்கே வீடுகட்டி வந்த சிலர் வாகனப் பிராப்தி உள்ளவர்கள். நகரத்துக்கு ஒரு விசேஷ வைபவம் என்றோ, தினசரி அலுவலகம் போக என்றோ கூட, போனால் கணவன் மனைவி ரெண்டு குழந்தைகள், என நாலு பேருமே அமுக்கி உட்கார்ந்துகொண்டு ஒரே வண்டியில் போய்வந்தார்கள். அந்தக¢ கணவனுக்கு மாமனார் அவரே வாங்கித் தந்தாரோ, இவனே கேட்டிருப்பானோ தெரியாது. சில மாமனார்கள், இப்படி ஊரெல்லை மனை வாங்கித் தருகிறார்கள். அவன் மாமனார் இருக்கிற மனையை விற்றுத் தான் அவன்கல்யாணம் பண்ணினார். ராசி என்று ஒண்ணிருக்கில்லே? அவர்ராசியா அவன்ராசியா இது தெரியவிலிலை!

     அப்படியே நின்றான். பேய்கள் என்கிற தீய சக்திக்கு எதிரே மனுசனே கண்டுவெச்ச நல்ல சக்தி ஒன்றிருக்கிறது. கடவுள். கடவுள் துணை வருவார். அரக்கர்கள் தோன்றி மனுச குலத்தை அழிக்க முற்படும் தோறும் கடவுள் முன்வந்து அவர்களை அழித்து உலகை ரட்சிக்கிறார். பயம் சுமந்த மனசுக்குள் வெளிச்சம் பாய்ச்சுகிறார் அவர். அவரை நம்ப வேண்டும். (அரக்கர்கள் சாமி கும்பிடுவார்களா தெரியவில்லை.) நாள் என்செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும்... பயத்தில் படபடவென்று என்னவெல்லாம் பாடுகிறார்கள். தீபாவளிப் பட்டாசு! கந்த சஷ்டி கவசம். அது காக்க, இது காக்க, என எல்லா உறுப்பையும் காக்கச் சொல்லி மன்றாடல். எல்லா உறுப்புமே டேன்ஜர்ல தான் இருக்கிறாப் போல. நல்லா இருக்கிறதுக்கும் முன் கூட்டியே சொல்லி வெச்சிக்குவம்னு ஒரு முன்னேற்பாடு தான் போல. அது சரி அவன் கவலை அவனுக்கு. பாரதியாரே பதறிப்போய் காலா என் காலடியில் வாடா... உன்னை சிறு புல்லென மிதிக்கிறேன் என்கிறார். அவனே இவர்காலடியில் வந்து நின்றால், இவர் நோகாமல் காலைத் தூக்கி மிதிச்சிருவார். பாவம் நல்ல மனுசன். கடைசியில் அவரை யானை மிதித்து விட்டது...

     பசி தாளாமல், வயிறு படுத்தும் பாடு தாளாமல், சொன்னான் பார் ஒரு புலவன். இல்லை புலவி, ஔவையார்... இடும்பை கூர் என் வயிறே. உன்னோடு வாழ்தல் அரிது... பழகிக்கொள். இதுதான் நிசம். இத்தோடு வாழ்... என்கிற தெளிவு அது. செல்லமான அங்கலாய்ப்பு. இது இருள். இது உலகம். இதற்கு நான் பழகிக் கொள்ள வேண்டும். இங்கே நான் வாழ வந்திருக்கிறேன். தினசரி இதே வழிதான் நான் வரவேண்டும். அடிக்கடி இப்படி தெரு விளக்குகள் அணையலாம். இருக்கட்டும். அதையும் நாம் சந்தித்துத் தான் ஆக வேண்டும். தவிரவும் ஆகா, இந்த இருள்... இருள் என்பது என்ன, அதையும் நாம் ருசித்துப் பார்த்து அனுபவிக்கப் பழகிக் கொண்டால் ஆயிற்று. குறைந்த பட்சம் பயம் விலகும் அல்லவா?

      பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏற முடியுமா என்றிருக்கும். ஏறியபின் சிறிது ஆசுவாசமாய் நாம் ஒருவருக்கொருவர் ஒத்திசைவு பெற்று விடுவது இல்லையா? அவனுக்கு திடீரென்று வான்கோ ஞாபகம் வருகிறது. பரவாயில்லை. பயம் சில விஷயங்களை ஞாபகப்படுத்துவது போலவே, தெளிவு அநேக விஷயங்களை மேல்மட்டத்துக்குக் கொணர்ந்து விடுகிறது. என்ன சொன்னான் வான்கோ. துல்லியமான இருள் என்பது இல்லை. எந்த இருளிலும் ஒரு வெளிச்சமும், எந்த வெளிச்சத்திலும் சிறு இருளும் இருக்கிறது. கால வரிக்குதிரை! வேலை கிடைக்கிற வரை பொழுது போகாத நேரங்களில் நூலகம் போவான் அவன்... அது நல்ல விஷயம் தான். மேலே இருள். கீழே இருள். ரொட்டித் துண்டுகள் அவை. நடுவே வெண்ணெய். அதுதான் வெளிச்சம். இருட்டெனும் நீருக்குள் கண்ணால் துழாவித் தேட சிறு அளவில் பார்வை பழகிக்கொள்ள முடிகிறது. அதன் விஸ்தீரணம் குறைவு என்றாலும் என்ன அழகான உணர்வு அது.

     கவிதை கிளைக்கிற கணங்கள். இருட்டில் கண்ணுக்கும், காதுக்கும் நு£தன அனுபவங்கள் சித்திக்கின்றன. அவை ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள். சிறு வெளிச்சத்தில் பொருட்களுக்கு ஒரு ஓவியத்தன்மை வாய்த்து விடுகிறது. வெளிச்சம் வண்ண ஓவியங்களைத் தந்தால், இருட்டில் அது கருப்புவெள்ளை படக் கண்காட்சியாகி விடுகிறது. வெளிச்சம் நிழலை அறியாது. இருள் மேலதிக சூட்சுமம் கொண்டது. இருளுக்கு ஒளியையும் தெரியும். நிழலையும் தெரியும். நிழல் என்பது இருளின் குழந்தை.

     தெருவில் துள்ளித் திரியும் தவளைகள். அவை இப்போது தூரத்தில் இருந்து சப்த அடையாளங்கள் காட்டின. அதுவரை குறித்துக் கொள்ளாத, கவனப்பட முடியாத சிற்றொலிகளையும் இருள் பூதாகரமாக்கி உள்ளங்கைக்குள் ஆனால் ரகசியமாய்த் தந்தது. இயற்கையை நீ வணங்கினால் அது பொதிவை அவிழ்த்து, பிரியமான பாட்டியாய் சுருக்குப் பை அவிழ்த்து அநேக பொக்கிஷங்களைக் காட்டித் தருகிறது.

     மனம் நிதானப்பட ஆரம்பித்திருந்தது. எப்படியும் சிறு பதட்டத்துக்குப் பின் மனம் சமாளித்தபடி மேல் நகர ஆரம்பிக்கிறது, என ஆச்சர்யத்துடன் நினைத்துக் கொண்டான். அதிலும் காலடியே தெரியாத இந்த இருள். இதில் அடுத்த அடியை வைக்கவே தடுமாறும் தன்னை ஒரு குழந்தையாய் உணர்ந்தான். ம்மா. ங்கா... என விநோத சப்தங்களுடன் தன் அகாராதியில் அதற்கான பிரத்யேக அர்த்தங்களுடன். குழந்தையாய் உணர்தல் வாழ்வின் பெரும் பேறு அல்லவா? இருட்டு ஒரு தாய்மை உணர்வுடன் அவனை, அவனது குழந்தைத் தன்மையை மீட்டெடுத்து அவனிடமே தருகிறது. நானே எனக்குக் குழந்தையானேன். தெளிந்த நல் அறிவோடும், அதேசமயம¢ விளக்கவியலா உவகையோடும் இப்படி இருப்பது ஆனந்த நிலை அல்லவா?

     ஆகா இவற்றை இத்தனை நாள் இழந்திருக்கிறேன், என ஒரு ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டான். உன் உத்தேசங்களுடன், அதன் வெற்றிகள், அல்லது ஏமாற்றங்களுடன் வாழ்க்கையை இருள் சுவாரஸ்யமாக்கி விட்டது. அட எனக்கே நான் அந்நியனாகவும், எனக்கே நான் முன்னைவிட நெருக்கமானவனாகவும் ஆக்கிக் காட்டிய இருளின் மேஜிக்.

     இன்றோடு பயத்தை ஒழித்தேன்... என்று வெட்கமில்லாமல் அந்த இருளைக் கையெடுத்துக் கும்பிட்டான். நடை தெளிந்திருந்தது. அறிவு கால்களுக்கு வழி சொல்லியது. மெல்லத் தான் ஆனால் வீடு என்கிற உத்தேச வெளியில் உத்தேச திசையில் நடந்தான். குருடர்கள் தயக்கம் இல்லாமல் இங்கே நடந்து போவார்கள் என நினைக்க சிரிப்பு வந்தது. நான் குருடனும் அல்ல, பார்வை உள்ளவனும் அல்ல, என்றால் நான் யார்? மூன்றாம் பாலா இது? சிரிப்பு வந்தது.

     இருள் ஒரு மகா அன்புடன் மொத்த உலகையுமே கட்டி அணைக்கிறது. எத்தனை பெரும் தாய்மை உணர்ச்சி அது? வெளிச்சத்தின் இயல்பு கதகதப்பு. என்றால் இருள் குளுமையானது. இருள் என்பது கடவுளின் நிழல்.

     பகலில் இந்த அனுபவங்கள் கிடைத்தே யிராது என நினைத்துக் கொண்டான். அதிக வெளிச்சமான சாலை அல்ல அது. தெரு விளக்குகள் அந்த ஓரம் ஒன்று, இந்த ஓரம் ஒன்று என்றுதான் எரியும். என்றாலும் வெளிச்சம் பார்த்தபடி நடக்க தெம்பாய் இருக்கும். ஒவ்வொரு வெளிச்சத்துக்கும் ஒரு எல்லை உண்டு. தெருநாய்கள் போல அவை. ஆனால் இருள் எல்லைகளை விரும்புவது இல்லை. கருத்த காளி தான் இருள். அவள் ஏன் அப்படி கண் பிரித்து உக்கிரமாய்ப் பார்க்கிறாள். இருளில் அவளுக்கும் கண் தெரியவில்லயோ என்னமோ!

     தெரு திரும்பினான். பெரும் நிழலாய் அவன் வீடு தெரிந்தது. தலையில் நம்பூதிரி குடை. அதை மடக்க முடியாது. சுற்றிலும் இன்னும் வீடுகள் எழும்பியிருக்கவில்லை. காலம் அவற்றை அந்த பூமிக்குள் அழுத்தி வைத்திருக்கிறது. வீட்டைப் பார்த்த கணம் மனம் எழுச்சி கண்டது. குபீரென்று தெருவில் விளக்கு எரிய ஆரம்பித்தது. கண் கூசியது அந்த வெளிச்சம். இருள் சட்டென சுதாரித்து வழிப் பாம்பாக ஓடி ஒதுங்கியது. திரும்பிப் பார்த்தான். அதோ தெரு திருப்பத்தில் இங்கிருந்து தெரியாத இடத்தில் இருள் பதுங்கிக் கொண்டது. வெளிச்சமும் இருளும், கண்டுபிடி என்று கண்ணாமூச்சி ஆடுகின்றன...

     கிறுக்குத் தனமாய்ப் பட்டது. ஆனாலும் அவன் அந்தத் திருப்பத்தை நோக்கி கைகாட்டினான். போய் வருகிறேன் இருளே. மீண்டும் சந்திப்போம்.

*

storysankar@gmail.com mob 91 97899 87842

Comments

Popular posts from this blog