சிறுகதை - நன்றி சங்கு இலக்கிய இதழ்
அவ்ட் ஆஃப் சிலபஸ்

எஸ். சங்கரநாராயணன்
ரில் இருந்து தகவல் வந்தது. நாச்சியார் அம்மாள் மரணம். எங்கள் அம்மாவின் அம்மா அவர். இத்தனை வருடமாக அவர்களோடு எங்களுக்குப் பேச்சு வார்த்தை இல்லை. எந்தத் தொடர்பும் கிடையாது. அப்பாவை அம்மா கல்யாணம் செய்துகொண்டது அவர்கள் யாருக்கும் சம்மதம் இல்லை. அம்மா வேறு சாதி. அப்பா வேறு சாதி. வேண்டாம் என்று அம்மாவீட்டில் மகா பிடிவாதம். அம்மா அசரவில்லை. எதிர்ப்புகளை அவள் அத்தனை உறுதியுடன் சமாளித்தாள். “நான் தற்கொலை செய்துக்குவேன்னு எல்லாம் பயப்படாதீங்க. மாட்டேன். ஆனால் வேற யாரையும் கல்யாணங் கட்ட மாட்டேன்” என்றாள் அம்மா. அத்தனை உக்கிர காளியாய் வீட்டில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள் விமலா. அதை பிறகு மொட்டைமாடியில் எனக்கு சோறு ஊட்டிவிட்டபடியே சொல்லும்போது அத்தனை சிரிப்பு அவளுக்கு. தனக்குள் அந்த நிகழ்ச்சிகளை அசைபோட்டு வெளியே அதன் பிரகாசத்தைக் கசிய விட்டாள் அம்மா. அம்மா ஒரு வைர மூக்குத்தி அணிந்திருப்பாள். அவள் சிரிக்கும்போது அவள் முகமெல்லாம் பொலியும். இன்னும் சிரிக்க மாட்டாளா என்றிருக்கும் எனக்கு.
இப்போது நான் வளர்ந்த பிள்ளை. ஒன்பதாம் வகுப்பு. சில பெண்களின் பார்வையில் எனக்குள் ஒரு குறுகுறுப்பு காண்கிறது. உடனே அவள் என்ன சாதி, என்று ஒரு தேவையில்லாத யோசனையும் ஓடுகிறது. அ. நானே எந்த சாதியில் சேர்த்தி? அதுவே குழப்பம் எனக்கு. தந்தி வந்திருந்ததை நான்தான் அம்மாவுக்கு வாசித்துக் காட்டினேன். முழுச் சிவப்பு காகிதத்தில் தந்தி. மரணச் செய்தி. நீலம் என்றால் யாரோ சீரியஸ் அல்லது பயணப்பட்டு வருகிறார்கள், என்கிற அவசரத் தகவல். வெறும் சேதி அறிவிக்கிற தந்திகள் வெள்ளைத் தாளில் காணும்… எங்கள் வகுப்பில் சொல்லித் தந்திருக்கிறார்கள். இது சிவப்புக் காகிதம்.
ஈரக் கையைத் துடைத்தபடி அம்மா கிடடே வந்தாள். அப்பா இல்லை. எங்கோ வெளியே போயிருந்தார். நான் தந்தியை அம்மாவுக்கு வாசித்துக் காட்டினேன். யாரும்மா அது நாச்சியார்? அம்மா சட்டென முந்தானையில் முகம் மறைத்து அழ ஆரம்பித்தாள். அத்தனை வருடம் ஆனாலும் அவளுக்குத் தன்அம்மா ஞாபகங்கள் இருக்கவே செய்தன. சேதி கேட்டவுடன் பெண்கள் அழ வேண்டும், என்று மரபு கூட இருக்கலாம்.
அம்மா அழுது நான் பார்த்தது இல்லை. சட்டென இப்படியாய் அம்மாவை நான் பார்க்க நேர்ந்தது குறித்து எனக்கு வருத்தமாய் இருந்தது. மத்தபடி என் அம்மாவின் அம்மா, நாச்சியார் அம்மாள், அவர்களை நான் பார்த்ததே கிடையாது. அவர்களும் என்னைப் பார்த்தது இல்லை! அவர்கள் ஊர்ப்பக்கமே நாங்கள், நான் அப்பா அம்மா, போனது கிடையாது. கோடை விடுமுறை என்றால் அப்பாவின் அம்மாஅப்பா வீட்டுக்கு என்று அம்மாவுடன் என்னை அனுப்புவார் அப்பா. அம்மாவின் ஊருக்கு ஒரு பத்து பதினைந்து கிலோமீட்டருக்குள் இருந்தது நாங்கள் போன ஊர். ஒரு எட்டில் நாங்கள் அங்கே போய்விடலாம். அம்மா போனதே கிடையாது. அது மேல மதகுப்பட்டி. இது கீழ மதகுப்பட்டி. அவ்வளவுதான். அம்மா கீழூர் வந்திருக்கிறதை அவர்கள் வீட்டில் சொல்லாமலா இருப்பார்கள் யாராவது? அவர்களும் தேடி வந்து நான் பார்க்கவில்லை. அம்மாவும் போக மாட்டாள். அப்பாவை மீறி அம்மா எதுவும் செய்ததே கிடையாது. அப்பாவுக்குப் பிடிக்காத எதையும் அவள் யோசிக்கவே மாட்டாள் என்று இருந்தது எனக்கு. இது பயமா, மரியாதையா, அன்பேதானா… எனக்குத் தெரியாது. நான் சின்னப் பையன். ஒன்பதாங் கிளாசுக்கு இது அவ்ட் ஆஃப் சிலபஸ். இந்த வயசில் அவ்ட் ஆஃப் சிலபஸ் விஷயங்களே நிறைய மனசில் துடிக்கின்றன. ஏன் தெரியவில்லை. எங்க கிளாசில் தேனுகா, பாரதி, லீலா மூவரில் யார் அழகு?... என்று என்னைக் கேட்டான் சுப்ரமணி. எனக்கு அப்படி கணக்குப் போட்டுச் சொல்லத் தெரியவில்லை. நீ சின்னப் பிள்ளை, என்று சிரித்தான் அவன். இரு அம்மா என்னவோ சொல்கிறாள்…
“கோபி உங்க அப்பா எங்க இருக்காரு… போயிப் பாத்திட்டு வரியா?” என்றாள் அம்மா. அம்மா சாவுக்குப் போக விரும்புகிறதாக எனக்குத் தோன்றியது. அவர்கள் தகவல் தந்திருக்க வேண்டியது இல்லை. எப்படியோ முகவரி கிடைத்து தந்தி அடித்திருக்கிறார்கள். நான் சொல்லியாகி விட்டது. வருவது வராதது உன் பாடு, என்று பந்தை இந்தப் பக்கம் அடித்திருக்கிறார்கள். விளையாடுவது இப்போது நம் முறை. அம்மா போக மாட்டாள், என்றுதான் நான் யோசித்திருந்தேன். ஏனெனில் ஐந்தாறு வருடங்கள் முன்னால் அவளது அப்பா, கோவிந்தராஜு இறந்து போனார். நாங்கள் கீழூரில் கேள்விப்பட்டோம். அம்மாவுக்குத் தகவல் சொல்லவே இல்லை. அதுபற்றி அம்மாவும் அப்போது, சேதி கேள்விப்பட்ட போது அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. சேதி சொல்லிய மாமியிடம் ஒரு தலையாட்டலுடன் கேட்டுக் கொண்டாள். சேதி கேட்ட ஜோரில் இப்போது அழுதாளே? அப்போது அழவில்லை. நாங்கள் கோடை விடுமுறைக்குப் போயிருந்தோம். அவங்க அப்பாவைப் புதைத்த இடம் புல் முளைத்திருக்கும் இபபோது. தாத்தாவின் உடல் ரோமங்களே அவை.
அம்மா போக விரும்புவதாக அவளது இந்தப் பேச்சு எனக்குப் பட்டது. எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. என் பாட்டி உயிரோடு இருந்தபோது பார்க்க நினைக்காத அம்மா. தன் அப்பாவை விட அம்மாவை அவள் நேசிக்கிறாளோ? ஒருவேளை அவளுக்கு முன்பே அந்த ஆசை, அம்மாவைப் போய்ப் பார்க்கிற ஆசை இருந்திருக்கலாம். அப்பாவுக்கு பயந்து அதைச் சொல்லாமல் விட்டிருக்கலாமோ என்னவோ? இந்த ரெண்டுங் கெட்டான் வயசில் எதையுமே சரியான முடிவை நோக்கி சிந்திக்க முடியவில்லை.
நான் வாசலுக்கு வந்து செருப்பை மாட்டிக் கொள்ளும்போது அப்பாவே வந்துவிட்டார். படபடவென்று அப்பா வரும் பைக் சத்தம் கேட்டது. எங்கள் எல்லாருக்குமே அந்தச் சத்த அடையாளம் பழகிவிட்டது. “விமலா?” என்றபடி அப்பா உள்ளே நுழைந்தார். என் பக்கம் திரும்பி “நீ எங்கடா கிளம்பிட்டே?” என்றார். “உங்களைக் கூட்டிட்டு வரலாம்னுதாம்ப்பா…” என்றேன் நான். “நீ உள்ள வா…” என்றபடி அப்பா உள்ளே போனார். அம்மா அவரைப் பார்த்தாள். “அழுதியா என்ன?” என்றார் அப்பா அம்மாவைப் பார்த்து. “தந்தி வந்ததுப்பா…” என்றபடி நான் உள்ளே வந்தேன். “ம். தெரியும்” என்றார் அப்பா. தந்தி சேவகன் திரும்பிப் போவதைப் பார்த்து அவனிடம் சேதி கேட்டிருக்கிறார் அப்பா. அப்படியே அவனிடமே பதில் தந்தி தந்தனுப்பியும் இருக்கிறார். “விமலா ஸ்ட்டார்ட்டிங். கீப் பாடி.” நீலத்தாளில் அந்தத் தந்தி போய்ச்சேரும்.
“நீ போயிட்டு வா விமலா” என்றார் அப்பா. அப்பா அப்படிச் சொன்னது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அத்தோடு சிறு குழப்பம். ”நீ போயிட்டு வா” என்றால்? அப்பா வரவில்லை போல. இங்கேயிருநது மேல மதகுப்பட்டி ஒரு ராத்திரி தூரம். காலையில் மதுரை மாட்டுத்தாவணியில் வண்டி மாற வேண்டும். அம்மா எப்பிடி, ஒண்டியாளாய்த் தனியே போய்விடுவாளா? “கோபி நீயும் கூடப் போகணும்… அம்மாவை பத்திரமா அழைச்சிட்டுப் போயிருவியா?” என்று என்னைக் கேட்டார் அப்பா. எனக்கு ரொம்ப சந்தோசமாகி விட்டது. நான் பெரிய பிள்ளை இப்போது! அப்பா சொல்கிறார்! கிடுகிடுவென்று அம்மா பெட்டியில் எங்கள் நல்ல துணிகளை அடுக்க ஆரம்பித்தார். பீரோ பப்பரக்கா என்று திறந்து கிடந்தது. அதனுள்ளிருந்து பாச்சா உருண்டை மணம் வந்தது. நான் அவசரமாய் இன்னொரு முறை தலையை வாரிக்கொண்டேன். இத்தனை லக்கேஜ் எதற்கு தெரியவில்லை. பத்து நாள் அங்கே இருக்கிறாப் போல அம்மா யோசிக்கிறாளா?... அதுவும் தெரியாத, அதுவரை மிதிக்காத வீட்டில்?
ரயிலில் போக எனக்கு ரொம்ப இஷ்டம். பஸ் போல அல்ல ரயில். அது இடப்பக்கம் வலப்பக்கம் என்று ஒரு மாட்டுவண்டி ஆட்டம் ஆடியபடி செல்கிறது. தண்டவாளத்தில் அது சங்கீதமாய் ஓடுகிறது, கம்பியில் அசையும் வயலின் போல! ரொம்ப உற்சாகமாயிட்டால் விசில் வேறு போடுகிறது. ம். அப்படியெல்லாம் இப்ப நினைக்கப்டாது. நான் இப்போது ஒரு சாவுக்குப் போகிறேன். ரயில் இன்னும் வராமல் தண்டவாளம் வெறுமையாக் கிடந்தது. நாச்சியார் அம்மாளைக் கூடத்தில் ஐஸ் பெட்டியில் படுக்க வெச்சிருப்பாங்களா? தலைமாட்டில் தீபம். எல்லாம் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஆனால் செத்த உடலை அவ்வளவு கிட்டத்தில் பார்க்கும் போது எப்படியிருக்கும்? அதை நினைக்க இப்பவே சிலிர்க்கிறது. என் அம்மா, பாவம் அவள் தன் தாயை இழந்துவிட்டாள். அவள் முகத்தைப் பார்த்தேன். அப்போது, தந்தி வந்தபோது அம்மா அழுதாளே, அப்புறம் அவளிடம் அந்த உணர்ச்சி வேகம் இல்லை. எனக்கு நிம்மதியாய் இருந்தது.
கீழூர்த் தாத்தா பாட்டியை எனக்குப் பிடிக்கும். அந்தத் தாத்தா, சிகாமணி மூங்கிலில் என்னவெல்லாமோ சாமான்கள் செய்வார். பூவசரம் பீப்பீ செய்து தருவார் எனக்கு. பேப்பரை விதவிதமாக வெட்டி விதவிதமான மிருகங்கள் எல்லாம் கிடுகிடுவென்று செய்வார். ஆச்சர்யமான தாத்தா. பாட்டியின் தலை தன்னைப்போல ஆடிக்கொண்டே தான் இருக்கும். கையில் நரம்புகளே வளையல்கள் போலக் காணும்… ஆனால் இம்முறை நாங்கள் மேலூருக்கு சாவுக்குப் போகிறேமே, கீழூர் போக முடியுமா? சாவு வீட்டுக்குப் போனால் உடனே வேறு வீடு எங்கேயும் தங்காமல் ஊர் திரும்பி விட வேண்டும், என்பார்கள்.
அம்மா ரயிலில் சிரமம் இல்லாமல் வந்தாள். எப்பவும் முன்பதிவு செய்து கொண்டெல்லாம் நாங்கள் வருவதே கிடையாது. பொதுப் பெட்டியில் தான். ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் நின்றபடி வருவோம். யாராவது இறங்கினால் உட்கார வாய்க்கும். சில சமயம் நின்றபடியே மதுரை வரை போக வேண்டியதாகி விடும். அதைப்பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. ஊர் போகிற சந்தோசத்தில் இதெல்லாம் சின்ன விஷயம். இந்தமுறை ரயிலில் அரை மணியில் எங்கள் இரண்டு பேருக்குமே உட்கார இடம் கிடைத்து விட்டது. பெட்டியைப் பத்திரமாகக் கையருகே அழுத்தி வைத்துக்கொண்டபடி அம்மா சிறிது தூங்கவும் செய்தாள். எனக்கு அது ஆசுவாசமாய் இருந்தது. தூக்கம் வர வர நான் பிடிவாதமாய் விழிததுக் கொண்டிருந்தேன். வெளியே இருளும் விளக்குக் கம்ப ஒளிகளுமாய் மாறி மாறி வித்தை காட்டின. மரங்கள் யானை வாய்க் கரும்பு போல இருளில் முறித்து உண்ணப் பட்டன. திடீரென்று ரயில் பாம்பு போல் திரும்பியது. சுப்ரமணி சூப்பராக ரயில் போலவே வாயைக் குவித்து சத்தம் கொடுப்பான்…
அப்பா கதைதான் உள்ளே அதுவரை அலையடித்துக் கொண்டிருந்தது. விமலாவுக்கு வயது பதினெட்டுக்கு மேல். மேஜர் தான். சட்டப்படி அவள் இஷ்டப்படி திருமணம் செய்யலாம் அந்த வயசில். எனக்கு என்ன வயசு இப்போது, என்ற தேவையில்லாத ஊடு கேள்வி வந்தது. அப்பாவுக்கும் வெளியூரில் ரியல் எஸ்டேட் என்று பிசினெஸ் செய்ய ஒரு யோசனை. “கட்டிய புடவையோடு என்னை நம்பி வா. உன்னை நான் வெச்சிக் காப்பாத்தறேன்…” என்றார் விமலாவிடம். மறுநாள் நல்ல நாள். முகூர்த்த நாள் வேறு. விமலாவின் அப்பா அம்மா வேறொரு கல்யாணத்துக்குப் போயிருந்தார்கள். காவல் நிலையத்துக்கு வந்தாள் விமலா. காதில் கழுத்தில் பொட்டு நகை இல்லை. எல்லாத்தையும் கழட்டி வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தாள். கையில் பள்ளிக்கூட சான்றிதழ். வயதை அதில் காட்டலாம். ரங்கராஜ் விமலாவுக்கு காவல் நிலையத்தில் தாலி கட்டினான். சாட்சியாய்க் கையெழுத்து போட இரு நண்பர்கள் வந்திருந்தார்கள். எல்லா போலிசுக்கும் ரங்கராஜ் இனிப்பு வழங்கினான்.
சினிமா பார்ப்பது போல இருந்தது அப்பாவின் கதை. காமெடி தவிர்த்த தனி சீரியஸ் கதை இது. சினிமாவில் இந்த இடத்தில் ஒரு பாட்டு போடுவான். அவனும் அவளும் ஸ்லோ மோஷனில் காமெரா பார்க்க ஓடி வருவார்கள். அம்மா மதுரை வந்ததும் என்னை எழுப்பினாள். அதுவரை முழித்துக் கொண்டிருப்பதாகத் தான் நான் நினைத்திருந்தேன். எப்போது தூங்கினேன் எனக்கே தெரியாது.
விமலா வீட்டுக்குத் தந்தி அடித்தார்கள். ‘திருமணம் செய்து கொண்டோம். எங்களைத் தேட வேண்டாம்.’ வெள்ளைக் காகிதத்தில் அது போய்ச் சேர்ந்திருக்கும். கிழூர் வரை வந்து சண்டையெல்லாம் போட்டிருப்பார்கள். அது ரங்கராஜுக்குத் தெரியாது. காவல் நிலையத்தில் கல்யாணம் பண்ணியதால் பெரிய அளவில் வெட்டு குத்து என்று கிளம்ப முடியவில்லை, என்றாள் அம்மா. “போதும்மா” என்றேன் வாயைத் துடைத்துக் கொண்டபடி.
பட்டணம் வந்த அப்பாவுக்கு வேலை செமத்தியாய் அமைந்தது. அப்பா புத்திசாலி. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சனங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு வீடு கட்டித்தர என்று அப்பாவுக்கு நிறையப் பேர் கிடைத்தார்கள். ஏறத்தாழ ஆயிரம் மனைகள் விற்கிறபோது அவருக்குத் தொடர்ந்து வேலை இருந்துகொண்டே யிருந்தது. அப்பா கடும் உழைப்பாளி. வேலையிலும் அவருக்கு நல்ல பேர். கிடைத்த லாபத்தில் அவரே அந்தப் பகுதியில் காலி மனைகள் வாங்கிப் போட்டார். அதுவேறு பெரும் விலைமதிப்புடன் வளர்ந்தது. நான் பிறந்தபோது அப்பா ஊரில் பெரிய அளவில் முன்னேறி யிருந்தார். நாங்கள் சொந்த வீட்டில் இருந்தோம். வீட்டில் அம்மாவின் பூஜையறை அழகாக இருக்கும். பசு மேல் சாய்ந்தபடி புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ண விக்கிரகம். அம்மா அதற்குப் பாலபிஷேகம் செய்வாள். வீட்டின் முன்பகுதியை அலுவலகமாக வைத்திருந்த அப்பா சீக்கிரத்தில் தனியே வேறிடத்தில் ஆபிஸ் போட்டார். கோபி ரியல் எஸ்டேட். அவரது மனைகள் பற்றிய விளம்பரங்கள் அரை மணி நேரம் தொலைக்காட்சி சேனல்களில் வந்தன. சென்னைக்கு மிக அருகில், என எல்லா விளம்பரங்களிலும் சொன்னார் அப்பா.
மதுரை மாட்டுத்தாவணியில் பஸ் மாறினோம். சிகாமணித் தாத்தா ஊர் முதலில் வரும். கிழூர். அப்புறம்தான் மேலூர். அம்மா கீழூர் வந்ததும் இறங்கினாள். எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. “என்னம்மா நாம மேலூர் போகல்லியா?” என்று கேட்டேன். “போறம்டா” என்றாள். “பின்னே? இங்க இறங்கறீங்களே?” அம்மா புன்னகைத்தாள். “சாவு வீட்டுக்குப் போனா அப்பறம் இங்க வர முடியுமா?” என்றாள். நான் இல்லை, எனத் தலையாட்டினேன். “அதான். இங்க போயி முதல்ல இறங்கிக்குவோம். உடனே அங்க கிளம்ப வேண்டிதான்…” என்றாள். ஆ, அம்மா எப்படியெல்லாம் யோசிக்கிறாள். இதெல்லாம் எனக்குத் தெரியவே இல்லை. தோணவே இல்லை. நான் சின்னப் பையன். இது எனக்கு அவ்ட் ஆஃப் சிலபஸ்.
பஸ் நிறுத்தத்தில் பாண்டி இருந்தான். ஆட்டோக்காரப் பாண்டி. எப்பவுமே அம்மா பஸ் இறங்கியதும் பாண்டி வண்டியில்தான் வீட்டுக்குப் போவாள். பாண்டி எங்களைப் பார்த்ததும் புன்னகைத்தான். “என்ன அண்ணி இந்தப்பக்கம்?” என வந்து பெட்டியை வாங்கிக்கொண்டான். “என்னடா நல்லா படிக்கறியா?” என்று என்னிடம் கேட்டான் என நினைத்தேன். அப்படியே கேட்டான். சிகாமணி தாத்தா ஆட்டோ சத்தம் கேட்டு வாசலுக்கு வந்துவிட்டார். அந்தத் தெருவில் ஆட்டோ வந்தாலே அது அவர் வீட்டுக்குத்தான். வருவது அவர் மருமகள் தான். திரும்ப தாத்தாஊருக்கு வந்தது எனக்கு கிறுகிறுப்பாய் இருந்தது. அம்மா சுருக்கமாய்ப் பேசினாள். ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பாத்தேம்மா” என்றார் தாத்தா. பேசியபடியே அம்மா போய்க் குளித்துவிட்டு வந்தாள். எனக்கு ஆச்சர்யம். “போற எடத்துல எப்ப எடுப்பாங்களோ. நீயும் குளிச்சிருடா” என்றாள். அம்மா எளிமையாய் ஆனால் நல்ல உடைகள் அணிந்து கொண்டாள். கழுத்து நிறைய நகைகள் அணிந்துகொண்டாள். முகத்தில் லேசாய்ப் பவுடர் எடுப்பு. கையெல்லாம் மோதிரங்கள். எனக்கும் நல்ல உடை அணிவித்தாள். கையில் வாட்ச். சட்டையை டவுசருக்குள் இன் பண்ணி விட்டாள். இடுப்பில் பெல்ட். சாவு வீட்டுக்குப் போகிறாப் போலவே இல்லையே இது? இருக்கட்டும். போற இடத்தில் பெண்கள் கண்ணில் நல்லவிதமாய்த் தட்டுப்படலாம், என எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
பாண்டியின் ஆட்டோவிலேயே மேலூர் கிளம்பினோம். அம்மா முகத்தின் உணர்ச்சிகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பதட்டம் மாதிரி எதுவும் இல்லை. ஆட்டோவில் பின்சாய்ந்து வசதியாக அமர்ந்திருந்தாள். பெங்களூர் சில்க் புடவை. இழவு வீட்டுக்குப் போவதால் குங்குமம் சற்று தீற்றியிருந்தது. அது, இதை எழுத வெட்கப்படுகிறேன்… ஒருமாதிரி சரச விரசமாய் அது எனக்குத் தெரிந்தது. அம்மா என்னோடு எதுவும் பேசவில்லை. வெகு வருடங்களுக்குப் பிறகு அவள் தன் பிறந்தகம் போகிறாள். அதுசார்ந்து அவளுக்குள் என்ன எண்ணங்கள் ஓடும், என என்னால் யூகிக்க முடியவில்லை. எல்லாமே எனக்கு அவ்ட் ஆஃப் சிலபஸ். என் வாய்க்கு மீறிய கவளம் அது.
வீடு தூரத்திலேயே அடையாளம் தெரிந்தது. வாசலில் நிறைய பெஞ்சுகள். அது பத்தாமல் நிறையப் பேர் நின்றிருந்தார்கள். எல்லாரும் காத்திருந்தாப் போலிருந்தது. தெருவில் விட்டுவிட்டு கண்ணீர் அஞ்சலி நோட்டிசுகள். நான் பாட்டியை முதன்முதலில் பார்த்தேன். ரெண்டு மூக்கிலும் மூக்குத்தியுடன் பாவம் இவள் எப்படி மூச்சு விட்டாள் தெரியவில்லை. அதைப்பத்தி இப்ப என்ன? அவள் மூச்சை இப்போது நிறுத்தியே விட்டாள்.
ஆட்டோ வந்ததும் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். அம்மா முன்னால் காலை நீட்டி தரையில் வைத்து இறங்கினாள். எனக்கென்னவோ நடிகை விஜயசாந்தி ஞாபகம் வந்தது. ஏன் தெரியவில்லை.
அம்மாவுக்குக் கூடப் பிறந்த ஓர் அண்ணன். ஒரு தங்கை. தங்கையை எனக்கு அடையாளம் தெரிந்தது. முகசாடை இருந்தது. அவள் கூடவே அழுதபடி குழந்தை ஒன்று ஓடிவந்தது. மொட்டைத்தலையில் சொறி சிரங்கு. நிர்வாணமாய் ஓடிவந்தது குழந்தை. நேரே அண்ணனிடம் போனாள் விமலா. “ஐயோ எனக்காகவா காத்திருக்கீங்க? என்னாச்சி அம்மாவுக்கு?” என்று கேட்டாள். அவன் பதில் சொல்லுமுன் தங்கையிடம் போய் “நீ எபப வந்தேடி?” என்றாள். “இதான் உன் பிள்ளையா?” என்றாள். தங்கை பதில் சொல்லுமுன், “கோபி, ஆட்டோவை வெயிட் பண்ணச் சொல்லு” என்றாள் என்னிடம். அம்மாவின் அண்ணனுக்கு எதுவும் பெண் இருக்கிறதா தெரியவில்லை… என்றாலும் நான் தயார் நிலையில் இருந்தேன்.
அத்தனை பேர் முன்னால் அம்மா பளபளவென்று பொலிந்தாள். கழுத்து நகையும், ஆ அந்த வைர மூக்குத்தியும், உடல் சுத்தமும். சற்றி எல்லாரும் அலுத்திருந்தார்கள். அழுக்காய் இருந்தார்கள். அண்ணாவின் மனைவி போலிருந்தது. அவள் வந்து “வா விமலா” என்றாள். “ம்” என்று தலையாட்டியபடி அவளை கவனிக்காமல் தாண்டிப் போனாள் விமலா. “பசிக்கறதாடா?” என்று என்னிடம் வந்தாள். தன் பிள்ளை என்கிற பெருமிதம் அவள் முகத்தில் கனன்றது. ஓதுவார் காத்திருந்தார். பிரேத காரியங்கள் காத்திருந்தன. “வேற யாராவது வரணுமா?” என்று அண்ணனிடம் கேட்டாள் விமலா. அண்ணன் அவளை பிரமிப்புடன் பார்த்தான். இல்லை என்கிறதாகத் தலையாட்டினான். “நீங்க ஆரம்பிங்க” என்றாள் விமலா ஓதுவாரைப் பார்த்து.
ஓதுவாரின் குரல், பட்டினத்தார் பாடல், சத்தமாகக் கேட்டது. அவரே கையில் இருந்த இரும்பு வட்டில் இரும்புக் குச்சியால் அடித்துக் கொண்டார். பள்ளிக்கூடம் விட்டாப் போலிருந்தது. பாட்டியைக் குளிப்பாட்டினார்கள். பாட்டிக்காகப் புதுப்புடவை ஒன்று கொண்டு வந்திருந்தாள் அம்மா. பளபளவென்று பட்டுப்புடவை. விமலா அதை சடலத்தின் மீது போர்த்தினாள்.
  •  

91 97899 87842 storysankar@gmail.com 

Comments

Popular posts from this blog