மூலம் ஜெர்மானிய மொழி.
ஆசிரியர் 1972ம் ஆண்டின் நோபல் பரிசு பெற்றவர். இதன் ஆங்கில மொழியாக்கம் லைலா வென்னவிட்ஸ்
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
ஹென்ரிக் போல் (ஜெர்மெனி)
சார் என்ன வேலை பார்க்கறீங்க,
என்று யாராவது என்னிடம் கேட்கும்போது பதில்சொல்ல முகம் சிவந்து தடுமாறுகிறேன். பொதுவாக
நான் அமுக்குணி. முகக் குறிப்புக் காட்டாதவன், இடிச்ச புளி. அப்படித்தான் என்னை பிறர்
அறிவார்கள். பார்க்கிற வேலையைச் சொல்வதற்கே கொடுப்பினை வேணும் போல. ஒராள் செங்கல்சூளைக்காரன்
என்று சொன்னால், எதிராளி தலையாட்டித் தாண்டிப் போவான். அவர்கள் மேல் பொறாமை உண்டு எனக்கு.
முடிதிருத்துபவர்களானாலும், நூலகரானாலும், எழுத்தாளரே யானலும் அவர்கள் தங்கள் இருப்பை
அடையாளங் காட்டுவது சுலபமாகவே இருக்கிறது. இந்தப் பணிகளுக்கு இடம் சுட்டிப் பொருள்
விளக்கம் தர வேண்டியது இல்லை.
நான் யார்? நான் ஒரு
சிரிப்பாளி. அப்டின்னா, என எதிராளி கேட்க நான் இதை விளக்க வேண்டிய தேவை இருக்கிறது.
என் வேலை புரிந்தவனிடம் கூட அடுத்த கேள்வி இருக்கவே செய்யும். ''முழு நேரமா இந்த சம்பாத்தியத்தில்
தான் வண்டி ஓடுதாக்கும்?'' நிஜத்தை ஒத்துக்கொள்ளணுமானால், ''ஆமாம்.'' சிரிக்கிறது தான்
என் உத்தியோகமே. நல்ல உத்தியோகம் தான் அது. ஏன் என்றால், வியாபாரத்தனமாய்ச் சொல்ல வேணுமானால்,
நாட்டில் சிரிப்பு தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிற ஒன்று தான். அவனவன் சிரிக்க யோசிக்கிறான்.
நான் யோசிப்பது இல்லை. நான் ஒரு நல்ல சிரிப்பாளி. வாய்விட்டுச் சிரிக்கிறேன். சிரிப்பதில்
அனுபவம் மிக்கவன் நான். என்னைப் போல சிறப்பாகச் சிரிப்பவர் எவரும் இல்லை. சிரிப்பின்
நுணுக்க வீர்ய விஷயங்களை என்னைப்போ.ல அறிந்தவர் எவரும் இல்லை.
மேலும் விளக்கங்கள்
கேட்குமுன். சுருக்கமாய் நான் இதை விவரிப்பேன். ரொம்ப காலமாக நான் என்னை ஒரு நடிகன்
என்று கூறிக்கொண்டேன். ஆனால் பலகுரலில் பேசுவதோ, மனப்பாட வசனங்களை மேடையில் முழக்குவதோ
எனக்கு வராது. ஆக நான் நடிகன் என்று சொல்வது அத்தனை நியாயம் அல்ல, என்று பட்டது எனக்கு.
சத்தியம் எனக்குப் பிடிக்கும். நான ¢யார்? சத்தியத்தில்
நான், ஆமாம், ஒரு சிரிப்பாளி. நான் கோமாளி அல்ல, நகைச்சுவை நடிகனும் அல்ல. மக்களை உற்சாகப்படுத்துகிற
வேலை அல்ல நான் செய்வது. நான் சிரிப்பை முன்வைக்கிற ஆசாமி. நான் சிரித்துக் காட்டுகிறேன்
அவர்களுக்கு.
ஒரு ரோமானிய சக்கரவர்த்தியாக
நான் சிரிப்பேன். கிறுகிறுத்த பள்ளிப்பையனைப்போலச் சிரிப்பேன். பதினேழாம் நூற்றாண்டின்
கேளிக்கைச் சிரிப்பைக்கூட சரளமான இயல்புடன் நான் வழங்குவேன். ஒரு நூற்றாண்டு தாண்டி
பதினெட்டாம் நூற்றாண்டுச் சிரிப்பும் சிரிக்க அறிந்தவன். சமூகத்தின் எல்லா தர மக்களைப்
போலவும், எந்தவயசுக் காரனைப் போலவும் என்னால் சிரிக்க முடியும். நானே தன்முனைப்பில்
கற்றுக்கொண்ட என் திறமை அது. செருப்புத் தைக்கிறவன் கைத்தொழிலாய்க் கற்றுக் கொள்ளவில்லையா,
அதைப்போல. நான் தானாகவே முயன்று இதில் தேறினேன்.
என் நெஞ்சத்தில் அமெரிக்கச்
சிரிப்பு, ஆப்பிரிக்கச் சிரிப்பு என்று எல்லாம் கிடக்கிறது. வெள்ளைச் சிரிப்பு. சிவப்புச்
சிரிப்பு. மஞ்சள் சிரிப்பு... எல்லாவகையும் என்னிடத்தில் உண்டு. கேட்பவரின் தேவைக்கு,
ஒரு கூலி வாங்கிக் கொண்டு அதை அந்தக்கணம் வெளியிட்டு விடுவேன்.
எனக்கு என்று இப்போது
ஒரு தவிர்க்க முடியாத மவுசு கிடைத்து விட்டது. பின்னணிச் சிரிப்புக்கு என்று தொலைக்காட்சி
இயக்குநர்கள் என்னை மரியாதையுடன் கூப்பிடுகிறார்கள். அழுகை பீறிடும் சிரிப்பு, மெல்லிய
சிரிப்பு, குபீர் சிரிப்பு. பஸ் கண்டக்டரின் சிரப்பு வேறு. அண்ணாச்சி கடைப் பையன் சிரிப்பு
வேறு. காலையில் சிரிக்கும் குரல். மாலைச் சிரிப்பு. ராத்திரியில் கேட்கும் அமுக்கமான
சிரிப்பு. வைகறைச் சிரிப்பின் இதம். சுருங்கச் சொல்கிறேன். எப்படியெல்லாம் தேவையோ,
எவ்வளவெல்லாம் தேவையோ அப்படி அந்த வகைச் சிரிப்பை நான் வழங்குகிறேன். சிரிப்பு வள்ளல்.
சொல்லாமலே தெரியும்
உங்களுக்கு. இது ஒரு அலுப்பான வேலை. இதில் நான் வளர்த்துக்கொண்ட என் திறமை, நான் சிரிக்கையில்,
கூட இருக்கிற ஆளுக்கும் அந்தச் சிரிப்பு தொத்திக்கொள்ளும்.
ஆக ஒரு மூன்றாந் தர நான்காம் தர நகைச்சுவை நடிகனுக்கு நான் ஆபத்பாந்தன். ஒரு நல்ல பன்ச்
வசனம் பேசுகையில் ரசிகர்கள் சிரித்துக் தொலைக்காமல் விட்டுவிடுவார்களோ, அந்த நகைச்சுவை
எடுபடாமல் போய்விடுமோ என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது. பெரும்பாலும் அப்படி நடந்தும்
இருக்கிறது. ஜோக் மேல ஜோக் அடித்து எதிரே சிரிப்பே வராத செவிட்டு மூஞ்சிகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
ஆக இரவு விடுதிகளில் சில சமயம் கூட்டத்தின் ஊடே என்னை அமர்த்தி சிரிக்கச் சொன்னார்கள்.
கூலிக்கு மாரடித்தல் போல. நிகழ்ச்சி தொய்வுதட்டும் தோறும் நான் காட்சியை மெருகேற்றும்
படி ஹா ஹாவென சிலாகித்துச் சிரிப்பேன். மற்றவர்களையும் அது பிடித்தாட்டி, அவர்களையும்
சிரிக்க வைக்கும் சிரிப்பு அது. கிச்சுகிச்சு மூட்டுகிற பாணி. ஆனால் நேரம் கணித்து
சரியான அளவில் சிரிக்க வேண்டும். மனப்பூர்வமான பாவனை காட்டும் அந்தச் சிரிப்பு... கொஞ்சம்
முன்னாடியோ சற்று தாமதித்தோ அமைந்துவிடக் கூடாது. சரியான புள்ளியில் அது நிகழாமல் போனால்
ரசாபாசமாகிவிடும். முன்னே தீர்மானித்த அந்த ஷணத்தில் நான் அடக்க மாட்டாமல் ஹுங்கரிப்பேன்.
என் கூடவே மொத்தக் கும்பலுமே சிரித்துக் குலுங்கும். ஆ அந்த ஜோக்குக்கு விமோசனம்!
ஆனால் வெளிவருகையில்,
எல்லாரும் உற்சாகமாய் வந்தாலும், நான் காற்றுப்போய் வருவேன். மேல்கோட்டை மாட்டிக்கொள்கையில்
அப்படா, முடிந்தது என்று இருந்தது எனக்கு. வீடு திரும்பினால் தந்திகள் காத்திருந்தன.
''உங்கள் சிரிப்பு உடனே தேவை. செவ்வாயன்று ஒலிப்பதிவு செய்கிறோம்.'' அடுத்த சிலமணி
நேரத்தில் நீராவி கொதிக்கிற துரித ரயில் வெக்கையில் விதியே என்று உட்கார்ந்திருப்பேன்.
வேலையில் இருந்து
விடுதலைப்பட்ட சமயங்களிலும், ஓய்வு நேரங்களிலும் நான் சிரிக்கிறதே, சிரிக்க முயற்சிக்கிறதே
இல்லை, என்று தனியே சொல்ல வேண்டியது இல்லை. மேய்ச்சி பட்டியில் அடைத்து கொம்பை வீசிவிட்டால்
மாடுகளை இடையன் மறந்து விடுகிறான். செங்கல்வராயன் சூளையை மறந்து விடுகிறான். ஆசாரிகளுக்கு
எப்பவுந் தான் கீல் சரியில்லாத கதவுகளும், இழுக்க வராத மேசை டிராயர்களும் காத்திருக்கின்றன.
பேக்கரிக்காரர்களைக் கேள், கேக்குகள் அல்ல, புளித்த ஊறுகாய் சுவையை விரும்புவார்கள்.
கசாப்புக்காரன், பாதாமிட்ட முட்டைத் தொக்கு போல ருசி உலகத்தில் இல்லை என்பான். ரொட்டிக்கடைக்காரன்
ரொட்டிக்கு ஜாம் அல்ல காய்கனி சேர்த்துக் கொள்கிறான். எருதுபொருதும் வீரர்கள் பிரியமாய்ப்
புறாக்களை வளர்க்கிறார்கள். பெரிய மல்லனாக இருக்கிறவன் கூட, தம் குழந்தைகள் சில்லுமூக்கு
உடைத்துக் கொள்கிறபோது பதறிப் போகிறார்கள்.
எனக்கு இதெல்லாம்
யதார்த்தமாகவே படுகிறது. நானும் அப்படித்தான். நம் எல்லாருக்குமே வேலை வேறு. வாழ்க்கை
வேறு தானே. வேலை நேரம் தவிர நான் சிரிப்பது கிடையாது. நான் ரொம்ப ஒதுங்கி வாழ்கிற பிரஜை.
மக்கள் என்னை ஒரு அவநம்பிக்கை வாதி என நினைக்கிறார்கள். அது சரிதானோ என்னவோ.
கல்யாணம் முடித்த
எங்கள் துவக்க காலங்களில் என் மனைவி அடிக்கடி சொல்வாள். ''சிரிங்கப்பா! சிரிச்சால்
முத்து ஒண்ணும் உதிர்ந்திராது!'' பாவம் இன்னிவரை அவள் வேண்டுகோளை நான் நிறைவேற்ற முடியவே
இல்லை. என் முகத் தசை இறுக்கங்களைத் தளர்த்திக் கொள்கிறபோது நான் ஆசுவாசமாய் உணர்கிறேன்.
என் தனிமையான பேரமைதியில் சிரிப்பு என்பது சரசரப்பாய் காது சிவக்க உரசுகிறது. சொல்லப்போனால்,
மத்தவர்கள் சிரித்தால் கூட எனக்கு அலர்ஜியாய்த் தான் இருக்கிறது. எனக்கு உடனே என் உத்தியோக
ஞாபகங்கள் ஊடறுத்து விடுகின்றன. நான் காட்டாத மூட்டாத சிரிப்பு அது.
ஆகவே என் கல்யாணம்
நிசப்தமான அமைதியுடன் நடந்தேறியது. இப்போது என் மனைவிக்கே சிரிப்பது மறந்து போய்விட்டது.
எப்பவாவது அதிகபட்சமாய் என்னைப் பார்த்து அவள் புன்னகைப்பாள். அதைப் பார்த்தபடி நானும்
புன்னகைத்து வைப்பேன். நாங்கள் சன்னக் குரலிலேயே உரையாடிக் கொள்வோம். ராத்திரி விடுதிகளின்
மகா இரைச்சல்கள் எனக்கு வெறுப்பூட்டுகின்றன. ஒலிப்பதிவுக் கூடங்களிலேயே கூட சில சமயம்
பேரோசைக்குத் தப்பிக்க முடியாமல் போகிறது. என்னை சரியாகத் தெரியாதவர்கள், நான் கல்லுளிமங்கன்,
பிடிச்சிவெச்ச பிளளையார் என்று கருதக் கூடும். அது சரியாய்க் கூட இருக்கலாம். நான்
பேசுவதே கிடையாது. சிரிக்க மாத்திரமே நான் வாயைத் திறக்கிறேன்.
வாழ்க்கையைச் சலனமில்லாமலேயே
நான் கடந்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது சிறு புன்னகை காட்டுகிறேன். அவ்வளவே. எப்பவாவது
சிரித்திருக்கிறேனா என்று நான் பலமுறை யோசித்துத் தேடிப் பார்த்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பம்
கூட என் நினைவில் இல்லை. என் அண்ணன் அக்காள்கள், எல்லாருமே என்னை உம்மணா மூஞ்சி என்றே
அறிந்திருக்கிறார்கள்.
ம். எத்தனையோ சாயல்களில்
நான் சிரித்துக் காட்டுவேன். என் சிரிப்பு எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
Comments
Post a Comment