நன்றி - பேசும் புதிய சக்தி - அக். 2016
கப்பல்

எஸ். சங்கரநாராயணன்

த்தினத்துக்கு அப்பாவைப் பிடிக்காது. அவர்கள் அப்பாவழி வந்தவீட்டையும் அவன் பிறக்குமுன்பே விற்றுத் தீர்த்துவிட்டிருந்தார் கணபதி. ஊதாரி. அத்தோடு குடிப்பழக்கமும் இருந்தது அவரிடம். வாழ்க்கை என்பது பாடுபட வேண்டிய ஒன்று அல்ல. அனுபவிக்க வேண்டியது அது. நல்லா பாட்டெடுப்பார் அவர். வீட்டுத் திண்ணையில்தான் வாசம். ரத்தினத்துக்கு நினைவு புரிபட ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவன் அப்பாவிடம் கண்டிப்பு காட்டினான். ஊர்ல நாலு பேர் பாத்தா சிரப்பாங்கடா, என்கிற அம்மாவின் எதிர்ப்பையும் மீறிச் சொல்லிவிட்டான். “இனி அப்பா வாசல் திண்ணையிலேயே தங்கிக்கிறட்டும். வீட்டுக்குள்ள வரப்டாது” என்றான். சின்னப்பையன். அப்போது அவனுக்கு வயது பத்துப் பதினொன்று இருக்கும். தினசரி கண்மணி அண்ணனுடன் எலட்ரி வேலைக்குப் போனான். கண்மணி அண்ணன் “குடிக்க தண்ணீர் கொண்டு வாடா” என்பதை “வாட்டர்ஃப்ரூப் எடுத்துவா” என்று சொல்லும். “எழுந்திருடா” என்பதையே கூட  “கெட் அப் ஏர்லி இன் தி மானிங்” என்பான் அண்ணன்.
கணபதியை யாராலும் மாற்ற முடியவில்லை. தண்ணி போட்டாக வேண்டும் தினசரி அவருக்கு. யாரையாவது பிடித்து எப்பாடு பட்டாவது தண்ணி வாங்கி வாயில் ஊற்றிக்கொண்டு வீட்டைநோக்கித் தள்ளாடி வரும் நடையில் ஒரு பெருமிதம் காணும். வீட்டில் அம்மா, அவன், அவனுக்குப் பின்னால் ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள். தனம் மற்றும் கௌரி. மூணு பிள்ளை பெத்தும் அவருக்குப் பொறுப்பு வரவில்லை. இந்த மனுசனுடன் அம்மாதான் எப்பிடி மனம் ஒப்பி மூணு பெத்தாள்? அதுவே புதிர்தான்.
அதையெல்லாம் யோசிக்கிற வயது இல்லை அப்போது. வீட்டின் கஷ்டம் பார்த்து அவனே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு என்று வெளியிறங்கினான். படிச்ச படிப்புக்கும் அந்த வயசுக்கும் என்ன கிடைத்துவிடும்? கண்மணி, அவனுக்கே வருமானம் தொட்டுக்கோ துடைச்சிக்கோ தான். ஆனால் நல்ல அண்ணன். தனக்கு இருக்குதோ இல்லையோ அவனுக்கு வயிறாரச் சோறு போட்டுவிடும். அவன் அப்பாவுக்கே இது தோணல்லியே? முன்னெல்லாம் தங்கச்சிகளை, அம்மாவை விட்டுவிட்டுச் சாப்பிட யோசனையாய் இருந்தது ரத்தினத்துக்கு. ஆனால் கண்மணி அண்ணன் எடுத்துச் சொன்னான். “உனக்கு உடம்புல தெம்பு இருந்தாதானடா நீ வேலை செய்ய முடியும்? வால் இருந்தாதானே ஆர்ட் பண்ண முடியும்?” என்றான் அண்ணன். வால் இருந்தாதானே ஆட்ட முடியும், என்று சொல்கிறானா தெரியவில்லை.
வேலைசெய்யும் இடத்திலேயே கணபதி வந்து பையனிடம் குடிக்க காசுகேட்டதும் உண்டு. குடி பெரும் அவமானங்களையும் அலட்சியம் செய்யவைத்து விடுகிறது. அப்பனைக் கல்லால் அடித்திருக்கிறான் ரத்தினம். இது குறித்து அவனுக்கு வருத்தம் கிடையாது. அவன் என் அப்பா அல்ல… என்று தனக்குள் மூச்சிறைக்கச் சொல்லிக்கொண்டான். என்ன கேவலமாய் வாழ்கிறான் இவன்? வெட்கம் இல்லாமல் குடித்துவிட்டுத் தெருவில் விழுந்து புரள்கிறான். பசித்தால் வீடு வந்து அம்மாவைச் சோறுகேட்டு மிரட்டுகிறான். அம்மா நாலைந்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க என்று சிறு வேலைகள் செய்கிறாள். அங்கேயும் வந்துவந்து நின்றான் கணபதி. அவள் வேலையை முடித்துவிட்டு தெருவில் இறங்கினால் கூடவே வருகிறான். காசு தராமல் அவளை அவன் விடுவது இல்லை. அம்மாவும் எதனால் அவனிடம் ஏமாறுகிறாள் தெரியவில்லை. யாரிடமும் காசைக் ‘கறக்கிற’ வித்தை கணபதிக்குத் தெரிந்திருக்கிறது.
அத்தனை வசதியான வீடும் அல்ல அது. அவர்கள் அத்தனை பேரும் அந்த ஒரு அறையில்தான் ஒண்டிக்கொள்ள வேண்டியிருந்தது. தனியே சிறு சமையல் அறை. அத்தோடு ஒட்டிய குளியல்கழிவறை. இந்த வாடகைக்கே மூச்சு முட்டுகிறது. இதில் எப்படி அப்பாவும் அம்மாவும் மூணு குழந்தைகள் பெற்றார்கள், (ஒரு அபார்ஷன் வேறு. அதுவே கலைந்துவிட்டது.) என்று ஆச்சர்யமாய் இருந்தது அவனுக்கு. சின்ன வயசில் பிள்ளைகள் அப்படியொரு தூக்கம் தூங்குகிறார்கள். தனம் பிறந்த காலம் வேறு.
இப்போது தனம் நாலாப்பு படிக்கிறாள். கௌரி ஒண்ணாவது. பிள்ளைங்களுக்குப் பள்ளிக்கூடச் செலவுக்குக் கூட கணபதி மெனக்கிட்டது கிடையாது. அரசாங்கப் பள்ளி. இலவசக் கல்வி. சீருடை. மதிய உணவு. மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்… என்பது அவரது சித்தாந்தம். பழைய காலத்துப் பாடல்களாய், “வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே…” வெளித் திண்ணையில் இருந்து பாட்டுப்பாட்டாய் எடுத்துவிடுவார் ராத்திரிகளில். பௌர்ணமி இரவுகள் இன்னும் விசேஷம். பைத்தியமாகவே ஆகிவிடுவார் அவர்.
கௌரி பிறந்தபோது தர்மாஸ்பத்திரிக்குப் போய் அவன் பார்க்கவே இல்லை. பக்கத்து வீட்டு ராமலெட்சமி மாமிதான் கூட இருந்தாள். அவனுக்குப் போய்ப்பார்க்க வெட்கமாய் இருந்தது. அவனுக்கும் அவளுக்கும் பத்துப்பதினாலு வயசு வித்தியாசம். நாலுநாள் கழித்து அம்மா வீட்டுக்கு வந்தாள். அவன் தயங்கியபடி நின்றான். அம்மா சிரிப்புடன் அவனிடம் குழந்தையைக் காட்டினாள். ஓவென்று அழுகை வந்துவிட்டது. எதற்காக அழுதான் தெரியவில்லை. அப்புறம் கோபமாய் அம்மாவிடம் கத்தினான். “என் சிநேகிதாள்லா சிரிக்கிறாங்கம்மா” என்றான். “எதுக்குடா?” என்றாள் அம்மா புரியாமல். ரத்தினம் அம்மாவையே பார்த்தான். இவளிடம் பேச முடியுமா? மேலும் என்ன பேச என்றே நடுக்கமாய் இருந்தது. இதெல்லாம் அம்மாவும் பிள்ளையும் பேசிக்கொள்கிற பேச்சா, என்றிருந்தது.
“அப்பாவை இனிமே வாசல் திண்ணையிலேயே தான் இருக்கச் சொல்லணும்மா சொல்லிட்டேன்…” என்றான். அவன் நெஞ்சு ஏறியேறி இறங்கியது. அப்பா எங்கோ வெளியே போயிருந்தார். சாமியாடி வீட்டில் சீட்டாடிக் கொண்டிருப்பார். சுப்ரமணிய சாமி கோவில் வெளி பிராகாரத்தில் காலாட்டியபடி உட்கார்ந்து கொண்டிருப்பார். காவி வேட்டி ஒண்ணு எப்படியோ தேற்றியிருந்தார். கோவில் நுழைவாயிலில் பிறையில் சிந்திக்கிடந்தது திருநீறு. அள்ளி செமையாய்ப் பூசிக்கொண்டு பிராகாரத்தில் வெறுமனே உட்கார்ந்தால் கூட சில சமயம் யாராவது அஞ்சோ பத்தோ போடுகிறார்கள். குடிக்க ஆச்சி. அன்னிக்கு ஒருத்தன் கணபதியிடமே பத்து ரூபாய் போட்டுவிட்டு, “குழந்தை இல்லை சாமி” என்கிறான். ஆசிர்வதிக்க நல்ல ஆளைத்தான் தேடி வந்திருக்கிறான். சிரிப்பு வரவில்லை. ஆத்திரமாய் வந்தன அப்பாவின் செயல்கள். தான், தன் வயிறு, தன் சுகம்… இதைத் தவிர கணபதியிடம் வேறு யோசனையே இல்லை.
ஒரு இரவில் அவன் கண்மணி அண்ணனுடன் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்ப நேரமாகி விட்டது. ஒரு புது பில்டிங்கில் வயரிங் வேலை முழுசுமாய் அண்ணன் எடுத்துச் செய்தான். கொஞ்சம் தள்ளி ரயிலில் போய்வந்தார்கள். வீடு கட்டுகிறவர் ஒரு ஆசிரியர். நல்லா தன்மையாய்ப் பேசிப் பழகினார் வைகுண்டம் சார். வேலை முடித்து வீடு திரும்ப நேரமாகி விட்டது. கௌரி அவன் கிளம்பும்போது அழுது கொண்டிருந்தாள். அவன் சமாதானப் படுத்திவிட்டு “வரும்போது அண்ணன் உனக்கு நெய் பிஸ்கெட் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லியிருந்தான். உண்மையில் அதை மறந்திருந்தான். ஆனாலும் ரயில்வண்டியில் வீடு திரும்புகையில் நெய் பிஸ்கெட் விற்று வந்தார்கள். ஞாபகமாய் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான். நேரமாகி விட்டது. கௌரி தூங்கி யிருப்பாள் என்று இருந்தது.
வீட்டுக்கு வந்தால், வீடு உள்ளே தாளிட்டிருந்தது. வாசல் திண்ணையில் அப்பா இல்லை. சரி. அப்பா வீடு திரும்பவில்லை, என்று நினைத்தபடி தடதடவென்று கதவைத் தட்டினான். உள்ளே விநோதமான சரசரப்புகள் கேட்டன. அம்மாதான் எழுந்துவந்து கதவைத் திறந்தாள். அவள் கண்ணில் தூக்கம் இல்லை. “என்னம்மா? கதவைத் தாளிட்டீங்களா?” என்று கேட்டான். அம்மா திகைத்த மாதிரி இருந்தது. அம்மா பின்னால் இருந்து கணபதி வந்தார். அவனுக்கு ஆத்திரமாய் வந்தது. “இவரை உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல அம்மா?” என்று கத்தினான். “தண்ணி குடிக்க வந்தேன்” என்றார் கணபதி. வெளியே போனார். அவர் அவமானப் பட்டதாகத் தெரியவில்லை. போய்த் திண்ணையில் படுத்துக்கொண்டார். “நீ சாப்பிட வா” என்றாள் அம்மா. அவன் “பசியில்லை” என்று படுத்துக் கொண்டவன் திரும்ப எழுந்தான். சமையல் கட்டுக்குப் போனான். தானே போட்டுக் கொள்ளப் போகிறானா? ஒரு செம்பில் குடி தண்ணீர் முக்கி யெடுத்தான். பசி என்று தண்ணி குடிக்கப் போகிறானா? போய் வாசல் திண்ணையில் நங்கென்று செம்பை வைத்துவிட்டு உள்ளே வந்தான் அவன். படுத்துக்கொண்டான். திரும்ப எழுந்தான். போய்க் கதவை உள்ளே தாளிட்டான். கௌரி ஓரமாய் வாயில் விரல் சப்பித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை அணைத்தபடி படுத்துக்கொண்டான். ஏனோ இப்பவும் ஆத்திரத்தையும் மீறி அழுகை வந்தது. வாசலில் பாட்டு. “வதனமோ சந்திரபிம்பமோ…” அப்பாவுக்கு நல்ல குரல். அவர் நினைத்ததை நிறைவேற்றி முடித்திருக்கலாம்.
ஆனால் அவனது கண்டிப்பைப் பார்த்து அம்மாவே நடுங்கினாள். வயசுக்கு வந்த பிள்ளை. இப்ப வயசு பதினேழு பதினெட்டு இருக்குமே. ஒரளவு தனி எலட்ரி வேலைகளுக்கும் சைக்கிளில் போய்வருகிறான். இராத்திரி தங்கள் வீட்டில் ஃபியூஸ் போனால் யாராவது வீட்டுக்குத் தேடி வருகிறார்கள். மோட்டார் எடுக்கல்ல. ஏர் பிளாக் ஆயிட்டது… என்றெல்லாம் பிளம்பிங் வேலைகளும் தேடி வந்தன. தனியே ஒரு சாக்குப் பையில் ரிப்பேர் சாமான்கள், இன்சுலேஷன் டேப், சொலுஷன் எல்லாம் வைத்திருந்தான் ரத்தினம். ஆளும் இப்போது மீசையெடுத்து கம்பீரமாய் இருந்தான். அம்மாவுக்கு அவன் பொறுப்பாய் இருப்பதில் ஒரு பெருமை. இந்த மனுசன் இப்பிடி இருக்கிறதுக்கு பிள்ளை தலையெடுத்துதான் நம்ம குடும்பம் லிபி மாறணும், என நினைத்தாள் ஈஸ்வரி.
அப்பாவும் கட்டுப்பட்டிருந்தார். அவரது ஆட்டம் கொஞ்சம் அடங்கி யிருந்தாப் போலிருந்தது. திண்ணையே அவரது வாசம். குளிக்க கழிய என்றுகூட அவர் வீட்டுக்குள் வரக் கூடாது. ரத்தினத்தின் கட்டளை அது. கோவில்குளத்தில் குளிக்கலாம். வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கலாம். அதெல்லாம் அவர் பாடு… வீடு அவருடையது அல்ல. வீட்டுக்காக அவர் துரும்பைக்கூட நகர்த்தியது கிடையாது. “அம்மா அவன்அப்பாவிடம் இப்படி இரக்கம் காட்டுவது வேண்டவே வேண்டாம். அப்பாவா, அவனா?... அவள் முடிவு செய்யட்டும்.” அவன்போட்ட போடு வேலைசெய்கிறாப் போலத்தான் இருந்தது. அப்பா வீட்டுப்பக்கமே ரெணடுநாள் மூணுநாள் வரமாட்டார். வேறு ஊர் என்று எங்காவது கிளம்பிப் போவார். அவர் வந்தால் திண்ணைதான் கதி. அம்மா ஒரு செம்பில் குடிக்க தண்ணிர் வைப்பாள். மனைவியாக அவளது கடமை அது. அதை அவள் செய்யட்டும், என அவன் தடுக்கவில்லை.
தன்முனைப்பிலேயே ரத்தினம் கையில் காசு புரள ஆரம்பித்திருந்தது. அதனாலும் ஈஸ்வரி பையன் பேச்சைக் கேட்டிருக்கலாம். அதை இழக்க அவள் விரும்பாமலும் இருக்கலாம். ஒருதடவை பட்டணம் போயிருந்தான் ரத்தினம். கண்மணி அண்ணனுடன் பெரிய கான்ட்ராக்ட் வேலை. அவர்கள் எல்லை மெல்ல விரிந்தாப் போலிருந்தது. ஒருமணி ஒண்ணரைமணி நேரம் பஸ்சில் போய் இறங்கி தினசரி வேலை. ராத்திரி வீடு திரும்பிவிடலாம். எத்தனை மணிக்கு வீடு திரும்ப முடியும் தெரியாது. சிலநாள் சீக்கிரம் திரும்பி விடுவான். சிலநாள் வரும்போது மணி பதினொண்ணு பன்னிரெண்டு ஆகிவிடும். என்றாலும், அப்பா திண்ணையில் இருக்கமாட்டார் என்றால் வீட்டுக்கு வந்திருக்க மாட்டார். இருந்தால் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார். கவனமாய்ப் பார்ப்பான். அவர் பக்கத்தில் திண்ணை மூலையில்… இருந்தது. ஒரு செம்புத் தண்ணீர். அம்மா உஷார்தான். சொன்னபடி கேட்கிறாள் என்றிருந்தது.
அவன் வீட்டில் எல்லாருக்குமே பட்டணத்தில் இருந்து புதுத் துணி வாங்கி வந்தான். அம்மாவின் சேலை ரொம்பப் பழசாய் இருந்தது. ஒருகாலத்தில் அது புதுசாய் இருந்திருக்கும் என்றே நம்ப முடியாமல் இருந்தது. அம்மாவுக்கு என்று எடுத்ததும் தங்கச்சிகள் ஞாபகம் வந்தது. தங்கச்சிகளுக்கு புது உடை எடுத்துத் தருவதில் தனி குதூகலம் அவனுக்கு. கௌரிக்குதான் அண்ணனையிட்டு அத்தனை பாசம். பெருமிதம். இவளைத்தான் பிறந்தபோது ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்க்கமாட்டேன் என்றேன் நான்… அவனுக்கு லேசான வெட்கம் ஏற்பட்டது.
எல்லாருக்கும் புதுத் துணி வாங்கி வந்திருந்ததை எடுத்துக் காண்பித்தான். அண்ணா, என்று கிட்டே வந்து முத்தம் தந்தாள் தனம். அவளுக்கு மயில்கண் பாவாடை. அந்த நிறம் அவளுக்கு அம்சமாய் இருக்கும், என்று அவனே யூகித்தான். இப்பவே போட்டுப் பாக்கறேன், என தனம் அவசரப்பட்டாள். காலைல வெளிச்சம் வரட்டுண்டி, என்ன அவசரம் உனக்கு? “காலைல சீக்கிரமே நீ போயிருவியே அண்ணா” என்றாள் அவள் சாமர்த்தியமாய். செல்லமாய் அவள் தலையில் குட்டினான் ரத்தினம். வாசலில் இருந்து கணபதி எட்டிப் பார்த்தார். அவன் திரும்பி அப்பாவைப் பார்த்தான். அவருக்கும் ஒரு வேஷ்டி சட்டை வாங்கியிருந்தான். அதை அவரிடம் நீட்டினான். திண்ணையில் இருந்தே வாங்கிக் கொண்டார் அவர். அவனுக்குப் பாவமாய் இருந்தது. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அந்த பள்ளிக்கூட வாத்தியார், ரயிலில் போய் வேலை செய்துவிட்டு வந்தார்களே? அவர்கள் வீட்டுக்கு சிறு ரிப்பேர் வேலை என்று அழைத்தார்கள். கண்மணியுடன் அவனும் போயிருந்தான். வீடு கிரகப்பிரவேசம் ஆகி இப்போது புழக்கத்தில் இருந்தது. அவனைப் பார்த்ததில் சாருக்கு ரொம்ப சந்தோஷம். “என்னப்பா இப்படி படிப்பை நிறுத்திட்டே?… படிக்கணும்ப்பா” என்றார். மையமாய்ச் சிரித்தான். “இப்ப கூட, நீ பிரைவேட்டா எசெல்சி எழுதலாம்ப்பா.” அவனுக்கு சட்டென்று விளக்கேற்றிக் கொண்டாப் போலிருந்தது. “நிஜம்மாவா சார்?” என்றான் கண்மின்ன. “நீ படிக்கறதானால் சொல்லு. நானே உனக்கு டியூஷன் எடுக்கறேன்… என்ன நீ வந்து போகணும்.” கண்மணிக்கு ரொம்ப சந்தோஷம் அதில். “ஒத்துக்கடா. எனக்கு இப்பிடி ஆள் கிடைச்சிருந்தால் நான் விட்டிருக்கவே மாட்டேன்…” என்று அவன் தோளைத் தட்டினான். அப்புறம் என்னவோ இங்கிலீஷில் சொன்னான். வாத்தியார் சிரித்தார். நல்லவேளை இவனுக்கு டியூஷன் எடுக்க ஒத்துக்கோள்ளவில்லை என அவர் நினைத்திருக்கலாம்.
“சனி ஞாயிறு மாத்திரம் வந்து படி. ஒரு நாலுமாசம் அஞ்சுமாசம்… உன்னை நான் தேத்திருவேன்” என்றார் ஆசிரியர் உற்சாகமாக. “மத்தநாள்ல எலட்ரி வேலை பாக்கலாம்” என்று சிரித்தார் கண்மணியைப் பார்த்து. அவனுக்கு அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. ரத்தினத்துக்கு தலை கிறுகிறுத்தது. படிப்பதில் அவனுக்கு ரொம்ப ஆசை. அப்பா மாத்திரம் சரியாய் இருந்தருந்தால் அவன் தொடர்ந்து எப்பாடு பட்டாவது படித்து கல்லூரிக்குள் நுழைந்திருப்பான். அப்படி ஆசையும் கனவுகளும் அவனுக்கு இருந்தன.
“அம்மா நான் நம்ம வைகுண்டம் சார்கிட்ட டியூஷன் படிக்கப் போறேன்” என்றபடியே வீட்டுக்குள் நுழைந்தான் ரத்தினம். அவனுக்கு சந்தோஷத்தில் படபடவென்று வந்தது. “ஏண்டா அப்ப வேலை?” என்றாள் ஈஸ்வரி கவலையுடன். “சனி ஞாயிறு மாத்திரம் போறேன் அம்மா. மத்த நாளில் கண்மணி அண்ணன்கூட போய்வர்றது, அதுபாட்டுக்கு அது…” என்றான். “நமக்கு நல்ல காலம் பிறக்குது போல…” என்று அம்மா நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள். அப்பா வெளியே திண்ணையில் அப்போதுதான் வந்து அமர்ந்திருந்தார். வெளியே சரசரப்பு கேட்டு அவனும் அம்மாவும் திரும்பிப் பார்த்தார்கள். “என்னங்க?” என முகம் மலர்ந்தாள் ஈஸ்வரி. “கேள்விப்பட்டேன். நல்லது…” என்று சிரித்தார் கணபதி. அவரும் சந்தோஷப்பட்டாற் போலத்தான் இருந்தது.
ஆனால் படிப்பு சுலபமாக இல்லை. விட்டுப்போன பாடங்கள். திரும்ப வாசிக்கத் திணறடித்தன. வகுப்பும் பெரிய வகுப்பு. ஆங்கிலம் சுத்தமாக அவனுக்குத் தெரியாது. மத்தபாடங்களை தமிழ் மீடியத்திலேயே படித்தான். பழைய புத்தகங்களை மலிவு விலையில் சாரே வாங்கித் தந்தார். சனி ஞாயிறு டீயூஷன் என்று போனால் முழுசாய் அங்கேயே அவர்கூடவே இருந்தான். சார் வீட்டிலேயே மதியம், கொண்டுபோயிருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டான். டியூஷன் முடிந்து வீட்டிலும் படிக்கவும் எழுதிப்பார்க்கவும் வேண்டியிருந்தது. தங்கச்சிகள் தூங்கியபின், வேலைமுடிந்து வந்து, வாசல் திண்ணை விளக்கைப் போட்டுக்கொண்டு பாடங்கள் படித்தான். அப்பா அவர்பாட்டுக்கு ஒதுக்கமாக துண்டைப் போர்த்திக்ண்டு உறங்க முயன்றார். அம்மாவுக்கு உள்ளேயிருந்து அவனைப் பார்க்கப் பார்க்க சிரிப்பும் அழுகையுமாய் இருந்தது. இத்தனை பாடுபட்டு வேலை செஞ்சிட்டு அப்புறமும் வீட்டுக்கு வந்து இப்பிடிப் படிக்கிறானே?... காலையில் திரும்ப வெள்ளென எழுந்து வேலைக்குப் போகவேண்டுமே, என்றிருந்தது. அந்த வயசு அதன் தீவிரம், இளமைக்கு அதுதானே அழகு. அவனை அவநம்பிக்கைப் படுத்திவிடக் கூடாது, என்று நினைத்தாள்.
சனி ஞாயிறுகளில் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு அவன் வைகுண்டம் சாரைப் பார்க்கப் போய்விடுவான். கடினமான பாடங்கள். மற்ற பையன்கள் வேறு அங்கே இருப்பார்கள். அவர்கள் எல்லாரும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள். அவள்தான் (பிரைவேட்டாக என்பதை கண்மணி “நீ பிரைவசியாக பரிட்சை எழுது” என்றான்.) தனித்தேர்வு எழுதப் போகிறவன். சார் அவனுக்குத் தனியே பாடங்கள் எடுத்தார். கணக்கு புரியவில்லை என்றால் நச்சென்று இரும்பு ஸ்கேலால் முட்டியிலேயே போட்டார் அவர். வலி பின்னியெடுத்தது. ஆனால் கஷ்டப்படாமல் பலன் இல்லை. அவனுக்கு சாரைப் பிடித்திருந்தது.
தேர்வுநாள் நெருங்க நெருங்க அவன் வேகம் இன்னும் அதிகரித்தது. விடிய விடியப் படித்தான் ரத்தினம். பரிட்சைக்கு முந்தைய வாரம் அவன் எலட்ரி வேலைக்கே போகவில்லை. கண்மணியும் அவனை அழைக்கவில்லை. என்றாலும் ரத்தினத்துக்கு இப்போது பரிட்சையில் தேறிவிடுவோம் என்று நம்பிக்கை வந்திருந்தது. சும்மா சொல்லக்கூடாது, இந்த நாலைந்து மாதத்தில் சார் எப்படி அவனைத் தேற்றி யிருக்கிறார்! எத்தனை அடிகள்… அதைப்பற்றி என்ன?
தினசரி ஒரு பரிட்சை. உற்சாகமாய்த்தான் எழுதினான். அவன் அம்மாவிடம் ஒவ்வொரு நாளும் ”நல்லா எழுதியிருக்கேம்மா” என்று வந்து சொன்னபோது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. கணக்கு தான் பயமாய் இருந்தது. எண்பதுக்கு மேல் வரும் போலிருந்தது. கடைசித் தேர்வையும் நல்லபடியா முடித்தான் அவன். அம்மாவை விழுந்து வணங்கினான். “வேலைக்கும் போயிக்கிட்டு, பாடத்தையும் பாத்துக்கிட்டு… தம்பி நீ உண்மையிலேயே என் வயித்துப் பிள்ளையே இல்லடா” என்று அவனைக் கட்டிக்கொண்டாள். அந்த அணைப்பில் என்னவோல வித்தியாசம் தெரிந்தாப் போலிருந்தது அவனுக்கு. சட்டென விலகிக்கொண்டு பயந்தபடியே அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஆமாம்” என்றாள் அவள். உண்மைதான். அவள் முழுகாமல் இருந்தாள். முழுகாமல் இருந்தே இவள் நம்ம குடும்பக் கப்பலை முழுகடிச்சிருவா, என்று இருந்தது அவனுக்கு. நான் டியூஷன் போயிருக்கவே கூடாது, என நினைத்துக் கொண்டான்.
91 97899 87842


Comments

Popular posts from this blog