கி ரு ட் டி ன ம் மா
எஸ். சங்கரநாராயணன்
கிருட்டினம்மாவை மறக்க முடியுமா?
எங்கள் வீட்டில் பத்துபாத்திரம் தேய்க்க என்று வந்து போனாள் கிருட்டினம்மா. ஒருநேரம் சும்மாவிருக்க முடியாது அவளால். சதா எதாவது செய்துகொண்டிருக்கப் பிரியம் கொண்டவள்.
என் தாய்க்கு அந்த விவரம் தெரியும். அவள் தினசரி வேலைக்கு என்று வருகிறது அந்தக் காலை ஆறரை மணி. சற்று வேகவேகமான நடை. அந்த ஆறரை மணிக்கு எதற்கு இந்த வேகம்? அவள் நடையே அப்படி. குணமே அப்படி, என்று பிறகு தெரிந்து கொண்டோம்.
அவள் மனசில் இயங்கிக் கொண்டிருந்தது கடிகாரம். அவள் வரும் நேரம் அம்மா அறிவாள். அவளுக்கு ஒத்தாசையாக பத்துபாத்திரங்களை முற்றத்தில் கொண்டு போட்டிருக்கலாம் அம்மா. செய்திருக்க மாட்டாள்.
கிருட்டினம்மா வந்து நிற்பாள். ''இன்னும் பாத்திரம் போடலியாம்மா.... எனக்கு நேராவுதும்மா'' என்பாள் பொறுமையில்லாமல். ''கொஞ்சம் இரு கிருட்டினம்மா. கைவேலையா இருக்கேன்ல...''
கிருட்டினம்மா காத்திருக்க மாட்டாள். அவளே பாத்திரங்களை எடுத்து முற்றத்தில் போட்டுக் கொண்டு விறுவிறுவென்று நிமிடங்களில் தேய்த்துக் கவிழ்த்தி விடுவாள். தோசைக்கல்லை குப்புறப் போட்டுக் கொண்டு செங்கல்பொடி தூவி தண்ணீர் விட்டுக் கொண்டு காலால் சுழற்றி அழுத்தித் தேய்த்து கரிபோக்குவாள். அம்மாவால் நினைத்தே பார்க்க முடியாத சுத்தம் அது.
வந்த ஜரூரில் வேலையை முடித்துக் கிளம்புவது அவள் சாமர்த்தியம். ஆனால் சம்பளம் கொடுக்கிற வேலைக்காரியை அத்தனை சீக்கிரம் அனுப்பி விடுகிறதா?
காபி தராமல் அம்மா தாமதப்படுத்துவாள் திரும்பவும். ''காபி வேணாம்மா. பரவால்ல நான் கிளம்பறேன்'' என்று கிளம்பி விடுவாள் அவள் ''இரு இரு'' என்று காக்க வைத்தால் கிருட்டினம்மா சரி, என்று ஒருபக்கமாய் மூலைப்பையில் இருக்கிற நொய்யரிசியை தானே எடுத்து வைத்துக்கொண்டு அரிசி வேறு குருணை வேறெனப் புடைத்துத் தருவாள். அதற்குத் தனிக்காசு எனத் தர வேண்டியதில்லை! அம்மாவின் கணக்குகளே தனி.
சின்னச் சின்னதாய் அவசரச் செலவுக்கு என்று வாங்குவாளே தவிர சம்பளம் என்கிற நூத்தம்பது ரூபாய் அவள் பெற்றுக் கொள்ள மாட்டாள். பின்னால் பெரியசெலவுன்னு வாங்கிக்கறேம்மா. உங்ககிட்டியே இருக்கட்டும்'' என்று கொடுத்து வைத்திருந்தாள். அதேபோலவே இன்னும் ஓரிரு வீடுகளிலும் சேர்த்துக் கொண்டிருந்தாள் பணம், என எங்களுக்குத் தெரியும்.
அவள் கணவன் குடிகாரன். குடிக்காமல் அவனால் நிற்கவே முடியாது. குடித்தாலும் நிற்க முடியாது. அது வேறு விஷயம். சதா பணம் பணம் என நச்சரித்துக் கொண்டிருந்தான் அவன்.
எங்கள் வீட்டு வாசல் தொழுவத்தின் பக்கமாய் நின்று பீடி குடித்தபடி பெரிய பெரிய மூச்சுகளாய் வெளியேற்றியபடி கிருட்டினம்மாவுக்குக் காத்திருப்பான். ஒருகாலத்தில் பால்மாடு கட்டியிருந்த தொழுவம் அது. பால்மாடு பராமரிப்பது போல இம்சை வேறில்லை. நாங்கள் முயன்று, தோற்று, விட்டுவிட்டோம்.
அவள் வெளியே வந்த நிமிடத்தில் அவளது இடுப்புமுடியில் கைவைத்துத் துட்டெடுக்க முயல்வான் தம்பிதுரை.
''காசு இல்லைய்யா'' என்று வெட்கம் கலந்த சிரிப்புடன் அவன் கையை உதறுவாள் கிருட்டினம்மா. அதில் அவள்தட்டி அவன் விழுந்துவிடாத கவனம் இருக்கும். அவளால் புருஷனை ஏன் கோபித்துக் கொள்ள முடியவில்லை?
கிருட்டினம்மாவுக்குக் கோபமே வராது. அது அவளது சுபாவம்.
பாவம் கிருட்டினம்மாவுக்குக் குழந்தைகள் இல்லை. குழந்தைகள் என்றால் அவளுக்கு அலாதிப் பிரியம். அக்கா குழந்தை ஊரில் இருந்து வந்தபோது அவள்தான் அதைத் தன் முழங்காலில் குப்புறப்போட்டு சுடச்சுட வெந்நீர் விட்டுக் குளிப்பாட்டியது. அம்மாவின் வேலைகள் அவை அல்லவா?
கிருட்டினம்மா எங்கள் வீட்டில் அம்மாவின் பாதிவேலைகளைத் தானே விரும்பிச் செய்தாள் என்று தோன்றுகிறது. அவள் வேலையைவிட்டு நின்றபோது அம்மா திகைத்துப் போனாள்...
குடித்துக் குடித்தே தம்பிதுரை குடல் வெந்து செத்துப்போனான். அப்பா போயிருந்தார் சாவுக்கு. உறவு சனம் என்று யாருமே இல்லாத கிருட்டினம்மா. ஊரொதுக்குப் புறமாய்ச் சிறு சந்து. அந்தச் சந்துக்குப் பெயர் கூட இல்லை.
வீட்டுக்குள் இடம் இல்லாமல் தம்பிதுரையை வாசலில் கட்டிலில் போட்டு மாலை சார்த்தி வைத்திருந்தது. அருகில் கிருட்டினம்மா அழுதபடி. இருக்கும்வரை ஓயாத இம்சை தந்த கணவன். என்றாலும் அவள் அவனை வெறுக்கவேயில்லை. அவள் அழுகை கல்லையும் கரைப்பதாய் இருந்தது.
''என்னிய இப்பிடித் தனியா விட்டுட்டுப் போயிட்டியேய்யா...'' என்று கணவனைப் பார்த்துப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள் கிருட்டினம்மா.
ஆனால் அந்தத் திகைப்பில் இருந்து அவள் எழுந்து கொண்ட வேகம்... அதுதான் கிருட்டினம்மா. குருவிபோல் சிறு சிறு பணம் சேர்த்து வைத்திருந்த கிருட்டினம்மா ஒரு பால்மாடு வாங்கினாள். கனத்த மடு சுமந்த எருமை. மாடு கட்ட இடமில்லாத நெருக்கடியான முட்டுச் சந்து அது.
பால்மாடு பராமரிப்பு அபாரமாய் வேலை வாங்கும். வேளை பார்த்துக் கூளம் பிரித்துப் போட வேண்டும். வீட்டின் இடத்திலேயே தொழுவம் அமைத்துக் கொள்ள வேண்டும். மாட்டின் சாணம் அள்ளி சிறுநீரைத் தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்ய வேண்டும். கூளம் நனைந்து விட்டால் மாடு தின்னாது. மாட்டை அடிக்கடி குளிப்பாட்டி உண்ணி கிண்ணி கழுத்தில் சேராமல் பார்த்துக் கொள்கிற பிரத்யேக கவனம் வேண்டும். பால்மடுவைக் கழுவி புண்ணாகாமல் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளுதல் பெரும் பாடு.
கிருட்டினம்மாவிடம் இருந்தது கடும் உழைப்பு. பொறுமை. தவிரவும் அந்த மாடுகளை அவள் எத்தனை நேசித்தாள். பால்மாடுகள் தாய்மையின் பேரம்சம் அல்லவா? மாட்டுக்குக் காலந் தவறாமல் சினையாகும் வழிமுறைகளைக் கைக் கொண்டாள் கிருட்டினம்மா.
தொழுவம் பெரிசாகி விட்டது இப்போது. முன் வளாகமே பெரிய தொழுவம். அந்தச் சந்தே விசாலமாகி விட்டது. இரவுகளில்கூட விளக்கெரியும் தொழுவம். ஐந்தாறு மாடுகள். அந்தச் சந்தே பெரிதாகி விட்டது.
அக்கிரகாரமே அவளைப் பாலுக்கு நம்பியது. அந்தத் தெருவை ஜனங்கள் கிருட்டினம்மா சந்து என்றுதான் அடையாளங் காட்டுகிறார்கள். நாங்கள் இன்னும் அதே வீட்டில் இருக்கிறோம். வேலைக்காரிதான் சரிவர அமையவேயில்லை.
Comments
Post a Comment