லா.ச.ரா.வின் உலகம் சிறியது என்று கூறுபவர்கள் கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது,

லா.ச.ரா.வுக்கு அஞ்சலி –
பகுதி 2

அம்பாளின்
தொப்புள்கொடி


எஸ். சங்கரநாராயணன்


என் விழாவுக்கு சிறப்புரை வழங்கியதாலோ என்னமோ என்னை இலக்கிய வட்டத்தில் லா.ச.ரா.வுடன் பிணைத்துப் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

 தவிரவும் நனவோடை எனக்குப் பிடித்த உத்தியாய் இருந்தது.

 அப்போதைய வாசிப்புத் தளத்தில் பூமணி, கி.ரா. அண்ணாச்சி போன்றவர்கள் என் ஊரால் நெருக்கப் பட்டிருந்தார்கள். நான் தாம்பிரவருணிக்காரன். அவர்கள் எழுத்தின் வாசனை எனக்கு உள்மூச்சிழுக்க வைத்தது.

 முதல் நாவல் ஒரு 80 பக்க அளவில் எழுதி நிறுத்தியிருந்தேன். ஒரு வருட அளவில் அதைத் தொடவேயில்லை. தற்செயலாக என்றுதான் சொல்ல வேண்டும். பூமணியின் 'பிறகு' வாசித்ததும் சட்டெனப் படுக்கையில் துள்ளியெழுந்தாப் போல ஒரு புத்துணர்வு.

 நல்ல எழுத்து அடுத்த எடுத்தாளனை மூளைநமைச்சல் எடுக்க வைத்து எழுத உசுப்பேத்தி விடும்.

 என் இரண்டாவது நாவல் 'நந்தவனத்துப் பறவைகள்' முதல் புத்தகமாக கலைஞன் வெளியீடாக வந்தது. முதல்நாவல் 'மானுட சங்கமம்', அதுவும் பிற்பாடு கலைஞன் பதிப்பகத்திலேயே வெளியானது. பெரும் இலக்கியவாதிகளை உருவாக்கிய வளாகம் அல்லவா? 'நந்தவனத்துப் பறவைகள்' முன்னுரையில் இந்தப் பொடியன் இப்படி எழுதியிருந்தான். ''அரங்கத்தில் ஏராளமாய் நாற்காலிகள். சிலரை எனக்கு அடையாளந் தெரிகிறது. சிலரைத் தெரியவில்லை. எதிர்பாராத இளமையோடு லா.ச.ரா. எதிர்பார்த்ததைவிட வயசாய்ப் பூமணி. நான் என் நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.''

 வெளியீட்டு விழா ஒய்.எம்.சி.ஏ. சென்னை எஸ்பிளனேடு வளாகத்தில். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஒளவை நடராசனார். ''உனக்கான நாற்காலி வழங்கப்பட்டு விட்டது,'' என்றார்.

 விழாவில் உட்கார்ந்திருந்த நாற்காலியை எடுத்து வந்திருக்கலாம்.

 லா.ச.ரா. காலத்தின் நதிக்கரையில் காலை நனைய விட்டபடி எழுதிக் கொண்டிருக்கிறார். வயதைவிட அதிக சூட்சுமம், முதிர்ச்சி சுமந்து எழுதுகிறார், என்பதாகவும், பூமணி சின்ன வயதிலேயே பெரிய விஷயங்களைக் கைக்கொள்கிறார் எனவும் பாராட்டும் முன்னுரை.

 லா.ச.ரா. கேட்டார். ''யார் அது பூமணி?''

 ''ஒருவிஷயம் சங்கர், நாம அவாளை எவ்வளவோ பாராட்டி இதுங்கறோம். அப்டி அவா நம்மை இதுங்கறதில்லை...''

 க.நா.சு.வுக்கும் அப்படி ஆதங்கம் உண்டு, என அறிவேன்.

 பூமணி லா.ச.ரா.வின் எழுத்தில் பிரியமும் மரியாதையும் உள்ளவர், எனவும்.

 எழுத்தில் பிராம்ணாள் அப்ராம்ணாள் எழுத்து என்று கட்சிகட்டிய காலம் ஒன்று கட்டாயம் உண்டு. அப்ராம்ணாள், நாம அவியளைப் பாராட்டுறோம், அவுக நம்பளைக் கண்டுக்கறாகளா, என ஆதங்கப்பட்டும் பார்க்கலாம்.

 இப்ப அது அடங்கியிருக்கிறது. விளையாட்டு அலுத்துப் போச்சு போல.

 நாலைந்து வருடத்தில் ஒரு ஜெர்மானியப் பெண், தமிழ் கற்றவர், திருமதி காப்ரிலா. சென்னை வரை வந்தவர் லா.ச.ரா.வின் பரம ரசிகை. உடனே அவரைப் பார்க்க வேண்டும், என்று விரும்பினார். திலிப்குமார் நினைவில் உடனே ஏனோ நான் வந்தேன். என்னை திருமதி காப்ரிலாவுக்கு அறிமுகம் செய்விக்க, திருமதி காப்ரிலாவை நான் லா.ச.ரா.விடம் அழைத்துப் போனேன். அழகான தமிழில் காப்ரிலா உரையாடியது அருமையான அனுபவம். மனசுருக உருக லா.ச.ரா. வை வாசித்தவர் அவர்.

 நெருப்புன்னா வாய் சுடணும். அப்படி வார்த்தையைச் சுண்டக் காய்ச்சி எழுதணும், என்பார் லா.ச.ரா. ஆனால் வார்த்தையை விதைதூவலாய் விரவியடித்தவரும் அவரே, என்று நான் காப்ரிலாவிடம் வார்த்தையாடினேன். ஜலஜா. ஜலசாட்சி. ஜலகன்னிகா. ஜலமோகினி. ஜலதேவதே. ஜலஸ்வரூபி. ஜலாம்பிகே!... என்று எழுதிக் கொண்டே போவார். ஓர் உணர்வை திரும்பத் திரும்ப உள்ளே இறுத்திக் கொள்வதற்காக. முங்கி முங்கி நதியில் குளிக்கிற சொகுசு...

 ரெண்டு வருடத்துக்கொரு முறை முன்பெல்லாம் லா.ச. ரா.வைப் பார்க்கவென்றே திருமதி காப்ரிலா வருவார் என்று பிள்ளைகள் சொல்கிறார்கள். இப்போது வருவதில்லை போல. லா.ச.ரா. மறைந்து விட்டார் என்ற செய்தி அவருக்கு எட்டியிருக்குமா? பாவம் வருத்தப்படுவார்.

 இடையில் ஒரு வனவாசம். நாடாறு மாசம் காடாறு மாசம் என்பார்களே. ஆறு மாசம் நான் எழுதுவதை ஒதுக்கி வைத்தேன். பிரபலமான எழுத்தாளன், எழுதியதைப் போடப் பத்திரிகைகள் காத்திருக்கிறார்கள். தேவை என்று ஏற்பட்டு விட்டபின் எழுத்தின் தரத்தை நான் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நிறைய வாசிப்பு தேவைப்படுகிறது என உணர்ந்தேன். ஆங்கிலத்தில் வாசிக்க வாசிக்க என் எழுத்தின் வளாகம் சிறியது, போலியானது என்று தெளிவு கண்ட கணங்கள். இலக்கிய உலகம் எங்கேயோ இருந்தது.

 நான் எதையோ எழுதிக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. பட்டிக்காட்டான் சினிமாவுக்குப் போய் கலர் கலராய் ஓட்டையிலிருந்து வெளிச்சம் வருவதைப் பார்த்து அதிசயப்பட்ட கதை.

 யாரிடம் புதுசாய்க் கிடைச்சாலும் வாய்விரிய ரசித்தேன். உத்தி, தலைப்பூச்சூட்டுதல், கவிதைப் பார்வை, முடிவுப் பகுதியின் கதிர்வீச்சு... கதையில் நகாசு செய்ய ஆயிரம் வழிகள். இவனுக்கு இது, என்கிறாப்போல என்னை யாரும் குடையாய் மடக்கி கக்கத்தில் இடுக்கிக்கொள்ளக் கூடாது. புதுசாய் ஒரு வரியாவது இல்லாமல் பேனாவைத் தொடக்கூடாது...

 பெண்குழந்தைகளைப் பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கிற கொடுமையைப் பற்றி கமலாதாஸ் எழுதுகிறார். கதை இன்னும் வாசிக்கக் கொடுப்பினை இல்லை. ஆனால் தலைப்பு - Doll for the child-prostitute.

 பிற்பாடு ஆனந்த விகடனில் பால்ய விவாகம் பற்றி ஒரு கதை எழுதியபோது, எனது தலைப்பு குழந்தை விளையாட கணவன் பொம்மை. (என்ன இருந்தாலும் மூலம் ஓஹோ!, என்றிருக்கிறது இல்லையா?)

 ஒரு ஹைகூ. விரைந்திறங்கிய பறவை/ கீழே போட்டது/ நிழலை.

 மூலம் யார் தெரியுமா? கவிச்சக்கரவர்த்தி கம்பர். ராமாயணத்தில் ஒரிடம். வரிகளை மறந்தேன். எத்தனை உயரம் பறந்தென்ன அந்தப் பறவை. அதனால் தன் நிழலைக் கீழே போட முடியவில்லை.

 மாற்றிச் சொல்கையில் ஒரு கவிதாஉச்சம் சித்திக்கவே செய்கிறது. வெல்டன் கம்பர்.

 தண்ணியில் காணாமல் போனமனுசனைத் தீப்பந்தம் கொண்டு தேடமுடியுமாவே? என்று கேட்பார் திருவள்ளுவர்.

 என் வரிகளை உல்டா செய்பவரும் டஜன்கணக்கில் இருப்பர். அவர்களை மறப்போம். சொந்தச் சரக்கு என்று claim பண்ணுவது அதிகப்பிரசங்கித்தனம். உலகில் originality என எதுவுமே கிடையாது, (நாமளே நம்ம ஆத்தா ஐயாவின் மிச்ச மீதிதான்.) எல்லமே உல்டா மற்றும் பாவ்லா என்பார் சாமர்செட் மாம். விவகாரமான மனுசன். அவர் படைப்புகளின் மூலத்தைப் படிக்க ஆசையாய் இருக்கிறது!

 வாசிக்கும்போது நினைவுக்கிளை பிரிந்து தனியே இயங்கி நல்ல படைப்புகள் உருவாவதும் உண்டு.

 கதைப்பொருளும் உத்திகளும் நடையும் எல்லாமே எல்லாமே போதா, போதவே போதா என தலையை இடவலமாக உதறிக்கொண்ட கணங்கள். அதுவரை கொண்டிருந்த தற்பெருமை, திமிர் அடங்க ஆரம்பித்த கணம் அது. நான், என் வழி, என் பாணி என்று எதும் தேறுமா? பாணி என்பதிலேயே நான் முரண்பட விரும்பினேன். நான் சக்ரபாணி. இந்தக் கதைத் தளம்தான் இவனுக்கு என்றெல்லாம் வேணாம். இந்த உத்தி முத்திரை, இந்த நடைவிவரிப்பு என்று மாட்டிக் கொள்ளக் கூடாது.

 புதுமைப்பித்தனின் பெருமை என்ன? கதைத் தேர்வின் வெவ்வேறு தளங்கள். வெவ்வேறு தரங்கள். சுவையில் ஒரு உப்பு கூடும், குறையும். கவலையே படவில்லை அவர். மனுசன் பேய்க்கதை கூட விடல்ல. பரந்து பெய்த மாமழை என்பேன் அவரை.

 ஜானகிராமன், லா.ச.ரா., வண்ணதாசன், சா.கந்தசாமி ஒரு செட் வாசித்து விட்டால், அடுத்து அவர்கள் கதை யெழுதினால் எந்த சப்ஜெக்ட், எந்த உத்தியில், எந்த வார்த்தைகளைக் கொண்டு முடிவர் என்று சொல்லிவிடலாம் போலிருந்தது. அப்படி மாட்டிக் கொள்ளக் கூடாது, என்றிருந்தது. இந்த பிராண்டு தோசை மாவு கிடைக்கும், என்று போர்டு மாட்டிவிடக் கூடாது.

 இவர்கள் எல்லாருமே எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள். வாசகனுக்கு ஓகோ ஆகா வானவர்கள்தாம், என்பது வேறு விஷயம்.

 குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டும். பத்திரிகைகளில் கதை எழுதுவது என்கிற அடையாளம், அங்கீகாரம் வேறு. புத்தக வடிவில் தாக்குப் பிடிப்பது, சாதிப்பது என்பது கடினமான காரியம். பத்திரிகையில் பிற எழுத்தாளர்களுடன் வைத்துப் பார்க்கையில் சமாளித்துவிடக் கூட முடியலாம். தனியே ஒரே எழுத்தாளன் புத்தக முழுதும் வியாபித்திருப்பதில் மேலதிக கவனமும் பொறுப்பும் தேவை.

 எண்பத்தியாறில் என் ஒரு குறுநாவல் தொகுதியை ஐந்திணைப் பதிப்பகம் குழ. கதிரேசன் வெளியிட்டார். 'பூமிக்குத் தலை சுற்றுகிறது,' என்கிற தொகுதி. நானே அட்டை வடிவமைக்கவும், அச்சுப் பிழை பார்க்கவும் பொறுப்பைச் சுமந்து கொண்டேன். அந்தப் புத்தகமும், லா.ச.ரா. சிறப்புச் சிறுகதை முதல் தொகுதிக்கான படமும் ஓவியம் சரண். இன்றைய முன்னணி திரைப்பட இயக்குநன்.

 கதிரேசன் குழந்தைப் பாடல்கள் எழுதுவார். லா.ச.ரா. புத்தகத்தின் பின் அட்டையில் எல்லாம் அவர் ஆடு, நிலா என்று தன் திறமையைக் கொட்டி சிறுவர் பாடல் எழுதி வெளியிட்டார். இதுபற்றி லா.ச.ரா.விடம் கேட்டேன். அவருக்கும் வருத்தம் இருந்திருக்கும். ஒன்றும் சொல்லவில்லை.

 எனக்கு இரு புத்தகங்கள் ஐந்திணையில் வெளிவந்திருக்கின்றன. முதல் சிறுகதைத் தொகுதி, 'அட்சரேகை தீர்க்கரேகை.' இரண்டாவது இந்த 'பூமிக்குத் தலை சுற்றுகிறது.' என் புத்தகங்களுக்கு இந்த பின்னட்டை குழந்தைக் கவிதை பாக்கியம் கிட்டவில்லை.

 ஒரு வேடிக்கை தெரியுமா? கதிரேசனின் குழந்தைப் பாடல்களுக்கு லா.ச.ரா. முன்னுரை கொடுத்திருக்கிறார்!

 லா.ச.ரா. என்ற அற்புத எழுத்தாளனுக்குத் தன் படைப்புகளை அச்சேற்ற, பதிப்பிக்க சிரமம் இருந்திருக்கிறது, என்று தெரிகிறது.

 அப்போது லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் எனத் தொகுதி ஒன்றைக் கொண்டுவர கதிரேசன் முன்வந்தபோது, என்னை அதற்கு முன்னுரை தரச் சொன்னார். லா.ச.ரா. சம்மதித்தால் சரி, நான் செய்கிறேன் என்றேன். அதன்படி சிறப்புச் சிறுகதை முதல் தொகுதிக்கு நான் முன்னுரை தந்தேன். அந்தக் கட்டுரையை இதற்கு முன்பு வாசித்திருக்கலாம் நீங்கள்.

 முக்கியமான விஷயம் ஒன்று சொல்ல வேண்டும்.

 முன்னுரையில் ஒரு வரி - 'இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் முக்கியமானவர்கள்,' என நான் எழுதிக் கொடுத்ததை, கதிரேசன், 'லா.ச.ரா.வும், ஜானகிராமனும் இரு கண்கள் போன்றவர்கள்,' என்று மாற்றிக் கொண்டார் அவர்பாட்டுக்கு. என்னைவிடச் சிறப்பாக அதை எழுதிவிட்டதாக அவருக்கு நிறைவு. இந்தப் பட்டியலில் ராஜநாராயணனையும் நான் சேர்த்தால், எனக்கு மூணு கண் என்று ஆகிவிடாதா? இன்னும் நாலுகண், அஞ்சுகண்... ஐயய்ய பார்க்க சகிக்காதே... ஏற்கனவே என் முகம் சுமாரைவிட சற்றுக் கீழ்தான்.

 தமிழில் இவா ரெண்டாளை விட்டால் எழுத்தாளரே இல்லை, என்று நான் அறிவித்ததாக அல்லவா ஆகிவிட்டது?

 நான் கதிரேசனிடம் என் மறுப்பை எடுத்துச் சொன்னேன். அதற்குள் புத்தகம் அச்சாகி விட்டிருந்தது.

 சிலரிடம் சில விஷயங்களை விளக்க முடியாது. ராஜநாராயணனிடம் ஒருவர் - ஸ ரி க ம... இதே ஏழு ஸ்வரத்தைத் தான் மாத்தி மாத்திப் பாடறீங்க. அப்புறம் அது தோடின்றீங்க? இது சங்கராபரணம்றீங்க? அதெப்பிடி?... என்று கேட்டாராம்.

 முன்னுரையை வாசித்துவிட்டு, ''எல்லாம் சரிதான் சங்கர். உன் கட்டுரைல fire இல்லியே?'' என்றார் லா.ச. ரா.

 எனக்கு அது ரொம்ப உற்சாகமாய் இருந்தது. ஐயா, நீங்கள் சொல்வது நூற்றியொரு சதவீதம் உண்மை. இதில் fire என்கிற சுயதுடிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள நான் போராடியிருக்கிறேன், என்றேன்.

 கட்டுரை மற்றும் விமரிசனத்துக்கான மொழி வேறு. அதில் அகராதி - dictionary - அளவிலேயே, வேறு உணர்ச்சிநீட்டல்கள், வியூகங்கள் எதுவும் இல்லாமல், கருத்து மாத்திரம் முன்வைக்கப்பட வேண்டும், என நினைக்கிறேன். அது பெரும்பாலும் சாத்தியம் இல்லாமலேயே போகிறது... எனத் தெரிவித்தேன்.

 பிறகு சிறப்புச் சிறுகதைகள் ரெண்டாம் தொகுதிக்கு அவரது பிள்ளைகள் முன்னுரை தந்தார்கள். அதைப் படித்தபின் லா.ச.ரா. உன் கட்டுரை தான் நிக்கறது, என்று மனசாரச் சொன்னார்.

 இந்தக் காலகட்டங்களில் பூமணி, கந்தசாமி, அசோகமித்திரன் எழுத்துகளில் அறிவுத்தளம் அழித்த, வாழ்வியல் கூறுகள் அனுமதித்த அளவிலேயே செயல்படுகிற, அவ்வளவிலேயே சிந்திக்கிற ஆசாமிகளை நான் ஆச்சர்யத்துடன் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். (இந்த எழுத்தாளர்கள் பின்தலைமுறைக்காரர்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை.) இந்தக் கதைகளின் தளம் எழுத்தாளரின் அறிவுத்தளம் அல்ல, அன்னாரின் பார்வையில் கதை இயங்கினாலும். கதைக்குக் கதை மொழியும், நடையும், சிந்தனை வீச்சும் மாறின கதைகளில். 'பிறகு' கதையின் வீச்சினை 'வெக்கை'யில் காண முடியவில்லையே, என்று கேட்டால், பூமணி ''எப்படி கிடைக்கும்? வெக்கை கதாநாயகன் சின்னப் பிள்ளை அல்லவா?'' என்று கேட்டு என்னை ஆச்சர்யப் படுத்தினார்.

 அவக நல்லாதா எளுதறாக!

 லா.ச.ரா.வின் மொழிநடை, சிந்தனைவீச்சு, உவமை விஸ்தரிப்பு எல்லாமே தன் வாழ்க்கைச் சூழல் சார்ந்து வெளியாகின்றன. கதை மாந்தரே வாழ்வில் கண்டவர், காணப்போகிறவர், அல்லது இதை வாசிக்கப் போகிறவர் என்கிற முன் அனுமானம் கொண்டிருந்ததாகச் சொல்லலாம்.

 அறிவை மறைத்த எழுத்து எனக்குப் புதுசு. இன்றுவரை புதுசுதான். உத்தி என்று உக்கிரமாய்ச் செயல்படாத கதைகள் அற்புதமான வாசிப்பனுபவங்கள். அவை வெகுசனங்களுக்கானவை அல்ல. ராஜநாராயணனிடம் சங்கீதம் பற்றிக் கேட்டவரிடம், அசோகமித்திரனைப் படிக்கத் தர வேண்டும்.

 நீங்களும் தமிள்லதான் எளுதறீங்க? அவரும் அப்டிதான். இன்னாலும் இது அசோகமித்திரன், அது சங்கரநாராயணன்றீங்களே, அதெப்பிடி?

 1990ல் மன ஓசை என்கிற முற்போக்கு வளாகத்து இதழ் 'இன்றைய எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் வாரம் ஒரு எழுத்தாளரைப் பற்றிய கண்ணோட்டம் வெளியிட்டது. முதல் கட்டுரை ''லா.ச.ரா. ஒரு கண்ணோட்டம்.'' கட்டுரை இத்தொகுப்பில் முனனுமதி பெற்று இடம் பெறுகிறது.

 குடும்ப உறவுகளில் லா.ச.ரா. தன்னை இழந்து கரைந்து எழுதுகிறார். எல்லாம் சரியாய் இருக்கிறவரை வாழ்க்கை ராஜபாட்டையில் அற்புதமாய்ப் போகிறது. அது கலையும்போது திகைக்கிறார், என்பது மன ஓசை கட்சி. தான் நம்புகிற கூட்டுக்குடும்ப கலாச்சாரத்தை கட்டிக் காப்பதில் அவர் காட்டுகிற அக்கறை அது. அதன் ஓட்டைகள், அதிகார அடிமை மனோபாவங்களை விமர்சனத்துக்குள்ளாக்குவது மன ஓசையின் கவனஈர்ப்பு. கூட்டுக் குடும்ப அளவில் அதை சம்மதித்து வாழ், சிக்கல்களை உணர்ந்து கொண்டு அவரவர் ஸ்தானத்தை மதி, மரியாதை பெறு... என்கிற லா.ச.ரா.வோடு இதைக் குழப்பிக் கொள்ள வேணாம். ரெண்டு பார்வையும் சமூகத் தேவையே.

 'ஒளிந்து கொண்டிருக்கும் தாய்', என்று குமுதம் ஸ்பெஷல் இதழ் ஒன்றில் நான் 2000 தாண்டியபின் கூட்டுக் குடும்பச் சாயல்களை கொடியேத்தி உயர்த்திப் பிடித்திருக்கிறேன். அதன் அப்பத்தைய பொறுப்பாசிரியர் லேனா தமிழ்வாணன் தொலைபேசியில் பேசினார். 'வரிக்கு வரி சந்தனமா இழைச்சி இழைச்சி எழுதியிருக்கிறாய்' எனப் பாராட்டினார். அவருக்கும் கூட்டுக்குடும்பத்தில் நம்பிக்கை இருக்கிறது, என நினைத்துக் கொண்டேன்.

 லா.ச.ரா.விடம் குடும்பக் கதை தாண்டி வெளிப் பார்வை இல்லை, என்பது ஒரு கருத்து. அதுபோதும் என்று படிக்கிற வாசகர்கள் கோடானு கோடி. அவர்கள் லா.ச.ரா.வின் வாசகர்கள்.

 பெண்ணாய்ப் பிறந்ததின் அர்த்தம் வம்சத்துக்குத் தொடர்ச்சி வழங்குவதுதானே? - என்பது லா.ச.ரா.வின் கருத்து, என்கிறது மன ஓசை.

 அவ்வளவுதான் என இழிக்கவும் வேணாம். அதொரு விஷயமா, என அதைக் கொச்சைப் படுத்தவும் வேணாம். ஆண் பெண் இயற்கை நியதியை அலட்சியப்படுத்த யாராலும் கூடாது.

 மன ஓசையின் வரிகள் கீழே -

 1) பிள்ளையின் பொருட்டு துஷ்டனான கணவனை விட்டு விலகி வாழத் தயாராக இருக்கிறாள். ஆனால் அவனுடனான மனைவி என்ற பந்தத்தை இழக்கத் தயாராக இல்லை. 'பிராயசித்தம்' நாவலில் கோமதியைச் சந்திக்கிறோம். எலியும் பூனையுமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், கணவனை இழந்துவிடுவோம் என்ற நிலை வந்தால், எந்தச் சொத்து பத்தும் வேண்டாம். அவளுக்கு அவன்தான் வேண்டும். 'என் உண்மை இவரன்றி வேறு ஏது?' என்று வாழ்க்கை அவளுக்கு அர்த்தமாகிறது. (தாயம்.)

 சமுதாயப் பாதுகாப்பு மாங்கல்யம் என்ற பாவனை அது. தவிர இதில் பவித்ர மண்ணாங்கட்டி எதுவுங் கிடையாது. இருந்தால் சேர்ந்தே வாழ்ந்திருப்பாள் அல்லவா? மற்றபடி தூங்கியெழுந்த ஜோரில் தாலியைக் கண்ணில் ஒற்றியபின் ஜாக்கெட்டுக்குள் போடுதல், ஏ, அது சினிமா.

 கொண்ட லட்சியம் தன் வாழ்க்கை என இல்லாமல், குழந்தையின் எதிர்காலம், என தூரதரிசனக் கண்ணோட்டத்துடன் பெண் வாழ்வது இந்திய மரபு. தன் வாழ்வா குழந்தை எதிர்காலமா, என்றால் இந்தியப் பெண் கட்டாயம் குழந்தையே எனத் தேர்வு செய்கிறாள்.

 இதுல சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டு. யாருக்குப் பிரச்னையில் தீர்வு சொல்கிறோமோ அவர்களுக்கு அதைச் செயல்படுத்துகிற மனோதைரியம் முக்கியத் தேவை. இல்லாட்டி எடுத்தம் கவுத்தம்னு ஆகிப்போகும். பாதிக் கிணறு தாண்டுகையில் தொபுக்கடீர்.

 பரிகாரம்னு சொல்லி நல்லாருந்த ஆளை நாமே தள்ளிவிட்டாப்ல ஆயிரும் கதை.

 கதை எனில் ஒரு பாத்திரப்படைப்பில் நேர்மையுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து காட்டப்படுகிறது. லா.ச.ரா. சொல்படி சொன்னால். அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி, அதை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு செயல்பட முடியாது.

 2) லா.ச.ரா.வின் கண்ணோட்டத்தில், ''அறிவுபூர்வமாக சம்பாஷிக்கத் தெரிந்து, மரியாதையும் தெரிந்து பெண்மையின் பிகு குறையாமல், இன்முகம், பண்பு, உபசரிப்பும் கூடி விட்டால் - அதெல்லாம் புண்ணிய சமாச்சாரம், எல்லாருடைய அதிர்ஷ்டமல்ல.'' (சிந்தாநதி.) இந்தப் புண்ணியம் கிட்டுபவர்களுக்கு வாழ்க்கை நன்றாக இருக்கிறது. கிட்டாதவர்களுக்கு முரண் தோன்றுகிறது. அமைதி கெடுகிறது. திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கையில் தரிசனமான காதல் நெஞ்சத் தகிப்பாக மாறி விடுகிறது. (அபிதா.)

 விட்டுக் கொடுத்து, பொறுமையாய்க் காத்திருப்பதை சமுதாய ஒழுங்கு அடிப்படையில் லா.ச.ரா. சரியான விஷயமாகக் கருதுகிறார். அவசர டபேல். பொறுத்தார் பூமியாள்வார், என டஜன் பழமொழிகள் இதுசார்ந்து உண்டு. பொறுத்தால் வெற்றி கிட்டும் எனும் நிலையில், பொறுமையில்லாமல் வெற்றிக்கு அவசரப்படுதல் எளிய நிலையே என அவருக்குத் தோன்றுகிறது.

 லா.ச.ரா.விடம் விசாரணைக் கண்ணோட்டம் இல்லை. சற்று முறுக்கி எழும் பாத்திரங்கள் அம்பு திரும்பினாற்போல, தண்ணீருக்குள் மீன் அடங்கிக் கொள்வது போல அடங்கிக் கொள்கின்றன என்பது உண்மையே. தொடர்ந்து நிறைய எழுதுகிற, எழுதாவிட்டாலும் தொடர்ந்து சிந்தனை வயப்பட்டிருக்கிற லா.ச.ரா.விடம் மாற்றுக் கண்ணோட்ட சிந்தனை இல்லை. ஆச்சர்யமான விஷயம்.

 3) கதை நிகழ்வுக்கு முன்னும் பின்னும் காரணகாரியம் இருப்பதில்லை என்பதால், லா.ச.ரா. தன் கதைகளில் நனவோடை உத்திகளையும், பின்னோக்கு உத்திகளையும், துண்டு துண்டாக நிகழ்ச்சிச் சொல்லல் உத்திகளையும் அதிகம் பயன்படுத்துகின்றார். நிகழ்ச்சிகளை நேரடியாகவோ, தொடர்ச்சியாகவோ சொல்வதில்லை. பாத்திரத்தின் மனப்போக்கிற்கேற்ப நிகழ்ச்சிகளை நினைவுகளாக்கித் தருகிறார். அவர் தேர்ந்தெடுக்கிற கருக்களை விவரிக்க, அவர் மீட்ட விரும்புகிற உணர்வுகளை வாசகர் மனதில் எதிரொலிக்க இந்த உத்திகள் பயன்படுகின்றன - என்கிறது மன ஓசை.

 நனவோடை உத்தி என்றுவிட்டால் கதைப்போக்கு இடையில் மறிக்கப் படாமல் தேரோட்டம் ஓட வேண்டும். அப்போதுதான் நினைவின் குதிரைலயம் வாசகனுக்கு எட்டும். அதல்லாது கதையை இடையிடையே லகான் பிடித்து நிறுத்திச் சொல்வதில் கதையில் ஊடாட வேண்டிய வாசகருக்கான நெருக்க உணர்வு, பொங்கும் பாலில் தண்ணீர் தெளித்தாப் போல அமர்ந்துதான் விடுகிறது.

 நனவு-ஓடை அல்ல அது. நனவுக்குட்டை.

 ஒரே அத்தியாயத்தில் ஒரே பக்கத்திலேயே பல பகுதிகள் எனக் கிளைபிரித்துச் சொல்கிறார் லா.ச.ரா. இப்படிப் பிரிபடாத நீள்வீச்சு கொண்ட சொல்லாடல் கிடைப்பதால் 'குரு-ஷேத்திரம்' தனி அந்தஸ்து பெறுகிறது, என நான் அவருக்கான 'சிறப்புச் சிறுகதை - 1' முன்னுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

 மன ஓசையின் கட்டுரை வெளியான பின் மன ஓசை இதழுக்கு நான் ஒரு பதில்கூட அனுப்பினேன். அதன் கடைசிப் பகுதியை இந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதியாக வைக்க உத்தேசம். அந்தக் கடிதத்தில், என் பார்வையின் கறார்த்தன்மையை திரும்ப வெளிச்சப் படுத்திக் காட்ட வாய்ப்பு கிட்டினாப் போல மகிழ்ச்சி எனக்கு.

 சி.சி - 1 நூலின் கதைகள் தேர்வு லா.ச.ரா. வே, என்பதை நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். என் தேர்வில் வேறு கதைகள் முதல் வரிசை பெற்றிருக்கும், என்பதும், இதன் சில கதைகள் தவிர்க்கப் பட்டிருக்கும் எனவும் என் கருத்தை தனியே விளக்கத் தேவையில்லை. லோகோ பின்ன ருசி என்பார்கள். என்றாலும் ஒரு ஆசிரியனுக்குத் தன் கதையில் எது சோடை, எது உசத்தி என்று கட்டாயம் தெரிய வேண்டும், இத்தனை காலம் தாண்டியாவது, என்பது என் அடிப்படை எதிர்பார்ப்பு.

 சி.சி. என்ற தலைப்பு நூலுக்கு வழங்கியபின் விமர்சனக் கட்டுரை என வழங்குதல் சுருதிவிலக்கி விடும். முறையும் அல்ல. ஒரு வாசகத் தளத்திலான பார்வை. அவ்வளவே சரி.

 குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு கதைக்கும் முன்னீடாக லா.ச.ரா., 'அந்தக் கதையை இப்போது நினைக்கையில்...' என்று சுயநெகிழ்ச்சிப் பத்தி ஒன்று வரைகிறார். அது, அல்லது பிறத்தியார்-முன்னுரை, எதாவது ஒண்ணு போதும் என்றிருக்கலாம்.

 தொகுப்பின் 'பச்சைக்கனவு' பற்றி பிற்பாடு பிருமிள் தனி பாராட்டுக் கட்டுரையே வடித்திருக்கிறார். வார்த்தைச் சவுக்கை வீசுவதில் லா.ச. ரா. போல அவருக்கும் பிரேமை உண்டு. குறிப்பாக கவிதைகளில். அவரது 'காடன் கண்டது' தமிழின் முக்கியச் சிறுகதைகளில் ஒன்று. உரைநடையின் ஆகப்பெரும் சாத்தியங்களை அது தொட முயற்சித்ததாக நினைக்கிறேன். என் முதல் சிறுகதைத் திரட்டு, 'ஆகாயப் பந்த'லில் அந்தக் கதையை விரும்பி வாங்கி வெளியிட்டிருக்கிறேன்.

 பச்சைக்கனவு - இளம் வயதில் பார்வையைப் பறிகொடுத்த ஒருவர் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை என்பதில், அவர் மனசில் அந்த ஒரு வண்ணமே உள்ளே நிறைந்து தளும்புவதாய் ஒரு கதை. கதாநாயகருக்கு வயது அறுபது. ஊஞ்சலில் ஆடியபடி, இரவு என்றால் என்ன, பகல் என்றால் என்ன?... என்றெல்லாம் தனக்குள் எண்ணத்தை நீளவிடுவதாக லா.ச.ரா. எழுதும்போது, இளவயதில் இருந்து இந்த அறுபது வயது வரை, இந்தச் சின்ன விஷயம் பற்றிய சிந்தனை தொடர்ந்து இருக்குமா, என்கிற யதார்த்தக் கேள்வியைத் தவிர்க்க முடியிவில்லை. கண்பறிபோன சுருக்கில் இதெல்லாம் யோசித்து முடிவுகள் கண்டுகொண்டு அடுத்த வேலையைப் பார்த்திருப்பார். சுயபாத்திரத்தின் வழியாகச் சொல்கையில் இந்த சிந்தனைநீட்சி உதடொட்டாத பேச்சாக எனக்குப் பட்டது. அதே சமயம் அவரது மனைவி தூரத்தில் இருந்து அவரைப் பார்க்கையில், மெளனமாய் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் அவர், தூங்குகிறாரா, யோசித்துக் கொண்டிருக்கிறாரா, என நினைப்பதாக வரும் கட்டம் யதார்த்தமாக வந்து விழுந்துள்ளதைக் கட்டாயம் எடுத்துக் காட்ட வேண்டும். பாராட்ட வேண்டும்.

 'மண்' என ஒரு கதை அந்தத் தொகுதியில் இருந்தது. ஊரெல்லையில் பானைசெய்யும் குயவன் வந்து கடை போடுகிறான். அவனும் அவலட்சணம், அவன் மனைவியும் அவலட்சணம், அவர்களுக்கு ஒரு குழந்தை. அதுவும் முகலட்சணமற்றது... எனப் பாத்திர வர்ணனை தருகிறார் லா.ச.ரா. எல்லாரும் பொங்கலுக்கு அவனிடம் பானை வாங்கிப்போக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். பானை பானையாய்ச் செய்து அடுக்குகிறான். அடடா, அந்தக் குழந்தை இறந்து விடுகிறது. குழந்தை இறந்த துக்கத்தில், தன் கையறுநிலையில் ஆ த்திரத்துடன் அவன் அத்தனை பானையையும் ஒரு எத்துவிட்டு நொறுக்கிப் போடுகிறான். அவர்கள் அந்த ஊரைவிட்டுப் போய்விடுகிறார்கள். அந்த சாபம், ஊரே விளங்காமல் போயிற்று... என்கிறார் லா.ச.ரா.

 அவன் கடைபோட்டது ஊருக்குள் அல்ல. ஊர் எல்லையில்.

 இதன் முன்னீடில், செக். மொழிபெயர்ப்பாளர் இந்தக் கதையை உலகத்துச் சிறந்த கதைகளில் ஒன்றாகப் பாராட்டியதாகப் பெருமைப் படுகிறார் லா.ச.ரா. என் முன்னுரையில், ஒரே வரியில் 'சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகிறது' எனத் தாண்டிச் செல்கிறேன். குழந்தை இறந்ததற்கு ஊர் எந்த வகையில் காரணம், ஏன் அவன் ஊருக்கு சாபம் விட வேண்டும், தெரியவில்லை. பானைகளை ஏன் நொறுக்கிப் போடவேண்டும், ரஜினி படக்காட்சி போல. பாத்திரத்தின் முறுக்கம், அது அவரது பாத்திரங்களின் இயல்பு என வலிந்து சொல்லிவிட்டாரா தெரியவில்லை.

 சுயமுன்னீடு இல்லாமல், வாசகனே சிறந்த கதையைத் தேர்வு செய்துகொள்ள விட்டிருக்கலாம்.

 லா.ச.ரா.வின் உலகம் சிறியது என்று கூறுபவர்கள் கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது, என்பது என் முன்னுரை. கூற்றின் முதல்பாதி, அதை நான் மறுக்கவில்லை, அல்லவா?

 இதெல்லாம் வேணாம். லா.ச.ரா. ஒரு பரபரப்பான நடைக்குச் சொந்தக்காரர். வாசகனைக் கடைசிவரி வரை இழுத்துச் செல்லும் நேர்த்தி அவரிடம் உண்டு. படித்து முடித்தபின் சில மாற்றுக் கருத்துக்கள் தோணலாம், படிக்கையில் அந்த ஜாலத்தில் வாசகன் தன்னையிழப்பான். அது லா.ச.ரா. வின் வெற்றி. அது லா.ச.ரா.வின் பலம்.

 அந்த ஜாலத்தில் லா.ச.ரா. தன்னையே இழப்பார். இது பலவீனம்.

தொ ட ர் கி றே ன்
storysankar@gmail.com


Comments

Popular posts from this blog