Tuesday, November 11, 2014

வ ம் ச ம்

எஸ். சங்கரநாராயணன்

தேவகி அக்காவைப் பொண்ணு பார்க்க வந்தார்கள். சிவப்பான உயரமான அக்கா. பரபரப்புடன் ஆனால் மறுக்காமல் கண்ணாடி பார்த்துவிட்டு அலுவலகம் ஓடுவாள். புருவத்தில் மைதீட்டியபடியே ‘குட்டீ?’ என்று கூப்பிடுவாள். டிபன் பாக்ஸை ரிலேரேஸ் போல வாங்கிக் கொண்டு ஓடுவாள்.

மாப்பிள்ளை வேற்றூர். அக்காவுக்குக் கல்யாணத்துக்குப் பிறகு மாற்றல் கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள். குட்டிக்கு அவளைப் பிரிவது வருத்தம்தான். சில சமயம் நல்ல மூடில் இருந்தால் இவளைக் கூப்பிட்டுப் பின்னிக்கூட விடுவாள்.

‘கோண வகிடா? ஐய வேணாங்க்கா.’

‘அடச்சீ பட்டிக்காடு! உக்காரு சொல்றேன்...’

ஒருமுறை ஊரில் போய்க் கோண வகிடெடுத்துப் பின்னிக் கொண்டாள் குட்டி. தங்கச்சிக்கு ஒரே ஆச்சரியம். பட்டணத்துப் பெண்ணாட்டமே இருந்தாள் குட்டி. ‘எக்காவ் எனக்கும்...’ என்று கோகிலா வந்து நின்றது. அழுக்குச் சட்டை, மேல் பட்டனில்லை. ‘போ மொதல்ல குளிச்சிட்டு வா,’ என்று குட்டி விரட்டினாள்.

‘ஏய் குட்டி இங்க வா,’ என்று தேவகி அக்கா கூப்பிட்டாள்.

‘என்னக்கா?’

‘இந்தப் பூவத் தலைல வை பாக்கலாம்...’

‘நேரமாச்சி. இன்னுமா ரெடியாகல?’ என்று வாசலில் இருந்து தாத்தா குரல் கொடுத்தார். ‘ஆயாச்சி - தோ ஒரு நிமிஷம்’ என்று தேவகி வாயில் பின்னைக் கடித்தபடி கத்தினாள்.

‘கொசுவம் சரியா இருக்கா பாரு,’ என்று அம்மா கேட்டாள். குட்டி அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து ஒழுங்குபடுத்தினாள்.

‘எத்தனை மணிக்கு வராங்கம்மா?’

‘ஆச்சி. இன்னும் காலவர்ல வந்துருவாங்க. இவா அப்பா எங்கே?...’

‘கடை வரைக்கும் அனுப்பினேம்மா’ என்றாள் தேவகி.

‘பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் ரெடியா?’

‘ரெடிம்மா. கவலையே படாதீங்க,’ என்றாள் குட்டி.

மாப்பிள்ளை வரவுக்காய் அவர்கள் காத்திருந்தார்கள். தாத்தாவும் அப்பாவும் வாசலில், எதிர்கொண்டு வரவேற்கும் தோரணையில். அம்மா போய் டேப் ரிகார்டரில் நாதசுரம் வைத்தாள். தேவகி இருப்புக் கொள்ளாமல் உள்ளே உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் குட்டி புன்சிரிப்பு சிரித்தாள்.

‘நீயும் வேற டிரஸ் மாத்திக்கோ...’

‘பரவால்லக்கா. கொஞ்சங் கழிச்சி...’

‘ஏன்?’

‘உள்ள வேலையிருக்கு... பஜ்ஜிக்கு எண்ணெய்ச் சட்டி வைக்கணும்...’

குட்டி போய் பாலை அணைத்தாள். டிகாக்ஷன் ரெடி. எல்லாரும் வந்தவுடன் கலக்க வேண்டும். அம்மாவுடன் ஒரு சங்கடம். அவள் எப்போது உள்ளே வந்தாலும் டப்பாக்களை எடுத்தால் உயரத்தில் வைத்து விடுவாள். ஸ்டூல் இல்லாமல் எடுக்க முடிகிறதில்லை... குட்டி சர்க்கரை டப்பாவை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டாள்.

‘அக்கா ஒரு காபீ?’

‘கொண்டா.’

‘தோ’ என்று நீட்டினாள் குட்டி. ‘பாத்து மேல கொட்டிக்கிட்டா கறை போகாது. புடவையே நாசமாப் போயிடும்.’

ஆவி மணக்கும் கேசரி. நெய்யில் வறுபட்ட முந்திரிப் பருப்புகள் மினுங்கின. எடுத்து வைத்துவிட்டு எண்ணெய்ச் சட்டியை மாற்றினாள். மாவு கரைத்துக் கொண்டு வாழைக்காய்ச் சீவல்களைத் தோய்த்து எண்ணெயில் போட்டாள். ‘ஸ் ஸ்’ஸென்று தம் பிடித்து எக்சர்சைஸ் போல மார்பை விரித்தது பஜ்ஜி.

மாடிப்படிகளில் தடதடவென்று சத்தம் கேட்டது. நடராஜன் இறங்கி வந்தான். ‘மெதுவா, மெதுவாடா,’ என்றாள் அம்மா. நடராஜன் பஜ்ஜி வாசனையை இழுத்தபடி ‘ஹ’ என்றான். நேரே சமையல் கட்டுக்குள் வந்தான்.

‘சூடு! பாத்து...’

‘எந் துணியெல்லாம் தோச்சிட்டியாடி?’ என்றபடி ஒரு பஜ்ஜியை விண்டபோது ஆவி பறந்தது.

‘ஆச்சி. காயப் போடணும்.’

‘எப்ப?’

அவள் திரும்பினாள். ‘எட்டமாட்டேங்குது... மாடில போயிப் போடணும்,’ என்றாள்.

‘அதா எப்ப? அதுக்கு நாள் நட்சத்திரம் பாக்கப் போறியா?’

‘நடராஜ், இங்க வா. அவா வர்றச்ச நீயும் வாசல்ல நிக்கணும்’

‘போம்மா. இந்தப் பொண்ணு பாக்கறது, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடறது, எல்லாம் சுத்த காட்டுமிராண்டித் தனம்...’

‘ஷ். சத்தமாப் பேசாதே. அவா வர்ற நேரம்... குட்டி?’

‘என்னம்மா?’ என்று தலையை நீட்டினாள்.

‘எல்லாம் ரெடியா?’

‘ம்.’

‘என்ன நீ இன்னும் டிரஸ் மாத்திக்கலியா?’

அடுப்பை அணைத்துவிட்டு ‘இதோ’ என்று குட்டி ஓடினாள். ஒரு சின்னாளப்பட்டுப் பாவாடையும் அதற்கு மேட்சான மேல்சட்டையும் போன தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்தார்கள். அவளுக்குப் பிடித்த உடைகள் அவை. அவற்றைப் போடும் போதெல்லாம் அவளுக்கு வானில் பறக்கிறாற்போல் தோன்றும்.

‘ஏய் நா ஒரே ஒரு தடவை போட்டுப்...’

‘முடியாது’ என்றாள் குட்டி தங்கச்சியிடம்.

‘ஏன்?’ என்று கோகிலா கேட்டது. கேட்குமுன் அழுகை வந்தது அதற்கு, ‘இந்த தீபாவளிக்கு எனக்கு எதுவுமே எடுக்கல...’

ஒவ்வொரு முறையும் அம்மா வந்தால் அவளது ஒரு சில உடைகளை ஊருக்குக் கொண்டு போய் விடுகிறாள். மறுத்துச் சொல்ல முடிகிறதில்லை. அழுகை முட்ட வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிகிறது.

‘தேவகி அக்கா, நீங்க தப்பா நெனச்சிக்காட்டி...’

‘என்னடி சொல்லு.’

‘இந்த டிரஸ்ஸ ஓங்க பீரோல வெச்சிக்கங்க. நா அப்றமா வாங்கிக்கறேன்.

‘ஏன் ஒம் பெட்டில எடம் இல்லியா?’

‘இல்ல அம்மா வராங்க இன்னிக்கு...’

அவர்கள் நாலுபேர் வந்தார்கள். வாடகைக் காரில் பெட்ரோல் மணக்க இறங்கினார்கள். வெள்ளை ஜிப்பா போட்ட மாப்பிள்ளை மோதிரம் தெரிய கைகூப்பிச் சிரித்தான். குட்டி அவனைப் பார்த்தாள். பின் விறுவிறுவென்று உள்ளேபோய் தேவகியிடம் சொன்னாள்.

‘அக்கா அவங்க வந்தாச்சி,’ என்றாள் பரபரப்புடன்.

‘ம்’ என்றாள் தேவகி. எழுந்துகொண்டு பின் பக்கம் துடைத்துக் கொண்டாள்.

‘ஹலோ ஐம் நடராஜ்.’

‘விவேக்...’

தாத்தா எழுந்து கொண்டபோது எல்லாருமே ஒரே குரலில் நீங்க உக்காருங்கோ,’ என்றார்கள்.

‘தள்ளல!’ என்று தாத்தா சிரித்தார்.

குட்டி அம்மாவைக் கூப்பிட்டு, ‘தாத்தாவுக்கு மாத்திரை குடுக்கணும்மா,’ என்றாள்.

‘எல்லாம் அப்றம் பாத்துக்கலாம்...’

‘இல்லம்மா நேரத்துக்கு’

‘எல்லாம் எனக்குத் தெரியும்,’ என்றபடி அம்மா உள்ரூமில் எட்டிப் பார்த்தாள். ரகசியக் குரலில், ‘ரெடியா?’ என்று அம்மா கேட்டாள்.

‘ம்.’ 
‘கண்ணாடி பாத்தது போதும். வா’

குட்டி அக்காவைப் பார்த்தாள். எவ்வளவு அழகாய் இருக்கிறாள் இவள் என நினைத்துக் கொண்டாள். திரும்பி மாப்பிள்ளையைப் பார்த்தாள்.

‘காப்பி?’

‘இதோ ஆச்சிம்மா...’

‘மசமசன்னு நிக்காதே. சீக்கிரம்!’

நீள ட்ரேயில் குட்டி சாஸர்களை வைத்தாள். மேலே பீங்கான் கிண்ணங்கள். காப்பியைத் துணியால் பிடித்து ஒவ்வொன்றிலும் ஊற்றும்போது வெளியிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. சாப்பிட்டபடியே எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளைக்குப் புரையேறியது. கட்டைவிரலை வாயைப் பார்த்து நீட்டி தண்ணீ என்று ஜாடை செய்தான்.

‘யாரோ நெனைச்சுக்கறா...’

‘பொண்ணுதானோ என்னமோ!’ என்ற போது எல்லாரும் சிரித்தார்கள்.

‘ஏய் குட்டி?’ என்று நடராஜன் எரிச்சலுடன் கத்தினான்.

‘என்னண்ணா?’

‘தண்ணி வெக்கறதில்லியா? ஒண்ணு சொன்னா ஒண்ண விட்டுர்ற?’

‘கொண்டு வரேன்.’

பாடி முடித்து தேவகி விவேக்கைப் பார்த்தாள். அவன் முகம் சலனமில்லாதிருந்தது. ஊகங்களுக்கு இடங்கொடுக்காத முகம்.

‘நீ வேணாப் போயி இவாளுக்குக் காபி...’

‘ம்’ என்று தேவகி எழுந்துகொண்டபோது பரபரப்பில் லேசாய்த் தடுமாறியது. தேவகி எழுந்து உள்ளே போனாள். டிரேயில் காபிக் கோப்பைகள் எடுத்துக் கொண்டு வெளியே வரவும் குட்டி நுழையவும்...

குட்டியின் உடை மீது காப்பி சூடாய் ஊற்றிக் கொண்டு வழிந்தது. குட்டி பதறித் தன் உடைகளைப் பார்த்தாள். காப்பிக் கறை... அவளுக்கு வருத்தமாயிருந்த்து. அவளிடம் இருந்த ஒரே நல்ல உடை. அவளுக்கு வருத்தமாய் இருந்தது.

தேவகி அக்கா திகைத்து நின்றாள். குட்டி எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. முதுகுப் பின்னாலிருந்து அம்மாவின் குரல் கோபத்தில் வெடித்தது.

‘சனியன்னா இது? காப்பியப் பூரா கொட்டீடுத்து பார். ஏண்டி அறிவில்ல ஒனக்கு?’ என்று விறுவிறுவென்று வந்து குட்டி தலையில் குட்டினாள்.

‘பரவால்ல ஐய, கொழந்தையப் போயி...’ என்றார் மாப்பிள்ளையின் அப்பா.

‘கொழந்தையா? வயசு எட்டாவுது. இங்க வந்து ஒரு வருஷமா இப்பிடிதான் வேலை செய்யறா, கொட்டினேன் கவுத்தினேன்னு...’

‘சனியனத் தொரத்தித் தலை முழுகணும்மா,’’ என்றான் நடராஜன்.

‘விடுங்க, கொழந்தையப் போயி...’ என்றான் மாப்பிள்ளை.

‘நீங்க ஒண்ணும் மனசுல இதுவா நெனச்சிக்க வேணாம்...’

‘இல்ல, இல்ல.’

‘ஏன்னா...?’

‘ஏன்னாவுமில்ல ஏயென்னாவுமில்ல. இதெல்லாம் சகஜம், விடுங்கோ,’ என்றாள் பையனின் அம்மா.

‘வெரிகுட். அப்படிதான் இருக்கணும்,’ என்றார் தாத்தா.

குட்டி ஈரத் துணிகளுடன் மாடியேறிப் போனாள்.

‘ரஸ்னா?’

‘ஓ எஸ்! எதுன்னாலும்...’ என்றான் மாப்பிள்ளை தேவகியைப் பார்த்து. அவளுக்கு வெட்கமாய் இருந்தது.

‘அம்மா! ஷ்...’ என்று இரகசியமாய்க் கூப்பிட்டாள் தேவகி.

‘என்ன?’

‘ரஸ்னா எப்பிடிக் கலக்கணும்...?’

‘ஏன் குட்டி இல்லியா?’

‘மாடிக்குப் போனா.’

‘இப்ப எதுக்கு மாடிக்குப் போனா? வரட்டும், அதுக்கு ரொம்பத் திமிராப் போச்சு... நீ இப்படி வா, நா கலக்கறேன்.’

அடுத்த பத்து நிமிஷத்தில் அவர்கள் கிளம்பினார்கள். மாப்பிள்ளை அங்கேயே தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டான். மூணு மாசத்தில் முகூர்த்தங்கூடப் பேசிவிட்டு எல்லாரும் கிளம்பினார்கள். விவேக் ‘வரேன்’ என்றான் தேவகியைப் பார்த்து அவளுக்கு வெட்கமாய் இருந்தது.

நடராஜன் பஸ் ஸ்டண்டு வரை கூடப்போனான்.

அவர்கள் போனதும் அம்மா ‘குட்டி!’ என்று கத்தினாள்.

‘துணி உணத்திண்டிருக்கேம்மா...’

‘எல்லாம் அப்றம் ஒணத்திக்கலாம். நீ வா இப்டி மொதல்ல...’

குட்டி கீழறங்கி வந்தாள்.

ஏண்டி அழுதியா?’ என்றார் தாத்தா.

‘கண்ணுல தூசி விழுந்துவிட்டது தாத்தா...’’

‘இருந்தாலும் நீ எல்லார் மின்னாடியும் இப்டி அவளத் திட்டலாமா?’ என்றார் அப்பா அம்மாவிடம்.

குப்பென்று பொங்கிய அழுகையை உதட்டைக் கடித்து அடக்கி, ‘நா கொட்டலம்மா,’ என்றாள் குட்டி.

‘தெரியும்...’ என்றாள் அம்மா.

குட்டி அவளைப் பார்த்தாள்.

‘கண்ணத் தொடச்சிக்கோ. போ... மீதிக் கேசரியக் கொண்டா, எல்லாரும் சாப்பிடலாம்...’

‘இதோ.’

‘நில்லு குட்டி,’ என்றாள் தேவகி.

‘நல்ல நாளும் அதுவுமா இப்டி அழுதுண்டு நிக்கக் கூடாது... சிரி.’

‘...’

‘ம், சிரி.’

குட்டி புன்னகைத்தாள்.

மீதிக் கேசரியைப் பங்கிட்டுச் சாப்பிட்டார்கள் அம்மாவும் பொண்ணும். ‘பஜ்ஜில கொஞ்சம் உப்பு மட்டோ?’ என்றாள் அம்மா.

‘எல்லாம் சரியாத்தான் இருக்கு,’ என்றாள் தேவகி.

‘ஏன்டி நீ சாப்ட்டியோ?’ என்று அம்மா குட்டியைப் பார்த்துக் கேட்டாள்.

‘பரவால்லம்மா,’ என்று குட்டி புன்னகைத்தாள்.

‘தாத்தா, மாத்திரை...’ என்று குட்டி நீட்டினாள்.

‘பெண்ணே நம்ம வீட்ல சமையலுக்கு அட்சரங் கூடத் தெரியாம வண்டிய ஓட்டிப் பிட்டே. இனி சமையல் கத்துக்கணும்...’

‘போம்மா, நா சமையல்லா பண்ணமாட்டேன்...’

‘அப்ப பூவாக்கு என்ன பண்றது பெண்ணே?’

‘‘யாராவது வேலைக்காரிய அமத்திக்க வேண்டிதான்.’

‘ம்க்கும், நீ நெனச்ச ஒடனே அமஞ்சிருவாளா? சின்ன வயசுப் பொண்ணா, சுறுசுறுப்பா வேலை செய்யற பொண்ணா, திருட்டுப் புத்தி இல்லாத பொண்ணாக் கெடைக்கணும்... கெடைக்குமா?’

‘எந்தங்கச்சி கோகிலா இருக்கா!’ என்றாள் குட்டி எதிர் பார்ப்புடன்.

-


2 comments:

  1. ஏற்கனவே படித்து ரசித்ததுதான் . எனினும் மறுவாசிப்பும் சுவையாகவே உள்ளது .குட்டிக்குப் பிறகு கோகிலா ... அதன் பின் .... இதைத்தான் வாழையடி வாழையாக ... என்று கூறுகிறார்களோ ? - சுப்ரா

    ReplyDelete
    Replies
    1. வம்சம் என்ற தலைப்பே அதற்குத் தானே? இந்தக் கதை பாலு மகேந்திராவுக்காக எழுதியது. தாய் வார இதழில் வெளியானது. இலக்கியச் சிந்தனை சிறந்த மாதக்கதை பரிசு பெற்றது... சமீபத்தில் இதை தெலுங்கில் கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்திருக்கிறார்.

      Delete