Saturday, September 27, 2014

தி ரு வை யா று
நா. விச்வநாதன்

 

கண்டறியாதன கண்டேன்என்ற அப்பர் பெருமானின் பரவச அனுபவம் ஆன்மிகம் சாராதவர் களையும் குதூகலிக்க வைக்கும். அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் அல்லது தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் அருட்பார்வை மகத்தானதாகவும், உய்விக்க வல்ல தாகவும் நம்பப் படுகிறது. மதுரையை விட நூறு மடங்கு, கும்பகோணத்தை விட இருநூறு மடங்கு, சிதம்பரத்தை விட ஆயிரம் மடங்கு புண்ணியம் மண்டிய பூமி என்கிறார்கள். காசியை விட லட்சம் மடங்கு சிரேஷ்டமானது என்றும் சொல்லக் கேட்டிருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் கங்கையை விட காவிரி உத்திஷ்ட மானது என்று சொல்கிறதும் உண்டு. பஞ்சகச்சம் விபூதிப்பட்டை சகிதம் ஓரிரு அந்தணர்கள் இன்றும் கூட காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்வதைப் பார்க்கலாம். ‘பாப்பாரப் பஞ்சநதம்என்றே பெயர்.

திருவையாற்றில் அப்படி என்ன விசேஷம் கொட்டிக் கிடக்கிறது எடுத்துச் சொல்ல? சப்தஸ் தானம் விசேஷம். ஏழூர்ப் பல்லக்கு. திருவையாறு கண்ணாடிப் பல்லக்கு. மாப்பிளைப் பல்லக்கு என்ற திருப்பெயரும் உண்டு. திருப்பழணம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் ஆகிய ஊர்க்கோயில்களின் பல்லக்குகள் உரிய மரியாதையோடு எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்ய, திருவையாற்றுப் பல்லக்கு ஜோடனை களோடு பிரமாதமாக ஏழூர் வலம் வரும். திரளான கூட்டம். சப்தஸ்தானக் கூட்டம் மாதிரியில்லே இருக்குது, என்று பெருங் கூட்டத்துக்கு உதாரணங் காட்டும் வழக்கமும் உண்டு. ஐயாறப்பர் வீதியுலா வரும்போது அந்தணர் கூட்டம் சேவிப்பது அவா அவா ஆத்துப் படிக்கட்டில் நின்றபடியே தான். கடும் வெயில், கூட்ட நெரிசல், வியர்வை... என சிரமப் பட்டுக்கொண்டு, நீர்மோர், பானகம் சாப்பிட்டுவிட்டு, மோட்சத்திற்கும் புண்ணியத்திற்கும் வழிதேடுவது சுற்று வட்டார ஏழை பாழைகள் தாம். பிறந்ததில் இருந்து இறுதி வரை சுகங்களை மாத்திரமே அனுபவித்தாக வேண்டும் என்பதும் ஒருவித வாழ்க்கை முறைதான். லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து.

பல்லக்குகள் கனமானவை. நாலுவாரையும் பருத்த மரம். பக்கத்திற்கு 25 பேர் கணக்கு. சுமப்பவர் தோள் சின்னக் குன்று மாதிரி பொம்மியிருக்கும். முரட்டுக் காளையின் திமில் போல! என்ன போதை ஏற்றிக்கொண்டாலும் பல்லக்குத் தூக்கிகளின் வலி பெரிது. வலியை மறந்து உற்சாகமாக பல்லக்குகளை உலுக்கோ உலுக்கென்று உலுக்குவது கண்கொள்ளாக் காட்சி. அர்ச்சகர் பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு பல்லக்கின் குலுக்கலுக்குத் தோதாக பேலன்ஸ் பண்ணுவார். மேல் வஸ்திரத்தை குறுக்காகப் போட்டுக் கொண்டு கண்களை மூடி ஜபம் செய்கிறதும் ரசமானது. ஒரு தடவை, ‘தி..’ காரர்கள் மீட்டிங் போட்டு ‘‘நம்மாளுங்க பல்லக்கத் தூக்க, அய்யன் சொகமா ஒக்காந்திருக்கான். நம்மாளுங்களுக்குச் சொல்றோம். பல்லக்கைத் தூக்கிக்கிட்டு வாங்க - வந்து அதுலே இருக்கிற சாமி, உக்காந்திருக்கிற பாப்பான் எல்லாத்தையும் காவிரியாத்திலே தூக்கிக் கடாசுங்க.’’ என்று பேச, கோர்ட்டு வியாஜ்யம் என்றெல்லாமானது.

சப்தஸ்தான பல்லக்குகளின் யாத் திரைவழி நூற்றுக்கணக்கான பஜனை கோஷ்டிகள். பாபநாசம் சிவன் கூட தவறாது வருவாராம். வாரியார் ஸ்வாமி களின் வருகையும் சிறப்பானது. அதில் பிராம்மண பஜனை கோஷ்டியும் தனியே வந்து கொண்டிருக்கும்.

மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி...’ என்று துதித்து நாளும் உழவாரத் தொண்டு செய்து முக்தியடைந்தது அப்பர் ஸ்வாமிகளுக்கு சாத்தியமானது. இறை வழிபாட்டை விட, இறைத் தொண்டு என்ற கருத்தியலை அழுத்தமாக வலியுறுத்தியவர். உழவாரம் ஏந்திப் புறப்பட்ட போதே அவர் உழைக்கும் மக்களின் பிரதிநிதி ஆகிறார் என்று சொன்னால் இடதுசாரி நண்பர்கள், அல்ல தோழர்கள், மூக்கு விடைக்க ஆனந்தக் கூத்தாடுவர்.

சம்பந்தர் பாடுவார். ‘சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே.’ ஒருகாலத்தில் திருவையாறு அற்புதமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இன்றைய சாக்கடை நாற்றமும், நெரிசலான சாலைகளும், புராதன இடிபாடுகளுடன் கட்டடங்களும் மறந்துவிட்டால் ஐயாறு புனிதமானது தான்.

த்வன்யா லோகம்என்ற முக்கியமான நூலை யாத்தவரும், தமிழகத்திலேயே முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்றவருமான ஸ்ரீமான் பி. எஸ். சுப்ரமண்ய சாஸ்திரி, .ரா., திருலோக சீதாராம், இலக்கண இலக்கிய மாமேதை வித்வான் தி.வே. கோபாலய்யர், . சீனிவாச ராகவன், தி.சா. ராஜு, ஜி. சுப்ரமண்ய ஐயர், அந்தக¢கால சினிமா ஸ்டார் டி.பி. இராஜலெஷ்மி, இன்றைய கர்நாடக இசைப்பாடகி மஹதி என திருவையாற்றுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் பெயர்ப் பட்டியலும் உண்டு. இன்னுமிருக்கலாம்.

சத்குரு தியாகப் ப்ரும்மம் மகா மகத்துவம். அவர் பிறந்தது திருவாரூரில். திருவையாற்றுக்கு வந்து வாழ்ந்தது பெரும் பேறு. தஞ்சாவூர் மராட்டி ராஜா அவரைத் தன் அரசவைக்கு வந்து பாடுமாறு கேட்டதற்கு மறுத்து விட்டது வரலாற்றுச் செய்தி. ‘நிதி சால சுகமோ...’ என்ற கல்யாணி ராகக் கீர்த்தனையைக் கேட்டு மராட்டி ராஜா என்ன எதிர்வினை ஆற்றினான், என்கிற விவரம் இல்லை. அந்த ஏழை முலுக்க நாடு காகர்வ த்ரிலிங்க வைதிக ஏழைத் தெலுங்கு ப்ராம்ணருக்கு நிறையவே தன்மானம். தியாகை யரின் கீர்த்தனைகள் அப்போதே பிரபலம். வீட்டுக்கு வீடு சங்கீதப் ப்ரபாவம். ‘மாரு பல்க குணா...’ கீச்சுக்குரலில் கட்டைக்குரலில் உரத்தகுரலில் கரகரகுரலில் சங்கீதம் கேட்குமாம்.

சத்குரு சித்தியடைந்த இடம் புதர் மண்டி திருவையாற்றின் மலக்கூடமாகக் காட்சி யளித்தது கண்ணுக்கு நிரடல். போற்றப்பட வேண்டிய இடங்களைப் புழுதியாக்குவதுதான் நம் மரபு. எந்த சங்கீத வித்வானும் வித்வாம்சினியும் நாளிதுவரை கண்டுகொள் வதாகத் தெரியவில்லை. பங்களூர் நாகரத்தி னம்மாள், புகழ்பெற்ற விதூஷகி தன் சொத்துக்களை யெல்லாம் சத்குருவுக்கே எழுதிவைத்துவிட்ட சேதி முக்கியமானது. அந்தக் காலத்திலேயே கோடிக் கணக்கு அது. தியாகையரின் சமாதியை மீட்டு சரி பண்ணியது உட்பட அந்த சதிர்க்கார அம்மாள் செய்த பணிகள் அநேகம். நாகரத்தினம்மாள் காலமானபிறகு அந்த அம்மாளுக்கு அங்கே ஒரு சிலையை நிறுவ விரும்பியபோது ஏராளமான எதிர்ப்பு. தீட்டு பட்டுவிடும் என்று கவலை. அப்புறம் ஓர் ஓரமாக வைத்ததாக (தீட்டாச்சே!) பெரியவர்கள் சொல்கிறார்கள்.

இன்னொரு விஷயம். தியாகையருக்குச் சொந்தம் கொண்டாடி தில்லைஸ்தானம், உமையாள்புரம், சூளமங்கலம் பாகவதர்கள் தமக்குள் சச்சரவிட்டுக் கொண்ட சரித்திரமும் பிரசித்தமானது. பெண்கள் மேடையில் பாடக்கூடாது, என ஒரு கோஷ்டி. பெண்கள் கச்சேரிக்கு ஆண்கள் பக்கவாத்யம் வாசிக்கக்கூடாது என்று இன்னொரு கட்சி. பெண்களுக்கு மிருதங்கம் வாசிக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் பிடிவாதமாக இருந்த வர்களுள் முதல் வித்வான் பாலக்காடு மணி அய்யர் என்று கேள்வி. தியாகையர் எங்களுக்கு சித்தப்பா முறை, சின்னத் தாத்தா, ஒண்ணுவிட்ட அத்திம்பேர் என்று உறவு கொண்டாடி சண்டைகள் உண்டு. இதனால் தியாகையர் ஆராதனை திருவையாற்றில் ஒரே சமயத்தில் மூன்று நான்கு இடங்களில் நடந்ததாகச் சொல்கிறார்கள். சித்தப்பா ஆராதனை. அத்திம்பேர் ஆராதனை. ஆக தியாகையரை வைத்து கோர்ட் கேஸ் அப்பீல் மறுஅப்பீல் வழக்கு வியாஜ்யம் என்று தயிர்க் கடைசலாய் ஏகப்பட்டது நடந்திருக்கிறது. அப்படியாய் அப்போது சபாவிற்கு ஏராளமான சொத்தும் பணமும் சேர்ந்துவிட்டது என்பது முக்கியமான சேதி.

எல்லாம் அலுத்து ஓய்ந்த பிறகு கச்சேரி ஒரே இடத்தில் நடக்க ஆரம்பித்திருக்கிறது. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசுச் செயலர்கள், ஹைகோர்ட், சுப்ரிம் கோர்ட் ஜட்ஜுகள், பெரும் தொழில் அதிபர்கள் என தலைமையேற்க தியாகையருக்கு ஆக்ஸிஜன் செலுத்தி அவர் புத்துயிர் பெற்றார். தியாகராஜ ஆராதனை இப்போது லோகப் பிரசித்தம். கான்ட்ராக்ட் அலங்காரப் பந்தல். சீரியல் பல்புகள். அரசுடைமை வங்கிகளின் அபய ஹஸ்தம். தியாகையர் கேட்டிருந்தால் லோன் தந்திருக்க மாட்டார்கள். அமைச்சர் அவர்களே வருக வருக, விளம்பர பேனர்கள் என களை கட்டியது பிரதேசம். அரிதாரப் புன்னகைகள். காமெரா ஃப்ளாஷ்கள். திகட்டும் வெளிச்சம். தூர்தர்ஷன். போலிஸ் பந்தோபஸ்து. சுத்து வட்டாரம் தொந்தியெடுத்து விட்டது. சாப்பாட்டுக்கடை. பஜ்ஜி வடை ஸ்டால்கள். ஹல்வா. கேசரி. உப்புமா. டிகிரி காபி, அதில்லாமல் எப்படி. இந்த காபி குடிக்க, என்ன தவம் செய்தனை. எல்லாருக்குமே அந்த மண்ணை மிதிக்கிறதில் ஒரு கனவு நிறைவேறிய கிறக்கம். பரவசம். கூட்டம். கூட்டம் பார்க்க கூட்டம், என்பார் கவிஞர் மீரா.

பெரிய மனிதர்களின் மனைவிமார்கள், மச்சினிகள், மகள், மருமகள்கள், மாமியார் என்று ஒரு கோஷ்டியே மேடைதேடிப் பாய்ந்து ஏறி இடம் பிடித்து, வலமும் பிடித்து, ‘தெலியலேரு ராம பக்தி மார்க்கமுனு...’ என்று கீச்சுக்குரலில் சென்னை சபாக்களின் கச்சேரி பந்தாவில் இங்கே ஆரம்பிக்க, எதிரில் அமர்ந்து தப்பு தப்பாய் தாளம் போட, தலையாட்டி மகிழ உறவு சனம் காத்திருக்கும். ஒரு  வரிசை எழுந்துகொள்ள அடுத்த கச்சேரி, அடுத்த உறவுக்கூட்டம். பின்னணியில் தியாகையர் கண்ணை மூடிக்கொண்டிருப்பார்.

ஆராதனை மேடையில் கச்சேரி பண்ண மூணு வருஷம் முன்னாலேயே புக்கிங் செய்ய வேண்டும். டிமாண்ட் அப்படி. கிடைக்காதவர்கள் பாக்யவான்கள். ஒரு தடவை பார்த்தது அப்படியே மனதில் நிற்கிறது. பாட்டுக்கார மாமி ஒருத்தி வெற்று நாளில் ரெண்டொரு மனிதர்கள், ஏழெட்டு தெரு நாய்கள், நாலு மாடுகள், காவிரியின் மல நாற்றம் அனைத்தையும் சகித்துக்கொண்டு சத்குருவின் சந்நிதியில் உலகம் மறந்து பாடிக் கொண்டிருந்தாள். ‘துளசீ தள மூலசே...’ மாயாமாளவ கௌளை. மனசே போனது கொள்ளை. சத்குரு லேசாகக் கண்சிமிட்டுவது போல இருந்தது.

சத்குரு வழிபட்ட ஸ்ரீ ராமன் விக்ரகம் தஞ்சாவூரில் வரகப்பையர் சந்தில் ஒரு ராயர் குடும்பத்தாரால் பூஜிக்கப் பட்டு வருகிறது. மகோத்சவ கமிட்டி ரூபாய் லட்சம் தாண்டிப் பேரம் பேசியும் லட்சியம் செய்யாமல், அதைத் தர அவர்கள் சம்மதப் படவில்லை. விபரமான வித்வான்கள் இப்போது கூட தஞ்சாவூர் வந்து வரகப்பையர் சந்து வீட்டில் குட்டிக்கச்சேரி பண்ணிவிட்டே திருவையாறு வருவதும் வழக்கம்.

தியாகையர் கி.பி. 1847 ப்ரபாவ வருஷம் புஷ்ய பகுளபஞ்சமியன்று சித்தி யடைந்ததாகக் கருதி, அந்த தினத்தில் ஆராதனை. ஆனால் அந்த மகான் சித்தி யடைந்தது வேறொரு நாள் என்று ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டி ருந்ததும் நடந்தது. வாஸ்தவத்தில் அண்மையில் வாழ்ந்த தியாகப் ப்ரம்மத்திற்கு முழுமையான சரியான வரலாறு இல்லை. இலக்கியக் கதை அல்ல, அது மர்மக் கதை. புதுக்கோட்டை திவான் சேஷய்யா எழுதிய அந்த வரலாறு தான் கொஞ்சம் சரியாக இருப்பதாகத் தெரிகிறது. தியாகையர்வாள் தேசிய தோடியில் அமைத்தநமோ நமோ ராகவாய அநிசம்தான் அவரது இசையில் முதல் க்ருதி என்பார்கள். இன்னும் சிலர்க்ருபை நெல கொள்ள ரானி’ (சகானா) தான் முதல் என்று முழுக்கையீ சட்டை மடக்கி முஷ்டி உயர்த்துகிறார்கள்.

தியாகையர் ஆராதனை, ஐயாவாள் உத்சவம் என்றானது. அப்புறம் கச்சேரி என ஆகி, இப்போது சபாவாகி யிருக்கிறது. நீர்க்காவி யேறிய வஸ்திரத்தோடு வெடவெடக்கும் குளிரில் வத்தல் உடம்போடு தன்னை விட குண்டான தம்புராவை மீட்டியபடிஏல நீ தய ராது’... அடானாவில் இசைத்துக்கொண்டு, அன்றைய பசிக்காக உஞ்சவிருத்தி செய்துகொண்டிருந்த தியாகையரை இன்று தடி ஆசாமிகள், வைர பேசரி பளபள பட்டு ஜ்வலிக்கிற நாரிமணிகள், ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டது தான் இம்சை. இந்தக் கச்சேரிக்கு தியாகையர் தன் கோலத்தில் வந்தால் உள்ளே விடமாட்டார்கள்.

தங்களின் இசைஞானத்தைக் குறைவுபட எழுதியதற்காக சத்குருவின் சன்னிதியிலேயே நம்ம சுப்புடுவை உதைக்க முற்பட்டதும் சிறப்பு சேதி.

உற்சவ காலங்களில் வழக்கமான ப்ராமண போஜனம் உண்டு திருவையாற்றில். சாப்பாடு பிரம்மாதமாக இருக்கும். சர்வ திக்குகளில் இருந்தும் ப்ராமணப் பரதேசிகள் கூடி விடுவார்கள். கச்சேரியாவது சங்கீதமாவது. வயிறு வாசிக்கிறது வயலின். போஜனம் ப்ராமணர் அல்லாதவர் ப்ராமணர் களுக்கு உபயம். அப்ராமணர்களுக்கு சாப்பிட அனுமதி இல்லை. மீறி நுழைந்தால் அவமதி உண்டு. உள்ளே முதல் பந்தி. வெளியே அடுத்த பந்திக்காகப் பெருங் கூட்டம். யாரோ ராமாயண பாரதக் கதைகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ராஜாஜியை விட புத்திமான்கள் உண்டோ, என அலுப்புடன் பாராட்டும் சனங்கள். ‘பிராம்மணோ சந்து நிர் பயஹ’. பந்திக்காக திண்டிக் கதவு திறக்கிற துளி சப்தம் கேட்டால் போதும். களேபரம். முட்டுமோதல். அடிதடி. பரிமாறிய இலையை மிதித்துக்கொண்டு வாகான இலை தேடி ஓடும் ஓட்டம். பருத்த தொந்தி. அழுக்குப் பூணல். பெரிய ஜாரணிக் கரண்டியோடு சமையல்காரனின் பந்திப் பரிசோதனை. சந்தேகப்பட்டவரிடம் விசாரணை. லேய் பூணலைக் காட்டு. அபிவாதயே சொல்லு. காயத்ரி சொல்லு... எவனாவது அப்ராமணன் மாட்டினால், ஓடுறா. இல்லேன்னா ஒரே போடு! பெரிய கரண்டியால் ஓங்கியபடி முழக்கம். சிலசமயம் ஒரு போடு போடுகிறதும் உண்டு, எதிராளி ஏப்ப சாப்பையாய் இருந்தால்.

இப்ப வித்வான்கள் போஜனம் மட்டுமே எனக் கேள்வி.

தமிழ் நாட்டில் என்னய்யா தெலுங் குக்காக அஞ்சு நாள் தனிக் கச்சேரி?... என்று மிதமான கிளர்ச்சியைச் செய்தவர் ஸ்ரீமான் தண்டபாணி தேசிகர் என்று கூற கேட்டிருக்கிறேன். அவர் ஆராதனை மேடையேறி தமிழ்ப் பாட்டு பாட, பாதியில் நிறுத்தச் சொல்லி களேபரம். அப்புறம் மேடையை புண்யாஜனம் செய்து சுத்தி பண்ணினதாகவும் கேள்வி.

தமிழிசையைப் பரப்பப் போகிறோம், என அடுத்த கோஷ்டி, தியாகைய ஆராதனைக்குப் போட்டியாக, தனியாக இன்னொரு இடத்தில் மேடை. ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாச நேத்ரி ஸ்ரீ லலிதாம்பிகையே, என்றும், ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி, என்றும் தமிழ் இசை வளர்த்தார்கள். இப்போதும் கூட. அப்பத்தான் பாடக் கற்றுக்கொண்ட பெண்கள், பட்டுப்பாவாடைப் பருவத்து பரதநாட்டிய சிரோன்மணிகள். செவ்வழி. காந்தாரம். நைவளம். நட்டபாடை. சீகாமரம்... என்ற தமிழ்ப் பண்களெல்லாம் பாடினார்களா என்றால், அவர்கள் அதைக் கேள்விப்பட்டிருப்பார்களா என்றே சந்தேகம்.. பரிட்சையில் சாய்ஸில் விட்டிருப்பார்களா யிருக்கும்.

திருவையாற்றில் காவிரி நீராடல் சீராடல் தான். கோடை மலக் கழிவுகள் தண்ணீர் வந்தபிறகும் ஒரு வாரம் மணக்கும். அமாவாசை தர்ப்பண பித்ருக்களுக்கான திதி திவச தினம். கரையில் சன அலை. ரிடையர்டு, (வாலண்டரி ரிடையர்டு பார்ட்டிகளும் உண்டு.) டிவியெஸ், வங்கி ஊழியர்கள், சர்விசில் உள்ளவர்கள், ரெவின்யூ டிபார்ட்மென்ட் காரர்கள் அங்குமிங்கும், பருத்த தொந்தியோடு புரோகிதர்களாக தர்ப்பைக் கட்டுடன் அலைகிறார்கள். செம வரும்படி. பரம்பரை பாத்தியதை உள்ளவர்களாம். (டிவியெஸ்சில் வேலைக்கு இப்படி பரம்பரை பாத்தியதை கொண்டாட முடியுமா என்ன??) வரும் ஆசாமியின் முகக் குறிப்பறிவதில் கில்லாடிகள். வழிமறித்து அல்லது தடுத்தாட் கொண்டு, துண்டைப்போட்டு இழுத்துக்கொண்டு போவது மாதிரிதான். இவர்களுக்கென்று புஷ்டியான சங்கமெல்லாம் இருக்கிறதாம். ரொம்பப் பேசினால் உதைகூட விழலாம்.

அப்புறம், ஐயாறப்பர் கோவில், தருமையாதீனத்தின் ஆளுகைக்குட்பட்டது. இறைவனையும் கோவிலையும் மனுசாள் ஆள முடியுமோ? கேள்வி கூடாது. கோவிலில் ஒட்டிக் கொண்டிருக்கிற துளி சாந்தித்தியத்தையும் விரட்டவென்றே அவதாரம் செய்திருக்கும் அர்ச்சகர்கள். ரூபாய் இருபத்தைந்துக்குக் குறையாமல் தட்சிணை வைத்தால் தான் அர்ச்சனைத் தட்டையே தொடுகிறார்கள். சதா சிடு சிடு முகத்தோடு இருக்க எப்படி முடிகிறதோ. முன்பு அந்தக் காலத்தில் அவர்களுக்கு ஓட்டை சைக்கிளும், ஆறிய நைவேத்தியமும் தான் ப்ராப்தம் என்றிருந்தது. இப்ப இன்டிகா, மாருதி (ஆஞ்ஜனேயர் அல்ல.) வந்தாயிற்று. இன்னோவா, பி.எம்.டபிள்யூ. பார்த்து வைத்திருக்கிறார்கள். பக்தர்களிடம் பறித்தால் தான் சரி வரும். விலை ஏறுமுன் வாங்கவேண்டும்!

சத்குருவின் ஆராதனையில் பாட்டுக்காரர்களுக்கும், நாதசுர வித்வான்களுக்கும் நிறையவே யார் பெரியர், என்ற சச்சரவும் இருந்ததெனச் சொல்வர். இந்த மாதிரியான ரசமான விஷயங்கள் இல்லையெனில் சுவாரஸ்யமேது லோகத்தில்?

கேரளத்திலிருந்து தியாகராஜரை தரிசிக்க வந்த இசைமேதை ஷட்கால் கோவிந்தமாராரின் குரல்வளம் கண்டு வியந்து சத்குரு ஸ்ரீராகத்தில் பாடியது, எந்தரோ மகானு பாவுலு... இதேபோல் ஆபோகியில் ஒரு கீர்த்தனை கவனம் பண்ணு என்ற ஸ்வாமியின் ஆக்ஞையை ஏற்று நம்ம கோபாலகிருஷ் பாரதியார் பாடியது, சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா...

ஏகப்பட்ட இசைவாணர்கள் பக்கா வாக பக்கவாத்யக் காரர்களோடு நிகழ்த்தும் பஞ்சரத்னக் கீர்த்தனை வைபவம் ஆராதனையின் தொடக்கம். நாட்டையில் ஆரம்பித்து, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் என அஞ்சு ராக சங்கீத மழை. இப்படி பஞ்சரத்னமாகப் பொறுக்கி எடுத்துக் கொடுத்தது தியாகராஜர் இல்லை. ஏதோ வழக்கம் வந்துவிட்டது. ராகமும் சுருதியும் சேராமல் கசமுசாவென்று கோஷ்டிகானம் பாடியதை சிம்பொனி மாதிரி ஒழுங்குபடுத்தி தெய்விகக் களையைத் தோற்றுவித்தவர் டாக்டர் பாலமுரளிகாரு. அன்றைய சபா செக்ரேட்டரி. இவர் காலத்தில் வரிசையா ஆந்திரா ஆசாமிகள் மேடையேறியதை நம்மாட்கள் ரசிக்கவில்லை. டாக்டர் பாலமுரளி கழண்டு கொண்ட பின்னர், குன்னக்குடியும், ஹரித்வாரமங்கலமும் வந்தார்கள். குன்னக்குடியின் முழு முக பரிமாண மர்கட ஜேஷ்டைகளையும் சரியாக அவதானிக்க ஏற்ற இடம் உற்சவ மேடைதான். ‘ஸாமஜ வரக மன...’ ஹிந்தோளத்தை அவர் வில்லிசைக்கும் போது காண கண்கோடி வேண்டும். ஹரித்வாரமங்கலம் தாள லயம் மத்தாப்பூச் சிதறல். நந்திதேவர் தான்.

அப்புறம் கபிஸ்தலம் ஸ்ரீ மூப்பனார் குடும்பம். அரசியல் தாண்டி ஐயாவுக்கு இன்னொரு சிரேஷ்ட மான முகம் அது. கர்நாடக இசையின் மகா ரசிகர் அவர். நல்ல சங்கீத ஞானம். தற்போது அவரது இளவல் திரு ஜி.ஆர்.எம். ஐயா, மைந்தர் ஜி.கே. வாசன். இருவருமே இசை ஆர்வலர்களே. இந்தக் குடும்பம் நம்ம .வே.சா.வை போஷித்து தமிழுக்குப் பெரும்பணி ஆற்றியதைப் போல, கர்நாடக இசை வளர்ச்சிக்கும் திருவையாற்றில் பெரிய பங்களிப்பு செய்துவருகிறது, துளி சர்ச்சையும், சப்தமும் இன்றி.

ஆயிரம் இசகு பிசகுகள் நீட்டி முழக்கினாலும் திருவையாறு திருவையாறுதான். பக்கத்து ஊர் என்கிற பாசமா? வேறு சிலதும் இருக்கிறது. ‘பெரும் புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்ய வருவேன்’... என்ற அப்பர் பெருமானின் தெய்விகச் சொற்கள் இன்றுகூட ஒலிக்கவே செய்கின்றன. சீரார் திருவையாறா போற்றி போற்றி, என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு திருவையாற்றுத் திருப்பதிகத்தை நிறைவு செய்யலாம். சுபமஸ்து.

நன்றி இருவாட்சி பொங்கல் மலர்


2 comments:

  1. ஹைய்யோ!!!!!

    இன்றைக்குத்தான் கண்ணில் பட்டது! என் பாக்கியம்!

    ReplyDelete
  2. மிக அருமை....நன்றி

    ReplyDelete