Monday, October 31, 2016

SHORT STORY
ஆயிரம் தலைபார்த்த அபூர்வ சிகாமணி

எஸ். சங்கரநாராயணன்
 வனது தொழில் பூர்விகம் ஆலமரத்தடி. நாற்காலி போட்டு துண்டு போர்த்தி பூபாலன் முடிவெட்ட இவன் கண்ணாடி பிடிக்க வேண்டியிருக்கும். டவுசர் அவிழும். இடக்கையால் டவுசரைப் பிடித்துக்கொண்டு வலக்கையால் கண்ணாடியைத் தூக்கி முகத்துக்குக் காட்டுவான். பராக்கு பார்த்தபடி ஒருமுறை டவுசர் நழுவுகிற பதட்டத்தில் வலக்கையால் பிடிக்கப்போக கண்ணாடி கீழே விழுந்த சிலுங்... அத்தோடு அந்த வேலையும் போயிற்று. பிறகு சலூன் சலூனாக மாறி, நரை மண்டை, புல்லு மண்டை, ரெட்டை மண்டை, கோண மண்டை என்று விதவிதமான மண்டைகளைப் பார்த்துத் தொழிலில் தேறினான் சிகாமணி.
அவன் பட்டணம் கிளம்பி வந்தது இப்படி சலூன் வைக்க அல்ல. கலைத்தாய்க்கு சேவை செய்ய. சினிமாவில் சேர எல்லா இளைஞர்களையும் போலவே அவனுக்கும் அபிலாஷைகள் இருந்தன. இராத்திரியில் முன்னணிக் கதாநாயகிகள் அவனை எழுப்பி ‘வா, என்னோடு டூயட் பாடு. சேவை செய்ய வேண்டிய இளம் வயதில் தூங்கினா என்ன அர்த்தம்?’ என அவன் கையைப் பிடித்து இழுத்தார்கள். குறைந்தபட்சம் ஒரு ரஜினி ஆகிவிட அவனுக்கு அபிப்ராயம் இருந்தது.
பஜார்ப்பக்கம் சலூன் போட்டிருந்த சிங்காரம் தன் பெண் கல்யாணத்துக்கு என அஞ்சு வட்டிக்கு வாங்கி வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சிகாமணி இரவோடிரவாய்க் கிளம்பினான். சேவை என்று வந்துவிட்டால் பகலாவது இரவாவது... சிங்காரத்தண்ணே, ஒண்ணும் மனசுல வெச்சிக்கிறாதிங்க... ஒரே படம், நான் டாப்புக்குப் போயிருவேன். அப்புறம் உம்ம பொண்ணுக்கு ஒரு கல்யாணம் என்ன, அஞ்சி கல்யாணம் பண்ணலாம்... ரயில் ஓடிக்கொண்டிருந்தது. சினிமாவுக்காகத் தன் பெயரை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று அவனுக்குள் ஒரே யோசனை.
பொங்கும் பாலில் தண்ணீர் தெளித்த மாதிரி இந்த மூன்று வருடம் ஆளை நெகிழ்த்தி வைத்திருந்தது. கஞ்சிக்கு நமக்கு இந்த சவரக் கத்தியும், பிஸ்க்கென நீரடிக்கும் பாட்டிலும்தான் என்று புரிந்து அவன் மீண்டும் மண்டைகள் ஆராய்ச்சிக்கு வந்திறங்க நேர்ந்தது. எஃப். எம். மில் நல்ல பாட்டு போட்டால் பாதிவேலையில் கையும் காலும் ஆடத் துடிக்கும். ஹம்... என்னிக்கு டைரக்டரோ, உதவி டைரக்டரோ நம்ம சலூனுக்குள்ள நுழைஞ்சி ‘அட ஹீரோ சார், நீங்க இங்கியா இருக்கீங்க, எங்கெல்லாம் உங்களத் தேடிட்டிருக்கோம்’ என்று சொல்லப் போறாங்களோ தெரியவில்லை.
தனியே நாம ஒரு கடை போட்டால்?... என்று திடீரென்று எண்ணம் வந்தது. அட, என்றிருந்தது, பரபரப்பாய் இருந்தது. இதென்ன நினைப்பு, நடக்கற கதையா இது, என யோசனை மறித்தது. அஞ்சி வட்டிக்காரன் ஒருத்தன் வாராவாரம் ஷேவிங்குக்கு வருவான்... கேட்டுப் பார்ப்போம், தந்தா தர்றான், தராட்டிப் போறான்...
‘...ம்’ என்றான் வட்டிக்காரன். அவன் பேச்சிலிருந்து தருவானா மாட்டானா என்று தெரியவில்லை. ஆனால் திடீரென்று ஒருநாள் அவனே கூட்டிப்போய் கடை போட இடம் காண்பித்தான். சுழல்நாற்காலி, எதிர் எதிராய் மாட்டக் கண்ணாடி, மற்றும் உபகரணங்களையும் சல்லிசாக பழையதாகப் பார்த்து அவனே வாங்கித் தரவும் செய்தபோது தன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை. நட்போடு அவன் கையைப் பற்றிக் கொண்டு சிரித்தான் சிகாமணி. ‘இதுக்கு முன்னால சலூன்தான் இருந்தது பாத்துக்க’ என்றான் வட்டிக்காரன். ‘பணத்தைத் திருப்பியடைக்க முடியவில்லை அவனால... அதான் நான் கடையப் பிடுங்கிக்கிட்டேன்...’ சிகாமணி பயத்துடன் அவன் முகத்தைப் பார்த்தான். ‘பார்த்துக் கூறாப் பொழச்சிக்க...’ என்றபடி அவன் தெருவிலிறங்கிப் போய்விட்டான்.
நல்ல பார்வையான இடம். நல்லநாள் பார்த்து முதல் பாட்டு சீர்காழியின்  ‘கணபதியே வருவாய்’ போட்டு கடை திறந்தபோது உற்சாகமாய் இருந்தது. எதையோ சாதித்துவிட்ட பெருமிதம்... அவன் படம் நூறு நாள் தாண்டின மாதிரி... அடுத்து அடுத்து  என்று சினிமாப் பாடல்கள். வாசலில் நின்று கண்ணாடியில் ‘ஜானி சிகையலங்கார நிலையம், உரிமை – சிகாமணி. ஆர்ட் பை-ஜீவா’ என்று படித்துப் பார்த்தான். கிறுகிறுப்பாய் இருந்தது. வாசலில் பெஞ்சு போட்டு தினத்தந்தி, தலைவார பேப்பர் படிக்க, வெட்டி அரட்டை யடிக்க என்று கும்பல் சேர்ந்தது. விரட்டவும் முடியாத வைத்துக் கொள்ளவும் முடியாத கூட்டம். நைச்சியமாய் பெண்கள் நடமாடுகிறார்கள், அதுஇதுவென்று கழட்டிவிட வேண்டியிருந்தது. குழந்தைகள் முடிவெட்ட என்று கூட்டிவரும் பெண்கள் அங்கே நிற்கச் சங்கடப்பட்டார்கள்.
பத்து ரூபாய் கூலி கேட்டால் எட்டு கொடுத்து விட்டு ‘அவ்வளவுதான்’ என்று எழுந்து கொள்ளும் வாடிக்கையாளரை என்ன செய்வது? ‘அண்ணாச்சி பாருங்க... நம்ம கட்டிங்குக்கு அப்பறம் சார் மொகத்துல ராஜகளையில்ல வந்திட்டது... பைல நல்லாப் பாருங்க, காசு கெடக்கும்’ என்றான் புன்னகை மாறாமல். ‘அடுத்த தடவை பாப்பம்’ என்று எழுந்து போய்விட்டார் அவர். ரொம்ப அழுத்திக் கேட்டால் அடுத்த தடவை வேறு கடைக்குப் போய்விடுவார் என்று இருந்தது. என்ன பொழப்புடா, என அலுப்பாய் இருந்தது. சே, பேசாம சினிமாத் துறைக்கே போயிறலாம், என்றிருந்தது.
ரெண்டு ஆள்ப் படையோடு ஒருத்தன் உள்ளே வந்தான். ‘தம்பிதான் இங்க புதுசா கடை போட்ருக்காப்லியா’ என்றபடியே நாற்காலியில் உட்கார்ந்தான். வளைத்துச் சுருட்டிய மீசையைக் கண்ணாடி பார்த்து இன்னும் முறுக்கிக் கொண்டான். சட்டை மேல்பட்டன் திறந்திருந்தது. ஒரு புலிநக செய்ன் மார்புக்காட்டுக்குள் மினுங்கியது. கட்சிக்கரை வேட்டி.
‘ஏய், நீயென்ன ஊமையா? ஐயா கேக்கறாங்க... பதில் சொல்ல மாட்டியா?’ என்றான் ஜால்ராவில் ஒருவன். ‘ஆமாங்க’ என்றான் சிகாமணி. பயமாய் இருந்தது. வேட்டி கரையில் அம்மா கட்சி என்று தெரிந்தது. ‘ஐயா யாருன்னு...’ என்று கேட்டான் தயக்கமாய்.
‘ஐயாவத் தெரியாதுன்ன மொத ஆளு நீதான்யா... இந்த வட்டச் செயலாளர் ஐயாதான்... சிம்மக் குரலோன்... இன்னிக்கு மீட்டிங் இருக்கு, வந்திரு... என்ன?’ என்றான் மற்றவன். ‘போஸ்டர் பாக்கலியா நீயி?’
‘அடடே அப்டீங்களா... ரொம்ப சந்தோசம்’ என்றான் சிகாமணி. பணவசூல் ஏதும் பண்ண வந்திருப்பாங்களோ, என்று பயமாய் இருந்தது. ‘கட்டிங்குகளா, ஷேவிங்குகளா?’ என்று கேட்டான்.
‘கட்டிங்க்... பாத்து, சொதப்பீறாதே கொறச்சது தெரியாமக் கொறைக்கணும். செரைச்சது தெரியாமச் செரைக்கணும்... என்ன?’
‘அதெல்லாம் சூப்பரா வெட்டிறலாம்... லேசாச் சரிங்க...’ என்றபடி நாற்காலியில் அவனை சாய்த்தான். அவனோடு இன்னும் இணக்கமாய்க் காட்டிக்கொள்ள விரும்பினான் சிகாமணி. முடிவெட்டப் போர்த்தும் துண்டை எடுத்துக் கொண்டு ‘அண்ணனுக்கு ஒரு பொன்னாடை போர்த்திருவோம்’ என்றான். அடியாட்கள் சிரித்தார்கள். செயலாளன் கூட புன்னகைத்த போது தெம்பாய் இருந்தது.
ஒருவன் அவனிடம் ‘ஐயாவ நல்லபடியா கவனிச்சிக்க... இவரு நெனச்சா பேங்க்ல கடன் கிடன் வாங்கித் தருவாரு...’ என்றான். ‘அப்படிங்களா?’ என்றபோது நாய்போல சிகாமணி வாலாட்ட விரும்பினான். ‘பேங்க்னா எவ்ள வட்டிங்க?’
‘வட்டியா? என்ன தம்பி புரியாமப் பேசறே...’
‘நான் ஒரு மரமண்டைங்க... நீங்க சொல்லுங்க.’
‘கடனைத் திருப்பி யாரு கட்டறா?’
‘ஓகோ, அப்படிங்களா? அப்ப ஐயாதான் நம்மளத் தூக்கி விடணும்...’ அவனுக்கு மிதக்கிறாற் போலிருந்தது. தெய்வம் கூரையப் பிச்சிட்டுக் கொடுக்கும்னாப்ல, திடீர்னு அதிர்ஷ்டம் எதும் வருதா, என்றிருந்தது. பதட்டத்தில் மீசையை எசகு பிசகா கட் பண்ணிருவோமோ என்றிருந்தது. அவன் சொத்தே அதுதான். அதுல வெளையாடி மீசைய எடுத்துர்றாப்ல ஆயிட்டா, இன்னிக்குக் கூட்டத்துல பேச முடியாமக்கூட ஆயிரும்... அத்தோட நம்ம விதி அவ்ளதான்.
செயலாளன் திருப்தியாய் எழுந்துகொண்டான். அடியாட்களில் ஒருவனிடம் ஏதோ சொன்னான். ‘தோ வர்றங்க’ என்று அவன் கிளம்பிப்போய் ஐந்தே நிமிடத்தில் கையில் ஒரு படத்தை எடுத்துவந்தான். அம்மா படம். சிகாமணி எதுவும் சொல்லுமுன் அவர்களே அதை மாட்ட இடம் பார்த்தார்கள். அதை மாட்டிவிட்டு முடிவெட்டிக் கொண்டதற்குக் காசுகூடக் கொடுக்காமல் ‘வர்றோம்... இங்க உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் கவலைப்படாதே... நாங்க இருக்கோம்’ என்றார்கள், பிரச்சனையே இவர்கள்தானே, என நினைத்துக் கொண்டான்.
வந்து மாட்டிவிட்டுப் போய்விட்டார்கள். இனி இதைக் கழற்ற முடியாது... கழற்றினால், ஏன் கழற்றினே, என்று வேலை மெனக்கெட்டு வந்து பிரச்சனை பண்ணுவார்கள்... சிகாமணிக்கு அப்போதைக்கு ஒருவழி தான் இருந்தது ஓவியன் ஜீவாவைக் கூப்பிட்டு உடனே ‘இங்கே அரசியல் பேசக்கூடாது, ஆர்ட் பை- ஜீவா’ என்றெழுதக் கொடுத்தான்.
அநேகமாய்ப் பிரச்சனை அங்கேதான் ஆரம்பித்தது. அதுவரை கவனிக்காதவர்கள் இப்போது கவனிக்க ஆரம்பித்தாற் போலிருந்தது. ‘அண்ணே, நீங்க எந்தக் கட்சி?’ என்று கேட்டார்கள். ‘நமக்கு எல்லாக் கட்சியும் ஒண்ணுதாங்க’ என்று புன்னகைத்தான் அவன். கையில் கர்ச்சீப், வாயில் பீடி என அலங்காரமாய் வந்த ரிக்ஷாக்காரன் ஒருவன் ‘ஆ அந்தக் கதைல்லா வேணா... அப்ப ஏன் அம்மா படத்தை மாட்டி வைக்கணும்?’ என்று கேட்டான். ‘உள்ள வாங்க... ஷேவிங்கா?’ என்றான் சிகாமணி.
‘பேச்ச மாத்தாத... நீ அவங்க கட்சிக்கார ஆளு... எனக்குத் தெரிஞ்சிபோச்சி...’ என்றான் ரிக்ஷா. கலவரத்தை மறைத்துக் கொண்டு ‘அரசில்லாம் நமக்கு வேணாண்ணே, நமக்கு நம்ம பொழப்பே பெரிசாக் கெடக்கு, நீங்க வேற...’ என்றான்.
‘டேய், எனக்கே அட்வைஸ் பண்ற அளவு நீ பெரியாளா யிட்டியா?’ என அவன் வேக வேகமாய் உள்ளே நுழைந்தான்.
‘அட உக்காருங்க... நான் என்னப் பத்திச் சொன்னேன்... டீ சாப்பிடறீங்களா?’
‘நாட்ல அவனவன் கொள்ளையடிக்கிறான். ஊழல் பண்ணறான்... தட்டிக்கேக்க ஆளில்லன்னு நெனைக்கான்... பேசாம வாய மூடிட்டிருந்தா அவங்க அக்கிரமத்துக்கு முடிவேயில்லாமப் போயிரும்... உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாது... நீங்கல்லாம் ஜால்ராங்க. ஆளுங்கட்சியோட அடிவருடிங்க. தேசத்துரோகிங்க. தொடைநடுங்கிங்க... உங்களாலத் தான் நாடே குட்டிச்சுவராப் போயிட்டிருக்கு...’
குடித்திருந்தான் போலிருந்தது யாருடனாவது மோத விரும்பியிருந்தான் போலிருந்தது. மாட்டிக்கிட்டமோ என்றிருந்தது. விறுவிறுவென்று வாசலுக்கு வந்து எதிர்க்கடையில் ஒரு டீ கொண்டுவர சத்தமாய்ச் சொன்னான். சிகாமணி உள்ளே திரும்ப வரும்போது ரிக்ஷாக்காரன் ‘ஏய் உண்மையச் சொல்லு, நீ எந்தக் கட்சி?...’ என்று அச்சுறுத்தலாய்க் கேட்டான். ‘ஐய நான் எந்தக் கட்சியும் இல்ல... என்ன நம்புங்க’ என்றான் சிகாமணி.
‘அப்ப இங்க எதுக்கு அம்மா படம்?...’
‘ஒரு அன்பர் தந்தாரு பிரியமா... மாட்டியிருக்கேன்...’
‘இதெல்லாம் மாட்டக் கூடாது... தூக்கியெறி மொதல்ல. அவளப் பாத்தாலே எங்களுக்கு ஆத்திரமா வருது...’
இப்போதைக்கு எடுத்துவிட்டு இவன் போனபிறகு மாட்டிவிடலாமா, என்று சட்டென்று தோன்றியது. இதை எடுத்தபிறகு செயலாளன் வந்து பார்த்தாலும் வம்பு, திருப்பி மாட்டியபிறகு ஐயா கட்சிக்காரன் வந்து பார்த்தாலும் விவகாரம், என்றிருந்தது. இது இப்படியே முடியாது, என்று மட்டும் படபடப்பாய் இருந்தது. அப்போது
‘என்ன யோசிக்கிறே?’
‘இல்ல, தமிழ்மறவன் ஐயா வந்து மாட்டிட்டுப் போனாங்க...’
‘ஐயாவா. அவன் ராஸ்கல் தூ’ என்று சலூனுக்குள்ளேயே காறித் துப்பினான் ரிக்ஷாக்காரன், ‘எங்க கட்சில பதவி கெடைக்கலன்னு அங்க போயிச் சேந்தவன் அவன்... அவனைப் பத்திப் பேசாதே...’ என்றான், ‘அவன் ஒரு ஃபிராடு பார்ட்டி... அவனை நம்பாதே... மொதல்ல இந்தப் படத்தைத் தூக்கியெறி... அவன் வந்து கேட்டா இளமார்ன்தான் எடுக்கச் சொன்னான்னு சொல்லு... என்ன யோசிக்கிறே... தைரியமாச் சொல்லு... அவனால ஒண்ணும் ஆட்ட முடியாது... த்தா... ஒருநா எங்கிட்ட வசம்மா மாட்டுவான்.. வெச்சிருக்கேன்... அவனுக்கு. தூ’ என்று மீண்டும் காறித் துப்பினான்.
‘இளமாறனுக்கு ஷேவிங் எடுத்துறலாங்களா?’ என்று புன்னகைத்தான் சிகாமணி, ‘பேரைப் பாரு பேரை... விளக்குமாத்துக்குக் குஞ்சலமாம்’ என்றிருந்தது ‘இந்த ஐஸ் வைக்கற வேலைல்லா வேணா... நான் எவ்வளவு போட்டாலும் நிதானமா இருப்பேன்... தூ...’ கொஞ்ச நேரத்தில் அந்த அறை முழுதும் இவன் எச்சில்தான் இருக்கும் போலிருந்தது. அதற்குள் இவனை எப்படி வெளியே அனுப்ப தெரியவில்லை, குடித்திருக்கிறான்... சொன்னதையே திருப்பி திருப்பிச் சொல்ல ஆரம்பித்து விடுவான்...
‘உம் பேரென்ன?’ என்று திடீரென்று கேட்டான் இளமாறன்.
‘சிகாமணிங்க...’
‘நல்ல பேர்தான்...’ என்று சிரித்தான் இளமாறன்.
‘சிகைன்னா முடி... தமிழ் படிச்சிருக்கியா?’
‘ஆமாங்க’ என்று சிரித்தான் சிகாமணி. ‘டீ ஆறிப் போவுது பாருங்க...’
‘நீ யாருக்கும் பயப்படக்கூடாது சிகாமணி... அவன் வந்து படத்தை வெச்சான்னா என்ன, இங்க வைக்கதீங்கன்னு நீ சொல்லலாமில்ல...’
சிகாமணி புன்னகைத்தான். திடீரென்று இளமாறன் ‘ஏய் நீ அம்மா கட்சிக்காரன் இல்லைல்ல?’ என்று கேட்டான்.
‘இல்ல. நிச்சயமா இல்ல...’ என்றான் சிகாமணி.
‘அப்ப இரு வரேன்...’ என்று இளமாறன் தெருவில் போய் யாரையோ கூப்பிட்டான். என்னவோ சொன்னான், ஐந்து நிமிடத்தில் அவர்கள் கட்சித்தலைவர் படம் ஒன்று எடுத்து வரப்பட்டது, ‘இதையும் மாட்டி வையி சிகாமணி... பயப்படாதே... அவங்காளுக யாரு வந்தாலும், நீ இளமாறன் பேரச் சொல்லு, தாய... ஒண்ணுக்குப் பேஞ்சிருவாங்க.’
துப்பியதே தாங்க முடியவில்லை இங்கே, இதுவேறயா என்றிருந்தது. நல்ல எடத்துல வந்து மாட்டிக்கிட்டோம்டா என்றிருந்தது.
நாட்டை ஆளுங்கட்சி என்று அம்மாவுக்கு செல்வாக்கும் அந்தப் பகுதியின் எம். எல். ஏ. எதிர்க்கட்சிக்காரன் என்று ஐயா கட்சியின் ஆதிக்கமும் நிறைந்த பகுதி என்று புரிந்தது. சிகாமணிக்கு, தினசரி அஞ்சு வட்டிக்காரன் வேறு வட்டிக்கு வந்து நிற்கிறான். தினசரி ஐம்பது ரூபாய் அவனுக்கு, இதில் மிச்சம் பிடித்து எங்க முன்னேற... சில நாள் சாப்பிடக் கூட காசில்லாமல் போனது. வேறு யாரிடமாவது வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் நிம்மதியாய் இருந்தாற் போலிருந்தது.
அம்மா படமும், ஐயா படமும் பக்கத்தில் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்தது, பஞ்சும் நெருப்பும் பத்திக்குமோ என்பது போல. இன்னொரு போர்டு எழுதி மாட்டினான் அவசர அவசரமாய் ‘இங்கே அரசியல் கண்டிப்பாய்ப் பேசக் கூடாது’ ஆர்ட் பை ஜீவா.
‘நம்ப மீட்டிங்குக்கு வந்திருந்தாப்லியா?’ என்றபடியே தமிழ்மறவன் உள்ளே வந்தான், ‘இல்லங்க நம்ப சம்சாரம் வீட்டாளுக வந்திருந்தாப்ல... அதான் போவேண்டியதாப் போச்சி... உள்ள வாங்க’ என்றான் சிகாமணி. சரி, திரியில் நெருப்பு வைத்தாற் போல... இவனை சமாளிக்க வேண்டுமே என்றிருந்தது.
‘எதிர்க்கட்சிக்கு சவால் விட்டேன்... நீங்கள் வேட்டி கட்டும் ஆம்பளையாளுகளா இருந்தா ஊழலை நிரூபிக்கணும்... சும்மா ஊழல் ஊழல்னு சொல்லிட்டிருந்தா பிரயோஜன மில்லன்னேன்... மக்கள் உங்களை நம்பத் தயாரா இல்லைன்னேம் பாரு... ஒரே கிளாப்ஸ்...’ என்றபடி உள்ளே வந்தவன், ஐயா படத்தைப் பார்த்ததும் முகம் சுளித்தான்.
சட்டென்று திரும்பி கண்சிவக்க அவன் சட்டையைப் பிடித்தான். ‘ஏய், இந்தப் படத்தை இங்க ஏண்டா மாட்டி வெச்சிருக்க?’
‘அண்ணே அதொண்ணில்லண்ணே... அது சும்மா வந்தது... நம்ம இளமாறன்...’
‘அவன் ஏண்டா வரான்?... ஜெயில்லேர்ந்து வெளிய வந்துட்டானா?’
ஐயோ ஜெயில் கியில்ன்றாங்களே என்று பயமாய் இருந்தது. ‘ஜெயிலா?...’ என்றான் பயத்துடன்.
‘என்ட்ட வெளையாடினா? சும்மா விட்ருவமா? நான் யாருன்னு இப்ப தெரிஞ்சிட்டிருப்பான்... ஏன்டா நீ அவன்கிட்ட எம் பேரைச் சொன்னியா?’
‘சொன்னேங்க... ஆப்டியே ஆடிப் போய்ட்டாப்ல...’ என்றான் சிகாமணி ஒரு நம்பிக்கையுடன். அடியாட்கள் சிரித்தார்கள். தமிழ்மறவன் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான், ‘இ னி மே வந்தா தமிழ்மறவன் ஆள்டா நான், ஜாக்கிரதைன்னு சொல்லிரு சிகாமணி... தெரிஞ்சிதா. நாங்க அளுங்கட்சி... எங்களை ஒண்ணும் பேச முடியாது... ஆப்பு அடிச்சிருவோம்...’ நீ இதபாரு, கண்ட நாய்ங்களுக்கு ஏன் பயப்படறே?... அவன் இனி வந்தா உள்ள வராதடா பேமானின்னு சொல்லு புரிஞ்சதா...’
‘ஆவட்டுங்க...’
‘என்ன புரிஞ்சது?’
‘சொல்லிறலாங்க...’ என்று சிரித்தான் சிகாமணி. ‘உக்காருங்க டீ சொல்லட்டுமா?’
‘சும்மா டீ டீன்னுக்கிட்டு... குவார்ட்டர் வாங்கிக்குடு’ என்று கண்ணடித்தான் தமிழ்மறவன். சகாக்களுக்கு அப்பவே நா ஊறிட்டது. ‘ஐய அதுக்கு வசதி வரட்டும். ஐயா புண்ணியத்துல ஒரு லோன் அது இதுன்னு கைதூக்கி விட்டீங்கன்னா, நான் பொழச்சிக்குவேன், உங்க பேரச் சொல்லி...’
‘அப்ப நம்ப தயவு வேணுங்கறே?’
‘ஆமாங்க’ என்று சிகாமணி கையைக் கட்டிக்கொண்டு நெளிந்தான்.
‘அப்ப ஒரு காரியம் செய்யி.’
‘காத்திட்டிருக்கேங்க, சொல்லுங்க...’
‘அம்மா படத்துக்குப் பக்கத்ல மாட்டிருக்கே, அந்தப் படத்த இப்பவே தூக்கியெறி.’ என்றான் தமிழ்மறவன்.
ஒருவிநாடி ஒண்ணுமே புரியவில்லை. வசமாய் மாட்டிக் கொண்டோம் என்றிருந்தது. அவன் திகைத்து நிற்பதைப் பார்த்தபடி அடியாளில் ஒருவன் அவனே படத்தைக் கழற்றினான். விறுவிறுவென்று வாசலுக்குப் போனான். சிலுங்கென்று பிரேம் நொறுங்க அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு உடைத்தான். ‘வரோம்’ என்று அவர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள்.
பேசாமல் கடையை மூடிவிடலாமா என்றிருந்தது அவனுக்கு. எப்படியும் ஒரு பூதம் கிளம்பும் என்று  தோன்றியது. இப்போ ரிக்ஷாக்காரன் வந்தா என்ன செய்யிறது...
தினசரி காலையில் தமிழ்மறவன் அங்கே பேப்பர் படிக்க வருவதும் உட்கார்ந்து அவன் சகாக்களுடன் அரசியல் பேசுவதும் வழக்கமாகிப் போயிருந்தது. அட, ஒனக்காகத்தான் சிகாமணி, என்றார்கள் அவர்கள். நீ பயமில்லாம இரு. எவனும் நம்ம அசைச்சிக்க முடியாது நம்ம கோட்டை இது, என்றார்கள். டீயும் நன்கொடையுமாய் அவர்களுக்குத் தீனி போட்டு மாளவில்லை. பாங்க்கில் லோன் வாங்கித்தருவதாய் முதலில் ஆசை காட்டிவிட்டுப் பின் சௌகரியமாய் அதை மறந்து விட்டார்கள்.
ஒருநாள் அந்த ரிக்ஷாக்காரன் இளமாறன் திரும்ப வந்தான். இப்போது தனியே வரவில்லை. அவனும் ரெண்டு ஆளைக் கூட்டி வந்திருந்தான். நல்லவேளை அவர்கள் வருவதை சிகாமணி தெரு முனையிலேயே பார்த்துவிட்டு அம்மா படத்தைக் கழற்றித் திருப்பி வைத்துவிட்டான். இளமாறான் வந்ததும் எடுத்த எடுப்பில் ‘என்னாச்சிடா எங்க தலைவர் படம்?’ என்றுதான் ஆரம்பித்தான். ‘அது வந்துங்க, கைபட்டு தவறுதலா... கண்ணாடி ஒடஞ்சி...’
‘என்னடா கத விடற? நீ அம்மா கட்சி ஆளு. இப்ப புரிஞ்சி போச்சு...’
‘இல்லண்ணே இல்லண்ணே. பாருங்க. அம்மா படத்தக் கூட இறக்கி வெச்சிட்டேன்.’ என்று காட்டினான் சிகாமணி.
‘எங்க காட்டு?’
சிகாமணி படத்தைக் திருப்பிக் காட்டவும் அதில் காறித் துப்பினான் இளமாறன். காலால் ஆத்திரத்துடன் அதை உதைத்தபோது அந்தப் படமும் உடைந்து சிதறியது கண்ணாடித் துண்டுகள். ‘டேய் நீ யாரு கட்சியோ எனக்குத் தெரியாது. உங்க தமிழ்மறவன்ட்டச் சொல்லு. நான் ஜெயில்லேர்ந்து வெளிய வரல. தப்பிச்சி வந்திருக்கேன். அவனைத் தீத்துக் கட்டாம திரும்பியும் உள்ள போமாட்டேன். உடல் மண்ணுக்கு, உயிர் தலைவருக்குன்னு வாழறவங்க நாங்க, பதவி இன்னிக்கு வரும், நாளைக்குப் போகும். பதவிக்காக மானம் இழக்கறவங்க இல்ல நாங்க... மகனே, அந்தத் தாளி... தமிழ்மறவன் சாவுமணிய நாந்தான் அடிக்கப் போறேன்... இது எங்கோட்டை... இங்க ஒரு சிறுநரி வந்து வாலாட்டித் திரியுது... பாத்துக்கறோம்... நீ பயப்படாதே சிகாமணி... ஞாபகம் வெச்சிக்க, உனக்கு ஒண்ணுன்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம்... இப்ப உண்மையச் சொல்லு, அவங்காளுங்கதானே வந்து எங்க தலைவர் படத்தை எடுக்கச் சொன்னது?...’
இதற்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை. ‘நீ சொல்ல மாட்ட... பரவால்ல. என்னால புரிஞ்சிக்க முடியும். நீ அவனுக்கு பயப்படற... பயப்படக் கூடாது... கோழை பலமுறை சாவான், வீரன் ஒருமுறைதான் சாவான்னு நீ கேள்விப் பட்டதில்லையா?’
‘ஐயா எனக்கு இந்த வம்புல்லா வேணாங்க... நான் எம்பாட்டுக்குப் பொழப்பப் பாத்திட்டிருக்கேங்க... தினசரி வருமானம் வட்டிக்குக்கூட பத்த மாட்டேங்குது... இதுல நீங்களும் அவரும் மாத்திமாத்தி வந்துபோனா யாருமே இங்க உள்ளவர பயப்படறாங்க. உங்களுக்குள்ள சண்டையின்னா அதை இங்க எடுத்துட்டு வராதீங்க... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்...’ என்றான் சிகாமணி. அழுதுவிடுவான் போலிருந்தது.
‘ஏய், அழுவறத நிறுத்து...’ என்றான் இளமாறன், தூவென்று காறித்துப்பினான். ‘ஏன் அழுவற, நீ பொட்டையா?... இப்பிடி வாழறதவிட நாக்கப் புடுங்கிக்கிட்டுச் சாவலாம்... மனுசன்னா கொள்கை வேணும்... எங்க ஏரியாவுல் வந்து கடைபோட்டுட்டு எவனோ ஒருத்தன் என்னவோ சொல்றான்னு வந்து எங்ககிட்டயே காட்டறியே. வேற எவனாவது இருந்தா உன்னை அதுக்கே வகுந்திருப்பான்... போனாப் போவுதுன்னு விடறேன்...’ விரலால் சுண்டியபடியே இளமாறன் சொன்னான். ‘எண்ணிக்க மாப்ள, இன்னும் மூணே நாள், உங்க ஐயா... தமிழ்மறவனை இதே ஏரியாவுல வெட்டிச் சாய்க்காட்டி எம்பேர மாத்திக்கறேன்... வாங்கடா...’
அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் கலவரமாய் இருந்தது மனசுக்குள். தினசரி தமிழ்மறவன் அங்கே காலையில் தினத்தந்தி படிக்க வருவதை ஐயாகட்சி ஆட்கள் நோட்டம் பார்த்து வைத்துக் கொண்டார்கள். ஒருநாள் காலையில் குளித்து சாமி கும்பிட்டுவிட்டு சிகாமணி வந்து கடையைத் திறந்தான். ஷட்டரைப் பாதிகூடத் திறந்திருக்க மாட்டான். திபுதிபுவென்று முதுகுக்குப் பின்னால் சத்தம். பதறித் திரும்பினான். தமிழ்மறவன் வந்தவன் திரும்பிஓட முயற்சிப்பதும், இளமாறன் ஆட்கள் சுற்றி வளைப்பதும் தெரிந்தது.
வசமான வியூகத்துக்குள் தமிழ்மறவன் மாட்டிக்கொண்டான். சிகாமணி பதட்டத்துடன் ஷட்டரைத் திரும்ப மூடுமுன் பெரிய கல்லொன்று அவன் கண்ணாடிச் சுவரில் விழுந்து சிலுங்கென நொறுங்கியது. முதுகில் இன்னொரு கல்விழுந்தது. அவசரமாய், வெளியே இருப்பதைவிட உள்ளே இருப்பது பாதுகாப்பு  என்று தோன்றவே, சிகாமணி உள்ளே ஓடி ஷட்டரை இழுத்துவிடுமுன் இன்னொரு கல் பாய்ந்து, கதவுக் கண்ணாடி சிலுங்கென நொறுங்கியது. உள்ளே இருட்டிக் கிடந்தது. விளக்கு போட பயமாய் இருந்தது.
வெளியே கலவரமாய், குழப்பமாய்ச் சத்தங்கள். டாய் என்றுக் கத்தல்கள். ஐயோ, என அலறல்கள் யார், என்ன புரியவில்லை ஷட்டர் மேல் கற்கள் விழுந்த வண்ணமிருந்தன. அருமையான் கண்ணாடிகள்... முழுக்க இனி மாற்ற வேண்டியிருக்கும் என்றிருந்தது. ஏற்கனெவே அஞ்சி வட்டி. வட்டி கட்டவே மலைப்பாய் இருக்கிறது மேலும் எங்க கடன்வாங்க எப்படிச் சமாளிக்க என்றிருந்தது அழுகையாய் வந்தது. அவன் என்ன செய்ய முடியும்... அவன் எப்படி நடந்து கொண்டிருந்தாலும், இவர்கள் தகராறு செய்வார்கள் என்றிருந்தது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே வெளியே கலவரக் குரல்கள் அதிகரித்திருந்தன.
தமிழ்மறவனைக் குத்திவிட்டார்களா தெரியவில்லை. இதன் நடுவே யாரோ சலூன் ஷட்டர் சரியாக சாத்தாமல் லேசாய்த் தூக்கியிருப்பதைக் கவனித்திருந்தான். யாராரோ புது ஆட்கள் சரசரவென்று ஷட்டரைத் தூக்கிவிட்டு உள்ளே வந்தார்கள். கையில் உருட்டுக்கட்டை இருந்ததை கவனித்தான். கண்ணாடி என்றிருந்த அனைத்தையும் அவர்கள் உடைத்து நொறுக்கினார்கள். அதென்னவோ கண்ணாடி என்றாலே மனிதனுக்கு உடைக்கத் தோன்றுகிறது... ‘எங்க தலைவர் படத்தை ஒருத்தன் உள்ளவந்து உடைக்கிறான்... பாத்திட்டிருந்தியா நீயீ?’ என்ற்படி ஒருவன் அவன் முகத்தில் எட்டி உதைத்தான். ‘இங்க நாங்க உயிரைக் கொடுத்து போராடிட்டிருக்கோம்... உனக்கு உன் கடையும் உன் உயிரும் பெரிசாயிட்டுதா, நாயே?...’ என்றபடி ஒருத்தன் உருட்டுக்கட்டையால் அவன் முகத்தில் அடித்தபோது சிகாமணி சுருண்டு போனான். எத்தனை அடி அடித்தாலும் தாங்கிக் கொண்டு எழுந்து சண்டை போட அவன் நடிகன் அல்ல...
போலிஸ் வந்தபோது அந்த இடம் காலியாய் இருந்தது.
  •  


91 97899 87842

No comments:

Post a Comment