நான் பேயைப் பார்த்திருக்கிறேன்

நம்ப முடியாத
அந்த நாட்கள்

எஸ். சங்கரநாராயணன்
னிமையோ இருட்டோ என்னை பயப்படுத்துவது இல்லை. குறிப்பாக கடந்த நாலைந்து வருடங்களாக நான் தனியே தான் இருக்கிறேன். என் பிள்ளைகள் அமெரிக்காவில். மனைவி வேறிடத்தில். நான் தனியே வந்துவிட்டேன். தனிமை அழகானது. தேவையானது, அதாவது என் வாழ்க்கையில்… சில ஆச்சர்யங்களுடன் ஆனது என் வாழ்க்கை. அப்படியொன்றும் ஏமாற்றம் எலலாங் கிடையாது. எதிர்பார்ப்புகள், தேவைகள் என நிறையக் குறைத்துக் கொண்டவன் நான். நான் அவநம்பிக்கைப் பட மாட்டேன்.
வாழ்வது அழகானது. அநேக ‘எனக்கே’யான அனுபவங்கள் என் வாழ்க்கையில் சம்பவித்திருக்கின்றன. தனிமை உட்பட. தனியே எனக்கான அனுபவங்கள் அவை. அவற்றை வேறு யாரும் என்னிடம் சொன்னால், என்னாலும் அவற்றை நம்பியிருக்க முடியாது. ஆனால் சில குறிப்பிட்ட தருணங்கள். என் வாழ்க்கையின் முகூர்த்த கணங்கள் அவை. நிறைய… பத்துக்கும் மேற்பட்ட கணங்கள் இருக்கின்றன. அதாவது ஒருசேர இப்போது அவை நினைவுக்கு வருகின்றன. மேலும் கணங்கள் சற்று ஆசுவாசப்பட்டால் மேல்மட்டம் வரும். எல்லாவற்றையும் பகிர வேண்டுமா, என்று கூட யோசனையாய் இருக்கிறது. என்றாலும் நமது அன்புக்குரிய ‘இளமதி பத்மா’ முகநூல் தோழி ஆவலாய்த் திரும்பத் திரும்ப நினைவூட்டல் செய்துவரும் எனது ஒரு அனுபவம்… சரி. பகிர்ந்து விடலாம்.
இடையில் ஒரு விஷயம். என் பிரத்யேக அனுபவங்கள், நான் சந்தித்த வாழ்க்கை மாந்தர்கள், இவர்களைப் பற்றி என் கதையில் நான் குறிப்பிட்டு எழுதுவது இல்லை. அதை நான் கைக்கொள்வதே இல்லை. ஏன், அதனால் எனக்கும் அவருக்கும், பிரச்னை வந்துவிடுமா, என்ற யோசனையா, என்றால் இல்லை. அவரைப் பற்றிய என் கருத்தை நான் நாளை மாற்றிக் கொள்ளவும் கூடும். என்றான பட்சம் எழுத்தில் தவறாக எதாவது பதிவாகி விடலாம் அல்லவா? அப்படி ஆக வேண்டாம், என நான் நினைக்கிறேன். உண்மை மனிதர்கள் என் கதைகளில் இல்லை. அவர்களின் சலனங்கள், பாத்திரக்கூறுகளை வேறு விதமாக நான் பயன்படுத்தி விடுவேன்…
நம்ம விஷயம் பேசலாம்.
பேய் என்றால் என்ன? பேய் உண்டா இல்லையா? இது நாம் எல்லாருமே காதுகொடுத்து, சிறிது பயத்துடன் கேட்டு, பின் புத்திசாலி அல்லது தைரியசாலி பாவனையுடன், ‘அதெப்பிடி?’ என்று கேள்விபோட்டுச் சிரித்துவிட்டு, பின் தனிமையில் அதை நினைத்து பயந்து கொள்கிற விஷயம்.
இதில் என் குணாம்சம் நேர் மாறானது. நான் பயசாலி அல்ல, என நெஞ்சு நிமிர்த்த மாட்டேன். ஆனால் அந்த முகூர்த்த கணத்தில் எனக்கு வரும் துணிச்சல்… என் அடையாளம் அது. இதை நிறைய கணங்களில் நானே ஆச்சர்யமாய் உணர்ந்திருக்கிறேன்.
இப்போது லெட்சுமி சாரிட்டிசில் ஆடிட்டர் என வேலை பார்க்கும் திருமலை. கல்லூரிக் காலங்களில் இருந்து நாங்கள் நண்பர்கள். சென்னையில் தொலைத்தொடர்புத் துறையில் நான் வேலையமர்ந்தபோது, திருமலை சுந்தரம் பைனான்சில் சென்னைக்கே வேலைக்கு வந்தான். இருவருமாய் செனாய் நகர் பாரதிபுரத்தில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம்.
திருமலைக்கு முன்பே இந்த ‘பேய் சார்ந்த’ அனுபவங்கள் உண்டு. வேறு ஊர் ஒன்றுக்குத் திருமலை போயிருந்தான். இரா தங்க வேண்டியதாகி விட்டது. அவனிடம் சொல்லாமல் அவனை அவன் நண்பர்கள் காலியாக இருந்த பக்கத்து அறையில் படுக்கச் சொல்லி விட்டார்கள். இரவு முற்ற முற்ற அவனது தூக்கம் கலைந்தது. என்னவோ சரியில்லை, என்று திருமலக்குத் தெரிந்துவிட்டது. கூட யாரோ இருக்கிறார்கள். தன்னை யாரோ பார்க்கிறார்கள். கோபமான மூச்சுகள் கேட்டன. வாலிப வயசு. “அதெல்லாம் ஒண்ணுமில்லை…“ என தைரியப்படுத்திக் கொண்டு பாயில் திரும்பப் படுத்துக் கோண்டான் திருமலை. நேரம் ஆக ஆக அந்தக் கோப மூச்சுகள் மேலும் உக்கிரமாய்க் கேட்டன. சட்டென எழுந்து உட்கார்ந்தான் திருமலை. நிச்சயம் இந்த அறையில் எதோ ரகசியம் இருக்கிறது. “இருக்கட்டும் அதைப் பற்றி நமக்கென்ன?” என்று திரும்பப் பாயில் படுத்தான் திருமலை. திடீரென்று காற்று போல பெரும் சத்தம். சற்று தள்ளி சுவரோரம் மேசை. அருகே இருந்த நாற்காலி. சர்ர்ரென்று அவனை நோக்கி வந்தது. சட்டென எழுந்து உட்கார்ந்தான் திருமலை. என்ன இது? சர்ர் சர்ர் என்று அந்த நாற்காலி அவனைச் சுற்ற ஆரம்பித்தது… சட்டென எழுந்து வெளியே ஓடிவந்துவிடடான் திருமலை. பக்கத்து அறைக் கதவைத் தட்டினான். “என்ன ஆச்சி?” என கதவைத் திறந்தார்கள் நண்பர்கள். தகவல் சொன்னான். “உன்னை ஒண்ணும் செய்யாது அதுன்னு நினைச்சோம்டா…” என்றார்கள் நண்பர்கள். “எதுடா?” “பேய்” என்றார்கள் அவர்கள். “அந்த அறையில் ஒரு சின்னப் பொண்ணு தற்கொலை செய்துக்கிட்டா. அந்த அறைக்கு யாருமே வாடக்கு வர மாட்டாங்க” என்றார்கள்.
இப்போது நம்ம கதை.
நானும் திருமலையும். என்ன அற்புதமான பிரம்மச்சர்ய காலங்கள். எனக்கு மதியம் 2 மணி துவங்கி 8 மணி வரை அலுவலகப் பணி. வீடு திரும்ப 9 ஆகிவிடும். திருமலை ஆறு ஏழு மணி வாக்கில் வேலையை முடித்தாலும் எங்காவது சுற்றிவிட்டு கிட்டத்தட்ட எட்டேமுக்கால் ஒன்பது வாக்கில் வீடு திரும்புவான். மகா உற்சாகமான காலம் அது. உடலே முறுக்கேறி தினவெடுத்து சொறிய சுவர் தேடி அலைந்த காலம். கல்லூரி முடித்து நேரே வேலைக்கு வந்தாப்போல அத்தனை இளமை, பொலிவு. சங்கரநாராயணனை சாதாரணமாய் நினைக்க வேண்டாம். கல்லூரியில் கலாட்டா மன்னன். கிராமத்தில் இருந்து பள்ளி முடித்து பியு.சி படிக்க வந்துவிட்டோமாம். எங்கள் ஆங்கில ஆசிரியர், ஆங்கிலப் பாடத்தையே தமிழில்தான் நடத்துவார். நடத்தி முடித்து “எதும் கேள்விகள்?” என்று அவர் கேட்டார். நான் எழுந்து கேள்வி கேட்டேன். “ஏன் சார்? நீங்க எம் ஏ இங்கிலீஷ் தமிழ் மீடியத்லதான் படிச்சீங்களா?”
நாங்கள் தங்க வாடகைக்கு வந்த வீட்டில் ஒரு பேய் இருந்தது. நாங்கள் வாடகைக்கு வந்த முதல் ஒரு மாத அளவில் அது தன்னை அடையாளங் காட்டிக் கொள்ளவில்லை. எங்கள் அழகில் மயங்கி யிருந்ததோ என்னவோ தெரியாது. அந்தப் பேய் இருந்ததே எங்களுக்கும் தெரியாது. மகா ஆட்டம் ஓட்டமாய் நாங்கள் அந்த நாளைக் கொண்டாடிவிட்டு அசந்துபோய் வீடடைவோம். வந்து முகம் கை கால் கழுவிவிட்டுக் கைகாலை விரித்து பத்து மணிப் போல படுத்தால் அப்படி ஒரு தூக்கம்.அந்தத் தூக்கம் எல்லாம் இனி கிடைக்க வாய்ப்பே இல்லை.
பேய்க்கதை கிடக்கட்டும். இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். ஓய்வுபெற்ற, சென்னை விலங்கியல் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவரின் கதை இது. எனது நல்ல நண்பர் இவர். கல்லூரி நாளில் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது இவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அறைக்கூட்டாளிக்கு கடுமையான வயிற்று வலி. துடிக்கிறான். ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டே மறுகையால் இவரை எழுப்போ எழுப்பு என்று எழுப்புகிறான். இவர் எழுந்துகொள்ளவே இல்லை. தள்ளாடி அடுத்த அறைக்குப் போய் வேறு ஆளை எழுப்பி அவனது இருசக்கர வாகனத்தில் அவசர சிகிச்சைக்குப் போய், பெரும் அமர்க்களம். காலை நாலு மணி வாக்கில் தான் அறைக்குத் திரும்பியிருக்கிறார்கள். எழு மணிக்கு நம்ம ஆள், பிற்கால துணைவேந்தர், கண்ணைத் திறக்கிறார். அறைக்கூட்டாளி அவரிடம் நடந்ததைச் சொல்கிறான். உடனே அவர் “ஏண்டா என்னை எழுப்பியிருக்கக் கூடாதா?” என அக்கறையுடன் கேட்டாராம்.
அப்படி தூக்கம் தூங்கிய காலம் அது. அதனால் அந்தப் பேயால் எங்களை எழுப்ப முடியாமலும் போயிருக்கலாம். கொஞ்ச நாட்கள் போனதும் சிறு தொல்லைகளை உணர ஆரம்பித்தோம். எங்கள் மேல்கூரையில் இரும்பு குண்டு ஒன்று மெல்ல உருள்கிறாப் போலச் சத்தம். அது எத்தனை நாளாய்க் கேட்கிறதோ? ஒருநாள் காதில் கேட்டது அது. என்ன சத்தம், இந்த ராத்திரியில் மாடியில் யார் இப்படி கனமான பொருளை இழுக்கிறார்கள். நான திருமலையிடம் கேட்கவில்லை. அவனும் என்னிடம் கேட்கவில்லை, என மறுநாள் தெரிந்து கொண்டேன். மேல்கூரைக்கு மேல் தளத்தில் என்னவோ சத்தம். ஆமாம், என்றான் திருமலை. மாடியில் வீட்டுச் சொந்தக்காரர். அவர் பேர் முத்து. “ராத்திரி எதும் வேலை செய்தீங்களா?” என்று அவரிடம் கேட்டோம். “இல்லையே” என்றார்.
அதான் இளமைன்றது. அத்தோடு இருவரும் அதை மறந்தோம். வேலைக்குக் கிளம்பி விட்டோம். அந்த நாள். ராத்திரி. பதினோரு மணி. தன்னைப் போல விழிப்பு வருகிறது. விளக்கு போட்டு நாங்கள் வீட்டு வேலை செய்தாலோ பேசிக் கொண்டிருந்தாலோ சத்தம் கித்தம் இல்லை. நாங்கள் படுத்துக் கொண்டால்… விளக்கு அணைத்து விட்டால், ஒரு கால் மணி நேரம் போனதும்… அந்த இரும்பு குண்டு உருளும், இழுபடும் சத்தம்.
“திருமலை தூங்கிட்டியா?” என்கிறேன். சத்தம் ஆரம்பித்து விட்டது. “நானும் தூங்கலை. நீயும் தூங்கலை. அந்தப் பேயும் தூங்கலை” என்கிறான் திருமலை. “பேயா?” “ஒருவேளை இருக்கலாம்” என்கிறான் திருமலை. அனுபவஸ்தன் அவன்.
வாடா என அவனை வெளியே இழுத்துக்கொண்டு வந்தேன். வெளியே இருந்து மாடியைப் பார்க்கிறோம். மாடியில் சொந்தக்காரர் வசிக்கிறார். அங்கே விளக்கு எரியவில்லை. “மேலே வேலை எதும் செய்யல்லியேடா?” என்கிறான் திருமலை. “சரி. வா. தூக்கம் வருது” என்கிறேன் நான். உள்ளே போய், ஆமாம்… அசதியில் தூங்கிவிட்டோம்.
சப்தங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. மேலும் அதிக கனமான குண்டுகள் உருள ஆரம்பித்தன. மாடியில் யாரும் வேலை கீலை செய்யவில்லை. தூங்குகிறார்கள். பேய் அவர்களை ஒன்றும் செய்யாமல் எங்களை மிரட்டிக் கொண்டிருந்தது. சப்தங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. அவற்றின் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும் கனமான குண்டுகள். முதலில் ஒரு நிமிடத்துக்கு ஒரு உருளல். மெல்ல நாற்பது நொடிக்கு ஒரு உருளல். பிறகு பத்து நொடிக்கு ஒன்று… என இம்சை காதை அடைத்தது.
தூங்கிவிட்டோம். இதையே கேட்டுக்கிட்டு இருக்க முடியாது… என்ன தைரியம். காலை. சொந்தக்காரரிடம் முறையிடுகிறோம். “தெரில சார். இதுக்கு முந்தி இருந்தவங்க கூட என்னவோ சொன்னாங்க. எங்களுக்கு எதுவும் கேட்கல்லியே” என்றார் அவர். அவர்கள் இந்த இடத்தில் வீடு கட்டும் முன் இங்கே மரம் கிரம் இருந்து யாராவது அதில் தூக்கு மாட்டிக்கொண்டார்களா? அவரைக் கேட்டால், “தெரியாது” என்பார். கண்ணுக்குத் தெரியாது. அது தான் பேய்.
ஆனால் கண்ணுக்குத் தெரிந்தது அது ஒருநாள்.
நாங்கள் வீட்டைக் காலி செய்ய முடிவு செய்தோம். அவரும் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டார். குடும்பமாக அந்த வீட்டில் வாழ யாரும் வராததால், அவர் இரண்டு சின்னப் பையன்களுக்கு வாடகைக்கு என தந்திருக்கலாம், என்றும் இப்போது படுகிறது. வெளியே போய் யாரிடமும் “அந்த வீட்டில் பேய் இருக்கிறது” என்று நாங்கள் சொல்ல முடியாது. அவர்கள் சொந்தக்காரரிடம் விசாரித்தால், எங்களையே பேய் என்று ஆக்கி, “பேய் இருந்தது, காலி பண்ணிப் போயிட்டது” என்று சொல்லக் கூடும்.
பாதி சாமான்களை எடுத்துக்கொண்டு வேறு வீட்டில் பெயர்த்தாகி விட்டது. இரவு நேரமாகிவிட்டது. சரி. இதே அறையில் படுத்துக் கொண்டிருந்துவிட்டு, காலையில் போகலாம், என அந்த ராத்திரி நாங்கள் அதே வீட்டில்… தங்கியிருக்கக் கூடாது. தங்கினோம்.
ரொம்பக் கோபம் வந்துவிட்டது அந்தப் பேய்க்கு. மேல் கூரையில் அம்மிகள் உருள்கிறாப்போல கடா புடாவென்று பயங்கர இடிச்சத்தம். பெரு மூச்சுகள். நாங்கள் படுத்த பத்தாவது நிமிடம் ஆரம்பித்து போராட்டமான ஆர்ப்பாட்டம். “திருமலை?” என்கிறேன். “இன்னிக்கு அது நம்மைத் தூங்க விடப்போவது இல்லை” என்றான் அவன். “ஆளைச் சும்மா வெளிய விடுதா, அதே சந்தேகம்” என்கிறேன் நான். ஒருநிமிடம் கூட அமைதியாய்ப் படுத்திருக்க அது விடவில்லை.
எனக்கு வாழ்க்கையில் ஒரு லாஜிக் உண்டு. தீதும் நன்றும் பிறர் தர வாரா. அதை நான் நம்புகிறேன். அந்தப் பேய். அது உண்மையா பொய்யா, தெரியாது. ஆனால் எனக்கு, நானறிந்து அதற்கு எந்த துரோகமும் செய்தது கிடையாது. அது என்னைக் காயப் படுத்த வேண்டிய அவசியம் என்ன? அது காயப் படுத்தாது, என நான் நம்பினேன்.
இரண்டு பேரும் எழுந்து உட்கார்ந்துவிட்டோம். மேலே இரும்பு குண்டுகளை உருட்டித் தள்ளி யார் இப்படி விளையாடுவது. காதடைக்கிறது. பெரிய கனமான, உள்ளே சாமான் வைத்த மரப்பெட்களை தரையோடு உரச இழுத்து இங்கே அங்கே யார் நகர்த்துகிறார்கள். சுவரில் சாய்ந்து கொண்டோம்.
என்றாலும் இவனுங்க இடத்தைக் காலி செய்வதாக இல்லை, என நினைத்ததோ பேய்? மகா பெருமூச்சுடன் சர்ர் என்று சன்னல் கதவு திறக்கிறது. கதவைத் தாண்டி அதன் சன்னல் கம்பியூடாக உள்ளே… அது.. நான் பார்க்கிறேன். பேய். பேய்தான் அது. சோறு வடித்த கஞ்சியைக் காற்றில் வீசிய மாதிரி, ஒரு அழுக்கு வேஷ்டியைக் காற்றில் உறினாப் போல… அது பேய்தான். உள்ளே நுழைந்தது பேய்.
சன்னல். உள்ளே நுழைந்த பேய். அதன் உடம்பு துடிக்கிறது. ஆவேச மூச்சுகள். “திருமலை?” “பார்க்கிறேன்” என்றான் திருமலை. நெஞ்சு எகிறிவீடும் என்று அவன் தன் நெஞ்சைப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறான். “வா என்னிடம் பேசு. என்ன வேண்டும் உனக்கு? ஏன் எங்களை வெறுக்கிறாய்? எங்கள் மேல் கோபம் என்ன உனக்கு?” நான் அதனிடம் பேச ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. உதடுகள் உதறுகின்றன. பேச வரவில்லை.பேசினால் கூட ஊளையாக என்னவோ ஒலிகள் வந்திருக்கும். நான் உன் எதிரி அல்ல. நீ என்னைத் தாக்க முடியாது. அது நியாயமே அல்ல… நான் அதையே பார்க்கிறேன். ஒரு பத்து பன்னிரண்டு விநாடிகள். பெரிய கால அவகாசம் அல்லவா அது?
அதன்பிறகு தான் அந்த்க் காரியம் செய்தேன். சன்னல் அருகே தான் அந்த அறையின் விளக்குக்கான ஸ்விட்ச். நான் எழுந்தேன். துணிந்தேன். அந்தப் பேய் நிற்கிறது. அதை நோக்கிப் போகிறேன். பார்த்து விடலாம்… அதை ஊடுருவினேனா தெரியாது. போனேன். ஸ்விட்சைப் போட்டேன். பேய் அதற்குள் கரைந்துவிட்டது. அறையில் பளீரென்று வெளிச்சம்.
நான் பார்த்த அடையாளங்கள், கேட்ட சத்தங்கள்… எல்லாமே திருமலையும் கேட்டிருக்கிறான். கண்டிருக்கிறான்.
காலையில் வீட்டை முழுசமாகக் காலி செய்து கொண்டு ஓடி வந்துவிட்டோம்.
பொய்தானே?
இல்லை. அடுத்து ஒரு மருந்துக் கடைக்காரர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார். மருந்துகளை அங்கே ஸ்டாக் வைத்தார். ஒரு வாரம் எதுவும் நிகழவில்லை. ஒரு நாள் காலை அவர் வந்து பார்த்தால். அத்தனை மருந்து பாட்டில்களும் கண்ணாடி உடைந்து நொறுங்கிக் கிடந்தன.

அந்த வீட்டில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதைப் பிற்காலத்தில் சொந்தக்காரரும் ஒத்துக் கொண்டார்.

Comments

Popular posts from this blog