நன்றி பேசும் புதியசக்தி மாத இதழ்
அதிகாலைத் தளிர் கிரணம்


சூசா செல்யம் (ஹங்கேரி)
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
 ரு ரம், ஒரு பீர் தருவித்தேன். அவன்… உள்ளே நுழைந்தான், அப்படியே அந்தரத்தில் கரைந்து விடமாட்டேனா என ஆகிவிட்டது. அட நல்லூழே, இப்ப என்னைப் பார்க்க எப்பிடி இருக்கும். அவனைத் திரும்ப சந்திப்பேன் என்கிற எண்ணத்தையே எப்பவோ நான் விட்டுவிட்டேன். எத்தனையோ வருஷம் முன்னாலேயே அவன் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டவன். எத்தனை வருஷம்னு எண்ணக் கொள்ளாது. வருடங்கள், மாதங்கள, நாட்கள் என இப்போது எனக்கு எதுவுமே இல்லாமல் ஆகிப்போனது. என்னிடம் இப்போது நான் என்ற பிரக்ஞையே அற்றுப் போய்விட்டது. பருவகாலங்கள், அதைப் பின்தொடர முடியும்… குறைந்தபட்சம் அதை நான் யூகம் செய்துகொள்ளலாம். இந்தக் கந்தல் உடைகளில் என் உடம்பே தகித்தால் அது கோடை. நடுக்கம் எடுத்தால் குளிர்காலம். எனக்கு வசந்தமும் இலையுதிர்வதும் ஒரே மாதிரி தான். அவன் நல்ல பையன்தான். அவனைப்போல என்னை நேசித்தவர் வேறு யாரும் இல்லை. என்னை நேசித்தவர்கள், எல்லாரும் இறந்து விட்டார்கள். அம்மா, அப்பா, எல்லாருமே. என் சொந்தக்காரர்களில் ஒருத்தர் கூட இப்போது இல்லை. அத்தை மரி, அவள்தான் என்னையும் தம்பியையும் அழைத்துக் கொண்டாள். அங்கேபோனால், நாங்கள் யூதர்கள் என்கிற பிரச்னை. யாராவது அதைக் கண்டுகொண்டால், எங்களைக் கொன்று விடுவார்கள்.
எனக்கு வயது பதிமூணு, செத்திறலாம் என்றிருந்தது அப்போது. ஆனால் என் தம்பி, அவனை யார் பார்த்துக் கொள்வார்கள்? இன்னும் ஏழு வயது தாண்டவில்லை அவன். மரி அத்தை, அவள் காலமும் முடிந்தது. மாரடைப்பு. மாநிலப் பள்ளியிடம் நாங்கள் ஒப்படைக்கப் பட்டோம். ஆரோன்கா கைகாலை உதறி அலறி முரண்டு பிடித்தாலும், நாங்கள் தனித்தனியே பிரிக்கப் பட்டோம். அத்தோடு சரி, அவனை நான் மறுபடியும் பார்க்கவேயில்லை. அந்தப் பள்ளியில் எதற்கெடுத்தாலும் அடித்தார்கள். எதிர்த்துப் பேசினாலும், பணிந்து போனாலும், ஒரு மாற்றமும் இல்லை. அடி விழுந்த மணியம் தான். இந்தா வாங்கிக்க, முட்டாள் யூதப் பொட்டையே, என அடித்துவிட்டு பிறகு தன் பாட்டுக்கு தன் சோலிக்குப் போவார்கள். எப்படியோ ஒரு சவரபிளேட் எனக்குக் கிடைத்தது. உடலை ரத்தநாளங்களை அறுத்துக் கொண்டேன். ஆனால் அந்த இல்லம் எங்கிலும் போட்டுக் கொடுக்க ஆட்கள், யாரும் எங்கயும் ஒளிய இடம் இல்லை, முழுக்க ஸ்மரணை தப்புமுன்பாக என்னைப் பிடித்திழுத்து விட்டார்கள். ஆஸ்பத்திரியில் எல்லாருமே என்னைப் பாரத்து ஆத்திரமாய்க் கத்திக்கொண்டே இருந்தார்கள். நிறுத்தவே இல்லை. குறுக்க வெட்டிக்காதேடி சனியனே, நர்ஸ் என் காதில் கிசுகிசுத்தாள். நெடுக்கு வசத்தில் தான் கிழிச்சிக்கணும். ஆக அடுத்தவாட்டி நான்… அதையும் முயற்சி செய்தேன், அவள் சொன்னது சரி. கிட்டத்தட்ட அது சோலி முடிந்தாப் போலத்தான்… ஆனால் தொடர்ந்து பல நாட்கள் எனக்கு ஐவி, இரத்தக்குழாயில் ஊசியேற்றி மருந்தும் உணவும் பாய்ச்சினார்கள். இருள்க்கலங்கலான பிரதேசமும் தாண்டி வெகு தூரம் நான் போய்விட்டிருந்தேன்…சிதறலாய் வெளிச்சங்கள், இடிமுழக்கமான குரல் ஒலிகள்… எல்லாம் தாண்டி யிருந்தேன். குளியல் அறையின் தரையில் சன்னல் பக்கமிருந்து நுழைந்து வந்த அதிகாலைச் சிறு கிரணம், ரத்தத் திட்டுகளில் பளபளத்தது. ஆரோன்காவின் வேணாங்க்கா, என்கிற கெஞ்சல். யாரோ உள்ளே இழுத்தாப் போல, நான் என் வீட்டில்… நாகிகால்லோ ஊரில், பக்சி வாலை ஆட்டுகிறது. பச்சைவண்ண சாவித்துளை போன்ற கண்ணால் சிலி, எங்க பூனை என்னைப் பார்த்தது. முற்றத்தில் திரியும் கோழிகள். எல்லாம் சுத்திவர இருக்க நான் நடுவாந்தரத்தில். சிரித்தபடி அம்மா, என்ன எழவுக்கு இதோ இங்கே, இது ஆஸ்பத்திரிப் படுக்கை, என்னைக் கொண்டு வந்தார்கள். எழுந்து நின்ற கணம் தள்ளாடியது. இல்லல்ல, டெரி, விழுந்துறப்டாது. விடுதி வார்டன் ஞாபகம்… என் வாயைத் தன் உள்ளங்ககையால் மூடியபடி என் முடியைப் பிடித்து இழுத்து தான் எழுப்புவார். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் அவர் ராத்திரிப்பணிக்கு வருவார். அதைவிடவா இது கஷ்டம், என தேற்றிக் கொண்டேன். வார்டை விட்டு தள்ளாடி வெளியே வந்தேன். வராந்தா. படிகளில் இறங்கினேன். வாரோஸ்மேஜர் தெருவில் இறங்கினேன். தெருவின் குறுக்காக ஒரு பூங்கா. போய் முதல் பெஞ்சில் என் உடலைக் கிடத்தி மல்லாக்கப் படுத்தேன். மரக்கிளைகள் ஊடே கருத்த வானம் தெரிந்தது. என் மொத்த உடலுமே கிடுகிடுவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. என் மொத்த வாழ்க்கை, அதுவே அப்படித்தானே ஆகிவிட்டது.
அவன் புன்னகை செய்தான். புருவங்களை சற்று உயர்த்திக் கொண்டான். மெலிந்த தோள்களைக் குலுக்கிக்கொண்டான், நம்ப முடியாமல். அப்படியே பார் சிப்பந்தி பக்கம் திரும்பிக் கொண்டான். ஒரு ரம் ஒரு பீர், அந்தப் பெண்மணிக்கு. அப்படியே எனக்கு ஒரு வோட்கா.
அவனா, இது வேறு யாராவதா, நான் குழப்பி உழப்பிக் கொள்கிறேனா? அவனை நான் கேட்க முயற்சிக்கவே இல்லை. நீ… ஜானோஸ்? பாவி நீதானா?... என் இதயம் ஒருமாதிரி கொந்தளித்தது. லேசாய் மூச்சு அடைத்தது. அவனிடம் கேட்க, பயம் எல்லாம் இல்லை, என்னவோ, சட்டென அப்படி அவனைக் கேட்க வேண்டாம் என்று இருந்தது எனக்கு. தவிரவும், பேசுவது, அதெல்லாம் என்னத்துக்கு, அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனைக் கட்டித் தழுவி, அவன் கழுத்தில் என் முகம் புதைத்துக் கொண்டிருக்க வேண்டும் நான், அப்போது அவனுக்கும் இது நான் என்று நிச்சயமாய் அடையாளப் பட்டிருக்கும்.
மடக்கென்று அந்த கொழகொழ திரவத்தை ஒரு மிடறு முழுங்கினேன். தொண்டையில் காரமாய் அது இறங்கியது. அவன் வோட்காவைக் கடாசி விட்டான். நாங்கள் ஒருவர் பக்கம் ஒருவராக அமர்ந்தோம். ஒருமாதிரி சாய்வாய் என்னை விலகினாப் போல அவன். அந்தக் காலத்தில் இருந்தே அவன் அப்படித்தான் அமர்வான். அட நல்லூழே, அவன் உயிருடன் இருப்பான் என்கிற யோசனையே என்னிடம் இல்லையே, அவனை விடு, நான்… நான் உயிரோடு இருப்பதே நான் எதிர்பாராதது. ஆனால் அப்பறம் நான் என் அதிர்ச்சியை வெளிக்காட்டவே இல்லை. எனது பானத்தைக் குடிக்கையில் என் கை நடுங்காமல் பார்த்துக் கொண்டேன். உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்க சீக்கிரமே நான் பழகி விட்டேன். அத்தோட இந்த பானம், இதுக்கு நீதான் குடுக்கணும். முதற் கட்டமா எப்பவுமே எனக்கு பல ரவுண்டு பானம் இப்பிடி மத்தாளுக கிட்டயிருந்து கிடைச்சிருக்கு, ஆமாம். அப்ப நான் அவங்களோட டெரிக் குட்டி, அதாவது ஒருதரம் காகர் என்மேல எறி அமுக்கப் பாத்தானே அதுவரை. நான் அலறிட்டேன். ஹ்ம். அந்த கணத்தில் நான் என் எதையோ இழந்திட்டேன்…னு இப்ப உணர முடிகிறது. ஒரு பசுபோலும் சாத்விகமாய் இருந்தேன் அதுவரை. ஏய் போலிசைக் கூப்பிடட்டுமா… இவ்வளவு மென்மையாகத்தான் என்னால் பேச முடிந்தது. அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டேன். வேணா தரையை ஒதைடி, ரொம்ப ஆங்காரமா இருந்தால்… என் முதுகு பினனால் அவர்கள் இரைவதும் சிரிப்பதும் கேட்டது. அடியே போ உனக்காக பேரழகு ராசகுமாரன் காத்திட்டிருக்கான்!
இராத்திரி நேரங்களில் எதாவது கேளிக்கைவிடுதியில் எவ்வளவு நேரம் முடியுமோ போய் உட்கார்ந்து பொழுதைக் கழிப்பேன். சிலப்ப முன்னாலேயே பணந் தந்தார்கள். சிலசமயம் காரியம் முடிந்த பிறகு, எப்படின்னாலும் அதைப் பத்தி என்ன, என்றாகி யிருந்தேன். எனக்கு பயம் விட்டுப் போய்விட்டது. எனக்கு எந்த உணர்வுமே இல்லாது போய்விட்டது. ஆல்கஹாலின் இதமான கதகதப்பு, அது மாத்திரமே ஆறுதல். பகல் பொழுது பூராவும் எதாவது பெஞ்சில் படுத்து உறங்குவேன், யாராவது விரட்டி விடும் வரை. இப்படித்தான் ஹெல் என்னை வந்தடைந்தான். எனக்கு எல்லாமும் அத்தனை சரியா நினைவு இல்லை. விழிப்பு தட்டியது. என் தலை, யாரோ என்னை மடியில் கிடத்திக் கொண்டிருந்தார்கள். தலையுயர்த்திப்… கண்கள் சூரிய ஒளியில் கூசின. எனக்கு மேற்புறமாக, மினுமினுக்கும் அடர்ந்த இரு கண்கள். நான் யோசித்ததை விட அதிக உயரத்தில் அவை. எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கிற தெளிவான கண்கள். ஹலோ, என்றேன். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை. என்ன விசயம், செவிடா நீயி. இரைந்தபடி துள்ளி எழ விரும்பினேன். யாருக்குத் தெரியும், எப்ப எந்தக் கிறுக்கனை நாம எதிர்கொள்வோமோ. ஆனால் அவன் என்னைத் தோளை அழுத்தி திரும்பப் படுக்க வைத்தபடி என் பெயரைக் கேட்டான். இங்க எப்பிடி வந்தே. உங்க அப்பாம்மா எங்க, அவங்களுக்கு என்னாச்சி. உன் தம்பி? உன் வார்டன்?
அவனது எல்லாக் கேள்விக்கும் பதில் சொன்னபோது, எனக்கு அவனைத் தெரிந்தது. ஜானோஸ் ஹெல். அவனுக்கு அப்பாம்மா இருந்தார்கள். எப்படியோ தட்டி முட்டி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பப்ப ஒருத்தரை ஒருத்தர் கடிச்சிக் குதறிக்ண்டு. அவனிடமும் ஒரே சண்டை. அவன் வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டான். அவர்கள் தப்பித் தவறி கூட உண்மை பேசறதே கிடையாது. அவனை கூட அழைத்துக்கொள்ள சில நல்லாத்மாக்கள் இருந்தார்கள். அவங்க கூட சமாளிச்சிக்கலாம்னு இருந்தால், அங்கேயே இருந்து எதாவது தாற்காலிக வேலை பார்த்துக் கொள்வான். வேலைக்காரக் கும்பலோட எங்காவது பெட்டிக்குள் முடங்கிக் கொள்வான். இரவுப் பள்ளியில் இருந்து சான்றிதழ் வாங்க முயற்சி பண்ணிக் கொண்டிருந்தான் அவன். தத்துவ இயல் படிக்க அவனுக்கு யோசனை. நம்ம ஜனனத்தின் அர்த்தம் எப்பிடிப் புரிஞ்சிக்கறது, என்று விளக்கமும் சொன்னான். எல்லாம் பேசியபடியே என் கூந்தலைத் துழாவினான். என் முகத்தை வருடித் தந்தான். இருள் விழுந்தது. அவன் தனது இருப்பிடத்துக்கு என்னை அழைத்தான். ஆ அவனுக்கு தங்க ஓர் இடம் வாய்த்திருந்தது. நான் கூடப்போனேன். ரம் கலந்த ஒரு தேநீர் அவன் தயாரித்துத் தந்தான். நாங்கள் அமர்ந்து புகை பிடித்தோம். அங்கிருந்த புத்தகங்களைச் சுவர் போல சற்றி வந்தன புகைச் சுருள்கள். ஒருகட்டத்தில் எங்க அம்மா சிரித்தாப் போலக் கேட்டது. இல்லை, அது என் சிரிப்பு தான்.
“எனக்கு எதாவது வாங்கித் தருவியா?” உடம்பில் சிறிது பேசுகிறதெம்பு ஊறியதும் கேட்டேன். என் குரல் அடங்கி கெஞ்சல் போல் ஒலித்தது. யாரிடமும் நான் பேசியே வெகுகாலம் ஆகியிருந்ததது. அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ஆனால் நான்… நானே வேறு எதையுமே கூட அடையாளங் காண்கிற தரத்தில் இல்லை. அந்தக் காலங்கள் கடந்திருந்தன எனக்கு. நாங்கள் ஒன்றாக இருந்த போது என் தேகம் மென்மையாய் இருந்தது. நானும் சுதாரிப்பாக இருந்தேன். அவன் சொன்னான். ஏய், நீ கொதிச்சிக் கிடக்கே. அவனை நான் அனுசரிக்கவில்லை என்பதாய் அல்ல. அவன் அதைச் சொன்ன விதம், கண் சிமிட்டி இதைச் சொன்னான், ஆகா எனக்குச் சாவே இல்லை என்றிருந்த கணம் அது. அல்லது, அதை எப்படிச் சொல்ல… நான் சாக விரும்பாத கணம் ஒன்று, அதுவும் எனக்கு வாய்த்தது!
அது ஜானசி ஹெல்லோ, இவன் வேறு யாரோவோ, அதிகம் பேசுகிற நபர் அல்ல அவன். “ஒரு இருபது பணம்… சரியா?” நான் பேசுவது எனக்கே கேட்டது. ரொம்ப விசேஷமான சரக்கு எல்லாம் இல்லை தானே? தேர்வு செய்கிறது எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்பதை நான் எப்பவோ அறிந்து கொண்டவள். கைல துட்டு இல்லையா, எப்படியாவது துட்டை சம்பாதிச்சாக வேண்டும். அதேநேரம் இன்னொரு யோசனையும். நம்மைப் பத்தி அலட்டிக்கும் தரத்தில் எதுவும் இல்லை என்றால் எதுவும் பேசாமல் மௌனம் காப்பது நல்லது. எதுவுமே இல்லாத வெற்று நாளாப் போயிட்டா குறைந்த பட்சம் எதும் பானம். குடிக்க எதாவது. குடிக்க எது கிடைச்சாலும் தேவலை. ரம்மும் பீரும் கிடைச்சா உள்ள கதவு கிதவெல்லாம் பப்பரக்கான்னு திறந்துவிடறாப்ல இருக்கும். வா. எனக்கு வேணும். எனக்கு அது பிடிச்சிரூக்கு.. வா. அது அவன் அல்ல, வேறு யாரோ என்று தெரிந்த ஜோரில் என் வார்த்தைகள் குபீரிட்டன. ஒரே விநாடி. அவன் எழுந்து பணந்தராமல் கிளம்பி விடலாம். அல்லது என்னை ஒரு அறை விடலாம். ஆனால் என்னுடன் இணைய அவன் சம்மதித்ததால், அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளவும் செய்யலாம்.
ஃப்ரின்கல் லியோ தெருவுக்குள் நாங்கள் நுழைந்தபோது நான் அவனோடு இழைந்தேன். அவன் என்னை அரவணைத்துக் கொண்டான். எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள்… இவனுக்காக முடிவேயில்லாமல் பூங்காவில் நான் காத்துக் கிடந்தேன். புழுதியில் கைவிரலால் கட்டைவிரலால் அவன் பேரை எழுதி, இலைகளில் எல்லாம் எழுதி வைத்து… எல்லாமே என் கற்பனைகள் தான். குடிக்க வேண்டும் போல் இருந்தால், என் உடம்பு நடுங்கி பயம் எடுத்த போது அப்படி வேண்டியிருந்தது. ராகோசி சதுக்கப் பக்கமாய்க் கிளம்புவேன். என்றாலும் பயம் கூடவே செய்து மேலும் மேலும் தாகமும் வறட்சியும் காணும். பிறகு சுன்காவின் கீழ்ப் பெண்களோடு போய்ச் சேர்ந்து கொள்வேன். போக்கர் விளையாட அவனுக்குப் பணம் வேண்டியிருந்தது. என்னை அவன் அடிப்பான். மாநிலப்பள்ளி விடுதியின் ஒரு வார்டனாகவும் அவன் இருந்தான். குடி வேலை செய்ய அவன் ஒரு நெகிழ்ச்சிக்கு ஆளானதும் பிதற்ற ஆரபிப்பான். என் பயிற்றிசாளர் எப்படியெல்லாம் என்னை வதைத்தார், என்னைக் கற்பழித்தார் என்றெல்லாம் கதை சொல்வான். வேறு கதை, ஆனால் சூழல் ஒண்ணுதான். பிறகு ரம் இன்னும் ஒண்ணு ரெண்டு ரவுண்டு ஏறியதும் ஊவென ஊளையிட்டு என்னை அடிக்க ஆரம்பிப்பான். பணத்தை எங்கடி ஒளிச்சி வெச்சிருக்கே, பொய்யாடி புளுகறே என் கிட்டே, என்று அடிப்பான். ஆனால் அவன் தான் என்னை இந்தத் தெருப் புழுதியிலும் அழுக்கிலும் இருந்து சுரண்டி மீட்டது. என் உடம்பெல்லாம் கீறலும் தடிப்புமாய். முகமே பெரிசாய் வீங்கிக் கிடந்தது. ஒருசமயம் அவன் அறைந்த அறையில் என் இரு பற்கள் எகிறியே விட்டன. ஒரு பானம் அருந்தியதில் என் வலி தெரியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், உனக்கு என்ன ஆச்சிடி? எங்காவது ஒளிஞ்சிக்கிட்டியா நீ? பைத்தியக்காரிச்சி மாதிரி நடிச்சி கிடிச்சி எங்காவது ஒதுங்கிக்கிட்டியா? அப்பிடியும் அடி கிடி போட்டாங்களா? ஆனால் இதோ நிச்சயம், நீ திரும்பி வந்திட்டியே. அந்த பெஞ்சில் நான் உனக்காகக் காத்திட்டிருந்தேன்டா. ஒருவேளை நான் அல்லாமல் வேறொருத்தி, என்னைப்போல ராங்கிக்காரியா இல்லதவ உனக்குக் கிடைத்ததா? பின்ன என்னை ஏன்டா எழுப்பினே? பேசடா, எதுவும் பேச மாட்டேங்கிறேயே நீ? நான் சூடா இருக்கேன்னு சொன்னியா இல்லியா? இன்னுங் கொஞ்சம் பிரியமாக் கட்டிக்கோடா, ஏன் இப்பிடி ஆர்வமே இல்லாத மாதிரி கையைப் போட்டிருக்கே? ஒருகணம் என்னை நீ நானாக நம்ப வைத்… சரி விடு. விடியப் போகுது. நிலவறை அதுவே என் குகை.
சில சமயங்களில் முடிவே இல்லாத மௌனத்துடன் அவன். எதுவுமே ஒரு வார்த்தையுமே பேசுவது இல்லை. நான் உடை களைவதே இல்லை. அந்தக் குறுஇருளில் அடர்த்தியான பொருட்கள் மெல்ல தலை நீட்டி மிதந்தன. ஏ நீ என்ன நினைச்சிட்டிருக்கே, என அவனைப் பார்த்துக் கத்தினேன். என் ஆடையைத் தழைய விட்டேன். என் மயிற் புற்தரை சிறு காற்றுக்குப் படபடத்தது. அவன் எதுவும் பேசவில்லை. அது என்னை மேலும் ஆவேசப்படுத்தியது. பூங்காவில் கலவியில் நான் இப்படித் தான் செயல்படுவேன். வெளியே யிருந்து வந்த சிறு கீற்றுக் கிரணம் எனது இரத்தத்தை உசுப்பேற்றி விட்டது. என் இதயத்தில் கோடாரி கொண்டு துகள் துகளாகக் கொத்தியது. குறைந்தபட்சம், அந்த மத்தாட்கள் என்னை ஏமாற்றியது இல்லை. அவரிடம் என்மேல் வெறுப்பு இருந்திருக்கலாம். என்னை ஆள அவர்கள் வேகப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்களில் எவனுமே என்னிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னது கிடையாது. டெரி, என நான கிறீச்சிட்டேன். அவன் அமைதியாக தன் மேல்சட்டையைக் கழற்றி அதைத் தரையில் நழுவ விட்டான். என்னைச் சுற்றிக் கிடந்த சாமான்கள், நீ தரையை விட அழுக்காய் இருக்கிறாய், என ஓலமிட்டன. ம். இப்போ இன்னும் உற்சாகப்படு. நான்… எப்படி இருக்கிறேன். எனக்கென்று எதுவுமே கையாலாகாதவளாய் இருக்கிறேனா? வேறெங்காவது எதையாவது பார்த்ததை யோசித்துக் கொண்டிருக்கிறானா என்ன? எனக்கொரு முத்தம் கொடு, என்று அவனிடம் கேட்டேன். அந்த இடத்தின் தூசி தும்புகளின் பேயாட்டத்தை அப்போது அப்படித்தான் புறக்கணிக்கலாம் என்றிருந்தது. அது ஒரு காலம். அந்தக் காலத்தில், இப்பவுமே கூட, என் தொண்டைக்குழியில் இருந்து பீரிடும் வார்த்தை வெள்ளம். புண்ணாகிக் கிடந்த என் நாவில் ருசிமொட்டுகளை அவனது உமிழ்நீர் இதப்படுத்தியது. கத்திகளும், இரும்புச் சங்கிலிகளும், ரம்பமுனைகளுமாக என்னை நோக்கி என்னைத் துண்டங்களாக்க நீள்கின்றன. நீ… என்னைக் காதலித்ததே இல்லை, என முணுமுணுத்தேன். அடுத்த தாக்குதலுக்கு என்னைத் தயார் செய்துகொண்டே பேசினேன். அவன் வாய்விட்டுச் சிரித்தான். புன்னகையுடன் என்னை இன்னுமாய் நெருங்கின அந்தக் கூர்முனை ஆயுதங்கள். இது, இதுவல்ல காதல். ஜானோஸ், இந்த உசாவல்களை உன்னத பாவனைகள் என எனக்குக் கண்டுபிடித்துத் தந்தவன் நீதானே? நான் முரண்டியபோது அவன் சிரித்துக் கொண்டிருந்தான். சிரித்த அவன் கண்களின் கண்ணீர் என் முகமெல்லாம் வழிந்தது. நான் எத்தனை தீவிரமாக அவனை நேசித்தேன், அதை மனசில் இறுத்திக்கொள்ள முயன்றேன் நான். ஆனால் அந்த இருளின் கெட்டியான உருவங்கள் என்னைத் தொந்தரவு செய்தன. என்னை மோதி என்னை நாலாபக்கமும் சிதறடித்தன. அவன் எகிறினான் வெட்டுப்பட்டாப் போல. மார்கரின் போல எதுவும் வழுவழு லோஷன் இந்த சந்தர்ப்பங்களில் ஒத்தாசை என இரக்கம் இல்லாமல் நினைத்துக்கொண்டேன். சற்று உள்சுருக்கி அவனை உள்ளிழுத்துக் கொண்டேன், உறிஞ்சினாப் போல. என்னைச் சுற்றிலும் அந்த இருள் மருட்டல்களின் தட்டாமாலை, எதுவும் என்னை நெருங்கவில்லை. முன்பு, பென்ச்சில், அவனைப் போலவே இப்போது எனக்கு அவன் தோன்றினான். அவனது எலும்புத் துருத்தலான இடுப்பு என் தோடையில் உரசியது. எங்கள் மேலே ஒரு மகா இருட்டு அப்படியே கவிழ்ந்தது. சுற்றிக் கும்மாளமிட்ட சாமான்கள் என்னை அந்த இருட்டில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம், எனக்குப் புரிந்தது, அவன் விலகப் போகிறான். நான் இன்னும் என்னை உள்ளிழுத்துக் கொண்டு அவனை விலக விடாதபடி செய்ய முயன்றேன். ஆனால் என்னால் பேச… என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங்கயாவது போய் அலம்பிக் கொள்ளவா, என்று கேட்டான். வெளியே கிரணங்கள் வலுப்பெற்று அறையை அவை நோட்டம் பார்க்க ஆரம்பித்திருந்தன. மன்னிச்சிக்க, என்று நான் சொல்லவில்லை. பீரிட்ட தண்ணீர் அவனது கால்சாராயை நனைத்தது. வெளிச்சம் உக்கிரப்பட்டு என் உடம்பில் ரணமாய் உரைத்தது.
ஒரு அம்பது பணத்தை என்னிடம் தந்து செல்வதாக அவன் விரும்பினான். நீ ஒரு முட்டாள், அஎன யதார்த்த உலகத்தில் நின்று நான் பகடி பேசினேன். உனக்கு அம்பதுக்குச் சில்லரை நான் தர்றதா இருந்தால், ஹா எனக்கு உன் இருபதே வேண்டியிருக்காது! என்றாலும் நான் அத்தனை உற்சாக மனநிலையில் எல்லாம் இல்லை.
நிலவறையின் சிதிலமான படிகளை நோக்கி அவன் தன்னாளுமை மிக்க தேவனைப் போல நடந்து போனான். திரும்பியே பார்க்கவில்லை அவன். விடிந்திருந்தது. கோடைகாலக் காலை. இந்தப் பிரபஞ்சம் என்னை வாரிச்சுருட்டிக் கொள்ளுமுன், அதன் ஒரு பிரயோஜனமும் அற்ற குப்பை கூளங்களோடும் சகல அழுகல்களோடும் வெட்டியாக நான் கலக்கு முன், அவனைப் பார்த்தேன். நீள விழும் அந்தச் சிறு ஒளிக் கிரணத்தை ஊடறுத்துப் போய்க் கொண்டிருந்தான் அவன்.
*

(ஜியார்ஜி பெட்ரியின் ஒரு பிரசித்தி பெற்ற கவிதையின் கதை வடிவம்.)
ஹங்கேரிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் எரிகா மிகாலீசா மற்றம் ஜிம் தக்கர்.
*
நாவலாசிரியரான சூசா செல்யம் ருமேனியாவின் பேப்ஸ் போல்யாய் பல்கலைக் கழகத்தில் ஹங்கேரிய நவீன இலக்கிய இணைப் பேராசிரியர். 2009ல் எதற்காகக் காத்திருக்கிறாய், என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இதுவரை இரு நாவல்களும், ஐந்து கட்டுரை நூல்களும் வெளியாகி யிருக்கின்றன. அவரது பேக்கரி 1952 என்ற கதை சிறந்த ஐரோப்பியப் புனைவுகள் 2017 என்கிற தொகுதியில் இடம் பெற்றது. தனுபே 1954, என்ற சிறுகதை புஷ்கார்ட் விருது XLII (இன்றைய உலக இலக்கியம்) பெற பரிந்துரை பெற்றது.

Comments

Popular posts from this blog