இலக்கிய வீதி

இனியவன்

இவன்

எஸ். சங்கரநாராயணன்


னியவனை இலக்கிய உலகில் எப்படி வகைமைப் படுத்துவது. இது சிக்கலான விஷயம் தான். என் பாணியில் சொல்வதானால், என்னைப் பொறுத்தவரை, எனக்குப் பிரசவம் பார்த்தவளும் அவளே, ஃபேமிலி டாக்டரும் அவளே. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கையில் நான் எழுத வந்தேன். எழுத்து என்றால் என்ன, தெரியாது. வாழ்க்கை என்றாலே என்ன, தெரியாது. அடங்காத, திமில் சிலிர்த்த பருவம். நானே எழுதி நானே நடிக்கும்… என்பார்களே… என் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது.

இதில் தற்செயலாக நான் எழுத்துக்குள் தடுக்கி விழுந்தேன். என் நண்பன் ஒருவன், சுப. சுப்பிரமணியன் ஒரு துணுக்கு குமுதத்தில் எழுதிப் போட, அது வெளியானதைப் பார்த்து நானும் எழுத வந்தது… என்னை எழுத்தாளன் ஆக்கிவிட்டு அவன் ஓய்வு கொண்டுவிட்டான். நான்? என்னால் ஓய்வு கொள்ள முடியுமா தெரியவில்லை. 75 நூல்கள். பத்து நூல்கள் பல்கலைக் கழகங்களில் இளங்கலை / முதுகலை அறிமுக, தற்கால இலக்கியப் புனைவுகளாக அங்கிகாரம், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு… தவிர என் தேர்வுப்படி நானே உலக இலக்கியத்தைத் தமிழில் தர முகங் கொள்கிறேன்… 1998 நோபல் பரிசு பெற்ற நாவலான ‘பார்வை தொலைத்தவர்கள்‘ நூலை (ஜோஸ் சரமாகோ) தற்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்… என வாழ்க்கை தடங் கண்டுவிட்டது.

எழுத வந்த காலத்தில் எதை எழுத, எப்படி எழுத என்கிற சவால்கள். நான் மதுரையில் கல்லூரி படிக்கிறேன். கதைகள் நாலு அனுப்பினால் ஒண்ணு வெளியாகும். இப்ப என்ன பண்ண, எதுவும் வெளிவர மாட்டேங்குதே, எழுதுவதை நிறுத்திறலாமா, என நினைக்கையில் ஒண்ணு வெளியாகி திரும்ப ஆளை நிமிர்த்தி விடும். புகழ் ஒரு போதை. திரும்பத் திரும்ப அது நம்மை வசிகரித்துக் கொண்டே யிருக்கும். கண்டவர் விட்டிலர். விட்டவரும் கண்டிலர்,.. என்பதும் உண்மை.

எதோ இதழில் இலக்கிய வீதி பற்றி செய்தி வாசிக்கிறேன். இளம் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக இலக்கிய வீதி. அதன் நிறுவனர் இனியவன். மதுராந்தகம் அதன் தாயகம். மாதம் ஒரு இலக்கியச் சந்திப்பு. பிரபலமான / இலக்கிய அங்கிகாரம் பெற்ற ஓர் எழுத்தாளரை வரவழைத்து, எழுத்துக்குப் புதியவர் முன் உரையாடச் சொல்கிறார்கள். அவரது ஒரு படைப்பு, அங்கே விவாதத்துக்கும் எடுத்துக்கொள்ளப் படுகிறது. ஒருவர் அதை மேடையில் திறனாய்வு செய்கிறார். அது முடிந்ததும் அதன் ஆசிரியர் அந்தத் திறனாய்வுக்கு பதில் சொல்கிறார். அதன் பின் இளம் எழுத்தாளர்கள் அவரோடு உளமாற உரையாடுகிறார்கள். அது அந்தப் படைப்பு பற்றியும், பொதுவான படைப்புத்தளத்திலும் கொள்வினை கொடுப்பினையாக அமைகிறது…

என்ன சமையல் என்று கேட்கும்போதே நாவூறி விடுகிற மாதிரி, மதுரையில் இருந்த நான், இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஏங்கினேன். என்ன வேலையில் அமரப் போகிறேன் தெரியாது. எழுத்தாளன் எனவே முழுநேர அளவில் என்னை வரித்துக் கொள்வதானாலும் ஆட்சேபணை இல்லை… என்று பட்டது. நமக்கென்ன ஆட்சேபணை. பிரச்னை படிக்கிறவன் பாடு, என்றிருந்தது.

பி.எஸ்சி. வேதியியல் படித்து முடித்ததும் வேலை தேடி என சென்னையை நாடினேன். சென்னையில் இருந்து சில மணிப் பயணம் மதுராந்தகம். இனியவனுக்கு ஒரு கடிதம். உங்கள் அமைப்பு பற்றிய செய்திகள் அறிந்து மகிழ்கிறேன்… அடுத்த கூட்டம் பற்றி தகவல் சொல்லுங்கள்…

மாதம் ஒரு கூட்டம். அப்போதெல்லாம் கட்டாயம் நாங்கள் ஒரு பத்து இருபது பேர் ஆஜராகி விடுவோம். அதில் மது. ராஜந்திரன், வெங்கடேச ரவி, தாரா பாரதி, ‘அவன்‘ என்கிற பெயரில் எழுதும் ராகவேந்திரன், எம்.வி.குமார், தங்க சிவராசன், வேடந்தாங்கல் சுகுணன், பல்லவன், பூங்குருநல் அசோகன், எஸ். குமார், எஸ். குமாரகிருஷ்ணன், கே.ஜி. ஸ்ரீதுரை… என நினைக்க நினைக்க இந்தப் பட்டியல் பெரிதாகும். எல்லாருமே அந்த வளாகத்தில் புழங்க ஆரம்பித்தபின் எழுத்தாளர்களாகச் சிறந்து பரிணமித்தார்கள், என்பது குறிப்பிடத் தக்கது.

அந்த மாதம் விவாதிக்க இருக்கிற படைப்பை, அது நாவலோ, கட்டுரைத் தொகுதியோ, முன்பே வாசித்து நமது திறனாய்வை மனசில் வரைந்து கொண்டு நாங்கள் போனால், அங்கே அதன் திறனறிவுறுத்தி ஒருவர் மொழிவார். நமது மதிப்பீடுகளை அத்தோடு ஒப்பிட்டபடியே நாங்கள் கேட்போம். முடிவில் அதனைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்க்கிறது. திறனாய்வாளரும் பேசுவார். மூல நூலாசிரியரும் உரையாடுவார். வளர்ந்து வரும் இளம் கலைஞருக்கு எத்தனை உற்சாகமான உத்வேகமான சூழல். தவறுகளை செம்மைப் படுத்திக் கொள்ளவும், எழுத்தைச் செழுமைப் படுத்திக் கொள்ளவுமாக பெரும் பயிற்சியை அது அளித்தது. சரியென நினைத்தவற்றை நாங்கள் ஒளிவு மறைவு இன்றி ஓங்கிச் சொல்லவும் வாய்த்தது அது. இனியவன் எங்களை அடக்க முயற்சி செய்ததே இல்லை. அவை நாகரிகம் மீறக் கூடாது என்பது தவிர கருத்து சுதந்திரம் பேணப்பட்ட ஆரோக்கியமான சூழல் அது. அங்கேவர இலக்கியவாதிகள் ஆர்வப் பட்டார்கள். சில ‘பேனா மினுக்கிகளோ‘ தயக்கமும் காட்டினார்கள், என்பதே இலக்கிய வீதிக்குப் பெருமை.

ஒரு உதாரணம் சொல்ல முடியும். இலக்கிய வீதி நடத்தும் ஒரு கவியரங்கம். அந்த 80 களின் கவியரங்கம், அரசியல் சார்ந்த பகிடிகளுக்குப் பஞ்சம் இராது, என்பதை நாம் அறிவோம். முன் வரிசையில் குமரி அனந்தன். இலக்கியச் செல்வர். ரெட்டைக் குதிரை சவாரி செய்ய அவருக்கு ஆசை-. இலக்கியத்திலும அரசியலிலும். எதேதோ கட்சிகளில் இருந்தார். தனிக் கட்சி வேறு ஆரம்பித்தார். பிறகு திரும்ப, முன் இருந்த கட்சியிலேயே போய் இணைந்தார்…. குமரி அனந்தன் முன் வரிசையில் இருக்கிறார். மேடையில் தாரா பாரதி, இளம் கவிஞர் தாரா பாரதி, அவரைப் பார்த்துக்கொண்டே பாடுகிறார்…

காலையில் ஒரு கட்சி மதியம் ஒரு கட்சி
மாலையில் தனிக் கட்சி மறுபடியும் தாய்க்கட்சி…

அசட்டுச் சிரிப்பு சிரித்து அடக்கிப் பார்த்தார் குமரி. முடியாமல் அப்படியே எழுந்து அரங்கை விட்டு வெளியே அவர் போகையில், மொத்த அரங்குமே கைதட்டி அவரை வழியனுப்பி வைத்தது.

இலக்கிய வீதியின் கவியரங்கங்களும், விமரிசன அரங்கங்களும் முக்கியமானவை. தினவும் வீர்யமுமாய் இளைஞர்களை அவை உருவேற்றி வளர்த்தன. எழுத்தில் பிடியும் பிடிப்பும் நான் கண்ட இடம் அது. என் கதைகள் மெருகேறி வந்தன. ஒரே வாரத்தில் 13 கதைகள் எல்லாம் எனக்கு வெளியாக ஆரம்பித்தன. இனியவன் புன்னகைப்பார். இதில் தானே நிதானம் வரும், என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

விவாத மேடையில் என் முறை.

ஜெயந்தனின் இரு நூல்கள். அரும்புகளை, நினைக்கப்படும், என இரு நூல்கள் என நினைக்கிறேன். அவை பற்றி நான் பேச பணிக்கப் பட்டேன். ஜெயந்தன் வந்திருந்தார். கூட கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. டாக்டர் ஔவை நடராசன். மேடையில் கூட நான். ஒருமாதிரி நாற்காலிக்குப் பொருந்தாத மாதிரி அமர்ந்திருந்தேன். மேடையிலும் பயத்தில் குரல் கீச்சிட்டு ஒலித்தது. மோசமான ஊசியில் பாடும் கிராமஃபோன் ரெகார்டு போல. என்ன பேசினேனோ, எனக்கு விளங்கவில்லை. கேட்டவர்கள் பாவம்… படபடப்புடன் திரும்ப வந்து உட்கார்ந்தேன். டாக்டர் ஔவை நடராசனார் ஐயாவுக்கு என் பேச்சு பிடித்திருந்தது. என்னை அதைவிட. இன்றளவும் என்மேல் வாஞ்சை பாராட்டுகிறார்.

கூட கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. என்னை தன் மகன் போல கடைசிவரை அவர் பாராட்டினார். தற்போது அவர் இயற்கை எய்திவிட்டார்.,

என் முதல் நாவல் ‘நந்தவனத்துப் பறவைகள்‘ கலைஞன் பதிப்பகத்தில் வெளியானது. என்னை வழிப்படுத்தியவர் டாக்டர் ஒளவை அவர்கள். வழி நடத்தியவர் இனியவன். பி. எஸ்சி. வேதியியல்  நான் படித்த அதே பல்கலைக் கழகத்தில், என் முதல் நாவல் வெளிவந்த ஜோரில், எனக்கு வயது 20… முதுகலை மாணவர்களுக்கு நவீன இலக்கியப் பாடமாக அமைந்ததை வியக்காமல் என்ன சொல்ல?

இனியவனும், இவர்களும் என்னைவிட என்னை அறிந்தவர்களாய் இருந்தார்கள் என இப்போது நெகிழ்ச்சியுடன் நினைக்கிறேன். இன்று என் கதைகள் சிறப்பு அந்தஸ்துடன் வெளிவருகின்றன. சிறப்பு அழைப்புகள் என பல்கலைக் கழகங்களிலும், கௌரவ மேடைகளிலும் நான் பெறும் வாய்ப்புகளின் அடிப்படை இலக்கிய வீதி தான் அல்லவா? விதைக்கு நீர் ஊற்றி வளர்த்து விட்டவர்கள் அவர்கள்.

இலக்கிய வீதியின் இளம் படை பெரும் இதழ்களிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் பரவலாய் வளைய வருகிறார்கள். நான் உட்பட, அனைவருமே இலக்கிய வீதி கூட்டங்களில் எங்கள் கதைகளை எழுதிக்கொண்டு வந்து வாசித்து திருத்தங்கள் செய்து அனுப்பி வளர்ந்தவர்கள் தாம். ஒரு கதையரங்கத்தில் ‘சங்கரநாராயணன் மரணம்‘ என நான் ஒரு சர்ரியலிசக் கதை வாசித்ததும், அது பிறபாடு IGNOU பாடத்துக்காக ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் பெற்றது குறிப்பிடத் தக்கது.

இலக்கிய வீதியில் நாங்கள் பட்டை தீட்டப் பட்டோம். அறிவு வளாகம் அது. அப்படி அமைப்புகள் இன்று இல்லை. ஆய்வு வட்டங்கள் என சிலவற்றுக்கு இப்போது நான் போய் வந்தாலும் அவை வறட்டுத்தனமாய், விமரிசனம் என்ற பெயரில் செருப்புத் தக காலைக் குறைக்கப் பார்க்கின்றன…

எனது முதல் நாவலை சென்னை எஸ்பிளனேடு Y M C A கூட்டத்தில் டாக்டர் ஔவை தலைமையில் வெளியிட்டோம். இனியவன் அதில் கலந்து கொண்டு வாழ்த்தினார். எனது நடை எப்பவுமே இனியவனை மயக்குவதாய் இருக்கிறது.

எனது ஒரு நூலை இனியவனுக்கு சமர்ப்பித்தேன். பெப்ருவரி -30 என்ற சிறுகதைத் தொகுதி அது.

காலப் போக்கில் இலக்கிய வீதியின் செயல் வேகம் அத்தனைக்கு இல்லை. பல காரணங்கள். வேலை நிமித்தம் எங்கள் ஜமா பிரிந்தது. இடப் பெயர்ச்சிகள். அவரது உடல் நலம்… ஆனாலும் கம்பன் கழகத்தில் செயல்வீரராக அவரை திரு ஆரெம்வி ஐயா அருகழைத்துக் கொண்டார். அயரா இலக்கியப் பணியாளர் இனியவன். கம்பன கழகக் கூட்டங்கள் தவிர, தற்போது இலக்கு என்கிற அமைப்பில் இளைஞர்களை எழுச்சிப் பாதையில் ஊக்குவிக்கும் பணியையும், கிருஷ்ணா ஸ்வீட்சுடன் இணைந்து இலக்கிய நிகழ்ச்சிகளையும் கையில் எடுத்துத் திறம்படச் செய்து வருகிறார் இனியவன்.

இனியவன் தற்போது, அமரரான எழுத்தாளர்களின் படைப்புகளின் மறு வாசிப்பு என உரைகளை ஒழுங்கு செய்து வருகிறார். மாதம் ஒரு இலக்கிய எழுத்தாளருக்கு இலக்கிய வீதி சார்பில் அன்னம் விருதும் வழங்குகிறார்.

அவர் கையால் அன்னம் விருது பெற்றவர்களில் நானும் ஒருவன்.

தற்போது இனியவன் தொண்டையில் ஒலி திரளாமல் பேச சிரமப் படுகிறார். என்றாலும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கிறதில் அவர் செலுத்தும் அக்கறை வணக்கத்திற்குரியது. அவரது மகள் திருமதி வாசுகி பத்ரியும், பெயரன், பெயர்த்தி, மாப்பிள்ளை உட்பட அவரது, இனியவனது செயல்வீரர்கள் என இயங்குவது அவர்மேல் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும், தமிழ்மேல் அவர்கள் அனைவரின் பற்றையும், ஆர்வத்தையும் சொல்ல வல்லது.

இனியவன் ஆரம்பத்தில் அவரே புனைகதை எழுத்தாளர். குமுதம் போன்ற பிரபல இதழ்களில் எழுதி வந்தவர் தான். எஸ்பி. முத்துராமன் போன்ற பெரும் செல்வாக்கு உள்ள திரைப்படத் துறையிலும், ஆரெம்வி ஐயா போன்ற பிரமுகர்கள் சார்ந்த அரசியல் துறையிலும், டாக்டர் ஔவை போல பெரும் தமிழறிஞர்கள் சார்ந்த பண்பாட்டுத் துறையிலும் அவருக்கு நண்பர்கள், அவர்மேல் மரியாதை கொண்டுள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவர் பெரும் திரைத்துறையாளராகவோ அரசியல்வாதியாகவோ, எதும் அரசு சார்ந்த துறையிலோ அணி பெற்றிருக்க முடியும். என் கடன் பணி செய்து கிடப்பதே என இப்படி வேறு யார் கிடைப்பார்கள் நமக்கு?

எளிமை. அதிராத பேச்சு. இனிய முகம். சிறியவர் பெரியவர் என உருவு கண்டு எள்ளாமை. காய்தல் உவத்தல் இல்லாத அன்பு பாராட்டல்… பார்த்த கணம் நட்பு பாராட்டும் குணம்… இனியவன் வாழ்க.

அவரது வாழ்க்கை வரலாற்று நூலை ராணிமைந்தன் எழுத, இந்த ஞாயிறு (12,10,2014) ஏவியெம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில், கலைஞன் பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.


இனியவனுக்கு சொல்மண்டபம் தந்த கலைஞனுக்கும், ராணிமைந்தனுக்கும் இதயபூர்வ நன்றி.

storysankar@gmail.com - Mob 91 97899 87842

Comments

  1. விழா சிறப்புற நடந்திருக்கும்!

    இனியவனை அறியத்தந்தமைக்கு என் இனிய நன்றிகள்.

    ReplyDelete
  2. அற்புதம் ஐயா!
    தன உடல் பொருள் அனைத்தையும் இலக்கியத்திற்கு அர்ப்பணித்த அந்த சாதனையாளரின் வாழ்க்கை வரலாறு எழுதிய ராணிமைந்தன் அவர்களுக்கு நன்றி.
    விழா சிறப்புற நடந்ததில் மிக்க மகிழ்ச்சி எதிர்பாரா வேலை காரணமாக அந்த இனிய விழாவை காண முடியவில்லையே என்று வருத்தமுற்றேன்.
    இனியவன் அவர்களின் குடும்பத்தார் அனைவருமே உயர் பண்புடையவர்கள். இனியவன் அவர்களின் தமக்கையார் வீட்டில் தங்கிப்படித்த அவரது மகள் வாசுகியுடன் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அவர்கள்தான் எங்களுக்கு இடம் அளித்திருந்தனர்.சிறுவயதில் அவர்கள் வீட்டில் ஒருவராகவே வளர்ந்தேன். அவர் எழுதுவதை அவர் அறியாமல் எட்டிப் பார்ப்பேன்.அவர்கள் வீட்டுத் திண்ணையில்தான் எனது சிறு வயதுப் பொழுதுகள் கழிந்தன. சென்னையில் இருந்து கிராமத்திருக்கு கோடை விடுமுறையில் வரும் பத்ரியுடம் விளையாடிய நாட்கள் மறக்க இயலாதவை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நான் எழுதிய ஒரு கதையை படித்த பத்ரி அதை கொண்டு போய் அரும்பு என்று சிறு பத்திரிகைக்கு எனக்கே தெரியாமல் கொடுத்து பிரசுரம் செய்து விட்டு எனக்கு தகவல் சொன்னார். பிறரை ஊக்குவிப்பதில் அவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இப்போது அதே பணியை சிபி , யாழினி செய்து வருவதில் ஆச்சர்யம் இல்லை.அது ரத்தத்திலும் சித்தத்திலும் கரைந்துள்ளது.
    எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் கொண்டுமுயற்சித்து வருவதற்கு இனியவன் அவர்களே முக்கிய காரணம். தற்போது மூங்கில் காற்று என்ற வலைப் பதிவில் எழுதி வருகிறேன்.அவ்வப்போது பத்திரிகைகளில் எனது படைப்புகள் பிரசுரமாவது அறிந்து மகிழ்பவர் அவர்.
    என்னைப் போன்ற ஏகலைவர்களுக்கு கட்டை விரல் கேட்காத துரோணாச்சாரியார் அவர்.

    ReplyDelete
  3. கருத்திடுவதற்கு தடையாக உள்ள Word verification ஐ நீக்கினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog