மோகனம் 1
மோகனம் 2
எஸ். சங்கரநாராயணன்
கல்யாணம் என்கிறதே பெண்களின்
சமாச்சாரம் என்றுதான் கிரிதரனுக்குத் தோன்றியது. மாலையும் கழுத்துமாய் இப்படி மனம்
பொங்கப் பொங்க நிற்கிறதை வாழ்வின் கனவுகளில் ஒன்றாக இந்த ஸ்திரீ பெருமாட்டிகள் வரித்துக்
கொள்கிறார்கள். அட, புருஷா... அப்டின்னா உனக்குள் கனவுகள் இல்லையாக்கும் ?... எனக்
கேலியாடுகிறது மனம். ஆ, அவை கனவுகள் அல்ல. எதிர்பார்ப்புகள். பெண்ணின் சிந்தனைகளிலேயே
ஓர் அழகு, கனவு உள்கர்ப்பம் கொண்டிருக்கிறது...
ஒருவேளை பெண்ணுக்குள்ளும்
ஆணைப் பற்றி இதே தினுசில் யோசனை இருக்கலாம்! வாழ்க்கையில் விநோதங்களுக்குப் பஞ்சமில்லை.
கல்யாணங்களில் இப்பவெல்லாம்
முகூர்த்தத்துக்கு முன்னாலேயே விருந்து - வரவேற்பு என்று கேளிக்கைகள். முகூர்த்தத்துக்கு
என வந்து வாழ்த்த ஒழியாதவர்கள் முந்தைய இரவே தலைகாட்டி விட்டுப் போய்விடலாம். வேக காலம்.
காலத்தின் சிறகசைப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது ஏனோ. நிற்கிறவர்கள் நிதானிக்கிறவர்கள்
எதோ இழந்து விட்டாற் போல வருத்தப் படுகிறார்கள். வேடிக்கை.
எப்படியெல்லாம் காலத்தின்
முடிச்சுகள் விழுகின்றன. மோகனவல்லிக்கும் கிரிதரனுக்குமாய் ஒரு வசீகர இணைப்பு. எதையும்
சற்று ஊன்றி கவனித்து அலசிப் பார்த்து மனசில் அசைபோட்டு வாழ்கிறவன் அவன். இவள் - மோகனவல்லி
- சற்று பரபரப்புக்காரி என்றிருக்கிறது. கனவுகள் அவளை அலைத்தாலாட்டு போல, யானையாட்டம்
ஆட வைக்கின்றன. சேர்ந்தாற்போல ஓரிடத்தில் நிற்கக் கொள்ளாத சிற்றசைவு!
என் பெண்டாட்டி அழகுதான்
என நினைத்துக் கொண்டான். மனசில் சிறு சிரிப்பு. அந்த அழகு போதாதது போல மேலும் சிறப்பு
அலங்காரங்கள். அழகு நிலையம் போய் வந்திருக்கிறாள். திருமண வரவேற்புக்கு இவள் சொன்ன
வரவேற்பு! இந்தக் கணங்களுக்கு ஓர் உட்கிறுகிறுப்புடன் காத்திருந்திருக்கிறாள். வதனம்
பெருமிதம் பொங்கிக் கிடக்கிறது. எனக்குப் போல புருஷன் லோகத்தில் எவளுக்கும் இல்லையடி...
என்கிறதோர் மிதத்தல். இறுமாப்பு. தோழிகள் வருவார்கள். அத்தனை பேரிடத்திலும் அவளுக்கு
உரக்கச் சொல்ல இப்படியாய் ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது.
பெண் வீட்டார் வரவேற்பு...
அவன் பங்கு என அதிகம் இல்லை. அதனால்தான் இப்படி வேடிக்கை பார்க்கிற பாவனை கொண்டாட முடிகிறது.
ஒரு குழந்தையின் சுவாரஸ்யத்துடன் புதுப் பெண்டாட்டியை வேடிக்கை பார்க்கிறதும் உற்சாகமாய்த்தான்
இருக்கிறது. இவன் பார்வைக்கும், சிறு சொல்லுக்கும் அவளுள் மயக்கத் தள்ளாட்டம். வேதவாக்குகள்
அவை. பூவெனப் பூத்து தேன்சுமந்து நிற்கிறாள் மோகனவல்லி.
சுடிதார் - மேலே வெள்ளைகோட்
- அணிந்து ஸ்கூட்டியில் நகரப் பரபரப்புகளை விஞ்சிக் கடப்பவளா இவள். பட்டுப்புடவை சிகை
நகை என சகல ஆபரணங்களும் - ஸ்டெதாஸ்கோப் எங்கே பெண்ணே ?! - பெண்ணெனும் வீணை நரம்புகள்
திரும்பப் பெற்றவள். நகரப் பரபரப்பில் சரிநிகர் என ஆணோடு வேகமெடுத்து வளைய வந்தவள்.
கையில் கடிகாரத்தைப் பார்த்தபடி நடையன்கள் அதிர வளாகங்களில் சஞ்சரிக்கிறவள். தோளில்
தாலி சுமக்கப்போகிறாள். நேற்றுவரை அங்கே செல்ஃபோன் ஆடிக் கொண்டிருந்தது.
மோதிய ஆண்களை முறைத்தபடி
கடந்து போனாள். இவனது சிற்றசைவுகளில்... காற்றின் சலனமே அவளை கவனஈர்ப்பு செய்கிறதே.
காலம் சந்தனம் பூசுகிறது அவளில். ஸ்பரிச மந்திரம். ரோமாஞ்சனம். ஐயா உம்மிடத்தில் என்
கனவுகளை ஒப்படைக்கிறேன். ஆகுதியிட்டு அவற்றை வளர்த்திடுக.
பெண்பார்க்க வந்திருந்தபோது
கூட அந்தப் பரபரப்பு விலகாத அவசரம் இருந்தது அவளிடம். அவனும் அப்பாவுமாய்க் காத்திருந்தார்கள்.
' 'ஸாரி ஐம் எ பிட் லேட்... ' ' என்றபடி வாசல் திண்ணையருகே நடையன்களை உதறி உள்ளே வருகிறாள்.
' 'நெவர் மைன்ட். வீ ஆர் - ஆஃப்கோர்ஸ் எ பிட் எர்லி, மே பி... ' ' என்று கிரி புன்னகைக்கிறான்.
உனக்காகக் காத்திருப்பேன் பெண்ணே!
நாடகம் போலிருக்கிறது. உள்ளே
போனாள். முகம் கழுவினாள். பூத்த மலர் போலும் எப்படி வேறு கோலம் பூண்டுவிட்டாள்! பெண்கள்
கனவு-தேவதைகள்தான்! குட்டிப் பெண்ணாய்ச் சுட்டிப் பெண்ணாய் மின்னல்போலும் நுழைந்தவள்.
பெண்ணின் குழைவுகளும் நளினங்களும் மேல்மட்டம் வந்திருந்தன. சுடிதார் களைந்து இப்போது,
பட்டுப்புடவை. கூந்தலில் பொங்கிச் சிரித்துக் கிடந்தது மல்லிகை. செடி இடம் மாறிவிட்டாப்
போல. அதோடு போட்டிபோடும் வசீகரப் பற்கள். விழியோரங்களை மை தீட்டிக் கொள்ளக் கற்றுத்
தந்தது யார் ? யாரோ மகா ரசிகன்!
அறுவைச் சிகிச்சை அறையில்
கத்தி பிடிக்கிறவள். சமைக்கத் தெரியுமா என்றா கேட்பது ? விஞ்ஞான வாத்தியாரை சரித்திர
வினாத்தாள் குறிக்கச் சொன்னார்களாம்- அக்பரின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கச் சொன்னாராம்!
' 'உங்கள் பொழுதுபோக்கு என்ன
? ' ' என்கிறான்.
''விதவிதமான உணவுவகைகளைச்
சமைப்பது பிடிக்கும்... ' ' என ஆச்சரியப் படுத்தினாள். ' 'உங்களுக்கு ? ' ' என இயல்பாய்
எதிர்க் கேள்வியும் கேட்கிறாள்.
' 'ஆ, நான் இசைப்பிரியன்...
' '
அவள் அப்பா அதைக்கேட்டு முகவெளிச்சம்
காட்டினார். ' 'நாங்க திருவையாறுதான்... தியாகையர் சந்நிதில பாட வர்றவால்லாம் அந்தக்
காலத்துல நம்மாத்லதான் ஜாகை. ராத்திரிப் பூரா பாட்டும் சங்கீர்த்தனமுமா வீடு நிறைஞ்சு
கெடக்கும். ' '
' 'இப்ப தாத்தாவும் இல்ல.
வீட்டையும் வித்தாச்சு... நாங்களும் மெல்ல நகண்டு இந்தப் பக்கமா வந்தாச்சு ' ' என்று
புன்னகைத்தாள் மோகனவல்லி. அவளது நெற்றியோரம் மயிர்ப்பீலி ஒன்று வழிதவறினாப் போல முன்
விழுந்து லேசாய்ப் படபடத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அவன் தலையாட்டினான்.
அவனது பார்வை அவளுள் இன்ப இம்சை செய்ததை ரசிக்கிறான். அவளுக்கும் அது வேண்டியே இருந்தது.
தேவதைகள் நகையொலி செய்கிறார்கள்.
வித்தைகள் செய்தது காதல்
உள்ளே. சொல்லுக்குள்ளேயும் செயலுக்குள்ளேயும் கால்நனைத்து வீசி அலையடிக்கிறாள் அவள்.
மோகனவல்லி என்கிற, சற்றுமுன் அறிமுகமான இவள். மனதில் மேகமுகங் கொள்கிற எதையும் அவளிடம்
பகிர்ந்துகொள்ள வேண்டுமாய் உள்யத்தனம் அவனில். புது அனுபவம் அவனுக்கு. இதுதான் காதல்
என்பதா ? இந்தப் பெண்கள் பொல்லாதவர்கள்! - என்று நினைத்துக் கொண்டான், ரொம்பத் தெரிந்தவன்
போல.
அவளின் நளின அசைவுகள். பார்வை
விரிப்பு. சற்று அகன்றாற் போல உதடு பிரித்த சிரிப்பு. ஆ அந்தக் குரல். ஜாலக்காரி. உறக்கத்திலும்
எனை ஆட்சி செய்ய வல்லவள். கனவு வள்ளல்.
அவளது செல்ஃபோனுக்கு அழைப்பு
விடுத்தான். ' 'முக்கியமான ஒரு டிஸ்கஷன்ல இருக்கேனே....'' - ''நோ ப்ராப்ளம். ஐம் ஸாரி...
'' என்கிறான் சிறு ஏமாற்றத்துடன். ஆனால் அவளே அரைமணி நேரத்தில் அழைத்தாள் - என்ன உற்சாகமான
குரல... ''எஸ் ஸார், ஐம் அட் யுவர் சர்வீஸ்... '' என்கிற கிண்டல் வேறு. ஆனால் அப்போது
அவன் வேலையாய் இருந்தான். ''ரைட். வேலை முடிஞ்சு, ஒரு ஆறு மணிவாக்கில் உட்லண்ட்ஸ் டிரைவ்இன்ல
சந்திப்பமா ?'' - ''யா. ஐ 'வில்பீ ' அட் யுவர் சர்வீஸ்! அவசர கேஸ் எதும் வராமல் இருக்கணும்.
''
- காதலிக்கு ஒருத்தன் கடிதம்
போட்டானாம். உனக்காக உயிரையும் கொடுப்பேன் கண்ணே. நாளை மாலை உன்னை வந்து சந்திக்கிறேன்...
மழை வராமல் இருந்தால்!
' 'குட் ஜோக். ஆனா சிரிப்பு
வரவில்லை. ' '
' 'ஆபரேஷன் சக்ஸஸ். பேஷண்ட்
மரணம்! ' '
' 'ஆபரேஷன் ஃபெயில்ட். பேஷன்ட்
பிழைச்சிட்டான்னு இப்பல்லாம் ஜோக் எழுதறாங்க... ரைட். மாலை. உட்லண்ட்ஸ் டிரைவ்இன்.
பை பை. ' '
சுருக்கமாக எவ்வளவு அழகாகப்
பேசினாள். காருக்குள் இதமான மணத்துடன் அவன்மீது சாய்ந்தபடி அவள் உரையாடியது போதையாய்
இருந்தது. அவளது நெற்றியில் சிறு முத்தம் தந்தான். அவள் மறுக்கவும் இல்லை. திருப்பித்
தரவும் இல்லை. ' 'அவ்வளவு அவசரமா ? ' ' என்று ஐயோ ஒரு சிரிப்புச் சிரித்தாள்!...
கணினிப் பொறி வல்லுனன் அவன்.
யந்திர மந்திரங்களை இடுகிறவன். உயிர்ப் பொம்மையிடம் மயங்கிக் கிடந்தான்.
உள்ளே ஒலிநாடாவில் சுதா ரகுநாதன்.
இசைப் பம்பரம். பாத்தும்மா தொண்டை சுளுக்கிக்கப் போறது! ' 'வர்ற சனிக்கிழமை மியூசிக்
அகாடெமில கச்சேரி... ' ' என்கிறான். ' 'அப்பா போவார் கண்டிப்பா ' ' என்றாள் மோகனவல்லி.
யார் தெரியவில்லை. நாயனத்துக்கென்று
சில ராகங்களைப் பட்டா போட்டுக் குடுத்தாச்சி. மோகனம், தோடி, கல்யாணி, கரகரப்ரியா, கானடா
இத்யாதி... கூட அதிர்வு வாத்தியம் தவில். வீதியெடுப்பு வாத்தியங்கள். சுவாமி புறப்பாடு
என உலாவலில் மல்லாரி. ஊஞ்சல் தாலாட்டில் உற்சவர்... காதுக்கும் பார்வைக்குமான விருந்து.
நாயனப் பார்ட்டியின் கூடவே வருகிற ரசிக மகா ஜனங்கள். தானாகத் தலையாடியாகிறது.
கல்யாணக் கூட்டமென்றால் ஜனங்கள்
வெகுகாலம் கழித்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்கிறதுக்கும் அதற்கும் கலகலப்பு.
வெடிச் சிரிப்பு. இந்த சப்த சமுத்திரத்தில் வயலினோ புல்லிசை எனவோ எடுபடாது என ஒரு கணக்கு
போட்டார்களோ என்னவோ ? மங்கள வாத்தியம்...
வாசிப்பு சமத்கார செளஜன்யத்துக்காக
செளடய்யா வயலினில் ஒரு தந்தி கூடுதலாகக் கட்டிக் கொண்டடார். பாரி நாயனம் என்று திருவாவடுதுறை
வித்வான் ராஜரத்னம் பிள்ளை பிரத்யேகத் துளை அமைத்துக் கொண்டு ஜமாய்த்தார்... வாழ்க்கையை
எப்படியெல்லாம்தான் அளக்கிறார்கள்!
தீட்சதர் க்ருதி - கோபிகா
மனோகரம் பஜேஹம்... மோகனத்தைத் தேனாகப் பிழிகிறான் பாவி. ஆனந்தத் தலையாட்டலுடன் இளம்
மனையாட்டியைப் பார்த்தான் கிரிதரன்.
ஜவுளிக்கடை பொம்மைபோல வர்ற
மனுஷ மக்களையெல்லாம் கும்பிடுவதும் தலையாட்டுவதுமாய் இருக்கிறாள். புடவையை முன்பக்கமாய்ச்
சரித்து குஜராத்தி பாணியில் உடுத்தியிருந்தாள். தலையெங்கிலும் சீரியல் பல்ப் போல வெண்முத்துகள்.
உதட்டுச் சாயம் உக்கிரமாய் கவன ஈர்ப்பு செய்கிறது. லேசாக அவளை இடுப்பில் கிள்ளலாமா
என அவனில் ஆர்வ விளையாட்டு.
ஜனங்கள் வரிசையில் வந்து
கொண்டேயிருந்தார்கள். வெளிச்சம் மின்னிக் கொண்டே இருக்கிறது. வீடியோ பதிவு வேறு. மோகனாவின்
பின்னால் அவள் ஒன்றுவிட்ட-தங்கை. மீனாட்சியோ என்னவோ பேர் சொன்னார்கள். சின்னப் பெண்.
கல்லுாரி வாசிக்கிறது. தன் கல்யாணக் கனவு மிதப்பில் அவள் சொக்கிக் கிடக்கிறாள். கல்யாணத்துக்கு
வந்திருக்கிற இளைஞர் பட்டாளம் மொத்தமும் அவளை அவ்வப்போது சைட் அடிக்கிறார்கள் என்கிற
பிரமை. இவள்கூடவே அவளும் அழகுநிலையம் புகுந்து புறப்பட்டிருக்கிறாள்.
இவனைவிட அவளை அந்த வீடியோவும்
புகைப்பட மின்னலும் அதிகம் ஆட்டிப் படைக்கிறது!
வரும் பிரமுகர்களை மாமனாரோ,
மோகனவல்லியோ அறிமுகம் செய்விக்கிறார்கள். ஒரு மையமான சிரிப்பு தவிர தன்னால் ஆகக் கூடுவது
ஒன்றும் இல்லைதான்.
மாமனாரிடம் அந்த நாயன இசை
உள்ளே புகுவதும் புரட்டுகிறதும் தெரிகிறது. உயிர்மூச்சை நாயனத்தில் உமிழ்கிறான் பாவி.
இப்படியோர் இசை கேட்க காதுகள் தவம் செய்திருக்க வேண்டும். படம் எடுத்த பாம்பின் உற்சாக
ஆட்டமாய் நாயனம் மேலும் கீழுமாய் அசைகிறது. கூட்டம் கலைகிறதும் அசைகிறதும் எழுந்துபோகிறதும்
வந்து அமர்கிறதும்... எதையிட்டும் அவன் கவலை கொண்டானில்லை. கவனித்தானா என்பதே தெரியாது.
சட்டென புதிய சங்கதி ஒன்றைக்
காது அடையாளங் காணவும், மாமனார் நாயனப் பக்கம் திரும்பி ஒரு சபாஷ் தலையாட்டல் வைத்ததைப்
புன்னகையுடன் பார்க்கிறான். அப்படியே திரும்பி பெண்டாட்டியைப் பார்க்கிறான்.
கைகூப்பினாள் யாருக்கோ.
' 'நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். அவசியம் சாப்ட்டுட்டுப் போங்க... ' ' என்கிறாள். இதையேதான்
எல்லாரிடமும் சொல்கிறாள். திரும்பத் திரும்பச் சொல்கிறாள். வாய் வலிக்கவில்லையாடி
?...
மீண்டும் அவளைச் சீண்டவும்
தீண்டவும் தவிக்கிறது விரல்.
ஜன அலை சற்று அடங்கவும் கால்
வலியை உணர்கிறார்கள். அவளே சற்று மெல்ல அவனிடம் ரகசியம் போல ' 'சித்த உக்காரலாமா ?
' ' என்கிறாள். ' 'உட்காரேன்... ' ' - ' 'ஐய நீங்க நின்னுண்டிருக்கச்ச நான் உக்காந்தா
அது அவ்ள இதுவா இராது... ' ' - ' 'எதுவா இராது... ? ' ' என அவன் மேலும் சீண்டவும் பிறர்
அறியாமல் அவளே அவனைக் கிள்ளினாள்.
பின்னால் மீனாட்சிக்குச்
சிரிப்புச் சிறகு முளைக்கிறது...
' 'பசிக்கிறதா ? ' ' என வாஞ்சையாய்க்
கேட்கிறான். இல்லையெனத் தலையாட்டினாள். ' 'யார் அது நாயனம் வாசிக்கறது... ' ' என விசாரித்தான்.
' 'ஏன் ? ' ' என்கிறாள் எதிர்பாராதவளாய்.
' 'அப்பாவுக்குத் தெரிஞ்சவர்... அவங்க தாத்தா அந்தக் காலத்துல கொடி நாட்டிய வித்வான்.
அவரும் எங்க தாத்தாவும் ரொம்ப நெருக்கமான தோஸ்த் அந்தக் காலத்துல... இப்ப ரெண்டு பேருமே
டிக்கெட் எடுத்தாச்சி. ' '
' 'மேலுலகத்தில் கச்சேரி
நடக்கிறதோ என்னமோ ? பரம்பரை ரத்தம்லியா ? வாசிப்புல தெரியறது... ' ' என்று பேசிக் கொண்டிருக்கிறபோது
மாமனார் வந்தார். ' 'ஒரு காஃபி கீஃபி எதும்... ? ஸ்ரம பரிகாரமாயிட்டு... ' ' என்கிறார்.
' 'ஐய வேணாம். நாயனம் - ஜமாய்க்கிறானே... ' ' என்று பாராட்டினான் மனசார.
' 'அவனாண்டையே சொல்லுங்கோ
சந்தோஷப்படுவன்... ' ' என்றவர் ' 'பிச்சுமணி ?... ' ' என்று அவனையே கூப்பிட்டு விட்டார்.
மரியாதை நிமித்தம் எழுந்துகொண்டு
அவனிடம் கை கொடுத்தான் கிரிதரன். ' 'பிச்சு உதறிட்டிங்க பிச்சுமணி... அந்த மோகனம்.
காதுலயே ரீங்காரம் செய்யறது... ' '
' 'ரொம்ப சந்தோஷம் ' ' என
வெற்றிலைப் பற்களைக் காட்டி பிச்சுமணி சிரிக்கிறான். ' 'தாத்தா சொல்லீர்க்கார் - கச்சேரின்னு
வந்தா வாசிடா. கல்யாணம் அது இதுன்னு சபை தெரியாதவா கிட்ட வாசிக்கப்டாதுன்னு அவர் கட்டளை.
நம்ம வைத்தி சார் வீட்டுக் கல்யாணம்னு ஏத்துக் கிட்டேன்... அவருக்கேத்த மாப்ளை நீங்க.
ரொம்ப சந்தோஷம் ' ' என்றபடியே அவனுக்கும் மோகனாவுக்குமாய்க் கைகூப்பினான் பிச்சுமணி.
''சாப்ட்டுட்டுப் போங்க
'' என்கிறாள் மோகனா.
----
mob 91 97899
87842
Comments
Post a Comment