தாய்மடி சி று க தை
எஸ். சங்கரநாராயணன்
அப்பா இறந்துபோனது அரியரத்தினத்துக்கு ரொம்ப துக்கமாய் இருந்தது.
ஜனனம் உலகத்தில் எதோ அர்த்தத்தைக்கொண்டு வருகிறது.
அர்த்தத்தை உணர்த்திக்கொண்டு வருகிறது. மரணமோ அதை அழித்து
விடுகிறது. வாழ்க்கை என்பதன் அபத்தத்தை மரணம்
எடுத்துச்சொல்லி விடுகிறது. அர்த்த அனர்த்தக் குழப்பத்திலேயே
பெரும்பாலோரின் வாழ்க்கை முடிந்துவிடவும் செய்கிறது. அர்த்தம் புரிபடுகிற வயதில் அரியரத்தினம் அதன்
அனர்த்தங்களையும் சேர்த்தே மூர்க்கமாக உணர்த்தப்பட்டான். அறிவு என்பது குரங்கு
கைப் பூமாலையாக மனிதனிடம் சிக்கித் தவிக்கிறதே என வேதனைப்பட்டான் அவன்.
ஆங்காரம், பட்டம், பதவி, அதிகாரப்
பித்து, சக மனிதனை விட
தான் ஒரு படி மேல்
என்கிற மமதை, மற்றவரை வீழ்த்தி
மனம் கொள்கிற ஆவேச மகிழ்ச்சி.
அறிவுசார்ந்த நிலை மாறி எளிதில்
உணர்ச்சிகள் பகடைகளாக உள்ளே உருள்கின்றன. மோதல்கள்.
தினவுகள். உருமல்கள்... மிருக நிலையில் ஒருபடி
மேலே போனவன், சமயங்களில் மிருக
நிலையின் உச்சத்தில் ஒருபடி கீழேயும் இறங்கி
விடுகிறான், என அவன் வேதனைப்பட்டான்.
சிறிய வீடேயானாலும் இடையன்குடியில்
அவர்கள் வீடு அழகானது. வாசலில்
போட்டிருக்கும் புடலங்கொடியை கயிறுகட்டி அப்பா கூரைவரை ஏற்றி
விட்டிருப்பார். கைத்தாங்கலாய் பெரியவரை வீட்டுக்குள் அழைத்து வருவது போல...
பிரியத்தின் மறு உருவம் அப்பா.
எந்தக் கஷ்டத்திலும் சதா புன்னகைக்கிற முகம்.
அதிகமாக அவர் உள்ளே மருகுகிறார்
என்றால் போய் திருநீற்றுப் பெட்டியில்
இருந்து கைநிறைய திருநீறை அள்ளி,
சிவகடாட்சம்... என ஒரு சத்தம்
கொடுத்தபடி பூசிக்கொள்வார். கழுத்தடியில் விஷத்தை அடக்கிய திருநீலகண்டனாக
அவரைப்பார்க்க தோன்றும். இந்த அகதி முகாமில்
கூட அவர் சாவில் அத்தனை
கூட்டம் திரண்டது என்றால் அவரது நல்ல
மனசுதான் காரணம்.
திரும்ப தன் வீட்டைப்
பார்க்க அப்பாவுக்குக் கொள்ளை ஆசை. இருக்கிற
உடம்புக்கு உம்மால் அதுவரை பயணம்
போகவும் முடியாது. இப்ப அங்க நிலைமை
எப்படி இருக்கோ, அதுவும் தெரியாது... என்றுவிட்டான்
அரியரத்தினம். அவருக்கும் இதெல்லாம் தெரியும். என்றாலும் அவன் அப்படி வெடுக்கென்று
சொல்லியிருக்க வேண்டாம். அப்பா எழுந்து போய்விட்டார்.
வீடு அல்ல அது
இல்லம். காலையில் வாசல் தெளித்து சிறு
கோலம் போடுவார்கள். வெளி முற்றத்தில் தவிட்டுக்
குருவிகள் நடமாடித் திரியும். வாசலில் ஒரு வாத
மரம். மர இலைகள் தளிர்
விடும்போது இருக்கும் மென்மையும் பளபளப்பும், மெல்ல பச்சையாகி, அது
உக்ரமேறுவதைப் பார்க்க அழகு. நாள்பட்ட
இலைகள் மெல்ல சிவந்து பழுத்து
உள் நரம்புகளைக் காட்டி பின் சருகாய்
உதிர்கின்றன. ஈர்க்கல்லால் வாத இலைகளைக் கூட்டி
சாப்பாட்டு இலையாக ஆக்கிக்கொள்ளலாம். விருந்தினர்
வந்தால் இலை என்று ஓட
வேண்டியது இல்லை.
அதில் ஒரு குயில்
வாசம் செய்துவந்தது. அப்பாவுக்கு அதை நன்றாகத் தெரியும்.
கண்ணுக்கு அகப்படாமல் மறைந்திருந்தபடி என்ன குறும்பான கூவல்
இது. அதிகாலை, இரவோடு முயங்கிய பொழுது
பிரியுமுன் குயில்கள் எழுந்துவிடுகின்றன. வெயில் ஏற அவை
எங்கோ காணாமல் போய்விட்டு மாலை
பொழுது மீண்டும் சேர வந்து சேர்கின்றன.
அப்பாவுக்கு அந்தப் புடலங்கொடியுடனும் குயிலுடனும்
கூட உறவு இருந்தது. பெரும்பாலும்
கயிற்றுக் கட்டில் போட்டு வாத
மர நிழலில் படுத்திருப்பார். காலை
அவர் எழுந்தால் குயில் குரலுக்காகக் காத்திருப்பார்.
வெளிச்சத்தின் முதல் வெள்ளி கிழக்கே
ஈர விபூதித் தீற்றலைப் போல சாம்பலில் இருந்து
பளீரெனப் பிரியும் போது... குவ்வூ... என
குயில் அதை வரவேற்கும். சில
அலுத்த சந்தர்ப்பங்களில் அவர் தூங்கிவிட குயில்
அவரைக் குரலெடுத்து எழுப்புவதும் உண்டு.
வீட்டில் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்ட நாய்
ஒன்று இருந்தது. பளபளவென்று கருப்பு வெல்வெட் சருமம்.
அப்பாவைப் பார்த்ததும் உடம்பெல்லாம் பரவசம் பரவ ஒருவித
கீச்சிடலுடன் அவர் மேலே விழுந்து
ஈஷி உராயும். பிளாக்கி என்று அதை அப்பா
அழைப்பார். முதன் முதலில் ராணுவ
ட்ரக் ஊருக்குள் வந்த அன்று தான்
பிளாக்கி இறந்துபோனது. எல்லையில் சிவன் ஆலயம். அப்பா
மாலைகளில் அங்கே திண்ணையில் உட்கார்ந்து
காற்று வாங்குவார். முழு இருட்டு கவியுமுன்
இப்பவெல்லாம் வீடு தீரும்பிவிட வேண்டியதாகி
விட்டது. கண் அத்தனைக்கு இல்லை.
அப்பா மெல்ல சமாளித்து இருட்டில்
வீடு திரும்பினார். வழியில் அடிபட்டுக் கிடந்தது
பிளாக்கி.
அதுவரை ஊருக்குள் ராணுவ
வண்டி போனதே இல்லை. இதெல்லாம்
நல்லதுக்கில்லை என நினைத்தபடியே அப்பா
வீடுநோக்கி அவசரமாய் வந்தார் வழியில்... அப்பா
அழுது அன்றைக்குத் தான் அரி பார்த்தது.
வீடு வீடாய்ப் புகுந்து
இளைஞர்களை ராணுவம் விசாரித்தது. விசாரணை
என்று அழைத்துப் போனது. அதில் சிலர்
வீடு திரும்பவே இல்லை. அவர்களைப் பற்றிய
தகவலும் இல்லை. அதிலும் பெண்டுகளை
வீட்டில் வைத்துக்கொள்ளவே எல்லாரும் பயப்பட்டார்கள். யாராவது ஆண்துணை இல்லாமல்
அவர்கள் வெளியே நடமாட முடியவில்லை.
ஊரில் தெருக்களில் குண்டு
சத்தங்கள் கேட்ட நாளில் அப்பா
எவ்வளவு துயரப்பட்டார். இடையன்குடி ரொம்ப அமைதியான ஊர்.
யாராவது கோவிலில் சாமி கும்பிட்டபடி டாண்
என்று மணி அடித்தால் நாலு
தெரு வரை கணீரென்று கேட்கும்.
பள்ளிக்கூட தேர்வு சமயங்களில் கோவில்
மணிக்கே வலிக்கும் படி நிறைய தரம்
அடிவாங்கும். பூட்டிய கோவில் அளிக்கதவின்
வழியே உள்ளே எறியப்பட்ட சல்லிகள்
கிடக்கும். தேர்வை விடு. பள்ளிக்கூடமே
மூடி ஒரு வருடம் ஆகிவிட்டது.
பையன்கள் நாலைந்து கிலோமீட்டர் நடந்துபோய்ப் படிக்கிறார்கள். பள்ளிக்கூடம் இருந்த இடத்தில் தான்
ராணுவம் இறங்கியிருக்கிறது.
ஊர் எல்லையில் வந்துபோகும்
பேருந்து, அதுகூட இப்போது வருவது
நின்றுவிட்டது. ஜனங்கள் போய்வர சைக்கிள்
தான் வாகனம். ராணுவத்துக்கு உணவு
கொண்டுவரும் லாரிகளை ஜனங்கள் அசூயையுடன்
பார்த்தார்கள். செக்போஸ்ட் என ஊர் எல்லை
மறிக்கப்பட்டிருந்தது. சிறு குடிசையும், தெருவை
மறித்த கழியும். அவர்களுக்குத் தெரியாமல் ஊரைவிட்டு யாரும் வெளியே போக
உள்ளே வர முடியாது. குடிசைக்குள்
வயர்லெஸ். ஒரே இரைச்சல் எப்போதும்.
குயில் சத்தமும் மணிச் சத்தமும் கேட்ட
அப்பாவுக்கு இதெல்லாம் திகைப்பாய் இருந்தது.
இரவில் முதலில் கேட்ட
குண்டு சத்தத்தில் அப்பா உள்ளே வந்து
படுத்தார். இனி வாசலில் அவரால்
படுக்க முடியும், படுத்தால் நிம்மதியாய் உறங்க முடியும், என்று
தோன்றவில்லை. அன்றைக்கு உள்ளே படுத்தும் அப்பாவுக்கு
உறக்கம் வரவில்லை. காற்றோட்டமான வெளி எங்கே, சின்னதான
இந்த பத்துக்குப் பத்து அறை எங்கே.
அறை அல்ல, இது சிறை.
தானறியாத அசதியில் கண் சிறிது மூடினாலும்
வழக்கத்துக்கு விழிப்பு வந்தது. அப்பா குயிலின்
கூவலுக்காகக் காத்திருந்தார். வெளியே கிழக்கின¢ சாம்பல்
உயிர்த்து வெள்ளி முலாம் பூச
ஆரம்பித்த வேளை... குயில் கூவவில்லை.
அப்பாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது. அதற்குப் பிறகு ஊரில் பறவைகளே
இல்லாமலாச்சு.
அரியரத்தினம் எப்போது வெளியே போனாலும்
அடையாள அட்டை கூட வைத்திருந்தான்.
மின்சார மற்றும் தண்ணீர்க்குழாய் மராமத்து
வேலைகள் செய்கிறவன் அவன். சின்ன ஊர்
இடையன்குடி. பக்கத்து நாலைந்து ஊர் சேர்ந்தே அவன்
போய்வர வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் அவன்
போன கணத்தில் இருந்து திரும்பி வரும்
வரை அப்பா பாடு திண்டாட்டமாய்
இருந்தது. காலையில் சிறிது சோறு வடித்து
துவையலோ, ரசமோ எதாவது வைத்துவிட்டு
அவன் கிளம்பினால் இருட்டும் போதுதான் வீடு திரும்புவான். அவர்
போக்கிடம் அந்த சிவன் கோவில்
தான். குருக்கள் இந்த ஊர் வசதிப்படாது
என்று கிளம்பிப் போனதும் சிவனும் தனித்து
விடப்பட்டார். அப்பா போய் சிவனுடன்
உட்கார்ந்திருப்பார்.
குண்டுச்சத்தம் அதிகமான போது அப்படி
அப்பாவை விட்டுவிட்டுப் போவதும் அரிக்கு இஷ்டப்படவில்லை.
ஏற்கனவே ஊரில் பாதிப்பேர் காலிபண்ணிப்
போய்விட்டார்கள். வாழும் நாட்டிலேயே பாதுகாப்பு
இல்லை என்றாகி கொள்ளைக்காலம் ஆயிற்று.
ஊரே பாதுகாப்பு இல்லாமலாகி, இப்போது வீடே பாதுகாப்பற்றுப்
போனது. இதை யாரிடம் சொல்லி
அழ முடியும்?
சித்தர்குளத்தில் அகதி முகாம் இருக்கிறதாகச்
சொன்னார்கள். அங்கே ஒரே கூட்டம்.
கிடைக்கிற ரேஷன் அவரவர்க்கே பத்தவில்லை.
புதிதாய் ஆள் வந்தால் அவர்களுக்கு
ரேஷன் வர மேலும் ரெண்டு
மூணு நாள் ஆனது. இதை
நம்பி ஆடுகள், கோழிகள், மாடுகளைக்
கூட ஓட்டிக்கொண்டு அங்கே தங்க வந்தவர்கள்
இருந்தார்கள். புதிய இடம் என்று
அந்த மிருகங்கள் வெறித்தன. ஊரில் திருட்டுபயம் அதிகமாய்
இருந்தது. ஒரே வீட்டில் இரண்டு,
சில சமயம் மூன்று குடும்பங்கள்
கூட இருந்தன. வீடு என்று பெரிதாய்ச்
சொல்ல என்ன இருக்கிறது? கொட்டகை.
கித்தான் மறைப்பெடுத்த கொட்டகைகள். கட்டாந்தரை. வெளியே யாராவது தண்ணீர்
கொட்டினால் உள்ளே வந்துவிடும். சண்டைகள்...
அவர்களுக்குள்ளேயே ஒருத்தருக்கொருத்தர் போட்டியும் பொறாமையும் சண்டைகளும் பூசல்களுமாய் அடிக்கடி அந்த இடமே அமர்க்களப்
பட்டது. தொண்டை வறள வறளக்
கத்திவிட்டு பிறகு தாங்களே அடங்கினார்கள்.
ஊர்பெண்டுகளை நினைக்கவே அரிக்கு மனசு வலித்தது.
வாழ்க்கை எப்படியெல்லாம் சின்னாபின்னமாகி விட்டது. நல்லவேளை அவர்களைப் பொறுத்தமட்டில் அப்பாவும் பிள்ளையுமாய் குடும்பத்தில் இரண்டேபேர்தான் என்கிறதே ஆறுதலாயிற்று.
கொஞ்சம் பசையுள்ளவர்களோ கடல்கடந்து
இந்தியா, கனடா, இங்கிலாந்து, நார்வே,
ஜெர்மனி என்று போய்விட்டார்கள். எப்பவாவது
தங்கள் உறவினருக்கு அவர்கள் கடிதம் எழுதி
கூடவே கருப்புக் காகிதம் சுற்றி உள்ளே
பணமும் வைத்து அனுப்பினார்கள்.
தபால் அலுவலகத்தில் அந்த உறைகள் சாமர்த்தியமாய்ப்
பிரிக்கப்பட்டு பணம் களவாடப்பட்டு வெறும்
கடிதம் மாத்திரமே இவர்கள் கைக்கு வந்து
சேர்ந்தது. முறையற்ற வழியில் பணம் அனுப்பியதால்
அதைக் கேட்க முடியாது.
முகாமில் இருந்தபோதும் பக்கத்தில் எதும் வேலை கிடைத்தால்
அரியரத்தினம் போய்வந்தான். பட்டாளத்து ஆட்கள் கூப்பிட்டால் காசு
தர மாட்டார்கள். என்றாலும் அதைத் தட்ட முடியாது.
ஆனால் அடிக்கடி வெளியே போக வர
சலுகைகள் கிடைத்தன. வெளியே போகையில் வருகையில்
அவர்களுக்கும் எதாவது சிகெரெட்டோ தின்பண்டங்களோ
வாங்கிவரச் சொல்வார்கள். வந்த ரெண்டு மாதத்தில்
காசு சேர்த்து அரி அப்பாவுக்கு ஒரு
கயிற்றுக்கட்டில் வாங்கித் தந்தான். உள்ளேயும் போட்டுக்கொள்ளலாம். காற்றாட வெளியே படுத்துக்கொள்ளணுமானாலும்
வசதி.
குறைந்த கூலிக்கு கடுமையாய்
உழைக்க வேண்டியிருந்தது. அப்பாவும் அவனும் பேசிக்கொள்வதே கூட
இல்லை என்றாகி விட்டது. வீடு
திரும்ப அசதியாய் இருக்கும். அவன் வாங்கிவரும் வாழைப்பழம்,
மிக்சர் ஆகியவற்றுக்கு அப்பா ஏங்கிக் கிடந்தார்.
வயிறு சதா பசித்தபடி யிருந்தாப்
போலிருந்தது. இது குறித்து அவருக்கே
வெட்கமாய் இருந்தது. நீ சாப்பிட்டியா, என்றுகூட
மகனைக் கேட்காமல் ஒருநாள் தான் சாப்பிட்டதை
எண்ணி ரொம்ப வருத்தப்பட்டார்.
இந்த முகாமில் வசதி
போதவில்லை என்று தள்ளி யிருக்கிற
மற்றொரு முகாமுக்கு மாறினார்கள். இப்படி சொந்த ஊரைவிட்டு
தள்ளித் தள்ளிப் போகிறதே அப்பாவுக்கு
ரொம்பச் சங்கடம். ஆனால் அவர்கள் சொல்ல
என்ன இருக்கிறது. புது முகாம் என்று
சொன்னதும் அவர்கள் ராணுவ ட்ரக்கில்
ஏறி உட்கார்ந்தாகிறது. அங்கே இதைவிட வசதிகள்
கிடைக்கலாம். தண்ணீர் தாராளமாய்க் கிடைக்கலாம்...
என்கிற நப்பாசை. அழைத்துப் போகையில் வண்டி கிடைக்கும். அது
பிடிக்கவில்லை என்றால் திரும்ப நடந்தே
தான் வரவேண்டும்.
நாளிது வரை வியாதி
வெக்கை என்று படுக்காத மனுசன்.
அடிக்கடி இருமினார். உள்ளே பொங்கியபோது தொண்டை
எரிந்ததோ என்னமோ. நெஞ்சில் சளி
கட்டி அடிக்கடி காறித் துப்பினார். சில
சமயம் இருமி இருமி மூச்சு
கட்டிக்கொண்டது அவருக்கு. யாராவது தண்ணீர் கொடுத்தால்
வாங்கிக் குடித்தபடி அடங்கினார். அப்பாவைத் தனியேவிட்டுப் போகவே அவனுக்கு யோசனையாகி
விட்டது. நல்லா காலாற நடந்து
திரிந்த மனுசன். முழங்கை வரை
நீண்ட சட்டை. மத்தளம்போன்ற தனி
பித்தான்கள். சட்டையில் கோர்த்து மாட்டிக்கொள்வார். காதில் கடுக்கன். நெற்றியில்
திருநீறு. எல்லா நியதிகளும் இல்லாமலாயிற்று.
உடம்பே ஆலமரம், கைகள் விழுதுகள்
என இருந்தவர்... சாட்டைக் குச்சியும் கயிறுமாய் ஆகிவிட்டார்.
ஊர்ப்பக்கம் நிலைமை முன்னைவிட மோசமாய்
ஆகிவிட்டதாய் பேசிக்கொண்டார்கள். அந்தக் கோவிலே இப்போது
இல்லை. ஊரின் அடையாளங்களே ஒண்ணொண்ணாய்த்
தொலைந்து போக ஆரம்பித்திருந்தது. ஜனங்கள்
இல்லாத வெற்று ஊர். ஆவிகளைப்
போல ஊய்யென்ற காற்று பயமுறுத்தி அலைகிறது.
என்ன தப்பு, யார் மேல்
தப்பு... என்று பேசவே எல்லாரும்
பயப்பட்டார்கள். சுவருக்கும் காது இருக்கிற உலகம்
இது. யாரையும் ஆதரிக்கவும் வழி கிடையாது. இவனைச்
சொன்னால் அவன் உருமுகிறான். அவனைச்
சொன்னால் இவன் சுட்டே விடுவான்.
விசாரணை யெல்லாங் கிடையாது. ரெண்டு
இடத்திலுமே இது தான் நிலைமை.
சந்தேகமா, சுட்டுவிடு. எப்பவுமே பயந்தே வாழ்கிறதாய் இருந்தது.
அப்பா அதிகம் பேசுகிறவர்
அல்ல. பௌர்ணமி வெளிச்சத்தில் வாத
நிழலில் இரவில் மனம் பொங்கினால்
சட்டென தேவாரம் எடுப்பார். காதலாகி
கசிந்து கண்ணீர் மல்கி... என்று
பாடுவார். காதலாகி... கண்ணீர் மல்கி... கசிந்து...
என்று மனசில் லயித்துப் பாடுவார்.
பித்துப் பிடித்த கணங்களில் மனம்
எப்படியெல்லாம் சிந்திக்கிறது. அப்பா தேன்குடித்த நரியாய்
அப்போது காணுவார். அரியரத்தினம் அவரைக் கேட்டபடியே உள்ளே
படுத்திருப்பான் புன்னகையுடன்.
வெளி வெளிச்சத்தில் அதையெல்லாம்
நினைத்து துக்கப்பட்டு கிடக்கிறார் அப்பா. எப்படி திடகாத்திரமாய்
இருந்தவர் எப்படி இளைத்துத் துரும்பாகிவிட்டார்.
உடம்பு காணாமல்போய் நிழல் மாத்திரமாய் ஆகிவிட்டார்.
அப்பா இரும ஆரம்பித்தபோது போய்
நெஞ்சை நீவி விட்டான். ''என்னப்பா,''
என்றான். ''நம்ம ஊருக்கு...'' என
திணறினார். ''ஒருநடை போய்ப் பார்த்...''
''இப்ப அங்க எதுவுமே
இல்லப்பா. நம்ம வீடே என்ன
கதியில் இருக்கோ,'' என்றான். ''அந்தக் கோவிலே இடிஞ்சிபோச்சிப்பா
குண்டுவீச்சில்... சாமிக்கே போட்டுட்டான் குண்டு அட்சதை.''
அதைச் சொல்லியிருக்க வேணாமாய்
இருந்தது. அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டார்.
கண்கள் தரதரவென்று வழிந்தன. ''ஊரே இப்படித்தாண்டா அறுபட்ட
வாலாய்த் துடிச்சிக்கிட்டு கிடக்கு... சனங்க என்ன பண்ணும்.
நம்ம சின்னச் சின்னப் பொண்ணுகள்...''
ஓ...வென சத்தம் போட்டு
அழும் அப்பா.
படாத கேவலம் இல்லை.
நமக்கென வரும் ரேஷனைத் தருவதற்குள்
அவர்கள் எத்தனை கேவலப்படுத்தி விடுகிறார்கள்.
நாம் என்னமோ அவர்கள் அடிமைகள்
மாதிரி. அடைக்கலம் என்று வந்தவர்களை இப்படியா
காலில் போட்டு மிதியடியாய் மிதிப்பார்கள்.
சிறிது முகக் குறிப்பு காட்டினாலும்
பூட்ஸ் காலால் உதைக்கிறான்கள். பட்டினியாய்க்
கூடக் கிடந்து விடலாம். இப்படி
அவமானப்பட்டு வாழவா, என்று உடம்பே
கூசுகிறது.
அப்பா அடுத்த சில
நாட்களில் செத்துப் போனார். ஒருதரம் இடையன்குடி
கூட்டிப்போய் அவரைக் காட்டியிருக்கலாம் என்றுகூட
வருத்தமாய் இருந்தது. எப்படிப் போக முடியும்? இங்கிருந்து
பேருந்தில் மூணு மணி பயணம்.
சாதாரணமாகவே ஊருக்குள் பேருந்து வராது. இப்போது நாலு
கிலோமீட்டர் தள்ளி, பிரதான சாலையிலேயே
இறக்கி விட்டுவிட்டுப் போகிறார்களாம். அதற்குக் கிளம்ப ஆயிரம் காரணம்
கேட்கிறான்கள். திக்கும் இல்லாமல் திசையும் இல்லாமல் நாம் திண்டாடுவது அவர்களுக்கு
உற்சாகம். கேலிக்குக் குறைவு இல்லை.
''ஏ பாரப்பா, ஊருக்குப்
போறானாம். யார் இருக்கா அங்க?
உன் கொளுந்தியாளா?''
''நல்லா செவத்த குட்டியா
இருப்பாளா?'' என அடுத்தவன். அவனை
மறந்து அவர்கள் தங்களுக்குள் வேடிக்கை
பண்ணிக்கொண்டிருப்பார்கள்.
அப்படியே உடம்பு கூச காத்திருக்க
வேண்டும். அப்புறமும் அனுமதி கிடைக்குமா தெரியாது.
உளவாளி, என்கிறதாக சந்தேகம் வந்தாலே நம் தலை
நமக்கு இல்லை.
அப்பா இறந்து போனதும்
தனக்கே ஒரு உந்துதல். போய்
நம்ம ஊரையும் வீட்டையும் பார்த்துவிட்டுத்
தான் வந்தால் என்ன? சண்டை
கிட்டத்தட்ட முடிந்தாப் போல அடையாளங்கள் தெரிந்தன.
பெரிய தலையைச் சுற்றி வளைத்தாகி
விட்டது. நிலைமை ராணுவத்தின் கட்டுக்குள்
வந்துவிடும் என்று எல்லாரும் கிசுகிசுப்பாய்ப்
பேசிக்கொண்டார்கள். அட சுற்றி வளைக்கப்பட்டவர்கள்
யார், நம்ம சகோதரர்கள், சகோதரிகள்
தானே? நம் குடும்பத்தில் இருந்து
போனவர்கள்தானே?... என சிலர் நினைக்கவே
கண்ணீர் திரண்டது.
சண்டை நம் ஊர்ப்பக்கத்தில்
இருநது உள்ளே தள்ளி வள்ளிவிளைப்
பக்கம் மையம் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.
அப்படியானால் இடையன்குடியில் அமைதி திரும்பி விட்டது
என்பது அல்ல. இந்த ஊரையே
துடைத்து நக்கியாகி விட்டது. இங்கே இனி துடைக்க
ஏதும் இல்லை. அப்படித் தான்
இருக்கும் எனத் தோன்றியது. அப்பா
இல்லாமல் இப்படி தனியே இங்கேயே
மருகிக் கிடப்பதற்கு ஊரைப் போய்ப் பார்த்துவிட்டு
வரலாம் என்று கிளம்பினான்.
வழியெங்கிலும் போரின் சின்னங்கள். மரங்கள்
எரிந்து கரியாய் நின்றன. புல்பூண்டுகள்
எதுவுமே இல்லாமல் கட்டாந்தரையாய் இப்படியே எதைப் பார்த்தபடி போய்க்கொண்டே
யிருப்பது தெரியவில்லை. வெயில் கடுமையாய்த் தெரிந்தது.
காற்று அற்ற வெளியை ஊடறுத்துச்
சென்ற பேருந்தின் உள்ளே வெப்பம்மிகுந்து புழுங்கியது.
கூட்டம் என்றும் எதுவும் இல்லை.
நாலைந்து பேர் தள்ளித் தள்ளி
அமர்ந்திருந்தார்கள். எல்லார் முகத்திலும் போரின்
களைப்பு. எல்லாருமே உறவுக்காரர்களைப் போய்ப்பார்க்க, அல்லது வேலை என்று
போய்வருகிறவர்களாய் இருக்கும். ஒருவேளை அவர்களும் அவனைப்போல
ஊர் பார்க்கிற ஆசையில் கிளம்பி யிருக்கலாம்.
இடையன்குடி நிறுத்தத்தில் அவன் ஒருத்தன் மாத்திரமே
இறங்கினான். அவனை இறக்கி விட்டுவிட்டு
புழுதியில் பேருந்து மறைந்துபோனது. வெயிலின் நேரடியான தாக்குதலில் உடம்பெல்லாம் எரிந்தது. ரஸ்தாவில் இருந்து வலதுபக்கமாய் ஒதுங்கியது
ஊர்ப்பாதை. சோபையிழந்து கிடந்த கைகாட்டி. அப்பா
வந்தால் அவரால் இப்படி நடந்துவர
முடியுமா என்ன? பாராக்காரனைக் கேட்டால்
எப்படியும் ராத்திரிக்குள் திரும்பி விடவேண்டும் என்பான்..
செக்போஸ்ட் இருந்தது ஆளில்லாமல்.
முழுசாய் எந்த வீடுமே மிஞ்சவில்லை.
ஆள் வெளியேறிய வீடுகளை உள்ளூர் மக்களே
புகுந்து எதுவும் கிடைக்கிறதா என்று
தேடியிருப்பார்கள். நம்மை நமக்கே எதிரியாக்கி
விடுகிறது போர். ஒரு சுயநலத்தில்
உருவாகும் போர், ஒவ்வொரு மனிதனிடமும்
சுயநலத்தைப் பெரிதாய் ஊதிவிட்டு விடுகிறது. இதில் தர்மம், மனிதத்தன்மைகள்
உள்ளமுங்கி காணாமல் போய்விடுகின்றன.
சிவன் கோவில் இடிந்து
கிடந்தது. வெளித் திண்ணையில் சிதிலங்கள்
கிடந்தன. அதன் சிறு நிழலில்
யாரோ படுத்துக் கிடந்தான். கந்தல் உடை. துவைத்தே
மாசக்கணக்கில் ஆகியிருக்கும். அவனே எப்போது குளித்தானோ?
யார் அவன், தெரிந்த முகமாய்
இல்லை. பாவம். இந்த ஊரோ
வெளியூரோ? போர் மக்களை எப்படியெல்லாம்
மாற்றிப்போட்டு விடுகிறது. எதுவுமே இல்லாத இந்தக்
கட்டாந்தரையில் இவன் ஏன் இன்னும்
இந்தப் பக்கமாகவே சுத்தி வருகிறான். இவனைப்
பார்த்ததும் அந்தப் பைத்தியக்காரன் எழுந்து
டண் என்று மணியடித்தான். இத்தனை
சூறையில் அந்த மணி இன்னும்
அங்கே மிச்சம் இருந்தது ஆச்சர்யம்தான்...
அரி திரும்பிப் பார்த்தான். அழுக்கான தாடி. காதில் எங்கிருந்தோ
தேடிச் சேர்த்திருந்த துண்டு பீடி. கண்ணைப்
பார்த்தால் அத்தனை சிவப்பு. தூங்குவானா
என்றே தெரியவில்லை. என்னவோ பேச ஆசைப்பட்டு
பேசாமல் அப்படியே அவன் நின்றாப் போலிருந்தது.
அவனை அருகே அழைத்து அரி
அவனுக்கு தன் பையில் இருந்து
ஒரு வாழைப்பழம் எடுத்துத் தந்தான். வெட்கப்படாமல் அதை வாங்கி யோசிக்காமல்
அப்படியே உரித்துச் சாப்பிட்டான் அவன்.
ஓ ஓ... போர்
என இப்படி ஓர் இனத்தையே
வரிந்துகட்டி அழிப்பது என்ன நியாயம்?
தெருவின் அடையாளங்களே தெரியவில்லை. சாதாரணமாக ரொம்ப நெருக்கமான வீடுகள்
அங்கே இருந்தன என்று சொல்வதற்கில்லை.
மொட்டையாய் நின்றிருந்த வாத மரம், அதுதான்
அடையாளமாய் இருந்தது. வாசல் கதவே காணவில்லை.
மேற்கூரையின் ஓடு உடைந்து சரிந்து
கிடந்தது. நல்ல ஓடுகளை யெல்லாம்
எடுத்துப் போயிருந்தார்கள். மேல்தளத்தைப் பிய்த்துக்கொண்டு இடிந்து செங்கல்கள் விழுந்துகிடந்தன.
நேரடியாய் உள்ளே சூரிய வெளிச்சம்
விழுந்தது.
அந்தக் காட்சிகள் அதிர்ச்சியாய்,
பெரும் துக்கமாய் இருந்தது என்று சொல்ல முடியாது.
ஓரளவு இது எதிர்பார்த்ததுதான். எதிர்பார்க்காதது
அல்ல. என் வீட்டை இப்போது
இந்த நிலையில் பார்க்கிறேன்... எத்தனையோ வீடுகளை இதே நிலையில்
முன்பே பார்த்துத் தானே இருக்கிறேன்... ஆனால்...
அப்பா இருந்திருந்தால் துவண்டிருப்பார். அவரது பிரியமான வீடு
இது. அம்மா பெயரையே அதற்கு
வைத்திருந்தார் அவர். அம்மா இறந்துபோனதும்
அந்த வீட்டுக்கு அவள் பெயரை வைத்ததில்
அவளோடு கூட இருக்கிறதான, அவளோடு
வாசம் செய்வதான சிறு ஆசுவாசம் அவருக்கு
இருந்திருக்கலாம். வீட்டைவிட்டு முகாமுக்குக் கிளம்பும்போது என்ன நினைத்தாரோ? ஊரே
கிளம்பி காலிபண்ணிப் போகிற நேரம், ஒருவேளை
பயம் பிரதான விஷயமாய் ஆகியிருக்கவும்
கூடும்.
போர் ஓய்ந்து அவரவர்
இடத்துக்குத் திரும்பலாம் என்றாலும் கூட, இனி இங்கே
வர எதுவும் இல்லை என்று
பட்டது. இதுதான் என் தாய்
மடி. இதுவும் இல்லாமல் போனால்
எப்படி? எங்குதான் போவது என்று திகைப்பாய்
இருந்தது. இனி நான் இங்கே
எந்த பந்தமும் சொந்தமும் கொண்டாட இல்லை, எனக்கு
மட்டுமா? இந்த ஊரின் மொத்த
சனமுமே இப்படி திண்டாடி அலைபாய்கிறது.
இந்த ஊர் மட்டுமா? இந்த
இனமே...
அப்படியே அயர்ந்து தரையில் உட்கார்ந்தான். உயிர்
இல்லாத அவன்உடலை அவனே பார்ப்பது போலிருந்தது.
நெஞ்சை எதோ அடைக்கிறாப் போல
இருந்தது. துக்கத்தை விட திகைப்பே ஆளை
அழுத்தியது. கோவில்பக்கம் பார்த்த அந்தப் பைத்தியக்காரன்...
தன் வீட்டின் இடிபாடுகளைப் பார்த்தே இப்படி ஆகியிருக்கலாம். இதை
முறையிட கோவிலுக்கு வந்தால், கோவிலே அல்லவா இடிந்து
கிடக்கிறது. வீட்டை விட அப்பா
கோவிலைப் பார்த்துத்தான் கலங்கி யிருப்பார் என்று
பட்டது. அசதிதீர காலை நீட்டிக்கொண்டு
உட்கார்ந்திருந்தான். இது என் வீடு.
திரும்ப இங்கே வருவேனா தெரியாது.
இது இல்லை என்றாகி விட்டது.
இனி எங்கே போவேன் தெரியாது.
மூச்சடைக்கிற மாதிரி இருந்தது. நல்லவேளை
அப்பா கூட இல்லை, என
திரும்பவும் நினைத்தான். அப்படியே அந்த அழுக்கில் படுத்துக்கொண்டான்.
தாய்மடி. மதுரவல்லி இல்லம். சத்தமாய் ''அம்மா'' என்று
கூப்பிட்டான். இது பைத்தியக்காரத்தனம் என்று
பட்டது. அட இந்த ஊரில்
யாருமே இல்லை. ஒருவன், ஒரே
ஒருவன் இருக்கிறான். அவன் பைத்தியக்காரன். ஒருத்தன்
அங்கே கோவில்பக்கம். அடுத்தவன் இங்கே வீட்டில்... அழுதபடி
சிரித்தான்.
அழலாம். தப்பில்லை. சும்மா
அடக்கி அடக்கி என்ன பண்ண?
ஒருநாள் நெஞ்சுவலி யெடுத்துவிடும். இப்படி ஓட ஓட
துரத்தினால் என்னதான் செய்வது? எளியவன் இங்கே ஏமாந்தவன்.
இளிச்சவாயன். நாட்டில் என்ன நடந்தாலும் அகப்பட்டுக்கொள்வது,
அவஸ்தைப்படுவது எளிய சாமானிய ஜனங்கள்தான்.
கண்ணீர் வழிய அப்படியே கண்மூடிக்
கிடந்தான். தானறியாமல் தூங்கிவிட்டான் போல.
நறுக் என்று காலில்
எதோ கடித்... பதறி காலை இழுத்....
எலி ஒன்று... அட சனியனே, என்று
அவசரமாய் எழுந்து கிடைத்த செங்கலை
ஆவேசமாய் ஓங்கி... கை அப்படியே அந்தரத்தில்
நின்றது.
இப்படித்தானே எதோ பதட்டத்தில், பயத்தில்
ஒரு இனத்தையே போர் என்று அழிக்கிறார்கள்...
செங்கல் கையில் இருந்து
விழுந்தது. சத்தமாய் ஒரு கேவல் அவனில்
இருந்து வெடித்தது.
storysankar@gmail.com
– Mob 91 97899 87842
Comments
Post a Comment