short story
ஏரிக்கரை
நாகரிகம்
எஸ். சங்கரநாராயணன்
*
“சென்னையில் எங்க போனாலும் 250 அடி 300 அடியிலும் தண்ணீ இல்லை. அதான் ஏரிப் பக்கமா வீடு வாங்கிட்டு வந்தம். இப்ப இப்பிடிப் பிரச்னை…”
ழை என்றால் சன்ன மழை இல்லை. சிறு காற்றுடன் மரங்கள் அசைந்தசைந்து, சொகுசு கொண்டாடிக் குளிக்குமே, அந்த மழை இல்லை இது. மரங்கள் அசையவே இல்லை. கன மழை. கனம் தாங்காமல் மேகக் கொழுக்கட்டை உடைந்து உதறி தள்ளிவிட்டு விட்டது தண்ணீரை. மேகத்தின் இடுப்பில் இருந்து இறங்கி குடுகுடுவென்று ஓடும் குழந்தை. அவள் அறிந்து இத்தனை ஆண்டுகளில் இப்படியொரு மழை, பெய்ததே இல்லை. சான்ஸ்லெஸ்!
சற்று தாழ்வான பகுதி தான் இது. தெருக் குழாயில் தண்ணீர் இன்னும் வேகமாக வரும். மேட்டுப்பகுதிக் காரர்கள் பொறாமைப் படுவார்கள். சின்ன மழைக்கும் தெருவில் தண்ணீர் சலசலவென்று ஓடும். ஆனால் வடிந்து விடும். அடுக்ககத்தில் முதல் தளம், என அந்த வீடு அவளுக்குப் பிடித்திருந்தது. மழைக்காலங்களில் சிறு ஓடையாய் மழைத் தண்ணீர் உள் தரை தெரிய ஓடும். வேறு அசுத்தங்கள் சேராத சுத்தமான தெளிவு. “தொப்புள் தெரிய சேலை கட்டிய பெண்ணைப் போல,” என்றான் மகேந்திரன் ஒருநாள். “உதைக்க வேண்டும் உன்னை,” என அவனைப் பார்த்துச் சிரித்தாள் ராதிகா. என்றாலும் அந்தப் பகுதியில் வாழ அலுத்துக் கொள்ளவில்லை அவன், என்கிற ஆறுதல் இருந்தது அவளுக்கு. பச்சை சார்ந்த இயற்கையும் கொஞ்சம் வாழ்க்கையில் வேண்டும் தான்.
மழை என்பதே ரசிப்பதற்குரிய விஷயம் அல்லவா? இது என்ன இப்படிக் கொட்டுகிறது தெரியவில்லை. ஆச்சர்யமாய் இருந்தது முதலில். பத்து பதினைந்து நிமிடத்துக்கு மேல் அந்தப் பகுதியில் மழை பெய்து பார்த்தது இல்லை. ஒருமணி நேரம், ரெண்டுமணி நேரம் என்று சற்றும் தளராத மழை. கன மழை. பாசஞ்சர் மழை அல்ல. எக்ஸ்பிரஸ் கூட அல்ல, சதாப்தி. தெருவில் தண்ணீர் ஒரு வேகத்துடன் ஓட ஆரம்பித்திருந்தது. வாராந்திர விடுமுறை என. ராதிகா வீட்டில் இருந்தாள். ஞாயிறுகளிலும் அவள் வேலைக்குப் போக வேண்டியிருக்கும். வாரத்தில் வேறுநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் செய்திகள் போட்டாள். ராமலிங்கம் சார் தான். அவர் வாசிப்பது அவளுக்குப் பிடிக்கும். மோடி எதோ வெளிநாட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எந்த நாடு அவருக்கே தெரியாது. உதவியாளர்கள் சொல்வார்களாய் இருக்கும். வேறு சேனல் மாற்றினாள். மழைபற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம்… என பெரிய வியூகம் தான், அதாவது மனுசக் கணக்குக்கு. ஏரிகள் கிடுகிடுவென நிரம்பி வருகிறதாகச் சொன்னார்கள். கோப்பைகள் எதற்காக? நிரப்பப்படத் தானே?
இதுவே ஏரிக்கரை தான் எனவும் நினைப்பு வந்தது. இங்கே காலையில் இருந்தே மூட்டமாய்த் தான் இருந்தது. அந்தி சாய, மழை சட்டென ஆரம்பித்தது. கன மழை வரும். அவளுக்குத் தெரியும். அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். மழை துவங்குவதே அழகு. ராமசாமித் தாத்தா கதை சொல்வது மாதிரி. தாத்தா வெத்திலையை ஒரு சுண்டு சுண்டி ஈரம் உதறி வேட்டியில் துடைத்துக் கொள்வார். விரலால் வலிக்காத பாவனையில் சுண்ணாம்பு எடுத்து, வெத்திலையின் பின்நரம்புகளை உருவிவிட்டு பின்பக்கம் சுண்ணாம்பை அவர் தடவிக் கொடுப்பது, செல்ல நாயை வருடித் தருவதாய்க் காணும். அதை அப்படியே பன்னீர்ப் புகையிலை சேர்த்து வாயில் அதக்கிக் கொண்டு, கண்ணை மூடுவார். நா ஊறி விர்ரென்று ஒரு சுகம் அவருக்குள் நிறைகிறதோ, என்று படும். அப்பறம் கதை எடுப்பார். புன்னகையுடன் “வெத்தலையும் பாக்குமா?” என்று அவர் கேட்பார். “பாக்காது!” என்று நாம் சொல்ல வேண்டும்! அடுத்த கேள்வி. “தலையணையும் பாயுமா?”
மழை துவங்குவதை அப்படியொரு, அவசரம் இல்லாத படிப்படியான வளர்ச்சியாய் அவள் பார்த்து ரசித்திருக்கிறாள். இப்பவெல்லாம் சிங்காரமற்ற சென்னையில் மழை பெய்கிறதும் இல்லை. பெய்தாலும் சட்டென பேப்பர்காரன் காலையில் வீசுகிற செய்தித்தாள் போலவே விழுகிறது. முட்டாழத்தில் தெருவில் வாகனங்கள் சிரமப்பட்டு உருமிக் கனைத்துக் கடந்தன. இத்தனை தண்ணி வந்திட்டதா என அவள் எட்டிப் பார்த்தாள். சட்டென அத்தோடு மின்சாரம் போய்விட்டது. இவ்வளவு நேரம் மின்சாரம் இருந்ததே ஆச்சர்யம் தான். மகேந்திரன் கம்பியூட்டரில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தான். கம்பியூட்டரை குளோஸ் செய்துவிட்டு, கீச்சிட்டு எச்சரிக்கும் யூபியெஸ்சையும் அணைத்துவிட்டு எழுந்து வந்தான்.
“நர்மதா எங்கே?” என்று கேட்டான் அவளிடம். “கீழ் வீட்டுல விளையாடப் போயிருப்பா…” என்றாள் ராதிகா. அபூர்வமாய் மழை நாட்களில் அவளும் வீட்டில் இருந்தால், அவளும் நர்மதாவும் மொட்டைமாடிக்குப் போய் மழையில் நனைவார்கள். ராதிகா கமாஸ், ஹிந்தோளம் எதாவது எடுத்தால் நர்மதா நடனம் ஆடுவது கூட உண்டு. மாமியார்க்காரி ராதிகாவுக்கு ரொம்ப சப்போர்ட். அவளும் வேடிக்கை பார்க்க என மாடிக்கு வருவாள். ரெண்டாம் மாடிக்காரர்கள், அவர்களும் வந்து விடுவார்கள். மழை இறுக்கங்களைத் தளர்த்தி விடுகிறது. மழை பூமிக்கு வரம். உடலையும் உள்ளத்தையும் மழை எப்படி லகுவாக்கி விடுகிறது! தடதடவென்று வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.
நர்மதா தான். “என்னடி?” என்று கேட்டாள் ராதிகா. “பாவம்மா. கீழ் வீட்டுக்குள்ள தண்ணி வந்திட்டது…” அவளும் மகேந்திரனுமாய் கீழ் வீட்டுக்கு வேகமாய் இறங்கினார்கள். மழை எகிற ஆரம்பித்திருந்தது. தெருவைத் தாண்டி உள்ளே மழை அலைபாய்ந்தது. கார் போர்டிகோ. பின்பக்கமாக சோமசுந்தரம் அன்க்கிள் வீடு. அங்கே இன்வர்ட்டர் மினசாரம் இருந்தது. ஓய்வுகாலப் பணத்தில் தனக்கு தரைத்தளமே வசதி என்று பார்த்து வாங்கிய வீடு. அவர்கள் போனபோது போர்டிகோ தாண்டி வீட்டுக்குள் கணுக்கால் நனைகிற அளவு மழைநீர் உள்ளே வந்திருந்தது.
அன்க்கிள் முட்டி வலி உள்ளவர். கூட அவர் மனைவிதான். கால்கள் பலவீனமாகி தன் உடலைத் தூக்குவதே சுந்தரிக்கு சிரமமாய் ஆகியிருந்தது. குனிந்தும் நிமிர்ந்தும் தரையில் இருக்கும் சாமான்களை உயரங்களில் பத்திரப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். ராதிகா அவர்களை நகர்த்தி விட்டு “நீங்க சொல்லுங்க. நான் செய்யிறேன்…” என்றாள். அவளையும் மகேந்திரனையும் பார்த்ததுமே அன்க்கிளுக்கு முகம் மலர்ந்து விட்டது. மகேந்திரன் அவரிடம் “நீங்க என்னோட மாடிக்கு வந்துருங்க… அவங்க லேடீஸ் பாத்துப்பாங்க” என்றான் புன்னகையுடன். அவர் முகத்தில் நன்றி தெரிந்தது. “தேங்ஸ். என்ன மழை இந்த ஊத்து ஊத்துது?” என்றார். அவரைக் கைத்தாங்கலாக மகேந்திரன் மாடிப்படியை நோக்கி அழைத்துப் போனான். அதற்குள் வெள்ளம் வெளி வராந்தாவெங்கிலுமாய் சளப் சளப்பென்று மோதிக் கொண்டிருந்தது. “மழை விடாது போலுக்கே…” என்றார் அவர். “ஆமாம். ரெண்டரை மூணு மணி நேரமாப் பெய்யுதே” என்றான் மகேந்திரன். “வழக்கமான மழை இல்ல இது. அருவியா இல்ல ஊத்துது” என்றார் அவர். “போன வார வெள்ளமே நிறைய இடத்தில் இன்னும் வடியல. இப்ப இன்னும் மோசமா இருக்கு.” மாடிப்படி வரை அவர் ஏறியதும், “நீங்க போயிருவீங்களா? நான் கீழே அவங்களுக்கு எதுவும் உதவி செய்ய முடியுமா பார்க்கிறேன்” என்றான். அவர் தலையாட்டியபடியே பற்றிக்கொண்டு மெல்ல ஒவ்வொரு படியாக மேலே போனார். தலை கிர்ரென்றது. மேலே இருட்டாய்க் கிடந்தது.
அன்க்கிள் வீட்டில் முழங்கால் அளவு தண்ணீர். எதை மேலே ஏற்ற எதை விட என்றே புரியவில்லை. சுவரில் சாத்தி வைத்திருந்த அரிசி மூட்டையை மகேந்திரன் லாஃப்ட்டில் போட்டான். ஏற்கனவே அங்கே காலி சூட்கேஸ்கள் அடைத்துக் கொண்டிருந்தன. அவற்றை கட்டில் மேல் வைத்துவிட்டு, இடம் ஒதுக்கி அத்தியாவசிய சாமான்களை அடுக்கிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் ஆன்ட்டியிடம் யோசனை கேட்காமலேயே அவர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். நேரம் நழுவிக் கொண்டிருந்தது. மழைத் தண்ணீர் மெல்ல உயர்ந்தபடி இருந்தது.
“எல்லா சுவிட்சுகளையும் அணைத்து விடுவது நல்லது,” என்றாள் ராதிகா. ஃப்ரிஜ்ஜில் இருந்த இரண்டு பால் பாக்கெட்டுகள், இவருக்கு இரவு போட்டுக்கொள்ளும் மாத்திரைகள்… “மாத்திரைப் பையை அப்படியே எடுத்துக்கோங்க ஆன்ட்டி. எப்ப முடியுமோ அப்ப கீழே வரலாம்… இந்தத் தண்ணீர் எல்லாம் வடியணுமே?” என்றாள் ராதிகா. தண்ணீர் உள்ளே சளப் சளப் என ஆடுவது வீடே ஆடுகிறாப் போல பிரமை தந்தது. “நீங்க வெளியே போங்க. நான் வந்து கதவைச் சாத்திட்டு இன்வர்ட்டரை அணைக்கிறேன்” என்றாள் ராதிகா. அதற்குள் மாடிப்படிகளிலேயே மூணு படி உயரம் ஏறியிருந்தது தண்ணீர். ஆனால் மழை விட்டுவிட்டது. அதுவரை கேட்டுக் கொண்டிருந்த மழைச் சத்தம் சட்டென அடங்கி ஒரு மௌனம் வந்திருந்தது பொழுதுக்கு. ராதிகா ஆன்ட்டியைப் பார்த்துப் புன்னகைத்தாள். “மழை விட்டுட்டது. ஆனால் எப்படி பயமுறுத்திட்டது பாருங்க” என்றாள் ராதிகா.
சுந்தரி கலவரப் பட்டிருந்தாள். என்றாலும் சமாளித்து புன்னகை செய்தாள். “வீட்டுக்குள்ளியே முட்டிக்கு மேல வெள்ளம் வந்திட்டதே?” என்றாள் சுந்தரி. “வடிஞ்சிரும் வடிஞ்சிரும்” என்றாள் ராதிகா. “காலைலக்குள்ள வடிஞ்சிட்டா ஷேமம்.” பேசியபடியே மாடியேறினார்கள். மழை மூட்டம். இரவு வேறு. படியே தெரியவில்லை. உத்தேசமாய்க் காலைத் தூக்கி மேல் படியில் வைக்க வேண்டியிருந்தது. “டார்ச்… வீட்ல இருக்கு” என தயங்கினாள் மாமி. “நம்ம வீட்ல இருக்கு ஆன்ட்டி. வாங்க. பாத்துக்கலாம்…” என்றாள் ராதிகா.
ராதிகாவின் மாமியார் மெழுகுவர்த்தி ஏற்றி யிருந்தாள். இவர்கள் வீட்டில் இன்வர்ட்டர் இல்லை. இருட்டில் அவரவரில் பாதி தான் தெரிந்தது. தனி அழகாய் இருந்தது அது. எல்லாரிடமும் இருந்தது ரகசியம். மனசில் பயம். வெளியே பயம் இல்லாதது போல் சிரித்துப் பேசி நடமாட வேண்டியிருந்தது. “கன மழைன்னு தான் ரிப்போர்ட். ஆனால் சென்னை இதை அனுபவித்தது இல்லை இல்லியா?” என்றாள் ராதிகா. “பக்கத்திலேயே நந்தி ஏரி. பாதி நிரம்பியிருக்குமா?” என்று கேட்டபடியே உள்ளே வந்தாள் சுந்தரி. “பக்கத்து ஏரிகள் நிரம்பினால் இந்த ஏரிக்குத் தண்ணீர் வரும். வந்து இதை நிரப்பும்” என்றாள் ராதிகா. “அது வேறையா?” என்றாள் சுந்தரி.
அவர்கள் வந்தது நர்மதாவுக்கு ரொம்ப சந்தோஷம். இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிட்டார்கள். கீழ்வீட்டு சாம்பார் நர்மதாவுக்குப் பிடித்திருந்தது. மின்சாரம் வர வேண்டும். காலையில் வெளிச்சம் வந்தால் கூட கீழே போய் வீட்டை ஒழுங்கு செய்துவிட வேண்டும்… என நினைத்தபடி காலை நீட்டி உட்கார்ந்து கொண்டாள் சுந்தரி. அன்க்கிளிடம் நிறைய வேடிக்கைக் கதைகள் இருந்தன. நர்மதா அவரிடம் தெனாலிராமன் கதை, பரமார்த்த குரு கதைள் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பாள்.
விருந்தினர்களைப் படுக்கையில் படுக்கச் சொல்லிவிட்டு ராதிகாவும் மகேந்திரனும் தரையில் விரித்துப் படுத்தார்கள். நர்மதா அன்க்கிளுடன் படுத்துக் கொண்டாள். இன்றைக்கு அவரை அவள் தூங்க விடமாட்டாள் என இருந்தது. அவருக்கும், இருந்த இறுக்கமான சூழலுக்கு அந்தக் கலகலப்பு வேண்டியிருந்ததோ என்னவோ? “சிவாஜி வாயிலே ஜிலேபி, இந்த வார்த்தைகளில் என்ன விசேஷம் சொல்லு நர்மதா?” என்று அரட்டையில் இறங்கினார். ராதிகா இருட்டில் புன்னகை செய்து கொண்டாள். அவள் ராமசாமித் தாத்தாவிடம் கேட்காத புதிர்களா? சிவாஜி வாயிலே ஜிலேபி.. இந்த வார்த்தைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி, குறுக்குவெட்டில் வாசித்தாலும், நெடுக்குவசம் வாசித்தாலும் அதே சொற்களே வரும்! அதே மாதிரி இன்னொரு செட் வார்த்தைகள் அவள் அறிவாள். கரடி ரயில் டில்லி!
*
இரவு. மணி என்ன தெரியவில்லை. திடீரென்று மழை திரும்ப ஒரு ஆவேச எடுப்பு எடுத்தது. ஜன்னல் பக்கமாக அன்க்கிள் தான் படுத்திருந்தார். மழையின் திடீர் சத்தத்தில் பதறிப்போய் அவர் எழுந்துபோய்ப் பார்க்கிற ஜோரில் கட்டிலில் முட்டி இடித்துக் கொண்டு ஆ, என்றார். ராதிகாவும் எழுந்து கொண்டாள். மழை முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. வாசல் கதவைத் திறந்து கொண்டு ராதிகா வெளியே வந்தாள். மாடி வீட்டில் இருந்தும் எழுந்து வந்திருந்தார்கள். பார்த்துக் கொண்டிருக்கிறபோதே இடுப்பு வரை போர்டிகோவில் நின்றிருந்த தண்ணீர் திரும்ப உயர ஆரம்பித்திருந்தது. தெருப் பள்ளத்தில் இருந்து ஒரு அடி ஒண்ணரை அடி உயர போர்டிகோ. தெருவில் எப்படியும் தோள் அளவு வெள்ளம் போகும் போலிருந்தது. ஹா என்று திகைப்பாய் இருந்தது அவளுக்கு. நர்மதாவும் தூங்கவில்லை என்று தெரிந்தது. எழுந்து அம்மா பக்கம் வந்து நின்றாள். மாடிவீட்டுப் பெண் ஷில்பா இவளைப் பார்த்துச் சிரித்தாள். நர்மதா அவளிடம் “சிவாஜி வாயிலே ஜிலேபி” என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஷில்பாவுக்கு தன் வீட்டில் அன்க்கிள் தங்கவில்லையே என்றிருந்தது.
ராதிகா அலைபேசியை எடுத்தாள். கடும் இருட்டாய்க் கிடந்தது. நேரம் என்ன தெரியவில்லை. மழையின் சத்தம் மாத்திரம் துல்லியமாய்க் கேட்டது. ராமலிங்கம் சாருக்குப் பேசினாள். “என்னம்மா இந்நேரத்திலே?” என்றார் அவர். அவர்குரலில் எரிச்சல் அல்ல. கவலை இருந்தது. “ஆமாம்மா. நம்ம அலுவலகத்திலேயே தண்ணீர் வந்திட்டது. அங்கங்க ஏரிகள் உடைச்சிக்கும் போலுக்கு. இந்த மூணு நாலு மணிநேரத்தில் இத்தனை மழை அதிகம் தான். ஊரில் எங்க பார்த்தாலும் வெள்ளம் நிக்குது. மழை நீடிக்கும்ன்றாங்க… பாதி இடத்துக்கு கம்யூனிகேஷனே கட் ஆயிட்டது. உங்க பக்கம் மின்சாரம் இருக்கா?” அவள் கேள்விகள் கேட்க நினைத்தாள். அவரே கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நாலு பக்கமும் கவலை சூழ்ந்திருந்தது.
மழை வெளியே பிய்த்து உதறிக் கொண்டிருந்தது. மாடிப்படிகள் குறைந்து கொண்டே வந்தாப் போல இருந்தது. அன்க்கிள் வந்து பின்னால் நின்றிருந்தார். ராதிகா அவரை கவனிக்கவில்லை. மாடிவீட்டு அகிலாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் அவள். “நம்ம ஏரியே நிரம்பி யிருக்கும் போலுக்கே?” என்றாள். “எங்க வீடு மூழ்கிரும்னு தோணுது… இப்பவே இடுப்புக்கு மேல தண்ணி உள்ள போயாச்சி…” என்றார் அன்க்கிள். திடீரென்று அவர் உடம்பு குலுங்கியது அந்த இருட்டிலும் தெரிந்தது. “என்னுடைய ஓய்வுகால சேமிப்பு இது. இது போச்சின்னால் நாங்க என்ன பண்றது?” மாடிவீட்டு சேஷகோபாலன் சோகமாய்ச் சிரித்தார். “சென்னையில் எங்க போனாலும் 250 அடி 300 அடியிலும் தண்ணீ இல்லை. அதான் ஏரிப் பக்கமா வீடு வாங்கிட்டு வந்தம். இப்ப இப்பிடிப் பிரச்னை…” சுந்தரி ஆன்ட்டியும் எழுந்து கொண்டிருந்தாள். உண்மையில் யாருமே தூங்கி யிருக்கவில்லை. அவள் கணவரின் தோளை அழுத்தியது தெரிந்தது. “மழை வெறிக்க ஆரம்பிச்சிட்டது. கவலைப் படாதீங்க” என்றாள் ஆன்ட்டி. வெளியே பார்த்தார்கள். பொழுது திரும்ப ஆத்திரம் அடங்கி சமத்தாகி வந்தது.
பிறகு அன்றிரவு மழை இல்லை, என்பது ஆறுதல். விளக்கு இல்லை. மொபைலில் ஒரு பாயின்ட் இருந்தது. அதுவும் வேலை செய்யுமா தெரியவில்லை. ராமலிங்கம் சார் கிடைத்ததே ஆச்சர்யம் தான். எப்பவுமே அவர்களுக்கு தான் தகவல் முதலில் கிடைக்கும். அவளே இப்போது துண்டாடப் பட்டு இருக்கிறாள். எல்லாரும் பேசாமல் உம்மென்று உட்கார்ந்திருந்தார்கள். பேச என்ன இருக்கிறது? சில சமயம் பேசுவது ஆறுதலாகவும், சில சமயம் பேசாமல் இருப்பதே தேவலாம் என்றும் ஆகியிருந்தது. ராதிகா திரும்ப வாசலுக்கு வந்து பார்த்தாள். இருட்டான இருட்டு. ரேழித் தரை சில்லிட்டுக் கிடந்தது. மழை இப்போது இல்லை. மின்சாரமும் இல்லாத கனமான அமைதி. தண்ணீர் ஐந்தாறு படிகளோடு நின்றிருந்தது. கீழ் வீடு நிச்சயம் நாலடி நாலரை அடி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும், என்று பட்டது.
ஆனாலும் வெளியே தண்ணீர் ஓடும் சலசலப்பு குறையவில்லை. இருட்டில் பாதிதான் புரிந்தது. அவள் கணவனின் அலைபேசியை எடுத்து திரும்ப ராமலிங்கம் சார் கிடைப்பாரா என்று பார்த்தாள். நேரம் இரவு இரண்டு. அதைப் பற்றி என்ன? நல்ல மனிதர். தப்பாக நினைக்க மாட்டார். அவசர நேரத்தில் அவர் அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வார், என்பதெல்லாம் அவளுக்குத் தெரியும். அவர் எடுக்கவில்லை. அலுப்புடன் அணைத்தாள். ஆனால் ஐந்து நிமிடத்தில் அவரே பேசினார். “ஆமாம்மா. அங்கங்க ஏரியை உடைச்சி விடறாங்க. இத்தனை சுருக்கா ஏரிகள் நிரம்பும்னு யார் எதிர்பார்த்தா? யப்பா என்ன மழை இது? நீ எங்க இருக்கே? முதல் தளம் தானே? நந்தி நகர். ரொமப லோ ஏரியா ஆச்சே? தரைத்தளம் வரை தண்ணீ வந்திட்டதாச் சொல்றாங்களே. சரி. ஜாக்கிரதையா இருங்க. நாளைக்கு வேலைக்கு… வர முடியுமா? பாத்துக்கோ” என்றார் சார்.
ஃபான்டசி கதைகளில் வருகிறதைப் போல ஒரே இரவில் உலகம் வேறு மாதிரி ஆகிப் போயிருந்தது. கீழ்த் தளம் தப்பிக்குமா தெரியவில்லை. விந்தையான நிமிடங்கள். மேல் தளத்துக்காரனுக்கு சிறு கீறல் கூட இல்லை. கீழ்த்தளம் முழுசும் நாசம். எதுவுமே மிஞ்சாமல் வீட்டுக்காரனைப் புரட்டிப் போட்டிருக்கிறது! அவள் பார்த்தாள். ஏற்கனவே அதில் முக்கால் பாகம் நிரம்பி விட்டது. அன்க்கிள் என்று இல்லை. அவரைப்போல லட்சக் கணக்கான சனங்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும், என நினைத்தாள். பதறியபடி கீழே மாடிப்படிகளைப் பார்த்தாள். வெள்ளம் வெளியே ஓடுவதை வைத்து கணிக்க முடியாது. இருட்டு வேறு. மாடிப்படிகளில் எத்தனை வெளியே தெரிகிறது. அதுவே அடையாளம். நான்கு படிகள் மீதம் இருந்தன. இப்போது மூணு படிகள் தான் தெரிந்தன. ஆ, மழைத் தண்ணீர், ஏரித் தண்ணீர். பள்ளிக்கூடம் விட்ட குழந்தைகள் மாதிரி ஏரி உற்சாகப்பட்டு விட்டது- உடைந்திருக்குமா? உடைக்கப் பட்டிருக்குமா? தகவலே தெரியாது.
“உள்ள வாம்மா” என்று மாமியார் அழைத்தாள். “பாவம் சனங்க அங்கங்க என்னவெல்லாம் கஷ்டப்படுதோ?” என்றாள் அவள் தோளைத் தொட்டு. அந்த அவசர நிலையிலும் மற்றவர் பற்றிய கவலை அவளுக்கு. ராதிகாவுக்கு மாமியாரைப் பிடிக்கும். ஸ்ரீரங்கத்துக்காரி அவள். ஒரு வெள்ளத்தில் பையன் ஒருவனை காவேரித் தண்ணீரில் பாய்ந்து மீட்ட கதையெல்லாம் மாமியார் சொல்லக் கேட்டு ரசித்திருக்கிறாள். உள்ளே வந்தார்கள். மகேந்திரன் எழுந்து உட்கார்ந்திருந்தான். எமர்ஜென்சி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. “அதை அணைச்சிறலாம். அவசரத்துக்குத் தேவைப்படும்” என்றாள் ராதிகா. நர்மதா தூங்கி யருந்தாள். விருந்தினர்கள் பற்றித் தெரியவில்லை. யாரும் பேசிக் கொள்ளவில்லை. வெளியே மழை இல்லை. தெரு வெள்ளத்தின் சலசல கேட்டுக் கொண்டிருந்தது. எழுந்து மாடிப்படிகளை எண்ண வேண்டும் என்றிருந்தது ராதிகாவுக்கு அவள் சிறிது அசைந்தாலும், மாமியார் அவளைக் கட்டிக் கொண்டாள். “காலைல பாத்துக்கலாம் ராது…” என்றாள் மாமியார்.
*
காலை வெளிச்சம் இல்லாமல் விடிந்தது. மாமியார் அவளுக்கு முன்பே விழித்துக் கொண்டிருந்தாள். ராதிகா பல் தேய்த்துவிட்டு வந்தபோது மாமியார் காபி எடுத்து வந்தாள். அன்க்கிள் வறட்சியான புன்னகையுடன், “கீழ முழுசா முங்கிட்டது” என்றார். “ஓ” என்றாள் ராதிகா. வேறு என்ன பேச என்றே தெரியவில்லை. “கவலைப்படாதீங்க. கஷ்டம் வரும்போதுதான் நமக்குக் கைகள் இரண்டு இல்லை, நாலு ஆறுன்னு பெருகும். நாங்க இருக்கோம்” என்றாள் ராதிகா. “நீங்க மேல் தளத்துக்கு வந்தாச்சி. வீட்டுக்குள்ள மாட்டிக்கிட்டவங்க எத்தனை பேர் தெரியல்லியே?” மாமா தலையாட்டினார். “வாஸ்தவம்.”
மகேந்திரனைப் பார்த்து ராதிகா “நான் வெளியே கிளம்பறேன்…” என்றாள். “என்ன சொல்றே?” என்று நிமிர்ந்தான் அவன். “நீங்க எல்லாரும் பாதுகாப்பா தான் இருக்கீங்க. இங்கயும் வெள்ளம் வந்தாலும் மாடி வீடு இருக்கு. ஒதுங்கிக்கலாம். நான் வெளியே போயி நிலைமை எப்படின்னு பாக்கணும்…” என்றாள். சுந்தரி மாமி என்ன நினைத்தாளோ. அவள் கண்ணில் பயம் இருந்தது. மாமியார் தான் எடுத்துக் கொடுத்தது. “நான் பாத்துக்கறேன் ராது. நீ எப்பிடிப் போவே?” என அவள்தான் முதல் ஆதரவு தந்தது. “எதாவது படகு வருதா பாப்பம். வரும்… வந்தால் போயிருவேன். நீங்க ஒரு உதவி செய்யுங்க. சப்பாத்தி கிப்பாத்தி மாதிரி எதும் நிறைய பண்ளணித் தரீங்களா? போற வழியில் யாருக்காவது கொடுக்கலாம்” என்றாள் ராதிகா. சுந்தரி மாமியின் கண்கள் விளக்கேற்றிக் கொண்டன. “ஸ்டஃப்ட் சப்பாத்தி. உள்ள கிழங்கு வெச்சி, நான் பண்ணுவேன். கோதுமை மாவு இருக்கா?” மாமியார் சறுசுறுப்பானாள். கிடுகிடுவென்று உருளைக் கிழங்கை நறுக்கி வேக வைத்தார்கள். நர்மதா “நான் தோல் உரிச்சித் தர்றேன்” என்று காத்திருந்தாள். பெண்கள் உற்சாகப் பட்டாப் போலிருந்தது. அன்க்கிளும், மகேந்திரனும் அசந்துபோனார்கள். என்ன உதவி செய்வது, என்று அவர்கள் திகைத்தார்கள்.
மொட்டை மாடியில் இருந்து நர்மதா தான் தூரம் வரை தேடிப் பார்த்துக் கொண்டிருந்தாள். “மழை வந்தால் கீழ வந்துரு இவளே” என அவளை எச்சரித்தாள் ராதிகா. “இந்த மழை ஒத்துக்காது. ஜுரம் வந்துரும்.“ ரொம்ப தாமதித்தே படகு ஒன்று வந்தது. சின்னப் படகுதான். வெள்ள ஓட்டத்தோடுதான் அதை ஓட்ட முடியும். நர்மதா அதை சத்தம் போட்டுக் கூப்பிட்டாள். பக்கத்துப் பகுதி இளைஞர்கள் ரெண்டு பேர். ராதிகா அவர்களைப் பார்த்திருக்கிறாள். அவளையும் அவர்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். “வணக்கம் மேடம்” என்றார்கள். “மழை போதுமா?” என்றார்கள் வேடிக்கை போல. “வேணான்னா விட்றப் போகுதா?” என அவளும் மாடியில் இருந்து சிரித்தாள். மாடிப்படிகள் ஏறும் பகுதியில் சதுரமாய் நுழைவு வெளி இருந்தது. அதன் வழியே வெளியே இறங்க முடிந்தது. கீழே மழைச்சார்ப்புக்கு ராதிகா குதித்து இறங்கிக் கொண்டாள். “சூப்பர்மா” என கைதட்டினாள் நர்மதா. “அம்மா நானும் உன் கூட வரட்டுமா?” ராதிகா சிரித்தாள். “நீ ஹோம் ஒர்க் பண்ணு. வந்து பார்ப்பேன்.”
படகை அந்த வழி திருப்ப முடியாது. ஒடுக்கமான தெரு. மறுபக்கமாகத் துடுப்பு ஓட்டி வர வேண்டியதுதான். மாமியாரும் சுந்தரி மாமியுமாக சப்பாத்திப் பொட்டலங்கள் முப்பது நாற்பது தயார் செய்து வைத்திருந்தார்கள். தனக்கும் ஒரு டிஃபன் பாக்சில் கட்டி எடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளை. வீட்டில் உருளைக் கிழங்கு, வெங்காயம் ரெண்டு மூணு கிலோ வரை இருந்தது. அவர்கள் செயல்பட்ட வேகம் ஆச்சர்யமாய் இருந்தது. கஷ்டம் வரும் வேளையில் மனுசாளுக்கு மேலும் கைகள் முளைக்கின்றன, என்பது சரிதான்.
நாலாவது அடுக்ககத்தில் ஒரு பெரியவர் ஏறிக் கொண்டார். மற்றவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர மறுத்து விட்டார்கள். மழை விட்டிருந்தது. என்றாலும் அந்த வெள்ளம் தாழ்வான இந்தப் பகுதியை விட்டு வேறு எங்கு அடையும் தெரியவில்லை. யாரும் அவர்களிடம் உணவு வேண்டி கை நீட்டவில்லை. ஒரு நாய் அவர்களைப் பார்த்ததும் மாடியில் இருந்து எட்டிப் பார்த்துக் குலைத்தது. நாய் என்றால் அவளுக்கு பயம். அந்த ரெண்டு இளைஞர்களில் ஒருவன் படகை நிறுத்திவிட்டு மெல்ல அந்த மாடிப் பக்கமாய் ஏறினான். ரொம்ப சகஜப்பட்டாப் போல அவன் ஏறியது ஆச்சர்யமாய் இருந்தது. நாயை அள்ளிக் கொண்டு படகுக்குத் திரும்பினான் அவன்.
“வெல்டன்” என்று புன்னகை செய்தாள் ராதிகா. “எத்தனை விதமான அனுபவங்கள் மேடம்” என்றான் அவன். “நீங்க உட்கார்ந்திருக்கீஙுகளே. அந்த இடத்தில்…” என்று அவளைப் பார்த்தான். “ஒரு பிணம். வீட்டில் மிதந்துக் கிட்டிருந்தது. ஏத்திக்கிட்டு கரை ஒதுக்கினோம்.” “இந்தப் படகு எல்லாம் இந்த அழிவுக்குப் பத்தாது” என்றாள் ராதிகா. “வெளிய இருந்து உதவி வரும் வரை காத்திருக்க முடியாது மேடம்” என்றான் ஒரு இளைஞன். ராதிகா அதை ஆமோதித்துத் தலையாட்டினாள். எங்கும் எங்கெங்கும் வெள்ளப் படுகை. தூரம் வரை எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை. சில தனி வீடுகள் மூழ்கியே கிடந்தன. தெருவிலும், வீடுகளின் போர்டிகோவிலும் கார்கள், டூ வீலர்கள் முழுக்கவே முங்கி நின்றன. மினசாரம் இல்லை. தெருவின் இந்த முனையில் புதிய அடுக்ககம் ஒன்று எழும்பிக் கொண்டிருந்தது. நிறைய பீகார்க்காரர்கள் மேல் மாடியில் நின்றிருந்தார்கள். அன்றன்றைக்கு கடையில் சாமான் வாங்கி சமைத்துக் கொள்கிறவர்கள். ராதிகா ஒரு நிமிடம் படகை நிறுத்தச் சொல்லி அவர்களுக்கு சப்பாத்திகள் பொட்டலம் பொட்டலமாக எடுத்துக் கொடுத்தாள். லேசாய் மழை தூறிக் கொண்டிருந்தது. கீழ்த்தளம் வரை வெள்ளம் மூடியிருந்த நிலையில் எல்லாரும் மேலே வந்திருந்தார்கள். ஒரு பீகாரிப்பெண் இடுப்பில் மூக்கு வழிய குழந்தை ஒன்று. அம்மா பொட்டலத்துக்குக் கை நீட்டியபோது குழந்தையும் நீட்டியது.
‘இளைஞர்களும் தண்ணீர் பாக்கெட்டுகள் வைத்திருந்தார்கள். அதை விநியோகித்தார்கள். ஆனால் பீகார்க்காரர்கள் யாரும் அவர்கள் படகில் ஏறிக் கொள்ளவில்லை. வாசல் காம்பவுண்டுச் சுவரைப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் படகில் ஏறிக் கொண்டாள். குளிரில் அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. வெள்ளம் அவளை எங்கிருந்தோ அடித்து வந்திருந்தது. அவளுக்கும் ஒரு பொட்டலம் தந்தாள் ராதிகா. நல்ல பசி போலிருக்கிறது. அப்படியே அவசரமாகப் பிரித்து அவள் தின்ன ஆரம்பித்தாள். நாலு மணி நேரத்தில் எல்லாருக்கும் பசித்து விடுகிறது. உயிர் ஒரு பிரச்னை என்றால், பசி உடனடியான பிரச்னையாகி விடுகிறது. அந்தப் பெரியவர்தான் எதுவுமே பேசாமல் கூட வந்து கொண்டிருந்தார். படகில் போவதே அவருக்கு பயமாய் இருந்திருக்கலாம். படகு இப்படியும் அப்படியுமாய் அசங்கி அசங்கிப் போவது அவரை பயமுறுத்தி யிருக்கலாம். மேம்போக்காய் புன்னகையுடன் நடமாடினாலும் எல்லாருக்கும் உள்ளே பெருங் கவலையும் துக்கமும் இதையிட்டு இருக்கதான் இருக்கிறது. தண்ணீரில் இருந்து கிளம்பி வரும் காற்று சில்லென்றிருந்தது. பழுப்புத் தண்ணீராய் வந்து கொண்டிருந்தது. வெள்ள வேகத்துக்கு அதை எதிர்த்து துடுப்பு போட்டுப் போக முடியாது. அந்தமட்டுக்கு இருபுறமும் வீடுகள் என்ற அளவில் வேலை ஓரளவு எளிதாய் இருந்தது. “தம்பி என்ன பண்றீங்க?” என்று ஒருவனிடம் கேட்டாள் ராதிகா. “விப்ரோ” என்றான் அவன் புன்னகையுடன். “நானும்…” என்றான் அடுத்தவன்.
*
முட்டளவு ஆழம் வந்த மேடான பகுதியில் இறங்கிக் கொண்டாள் ராதிகா. மற்றவர்களும் இறங்கிக் கொண்டார்கள். சற்று தூரத்தில் இரண்டு மூன்று பிணங்கள் வைக்கப் பட்டிருந்தன. அதைப் பார்க்காமல் தாண்டிப் போக முடியவில்லை. கையில் பெரிய பிளாஸ்டிக் பை. உள்ளே உணவுப் பொட்டலங்கள். அவளைப் பார்த்ததும் எங்கிருந்தோ நிறையப் பேர் ஓடி வந்தார்கள். இரவிலேயே அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி யிருக்கலாம். அவர்கள் வீட்டின் நிலைமை எப்படி இருக்கிறதோ? எல்லாரும் ஏரிக்கரை புறம்போக்கு நிலத்து மக்கள் போல் தெரிந்தது. குடிசைகள் எதுவும்  மிச்சம் இருக்குமா என்பதே தெரியவில்லை. ஒரு புன்னகையுடன் இருந்த பொட்டலங்களை விநியோகித்தாள். மேலே மேலே என்று கைகள் பொங்கிய வண்ணம் இருந்தன. அவளிடம் உணவு தீர்ந்து விட்டது. நிறையப் பேர் ஏமாற்றத்துடன் கையை இழுத்துக் கொண்டார்கள். கேட்டவர்களுக்கு உணவு தருவது திருப்தி, என்றுதான் அவள் எடுத்து வந்தது. இல்லாதவர்கள் பல மடங்கு அதிகம் இருந்தார்கள். சட்டென கைப்பையில் இருந்து எடுத்து தன் டிஃபன் பாக்சையும் ஒரு நபருக்குத் தந்திருந்தாள்… என் வீடு, வாசல்… எல்லாவற்றையும் விற்றும் கூட இவர்களின் பிரச்னையைத் தீர்க்க முடியாது, என நினைத்துக் கொண்டாள் அவள். அவளுக்கு வருத்தமாய் இருந்தது. உணவு கொடுத்த திருப்தியை விட, கை நீட்டி கிடைக்காதவர்களின் ஏமாற்றமான முகங்களைப் பார்க்க நேர்ந்ததே அவளுக்கு துக்கமாய் இருந்தது.
நிவாரணங்களும் ஒரு சில பகுதிகளில் அதிகமாகவும், தரைத் தளமே மூழ்கிவிட்ட தன் போன்ற சில பகுதிகளில் இல்லாமலேயே போய் விடுகிறதும் உண்டு. உணவு திகட்டத் திகட்டக் கிடைக்கும், ஓரிரு நாட்கள். பிறகு? அப்படியே அவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டு விடுவார்கள். அவள் பார்க்கிறபோதே நடந்தது. ரொட்டியைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்தான் ஒருவன், “அங்கே பிரிஞ்சு கொடுக்கறாங்கடா…” சட்டென ரொட்டியை அப்படியே தரையில் வீசிவிட்டு ஓடுகிறான் அந்தப் பையன்.
பார்த்த இடம் எல்லாம் வெள்ளக்காடு. மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. சனங்கள் நடந்தோ, டூ வீலரிலோ தடுமாறிப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவன் நாயை அணைத்தபடி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தாள். யாருக்கு யார் ஆதரவு? தன்னை உற்சாகப் படுத்திக் கொள்ள முடியாதபடி எங்கும் பெரும் இறுக்கம் சூழ்ந்திருந்தது. மேலும் மழை வரலாம். மேலும் ஏரிகள் உடைபடலாம். மீட்புப் பணிகள் இன்னும் முடுக்கி விடப்பட வேண்டும். தலையில் மூட்டைகள், சிலர் குழந்தைகளைத் தோளில் தூக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வயதான பெண்மணி முகமே உடலே சுருங்கி நெளி நெளியாய்க் கிடந்தது. கையில் நரம்பு வளையல்கள். சிறிது நின்று சிறிது நடந்து போய்க் கொண்டிருந்தாள். எங்கே போகிறார்கள். அவர்களுக்கே தெரியாது.
இனி அவள் அலுவலகம் செல்ல வேண்டும். நிலவரத்தை ஓரளவு அங்கே போனால்தான் தெரிந்துகொள்ள முடியும். ஆட்டோக்கள் எதிலும் ஊருக்குள் போக முடியாது. யாரும் வண்டி எடுப்பதாய் இல்லை. எல்லாச் சாலைகளும் வெள்ளத்தால் துண்டு பட்டிருந்தன. பஸ் வர நிறையப் பேர் காத்திருந்தாள். பாதிக்கு மேல் அலுவலகம் போகக் காத்திருந்தார்கள். நல்ல உடைகளில் அவர்கள் இருந்தாலும் பேன்ட்கள் பாதியளவுக்கு மேலேயே நனைந்திருந்தன. சிலர் பேன்டடையே மடித்து மேலேற்றி விட்டிருந்தார்கள். மனதுக்குத் திரும்ப வேடிக்கை காட்ட முயன்றாள். முடியவில்லை. பேசாமல் அழுது விட்டால் கூடத் தேவலை என்று இருந்தது. அழுகையும் வரவில்லை. படகுகளில் ஆள் ஆளாய் வந்து இறங்கிக் கொண்டே யிருந்தார்கள். இனி அவர்கள் எங்கே போவார்கள்? அவர்களுக்கே அது தெரியாது.
வாழ்க்கை முட்டுச் சுவரில் முட்டி நிற்கிறது. அலுவலகம் வரை போகிற பஸ் வந்தது. ஓடி ஏறிக் கொண்டாள். ராமலிங்கம் சார் சொல்லியிருந்தார். அலுவலகத்துக்கு உள்ளேயே வெள்ளம் புகுந்து விட்டிருந்தது. திரும்ப மழை வருகிறது. எப்போது பெரு எடுப்பு எடுக்கும், என்று கவலையாய் இருந்தது. பஸ் போகிற வழியெலலாம் தண்ணீர். சில இடங்களில் பஸ் போகிறபோது பஸ் உள்ளேயே அலைபோல் வந்தது தண்ணீர். தண்ணீர் தன் அடுக்ககத்தின் கீழ்த்தளம் கடந்து மேலே வந்திருக்குமா? தெரியவில்லை. எல்லா வழிகளும் அடைக்கப்பட்டாப் போல, இருட்டிக் கிடந்தது மனசின் உள்ளே. யாருமே பாதுகாப்பாக இல்லை. இதில் ஏழை பணக்காரன் கூட இல்லை. சாதி, இன, வர்க்கம் இல்லை. பஸ்சில் ஞாபகமாய் டிக்கெட் எடுத்தாள். இருந்த பதட்டத்தில் மறந்துவிட இருந்தாள். வழியெங்கிலும் மக்கள் அந்த மழையிலும் பரபரப்புடன் எங்கெங்கோ நடமாடிப் போய்க்கொண்டே யிருந்தார்கள். பள்ளிகள் திறந்துவிடப் பட்டிருப்பதைப் பார்த்தாள். பராரிகள் ஈர உடைகளில் நின்றிருந்தார்கள். மாற்று உடைகூட அவர்களிடம் இராது. பாவம்…
பஸ் நிறுத்தம் வந்தது. இறங்கிக் கோண்டாள். அலுவலகத்தை அடைந்தாள். வாசலில் வாச்மேன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். “எப்பிடிம்மா வந்தீங்க?” என்றான். “நீ எப்பிடி வந்தே சிகாமணி?” என்றபடியே பத்து ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினாள். “டீ சாப்பிட்டியா?” அவன் “இல்லம்மா” என்றபடியே வாங்கிக் கொண்டான்.
வெளி முற்றமெங்கும் தண்ணீர். முட்டாழம். சுரிதார் நனைந்து விட்டது. உள்ளே போய் சிறிது நேரம் லிஃப்ட்டுக்குக் காத்திருந்தாள். பிறகுதான் ஞாபகம் வந்தது. மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர்கள் அத்தியாவசியத்துக்கு மட்டுந்தான். மெல்ல மாடியேறினாள். மேஜையில் செய்திகள் வந்து குவிந்து கிடக்கும். வீடியோக்கள் காத்திருக்கும். அதை வைத்து செய்தியறிக்கை தயாரிக்கப் படும். அவள் செய்தி அறிவிப்பாளர். ராமலிங்கம் சார் இருக்கிறாரா தெரியவில்லை. செய்தி ஆசிரியர் மேகநாதன். அரசாங்கத்தின் விளம்பரங்கள் நிறைய வரும் சானல் அது. அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. வரும் செய்திகளில் அரசு சார்பான வார்த்தை யெடுப்புகளுடனேயே அவர்கள் செய்திகளைத் தயார் செய்வார்கள்.
அவற்றை அவள் ஒரு புன்னகையுடன் வாசிப்பாள்.
நாலாவது மாடி. மேலே ஏற மூச்சிறைத்தது. சிறிது நின்றாள். சன்னல் வழியே வெளியே பார்த்தாள். தூர தூரம் வரை நீர் கட்டிக் கிடந்தது நகரம். தெருவெங்கும் வழிந்தோடும் நீர்க் கால்வாய்கள். சன்னல் மேல் கதவில் காகம் ஒன்று நடுங்கியபடி அமர்ந்திருந்தது. அதன் கூடு எங்கே யிருக்கிறதோ தெரியவில்லை. “வந்திட்டியாம்மா? எப்பிடி வந்தே?” என்று பின்னால் இருந்து குரல் கேட்டது. ராமலிங்கம் சார் தான்.
***
courtesy - Ireuvatchi Pongal malar issue 7
storysankar@gmail.com
91 97899 87842


Comments

Popular posts from this blog