எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். நடையொழுங்கில் கதைகூறு திறனில் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்... இவரது இன்னொரு கதையையும் UNLIGHTED LAMPS சமீபத்தில் மொழிபெயர்த்தேன்...
த னி மை
ஷெர்வுட்
ஆன்டர்சன் (அமெர்க்கா)
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
அக்டோபர் மாத பின்பகுதி.
எனது கிராமாந்தரத்து வீட்டில் இருக்கிறேன். மழை பெய்துகொண்டிருக்கிறது. என் வீட்டின்
பின்னால் வனாந்தரம். முன்னால் பாதைதாண்டி வயல்வெளிகள். மலையடிவாரம் சட்டென சமவெளியாகி
வயல்களான தரைப்பரப்பு. இந்த தட்டைபூமி தாண்டி சுமார் இருபது மைல் தொலைவில் சிகாகோ நகரம்.
என் வீட்டு சாளர வழியே தெரு தெரிகிறது. தெருவில்
கரைகட்டிய மரங்கள். பெய்கிற மழையில், அந்த மர இலைகளே மழைபோல் உதிர்கின்றன. மஞ்சள்,
சிவப்பு, பொன்னிற இலைகள் நேரே கனமாய்த் தரையிறங்குகின்றன. மழை அவற்றை அறைந்து சாத்துகிறது.
சாதாரணமாய் அவை ஒரு உல்லாச அலைவுடன் பொன்மினுங்கலுடன் ஒயிலாய்த் தரையிறங்கும். கனமழை
அதை அனுமதிக்க மறுத்துவிட்டது. அக்டோபர் மாதத்தில் காற்று பொங்கி இலைகள் உதிர்படுகின்றன.
ஆட்டம் பாட்டத்துடன் அப்போது காற்று அவற்றை அழைத்துச்செல்கிறது.
நேற்று விடியக்கருக்கலில் எழுந்து ஒருநடை வெளியே
போய்வந்தேன். கடுமையான பனிமூட்டம். அந்த மூட்டத்தில் நானே காணாமல்போயிருந்தேன். வானம்பார்த்த
பூமியில் நடந்து, திரும்பி, குன்றுகள் வரை, எங்கும் எங்கெங்கிலும் பனி ஒரு சுவரைப்
போல் என்னை மறித்தது. அந்த மூட்டத்தில் குபீர் குபீரென்று மரங்கள் விநோதமாய் கண்ணுக்கு
எழும்பின. பட்டணத்திலானால் பின்னிரவுப் போதில் தெருவிளக்கின் வெளிச்ச மையத்துக்குள்
இருட்டில் இருந்து குபீரென இப்படி சனங்கள் நுழைவார்கள். உச்சிவானில் வெளிச்ச ரேகைகள்
பனியைத் துளைக்க மந்தகாசமாய் யத்தனித்துக் கொண்டிருந்தன. பனிமூட்டம் மெல்ல நகர்வதாய்
இருந்தது. மர உச்சிகள் மெல்ல அசைந்தன. மரங்களின் அடியில் இறுக்கமாய், அழுக்குப்பழுப்பான
பனி. தொழிற்சாலைப் பகுதிகளில் சந்துகளில் புகை இப்படி பரவிக்கிடக்கும்.
ஒரு வயசாளி அந்த மூட்டத்தில் என்னிடம் வந்தான்.
எனக்கு அந்தாளைத் தெரியும். இந்தப் பக்கம் அவனை கிறுக்கு என்கிறார்கள். ''அட அவனுக்கு
நட்டு கொஞ்சம் கழண்டுகிட்டதப்பா'' என்கிறார்கள். வனத்தின் அடர்ந்த பகுதியில் அமுங்கிக்
கிடந்த ஒரு வீட்டில் அவன் வசிக்கிறான். எப்பவும் ஒரு நாய்க்குட்டியைக் கையில் ஏந்தி
வருவான். நிறையதரம் காலைநேரத்தில் நான் அவனை சந்தித்திருக்கிறேன். தன் உறவுக்கார சனங்களைப்
பற்றியெல்லாம் அவன் பேசுவான். தன் அண்ணன் தங்கைகள், தம்பி தங்கச்சிகள், சித்தப்பா பெரியப்பா
வழி உறவுக்காரர்கள், அத்தைகள், மாமாக்கள், மாப்பிள்ளைகள்... என்கிறதாய் அவன் பேச்சு
கொஞ்சம் குழப்பமாய் இருந்தது எனக்கு. அவனுக்கோ நெருங்கிய பரிச்சயத்தில் யாருங் கிடையாது.
காட்டில் கிடக்கிறான். எதும் செய்தித்தாள் கிடைத்தால் எடுத்துவாசித்து, அதில் இருக்கும்
எதும் பேரை வைத்துக்கொண்டு தனக்குள் உறவுசொல்லி கற்பனைவலையைப் பின்னிக்கொள்கிறான் போல.
ஒரு காலைநேரத்தில் அவன், தான் காக்சின் பெரியப்பா பையனாக்கும், என்றான். காக்ஸ் என
ஒருவர் அப்போது ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டார். இன்னொரு காலைநேரத்தில் பாடகன்
கருசோ தன் சகலை என்று சொன்னான். ''என் மனைவியின் தங்கச்சிதானே அவன் கட்டப்போறது'' என்றான்.
நாயை நெருக்கமாய் அணைத்திருந்தான். பீளைபூத்த பூனைக்கண்களால் நேரே என்னிடம் நம்பிக்கை
கோரப் பேசினான். ஒங்கொப்புராணை, என்கிற பாவனை இருந்தது அதில். ''என் பெண்டாட்டி ரொம்ப
அருமையான ஒடிசலான பெண்...'' என்று தெரிவித்தான். எங்க வீடு ரொம்ப பெரிசு. காலையாச்சின்னா
நாங்க ஒருத்தரோடு ஒருத்தர் கைகோத்துக்கிட்டு காலாற நடப்பம். இப்ப அவதங்கை பாடகன் கருசோவைக்
கட்டப்போறா... அவனும் எங்க குடும்பத்துக்காரனாயிட்டான்.''
நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தாள் கல்யாணங்
கட்டவே இல்லை. அவன்கதை எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. செப்டம்பர் மாத முன்பகுதியில்
ஒரு காலைநேரம். நான் அவன் வீட்டுப்பக்கமான பாதையில் வந்தபோது ஒரு மரத்தடியில் அவனைப்
பார்த்தேன். அந்தநாய் என்னைப் பார்த்ததும் குரைத்துவிட்டு அவனிடம் ஓடி அவன் கரங்களுக்குள்
தஞ்சமடைந்தது. அந்த சமயத்தில் சிகாகோ செய்தித்தாள்களில் எல்லாம் பிரதானமாய் ஊடாடிய
ஒரு செய்தி. கோடிஸ்வரர் ஒருத்தர் யாரோ நடிகையிடம் கசமுசாவாய்ப் பழகப்போக, இப்போது அவருக்கும்
மனைவிக்கும் லடாய்... இந்த வயசாளி என்னிடம் சொன்னான். ''அந்த நடிகை யார் தெரியும்ல?
என் கூடப் பொறந்த தங்கை.'' இவனுக்கு வயசு அறுபது, கதை கிளம்பிய அந்த நடிகைக்கு இருபது.
அவனானால் இருவருமான குழந்தைப்பருவத்தை யெல்லாம் நினைவுகூர்ந்தான். ''இப்ப நாங்க இருக்கிறதை
வெச்சி யோசிச்சா புரியாது...'' என்றான் அவன். ''அப்ப நாங்க ரொம்ப கஷ்டஜீவனம். ஆமா,
நிசந்தான். ஒரு மலையடிவாரத்தில் சின்ன வீடு எங்கது. ஒருதடவை புயல் வந்து... எங்க வீட்டை
கிட்டத்தட்ட வழிச்செறிஞ்சிட்டது. அடடா, என்ன காத்து! எங்கய்யா ஆசாரி. அவரு மத்தவங்களுக்கெல்லாம்
நல்ல உறுதியான வீடு கட்டித் தந்தாரு. ஆனால் எங்க வீடு ஒண்ணும்சொகமில்ல!'' ரொம்ப வருத்தமாய்த்
தலையைக் குலுக்கிக்கொண்டான். ''ஏந் தங்கச்சி, அதான் நடிகையாயிட்டாளே அவளுக்குதான் ரொம்ப
சிரமம். எங்கவீடு அத்தனை உரமாயில்லல்ல?'' அவன் பேசிக்கொண்டிருந்தான். நான் அவனைத் தாண்டி
நடந்தேன்.
* * *
ஒரு மாதம், அல்லது
ரெண்டு மாதம், சிகாகோ செய்தித்தாள்களில் ஒரு கொலைக்கேஸ் அடிபட்டது. அங்கத்திய ஒரு ஆசாமி
தன் மனைவியைக் கொன்றுவிட்டான். என்ன காரணம்னே யாருக்கும் விளங்கவில்லை. அந்தக்கதையை
ஊரில் இவ்விதமாய்ப் பேசிக்கொண்டார்கள்.
நீதிமன்ற விசாரணையில் இருக்கிற அந்த நபர், சந்தேகம்
இல்லாமல் தூக்கிலிடப் படுவான்... ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில் ஃபோர்மேன் அவன்.
32வது தெருவில் ஒரு அடுக்ககத்தில் தன் மனைவியுடனும், மாமியார்க்காரியுடனும் வசித்து
வந்தான். தன் தொழிற்சாலை யலுவலகத்தில் வேலை பார்த்துவந்த ஒரு பெண்ணை அவன் காதலித்தான்.
அயோவாபகுதியின் ஒரு நகரத்தில் இருந்து அத்தையுடன் வந்து குடியேறினாள். இப்போது அத்தை
இறந்துவிட்டாள். அந்த அசமந்த பூனைக்கண் ஃபோர்மேனுக்கோ அவளே உலகஅழகியாகப் பட்டது. தொழிற்சாலையில்
இருந்து பார்க்க, அவள் அமர்ந்திருந்த ஜன்னல் தெரிந்தது. தொழிற்சாலை அலுவலகம் ஒருபக்கமாக,
கட்டடத்துக்கு றெக்கைமுளைச்சாப் போன்ற ஒரு எடுப்பில் இருந்தது. அந்த ஜன்னலில் அவள்.
தாழ இவனது மேஜையருகே அவளைப் பார்க்க வசதியாக இவனது ஜன்னல். தன் பிரிவில் யாரார் எவ்வளவு
வேலை செய்தார்கள் என்றெல்லாம் குறிப்பேட்டில் பதிந்தபடியே, அவன் தலையை உயர்த்தினால்,
அதோ அவள் அவள்வேலையாய். என்ன விசித்திரமான அழகு இது, என அவன் மூளைக்குள் ஓடியது. அவளை
உடனே கிட்டத்தில் போய்ப் பார்க்கவேண்டும் என நினைக்கவில்லை அவன். அல்லது அவளைக் காதலிக்கவும்
முயலவில்லை. அவன் பார்வையே கனவுமிதப்பில் இருந்தது. மேலே ஆகாசத்தில் நட்சத்திரத்தைப்
பார்க்கிறாப் போல, அக்டோபர் மாத மலையடிவார மரங்களின் சிவந்த, பொன்வயமான இலைகளை அண்ணாந்து
பார்க்கிறாப் போல... ''என்ன மாசுமருவற்ற பரிசுத்தமான பெண் இவள்'' என ஒரு மயக்கத்துடன்
நினைத்தான். ''அந்த ஜன்னல்பக்கமாய் உட்கார்ந்து வேலையில் ஈடுபடும்போது அவள்மனசில் என்ன
நினைவுகளில் சஞ்சரிப்பாளோ?...''
மனப்போக்கில் அவன் அயோவாவிலிருந்து வந்த அந்தப்
பெண்ணை, தனது 32வது தெரு அடுக்ககத்துக்கு பெண்டாட்டி, மாமியார் அறிய அழைத்து வந்தான்.
வேலையிடத்திலும், வீடுதிரும்பிய பின்னான மாலைப்பொழுதுகளிலும் அவளை மனசில் சுமந்தபடியிருந்தான்.
தன் அடுக்கக வீட்டின் சாளரம் அருகே அவன் நிற்கிறான். இல்லினாய்ஸ் சென்ட்ரலை நோக்கிய
தண்டவாளப் பாதை, அதைத் தாண்டி ஏரி வரை கண்ணால் அளைகிறான். மனசால் அவன் அந்தப் பகுதிகளில்
சஞ்சரிக்கிறான். கூட, அவன் அருகே, அந்தப் பெண்! கீழ்ப் பார்வைக்குத் தெருவில் அநேகப்
பெண்கள் நடமாடுகிறார்கள். எல்லாப் பெண்ணிடத்திலும் அவன் அந்த அயோவாக்காரியின் சாயலைக்
கண்டான். ஒருத்தி அவன்ஆளைப் போலவே நடந்தாள். இன்னொருத்தி கையை இப்படி அசைத்தால் அச்சசல்
அவளைப் போலவே!... அவன் பார்த்த பெண்கள் எல்லாருமே, அவன் பெண்டாட்டியையும், மாமியார்க்காரியையும்
தவிர்த்து, அவன் மனசில் அனுமதித்திருந்த அந்தப் பெண்ணைப் போலவே தென்பட்டார்கள்.
அவன்வீட்டு நாரிமணிகளோ புதிரானவராகவும், குழப்பமானவர்களாகவுமே
தோன்றியது அவனுக்கு. திடுதிப்பென்று அவர்கள் அவலட்சணமாய் பஜாரிகளாகிப் போனார்கள். அவன்
பெண்டாட்டியோ அவன்உடம்பில் புதுசாய் முளைத்துத் துருத்தி நிற்கிற சதைக்கட்டியாக விகாரமாய்த்
தோன்றினாள்.
தொழிற்சாலையில் வேலைகளை முடித்த மாலையில் அவன்
வீடுதிரும்பி இராச்சாப்பாடு சாப்பிட்டான். எப்பவுமே அவன் ஊமைக்கோட்டான் தான். ஆக அவன்
பேசவில்லை என்கிறதை யாரும் சட்டைசெய்வதில்லை. சாப்பாடு முடித்து அவனும் அவன் பெண்டாட்டியும்
ஒரு சினிமா பார்க்கப் போனார்கள். ரெண்டு குழந்தைகள் அவர்களுக்கு. தற்போது பெண்டாட்டி
முழுகாமல் இருந்தாள். படம் பார்த்துவிட்டு திரும்ப வீடுவந்தார்கள். உட்கார்ந்தார்கள்.
ரெண்டுமாடி ஏறிவந்தது அவளுக்கு மூச்சுவாங்கியது. அவள் ஒரு நாற்காலியில் அம்மாபக்கமாக
உட்கார்ந்து உஸ்... என அலுத்துக்கொண்டாள்.
அவன் மாமியார்க்காரியோ குணத்தில் தங்கம். வீட்டில்
சம்பளம் பெறாத வேலைக்காரியாய் மாடாய் உழைத்தாள் அவள். பெண் சினிமாபார்க்க போகிறேன்
என்றால் உடனே புன்னகையுடன் அனுப்பி வைத்தாள். ''சரி'' என்றாள். ''நான் வர்ல. நான் இங்கியே
இருக்கேன்...'' எதாவது புத்தகம் எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிப்பாள். ஒன்பதுவயசான
பிள்ளை விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஆடுகுதிரையில் உட்கார கனவிலேயே ஆசைப்பட்டாப்
போல விழித்த அழுகை. பாட்டி அவனை கவனிக்கப் போனாள்.
அப்புறம் ஒருமணி ரெண்டுமணி, படுக்கப் போகுங்காட்டியும்
அவர்களிடையே சம்பாஷணையே இல்லை. அவன் ஒரு செய்தித்தாளை வாசிக்கிறதாய் பாவனை செய்தான்.
தாளைப் பற்றியிருக்கிற விரல்களைப் பார்த்தான். கவனமாக அவன் கழுவிக்கொண்டிருந்த போதிலும்,
மிதிவண்டிச் சில்லுகளைப் பராமரித்ததில் ஏற்பட்ட கிரிஸ் கறை நகத்தடியில். ஆ, அந்த அயோவாக்காரி,
தட்டச்சு இயந்திரத்தில் அவளது பளீரென்ற துரிதமான கைகள் என்னமாய் விளையாடும்... தான்
அழுக்காய் இருக்கிறதாய் உணர்ந்து லஜ்ஜைப்பட்டான்.
அந்தப் பெண், இந்தாள் தன்னிடம் காதல்வயப்பட்டாச்,
என அறிந்திருந்தாள். அந்த நினைப்பே கொஞ்சம் கிளர்த்தியது உள்ளே. அத்தை காலமானதும் அவள்
சிற்றறை ஒன்றை கூட்டுவீடு ஒன்றில் வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடியேறி விட்டாள். மாலைகளில்
அவளுக்கு செய்வதற்கு ஏதுங் கிடையாது. அந்த ஃபோர்மேனை அவள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
என்றாலும் அவனைப் பயன்படுத்திக் கொள்ளலாமாய் இருந்தது அவளுக்கு. ஒரு ஜடமான குறியீடு
அவளுக்கு அவன். சிலபோது அவள் அலுவலகம் வருவான். வந்து வாசலாண்ட சிறிது நிற்பான். பெரிய
பரந்த கைகள், பூராத்திலும் கிரிஸ் பிசுபிசுப்பு. அவனை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தாள்.
அவள் மனசில் அவனை ஒரு உயரமான மெலிந்த இளைஞனாக கற்பனை பண்ணிக்கொண்டாள். அவனது பூனைக்கண்...
விசித்திரமான ஜ்வாலை இருந்தது அதில். ஆர்வத்துடிப்புடனான கண்கள். பணிந்த பக்திபூர்வ
கைகட்டிய ஆர்வம். இப்படி ஆண்கள் ஆபத்தில்லாதவர்கள், என நினைத்தாள் அவள்.
அதைப்போன்ற ஆராதனைக்கண்களுடன் ஒரு காதலன் வேண்டுமாய்
இருந்தது அவளுக்கு. எப்பவாவது, ரெண்டுவாரத்துக்கு ஒருமுறையோ என்னவோ, தலைபோகிற வேலை
இருந்து அதை முடித்துவிட்டுக் கிளம்புகிற பாசாங்குடன் தாமதமாய் வேலைமுடித்து அவள் எழுந்துகொண்டாள்.
ஜன்னல்வழியே பார்க்க, அவன் காத்திருக்கிறதை கவனித்துக்கொண்டாள். எல்லாரும் போயானபின்
தன் மேஜையை மூடி தெருவிறங்கினாள். அதேசமயத்தில் அந்த ஃபோர்மேனும் தொழிற்சாலை வாசலில்
இருந்து வெளிப்பட்டான்.
இருவரும் தெருவில் ஒன்றாய் நடந்தார்கள். அரை
டஜன் பிளாக்குகள் தூரம் வரை நடந்து அவள் தன்காரில் ஏறிக்கொள்வாள். தெற்கு சிகாகோ என்கிற
ஒரு இடத்தில் இருந்தது தொழிற்சாலை. அவர்கள் நடக்க மாலை மங்கிக்கொண்டு வந்தது. தெருவில்
வரிசையாய் வர்ணம்பூசப்படாத மர வீடுகள். புழுதி பறக்கும் தெருக்களில் அழுக்குக் குழந்தைகள்
ஊளையிட்டபடி ஓடித் திரிந்தார்கள். அவர்கள் ஒரு பாலத்தைக் கடந்தார்கள். ஆளில்லாமல் ரெண்டு
கட்டுமரங்கள் அந்த ஓடையில் அலைப்புற்றுக் கொண்டிருந்தன.
அவள் அருகாக அவன். அதிர்வான நடை. கைகளை மறைத்துக்கொள்ள
போராடிக்கொண்டிருந்தான். தொழிற்சாலையை விட்டு வெளியிறங்குமுன் தேங்காய்நார் கொண்டு
பரபரவென்று தேய்த்துவிட்டான். என்றாலும் உள்ளங்கைகள் ரெண்டுபக்கத்திலுமான அழுக்குக்கும்பலாகவே
அவனுக்குப் பட்டன. ரொம்ப அபூர்வமாகவே அவர்கள் ஒருசேர நடந்துபோவது என்பது நிகழ்ந்தது.
அதும் ஒரு கோடைகாலத்தில் மட்டுமே... ''ரொம்ப வெக்கை'' என்றான் அவன். எப்பவுமே சீதோஷ்ண
நிலை தவிர வேறெதுவும் அவன் அவளிடம் பேசியதே கிடையாது. ''அபார வெக்கை'' என்றான். ''மழை
கிழை வரும்போல...''
ஒருகாலத்தில் அவளுக்கும் ஒரு காதலன் வருவான்
என்பது அவளது கனா. நெடிதுயர்ந்த சிவப்பு இளைஞன். வீடு, நிலம்நீச்சு கொண்ட துட்டுகொழுத்த
ஆசாமி. இதோ கூட நடக்குதே இந்த தொழிலாளி இதுக்கும் அவள் காதலுக்கும் எள்ளளவும் சம்பந்தம்
கிடையாது. அவனுடன் அவள் கூடநடந்தாள். அலுவலகத்தில் எல்லாரும் கிளம்பிப் போனதும், அவனுடன்
நடந்தாள், அந்த பூனைக்கண்ணுக்காக, அதில் கண்ட ஆர்வம் சார்ந்த பணிவுக்காக. அவளை வணங்கி
வழிபட்டன அவை. அவளுக்கான பாதுகாப்பு அவனிடம் இருந்தது, அவனாலேயே கூட அவளுக்கு தொந்தரவு
எதுவும் இராது, என அவள் புரிந்துகொண்டாள். நெருக்கமாய் அவன் அவள்கிட்டத்தில் வர முயற்சிக்கவே
மாட்டான், அதும் இந்தலட்சணத்தில் கையழுக்கை வைத்துக்கொண்டு. அவளுக்கு ஒரு ஆபத்தும்
இல்லை.
மாலையில் அவன் மனைவியும், மாமியார்க்காரியுமாக
மின்விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். அடுத்த அறையில் அவனது ரெண்டு
குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இதோ அவன்மனைவி இன்னொரு குழந்தையையும் ஈனி
விடுவாள். அவர்கள் ஒருபடம் பார்த்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள். ஆச்சி, அவர்கள்
இருவரும் ஒரேஅறையில் அடுத்து அவரவர் படுக்கையைக் கிடத்திவிட வேண்டியதுதான். அவன்தான் எதாவது யோசித்துக்கொண்டு கிடப்பான். அடுத்த
அறையில் மாமியார்க்காரி போர்வைக்குள் அசங்குவதும், கட்டில் ஸ்பிரிங்குகள் நொடித்துக்
கொள்வதும் கேட்கும். வாழ்க்கை ரொம்ப ஈர்ப்பானது. ஒருவித ஆர்வமும், எதிர்பார்ப்புமாய்
அவன் முழித்துக் கிடந்தான். என்ன எதிர்பார்ப்பு?
ஒண்ணுமில்லை. கொஞ்ச நேரத்தில் எதாவது ஒரு குழந்தை
வீறிடும். படுக்கையை உதறியெழுந்துகொண்டு, குதிரையேத்தி விடு என அடம் ஆரம்பிக்கும்.
புதுசாய், அபூர்வமாய், அருமையானதாய் எதுவும் நிகழாதுதான். நிகழ சாத்தியமே கிடையாது
தான். ஆனாலும் வாழ்க்கையை ரொம்ப நெருக்கமானதாக ஈர்ப்பானதாக உணர்கிறான் அவன். இந்த வீட்டில்
நடக்கும் எதுவும் அவனை பாதிக்காது. அவன் மனைவியின் பேச்சுகள்... அரைகுறை ஈடுபாட்டுடன்
அவள் பேசும் காதல் விரக உணர்வுப்பொங்கல்கள், அவங்கம்மாவின் தங்கமான மனசு, துட்டு எதிர்பார்க்காத
அருமையான வேலைக்காரி அவள்....
எழுந்துபோய் மின்விளக்கைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து
செய்தித்தாள் வாசிக்கிறாப் போல என்னவோ யோசித்தபடி யிருந்தான். தன் கைகளை நோட்டமிட்டான்.
பெரிய, சீரற்ற கைகள். தொழிலாளியின் கைகள்.
அந்த அயோவாக்காரியின் உருவம் அந்த அறைக்குள்
வந்து மெல்ல உலவியது. ரெண்டு பேருமாய் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். மைல்கணக்காக அந்தத்
தெருக்களில் அவளுடன் அவன் அமைதியாக நடந்துபோனான். வார்த்தைகள் தேவையற்றவை. அவளுடன்
அவன் ஒரு கடல்கரையில் நடக்கிறான். மலையடிவாரத்தில் உலா போகிறான். நிர்மலமான இரவு. அமைதி.
நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. அந்த அயோவாக்காரி, அவளே நட்சத்திரம் தான். வார்த்தைகள்
தேவையா என்ன?
அவள் கண்கள் நட்சத்திரங்கள். உதடுகள் மிருதுவான
குன்றுகள். சமவெளியின் சிறு மேடுகள் போன்றவை அந்த உதடுகள். ''ஹா அவள் அண்ட முடியாதவள்.
நட்த்திரங்கள் போலவே அவள் என்னைவிட்டு எவ்வளவோ தூரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள்...''
என்று நினைத்துக்கொண்டான். ''நட்சத்திரங்களைப் போல அவள் நெருங்க முடியாதவள், ஆனால்
நட்சத்திரங்கள் சுவாசிப்பதில்லை. இவள் சுவாசிக்கிறாளே. இவள் வாழ்கிறாளே. என்னைப்போலவே
இவளுக்கும் வாழ்க்கை வாய்த்திருக்கிறதே...''
ஒரு ஆறுவார முன்னால் ஒரு மாலை. மிதிவண்டித் தொழிற்சாலையில்
ஃபோர்மேனாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டான். இப்போது
நீதி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. தினசரி செய்தித்தாள்களுக்குத் தீனி போடுகிறதே
அவன்தான். அந்தக் கொலைநடந்த மாலைவேளையில் அவன் தன் பெண்டாட்டியை வழக்கம்போல ஒரு படத்துக்குக்
கூட்டிப்போயிருக்கிறான். ஒன்பதுமணி வாக்கில் அவர்கள் திரும்ப வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்கள்.
32வது தெரு முக்கில், அவர்கள் வீட்டுக்குக் கிட்டத்தில், யாரோ ஒரு மனித உருவம் பக்கத்து
சந்திருட்டில் இருந்து இந்த வெளிச்சத்தில் தலைநீட்டி, திரும்ப உள்ளமுங்கிக் கொண்டது.
இந்த சம்பவம் இவனுக்கு மனைவியைக் கொல்கிற எண்ணத்தை மூளையில் ஏத்திவிட்டதோ என்னமோ?
தங்கள் அடுக்கக கட்டட வாயிலை அடைகிறார்கள். உள்வராந்தா
இருட்டிக் கிடந்தது. திடுதிப்பென்று, சொல்லப்போனால் யோசனையே இல்லாமல் அவன் தன் பை யில்
இருந்து கத்தியை வெளியெடுத்தான். அந்தச் சந்தில் தட்டுப்படடானே அவன்... ஒருவேளை எங்களைக்
கொல்ல முயற்சி செய்திருந்தால்?... என யோசித்தான். கத்தியை நீட்டிக்கொண்டான். ஒரு சுத்து
சுத்தி மனைவியைத் தாக்கினான். ரெண்டு முறை, ஒரு டஜன் முறைகள், பைத்தாரத்தனமாய்க் குத்தினான்.
ஒரு அலறல். மனைவியின் உடல் சரிந்தது.
அந்த அடுக்கக பராமரிப்பாளன் வராந்தாவின் வாயுவிளக்கை
ஏற்றியிருக்கவில்லை. பிறகு, அந்த ஃபோர்மேன் தனக்கே சொல்லிக்கொண்டான். அதான் கொலைசெய்ய
வேண்டியதாய்ப் போச்சு. வெளியே பக்கவாட்டில் இருந்து ஒரு உருவம் வெளிச்சத்துக்கு முகங்காட்டி
பின் திரும்ப பதுங்கியது... ஆமாமாம், தனக்குள் சொல்லிக் கொண்டான். வராந்தா வெளிச்சம்
இருந்திருந்தால் என்னால அந்தக் காரியத்தைச் செஞ்சிருக்கவே முடியாது.
வராந்தாவில் நின்றபடி யோசித்தான். பெண்டாட்டி
இறந்துவிட்டாள். அவளுடன் பிறக்காதகுழந்தையும் செத்துப்போச்சு. அடுக்ககத்தின் மத்த வீடுகளின்
கதவுகள் திறக்கிற சத்தங்கள். பல நிமிடங்கள் ஓடின. எதுவும் நடக்கவில்லை. அவன் சம்சாரமும்,
பிறக்காதகுழந்தையும் செத்துட்டாங்க. விஷயம் அவ்வளவுதான்.
விறுவிறுவென்று யோசித்தபடி மாடிக்கு ஓடினான்.
முதல்மாடி ஏறுகையில் பைக்குள் திரும்ப கத்தியைப் போட்டுக்கொண்டான். பிறகு பார்க்கையில்
அவன் உடையிலோ கைகளிலோ ரத்தக்கறை இல்லை. உள்படபடப்பு சிறிது அடங்கியதும், கத்தியை கவனமாக
குளியல் அறையில் கழுவினான். எல்லாரிடமும் ஒரே கதைதான் அவன் சொன்னான். ''ஒரு அசம்பாவிதம்
நடந்திட்டது'' என்று விளக்கினான். ''பக்கத்து சந்தில் இருந்து ஒருத்தன் பம்மிப் பதுங்கி
வெளிப்பட்டாப்டி. என்னையும் என் சம்சாரத்தையும் வீடுவரை பின்தொடர்ந்தாப்டி. இங்க பாத்தா
வராந்தால விளக்கு இல்லை. அந்த அடுக்கக பராமரிப்பாளன் தண்டச்சம்பளக் கம்னாட்டி, வாயு
விளக்கை ஏத்தாமல் போக... ச், என்னாச்சின்னா... ஒரு கைகலப்பு. அந்த இருட்டில் என் சம்சாரம்
இறந்துட்டா. எப்படியாச்சி என்னாச்சி தெர்ல. அட விளக்கு இல்லப்பா... இந்தச் சண்டாளப்
படுபாவி வேலைக்கார கபோதி வாயு விளக்கு ஏத்தாம டபாய்ச்சிருக்கான்... அவுசாரிக்குப் பொறந்த
பய...'' இதையே திரும்பத் திரும்பச் சொன்னான்.
அடுத்த ஒண்ணுரெண்டு நாள்வரை யாரும் அவனை அதிகம்
விசாரிக்கவில்லை. அதற்குள் கத்தியை அவன் தூர வீசியெறிந்துவிட்டான். நீண்ட நடை. தெற்கு
சிகாகோ ஓடை வரை போய், ஆட்கள் அற்ற ரெண்டு கட்டுமரங்கள் இன்னும் அங்கே அலைப்புற்றுக்
கொண்டிருந்தன, நதியில் விட்டெறிந்துவிட்டு வந்தான். மாசுமருவற்ற பரிசுத்தமான அந்த அயோவாக்காரியுடன்
அந்த பாலத்தை அவன் கடந்துபோய் அவளை காரில் ஏற்றிவிட்டுவிட்டுத் திரும்புவான். அவனால்
நெருங்கவியலாதவள், நட்சத்திரம் போன்ற... என்றாலும் சுவாசிக்கிற, மனித உடம்பு எடுத்திருக்கிற
தேவதை...
பிறகு அவனைக் கைது செய்தார்கள். உடனே அவன் தன்
குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டான். எல்லாவற்றையும் கக்கி விட்டான். எதுக்குக் கொன்னேன்
எனக்கே தெரியாது, என்றான் அவன். ஆனால் அவன்அலுவலகத்தில் வேலைபார்க்கும் அந்தப் பெண்ணைப்பற்றி
மூச்சு விடவில்லை. செய்தித்தாள்கள் அவன் கொலைசெய்த காரணத்தைக் குடாய ஆரம்பித்தன. இன்னும்
முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணுடன் அவன் நடந்துபோகிறதை சிலர் கவனித்திருந்தார்கள்.
ஆக அவளையும் இந்த வியூகத்தில் உள்ளிழுத்தார்கள். அவள்படமும் எல்லா செய்தித்தாளிலும்
வந்திருந்தது. ஆனால் அவளுக்கும் அவனுக்கும் எந்த உறவுங் கிடையாது, என அவளால் நிரூபிக்க
முடிந்தது.
* * *
நேற்று காலையில் எங்கள்
ஊரில் கடும் பனிமூட்டம். நகரஎல்லைப் பகுதி எங்கள் ஊர். அதிகாலை உலா என்று வெளியே கிளம்பினேன்.
பள்ளத்தாக்குகள் வரை போய் மலையடிவாரப் பாதையில் திரும்ப¤வந்தேன். அந்த கிழவன்... அவனுக்குதான்
எத்தனை சொந்தக்காரர்கள், எத்தனை உறவுக்கிளைகள்... கொஞ்சநேரம் என்கூட நடந்துவந்தான்.
கையில் அந்த நாய்க்குட்டியை ஏந்தியிருந்தான். நல்ல தணுப்பு, நாய் விரைத்து நடுங்கி
முனகியது. இருந்த பனிமூட்டத்தில் அவன் முகமே சரியாய்த் தெரியவில்லை. உயரக் காற்றிலும்
மர உச்சியிலுமாக திரைகட்டித் தொங்கிக்கொண்டிருந்த மூட்டத்தில் அவன் முகம் மெல்ல முன்னும்
பின்னுமாக அசைந்தது. அந்த ஆசாமி பற்றி, பெண்டாட்டியைக் கொன்றானே அவனைப் பற்றி பேச்செடுத்தான்.
எங்கள் பகுதிக்கு தினசரி காலை வந்துவிழும் எல்லா செய்தித்தாளிலும் அவன் பேரைத் தான்
கொட்டை எழுத்தில் கொட்டி முழக்குகிறார்கள்... என்கூட நடந்துவந்தபடியே அவன் தனக்கும்,
தனது தம்பிக்குமான, அவன்தான் இப்ப கொலைகாரன் என ஆகிவிட்டான்... கதைகளையெல்லாம் அளக்க
ஆரம்பித்தான். அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலங்கள்... ''அவன் என் தம்பி'' என்று திரும்பத்
திரும்பச் சொல்லியபடியே தலையைக் குலுக்கிக்கொண்டான். நான் நம்பவில்லையோ என்ற ஆதங்கம்
தெரிந்தது அதில். அதை அவன் நிரூபிக்க வேண்டும் என நினைத்தான். ''சின்ன வயசில் நாங்க,
நானும் இவனும் ஒண்ணா யிருத்தம்... அப்பாவீட்டின் கொல்லைப்பக்க கொட்டிலில் ஒண்ணா நாங்க
விளையாடுவம். அப்பா கடலுக்குள் ஒரு கப்பலில் ஏறிப் போயிட்டாரு. அப்படியாகி எங்க பேர்
ஒண்ணொண்ணும் குழம்பிட்டது. விளங்குதில்லியா? எங்க பேர் ஒண்ணொண்ணும் வேறமாதிரி, ஆனால்
நாங்க அண்ணன் தம்பிங்க. ரெண்டு பேரும் எங்கய்யாவுக்குதான் பிறந்தம். வீட்டுக்கொல்லை,
கொட்டிலில் ஒண்ணா விளையாடுவம். மணிக்கணக்கா அந்தக் கொட்டிலின் வைக்கப்படப்பில் படுத்துப்புரள்வம்.
கதகதன்னு இருக்கும்...''
அந்தப் பனியில் அவனது மெலிந்த தேகம் கன்னாபின்னாவென்று
வளைந்த மரமாய்த் தோன்றியது. பின் ஒரே விரைப்பாய் ஒடிசலாய் காற்றில் விரைத்து நின்றது.
தூக்கிலிடப்பட்ட உடல்போல் அவன் உடம்பு துவண்டு துடித்தது. அந்த முகம் உதடுசொல்லும்
கதையை நம்பச்சொல்லி இறைஞ்சுவதாய் இருந்தது. என் மனசில் ஆண்களும் பெண்களுமான உறவுமுறைகளே
கலந்து குழம்பி உள்ளே எல்லாம் கச்சடாவான கந்தர்கோலம். தெருவோர அந்த கட்டைகுட்டையான
கிழட்டு உடம்பில் அந்த ஃபோர்மேன், சம்சாரத்தைக் கொன்ற கொலைகாரனின் ஆவி வந்து புகுந்துகொண்டது.
அது நகரநீதிமன்றத்தில், கனம் கோர்ட்டார் முன்னே
சொல்லவியலாத ஒரு கதையை என்னிடம் சொல்லப் போராடியது. மனிதனின் தனிமையின் பெருங்கதை அது.
நெருங்க முடியாத சௌந்தர்யத்தை எட்டிப்பிடிக்கிற யத்தனத்தின் கதையை அந்த முணுமுணுக்கும்
கிழவனின் உதடுகள் சொல்லத் துடித்தன. தனிமை. வாட்டியெடுக்கிற தனிமை. கிராமத்தின் தெருவில்
பனிகொட்டும் ஒருகாலையில் நாயை கையில் ஏந்தி அணைத்தபடியான ஒரு தாத்தாவின் தனிமை.
தாத்தாவின் கைகள் நாயை இறுக்கிப் பற்றியிருக்கின்றன.
அதுவோ அந்த இறுக்கத்தில் திணறி வீல் வீல் என்று கத்துகிறது. அவன் உடம்பை எதோவொரு உணர்ச்சி
ஆக்ரமித்துத் தாக்குகிறது. அவன் ஆத்மா தேகத்தைவிட்டு விடுதலைப்பட்டு அந்தப் பனிமூட்டத்தில்
மேலெழும்பிப் பறக்க ஆவேசப்பட்டாப்போல. அபப்டியே அலைந்து, சமவெளி வழியே, நகரம் நோக்கி
நகர்கிறது. பாடகனை நோக்கி, அரசியல்வாதியை நோக்கி, கோடிஸ்வரனை நோக்கி, கொலைகாரனை நோக்கி...
தன் சகோதரர்களை நோக்கி, ஒண்ணுவிட்ட உறவுசனத்தை நோக்கி, சகோதரிகளை நோக்கி நகர்வலம் வருகிறது.
அவனது ஆசையின் உக்ரம் பயங்கரமானது. பாவமே, என்கிற என் இரக்கத்தில் உடம்பு நடுங்குகிறது
எனக்கு. அவன் கைகள் நாயின் உடம்பை இன்னுமாய் இர்றுக்க்குகின்றன. நாய் குய்யோமுறையோ
என்று அலறுகிறது. சட்டென முன்எட்டி அவன் கைகளை பலவந்தமாய்ப் பிரித்து நாயை விடுவித்தேன்.
நாய் நிலத்தில் விழுந்தது. அப்படியே கீச்சுக்குரலில் முனகிக்கொண்டு அங்கேயே கிடந்தது.
நிச்சயமா பலமா அதற்கு அடிபட்டிருக்கும். விலா எலும்புகள் நொறுங்கியிருக்கலாம். 32வது
தெரு அடுக்கக வராந்தாவில் அந்த மிதிவண்டித் தொழிற்சாலை ஃபோர்மென் தன் மனைவியைக் கொன்றுவிட்டு
பார்த்த இடத்தில் நின்றபடி அந்தக் கிழவன் தன் காலடியில் கிடக்கிற நாயை வெறித்துப் பார்க்கிறான்.
''நாங்கள் ஒண்ணாப் பொறந்த ஒருதாய் மக்கள்'' என்கிறான். ''பேர் வெவ்வேற, ஆனா நாங்க சகோதரர்கள்.
எங்கய்யா, புரியுதா, கடலுக்குள்ள கப்பலேறிப் போனாரு...
* * *
கிராமாந்தர என் வீட்டில்
உட்கார்ந்திருக்கிறேன். மழை பொழிகிறது. என் கண்ணெதிரேயே குன்றுகள் வீழ்ந்துபட்டு சமதரைகள்,
அவை தாண்டி நகரம். ஒரு ஒருமணி நேரம் முன்னால் அந்தக் கிழவன் என் வீட்டைத் தாண்டிப்போனான்.
அவன் கையில் அந்த நாய் இல்லை. பனியில் நின்றபடி நாம் பேசிக்கொண்டதைப் போல, அவன் தன்
சிநேகிதத்தை சாவடித்திருக்கலாம். அந்த ஃபோர்மேனின் சம்சாரம், கூடவே அவள் வயிற்றுக்குழந்தை
ஒண்ணா செத்துப்போனது போலவே நாயும் செத்திட்டது. தெருவில் கரைகட்டிய மரங்கள் இலைகளை
மழைத்துளிகளாய் உதிர்க்கிறதை என் ஜன்னல்வழியே பார்க்கிறேன். மஞ்சள், சிவப்பு மற்றும்
பொன்னிற இலைகள் நேராக கனமாகத் தரையிறங்குகின்றன. மழை அவற்றை அடி நொறுக்குகிறது. வீழுமுன்னான
ஒரு ஒயில்சுருட்டல், அந்தரவெளியில் அப்போதான பொன் மினுங்கல்... அந்த இலைகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.
அக்டோபர் என்றால் இலைகள் உதிரத்தான் வேண்டும். காற்று அவற்றை சமவெளிகளில் தரையிறக்குகிறது.
காற்றில் அவை அலைப்புற்று வீழ்வதே நியதி.
storysankar@gmail.com
– mob 91 97899 87842
BROTHERS –
Sherwood Anderson
முன்சொன்ன அத்தனை
செய்திகளையும் விவரங்களையும் பின்பகுதிகளில் மீண்டும் மீண்டுமாக அலையெழுப்பி கதையில்
நீர்வளையங்களை உருவாக்க முயல்வது ஆன்டர்சனின் பாணியாக இருக்கிறது. நிறைய வளையங்கள்
தேவையற்றவை, என்றாலும்அவரால் கையை அடக்க முடியவில்லை... தனியே ஆளில்லாத கட்டுமரங்கள்
திரும்ப காட்சியளவில் வருவது சிறு உதாரணம். வாழ்வின் புதிர்சார்ந்த பெரும் அமைதியை
எட்டவும் சுட்டவும் இவர் கதைகள் முயல்கின்றன எனலாம்.
எழுத்தாளர்களின் எழுத்தாளராக சிறப்பு பெற்றவர்
ஆன்டர்சன். எர்னஸ்ட் ஹெமிங்வே, வில்லியம் ஃபாக்னர், ஜான் ஸ்டீன்பெக், ஜே.டி.சாலிங்கர்,
அªமோஸி ஓஸ் ஆகிய எழுத்து ஜாம்பவான்களுக்கே இவர் ஆதர்சமாய் விளங்கினார்.
Comments
Post a Comment