சி று க தை
சொல்
எஸ். சங்கரநாராயணன்
மெத்தையின்
சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது.
யாரோ உள்ளே வரும் சரசரப்பால்
அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே
இருக்கும். சொல்லுக்கும் அநேகமாக விதிக்கப்பட்டதே இந்த
அமைதி. ஆதலின் மௌனத்துக்கு சப்தத்தில்
ஒரு ஈர்ப்பு உண்டுதான். அதன்
கூர்த்த மௌனத்தில் காதுகள் தானறியாமல் ஒரு
பாதுகாப்பு பிரக்ஞையுடன் எதிர்பார்ப்புடன், அதாவது எதிர்பாராத ஒன்றை
எதிர்பார்த்து காத்திருக்கவே செய்கின்றன. சப்தங்களின் ஊடே இந்த எதிர்பாராத்தன்மை
இல்லை தான். சப்தங்களின் ஊடே
மௌனந்தான் எதிர்பாராததாய் அமைந்து விடுகிறது. ஒருவேளை
சப்தங்களும் சில போதுகளில் மௌனத்தின்
ருசிவேண்டிக் காத்திருந்திருக்கக் கூடும்.
இருளுக்கும் நிசப்தத்துக்கும் என்னவோ கொள்வினை கொடுப்பினை
இருக்கிறது. இருளில் பேசினாலும் குரல்
சற்று பயந்தாப்போல அமுங்கியே வெளிக்கிளம்புகிறது. முழுக் கதவையும் விரியத்
திறக்காமல் தொண்டையை சிறிதே திறந்து ரகசியமாய்ப்
பேச தானாகவே பழகிவிடுகிறது. இருள்
சொல்லிக் கொடுக்கிறது அப்படி. ஆயினும் இரைச்சல்
நடுவேயான பெரிய சப்தத்தை விட
இந்த நிசப்தத்திலான சிற்றொலி பெரிசாய் காது அதிர உணர்த்தப்படுகிற
விந்தை. பதட்டத்தை அதிர்ச்சியைத் தர வல்ல ஒலிகள்.
இருளிலோ மௌனத்திலோ தனிமையிலோ
ஒலிகள் ஒரு கும்மென்ற உள்ளதிர்வை
கூட்டிக்கொள்கின்றன. எதிரொலிகளாக அந்த அதிர்வுகள் நம்மை
வந்தடைகின்றன. நெடில் எழுத்துகள் மேலும்
நீண்டொலிக்கின்றன அப்போது. ஒரு ஏ... ரெண்டாக
நான்காகப் பெருகுகிறது. தூரத்தில் தேய்ந்தொலிக்கும் முனகல்களாக அவை முற்றுப் பெறுகின்றன.
வெண்விரிப்புக் காகித மெத்தை. சொல்
உறங்கிக் கொண்டிருந்தது. நூலகத்தில் பார்க்கும் இடத்தில் எல்லாம் 'அமைதி காக்க' வாசகங்கள்.
அதை யார் செயல்படுத்துகிறாரோ இல்லையோ,
அந்தப் புத்தகத்துச் சொற்கள், அவை அமைதி காக்கின்றன.
இரைச்சல், இடி, ஓசை... என்ற
சொற்கள் கூட புன்னகையுடன் அமைதி
காக்கின்றன. அவற்றின் தாது, அல்லது சாவி
மானுடனிடம் இருக்கிறது. சாவி கொண்டு மானுடன்
திறந்து அவற்றை வெளியேவிட அவை
காத்திருக்கத்தான் வேண்டும்.
ஒரு நடைச்சத்தம். சரசர
கேட்டது. அமைதியில் ஒலிகள் துல்லியப்படுகின்றன. வயசாளி
நடைக்கும், வாலிபத்தின் நடைக்கும், ஆணின் நடைக்கும் பெண்
நடைக்கும், ஒலி வித்தியாசம் கணிசமாக
உண்டு. அமைதி அதைச் சொல்லிக்கொடுக்க
வல்லது. ஆ யாரோ வருகிறார்கள்...
என சட்டெனப் பதறி சொல் உறக்கம்
கலைந்தது. இப்படி அடிக்கடி உறங்குவதும்
விழிப்பதும் அதற்கு வாடிக்கைதான். நல்லுறக்கம்
என்றால் இரவு எட்டுக்குப் பின்,
காலை எட்டு வரைக்கும் தான்.
எட்டுக்கு நூலகம் மூடுவார்கள் என்றாலும்
ஏழரைக்கு ஏழே முக்காலுக்கு மேல்
யாரும் உள்ளே தங்குவதில்லை. அனுமதியும்
இல்லை. நூலகர் வந்து வெளியேற
நினைவூட்டிப் போவார்.
அமைதி காக்கும் ஸ்தலம்
என்று நூலகத்தில் கடிகாரம் இல்லை. அமைதி சொல்லின்
நியதி. சப்தம் கடிகாரத்தின் நியதி.
இருவரும் ஒரே இடத்தில் இருக்க
இயலாது அல்லவா? ஒரு உறையில்
இரண்டு கத்திகள் எப்படி சாத்தியம்?
யாராவது வந்து இந்த
மெத்தையில் இருந்து என்னைத் தூக்கிக்
கொஞ்ச மாட்டார்களா என்று காத்திருந்தது சொல்.
தூக்கத்தைப் பற்றி என்ன. விழித்திருப்பதுதானே
உயிரின் அடையாளம்? கட்புலனுக்குக் கண்ணாடி போல, ஆத்மாவுக்கு
சொல். அதன் மூலம் அறிய
முடிகிறது உலகை. எனில் பயன்படுத்தப்படாத
கண்ணாடியால், சொல்லால் என்ன பயன் விளைந்து
விடும்? கண்ணாடி போல சொல்லும்,
தன்னைப் பயன்படுத்த என்று காத்திருக்க நேர்ந்து
விடுகிறது. கண்ணாடிக்கு கூடு. சொல்லுக்கு நூலகம்.
நூலகத்துள் நுழைந்து அந்த சரசர மெல்ல
இந்த அலமாரிப் பக்கமாய் வருகிறது. யார் என்று பார்க்க
ஆவல் கொண்டது சொல்... சப்தம்
நெருங்க, சில அடையாளங்களை முன்வைக்கிறது
அந்த ஓசை. இது யாரோ முதியவரின் நடைச்
சத்தம். அரதப்பழசான செருப்புகள். ரப்பர் ஹவாய். ஒருவேளை
அதன் வார் அறுந்து பெரியவர்
அதில் ஒரு ஊக்கைக் குத்திக்
கொண்டிருக்கலாம்.
அந்தச் சத்தத்திலேயே சொல்லுக்கு
அலுப்பு தட்டியது. அவர் முதியவர் என்பதால்
அல்ல. காத்திருக்கும் சொற்கள் யார் தன்னைத்
தூக்கி கொஞ்சுவார் என்று தானே முடிவு
செய்ய இயலாதவை. அவை யார் என்று
பார்க்க காத்திருக்கின்றன அவ்வளவே. சொல் தலைதூக்கி அந்தப்
பெரியவரைப் பார்க்க முனையவில்லை. முதியவர்கள்
இந்தப் பக்கம், இந்த மாதிரி
நூல்களின் அடுக்கு பக்கம் வர
மாட்டார்கள். நேரே போய் வலதுபக்கம்
மூணாவது அடுக்கில் ஆன்மிகம் சம்பந்தமான, பக்தி, ஜோசியம் பற்றிய
புத்தகங்களின் வரிசை இருக்கிறது. அங்கே
பெரும்பாலான பெரியவர்களின் நடமாட்டத்தைக் காணலாம். சொற்களின் தேடுதல் வேட்டையை அவர்கள்
அங்கே தொடருவர். இளைஞர்களுக்கு அங்கே வேலை இல்லை.
அவர்களுக்கு கடவுள் பற்றி யோசிக்க
நேரம் இல்லை. எதிர்காலம் பற்றிய
கனவுகள் கொண்டவர்கள் அவர்கள். கவலை கொண்டாரில்லை. முதுமைக்கு
எதிர்காலம் பற்றிய கனவுகள் அவிந்துவிட்டன.
அது ஜோசியத்தை நாடுகிறது. தன் சார்ந்த, தன்
சுற்றம் சார்ந்த அவர்கள் வியூகம்
பெரியது. எதாவது கவலையை இழுத்துப்
போட்டுக் கொள்ளுகிறது முதுமை. எங்க காலம்
அற்புதம், இந்தக் காலம் கலிகாலம்...
என வம்படியாய் அவர்கள் திகைப்பு பாராட்டுகிறார்கள்...
சொல் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அது கவனித்தது. முதியவரின்
நடை வலதுபக்கமாய்த் திரும்புவதை சொல் கேட்டது. இந்த
ராசிக்காரருக்கு குருப் பெயர்ச்சியின் பயனாக
புதுச் செருப்பு வாய்ப்பதாக, என சொல் நினைத்துக்கொண்டது.
சொல் எப்போதும் தனித்து
வாழத் தெரியாதது. மனிதர்களைப் போலவே சொல்லுக்கும் பரம்பரை
உண்டு. மூத்தோர் மூதாதையர் உண்டு. சொல்லுக்கு முன்னேயும்,
பின்னேயும் கூட சொற்கள் இருக்கின்றன.
மனிதர்கள் பேருக்கு முன்னால் மூதாதையரின் முதல் எழுத்தை 'இனிஷியல்'
என்று போட்டுக் கொள்கிறார்கள். சொற்களிடம் அந்தப் பழக்கம் இல்லை.
சொல்லுக்கும் சமூகக் கட்டமைப்பு உண்டுதான்.
அவை கூட்டங் கூட்டமாக தமது
வர்க்கம், சாதி சார்ந்த இருப்பிடங்களிலேயே
வசிக்கின்றன. அவற்றின் வீதிகள் ஒரேமாதிரியான சிந்தனையொழுங்கு
கொண்டவை. அவற்றைப் பொருத்து அவை தனித்தனி அலமாரிகளில்
ஒரேவகை நூல்களாக அடுக்கப் படுகின்றன. ஒரு சாதிச் சொற்கள்
இன்னொரு சாதி இனத்துடன் கலந்து
பழகிவிட முடியாது. அவர்களது சமுதாயத்தின் சட்டங்கள் கறாரானவை...
ஆனால் என்னாகிறது, சில
சமயம் சனங்கள் அலட்சியமாய் ஒரு
ரேக்கில் எடுத்த புத்தகத்தை இன்னொரு
ரேக்கில் வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அப்படி சந்தர்ப்பங்களில் அந்தப்
புத்தகத்தின் சொற்கள் ஆபாசப்பட்டு, சுருதிவிலகி
ஒலிக்க நேர்ந்துவிடுவதாய்த் தன்னில் குறுகிப் போகின்றன.
மீண்டும் எப்பவாவது நூலகர் வந்து அந்தப்
புத்தகத்தைக் கண்டறிந்து அதைத் திரும்ப பழைய
இடத்துக்கே அழைத்துப் போய் விடுகிற வரை
அவை படுகிற பாடு, இறக்கையில்
அடிபட்ட காகம் போல... அல்லது
வேற்றுத் தெருவில் திகிலுடன் நடமாடும் நாய்போல இருக்கிறது அவர்கள்
பாடு.
அந்த நூலகம் பயணிகள்
நிழற்குடை எனக் கொண்டால், தகுந்த
பஸ் வரும்வரை காத்திருந்தன சொற்கள். அது நூலகராகவோ, வாசகராகவோ
சில சமயம் திருடராகவோ அமைகிறது.
நிறையப் படிக்கிற சில நல்ல வாசகர்களுக்கு
எப்படியோ நூல் திருடும் புத்தி
அமைந்து விடுகிறது. சில
நல்ல புத்தகங்களை இழக்க அவர்கள் பிரியப்பட்டாரில்லை.
அவை ஏனோ தமக்கே சொந்தம்
என அவர்கள் ஆவேசமுறுகிறார்கள். தனக்குரிய
வஸ்து அது ஏன் அங்கே,
நூலகத்தில் இருக்க வேண்டும் என
அவர்கள் நினைக்கிறார்கள். யாரும் வாசிக்காமல் அது
நூலகத்தில் இருப்பதற்கு, என்னிடம் அது வந்தடைவது சாலச்
சிறந்தது என முடிவு செய்கிறார்கள்.
அதை தன்பொருளாக எடுத்துக்கொண்டு வீடடையும் போது அவர்கள்தான் எத்தனை
பரவசப்பட்டுப் போகிறார்கள்.
அலமாரியில் இருந்து புத்தகங்கள் வெளி
உலா கிளம்புவது என்பது நல்ல விஷயம்
தான். சொற்களுக்கு இப்படி கை கையாய்,
வாய் வாயாப் பயணம் செய்ய
ரொம்பப் பிடிக்கும். அம்மாவின் ஒக்கலில் சவாரி செய்யும் குழந்தையின்
உற்சாகம் அது. வெளியே கிளம்பவே
அவை ஒரு துள்ளலுடன் முன்வருகின்றன.
ஏய் என் பஸ் வந்துவிட்டது,
டாடா... என அவை பிற
புத்தகங்களிடம் விடைபெற்றுக் கொள்கின்றன... அந்த நூலகத்தின் நியதிப்படி
அவை அதிகபட்சம் பதினைந்து நாட்கள் வெளியே தங்கலாம்.
ஓரிரு தவணைகள் மேலும் பதினைந்து
நாட்கள் நீட்டிப்பில், வெளியே தங்க அவை
சிறப்பு அனுமதியும் பெறுகின்றன. என்றாலும் அவை தாய்வீடு திரும்பும்
காலம் வர, அவை பழைய
சிநேகிதக் கூட்டத்துடன் வந்து கலந்துகொள்ளும். நதி.
கடல். மீண்டும் வானேறி மழை. பிறகு
பூமி திரும்புதல்... என்பதான காலத்தின் ஒழுங்கு
அது.
திருடர் எடுத்துச் செல்லும்
புத்தகங்கள் தன் சிநேகிதக் கூட்டத்தை
திரும்ப வந்து சந்திக்க வாய்ப்பதே
இல்லை. ஆனாலும் அவைகளுக்கு போன
இடத்தில் வேறு பல புத்தகங்களோடு
புதிய சிநேகம் வாய்த்துத்தான் விடுகிறது.
திருடிப் போனவர் தம் ரசனை
அடிப்படையில் ஒரே சாதிப் புத்தகங்களைத்தான்
எடுத்துப்போய் அடுக்கி யிருப்பார், என்கிறதில்
இந்தச் சொற்கள் அணிசேர்ந்து கொள்வதில்
சிரமம் ஒன்றும் கிடையாது.
காத்திருக்கும் சொல்லுக்கு வெளிச்சமும் இருட்டுக்கும் ஒன்றுதான். வேறுபாடு எதுவும் இல்லை. எப்படி
யிருந்தாலும் சிலாக்கியம் தான். என்றாலும் வருகிற
நபருக்கு வெளிச்சம் தேவையாய் இருக்கிறது. அவர் வந்து என்னைக்
கண்டடைய, தொட்டுத் தூக்க, புரட்டிப் பார்க்க
தேவை வெளிச்சம். வெளிச்சம், எதையும் ஒரு தயார்நிலையில்
வைத்திருக்க வல்லது. இருளுக்கு ஒரு
சோம்பல் வந்தமைந்து விடுகிறது கூடவே. சொல்லுக்கு வெளிச்சம்தான்
பிடித்திருக்கிறது. வெளிச்சம் ஒன்றை இருக்கிறது என்று
கூறுகிறது. இருள் ஒன்றை, அது
இருந்தாலும் இல்லை, என்றல்லவா ஆக்கி
விடுகிறது?
ஆனால் காத்திருக்கும் அந்தச்
சொல்லுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.
ஆ யாரோ வருகிறார்கள்...
ஒருவர் அல்ல இருவர். நடைச்
சத்தம் கேட்டது, நாலு நடையன்களின் சன்ன
ஒலி. நூலகத்தின் அமைதியைக் குலைக்காத கவனமுள்ளவர்களா அவர்கள், என நினைத்தது சொல்.
மதிய வேளை பொதுவாகவே நூலகத்தில்
அநேகமாய் ஆட்கள் இருக்க மாட்டார்கள்.
இந்நேரம் அவர்கள் வருவதே அதற்கு
ஆச்சர்யமாய் இருந்தது. ஒலிகள் உள்வாங்கி ரகசியமாய்
ஒலித்ததில் வருவது யார் என்பதை
அதனால் யூகிக்கவும் கூடவில்லை. சிறியவரா பெரியவரா, வயதானவரா, இளவட்டமா, ஆணா பெண்ணா... ஒலிகள்
இன்னுமாய் நெருங்கியதும் சொல் கிளர்ச்சியுற்றது. ஆகா
இந்தப் பக்கமாய்த்தான் வருகிறார்கள். ஒருவேளை என்னை அவர்கள்
கண்டடையலாம்... ஏ நண்பர்களே நான்
இங்கே இருக்கிறேன்... என்று துடித்தது சொல்.
ஒரு ஆண். ஒரு
பெண். இளமையின் அலைகளால் தூக்கப்பட்ட பருவம் அது. அவர்கள்
முகத்தில் தான் என்ன உற்சாகம்.
என்ன சிரிப்பு, என்று சொல் மகிழ்ச்சியாய்ப்
பார்த்துக் கொண்டிருந்தது. மொத்த பிரபஞ்சத்திலுமே அவர்கள்
இருவர் மாத்திரமே என்பது போல அவர்கள்
இருந்தார்கள். அந்த ஊடும் பாவுமான
கலத்தலே சொல்லுக்கு வேடிக்கையாய் இருந்தது. கிசுகிசுப்பாய் அவர்கள் என்னவோ பேசிக்
கொண்டார்கள். சொல் அதைக் கேட்க
முடியாவிட்டாலும், பேச்சில் அல்ல அவர்கள் கவனம்.
உண்மையில் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதை
அவர்களே அறிவார்களோ என்னமோ? என்ன பேசினாலும்,
என்ன செய்தாலும் அவர்களிடையே ஓர் இணக்கம், அந்நியோன்னியம்,
ஒத்திசைவு கண்ட கணம் அது,
என்பதைப் புரிந்துகொண்டது சொல்.
திடுதிப்பென்று விளக்கணைந்து சூழ்ந்தது இருள்.
எதுவும் புரியவில்லை சொல்லுக்கு.
இந்த இருளில் அவர்கள் தன்னைத்
தேடி தன்பக்கம் வர மாட்டார்கள் என
சொல் நினைத் - ஆனால் ஆச்சர்யம், அவர்கள்
அந்த அடுக்கை நோக்கி வந்தார்கள்.
சரி இந்த இருளில் என்னை
எப்படிக் கண்டடைய முடியும் நீங்கள்?...
என சொல் குழம்பியது.
அவன் அவளை இழுத்தாற்
போல தன் பக்கம் சேர்த்து
முகத்தோடு நேராக ஈந்தான் ஒரு
முத்தம். எந்நேரமும் விளக்கு வந்துவிடலாம் என்று
பயந்தாப்போல அதை அதே ஆவேசத்துடன்
பெற்றுக்கொண்டாள் அவள். பெற்றாளா கொடுத்தாளா,
அவளுக்கே அவனுக்கே, அதில் குழப்பம் இருக்கும்.
எதுவும் தெளிவு படாத இருள்
வேறு. உண்பதும் நானே. உண்ணப்படுவதும் நானே
என்றான வேடிக்கையான நிலை அது. ஆ
விளக்கு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டது சொல்.
அவை ஆசிகண்ட நற்கணங்கள். வேண்டிக்
காத்திருக்கையில் வானத்தில் இருந்து வந்து சேர்ந்த
மழைத்துளி போல, வாழ்க்கை தன்
பெட்டகத்தில் இருந்து அரிய பொக்கிஷங்களை
எப்போதாவது தான் வெளியே எடுத்து
நமக்குக் காட்டுகிறது.
அவர்களை அதற்குப் பிடித்திருந்தது.
வெளிச்சம் வந்தபோது அவர்கள் சிறு சிரிப்புடன்
விலகிக்கொண்டார்கள். யாரும் பார்த்திருப்பார்களோ, என்று சுற்றுமுற்றும்
பார்த்துக்கொண்டார்கள். இல்லை, யாரும் பார்க்கவில்லை,
என்று நினைத்தது சொல். சிரித்துக்கொண்டே, என்னைத்
தவிர, என்றும் சேர்த்துக் கொண்டது.
பிறகும் நிறையப்பேர் வருவதும்
அந்த அடுக்கைத் தாண்டிப்போவதும் என காலம் ஓடத்தான்
செய்தது. இன்னும் சிலர் வந்தார்கள்.
அந்த அடுக்கின் பிற புத்தகங்களைப் பார்த்துப்
போனார்கள். ஒருசிலர் சில புத்தகங்களையும் எடுத்துப்
போயினர். அந்தச் சொல்லே எதிர்பாராமல்
பெரியவர் ஒருவர் இதே அடுக்கில்
வந்து புத்தகங்களைப் புரட்டியதும் நடந்தது.
யார் வந்தாலும் ஏனோ
அந்தச் சொல்லுக்கு அவர்களை, அந்த ரெண்டு பேரை
மறக்க முடியவில்லை. சில கணங்களே ஒரு
நாடகத்தில் போல அவர்கள் தோன்றினார்கள்.
மறைந்தும் போனார்கள்... எங்கே மறைந்தர்கள். மறையத்தான்
இல்லை. சொல்லுக்கு அவர்களை நினைவிருந்தது.
ஒரு வேடிக்கைபோல அந்தச்
சொல் அந்த இருவருக்காகக் காத்திருக்க
ஆரம்பித்தது. காத்திருத்தல் அதற்கு ஒன்றும் புதிதல்ல.
ஒரு பனிக்கரடியின் குளிர்கால உறக்கம் போல, சொற்களுக்கு
உறக்கப் பொழுதுகள் உண்டு. இம்முறை இதோ
ஆச்சர்யமான அனுபவம். அந்தச் சொல் அவர்கள்
திரும்பி வருவார்களா, என்று காத்திருந்தது. வந்தாக
வேண்டும், என ஏனோ அது
நம்பினாப் போலிருந்தது. அவர்கள் வருவார்கள், வந்து
இந்த அடுக்கில் என்னைக் கண்டெடுப்பார்கள்... என
அது அசாத்தியமாய் நம்பியது. நம்பி காத்திருந்தது...
ஆ அவர்களா? அவர்கள்
வர மாட்டார்கள், நீ காத்திருப்பது வீண்,
என மற்ற சொற்கள் அதைக்
கிண்டலடித்தன. ஏளனம் செய்தன. உனக்கு
ஆனாலும் பேராசை, என்னவெல்லாம் உனக்கு
ஆசை வருகிறது... என்றன பிற சொற்கள்.
சொல் பதில் சொல்லவில்லை.
அது காத்திருந்தது. நாளை... நான் நினைத்தது
நடக்கும். அதுவே உங்களுக்கு பதில்.
காலம் பதில் சொல்லும் உங்களுக்கு...
சொல் பதில் சொல்லவில்லை. காத்திருந்தது...
ஆ - அந்த நாள்
வந்தது. அவன் வந்தான். தூரத்தில்
அவன் வந்தபோதே அதற்கு அவன்தான் என்று
சர்வ நிச்சயமாய்த் தெரிந்தது. அந்த இளம் வயது
நடைச் சரசரப்பு. முன்பு வந்தபோது இருந்த
அந்த ரகசிய கிசுகிசு த்வனி
இல்லை... ஏன் இல்லை? நடையும்
ஒரு நடைதான். ஆண் நடை அது.
என்ன ஆயிற்று? அவள் எங்கே? எங்கே
அவள்?
ஆக தனியே அவன்.
இப்போது அவன் இந்த அடுக்கு
பக்கம் வரமாட்டான் என நினைத்தது சொல்.
ஆ, வந்தான். வந்தாலும் என்னை இனி அவன்
தொட மாட்டான், என நினைத்தது சொல்.
ஆ... அதே புத்தகத்தைக் கையில்
எடுத்தான்.
அவன் முகம் லேசாய்
வாடியிருந்தது. உதடுகள் கறுத்திருந்தன. அழுதுவிடுவான்
போலிருந்தது. பழைய நினைவுகளில் அவன்
தள்ளாடினான். சட்டென புத்தகத்தைப் பிரித்தான்.
உரக்க வாசித்தான் அந்தச் சொல்லை.
காதல்.
தொடர்ந்து அவன் வாசித்தான். அமைதி
காக்க, பலகையை அவன் சட்டை
செய்யவில்லை. அவன் தொடர்ந்து உரக்க
வாசித்தான்.
உறவு என வந்தபோது
தெரியாத பொருள் பிரிவில் தெரிந்தது...
மேலே அவனால் வாசிக்க
முடியவில்லை.
storysankar@gmail.com
– Mob 91 97899 87842·
Comments
Post a Comment