நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி
ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர்
ஆர்னால்ட் ஃபைன் 1984ல் எழுதிய ஒரு
உண்மைக்கதை.
மணிபர்ஸ்
ஆர்னால்ட்
ஃபைன் (அமெரிக்கா)
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
மகா குளிரான ஒரு தினம்.
நான் வீடு திரும்புகிற வழியில்
காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ். யாரோ
தெருவில் தவறுதலாக தொலைத்திருக்கிறார்கள். கையில் எடுத்து விரித்துப்
பார்த்தேன். அதன் சொந்தக்காரர் பற்றி
எதும் துப்பு கிடைக்கலாம். ஆனால்
அதில் வெறும் மூணு டாலர்கள்
மாத்திரமே இருந்தன. கூட ஒரு கசங்கிய
கடிதம். பல வருடங்களாக அது
பர்சிலேயே இருந்திருக்கும் என்று பட்டது. கடித
உறை கந்தலாகியிருந்தது. அனுப்பியவர் முகவரி தவிர வேறெதுவும்
அதில் கண்டுகொள்ள முடியவில்லை. கடிதத்தைப் பிரித்தேன். அதில் எதும் அடையாளம்
சிக்கினால் நல்லது. எழுதப்பட்ட தேதி...
1924. ஏறத்தாழ அறுபது வருஷம் முன்னால்!
அழகான பெண்கையெழுத்து அது.
நீல மை. கடிதத்தின் இடதுமூலையில்
சிறு பூ சித்திரம். காதல்
வாசனை தட்டிய கடிதம் தான்.
மைக்கேல் என்பவருக்கு எழுதப்பட்டிருந்தது. எழுதிய பெண், தான்
அவனை இனி பார்க்கவரப் போவது
இல்லை, தன் அம்மா அவள்
காதலை மறுத்துவிட்டாள், என்றது கடிதம். இருந்தாலும்...
அவள் தொடர்ந்து எழுதியிருந்தாள். அவள் அவனை எப்பவும்
நேசிப்பாள். கீழே கையொப்பம். ஹன்னா.
அழகான கடிதம். ஆனால்
அந்த பர்சின் சொந்தக்காரர் மைக்கேல்,
அவரைக் கண்டுபிடிக்க அது உதவவில்லை. தொலைபேசிஎண்
தகவலில் இந்தக் கடிதம் எழுதிய
ஹன்னாவின் முகவரியைச்சொல்லி எண் கேட்கலாம். ''ஆபரேட்டர்...''
என பேச ஆரம்பித்தேன். ''இது
ஒரு வித்தியாசமான உதவி. எனக்குக் கிடைத்துள்ள
ஒரு மணிபர்சின் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்கப் பார்க்கிறேன் நான். பர்சின் ஒரு
கடிதத்தில் இருக்கும் முகவரி சொன்னால் அந்த
நபரின் தொலைபேசி எண்ணை உங்களால் தர
முடியுமா?'' தன் மேலதிகாரியிடம் பேசுகிறேன்,
என்றாள் அவள். அதிகாரி சிறிது
தயங்கினாலும், ''ம். அந்த முகவரியில்
ஒரு தொலைபேசி இருக்கிறது. ஆனால் அந்த எண்ணைச்
சொல்ல முடியாது'' என்றாள். ஆனாலும் அந்த எண்ணில்
பேசி என் கதையை விளக்கி,
அவர்கள் என்னிடம் பேச விரும்புகிறார்களா பார்க்கலாம்,
என்றாள். அப்படியே இணைப்பில் சில நிமிடங்கள் காத்திருந்தேன்.
அவள் திரும்ப வந்தாள். ''பேசுங்கள்''
என இணைப்பு தந்தாள். மறுமுனையில்
பேசிய அந்தப் பெண்ணிடம், அவளுக்கு
ஹன்னா என்ற பெயரில் யாரையாவது
தெரியுமா, என்று கேட்டேன். அவள்
மூச்செடுத்தபடியே, ''ம். இந்த வீட்டை
நாங்கள் வாங்கிய குடும்பத்தில் ஒரு
பெண், அவள் பெயர் ஹன்னா.
ஆனால் அது முப்பது வருடங்கள்
முன்னத்தைய கதை!''
''அவங்க குடும்பம் இப்ப
எங்கருக்குன்னு தெரியுமா?''
''சில வருடங்கள் முன்னால்
ஹன்னா அவங்கம்மாவை ஒரு நர்சிங் ஹோமில்
சேர்த்தது தெரியும். அங்க விசாரித்தால் பெண்
பற்றிய விவரங்கள் கிடைக்கலாம்.''
அவள் தந்த நர்சிங்
ஹோமின் பெயரை வைத்துக்கொண்டு அங்கே
தொலைபேசி மூலம் பேசினேன். அவர்
சொன்னபடி, அந்த மூதாட்டி சில
வருடங்கள் முன்பு இறந்துவிட்டாள். ஆனால்
அவர்களிடம் ஒரு தொடர்பு எண்
இருக்கிறது. அந்தப் பெண், ஹன்னாவின்
எண்ணாக அது இருக்கக் கூடும்,
என்றார்கள். நன்றி சொல்லிவிட்டு, அவர்கள்
தந்த எண்ணுடன் தொடர்பு கொண்டேன். அந்தத்
தொலைபேசியை எடுத்த பெண், ஹன்னவே
இப்போது ஒரு நர்சிங் ஹோமில்
தான் இருப்பதாகச் சொன்னாள்.
இந்த தேடுதல் வேட்டை
மொத்தத்துக்கும் மகா அபத்தம், என
நினைத்துக் கொண்டேன். ஒரு மணிபர்சில் வெறும்
மூணு டாலரும், ஒரு கசங்கிய கடுதாசியும்
... அது 60 வருஷப் பழசு - இந்த
நபரைத் தேடி இத்தனை மெனக்கிட
எனன இருக்கிறது? இருந்தாலும் ஹன்னா தங்கியிருக்கக் கூடும்
என்ற நர்சிங் ஹோமின் எண்ணை
அழைத்தேன். தொலைபேசியை எடுத்த மனிதர், ''ஹன்னா
இங்கேதான் இருக்கிறாள்'' என்று சொன்னார்.
அப்போது
ராத்திரி பத்து மணி. என்றாலும்
நான் அவளைப் பார்க்க வரலாமா,
என்று கேட்டுவைத்தேன். ம், என சிறிது
தயங்கினான். ''முயற்சி செய்யலாம். இந்நேரம்
பொது அறையில் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருப்பாள்'' என்றான். அவனுக்கு நன்றி சொல்லி உடனே
அந்த நர்சிங் ஹோமுக்கு சவாரி
விட்டேன். காவலாளியும் இரவுப்பணி நர்சும் என்னை வரவேற்றார்கள்.
பெரிய கட்டட வளாகம். மூணாவது
மாடியேறினோம். பொது அறையில் நர்ஸ்
என்னை ஹன்னாவுக்கு அறிமுகம் செய்தாள்.
வெள்ளிபாய்ந்த முடியுடன் அருமையான பெண். இதமான புன்னகையும்
கண்ணில் சிறு ஒளியுமாய் ஹன்னா.
நான் பர்ஸ் பற்றிச் சொன்னபடி
அந்தக் கடிதத்தை அவளிடம் காட்டினேன். இடதுமூலையில்
நீல நிற சிறு பூ
போட்ட கடித உறையைப் பார்த்த
கணம் அவள் பெருமூச்சு ஒன்றை
விடுத்தாள். ''பையா, இந்தக் கடிதம்
தான் நான் மைக்கேலிடம் கொண்ட
கடைசித் தொடர்பு.'' பார்வையைத் திருப்பிக்கொண்டபடி தனக்குள் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.
பின் மெல்லப் பேசினாள்.
''நான் அவன்மேல் ரொம்பப்
பிரியமாய் இருந்தேன். ஆனால் அப்ப எனக்கு
வயசு பதினாறுதான். ரொம்பச் சின்ன வயசு
எனக்கு காதல் கீதல் பண்ண,
என அம்மா நினைத்தாள். ஆகா,
அவன் ரொம்ப அழகா இருப்பான்.
பார்க்க சீன் கானரி, நடிகனைப்
போல அப்படியொரு அம்சம். நிசம்மாதான்...'' அவள்
தொடர்ந்தாள். ''மைக்கேல் கோல்ட்ஸ்டீன் அற்புதமான மனுசன். அவரைப் பார்த்தால்
நான் அடிக்கடி அவரை நினைச்சுக்கறதாச் சொல்லுப்பா.
ம்...'' எதோ சொல்லவந்து நிறுத்த
முயன்றாப் போல தயங்கினாள்.
''அவராண்ட சொல்லு. நான்
இன்னும் அவரைக் காதலிக்கிறேன். தெரியுமா...''
அவள் /பன்னகைத்தாலும் கண்ணில் நீர் திரண்டுவிட்டது.
''நான் கல்யாணமே பண்ணிக்கல. மைக்கேலைப் போல இன்னொரு நபர்
எனக்கு கிடைக்கவே மாட்டார்னு நினைச்சேன்.''
நன்றிசொல்லி விடைபெற்றுக் கொண்டேன். மின்தூக்கியில் முதல் தளம் வந்தேன்.
வாசல்பக்கம் காவலாளி கேட்டான். ''அந்தம்மாவால
உங்களுக்கு உபகாரம் ஆச்சுங்களா?'' சின்னதா
ஒரு துருப்பு கிடைத்தது, அவ்வளவுதான், என்றேன். ''அவரோட முழுப்பேர் இப்ப
தெரிஞ்சது. ம். இன்னும் கொஞ்ச
காலம் இதை விட்டுறலாம்னிருக்கேன். இன்னத்த முழு
நாளையும் இந்த நபரைத் தேடிச்
செலவழிச்சிட்டேன்.''
அந்த மணி பர்சை
வெளியே எடுத்தேன். பழுப்பு லெதர். சிவப்பு
பட்டியடித்திருந்தது. காவலாளி அதைப் பார்த்ததும்
சொன்னான். ''ஏ ஒரு நிமிஷம்!
அது கோல்ட்ஸ்டீனுடைய பர்ஸ். அந்த அடர்
சிவப்புப் பட்டியை வெச்சே அதைச்
சொல்லிருவேன். எத்தனை தரம்தான் இதைத்
தொலைப்பாரோ மனுசன். கூடத்திலேயே நான்
ரெண்டு மூணு தரம் எடுத்திருக்கிறேன்.''
''யார் கோல்ட்ஸ்டீன்?'' என்று
கேட்டேன். என் உடம்பு உதறியது
லேசாய்.
''ரொம்ப காலமா அவர்
எட்டாவது தளத்தில் தான் இருக்கிறார். அது
மைக் கோல்ட்ஸ்டீனின் பர்ஸ்தான். அதில் சந்தேகமேயில்லை. உலா
போகிற சமயத்தில் தவற விட்டிருக்கலாம்...''
அவனுங்ககு நன்றி சொல்லி திரும்ப
நர்ஸ் அலுவலகத்துக்கு ஓடினேன். காவலாளி சொன்னதைக் கேட்டுக்கொண்டு
என்னுடன் திரும்ப மின்தூக்கியில் எட்டாம்
தளம் வந்தாள் நர்ஸ். கோல்ட்ஸ்டீன்
இருக்க வேண்டுமே என்பது என் பிரார்த்தனையாய்
இருந்தது. எட்டாம் தளத்தின் பொறுப்பாளினி
நர்ஸ் சொன்னாள். ''இன்னும் அவர் பொது
அறையில் தான் இருக்கிறார்னு நினைக்கிறேன்.
ராத்திரி வாசிக்க அவருக்குப் பிடிக்கும்.
அருமையான பெரியவர் அவர்...''
ஒரே அறையில் தான்
அப்போது விளக்கு எரிந்தபடி யிருந்தது.
ஒரு மனிதர்... புத்தகம் வாசித்தபடி. நர்ஸ் அவரிடம் போய்,
பர்ஸ் எதையும் தொலைச்சிட்டீங்களா, என்று
கேட்டாள். ''இந்த நபர் ஒரு
பர்ஸைக் கண்டெடுத்திருக்கிறார். அது உங்களோடது தான்னு
தோணுது...''
ஒரு ஆச்சர்யத்துடன் அவர்
தலையுயர்த்திப் பார்த்தார். பின்பக்கப் பையில் கையை நுழைத்...
''ஓ என் பர்ஸ் இல்லை.''
அவரிடம் பர்ஸை நான் நீட்டிய
கணத்தில் அவர் முகத்தில் ஒரு
ஆசுவாசப் புன்னகை. ''ஆமா, இதுதான். மதியத்தில்
எங்கோ வழியில் விட்டிருக்கிறேன். உனக்கு
ஒரு பரிசு தரப் போகிறேன்...''
''அதெல்லாம் வேணா. நன்றி'' என்றேன்.
''ஆனால் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.
இந்த பர்சின் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க
வேண்டி... அந்தக் கடிதத்தை... நான்
பிரித்துப் படித்துவிட்டேன்.'' அவர் சிரிப்பு மாறியது.
''வாசிச்சியா?''
''படிச்சது மாத்திரம் அல்ல. ஹன்னா எங்க
இருக்கிறாங்கன்னு எனக்குத் தெரியும்!''
அவர் முகம் வெளிறியது.
''ஹன்னா? அவ எங்கருக்கான்னு உனக்குத்
தெரியுமா? எப்பிடி இருக்கா? இன்னும்
அதே அழகா இருக்காளா? சொல்லுப்பா.
தயவுசெஞ்சி சொல்லு...''
''சௌக்கியமா இருக்காங்க. நீங்க பார்த்த அதே
அழகுடன்...'' என்றேன் மென்மையாய். அந்தப்
பெரியவர் புன்னகைத்தபடியே கேட்டார். ''எங்க இருக்கா அவ?
நாளைக்கு அவளோட பேசுகிறேன்.'' என்
கையைப் பற்றிக்கொண்டார். ''உனக்கு ஒண்ணு தெரியுமா
தம்பி? எனக்கு அந்தப்பெண் மேல்
அபார காதல். அந்தக் கடிதம்
வந்தபோது, என் வாழ்க்கையே முடிஞ்சிட்டாப்ல
தோணியது. நான் கல்யாணமே பண்ணிக்கல.
அவளை என் வாழ்நாள் முழுதும்
காதலிச்சேட்டே இருப்பேன்.''
''திரு கோல்ட்ஸ்டீன்...'' என்றேன்.
''என்னோட வாங்க.'' திரும்ப மின்தூக்கியில் மூணாம்
தளம் இறங்கினோம். வராந்தாக்கள் இருண்டு கிடந்தன. பொது
அறை வழியில் சில இரவு
விளக்குகள். ஹன்னா அமர்ந்து தொலைக்காட்சி
பார்த்துக் கொண்டிருந்தாள்.
நர்ஸ் அவளைப் பார்க்கப்
போனாள். வாசல்பக்கம் என்னுடன் அவர் காத்திருந்தார். ''ஹன்னா?''
என்று மெல்ல அழைத்தாள். மைக்கேலைச்
சுட்டிக் காட்டியபடி சொன்னாள். ''இவரை உங்களுக்குத் தெரியுமா?''
கண்ணாடியை சரிசெய்து கொண்டாள் ஹன்னா. எதுவும் பேசவில்லை.
மைக்கேல் கிட்டத்தட்ட ரகசியம் போலப் பேசினார்.
''ஹன்னா.... நான் மைக்கேல்... என்னை
ஞாபகம் இருக்கா?'' அவளுக்கு மூச்சிறைத்தது. ''மைக்கேல்! என்னால நம்பவே முடியல்ல!
மைக்கேல்! நீ... என் மைக்கேல்!''
அவர் அவளைப் பார்க்க
மெல்லப் போனார். அவர்கள் இறுக
அணைத்துக் கொண்டார்கள். நானும் நர்சும் வெளியே
வந்தோம். எங்கள் கண்களில் கண்ணீர்
ஆறு.
ஏறத்தாழ மூணு வாரம்
கழித்து நர்சிங் ஹோமில் இருந்து
எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
''இந்த ஞாயிறு ஓய்வா வெச்சிக்க
முடியுமா? ஒரு கல்யாணம்... மைக்கேலும்
ஹன்னாவும் கைப்பிடிக்கிறார்கள்!''
அழகான கல்யாணம். நர்சிங்
ஹோமின் அத்தனை பேரும் அலங்காரமாய்
அதில் பங்குகொண்டார்கள். சாம்பல் பூத்தாப்போல ஒரு
உடையில் ஹன்னா. அழகாய் இருந்தாள்.
அழுத்தமான நீல சூட்டில் மைக்கேல்
இன்னும் உயரமாய்த் தெரிந்தார். நானா? கல்யாணத்தில் மாப்பிள்ளைத்
தோழனே நான்தான்!
அவர்கள் இருவருக்.குமாய்
ஆஸ்பத்திரி தனி அறை ஒதுக்கித்
தந்தது. ஒரு 79 வயது மணமகனும்,
76 வயது மணப்பெண்ணும் பதின் பருவ உற்சாகச்
சுழிப்புடன் வளைய வருவதை நீங்கள்
பார்க்க வேண்டுமானால், இந்த தம்பதியரைத் தான்
பார்க்க வேண்டும். ஏறத்தாழ 60 வருட ¢காதல் கதைக்கு
ஒரு சுபம்.
storysankar@gmail.com – Mob 91 97899
87842
ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்தால் தொடர சௌகர்யமாயிருக்கும்.
ReplyDeleteபின்னூட்டம் போடுவதை வர்ட் வெரிபிகேஷன் எல்லாம் இல்லாமல் எளிமையாக்கலாம்.
அந்த சௌகர்யத்தை வழங்கி விட்டேன் என்றே நினைக்கிறேன்... நன்றி ஸ்ரீராம் - எனக்கு இந்த பிளாக் என்பதே புது அனுபவம் தான் - என் படைப்புகளை நான் சகஜமாகத் தொலைத்து விடுகிறேன்...பிளாக் கில் போட்டால் கிடக்கும் பத்திரமாக... என்று ஒரு யோசனையில் பிளாக் எழுத வந்தேன்
DeleteI like yr stories for the past 5 years.bold themes and nice narration pondy sivs
ReplyDeleteநன்றி நண்பரே - நீங்கள் நிம்மதி பெற வாழ்த்துக்கள்!
Delete