சி று க தை
நன்றி குங்குமம்
வார இதழ்
ஊர் மாப்பிள்ளை
எஸ். சங்கரநாராயணன்
பஸ் நிலையமா, அது
நிறுத்தமா தெரியாது. சின்ன ஊரின் சின்ன
பஸ் நிலையம். இரவு பத்துமணி கடைசி
பஸ் அங்கிருந்து கிளம்பும். காலையில் நாலே முக்காலுக்கு திரும்ப
அங்கே பஸ்கள் நடமாட ஆரம்பிக்கும்.
ஒரு காலை பஸ் ஸ்டாண்டில்
அவன் சுயம்புவாய் முளைத்தாப் போலிருந்தது. நிழற்குடை என சிறு கட்டடம்.
அறை அல்ல. நாலு சுவரில்
ரெண்டு மாத்திரமே கட்டிய இடம். அதன்
ஒரு ஓரம் அவன் படுத்துக்
கிடந்தான்.
நாடோடி. சதா அலைவதும்
திரிவதுமாய் நாய் வாழ்க்கை. ஆனால்
நாய்கள் சிறு எல்லைகளோடு நிறுத்திக்
கொள்கின்றன. அவற்றைத் தாண்டி அவை பாதுகாப்பில்லாமல்
உணர்கின்றன ஏனோ. அவன் மனிதன்...
எல்லைகள் அவனை ஆயாசப்படுத்துகின்றன. பொங்கும் கடல்
அலை போல அவன் தன்
எல்லையை மீண்டும் மீண்டும் விரித்தபடியே இருக்க ஆசைப்பட்டிருக்கலாம். அகாடின் வாத்தியம்
விரிய விரிய இசை விகசிக்கிறது.
ஆனால் அலை என்றால் இரைச்சல்
இருக்கும். இவன் பொதுவாக அமைதியாகவே
இருந்தான். திடீர் திடீரென்று தனக்குள்
சிரித்துக் கொள்வான். சில சமயம் விழுந்து
விழுந்து சிரித்தபடி எங்கோ ஓடுவான்...
பயமோ, வாழ்க்கை சார்ந்து
அழுகையோ, அலுப்போ அவனிடம் தெரியவில்லை.
வீடு வாசல் குடும்பம்... எல்லாம்
உதறி ஏன் இப்படி வந்தான்?
இங்கே எப்படி, எதற்கு வந்தான்?
அவன் சட்டையில் மேலும் கிழிசல்கள்... எத்தனையோ
ஊர் சுற்றித் திரிந்திருப்பான். இங்கே அவனுக்கு என்ன
பிடிப்பு, ஈர்ப்பு கிடைத்ததோ. ஊர்
ஜனங்களுக்கே பிடிபடாத என்ன சுவாரஸ்ய ரகசியம்
அவனுக்குக் கிட்டியதோ. பதில்களை ரகசியம்போல அவன் தன் மூட்டையில்
வைத்திருக்கிறான். ரகசியம் பூரணமானால் மௌனம்
கொழுக்கட்டையாகிறது. அவன் சுமந்துசெல்லும் மூட்டை,
அதுவே கொழுக்கட்டை. முக்குருணிப் பிள்ளையார்க் கொழுக்கட்டை.
யாரிடமும் அவன் கைநீட்டிப் பார்க்க
முடியாது. பசிக்குமா அவனுக்கு? வயிறே அற்று நடமாடுகிறானா
அவன்! என்ன சாப்பிடுகிறான்? எப்படி,
எப்போது அவனுக்குச் சாப்பிடக் கிடைக்கிறது? கவலைச் சுருக்கம் காட்டாத
முகம். எதையும் உள்ளே போட்டுக்கொள்ளாத
அளவில் அவன் முகம் தெளிந்து
கிடந்தது. அதனால் அவன் கண்கள்
விளக்கேற்றிக் கொண்டாப்போல அவன் சிரிக்கையில் ஜொலித்தன.
அழுக்கானவன். அழுக்-கனவான்! கயிற்றுப்
பிரிகள் போல முடிகள் சிதறித்
தெரியும் தலை, மீசை, தாடி.
ஆனால் அவன் மகா அழகனாய்த்
தெரிந்தான். அடர்த்தியான இமைகள். கண்கள் மைதீட்டினாற்
போல பெரிசாய் கருமையாய் வசிகரமாய் இருந்தன.
பகலில் இஷ்டம் போலச்
சுற்றித் திரிந்தான். சினிமாத் தியேட்டர் பக்கம், மில் பக்கம்,
ஆஸ்பத்திரி, பஞ்சாயத்துப் பூங்கா என்று ஒரு
சக்கரம் போய்வருவான். ஆனால் ஜாகை என்று
பஸ் நிறுத்தத்தை வரித்துக் கொண்டிருந்தான். நல்ல மழை என்றால்
கூட, அவசரம் அவசரமாய் வீடு
திரும்புகிறாப் போல பஸ் நிலையம்
திரும்பி விடுவான். இதைவிட நிழல்பாங்கான, மேல்கூரைப்
பாதுகாப்பான இடங்கள் இருந்தாலும், ஆ,
அது அவன் இடம்... என
நினைத்தான் போலும்.
கல்யாண வீடுகள் போனால்
வாசலில் நின்றான். பார்க்கிறவர்கள் சாப்பிட எதுவும் கிடைக்குமா
என அவன் காத்திருப்பதாய் நினைத்தால்,
அவன் நாதசுர இசையை ரசித்தான்.
ஒருமுறை. கடும் மழை. எல்லாரும்
பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையடியில் ஒதுங்கினார்கள். எங்கிருந்தோ அவனும் ஓடி வந்தான்.
அவர்கள் பதறி வழிவிட்டார்கள். மழை
எல்லாரையும் எரிச்சல்படுத்தி யிருந்தது. அவன் ஒருபக்கமாய் ஒதுங்கிக்
கொண்டபடி முடங்கினான். உள்ளேயே சிறு சிறு
சொட்டுகளாய் ஒழுகியது கூரை. பைக்குள்ளிருந்து சிறு
டப்பா ஒன்றை எடுத்து ஒழுகும்
வாட்டத்தில் வைத்தான் அவன். மழைச் சத்தம்
தவிர வேறு சத்தம் இல்லை.
திடீரென்று டப்பா தகரத்தில் ஒரு
சொட். க்ளுக், எனச் சிரித்தான்
அவன். எல்லாரும் அவனைப் பார்த்தார்கள். இன்னொரு
முறை சொட். அவன் கலகலவென்று
ரொம்ப சந்தோஷமாய்ச் சிரித்தான். மழைக்கு ஒதுங்கிய எல்லாருமே
புன்னகை செய்தார்கள்.
ஊரில் எல்லாருக்கும் அவனைப்
பிடித்து விட்டது. எல்லாரிடமும் முகம் பார்த்துப் பேச
புன்னகைக்க அவன் ஆசைப்பட்டாற் போலிருந்தது.
வார்த்தைகள் அவன் தொண்டைவரை அலையெழுச்சி
போல வந்து, சட்டென திரும்ப
வெட்கத்தில் உள்வாங்கின. பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள்
அவனுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்தார்கள்.
அவர்கள் என்ன கேட்டாலும் எதுவும்
பேசத் தோன்றாமல் புன்னகை காட்டி நின்றான்
அவன். அலுவலகத்தில் இருந்து பஸ்சில் வீடு
திரும்புகிறவர்கள், காய்கறி விற்கிற பெண்கள்,
பூக்காரிகள் எல்லாருக்கும் அவன் பரிச்சயமாகிப் போனான்.
என்றாலும் அவனைப் பற்றி அவர்களுக்கு
எதுவுமே தெரியவில்லை, என்பது தான் வேடிக்கை.
அவனைப் பைத்தியம் என்று அழைக்க அவர்களுக்கு
மனம் ஒப்பவில்லை, என்பது தான் விஷயம்.
அவனுக்கு என்ன பேர் வைப்பது
என எல்லாருமே தங்களுக்குள் யோசித்தபடி யிருந்தார்கள். அது தன்னைப்போல அமையவும்
செய்தது. மேலத்தெருவில் எதோ கல்யாணம். தெருவையே
அடைத்து பந்தல் கிந்தல் அமர்க்களப்
பட்டது. பொழுதுகள் வீங்கிக் கொந்தளித்தன. சத்தம் மேலே மேலே
உச்சத்துக்குப் போனது. ரிகார்டு போட்டு
தெருவே கலகலத்தது. காதோடு தான் நான்
பேசுவேன், பாட்டையே சத்தமாய் வைத்தார்கள். ரெண்டாம் நாள் அத்தனையும் அடங்கி,
நிகழ்வுகளுக்கே தொண்டை கட்டிக்கொண்டாப் போல
மௌனம். அலுத்துக் களைத்த மௌனம்...
கல்யாண வீட்டு வாசல்
குப்பைத் தொட்டியில் பாதி பூ உதிர்ந்த
வாடிய மாலை ஒன்று கிடந்தது.
நம்மாள் அந்தப் பக்கம் ஏன்
போனான் தெரியவில்லை. போனவன் அந்தக் குப்பைத்
தொட்டியை ஏன் எட்டிப் பார்த்தான்
தெரியவில்லை. திடீரென்று என்ன தோணியதோ, அந்த
மாலையை எடுத்து அப்படியே மாட்டிக்கொண்டான்.
எதிர்வீட்டில் இருந்த சின்னப் பையனுக்கு
அதைப் பார்க்க உற்சாகமாகி விட்டது.
டும் டும் டடடும்... என
மேளச் சத்தம் கொடுத்தான். அதைக்
கேட்கவே இவனுக்குச் சிரிப்பு. அங்கிருந்து ஓட்டமெடுத்தான். ''ஏய் மாப்ளை ஓடறாரு
டோய்!'' என்று பெரிதாய்ச் சத்தம்
கொடுத்தான் அந்தப¢பையன்.
ஒருநாள்ப் பூராவும் அவன் அந்த மாலையைக்
கழற்றவேயில்லை. மாப்பிள்ளை என்ற பேர் அவனுக்குப்
பிடித்திருந்தது போலும். அவனது நடையில்
இப்போது இன்னும் கம்பீரம், அழகு
வந்தது. மைதீட்டாமலேயே கரிய விழிகள் இன்னுமாய்ப்
பிரகாசித்தன. இப்போது மாலைகள் கிடைக்காதா
என அவன் தேட ஆரம்பித்திருந்தான்.
வடக்குத் தெரு பிள்ளையார் கோவில்
வாசலோரம் பழைய மாலைகள் கிடந்தன
என்று கண்டுகொண்டான். அழுக்கு டவுசர். கிழிசல்
சட்டை. வாடிய மாலை... ஊருக்கே
மாப்பிள்ளையாய் ஆகியிருந்தான்.
எந்தக் குழந்தையும் அவனைப்
பார்த்து பயப்படவில்லை என்பது ஆச்சர்யம். பஸ்
டிரைவர் கண்டக்டர்களே கூட அவனை மாப்பிள்ளை
என அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். அவனைப் பார்த்ததும்
அவர்கள் புதுசாய் ஒரு சல்யூட் வைத்தார்கள்.
அவனும் அப்படியே நின்று ஒரு சல்யூட்
வைத்தான். பேச உள்ளே முட்டிமோதும்
வார்த்தைகளுடன் ஆனால் அவன் ஒரு
உள்த் திகைப்புடன் நடமாடினான்.
ஜனங்கள் ரசிக்கிறாப் போல
இன்னொரு சம்பவம் ஊரில் நடந்தது.
சுதந்திர தினம் என்று பஞ்சாயத்து
ஆபிசில் கொடியேற்ற ஏற்பாடாகி யிருந்தது. வெளிச்சம் வர தேசபக்திப் பாடல்கள்
போட்டு ஒரே சத்தக்காடு. பாரதியாரின்
'விடுதலை, விடுதலை, விடுதலை'... பாட்டைக் கேட்டு பிள்ளைகள் கிறுகிறுத்துத்
திரிந்தார்கள். அவனுக்கும் உள்ளே என்னவோ செய்தாப்
போலிருந்தது. காலை எட்டு மணிக்கு
தலைவர் கொடியேற்ற வந்தார். எல்லாப் பிள்ளைகளும் வரிசையொழுங்கில்
நின்றன. கொடியை அவிழ்த்து மேலேற்ற
அதன் முடியவிழ்ந்து ரோஜா இதழ்கள் சிதறின.
பெண்ணொருத்தி கூந்தலை அவிழ்த்து விட்டாப்
போலிருந்தது. பிள்ளைகள் கை தட்டினார்கள். அவனுக்கும்
கை பரபரத்தது. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் மாப்பிள்ளை. தலைவர் பேச வந்தபோது
ஒரு சால்வை போர்த்தினார்கள்.
தலைவர் கையை அசைத்து
ஆட்டி உற்சாகமாய் உரையாற்றியதை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று திரும்பி
அவனைப் பார்த்துவிட்டு தலைவர் அவனைக் கூப்பிட்டார்.
தயங்கியபடி போனான். புது மாலை
ஒன்றை அவனுக்குப் போட்டார். பையன்கள் கைதட்டினார்கள். அப்படியே தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை
அவனுக்குப் போர்த்தினார். அவனுக்கு அபாரமாய்ச் சிரிப்பு வந்தது. அப்படியே சல்யூட்
வைத்தான் அவருக்கு. ''மைக்ல எதும் பேசறியா?''
என்று அவர் கேட்டபோது பையன்கள்
அத்தனை பேரும் கொல்லென்று சிரித்தார்கள்.
அவன் மறுத்தாப் போல தலையை ஆடடியாட்டி
அங்கிருந்து ஓட்டமெடுத்தான்.
அவன் எப்பவுமே பரபரப்பாய்த்
திரிந்தான். என்ன வேலை இருக்கிறது,
என்ன அவசரம் தெரியாது. நாய்க்கு
வேலை இல்லை, நிற்க நேரமில்லை,
என்பார்கள். அவனுக்கு அது பொருந்தியது. அட
அவனுக்கு ஊரில் ஒரு வேலை
கிடைத்ததே அதைச் சொல்ல வேண்டும்.
ஒருதடவை ரெண்டு பஸ்கள் ஒரே
சமயம் ஸ்டாண்டில் வந்து நின்றன. பின்னால்
நின்ற பஸ் கிளம்ப வேண்டியிருந்தது.
டிரைவர் ''ஏ மாப்ள...'' என்று
அவனைக் கூப்பிட்டார். ''வண்டி ரிவர்ஸ் எடுக்கறேன்...
பின்னால் ஆள் இல்லாமல் பார்த்துக்க...''
என்றார். சந்தோஷமாகி விட்டது. பின்பிக்க ஜனத்திரளை கையாட்டி ஒதுக்கி வழிதர வண்டி
பின்னால் வந்து வசம்பார்த்து முன்னால்
ஒடித்து கிளம்பியது...
மாப்பிள்ளை ரொம்ப உற்சாகமாய் உணர்ந்தான்.
இனி அந்த பஸ்கள் அவன்
சொல் கேட்கும். அது உள்ளே நுழைகையில்
அவன் கூட்டத்தை ஒதுக்கி அதற்கு இடம்
அளிப்பான். இந்த ஜனங்களுக்கு அவன்
பாதுகாப்பு. ரட்சகன்.
''ஒதுங்குங்க, ஒதுங்குங்க...'' என வார்த்தைகள் அவனில்
பொங்கி தொண்டையில் சிக்கி அப்படியே வெட்கத்தில்
திரும்பின. பஸ்கள் வருவதும் போவதுமாக
இருந்த சமயங்களில் அவன் பரபரத்தான். பள்ளிக்கூட,
அலுவலக வேளைகள்... காலை எட்டு எட்டரை
முதல் ஒன்பது ஒன்பதரை வரை
பஸ் போக்குவரத்தும் அதிகம், அதில் ஏறும்
இறங்கும் ஜனமும் அதிகம். அப்போது
அவனுக்கு நிறைய வேலை இருந்தது.
கூட்டத்தை ஒதுக்குவது, வண்டிக்கு வழியமைப்பது... என அவன் பம்பரமாய்
அலைந்தான். எங்கிருந்தோ சிறு குச்சி ஒன்றை
எடுத்து வைத்திருந்தான். அதை நீட்டி நீட்டி
கூட்டத்தை ஓரத்துக்கு ஒதுக்கினான். ஹ்ரும்... என்கிற உருமல் தான்.
மேல் சால்வையை அவன் கழற்றுவதே இல்லை.
சால்வை வந்தபின், மாலைக்கு
அவன் அலைவது நின்று போனது!
அவன் பரபரப்பு ஜனங்களுக்கு
வேடிக்கையாய் இருந்தது. வேலைக்கும் வெளியூருக்குமாய் கிளம்புகிற நாமே நிதானமாய் இருக்கிறோம்.
மாப்பிள்ளைக்கு இத்தனை பரபரப்பு... என
அவர்களுக்கு ஆச்சர்யம். என்றாலும் அவனை அவர்கள் மதித்து
ஒதுங்கி, வரும் பஸ்சுக்கு இடம்
தந்தார்கள். இவன் ஆர்வத்தைப் பார்த்ததில்
கண்டக்டர்களுக்கும் திருப்தி. ஒருத்தன், ''ஏ மாப்ளை இங்கே
வா...'' என்று கூப்பிட்டான் அவனை.
''இதை வெச்சிக்க...'' என்று கொடுத்தான்.
ஒரு விசில்!
ஆகாவென மாப்பிள்ளை எழுச்சி
கண்ட கணம் அது. அப்படியே
பரவசமாகி மாப்பிள்ளை ஒரு சல்யூட் வைத்தான்.
அந்த பஸ் ஸ்டாண்டே
சத்தக்காடாகி விட்டது. செயற்கைத் தொண்டையாய் அதை அவன் பயன்படுத்த
ஆரம்பித்திருந்தான். நிறுத்தத்தில் பஸ் நுழையும்போதே அவன்
விசிலால் பீய்ங்கென ஊளை ஆரம்பித்தான். குச்சியை
நீட்டி ஆட்டியாட்டி கூட்டத்தை அவன் ஒதுக்கியபோது விசில்,
கூட ஒத்துழைத்தது. பஸ் நின்றதும் முதலில்
இறங்குகிற நபர்கள் இறங்க வழி
ஒதுக்கிக் கொடுத்தான். அதற்குள் பஸ்சுக்குள் இடம் பிடிக்க வெளியே
யிருந்து கைப்பையையோ கர்ச்சீப்பையோ உள்ளே எறிந்தார்கள்.
இன்னொரு வேடிக்கை கூட
நடந்தது. மழையில் கிழையில் நனைந்தானோ,
என்ன சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லையோ, தெரியவில்லை. மாப்பிள்ளைக்கு கடும் ஜுரம் கண்டது.
காலை நாலு நாலரை மணி
முதல் பஸ் வரும்போதே அவன்
விழித்துக் கொண்டு காத்திருப்பான். எழுந்துகொள்ளவே
யில்லை. சிவசண்முகம் கண்டக்டர் அதே ஊர்தான். அவன்
வீடு பூங்கா பக்கம்... பஸ்
வர அவன் காத்திருந்தான். டிப்போவில்
இருந்து டிரைவர் மாத்திரம் போய்
எடுத்து வருவான்... காலையில் பஸ் ஸ்டாண்டு டீக்கடையில்
முதல் தேநீர் அவனும் மாப்பிள்ளையுமாய்
இருந்துவார்கள்.
சிவசண்முகம் மாப்பிள்ளையைத் தேடினான். எப்போது அவன் தூங்குவான்
தெரியாது. எந்நேரமும் பஸ் ஸ்டாண்டுப் பக்கம்
மாப்பிள்ளை நடமாடித் திரிவது தெரியும். மாப்பிள்ளையைக்
காணவில்லை... சிவசண்முகத்துக்கு கவலையாகி விட்டது. தனியே தேநீர் குடிக்கவே
அவனுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது கிளம்பிப் போய்விட்டானா, தெரியவில்லை. நிழற்குடை அடியில் காணவில்லை. பஸ்
வேறு வந்துவிட்டது. டிரைவர் நாகு, என்னப்பா...
தேநீர் அருந்தியாச்சா?... என்று வேடிக்கைபோல நல்ல
தமிழ் பேசினான்.
''அட நம்ம மாப்ளையைக்
காணம் அப்பா...'' என்றான் சிவசண்முகம்.
''எங்கயாச்சும் கால்கழுவப் போயிருப்பான்...'' என்றான் நாகு.
''எங்க போனாலும் பத்து
நிமிஷம் தான்... திரும்பிருவான்... அவன்
மூட்டையையும் காணம் பாரு...''
''அட அதானே...'' என்றான்
நாகு. அவனுக்கும் யோசனை தொற்றிக்கொண்டது.
''பக்கத்தில் எங்கயாவது இருக்கானா பாப்பம் வா...''
இருவருமாய் சிநு நடையில் மாப்பிள்ளையைத்
தேடினார்கள். கடைசியில் பார்த்தால் உடல் நடுங்கும் ஜுரத்துடன்
பூங்காவில் படுத்துக் கிடக்கிறான். கண்ணையே திறக்க முடியாத
ஜுரம். ''மாப்பிள்ளை?'' என்று சிவசண்முகம் கூப்பிட்டான்.
கண்ணைத் திறக்கவில்லை அவன். ''ஏ என்னாச்சி
மாப்பிள்ளை?'' என்று முன்னே குனிந்து நாகு
கூப்பிட்டுப் பார்த்தான். அப்பவும் அவன் கண்ணைத் திறக்கவில்லை.
''இப்ப கண்ணைத் திறப்பான்
பார்...'' என்று சிவசண்முகம் ஒரு
உபாயம் செய்தான். சட்டென தன் கண்டக்டர்
விசிலை எடுத்தான். அவன் காதருகே 'பீய்ங்'கென ஊதினான்.
மாப்பிள்ளை சிரமப்பட்டு கண்ணைத் திறந்து பார்த்தான்.
அவர்கள் ஹோவென சிரித்தார்கள். ''ஒரு
கம்பளி கொண்டாந்து தரேன். போர்த்திக்க... சரியாயிரும்
மாப்பிள்ளை...'' என்றபடி அவசரமாய் ஓடிப்போய்
தன் வீட்டில் இருந்து சிவசண்முகம் ஒரு
கம்பளி கொண்டுவந்து அவனுக்குப் போர்த்திவிட்டான்.
''நாங்க கிளம்பட்டா?''
அவர்கள் வந்துபார்த்ததே மாப்பிள்ளைக்கு
உற்சாகமாய் ஆகியிருக்கவேண்டும். கையை உயர்த்தி சல்யூட்
வைக்க ஆசைப்பட்டான். முடியவில்லை. அவன் கண்கள் அழுது
கொதிநீர் வழிந்தது. சிவசண்முகம் தன் விசிலை எடுத்து
அவன் வாயில் வைத்தான். மாப்பிள்ளை
'பீய்ங்'கென உற்சாகமாய் ஊதினான்.
அவர்கள் கிளம்பினார்கள்.
ரெண்டொரு நாளில் திரும்ப அந்த
பஸ் நிறுத்தமே அழகுபடுத்திக் கொண்டது. மாப்பிள்ளையின் விசில் சத்தம் நாலு
திசைகளிலும் பீரிட்டுத் தெறித்தது. காலை எட்டு மணி
முதல் அவன் பரபரப்பானால் பகல்
ஒருமணிப் போல சற்று ஆசுவாசப்படுவான்.
வெயில் உக்கிரப்பட்ட வேளைகளில் சற்று உள் நிழலில்
ஒடுங்குவானே தவிர, பஸ் சத்தம்
கேட்டால் துள்ளியெழுவான்.
யானைக்கு அங்குசம், என்றால் பஸ்சுக்கு விசில்.
அவன் விசிலுக்குக் கட்டுப்பட்டது பஸ். அது பின்வாங்க
வேண்டுமானால் அவன் வசம் பார்த்து
டபுள் விசில் தருவான். கடைசி
எல்லையை பஸ் தொட்டதும் சிங்கிள்
விசில். நீண்ட ஊளை. பஸ்
அப்படியே நின்று பின் முன்னொடித்துப்
போகும். யானை சர்க்கஸ் போல,
இது பஸ் சர்க்கஸ்.
எந்த பஸ்சுக்கும் அவனுக்கு
பேதம் கிடையாது. எழுதப்படிக்கத் தெரிந்தவனா அவன்? அதுவே யாரும்
அறியார். ஒருத்தி அவன் இப்படி
விசில் ஊதி கூட்டத்தை ஒதுக்கிக்
கொண்டிருந்தபோது அவனைப் பார்த்துக் கேட்டாள்.
''ஏம்ப்பா இந்த பஸ் செம்மஞ்சேரி
போகுமா?''
மாப்பிள்ளைக்குத் திகைப்பாய் இருந்தது. அதுவரை எந்த பஸ்
எங்கே போகும் என்று அவன்
யோசித்ததே கிடையாது. தெரியா... என வந்த வார்த்தைகள்
தொண்டைக்குள்ளே சுருண்டன. அதற்குள் அருகில் இருந்த இன்னொருத்தி
''போகும் ஏறுங்க'' என அவளுக்கு பதில்தந்து
விட்டாள். மாப்பிள்ளை நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
சிவசண்முகம் அவனுக்கு ரொம்ப நெருக்கமாகி விட்டான்.
ஒரு அதிகாலையில் அவனுடன் தேநீர் அருந்தியபடியே
அவன் பேச்சுக் கொடுத்தான். ''எல்லாரையும் பஸ்ல ஏத்தி விடறியே...
நீ எப்ப நம்ம பஸ்ல
ஏறப்போற?'' என்று கேட்டான் சிவசண்முகம்.
மாப்பிள்ளைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. எல்லாத்தையும் ரசிக்கத் தெரிகிறது. ஆனால் என்ன பதில்
சொல்ல என்றுமாத்திரம் அவனுக்குத் தெரியவில்லை.
''அவரு நம்ம ஊர்
மாப்பிள்ளையப்பா. அவர் ஏன் நம்மகூட
வர்றாரு? என்ன நாஞ்சொல்றது மாப்பிள்ளை?''
என்றான் டிரைவர் நாகு. 'எல்லாரும்
பல்லக்குல ஏறிட்டா, அப்பறம் தூக்கறது யாரு,
சொல்லு சண்முகம்...'' என்றான் நாகு. அவன்
சொன்னதைக் கேட்டு ''அது சரி'' என்று
சிவசண்முகம் சிரித்தான்.
மாப்பிள்ளைக்கு அவர்கள் பேச்சு புரியவல்லை.
பள்ளிக்கூடம் பக்கம் போனால் டிரில்
மாஸ்டரின் விசில் கேட்கலாம். ஆனால்
அந்தச் சததம் வேறு மாதிரியானது.
அவர் ஊதினால் பையன்கள் காலை
ஒன்றுசேர்த்து சளப்பென்று அடித்து விரைத்து நிற்கிறார்கள்.
பிறகு அடுத்த விசிலுக்கு கப்பையை
விரித்து நிற்கிறார்கள். எல்லாரும் ஒருசேரச் செய்துகாட்டுவது நன்றாய்த்தான் இருந்தது. ஒரு ஓட்டப் பந்தயப்
போட்டி கூட மாப்பிள்ளை பார்த்தான்.
எல்லாரும் தயாராய் நின்றார்கள். மாஸ்டர்
விசில் ஊதிய கணம் சட்டென
வேகமெடுத்து எல்லாரும் ஓடினார்கள்...
பஸ் ஸ்டாண்டில் அவன்
படுத்திருந்தபோது காகம் ஒன்று அவன்
பக்கமாய் வந்து நின்று பார்த்தது.
அவன் அதையே பார்த்தபடி, விசில்
எடுத்து, அது எதிர்பாராமல் திடீரென்று
'பீய்ங'கென்று ஊதினான். ஓட்டப்
பந்தயம்... காகம் விருட்டென்று பறந்தது.
அவன் கடகடவென்று சிரித்தான்.
அவன் கேள்விப்ட்டிருக்கவில்லை. யார் அவனிடம்
சொல்லப் போகிறார்கள். முழு பந்த் நாள்
அது. இரவு பத்து மணி
பஸ் கிளம்பிப் போனபின் வழக்கம் போல
அவன் படுக்கப் போய்விட்டான். காலை விடிய தன்னைப்போல
விழிப்பு வந்தது. மணி என்ன
தெரியவில்லை. ஆனால் நேரமாகி விட்டது,
என்று உள்ளே பட்சி சொன்னது.
அடாடா என்று எழுந்து உட்கார்ந்தான்.
முதல் பஸ் போயிருக்குமோ? சிவசண்முகம்
போயிருப்பானா?
நேற்றே அவன் சாப்பிட்டிருக்கவில்லை.
ஒரு சூடான தேநீருடன் காலைகளைத்
துவங்க உற்சாகமாய்த்தான் இருக்கும். இன்னும் இருட்டு பிரியவில்லை.
மெல்ல நிழற்குடையை விட்டு வெளியே வந்தான்.
யாருமே இல்லை. ஓரமாய் ஒண்ணுக்கடித்தான்.
தொடையைச் சொறிந்துகொண்டான். பார்த்தால் தேநீர்க்கடையே மூடிக் கிடந்தது. ஆச்சர்யமாய்
இருந்தது....
தெருவில் நடமாட்டமே யில்லை. நாலைந்து பேர்
அந்த முதல் பஸ்சுக்கு வருவார்கள்.
யாரையுமே காணவில்லை. முதல் பஸ் போயிருக்கலாம்,
என நினைத்தான். ஏன் கடை திறக்கவில்லை,
என்பது குழப்பமாய் இருந்தது. தெருவில் ஈ காக்காய் கிடையாது.
மெல்ல அந்த வெறுமையில் தனியே
நடந்துபோனான். சட்டைப் பையில் அந்த
விசில். மகா மௌனத்தின் பிடியில்
கிடந்தது உலகு. அதைக் கறைப்படுத்த
முடியாது. விசில் அப்படியே தொண்டை
விக்கிக் கிடந்தது. என்ன மௌனம் இது.
நியதிகளே மரங்கள் போல இப்படி
அசையா நிலை கண்டன. இந்த
பிரம்மாண்ட உலகில் அவன் மாத்திரம்
இப்போது. இருக்கிறான். விழித்திருக்கிறான். காத்திருக்கிறான்... எதற்கு? யாருக்கு?
அவனுக்கு ஏனோ அழவேண்டுமாய் இருந்தது.
பொழுதுகளின் நியதிகள் துவங்குவது எத்தனை உற்சாகமாய் இருக்கும்.
என்ன இது, என்ன ஆயிற்று
இன்று? கொஞ்சம் பசியாய்க் கூட
இருந்தது. ஆனால் இப்போது ஏனோ
தான் தனிமைப்பட்டு விட்டதாய் ஒரு ஏக்கம் உள்ளே
மண்டியது. காலியான தெருக்களில் நடந்தான்.
இன்னமும் விடியாத இரவு. சிறு
இலையும் அசையா மௌனத்தில் மரங்கள்
அவனை உற்றுப் பார்த்தன.
தானறியாமல் சிவசண்முக.ம் வீடு வரை
வந்திருந்தான். அவன் வீட்டுக்கு அவனுக்கு
வழி எப்படித் தெரிந்தது என்றே தெரியவில்லை. வழக்கத்துக்கு
விழிப்பு வந்த சிவசண்முகம் ஜன்னல்
வழியே அவனைப் பார்த்ததும் வெளியே
வந்தான்...
''என்ன மாப்பிள்ளை?'' என்று
கேட்டான்.
அவனுக்கு என்ன கேட்க என்றே
புரியவில்லை.
''இன்னிக்கு பந்த். கடையடைப்பு. பஸ்
எதுவும் ஒடாது...''
அவன் சிவசண்முகத்தையே பார்த்தான்.
''போ. போயித் தூங்கு...''
அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. ''தேநீர் குடிக்கறியா மாப்பிள்ளை?''
என்று புன்னகை செய்தான் சிவசண்முகம்.
பசி கூட பெரிய
விஷயமாய் இல்லை அப்போது. பசியை
எவ்வளவோ பார்த்தாகி விட்டது. இன்றைக்கு முழுப் பொழுது அவன்
கையில்... பஸ்கள் ஓடாது. பஸ்
நிலையத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.
கடைகள் கிடையாது. ஊரே வெறிச்சென்று கிடக்கும்...
அப்படியே தள்ளாடி திரும்பி நடந்தான்.
பொழுது சிந்துபாத் முதுகேறிய கிழவன் போல அவன்
மேல் சுமையாய் அழுத்தியிருந்தது. அழ முடிந்தால் நல்லது.
உண்மையில் இந்நாட்களில் அவன் அழுகையை மறந்திருந்தான்.
இப்போது சிரிக்க ஆசைப்பட்டும் சிரிப்பு
வரவில்லை அவனுக்கு. தானறியாமல் பஸ் நிறுத்தம் வந்திருந்தான்.
அப்படியே நிழற்குடையடியில் படுத்துக் கொண்டான். வெளிச்சம் புக ஆரம்பித்திருந்தது. இப்படியே
இருட்டாய் இருந்திருந்தால் கூட நன்றாய் இருந்திருக்கும்.
மெல்ல பொழுது வெப்பமேறுவது சகிக்க
முடியாத துயரத்தையும் துன்பத்தையுமே கொண்டு வரும்.
தெருவில் மழைத் தூறல் போல
நடமாட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய். யாரோ மணியடித்தபடி சைக்கிளில்
போனார்கள். கடைகளே இல்லாத பஜார்
பார்க்கவே விநோதமாய் இருந்தது. நல்ல வெயிலேறும் வரை
அப்படியே படுத்துக் கிடந்தான். குப்புறவும் மல்லாக்கவுமாய்ப் புரண்டு கொண்டிருந்தான். இந்த
வெறுமை சகிக்க முடியவில்லை. துள்ளி
எழுந்துகொண்டான். கையில் குச்சி. பைக்குள்
விசில். மெல்ல சுற்றுமுற்றும் பார்த்தான்.
பசி இப்போது மெல்ல
உருவேறியிருந்தது. அட அது பரவாயில்லை.
பந்த் என்றால் என்ன தெரியவில்லை.
சைக்கிள் தவிர ஒரு ஸ்கூட்டர்,
பைக் கூட வெளிக் கிளம்பவில்லை.
பந்த் அறிவிப்பை மீறி வெளிக் கிளம்ப
அவர்கள் பயப்பட்டாப் போலிருந்தது. நாலடி
வைத்திருப்பான். ஒரு கார்... அட,
சர்ரென்று வேகமெடுத்து அவனைத் தாண்டிப் போனது.
பந்த் சமயத்தில் கார் எடுத்தது தைரியம்
தான். அவனைத் தாண்டிப¢ போனது
அவனைப் பார்த்தவாக்கில் நின்று ரிவர்ஸ் வந்தது.
''இந்த அட்ரஸ் எங்க
இருக்குப்பா?'' என ஒரு காகிதத்தைக்
காட்டினார்கள்.
அவன் அப்படியே நின்றான்.
''பிள்ளையார் கோவில்...''
கார் தாண்டி வந்திருந்தது.
இடப்பக்க வழியைக் காட்டினான். சற்று
பின் நகர்ந்து கார் ரிவர்ஸ் வர
வழியொதுக்கி நின்றான். கை சட்டைப் பையில்
இருந்து விசிலை எடுத்தது.
storysankar@gmail.com - Mob 91 97899 87842
Comments
Post a Comment