சிறுகதை
நன்றி – புதுப்புனல்
மாத இதழ்
மழை
எஸ். சங்கரநாராயணன்
மழை எத்தனை அருமையான விஷயம்.
அலுவலகம் விட்டு வீடுதிரும்பும் ஆசுவாச
சுதந்திர சந்தோஷத் தருணம் அது. குழந்தையாய்
இருந்தால் பள்ளியில் இருந்து விடுபட்ட ஜோரில்
ஊளை கிளம்பியிருக்கும். என்னதான் மனிதன் கட்டுக்குள் தன்னை
இறுக்கிக் கொண்டாலும் அது தளர்கையில் எத்தனை
உற்சாகம்.
வெளியேயிறங்க பஸ் நிறுத்தத்தில் கூட்டம்.
அவரவர்க்கு வீடு திரும்பும் அவசரம்.
பஸ் வந்தாலும் அருகில்வந்து ஏறுவசத்தில் நிற்க வேண்டுமே என்கிற
கவலை. நின்றாலும் உள்ளே ஏற முடியவேண்டும்.
உட்கார இடம் கிடைக்க வேண்டும்...
என கவலைகளை உள்ளே அடுக்கிக்கொண்டு
சனங்கள். இதன் நடுவே வானம்
சற்றே முகம் மாறியதும் அட,
என்றிருந்தது அவனுக்கு. ஒருவேளை மழை... என
அவன் நிமிருமுன் நெற்றியில், மூக்கின் நுனியில் என ஒரேயொரு தேன்சொட்டாய்
மழை கூச வைத்தது.
அவனுக்கு மாத்திரம் அல்ல. அவர்கள் வீட்டில்
எல்லாருக்குமே மழை பிடிக்கும். ஒருமுறை
பள்ளிவிட்டு அவன் வீடுதிரும்ப மழை
பிடித்துக்கொண்டது. சடசடவென்று பெரும்புள்ளிகளாய் அது வயிறு ஊதி,
அகல உரு எடுக்க ஆரம்பித்ததில்
பதறி ஓடி வீட்டுக்கு வந்தான்.
வாசலில் தாத்தா. உள்ளே நின்றபடி
பார்த்துக்கொண்டிருந்தவர் வெளியே ஓடிவந்தார். என்னா
சண்டியரு, மழையின்னா பயமா? சண்டியர் எல்லாம்
பயப்படலாமா... என வழியை மறித்து
கேலியடித்தார். இல்ல தாத்தா... என்னுமுன்
அவனை அலாக்காகத் தூக்கி தோள் மேல்
ஏற்றிக்கொண்டார். அப்படியே வெளியே வாசலில் நின்று
சாமி சப்பரமாய் அவனை ஆட்டினார்.
உக்கிரப்பட்டிருந்தது மழை. அடேயப்பா என்ன
மழை. ஊசியென விழ ஆரம்பித்த
மழை பொட்டுகளாகி இப்போது சவுக்கென விளாசியது.
தாத்தாவுக்கானால் உற்சாகம் தாளவில்லை. கெட்ட வார்த்தைகள் அவர்
வாயில் இருந்து பொழிந்தன. மாப்ளை,
புயல் பாத்திருக்கியாடா? அப்ப அதுல போவோணும்டா.
அப்ப அடிக்கும் பாரு ஒரு காத்தும்
மழையும்... ஒன்னியப்போல சின்னப் பிள்ளைங்களை அப்படியே
தூக்கி, யானை தும்பிக்கையால தூக்குமே,
அப்பிடி ஒரு வீசு வீசிப்போடும்...
ஐயோ என்றான். என்றாலும்
சிரிப்பாய் இருந்தது.
சாராயம் கள்ளு என்று
பழக்கம் இல்லை தாத்தாவுக்கு. என்றாலும்
இயற்கை சார்ந்த போதை அவருக்கு
இருந்தது ஆச்சர்யமே. தாத்தா அதிகம் படித்தவரும்
அல்ல. ராத்திரிகளில் வீட்டுக்குள் படுக்க அவருக்குப் பிரியப்படவில்லை.
ஐயனார் கோவில் வளாகத்தில் தான்
எப்பவும் வாசம். பசித்தால் தான்
அவருக்கு வீடு ஞாபகம் வரும்.
வயலில் இறங்கி வேலைசெய்த உடம்பு.
கண் மங்க ஆரம்பித்ததும் அவரது
உடல்சார்ந்த வேலைகள் அடங்கி விட்டன.
என்றாலும் நோய் நொடி என்று
அவர் படுத்தது கிடையாது.
மழை என்றால் தாத்தாஞாபகங்கள்
வந்து விடுகின்றன. மேகம், பொட்டலம் உடைந்தாப்போல
மழையைச் சிதற விடுகிறது. யானைப்
பசியாய் மழைக்கு ஏங்கிக் கிடந்தான்
அவன். இது? யானைப் பசிக்கு,
மழை சோளப்பொரியாய் விழுகிறது... கிராமத்து அடையாளங்களை இன்னுமாய் தன்னோடு பிடிவாதமாய் இறுக்கி
அணைத்துக்கொண்டிருந்தான் அவன். தாத்தாவுடனும், பிறகு
அப்பாவுடனும் கால் வலிக்க வலிக்க
ஊர்சுற்றித் திரிந்த, தோப்புகளில் கழித்த, வயல் கிணறுகளில்
நீராடிய காலங்கள் இன்னும் அவனுள் பசுமை
மாறாமல் அதே பச்சை வாசனையுடன்
மிச்சம் இருந்தன.
ஆனால் மழை வருகிற
அறிவிப்பே இங்கே நகரத்தில், சுற்றிலும்
பஸ்சுக்காகக் காத்திருக்கிற நபர்கள் இடையே முகச்
சுளிப்பாய் அமைகிறதை ஒரு வருத்தத்துடன் பார்த்தான்.
சிலர் சற்று ஆசுவாசமாய் இருந்தாலும்
அவர்கள் கையில் தயாராய் குடை
வைத்திருந்தார்கள். மழை என்றதும் தன்னைப்போல
ஒதுங்க இடம் தேடின கண்கள்.
நகர வாழ்க்கைப் பரபரப்பில்
அவனே வானம் பார்ப்பதை இழந்திருந்தான்.
தினசரி அலுவலகம் ஓட என்றே அன்றாடங்கள்
துரிதகதியை வேகத்தை நிர்ப்பந்தித்திருந்தன. வீடு எனும்
கூட்டில் இருந்து அலுவலகம் என்ற
கூட்டில் போய் அடைதல் இங்கே
விதி என்றாயிற்று. அன்றியும் இங்கே நகரத்தில் வானம்
மாற்றமே யில்லாததாய்த் தான் பட்டது. நீலம்
மாறா வானம். மேகம் அற்று
ராஜபாட்டையாய்க் கிடந்தது. யானைகள் நடமாடா ஆகாயம்.
மரங்களற்ற பூமியின் வெளிகள்.
அதற்குள் பஸ் ஒன்று வர
கும்பல் முண்டியடித்தது, மழைக்குத் தப்பித்தாப் போல... எப்படியோ நகர
வாழ்வில் எதில் இருந்தும் விடுபடும்,
தப்பிக்கும் பாவனையைத் தவிர்க்கவே முடியாமல் ஆகிறது. கனமற்ற மெல்லிய
உடைகள் அணிந்த பெண்கள் மழை
என்றால் பயப்படுவதும் நியாயமாய் இருந்தது. இருந்த வெக்கையிலும், புழுக்கத்திலும்
உடைகள் கனமாய் அமைய முடியாது
தான் போலிருந்தது. அந்தக் கூட்டத்தில் முண்டியடித்து
உள்ளேபுக அவன் முயற்சிக்கவில்லை. காத்திருப்போம்.
அடுத்த பஸ், அவனுக்கு அதிர்ஷ்டம்
இருந்தால் விரைவிலேயே வரும்.
தாத்தா அருமையான மனிதர்
தான் என்று நினைத்துக்கொண்டான். கருத்த
ஒல்லி தேகம். சட்டை அணியப்
பிரியப்பட மாட்டார். வயலில் அவர் வேலைசெய்கையில்
கோமணம் மாத்திரமே அணிவார். அந்த இயற்கைச் சூழலில்
அது பாந்தமாகவும் காணும். வரப்பில் கால்நீட்டி
அமர்ந்துகொண்டு கதைகள் பேசுவார். மாணிக்கம்,
வானத்தைப் பார்த்திருக்கியா? பார்க்கணும்டா. தினசரி பார்க்கணும். வானம்
எத்தனை அழகு. எத்தனை எளியது.
எவ்வளவு பெரிசு. எத்தனை விஸ்தீரணம்.
அதும் முன்னால நாம எத்தனை
சின்னதா ஆயிர்றோம் பார்த்தியா? மனுசன் ஒருத்தொருத்தனுக்கும் எத்தனை தெனாவெட்டு,
அகராதித்தனம்... அவனுங்களுக்கு வானம் தெரியாது. கடல்
தெரியாது... என்பார். பள்ளிக்கூடம் ஒதுங்காதவர் என்றாலும் கண்ணும், விரிந்த மனசும் அவருக்கு
நிழலையும் வெளிச்சத்தையும் உள்ளே பரப்புகிறதாய் நினைத்துக்
கொண்டான்.
வேலைக்கு வந்தபின் ஒருநாள் கூட கடல்
வந்து பார்த்தது கிடையாது. இந்தக் கடற்கரை ரொம்பப்
பெரியது என்கிறார்கள். நகரவெளி தாண்டி அவன்
வீடு எங்கோ யிருந்தது. பஸ்சிலேயே
ஒண்ணரை ரெண்டு மணி பயணம்
செய்து அலுவலகம் வந்து போகிறான். ஒரு
இடம் கிளம்புவதே அங்கே வைபவம் போல
அமர்க்களப்படுத்தி விடுகிறது. எந்த நிகழ்ச்சி என்றாலும்
அரைகுறையாக, அநேகமாய் நிகழ்ச்சி முடியுமுன்னே, பந்திக்குப் பாய்ந்து சாப்பிட்டு விட்டு, வணக்கம் சொல்லி
கிளம்ப வேண்டியதாகி விடுகிறது.
திரும்பவும் ஆசைதீர வானத்தைப் பார்த்தான்.
இங்கேயெல்லாம் அநேகமாய் மழை திரண்டு உருமிவிட்டு
அப்படியே திரும்ப வெயில் வந்துவிடுகிறது.
அநேக நாட்களில் வெயில் பாட்டுக்கு அடிக்க
மழையும் பெய்கிறது. இருக்கிற சூட்டைக் கிளப்பி விடும் மழை.
தாத்தா சொல்வார். புண்ணியவான் இருக்கிற இடத்துலதாண்டா மழை பெய்யும். மாணிக்கம்.
பாவம் பண்ணினவன் இருக்கிற பூமியில் மழை எப்பிடி பெய்யும்.
மகா பாரதத்தில் கதை ஒண்ணு உண்டு
தெரியுமா?
சூதாட்டத்தில் தோற்றதில் பன்னிரு வருஷம் வனவாசமும்,
ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையும் பாண்டவர்கள் வாழ வேண்டி வந்தது.
அவர்கள் விராடபுர மன்னனிடம் வேலையாட்களாக மறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
அவர்களை எப்படியும் கண்டுபிடிச்சி அழிச்சிறணும் என்று கௌரவர்களுக்கு ஒரு
இது. எப்படி எங்க அவர்கள்
ஒளிந்து வாழ்கிறார்கள் என்று கண்டுபிடிக்கத் துடிக்கிறார்கள்.
அப்ப துர்வாச முனிவர்னு நினைக்கிறேன்...
அவர் சொல்றார். பஞ்ச பாண்டவர் எந்த
நாட்டில் வாழ்கிறார்களோ, அந்த நாட்டில் மாசம்
மும்மாரி பெய்யும். அப்படியாப்பட்ட நாட்டில், புண்ணிய பூமியில் அவர்களைத்
தேடுங்கள்னு சொல்கிறதாகக் கதை...
தாத்தாவுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகள்
பிடித்திருந்தன. கோவில் திருவிழாக்களில் பெரியவர்கள்
வந்து பேசுவார்கள். தனியே மைக்செட் கேட்கிற
தூரத்தில் உட்கார்ந்து அவற்றையெல்லாம் உன்னித்துக் கேட்பார். கதையைக் கதையாய்க் கேட்காமல்
வாழ்க்கையாகவே பார்த்து உருகி சில சமயம்
அழுதுவிடுவதும் உண்டு. மனம் விட்டு
அழணும்டா மாணிக்கம். மனசுல வெச்சிக்கக் கூடாது...
என்று கண்ணைத் துடைத்துக்கொண்டே சிரித்தபடி
அவனுடன் வீடு திரும்புவார்.
சட்டென மனசுக்குள் இன்றைக்கு
ஊர் ஞாபகங்கள், பழைய ஞாபகங்கள் வளையவர
ஆரம்பித்தாப் போலிருந்தது. அலுவலக வேலைகூட சரியாய்
முடிந்து ஐந்து மணியோடு எழுந்துகொள்ளவும்
வாயத்தது நல்ல விஷயம். சாதாரணமாய்
ஆறு ஆறரை என்று கூட
ஆகிவிடுகிறது. இந்த எதிர்பாராத நற்தருணங்கள்.
மனசில் நினைவு அசைகளை, அலைகளை
எழுப்பிவிட்டன. மழையின் சிறு அறிவிப்பு.
அட்சதைத் தூறலின் ஆசியுடன்...
சரி. கொஞ்ச தூரம்
காலாற நடக்கலாமாய் இருந்தது. இங்கிருந்து பத்து நிமிட நடையில்
முக்கிய நிறுத்தம் வரும். இங்கேநிற்காத பஸ்கள்
கூட அங்கே நின்று செல்லும்.
அதுவரை நடக்கலாமாய் இருந்தது. ஒருவேளை அங்கே இதைவிட
கூட்டம் காத்திருக்கலாம் என்ற நினைவை உதறினான்...
இருபக்கமும் பள்ளம். நடுவே மேடாய்
சாலை. ஒருகாலத்தில் இந்தப் பகுதிகள் ஏரியாய்
இருந்தன என்கிறார்கள். மழை இல்லாததால் ஏரிகள்
கட்டடங்கள் ஆயினவா, கட்டடங்கள் ஆனபின்
ஏரிகள் வறண்டுவிட்டனவா தெரியவில்லை. ஏரிகள் இருந்த காலத்தில்
கரைகளில் எத்தனை மரங்கள் அணிவகுத்து
நின்றிருந்திருக்கும் என்று நினைக்கவே அந்தக்
காட்சி ரம்மியமாய் இருந்தது. தொட்டாப் போல தோப்புகள் மரம்
நிரம்பிய தாவர எரிகள்... ராணுவத்தின்
அணிவகுப்பு மரியாதை போல சாலைகளின்
இரு மருங்கிலும் அந்தக் கால மன்னர்களே
மரங்கள் நட்டிருக்கிறார்கள். வழிப்போக்கர்களுக்கு நிழல் தந்து பயணத்தை
இனிதாக்கின அவை. தண்ணீர்த் தட்டுப்பாடு
அற்ற காலம்.
இப்போது மரத்தை வெட்டிவிட்டு
அந்த இடத்தில் பஸ்நிறுத்த நிழற்குடை வைக்கிறார்கள்.
அவன் பஸ் நிறுத்தத்தில்
இருந்து ஒரு பஸ் காலியாய்த்
தாண்டிப்போனது. நின்று ஏற்றிக்கொண்டிருப்பான். விட்டாயிற்று என
நினைத்து வருத்தப்பட்ட மனசை ஒரு புன்னகையுடன்
அடக்கினான். நிமிர்ந்து வானம் பார்த்தான். வானம்
பார்த்து நாளாயிற்று. வானத்தின் பிரம்மாண்டம் மனசில் நிறைவது அழகு
தான். தாத்தாவுக்கு இயற்கையின் தரிசனங்கள் பிடிபடுகின்றன. தினசரி வீட்டு வாசலில்
வேப்ப மரத்தடியில் தான் கயிற்றுக் கட்டிலில்
படுத்துக்கொள்வார். நல்ல பௌர்ணமி வெளிச்சத்தில்
ஐயனார் கோவில் பக்கம் நடமாடித்
திரிவார். மரங்களும், ஊருணி நீரின் மேற்
பளபளப்புமாய் தகதகவென வெள்ளி ஜொலிக்கும்.
சுண்ணாம்புத் தூசி பறந்தாப்போல எங்கெங்கும்
ஒரு வெளிர் வெளிச்சம் ஒட்டி
உலகமே புது தினுசாய் வசிகரமாய்க்
காணும். சில சமயம் தாத்தாவைத்
தேடி ராத்திரியில் ஐயனார் கோவில் பக்கம்
வருவான். தாத்தா ராத்திரி ஆயிட்டதே,
தூங்க வரல்லியா?... என்ற கேள்வியே அபத்தமாய்ப்
பட்ட கணங்கள் அவை.
எப்படி இயல்பாய் அவர்கள்
வாழ்ந்திருக்கிறார்கள். கருத்த தண்டுடைய வேப்ப
மரத்தடியில் தாத்தா அவரே மரத்தின்
ஒரு பகுதியாய்க் காணும்... பணம் பணம் என்று
ஓடும் இக்கால தன் வாழ்க்கை
சார்ந்து சிறு வெட்கம் கூட
ஏற்பட்டது இப்போது. தாத்தா கிராமத்து ஆசாமி.
அது சார்ந்த வேடிக்கைகளும் அவரிடம்
நிறைய இருந்தன. ஏலேய் காயான பின்
பூ ஆகும் காய் எது
தெரியுமா?... என்று கேட்பார். தேங்காய்.
அதுதான் காயை உடைத்து துருவினால்
தேங்காப் பூ என ஆகிறது.
அதேபோல பழமான பின் காயாகும்
பழம் எது, என்று அடுத்த
கேள்வி போடுவார். எலுமிச்சம் பழம். பிற்பாடு அது
ஊறுகாய் ஆகிறது!
ஊருணியில் அவனுக்கு நீச்சல் கற்றுத் தந்தார்
தாத்தா. ரெண்டு கையும் பரத்தி
அதில் அவனைப்போட்டு கையைக் காலை உதற
வைத்து, திடுதிப்பென்று அவர் விட்டுவிட அப்படியே
உள்ளே முங்கி மடக் மடக்கென்று
தண்ணீர் குடித்து மூச்சு முட்ட திணறி...
அப்படியே அலாக்காகத் தூக்கி வெளியே போட்டார்.
சண்டியரு பயப்படலாமா? எல்லாம் சரியாப் போகும்...
என்றார். தண்ணி ஒருத்தரையும் அடியில
வெச்சிக்காதுடா. பழகினப்பறம் பாரு, அது எல்லாத்தையும்
மேல்பக்கமாத் தான் வீசும்... உயிருள்ள
எல்லாத்தையும்... என்றார் சிரித்தபடி.
எட்டாம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்த சமயம் தாத்தாவுடன் வயலில்
இருந்து வீடு திரும்பினான். மழை
பிடித்துக் கொண்டது. நனைவோமா தாத்தா, என்றான்
ஆசையாய். சபாசுடா மாணிக்கம். நீ
நம்ம ஆளு, என்று அவர்
சொன்னது உற்சாகமாய் இருந்தது. அதோ பாரு, என்று
தூரத்து மலையைக் காட்டினார். மலையே
தெரியாமல் மேகம் கூடாரமாய்க் கவிந்திருந்தது.
இப்ப நாம அங்க இருந்தா
நல்லாருக்கும் தாத்தா, என்றான். ஹோ
ஹோவென்று சிரித்தபடி அவன் தலையைத் தடவினார்.
மழ சும்மா கழட்டியெடுக்குது அங்கே.
காலைல பார். நம்ம ஆத்துல
தண்ணி வந்துரும்... காலைல என்னைக் கூட்டிட்டுப்போயிக்
காட்டுங்க தாத்தா, என்றான் ஆசையுடன்.
புதுத் தண்ணியின் நுரையும் சிரிப்பும் எத்தனை உற்சாகமான விஷயம்...
அப்பாவுக்கு தேங்காப்பட்டணத்துக்கு மாற்றலாகிப் போக நேர்ந்தபோது தாத்தாவைப்
பிரியத்தான் வருத்தமாய் இருந்தது. தாத்தா அவனைக் கட்டிக்கொண்டு
அழுதார். என்றாலும் உடனே தேறினார். மாணிக்கம்
நல்ல படிப்பு படிச்சி நல்ல
உத்தியோகம்னு வரணும்னால் வெளிய போக வேண்டிதான்
அப்பா. என்ன இருக்கு இந்த
ஊர்ல... என்றார். ஒண்ணும் இல்லையா தாத்தா?
அப்ப நீங்களும் எங்ககூட வந்திருங்க என்று
நப்பாசையுடன் அவரைப் பார்த்தான். ஒரு
சிரிப்பு சிரித்தார். பதில் எதுவும் சொல்லவில்லை.
இந்த ஐயனார், இந்தத் தோப்புகளை
விட்டு அவர் எப்படி வருவார்?
அப்பாஊர் அவனுக்குப் பிடித்திருந்தது. அதிக மழையை எதிர்பார்த்து
ஓட்டுச் சார்ப்பு எடுத்த வீடுகள். அநேகமாய்
தினசரி எல்லாருமே கையில் குடை எடுத்துக்கொண்டே
வெளியே புறப்பட்டார்கள். கிணற்றில் குனிந்து அள்ளுகிறாப் போல அத்தனை தண்ணீர்.
ஏற்றம் வைத்த கிணறுகள். அதைவிட
உள்க் கூடத்தில் நடுவே மேலே வானம்
பார்த்தாப¢ போல முற்ற வெளி.
நிலாக்காலங்களில் உள்ளேயே வந்து விழும்
வெளிச்சம். சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி
வீட்டில் இருந்தே முற்றத்துக்குள் மழை
பெய்வதைப் பார்க்கலாம். ஓட்டுச் சாய்வில் இருந்து
பாலிதின் காகிதமாய் மழை இழை நெசவு
போல இறங்கும். குபீர் குபீரென்று ராத்திரியில்
தேங்காய் காற்றுக்கு அறுந்துவிழும் ஒலிகள் பினகட்டில் கேட்கும்.
இயற்கையின் சப்தங்களுடன் வாழ்ந்த காலம் அது.
ராத்திரியில் கூட தடதடவென்று சாலை
அதிர கடக்கும் கனரக வாகனங்களின் அதிர்வுடன்
நகரத்து அடுக்ககங்கள் நடுங்கியடங்குகின்றன. மரங்கள் அற்ற சாலைகளில்
மின்கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்கள் என நிற்கின்றன. பறவைகள்
அற்ற வானம்... கவிதை எழுதப்படாத காகிதம்
போல.
அப்பா தாத்தாவிடம் அதிகம்
உட்கார்ந்து பேசி பார்த்தது இல்லை.
என்ன ஏது என நாலுவார்த்தை
தேவைப்படி அவர்கள் பேசிக்கொண்டார்கள். அந்த
இழப்புதானோ என்னமோ தாத்தா அவனைச்
சீராட்டினார். அப்பாவிடம் சில ஒழுங்குகள் இருந்தன.
ஆசிரியராகச் சேர்ந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் என
ஓய்வு பெற்றார் அவர். நேரக் கணக்கு
இல்லாமல் ஊர் சுற்றவோ, காலத்தை
விரயமாக்கிப் பொழுதைக் கழிப்பதோ அவருக்குப் பிடிக்காது. ஊரில் மற்ற பிள்ளைகள்
அவரை மதிக்க வேண்டுமானால் தன்
பிள்ளை ஒழுக்கமாய் கட்டுப்பாட்டுடன் வளர வேண்டும் என்கிறதாய்
அவர் அவனிடம் ஒரு இறுக்கத்துடன்
செயல்பட்டாப் போலிருந்தது. அவனும் எதுவும் தேவை
என்றால் அப்பாவிடம் அல்ல, அம்மாவிடம் பேசியே
வாங்கிக்கொண்டான். அப்படியே ஆகிப்போனது.
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளை கல்வி
கவனப்படுத்துகிறது. அவ்வளவில், அப்பாவுக்குப் பிடித்திருந்தாலும் மழையில் நனைவதோ, வெளியே
பொது இடங்களில் நேரத்தைச் செலவிடுவதோ உவப்பானதாய் இல்லை. காலையில் அமெரிக்கையாய்
வாசலில் அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பார். அப்போது தெருவில் அவரைக்
கடந்து போகிறவர்கள் அப்பாவுக்கு வணக்கம் சொல்வார்கள். சைக்கிளில்
போகும் மாணவர்கள் இறங்கி, வணக்கம் சொல்லி,
தாண்டியதும் சைக்கிளில் ஏறிப் போவார்கள்.
எனினும் முற்றத்தில் மழை
பெயவதைப் பார்க்க அப்பாவுக்குப் பிடித்திருந்தது.
மழை எப்படி உருவாகிறதுன்னு ஆண்டாள்
சொல்லி கேட்கணும்டா, என்று ஏதாவது பேசுவார்.
அவனுக்கு ஆகாவென்றிருக்கும். ஒருமுறை அப்பா ஊருக்குப்
போயிருந்தபோது, இரவில் மழையில் நனைந்தபடி
வீடு திரும்பினான். கதவைத் தட்டினால், திறந்தவர்
அப்பா. என்னடா... என்றார். ஏன் எங்காவது நின்னுட்டு
வந்திருக்கலாமே, என்றுதான் கேட்டார். துண்டு எடுத்துத் தந்தாரே
தவிர, நல்லவேளை திட்டவில்லை.
தேங்காப்பட்டணம் தோப்புகள் நிறைந்த ஊர். தென்னந்
தோப்புகள் அடுத்தடுத்து நின்றன. தவிரவும் மாங்காய்,
கொடுக்காப்புளி, கொய்யா, நாவல் என
பழத் தோட்டம் ஒன்று. ஊரின்
பெரிய தோட்டம் அதுதான். எந்த
வெயிலுக்கும் அங்கே நிழல்தட்டிக் கிடக்கும்.
அணிலும் பறவைகளும் கொட்டமடிக்கும் பூமி. குரங்குகளை வலைவைத்துப்
பிடித்து விரட்டி விடுகிறார்கள்.
வாத்தியார் வீட்டுப் பிள்ளை என்று அவனுக்கு
மாத்திரம் உள்ளே அனுமதி உண்டு.
எதாவது நிழலில் உட்கார்ந்து பாடங்கள்
படிப்பான். படிப்பு ருசி அவனிடம்
இருந்தது. அப்பா நல்ல மனநிலையில்
இருந்தால் அவனுக்கு அவர்ரசித்த ஆங்கிலநூல்கள் வாசிக்கத் தருவார். அப் ஃப்ரம் ஸ்லேவரி,
புக்கர் வாஷிங்டன் சுயசரிதை யெல்லாம் அவர் அறிமுகம் செய்தது
தான்...
மழை பெய்யாவிட்டாலும் பொழுது
குளிர்ந்துகிடந்தது. காற்று உடைக்குள் ஜிலுஜிலுவென்று
புகுந்து சிலிர்ப்பு காட்டியது. மழை பெய்தால் இன்னும்
நன்றாய் இருக்கும் என்று தோன்றியது. காலியாய்ப்
போன போனபஸ்சில் நிறையப் பேர் ஏறிப்
போயிருக்கலாம். அவன் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம்.
நிறுத்தத்தில் கூட்டம் இல்லை. அவன்
போய் நின்ற ஜோரில் பஸ்
வந்தது. தாவியேறிக் கொண்டான். கூட அப்பாவும, தாத்தாவும்
ஏறிக்கொள்வதாய் மனசு வேடிக்கை காட்டியது.
வரட்டுமே, அதனால் என்ன? அவாளுக்கு
யார் டிக்கெட் எடுக்கப் போறா?... என நினைவைத் தொடர்ந்தான்.
தாத்தா செத்துப்போனபோது மழை
போட்டுக் கழட்டி யெடுத்துவிட்டது. நல்ல
ஆரோக்கியமான மனுசர் தான். திடீரென்று
வெளியே யிருந்து வீட்டுக்குள் வந்தவர், அம்மாவிடம் தாயி, கொஞ்சம் தண்...
என நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். அம்மா உள்ளே ஓடிப்போய்
தம்ளரில் தண்ணீர் கொண்டுவருமுன் தூணோடு
அப்படியே சாய்ந்துவிட்டார்.
காத்திருந்து, மழை அடங்க, எடுத்தார்கள்.
மழை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். நனைந்தபடியே அவரை எடுத்துப் போக
முடியுமா என்ன. மழைவிட காத்திருந்தபோது
வாசலில் மழை மூர்க்கமாகக் கொட்டிக்
கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தான். மழை தாத்தாவைப் பார்க்க
வந்து எதோ பேசுவதுபோல் இருந்தது.
தாவரங்களாக தோப்புகளாக உயிர்களாக மழை அவதாரங்கள் எடுக்கிறதாக
அவன் நினைத்தான். வள்ளுவர் சொல்கிறார், விசும்பின் துளியான மழை விழாமல்
போனால், சின்னப் புல், அதுகூட
வெளியே தலைநீட்ட முடியாது. சின்ன துளி மழையையும்,
புல்லின் தலைநீட்டலையும்... மினியேச்சர் ஓவியமாக வள்ளுவர் தீட்டுவதை
யோசித்து வியந்திருக்கிறான். தோப்புகள் மழையை எதிர்பார்த்து கிளைகளை
விரித்து காத்திருக்கின்றன. மரங்கள் மழையை உற்பத்தி
செய்கின்றனவா, மழை மரங்களை போஷிக்கிறதா
என்கிற சுழற்சி சுவாரஸ்யமே அலாதிதான்...
தாத்தா எப்படியெலலாம் பேசுவார்.
அவன் இப்போது வசிக்கிற
பகுதிக்குப் போகும்வழியில் தோப்பு ஒன்று இன்னும்
மிச்சமிருந்தது. அடர்ந்து பரந்த மரங்கள். சில
கிளைகள் தாழ்ந்து யானையாட்டம் ஆடிக்கொண்டிருக்கும். பத்தைம்பது மரங்கள் காணும். கூட்டமாய்
மரத்தைப் பார்ப்பதே அழகுதான். வஞ்சகம் இன்றி இயற்கை
தந்த சீதனங்களை மனிதன் வஞ்சனையுடன் கையாள்கிறது
அவனுக்கு வருத்தமாய் இருந்தது.
தாத்தா இருந்திருந்தால் இங்கே
வரச்சொல்லி மிச்சமிருக்கும் தோப்பை அவரிடம் காட்டியிருக்கலாம்
என ஒவ்வொரு முறை அதைத்
தாண்டிப் போகையிலும் ஏக்கமாய் நினைப்பான். ஊர் அங்கே மாத்திரம்
மனித வக்கிரங்கள் அற்று இயல்பாய் இருந்தாப்
போலிருந்தது.
சில சமயம் அதன்
உள்ளே தாத்தா எதோ மரத்தடியில்
படுத்திருக்கிறாப் போலக்கூட மனசில் தோணும்.
அவனுக்கு அதிர்ச்சியான விஷயம் ஒன்று நடந்தது.
முந்தைய நாள் இவள்தான் தகவல்
சொன்னது. மீனாட்சி, விஷயம் தெரியுமா? உங்க
அபிமான தோப்பு, அதை வித்துட்டாங்களாமே,
என்றாள். அதுக்கென்ன? என்றான் அசுவாரஸ்யமாய். அங்கே
எதோ தொழிற்சாலை வருதாம், என அவள் சொன்னபோது
தான் அதன் தீவிரம் புரிந்தது.
திகைப்புடன் அவளைப் பார்த்தான். நிசந்தான்,
என்றாள் அவள். அவளுக்கு ஏண்டா
சொன்னோம் என்று ஆகிவிட்டது.
என்ன பண்றது தண்ணி
இல்லை. எல்லா மரங்களையும் பராமரிக்க
முடியல்லியாம் அவங்களுக்கு... என்றாள் மீனாட்சி தொடர்ந்து.
மரங்கள் இல்லாததால் மழை இல்லையா, மழை
இல்லாததால் மரங்கள் இல்லையா என்கிற
சிக்கலுக்கு யாரிடம் இருந்தது விடை
நேரமாகி விட்டது. விறுவிறுவென்று
வீடுவரை நடக்க ஆரம்பித்தான். மழைக்கு
ஆசைப்பட்டு கடைசிவரை மழை போக்கு காட்டிவிட்டு
ஏமாற்றிப் போய்விட்டது. வருகிறேன் என்று கடிதம் போட்ட
நண்பன் வரவே யில்லை... என்கிறாப்
போலாச்சு. திரும்ப மழையில் சொட்டச்
சொட்ட நனைந்தபடி வீடு திரும்ப ஆசையாய்
இருந்தது...
தூரத்திலேயே தோப்பு தெரிந்தது. அறுவை
இயந்திரங்கள் வந்திருந்தன. ஆகா தோப்பை அழிக்கப்
போகிறார்கள். விறுவிறுவென்று போய்ப் பார்த்தான். மரத்தின்
உயரத்தில் பாசக் கயிறுகள். மரம்
அறுபடும் போது கண்டபடி சரிந்துவிடாமல்
பாதுகாப்பு.
அசோகரின் கலிங்கத்துப் பரணி போல போர்க்களக்
காட்சி.
ஒரு பக்கம் அறுபட்ட
மரத்துண்டுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். தெரு
விளக்கு வெளிச்சத்தில் அந்தக் காட்சி இன்னும்
கலவரப்படுத்தியது. ஓடிப்போய் அந்த மரத் துண்டுகளைத்
தொட்டான். குளிர்ச்சியான அந்த ஈரம் அவனை
அழ வைத்தது. அடுக்கடுக்காய் மரத்துண்டுகள். அதோ மேலே யார்?...
தாத்தா. அது தாத்தா அல்லவா?
தாத்தா என அலறினான்...
கருத்த நீள உடல். தாத்தாவுக்குக்
கொள்ளி வைக்கிறார்களா? கருத்த மேகமாய்க் கிடந்தார்
தாத்தா. பைத்தியக்காரன் போல அவன் கத்தினான்.
தாத்தா. தாத்தா...
என்னடா?... என்று திரும்பிப் பார்த்தார்
தாத்தா. என்னாச்சி தாத்தா? - இன்னும் என்ன ஆகணும்டா.
இனி நான் பிழைக்க மாட்டேன்...
இல்ல தாத்தா, என்று கெஞ்சினான்.
நீங்க எங்களுக்கு வேணும் தாத்தா. மழை...
மழை எங்களுக்கு வேணும் தாத்தா... என
விம்மினான்.
இந்த வேகத்தில் மரங்களை
அழிச்சால்... இனி நான் இங்கே
வாழ முடியாது, என்றார் தாத்தா. என்னை
எதிர்பார்க்காதே மாணிக்கம். என்னைத் தேடாதே...
தாத்தாவுக்கு அப்பால் பரந்த நீல
வானம் தெரிந்தது. மழை வெறித்திருந்தது. அப்படியே
அந்த மரத்துண்டுகளைப் பிடித்தபடி கால் நடுங்க நின்றான்
அவன்.
storysankar@gmail.com - Mob 91 97899 87842
Comments
Post a Comment