கப்பல்

எஸ்.சங்கரநாராயணன்

ரவு பத்து மணியளவில் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்புவான் சேது. சற்றே குளிரான தெருக்கள். வண்டி குப்பையைச் சிந்திக்கொண்டே போனாற்போல வெளிச்சம் இடைவெளி விட்டுலிட்டு சிதறிக் கிடக்கும். பெரும்பாலும் அரவம் இராது. அந்த அமைதிக்கு தைரியப்பட்டு பாம்போ, பெருச்சாளியோ தெருவில் குடுகுடுவென்று ’ஓடும். தனிமை மறக்க எதும் பாட்டு பாடிக்கொண்டே போவான். பாட்டு என்றால் பாட்டு மாத்திரம் அல்ல. சில சமயம் விசில் கிளம்பும் வாயில் இருந்து. பாட்டைவிட விசில் என்றால் உற்சாகம் ஒரு அவுன்ஸ் அதிகம்தான்… அந்தக்காலப் படங்களில் பொம்பளையாள் பாட கூட ஆண் விசிலடிப்பதாக வெல்லாம் பாடல்கள் வந்தன.

ஹா ஹா… அன்னிக்கு நம்ம அழகுசுந்தரம் மாணிக்கவாசகத்தை வழியில் பார்த்திருக்கிறான். இவன், அழகுசுந்தரம், மாணிக்கவாசகம்… எல்லாரும் பள்ளிக்கூடம் ஒன்றாய்ப் படித்தவர்கள். கழுதை கெட்டா குட்டிச்சுவருன்னு வசனத்துக்குத் தப்பாமல் நண்பர்கள் பாதிப்பேர் சென்னை ஒதுங்கி விட்டார்கள். கெட்டும் பட்டணம் சேர், என்பார்கள். மாணிக்கவாசகத்திடம் அழகுசுந்தரம் உற்சாகமாக “டேய் நம்ம சேது தெரியுமாடா? சித்திரை வீதி? அவனும் இங்கதான் இருக்கான். சைதாப்பேட்டைல…” என்று சொல்லி யிருக்கிறான். “எந்த சேது? தெருவுல பாட்டு பாடிக்கிட்டே போவானே? அவனா?” என்றான் மாணிக்கவாசகம். சேதுவுக்கு அதை நினைக்க சிரிப்பு வந்தது. சில பேர் சில ஆட்களை டகார்னு அடையாளம் காட்டி விடுகிறார்கள். மாணிக்கவாசகத்துக்கு விசில் அடிக்க வராது. ‘‘சொல்லிக் குடுறா,” என்று கூட இவனைக் கேட்டிருக்கிறான். வாயைக் குவித்து அவன் ஊத காற்றுதான் வந்தது.

இராத்திரி ஒத்தையாளாய் வீடுவரை சைக்கிளை மிதித்தபடி போக இப்படி நினைவுகள் குளிருக்கு இதமாய்த்தான் இருக்கிறது. சேது உள்பனியன் போடுவது இல்லை. காற்று ஜிலுஜிலுவென்று சட்டைக்குள் அக்குள் வரை சிலிர்க்கும்.  சேது ரசனைக்காரன். வீட்டிலேயே அவன் சட்டையில்லாமல் தான் உட்கார்ந்திருப்பான். பெரும்பாலும் சேது வீட்டில் தங்குகிறதே இல்லை. பழக்கமே அப்படி. நண்பர்கள் கூடத்தான் எப்பவும் சுற்றித் திரிந்தான். அவன் சகாக்கள் எல்லாருக்கும் இப்போது கல்யாணம் ஆகிவிட்டது. அவன்தான் முப்பது வயதுவரை டேக்கா கொடுத்துவந்து பிறகு, “இன்னும் தாமதமானால் உனக்கு கல்யாணமே ஆகாதுடா…” என எல்லாரும் பயமுறுத்தி விட்டார்கள்… என்றதில் கல்யாணம் பண்ணிக் கொண்டான். அதாவது பண்ணிவைத்து விட்டார்கள்.

கல்யாணம் ஆன பின்னும் அவன் வீட்டில் தங்கினான் இல்லை. பொதுவாக அப்பா அம்மாவுக்கு, எதிர்பார்ப்பு என்னவென்றால் ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் ஆம்பளைகள் வீட்டோடு அடங்கி விடுவார்கள்… என்பதே. சேது சகாக்களுடன், (மனைவியோடு அல்ல) எதும் சினிமா என்று செகண்ட் ஷோ போய்வந்தான். ஒருவாரம் விட்டு ஒருவாரம் என அவனுக்கு நைட் ஷிப்ட் வரும். ஞாயிறு தாண்டினால் பகல்டூட்டி. சாயந்தரம் அலுவலகம் விட்டு சேது நேரே வீடு திரும்பினான் இல்லை. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், கல்யாணம் ஆன அவன் சகாக்களுக்கு வீட்டு வேலைகள் இருந்தன.

தோய்த்த துணிகளை மாடிக்கு எடுத்துப் போய்க் காயப் போட உதவலாம். பெரிய பிள்ளைக்கு சைக்கிள் கற்றுத்தர என்று குட்டி சைக்கிள் பின்னாடியே ஓடலாம். குடும்பத்தில் எல்லாருமாகக் கூடத்தில் படுத்தபடி டி.வி பார்க்கலாம்... எதாவது நகைச்சுவைக் காட்சி எனறால் ஹோவென்று மொத்தத் தெருவும் கொந்தளித்தது. அவன் சிநேகதர்கள் விடுமுறை என்று எல்லாருமாக வீட்டில் இருந்தார்கள். மத்தியானம் அம்மாக்காரி எல்லாரையும் ஒன்றாக உட்கார்த்தி வரிசையாய் தட்டு வைத்து சாப்பாடு போட்டாள். வீடே அமர்க்களப் பட்டது. பெண்கள் என்றால் வெள்ளிக்கிழமை, ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தார்கள். மதியம் சிறு தூக்கம் போட்டார்கள்.

இதில் எதுவுமே சேதுவுக்குப் பழக்கம் கிடையாது. கல்யாணம் ஆனதே தவிர அவனுக்குக் குழந்தை பிறக்கவில்லை. கம்பெனி இல்லாத விடுப்பு தினங்கள் சேதுவைத் திணறடித்தன. கூட பேச ஆளில்லாமல், ஆள் கிடைக்காமல் அந்நாட்களில் தவித்துப் போனான். தவிரவும் அது என்னவோ பெண்களை விட ஆண்களிடம் அவனுக்கு உறவாட சகஜமாய் இருந்தது. 

“சேது இருக்கானா?” என்று வீட்டு வாசலில் வந்து நின்றான் அழகுசுந்தரம்.

“இல்லையே. அவரு உங்களைத் தேடித்தான் போனாருன்னு நான் நினைச்சேன்…” என்றாள் சித்ரகலா. சேதுவின் சம்சாரம். அவள் அதைச் சொல்லும்போது சிறிது சிரித்திருக்கலாம் என்று தோன்றியது.. தன்னைவிட சேதுவுக்கு சிநேகிதர்கள் முக்கியமாய்ப் போய்விட்டது, என அவளுக்கு விசனம் இருந்தது. தவிரவும் அன்னிக்கு ஒருநாள் அவளும் சேதுவும் வெளியூர் போய்விட்டு பஸ்சில் இருந்து இறங்கி வீடு வந்து கொண்டிருந்தார்கள். வரும் வழியிலேயே சேது அழகுசுந்தரத்தைப் பார்த்து விட்டான்.

அப்படியே தெருவில் நின்று ரெண்டு வார்த்தை பேசினான் சேது. பிறகு சித்ரகலாவைப் பார்த்து, “நீ வீட்டுக்குப் போ. நான் இவன்கூட பேசிட்டு வரேன்” என்று அவளைத் தனியே வீடுவரை அனுப்பி விட்டான்... சித்ரகலாவுக்கு முகமே மாறிவிட்டது. திடீரென்று அவன் தன்னை வெட்டி விட்டாப்போல இருந்தது அவளுக்கு. பல்கடித்த ஆத்திரத்துடன் திங்கு திங்கென்று வீட்டைப் பார்க்கப் போனாள் அவள்.  இப்படி ஆட்கள் ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்…  பண்ணிக்கொண்டு எங்க உயிரை எடுக்க வேண்டும்… என அவள் அலுத்திருக்கலாம்.

“என்ன சேது? திடீர்னு அவளை மாத்திரம் அனுப்பி வெச்சிட்டே?” என்றான் அழகுசுந்தரம். அவனுக்கே சேது செய்த காரியம் பொறுக்கவில்லை.

“ஏன்?”’ என்றான் சேது. “அவளுக்கு வீட்டுக்கு வழி தெரியுண்டா” என்றான் புன்னகையுடன்.

“உனக்குதான்…” என்று சிரித்தான் அழகுசுந்தரம். “உனக்குதான் வீட்டுக்கு வழியே தெரியறது இல்லை…”

போதாக்குறைக்கு சித்ரகலாவை வழியில் பார்த்த பெண் ஒருத்தி “என்னக்கா தனியா வரே?” என்று வேறு கேள்வி கேட்டாள். ஊரில் பாதிப் பெண்களுக்கு அடுத்தவீட்டுப் பிரச்னை சட்டென்று புரிபட்டு விடுகிறது.

எதும் அவசரம் என்றால் உடனே அவனை சந்திக்க முடியாதிருந்தது. எங்க போனான், யார் வீட்டில் இருக்கிறான் என்றே சொல்வதற்கு இல்லை. கல்யாணம் ஆனால் இப்படி ஆண்கள் குடும்ப வழிக்கு வந்து விடுவார்கள் என்று சொல்லி இவர்களுக்குக் கல்யாணம பண்ணி வைத்தாகிறது. கல்யாணம் ஆகியும் சேது விட்டில் அடைகிறான் இல்லை. ஒருநாள் சேதுவின் அம்மாவிடம் இதைப் பற்றி சாவகாசமாக சித்ரகலா பேச்செடுத்தபோது அவன்அம்மா சிறு சிரிப்புடன் சொன்னாள். “எல்லாம் ஒரு ’குழந்தைன்னு வந்துட்டா சரியாயிரும்..”

சித்ரகலாவுக்கு திக்கென்றது. மாமியார் இடக்காய் எதுவும் பேசுகிறாளோ என்று தோன்றியது. ஒருபக்கம் இவர்கள் கால காலமாக எந்தப் பிரச்னையிலும் தாங்கள் முகங் கொடுக்காமல் தள்ளிக்கொண்டு போகிறார்கள். இதில் சித்ரகலாவின் மன உளைச்சலை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை, என்பது. இன்னொரு பக்கம். கல்யாணமாகி ரெண்டு ரெண்டரை வருஷம் ஆகப் போகிறது. இன்னும் உனக்குக் குழந்தை இல்லை என்பதை அப்படியே சொல்லிக் காட்டுகிறாளோ என்றும் உள்ளே யோசனை வந்தது. இங்கே எல்லாவற்றுக்கும் பெண்மீது பழி போடுவது பிள்ளையைப் பெற்றவர்களுக்கு வாடிக்கையான போக்காக இருக்கிறது.

சேதுவுக்கு இன்னும் அந்த விளையாட்டுத்தனம் குறையவே இல்லை. தெருவில் பையன்கள் கில்லியோ கிரிக்கெட்டோ ஆடினால் கண்மின்னப் பார்க்கிறான். வீட்டுவேலை எதுவும் சொன்னால் அசிரத்தையாகச் செய்கிறான். கடைக்கு அனுப்பினால் சொல்லிவிட்ட பத்து சாமானில் ஒன்று இரண்டு மறந்து போகிறது. எதிலும் அத்தனை கவனக் குவிப்புடன் அவன் ஈடுபடுவது இல்லை.

உலகம் தன்னைப் போல இயங்குகிறது. அது அப்படித்தான் இயங்கும். இதில் வாழ்வனுபவம் தவிர உனது பங்களிப்பு என்ன? எதுவும் இல்லை… என அவன் நினைக்கிறானா? மனிதன் என்றால் பொறுப்பு வேண்டாமா? ஒரு சுய கட்டுப்பாடு இருக்க வேண்டாமா? எதிலும் தானாக இயங்க ஒரு தன்முனைப்பு வேண்டாமா? எதிலும் பட்டுக் கொள்ளாமலேயே இப்படி சித்தம் போக்கு, சிவம் போக்கு, என்று இருப்பதா?

ழ்இன்னும் அவன் மாறவே இல்லை.  பெற்றோரும் அவனை எடுத்துச் சொல்லி வளர்த்ததாகத தெரியவில்லை.  வெளிய போனால் சேது எப்போது வீடு திரும்புவான், இராச் சாப்பாட்டுக்கு வருவானா தெரியாது. அவனுக்கே அது தெரியாது. பசித்தால் வீடு வருவானாய் இருக்கும். இராத்திரி ஒருமணி ஒண்ணரை மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். செகண்ட் ஷோ. அவள் இராத்திரி சாப்பிடாமல் அவன் வர என்று காத்திருந்துவிட்டு இரவு நேரம் கழித்து சாப்பிட்டிருப்பாள். அவனிடம் சொன்னால், “எனக்காக நீ ஏன் காத்திருந்தே?” என்று கேட்பவனை என்ன செய்வது?

மனைவியோட ஆசை என்ன? அதில் நாலில ஒண்ணாவது அவன் நிறைவேற்றி வைக்க வேண்டாமா? இராத்திரி இரண்டாம் ஆட்டம் சினிமா போகிறான். ஒருநாள் கூட அவளை, வரியா?... என்று கூப்பிட்டது இல்லை. இத்தனைக்கும் அவன் நண்பர்கள் கூடப் போகிறான். அவர்களில் சிலர் தங்கள் மனைவியை அழைத்துப் போனதாக அவள் கேள்விப் பட்டாள். சைக்கிளில் டபுள்ஸ் அடிக்க யோசிக்கிறானா?

ரேடியோவில் பாட்டு எதுவும் கேட்டால் அவன் கண்கள் விரிந்தன. இரண்டாவது வரியைக் கூடவே பாடக்கூட செய்தான். அவளிடம் “படத்துல இந்த சீன் ரொம்ப நல்லா இருக்கும்” என்றும் பேசுவான். நாலு பக்க அளவில் சினிமா பாட்டுப் புத்தகங்கள் நிறைய வைத்திருந்தான். அதில் இரண்டாம் பக்கம் கதைச் சுருக்கம். ஒரு பக்கத்தில் அடங்கியவரை கதை எழுதி, மீதியை வெண்திரையில் காண்க, என்பார்கள். இயக்குநர் பீம்சிங் சிவாஜியை வைத்து ‘பா’வன்னால ஆரம்பிக்கிற படங்களா எடுத்தாரு தெரியுமா?... என்று எதோ பொக்கிஷத்தைக் கைமாற்றுவது போலப் பேசினான்.

அதேபோல, நீ - ஒரே எழுத்தில் ஒரு படம். அடுத்து நான், என இரண்டு எழுத்தில் ஒரு படம். மூன்றெழுத்து, என அடுத்த படம். நான்கு கில்லாடிகள், இந்த வரிசையில் ராமண்ணாவின் நான்காவது படம். இப்படி விவரங்கள் அவளுக்கும் சொல்லத் தெரியும். இதுனால என்ன பிரயோசனம்?... என நினைத்துக் கொண்டாள். 

குழந்தை இல்லை. அப்படி எதுவும் பிறந்திருந்தாலும் அது முகத்தைப் பார்த்தபடி பொழுது போகும். சிரிப்போ அழுகையோ அதனோடு சேர்ந்து காலம் ஓடும். மாமனார் மாமியார் இந்த சனியன்கள், சேதுவப் பத்திக் கவலை காட்டாதவர்கள், அவளுக்குக் குழந்தை இல்லை என்பதை நினைத்து நொடித்துக் கொள்வதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் வந்தது. ழிழிரீ

சேதுவோ அப்பா அம்மா பற்றி, இவளைப் பற்றி, ஏன் தன்னைப் பற்றியே அவன் கவலைப் பட்டான் இல்லை. மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்.. என்ன சித்தாந்தம் இது…

சிலாட்கள் மத்தவங்க விஷயத்தில் எப்படியோ, தன் காரியம் சாதித்துக் கொள்வதில் சாமர்த்தியமா இருப்பான். கோவிலில் விடல் போட்டால் கூட்டத்தில் புகுந்து புறப்பட்டு கை நிறைய சிதறு தேங்காய் பொறுக்கி வருவான். சேதுவுக்கு அந்தமாதிரி சுயநலமும் இல்லை. இப்படியாட்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

இதில் எப்ப பாரு மத்தாட்களையிட்டு அலட்சியம், கேலி, கிண்டல் என்று தரையில் கால் பாவாத வாழ்க்கை. விளையாட்டு என்று எதாவது பேசி மத்தவர்கள் அதை விளையாட்டாய் எடுத்துக் கொள்ளாமல் சண்டை கூட வந்திருக்கிறது. பக்கத்து எதிர் வீட்டுக்காரனுடன் தகராறு, பேச்சு வார்த்தை இல்லை… என முறுக்கிக் கொள்கிறான். தெரிந்த நண்பர்களிடமே வாக்குவாதமாகி ஒருவாரம் பத்துநாள் யாருமே அவன் வீட்டுப்பக்கம் வரவே மாட்டார்கள். பிறகு எப்படி சமாதானம் ஆவார்கள் தெரியாது. சேதுவால் இருக்க முடியாது, என்று தோன்றியது. திரும்ப நண்பர்கள் வந்துபோக ஆரம்பிப்பார்கள்.

வீட்டில், நண்பர்களிடத்தில் இப்படி அசட்டுத்தனமும் முரட்டுத்தனமுமாக வீம்புடன் நடந்து கொள்கிற பழக்கம் அவனுக்கு அலுவலகத்திலும் தொடர்ந்தது. எந்த இடத்திலும் ஒரு வருடத்துக்கு மேல் அவன் வேலையில் தங்குவதே இல்லை. எதாவது பிரச்னையை இழுத்துக்கொண்டு வந்து சேர்வான். அத்தோடு அந்த வேலை போய்விடும்.  “அட அங்க மனுசன் வேலை பார்ப்பானா?” என்பான். “வேலையை விட்டுட்டீங்களா?”.என்று கேட்பாள் அவள் பயத்துடன்.

முதலாளி மூஞ்சியப் பாத்திருக்கியா?... என தன் முகத்தை மாற்றி வைத்துக்கொண்டு காட்டுவான். கூட வேலை பார்க்கும் யாரையாவது கிண்டல் செய்து அவனை அல்லது அவளை மாதிரியே பேசுவது, அதே நடை நடந்து காட்டுவது, அதேபோல நடித்துக் காட்டுவது. கூட இருந்து சிரிக்கிற நாலு பேர் அவனைப் பற்றிப் போட்டுக் கொடுத்தார்கள். பிறகென்ன, சண்டை சச்சரவு பிரிவு… என்று கண்ணிகள் துண்டிக்கப் பட்டன.

நம்மாளுக்கும் அறிவு வரவே யில்லை. அதையும் சொல்ல வேண்டும். சினிமாக்களில் கவுண்டமணி செந்திலை நக்கலடிப்பதைப் பார்த்துப் பார்த்து சேது தினவெடுத்துத் திரிந்தாற் போல இருந்தது. இதில் ஆக மோசமான விஷயம், அவனே இப்படி தருணங்களில், அவனை மற்றவர்கள் கிண்டலடிக்கிறாப்போல ஆகி இவன்  நடுவில் மாட்டிக் கொள்ள நேர்ந்து விடுவதும் உண்டு. அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி அங்கேயிருந்து நழுவப் பார்த்தாலும் விட மாட்டார்கள்

ஆசை இருக்கு தாசில் பண்ண. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க,.. ம்பாங்கடே. அது உனக்கு துப்புரவாப் பொருந்தும், என்பார்கள். சித்ரகலாவே பொறுக்க முடியாத தருணங்களில், “உங்க சிநேகித வட்டத்தில் பாருங்க. உங்களைத் தவிர யாராவது இப்பிடி கோவில்காளையாட்டம் திரியறாங்களா?” என்பாள் வருத்தமாக. அதெல்லாம் அவன் மண்டையில் ஏறவே இல்லை.

வேலையை விட்டு விட்டால் கூட அடுத்த இரண்டு நாள் அவன் வேலையை விட்டதே வீட்டில் தெரியாது. அவன் பாட்டுக்கு வெளியே இறங்கி எங்காவது போய்விடுவான். சரி வேறு வேலை தேடுகிறானா, என்றால் கூட பரவாயில்லை. நண்பர்கள் யாரையாவது தேடித் திரிவான். கைமாத்தாக ஐம்பது நூறு வாங்கிக் கொண்டபடி பஸ்சேறி வெளியூர் போய் சினிமா பார்ப்பான். அவன் கவலைப் பட்டானா என்றே தெரியவில்லை.

இரண்டு மூணு நாள் கழித்து தெரியவரும், அவன் வேலையை விட்டு விட்டான் என்று. அதைப்பற்றி பெற்றவர்களும் அக்கறை காட்டாத போது அவளுக்கு ஆயாசமாய் இருந்தது. இதுல இவனை நம்பி ஒரு பிள்ளையக் கிள்ளையப் பெத்துட்டாலும்… நல்லவேளை. அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. கெட்ட காலத்தில் ஒரு நல்ல காலம்னா மாதிரி.

அந்த மாணிக்கவாசகம்… இப்போது நல்ல நிலைமையில இருக்கிறான் என்று கேள்விப்பட்டாள் சித்ரகலா. நம்ம மாப்பிள்ளை அப்ப எதோ வேலை பார்த்து அதை விட்டு வந்த நேரம். அவனுடன் சகாக்கள் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வேலை இல்லை, என்கிற பிரக்ஞையே இல்லாமல் அவன் அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். பேச்சு தற்செயலாக மாணிக்கவாசகம் பற்றி வந்தது.

“ஏல அந்தக் காலத்தில் அவனை நீ என்ன பாடு படுத்தியிருக்கே?” என்று ருத்ரமூர்த்தி சொல்ல எல்லாரும் சிரிக்கிறார்கள். “எறிபந்து ஆட்டத்தில் அவன்தான் எப்பவும் நடுவில் மாட்டிக்குவான்.” அடுத்தவன் உடனே “அவன் வயிறு பெருத்து அப்பவே அவனுக்குத் தொப்பை உண்டு…” என்று சொல்ல, நம்மாள் சேது உடனே, “ஆமாமா. நான்தான் அவனைக் கிண்டலடிப்பேன். எலேய், பிள்ளையார் சதுர்த்திக்குக் கோவில் பக்கம் போயிறாதே. யார் பிள்ளையார்னு தெரியாமல் போயிரும்… அப்டிம்பேன்.”

அத்தனை பெரிய அறிவாளிதான் இத்தனை பெருமை பேசிக்கிட்டு வேலை இல்லாம உட்கார்ந்து சீட்டு விளையாடிக்கிட்டு இருக்கு… என நினைத்துக் கொண்டாள் சித்ரகலா. வேலை போய்விட்டது தெரிந்ததும் “இப்ப என்னங்க பண்றது” என்று அவனைக் கவலையாய்க் கேட்டாள். “என்ன பண்றதுன்னா? நீ வேற வேலை வாங்கித் தரப் போறியா?” என்று அவளையே கேட்டான். “எல்லாம் நாங்க பாத்துக்கறோம்…” என்று ஆம்பளைப் பேச்சு பேசுகிறான். இங்க வந்து என்னை எகிறத் தெரியும் அவனுக்கு.

அந்த அழகுசுந்தரம் அடுத்த முறை தேடி வந்தபோது சேது வீட்டில் இல்லை. அதுகூட நல்லதுதான். சேது இல்லை என்று தெரிந்ததும் சரி என்று கிளம்ப யத்தனித்தான் அழகுசுந்தரம். அவனிடம் எதோழழ பேச விரும்பினாற் போல தயங்கி நிற்கிற சித்ரகலாவைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

“அண்ணா…” என்று கவலையுடன் ஆரம்பித்தாள் சித்ரகலா. அவளே முன்வந்து பேச ஆரம்பித்தது அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தலையாட்டியபடியே நின்றான் அழகுசுந்தரம். “வீட்டைப் பத்தி கொஞ்சங்கூட கவலையே இல்லாம இருக்காருண்ணா இவரு…” என்றாள் சித்ரகலா. இதையெல்லாம் இவனிடம் பேசி விவாதிக்கும்படி நிலைமை வந்துவிட்டதே என்ற வெட்கமும் சிறுமையும் வந்திருந்தது அவளிடம். அவளோடு அவள்குடும்ப விஷயம் பேசுவதைப் பற்றி அவனுக்கும் சங்கடமாய் இருந்தது.

“அவன் சின்ன வயசுல இருந்தே அப்படித்தாம்மா. எந்த வேலையிலயும் முழு ஈடுபாடா இறங்க மாட்டான். பாதில பாதில அவனுக்கு அதுல சுவாரஸ்யம் போயிரும்.”

“நான் வந்து இங்க மாட்டிக்கிட்டாப்ல ஆயிட்டது…” என அவள் புன்னகைத்தாள். என்றாலும் அவள் உள்ளுக்குள் அழுகிறாள் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கு என்ன பதில் சொல்வது என்று திகைப்பாகி விட்டது. நண்பனின் மனைவி. நாலு வார்த்தை ஆறுதலாய் அவன் சொல்ல வேண்டும் என அவள் எதிர்பார்க்கிறாளா தெரியவில்லை.

“அடுத்த வேலைக்குப் போகாம இப்பிடியே உட்கார்ந்திருந்தா வேலைக்காகுமா? நீங்கல்லாம் எதாவது சொன்னா நல்லது.. உங்களைக் குறை சொல்றதா தயவுசெஞ்சி நினைக்கக் கூடாது…” எனும்போது, எனக்கு யார் இருக்கா, என்கிற ஆதங்கம் இருந்தது.

“நான் சொன்னா, “எல்லாம் எனக்குத் தெரியும்டி” அப்பிடின்னு மேலடி அடிச்சாறது.”

“நாங்க சொல்லாம இருக்கம்னு நினைக்க வேண்டாம்…” என அவன் புன்னகைத்தான். “யார் அறிவுரை சொன்னாலும் அவனுக்குப் பிடிக்காது.”

“அப்டின்னா எப்பிடிண்ணா,சொந்தமாத் தெரியணும். இல்லாட்டி சொன்னதைக் கேக்கணும்…” என்று சொல்லும்போது சிறிது கோபமும் ஆக்ரோஷமும் வந்தது அவளுக்கு. அடுத்து என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

“எனக்கு அப்புறம் கல்யாணம் ஆகி என் தங்கை சந்திரிகா முழுகாம இருக்கா. பக்கத்தூர்தான். பன்னெண்டு ரூவா பஸ் சார்ஜ். கேள்விப்பட்ட அளவுக்கு அவளை ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வந்தா நல்லது. கைல பத்து காசு கிடையாது…” என்றாள். அவள் உடல் சிறிது சுருங்கினாற் போல இருந்தது.

“பணம் கிணம் எதும் வேணுமா?” என்று கேட்டான் அவசரமாக. அதுவரை அவள் அவனிடம் உதவி என்றோ, பணமோ கேட்டதே இல்லை. அவள் அவனிடம் பேசியதே இல்லை.

“இருக்கட்டும்…” என்று பளபளத்த கண்ணை முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.  “அண்ணா, நீங்க அவர்கிட்ட வீட்டு நிலைமைய எடுத்துச் சொல்லாம இருக்க மாட்டீங்க. எனக்குத் தெரியும்…” என நிறுத்தினாள்.

‘‘எங்க ஆபிஸ்லயே வந்து சேது வேலை பாத்தாப்ல…”  என்றான் அழகுசுந்தரம். “நான்தான் ஏற்பாடு பண்ணியது…” அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“ஆமாம்” என்றாள் சித்ரகலா தலையாட்டியபடி. “ஆனா அங்கையும் கூட தங்கலியே?” என சித்ரகலா அவளும் புன்னகை செய்தாள்.

‘‘சரி… இப்ப என்ன பண்ணலாம்?” என்று அவள் முகத்தைப் பார்த்தான்.

“இத்தன்னாள் இல்லாம இப்பதான் உங்க பழைய சிநேகிதர் அறிமுகம் ஆயிருக்காரு இல்லியா?”

“யாரு?”

“மாணிக்கவாசகம்.”

“அவனா?”

“அதான்… அவருகிட்ட நீங்க பழைய நண்பர்கள் திரும்ப சந்திக்கிற மாதிரி போய்ப் பார்த்தா என்ன?”

“ஓ” என்றான். “செய்யலாம். ஆனா அவன் ரொம்பப் பெரிய இடம். எங்கியோ போயிட்டான் இப்ப. அவன் கீழ பத்து ஐந்நூறு பேர் வேலை செய்யறாங்க.”

“அப்பன்னா இவருக்கு எதும் வாய்ப்பு கிடைக்காமலா போகும்?”

“முதல் விஷயம், மாணிக்கவாசகத்துக் கிட்ட வேலைன்னு கேட்டுப் போறதா நாமப் பேச்செடுத்தாலே சேது வர மாட்டான்.”

அவள் அவனையே பார்த்தாள். அவன் தொடர்ந்து பேசினான். “அட அவன் என்கூட ஓடியாடி விளையாடினவன்டா. அவனுக்குக் கீழ நான்… எப்பிடி வேலை செய்ய முடியும்பான்.”

“அவரால யாருக்குக் கீழயும் வேலைசெய்ய முடியாதுண்ணா…” என்றாள் அவள் சிரிக்காமல்.

“அப்ப இங்கமட்டும் எப்பிடி அவன் ஒத்துப் போவான்?”

அவள் அவனையே பார்த்தாள். “அவரை எப்படியாவது நீங்கதான் மாணிக்கவாசகத்து கிட்ட அழைச்சிக்கிட்டுப் போவணும் அணணா.”

“நானா?”

“உங்களாலதான் முடியும்.”

அவன் அவளை ஆச்ச்ர்யத்துடன் பார்த்தான். ‘‘எல்லாருமா பழைய சிநேகிதனைப் போய்ப் பார்க்கிறதாப் போங்க. வேலை கேட்கப் போறதா இவராண்ட சொல்ல வேண்டாம்…”

அவன் தலையாட்டினான். முதன் முதலாக இவளிடம் இத்தனை பேசியதே அதிகம் என்று இருந்தது. அவளது வேண்டுகோளை அவனால் மறுக்க முடியவில்லை.

அழகுசுந்தரத்துக்கு வீடு வரும்வரை, சித்ரகலா தைரியமாய் முன்வந்து அத்தனை பேசியதே நினைவில் சுற்றிச் சுற்றி வந்தது. நல்லவேளை அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சேது வீடு திரும்பவில்லை. “என்னடி பஞ்சாயத்துக்கு ஆள் சேக்கறியா?”  என்கிற மாதிரி முரட்டுத்தனமாய் எகிறி யிருப்பான். இவன்பக்கமாய்த் திரும்பி, “என்னடா என்னைப் பத்தி என்ன சொன்னா? வீட்ல எழவு விழுந்தாப் போல புலம்பினாளா?...” என்று கேட்பான். “இதுநாள்வரை நான் வீட்டுக்குள்ள கேவலப் பட்டேன். ஆச்சி. இப்ப வெளிய வரை என் பேரு கேவலப் பட்டாச்சி…” என்பான். அவள் முகத்தைப் பார்ப்பதா? இவனுக்கு பதில் சொல்வதா, என்றே அவன் திகைக்க வேண்டியதாகி விடும்.

ச். அதென்னவோ அவனது நண்பர் வட்டத்தில் சேது மட்டும் துண்டு துக்கிரியாகிப் போனான். வெறும் வாய்ச் சவடாலும், வெட்டி பந்தாவும், அசட்டு தெனாவெட்டுமாகவே இருந்தான். பள்ளிக்கூடக் காலத்தில் இருந்தே அப்படித்தான். அந்த மாணிக்கவாசகத்தை என்னவெல்லாம் கிண்டல் அடித்திருக்கிறான்.

மாணிக்கவாசகத்துக்கு இடது கண் சற்று மாறுகண்ணாக இருக்கும். அவன் எங்கயோ பார்த்துச் சிரித்தால் நம்மைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி இருக்கும். நம்மைப் பார்த்து அவன் சிரித்தால் வேறெங்கோ பார்த்து அவன் சிரிக்கிற மாதிரி நமக்குத் தெரியும். ‘‘என்னடா இவன் மட்டும் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கான்…” என்பான் சேது. “ரெணடு பொண்ணுக போயிட்டிருந்தா இவன் யாரை சைட் அடிக்கிறான்னே கண்டுபிடிக்க முடியாதுடா…” என்பான் சேது.

தெருவில் சாயங்காலங்களில் எறிபந்து விளையாடுவார்கள். எப்பவும் அதில் நடுவே எறி வாங்க என்று மாணிக்கவாசகம்தான் மாட்டிக் கொள்வான். சில சமயம் எறிகள் உக்கிரமாகி அவனுக்கு அழுகை வரும். அவன் அழுவதில் சேது உற்சாகப் படுவான். பாதியில் விளையாட்டை விட்டு வெளியேற முடியாது. “பயந்தாங்குளி” என்று கத்துவார்கள். “பொட்டை” என்று கூச்சல் போடுவார்கள். கடைசியில் மாணிக்கவாசகத்தின் அம்மா வந்து ஒரு கத்து கத்தி எல்லாரையும் விரட்டி விட்டுவிட்டு அவள் அவள்பங்குக்கு ரெண்டு அடி போட்டு அவனை இழுத்துப் போவாள்.

அப்போதும் கூட நண்பர்களைப் பற்றி அவன் குறை சொன்னதே இல்லை. எப்பவும் சேதுவிடம் அவன் பிரியமாகவே இருந்தான். எங்களுக்கெல்லாம் அது ஆச்சர்யமாய் இருந்தது. பாடங்கள் ஓரளவு நன்றாகவே படித்தான். எங்களுக்குப் புரியாத கணக்குகளைக் கூட அவன் சரியாகப் போட்டான். பெரும்பாலும் அவனது கணக்கு நோட்டைப் பார்த்துத்தான் நாங்கள் எழுதிக் கொண்டோம். எக்ஸ் என்றும் ஒய் என்றும் அல்ஜிப்ரா அவனுக்குப் பிடித்தது.

பத்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு அவனைத் திரும்பப் பார்த்தபோது அழகுசுந்தரத்துக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஒரு சிக்னலில் அவனது பஜாஜ் பல்ஸர் பக்கத்தில் வந்து நின்றது ஒரு பலினோ கார். கார்க் கணணாடி இறக்கிவிடப் பட உள்ளே யிருந்த நபர் ஆட்டோகூல் கண்ணாடி அணிந்திருந்தார். “ஹலோ? நீங்க… அழகு…” எனத் தயங்கினார். “நீங்க இல்ல. நீ. ஆமாம நான் அழகுசுந்தரம்தான்” என்றான். அவனுக்கு மாணிக்கவாசகத்தை அடையாளம் தெரியவில்லை.

சிக்னல் கடந்து அடுத்த சந்தில் திரும்பி நின்றது கார். கீழே இறங்கிய நபர் டை கட்டி யிருந்தார். காரை ஓட்டிவந்த டிரைவரே சீருடையில் இருந்தான். “நாங்க இல்ல. நான். நான் மாணிக்கவாசகம்” என்கிறவனைப் பார்க்கவே மனம் பொங்கியது. ‘‘அடடா வாட் எ சர்ப்ரைஸ். இங்கதான் இருக்கீங்களா? இருக்கியா?” என்று… கை கொடுக்கத் தயக்கமாய் இருந்தது. அந்தக் கையைப் பற்றிக் குலுக்கினான் மாணிக்கவாசகம்.

அவனிடம் நிறையப் பேச வேண்டும் போல இருந்தது. எங்காவது அவசரமாய்ப் போகிறானா தெரியவில்லை., அவன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். மாணிக்கவாசகம் தன் பர்சில் இருந்து விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். “இதான் என் கம்பெனி. எப்ப வேணுன்னாலும் ஒரு கால் பண்ணிட்டு வா” என்றபடி, “இன்னும் நம்ம செட்ல யார் யார் சென்னைவாசியா இருக்கீங்க?” என்று கேட்டான் கார்க் கதவைத் திறந்துகொண்டே. “சேது…” என்னுமுன் அந்த அடையாளம் சொன்னான். பிறகு சிரித்தபடி “ஐயோ அவன்கிட்ட எத்தனை எறி வாங்கியிருக்கேன்…” என்று சிரித்தான். “இப்ப நினைச்சாலும் வலிக்குது…” என்றபடி காருக்குள் உட்கார்ந்து கொண்டான். “அவசரமாப் போறேன். இல்லாட்டி எதாவது சாப்பிட்டிருக்கலாம்.”

“ஐய அதனாலென்ன?”

“ரைட். போன்…” என்றபடி மாணிக்கவாசகம் தலையாட்ட கார் திரும்பப் புறப்பட்டது.

சித்ரகலாவுடன் பேசிய அடுத்த நாள் சேதுவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தபோது உள்ளே அவர்கள் பேசுவதை உன்னிப்பாக சித்ரகலா கேட்டுக் கொண்டிருப்பாள் என உணர்ந்துகொண்டே இருந்தான். ‘‘நாம ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமா ஒரு தடவை போயி மாணிக்கவாசகத்தைப் பார்த்துட்டு வரணும்டா…” என ஆரம்பித்தான். அதில் சேது ஆர்வம் காட்டவில்லை. வேலை இல்லாத நிலையில் அவன் இப்போது வர தயங்குவான் என்றே அழகுசுந்தரமும் எதிர்பார்த்தான்.

“நீ அவனை நடுவுல மாட்டிவெச்சி எறிபந்தால அடி நச்செடுத்த இல்ல… அதை அவன் மறக்கலடா…”

“அது ஒரு காலம்” என்று சிரித்தான் சேது. அவன் பேசியதை உள்ளே யிருந்து சித்ரகலா கேட்டிருப்பாள் என்றுதான் தெரிந்தது. உள்ளே சிறு அசைவுகள் காட்டின.

திரும்பத் திரும்ப தவிர்த்துக் கொண்டே யிருந்தான் சேது. எப்படியும் வேலை… அதுவும் அவனுக்கு என்றால் கண்டிப்பாக முகம் சுளித்து எழுந்து கொள்வான் என்று இருந்தது. எப்படியோ அவனை சம்மதிக்க வைத்தான் அழகுசுந்தரம். அவர்கள் செட் இன்னொரு நண்பன் மகாதேவனுடன் போய்ப் பார்த்துவிட்டு வந்ததாகவும், அப்போது மாணிக்கவாசகம் சேது பற்றிக் கேட்டதாகவும் சொன்னதும் சேது அவனும் அடுத்த முறை போகும்போது கூட வருவததாக ஒத்துக் கொண்டான்.

கிராதி கேட்டுடன் பெரிய தொழிற்சாலை அது. சேதுவே வாயைப் பிளந்தான் அந்த வளாகத்தைப் பார்த்து. எப்படியும் இவனுக்கு இங்கே ஒருவேலை பார்த்துச் சொல்லிவிட முடிந்தால் நல்லது. மாணிக்கவாசகம் தன்மையான ஆள்தான். ஆனால் இவன், சேதுதான் வீண் முறுக்கு முறுக்கிக் கொள்வானோ என்று இருந்தது.

அடுத்தமுறை சித்ரகலாவிடம் பேசும்போது சிறிது தயக்கமாய் இருந்தது. இருந்தாலும் பேசினான். “நான் சேதுவைக் கூட்டிட்டுப் போறேன். ஆனா அவனுக்காக நண்பன்கிட்டியே வேலை கேட்கிறதை அவன் அவமானமாத்தான் பேசுவான்…” என்றான்.

“அப்ப என்ன பணறது அண்ணா. இதுக்கு முடிவுதான் என்ன?” என்று கேட்டாள் சித்ரகலா.

வாசலில் செக்யூரிட்டி கூண்டுக்குள் இருந்து அவர்கள் வந்திருக்கும் தகவல் சொன்னான். உடனே உள்ளே அனுப்பச் சொல்லி அழைப்பு வந்தது.

“வாடா எறிபந்து மாஸ்டர்…” என சேதுவை எழுந்து வந்து அணைத்துக் கொண்டான். “இப்ப என்ன பண்றே?” என்று கேட்டான் மாணிக்கவாசகம்.

தான் வேலை எதிலும் இல்லை, என்று சொல்லாமல், பழைய கம்பெனி பெயரையே சொன்னான் சேது. இதை அழகுசுந்தரம் எதிர்பார்த்திருந்தான்.

“பரவால்ல மாணிக்கம். எங்கள்ல நீதான் டாப்பா முன்னுக்கு வந்திருக்கே” என மனசாரப் பாராட்டினான் சேது. “நாங்க உன்னை எத்தனை நக்கல் அடிச்சிருக்கோம். கேலி கிண்டல் பண்ணி யிருக்கோம். கடைசில ஜெயிச்சது நீதான்.”

“ஹா ஹா” என்று சிரித்தான் மாணிக்கவாசகம். “கப்பல் பத்தி ஒரு வசனம் சொல்வாங்க… கரைலயே நின்னுட்டிருந்தா கப்பல் பாதுகாப்பாதான் இருக்கும். ஆனால் கப்பல் செய்யப் பட்டது அதற்காக அல்ல. அதன் வேலையே கடலில் ஆபத்தான, சிக்கலான பயணங்களை மேற்கொள்வதுதான்.”

அவன் பதில் சேதுவுக்கானது என்று நான் உணர்ந்து கொண்டேன்.

எல்லாருக்கும் காபி வந்தது.

“அப்பறம்? வேற என்ன விஷயம் நாட்டுல?” என்று கேட்டான் மாணிக்கவாசகம். நான் பேச வேண்டிய நேரம் இது, என உணர்ந்தேன்.

“ஒரு வேலை விஷயமா…” என்று நான் ஆரம்பிக்கும்போதே சேதுவிடம் ஒரு விரைப்பு தெரிந்தது.

“உன் கம்பெனில ஐந்நூறு பேர் கிட்டவேலை செய்யறாங்க. நீ நினைச்சால்….” என்னுமுன் சேது எழுந்து வெளியே போனான். “நில்லு சேது” என்றேன் நான். பின் மாணிக்கவாசகத்திடம் பேசினேன். “சேதுவோட மனைவி சித்ரகலா…” என்றபோது வெளியே போக இருந்த சேது நின்று, திரும்பிப் பார்த்தான்.

“டிகிரி வரை படிச்சிருக்காங்க. உங்க தொழிற்சாலைல… அவ தகுதியப் பார்த்து…”

“அதுக்கென்ன? அவங்களை வரச் சொல்லு. நீயே கூட்டிட்டு வந்திருக்கலாமே சேது?” என்றான் மாணிக்கவாசகம்.

•••ழிழி

நன்றி / ஆவநாழி – மின்னிதழ் 17 ஏப்ரல் மே 2023

Comments

Popular posts from this blog