Monday, January 14, 2019


art kamal koria

சீதை
எஸ். ஷங்கரநாராயணன்

வன் பெயர் மாரிமுத்து. அவனுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இல்லை. மாரிமுத்து ஓர் உழவன். ஆற்றுப் பாசனம் பொய்த்த உழவன். எட்டு ஏக்கர் பூமி. இருக்கிற வயல்வெளியில் அவன் பங்கு அதிகம் தான். பூமி வறண்டதால் வானம் வறண்டதா, வானம் வறண்டதால் பூமி வறண்டதா தெரியாது. மழை வரும் வரும் என்று ரேஷன் கடை பாமாயிலுக்குப் போல காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. அது வந்தாமாதிரி வந்து ஒரேநாளில் தீர்ந்துவிட்டதாகச் சொல்லிவிடுகிறார்கள். சிறு தூறல். அத்தோடு வானம் கலைந்து விடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, என்கிறாப் போல.
      இனியும் வானத்தை எவ்வளவு நம்புவது. வாய்க்காலை நம்பி இனி பிரயோசனம் இல்லை. நம்ம பேரைச் சொல்லி மாநிலமும் மாநிலமும் அடித்துக்கொண்டு அரசியல் பண்ணுகிறார்கள். மொத்தத்தில் நமக்கு இனி ஆற்றுப் பாசனம் இல்லை. மாரிமுத்து இருக்கிற நிலத்தில் கிணறு ஒன்று எடுக்க விரும்பினான். அதற்கும் வில்லங்கம் வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
      ரெண்டாள் ஆழம் தோண்டும்போதே ணங்கென்று சத்தம். மேலே கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மாரிமுத்துவுக்கே அந்தச் சத்தம் கேட்டது. ணங்.
      ஏய் நிறுத்து, என்று கத்தினான் மாரிமுத்து. என்ன சத்தம் அது, என்று கேட்டான்.
      தெர்லங்களே.
      பார்த்து கடப்பாரையைப் போடுறா. புதையல் கிதையல் இருக்கப் போவுது.
      மெல்ல மண்ணை நெகிழ்த்தி விலக்கிப் பார்த்த முகூர்த்த வேளையில், ஆகா அழகான சிலை. ஐம்பொன். விடிந்தும் விடியாத நேரம். பிரசவத்தில் வெளியான சிசு போல. வீறிட்டு சிசு அழுதபடி வெளியே வரும். இங்கே சத்தமே இல்லை. சீதாப் பிராட்டியா இவள்? கொடிபோல் இடை சிறுத்த, மேலெடுப்பில் தனம் பூரித்த அம்மன் நாச்சியார்.
      ஏய் கூட வில் கிடைக்குதா பாரப்பா!
      லேசாய் அவளுக்கு கண் கூசினாப் போலிருந்தது. வெளிச்ச பலூன் இன்னும் ஆகிருதி பெருக்கிக்கொள்ளாமல் ஊருக்குள் புன்னகையுடன் நுழைகிற வாஸ்து வேளை அது. அவளுக்கு ஆச்சர்யத் திகைப்பு. இப்போது எங்கே இருக்கிறேன், என்கிற குழப்பம். அதைவிட முக்கியம், இப்போது இப்படி விழிப்பு வந்தநிலையில், இதுநாள் வரை எங்கிருந்தேன் என்று தெரியாத குழப்பமே அதிகம் இருந்தது. மண்தொட்ட ஜில்லிப்பு இந்நாட்களில், இத்தனை வருடங்களில், நூற்றாண்டுகளில் பழகியிருந்தது. சட்டென வெளியே காற்றின் ஸ்பரிசத்துக்கு, தான் வந்தது புது அனுபவம்.
      ஏல பாத்துத் தூக்குங்கடா.
      அந்த மொழி, அது தமிழ்தான். ஆனால் அவள் கேட்டிராத புதிய குரலாக, புதிய உச்சரிப்பாக அது கேட்டது. தமிழை வேறு மாதிரியாகக் கூடப் பேச முடியுமா, என்கிற முதல் திகைப்பு. கண்விழித் தாமரை இன்னுமாய் விரியத் திறந்து ஆச்சர்யத்துடன் நாச்சியார் பார்த்தாள். ஆகா, இது பூலோகமா? பூலோகந்தானா? ஆம் என்றாலும் இது பூலோகம் போல இல்லை. அவள் பார்த்த, புழங்கிய பூலோகம் இது இல்லை.
      அந்தக் காற்றேயல்லவா புதுசாய் இருந்தது. அவளுக்கு உடம்பு லேசாய் சிலிர்த்து நடுங்கினாப் போலிருந்தது. ஆமாம், கடைசியாய்... அந்த நடுக்கம். எல்லாரும் அலறியோடுகிறார்கள். கோவிலின் தூங்காவிளக்கு. கோயில்யானை மணிபோல அது இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே ஆடுகிறது. சாளவாய் ஒழுகல் போல விளக்குகளின் ஊஞ்சல் அசைவில் எண்ணெய் ததும்பிச் சிந்துகிறது. பெரும் குலுக்கல் தான். கோவிலின் காண்டாமணி நீதி கேட்கும், மன்னனின் மண்டபவாயில் மணி போல தானே அடிக்க ஆரம்பிக்கிறது. பக்தகோடிகள் கோவிலை விட்டு வெளியே ஓடுகிறார்கள் கூச்சல். குழப்பம். பரபரப்பு. பூகம்பம். மரங்களே நடுங்கின. பறவைகள் வில்லின் வாளிகளாய் விருட்டென காற்றில் வீசினாப் போல எழும்பிப் பறக்கின்றன.
      யாரது? ஞானதேசிகன். அம்மா ஊருக்கே சோதனையா... எல்லாரும் கோவிலை விட்டு வெளியே ஓட, பட்டர்... உள்ளே பாய்ந்தோடி வருகிறார். பெரும் குலுக்கல் தான். எட்டு வைத்த இடம் பிசகி தள்ளாடி வருகிறார். பயம் இல்லை. அந்தக் கண்ணில் ஒரு வெறி. தீர்மான வெறி. நான் இருக்கேன் அம்மா. பாய்ந்து நாச்சியாரை அப்படியே வாரியணைத்துக் கொள்கிறார். துளசி மணி மாலைகளை மீறி அவரது களபம் பூசிய மார்பில் இருந்து சிறு வியர்வை நெடி. பரபரப்பாய் பதட்டமாய் இருந்தார். நிற்க நேரம் இல்லை. யோசிக்கவும் நேரம் இல்லை. நாச்சியாரை அணைத்தபடி அவர் கோவிலுக்கு வெளியே ஓடுகிறார்.
      மழை. மழை என்றால் சன்ன மழை இல்லை. பேய்க்காற்று. ஊழிதான் இதுவா? ருத்ரமூர்த்தியின் நடனமா இது, என்னும்படி மரங்கள் பேயாய் ஆடிக் குலுங்கின. உடம்பில் ஒரு சாட்டைபோல் மழை அடித்து, உள்ளே குளிர் கத்தியென வெட்டியது. எங்கே ஓடுகிறார், அவருக்கே தெரியாது. எதோ சக்தி அவரை இயக்கி முன்னே தள்ளிச் சென்றது. மூளை கால்களுக்கு வந்திருந்தது. ஓடு. ஓடு. ஓடிக் கொண்டேயிரு. அவிழ்ந்த குடுமி. பித்துப் பிடித்த ஓட்டம். பத்து இருபது விநாடிக்கொருதரம் பூமி அசைவதை நிறுத்தும். திரும்ப குலுங்கும். மண் கல் புதர் எதுவும் தெரியாமல் பட்டர் ஓடுகிறார். எதோ தடுக்கி... கல்லோ, கட்டியோ, யாரோ விழுந்து கிடக்கும் மனிதரோ, உடைந்து கிடக்கும் மரக்கிளையோ, தட்டி அவர் விழுகிறார். அப்பவும் நாச்சியாரைப் பிரிய விடவில்லை. அவளைக் காப்பாற்றிவிடும் ஆவேசத்தில் தன்னுயிர் துச்சமாகி விடுகிறது.
      ஞானதேசிகன் திடீரென்று பார்த்தார். நாச்சியார் தலைப்பக்கம் காயம். ஆ, என்ன இது ரத்தமா? பதறுகிறார். அது அவர்உடம்பில் இருந்து சிந்தியது என்பதே அவருக்குத் தெரியவில்லை. ஞானதேசிகன் அப்படியே காற்று தள்ளியதில் விழுந்தார். அப்புறம் நடந்த விஷயங்கள் அவருக்குத் தெரியாது.
      நாச்சியாருக்கும் தெரியாது.
      இந்த இடம் எல்லாம் அப்ப எத்தனை செழிப்பாய்க் கிடந்தது. பூமி சிரித்த காலங்கள். கைநிறைந்த வளையல் சிணுங்கல்களுடன் பிள்ளைத்தாய்ச்சி நடமாடினாற் போல காலம். பூமியில் மரங்கள் அல்ல, விருட்ச ராஜாங்கம். தோப்பும் துரவுமாய் பாதையோரங்கள் கொப்பும் கிளையுமாய் நிழல் விரித்துக் கிடந்தது. விருட்சப் பந்தல். கோவில் வாசலில் தேர் போல தோப்புகளில் விருட்சங்கள் நிமிர்வுடன் நின்றன. சூரியன் உத்தரவு வாங்கிக்கொண்டு உள் நுழைந்த காலங்கள் அவை. பிறந்த குழந்தை யானாலும், பெத்தவளும், அதன் அப்பனும், அதன் சிறு அழுகைக்கும் பதறி பரபரத்து, சிறு சிரிப்புக்கும் புல்லரித்து புளகாங்கிதப் படுவது போல. பட்சி சூரியனுக்குக் குழந்தை போல.
      அங்குசத்துக்கு யானை கட்டுப்பட்டால், சூரியன் பட்சிகளுக்குக் கட்டுப்பட்டவனாய் இருந்தான். காலையில் பட்சிகள் முன்னால் சூரியன் உத்தரவு கேட்டு நிற்பதும், ட்விட் ட்விட் என அவை உத்தரவு வழங்கியபின், சூரியன் புக, விடியும் காலைகள்
      எந்தக் காலத்தியதோ, தெர்லங்களே.
      ம். உடன்னே நம்ம தாசில்தாருக்குச் சொல்லணும்டா. யாரு கண்டா, இந்தப் பகுதியில் கோவில் கீவில் கூட அடியில இருக்குதோ என்னமோ.
      அவர்களை விட அவளுக்குத்தான் திகைப்பு அதிகமாய் இருந்தது. அவளால் யூகிக்க முடியாத எதிர்காலத்துக்கு அல்லவா எப்படியோ அவள் வந்து சேர்ந்திருந்தாள். எந்த வகையிலும், நிகழும் இறப்பும் காண, எதிர்காலத்தில் ஒரு அபத்த வாசனை, அத்தனை ஒத்திசைவு இல்லாமல் தான் ஆகிவிடுகிறது.
      எல்லாம் புதுசாய்க் கூட அல்ல, புதிராய் அல்லவா ஆகிவிடுகிறது. இந்தப் பேச்சு, இந்த பாவனை, இந்த உடை பாணியே கூட அவள் அறியாதது. என் நாட்டு மக்கள் புருஷர்களாயினும் ஸ்திரீகளாயினும் தார் பாய்ச்சிக் கட்டினார்கள். நீள் கூந்தல் நடு வகிடு எடுத்து இரு பாலரும் குடுமி போட்டார்கள். பெண்கள் தலையிலும், புருஷன்மாரானால் மார்பிலும் பூச்சரமோ, மாலையோ சூடினார்கள்.
      அட மனிதர்களே எத்தனை பேராகுருதியாய் இருந்தார்கள். அவளைக் கடைந்த ஆழ்வான், மலைபோல் இருந்தான். சொளகு போன்ற கரங்கள். மேடாய்ப் பொங்கிய புஜங்கள். பட்டறை உலையின் பெருமூச்சுகளுடன் அவன் உலோகத்தை வாட்டுகையில் முகமெல்லாம் ஜ்வலிக்கும். காட்டெருமைக் கொம்புகளாய் இருபுறமும் அரைவில் எடுத்த மீசை. தென்னம்பாளை போன்ற உறுதியான மார்பின் வியர்வை நதிகள், நடுவே பாலம் போல் பூநூல். இந்த மனிதர்கள் வற்றி ஒடுங்கிப் போனார்களே என்றிருந்தது. தேகங்களில் இயற்கையாய் இருந்த அந்த தேஜஸ், கட்டுமஸ்து, முறுக்கம்.
      புலிக்கு பூனை பிறந்தாப் போலிருந்தது.
      கண் கூசச் செய்கிறதாய் வெயில் உக்கிரமாகி யிருந்தது. யாரோ ஓடிப்போய் தேங்காய் பூ பழம் வாங்கி வந்தார்கள். அப்படியே தேங்காய் உடைத்து நைவேத்தியம், கற்பூர ஆரத்தி. வயலிலேயே அழுக்கு பாராட்டாமல் சாஷ்டாங்க நமஸ்காரம். மாரிமுத்து, நீ அதிர்ஷ்டக்காரண்டா. நாச்சியா அனுக்கிரகம் உனக்கு பூரணமா கெடைச்சிருக்கு. எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணினாயோ.
      என்ன அற்புதக் கலை வடிவம்.
      ஹா. அருவத்தில் உருவத்தைக் கண்டுபிடித்து, உயிரையும் தேடியிருக்கிறான் ஒருவன்.
      மாரிமுத்து கைகட்டி நிற்கிறான்.
      நான் சாமானியன். இப்படி பெரிய விஷயம் எனக்கு நடந்தால் நான் என்ன செய்வது? என்னால் தாள முடியுமா இதை. அவன் கால்கள் துவண்டன. பரவசத்தை விட பயமே பெரிதாய் இருந்தது அவனுக்கு. குடும்பத்தின் நெருக்கடிகளிலோ, தொழில் சிக்கல்களிலோ அதிகபட்சம் அவன் கடவுளுக்கு என வேண்டிக்கொள்வதும், காரியம் சித்தியானால் போய் பிரார்த்தனையை நிறைவேற்றி வருவதுமாய் எளிய மனிதனே அவன். சில பிரார்த்தனைகள் உடனே நிறைவேற்ற முடியாமல் தள்ளிப் போய்விடுகின்றன. சரி, சாமி அதுவா நம்மை எப்ப அழைச்சிக்குதோ பார்க்கலாம், என விட்டுவிட வேண்டியதாகி விடுகிறது. சில பிரார்த்தனைகள் மறந்துகூட போகின்றன. வேறொரு சிக்கல் முளைக்கையில், அதை மறந்ததால் இது பிரச்னை, என்பதாக மனம் கணக்கு பண்ணி அதை ஞாபகத்தில் கொண்டு வருகிறது. இப்போது நாச்சியார் திடுதிப்பென்று அவன் வயலில் எழுந்தருளியிருப்பதை என்ன மாதிரியாய்க் கொண்டாடுவது என்று தெரியவில்லை. நாம் இதை சரியாக அணுக வேண்டுமே என்ற கவலையே அவனை பெரிய அளவில் தள்ளாட்டியது.
      ஐயோ நாச்சியார் அம்மையே, என்னால் உன் இந்த சோதனையைத் தாங்க முடியலையே, என நினைக்கவே அழுகை வந்தது.
      ஊருக்கு நல்ல காலம் பொறக்கப் போறது. அதான் நாச்சியாளே வந்து தர்சனம் தந்திருக்கா.
      வெயிலுக்கு இந்த உக்கிரம் இருக்கும் என்று நாச்சியார் அறியாள். நந்தவனத் தென்றல் கவரி வீசி வாழ்ந்தவள் அவள். அக்காலங்களில் மரம் சூழாத வீடு உண்டா. மரம் அணிவகுக்காத வீதி உண்டா. தெருவோரப் பூங்காக்கள். மர சமூகத்தில் கர்ப்பப் பைக்குள் போல இருந்தான் மனிதன். பாதுகாப்பாக. தேரோடும் வீதிகளில் இரவில் உயர ஸ்தம்பங்களில் விளக்கு ஏற்றுவார்கள். இரவுக்கு தீபப்பொட்டு. இயற்கை தானே பொட்டு வைத்துக் கொள்வதும் உண்டு. முழுநிலாக் காலங்கள் அற்புதமானவை. அப்படி தினங்களில் கோவில் பிராகார மண்டபத்தில் பாட்டும் கூத்துமாய் விடிய விடிய கொண்டாட்டம். ஊருக்குள் இருள் நுழைய படுத்துறங்க உடம்பைச் சாத்திவிடும் ஜனங்கள் அரைத் தூக்கமும் குறைத் தூக்கமுமாய் கூத்து பார்ப்பார்கள்.
      எந்தக் காலத்து விக்கிரகம் தெரியலையே.
      முதலாம், இரண்டாம் என்று மன்னன் பெயர்கள் நாச்சியாருக்குப் புதியவை. விஷயங்களை விட இப்படி விவரங்களையும் அடையாளங்களையும் தேடி மனிதன் இந்நாட்களில ஏன், எப்படி மாறிப்போனான். எல்லாம் தெரியும் என்று சொல்ல ஆசை. எல்லாவற்றையும் வெளிப்படையாக்கு. ரகசியம் அற்று இரு. பிய்த்து வீசி உண்மையை வெளிக்கொணர். வானத்தை சட்டைப் பைக்குள் அடைக்கிற ஆவேசம். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டும் யத்தன மோகம். மூர்க்கம்.
      யாராரோ வந்தாப் போலிருக்கிறது. அரசு அதிகாரிகள். அவர்கள் வந்த வாகனம் புதியது அவளுக்கு. குதிரைகள், ஆநிரைகள் என்கிற குளம்படிகள் ஒழிந்த காலம், என்பதே ஆச்சரியம் தான். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள், சிறு பசுக்களாய், சொம்பு நிறைக்கிற காலமா இது. உழவு படுத்த காலமா இது? உழவர் இன்று தொழுதுண்டு பின் செல்கிறார்கள். மழை பொய்த்த காலம். பெய்யென மழை பெய்விக்கிற காலம் காலாவதி ஆகியிருந்தது. என்னாயிற்று. இயற்கையை இப்படி திசைதிருப்பி விட்டவர் யார்? நாச்சியார் அழுதுவிடுவாளாய் இருந்தது. ஏன் நான் இப்போது இப்படி மீண்டும் வந்தேன். மீண்டு வந்தேன்.
      கையில் வைத்திருக்கிற பூதக் கண்ணாடியால் விக்கிரகத்தை நெருக்கமாய் சோதிக்கிறார்கள். நரைத்த தலையும், குறுந்தாடியுமாய் அவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அந்தப் பகுதி ஜனங்கள் அவரையே ஆர்வத்துடன் உற்றுப் பார்க்கிறார்கள். இந்த விக்கிரகத்தின் வயதை அவரால் சொல்ல முடியுமா? இது எந்த மன்னனின் காலம் என்று அவரால் கணிக்க முடியுமா?
      சார், கிணறெடுக்கலாம்னு நல்ல வாஸ்து நாள் பார்த்து நான் வயலைத் தோண்ட ஆரம்பிச்சனுங்க...
      அவர்கள் பேசும் மொழியில் எத்தனையோ விளங்காத வார்த்தைகள் இருந்தன. நாச்சியாருக்கு பல வார்த்தைகள் புரியத்தான் இல்லை. பல பிரதேச மனிதர்களின் சங்கமத்தில் பல மொழிகள் ஊடறுத்து புழக்கத்துக்கு என பல மொழிகளின் வார்த்தைகள் கலந்து முயங்குகின்றன. ஆனால் இந்தப் பிரதேச மக்கள் அந்நிய மொழியின் வார்த்தைகளை தாங்களும் ஏன் கையாள ஆரம்பிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. நம்மிடம் இல்லாத சொற்கள் எனில் பரவாயில்லை. அந்நிய சொற்களை இப்படி சகஜமாக, அதாவது தன்னைப்போல அனுமதிக்கிறார்கள்.
      சேதி மெல்ல காற்றுத் தீபோல பரவி எல்லை விரிகிறது. அடியே உனக்கு விஷயம் தெரியுமா? ஏண்டி நீ கேள்விப்பட்டியா? (இல்ல, நான் கோவில்பட்டி.) உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? அவளவள் அடுப்பில் கொதிக்கிற உலையை, விறகை இழுத்து அமர்த்திவிட்டு மாரிமுத்து வயலுக்கு அணிவகுத்தார்கள். ஊர் சுவாரஸ்யத்துக்குக் காத்துக் கிடந்தது.
      யார் நீங்க?
      தினத்தந்தி.
      அவன் பெட்டியில் இருந்து அட மின்னல் வெட்டியது. நாச்சியாருக்குக் கண் கூசியது. என்னதான் நடக்கிறது இங்கே, என்று கண்ணைச் சுருக்கினாள் நாச்சியார். இடை சிறுத்த தனம் பெருத்த நாச்சியார், வதங்கிய வெற்றிலையாய்த் தெரிந்த அந்தப் பெண்களையிட்டு இரக்கப் பட்டாள். தொடை வரை கால் வரை தொங்கும் கூந்தல் காலங்களை அவர்கள் அறிய மாட்டார்கள். உழைப்பு சார்ந்து வாழ்க்கை வசதிகளை அவர்கள் மெத்தையாய்ச் சுருட்டி வைத்துவிட்டு வெளியே இறங்கியதாகத் தெரிந்தது. கட்டாந் தரைப் படுக்கை. மெத்தையே அவர்கள் அறியார்.
      வாஸ்தவத்தில் கோவிலுக்குள் அவர்கள் அனுமதிக்கப் பட்டவர்களே அல்ல. பட்டும் பீதாம்பரமும் உடுத்திய வணிகர்களும், பெருந் தனக்காரர்களும், பிராமணர்களும், அரசனுமே வந்துபோவதாய் இருத்து அக்காலம். பூக்களாலும், கற்பூராதி வாசனை திரவியங்களாலும் கோவில் எப்பவும் மணத்துக் கிடந்தது. வெளிப் பிராகார நந்தவனங்களின் காற்று நாய்களாய் உன்மத்தக் கிறுகிறுப்புடன் சுற்றித் திரிவதாய் இருந்தது.
      பாமர ஜனங்களைப் பார்க்க வந்ததே நல் அனுபவமாய்த் தோன்றியது நாச்சியாருக்கு. இந்த உழைத்த உடம்பின் வியர்வை நெடி, இதுவும் இயற்கை பூசிய நெடி தானே. நாம் இதற்கும் பழகிக்கொண்டு தானே ஆகவேண்டும். உழைப்பை அறிவிக்கிற இந்தப் புனித நீர் தீர்த்தமே அல்லவா?
      புதிர்களைப் போட்டபடி, புதிர்களை விடுவித்தபடி நகர்கிறது காலம். மாற்றங்களை கணந்தோறும் நிகழ்த்தியபடி நகர்கிறது அது. சித்திரங்கள் கணந்தோறும் மாறுகின்றன. அதை அறிகிறவர்கள், உணர்கிறவர்கள் பாக்கியவான்கள். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் அல்ல. சாஸ்வதம் அல்ல. எதுவும் அற்பமும், நிலையற்றதும் அல்ல. சில நம் கண்ணுக்கு முன்னே வருவதும், சில பின்தள்ளப் படுவதுமாய் வேடிக்கைக் கிலுகிலுப்பை, நம்மைக் குழந்தையாய் ஆக்கி நமக்குக் காட்டுகிறது காலம்.
      ஊரில் தண்ணி இல்லை. வெயில் படு போடு போடுது. ஆறு குளம் வத்திட்டது. மழை பெய்வது அடியோடு குறைஞ்சிட்டது. தாயே, நாங்க என்ன பண்ணுவது. நீ வந்திருக்கே... எங்களுக்கு என்னமாச்சிம் நல்லது பண்ணிட்டுப் போ.
      அதிகாரி புன்னகை செய்து கொள்கிறார். திரும்பி கூட்டத்தில் நிற்கிற வேறொரு நபரிடம் பேச ஆரம்பிக்கிறார். இப்படித்தான் அம்பாசமுத்திரத்தில்...
      எல்லாரிடமும் கதைகள் கிளைக்க ஆரம்பித்த வேளை அது.
      யாருப்பா வயல் ஆளு?
      நாந்தானுங்க, என மாரிமுத்து முன்வருகிறான்.
      நீ சொன்னதை யெல்லாம் இந்த ஸ்டேட்மென்டுல எழுதியிருக்கோம். கையெழுத்து போடு...
      ஐய நான் கைநாட்டுங்க. விரல் ரேகை...
      இப்ப என்னய்யா பண்றது?
      என் பையன் படிச்சவன். அவன் போடுவான் என்சார்பா. படித்துக் காட்டப்பட்டதுன்னு எழுதிப்பிடுங்க.
      உன் பேர் என்னப்பா?
      தம்பிதுரைங்க சார்.
      வெயிலின் உக்கிரத்தில் ஜனங்களும் மெல்ல ஆர்வம் சுருங்குகிறார்கள். விக்கிரகத்தை நம்ம தாலுக்காபிஸ் கொண்டுபோயி, வெச்சிறலாம். பிறகு முறைப்படி தொல்பொருள் ஆய்வில் இருந்து கடிதம் கொடுத்து வாங்கிக்கட்டும், என்கிறார் அதிகாரி. அவர் பேசவே அலுப்பாய் உணர்ந்தார். உடம்பு ரீதியான அநேக உபாதைகள் அவருக்கு இருந்தாப் போலிருந்தது. ஆனால் பேசினால் அதில் ஒரு அதிகார தொனியைப் பிரயோகிக்க அவர் தவறவில்லை.
      அந்தக் கூட்டம் மெல்ல வழிவிடுவதாய் இருந்தது. ரெண்டு சாரியிலும் ஜனங்கள். விக்கிரகத்தை யாரோ எடுத்து அணைத்துக் கொள்கிறார்கள். அவளுக்கு ஞானதேசிகன் ஞாபகம் வந்தது. அந்த ரெண்டு சாரி ஜனங்கள் வழியே போகையில் தட்டுப்பட்ட அந்த முகம் வித்தியாசமாய் இருந்தது. அவளுக்கு ஞாபகத்தில் இருந்தது அந்த முகம்.
      முகமே மயிர்ப்புதரான முகம். கண்ணில் அந்த ஆசை வெறி. அட இது இங்க இருக்கிற விவரம் தெரியாமப் போச்சே... என்பதான ஆதங்கம் அது. காதுகளைத் தீட்டிக்கொண்டாள் நாச்சியார். அவள் எதிர்பார்த்தது சரி. திரும்பி அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் காதில் கேட்டது.
      நல்ல ஐம்பொன் சிலை. நான் தேடிட்டிருக்கேன்டா இதை. எப்படியும் கடத்தினால் லட்சத்துக்கு மேல போகும்..
      அன்றைய ராத்திரி விசித்திரமாய் இருந்தது நாச்சியாருக்கு. அலுவலக அறையின் வாசனைகள் வேறு மாதிரி. கோவிலின் கர்ப்பகிரகம் அல்ல இது. பழைய காகிதங்களின் நெடி இங்கே. வாசலில் பணியாள் ஒருவன் தூக்கக் கலக்கத்துடன் உட்கார்ந்திருக்கிறான். பொழுது மெல்ல குளிர்ந்து, சூரியனில் இருந்து மீண்டு இருட்டு சூழ்ந்துவிட்டது.
      அந்தப் பணியாள் திடீரென்று உள்ளே வந்து விளக்கைப் போடுகிறான். தாயே, என்னால் உன்னைக் கோவிலுக்குள் வந்து கும்பிட முடியாது. நீயே என்னைத் தேடி வந்துவிட்டாய். அப்படியே விழுந்து வணங்கினான் அவன். என் பொண்ணுக்கு வயசு 36 ஆயிட்டது. இன்னமும் கலியாணம் ஆகலை. நீதான் மனசு வெச்சி...
      வெளி வராந்தா விளக்குகள் தவிர வேறு வெளிச்சம் இல்லாத நிலை. சாத்தப்பட்ட கதவுகளிலும் ஜன்னல்களிலும் நிறுத்தி வைத்த நூலாய் வெளிச்சம். உள்ளே கசிகிற வெளிச்சம். திடுதிப்பென்று கதவு மெல்ல சத்தம் இல்லாமல் திறந்தது கேட்டது. அவள் தூங்கவில்லை. பணியாளா? இல்லை. அவன்... அந்தத் திருடன். அவனை அவள் எதிர்பார்த்திருந்தாள். அவன் கண்ணின் அந்த வெறி, அது அவனை இங்கேவரை இழுத்து வந்துவிடும் என்று நினைத்திருந்தாள்.
      பணியாள் எங்கே போனான் தெரியவில்லை. இவன் எப்படியோ அவனை ஏமாற்றிவிட்டு உள்ளே வந்திருக்கிறான். அப்படியே நாச்சியாரை அணைத்துத் தூக்கியபடி வெளியே அடிமேலடி வைத்து வந்தான். சுவர்க் கடிகார ஒலிகளை விட மென்மையாய் அவன் நடந்துபோனான்.
      கூட யாரோ வெளியே காத்திருக்கிறார்கள்.
      இப்பவே வெளியே கொண்டுபோய் வித்தால், போலிஸ் உஷாராய் இருக்கும்டா. மாட்டிக்குவோம்...
      அப்ப?
      தோட்டத்தில் கொஞ்சகாலம் இதைப் புதைச்சு வைக்கலாம். ஊர்ப் பரபரப்பு அடங்கியபிறகு வெளிய எடுத்தும் போயி விக்கலாம்.
      அவர்கள் தோட்டப்பக்கமாய்ப் போனார்கள். இன்னுங் கொஞ்சகாலம் நிம்மதியாய் உறங்கலாமாய் இருந்தது நாச்சியாருக்கு.


Monday, December 24, 2018


குறுந்தொகை
காட்சியும் மாட்சியும்
எஸ்.சங்கரநாராயணன்

ங்க இலக்கிய வரலாற்றில் பாடல்களைத் தொகுக்கும் முயற்சி, கடைச்சங்க காலத்தில் தோன்றிய எழுச்சி எனலாம். எட்டுத்தொகை, அகநாநூறு, புறநாநூறு என பாடல்களின் வரிக்கணக்கை வைத்துக் கொண்டு ஒழுங்கு செய்தார் எனக் கருத இடம் உண்டு. எட்டுத்தொகையில், குறுந்தொகைப் பாடல்கள் நான்கு முதல் எட்டு அடிகள் வரை அமைந்தவை. பிற தொகைநூல்களுள் அளவில் சிறியவை இவை.
தொகுக்கப்பட்ட பத்தொன்பது பாடல்கள், ஆசிரியர் பெயர் அறியப்படாமல், பாடலின் சிறப்பு தோன்ற புனைப்பெயரால் சுட்டப் பட்டன. குறுந்தொகைப் பாடல்களின் காலமும் வரைதற்கரியது, எனினும் கி.பி. மூன்றாம் áற்றாண்டுக்கு முற்பட்டவை எனவே வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
குறுந்தொகைப் பாடல்கள் திணைக் குறிப்பும், பாடலில் பேசும் பாத்திரம் யார் என்பதறிவித்தும், காட்சிப்படுத்துமுகமான சிறு குறிப்பும் கொண்டு தொகுக்கப் பட்டுள்ளன. இக்குறிப்புகளால் பாடல்கள் மேலும் ஒளியூட்டப்பெற்றுத் திகழுகின்றன. குறுந்தொகைப் பாடல்கள் எல்லாமே உரையாடல் வகைமை கொண்டவை. தன்னெஞ்சோடாயினும் அவை கிளத்தல் வகையினவே.
இறைவாழ்த்தையும் இணைத்து நாநூற்றியொரு பாடல்கள் அமைந்த தொகைநூலாகக் குறுந்தொகை அமைகிறது. சமூக வாழ்க்கை சார்ந்தும், ஆண் பெண் உறவுகளை விவரணப் படுத்தியும், இயற்கையினைப் பாராட்டியும் பாடல்கள், திணையொழுங்குகளின் உத்தி நேர்த்தியுடன் சிறப்பான நுகர்வனுபவம் தரவல்லவை.
செம்புலப் பெயனீரார், எழுதிய 'யாயும் ஞாயும்' என்ற பாடல் உலகளாவிய புகழ்சுமந்து நிற்கிறது. பேராசிரியர் ஏ.கே.இராமனுசர் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, அதன் சிறப்புவமை, செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே, என்கிற வெளிப்பாடு, வெளிநாட்டாரையும் மனங் கொள்ள வைத்து, அதையே தலைப்பாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகள் தோன்றியதாக அறிகிறோம். தமிழின் பெருமை அது.
செம்புலப் பெயனீரார் பாடலுடன் குறுந்தொகைப் பாடல்களை வாழ்க்கைக் காட்சிப் படிமங்களாகத் தொகுத்து சம்பவ முறைப்படுத்தி தனிக் கதைபோலும் நாட்டியவடிவில் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. திணைப்பாங்குகளைப் புலப்படுத்தியும் தமிழின் தொல்லிலக்கணச் சிறப்புகளை எடுத்தியம்ப அவாவுற்றோம்.
யாயும் ஞாயும் யாராகியரோ, பாடலை ஏ.கே.ராமானுசர் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்க்கிறார்.
      What He Said
        What could my mother be
        to yours? What kin is my father
        to yours anyway? And how
        did you and I meet ever?
                But in love our hearts are as red
        earth and pouring rain:
        mingled beyond parting.               
               Cembulappeyani:ra:r (kurunthokai 40)
திணை - குறிஞ்சி / தலைவன் கூற்று
      யாயும் ஞாயும் யாராகியரோ
      எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
      யானும் நீயும் எவ்வழி அறிதும்
      செம்புலப் பெயல்நீர் போல
      அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன.

(குறுந்தொகைப் பாடல் எண் நாற்பது. ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.)
ராகம் சுத்தநாட்டை
2
கண்ணுங் கண்ணுங் கலந்ததால் அன்புடை நெஞ்சம் தாம் ஒன்றிணைந்த மெய்ம்மையில், தலைவி இரவில் உறங்கக் கொள்ளாமல் தவிக்கிறாள். இரவின் சிறு சிறு குறிப்புகளும் அவள் கவனத்தில் பதிகின்றன.
(பாடல் 138. திணை மருதம். தோழி கூற்று)
      கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
      எம்மில் அயலது ஏழில் உம்பர்
      மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
      அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
      மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே
 கொல்லன் அழிசி எழுதிய பாடல். குந்தளவராளி ராகத்தில் இசையமைப்பு பெறுகிறது.
பெருமை மிக்க ஊரோ உறங்கிக் கிடக்கிறது. என்னால் மட்டும் உறங்க முடியவில்லை. என் வீட்டுக்கு அருகே மயிலின் பாதத்தைப் போல இலையமைப்பு கொண்ட நொச்சியின் வரிசைமிக்க அழகான மெல்லிய கிளைகள் உதிர்க்கிற பூக்களின் சிற்றோசையும் என் காதில் துல்லியமாய்க் கேட்கிறது.
3
(பாடல் 113. மருதம். தோழிகூற்று)
தலைவியைக் காணாக் காதலன் தோழியிடம் தலைவியைச் சந்திக்கும் வகைமை பற்றி ஆவலுந்தப் பேசுகிறான். தலைவி கூந்தலுக்குச் சூடி மகிழ மலர்கள் நாடி, ஊரெல்லைத் தோட்டத்துக்கு வரும் வழக்கம் உள்ளவள், எனச் சொல்லி தோழி சந்திக்குமுகமன் தருகிறாள்.
      ஊர்க்கும் அணித்தே பொய்கை
      பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே
      சிறுகான் யாறே
      இரைதேர் வெண்குருகு அல்லது யாவதும்
      துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்
      கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்
      ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே
நிரஞ்சனி ராகத்தில் பாடப்படும் இந்தப் பாடலின் ஆசிரியர் மாதீர்த்தன்.
ஊருக்கு எல்லைப் பக்கமான ஊற்று. அதன் சற்றே தூரமான சிறு காட்டாறு அறிவாய்தானே? அப்பக்கமாக இரையைத் தேடியலையும் கொக்கும் நாரையும் தவிர வேறு யாரும் நிச்சயம் வர மாட்டார்கள். ஆளரவம் எதுவும் இராது. அப்பக்கத்துப் பூங்காவில் எங்கள் கூந்தலுக்கு மணம் சேர்க்கிற செங்குவளை செங்கழுநீர் மலர்கள் கொய்ய, நாங்கள் தவறாமல் வருவோம். உன் தலைவியும் வருவள். நீங்கள் சந்திக்கலாம், என்கிறாள்.
4
இவ்வாறு கூடி மகிழ்ந்த காலத்தில் ஒரு சமயம் காதலி வராமல் போகவே அல்லறுகிறான் காதலன். அவளைக் காணாத பிரிவில் தவித்தேங்குகிறான். எங்ஙனமாயினும் அவளைச் சந்திக்க மனம் உந்த கொட்டும் மழையும் பாராது, சொட்டச் சொட்ட நனைந்தபடி, வலிய யானைபோல் தலைவி வீட்டு வாயிலில் வந்து நிற்கிறான். மலர் உதிர்ந்ததும் அறிகிற அளவில் பெருவிழிப்பு கொண்டவள் அல்லவா அவள். அவன் வந்து நிற்கிற ஓசையும், கொட்டும் மழையும் கேட்டு மனம் கலங்கினாள் தலைவி. எழுந்து சென்று அவனைப் பார்க்க உள்ளம் துடித்துப் பரபரக்கிறது. முடியவில்லை அவளால். அவளின் தாய் தூக்கத்திலும் அவளைப் பிரியாமல் கட்டித் தழுவிப் படுத்திருக்கிறாள்.
(பாடல் 161. குறிஞ்சித் திணை. தலைவி கூற்று. நக்கீரர் இயற்றியது.)
      பொழுதும் எல்லின்று பெயலும்,
      ஓவாது கழுது கண்பனிப்ப வீசும்,
      அதன்தலை புலிப்பல் தாலி புதல்வர்ப் புல்லி
      அன்னாய் என்னும் அன்னையும்,
      அன்னோ என்மலைந்தனன் கொல்,
      தானே தன்மலை ஆரம் நாறும் மார்பினன்,
      மாரி யானையின் வந்து நின்றனனே
வசந்தா ராகத்தில் ஒரு பாடல்.
பகல் பொழுது வீணாகி இரவே வந்து விட்டது. என் காதலனைக் காணவொழியவில்லை. அடாத மழையும் விடாத மழையுமாய் வெளியே கொட்டி முழக்குகிறது. அதுபோதாதென்று புலிப்பல் கட்டிய தாலியணிந்த என் தாய் அழுத்தமாய் என்னைக் கட்டிக் கொண்டு ''அம்மையே'' என விளித்துப் படுத்திருக்கிறாள். தன் மலையில் விளைந்த மலர்களை மாலைதொடுத்து அணிந்து வந்திருக்கும் தலைவன் வாயிலில் பெருமழையில் வந்து, நனைந்த யானையாய் நிற்கின்றான். என்னால் எழுந்து வர இயலவில்லை. என்ன நினைத்துக் கொள்வானோ அவன்?...
5
 பாடல் 171. திணை மருதம். தலைவி கூற்று.
 பூங்கணுத்திரையார் இயற்றியது ஹிந்தோள ராகத்துக்கு மயங்காதோர் யார்?.
      காணினி வாழி தோழி
      யாணர்க் கடும்புனல் அடைகரை
      நெடுங்கயத்து இட்ட
      மீன்வலை மாப்பட்டாஅங்கு
      இதுமற்று எவனோ நொதுமலர் தலையே.
காதலன் காணாத் தலைவி தன் இடத்தையே வேற்றிடமாக உணர்தலாயினள். தன் அயலாரையே தனக்கு ஒட்டாதவராய்க் கண்டனள். புது வெள்ளம் பாய்ந்து வரும் பேராறு. அதில் மீன்வலை இட்டபோது பெரு விலங்கு அகப்பட்டு விட்டது. நானே அப் பெரு விலங்கு. என் தவிப்பு அறியாமல் ஊரே கூடி என்னை வேடிக்கை பார்க்கிறாப் போல உணர்கிறேனடி தோழி...
6
தனிமையில் காமநோய் கண்டு பசலை பூத்த மேனியளான தலைவி கண்டு தோழி, ஊரறிந்து கொள்ளும் உன்னை. ஆகவே உன் காமம் பொறுத்துக் கொள் என வேண்டினள். பொறுக்கவொண்ணத் தவிப்பினாகித் தலைவி புலம்பலுற்றாள். ஆற்றாமையான் வாய்வெதும்பி யுரைக்கிறாள் வருமாறு.
(பாடல் 290. திணை நெய்தல். தலைவி கூற்று)
      காமம் தாங்குமதி என்போர்
      தாம் அஃது அறியலர் கொல்லோ
      அனைமது கையர்கொல்
      யாம் எம் காதலர் காணேம் ஆயின்
      செறிதுளி பெருகிய நெஞ்சமொடு
      பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல
      மெல்ல மெல்ல இல்லாகுதுமே
கல்பொருசிறுநுரையார் இயற்றியது. சாருகேசி ராகத்தில் வடிவமைக்கப் பட்டது.
காமத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும், எனப் பிறருக்குச் சொல்கிறவர்கள், அக் காமத்தின் தன்மையை அறிந்து வைத்திருக்கிறார்களா? அல்லது அவர்கள் அக்காமத்தைப் பொறுத்துக் கொள்ளும் வலிமை மிக்கவர்களா என்ன? யாம் எம் காதலரைக் காணாமல் பெருந்துயர் உற்றோம். பெருகியோடி வரும் வெள்ளத்தில் கல் இடைப்பட்டு, நீர்மோதியதால் உருவாகும் சிறு சிறு நுரைகள் மெல்ல அழிந்து விடுவது போல யாம் அழிவுற்றவராவோம்.
7
பொருளீட்டுமாறு வெளிப்போந்தனன் தலைவன். தனிமையில் உழலும் தலைவிக்கு. பொழுதுதப்பி வந்த கோடைமழை. அதன் இடியும் மின்னலுமான துன்பம் வாழ்வின் அல்லலை அதிகப் படுத்துவதாயிற்று.
பாலைத் திணையில் ஒரு பாடல். பாடல் எண் 216. தலைவி கூற்றாக, கச்சிப்பேட்டு காஞ்சிக் கொற்றன் தந்தது. ராகம் மதுவந்தி.
      அவரே,
      கேடு இல் விழுப் பொருள் தருமார் பாசிலை
      வாடா வள்ளிஅம் காடுஇறந் தோரே
      யானே,
      தோடுஆர் எல்வளை ஞெகிழ,
      நாளும் பாடுஅமை சேக்கையில் படர்கூர்ந்திசினே
      அன்னள் அளியள் என்னாது மாமழை
      இன்னும் பெய்ய முழங்கி
      மின்னும் தோழி என் இன்னுயிர் குறித்தே
தோழி, என் காதலரோ குற்றமற்ற பெரும் பொருள் திரட்டுவான் வேண்டி, வாடாத பசிய இலைகள் கொண்ட வள்ளிக் கொடி மண்டிய காட்டு வழி பெயர்ந்தோராயினர். யான் இங்கே இக்கட்டில், இக்கட்டிலில் உறங்கக் கொள்ளாமல் தத்தளிக்கிறவள் ஆயினேன். என் துன்பம் பாராட்டாமல், என் மீது இரக்கங் காட்டாமல் மின்னலும் இடியுமாய்க் கொட்டி முழக்குகிறது மழை. என் உயிர் துடிக்கத் துடிக்க அது பெய்தவாறிருக்கிறது....
8
பொழுதுகள் உருள நற்காலம் என உண்டாகாமலும் இருக்குமோ? காதலன் வரவைப் பாணன் ஒருவன் வந்து அறிவிக்கிறான். மகிழ்ச்சி தாள முடியவில்லை தலைவிக்கு. கணவன் மீண்டதை அறிவித்த பாணர்க்குத் தன் நகரான பாடலிபுத்திரத்தையே பரிசாய்த் தரச் சித்தமானாள். நீ பார்த்தாயா? பார்த்தவர் வாய் அறிந்தாயா? என் உள்ளம் துடிக்கிறது, உண்மையைச் சொல்.
      நீ கண்டனையோ, கண்டார் கேட்டனையோ
      ஒன்று தெளிய, நசையினம் மொழிமோ
      வெண்கோட்டு யானை சோணை படியும்
      பொன்மலி பாடலி பெறீஇயர்
      யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே.
எழுபத்தியைந்தாம் பாடல். தலைவி கூற்றாக மருதத் திணையில், படுமரத்து மோசிகீரனார் எழுதியது. உற்சாகத்துக்குப் பேர்போன சுருட்டி ராகம். பலமான பரிசுப் பொருள்தான் அல்லவா? காதலர் பெரும்பொருள் திரட்டி வருகிறார் என இறும்பூது எய்தினள் போலும்!
நற்செய்தி கொணர்ந்தாய் பாணா. காதலர் வரவை விரைந்து வந்து சொன்னாய். எம் காதலரை நீயே பார்த்தாயா? அல்லது பார்த்தவர் சொல்லக் கேட்டு வந்து சொன்னாயா? தெளிவாகச் சொல் உண்மையை. ஆகா எப்பேர்ப்பட்ட செய்தி இது. வெண்தந்தங்கள் உடைய யானைகள் நடமாடும் சோணையாறும், பொன்னும் பொருளும் மிக்கதுமான இந்தப் பாடலிபுரத்தையே உனக்குப் பரிசாகத் தரலாம், உன் செய்தி அந்தப் பெரும் பரிசுக்குத் தகுதிசார்ந்ததே... எனக் களிகொண்டாடினள்.
9
பெரும் பொருள் ஈட்டி மீண்ட தலைவனும் தலைவியும் கடிமணம் கொண்டு வாழ்க்கைத் துணையாயினர். செல்வம் மிக்க அவர்கள் வாழ்வு இனிமை பயப்பதாய் இருந்தது. தனித்த நல்லிரவில் தலைவியைக் கூடிய காதலன் நயம்பல உரைத்து அவளை உடலாட்சி செய்தனன். மேலும் மேலும் அவள் மனம் உவக்குமுகமாக கற்பனை பலவும் கலந்து கொண்டாடி புகழ் மொழிகள் உகுத்தனன்.
பாடல் 2. இறையனார் உரைத்தது. குறிஞ்சித் திணையில் தலைவன் கூற்று.
      கொஞ்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
      காமம் செப்பாது கண்டது மோழிமோ
      பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
      செறிஎயிற்று அரிவை
      கூந்தலின் நறியவும் உளவோ
      நீ அறியும் பூவே
 ராகம் மாண்டு.
10
காதலர் இருவர் கருத்தொருமித்த இல்வாழ்க்கைப் பேணிய கதையை செவிலித்தாய் நற்றாய்க்கு மகிழ்ந்துரைத்தனள். மகளைப் பிரிந்து நீ வருந்தற்க. அவர்கள் மகிழ்ச்சிசோடு நலம்பாராட்டி மகிழ்கிற குடும்பக் காட்சியை நான் கண்ணாரக் கண்டு தெளிந்தேன்... என்றாள்.
அருமைக் காதலனுக்கு பெரு விருப்புடன், கவனம் சேர, உணவு படைத்தும் பரிமாறியும் அவன் பாராட்டைக் கேட்டு முகம் ஒளிர நிற்கிறதாயுமான உன் மகளைக் கண்டேன். கவலற்க நீயும்.
      முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
      கழுவுறு கலிங்கம் கழாது உடீஇக்
      குவளை உண்கண் குய்ப்புகை கழும
      தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
      இனிது எனக் கணவன் உண்டலின்
      நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.
மத்யமாவதி ராகத்தில் அமையப் பெறுகிறது. கூடலூர் கிழார் பாடியது.
காந்தள் மலர் போலும் மென்மையான விரல்களால் கெட்டித் தயிர் விட்டுப் பிசைந்த எச்சிற் கையை, சுத்தமான தன் ஆடையையும் பொருட்படுத்தாது, வேலைகவனத்தில் அதிலேயே துடைத்துக் கொண்டாள் அவள். குவளை மலர் போலும் அவளது அழகிய கண்களில் சமையல் புகை படிந்திருந்தது. அதையும் உணர்ந்தாளில்லை. தான் வைத்த புளிக்குழம்பை தயிர்சோற்றில் ஊற்றி இனிது என மகிழ்ந்து தன் கணவன் உண்ணுவதைப் பார்த்ததுக்கொண்டே அவள் முகம் பூரிக்க நின்றாள்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
---
பின்குறிப்பு

பத்து குறுந்தொகைப் பாடல்களை வரிசையிட்டு ஒரு கதை போல அமைத்த என் கற்பனை, ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிக்கான இந்த எனது சொற்சித்திரம். அரங்கேறியது. பாடல்களுக்கு இசை - லஹரி. அவரே தமிழ் ஆசிரியர் என்பதால் மிகச் சிறப்பாக வார்த்தைகளைப் பொருள் புரிந்து பிரித்துக்காட்டி பாடகரைப் பாட வைத்தது அருமையான அனுபவம். இசையமைத்த பின், பாடல்கள் சபையேறுமுன், டாக்டர் ஔவை நடராசனார் அவர்களிடம் இசைத்துக் காட்டி அவரது ஒப்புதலும் மகிழ்ச்சியும் பெற்றோம்.
*
storysankar@gmail.com
91 97899 87842

Monday, November 12, 2018


சிறுகதை / நன்றி காணிநிலம் காலாண்டிதழ்

அர்த்தநாரிஸ்வரி
எஸ். சங்கரநாராயணன்

டது மார்பில் லேசாய் ஒரு கல் தன்மை இருந்தது போல் தோன்றியது பார்வதிக்கு. உடம்பில் நரம்புகள் முறுக்கி முடிச்சிட்டுக் கொண்டு சில இடங்களில் இரத்தம் சீராகப் பாயாமல் சதை இறுகிப் போவது உண்டு. அவளுக்குத் தொடையில் அப்படி ஒர் சதைக்கட்டி இருக்கிறது. மருத்துவரிடம் காட்டியபோது, கொழுப்பு அப்படிச் சேர்ந்து கொள்கிறது, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், என்றுவிட்டதில் அவளும் அதை அலட்சியப் படுத்தி விட்டாள். குளிக்கும்போது சோப்பு தேய்க்கையில் இப்போது இதை கவனித்தாள். இடது மார்பின் சதைத் திரளில் அவள் கைக்கு சற்று அந்தக் கல், நெகிழ்ந்து கொடுக்காத களிமண்ணாய் நிரடியது.
எழுந்த ஜோரில் குதிரையின் வேகம் பெறுகிறார்கள் பெண்கள். இப்பவாவது பரவாயில்லை, ஷில்பா வளர்ந்து விட்டது. தன் காரியம் தானே பார்த்துக் கொள்ள துப்பு வந்தாச்சி. இல்லாவிட்டால் காலையில் அவளை எழுப்பி பல் தேய்த்து விடுவது முதல் அம்மா கூடநிற்க வேண்டும். இப்போது ஷில்பா ஏழாவது படிக்கிறாள். பதின்வயதுப் பருவம். மெல்ல மொட்டு ஒன்று விரிவதை உணர்கிற பருவம் அது. காலையில் ஷில்பாவை இன்னும் அம்மாதான் எழுப்பி விட வேண்டியிருக்கிறது. லேட்டானால் அம்மாவிடம், “ஏம்மா என்னை எழுப்பல? நேத்தே சொன்னேனே?” என்று முகத்தைச் சுருக்கும். காலம், பிள்ளைகளுக்கு பயப்படுகிற காலம் ஆயிற்று.
இரண்டு பர்னர் அடுப்பில், காபி, குழம்பு, குக்கர், டிபன்… என, மியூசிகல் சேர் போல, பரபரக்கும். சமையல் அறையிலேயே, பலசரக்கு வைக்கிற அலமாரியில் தனி தட்டு ஒன்றில் மீனாட்சி படம். பிள்ளையார், முருகர் எனப் படங்கள். இரண்டு பக்கத்திலும் சின்ன குத்துவிளக்கு இருக்கும். வெள்ளிகளில் தவிர மற்ற நாட்களில் நேரம் இருந்தால், கடவுள்களுக்குக் கொடுப்பினை இருந்தால், விளக்கேற்றுவாள். வெள்ளிக் கிழமை ஏற்ற என்றே விளக்கும் வெள்ளியில் வைத்திருப்பதாகத் தோணும்.
தோளில் துண்டை உருவிக்கொண்டபடி குளிக்க ஓடுகையில், முதல் நாள் அந்தக் கட்டியை கவனித்தாலும் ச் என அலட்சியப் படுத்தினாள். ரெண்டாம் நாள் வாக்கில் டாக்டரிடம் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டபடியே சோப்பு தேய்த்துக் கொண்டாள். விசுவிடம் சொல்ல அதன் பிறகும் நாலைந்து நாள் ஆகிவிட்டது. இராத்திரி அவன் நேரங் கழித்து வருவான். சாப்பிடுகையில் டிவியில் செய்தி பார்ப்பான். அப்போது பார்த்து, கூட வீட்டுச் செய்திகளையும் பரிமாற வேண்டியிருக்கும். விட்டால், சாப்பிட்ட ஜோரில், அவள் இரவின் கடைசிகட்ட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வருவதற்குள், ஷில்பா பக்கத்தில் போய்ப் படுத்து நிமிஷமாய்த் தூங்கி விடுவான். அத்தனைக்கு வேலை என அலுவலகத்தில அவனைப் பிழிந்தெடுத்தார்கள். அப்படியே ஒருவாரம் அந்தச் சேதி பரிமாற விட்டுவிட்டது.
வெளியே பார்க்க வித்தியாசமாய்த் தெரிகிறதா, என்று கண்ணாடி வைத்துக்கொண்டு பார்த்தாள். தெரியவில்லை. அழுத்தினால் பால்கொழுக்கட்டை போல உள்ளே. ஒரு கோலிகுண்டாய் சதைத் திரட்சி. ஒண்ணும் விசேஷமா பயப்படறா மாதிரி இருக்காது, என்று சொல்லிக் கொண்டபடியே துண்டால் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். துதிப்போர்க்கு வல்வினை போம். துன்பம் போம். இந்தக் கட்டியும் போம்… சிரிக்காதே. நேரமாகிவிட்டது. வெளியே வந்தபோது விசு கண்டுபிடித்து விட்டான். முழுக்கைச் சட்டை மணிக்கட்டு பட்டனை மாட்டிக்கொண்டபடியே “என்ன சிரிச்சிக்கிட்டே வெளியே வரே?” என்றான். வெட்கமாய்ப் போயிற்று.
பார்வதிக்கு எடுப்பான மார்புகள். சிறுத்த இடையின் எழுச்சிகள் என தனித்து கொடியில் (காமக்கொடி) மொட்டாய்க் காணும். தன் அழகையிட்டு பார்வதிக்கு கல்லூரிக் காலத்தில் இருந்தே சிறு பெருமை உண்டு. அவளுக்கு ஆப்த தோழி சியாமளாவுக்கு அவளைப் பார்க்கப் பொறாமை. அவளது மார்புகள் சிறியவை. ஸ்வாமிக்கு என தனியே கொஞ்சூண்டு எடுத்துக் காட்டிய நைவேத்தியம் போல. (அவள் கணவன் பேரே ஸ்வாமிநாதன்.) ஆனால் பிற்காலத்தில் அவளுக்குக் கல்யாணமாகி குழந்தை பிறந்தபோது அவளிடம் தான் அதிகம் பால் சுரந்தது. பாருவுக்கு நாலைந்து மாதத்திலேயே பால் சத்து வறண்டு விட்டது. “பார் என்னைப் பார்”ன்றா மாதிரியே இருக்கியேடி, என்று சியாமளா அவளைப் பார்த்துப் பெருமூச்சு விடுவாள். உன்னைக் கட்டிக்கப்போறவன் அதிர்ஷ்டக்காரன், என்றுகூடச் சொல்வாள். சியாமளாவின் குழந்தை என் குழந்தையை விட அதிர்ஷ்டம் செய்தது, என நினைத்துக் கொண்டாள் பார்வதி. எப்ப சென்னை வந்தாலும் சியாமளா அவளை வந்து பார்க்காமல் போக மாட்டாள்.
அன்றைக்குப் பார்த்தாள், இந்தக் குட்டி ஷில்பா, சின்னப்பெண் என்றல்லவா இவளை நினைத்துக் கொண்டிருந்தேன். குளித்துவிட்டு ஷிம்மிசில் வந்தது. கண்ணாடி முன்னால் நின்று என்ன தோணியதோ நெஞ்சை உற்றுப் பார்க்கிறது. உடம்பின் புதிய திரட்சியும் மேடு பள்ளங்களுமாக காலம் அவளை வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பதை ஒரு பரவசத்துடன் கவனிக்கிற சூட்சுமம் ஷில்பாவுக்கு வந்து விட்டாப் போலிருந்தது. இனி அவளிடம் நாம், பெரியவர்கள் சொல்லிக் கொடுத்ததாக அல்லாமல், தன்பாவனைகள், அபிப்ராயங்கள் வளர ஆரம்பிக்கும் என்று இருந்தது. தானே தன் கனவு வலையைப் பரத்தி மீன் பிடித்தல்.
ஷில்பா இப்போது குளிப்பாட்டி விட அம்மாவைக் கூப்பிடுவதையே நிறுத்தியாகி விட்டது. உடல் தன் சொத்தாகி விட்டது அதற்கு. அதை மற்றவர் பார்க்க வெட்கப் பட்டாப் போல. அதன் அந்தரங்கம் ஒரு பூ போல மலர, கண்ணுக்குத் தெரியாமல் நாசிக்கு வாசனை தட்டுகிறாப் போன்று மற்றவர் அதை ரசிக்கிற பருவம். தன்னைப் பற்றி தனக்கு மாத்திரமே சில விஷயங்கள் புரிகிற பாவனை அது. பருவம் மாயக் கதவுகளைத் திறந்து இன்னொரு இடத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறது. தலைக்கு ஷாம்ப்பூ கூட தானே தேய்த்துக் கொள்கிறாள். தனியே ஒரு பூரிப்பு அவளிடம் வந்திருந்தது இப்போது. கன்னங்களில் சிவப்பு ஏறி சிரிப்பே அவ்வளவு ஒளிர்ந்தது. குதிரைவால் அசைய துள்ளலான அவள் நடை. பார்வதிக்கு தன் பால்ய காலங்கள் நினைவுக்கு வந்தன. உலகம் பெண்களால் அழகு பெறுகிறது. ஏ ஆண்களே, வேடிக்கை பாருங்கள்.
அதன்பின்னான நாலாம் நாள் விசுவே கேட்டான். “இன்னும் போகல்ல,” என்றாள். அலட்சியம் பண்ணக்கூடாது. டாக்டர் கிட்டக் காட்டிறணும், என்றான் விசு. என்றாலும் அவனால் கூடவர முடியவில்லை. அடுத்த ரெண்டாவது நாளில் அவள் குளிக்கிற போது அந்தக் கட்டியை நிரடிப் பார்த்தாள். வலித்தது. இதுவரை வலிக்கவில்லை. இப்போது தொட்டால் வலித்தது. டாக்டரிடம் போகாமல் முடியாது போலிருந்தது. அவள் டாக்டரிடம் போனால் துணைக்கு என்று எப்பவும் அவளது அலுவலக சிநேகிதி சந்திரா தான் வருவாள். ரெண்டு மூணு நாளா அவளுக்கு வர ஒழியவில்லை. வேலைகளை அன்று பார்வதி விறுவிறுவென்று முடித்தாள். நாலரை மணிக்கு மேனேஜர் வெளியே கிளம்ப வேண்டியிருந்தது, என்று அவரது கடிதங்களை விரைந்து அடித்துக் கொடுத்தாள். அதைத் திருத்தி அவர் கையெழுத்து இட்டுவிட்டுக் கிளம்பிப் போனதும்  அவளுக்கு வேலையே இல்லாமல் ஆயிற்று. சரி என்று ஹெட் கிளார்க்கிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். பஸ் வர காத்திருக்கும் போது சட்டென்று யோசனை. மணி பார்த்தாள். நாலு ஐம்பது. புரசைவாக்கம் போகலாமா? டாக்டர் நளினி ஆறு ஆறரைக்கு வருவாள். ஷில்பா பிறந்தபோது பிரசவம் பார்த்தவள் அவளே. எப்படியும் இங்கேயிருந்து போக முக்கால், ஒருமணி நேரம் எடுக்கும். எங்காவது ஹோட்டலில் காபி சாப்பிட்டுவிட்டுப் போனால், அதிகம் காத்திருக்காமல் அவளைப் பார்த்து விடலாம். ஐந்தரையில் இருந்தே ஒரு உதவியாளினி டோக்கன்கள் வழங்க ஆரம்பித்து விடுவாள்.
பஸ் நிறுத்தத்தில் பூக்காரி புன்னகைத்தாள். கெட்டியாய்த் தொடுத்த மல்லிகை. ஒருமுழம் வாங்கி பார்வதி சூடிக் கொண்டாள். வேலை முடிந்து சீக்கிரம் கிளம்ப முடிகிற நாட்கள் அற்புதமானவை. அதிகம் தாமதிக்காமல் புரசை பஸ் வந்தது. ஏறிக்கொண்டாள். கிளம்பு முன் முகம் கழுவி திரும்ப ஸ்டிக்கர் பொட்டு புதிதாய் வைத்துக் கொண்டிருந்தாள். எப்பவும் கைப்பையில் சிறு பௌடர் டின்னும் இருக்கும். பூ வேறு இன்றைக்கு. அவளுக்கே தன்னையிட்டு திருப்தி. வேலைக்குச் சென்று திரும்பும் அந்த அலுப்பு சாராத முகம். ஆண்கள் அவளைப் பார்த்த பார்வையில் ஒரு ஈர்ப்பு இருந்தது. எனக்கு ஏழாவது படிக்கிற பெண் இருக்கிறாள், என்று சொல்லி விடலாமா, சிரிச்சிறாதே சனியனே.
டோக்கன் வாங்கிக்கொண்டு பிறகு வெளியே காபி சாப்பிடப் போகலாமா என்று கூடத் தோன்றியது. அவள் போகவும் டாக்டர் நளினி அப்பதான் உள்ளே நுழைகிறாள். அவளது மாலை வணக்கத்தை தலையாட்டி ஏற்றுக்கொண்டபடி உள்ளே மருத்துவசோதனை அறைக்குப் போனாள். டாக்டர் வந்ததில், காத்திருந்த இரண்டு பேர் எழுந்து நின்றார்கள். வேறு டாக்டர் யாராவது இந்த டாக்டரைப் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்திருந்தால் டாக்டர் நளினி சீக்கிரம் வருவது உண்டு.
அதிகம் காத்திருக்க நேரவில்லை. அவள் முறை பத்தே நிமிடத்தில் வந்தது. டாக்டர் அவள் உள்ளாடையைக் கழற்றச் சொன்னாள். வலிக்குதா? வலிக்குதா, என்றபடி டாக்டர் அவளது திரட்சியை அமுக்கி அமுக்கிக் கொடுத்தாள். எந்தப் பக்கம்? “இடது பக்கம் டாக்டர்.” ம். இங்கதான். இல்லியா?... என்று கண்டுகொண்டாள். வலி இருக்கா? “லேசா…” எப்பலேர்ந்து இது? “தெரியல டாக்டர். ஒரு பதினஞ்சு இருபது நாளா…” அடாடா. உடனே வர்றதில்லையா?... என்றாள் டாக்டர். போய்க் கையைக் கழுவிக் கொண்டாள். அதுவரை உள்ளாடையை மீண்டும் அணியாமல் பார்வதி காத்திருந்தாள். டாக்டர் திரும்பிப் பார்த்து விட்டு போட்டுக்கலாம், என்றாள். “தொடையில் இப்பிடி ஒரு கொழுப்புக் கட்டி… நீங்க கூட…” அது வேற. இது வேறம்மா. சில டெஸ்ட்டும் பண்ணிப் பாத்திருவம், சரியா? கவலைப்படாதீங்க. டாக்டர் விறுவிறுவென்று சீட்டில் சில மருந்துகள் எழுதினாள். சோதனைகளுக்கும் தனியே எழுதித் தந்தாள். கால தாமதம் செய்ய வேண்டாம். ஒரு வாரத்ல திரும்ப வந்தா நல்லது. “எது கட்டியா?” குட் ஜோக்.
ஷில்பா வீட்டுப்பாடம் எல்லாம் முடித்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தது. சோபாவின் முதுகுப்பக்கம் மீறி அவள் தலை தெரிந்தது. உயரத்தில் அவள் தன் அப்பாவைக் கொள்வாள் போலிருந்தது. பள்ளிக்குப் போட்டுக்கொண்டு போன இரட்டைப் பின்னலைத் தானே தளர்த்தி பரத்தி விட்டிருந்தாள். கருத்த கேசப் பின்னணியில் முகம் தனிக் களையாய் இருந்தது. பருவ வயதில் இந்தச் சிறுமிகள் என்னமாய் ஜ்வலிக்கிறார்கள்.
“எதும் குடிச்சியாடி?” என்று கேட்டபடியே உள்ளே வந்தாள் அம்மா. இல்லம்மா. நீ ஏன் இன்னிக்கு லேட்டு, என்றாள் ஷில்பா. “டாக்…” என ஆரம்பித்தவள், “ஆபிஸ்ல கொஞ்சம் வேலை” என மாற்றிக் கொண்டாள். குழந்தையை பயமுறுத்த வேண்டியது இல்லை. ஃப்ரிஜ்ஜில் இருந்து எடுத்து பாலைக் காய்ச்சினாள் பார்வதி. என்ன தோணியதோ. பால் காயுமுன் திரும்பி ஸ்வாமி முன்னால் கை குவித்தாள். வெள்ளி விளக்கை ஏற்றினாள்.
டிவியில் எதையோ பார்த்து கெக் கெக் என்று ஷில்பா சிரிக்கும் சத்தம். டாக்டரிடம் அவர்கள் யாரும் அதிகம் போனது கிடையாது. சின்ன ஜுரம் தலைவலி என்றால் மருந்தே இல்லாத ஓய்வு. சில சமயம் மருந்துக் கடையில் சொல்லி மருந்து வாங்கி ஒரு ரெண்டு நாளில் அதுவே குணமாகிவிடும். இப்போது மருத்துவரிடம் போய்க் காட்ட வேண்டியதாகி விட்டது. மருந்துக் கடைக்காரனிடம் காட்டி மருந்து கேட்பதா? நாம் காட்டாமலேயே இந்த ஆண்கள்… உனக்கு ரொம்பதான் திமிராயிட்டதுடி, என தன்னையே அதட்டிக் கொண்டாள். டாக்டர் பயமுறுத்துகிறாளோ, என்ற யோசனைக்கு மாற்று வேண்டியிருந்தது.
விசு வந்ததும் அவன் சட்டையைக் கழற்றுமுன் டாக்டரைப் பார்த்துவிட்டு வந்த விவரம் சொன்னாள். ம், என தலையாட்டினான். டெஸ்ட் எதும் எழுதித் தந்தா எடுத்திரு. பாத்துக்கலாம். ராத்திரிக்கு என்ன? “தோசை. இப்பவே வார்க்கட்டுமா?” என்றாள். போயி முகம் கழுவிட்டு வந்திர்றேன். சாப்பிட்டிர்லாம். மணி எட்டாச்சே, என்றான். ஷில்பா அப்போது தான் வீடடுப்பாடம் முடித்துவிட்டு எழுந்து நின்று சோம்பல் முறித்தது. இந்த தூரத்தில் இருந்து குழல்விளக்கு வெளிச்சத்தில் அதன் வெள்ளை ஷிம்மிசின் உள்புறம் தெரிந்தது. உள்ளாடைகள் தேவைப்படும் அளவு அவள் வளர்ந்து வருகிறாள். அவள் பார்ப்பதை விசுவும் கவனித்து விட்டான். புன்னகை செய்தான். பெரியவளாயிருவா சீக்கிரம். பட்டுப்பாவாடை எடுக்க காசு எடுத்து வைக்கணும், என்றான். அவள் அவன் மூக்கைத் திருகினாள். “இதெல்லாம் கவனிக்க உங்களுக்கு நேரம் இருக்கா. ஆம்பளைக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சேன்.”
குழந்தை சீக்கிரம் தூங்கிட்டா நல்லது, என்று சிரிக்கிற கணவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். அவன் கூடவே ஷில்பாவும் சாப்பிட உட்கார்ந்தது. அப்பவே அதற்குக் கண்ணை சொக்கியது. ஓஹ், என சிறு கொட்டாவியும் விட்டது. நல்ல சகுனம், என்றான் அவன் அவளுக்கு மாத்திரம் புரியும்படி. “அடுப்படில வேலை கெடக்கு. ஒரு மணி ஆகும். கிரைண்டர் போடணும். அரிசி உளுந்து ஊற வெச்சிருக்கேன்.” ஐயோ அவ்ள நேரம் ஆகுமா? தூக்க மாத்திரை போல, முழிச்சிட்டிருக்கவும் எதாவது மாத்திரை இருக்கா, என்று கேட்டான் அவன்.
எங்க காட்டு. காட்டினாள். பாத்தா தெரியலியே? “ம்” என்றாள். பெரிசா ஒண்ணும் இராது, என்று ஆறுதலாக அவள் நெற்றியில் முத்தம் இட்டான். என்ன இன்னிக்கு பூ அமர்க்களம், என்றான் இருட்டில்.
டெஸ்ட்டுகள் இரண்டு மூன்று இருந்தன. முன்பே பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் போய் அவற்றை மேற்கொள்ள வேண்டும். நிறையப் பேர் வந்தார்கள். இத்தனை பேருக்குமா கட்டி, என்று தோணியது. அவரவர் பிரச்னை அவரவர்க்கு. தவிரவும் இப்பவெல்லாம் மருத்துவர்கள் இப்படி சோதனைக் கூடங்களோடு கைகுலுக்கி எல்லாரையுமே எதாவது சோதனை என்று அனுப்பி வைப்பது சகஜமாகித்தான் விட்டது. டாக்டர் சோதனை செய்யச் சொல்லி சொல்லிவிட்டால், வேண்டாம் என தவிர்க்கவோ அதை மறுக்கவோ எப்படி முடியும். மாலையில் வந்து ரிசல்ட் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.
மேமோகிராஃபி மற்றும் ஸ்கேன் என எல்லாமே ஆயிரக் கணக்கில் தான். கடைசியில் ஒண்ணுமில்லை, என்று வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். மாலை ரிசல்ட் வாங்கிக்கொண்டு டாக்டர் நளினியைப் பார்க்கலாம் என அலைபேசியில் அழைத்தாள். டாக்டர் ரிப்போர்ட்டுகளை வாங்கிப் பார்த்தபோது, தலையாட்டிக் கொண்டாள். நல்ல சேதி சொல்லுங்க டாக்டர். அவளைப் பார்த்தபடி, மருந்து எழுதித் தந்ததை விடாமல் சாப்ட்டீங்களா, என்றாள். பார்வதி தலையாட்டினாள். இப்ப எப்பிடி இருக்கு உங்களுக்கு? “வலி அப்பிடியேதான் இருக்கு டாக்டர். இன் ஃபாக்ட்…” யுவார் ரைட், என்றாள் நளினி. இன்னொரு பெரிய டாக்டருக்கு ரெஃபர் பண்றேன். அவங்க ஒருதரம் உங்களைப் பார்த்திறட்டும்.
முதன் முறையாக பயம் வந்தது. “எனிதிங் சீரியஸ் டாக்டர்?” பார்க்கலாம். டாக்டர் நளினி சீதாலெட்சுமி என்ற மருத்துவருக்குப் பரிந்துரை எழுதித் தந்தாள். வயதான பெரிய மருத்துவர் சீதாலெட்சுமி. அவளே தனி ஆஸ்பத்திரி வைத்திருந்தாள். மத்த பெரிய டாக்டர்களும், ஸ்பெஷலிஸ்டுகளும் அவள் வரவழைத்தாள் அங்கே. அவளைச் சந்திக்கவும் முன்பதிவு வேண்டியிருந்தது. கிளினிக் வாசலிலேயே பெரிய சாய்பாபா படம். ஊதுபத்தி கமழ்ந்தது. நிறைய வயதான பெண்களே காத்திருந்தார்கள். எனக்கு வயதாகி விட்டதா? நாற்பத்தி ரெண்டு, மூணு அவ்வளவுதான். அங்கே இருந்தவர்களில் ஆக இளையவள் அவள் தான். மற்றவர்கள் மாமிகள். அவளும் மாமி தான். ஆனால் என்னை அக்கா என அழைத்தால் சந்தோஷப்படும் மாமி நான். இந்த மாமிகளே தலைக்கு டை அடிக்கிறார்கள். மாமி என இல்லாமல் அக்கா, என்றால் அவர்களும் சந்தோஷப்படக் கூடும்.
பாரு?... என்று சத்தமாய்க் குரல். முதுகில் ஒரு அடி விழுந்தது. திரும்பிப் பார்த்தால். சியாமளா. அதானே, அவளிடம் இப்படியொரு நட்பு பாராட்ட வேறு யாரால் முடியும்? “என்னடி நீ இங்க?” என்னோட நாத்தனாருக்கு பீரியட்ஸ் பிராப்ளம். சின்ன விஷயம் தான். கூட வரச் சொன்னா. வந்தேன். “அவ என்ன வேலை பாக்கறா?” ஸ்கூல் டீச்சர். ஏன்? “அப்ப அவளால பசங்களுக்கும் பீரியட்ஸ் பிராப்ளம். இல்லியா?” நீ இன்னும் அப்பிடியே இருக்கியேடி, பேச்சும் மாறல்ல. ஆளும் அதே கும்ம், என சியாமளா அவள் கையைக் கிள்ளினாள்.. “இன்னும் எத்தனை நாள் சென்னைவாசம்?” ரெண்டு மூணு நாள் இருப்பேன். என் பையன் எம். எஸ். பண்ண அமெரிக்கா போனான். நேத்தி ஃப்ளைட் ஏத்திவிட்டுட்டு வந்தேன், என்றாள். “வெரி குட். கங்கிராட்ஸ்” என்றாள் பார்வதி.
உனக்கென்னடி பிரச்னை. பார்வதி வாயைத் திறக்குமுன் உள்ளே அழைத்தார்கள். “இரு. வரேன்” என உள்ளே போனாள் பார்வதி. உள்ளேயும் சாய்பாபா படம், சந்தன மாலை ஆடிக் கொண்டிருந்தது. ரெண்டு கையும் ஓங்கி ஆசி வழங்கும் பாபா. டாக்டர் நளினி அனுப்பினாங்களா? குட், வாங்க உட்காருங்க. என்ன விஷயம்? அவள் பேசப் பேச டாக்டர் தலையாட்டி கேட்டுக் கொண்டாள். இப்பல்லாம் நிறையப் பேருக்கு இந்த மாதிரி ஆயிருது. பாக்கலாம். டெஸ்ட் ரிசல்ட் எல்லாம்… “கொண்டு வந்திருக்கேன் டாக்டர்” என்று எடுத்துக் கொடுத்தாள். தனியாத்தான் வந்திருக்கீங்களா? “ஆமாம் டாக்டர்…” பக்கம் பக்கமாக எல்லாம் பார்த்தாள். ஸ்கேன் படங்களை எடுத்துப் பார்த்தபடியே சொன்னாள். “சில சமயம் இந்த மாதிரி லேட்டாக் காமிக்கும்… என்றாள் டாக்டர். “என்ன டாக்டர்?”
பிரஸ்ட் கான்சர் மாறி இருக்கு, என்றாள் டாக்டர் சலனம் இல்லாமல். தூக்கிவாரிப் போட்டது. கவலைப் படாதீங்க. உயிருக்கு ஆபத்து இருக்காது, என்றாள் டாக்டர். ரேடியம் ட்ரீட்மென்ட் குடுத்துப் பாக்கலாம். கடைசியா வேற வழி இல்லைன்னா, பிரஸ்ட்டை ரிமூவ் பண்ணிறலாம்… எச்சில் கூட்டி முழுங்கியபடி தலையாட்டினாள் பார்வதி. லேசாய் கண் இருட்டியது. வெளியே சியாமளா அவளுக்காகக் காத்திருந்தாள். கடவுளே, நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று இருந்தது. ஒருபக்க மார்பு இல்லாமல் இப்பவெல்லாம் நிறையப் பேர் இருக்கிறார்கள். கர்ப்பப் பையை எடுத்துவிட்டு இருக்கிறார்கள். ஸ்பாஞ்சு பிரா அணிந்து கொள்ளலாம். பார்க்க வித்தியாசமாத் தெரியாது. அந்த சியாமளா நல்லா இருந்த நாளிலேயே ஸ்பாஞ்சு பிரா தான்.
டாக்டரிடம் உடம்பைக் காட்டியபோது என்னென்னவோ யோசனைகள். இந்த மார்பு அடுத்த தடவை அமுக்க முடியாது. புல்லுத்தரையில் நடுவே களிமண் பாதை போல கெட்டியான உடம்பில் தழும்பு ஒன்று அடையாளம். அவ்வளவே. இனி நான் என்னை முழு பெண்ணாக உணர முடியுமா? என் கணவன்… அவனுக்கு இந்த அனுபவம் எப்பிடி இருக்கப் போகிறது? அடி உசிர் முக்கியம் இல்லியா? பாப்பம். ரேடியேஷன் கொடுக்கலாம். அதுலயே சரியாப் போகவும் வாய்ப்பு இருக்கு. “ஆனா அதெல்லாம் ஆரம்பித்தால் உடம்பு தகதகன்னு எரியும்பாங்க. தலைமுடில்லாம் கொட்டிரும்…” தபார், என்பான் அவன். ஒரு பிரச்னைன்னு ஆரம்பிக்கு முன்னமே கற்பனைக்குப் போயிறக் கூடாது. எதுன்னாலும், வரட்டும். அதை அவாய்ட் பண்ண முடியாதுன்னால், லெட் அஸ் ஃபேஸ் இட். அப்படித்தான் சொல்லுவான். நல்ல ஆறுதலான கணவன் தான். எனினும் நான் மேலே போகும் ராக்கெட் ஒண்ணொண்ணா உதிர்த்துப் போடுவதைப் போல என் அழகைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப் போகிறேன்…மேலே எங்க போகிறேன் நான்? ஒரேடியா மேல போவேண்டிதான்… என்ன ஒரு செய்தியில் இத்தனை கலவரப் பட்டுவிட்டேன்.. அவளுக்கு வெட்கமாக இருந்தது.
பிரா போட்டுக்கோம்மா, என்றாள் டாக்டர். இனி இதுக்கே வேலை இராது போலுக்கே. விடாமல மாத்திரை சாப்பிடு. இப்ப இதெல்லாம் சகஜமாயிட்டது. என்ன பண்றது? நாங்க தான் பாக்கறோமே. வர்ற வெள்ளிக்கிழமை வரியா? “எதுக்கு டாக்டர்?” ரேடியேஷன். “சரி” என சொல்ல முடியாமல் குரல் இழுத்துக் கொண்டது. நல்லாதான் பேர் வைத்திருக்கிறார்கள். பார்வதி. மதுரை மீனாட்சிக்கு, வீர தீர பராக்கிரம மீனாட்சிக்கு மூன்று முலைகள் இருந்தனவாம். சிவபெருமானைக் கண்டதும் காதல் கொண்டு பெண்மையின் கிளர்ச்சியில் மூணாம் முலை கரைந்து அவள் பெண்மைச் சாயல் கொண்டாளாம். ஹா, நான் எனது இரண்டாவது முலையை இழக்கிறேன்.
இழந்து அர்த்தநாரிஸ்வரி ஆகிறேனா? சிரிப்பு வந்தது. சிரிக்கிறேனா அழுகிறேனா அவளுக்கே குழப்பமாய் இருந்தது. மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்தாள்
*
*

(எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் சுருக்கம்.)
storysankar@gmail.com
91 97899 87842