உலகச் சிறுகதை

பெ ய ர் க ள்
----------------------------------------
ஜான் அப்டைக்
தமிழில் எஸ்.சங்கரநாராயணன்

பாஸ்டனில் இருந்து திரும்பி வருகிறார்கள். ஜாக் காரோட்டிக் கொண்டு வந்தான். அவனருகே முன்னிருக்கையில் ஒரு குழந்தைத் தொட்டில். மகன் அதில் உறக்கத்தில். பின்னிருக்கையில் கிளாரே. ஜோ என்கிற இரண்டு வயது மகளுடன். அவளுக்காக எதோ பாடிக்கொண்டிந்தாள்.
“வயலில் பட்டாணிகள் வெடித்தன. பறவைகள்?...”
“கிங்...” என்றது குழந்தை. பாடின, சிங் என்று சொல்ல வரவில்லை அதற்கு.
“உனக்குப் பட்டாணி பிடிக்குமே? எவ்ளோ ருசியா இருக்கும். அதை யாருக்குப் பண்ணித் தரணும்?”
“கிங்” என்றது குழந்தை திரும்பவும். அவர்கள் சிங் கிங் என்று எதுகை வருகிறாப் போல எதுவும் பாடல் பாடியிருக்கலாம்.
“அருமை.”
“பறவை மூக்கு, அந்தப் பாட்டு பாடும்மா.”
“அதென்னடி பாட்டு? அந்தப் பாட்டு எனக்குத் தெரியாதே. எங்க பாடிக் காட்டு...”
“எங்க பாடிக் காட்டு...”
“நான் கேக்கறேன் உங்கிட்ட! பறவை மூக்கு பாட்டை யாரு பாடுவா? மிஸ் தூனி பாடிக் காட்டினாளா?”
அந்தப் பெயரை ஒருமுறை சொன்னபோது ஜோ சிரித்தாப் போல இப்பவும் சிரித்தாள். மிஸ் தூனி என்று அவளுக்கு திடீரென்று ஒருநாள் சொல்ல வந்துவிட்டது. “யாருடி மிஸ் தூனி?” என்று ஜோ இப்ப கேட்டாள்.
“எனக்கு எந்த மிஸ் தூனியும் தெரியாது. உனக்குதான் அவளைத் தெரியும். அவ எப்ப உனக்கு அந்தப் பாட்டைச் சொல்லிக் குடுத்தா?”
“பெர்டி நோஸ் பெர்டி நோஸ் நாக் நாக் நாக்...” சுட்டிப்பெண் மெல்ல முணுமுணுத்தாள்.
“அருமை. மிஸ் தூனிகிட்ட நானும் அந்தப் பாட்டைக் கத்துக்கணும் போல ஆசையா இருக்கே.”
“கருப்புப்பட்சின்னு பாட்டு இல்லியா? அதுல இது ரெண்டாவது பத்தி” என்றான் ஜாக். “கருப்புப்பட்சி இறங்கி வந்து மூக்கைக் கொத்தி தூக்கிக்கிட்டது...ன்னு வரும்.”
“அந்தப் பாட்டை அவகிட்ட நான பாடினதே இல்லை...” என்று உறுதியாய்ச் சொன்னாள் கிளாரே.
“ஆனா உனக்கு அந்தப் பாட்டு தெரியும். உன்கிட்ட யிருந்து ஜீன்ஸ்லியே உன் வாரிசுக்கும் அது வந்திருக்கும் போல!”
பத்து நிமிடத்தில் அவர்கள் அம்பதாவது மைலைத் தாண்டி யிருந்தார்கள். குழந்தை தூங்கி யிருந்தது. மடியில் இருந்த அதன் பாரத்தைத் தளர்த்திக் கொண்டாள் கிளாரே. இப்போது அவள் அம்மா ஸ்தானத்தில் இருந்து பெண்டாட்டி ரூபம் கொண்டாள். முன்னிருக்கையில் அவளது நாடியை ஜாக்கின் தோள் அருகே பதித்துக் கொண்டாள். அவனது கன்னத்தின் வலதுபக்கம் அவளது மூச்சை அவன் உணர்ந்தான்.
“விருந்து... அதில் யாரை உனக்கு ரொம்ப இஷ்டமாச்சி?” என்று அவன் கேட்டான்.
“எனக்குத் தெரியல. நிசந்தான். சொல்ல முடியல்ல. ம்... லாங்மியூர்னு சொல்லலாம். அவன்தான் ஷெர்மென் ஆடம்ஸ் பத்தி நான் பேசினதை அவன் சரியா கவனிச்சாப்ல இருந்தது.”
“எல்லாருந்தான் உன்னை கவனிச்சாங்க... உன் பேச்சு எல்லாருக்குமே அபத்தமா இருந்தது!”
“அட அதெல்லா ஒண்ணில்ல...”
“யாரு ஒசத்தி?” அவன் கேட்டான். “லாங்மியூரா, ஃபாக்சியா?” இந்த மாதிரி, யாரு உசத்தின்னு பேசுதல், அவர்கள் ஒண்ணாப் பயணம் போகையில் இது அவர்களிடையே ஒரு பொழுதுபோக்கு. இன்னாலும் அதில் போட்டிபோட வாதிட என்று அவனுக்கு ஒரு ஆர்வமுங் கிடையாது.
“எனக்கென்னவோ... லாங்மியூர்...” என்றாள் அவள் சிறிது யோசனைக்குப் பிறகு.
“அண்ணன் ஃபாக்சிய அப்பிடியே தூக்கியடிச்சா மாதிரிச் சொல்கிறாய். அவரு உம்மேல நல்ல பிரியம் வெச்சிருக்காரு.”
“நல்ல மனுசந்தான் அவரு. நான் ஏன் அப்பிடிச் சொன்னேன். ஓஹ்... யாரு ஒசத்தி, ஃபாக்சியா, அல்லது அந்த ரெட்டை நாடிப் பையன்,.. அவனோட ஆதங்கமான கண்கள்...”
“ஆதங்கமான கண்கள்!...” என அவன் திரும்பச் சொன்னான். “ஆமாமா... நல்ல பிள்ளை. அவன் பேரென்ன?”
“கிரோலி... கிரா... கிராக்கர்ஸ்?”
“அந்தமாதிரி தான் எதோ. கிரகாம் கிராக்கர்ஸ். அவங்கூட ஒரு பொண்ணு. பெரிய காதுகள் இல்லே?... அவளும் நல்லா தான் இருந்தா இல்ல, அவ பேர் என்ன?”
“என்ன மோசமான விசயம்னா... எப்பிடித்தான் தோணித்தோ அவளுக்கு, காதுல அந்த தங்க குண்டலங்கள்... நாடோடியாட்டம்!”
“அவளுக்கு ஒண்ணும் தன் காதுகள் பத்தி பெரிசா ஆதங்கம் கிடையாது. பெருமையாத்தான் நினைப்பு. ரொம்ப அம்சமான காதுகள்னு அவளுக்கு ஒரு இது. சரிதான் அது. நல்ல பொண்ணு. ஆனா அவளை இனி நான் பார்க்க வாய்ப்பு எங்கே கிடைக்கப் போகுது...”
“அவ பேர்ல நிறைய ஓ வரும்...”
“ஆர்லண்டோ. ஓ ஓ... ஆர்லண்டோ. சோப்பு நுரை ராணியா அவள்?” ஆர்லண்டோ என விளம்பர நடிகை இருக்கலாம்.
“அவ்வளவுக்குல்லாம் இல்ல.”
சூப்பர்ஹைவே, என்கிற மகா நெடுஞ்சாலை. சாலையோர வெள்ளைப் பட்டைகள் தூரத்தில் கூடி பிரமிட் காட்டியது. இன்ஜின் சத்தம் ஒருமாதிரி ஒருபக்கமாகத் தேய்ந்து ஒலித்தது. உள்ளே எதோ பஃப் பஃப் என அடைக்கிறாப் போலிருந்தது. பெட்ரோல் குழாயில் எதும் கசிவு உள்ளே ஏற்படுகிறதாக யோசித்துப் பார்த்தான். அப்பாவின் பழைய வாகனத்தில் பெட்ரோல் குழாய்க்குள் கசடுபோல் அழுக்கு அடிக்கடி படிகிறது. சட்டென காரில் பெட்ரோல் கசிந்து அப்படியே நின்று போகிறது அவருக்கு. “நம்ம கார் சீக்கிரமே செலவு வைக்கும்னு தோணுது” என்றான். அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அந்தக் காரை அவள் கண்டுகொள்ளவே இல்லை இதுநாள் வரை. அதுபற்றி அவளிடம் அபிப்ராயங்கள் இல்லை. அதை வாங்கி நாலு வருடத்துக்கு மேலாகிறது. அதன் நிறம், அருவி-நீலம்... அவர்களுக்கு அது இன்னும் ஒத்துப்போகவே இல்லை. வேகமானியைப் பார்த்தபடியே அவன் பேசினான். “இருபத்திமூணாயிரம் மைல் நமக்காக அது ஓடிட்டது” என்றான். கூடவே பாடினான். “பெர்டி நோஸ் பெர்டி நோஸ் நாக் நாக் நாக்.”
திடுதிப்பென்று எதையோ நினைத்தபடி கிளாரே சிரித்தாள். “ஆமா. ஆரோ தீவில் நாம பார்த்தோமே, அந்த குண்டன்... அவன் பேர் என்ன? அந்தக் கோடை முச்சூடும் தினப்படி ராத்திரி பிரிட்ஜ் விளையாடுவான் அவன். முன்னால தொங்கறா மாதிரி ஒரு மீனவன் தொப்பி மாட்டிக் கிட்டிருப்பான்...”
அவனை எப்பிடி இந்நேரம் இவ நினைச்சிக்கிட்டா!... என அவனும் சிரித்தான். அதாயிற்று ஐந்து வருடங்கள். அவர்களுக்குக் கல்யாணம் ஆன முதல் மூன்று மாதங்கள். ஒரு ஒய் எம் சி ஏ குடும்ப முகாமில் அவர்கள் இருந்தார்கள். நியூ ஹெம்ப்ஃபயர் ஏரிக்குள்ளான ஒரு தீவு அது. ஜாக் ஒரு பதிவாளாராக வேலை பார்த்தான். முகாமின் கடை நிர்வாகி அவள், இளம் மணப்பெண். “வால்ட்டர்...” என நம்பிக்கையாய் அவன் ஆரம்பித்தான். “அந்தப் பெயரின் பின் பகுதி... ஒரே ‘அசை’யில் வரும். ஆண்களின் கூடாரங்கள் பக்கமாக அவன் எப்பவுமே தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பான். “நாம அங்க போனப்ப ஏற்கனவே அவன் இருந்தான். நமக்கு அப்பறமும் அவன் அங்கேதான் இருந்தான். தண்ணியில் நடைமேடை போட்டாங்க இல்லியா. அந்த வேலைக்கு அவனும் ஒத்தாசையா இருந்தான்.” மனக்கண்ணால் அந்த மனிதனை இவனால் பார்க்க முடிந்தது. ஒரு மாதிரி உதடு சுழித்த பூனைச் சிரிப்புக்காரன். தலை பின்பக்கம் நிறைய முடி வைத்திருந்தான். பானை வயிறு. குச்சி மிட்டாய் போன்ற கோடுகளுடன் அவனது டி சட்டை. கீறல்கள் நிறைந்த அவனது ஷுக்கள்.
“சொல்லுங்க” கிளாரே தொடர்ந்தாள். “திருமதி யங். அவளோட முதல்-பெயர் என்ன?”  யங், புகை ஊதித் தள்ளும் அல்பன். அந்த முகாமே அவனது பொறுப்பில் இருந்தது. குட்டையான அவன் மனைவி. அவள் கழுத்து இறுக்கமானது. சதுர முகம் அவளுக்கு. பச்சைக் கண்கள். சபல ஆம்பிளைகளின் மனைவிகளைப் போலவே, அவளுக்கும் கொடுக்கு போன்ற நாக்கு. ஒரு தடவை கரையில் இருந்து அவள், சுற்றுலா வந்த குழந்தைகளுடன் அவனை அழைத்தாள். இருந்த வேலை நெருக்கடியில் ஜாக் படகுக்காரனிடம் தகவல் சொல்ல மறந்தே போனான். அந்த வெயிலில் துவண்டு போன குழந்தைகளுடன் ஒரு மணி நேரங் கழித்து திரும்பவும் அவள் அழைத்தாள். தண்ணீர் வழியே வந்த தொலைபேசி இணைப்பு. சத்தம் மிக மெல்லியதாகவே அதில் கேட்கும். “அட இழவே...” என முனகினான். அதன் பின்னால் அந்தக் கோடைக்காலம் முழுவதுமே அவள் அவனை “அட இலவே” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் உச்சரிப்பு அது. அலுவலகத்துக்குள் நுழையும் போதே கடுப்பான குரலில் “அட இலவே எப்பிடி இருக்காரு...” என்று கூப்பிட்டு அவனை முகம் சிவக்க வைப்பாள்.
“ஜியார்ஜின்” என்றான் அவன்.
“ஆமாம்” என்றாள் அவள். “இப்ப...அவங்களோட இரண்டு பெண்பிள்ளைகள்... அவங்க பேரு...”
“ஒருத்தி மஃப்பி. அடுத்தவ... அவங்க பேருல எதுகை இருக்கும். மஃப்பி டஃப்பியா?”
“ம்ஹும். அவ பேரு ஆத்ரே. அவளுக்கு முன்பல் எடுப்பு.”
“ம் ம். நாம இப்ப அந்த குண்டன், அவனைப் பத்தி யோசிப்பம். அவன் பேர் பின்பகுதி பி-ல ஆரம்பிக்கும். பெய்ன்ஸ். போட்ஸ். பைரன். அந்தப் பேர் முதல் பகுதி ரெண்டாம் பகுதி ஒண்ணுபோல வரும். அது தனித்தனிப் பேருன்னு சொல்லவே முடியாது. வால்ட்டர்.. அப்பறம் பு பு... வேடிக்கையா இல்லே?”
“பைரன்... அது கொஞ்சம் கிட்டத்ல வராப்ல இருக்கு. ஆனால் அது இல்ல அவன் பேர். வாரா வாரம் விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்கு செய்யறது அவன்தான். ஸ்கோர் எல்லாம் அவன்தான் சட்டுச் சட்னு பலகைல மாத்துவான்.”
“மனமகிழ் மன்றத்தில் ராத்தியானா அவன் சீட்டாடுவான். பழுப்பு நிற எஃகு நாற்காலியில் அவன் உட்கார்ந்திருக்கிறாப் போல இப்பவும் என் கண்ணுல வரான்...”
“அப்றம் அவன் ஃபிளாரிடாவுக்குப் போயிட்டாப்ல. இல்லியா? ஒரு மனுசன் தன் முழு வருஷத்தையும் ஓய்வு விளையாட்டாகவே வாழ்ந்து கழிக்கிறதாவது, என அவள் சிரித்தாள். அப்படியொரு நபரை யோசித்தால், சோம்பேறி சுப்பன்னு தானே படுது, என நினைக்க அவள் மேலும் சிரித்தாள். அந்த வால்ட்டர்.. வால்ட்டர் யாரோ.
“அவன் குழாய் ரிப்பேர் சாமான்கள் விற்று வந்தான்...” என புதிய செய்தியைச் சொன்னதில் ஜாக் தலை நிமிர்ந்தான். “பணி ஓய்வு பெற்றவன் அவன்.” ஆனால் இந்தப் புதிய சிந்தனைப் பாதை, எத்தனை பரந்து பட்டதாக இருந்தாலும், அவன் பேரை நெருங்கி வர, அந்தப் புதிரை விடுவிக்க உதவி செய்வதாக இல்லை. “சிலரோட வேலையெல்லாம் ஞாபகம் வருது. அவங்க பேர்தான்... இடிக்குது” என்றான். தன்னைவிட இந்த விளையாட்டில் அவள் அதிகம் முன்னேறி விட்டதாக அவனுக்குப் படபடத்தது. ஆகவே அவன் அவளை எட்டிவிட மும்முரப் பட்டாப் போலப் பேசினான். “எல்லாத்தையும் நான் நினைவு வெச்சிக்கிட்டிருக்க வேண்டாமா.” அவன் தொடர்ந்தான். “அலுவலகக் குறிப்பேடுகளில் எல்லாரோட பேரையும் எழுதியவன் நான்!”
“ஆமாம். நீங்க மறந்திருக்கக் கூடாது. அந்தத் தீவுல ஒரு பொண்ணு... சனங்களைப் பார்த்து கல் எறிய ஆரம்பிச்சிட்டாளே. யார் அது?”
“அட கடவுளே. ஆமா. அவ மன நலம் பாதிக்கப் பட்டவள். மகா அழகி. அவ யாரோடவும் பேசிப் பார்த்ததே யில்லை.”
“தெருவோர மரத்தடிகள்ல நின்னு சதா எதோ யோசனையா இருப்பாள்.”
”அந்த யங். அவளைப் பத்தி அவனுக்கு ரொம்பக் கவலை. அந்த... இன்னொரு வில்லங்க கேஸ்... ரயில்ல வந்து தங்கிட்டுப் போவான். பணம் கட்ட மாட்டான். அவனது சகோதரன் ஸ்பிரிங்ஃபீல்டுல இருந்து வந்து பணங் கொடுப்பான்னு சொல்வான். அவனுக்காக கைப் பணத்தைச் செலவழிப்பாரு யங். அந்த மாதிரி நெருக்கடிகளுக்கு மனுசன் தனியா பணம் வெச்சிருப்பாரு.”
“அவனுக்கு செஸ் ஆடப் பிடிக்கும். செஸ்சை விட செக்கர்ஸ் ஆடுவான். ஆமா... நீங்க கூட அவனுக்கு செஸ் சொல்லித்தர முயற்சி பண்ணினீங்க.”
“பலகையில் காய்களை நகர்த்தித் தான் சொல்லிக் காட்டணும் அவனுக்கு. இப்பதான் ‘நல்லா விளங்குது’ம்பான். அல்லது, ‘என்ன அருமையான மனுசர் நீங்க’...ன்னுவான்.”
“நீங்க எது சொன்னாலும் அது அவனுக்கு நீங்க வேடிக்கை காட்டறா மாதிரி இருக்கும். அதைக் கேட்டு சத்தமா ஒரு கோட்டிக்காரச் சிரிப்பு சிரிப்பான். நம்ம ரெண்டு பேரையும் அவனுக்குப் பிடிக்கும். நாம அவனோட நல்லா பழகினோம்...”
“ராபர்ட்.”
“இல்ல. அவன்பேர் ராய், அன்பே. நீங்க என்ன ராயையே மறந்தாச்சா? அப்பறமா... அந்த பெக் கிரேஸ்...”
“ம். முட்டைக் கண்ணி...”
“அவளோட சின்ன நீள மூக்கு. துவாரங்கள் மதகெடுத்தாப் போல...” கிளாரே பேசினாள். “சொல்லுங்க பாக்கலாம். அவளோட சிநேகிதன், எண்ணெய் வழியற மூஞ்சி. அவன்... பெயர்... என்ன?”
“அவன் தலையே பழுப்பா பளபளக்குமே. கடவுளே. அவன் பேர் எனக்கு ஞாபகம் வருமான்னே தெரியல. அவன் ஒருவாரம் போலத்தான் அங்க தங்கினாப்ல....”
“ஏரியில நீச்சலடிச்சிட்டு எழுந்து வர்றது எனக்கு ஸ்பஷ்டமா நினைவு இருக்கு. ஒடிசலான வெண் உடம்பு. சின்ன கருப்பு நிற நீச்சல் டிராயர். பாக்க கிளர்ச்சிகரமா... ஊஊ.”
“வெள்ளைதான். ஆனா விகாரமா இருக்க மாட்டான். உல்ட்டாவா இருப்பான் அவன்” என அதற்கு அவன் அமெரிக்கையாக பதில் சொன்னான். “எல்லாரையுமே எனக்குப் பிடிச்சிருந்தது. ஒருத்தனைத் தவிர, அந்த ஜெர்மன்காரப் பயல். சுருட்டை முடி, அது அவனுக்கு அட்டகாசமா இருக்கறதா நினைப்பு அவனுக்கு. அந்தக் கன்னமே காமெடி பீஸ் தான்.”
“ஹா ஹா அவனுக்கு என்மேல் ஒரு கண்ணு. அது உங்களுக்குப் பிடிக்கல...”
“அப்பிடியா சொல்றே? ம். ஆமான்னு நினைக்கிறேன். பலகையில் இருந்து எகிறிக் குதிக்கும் விளையாட்டு, அதுல அவன் என்னை ஜெயிட்டான். அதான் எனக்கு அவன்கிட்ட வெறுப்பாயிட்டது. ஆனால் பெரு நாட்டுக்காரன் ஒருத்தன் அவனை ஜெயிச்சிக் காட்டினான்னு வெய்யி...”
“எஸ்கோபார்.”
“ஆமா. எனக்கும் அவன் பேர் தெரியும். எப்ப பாரு கூடைப் பந்தை தலையால முட்டிக் கிட்டே விளையாடிக்கிட்டிருப்பான் அவன்.”
“அப்பறம்... பார்பரா. விவாகரத்தானவன். ஓரின பார்ட்டி.”
“வால்டர் பார்பரா... பா பா... பி போ பூ... கோடை சீசன் முடிஞ்சப்போ அவனுக்கு எக்கச்சக்க பில் வந்தது...”
ஆனால் கிளாரே அந்த குண்டு மனிதனை மறந்து தாண்டிப் போய்விட்டாப் போல இருந்தது. அவள் உற்சாகமான நடனத்துடன் அந்தப் பரந்த கடந்தகால வெளிகளில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்திருந்தாள். காலி பீர் டின்களுடன் இதாலியக் குடும்பம் ஒன்று. அந்த முகாமின் ஒரு செவிடன். கிழக்குப் பாதையில் வெறுங்காலுடன் நடந்து காலைக் கிழித்துக் கொண்டான் அவன். ஆகஸ்டு மழை வரும் வரை தீ விபத்து பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டி யிருந்தது. தீவில் மான்கள் இருந்தன என்றார்கள். அவர்கள் பார்க்க வாய்க்கவே இல்லை. குளிர்காலத்தில் பனிக்கட்டிகளில் நடந்து மான்கள் தீவுக்கு வந்தன. வசந்த காலம் வந்து பனி உருகியபோது அவை மாட்டிக் கொண்டன. எத்தனை துல்லியமாக இயங்குகின்றன அவளது நினைவுகள். அவனுக்குப் பொறாமையாய் இருந்தது. மாலை இருளத் துவங்கய வேளையில் ஒரு அம்மாக்காரியின் அழைப்புக் குரல், “பெரில்! பெரில்!...” மர்ரே குழு வந்து ஏராளமாய் ஐஸ்கிரீம் கோன்கள் வாங்கிப் போன காட்சி. எல்லாவற்றையும் சடசடவென்று அவள் நினைவுபடுத்தி நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் நினைவுக்கு எடுத்துத் தரும் ஒவ்வொரு புது முகத்தையும், காட்சியையும் அவன் முகம் மலர ரசித்துச் சிரித்தான். இந்த அத்தனை நினைவுகளிலும் அவர்கள் இருவருமே இருந்தார்கள். அதையெல்லாம் திரும்ப நினைத்துப் பார்க்கிற இப்படியொரு விளையாட்டை அவர்கள் விளையாடுவதில் அவனுக்கும் மகிழ்ச்சிதான். காரில் அலுப்பு தெரியாமல் போக இந்த விளையாட்டு ரொம்ப உதவியது. வேறு விளையாட என்ன இருக்கிறது? அவர்களுக்குப் பழக்கமான சாலைகளுக்கு வந்திருந்தார்கள். கூட ஒரு நிமிட அளவுக்கு அந்தப் பயணத்தை அவன் நீட்டிக்க முயன்றாப் போல ற்று வழியில் காரை விட்டான்..
வீடு. குழந்தைகளைப் படுக்கைக்குத் தூக்கிப் போனார்கள். கிளாரே அந்தக் குட்டிப் பையனை எடுத்துக் கொண்டாள். மொடமொட தாளைப் போல ஒடிசலான நோஞ்சான். அவர்களின் பெண் பப்ளிமாஸ். அவளைத் தொட்டிலில் சரித்தபோது, அந்த இருட்டில் கண் திறந்து பார்த்தாள் குழந்தை.
“வீடு...” என்றான் அவன்.
“மண் மேடு... எங்கப்பா?” அவர்கள் வீட்டருகே ஒரு சாலையில் புல்டோசர் வைத்து மண்ணைத் தோண்டிப் பெரிசாய்க் குவித்து வைத்திருந்தார்கள். அதைப் பார்க்க அவளுக்குக் குஷியாய் இருந்தது.
“மண்ணு... நாளைக்கு” என்று ஜாக் சொல்ல, அவள் சமத்தாக ஒத்துக் கொண்டாள்.
கீழே போய் அவர்கள் இருவரும் குளிர்பதனத்தில் இருந்து இஞ்சி போட்ட பானம் எடுத்தார்கள். பிராந்தியத் தொலைக்காட்சியில் நள்ளிரவுச் செய்தி பார்த்தார்கள். கவர்னர் ஃபர்கோலோ, மத போதகர் குஷிங் இருவரும், குருசேவ் மற்றும் நாசர் பற்றி ஆவேசப் பட்டார்கள். பிறகு அவசரமாக அவனும் அவளும் படுக்கைக்குப் போனார்கள். மறுநாள் குழந்தைகளுக்காக சீக்கிரமே நாள் துவங்கி விடும். கிளாரே உடனே தூங்கிப் போனாள். அவர்கள் அத்தனை பேரையும் அவள் அந்த நாள் பூராவும் மாற்றி மாற்றி கவனித்துக் கொண்ட அலுப்பு.
இன்னிக்கு நாம அத்தனை சுரத்தா இல்லை... என்கிறாப்போல ஜாக் நினைத்துக் கொண்டான். தங்களது கடந்த காலம் பற்றி அவளுக்கு இன்னும் துல்லியமான நினைவுகள் இருந்தன. அவளுக்கு அது முக்கியமாகப் பட்டிருக்க வேண்டும். அவள் அதை கவனமாய்ச் சேமித்து வைத்திருந்தாள். பேசுகையில் அவள் சொன்ன எதோ ஒன்று அவனை இம்சைப் படுத்தி விட்டது. அந்தக் காலங்களைத் திரும்பப் பெற ஏங்கினாளோ? அந்த ஜெர்மன் பையன் அவளை சைட் அடித்தது... மெல்ல அவன் அவள் அந்தக் காலத்தில் எப்படி இருந்தாள் என நினைத்துப் பார்த்தான். பச்சைச் சாராய். பழுப்பு வண்ணக் கால்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து காலை உணவுக்காக வெளியே கிளம்பும்போது கைகோர்த்துச் செல்வார்கள். ஜீப் புழங்கிப் புழங்கித் தூசி பறக்கும் தெரு... அந்த செவிடன் போல, கிளாரே வெறுங்காலுடன் நடந்திருக்கிறாள். தாவரத் தண்டுகள் பரப்பியதன் மேலேறிப் போனாள். அவளது கைகள். அந்த உயரம்... பார்க்க சின்னப்பெண்ணாய்த் தெரிந்தாள். அவனை அவள் உலுக்கி எழுப்புவது விநோதமாய் இருக்கும். வெகு தொலைவில் அடிக்கும் காலை உணவுக்கான மணியை அவளால் கேட்க முடிந்தது. ஊரின் மத்தியில் இல்லை அவர்களது அறை. எல்லாமே அவர்களுக்கு அங்கிருந்து தூரம்தான். மின்சாரம் கிடையாது. மெழுகுவர்த்தி தான். வியாழக்கிழமை சாஃப்ட்-பால் குழுவுடன் வலப்பக்க ஆட்டக்காரனாக அவன் விளையாடுவான். வியாழன் தவிர மற்ற நாட்களில் மாலை வேளைகளில் வேலைக்கும் உணவுக்குமான அந்த அரை மணி நேர இடைவேளையில், அவள் உள்ளே படுக்கை சீர் செய்வாள். அவன் வெளியே மர நாற்காலியில் அமர்ந்திருப்பான். மசங்கலான வெளிச்சத்தில் அவன் டான் குவிக்சாட் வாசித்துக் கொண்டிருப்பான். அந்தக் கோடை முழுசுமாய் அவன் வாசித்த ஒரே புத்தகம். ஆனால் அந்த அரை மணி ஓய்வில் தொடர்ந்து கொஞ்ச கொஞ்சமாக அதை அவன் வாசித்தான். செப்டம்பர் மாதம் கதையின் கடைசியில் அழவும் செய்தான். தன்னை மதிக்கிற எஜமானனிடம் சாங்கோ தனது மரணப் படுக்கையில் சுயபிரக்ஞை மீண்டு பேசுகிறான். டல்சீனியா சீமாட்டியை அவர்கள் தேடிப் பார்க்கலாம். ஒருவேளை எந்த வேலியோரமாகவும் அவளை அவர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்காதா? கிழிசல் உடைகளில்... அவ எந்த நிலையில் இருந்தாலும் எப்போதும் ராணிதான் அவர்களுக்கு. அவர்களின் அந்த அறையைச் சுற்றிலும் நெட்டுக் குத்தாய் விரைத்து நிற்கும் வெள்ளை பைன் மரப் பட்டைகள். சன்னல்கள் கிடையாது. திரைகள் கிழிந்து கிடந்தன. ரேழியைத் தாண்டி நடந்தபோது தரையில் சிதறிக் கிடக்கும் குச்சிகளும் இலை தழைகளும்.. அவற்றின் இடையே நடக்கையில் எதிர்பாராமல்... அவன் தேடியது, கிடைத்தே விட்டது. சட்டென தோள் விரைக்க நிமிர்ந்தான். “கிளாரே” என மென்மையாய் அழைத்தான் அவன். தூக்கத்தில் இருந்து அவளை எழுப்பாத மென்மை. சொன்னான். “பிரிக்ஸ். வால்ட்டர் பிரிக்ஸ்.”
storysankar@gmail.com
919789987842 - 91 9445016842

Comments

Popular posts from this blog