சிறுகதை
கிளிக்
கூண்டுகள் விற்கிறவன்
எஸ். சங்கரநாராயணன்
சிலந்திவலை பசைகாய்கிறதைப்
போல அந்தி சாம்பல் பூத்து கருகி இறுகிவிடுகிறது. மல்லிகை கொட்டிக் கிடக்கிறாப் போல
வெளிச்சம் உலகத்தில் ஆனால் வேறு வாசனைகளுடன் நிரம்பி யிருந்தது. இருளில் வாசனைகள் துல்லியப்
படுகின்றன. கர்ச்சீப் மேஜிக் போல சட்டென இருள் வரக் காத்திருந்து குபீரெனப் பூத்துக்
குலுங்கி வாசனையை விசிறியடிக்கும் மரமல்லி. எல்லாரும் ஜோரா கைதட்டுங்க!... ஓசைகள் தெளிவுற
நம் காதுகளில் கேட்க வாய்க்கிறது அப்போது. வீட்டுக்குத் திரும்பி வந்த நாயகன் சட்டையைக்
கழற்றும் கிசுகிசுப்பொலியும் அவன் சட்டையில் இருந்து நாணயம் ஒன்று வெளியேறி சிமென்ட்
தரையில் சிலிங் எனச் சிதறி குடுகுடுவென, ஜெட்டிபோடாமல் குளியலறையில் இருந்து வெளியேறும்
பெண்குழந்தை போல ஓடுவதும். அது ஐம்பது காசா ஒரு ரூபாயா என்று அந்த ஒலிக்குறிப்பில்
அடையாளம் சொல்ல முடிகிறது.
சமூகத்தின் ஓய்வு நேரம் அது. காட்டில் மிருகங்கள்
இரவில் வெளிவருகின்றன. அலைச்சலும் இரையெடுத்தலுமாக காடு இரவில் விழித்துக் கொள்கிறது.
தான் மேம்பட்டு விடடதாகப் புரிந்த மானுடன் இரவினை ஓய்வுக்கும், பகலை உழைப்புக்குமாக
வடிவமைத்துக் கொண்டதாய்த் தெரிகிறது. ஆக இரவு, ஓய்வு என்கிற அளவில் கலாபூர்வமாக,, உழைப்பும்
லௌகிகமும் கடந்து, கனவுக் கிளர்ச்சியும் ரசனையும் அளிக்கிறதாக அவன் காலப் போக்கில்
கண்டு கொண்டான். எங்கோ சரியாக மூட முடியாத தண்ணீர்க் குழாயில் இருந்து நழுவி பெருகி
திரண்டு உருண்டு, இழுக்கும் பூமிக்கு இறங்கும் ஒரு நீர்க்குமிழியின் சொட், கண்டுகொண்ட
காது அதை ருசிக்கிறது. பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது.
ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில்
இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன. அசையும் தென்னையோலை அடுத்த விருட்சத்தோடு என்ன
ரகசியம் பேசுகிறதோ என திகட்டலான மயக்கம். கற்பிதங்கள் வாழ்க்கையைப் புன்னகையுடன் எதிர்கொள்ள
வைக்கின்றன.
துணையெழுத்தாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும்
நாய்கள் தமக்குள் ஒடுங்கிச் சுருண்டு முட்டை வடிவம் எடுக்கின்றன. குட்டி போட்டுப் பால்
ஊட்டும் நாய்கள்!
பகலிலேயே சற்று இருட்டிக் கிடக்கும் வீடு. வாசலில்
நிற்கிறவரை ''வாங்க'' என்று உள்ளேயிருந்து கூப்பிடுவது கேட்கும். யார் கூப்பிடுகிறார்கள்
என்று வெளியேயிருந்து பார்க்க முடியாது. உள்ளே வந்து வெளியைத் துழாவி கண்ணைப் பழக்கி
சில பயிற்சிகளுக்குப் பின் உள்ளறைகள் மங்கலாக அடையாளம் பெறும். அந்த வீட்டின் தலைவர்
தட்சிணாமூர்த்தி. இலக்கிய ரசிகர். சின்ன வயசில் ஊர்ப்பூங்கா பக்கத்தில் இருக்கும் நூல்நிலையம்
தவறாமல் போவார். விகடனும் குமுதமும் வாரா வாரம் வாசிப்பார். சாண்டில்யனின் யவனராணி
போன்ற தலையணைச் சரித்திரங்கள் வாசித்து மகிழ்வார். வருடக் கணக்கில் தொடரும் பெரிய தொடர்கதைகள்
என்பதால் மட்டும் அவை தலையணைச் சரித்திரங்கள் அல்ல, மூணு வாரத்திற்கொரு தரம் அதில்
தலையணை வர்ணனைகள் கட்டாயம் இருக்கும். அதில் வரும் ராஜஸ்திரீகள் ஸ்தனங்களும் பிற நெளிவு
சுழிவுகளும் குறைவறப் பெற்றிருந்தார்கள், என்பதை ஆராய்ந்து எழுத்தாளர் எழுதியிருந்தார்.
சரித்திரக் கதை என்றால் ஆராய்ச்சி தேவைதான். அதை வாசிக்க வரிசையில் காத்திருக்க வேண்டும்.
நூலகத்தில் யாராவது வாசித்துக் கொண்டிருந்தால், ஒரு வார்த்தை, 'படிச்சிட்டுக் குடுங்க'.
தூக்கத்துக்கு உதவுவதற்காகக் கண்டுபிடிக்கப் பட்ட தலையணைகள் தூக்கத்தைக் கெடுக்கிறதாக
ஆகியிருந்தன. வயசு அப்படி.
அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக இலக்கிய ருசி தட்டி,
சிறு பத்திரிகைகள் என்று கவனப்பட்டார். பெரும் இதழ்களிலாவது நாசூக்கும் பாவ்லாவும்
இருக்கும். இந்தக் கம்னாட்டிகள் அப்டியே தோலை உரிச்சாப் போல பச்சை பச்சையா செக்ஸ் எழுதினார்கள்.
நூலகத்தில் காத்திருந்து அவைகளைப் படிக்க முடியாது. தனியே வாசித்து உடல் கிளர்ச்சியுற்று
மகிழ வேண்டும். இச்சைகளைத் தேடல்களாக அவை அடையாளங் கண்டு தூக்கிப் பிடித்தாப் போலிருந்தது.
வார்த்தைப் பர்தா இல்லாத எழுத்துக்கள். சொல் மங்கலம் என்று பள்ளிக் கூடத்தில் வாத்தியார்
சொன்ன ஞாபகம். மங்கல வழக்கு, இலக்கணத்தில் உண்டு. இலக்கணத்தை எத்தறதே இலக்கியவாதிக்கு
லட்சியம்ன்றான். அதும் தெரியாமலேயே எத்தறது. அவனுக்கென்னா தெரியும் இவனுக்கென்னா தெரியும்ன்றான்...
தனக்கு எதுவுந் தெரியாமலே.
ஆங்கிலத்தில் வாசிக்க ஆசை உண்டு. அத்தனை விருத்தியாய்
அவர் ஆங்கிலம் அறியார். பஜாரில் பிளாட்பாரங்களில் திடீரென்று பனியன்கள் சாக்சுகள் ரோல்டுகோல்டு
செய்ன் அறுபது ரூபாய் வாட்ச் என்று சிறு குன்றாய்க் குவித்து விற்பார்கள். திடீர் மழை
போல வந்ததும் தெரியாது, விற்றுப் போனதும் தெரியாது. ஏமாத்த அவ்ள அவசரம். அந்தப் பக்கம்
வேலுச்சாமி பழைய புஸ்தகக் கடை வைத்திருந்தார். நிறைய ஆங்கில நாவல்கள் தூண் போல மேலேமேலே
அடுக்கி நிற்கும். பிரமிட் போல குவிந்து கொட்டிக் கிடக்கும். அதிலும் ஒருமாதிரி புஸ்தகங்கள்
ஆங்கிலத்திலும் 'நீஷீயீயீமீமீ tமீணீ ஷீக்ஷீ னீமீ' போல, தமிழிலும் 'ஜுலியுடன் ஜாலி
-' இப்படிக் கிடக்கும். அதை வீட்டில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள் வாசித்து விட்டுத்
திருப்பி விடலாம், வாடகைக்கு உண்டு.
நல்ல வாசிப்பு ருசி உள்ள தமிழ் நாவல்கள் அந்தக்
குவியலில் கிடக்கும். அடியில் இருந்து உருவி எடுக்க வேண்டும். மேலே இந்த வக்கிரங்கள்
- அவைதானே பார்த்தவுடன் அள்ளிப் போகச் சொல்லுகின்றன என்று கடைக்காரன் போட்டிருப்பான்.
ஏறியமுக்கினாப் போல அடியே க.நா.சு. மூச்சுத் திணறிக் கிடப்பார். உருவும் போதே அவர்
'பாத்து பாத்து வலிக்குது' என்பார். கையில் எடுக்க 'தேங்ஸ்' என்பார். திருப்பிய முதல்
பக்கத்தில் யாராவது பல்கலைக் கழக மாணவி ஆராய்ச்சிக்காக வாங்கியது தெரியும். சாந்தகுமாரி,
பேர் எழுதி எம். ஏ. என்று போட்டிருக்கும். பாடம் முடிந்த ஜோரில் பழைய புத்தகக் கடைக்கு
அவள் அனுப்பி இருக்கலாம். சிலர் இன்னும் சுவாரஸ்யமாக மின்சார வாரியம் போடுவதைப் போல
எக்ஸ் வடிவ எலும்புகளும் நடுவே மண்டையோடும் போட்டு 'தொடாதே அபாயம்' என எழுதி வைத்திருப்பார்கள்.
இனி இந்த எழுத்தாளனை இந்த ஜென்மத்தில் வாசிக்க மாட்டேன் என்கிற சங்கல்பத்துடன் பழைய
புத்தகக் கடைக்கு வந்து எறிந்துவிட்டுப் போயிருப்பார்கள். கிஸ் அடிக்காத ஆங்கிலப் படம்
எவன் பார்ப்பான், என எழுந்து வெளியே வருவதைப் போல. அந்தப் புத்தகங்கள் அவருக்கு சுவாரஸ்யமாய்
இருந்தன. மிக அபூர்வமான எழுதச் சிரமமான பாத்திரங்களை க.நா.சு.வும், வல்லிக்கண்ணனும்
எழுத முனைந்தார்கள். ஜானகிராமன் கிச்சு கிச்சு மூட்டினாப் போல எழுதறாரு. மகா நோக்காடுடன்
லேசான வெட்கம் பூசிய புன்னகையுடன் அசோகமித்திரன் எழுதறாரு. சு.ரா.வும், லா.ச.ரா.வும் வார்த்தை மூர்க்கர்கள்.
தும்மினாக் கூட இலக்கியத் தும்மல்தான். வார்த்தைகளை ராஜவீதியில் தேர் போல உலாவ விட்டார்கள்.
மூக்குப்பொடி சுகத்துடன் புகையிலை மணம்னா கி.ரா. அண்ணாச்சி. திண்ணைக் கதை மன்னன்.
பத்திரிகை வாசிப்பதை விட புத்தக வாசிப்பில் கிறுகிறுப்பு
உண்டு தட்சிணாமூர்த்திக்கு. ஆளு யாரு எப்பிடி ஊர் என்ன நிலவரம் நாட்டு நடப்பு என்ன,
என்றெல்லாம் விசாரித்து விலாவாரியாய்ப் பேசிப் போகின்றன நாவல்கள். புத்தக வடிவச் சிறுகதைகள்.
அடுத்தவன் பொண்டாட்டி, கொலை கொள்ளை சஸ்பென்ஸ் துப்பறிதல் திடுக்கிடும் திருப்பம்...
இப்படிக் கதைகளை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. ஒரு பெண்டாட்டிக்கே வழி கிடையாது இங்கே.
அந்த வாழ்க்கை அவருக்கு ஒட்டவில்லை. பிறத்தியார் மனைவியா? தப்பாப் பாக்கலாமா? பாவமாச்சே!
ஊர் சனம் என்ன சொல்லும், மனுசாள்னா மானம் மரியாதை வேணாமா? ஆசைப்படு ஆனா பாக்காதே, இப்டியும்
இல்லாம அப்டியும் இல்லாமச் சொல்வார் ஜானகிராமன். சூடு ஒரு ருஜி, சிவப்பு ஒரு அழகுடா!
ஜானகிராமனின் தத்துவம். இலக்யி சில்மிஷம். நெருப்புல சூடும் இருக்கும் சிவப்பும் இருக்கு.
தொட்றாதே சுட்ரும்!
இன்ன வேலை என்று சொல்ல முடியாத ஜவுளிக்கடை வேலை.
கூட்டம் நிறைய இருந்தால் அவர் வெளியே விற்பனைக்கு வந்து புடவைகளைப் பிரித்துக் காட்டி
வரும் வாடிக்கையாளப் பெண்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். விலை குறைந்த புடவையில்
விலை பார்த்து விட்டு, விலை அதிகப் புடவையை எடுத்துக் கொண்டு, குறைந்த விலைக்குக் கேட்பார்கள்.
தோளில் அங்கவஸ்திரம் போல அதைச் சார்த்திக்கொண்டு கூட வந்த அப்பாவிடமோ, அப்பாவிக் கணவனிடமோ
'நல்லாருக்கா?' - எனக்கு நல்லாருக்கு, நீயும் நல்லாருக்குன்னு சொல்லு என்பது மறைபொருள்.
கணக்கு வழக்கு எழுதுதல் என்பது பரம்பரையாக வந்த
வேலை. குலசொத்தை. மேல் சுவரில் இருந்து நீ...ளமாய்த் தரைக்கு இறங்கித் தொங்கும் இரண்டரை
மீட்டர் வயரில் இணைந்த முட்டை விளக்கு. ரொம்ப சூடாய் இருக்கும். அரை மணிக்கு மேல் கணக்கு
பார்க்க கண் எரியும். கண்ணில் இருந்து தண்ணீர் கொட்டிவிடும். இதே இடத்தில் தான் அப்பா
உட்கார்ந்து இதே கணக்கு லெட்ஜர்களைப் பிரித்து விரித்து எழுதிக் கொண்டிருந்தார். தட்சிணாமூர்த்தி
படிக்கவில்லை. அப்பா இறந்தபின் இதே வேலை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்கே
கிராக்கி ஏற்பட்டு விட்டது. சூரத் போய் சரக்கு எடுத்துவரும் ஜம்புலிங்கத்தின் பையன்
ஒருத்தன், அவன்கூட படிப்பு கிடிப்பு வராமல் வாழ்க்கை நிலைப்படாமல் இருந்தான். அவனும்
இதே வேலைக்குப் போட்டி போட்டான். நாட்டில் படிப்பு வராமல் நிறைய இளைஞர்கள் எக்காலமும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
தட்சிணாமூர்த்திக்கு ஒரு பெண், ஒரு பையன். அவர்களுக்கும்
படிப்பு வரவில்லை. அவர் சம்சாரமும் எட்டாங் கிளாஸ் தாண்டவில்லை என்பதையும் நினைத்துக்
கொள்வது நல்லது. அவர் பரவாயில்லை, பத்து வரை படித்திருந்தார். எங்க, நல்ல படிப்பு படிக்கட்டும்
என்று கல்லூரிக்குப் பணங் கட்டினால் வகுப்புக்கே போகாமல் சினிமாத் தியேட்டர் பக்கம்,
பஸ் ஸ்டாண்டுப் பக்கம் திரிகிறார்கள். சிகெரெட் லாகிரி வஸ்துகள் எனப் பழகிக் கொள்கிறார்கள்.
துட்டுச் செலவு? அப்பாவிடம் ஆயிரம் பொய் சொல்கிறார்கள்...
நான் இறந்துபோனால் கம்பாஷ்னேட் கிரவுண்ட்சில்
என் பையனுக்கு இ,தே வேலை கிடைக்கலாம். ஜம்புலிங்கத்தின் பேரன் கேட்காமல் இருக்க வேண்டும்.
விற்ற பில்லில் பத்துக்கு ஒண்ணு வரவு வைத்து புது பில் எழுதி, செலவுகளை ஒண்ணுக்குப்
பத்தாகப் பெருக்கிக் காட்டி, லெட்ஜர்களில் உ போட்டு ஆதாயம் பெருக என எழுதி சந்தன குங்குமம்.
ஐயங்கார்கள் அரசாங்கத்துக்கு நாமம் போடுவர் லெட்ஜர்களில்.
இருளான வீட்டுக்கு இரவு பதினோரு மணியளவில் தட்சிணாமூர்த்தி
வீடு திரும்புவார். கடை மூடியபின்னும் விரித்துக் காட்டப்பட்ட புடவைகளை ஒழுங்காகச்
சீராக்கி மடித்துப் பழையபடி அடுக்கிவிட்டு வரவேண்டியிருக்கும். விற்பனைச் சிப்பந்திகள்
செய்தாலுங் கூட அவசரம் என்றால், நிறையத் துணி இருந்தால் கூட வேலை செய்யாமல் முடியாது.
மூக்களவு கீழிறக்கிய கண்ணாடி வழியே முதலாளி ஒருபார்வை பார்த்தாலே நடுங்கி விடுகிறது.
இந்த வேலைக்கு நிறைய ஆட்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள், என்பது மறைபொருள்! எப்பவுமே
பெரிய வேலைகளுக்கு டிமாண்ட் இராது, முறைவாசல் போல சின்ன வேலைதான் சட்டுச் சட்டென்று
நிரம்பி விடுகிறது.
ஆனால் எப்படியோ இந்த இராத்திரி சைக்கிள் பயணம்
இதமாக இருந்தது. தெருவின் மேடு பள்ளங்களில் சைக்கிள் ஏறி யிறங்கும் குலுக்கல்களில்
சீட் கிரீச்சிட்டது. மனுசாளைப் போல சைக்கிளும் சொடக்கு போட்டது. ஊக்குபோல் கொண்டை வைத்த
சீட் கழுதையாய் மேலும் கீழும் முகத்தை அசைத்தது.
அது குனியாமல் அப்படியே உட்கார்ந்த வாக்கில் வண்டியோட்டிப் போக வேண்டும். வந்த
நாள் முதல் இந்த நாள் வரை... என்று சிவாஜி அதில் பாட்டு பாடிப் போகிறார். வாடிக்கை
மறந்ததும் ஏனோ... என்று ஜெமினி பாட்டும் உண்டு. காதலியைப் போயி வாடிக்கை கீடிக்கை என்கிறான்,
ஆபாசமாய் இருக்கிறது. சரோஜாதேவி சாவித்ரி இணையாகப் பாடிக்கொண்டே போகிறதாக ஒரு காட்சி
ஞாபகம் இருக்கிறது. என்ன பாட்டு ஞாபகம் இல்லை.
அந்நேரம் வீடு திரும்ப பஸ் எதுவுங் கிடையாது
என்பதால் சைக்கிள் எடுக்க ஆரம்பித்தவர், நல்லிரவின் குளிர்ச்சியும், சப்தம் உறங்கிய
சூழலும் தனிமையும் மிக்க ஆசுவாசம் தருவதாய் உணர்ந்தார். வீடு திரும்ப அவருக்கு எந்த
அவசரமுங் கிடையாது. காலையில் வீட்டில் யாருக்கும் சாப்பிட எதும் கிடையாது. பதினோரு
பதினொண்ணரை மணிவாக்கில் வடித்த சாதம். இராத்திரி விரைத்துக் கிடக்கும். மோர் ஊற்றி,
தொட்டுக்கொள்ள ஊறுகாய். வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. இந்த குளிர்ந்த
சோறு, இதுவும் மாறவில்லை, என நினைத்துக் கொள்வார்.
என்றாலும் தன்னையே கேலி செய்துகொள்ள ரசிக்க இலக்கியம்
கற்றுத் தந்திருந்தது. வாழ்க்கை சுகமானதுதான். சைக்கிளில் ஏறிக்கொண்டு, குஞ்சாமணி அமுங்க
அமுங்க மிதித்துப் போய், வழியில் மரம் பார்த்தபுடன் நாய்போல உணர்ந்து, இறங்கி அண்டிராயர்
ஒதுக்கிய கணம் ஆகாவென்றிருந்தது. உலகில் துட்டு கிட்டு எல்லாம் சுகமில்லை, இதுவே சுகம்
என்றிருந்தது.
சில சமயம் இருக்கிற அசதிக்கு வண்டியை ஓட்டாமல்
நடத்திக் கூட்டி வருவார். எதும் பாட ஆசையாயும் வெட்கமாயும் இருக்கும். ஞாயிறு போல விடுமுறைநாளில்
வேலைக்குப் போகாமல் திகைப்பாகி விடுகிறது. வீட்டில் இருந்து என்ன செய்ய? வீட்டின் இருள்
பூதாகரமாகப் பெருகி விடுகிறது அப்போது. அதில்லை இதில்லை என்று பெண்டாட்டி 'இல்லை பாட்டு'
பாட ஆரம்பித்து விடுகிறாள். பூங்கா தாண்டி நூலகம் போய் சாண்டில்யனின் மகா அழகுப் பெண்களைப்
பற்றிப் படிக்க ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்பா இல்லாத நேரம் மகளும் பிள்ளையும் சற்று
ஆசுவாசமாய் சுதந்திரமாய் உணர்ந்தார்கள்.
அவனுக்கு எதும் வேலை கிடைத்துவிட்டால் நல்லது.
எங்கேயும் வேலை என்று தேடிப் போகிறானில்லை. எங்க போனாலும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கிறார்கள்
என்று சலித்துக் கொள்கிறான். 'வேலையில்லாமல் இருப்பதில்' நிறைய எக்ஸ்பீரியன்ஸ் ஆகியிருந்தது
அவனுக்கு. s s ஷீ. சிம்ப்ளி சிட்டிங் ஆபிசர். ரொம்ப அழுத்திச் சொன்னால் அப்பாவையே திட்டினான்.
இல்லாவிட்டால் வேலைக்குப்போட எனப் பணம் வாங்கிக் கொண்டுபோய் லாகிரி வஸ்துகளை அனுபவித்தான்.
தெருவுக்குத் தெரு இப்பல்லாம் கடைகள் வந்துவிட்டன. அவசரத்துக்கு ஐந்நூறு ரூபாய்க்குச்
சில்லரை வேணுமானால் அங்கேதான் கிடைக்கிறது. அவர் போக மாட்டார். அவர் அவசரம் என்று பத்து
ரூபாய்க்குச் சில்லரை தேடி அலைகிறவர்.
பெண்ணை நினைக்க மனம் சுருண்டது. இவனுக்காவது
வெளியே என ஆசுவாசப்பட ஓர் உலகம் இருக்கிறது. இருண்ட அறைகளில் அவளுக்கு என்ன கனவுகள்
கிளைத்து விடும். கண்முழித்தால் மேலே உட்கார்ந்திருக்கும் கரப்பான் பூச்சியைப் பார்த்து
அலறுவாள். சினிமாவில் கனவுக்காட்சிகள் எல்லாம் வெளிச்சமான அறைகளிலேயே நடக்கின்றன. தொபு
தொபுவென்று கொட்டும் அருவியில் குளித்தபடியே டூயட் பாடுகிறார்கள். நாம அவ்ள நேரம் குளித்தால்
ஜலதோஷம் பிடித்துவிடும். தொண்டை கட்டிய குரலில் டூயட் பாடணும், அதுவே ரியலிசம்!
வயிற்றுப்பாட்டுக்கே இழுத்துக்கோ பறிச்சுக்கோ
என்கிற நிலை. சைக்கிள் பஞ்ச்சர் ஆனாலே கட்டுப்படியாகவில்லை. வாழ்க்கையே பஞ்சசரானாப்
போல திகைத்து விடுகிறது. எப்படித் துட்டு சம்பாதிக்க தெரியவில்லை. எவ்வளவு கொண்டுவந்தாலும்
காணாது என்றிருந்தது. எதும் காசு வரும், போனஸ், ஒவர்டைம் என்று பார்த்தால் அந்நாட்களில்
தீபாவளி பொங்கல் என்று பண்டிகை வந்து புதுத்துணி, விசேஷச் சாப்பாடு எனச் செலவுகள் வைத்துவிடுகிறது
லவ்டகபால் ஐதிகம். வரும் பணத்தை எதிர்பார்த்து முன்னமே கடன் வாங்கிவிட வேண்டியதாகி
விடுகிறது. அந்தமட்டுக்கு மருத்துவச் செலவு வைக்காமல் நாள் ஓடுகிறதே புண்ணியம்
இதில் வேலுச்சாமி கடையில் பழைய புத்தகம், இலக்கியம்.,
வாங்கி வந்தால் சம்சாரம் திட்டத்தான் செய்யும். அம்பது ரூபாய்ப் புத்தகம். அஞ்சு ஏழு
என்று பேரம் பேசி வாங்க நான் பட்ட பாடு அவளுக்குத் தெரிவதில்லை.
மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து
கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட்டாவது வகுப்போடு நின்றுகொண்டாள்.
வயசுக்கு வந்த நாள் முதல் அவள் மனசில் கல்யாண நினைப்புகள் திரும்பித் திரும்பி அலைமோத
ஆரம்பித்திருக்கும். ரமணி வாங்கி ஒளித்து வைத்திருக்கும் வாலிப லீலை புத்தகங்களை ஒருவேளை
அவன் அறியாமல் எடுத்துப் படிக்கவும் செய்யலாம்... சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு
வந்தார். மரம்.
வர வர ராத்திரி இந்தப் பக்கம் வந்ததும் இந்த
மரத்தைப் பார்த்ததும் அவர் நிறுத்தா விட்டால் கூட சைக்கிளே நின்று விடும் போலிருந்தது.
தன் அக்கம் பக்கத்தில் கங்காவுக்கு எதும் நல்ல
மாப்பிள்ளை, பெரிசா எதிர்பார்க்காத, கோவில்கல்யாண மாப்பிள்ளை தேறுகிறதா என்று அவர்
தேடாமல் இல்லை. கனவுகள் அற்ற கங்கா. பெரிய ராஜகுமாரன் வரப்போவதில்லை என அறிந்தவள்தான்
என்று தோன்றியது. அவர் காட்டிய பையனுக்குத் தலையை நீட்டுவாள் என்றுதான் தோன்றியது.
எப்படியும் இனி பொறந்து வரப் போவதில்லை மாப்பிள்ளை, இருக்கறதில்தான் தேடணும், அல்லவா?
கடையில் வேலை பார்க்கும் சக ஊழியர் பையன்களைப்
பார்த்தால், எல்லாருக்கும் எதாவது முகஞ் சுளிக்கிறாப்போல கெட்ட பழக்கம் இருந்தது. அவன்
அப்பாவுக்கே பிடிக்காத கெட்ட பழக்கங்கள். ஏற்கனவே யாராவது லவ்வர் கிடைப்பாளா என அவர்கள்
தேடிக் கொண்டிருந்தார்கள்.
ரமணி எப்படி தெரியவில்லை.
லவ்வரும் கிடைக்கணும். அது நல்ல லவ்வராக, ஏமாத்தாததாக
இருக்க வேண்டும். ஏன்னா நாமளே ஏப்ப சாப்பை, எனத் தேடித் திரியும் காலம் இது. கங்கா
பயந்த பெண்தான். கோவில் குளம் என்று போய்வந்தாலும், கூட அம்மா போகிறாள். கூட்டமாய்
வயசுப்பெண்கள் சாமி கும்பிடும்போது இளைஞரின் சாய்ஸ் அவள் அல்ல, என அறிந்து வருத்தப்படுவாளாய்
இருக்கும். நல்ல உடைகளும், சிறு சிரிப்பும், விலுக்கென நிலத்தில் யார்க்கும் அஞ்சா
பாவனைகளும்... கவர இதெல்லாம் வேண்டியிருக்கிறது.
மரத்தடியில் யாரோ உட்கார்ந்திருந்தான். பீடியை
விசிறிவிட்டு ''அண்ணாச்சி மணியென்ன?'' என்று கேட்டான். இந்த ராத்திரியில் மணி பார்த்து
என்ன செய்யப் போகிறான் தெரியவில்லை. சற்று தள்ளிப்போய் ஒண்ணுக்கடித்தார். அவர் கையில்
கடிகாரங் கிடையாது. அவனிடம் சொல்ல வெட்கமாய் இருந்தது. அவனைச் சுற்றி நிறையக் கூண்டுகள்
இருந்தன. கிளிக் கூண்டுகள். அவர் பார்க்கிறதைப் பார்த்ததும் ''கூண்டு வேணுங்களா?''
என்று கேட்டான். பதினோரு மணிக்கும் வியாபார கவனத்தில் இருந்தான்.
பதில் பேசாமல் திரும்ப வண்டியேறினார். பெரும்
கனவுகள் அற்ற கங்கா. வரும் மாப்பிள்ளையும் அவளைப் பூவாய் வைத்துத் தாங்குவான் என்றெல்லாம்
நினைக்க எதும் இல்லை. வாழ்க்கை தன் நியதிகளோடு கட்டியிழுத்துப் போகிறதாக இருக்கிறது.
எல்லாத்துக்கும் துட்டு வேண்டியிருக்கிற உலகம்.
கனவுகளுக்கும் துட்டு வேண்டியிருக்கிறது. தோன்றிற் துட்டொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலிற்
தோன்றாமை நன்று.
நன்றுதான். நாம எங்க தோணினோம்? அப்பாம்மா இல்ல
தோண வெச்சார்கள்!
அவளுக்குக் கல்யாணம் என்று ஆனாலும் என்னைப்போல
ஒரு இருட்டான வீட்டில்தான் என்னைப் போல ஒரு சுமாரான ஆம்பிளையுடன்தான்... என நினைக்க
துக்கமாய் இருந்தது. கல்யாணம் என்று நான் கிளி போன்ற என் பெண்ணுக்கு புதிய கிளிக்கூண்டு
தருகிறேன், என நினைத்துக் கொண்டார்.
துக்கமாகவெல்லாம் இல்லை. தூக்கமாக இருந்தது.
ஓஹ் என்று கொட்டாவி வந்தது.
தெரு திரும்ப வீடு... தெரியவில்லை. இருட்டாய்
இருந்தது அந்தப் பக்கம்.
storysankar@gmail.com – Mob 91 97899 87842
Comments
Post a Comment