---
சொ ல் லி ன்   செ ல் வ ன்

      அன்டன் செகாவ்/ருஷ்யா
      தமிழில் - எஸ். ங்கரநாராயணன்

கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லு¡ரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில் பரவலாக அறியப் பட்டபடி இரு துன்பங்களில் - மோசமான மனைவி மற்றும் போதைப் பழக்கம் - அவர் இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து கல்லறை நோக்கிக் கிளம்பவும், அவருடன் பணியாற்றும் நண்பரான போப்லாவ்ஸ்கி நண்பன் ஒருவனைத் தேடி வாடகைக் கார் ஒன்றில் தாவியேறிப் போனார். கிரிகோரி பெட்ரோவிச் ஜபோய்க்கின் என்கிற அந்த நண்பன் இளைஞனேயானாலும் புகழ் மிக்கவன். மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது - என்னுடைய வாசகர்கள் அவனை அறிவார்கள் - ஜபோய்க்கின் முன்தாயரிப்பே இல்லாமல் கல்யாணங்களிலும், பெருவிழாமேடைகளிலும், இழவு நிகழ்ச்சிகளிலும் உரையாற்ற வல்லவன். து¡க்கமா, காலி வயிறா, மொடாக்குடியா, அட, கடும் காய்ச்சலா... எந்த நிலையிலும் நினைச்சால் அவனால் பேச முடியும். சீராகவும் மென்மையாகவும் வார்த்தைகள், ஏராளமான வார்த்தைகள் அவனிடம் இருந்து வழியும், குழாயில் இருந்து தண்ணீர் போல. அவனது பேச்சகராதியில் நெகிழ்ச்சிகரமாய் எராளமான, உணவு விடுதி ஈக்களைக் காட்டிலும் அதிகப்படியான, வார்த்தைகள் இருந்தன. உணர்வுபூர்வமாக நீண்ட உரையாகவே எப்போதும் பேசினான். அதனால் என்ன ஆகிப் போகுமென்றால், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக சில வியாபாரிகளின் கல்யாணங்களில், அவன் பேச்சை நிறுத்த போலிசை வரவழைக்க வேண்டியதாகிவிடும்.
      'உம்மைத் தேடித்தான் வந்தேன் பெரிய மனுஷா...' போப்லாவ்ஸ்கி அவனது வீட்டில் நுழைந்தார். 'கோட்டும் தொப்பியும் போட்டுக்கோ. உடனே கிளம்பு. நம்மாள் ஒருத்தர் இறந்துட்டார். அந்தாளை மேலுலகத்துக்கு அனுப்பிட்டிருக்கோம். அவரை வழியனுப்ப நீயும் உன்னாலான உபசாரம் செய்யணும்... கூட்டத்தில் எங்க நம்பிக்கை நட்சத்திரமே நீதான். ஆள் ஏப்ப சாப்பையா இருந்தா உன்னைக் கூப்பிடற அளவுக்குப் பெரிய விஷயமா இராது. ஆனா பாரு... நம்ம செயலாளர் சாமி. ஒருவகையில் எங்க அலுவலகத்துத் து¡ண் மாதிரி. அத்தாம் பெரியாளை ஒரு நாலுவார்த்தை இல்லாம அடக்கம் செய்தா அசிங்கம் இல்லியா?'
      'ஓ செயலாளரா...' என வாயைப் பிளந்தான் ஜபோய்க்கின். 'விடாக் குடியன்... அவரா?'
      'ஆமாம். நொறுக்குத் தீனி, மதியச் சாப்பாடு எல்லாம் உனக்குக் கிடைக்கும்.... வாடகைக்கார் செலவும் பாத்துக்குவோம். கிளம்பு அருமைப் பையா. வழக்கமான கல்லறை உரைபோல வந்து அடிச்சி நொறுக்கு.... ஊரே மூக்குல வெரல் வைக்கப் போறாங்க.'
      ஜபோய்க்கின் உடனே ஒத்துக் கொண்டான். தலையைச் சரி செய்தான். முகத்தில் சிறிது பவுடர் பூச்சு. போப்லாவ்ஸ்கியுடன் தெருவில் இறங்கி நடந்தான்.
      'உங்க செயலாளர்... எனக்குத் தெரியும் அவரை...' காரில் ஏறியபடி அவன் சொன்னான். 'உள்ளொண்ணு வெச்சி வெளியே வேற மாதிரிப் பேசுவான். ரெளடிப்பயல். மிருகஜாதி... சொர்க்கவாசல் திறக்கட்டும் அவனுக்கு - அவனை மாதிரியாளுங்களை சாதாரணமா பாக்கவே முடியாது.'
      'பாருப்பா, செத்தவர்களைத் திட்டுறது சரியில்லை...'
      'ஆமாமா. செத்தவங்களை முடிஞ்சா பாராட்டு, இல்லியா விட்ரு...ன்னு வசனம். ஆனாக்கூட.... அவன் அயோக்கியனய்யா.'
      இறுதி ஊர்வலத்தை எட்டிக் கடந்து அத்தோடு இணைந்து கொண்டார்கள். சவப்பெட்டி மெதுவாக வந்து கொண்டிருந்தது. பெட்டி கல்லறைக்கு வந்து சேர்வதற்குள் மூன்று முறை அவர்கள் - இறந்தவனின் ஆரோக்கியத்துக்காக என்றபடி - 'தாகசாந்தி' செய்து கொண்டார்கள்.
      ஊர்வலம் கல்லறை அருகே வந்தது. மாமியாரும், சம்சாரமும், மைத்துனி ஒருத்தியும் சம்பிரதாயப்படி கதறி அழுதார்கள். சவப்பெட்டி குழிக்குள் இறக்கப்பட்டபோது சம்சாரம், 'நானும் போயிர்றேன்...' என கீச்சிட்டாள். ஆனால் போகவில்லை. ஓய்வூதியப் பணம் நினைவு வந்திருக்கக் கூடும். ஜபோய்க்கின் எல்லா சமாச்சாரமும் அடங்கட்டும் எனக் காத்திருந்துவிட்டு, முன்னால் வந்து நின்று, வந்திருந்த எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆரம்பித்தான்.
      'என் கண்களையே, காதுகளையே நம்புவதா வேணாமா? இந்தக் கல்லறை, இந்த அழுதுசிவந்த முகங்கள், இந்த முனகல்கள், இந்தத் துயரங்கள்... எல்லாம் கொடூரமான கனவுதானே? ஆ - இது கனவு அல்ல. நம் கண்கள் நம்மை ஏமாற்றவும் இல்லை... சற்று முன்வரைகூட நாம் பார்த்தவர், மகா துணிச்சல்கார மனிதர், இளமைப் புத்துயிர்ப்பும் து¡ய்மையுமானவர், ஒரு தேனிபோல அபார சுறுசுறுப்புடன் நமது சமுதாயம் என்னும் தேன்கூட்டுக்காகப் பாடுபட்டவர்... மேலும்... ஆ அவர் இப்போது மண்ணோடு து¡சியாகிப் போய்விட்டார். மாயக் கானல்நீராகிப் போனார். மீளமுடியாத மரணத்தின் கொடூரக் கரம் அவர் மேல் விழுந்து விட்டது. தொண்டுகிழ வயோதிகத்திலும் அவர் உற்சாகமும் பலமும் கொண்டிருந்தார்... சாவு பற்றி நினைக்கவே இல்லை. ஈடு செய்யவே முடியாத இழப்பு இது! அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வல்லார் யார்? அரசுப் பணியாளர்களில் நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் புரோகோஃபி ஒசிபிச் தனித்தன்மைக்காரர். சுத்த சுயம்பு. தன் நேர்மையான பணியில் அவர் அடிமனதின் ஆழத்தில் இருந்து செயல்பட்டார். இரவு வெகுநேரம்வரை கூட அவர் அயராமல் பணிபுரிந்தார். ஆனாலும் ஆரோக்கியம் கெடாமல் இருந்தார். லஞ்ச லாவண்யங்களை அவர் சட்டை செய்ததும் இல்லை. ஆர்வப் பட்டதும் இல்லை. லஞ்சம் வாங்க அவரைத் து¡ண்டியவர்களை அவர் எத்தனை வெறுத்தார். சிறு சிறு லெளகிகக் கையூட்டுகளால் தமது கடமைக்கு துரோகம் செய்ய அவரை இழுத்த நபர்களை அவர் ஒதுக்கினார். ஆமாமாம், நம்ம கண்ணு முன்னாடியே புரோகோஃபி ஒசிபிச் தமது சிறு மாத ஊதியத்தை, தம்மிலும் ஏழைபாழையான தம் அலுவலகப் பணியாளர்களோடு பகிர்ந்து கொண்டார். அவருடைய உதவி உபகாரத்தில் வாழ்ந்த அனாதைகளின், விதவைகளின் ஆழ்ந்த துக்கக் குரல்களை இப்போது நீங்களே கேட்டீர்கள். தமது அலுவலகக் கடமையிலும் வேலையின் சிரத்தை மிகுதியிலும் அவர் தன் வாழ்வின் இன்பங்களையே ரெண்டாம் பட்சமாக்கினார். இல்வாழ்க்கையையே அவர் துறந்தார். உங்க எல்லாருக்குமே தெரியும்- தன் கடைசி நாள்வரை அவர் பிரம்மச்சாரி. ஆ தொழிற்சங்கத் தோழராக அவரை நிரப்ப யார் இருக்கிறார்கள்? சவரம் செய்த அன்பான அவரது முகம்... அதன் மெல்லிய முறுவல்... இப்போதும் மனசால் நான் பார்க்க முடிகிறது. மிருதுவான சிநேகபூர்வமான அவரது குரல்... என்னால் கேட்க முடிகிறது. உங்க ஆத்மா சாந்தியடைக, புரோகோஃபி ஒசிபிச்... நேர்மையாளரே... புனிதமானவரே... உழைப்பாளரே...'
      ஜபோய்க்கின் தொடர்ந்து பேசினான். ஆனால் கூட்டத்தில் ஜனங்கள் தங்களுக்குள் குசுகுசுக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாரையும் அவனது உரை திருப்திப் படுத்தவே செய்தது.  சிலர் கொஞ்சம்போல அழக்கூட செய்தார்கள். ஆனால் அந்த உரை பலவிதங்களில் விசித்திரமாய் இருந்தது அவர்களுக்கு. முதல் விஷயம், இறந்து போனவரை பேச்சாளர் ஏன் புரோகோஃபி ஒசிபிச் என்று குறிப்பிட வேண்டும்? மரித்தவர் கிரில் இவனோவிச் அல்லவா? ரெண்டாவது, தொட்டுத் தாலி கட்டிய சம்சாரத்தோடு அவர் காலம்பூராவும் காள்பூளென்று கத்திக் கொண்டிருந்தார்... அவரை பிரம்மச்சாரி என்று எப்படிச் சொல்வ முடியும்? மூணாவது, அவருக்கு செமத்தியான சிவப்பில் தாடி உண்டு. அதை அவர் எடுத்ததாக சரித்திரமே கிடையாது. ஆக ஒருத்தருக்கும் பேச்சாளர் சொன்ன, சவரம் எடுத்த முகம்... என்ற அடையாளம் விளங்கவில்லை. எல்லாரும் மண்டையைப் பிய்ச்சிக் கிட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் பாத்துக் கிட்டு, தோளைக் குலுக்கிக் கொண்டார்கள்.
      'புரோகோஃபி ஒசிபிச்...' பேச்சாளன் தொடர்ந்தான். கல்லறையைப் பார்த்துக்கொண்டே அழுத்தமான பாதிப்புடன் பேசினான். 'துப்புரவான, எதையும் வெளிக்காட்டாத முகம். நீங்கள் பிடிவாதமான கண்டிப்புடன் செயல்பட்டீர்கள். ஆனால் எங்க எல்லாருக்குமே தெரியும்... வெளிப் பார்வைக்கு எப்பிடி இருந்தாலும், உங்களுக்குள்ள இருந்தது நேர்மை தவறாத, சிநேகபூர்வமான அந்த இதயம்.'
      கொஞ்ச நேரத்தில் அந்தப் பேச்சில் மாத்திரம் அல்ல, பேச்சாளனிடத்திலேயே ஏதோ கோளாறு என ஜனங்கள் உணர்ந்தார்கள். ஓர் இடத்தில் அவன் குறிப்பாய்ப் பார்த்... லேசா அதிர்ந்து... அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டான். அந்தமேனிக்குப் பேச்சையே நிறுத்தி விட்டான். திக்குமுக்கிக்கிட்டு திரும்பி போப்லோவ்ஸ்கியைப் பார்த்தான்.
      'அட அந்தாளு இருக்காருய்யா...' என்றான் திகிலடிச்சிப்போய்.
      'யாரு இருக்காருன்றே?'
      'ஏன்? புரோகோஃபி ஒசிபிச்... அந்தா நிக்கிறாரு. அந்த கல்வெட்டு பக்கத்தில்...'
      'அவரு சாகவே இல்ல. கிரில் இவானோவிச்தான் செத்திட்டாரு...'
      'கிரில் இவானோவிச்தான் எங்க செயலாளர். நீ போட்டுக் கலக்கிட்டியே எல்லாத்தையும் பேமானி. புரோகோஃபி ஒசிபிச்சும் முன்ன எங்க செயலாளரா இருந்தவரு. அது நிஜம்தான். ஆனா ரெண்டு வருஷம் முன்ன அவர் தலைமை குமாஸ்தாவா செகண்ட் டிவிஷனுக்குப் போயிட்டாரு.'
      'ஐய சாத்தானே நான் இப்ப என்ன பேச?'
      'நீ ஏன் நிறுத்தறே? நீ பேசு. விவகாரம் அசிங்கமாயிரும்ல...'
      ஜபோய்க்கின் கல்லறைப் பக்கம் திரும்பிக் கொண்டான். தொடர்ந்து அவன் விட்ட இடத்தில் இருந்து பேச்சை எடுத்தான். புரோகோஃபி ஒசிபிச் என்ற, மழுங்க சவரம் எடுத்த முகத்தார், அந்தப் பழைய குமாஸ்தா வாஸ்தவத்தில் அந்த இடத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டின் அருகில் நின்றிருந்தார். பேச்சாளனைப் பார்த்து அவர் ஆத்திரத்துடன் உருமினார்.
      அவரது சக ஊழியர்கள் 'வசம்மா மாட்டிக்கினியாக்கும்' என்கிற தினுசில் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள். எல்லாரும் ஜபோய்க்கின்னுடன் சடங்குகள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். 'ஒராள உயிரோட புதைச்சாச்சி!'
      'கடுப்படிச்சிட்டியே தம்பி' என்று முணுமுணுத்தார் புரோகோஃபி ஒசிபிச். 'செத்தவனைப் பத்தி நீ அப்பிடிச் சொல்றது சரிதான். ஆனா உசிரோட இருக்கிறவன் அப்பிடி இருக்கறதாச் சொன்னா குசும்புக்கார கிண்டல்தான் அது. என்னத்தை நீ சொல்லிட்டிருந்தே? லஞ்சம் வாங்க மாட்டார். அவருகிட்ட லஞ்சத்தை நீட்ட முடியாது. லஞ்சம் வாங்க இஷ்டப்படாதவர்... எவனையாவது போட்டுத் தாளிக்கணும்னா, அப்பிடிச் சொல்றதுதான். யாராவது உன்ட்ட என் முகத்தை விவரிக்கச் சொன்னாங்களா? துப்புரவான, உணர்ச்சி தெறிக்காத... அட இருந்துட்டுப் போட்டும்யா. நான் பொறுமைசாலின்னு எல்லார் முன்னாடியும் சொல்லி அவமானப் படுத்திட்டியே...'

---

THE ORATOR by Anton Chekhov

Comments

  1. இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்திருப்பதாக நினைப்பு. தமிழில் படிக்கும்போது சுவையாக இருக்கிறது. இங்கே நியூயார்க்கில் ஒவ்வொரு வசந்தகாலத்திலும் சென்ட்ரல் பார்க்கில் திறந்தவெளியில் ஷேக்ஸ்பியர்நா டகங்கள் நடப்பது வழக்கம். ஒருமுறை ஆன்டன் செகாவின் இரண்டு கதைகளை நாடகமாக்கியிருந்த து நினைவுக்கு வருகிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog