Wednesday, January 18, 2017


art jeeva
  • தேநீர்

எஸ். சங்கரநாராயணன்
 திகாலை நாலரை. அதுதான் அவர் விழித்துக் கொள்ளும் நேரம். சிவகுருவுக்கு அலாரமே தேவை இல்லை. விளக்கைப் போடாமல் போய்ப் பல் விளக்கினார். கோபால் பல்பொடி. உள்ளறையில் மகனோ மருமகளோ புரண்டு படுப்பதைக் கேட்டார். அதிகச் சத்தமாய்க் கொப்பளிக்கிறேனோ, என நினைத்தார். சட்டையை மாட்டிக் கொண்டார். இப்பவெல்லாம் காலையில் குளிர்கிறது. கைத்தடி கிடையாது. கண்ணாடியும் இல்லை. இருட்டில் காலால் துழாவி செருப்பை மாட்டிக் கொண்டார். கதவை உள்பக்கமாகப் பூட்டி சாவியை உள்ளே சணல் மிதியடிக்கு எறிந்தார். அது சற்று குறி பிசகி டைல்ஸ் தரையில் விழுந்து டைல்ஸ் முனகியது. ச், என்றபடி தெருவில் இறங்கினார்.
வெளிச்சமே இல்லை. மகா அமைதி. லேசான குளிர். தெரு தாண்ட வழியில் சாமி, கூடச் சேர்ந்து கொண்டார். சாமி மேலத் தெரு. வத்தக் காய்ச்சிய ஒல்லி உடல். கடந்த நாலைந்து வருடங்களாக அவர்கள் இப்படி அதிகாலையில் சேர்ந்து கொள்கிறார்கள். துரை இப்போது வருவது இல்லை. அவர்கள் எல்லாரையும் விட மூத்தவர் துரை. மாடியில் இருந்து இறங்கும்போது லாத்தி அவர் அடிபட்டுக் கொண்டார். காலில் கட்டு. அவர் அறைக்குள்ளேயே நடமாடுகிறாப் போல ஆகிவிட்டது. சாமியின் நல்ல சகா அவர்.
பேசாமல் நடந்து கொண்டிருந்தார்கள். சிறிது செருமிவிட்டு, "என்ன, நல்லாத் தூங்கினீரா?" என்று கேட்டார் சிவகுரு. சிலுசிலுவென்று கிளம்பிவந்த காற்று உடலைச் சிறிது நடுக்கியது. "ம். ம்" என்றபடி வேட்டியைக் கட்டிக்கொண்டார் சாமி. அவரது மருமகள், மகனோடு கோபித்துக்கொண்டு பிறந்த வீடு போயிருக்கிறாள். மகன் வீட்டில் உம்மென்று இருக்கிறான். இருவருக்கும் என்ன தகராறு தெரியவில்லை. இவள் இருந்தால் மருமகளை இப்படி உதறிவிட்டுப் போக விட்டிருக்க மாட்டாள். இதெல்லாம் எப்படி சுமுகமாகும், நாம என்ன செய்ய, எதுவும் புரியவில்லை. அவர் கவலைகள் அவருக்கு. சிவகுரு, சாமி, இரண்டு பேருமே அதைத்தான் பேச விரும்பி, அதைத் தவிர்த்தாப்போல சும்மா பேசிக்கொணடு வந்தார்கள்.
சின்ன ஊர். மேல்தளம் போட்ட வீடுகள் குறைவு. ஓடும் கூரையுமான வீடுகள் அதிகம். எட்டு பத்து தெருக்கள். தாண்டி நாலா பக்கமும் வயல் வெளி. எல்லாம் இப்போது வறண்டு காய்ந்து கிடக்கிறது. சுப்ரமணியர் படித்துறை இப்போது மணல்வெளியாய்க் கிடக்கிறது. பதினெட்டு படிகளும் தெரிகின்றன. தண்ணீரே இல்லை. மழைக்காலத்தில் அதில் நாலு படிகள் தெரிந்தால் அதிகம். அனுமன் மலையில் இருந்து, மழைபெய்தால் ஐந்தாறு மணி நேரத்தில் தண்ணீர் விறுவிறுவென்று இங்கே ஓடிவந்துவிடும். இப்போது மலையே காய்ந்து விட்டது. அந்தக் கோவிலும் படித்துறையும் தண்ணீர் இல்லாமல் தன் சோபையை இழந்து நிற்கிறது.
கோவில்பக்கமாக ராமையாவின் தேநீர்க்கடை. அதிகாலையில் சின்னப்பா வந்து பசுவை நிறுத்திப் பால் கறந்து தந்துவிட்டுப் போவான். வெளிச்சம் பிரிந்தும் பிரியாமலுமான காலையில் அவனது போணியில் காலைத் தளிர் வெளிச்சமாகவே பால் உள்ளே நிறையும். ஊரில் பாதிக் கிழவர்களுக்கு அந்தப் பசுவின் பாலில் காலை முதல்தேநீர் குடிக்க என ஒரு கிறுக்கு இருந்தது. தெரு விளக்கு அநேகமாக எரியாத அந்த இடத்தில் ராமையாவின் கடையில் பெட்ரோமாக்ஸ் ஆஸ்துமா நோயாளி போல தஸ் புஸ் என்று எரிந்து கொண்டிருக்கும். நீள இரு பெஞ்சில் கிழவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள். கடைக்கு இந்தப் பக்கம் ஒன்று அந்தப் பக்கம் ஒன்று என இரண்டு பெஞ்சுகள். நேரம் ஆக ஆக கிழவர்கள் ஐந்தாறுபேர் என அதிகரித்தார்கள்.
·        
சிவகுரு வந்தபோது அழுக்குச்சாம்பல் போன்ற பெட்டை நாய் ஒன்று அவர்களைப் பார்க்க எழுந்தோடி வந்தது. மூஞ்சூறு நிறத்தில் அதன் முகம கூட ஒடுங்கி எலியாய்க் கண்டது. அப்போதுதான் சின்னப்பா வந்தான். மாட்டை ஒருகையிலும் சைக்கிளை ஒரு கையிலுமாகப் பிடித்தபடி வந்தான். மடி பெருத்த சிவலைப் பசு. இடப்பக்கம் வலப்பக்கம் என மடி அசைந்தசைந்து வரும் பசு. நாலு ஈனி விட்டது. ஒண்ணரை லிட்டர் ரெணடு லிட்டர் வரை காலையில் கறக்கும் அது. "வாங்க பெரியப்பா," என கழுத்தில் கயிறு தொங்க சிரித்தான் சின்னப்பா. "என்னடா இன்னிக்கு நீ லேட்டா?" என்றார் சிவகுரு. "மாடு தூங்கிட்டது பெரிப்பா," என்றான் அவன் சிரித்தபடி.
ராமையா எப்போது தூங்குவார், எப்போது எழுந்து கடை திறப்பார் தெரியாது. இந்த இடத்தில் தேநீர்க்கடை போட வேண்டும் என்றும், அதை இப்படி அதிகாலையில் திறக்க வேண்டும் என்றும் எப்படித்தான் அவர் முடிவு செய்தாரோ? அவருக்கும் வயது, அதாகிறது அறுபது தாண்டி. அந்த ஊரில் அநேகம் பேருக்கு பிறந்த வருடமே தெரியாது. அவருக்கே காலையில் தேநீர் தேவைப்பட்டதோ என்னவோ. எதோ ஊரில் இருந்து பிழைக்க என்று இங்கே வந்து கடை போட்டவர். அவரைத் தேடி அவர் உறவு சொந்தம் என்று யாரும் வந்து சிவகுரு பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. ராமையா எப்பவும் சுத்தபத்தமாக நெற்றி நிறைய திருநீறுடன் இருப்பார். முதல்தேநீரை முருகர் படத்தில் வைத்துவிட்டு வேலையை ஆரம்பிப்பார். கடைக்கு வரும் எல்லாருமே அவருக்கு முருகர் தான். "வாங்க முருகா" என்று பிரியமாய் அழைப்பார். பளீரென்று அந்தச் சிரிப்பு. தூய வெள்ளைப் பற்கள்.
சுற்றிலுமான அந்த அமைதியில் தனியே ஒரு வெளிச்சத் தீவாய்க் கிடந்தது கடை. அதிகாலைத் தேநீருக்கென முந்தைய இரவே சிவகுருவின் மகன் அவரிடம் பணம் தந்து விடுவான். மருமகளை அந்நேரத்தில் எழுப்புவது அவருக்கே சரி என்று படவில்லை. இராத்திரி பதினொரு மணிவரை அவர்கள், மகனும் மருமகளும் என்னதான் வேலை செய்வார்களோ? கதவைச் சாத்திக்கொண்டு அவர் படுத்து விடுவார். தனிக்கட்டை. மனைவி இறந்து ஐந்து வருடம் ஆகிறது. அவள் இறந்தபின் காலையில் வழக்கம்போல எழுந்து கொள்வதும் கொஞ்சம் திகைப்பாய் இருந்தது. பிறகுதான் இங்கே அதிகாலையிலேயே தேநீர் கிடைக்கிறதைக் கேள்விப்பட்டதும் ரொம்ப உற்சாகமாகி விட்டது. விழிப்பு வந்தும் சும்மாவாச்சும் வெளிச்சம் வரும்வரை படுக்கையில் உருண்டு கொண்டு கிடக்க வெறுப்பாய் இருந்தது. ஆறரை மணி வாக்கில் பால் வரும் வீட்டில். பால்காரன் மணி அடிக்கவே தான் மருமகள் ரேணுகா எழுந்து கொள்வாள். பிறகு அவள் முகம் கழுவி பல் தேய்த்து வாசல் தெளித்து கோலம் போட்டு, அப்புறமாய்ப் போய்ப் பாலைச் சுட வைக்க வேண்டும்.
·        
சுடச்சுட முதல் வாய்த் தேநீரை உறிஞ்சினார் சிவகுரு. அந்தக் கதகதப்பு உள்ளே இறங்குவதை அனுபவித்து "ஹா" என்றார் சாமி. நாய் அவர்கள் ஒவ்வொருவராய் முகம் பார்த்து நின்றது. "நம்ம துரை, அவருக்கும் வீட்ல முழிப்பு வந்திருக்கும்யா. ஆனால் அவரால இங்க வர முடியல்ல பாவம்," என்றார். "வேளை கெட்ட வேளையில தூங்கறதே ஒரு வியாதிதான் அப்பா" என்றார் சிவகுரு. "வீட்டிலயே அடைஞ்சி கெடந்தால் சரின்னு மதியம் ஒரு தூக்கம் போடத் தோணும். ரொம்ப அலுப்பா இருக்கும். சின்ன வேலை கூட நம்மால முடியாதுன்னு சோம்பேறித்தனங் காட்டும் உடம்பு. என்ன உடம்புன்னாலும் நடமாட்டத்தை நிறுததிறக் கூடாது."
சிவகுரு எழுந்து பாட்டில் ஒன்றில் இருந்து வர்க்கி ஒன்றை எடுத்து நாய்க்கு வீசிப் போட்டார். அவர் எழுந்தபோதே நாய் உடலை அப்படியொரு நெளி நெளித்தது. "ஆமாம் முருகா" என்று சிரித்தார் ராமையா. "தலைவலி, ஜுரம்னு என்ன இருந்தாலும் நான் காலைல கடை திறந்துருவேன் முருகா. உடம்பு சொல்றபடி நாம கேட்கக் கூடாது. நாம சொல்றபடி தான் உடம்பு கேட்கணும் முருகா" என்றபடி சிறிது இருமினார். "அண்ணாச்சி உடம்பைப் பாத்துக்கிடுங்க" என எச்சரித்தார் சிவகுரு. அதற்குள் நடுத்தெரு சுப்ரமணி வந்து சேர்ந்தார். "நமக்கு ஒரு டீ போடுங்க" என்றபடி தலைக்குக் கட்டிய துண்டை அவிழ்த்து உதறி தோளில் போட்டுக் கொண்டார். வயல்பக்கம் ஒதுங்கி காலைக்கடன் முடித்திருக்கலாம் அவர். மணிக்கு தமிழ்ப் பற்று உண்டு. கலைஞரின் ரசிகர். திமுக கூட்டங்கள் நடந்தால் தவறாமல் போய்வருவார். "என்னமா தமிழ் பேசறாங்க" என்பார். என்றாலும் ஆன்மிகக் கூட்டங்கள் பிடிக்காது.
அவர் வந்து எதிர் பெஞ்சில் அமர்ந்து கொண்டபடியே "என்ன குரு? இந்த வருசமாவது மழை கிழை உண்டா? போன வருசம் கவுத்திட்டது நம்மள..." என்று பேச்செடுத்தார். நாய் ஒரு எதிர்பார்ப்புடன் அவர்கிட்டே வந்து நின்றது. ''சனியனே'' என அவர் துண்டை உதறினார். நாய் ஒரு துள்ளலுடன் விலகிப் போனது. ஆறு மணி வாக்கில் செய்தித்தாள் வரும். சைக்கிளில் போய் பக்கத்து டவுணில் இருந்து சிவநேசன் வாங்கி வருவான். போகும் வழியில் தேநீர்க்கடையில் செய்தித்தாளைப் போட்டுவிட்டுப் போவான். அதுவரை பொதுவாக அவர்கள் பேசிக் கொள்வார்கள். செய்தித்தாள் வந்ததும் அதை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக் கொள்வார்கள்.
தினத்தந்தி. 'கள்ளக்காதல், கொலை, கொள்ளை, சிறப்பிதழ்' தினசரி வெளியிடுவார்கள். பக்கத்துப் பக்கம் தங்க நகை போல கொலை கொள்ளை என அலங்கரித்துக் கொள்ளும். தலைப்புச் செய்தி என்று ஒன்றை வைத்துக் கொண்டு தொடர் செய்தியாக அதைத் தொட்டே அடுத்தடுத்த பக்கங்களில் துணைச் செய்திகள். செய்திகளை ஒரு சுவாரஸ்யமான கதை போல் தருவது தினத்தந்தி. முன்னெல்லாம் தலைப்புகளில் நிறைய ஆச்சர்யக் குறிகள் போட்டார்கள்! இப்போது இல்லை!!
ஒருதரம் பக்கத்து வேலம்பட்டியில் கொலை ஒன்று நடந்துவிட்டது. கணவனே மனைவியைக் குத்திக் கொலை பண்ணிவிட்டான். நல்ல பய அவன். பாவம் என்னமோ ஒரு வேகம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு எகிறிட்டான் போல. தினத்தந்தி நிருபர் வந்து அந்த வீட்டில் படம் வாங்கிப் போனார். "கலர்ப்படம் இல்லியா?" மறுநாள் அதைப்பற்றி தேநீர்க்கடையில் பெரிய விவாதம் நடந்தது. "இவளுகளுக்கு ஆசைய்யா. துட்டு எவ்வளவு இருந்தாலும் பொம்பளைங்களுக்குத் திருப்தி வர மாட்டேங்குது. காசு ஆசை காட்டி, எதும் வாங்கிக் குடுத்து கிடுத்து அவங்களை ஆம்பளைங்க ஏமாத்திர்றாங்க." துரைதான் ஆவேசமாய்ப் பேசியது. அவர் பெண் ஒருவனைக் காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதம் பிடித்தது. கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் அவனோடு வாழ முடியாமல் திரும்பி வந்துவிட்டது. அந்தக் கோபம் அவருக்கு. நல்லவேளை கௌரவம் பார்க்காமல் திரும்ப வந்தது. தற்கொலை கிற்கொலைன்னு போகவில்லை.
போயிருந்தால் தினத்தந்தி நிருபர் அவங்க வீட்டுக்கு வந்திருப்பான். கலர்ப்படம் கேட்பான். அட அந்தப் ¢பெண்ணைக் கலர்ல எடுத்தாலும் படம் கருப்பு வெள்ளையாத்தான் தெரியும். அது வேற கதை.
·        
தேநீர்க்கடை என்றாலும் பீடி சிகெரெட் விற்பனை கிடையாது. ராமையா அதை விரும்பவில்லை. "அப்பிடி லாபம் சம்பாதிக்கணுமா முருகா," என்பார். வர்க்கி, வாழைப்பழம், பன் என வைத்திருப்பார். டீக்கடையில் கிளாஸ் கழுவுகிற தண்ணீரை ஒரு பாத்தி எடுத்து ஓரத்துக் குழியில் விட்டிருப்பார். ரொம்ப வெயிலானால் நாய் அந்த ஈரத்தில் படுத்துக் கொள்ளும். அப்படியே மல்லாக்க அது உருண்டால் எலி போலவே இருக்கும் பார்க்க. ராமையா வாழைப்பழத் தோலை வீணாக்காமல் ஒரு கூடையில் போடச் சொல்வார். தினமும் லெட்சுமி வந்து அதைத் தன் ஆட்டுக்கு என எடுத்துப் போவாள். சுப்ரமணிக்கு தேநீர் சக்கரை இல்லாமல் போட வேண்டும். குருவுக்கு அரைச் சர்க்கரை. அவர் இப்போது பையனுடன் வேற்றூர் போய்விட்டார். யார் யாருக்கு எந்த ருசியில் போட வேண்டும் என்பது இந்த வருடங்களில் ராமையாவுக்கு அத்துப்படி. துரைக்கு லைட் டீ. பால் வாசனை வரவேண்டும். அந்தக் கூட்டத்தில் முதலில் கடைக்கு வருகிறவர் துரைதான். பாவம் அவர் வீட்டைவிட்டு இறங்க முடியாமல் ஒடுங்கி விட்டார்.
"போயிப் பாத்தீங்களா முருகா? எப்பிடி இருக்காரு?" என்று கேட்டார் ராமையா. யாருக்கும் புரியவில்லை. "யாரு?" என்றார் சாமி. "அதான்... துரையைப் பாத்திட்டு வந்தீங்களா? எப்பிடி இருக்காரு?" சிவகுரு நேற்று அவரைப் பார்க்கப் போயிருந்தார். "நல்லாதான் இருக்காரு. கால் வீக்கம் இன்னும் வடியல. சட்னு கால் பிசகி திரும்பிக்கிட்டது போல. ஊனி நடந்தால் வலி சுண்டுதுங்காரு. என்ன அவசரம். மெதுவாச் சரியாவட்டும். பேசாம வீட்ல ஓய்வெடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்."
"காலைல வந்து நம்ம கூட உட்கார்ந்து, இப்பிடி டீ சாப்பிட்டுக்கிட்டே நாலு வார்த்தை பேசணும்னு இருக்கு அவருக்கு" என்றார் மணி. "எனக்குந்தான் ரவி ஊருக்குப் போனது கையொடிஞ்சாப்போல ஆச்சி," என்று பெருமூச்சு விட்டார். ரவியின் கடைசிப் பையனின் சம்சாரம் முழுகாமல் இருக்கிறாள். மருமகளுக்குப் பிரசவ சமயம் என்று ரவியும் அவரது மனைவியும் கிளம்பிப் போனார்கள். "இவபாடு கழுதை ஓடிப்பிடும். எம்பாடுதான் திண்டாடிரும்யா" என்றார் ரவி. "அங்கபோயி நான் என்ன செய்யறது, தெரியல. இங்க ஒண்டியாளா நீரு மாத்திரம் எப்பிடி இருப்பீரு? சோத்துக்கு என்னா பண்ணுவீரு?... அப்டிங்கா இவ..." காலை பத்து மணிக்கு பஸ் ஏறினாலும், அன்றைக்குக் காலையில் அவர் நண்பர்களோடு வந்து தேநீர் அருந்திவிட்டுத்தான் போனார்.
·        
போன வாரம் வரை அவர்கள் ஜமாவில் கிருஷ்ணன் இருந்தார். கிருஷ்ணன் ரிடையர்டு போஸ்ட் மாஸ்டர். ரொம்ப வேடிக்கையான மனுசன். அவர் இருக்கும் இடம் எப்பவுமே கலகலப்பாக இருக்கும். வேடிக்கை பண்ணுவார். இந்தக் கையில் காசை வைத்து மூடிக்கொண்டு அடுத்தாள் காதில் இருந்து எடுத்துக் காட்டுவார். விடுகதை போடுவார். புதுப்புது செய்திகள் சொல்வார். "நம்ம போஸ்ட் ஆபிஸ், அதுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமாவே?" என்றார் ஒருநாள்.
ஆங்கிலேயனின் மெயில் வண்டி, லாரி போல் பெரிய வண்டி, சிவப்பு வண்ணத்தில் தினசரி பிரதான சாலைவழியே போகும்போது அந்தந்த ஊருக்கு உண்டான தபால்களை ஊருக்கு வெளியே போட்டுவிட்டுப் போகும். இப்போது செய்தித்தாள் பண்டல்களை பஸ்சில் கொண்டு வந்து போடுகிறார்களே, அதைப்போல. எந்த ஊருக்கான தபால்கள், எங்கே போட வேண்டும் எனத் தெரிய ஊர் எல்லையில் ஒரு 'போஸ்ட்', அதாவது கம்பு ஊனி அடையாளம் வைத்திருப்பார்கள். உள்ளூரில் இருந்து சைக்கிளில் போய் அந்தத் தபால் பைகளை எடுத்து வரவேண்டும். அந்த போஸ்ட் ஊனிய ஆபிஸ் என்பதால் அதற்குப் பினனாளில் 'போஸ்ட் ஆபிஸ்' என்றே பேர் வந்துவிட்டது.
கிருஷ்ணன் போன வாரம் இறந்து போனார். நல்லாதான் இருந்தார். காலை நாலரை மணி தேநீர் கூட வந்து அருந்தினார். சிவகுருவின் நல்ல சிநேகிதர் அவர். அவரிடம் வேடிக்கை யெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்குப் போனார். சிவகுருவும் கிளம்பினார். காலை நாலரை மணிக்கு அவர்கள் ஒன்று கூடினால், மெல்ல வெயில் ஏறும். தேநீர்க்கடைப் பக்கம் புளிய மரம் ஒன்று உண்டு. அதன் அடியில் நிழல் மெல்ல அவர்களை விட்டு விலகி பெஞ்சுகளில் வெயில் எட்டும் வரை அங்கேயே இருப்பார்கள். பிறகு பிரிய மனம் இல்லாமல் பிரிவார்கள். வீடு அவர்களுக்கு போரடித்தது.
சிவகுரு வீட்டுக்கு வந்திருக்கக் கூட மாட்டார். பத்தே நிமிடம். கிருஷ்ணனின் பையன் சைக்கிளில் வந்து முச்சிறைக்க நின்றான். "அப்பா..." என்றான். மூச்சிறைத்தது. "என்னாச்சிடா?" என சிவகுரு வீட்டைவிட்டு வெளியே வந்தார். "உடம்பு சரியில்லை" என்று சொல்வான் என்றுதான் பதறியது. எதிர்பார்க்கவே இல்லை. வந்து "ரேவதி?" என்று மனைவியைக் கூப்பிட்டார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். "தண்...ணீ?" என்றார். அவள் இவரைப் பிடிப்பாளா, தண்ணி எடுத்துவரப் போவாளா. அவர் நிலைமையே அவளுக்குத் தலையைச் சுற்றியது. தண்ணீருடன் அவள் திரும்பி வருமுன் இறந்திருந்தார்.
"கிருஷ்ணன் போனதுலயே நீரு ஆளு அசந்திட்டீருய்யா" என்றார் மணி சிவகுருவைப் பார்த்து. சில நாட்கள் கிருஷ்ணன் வீட்டிலேயே கூட இரா தங்கியிருக்கிறார் சிவகுரு. கண்ணதாசன் பாடல்களை ரசித்து ரசித்துப் பேசுவார் கிருஷ்ணன். கண்ணதாசனை ஒருதரம் நேரில் பார்த்திருக்கிறார். அதைக் கட்டாயம் சொல்லி சந்தோஷப் பட்டுக் கொள்வார். கண்ணதாசன் இறந்தபோது செய்தித்தாளில் போஸ்டர், பிரபல பின்னணிப் பாடலாசிரியர் மரணம், என சஸ்பென்ஸாய்ப் போட்டார்கள்.
கிருஷ்ணனின் சாவுக்கு ராமையாவும் வந்திருந்தார். கூடவே நாயும் சிறிது தூரம் ஓடிவந்தது. மதியம் தான் எடுத்தார்கள். ராமையா கடையை மூடுவதே இல்லை. கடைக்கு, சொல்லப்போனால் கதவுகளே கிடையாது. மரத்தடியில் ஒரு மரத்தடுப்பு. பெஞ்சு. ஒரு மேசைஉயர பெஞ்சில் கரி அடுப்பு போட்டு பாய்லர். மண்ணெண்ணெய் ஸ்டவ். உள்ளே கூரை எடுத்த சிறு பத்துக்குப் பத்து தட்டி மறைப்பு. கயிற்றுக் கட்டில் கிடக்கும். அதனடியில் சொற்ப உடைமைகளுடன் ராமையாவின் டிரங்குப் பெட்டி ஒன்று. இரவு ஏழு எழரை மணிக்கு மேல் கடைக்கு ஆள் வராது. சீக்கிரம் எட்டுக்கெல்லாம் படுத்து விடுவார் ராமையா. பெட்ரோமாக்ஸை அணைத்து விடுவார்.
சில ராத்திரிகளில் பொழுது போகவில்லை என்றால் சிவகுருவும் அவருடன் இருட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். நாய், அதுவும் அருகே வந்து படுத்துக் கிடக்கும். அது யாரைப் பார்த்தும் குரைத்ததே கிடையாது. யாரையுமே அது சந்தேகப்பட்டதே கிடையாதோ என்னவோ. கிருஷ்ணன் இறந்த பிறகு ஒரு ராத்திரி ராமையாவுடன் வந்து தங்கினார். சிவகுரு நல்ல சங்கீத ரசிகர். சங்கீதம் என்றால் கச்சேரி கிச்சேரி எல்லாம் கிடையாது. ராகங்களும் தெரியாது. சினிமாப் பாடல்கள். "டி எம் எஸ் மாதிரி பாட இனி ஒருத்தன் வரணும்யா," என்று மனசாறச் சொல்வார். டி எம் எஸ் இறந்த செய்தியை தினத்தந்தியில் பார்த்தபோது அழுதேவிட்டார். கடையில் தொங்கும் போஸ்டர் சஸ்பென்ஸாய், 'பிரபல பின்னணிப் பாடகர் மரணம்' என்று சொன்னது. முதல் பக்கம் செய்தி. இரண்டாம் பக்கம் பிரமுகர்கள் புகழாரம். மூணாம் பக்கம் அவரது உடல் கண்ணாடிப் பெட்டிக்குள், என படம். இன்னொரு பக்கத்தில் வாழ்க்கைக் குறிப்பு. ஒரு பக்கம் முழுசும் பிரபலங்கள் வந்து மாலை அணிவிக்கும் புகைப்படங்கள். அந்தப் பேப்பரை இன்னமும் வைத்திருக்கிறார்.
ராத்திரிகளில் ராமையாவுடன் அவர் தங்கினால் கயிற்றுக் கட்டிலின் பக்கத்தில் வாசல்பெஞ்சுகளை உள்ளே கொண்டுவந்து சேர்த்துப் போட்டுக்கொண்டு அவர் பக்கத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு பாட்டெடுப்பார். வெளிச்சம் இல்லாத இரவு. பெட்ரோமாக்ஸ் அணைத்தாகி விட்டது. "ஆடாத மனமும் உண்டோ?" என்று ஒரு பாட்டை இருட்டில் ஆரம்பித்தார். ஒவ்வொரு பாட்டாக மாறிக்கொண்டே வந்தது. இடையில் பாட்டை சிவகுரு நிறுத்தி, "கண்ணதாசனைப் பத்தி கிருஷ்ணன் பேசணும்யா" என்கிறாப் போல எதாவது பேசினார். ராமையாவிடம் இருந்து பதில் வரவில்லை. அவர் எப்பவோ தூங்கி யிருந்தார்.
·        
எல்லார் கஷ்டங்களையும் கவலைகளையும் ராமையா புன்னகையுடன் கேட்டுக் கொள்வார். தினத்தந்தி படித்தால் சுப்ரமணி சாணக்கியன் சொல், ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார், எல்லாமே வாசிப்பார். நாய் அவரிடம் மட்டும் சற்று தள்ளியே நிற்கும். அவருக்கு இந்த நாயைப் பிடிக்காது. நாளிதழ் பார்த்து அவர்கள் போட்டுக்கொள்ளும் சின்னச் சண்டைகளையும் ராமையா வேடிக்கை பார்ப்பார். அதில் அவர் குறுக்கிட மாட்டார். எல்லாருமே அவருக்கு நண்பர்கள். ஊரில் சண்டை வந்து சில பேர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பார்கள். ஆனால் ரெண்டு பேருமே அவர்கடைக்கு தேநீர் அருந்த என்று வந்து போகிறவர்களாக இருப்பார்கள்.
ராமையா சட்டை அணிந்து பார்த்திருக்கவே முடியாது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்து படித்து ஆளாகிய ராஜேந்திரன் அன்றைக்கு, வேலை கிடைத்துப் போனபின், ரெண்டு வருடம் கழித்து ஊர் திரும்பினான். ராஜேந்திரன் வீட்டில் மின்சாரம் கிடையாது. இங்கேதான் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் வந்து உட்கார்ந்து படித்து பாஸ் பண்ணினான் ராஜேந்திரன். பஸ் அவனைக் கோவில் தேரடிப் பக்கம் இறக்கி விட்டுவிட்டுப் புழுதி பறக்கப் போய்விட்டது. அதிகாலை அஞ்சு மணி. நாய் தலைதூக்கிப் பார்த்தது. அதற்கு ரொம்ப சந்தோஷம். கீச் கீச் என்று எலியாகவே குரல் எடுத்தது நாய். இந்நேரம் நம்ம ஊருக்கு யார் வர்றாங்க, என்று கிழவர்கள் பெஞ்சில் அமர்ந்தபடி திரும்பிப் பார்த்தார்கள். "அட ராஜேந்திரனா? என்னப்பா எப்பிடி இருக்கே?" என்று கூப்பிடடார் சிவகுரு. "நல்லா யிருக்கேன் ஐயா" என்று அவர் காலைத் தொட்டு வணங்கினான் ராஜேந்திரன். அந்த மரியாதை மனசைத் தொட்டது. "நல்லாருப்பா. நல்லாரு" என மனசாற வாழ்த்தினார் சிவகுரு. "டீ சாப்பிடு."
நாய் புட்டத்தை ஆட்டியாட்டி அவன் மேல் தாவ முயன்றது. "சாப்பிடுவோம். நம்ம ஊர் டீ சாப்பிட்டு வருசமாச்சுதே?" என்று ராஜேந்திரன் சிரித்தான். நாயை நெற்றியில் தடவிக் கொடுத்தான். அப்படியே கண்ணை மூடிக் காட்டியது நாய். நல்ல உடை உடுத்தி ஆளே பெரியாம்பளை ஆகியிருந்தான். ராஜேந்திரன் சொன்னான். "மாமா, உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்" என்றான். தன் சூட்கேசில் இருந்து, அழகான சட்டை ஒன்று, எடுத்தான். ஆரஞ்சு வண்ணம். "இது உங்களுக்கு மாமா" என்று ராமையாவிடம் நீட்டினான். ராமையாவுக்கு அதைப் பார்க்க கண் பனித்து விட்டது. அவர் ஊர் எது, உறவு எது என்று அதுவரை யாருக்குமே தெரியாது. ராஜேந்திரன் "மாமா" என்று உறவு சொல்லி எப்படி அவரிடம் பாசம் காட்டுகிறான், என்று அங்கேயிருந்த பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ராஜேந்திரன் ஒரு வர்க்கி பிஸ்கெட்டை எடுத்து கையை உயர்த்தி நாய்க்குக் காட்டினான். க்விக் என விநோத சத்தத்துடன் நாய் உற்சாகமாய்த் துள்ளியது.
கிழவர்கள் கூடும் இடம் என அது ரொம்ப முக்கியமான இடமாக ஆகிப் போயிருந்தது. யாரையாவது தேடி வர வேண்டியிருந்தால் அங்கே முதலில் வந்து "நம்ம சாம்பமூர்த்தி இந்தப் பக்கமா வந்தாப்லியா?" என்று ராமையாவிடம் விசாரித்துப் போனார்கள். அந்த ஊரில் யாரைப்பற்றி வேண்டுமானாலும் ராமையாவிடம் கேட்கலாமாய் இருந்தது. அந்த ஜமாவுக்கு ராமையா எதாவது ஒருவகையில் துணை. பேச்சுத்துணை, தேநீர்த்துணை. "நம்ம சேது வந்தா, இப்ப பஸ்சுல வந்து இறங்குவாப்டி. இந்த நாநூறு ருவ்வாய நாங் குடுத்ததாக் குடுத்திருங்க" என்று கொடுத்துவிட்டு சைக்கிளில் ஏறிப் போவார்கள். நம்பகமான ஆள். வார்த்தை தவற மாட்டார். எல்லாருக்கும் உதவும் சுபாவம். சிவகுருவின் பாடல்களின் ரசிகர். "ஏரிக்கரையின் மேலே, நல்லாப் பாடறீங்க" என்பார். "ஏய் அது அந்தக் காலத்துல காதலியைப் பார்த்து பாடியிருப்பாரு" என்று சாமி சொல்லிச் சிரிப்பார். சாமிக்கு ராமையாவின் பக்தி பிடிக்கும். "வாய் மணக்க மணக்க முருகா முருகா... ன்றாரேய்யா" என்பார்.
·        
காலை நாலரைக்கு சிவகுரு வழக்கம் போல விழித்துக் கொண்டார். போய்ப் பல் தேய்த்தார். கோபால் பல்பொடி. வீட்டை உள் பக்கமாகப் பூட்டிவிட்டுத் தெருவில் இறங்குமுன் சாமி அவரைப் பார்க்க எதிரில் வந்தார். "என்னய்யா?" என்றார் சிவகுரு பதறி. இருவருமாய் ஒடினார்கள். தேநீர்க்கடையில் பெட்ரோமாக்ஸ் எரியவில்லை. அவர்களைப் பார்த்ததும் நாய் எழுந்தோடி வந்தது. கயிற்றுக் கட்டிலில் ராமையா கைமடங்க குப்புறக் கிடந்தார். அவர் கிடந்த நிலையே கலவரப் படுத்தியது. போய் அவரை நிமிர்த்துமுன் உடல் குளிர்ந்து சில்லென்றிருந்ததை உணர முடிந்தது. "ஒத்த ஆளா என்னால இவரை நிமிர்த்திப் போட முடியலய்யா" என்றார் சாமி. அப்போது தான் சின்னப்பா சைக்கிளை உருட்டியபடி மாட்டுடன் வந்தான். அவனும் ஓடிவந்தான். கட்டப்படாமல் மாடு அப்படியே நின்றது. பெரிய பெரிய மூச்சுகளாய் அது விடுவதே பெட்ரோமாக்ஸ் ஏற்றினாப் போலக் கேட்டது. நாய் யாரையும் சட்டை செய்யாமல் ஒரு இடம் பார்த்துப் போய்ச் சுருண்டு கொண்டது.
"ஐயய்ய" என்றான் சின்னப்பா. அவசரமாக சைக்கிளில் ஏறிப்போய் சிகாமணியைக் கூட்டிவந்தான். சித்த மருத்துவம் தெரிநதவன் சிகாமணி. அவன் நாடி பார்த்துவிட்டு அடங்கிவிட்டதாகச் சொன்னான். அதற்குள் சுப்ரமணி வந்திருந்தார். கூட்டத்தைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக அவர் வந்தார். ராமையாவின் வேட்டியாலேயே அந்தக் கயிற்றுக் கட்டிலில் முகத்தை மூடினார்கள். எல்லாருக்குமே ஒரு திகைப்பு ஆளை மருட்டியது. எத்தனை நல்ல மனுசன். ஊருக்கே உபகாரமான ஆள். ஆறு மணிக்கு பேப்பர்காரன் வந்தான். ஊருக்குள் பேப்பரில் இல்லாத செய்தி ஒன்றை அவன் கொண்டு சென்றான்.
சைக்கிள் கேரியரை விட மகா பெரிய மரப் பெட்டியில் பேக்கரி ஐட்டம் எடுத்துக்கொண்டு வரும் கேசவன், அவனும் வந்தான். வாரம் இருமுறை வந்து சரக்கு போட்டுவிட்டுப் போவான் அவன். ''ஐய எந்தா இது'' என அவன் இறங்கி சைக்கிளை ஸ்டாண்டு போட்டான். நாய் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. பொதுவாக கேசவனைப் பார்த்ததும் அது உற்சாகமாக ஓடிவரும். கேசவன் அதற்கு ஒரு வர்க்கி போட்டான். அதைக்கூட அது தொடவில்லை. மரணம் அதற்குப் புரிந்தாப் போல இருந்தது. நாய்கள் தாம் எத்தனை சூட்சுமமாக இயங்குகின்றன.
யாருக்குமே என்ன பேச, என்று தெரியவில்லை. அந்தக் கிழவர்களில் யாரோ ஒருவர் வர முடியாமல் போகலாம். வெளியூர் போகலாம். இறந்தும் போகலாம்... என்றாலும் மற்றவர்களுக்கு அந்தக் கடையில் சந்திக்க முடிந்தது. ரயில்வே ஸ்டேஷன் ஜங்ஷன் போல. அங்கே அவர்களால் கூடமுடிந்தது. இப்போது எதிரேபாராமல், ராமையாவே இறந்து போனார். இனி அதிகாலைத் தேநீர்? அவர்கள் எங்கே இப்படிக் கூடிப் பேச முடியும்? சுப்ரமணி "ராஜேந்திரனுக்குத் தந்தி தரலாம்," என்றார் ஒரு யோசனை போல. அவனுக்கு எப்பிடியும் தகவல் தர வேண்டும், என அவர் நினைத்தார். பஞ்சாயத்துத் தலைவருக்கு யாரோ தகவல் சொன்னார்கள். அவர் டவுணில் இருந்து பெரிய மாலை வாங்கிவரச் சொல்லியனுப்பினார். யாரோ சைக்கிளில் போனார்கள். அவர் மாலையுடன் வந்து ராமையாவுக்குப் போட்டுவிட்டு கும்பிட்டார்..
நேரம் ஓடியது. கூட்டம் சேர்ந்தபடி யிருந்தது. பலபலவென்று விடிந்திருந்தது. கிழவர்களுக்கு ரொம்ப அசதியாய் இருந்தது. சாமியிடம் தலையாட்டிவிட்டு சிவகுரு வீட்டைப் பார்க்கக் கிளம்பினார். "போயிட்டு ஒரு அரைமணி கழிச்சி வரேன்" என்றார். "நானும் வரேன்" என்றார் சாமி. வீட்டைப் பார்க்க நடந்தார்கள். வாசலில் சிவகுருவின் மருமகள் ரேணுகா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் வருவதைப் பார்த்தாள் ரேணுகா. அவர்கள் முகத்தைப் பார்த்தாள். "என்னாச்சி மாமா?" என்று சிவகுருவிடம் கேட்டாள் ரேணுகா. "நம்ம டீக்கடை ராமையாம்மா..." என்றார். உடம்பு சிறிது தூக்கிப்போட்டது. "இறந்துட்டாரு."
"ஐயய்ய, எப்ப?" என்றாள் ரேணுகா. "காலைல நாங்க போனபோதே இறந்து கிடந்தாரு" என்றார் சிவகுரு. "உள்ள வாங்க. நீங்களும் வாங்க" எனறு சாமியை அழைத்தாள் அவள். "ஒரு நிமிஷம். டீ போடறேன்" என்றாள் ரேணுகா.
·        

91 97899 87842

இருவாட்சி இலக்கியத் துறைமுகம் இதழ் 8ல் வெளியானது

No comments:

Post a Comment