FICTION Kuwait

*

மூங்கில் தண்டு


சாத் அல்சனௌசி (குவைத்)
*



தமிழில் எஸ். சங்கரநாராயணன்


காலி சிலிண்டரை மாற்ற வேண்டியிருந்தது. ஒரு மாலை. வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு பெரிய சந்தைக்குப் போனேன். ஜப்ரியா பகுதியின் ஒரு தெருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல். அங்கே எப்பவுமே ஜன நடமாட்டம் அதிகம் தான். ஆனால் இந்த நெரிசல், ஒரு காரும் ஒரு விரற்கடை போலும் நகரக் கொள்ளவில்லை, ஒரு விபத்தோ, பந்தோபஸ்து சோதனையோ இருந்தால் தான் இப்படி திணறல் ஏற்படும். நான் எதிர்பார்த்தபடி, தெருக்கோடியில் காவல்துறை கார்கள். மினுங்கும் அவற்றின் நீல சிவப்பு விளக்குகள். தெருவோரமாக காவலர். ஓட்டுநர் சீட்டு மற்றும் வாகன உரிமங்களைச் சரிபார்க்கிறார்கள்.

     டாக்சி ஓட்டுநர் சன்னலைத் திறந்து தனது அடையாளக் காகிதங்களை நீட்டுகிறார். அதை சரிபார்த்த போலிஸ்காரர், அதைத் திருப்பிக் கொடுக்குமுன், என் அடையாள அட்டையைக் கேட்டார். என் கால்சாராய்ப் பைக்குள் கைவிட்டேன். என் பர்ஸ்... இல்லை. ச். கலவரமாய் இருந்தது. தெருவில் என் வீட்டின் திசை காட்டி அவரிடம் சொன்னேன். ''அதை என் அடுக்ககத்திலேயே விட்டுட்டு வந்திருக்கிறேன்.''

     அந்தாளுக்கு விளங்கவில்லை. ''இக்வாமா, இக்வாமா.'' அரபு மொழியில் அவர் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தார். நான் சட்டபூர்வமாய் குவைத்வாசி என்பதற்கு அவருக்கு ருசு வேண்டியிருந்தது. நான் பிறந்ததே இந்த நாடு தான். எனக்கு குவைத்தில் தங்கும் அடையாள அட்டை தேவை கிடையாது... ''நோ இக்வாமா'' என்றேன் நான் ஆங்கிலத்தில். அப்பகூட அவரால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

     ''முதல்ல கீழ இறங்கி வாங்க'' என்றார் அவர். ''இங்க பாருங்க...'' என நான் அவரிடம் விளக்க முற்பட்டேன். அவரோ அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. ரொம்ப முரட்டுத்தனமாய் என்னிடம் அவர் கத்த ஆரம்பித்தார். என்னால் அவரிடம் எதுவுமே பேச முடியவில்லை.

     என் அலைபேசியை எடுத்து அத்தை ஹிந்திடம் பேச முயற்சி பண்ணினேன். சட்டென அவளை அழைக்கலாம் என்று ஏன் முடிவெடுத்தேன், எனக்கே தெரியாது. ஆனால் அவள் அலைபேசியை எடுக்கவே இல்லை. உடனே கௌலாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். 'போலிஸ் பிடியில் நான்.' அதற்குள் அந்தப் போலிஸ் என்னை முதுகில் உந்தித் தள்ளினார். திடீரென்று பார்த்தால், நான் சாலையோரம் நின்றிருந்த போலிஸ் வேன் ஒன்றில். விசா காலாவதியான அல்லது அடையாள அட்டையே இல்லாமல் பிடிபட்ட வந்தேறிகளுடன் நானும்! அராபியர்க.ள இந்தியர்கள். பிலிப்பைன், வங்க தேச நபர்கள். கூட நான்.

     நான் பார்க்க மத்த குவைத் ஆட்கள் போல இல்லை தான்.

     வேன் புறப்பட்டது. அவர்களில் சிலபேர் திகிலாய் இருந்தார்கள். சிலர் விரைப்பாய். ''என்ன, அதிகபட்சம் நம்மள திருப்பி நம்ம நாட்டுக்கே அனுப்பி வெச்சிருவாங்க.'' யாரோ சொன்னார்கள். வேன் பக்கத்தில் இரைந்து கொண்டிருந்த போலிசிடம் நான் திரும்ப, எப்பா நான் குவைத் ஆசாமியே தான், என எடுத்துச் சொல்ல... அவர் காதில் வாங்கிக் கொண்டாரா என்றே தெரியவில்லை. வேனின் பின் இருக்கைகளைக் காட்டினார் அவர். என்னவோ நாராசமாய்ப் பேசினார். என்ன பேசினார் என்றே எனக்குத் தெரியாது. திகிலுடன் நான் என் இருக்கைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

     என் பக்கத்தில் ஒரு பிலிப்பைன் இளம் பெண். மகா அழகாய் இருந்தாள். என் பக்கம் திரும்பி அவள் பேசினாள். ''இது வாரக்கடைசி. ஆக சனி ஞாயிறு நாம உள்ளதான்... நம்மளை விசாரிக்கிற அதிகாரியே திங்கள்தான் வருவாரு.'' ஐயோ என கண்ணை விரித்தேன். ''நான் குவைத்காரன் தான். எனக்கு விசா கிசா ஒரு மண்ணாங்கட்டியும் தேவை கிடையாது.'' அவள் புன்னகைத்தாள். ''எப்படியும் இங்க உங்களுக்கு மண்டகப்படி உறுதி. வெளிய போக நீங்க இந்த ஊர்க்காரர்னு ருசுப்படுதிதி யாகணும்.''

     இன்னொரு வயதான பிலிப்பினோ அழுது கொண்டிருந்தாள். இவள் அவளைப் பார்க்கத் திரும்பினாள். ''என்னாண்ட முறையான குடியிருப்பு அனுமதிச் சீட்டு இல்லை. என்னை வேலைக்கு எடுத்திருந்த வீட்டை விட்டு ஓடி வந்திட்டேன்... பல மாசமா நான் என்னென்னவோ வேலை பாத்திட்டிருக்கேன். இப்ப என்னை ஊருக்குத் திருப்பி அனுப்பிட்டால் என் குடும்பமே செத்திற வேண்டிதான்.''

     ''அந்தளவுக்கு நிலைமை எக்கச்சக்கம்னால்...'' என்றாள் இவள். கொஞ்சம் நிறுத்தினாள். ''நீங்க கொஞ்சம் அனுசரிச்சிப் போக வேண்டியிருக்கலாம்...''

     இவள் சொல்ல வந்த குறிப்பில் அவள் அதிர்ச்சியடைந்தாள். ச்சீச்சீ, கேடுகெட்ட தேவிடியா... என்று என்னென்னவோ கெட்ட வார்த்தைகளால் இவளைத் திட்டினாள்.

     அந்த இளம் பெண் இப்போது என் பக்கம் திரும்பினாள். ''ஆனால் உங்களாண்ட அதைப்போல 'அனுசரிக்க' எதுவும் இல்லைன்னு படுது...'' என்று அசிங்கமாய்ச் சிரித்தாள். ''எனக்கு ஒரு வயசான அம்மா. மூணு தம்பி. அவங்களுக்காக நான் எல்லாவித தியாகங்களும் செஞ்சாச்சி'' என்றாள் கூடவே.

     அனுபவப் பட்டவளாட்டம் இருந்தது. இது, இப்படி மாட்டுவது அவளுக்கு இது முதல் தடவை அல்ல. பொதுவா நான் ஜெயில்ல அதிக காலம் தங்கறது இல்லை, என்றாள். காலைல வேலைக்கு வர்ற போலிஸ் நேர்மை, ஒழுக்கம்னு இருந்தால் கூட, அடுத்து அந்த இடத்துக்கு வேலைக்கு வர்றாளு அப்படி இருக்க மாட்டான். அவளை வெளியே அனுப்ப முதல் நாளில் யாரும் மசியவில்லையானால், அடுத்த நாள் சபல கேஸ் கட்டாயம் அமைஞ்சிரும். ''எப்பவுமே குடியுருப்பு அனுமதிச் சீட்டு வாங்க நான் என்ன செய்வேன்... காவல் நிலையத்திலேயே தனி அறை, அல்லது அவர்களின் கார், அல்லது எங்காவது வெளி இடம்...'' என்றாள். ''என் அலைபேசியில் எத்தனை போலிஸ்காரங்க எண் இருக்கு தெரியுங்களா?'' என்றாள் நெஞ்சு நிமிர்த்தி.

     ஆனால் காவல் நிலையத்துக்குள் எங்கள் அலைபேசிகள் பிடுங்கப்பட்டு விட்டன. எங்களை யாரும் விசாரிக்காமலேயே, ஒரு முடை நாற்றம் பிடிச்ச கைதியறையில் போட்டுவிட்டார்கள். எனக்குக் கூட எவனாவது லஞ்சம் வாங்கறாளா கிடைச்சால் பணம் வெட்டினோம், வெளியிறங்கினோம்னு ஆயிட்டால் நல்லாருக்கும், என்றிருந்தது. ஒரு வருஷம் முன்னால் ஒரு போலியான போலிசுக்கு பத்து தினார் அழுது காரியம் சாதித்திருக்கிறேன். நஷ்டம் பத்து தினார். ஆனால் அத்தோடு அந்தப் பிரச்னை ஓஞ்சிரும் அல்லவா? நிஜ போலிஸ்கிட்ட மாட்டி, இப்ப போலிஸ் ஸ்டேஷனில் அடைக்கப் பட்டு....

     ரெண்டு இரவுகள் அங்கேயே வாசம். அல்லது நாற்றம்னு சொல்லலாம். என் கடிகாரம் அப்படித்தான் காட்டியது. வெளியுலகம் தெரியாது. ஆனால் எத்தனையோ ராத்திரி இப்படி அடைஞ்சிருந்தாப் போல பெரும் அவதியாய் இருந்தது. சின்ன அறை அது. என்னுடன் கூட பத்துப் பேர். அவர்களும் அந்த அறையும் அத்தனை அழுக்காய் இருந்தார்கள். அறை நாற்றமும், அந்த மனுச வாடைகளும் உவ்வே என்று வந்தது. ஜனவரி மாதத்தின் உலர்ந்த குளிர். விரல்நுனிகளே சொரணையற்று நமத்திருந்தன. குளிர் நேரே எலும்புக்கே இறங்கினாப் போலிருந்தது. ஆனால் கைதிகள் பேசாதிருந்தார்கள். என்னைத் தவிர, அவங்க எல்லாருக்குமே அவங்க கதை அடுத்து என்ன என்பது தெரியும். நாந்தான் இன்னும் எத்தனை காலம் இப்படி உள்ளே மாட்டிக் கிடப்பேன், தெரியவில்லை.

     பெண்கள் கைதியறையில் இருந்து குரல்கள் இங்கேவரை கேட்டன. அந்த அறைதான் அந்த வராந்தாவின் கடைசி என்று பின்னர் தெரிந்து கொண்டேன். வேனில் ஏறியதில் இருந்தே அந்த பிலிப்பைன் பொம்பளை அழுதபடியே தான் இருந்தாள். இப்ப இன்னும் சத்தமாய் அழுது கொண்டிருக்கிறாள். என்னவாவது புலம்பிக் கொண்டே யிருந்தாள். சிலப்ப ஆங்கிலத்தில், சிலப்ப அரபு மொழியில். யாராவது ஆபத்பாந்தனாக வரமாட்டாங்களா என்கிற அசட்டு நம்பிக்கை. ''எய்யா என்னை ஊருக்கு கீருக்கு திருப்பி அனுப்பினிங்களானால் என் குடும்பமே பசில கெடந்து செத்துருவாங்க. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்... கெஞ்சிக் கேட்டுக்கறேன்....''

     என் அறையின் மத்த கைதிகள் ஒவ்வொருத்தராய் உறங்கிவிட்டார்கள். அந்தப் பெண்களின் கேவல் இன்னுமாய் சத்தமெடுத்தது. இங்கேயிருந்து ஒரு போலிஸ் எழுந்து போவதைப் பார்த்தேன். கையில் கருப்பாய் லத்தி. பயத்தில் அப்படியே சுருண்டு கொண்டேன். வாய் தன்னைப்போல அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... என முணுமுணுத்தது. அவன் அந்தம்மாவைத் துன்புறுத்தாமல் இருக்கட்டும்..

     போலிஸ்காரன் என்னவோ கத்தியது கேட்டது. என் இதயப் படபடப்பு அதிகரித்தது. அந்தப் பொம்பளை, அவள் திருப்பிக் கத்தினாள். நான் இன்னுமாய் ஒடுங்கிக் கொண்டேன். அடியே, அவனை இன்னும் மூர்க்கமாக்காதே... என எனக்குள் முணுமுணுத்தேன். அவர்கள் இரைச்சல் அதிகமானது. ஏ அவளை அடிச்சிறாதே... பெரிய ணிங் கேட்டது. என் அறைக் கைதிகள் கூட விழித்துக் கொண்டார்கள். போலிஸ்காரன் அந்த பெண்கள் கைதியறையின் இரும்புக் கிராதிக் கதவில் தட்டுகிறான். உடனே உள்ளே எல்லாம் கப் சிப்.

     போலிஸ் தன் இடம் திரும்ப நான் மெல்ல ஆசுவாசப்பட்டேன். என் சகாக்கள் திரும்ப உறங்கப் போனார்கள். எனக்கானால் கண்ணே மூட மறுத்தது. ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது என்னிடம். அல்லாஹு அக்பர். சர்வ வல்லமை படைத்தவர் கடவுள், நன்றி.

     பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் யாராவது விழித்து, ஒண்ணுக்கு என்று வார்டரை அழைத்துக் கொண்டே யிருந்தார்கள். இந்தச் சூழலில் மத்தாட்கள் எப்படி தூங்குகிறார்கள் என்பதே புதிர் தான் எனக்கு. அந்தக் குளிர். பெருங் குறட்டைகள். அந்த பிலிப்பைன் பொம்பளையின் விசும்பல்கள்...

     முட்டிகளை நெஞ்சோடு அழுத்தி வைத்திருந்தேன். சுவரோடு முதுகைச் சாத்தியிருந்தேன். இன்னும் என்னை மீட்க ஆள் வரவில்லை. அது தாமதமாக ஆக, எனக்கு விமோசனமே இல்லை என்கிறதாய் அவநம்பிக்கை எழுந்தது என்னுள். கௌலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய அந்தக் கணம், நான் இத்தனை நேரம் இப்படி உள்ளே சிக்கிக் கிடப்பேன் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. எனக்கு இதெல்லாம் நடக்கக் கூடும், என நான் எதிர்பார்த்தே யிராத விஷயம் எல்லாம் நடந்தேறி விட்டது. என்ன கௌலா, நீயே என்னைக் கைவிட்டுட்டியாடி?

     பின்னிரவில், எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில்... வராந்தாவில் சந்தடிகள். பதறாத நடை. தலைதூக்கிப் பார்க்கிறேன். ஒரு போலிஸ்காரன். யாரையும் சட்டை செய்யாமல் நடந்து போகிறான். அவன் சத்தம் அடங்கியது. கிளிங் என்று சாவிகளின் ஒலி. கிசுகிசுப்பான பேச்சுகள். பிலிப்பைன்காரி இந்நேரம் தூங்கியிருக்கலாம், என்றாலும் எழுப்பப்ட்டாள். திரும்ப அவள் முறையிட ஆரம்பித்தாள். கதவைத் திரும்ப சாத்தும் சத்தம். திரும்பி வரும் சந்தடிகள். என் பக்கமாக வரும் ஒலிகள். நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பொம்பளையின் கதறலையும் மீறி மத்தாட்கள் அசாத்திய உறக்கத்தில்.

     போலிஸ் போகிறான். அதிகார நிமிர்வு. இதோ அந்த இளம் பிலைப்பினோ அவன் பின்னால், அவள் நடையில் தான் என்ன நம்பிக்கை. நான் இருந்த அறையை அவள் ஒரு பார்வை பார்த்தாள். எஙகள் இருவர் பார்வைகளும் ஒரு விநாடி சந்தித்துக் கொண்டன. புருவத்தை உயர்த்தி அவள் ஒரு புன்சிரிப்பு சிரித்தாள். வேனில் வைத்து நான் என்ன சொன்னேன், ஞாபகம் இருக்கா, என்கிற புன்சிரிப்பு அது.

     அவர்கள் போய்விட்டார்கள். காலை வரை நான் பிறகு தூங்கவேயில்லை. மனம் பூராவும் அந்தப் பெண் பற்றிய நினைப்பு தான். அட எங்கியோ அவள் இப்படி முறைகேடாக லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறாள். விடுதலையோடு குடியிருப்பு அட்டையும் வாங்கிவிடுவாள்.

     எங்க அத்தை ஹிந்த், மனித உரிமைகளில் பெரிதும் வலியுறுத்தல் உள்ளவள். இங்க என்ன நடக்கிறது என்பதை அத்தை அறிவாளா? நான் கேள்விப்பட்டதையும் பார்த்ததையும் அவளிடம் சொல்வதா? அதைவிட முக்கியமாய், இங்க இந்த கைதியறைகளில் நடக்கிறதையிட்டு அவளால் எதுவும் செய்ய முடியுமா?

     திங்கள் காலை. என் பெயரை அழைக்கிறார்கள். சட்டென அறைக் கம்பிகளுக்குள் எழுந்து விரைத்து நிற்கிறேன். என் அடுக்ககத்தின் சாவி கேட்டார் ஒரு போலிஸ். வாங்கிக்கொண்டவர் ஒரு வார்த்தை பேசாமல் அகன்று விட்டார். ஒரு மணி நேரத்தில் அதிகாரி அறைக்கு என்னை அழைத்துப் போனார்கள். அங்கே காசன் எனக்காக காத்திருக்கிறதைப் பார்த்தேன். என்னைப¢ பற்றிய ஆதார காகிதங்களை அவன் காட்டி அதிகாரியிடம் பேசினான். அதிகாரி தன்மையான மனிதன் தான். என் அலைபேசியைத் திருப்பித் தந்தபடி நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார் அவர். ''அடுத்த தடவை இப்படி பர்சை மறிதியா வீட்லயே வெச்சிட்டு வெளிய இறங்காதீங்க'' என அறிவுரையும் தந்தார் அவர்.
• • •
Bamboo Stalk - 
English trs. from arabic by Jonathan Wright.
courtesy words without borders July 2014

நன்றி – சங்கு சிற்றிதழ்
இது நாவலின் சிறு பகுதி – ஆண்டின் சிறந்த அராபிய மொழி நாவல் என இது பரிசு பெற்றது.
*



Comments

Popular posts from this blog