Saturday, January 9, 2016

‘வாத்தியார்’ சிறுகதைகள் தொகுதிக்கு ம.வே. சிவகுமார் கடைசியாக முன்னுரையாகத் தந்தது.

‘மு ன் னு ரை

துவரை குமுதம் வார இதழில் நான் எதுவுமே எழுதியதில்லை (1986). என் முதல் சிறுகதைத் தொகுதி "அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்' என் குருநாதர் திரு. த. ஜெயகாந்தன் தலைமையில் வெளியாகியிருந்தது. நானும், என் நண்பர்களும் என் குருநாதரின் இயல்பு மீறிய பாராட்டு வார்த்தைகளில் நெகிழ்ந்து போனோம். அவ்வளவுதான். புத்தக விற்பனை ஒரு நூறைக் கூடத் தாண்டவில்லை. விரக்தியில் "யுவர்ஸ் போஸ்த்துமஸ்லி' என்ற சிறுகதையை எழுதினேன். அதையும் எத்தனை பேர் படித்தார்கள் என்கிற விவரம் தெரியாது.
இந்த நிலையில் குமுதம் அரசு பதிலில், "ஏங்க, தற்காலத் தமிழ் இலக்கியம் இப்ப எப்படி இருக்குதுங்க?' என்ற பொதுவான கேள்வி வெளியானது. இதற்கு குமுதம் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அளித்த பதில் பின்வருமாறு:
'சிறுகதையைப் பொறுத்தவரைக்கும் சிறப்பாகவே இருக்குதுங்க. சான்றுங்க "அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்'ங்கற புஸ்தகமுங்க. கதாசிரியருங்க, ம.வே. சிவகுமாருங்க.” என் இருதயம் ஒருமுறை நின்று இயங்கியது. என் புத்தக விற்பனை சற்றே சரளமாகியிருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். நான் இவ்வாறு "அரசு' அங்கீகாரம் பெற்ற எழுத்தாளன் ஆனேன்.
அடுத்த வாரத்தில் ஒருநாள் அப்போது நான் பணிபுரிந்து கொண்டிருந்த பரோடா வங்கியின் தியாகராய நகர் கிளைக்கு குமுதம் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. திரு. எஸ்.ஏ.பி. அவர்கள் என்னை நேரில் பார்த்துப் பேச விரும்புகிறார். நாளை பிற்பகல் நான்கு மணிக்கு குமுதம் ஆபீஸுக்கு நேரில் வந்தால் அவரைப் பார்க்கலாம்.
நான் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் புரசைவாக்கத்தில் குமுதம் அலுவலகத்தின் முன் இறங்கினேன். ரிஸப்ஷனில் எனக்கு ஒரு செய்தி காத்திருந்தது. திரு. லேனா தமிழ்வாணன் என்னைப் பார்க்க விரும்புகிறார்.
திரு.எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்திக்கும் முன் நான் அவரைச் சந்தித்தால் நல்லது. அவ்வாறே நான் அவரின் அறையைத் தேடிப் போனேன். அவர்தான் கதவைத் திறந்தார். வரவேற்று உட்காரச் சொல்லி உபசரித்தார். ஒரு கணம் என்னை ஏறிட்டுப் பார்த்து பேச ஆரம்பித்தார்.
குமுதம் பத்திரிகை சரித்திரத்திலேயே எந்த ஒரு எழுத்தாளருக்கும் மொத்த அலுவலகத்திலேயும் இந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்ததேயில்லை. எடிட்டருக்கு உங்க எழுத்து ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உங்களை வைச்சு நிறைய பிளான் பண்ணியிருக்காரு. அதை அவரே உங்க
கிட்டே சொல்லுவாரு. கிடைச்ச சந்தர்ப்பத்தை ஒரு சவாலா ஏத்துக்கிட்டு பெரிய அளவுலே ஜெயிச்சு வாங்க. All the best!"
'தேங்க்யூ சார்."
நான் திரு. எஸ்.ஏ.பி.யின் புகைப்படத்தைக்கூட அன்றுவரை எந்த வார இதழிலும் பார்த்திருக்கவில்லை. எளிமையான சிறிய மேஜையில் பின்பக்கம் சாய்ந்து கொண்டார். எதிரே திறந்திருந்த என் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில்தான் அதைப் பற்றி எழுதியிருந்த ஒற்றை வரி விமர்சனத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். நம்ப முடியாத தரம்.
'Unbelievable talent அதான் உங்க எழுத்தைப் படிச்சதும் எனக்குத் தோணினது. நீங்க குமுதத்திலே நிறைய எழுதணும். அதுக்கு நீங்க நிறைய இறங்கி வரணும். வெகுஜனத்துக்கு பிடிச்சா மாதிரி எழுதணும். கவர்ச்சியா கூட எழுதலாம். தப்பில்லையே? சுஜாதா? சாண்டில்யன்?
நான் அவர் உச்சரித்த பெயர்களைக் கேட்டு பிரமித்து நிமிர்ந்தேன். ஆனால் என் லட்சியம் அவர்களைப் போன்ற பிராபல்யம் இல்லையே?
'ஸ்கை ஈஸ் தி லிமிட். ஆறு மாசத்துலே உங்களை சுஜாதா மாதிரி எங்கியோ கொண்டு போயிடுவேன்."
'ஸாரி சார்." கால புருஷன் என் வாயில் தவறான வார்த்தைகளைப் போட்டான். 'எழுத்து, எனக்கு கடவுள் கொடுத்த வரம். அதுலே காம்ரமைஸ் பண்ண ஆரம்பிச்சா, அது எதுலே போய் முடியும்னு தெரியலே. அதனாலே நான் எப்பவும் எழுதறா மாதிரி ஒரு கதையை எழுதி அதை உங்களுக்கு அனுப்பறேன். பிடிச்சிருந்தா போடுங்க." அவ்வண்ணமே நான் எழுதித் தயார் நிலையில் இருந்த "பித்ரூ' என்ற கதையை அடுத்த நாளே அவருக்கு அனுப்பி
னேன். அது அதற்கு அடுத்த நாளே திரும்பிவிட்டது. அதற்குப் பிறகு என்னை எழுத்தில் அதுபோல் பெரிய அளவில் ஊக்குவிக்க யாரும் முன்வரவில்லை.
நான் திரைப்படங்கள் மூலம் பெரிய அளவில் சாதிக்க முற்பட்டபோது நான் பிரபலமாய் இல்லாததால் எனக்கு தாயமே விழவில்லை. நான் கலைஞர்களுக்கே உரித்தான மௌட்டீக தைர்யத்தில் சொந்தப் படம் எடுக்கப் போய், தேர் நகரவேயில்லை. பெரும் கடன் சுமையை எட்டு ஆண்டுகள் சுமந்து வீட்டை விற்று, வேலையிலிருந்து விருப்பமில்லாமலேயே விருப்ப ஓய்வில் அகாலமாய் ஓய்வு பெற்றுக் கடனை அடைத்து காசில்லாமல் தெருவுக்கு வந்தேன். தற்சமயம் அதுவும் கடந்துபோய் நன்றாகவே இருக்கிறேன்.
ஒருவேளை திரு. எஸ்.ஏ.பி.யின் கோரிக்கையை ஏற்று நான் கிரைம், செக்ஸ் என்று வெகுஜன எழுத்தாளன் ஆகியிருக்கலாமோ?
இந்தத் தொகுதியில் இருக்கும் அத்தனை கதைகளும் என் கஷ்ட காலத்தில் நான் எழுதியவை. எனது இழப்புகள் அனைத்தும் ஒரு அரிச்சந்திரனுக்கு நிகரானவை. எதற்கும் மாறாத தேர்ந்த எழுத்தை நான் தொடர்ந்து கொடுத்திருக்கிறேன்.
இதற்காக நான் வருந்த வேண்டுமா என்ன?

அன்புடன்
ம.வே.சிவகுமார்
சென்னை   

12.10.2015 
வாத்தியார் - சிறுகதைகள் ம வே சிவகுமார் 
இருவாட்சி இலக்கியத் துறைமுகம் 
41 கல்யாண சந்தரம் தெரு    பெரம்பூர் செட்னனை 11
அலைபேசி 91 94446 40986

1 comment:

  1. அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும் தொகுப்பில் உள்ள கதைகள் வாத்தியார் தொகுப்பில் இருக்கிறதா என்பதை அறிய ஆவல்

    ReplyDelete