Sunday, January 3, 2016

தமிழகத்தைத் தாக்கவரும் சரமாகோ புயல்

Blindness – Jose Sarmago
A Potugese Novel
தமிழில் 
பார்வை தொலைத்தவர்கள்
தமிழாக்கம் எஸ். சங்கரநாராயணன்

தமிழகத்தைத் தாக்கவரும்
சரமாகோ புயல்

கா ஈர்ப்பான எழுத்து சரமாகோவுடையது. தனி மனித மனக் கூறுகளின் நுட்பமான அலையோட்டங்களை, ஆசாபாசங்களை, ஆனால் ஒரு சமுதாயப் பரப்பில் சொல்ல அவர் முன்வருகிறார். அதில் அவர் பெறும் வெற்றி பெரும் வெற்றி. ஆச்சர்யமாய் இருந்தது அது. ஏனெனில் தனி மனித மதமாச்சர்யங்களை எழுதிச் செல்கிற ஒரு நபரிடம் மொத்த சமூகம் சார்ந்த விரிந்த பார்வை காணக் கிடைப்பதை நான் மிகுந்த நம்பவியலாத் தன்மையுடன் ரசிக்க நேர்ந்தது.
      தனி மனித உணர்வுக் கூறுகளை விவரிக்கையில் மொத்த சமூகத்தின் அடையாளத்தைக் கொண்டுவரவும் வலியுறுத்தவுமாக அவர் சில உத்திகளைக் கைக்கொள்ள முன்வருகிறார். சம்பவங்களை சற்று எட்ட நின்று அடையாளங் காட்டுகிற பாவனை தருகிறார். பாத்திரங்களை விட்டு விட்டு நேரடியாகவே சூழலை அவர் விவரிக்கவும், சுய அடையாளம் காட்டவும் தயங்கவில்லை. பாத்திரங்களை நாம் எதிர்பார்க்கிற அடையாளங்கள் அற்று எடுத்துத் தருகிறார். சம்பவ நிகழ்விடங்களாக ஒரு பொது வளாகத்தை உருவாக்கிக் கொள்கிறார். அந்தப் பாத்திரங்களுக்கு அப்பா அம்மா வைத்த, அதாவது மரபு சாரந்த பெயர்களைக் கூட அவர் தவிர்க்கிறார். அந்தக் கதை நிகழும் ஊருக்கும் பெயர் வைக்கவில்லை. அந்த இடம் உலகப் பொதுவான இடமாக மாறுகிறது. எங்கேயும் யாருக்கும் பொருந்துமாறு கதை நகர்த்திச் செல்லப்படுகிறது, சொல்லப்படுகிறது. இதில் நம்பகத்தன்மை ஏற்பட, அவர் புதிதாய் ஒரு தீர்மானம் கொள்கிறார். கதை நகர்வை ஒரு திரைப்படம் போல அவர் காட்சிப்படுத்திக் கொள்கிறார். அதன் சாதக பாதக அம்சங்களும் இதில், இந்த முயற்சியில் நிகழ்கின்றன. ஆனால் வாசகனுக்கு இதில் அபார ஈர்ப்பு கிடைப்பதை மறுப்பதற்கில்லை.
      பிறகு உரையாடல்கள். வழக்கமான உரையாடல்களாக அல்லாமல் கதையின் மையம் சார்ந்த நறுக்குத் தெரிந்த தகவல் அடுக்குகள். அவற்றையும் தனித்தனியே பாத்திரங்கள் பேசினாலும், கட்டமைக்கப் படுவது சூழல் தான். எந்தப் பாத்திரம் எந்த உரையாடல் பேசுகிறது, என்பதைக் கூட அவர் முக்கியம் அற்றதாக நம்மை உணர வைக்கிறார். ஆகவே இருவர் மூவர் பேசும் உரையாடல்களை ஒன்றாகவே, பத்தி பிரிக்காமல், பாத்தி கட்டாமல், சேர்த்தே அவர் தருகிறார். தனித்தனி மேற்கோள் குறிகள் இல்லை அவற்றுக்கு. தவிர்த்து விடுகிறார். பத்திகளே கூட தேவை இல்லை என அவர் ஒரு பக்கம், ரெண்டு மூணு பக்க அளவுகளில் கூட ஒரே பத்தியில் செய்திகளைக் குவித்துப் போகிறார். தெருக்கள் அல்ல, வாக்கியங்கள் ஹைவேக்கள்! அதனால் கதையில் சூழலின் இறுக்கம் இன்னும் மேம்படும். இது அவரது உத்தி. எந்த உரையாடலை எந்தப் பாத்திரம் பேசுகிறது, என்பதில்கூட, கவனமாய், அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. சூழல், அதைநோக்கி உள்ளிழுக்கிற, அதை உற்றுநோக்க வைக்கிற உத்தி இது.
      ஒரு தனி மனிதன் திடீரென்று கார் ஓட்டிச் சொல்கையில் பார்வையை இழக்கிறான். அவனது வாழ்க்கை எப்படி திசை தப்பிப் ப«£கிறது... பிறகு அது, இப்படியான பார்வையிழப்பு, ஒரு தொற்று போல மற்றவர்களைப் பீடிக்கிறது. பார்வை இழத்தல் என்றால் இருளாய் அல்ல, அவனுக்கு உள்ளே ஒரு வெண்கடல் பொங்குகிறது. எங்கும் எதிலும் ஒரு பளீர். வெளிச்சத்திட்டு கண்முன்னால் எல்லாவற்றையும் மறைத்தாப் போல. ஒரு காலகட்டத்தில் ஊரே, நாடே முற்றுமாக பார்வை இழந்து போகிறது. மொத்த உலகமே பார்க்கிற திறன் இழந்து விடுகிறது... என தன் சிந்தனை எல்லையை மிகப் பிரம்மாண்டமாக மேலும் மென்மேலும், வானப் பயணம் போல விரித்துக் காட்டுகிறார் சரமாகோ. அதில் அவர் கண்டடைந்த தரிசனங்கள் பரவசப் படுத்துபவை. சிகரங்கள், பீடபூமிகள், சமவெளிகள், படுகைகள், பள்ளத்தாக்குகள், பாதாளங்களும் கூட. மனித மனங்களின் ஆக உச்சங்கள் இதில் உண்டு. ஆகக் கீழ்மைகளும் அங்கே அவரால் காட்டப் படுகிறது. அவரால் மாத்திரமே இப்படி ஒரு கதை சொல்ல முடியும் என்கிற அளவில், வாசித்து முடித்த பின்னும் மனசை கனக்க வைக்கிறது நூல்.
      முதல் பத்து பக்கங்கள் வாசிக்கிறேன். இதை உடனே தமிழில் செய்ய வேண்டும், என ஒரு வேகம் வருகிறது. அடுத்த இருபது பக்கங்களில், இதை யாராலும் தமிழில் தர முடியாது, என அவநம்பிக்கை விம்முகிறது. அதுவும் என்னால், தமிழில் தர முடியுமா, என்று திகைப்பு வருகிறது. பெருமூச்சு வருகிறது. வருத்தம் அடைகிறேன். மேலும் மேலும் வாசிக்கிறேன். இந்த நாவலை ஒரே மூச்சில் வாசிக்க யாராலும் இயலாது. அவரே ஒரே வீச்சில் இதை எழுதியிருக்க முடியாது! அங்கங்கே நமக்கே மூச்சுத் திணறும். அத்தனை திகைப்பான இருட்டு நம்மை அப்படியே வந்து மோதும்.
      போர்த்துக்கீசிய நாவல் இது. நான் இதை ஆங்கிலத்தில் வாசிக்கிறேன். ஒரு நற்பொழுதில் நான் யோசிக்கிறேன். இதை மூலத்தில் இருந்து ஒருவரால் ஆங்கிலத்தில் தர முடிந்திருக்கிறது, எனில் நம்மால், தமிழில், தர முடியாதா? முடியாது என நானே அதைரியப் படலாமா?
      பக்கங்கள் தாண்டும் பத்திகள். உரையாடல்களை தனித்தனியே பிரிக்காத அவரது சிக்கலான நடை. இவற்றைத் தமிழில் தருவது தமிழ்ச் சூழலில் எவ்வளவு சாத்தியம்? ஒவ்வொரு இலக்கிய வாசிப்பும், ரசனையும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு மொழியில் வெவ்வேறு மாதிரி அமைகிறது அல்லவா? நீளப் பத்திகளை, உரையாடல்களை ஓரளவு பத்தி பிரித்து அதேசமயம் ஆசிரியரின் உத்திவீர்யம் மீறிவிடாத அளவில் வழங்கி யிருக்கிறேன். அத்தியாயப் பிரிவுகள். நான்கு பகுதிகளாக நாவலை பாகம் பண்ணி, ஒவ்வொரு கவளமாக உண்ணத் தருகிறேன்.
சரமாகோ தமிழுக்குப் புதுசு. அவ்வளவில் என் பெருமை இது. அதிர்ஷ்டம் இது. இலக்கியத்திற்கான உலகின் பெரிய விருது, நோபல் பரிசு பெற்ற நாவல் இது.
சரமகோவுடன் கழித்த இந்த சில மாதங்கள் மறக்க முடியாதவை. மொழிபெயர்ப்பில் என் ஆகச் சிறந்த புத்தகம் இது. உங்களுக்கும் அப்படி அமையக் கூடும்.
இதில் ஆங்கிலப் பிரதியை ஒப்பு நோக்கி, தமிழில் மேலும் ஆலோசனைகள் நல்கி, உறுதுணை புரிந்த நண்பர்கள், டாக்டர் ஹரி. விஜயலெட்சுமி, பி.கே. ராஜன் ஆகியோருக்கு நன்றி.
இனிமேலும் என்னிடம் பகிர எதுவும் இல்லை, என் அத்தனை தினவையும் இறக்கி வைத்தாயிற்று, என இக்கணம் நினைக்கத் தோன்றுகிறது. எனது மொழிபெயர்ப்புப் பயணத்தில் பெரும் சவால் இன்று நிறைவேறுகிறது. மகா அலுப்புடன் பேனாவை மூடி வைக்கிறேன்.
 ***
எஸ். சங்கரநாராயணன்
சென்னை

91 97899 87842

1 comment:

  1. வணக்கம் . இந்த அறிமுக உரையை பரணிக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டா ?

    ReplyDelete