நான் பார்த்த திரைப்படம்
அ சு ர ன்

சில தத்துவங்களைக் காதில் வாங்கிக் கொண்டு அதில் அமிழாமல் “பரவால்லியே... இதைவெச்சி போணி பண்ணலாம்” என்கிற தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்று.
01. முதல் பாதி கதை காட்டில் அப்பாவின் மகனின் பயணம் என்று ஓரளவு இயற்கைச் சூழல் சார்ந்து, பூமணி தன் நாவலில் பிரியப்பட்டுக் காட்டியபடி நகர்கிறது. ஆனால் அது திரைப்படத்தின் காடு, அடர்ந்த காடு அல்ல... மண் தரை. அதில் அவர்கள் எப்படி ஒளிந்து கொண்டார்கள் தெரியவில்லை. உயரத்தில் இருந்து வில்லன் தேடினாலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சினிமாக்களில் வில்லன் சுட்டால் குறி தவறும். ஆனால் கணவனை இழந்த பெண் வில்லனை ஒரே தோட்டாவில் தவறாமல் சுட்டுவீழ்த்தி படத்தை முடிப்பாள்... அதுபோல தனுஷோ அவனது உறவினர்களோ சுலபமாக அதே காட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள். வில்லனுக்கு மாத்திரம் அந்த வாய்ப்பு வரவில்லை. நாய்களுடன் வில்லனின் வேட்டை. ஆனால் சிதம்பரம் - தனுஷின் பிள்ளை - அவனது ஆசை வளர்ப்பு நாய் சரியாக இவனிடம் அடையாளம் கண்டு வந்து சேர்ந்து விடுகிறது.
02. இடைவேளைக்குப் பிறகு பஞ்சமி நில ஆக்கிரமிப்பு - கீழ் சாதிக்காரன் செருப்பு போட்டு நடந்தால் மேல் சாதி எதிர்ப்பு... என கலர் ஜிகினாக்கள் பறக்கின்றன. பஞ்சமி நிலத்துக்காகப் போராடுங்கள் போராடுங்கள், என்று பிரகாஷ்ராஜ் சொல்கிறார். சேரி பற்றி எரிகிறது... அதற்குப்பிறகு அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டு நிகழ்காலக் கதைக்கு சௌகரியமாக இயக்குநர் வந்து சேர்ந்து விடுகிறார். சமூகப் பிரச்னை சார்ந்து அவரது அக்கறை அவ்வளவுதான்.
03. நிகழ்காலக் கதையிலும் வன்முறை வேண்டாம்... என்கிற மாதிரி தனுஷ் சொல்கிறார். அத்தனை பாடு பட்டு தன் நிலத்தை விட்டுத்தராமல் காப்பாற்றி வந்தவர் பொசுக்கென்று தன் நிலத்தை எழுதிக் கொடுத்து விடுகிறார்.
பஞ்சமி நிலப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இப்படிச் செய்கிறார்...
அதை வழிமொழிகிறவர் யார்? பஞ்சமி நிலப் போராட்டத்தைத் தூண்டிய பிரகாஷ் ராஜ்.
04. நிறையக் காட்சிகளின் வாய்ஸ் ஓவர்லேப் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. டெக்னிக் சார்ந்து படம் மிகப் பின்தங்கி யிருப்பது வருந்தத் தக்கது.
ஊர்ப்பஞ்சாயத்து ஒருபக்கம், காவல்துறை ஒருபக்கம்... எந்தத் தீர்ப்புக்கு இவர்கள் அடிபணிகிறார்கள் என்றே தெரியவில்லை. இடைவேளைக்கு முந்தைய பகுதிகளிலும் வில்லன் ஆட்கள் வெட்டியவனைத் தேடிப்போகிறார்கள்... போலிஸ் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
05. பல பத்து கோடிகள் சம்பளத்தில் ஒரு கதாநாயகனை வைத்துக்கொண்டு ஏழைகளைப் பற்றி படம் எடுக்கிறார்கள் தமிழில்... உணர்ச்சிவசப்பட்டு கைதட்டிவிட்டு வெளியே போனவுடன் சொன்னதையே மறந்து விடுவார்கள் தமிழர்கள் என்கிற அலட்சியம். தமிழ் ரசிகர்கள் மேல் திரைப்பட இயக்குநர்கள் வைத்திருக்கிற மரியாதையே அவ்வளவுதான்.
06. பஞ்சமி நிலப் போராட்டங்களில் தலை கொடுத்தவர் திரும்பவும் சரண்டர் ஆனால், தண்டனை அத்தனை எளியதாக இருக்குமா?
சாராயம் காய்ச்சியவருக்கு கதாநாயக அந்தஸ்தில் குறை ஒன்றுமில்லை. அவருக்குப் பெண் தர மறுப்பதும் பெரிய விஷயமாகக் காட்டப்படவில்லை. வேறிடத்தில் வந்து விவசாயி ஆகி விடுகிறார்... ஏன் தெரியவில்லை சாராயம் காய்ச்சி யிருக்கலாம்... தெரிந்த வேலையாச்சே.
07. நடுத் தெருவில் அவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். ஊரில் யாருமே தலையிடவில்லை. கடைசியில் இது இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்னை என்று திடீரென்று வசனம் வருகிறது. சாதிப் பிரச்னை தேவைப்பட்டால் கையில் எடுத்துக் கொள்வார் இயக்குநர்.
08. முற்போக்கு எழுத்தாளர்கள், அவர்களின் மோஸ்தரே இப்படித்தான். நட்சத்திர ஓட்டல்களில் புத்தக வெளியீடு செய்கிறார்கள் அவர்கள்...
09. விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான படமாகவே தெரிகிறது அ சு ர ன்.

Comments

Popular posts from this blog