உலக இலக்கியம் - உக்ரைன்

ஆயா
சொன்ன
கதைகள்
தானியா மல்யார்சக் (உக்ரேன்)



மூலம் உக்ரேனிய மொழி.
ஆங்கிலத்தில் மைக்கேல் எம். நேதன்


தமிழில் எஸ். சங்கரநாராயணன்


தொண்டை எரிகிறது. பேச முடியவில்லை. எனக்கு பேசவும் எதுவும் இல்லைதான். நிறையவே நான் யோசனை பண்ணுகிறேன், என்றாலும் அவற்றையிட்டு எனக்கு ஏனோ அபிப்ராயங்கள் இல்லை. எனக்கு என்ன நடக்கிறது. என்னைச் சுற்றியுள்ள மத்தவர்களுக்கு என்ன நடக்கிறது, எனக்கு விளங்கவில்லை. என்னைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ம். ஒண்ணு தெரியும். நான் சட்டென்று உணர்ச்சிவசப் பட்டு விடுகிறேன். சட்டுச் சட்டுனு நான் அழுது விடுகிறேன். நீங்க சங்கடப்பட வேண்டாம். இது சாதாரண விஷயந்தான். இதென்ன, இதைவிட விக்கி விக்கியெல்லாம் நான் அழுதிருக்கிறேன். ஒரு சோகக் கதையைக் கேட்டமாத்திரத்தில் என் கண்கள் தன்னைப்போல அழுது பெருக்கி விடுகின்றன. நான் விடிய விடிய அழுதுகொண்டே யிருப்பேன். எனக்கு ஒண்ணு தெரியும். அழ எனக்குப் பிரியம். அழுகை என்னை நிர்மலமாக்குகிறது.

      எனக்கு காதல் கதைகள் அதிகம் பிடிக்கும். உணர்ச்சிகரமான காதல் கதைகள். ரெண்டு பேர் காதல்வசப் படுகிறார்கள். யாராவது அவர்கள் சேர்வதற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள். அந்த இருவரும் முழு ஜீவிதத்தையுமே தனித் தனியே கழிப்பது எனக்கு நன்றாய் இருக்கிறது. தனியாகவே வாழ்ந்து அவர்கள் தனியாகவே செத்தும் போவது உத்தமம். தனியாகவே வாழ்ந்தால் என்ன, அவர்கள் ஒருத்தரை யொருத்தர் நினைத்தபடியே இருக்கிறார்கள். அவனுக்கு வேறு மனைவி. அவளுக்கு வேறு கணவன். என்றாலும் அவர்கள் இருவர் இடையே முகிழ்த்த அந்த மகோன்னதக் காதலை அவர்கள் மறந்தாரில்லை. ஒரு உதாரணத்துக்கு, அவன், காதலி அல்லாத இன்னொருத்தி மடியில் செத்துப் போகிறான்... (அட இவளும் அவனைக் காதலிக்கவே செய்கிறாள், என்றுகூட வைத்துக் கொள்ளலாம்) - அந்தக் காதலி ஜன்னலுக்கு வெளியே நிற்கிறாள். கல்லறைப் பக்கம் நிற்கிறாள். உறவு வட்டம் நட்புக் கூட்டத்தோடு கலந்துகட்டி அல்ல. தனியே ஒரு ஓரமாய் நிற்கிறாள். அவனை ஒரு தரம், கடைசித் தரமாய்ப் பார்க்க என்று நிற்கிறாள். பாருங்க, சொல்லும்போதே எனக்கு அழுகை வந்தாச்சி. ச். இது ஒண்ணில்ல. என்னைத் தடுக்க முயலாதீர்கள்.

      மத்தவரின் காதல் கதைகள் என்னை, என் காதல் கதையை விட பாதிக்கின்றன. நான் இதுவரை யாரையும் ஆழமாக நேசித்ததே இல்லை. ஒருவேளை இனி அப்படி சம்பவிக்கலாம். தெரியாது. ஆனால் எனக்கு என் சொந்தக் கதைகள் அத்தனை இதுவாக ரசிக்கவில்லை. ஏன் அப்படி? தெரியாது. காதல் கதைகளின் சுவாரஸ்யம் எதில் இருக்கிறது. அதைச் சொல்கிற வக்கணையில் அல்லவா இருக்கிறது. சொல்வார் சொல்கிற தினுசில் அதைக் கல்லும் கரைகிறாப்போலச் சொல்லலாம். அல்லது வேறு முறையில் அதைச் சொல்கிறபோது எல்லாரும் ஹெஹ்ஹே என்று சிரிப்பார்கள். கதை என்னவோ ஒரே கதைதான்.

      எங்க ஆயா சொல்கிற கதைகள் எப்பவுமே என்னை அழ வைத்துவிடும். சொல்லியபடியே அவளும் அழுவாள். நாங்கள் இருவரும் சேர்ந்தே அப்போது அழுவோம். ஒரு கதை கேட்டு அழுகிறது எத்தனை சுகமான அனுபவம் என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

      ஆயாவுக்கு கதை சொல்கிற நேக் தெரியும். எல்லாவற்றையும் தானே அனுபவித்து வதைபட்டு அவள் பேசினாள். அவளுக்கு அதையெல்லாம் சொல்லவேண்டுமாய் இருந்தது. அவளின் பாடுகளை அவள் துப்புரவாக நினைவில் வைத்திருந்தாள். எந்த இண்டு இடுக்கும் அவளுக்கு மறக்கவில்லை. அதை அப்படி விலாவாரியாக அவள் சொல்கையில் எனக்கு அழுகை பொங்கிவிடும். ஒருநாள் ஆயா என்னைக் கேட்டாள்.

      ''உனக்கு பிர்ச் கஞ்சி தெரியுமா இவளே?''

      ''ம்ஹும். தெர்ல. என்ன அது?''

      ''அப்ப அந்தக் காலத்தில்... பிர்ச் கொப்புகளால் நாம அடி வாங்கிய சமயம். என்னை பிர்ச் கொப்புனால அப்ப அடிப்பாங்க. அதைத்தான் பிர்ச் கஞ்சின்றா மாதிரி என் மனசில் அப்படியே பதிஞ்சிக்கிட்டேன். அதன் ருசியை என் வாழ்க்கை முழுசுமா மறக்கவே முடியல்ல.''

      ''பிர்ச் கஞ்சி... அந்த ருசி எப்பிடி இருக்கும் ஆயா?''

      ''உப்புக்கரிச்சாப்ல. கடுக்னிருக்கும். ஏன்னா பிர்ச் கொப்பே வாய்ல வெச்சா ஒருமாதிரி துவர்ப்பா இருக்கும்.''

      ஆயா தன் வளர்ப்புத் தாயின் சின்னக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அடுப்படியின் அலமாரிக்கு மேலேயிருந்து அந்தக் குழந்தை பொத்தென விழுந்துவிடடது. பயத்தில் ஆயா காட்டுக்குள் ஓடிப்போனாள். சின்னம்மா அடி பிய்த்தெடுத்துவிடும் என்கிற பயம் அவளுக்கு. ஐயோ அவ அடி ரொம்ப பயங்கரம். வலி தாள முடியாது. குழந்தை கீழ அப்படியே கிடக்க ஆயா வெளியே ஓடிவிட்டாள். கீழே விழுந்ததில் குழந்தை ஒருவேளை செத்திருக்கலாம் என்று பட்டது. ஆனால் இல்ல, குழந்தைக்கு அப்படியெல்லாம் நேரவில்லை. குழந்தைகள் அப்படியெல்லாம் சட்டென்று இறந்துவிடாது. குழந்தைகளுக்கும் குடிகாரர்களுக்கும் நித்ய கண்டம். பூர்ணாயுசு. அவர்களுக்கு வாழ்க்கையின் பிடிப்பு அதிகம். பூனைகளின் சுதாரிப்பு போல அது. ஆயா புதருக்குள்ளேயே மாலை வரை இருந்தாள். வெளியே வரவேயில்லை. அப்பா வீட்டுக்குப் பக்கத்தில் தான் இருந்தது புதர். புதருக்குள் ஒளிந்திருந்தாலும் வீட்டில் என்ன நடக்கிறது என்று அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். சின்னம்மாக்காரிக்கு ஆயா எங்கே ஒளிந்திருக்கிறாள் என்று தெரியும். பொழுது இருட்ட ஆரம்பித்ததும் சின்னம்மா வெளி முற்றத்துக்கு வந்து சத்தமாய்ப் பேசினாள்.

      ''வீட்டுக்கு வாடி. உன்னை அடிக்க மாட்டேன். வா வீட்டுக்கு. எம்மா நேரம் ஆயிட்டது. இன்னிக்குப் பூரா நீ எதும் சாப்பிடல்லியே. வாடி குழந்தே! வந்தியானா ரொம்ப ருசியான பிர்ச் கஞ்சி தருவேன். வா. பயப்படாதே!''

      ஆயா அவளை நம்பிவிட்டாள். அவள் புதருக்குள்ளிருந்து வெளியே சின்னம்மாவிடம் வந்தாள். அவளுக்கு அந்நேரம் அசுரப் பசியாய் இருந்தது. குழந்தைப் பருவத்தில் இருந்தபோதிருந்தே அவள் எப்பவுமே பசியுடன் அலைகிறவளாய் இருந்தாள். பிற்பாடு கிழவியான போதுங்கூட அவளைப் பசி பிடித்தாட்டி வந்தது. அவள் வெளியே வந்து சின்னம்மாவிடம் சொன்னாள்.

      ''கஞ்சி... கஞ்சி எங்க?''

      ''போ. வீட்டுக்குள்ள வெச்சிருக்கேன்.''

      ஆயா உள்ளே போனாள். ஆனால் அதற்குமுன்பே சின்னம்மா அவளுக்காக பிர்ச் கொம்பு ஒடித்து வைத்திருந்தாள். சின்னம்மா ஆயாவைத் தாவிப் பிடித்தாள். சரமாரியாக ஆயாவை அவள் விளாச ஆரம்பித்தாள். காலில் முதுகில், புட்டங்களில் அடி நொறுக்கினாள். முகத்திலும் சரமாரியாய் அடிகள். கத்தினாள்.

      ''ஏட்டி சின்ன மூதேவி. எம் பிள்ளையைக் கொல்லவா பாத்தே? அவளை அலமாரில ஏத்திவிட்டதே சனி விழுந்து சாகட்டும்னு தானேட்டி?''

      ஆயாவின் ஐயா வேலையில் இருந்து திரும்பி வரும்வரை சின்னம்மா அடிகளை நிறுத்தினாளில்லை. ஐயா அவளை சினனம்மா பிடியில் இருந்து இழுத்தார். ஆனால் அப்பவே ஆயாவுக்கு நடக்கவே, பேசவே திராணி போயிருந்தது. அவள் ரத்தமயமாய் இருந்தாள். பிறகு ஐயா சின்னம்மாவை அடிக்க ஆரம்பித்தார். பிர்ச் கொப்பு அல்ல, முஷ்டியால் மோதினார் அவர்.

      சின்னம்மாவுக்கு ஆயாவைப் பிடிக்கவில்லை. குடிக்கிற கூழில் சவுக்காரத்தைக் கலந்து கொடுத்தாள். ஒருதரம் அவள் அந்த பீட்ரூட் சூப்பில் எலி பாஷாணத்தைக் கூட கலந்திருக்கிறாள். சத்தியம். நான் ஒண்ணும் பொய் சொல்லவில்லை. இதெல்லாம் நடக்குமா என்று அப்படிப் பார்க்காதீர்கள். எல்லாமே நிஜம்.

      தன் ஆறாவது வயதில் ஆயா வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். அதனால் அவளை ஒரு பள்ளியில் அங்கேயே தங்கிப் படிக்கிறாப் போல போட்டார்கள். சரியான சாப்பாடு கிடைக்காததால் அந்தப் பள்ளியைவிட்டும் அவள் ஏழாவது வயதில் ஓடிவிட்டாள். அந்த உறைவிடப் பள்ளியில் புதிய கூழ் ஒன்றை அவளே கண்டுபிடித்தாள். ரெண்டு கொடுக்காப்புளிகளைத் தண்ணீரில் கரைத்து குடித்துக்கொண்டாள் ஆயா.

      எட்டு வயசில் அவள் நோவராத் ஓலிம்ஸ் சந்தையில் வாழ்ந்தாள். அப்போது மற்றவர் கழித்துப்போட்ட பிளம் விதையும் தோலுமாய்த் தினறாள். பிறகு ஒரு கூட்டுப் பண்ணையில் ஆடு மாடு மேய்த்தாள். பிறகு ஒரு வருஷம்போல ஒரு தோட்டக்காரனுடன் வேலை. வருஷம் முடிந்ததும் அவளுக்கு குளிர்காலத்தில் உடுத்திக்கொள்ள கம்பளிகள் கிடைக்கும். அதைத் தண்டி கூட ஒரு ரெண்டு வருஷம் போல அவனிடம் தோட்ட வேலை செய்தாள். சிறு கன்றுக்குட்டி கிடைத்தது அவளுக்கு. அதன் கழுத்தில் கயிறு கட்டிக் கூட்டிக்கொண்டு போனாள் அதை. எஜமானனுக்கு பிரிவு சொன்னாள். சைதோமிர் நகரத்துக்கு வந்தாள். ஒரே வாரத்தில் அந்தக் கன்றுக்குட்டி இறந்துவிட்டது. ஆயா அதை வெட்டி விலையாக்க வேண்டிவந்தது. ரெண்டு தார்பாலின் பூட்சுக்கு அந்த மாமிசத்தை அவள் விற்றாள். ரெண்டுமே இடதுகாலுக்குச் சேர்கிற, ஜோடியற்ற பூட்சுகள்.
 

      எல்லாவற்றையும் நான் சுருக்கமாய்ச் சொல்கிறேன். ஆயா இந்தக் கதைகளை கொஞ்சம் கொஞ்சமாய் பத்து வருஷம் சொன்னாள். பத்து வருஷமாய் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு விபரமும் விடாமல் விலாவாரியாய்ச் சொன்னாள் அவள். அவளது வாழ்க்கை பற்றி எனக்கு மனப்பாடமாய்ச் சொல்லத் தெரியும். அவள் கதையை நான் இத்தனை அறிந்திருக்கிறதால் தான் நான் என்னைப் பற்றி அதிகம் யோசியாமல் போனேனோ. சில சமயம் எனக்கே படுகிறது. நான் எனக்காக வாழவே இல்லை. என் ஆயாவுக்காகவே நான் - அவள் பதுமையாகவே வாழ்கிறேன். அத்தனைக்கு ஆயா என்னை ஆக்கிரமித்திருக்கிறாள். யாரிடம் பேசினாலும் என் கதையை அல்ல, அவள் கதையையே பேச வைத்துவிட்டாள். அவர்களும் அவள் கதையை மற்றவர்களுக்குச் சொல்வார்கள். ஐய ஆயா செய்தது தப்பு. மகா தப்பு. எனக்கு என் வாழ்க்கை சார்ந்து சொல்ல எதுவும் இல்லாமல் அடித்து விட்டாள் அவள். என்னை ஒரு ஆளாக அவள் உருவாக விடவே இல்லை. எனக்கான அடையாளம், சுதந்திரம் அவள் வளர்ப்பில் எனக்குக் கிடைக்கவே இல்லை.

      இதில் ஆக மோசமான விஷயம், அவளுக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலம் பூராவும் அவள் பசித்துக் கிடந்தாளே, அதனால் இருக்கலாம். அவள் யாரையுமே காதலிக்கவில்லை. ஆண்களை, தனது சொந்தக் குழந்தைகளை, என்னை... நான் அவள் கதைகளை எத்தனை சமத்தாய்க் கேட்டுக்கொள்கிறேன்... என்னையும் கூட அவள் நேசிக்கவே இல்லை. ஒருத்தருமே இல்லை அவள் நேசத்தில். அவளை அவளுக்கே பிடிக்கவில்லை. அவளது சின்ன வயசிலேயே பசி என்னும் ராட்சஸன் அவளைப் பிடித்துக்கொண்டு விட்டான். அப்படி ஒருத்தன் இருக்கிறானா தெரியாது. ஆனால் அப்படித்தான் தெரிகிறது எனக்கு.

      வீட்டில் சாப்பிட எதுவும் இல்லாது போனால் ஆயா ஆத்திரக் குமுறலாய் உணர்வாள். சில சமயம் ஆத்திரத்தில் என்னை அறைந்திருக்கிறாள். அந்தக் கண்கள் கொதித்துச் சிவக்கும். என்ன கடூரமாய் விநோத உக்ரமாய்க் காணும் அவை. ஒரு ரொட்டித் துண்டுக்காக யாருடைய கழுத்தையும் கடித்துத் துப்ப அவள் தயங்கமாட்டாள் என்றிருக்கும். மேசையில் சிதறிக்கிடக்கிற மிச்ச மீதி உணவுத் துணுக்குகளை கவனமாய்ப் பொறுக்கி ஒரு வெறியுடன் என் வாயில் அடைப்பாள் அவள். எப்பவுமே அளவில்லாமல் ரொம்ப அதிகமாய் அவள் சமைப்பாள். எல்லாவற்றிலும் கொழுப்பு மிதக்கும். ஒரு பந்தின் திரட்சியாய் கொழுப்பு தனியே மேலே மிதக்கும். கூழில் அது மாத்திரமே மேல் படலமாய் மிதக்கும். அடியில் சாறைப் பார்க்க முடியாது. பன்னிக் கொழுப்பு அவளுக்கு விருப்பம். அலமாரியில் பன்னிக் கொழுப்பை நிறைய அரைலிட்டர் ஜாடிகளில் எடுத்து வைத்திருப்பாள். அலமாரியில் பன்னிக்கொழுப்புடன் ஏராளமான ஜாடிகள் அணிவகுத்திருக்கின்றன. அதேபோல கொடுக்காப்புளி அடைத்த நிறைய நிறைய ஜாடிகள். உறியிலும் கூட அவைதாம். புதிய பழைய கொடுக்காப்புளிச் சுருள்கள். அப்படியே அங்கேயே எடுக்கப்படாத பழைய சுருள்கள். சில நான் பிறக்குமுன்பே பறித்தவை.

      பசி. பசி தந்த திகில்... அதுவே ஆயாவை, அவள் வாழ்க்கையை நடத்திச் சென்றது. கோடையில் விடாமல் மழைபெய்ய ஆரம்பிக்கையில் ஆயா தோட்டத்துக்கு வந்து உட்கார்ந்துகொண்டு, ஆ இனி இந்த உருளைக் கிழங்குக்கு என்னவாவும் பார்... இந்த கொடுக்காப்புளி, பீட்ரூட், இந்தச் சோளம்... எல்லாமே நாசமாப் போகப்போகுது... என அரற்ற ஆரம்பிப்பாள். கடவுளே, இனி எங்க நிலைமை என்ன? நாங்க எல்லாருமே பட்டினியால் செத்துற வேண்டியதுதானா?

      ஒரு சமயம், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஆயாவுக்குள் இருந்த பசி என்னும் ராட்சஸன் வந்து என்னைப் பிடித்துக்கொண்டான்.

      எப்பவுமே எனக்கு சாப்பாட்டைப் பற்றி பெரிய கவனமெல்லாம் கிடையாது. எப்பவுமே என்ன இருக்கோ சாப்பிட்டுக் கொள்வேன். சில சமயம் எதோ கொறிப்பேன். சில சமயம் ஒரு கட்டு கட்டுவேன்... என்றாலும் தனியே அதற்கான ஆர்வம், அலைச்சல் என்னிடம் இல்லை. ஆனால் எனக்கு எதோ ஆனது அன்றைக்கு. வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு நெடுநேரம் தூங்கிவிட்டேன். மதியம் வந்துவிட்டது. அன்றைக்கு கண்ணைப் பிட்டுக்கொள்ள முடியாமல் கெட்ட கனவுகளின் ஆகர்ஷணத்தில் அமுங்கிக் கிடந்தேன்.

      விழிப்பு வந்தது. படுக்கையை விட்டே என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. கோடைகால கூழ் எனக்காக சமையல் அறையில் ஆயா கடைந்துகொண்டிருந்தாள். உண்மையிலேயே ருசியான கூழ். கிண்டிக்கொண்டிருக்கிற அந்தக் கூழின் மணம் இப்போது கூட என் நாசியில் தட்டுகிறது. அங்கே வரை போகக்கூட என்னிடம் தெம்பு இல்லை. நம்பவியலாத அளவு மகா பசி பசித்தது எனக்கு. எழுந்துகொள்ள சமையல் அறைவரை போக என்னால் இயலவில்லை.

      என் வயிற்றுக்குள் திடுமென ஒரு பள்ளம் உருவானது. ஆழமான செங்குத்துப் பள்ளம். ஆ நான் அதனுள் குப்பறத் தட்டி விழுந்துகொண்டிருந்தேன். என் வயிறே நானானது. நானே வயிறாகி விட்டேன். என்ன அகோரப் பசி. அந்த நிலையில் அருகேயிருக்கிற மேசையின் விரிப்பைக் கூட கடித்துத் தின்னுருவேன் போலிருந்தது. ஷு லேசைப் பார்க்க நூடுல்ஸ் போலத் தெரிந்தது.

      அதன்முன்னோ பின்னோ கூட அப்படி எனக்குத் தோன்றியதே இல்லை. ஒரு நடமாடும் பிணத்தைப் போல நான் சமையல் கூடத்துக்கு படுக்கையை, சுவரை என்று கிடைத்ததையெல்லாம் பிடித்தபடி போய்ச்சேர்ந்தேன். ஆயாவுக்கு ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை. நான்பாட்டுக்குப் போய் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன். என் நிலைமையைப் பார்த்த ஜோரில் ஆயா புரிந்துகொண்டாள். உடனே ஒரு கிண்ணத்தில் கூழூற்றி என்முன் கொண்டுவந்தாள். அதை அப்படியே கடகடவென்று நான் முழுங்குவதைப் பார்த்தாள். அதை சுவைத்து குடிக்கவில்லை கடகடவென்று முழுங்கினேன் ஆவேசத்துடன். என்னைப் பார்த்து அவள் பரவசப்பட்டாள். நான் அவளைப்போல அப்போது நடந்து கொண்டிருந்தேன். என்னைப்போலவே பசியெனும் ராட்சஸனின் பிடியில் இதோ என் வாரிசு.... என அவள் புளகாங்கிதப் பட்டிருக்கலாம். ஆ நானும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறேன். நாங்கள் இருவருமே அப்படி அலைக்கழிக்கப் பட்டுவிட்டோம்.

      தாத்தா இறந்தபின் ஆயா என்னை தாத்தாவின் படுக்கையிலேயே படுத்துறங்கச் சொன்னாள். நான் எப்ப ஆயாவைப் பார்க்கப் போய்த் தங்கினாலும் ஆயா எனக்கு படுத்துக்கொள்ள அந்தப் படுக்கையையே தந்தாள். அதில்தான் தாத்தா செத்துப் போனார். ஆனால் அதைப்பற்றி ஆயா அலட்டிக்கொண்டது இல்லை. அவளை விடு, நானே அவளிடம் சொன்னேன், அவளைப் போல நான் இல்லை. எனக்கு அதில் படுத்துறங்க என்னவோ போலிருக்கிறது. கெட்ட கெட்ட கனவுகள். பயமாய் இருக்கிறது. ஆனால் என் பேச்சை அவள் காதிலேயே போட்டுக் கொண்டமாதிரி தெரியவில்லை. நான் சொன்னது அவளுக்கு விளங்கவில்லை. என் கன்னா பின்னா கனவுகள் தொடரத்தான் செய்தன.

      என் பன்னிரண்டாவது வயதில்தான் எனக்கு ஆயாவை விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, எவ்வளவு தூரம் முடியுமோ ஓடிப்போய்விட உத்வேகம் வந்தது.

      நானும் ஆயாவும் தோட்டத்தில் கொடுக்காப்புளி பொறுக்கிக் கொண்டிருந்தோம். இதமான ஆகஸ்டு நாள் அது. ஆயா தன் அடுத்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் கொடுக்காப்புளி தோலையுரித்து கும்பாச்சியாய்க் குவித்தபடி கதைகேட்டுக் கொண்டிருந்தேன். அதை கோணியில் போட்டு வெளி முற்றத்துக்கு அவள் கூடவே எடுத்துப் போனேன். அப்போதுதான் அந்த கருத்துவாதம் எங்களுக்குள் எழுந்தது. ஆயா கதையைத் தாண்டி ஒரு விஷயத்தை ஒத்துப் பேசினாள். ஒருவேளை நான் இந்த வாழ்க்கை தாண்டி மேலுலகம் பற்றி எதோ சொல்ல வந்திருக்கலாம். சொர்க்கம். நரகம். ஆத்மா. அப்போது இல்லை என்றாலும் பின்னாட்களில் இப்படியெல்லாமான பேச்சு எனக்குப் பிடித்துப் போயிற்று.

      ஆயா திடீரென்று சொன்னாள்.

      ''ஆத்மாவாவது வெங்காயமாவது. ஆத்மான்னு இல்லடி, எனக்கு எதுலயுமே நம்பிக்கை கிடையாது. ஒராள் செத்துப் போகிறான். பிறகு அவன் எலும்புகள் சிதைந்து போயிருது. அதுதான் முடிவு. ஒரு காலம். அதன் முடிவு. அவ்ளோதான். அதுக்கு மேல எதுவுங் கிடையாது.''

      ''ஆயா...'' என்றேன். ''அப்பிடி ஒண்ணில்லன்னு சொல்லாதே. அப்படி நினைக்கவே என்னவோ போலிருக்கு எனக்கு. உனக்கு மரணபயமே கிடையாதா ஆயா. உன் எலும்பு சிதைந்து உருக்குலைந்து அழிஞ்சிருதுன்றது பயமா இல்லியா உனக்கு?''

      ''இதுல பயப்பட என்ன இருக்கு? அது அப்பிடித்தான்...''

      ''பின்ன எதுக்கு நாம வாழறோம். அதன்பின் ஒண்ணுமே இல்லைன்னா வாழறது எதுக்குன்றேன்.''

      ''வாழ ஒண்ணில்லைன்னா சொல்றது? பாருடி, நீ இருக்கியே... நீ என் வாழ்க்கையை ஞாபகம் வெச்சிக்குவே. என் மொத்த வாழ்க்கையையுமே நான் உனக்குச் சொல்லியாச்சி. அதுக்கெல்லாம் அழிவு கிடையாது. இல்லியா?''

      ஆகா, அப்போதுதான் எனக்கு உடனே ஓடிப் போக வேண்டுமாய் இருந்தது. கொடுக்காப்புளியைத் தோலுரிப்பதை அப்படியே கைவிட்டேன். ஓடிப் போனேன். ஆயாவை விட்டு ஓடிப்போனேன். அவள் வாழ்க்கையை விட்டு என் வாழ்க்கையை நோக்கி ஓடினேன் நான். அவள் என்னை அழித்து தான் அழியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு என் வாழ்க்கை வேண்டும். என் சொந்தக் கதைகள் வேண்டும். அப்படி ஒருத்தரை அழித்து அடுத்தவராக அடையாளமற்று அடிப்பது, காயடிப்பது தகாத செயல். எனக்கும் வாழ்க்கை வேண்டும். சாகா நிலையான சொந்தக் கதைகள் வேண்டும். அட அவளுக்கு எதுலயுமே நம்பிக்கை இல்லை. நானும் அப்படி ஆவதா? மாட்டேன்.... நான் சிந்தித்தபடி ஓடிக் கொண்டிருந்தேன்.

      இப்ப எனக்கு வயசு முப்பது. ரொம்ப காலம் முன்னாடியே ஆயா இறந்துவிட்டாள். அவள் சாவுக்கு நான் போகவில்லை. ஆனாலும் அவளிடம் இருந்து என் சுயம்புத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள என்னால் முடியவில்லை தான். நான் கொஞ்சம் முன்னாடியே வெளியேறி யிருக்கவேண்டும். ரொம்பத் தாமதித்து விட்டேன். என்னிடம் இப்போது என் கதைகள் இல்லை. எல்லாம் அவள் சொன்ன, அவளது கதைகள். அவையே என் கைவசம் இப்போது இருக்கின்றன. மற்றவர்களிடம் நான் என் ஆயா கதையைத் தான் சொல்லி வருகிறேன். எனக்கு அது பிடிக்கத் தான் இல்லை. பேச ஆரம்பித்தால் தன்னைப்போல நான் ஆயா கதைகளை ஆரம்பித்து விடுகிறேன். தவிர்க்க முடியவில்லை. ஆனால் எனக்குள் கதை சொல்கிற அந்த உத்வேகம் இருக்கத்தான் செய்கிறது. கதை சொல்கிறபோது எனக்கு ஒரு சுகம் கிடைக்கிறது. கதை சொன்னபடி நான் அழுகிறேன். அழுகை எனக்குப் பிடித்திருக்கிறது. நின்று என் கதையை நீங்கள் கேட்டுவிட்டுப் போங்கள். கொஞ்சம் செவிகளை எனக்குத் தாருங்கள். கொஞ்சமே கொஞ்சம். விலகிப் போகாதீர்கள். ஒரு நிமிஷம் நின்று என்னைக் கேளுங்கள். யுத்த சமயம். ஆயா ஒரு ராணுவ ஆஸ்பத்திரி சயைமல் கூடத்தில் வேலையாய் இருந்தாள். அப்ப என்னாச்சி, ஒரு பெரிய அண்டாவை அவள் கழுவிக் கொண்டிருந்தபோது அப்படியே அதனுள் விழுந்து அசதியில் தூங்கிப் போனாள்...

**
The Demon of Hunger
short story in Ukrainian Language by Tanya Malyarchuk
trs. in English by Michael M. Naydan


Comments

Popular posts from this blog