Friday, June 24, 2016

நேற்றைய அலைகளின் ஈரம்

(தொட்ட அலை தொடாத அலை 
நாவலின் இரண்டாம் பதிப்பின் முன்னீடு)
பிப்ரவரி 25 முதல் 29, 2016 வரை நாங்கள், சுமார் 60 தமிழ் எழுத்தாளர்கள் கோலாகலமாய் கோலாலம்பூரில் இருந்தோம். மலேஷிய அரசின் ‘இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவு, பிரமதர் துறை’ (SITF) ஏற்பாடு செய்த அளவில், கோலாலம்பூர் மாநகர மன்றமும், ‘நாம்’ அமைப்புமாக எங்கள் அறுபது நூல்களை வெளியிட்டு கௌரவித்தார்கள். கலைஞன் பதிப்பகம் இந்த நூல்களைப் பதிப்பித்தது. கலைஞன் பதிப்பகம் திரு நந்தா அத்தனை நூல்களையும் விரைவாக புத்தக வடிவில் கொணர்ந்தது இன்னொரு வியத்தகு சாதனை. அரசு விருந்தினர் கௌரவம் அதுவும் வேறொரு நாட்டில் யாருக்கு வாய்க்கும்? அதிலும் ஒரு எழுத்தாளனுக்கு, அவன் எழுத்துக்காக வாய்ப்பது என்பது அரிதினும் அரிது. பெரிதினும் பெரிது. ஒரு மாலை நிகழ்வாக மலையக மக்களின் பாரம்பரிய நடனம் உட்பட நாங்கள் சிறப்பாக உபசரிக்கப் பட்டோம். எங்கள் புத்தகங்களை அரசின் துணையமைச்சர் இளைஞர் விளையாட்டுத்துறை, மாண்புமிகு டாக்டர் டத்தோ எம். சரவணன் (படம் 1)  அவர்கள் வெளியிடடார்கள்.
பரஸ்பர அறிமுக உரையாக இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் தமிழிலும் மலாய் மொழியிலும் அடுத்தடுத்துப் பேசியதே கேட்க இனிமையாக இருந்தது!
நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தார்கள். எந்த அளவிலும் எங்களுக்கு வசதிக் குறைவு ஏற்படாமல் கவனித்துக் கொண்ட SITF அமைப்பின் இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் (படம் 2) அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்த. டாக்டர் மணிவாசகம், திரு. நடராஜன் குழுவுக்கும் எனது மதிப்பும் மரியாதையும் நன்றியும் வணக்கங்களும்.
இந்த நூலை மேற்சொன்ன மூவருக்கும் சமர்ப்பணம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன்.
அதேபோல, இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம், மலேஷியா, மலாக்காவின் பிரசித்தி பெற்ற டச்சுக் கோட்டை வளாகத்தில் ஓவியர் ஆல்வினிடம் நடைபாதைக் கடையில் விலைக்கு வாங்கியது.
2
தொட்ட அலை தொடாத அலை, என்கிற இந்த நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தில் பரிசு கிடைத்தது. கிடைக்காமல் போனால் ஆச்சர்யப் பட்டிருப்பேன். மரணத்தை விஸ்தாரமாய்ப் பேசுகிறது நாவல்.
இந்த நாவலில் அதன் கடைசி எல்லை வரை என்னால் எட்டித் தொட்டுப் பார்க்க முடியவில்லை, என்னால் தாள முடியாத அளவில் நான் கனம்சுமந்தேன், என்பதை அப்போதே, நாவல் எழுதி முடித்தபோதே உணர நேரிட்டது. ஆனால் அதில் எனக்கு வருத்தம் இல்லை. சாத்தியப்பட்டதைச் செயவோம், என எழுதி முடித்தேன். நாவலின் இறுதிப் பகுதிகள் என் மனதில் மிகப் பதட்டத்தை, புழுதிப்புயலை உருவாக்கி உள்ளே கொந்தளிக்க வைத்து விட்டன. நாவலை முடித்த பின்னும் ஒரு வார அளவில் நான் இயல்பு நிலைக்கு வரவே முடியாது அவதியுற்றேன். என்னுடைய உடல் நிலையே பாதிக்கப் பட்டதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
முதல் பதிப்பின் பதிப்பாளன் உதயகண்ணன், அவனும் இதையே சொன்னான்.
இதன் விஸ்தரிப்பாக இன்னொரு எடுப்பு எடுக்கலாம்… அப்போது, இந்த நாவலின் பாதி வடிவத்தில் எனக்கு இப்படியாய் ஒரு யோசனை இருந்தது. நாவல் எழுதி முடித்த போது, இதை இறக்கி வைத்ததே பெரும் பாடாக இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
என்றாலும் இதன் அடுத்த கட்டம் என ஒன்றை என் வாழ்க்கையிலேயே நான் சந்திக்க, உணர நேரிட்டது.
அண்ணா கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி. கான்சரில் அகாலமாய் இறந்து போனான் அண்ணா. அவனது கடைசிக் காலங்கள் துயரமானவை. நான் அவனுடன் கழித்த அவனது கடைசிக் காலங்கள். வாழ்க்கை என்னை உழுது போட்டது.
‘கீமோதெரபி’ என முதலில் பதினைந்து நாளுக்கு ஒரு முறை, பிறகு வாரம் ஒரு முறை, வாரம் இருமுறை… என அண்ணா ஆஸ்பத்தரி படிகளைத் திரும்பத் திரும்ப மிதித்துக் கொண்டிருந்தான். பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இனி மருந்துகள் அவனுக்கு உதவா, என மருத்துவர்கள் கைவிட்டார்கள். அவனை மேலும் ஆஸ்பத்திரியில் வைத்துக்கொள்ளக் கூட அவர்கள் சம்மதப் படவில்லை. ஆஸ்பத்திரிக்கு வந்து இற்ந்தோர் எண்ணிக்கையில் இப்படியாய் ஒன்று கூட அவர்கள் விரும்பவில்லை.
வீட்டில் வைத்து அண்ணாவைப் பார்த்துக்கொள்ள வசதிப்படவும் இல்லை. குறிப்பாக அவனது கடைசி நேரங்கள் அவை.
சென்னை மணலி மாத்தூரில் ‘ஜீவோதயா ஹோஸ்பைஸ்’ இருக்கிறது. மதர் தெரேசா வழிவந்த அருமையான செவிலியர் கூடம். புற்று நோய் மாதிரி மீண்டு வர முடியாத நோய்களில் மருத்துவர்கள் கைவிட்ட நோயாளிகளை, அவர்களின் கடைசிநேரம் அன்போடு பராமரித்து அந்த உயிருக்கு மரியாதையுடன் விடை கொடுக்கிற அவர்களின் தொண்டு வார்த்தைக்கு அப்பாற்பட்டு வணக்கத்துக்குரியது.
அண்ணாவை கடைசிக் காலங்களில் அவர்கள் சிறப்பாக வைத்துக் கொண்டார்கள். அந்த மதர், புன்னகை மாறாமல் அந்தச் செவிலியர் செய்த சேவை… என் வாழ்வின் முக்கிய காலகட்டம் அல்லவா அது?
ஆஸ்பத்திரியில் அண்ணாவின் வாழ்க்கை இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தான், என கெடு வைத்தார்கள் அண்ணாவின் மரணத்துக்கு. நாங்கள், குறிப்பாக நான், ஆம்புலன்சில் அண்ணாவை ‘ஜீவோதயா’ அழைத்துப் போகிறேன். ’ஜீவோதயா’வில் அந்தத் தாதி நாடி பார்த்தாள். பார்த்த ஜோரில், “நாடி அடங்க அதிகபட்சம் இன்னும் இரண்டரை நாட்கள்’ என அவள் சொன்னாள்.
அண்ணா இரண்டு நாளுக்குள்ளாகவே இறந்து போனான்.
அந்த செவிலியர் நோயாளியின் கடைசி கட்டத்தை உணர்ந்ததும் மருந்துகளைத் தவிர்க்கிறார்கள். நோயாளி இஷ்டப்பட்டால் அவர்களுக்கு என்ன தேவை என்றாலும் சிரமேற்கொண்டு செய்து தருகிறார்கள். மருத்துவ வசதி உட்பட. என்றாலும், கடைசி நிமிடங்களின் வலி தெரியாமல் அவர்கள், ஒவ்வொரு முறை நோயாளி வலியின் பிடியில் அரற்றும் போதும், ‘பெய்ன் கில்லர்கள்’ ஊசி போட்டு நோயாளியை உறங்கப் பண்ணி விடுகிறார்கள்.
மரணத்தின் அந்த முகூர்த்தக் கணத்தில் வலியின் மூர்க்கம் தெரியாமல் உயிர் பிரிய அவர்கள் எத்தனை உறுதுணையாய் இருக்கிறார்கள்.
என் மனைவியிடம் பேசும் போதே எனக்கு அழுகை வந்தது.. தொட்ட அலை, தொடாத அலை, நாவலின் இரணடாம் பகுதி இது இவளே, என்றேன் நான் என் மனைவியிடம். மரணத்தைத் தானே தனியே ஒருகை பார்க்க ஆவேசமுறுகிறார் சிவக்கொழுந்து. அது நாவலின் கதை. இது கண்முன்னே நாம் பார்க்கிற வாழ்க்கை.
அந்தச் செவிலித்தாய், மதர் சுபீரியர், வலியில் உயிர் போராடுந்தோறும், அவன் தாயாக அவன் காதில் பேசுகிறாள்… அன்றைக்கு பெற்ற தாய், நீ பிறக்கும் போது, இதுதான் ஜனனம், என உனக்குக் காட்டித் தந்தாள். இவள், செவிலித்தாய், இதுதான் மரணம், என உன் கையைப் பிடித்து ஆதுரமாய் அறிவிக்கிறாள்

ஜீவோதயா இருக்கும் திசை நோக்கித் தொழுகிறேன்.
இதை அடுத்த நாவலாக என்னால் எழுத முடியுமா? அதற்கான தெம்பு, திண்ணக்கம் என்னிடம் உள்ளதா?

இவள், என் மனைவி என் கண்ணைத் துடைத்து விட்டாள். அது ஞாபகம் இருக்கிறது.

1 comment:

  1. புற்றுநோயாழ் தாக்கப்பட்டவர்களின் இறுதிக்கணங்கள் வார்த்தைக்கும் வருணனைக்கும் அப்பாற்பட்டவை. என் உறவினரின் தவிப்பை, வலியை அருகில் இருந்து அனுபவித்திருக்கிறேன். எனவே உங்கள் வார்த்தைகளின் கனத்தை உணரமுடிகிறது. ஜீவோதையா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete