WINNER OF NOBEL PRIZE FOR LITERATURE 1998

(போர்த்துக்கீசிய நாவல்)

பார்வை தொலைத்தவர்கள்
யோசே சரமாகோ
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

நாவலின் ஒரு பகுதி

பொழுது விடிந்தது. சின்ன ஊதுபத்தி நீட்டல்கள் போல அந்தக் கரிப்பாடுகளில் இருந்து புகை. அதுவும் ரொம்ப நீடிக்கவில்லை. மழை வந்துவிட்டது இப்போது. தூறல் தூவல்கள். பனிச் சிதறல்தான். ஆனால் தொடர்ந்து பெய்தது. சாரல் மழை. முதலில் அதனால் பூமியைக் கூட நனைக்க முடியவில்லை. அது பூமியை எட்டுமுன்பே ஆவியாய் மேலே கிளம்பியவாறிருந்தது. ஆனால் மழை தொடர்ந்தது. எல்லாருக்கும் தெரியும். மென்மையான நீரேயானாலும் கடினமான கல்லையே கரைக்க வல்லது அது. வேறு யாராவது இதை எதுகை மோனையாய்க் கவிதை எடுத்து விடலாம்.* (*ஆணைக் கரைக்கும் பெண்ணின் கண்ணீர் போல - எஸ். ச.)
     அந்த அகதிகளின் கண் மாத்திரம் குருடாகி விடவில்லை. அவர்கள் நினைவே ஒருமாதிரி கலங்கலாய்த் தான் காணுகிறது. அட சனி கிரகமே இந்த மழையில் சாப்பாடு எப்படி வரும்?... என அவர்கள் அங்கலாய்த்து அரற்றினார்கள். நீங்களா என்னமாச்சிம் குண்டமண்டக்க யோசிச்சி மண்டைய உடைச்சிக்க வேணாம், என அவர்களை யார் சமாதானப் படுத்துவது? அட காலை உணவுக்கு இன்னும் நாழியே ஆகல்லியே, என்று கூட அவர்களிடம் விளக்க முடியாது. யார் சொல்லி அவர்கள் கேட்கப் போகிறார்கள்? அழுது பெருக்குகிறார்கள் அவர்கள். வராது. மழையும் ஆச்சா? எப்பிடி வரும்ங்கிறேன். எல்லாமே பைத்தாரக் கூத்தாய்ப் போயிற்று. முன்னே அடைஞ்சி கிடந்தமே, அதனுள்ளேயே இன்னும் ஆறுதலாய் அவர்கள் இருந்திருப்பார்களாய் இருக்கும்.
     அங்கேயே ஒடுங்கிக் கொண்டு ஒரு குருடன். அவனால் இப்போது சொந்தமாய் எழுந்து கொள்ளவே முடியவில்லை. வயிற்றின் மிச்ச உஷ்ணத்தைக் காப்பாற்றுகிறாப் போல அவன் சுருண்டு கொண்டான். மழைக்குக் கூட அவனிடம் அசைவு இல்லை. மழை அவனை எழுப்புமுகமாகவோ என்னவோ, மேலும் தீவிரப் பட்டது. ஆள் அவ்ட், என்றாள் டாக்டரின் மனைவி. நாம நம்மகிட்ட இன்னும் இருக்கும் கொஞ்ச நஞ்ச தெம்பு தீர்றதுக்குள்ளே இந்த இடத்தை விட்டு வெளியேறிறலாம்.
     அவர்களும் எழுந்துகொள்ளத் தடுமாறினார்கள். பல் கிட்டித்து உடலே நடுங்கியது. ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டார்கள். பின்பு வரிசையிட்டார்கள். முன்னால் அந்த பார்வை பெற்ற மகராசி. அவள் பின்னால் கருப்புக் கண்ணாடிக் காரிகை. கருந்திரையார். மாறுகண் மகராசன். முதல் குருடனின் குருடி. முதல் குருடன். கட்டக் கடேசியாய் டாக்டர். சிட்டி சென்டரை நோக்கி அவர்கள் கிளம்பினார்கள். டாக்டரின¢ மன¬வியின் திட்டம் அல்ல அது. அவளுக்கு என்னன்னால் இவர்களை எதாவது பாதுகாப்பான இடத்தில் அமர்த்தி விட்டு தான் மாத்திரம் உணவு கிடைக்க எதும் வழி வகை இருக்கிறதா என்று தேடிப் போகலாம் என்றிருந்தது.

தெருக்களே வெறிச்சோடிக் கிடந்தன. அத்தனை அதிகாலை என்பதால் இருக்கலாம். மழை இப்போது மேலும் வலுத்து விட்டது, என்பதனால் கூட இருக்கக் கூடும். எங்கு பார்த்தாலும் குப்பை கூளமாய்க் கிடந்தது நகரம். வெகு சில கடைகளே திறந்திருந்தன. பெரும்பாலான கடைகள் அடைத்துக் கிடந்தன. உள்ளே ஆட்களே இல்லை. விளக்கும் இல்லை.
     சகாக்களை இந்தக் கடைகளில் ஒன்றில் தங்க வைக்கலாமாய் நினைத்தாள் அவள். தெருப் பெயர், கதவிலக்க எண் நினைவில் பதித்துக் கொண்டாள். திரும்ப வர வழி தேட சௌகரியப்படும். கருப்புக் கண்ணாடிப் பெண், அவங்க நின்னுட்டாங்க, என்றாள். டாக்டரின் மனைவி பேசினாள். எனக்காக இங்கேயே காத்திருங்கள். எங்கயும் போக வேண்டாம்.
     ஒரு மருந்துக்கடையின் கண்ணாடியிட்ட கதவுக்குள் எட்டிப் பார்க்கப் போனாள் டாக்டரின் மனைவி. உள்ளே இரவுப்பணி என்று யாராவது வந்து படுத்திருக்கலாம். நிழல் அளவிலாவது கண்ணில் மனுசாள் தட்டுப் படுவார்களா? கண்ணாடிக் கதவைத் தட்டினாள். உள்ளே நிழல் ஒன்று அசைந்தது. திரும்பத் தட்டினாள். இன்னும் மனுச நிழல்கள் அசைவு பெற்றன. ஒரு மனிதன் சத்தம் வந்த திசைக்குத் திரும்பிப் பார்த்தான். அவங்க எல்லாருமே குருடர்களா இருக்கும், அவள் நினைத்தாள். எல்லாரும் எப்படி இங்கே வந்தார்கள், அது அவளுக்குத் தெரியவில்லை.
     மருந்துக் கடைக்காரரின் குடும்ப நபர்களே அவர்கள் என்று கூட இருக்கலாம். அப்பக் கூட அவங்க வீட்டில் தானே இருக்க வேண்டும், என்றிருந்தது. இப்படிக் கட்டாந்தரையில் படுக்கிறதுக்கு வீடு இன்னும் வசதியாய் இருக்குமே. இந்தக் கடையில் திருடு கிருடு போயிறக் கூடாதுன்னு வந்து இங்கியே இருக்கிறார்களா? எந்தத் திருடன் வரப் போகிறான்? அப்படி இங்க வந்து எப்படி திருடு போவதை அவர்களால் இந்தக் குருட்டுக் கண்ணுடன் தடுக்க முடியும்? மருந்துகள்... சரியான மருந்தால் ஆயுசு நீளும். தப்பான மருந்து? ஆளையே கொன்னுரும்!
     இன்னுங் கொஞ்சம் தாண்டிப் போனாள். இன்னொரு கடைக்குள் எட்டிப் பார்த்தாள். மேலும் சில பேர் படுத்திருந்தார்கள். பெண்கள். ஆண்கள். குழந்தைகள். சிலர் எழுந்து கிளம்புமுகமாய்த் தெரிந்தது. ஒருத்தர் வாசல் கதவு வரை வந்தார். கதவுக்கு வெளியே கை நீட்டிப் பார்த்தார். மழை பெய்யுது. ரொம்பப் பெய்யுதா? உள்ளேயிருந்து கேள்வி வந்தது. ஆமாமா. மழை குறையும் வரை நாம காத்திருக்கணும். மனிதன். ஒரு மனிதன் அவன். ரெண்டு எட்டு தூரத்தில் அவள். டாக்டரின் மனைவி. அவள் நிற்பதை அவன் கவனிக்கவில்லை. காலை வணக்கம். அவள் குரல் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
     முகமன் சொல்கிற பழக்கத்தையே விட்டிருந்தான் அவன். குருடனின் நாள் எவ்வளவிலும் நன்னாளாக ஆகப் போவது இல்லை. மட்டுமல்ல. எவனுக்குமே அது மதியமா ராத்திரியா எதுவும் தெரியவும் தெரியாமலாச்சு.
     ஒரு முரண் போல, இந்த சனங்கள் ஓரளவு காலைகளில் உத்தேசமாய் விழித்துக் கொள்கிறார்கள். அவர்களில் சிலர் இப்பதான் ரெண்டொரு நாள் முன்னால் பார்வை இழந்தார்கள். இன்னும் பகல் இரவு சார்ந்த உடல்ரீதியான விழிப்புகள் அவர்களிடம் குழம்பாதிருக்கிறது.
     அந்த மனிதன் சொன்னான். மழை பெய்யுதே. பிறகு கேட்டான். யார் நீ? நான் இந்தப் பகுதிக்காரி இல்லை. உணவு கிடைக்குமான்னு வந்தியா? ஆமா. நாலு நாளாச்சி நாங்க சாப்பிட்டு... நாலு நாளாச்சின்னு எப்பிடி கணக்குச் சொல்கிறாய்? அப்பிடித்தான் ஒரு நினைப்பு. நீ தனி ஆளா? என்கூட என் கணவர். சில சகாக்கள். மொத்தம் எத்தனை பேர்? ஏழு.
     இங்க நீங்க எங்க கூட தங்க முடியாது. இங்க ஏற்கனவே நிரம்பி வழிஞ்சிக்கிட்டிருக்கோம். இல்ல. நாங்க கிளம்பிருவோம். எங்கருந்து வரீங்க? இந்தத் தொற்று ஆரம்பிச்சது இல்லியா? அப்பலேர்ந்து நாங்க முகாமுக்கு அனுப்பப் பட்டோம். ஓகோ. ஆமாம். தனி இடத்தில் உங்களை யெல்லாம் ஒதுக்கி வெச்சாங்க... அதுனால ஒரு பிரயோசனம் இல்லை. ஏன் அப்பிடிச் சொல்றீங்க? அவங்க இப்ப உங்களை வெளிய விட்டுட்டாங்களே. எங்க கட்டடத்தில் தீ பிடிச்சிக்கிட்டது. எங்களுக்கு காவலுக்கு இருந்த சிப்பாய் ஒருத்தனைக் கூட காணம். எல்லாருமே மாயமாயிட்டாங்க.
     அதான் நீங்க வெளிய வந்திட்டீங்க. ஆமாம். அந்தச் சிப்பாய்கள் தான் கடைசியா பார்வையைப் பறி கொடுத்திருக்க வேண்டும். இப்ப எல்லாருமே குருடா ஆயாச்சி. மொத்த நகரமுமே குருடாயிட்டது. மொத்த நாடுமே குருடாயிட்டது. இங்க யாருக்காவது பார்வை இன்னும் இருந்தால், அவங்க தங்களால பார்க்க முடியும்ன்றதையே வெளிய காட்டிக்கறது இல்லை.
     ம். நீங்க எல்லாரும், ஏன், உங்க வீடுகள்லியே இருந்திருக்கலாமே? ஏன்னா, எங்க வீடே எங்கருக்குன்னு எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கே தெரியல்ல... ஏன்? உன் வீடு எங்க இருக்குன்னு உனக்குத் தெரியுமா? நானும் என் கணவரும் எங்க வீட்டுக்குத்தான் போயிட்டிருக்கோம்... டாக்டரின் மனைவி பதில் சொல்ல வந்தாள். இப்பசத்திக்கு இருந்த பலவீனத்துக்கு சின்ன சிரம பரிகாரம் என எதாவது கொறிக்கிற அளவில் கிடைச்சால் கூடப் போதும்.
     அவள் எதுவும் சொல்லவில்லை. தெளிவாக அவள் புரிந்து கொண்டாள். ஒரு ஆள் தன் வீட்டுக்கு வெளியே எங்காவது பார்வையை இழந்து விட்டால் திரும்ப அவன் தன் வீட்டை அடைவது என்பது அதிசயம். அதிர்ஷ்டம். பார்வை போனால் உலகமே மாறி விடுகிறது. குருடர்களுக்கு யாராவது துணைக்கு வேண்டும். தெருவைத் தாண்டவோ, வழி தவறி விட்டால் சரியான வழியை அவர்களுக்கு பிறத்தியாரே காட்டித் தரும்படி ஆகி விடுகிறது.
     என் வீடு... அது ரொம்பத் தொலவு, அதான் தெரியும், என்று பதில் தந்தாள் டாக்டரின் மனைவி. ஆனால் உன்னால் உன் வீட்டுக்குப் போகவே முடியாது. ச். அதான். எனக்கும் பிரச்னை அதுவேதான். எங்க எல்லாரோட பிரச்னையும் அதேதான். தனிமை முகாமில் வைத்திருக்கப் பட்டவர்களுக்கு இன்னும் நிறைய தெரியணும். வீடு இல்லாமல், ஆனால் உங்க வாழ்க்கை சுலபமா ஓடிட்டிருந்தது.
     புரியல... என்றாள் அவள். எங்களைப் போல, கும்பல் கும்பலா வெளிய நடமாடறவங்க... நாங்க அப்பிடித்தான் கும்பல் கும்பலாத்தான் வெளிய இறங்கறோம். எதாவது சாப்பிடணுமே. அப்பதான் ஒருத்தரை ஒருத்தர் பிரியாமல் பாத்துக்க முடியும். எல்லாருமே வெளிய இறங்க வேண்டியிருக்கு. நம்ம வீட்டைவிட்டு நாம வெளியே இறங்கிட்டால் நம்ம வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லாமல் ஆயிடுது. நம்ம வீட்டை, ஒருபேச்சுக்கு, நாம கண்டுபிடிச்சிட்டாலும் அதுல வேற யாராவது இப்படி கும்பலா இப்ப வந்து தங்கியிருப்பாங்கன்னு தோணுது. அவங்களுக்கும் அவங்க வீடு எங்கன்னே தெரியாமத்தான் இருக்கும் நிலைமை.
     சும்மா கால்வந்த திசையில் அலைதல் திரிதல்னு ஆயிட்டோம். முதலில் என்னடா இதுன்னு இருந்தது. ஆனா சீக்கிரமே எங்களுக்குப் புரிஞ்சிட்டது. நாம குருடர்கள், நமககுன்னு சொந்தமா எதுவுமே கிடையாது. நாம போட்டிருக்கமே இந்த உடை, இது தவிரன்னு சொல்லலாம்.
     இதுக்கு ஒரே தீர்வு. எதாவது உணவுப் பண்டம் விற்கிற கடையில் ஒதுங்கிக் கொள்வது. அதுல இருக்கற பண்டங்கள் தீர்ந்து போகிற வரை நாங்க அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டாம். அப்படி யாராவது முயற்சி பண்ணினாங்களா? பண்ணாமல் என்ன? அப்பிடிக் கணக்குப் போட்டவர்கள் ஒரு விநாடிகூட மன அமைதியா இருக்க முடியாமல் போயிட்டது. அப்படியெல்லாம் செய்ய முடியாது. ஏன் என்றால் அப்படி முயற்சி செய்த சில பேர்... கடையைக் கண்டுபிடிச்சி உள்ளே தாழ் போட்டு பூட்டிக்கிட்ட ஆட்கள்... அவங்களால அந்த உணவுப் பொருளின் வாசனையை மறைக்க முடியல்ல. அந்த வாசனைக்கு பசித்தவர் கும்பல் அந்தக் கடைக்கு வெளியே கூடிவிடுகிறது. கதவைத் தட்டினாலும் உள்ளே பூட்டிக்கிட்டவர் திறக்கவில்லை. என்ன ஆச்சி? அப்படியே கடையையே கொளுத்திப் பிட்டாங்க. ஒருவகைல சாபம் அல்ல அது வரம்னுதான் சொல்லுவேன்...
     எனக்குத் தெரிஞ்சி அப்புறம் யாருமே இப்பிடி கதவைச் சாத்திக்கிறது பூட்டிக்கிறதுன்னு செய்யவில்லை. ம். இப்ப யாருமே வீடுகளில் அடுக்ககங்களில் வாழறதே இல்லையாக்கும்? வாழாமல் என்ன. வாழ்றாங்க. ஆனால் இதே நிலைமைதான். என் வீட்டிலேயே எத்தனையோ பேர் வந்து இளைப்பாறி விட்டு வெளியேறி யிருப்பார்கள். என் வீட்டை எப்ப நான் திரும்ப வந்து பார்ப்பேன் என்பதை அவர்களே அறியார். தவிர, இப்பத்திய நிலைமையில், கடைகளில், தரைத் தளத்தில் படுத்துறங்குவது, கிட்டங்கிகள், பட்டறைகள் என்று தங்குவது சிலாக்கியமானது. மாடி ஏற இறங்கன்னு சிரமப் பட வேண்டியது இல்லை அல்லவா?

மழை விட்டாச்சி, என்றாள் டாக்டரின் மனைவி. மழை விட்டுட்டது, அவன் உள்ளே பார்த்து அதையே சொன்னான். அதுவரை உள்ளே படுத்துக¢ கிடந்தவர்கள் மெல்ல எழுந்து கொண்டார்கள். தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பைகள். கைப்பெட்டிகள். துணி மற்றும் பிளாஸ்டிக் பைகள். ஒரு யாத்திரைக்கான கிளம்பல். நிசந்தான். அவர்களும் உணவைத் தேடித் தான் கிளம்பினார்கள். ஒவ்வொருவராக கடையில் இருந்து வெளியே வந்தார்கள்.
     டாக்டரின் மனைவி கவனித்தாள். அவர்கள் உடம்பில் துணி துணியாய்ச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். கன்னா பின்னாவென்று பொருந்தாத வண்ணங்களின் குழப்பக் கலவை. கால்சாராய்கள் குந்துபுறம் தெரிகிற அளவில் ரொம்பச் சின்னவை. அல்லது மகா பெரியவை. கீழ்ப்பக்கம் மடித்து மேலேற்றி விட வேண்டியிருந்த உடைகள். ஆனாலும் அந்த உடை குளிர் தாங்கும் அளவில் பாந்தமாய் அமைந்திருந்தது.
     ஒரு சிலர் மழைக்கோட்டு அல்லது மேல் கோட்டு அணிந்திருந்தார்கள். பெண்களில் இருவர் நீண்ட மிருகமயிர் கோட்டுகள் மாட்டிக் கொண்டிருந்தார்கள். யாரிடமும் குடை இல்லை. அதை எடுத்துச் செல்வதில் சிரமம் இருந்தது. அதன் கூர்மையான கம்பிகள் யார் கண்ணையாவது குத்தி விடலாம். சுமார் 15 பேர். கிளம்பினார்கள்.

     சாலையில் மேலும் குழுக்கள் வந்தன. தனி நபர்களும் தென்பட்டார்கள். சுவரைப் பார்க்க அங்கங்கே அவர்கள் ஒண்ணுக்கடித்தார்கள். பெண்கள் பொது இடங்களுக்குக் கூசி கைவிடப் பட்ட கார்களுக்கு ஒதுங்கினார்கள். மனித மலக் கழிவுகள் மழையில் கரைந்து நடைபாதையெங்கும் வழிந்தோடி யிருந்தன.

Comments

Popular posts from this blog