பார்வை தொலைத்தவர்கள்
ஜோஸ் சரமாகோ

1998ம் ஆண்டின் நோபல் பரிசு
வென்ற நாவல்

மூலம் போர்த்துக்கீசிய மொழி 1995
ஆங்கில மொழியாக்கம் ஜியோவன்னி போன்திரோ 1997
தமிழில் எஸ். சங்கரநாராயணன் 2014


முதல் பகுதி
***
ஆரஞ்சு விளக்கு. முன்வரிசைக் கார்கள் ரெண்டு சிவப்பு மாறுமுன் உர்ர். உறுமின. பச்சைமனிதன் தோன்ற காத்திருந்த சனங்கள் கருப்புச் சாலையில் வெள்ளைப் பட்டைகள் மேலே சுறுசுறுத்தார்கள். பார்க்க வரிக்குதிரை அடையாளம் இல்லைதான், என்றாலும் எப்படியோ அப்பெயர். வாகன ஓட்டிகள் பொறுமையற்று கிளட்சில் காலை அழுத்... பெரிய எழுத்து த்... கார் ஸ்ஸ் சீறிக் கிளம்பத் தயார். சவுக்கு எந்நேரமும் சொடுக்கப்படலாம் என்று பதட்டத்துடன் துடிப்பாய் நிற்கிற குதிரைகள் போல கார்கள். பாதசாரிகள் கடந்திருந்தார்கள். என்றாலும போக்குவரத்து விளக்கு மாற கொஞ்ச விநாடிகள் தேவைப்பட்டன. சிலபேர் அதையும் எதிர்பார்த்துப் பொறுமை காத்தார்கள். அதொண்ணும் அத்தனை பெரிய தாமதம் அல்ல. நகரில் ஆயிரமாயிரம் போக்குவரத்து விளக்குகள். மாற்றி மாற்றி இந்த மூணு வண்ணங்களைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுத்தத்திலும் தாமதமாகிறபோது மொத்தத்தில் எவ்வளவு நேர விரயம்! சிக்னல்கள்... மானுட வெள்ளத்தின் மதகுகள். அவற்றால் போக்குவரத்து முட்டுமோதல்கள்.

                ஒருவழியாக , பச்சை. கார்கள் விருட்டென துரிதப்பட்டன. ஆனால் எல்லா கார்களுமே ஒரேசீராய்ப் புறப்பட முடியவில்லை. நடுவரிசையில் ஒரு கார் நின்றுவிட்டது. கார் கர் என்று செய்தது மக்கர். எதும் இயந்திரக் கோளாறாய் இருக்கலாம். உந்துவிசை மிதி கழண்டிருக்கிறதா? கியர் உள்ளே இறுகிக்கொண்டதா? சஸ்பென்ஷன் கோளாறா? பிரேக் செயலற்றுப் போயிற்றா? மின்சாரம் வரவில்லையா? எரிபொருள் தீர்ந்திருந்தாலொழிய, நடந்தது முதல் முறை என்று சொல்ல முடியாது. நெரிசலில் சில வாகனங்கள் சண்டித்தனம் செய்யவே செய்கின்றன.

                அடுத்து தெருவைக் கடக்க என்று குழுமிய பாதசாரிகள் காரோட்டி கையாட்டுகிறதை கவனித்தார்கள். அவனுக்குப் பின்னால் தேங்கிவிட்ட கார்கள் ...ளையிட்டன. பின்வரிசையின் சில காரோட்டிகள் காரில் இருந்து இறங்கிவந்திருந்தார்கள். சரி, இந்தக் காரைத் தள்ளி ஓரங்கட்டிருவம். மூடிக்கிடந்த கார்க் கதவுகளை படபடவென்று டபடபவென்று ஆத்திரமாய்த் தட்டினார்கள். உள்ளே இருந்த ஆள் திரும்பினான். முதலில் இந்தப் பக்கம், பிறகு எதிர்ப்பக்கம்... எல்லா பக்கமிருந்தும் டபடப. அவனும் கத்திக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் திரும்பத் திரும்ப... ஒரு வார்த்தை அல்ல, ரெண்டு. யாரோ அந்தக் கார்க் கதவைத் திறக்க அந்த வார்த்தைகள் வெளியே விழுந்தன.

                நான் குருடனாகிவிட்டேன்.

                யாரால் அதை நம்ப முடியும்? பார்த்தால் அந்தக் கண்கள் ஆரோக்கியமாகவே இருந்தன. பொலிவான கருமணிகள். வெளிப்படலம் நல் வெண்மை. பீங்கானாட்டம் கச்சிதப் பளபளப்பு. விரியத் திறந்த விழிகள். ஆனால் முகத்தின் சுருக்கங்கள், புருவங்கள் நெறிபட்ட நிலை, எல்லாமும் அவன் பதட்டத்தைச் சொல்லின.

                திடுதிப்பென்று அவன் பார்வையில் காட்சிகள் தொலைந்துவிட்டன. கடைசியாய் இருந்த காட்சியை அப்படியே உள்ளே வைத்துக்கொள்கிற பிரயத்தனத்துடன் உள்ளங்கையை இறுக்கி மூடியிருந்தான். கைக்குள்ளே அந்தக் கடைசிக் காட்சி... போக்குவரத்து விளக்கின் வட்டச் சிவப்பொளி, அதைப் பற்றிக்கொண்டு, விட்டுவிடாமல் காபந்து பண்ணுகிறாப் போல... நான் குருடனாகிவிட்டேன். நான் குருடனாகிவிட்டேன். குரல் நடுங்கியது. அவனைக் காரில் இருந்து வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். இறந்துவிட்டதாக அவன் சொல்லிக்கொண்டிருந்த அந்தக் கண்களில் கண்ணீர் பொங்கி, அவை இன்னுமாய் மினுங்கின. இதுமாதிரி சிலப்ப ஆயிருது, சரியாப்போகும் ஐயா. சிலசமயம் மனப்பிராந்தி இப்பிடி ஆக்கிவிட்டுருது. .. என்றாள் பெண் ஒருத்தி. போக்குவரத்து விளக்கு திரும்ப மாறியிருந்தது.

                கரிசனப்பட்ட சில பேர் அங்கே குழுமிவிட்டார்கள். என்ன நடக்கிறது என்று புரியாத பின்வரிசைக் காரோட்டிகள் ஏய், ஒத்துங்கய்யா, என்று சத்தம் எடுத்தார்கள். எதுவும் சின்ன விபத்தோ? யாரோ மோதி கார் ஹெட்லைட் கிளிங். கதவு நசுங்... எதானா என்ன, நடுரோட்டில் கும்பல் போடறதா? ஓரமா நின்னு பஞ்சாயத்து பண்ணுங்க. ஏய் போலிசைக் கூப்பிடுங்கப்பா. அந்தப் பேமானியை நெரிசலை விட்டு வெளிய எடுங்க முதல்ல.

                அந்தக் குருடன் கெஞ்சினான். எய்யா உங்களுக்குப் புண்ணியமாப் போகும், யாராவது என்னை வீட்ல கொண்டு விட்ருங்க. மனப்பிராந்தி பற்றிப் பேசிய பெண், ஆம்புலன்சை வரவழைச்சி பாவம் அவரை எதும் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகலாம். வேணாம், என தலையாட்டி குருடன் மறுத்தான். யாராச்சும் எங்க அடுக்கக வாசல்வரை கொண்டுவிட்டால் போதும். பக்கந்தான். அதுவே பெரிய உபகாரம். அப்ப கார்? யாரோ கேட்டார்கள். யாரோ பதில் சொன்னார்கள். கார்ச்சாவி கார்லயே இருக்கிறது. காரை ஓரங்கட்டு. இல்ல வேணாம், என மூன்றாம் குரல். நான் காரிலேயே அவரை வீட்ல கொண்டுபோய் விட்டிர்றேன். சரி என்கிற அங்கீகாரக் குரல்களை குருடன் கேட்டான். அவன் கையை யாரோ பற்றுகிறார்கள். என்கூட வாங்க... அந்த மூணாம் குரல்.

                முன் இருக்கையில் அவனை அமர்த்தினார்கள். தற்காப்புப் பட்டையை அணிவித்தார்கள். எனக்கு எதுவுமே தெரியல்ல, எதுவுமே... அவன் அழ ஆரம்பித்திருந்தான்.

                எங்க உங்க வீடு, அந்த மனிதன் கேட்டான். கார் கண்ணாடிகளுக்கு வெளியே பதிலுக்குத் துடிப்பாய் காத்திருக்கும் சனங்கள். அந்தக் குருடன் கையை கண்மேலே உயர்த்தி தோளைக் குலுக்கினான். ஒண்ணில்ல, இது... இது கருப்பு, கருப்பாய் இல்லை. எல்லாமே வெண்மையாய்த் தெரியுது. அந்தப் பெண் சொன்னது சரியோ என்னவோ. எனக்குக் கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறதால் இருக்கலாம். இந்த மனசு இருக்கே, சமயத்தில் வம்பாடு படுத்திருது. ச், அதெல்லாம் இப்ப எனக்கு வேண்டியதில்லை. அது ஒரு பேரழிவு. ஆமாம், கேடு. எனக்கு.

                உங்க வீடு எங்கருக்கு, தயவுசெஞ்சி அதைச் சொல்லுங்க. பேசுகையிலேயே கார் என்ஜின் உருமியது. திடுதிப்பென்று பார்வை போனதால் மூளையே மந்தித்துவிட்டாப் போல குருடன் தடுமாறினான். தன் முகவரியைச் சொன்னான். உங்களுக்கு எப்படி நன்றி சொல்லன்னே தெரியல்ல. மற்றவன் அதற்கு பதில் சொன்னான். ச், இன்னிக்கு நீங்க, எதோ எதிர்பாராதது, நாளைக்கு எனக்கும் அது சம்பவிக்கலாம் இல்லியா? நாளைக்கு யாருக்கு என்ன ஆவும், யாருக்குத் தெரியும்? ஆமாமா, அதுண்மை சார், இன்னிக்குக் காலைல நான் வீட்டைவிட்டு வெளிய கிளம்பியபோது, இப்படி ஒரு விபரீதம் ஆகிப்போகும்னு யாரால் நினைச்சிப் பார்க்க முடியும்...

                குருடன் திகைத்தான். என்ன நாம இன்னும் கிளம்பல்லே? சிவப்புல நிக்கிறம். ஹ்ம், இனி குருடனுக்கு எப்ப எந்த விளக்கு எரியும் எதுவும் தெரியப்போவது இல்லை.

                அவன் சலித்துக்கொண்டபோது வீடு சமீபித்திருந்தது. ஆனால் நடைபாதை நெடுக வாகனங்கள் நின்றிருந்தன. கார் நிறுத்த இடம் கிடைக்கவில்லை. பக்கத்துத் தெருக்களில் ஒன்றில்தான் போய் வண்டியை விடவேண்டுமாய் இருந்தது. அதே தெருவில் கதவைத் திறக்க ஓரச்சுவர் இடிக்கிறது. இந்தப் பக்கமாய் ஸ்டீயரிங்கில் உள்புகுந்து வெளிவர சிரமம். இறங்கி இங்கியே நில்லுங்க, நான்போய் காரை தள்ளி நிறுத்திட்டு வந்திர்றேன். குருடன் தனியாள் நடுத் தெருவில் நின்றபோது காலடி பூமி நழுவுகிறாப் போலிருந்தது. குப்பென்று உள்ளே பொங்கிய திகிலை அழுத்திவிட முயன்றான். முகத்தின் முன்னால் கைகளை வைப்பராய் அசைத்தான். அவன் சொன்ன அந்த பால் அலைபொங்கும் உள் ஆழியில் நீச்சலடிக்கிறாப் போல. என்றாலும் அடக்க மாட்டாமல் ஒரு விக்கல் அவன் வாயில் இருந்து எகிறிக் குதிக்... குமுன்,. சட்டென ரெண்டாம் ஆள் திரும்பியிருந்தான். மென்மையான கரம். அமைதியா இருங்க, நான் வந்திட்டேன்.

                நத்தைபோல் அவர்கள் கடந்தார்கள். விழுந்தேன், இடித்தேன் என்று திக் திக். குருடன் காலைத் தரையோடு தேய்த்தபடி நடந்தான். அப்போதுகூட தரை ஒழுங்கற்றுக் கிடந்ததில் தடுமாற வேண்டியிருந்தது. பொறுமை, வந்திட்டம் ஐயா, மற்றவன் மெல்லச் சொன்னான். வீட்ல யாராவது இருக்காங்களா?... தெர்ல. இவ வேலைலேர்ந்து வர நேரமிருக்கு. இன்னிக்குப் பார்த்து நான் சீக்கிரம் கிளம்பி... இப்பிடி முழிக்கணும்னு தலைல லிபி.

                தபாருங்க, இதொண்ணும் பெரிய விஷயம் இல்லைன்றேன். திடீர்னு ஒராள் கண்ணு தெரியாமல் போறதை கேள்விப்ட்டிருக்கமா நாம? கிடையவே கிடையாது. என்னைப் பத்தி பீத்திக்கறதா நினைக்க வேண்டாம் சார். இதுவரை கண்ணாடி கூட நான் மாட்டிக்கிட்டது இல்லை. பின்னென்ன, சரியாப் போகும், விடுங்க.

                கட்டட வாசல். ரெண்டு பெண்மணிகள் புருவந் தூக்கிப் பார்த்தார்கள். என்ன மாடிவூட்டுக்கார்ரை யாரோ கைத்தாங்கலா அழைச்சிட்டு வர்றாங்க. என்றாலும் யாரும் கேட்கவில்லை. என்னாச்சி உங்க கண்ணுக்கு... கேட்கத் தோன்றவில்லை. கேட்டாலும் நின்னு பதில்சொல்கிற நிலைமையில் குருடனும் இல்லை. ஆமாம், பாற்கடல். பெரிய ஸ்டவ்வில் பொங்கும் பாற்கடல். கட்டடத்துள் நுழைந்ததும் குருடன் சொன்னான். நன்றிங்க. உங்களுக்கு ரொம்ப சிரமங் குடுத்திட்டேன். இனி நான் பாத்துக்கறேன். சிரமம்லாம் ஒண்ணில்ல, நீங்க விசாரப்படாதீங்க. நான் மேல வரை வரேன். உங்களை இங்கயே இப்பிடியே விட்டுட்டுப் போனம்னா மனசு கேட்காது.

                குறுகலான லிஃப்ட்டுக்குள் திணறி நுழைந்தார்கள். எத்தனாவது மாடி? மூணாவது, உங்களுக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கேன்னு சொல்ல வார்த்தையே கிடையாது. அதெல்லாம் ஒண்ணில்ல, அதான் சொன்னேனே, இன்னிக்கு நீங்க. ம், நாளைக்கு நீங்களா இருக்கலாம். லிஃப்ட் நின்றது. வெளியே தரைக்கு வந்தார்கள். உங்களுக்குக் கதவைத் திறக்க உதவி செய்யணுமா. நன்றி. வேணாம். அதை நானே செஞ்சிருவேன்னு நினைக்கிறேன்.

                பைக்குள் இருந்து சிறிய சாவிக்கொத்து ஒன்றை எடுத்தான் குருடன். அதன் செதுக்கல்களைத் துழாவி சரியான சாவி தேடினான். சொன்னான். இதான் போல்ருக்கு. இடது கையால் கதவில் சாவிதுவாரத்தைத் தேடினான். கதவைத் திறக்... வேற சாவி போல.... விடுங்க. நான் பாக்கறேன். மூணாவது முயற்சியில் கதவு கிளிக். திறந்துகொண்டது. குருடன் உள்ளே பார்த்துக் கூப்பிட்டான். இருக்கியா இவளே? பதில் இல்லை. இல்லை என்ற பதிலும் இல்லை. நான் சொல்லல, அவ ஆபிஸ் விட்டு இன்னும் வரல்ல. கையை நீட்டியபடி அந்த வராந்தாவில் நடந்தான் குருடன்.

                பின் கவனமாகத் திரும்பி வந்தான். தலையை அந்த உபகாரி இருக்கலாம் என்கிற உத்தேச திசையில் திருப்பியிருந்தான். அடடா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது. அட சரீர உபகாரம், எதோ என்னால முடிஞ்சது, என்றான் அந்த தேவதூதன். இதுக்கெல்லாம் நன்றி கின்றின்னு பெரிய வார்த்தைல்லாம் வேணாம். உள்ள போயி வாகா உட்கார்ற மாதிரி உதவி செய்யவா. உங்க சம்சாரம் வர்ற வரை கூட இருக்கணும்னாலும் இருக்கேன். அந்த குருடனின் சுரத்து சட்டென மூட்டமாகி ஒரு சந்தேக நிழல் குப்பென அமுக்கியது உள்ளே. முன்னபின்ன தெரியாதவன். முகங்கூடவும் தெரியாதவனை வீட்டுக்குள் கூப்பிட முடியுமா? என்னென்ன திட்டமெல்லாம் அவன் போடமுடியும். சட்டென அவன் வாயில் துணியடைத்து கட்டிப்போட்டுவிட்டு வீட்ல அகப்பட்ட பெரிய சாமானைச் சுருட்... என்னால் என்ன செய்ய முடியும்? ச். அதெல்லா வெணாம். நான் சமாளிச்சுக்குவேன், என்றான். கதவைச் சாத்த வந்தபோது, எந்த உதவியும் வேணாம். போதும்... போதும்... என்று மெல்ல முணுமுணுத்தான்.


***
மின்தூக்கி மெல்ல கீழிறங்கும் சத்தம். ஹா, என நெகிழ்ந்தான். தனது தற்போதைய நிலையை மறந்தவனாய் குனிந்து கதவின் வெளியேகாட்டும் கண்ணாடிக்குமிழி வழியே எட்டி நோட்டம் பார்த்தான். மா பெரிய வெண்சுவர். புருவத்தில் அந்த கண்ணாடிக் குமிழின் உலோகக்குளிர் தட்டியது. கண் இமைகள் அந்த லென்சை வருடியதை உணர முடிந்தது. பார்வைதான் இல்லை. ஒரு மகா வெண்மை, ஊடறுத்துக் காணவியலா வெண்மை, எல்லாவற்றையும் போர்த்தி மூடிவிட்டிருந்தது. இது என் வீடு, தெரிகிறது. அந்த வீட்டின் நெடி. அந்தச் சூழல். அதன் அமைதி. அதன் மேஜை நாற்காலிகளை சாமான்களை வருடும்போதே அடையாளம் தட்டுகிறது. ஆனால் என்ன ஆச்சு எல்லாத்துக்கும்? அவை இருக்கும் இடமும் தூரமும் அவற்றின் அடையாளங்களும் எல்லாமே உருகிக் கரைந்து போனது. எப்படி? திசை தப்பிவிட்டது. மேல் கீழ் தப்பிவிட்டது.

                எல்லாரையும் போலவே சின்ன வயசில் அவனும் கண்கட்டி விளையாடி யிருக்கிறான். ஒரு அஞ்சு நிமிஷ கண்பொத்தலுக்குப் பின், ஐய பார்வை போறதுன்றது மகா கொடுமை என நினைத்திருக்கிறான். பார்வையற்றவனுக்கு கொஞ்சம் ஞாபகத்தில் இருந்தால் நல்லது. வெறும் வண்ணங்கள் பற்றிய நினைவுகள் மாத்திரம் அல்ல. அதன் உருவம் வடிவம்... அது இருந்த இடம் என்கிற சூழல் ஞாபகங்களும் கூட இருக்க வேண்டும். அவன் பிறவிக் குருடன் அல்ல, என்றால் தான் இதெல்லாம். அவனுக்கு என்ன நினைப்பு என்றால் குருடன் மனசில் காணும் இருட்டு, என்பது ஒளியற்ற ஒரு நிலை. நம்ம குருடுன்னு சொல்கிறது என்ன? எல்லா பொருட்களையும் இருட்டு ஒரு அமுக்கு அமுக்கிப் போர்த்தி மறைத்து விடுகிறது. அவ்வளவே என நினைத்திருந்தான். ஆனால் இதற்கு நேர்மாறாக, இப்ப அவன் நிலை என்ன ஆயிற்று? மகா பிரகாசமான ஒரு பளீர் வெண்மைக்குள் அவன் குதித்திருந்தான். பிரகாச பிரம்மாண்ட முழுமை. அப்படியே அவனை வாரிச் சுருட்டிக்கொண்ட பரி பூரணம். வெண் கொழுக்கட்டை அதனுள்ளே வண்ணங்களும் உருவங்களுமான சகலமுமே அடையாளமற்று அமுங்கிவிட்டன.

                வரவேற்பறை நோக்கி நகர்ந்தான் குருடன். மிக எச்சரிக்கையாகவே சுவரைப் பிடித்தபடியே நடந்தான். எதையும் இடித்துத் தள்ளிவிட்டு விடக் கூடாது, மாட்டோம் என நினைத்... க்ளிங். ஒரு பூஜாடி. அது அங்கிருந்த ஞாபகமே இல்லை. அட அவன் மனைவி வேலைக்குக் கிளம்புமுன் அதை அங்கே வைத்தாளோ என்னவோ. அது சரியான இடம் அல்ல, சரி வந்து வேறிடம் பார்த்து வைத்துக் கொள்ளலாம் என அவள் நினைத்திருக்கலாம். குனிந்து தரையில் அதன் சிதிலங்களை கணக்கிட முன்வந்தான். பளபள தரையில் பூஜாடியில் இருந்து சிந்திய தண்ணீர். பூக்களைக் கையில் திரட்டி அள்ள முயன்றான். அட பூஜாடி கண்ணாடி உடைந்திருக்கும் என்ற யோசனை இல்லாமல் போயிற்று. நல்ல நீளமான ஒரு கண்ணாடிச் சிதர். விரலில் நறுக். வலி. ஒரு குழந்தையின் எதிர்பாராத அதிர்ச்சி சார்ந்த திகைப்பு. கண்ணீர் கொட்டிவிட்டது. வெண்மை கவிந்த குருட்டுத்தனம். ஃபிளாட்டின் நடுமையத்தில் நான். அந்தி சாய அறைக்குள் இருள் கவிகிறது. கையில் மலர்கள். இரத்தம் வழிகிறது புரிகிறது. உடலை நெளித்து பையில் இருந்து கைக்குட்டை எடுக்க முயன்றான். தன்னால் முடிந்த அளவு அந்தக் காயத்துக்கு இறுக்கமாய் கட்டுப்போட்டான்.

                தடுமாற்றமாய் தள்ளாட்டமாய் மேசை நாற்காலிகளை உரசியபடி தரைவிரிப்பு ஆளை விழுத்தாட்டிறாத கவனத்துடன் சோபாவை அடைந்தான். அவனும் சம்சாரமும் அங்கே அமர்ந்தபடி ஹாயாக டி.வி பார்ப்பார்கள். அப்படியே அமர்ந்து மடியில் மலர்களை வைத்துக்கொண்டான். மெல்ல, மகா கவனமாய் கைக்குட்டையை காயத்தில் இருந்து அவிழ்த்தான்.

                ரத்தம் கையில் பிசுபிசுத்தது. வலி. அந்தக் காயத்தை நேரில் பார்த்தால் இத்தனை வலி இராது என்றிருந்தது. அந்த ரத்தத்துக்கு இப்போது பிசுபிசுப்பே அடையாளம். வண்ணம் இழந்திருந்தது அது. தனக்கு சம்பந்தமில்லாத எதோ ஒன்று என அதை ஓர் அந்நியத்தன்மையுடன் உணர்ந்தான். இது நானே வரவழைத்துக்கொண்ட துயரம். வம்பை வலியப்போய் வெத்தலை பாக்கு வெச்சி வரவழைச்சிக்கிட்டேன். நிதானமாக அவசரமில்லாமல் நல்ல கையால் அந்தக் கண்ணாடிச் சிதரைத் தடவிப் பார்த்தான்ன். சின்னக் கத்தியாட்டம் இல்லடா கீறிட்டது. காயப்படுத்தி யிருந்த சில்லுகளை யெல்லாம் கட்டைவிரலாலும் ஆள்காட்டி விரலாலும் மெல்லப் பிடுங்கினான். காயத்தைத் திரும்ப கைக்குட்டையால், இப்போது ரத்த வரத்தை அடக்குமுகமாக இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

                ஹாவென சோபாவின் பின்பக்கமாய்ச் சரிந்தான். சில சந்தர்ப்பங்களில் உடலின் சில பகுதிகள் சுணங்கிவிடுகின்றன. மரத்துப் போகின்றன. எல்லா அவயவங்களும் எப்பவுமே ஆக்ஞைகளை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிற மனுஷ எதிர்பார்ப்பு எடுபடாத போது நமக்கே ஒரு திகைப்பான அலுப்பு. விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் இயலாமை. இயல்பான மந்தத்தைவிட அதிகமான சோர்வு அவனை எட்டுகிறது. ஆளை அப்படியே அமுக்கி உட்கார்த்திவிடுகிற ஆயாசம் அது. ஏய் நீயென்ன ஒருவேளை கண்ணு தெரியல்லன்னு நாடகம் கீடகம் ஆடறியா, என திடீரென்று தனக்குள் கேட்டுக்கொண்டான். சும்மாவாச்சிம் கண்ணை மூடறதும் திறக்கறதுமா என்ன காரியம் இது?

                ஒவ்வொரு முறையும் அவன் கண்ணை மூடி திறக்கிறபோது ஒரு பயணத்தில் இருந்து திரும்பினாற் போல அவனை அவன் பார்க்கிறான். அவனுக்காக அந்த அவன் காத்திருக்கிறாப் போல... விநோதமான கற்பனைகள்! எல்லாம் அப்படியே அவனுக்காகக் காத்திருக்கின்றன. இந்த பூமியின் சகல வஸ்துகளும் வர்ணங்களும் அவனுக்குத் திரும்பக் கிடைத்து விடுகிறாப் போல. எல்லாம் சரியாயிரும் என்கிற நம்பிக்கையின் ஊடே லேசாய் எட்டிப்பார்க்கும்... சந்தேகத் திகில். நடந்தது கனவா, இப்போது நடக்கிறதே இது கனவா? சரியா வந்துருமா? எப்போ? எப்படி? என்னவோ சத்தியமா நடக்கும். என்ன நடக்கும் தெரியவில்லை. அவன் காத்திருக்கத் தான் வேண்டும். அந்தக் கண அலுப்பில் இந்த வார்த்தைகளுக்கு எத்தனை வீர்யமான அர்த்தம் கிட்டிவிடும்? உறக்கம் கலைந்த அவனது உள் விழிப்பு நிலையில், இப்படி வெறுமனே எல்லாம் சரியாப் போயிரும்னு விரல் சப்பிட்டு உட்கார்ந்திருக்கிறதா என்று இருந்தது. சரியாவுமா... ஆவாதா, ஆவுமா... ஆவாதா... என கிழவனின் உயிராய் இழுத்துக்கிட்டுக் கிடக்க முடியுமா நம்மால்? ஆக சில சந்தர்ப்பங்களில் எதும் துணிச்சலான முடிவு எடுக்கவேண்டி ஆகிப்போகிறது. நான் என்ன பண்ணிட்டிருக்கிறேன் இப்ப? மடியில் மலர்கள்.

storysankar@gmail.com – mob 91 97899 87842

Comments

Popular posts from this blog