Sunday, January 2, 2022

 

நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ் • கட்டுரைத் தொடர்

நிசப்த தீங்காரம் / பகுதி 3

 

அசலைவிட மேலானது நகல்

 தைகள் எழுதப் படுகிற போது அந்தப் புனைவில் ஒரு வாழ்க்கை, நகலெடுக்கப் படுகிறது. ஆனால் நகல்கள் என்பன அத்தனை குறைத்து மதிப்பிடத் தக்கவை அல்ல.

அது அசல் அல்லதான். நகல்தான். ஆயினும் நகல்கள் ஒரு நெருக்க பாவனையை வாழ்க்கையை நோக்கிக் குவிக்கின்றன. நகல் எவ்வளவிலும் அசலின் முழுமையான தன்மையைப் பிரதிபலிக்காது. அது முழுமையின் ஒரு பகுதியே. முழுமை முப்பரிமாணமானது. நகலோ இரு பரிமாணமானது தான், என்பது உண்மையே. ஆனால்…

அச் சிறு அளவில், எழுத்தாளனின் பார்வைத் தேர்வு அடிப்படையில் எழுத்தின் வீர்யம் அல்லது சுய கவனக் குவிப்பு அங்கே அதிகரிக்கிறது தன்னைப் போல, என்பது ஆச்சர்யமானது.

நகல்களில் எழுத்தாளனின் இதயமும் ஓர் ஈடுபாட்டுடன் இயங்குகிற போது அந்த நகல் கலை வடிவம் என அமைதல் காண்க. கலையின் சிறப்பு அது. அந்த நகலை நீங்கள் ஒரு கலைஞனின் கண்வழி பார்க்கிறீர்கள் இப்போது. அவனது கண்களின் உக்கிர தரிசனத்தை அவ்வளவில் ஒரு கலைஞன் உங்களுக்கு மடை மாற்றுகிறான்.

அசலின் சிறு பகுதியை வட்டமிட்டு எழுத்தாளன் அடையாளம் காட்டுகிறான்.  நகல் என்பது அசலைக் காட்டும் சிறிய டார்ச் வெளிச்சம். அசல் என்பது நகலின் முழுமை அல்ல. ஒரு சிறு பகுதி. அந்தச் சிறு பகுதியை மாத்திரம் அப்போது நீங்கள் இன்னும் நெருக்கமாக அறிமுகம் செய்துகொள்ள வாய்க்கிறது.

ஆகவே, எந்த நகலுக்குமே ஒரு கண்ணோட்டமும் சேர்ந்து கொள்வதை நாம் உணர முடியும். இலக்கணப் படி சொன்னால், எந்தக் கலைப் படைப்புமே ஒரு தற்குறிப்பேற்றம் தான். பார்க்கிற ஒன்றில் பார்க்க வேண்டிய ஒன்றை அவன், அதை நகல் எடுத்துக் காட்டியவன் உணர்த்துகிறான். சுட்டிக் காட்டுகிறான். அது ஒரு பாடம் எடுக்கிற நிலை அல்லவா?

அப்படி அதை அவன் அறிவிப்பதன் தாத்பர்யம் என்ன? அந்தப் பார்வையில் ஒரு விமரிசனமும் இருக்கிறது. விமரிசனம் என்று வந்து விடுகிற போது அது முக் காலத்துக்குமாய் வியாபித்துக் கொள்கிறது. அந்த விஷயம் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, என விமரிசனம் செய்கிற அது, எப்படி இருக்க வேண்டும்… என்கிற சிந்தனையையும் வாசக மனதில் கிளர்த்த வல்லதாய் அமைகிறது.

மனதை சிந்திக்கத் தூண்டுகிறது அந்த நகல். அல்லது அது வெளிப்படுத்தும் கலை வெளி. மனதின் மண்ணை அது நெகிழ்த்தித் தருகிறது.

சிந்தனை என்பதே காலத்தின் முப்பரிமாணத்தில் நீச்சல் அடிப்பதுதான்.

எழுத வந்தபின் எழுதாமல் முடியாது என்று ஆகிப் போகிறது. சிந்திக்கிறவன் எழுத வருகிறான். எழுத்து என்பது ஓர் ஊற்று போல அவனுள் திறந்து கொண்ட பின் அது வற்றுவது இல்லை. அவனால் அதை வற்றவிட முடியாது.

இரைத்த கிணறு ஊறும். இரைக்க இரைக்க ஊறும். அந்த சிந்தனைப் பிரவாகத்தை அவன் மடைமாற்ற வேண்டி யிருக்கிறது.

வாழ்க்கையைப் பயில சிந்தனை ஒரு பயிற்சிக் களம் என ஆகிறது. உங்களுக்காக அவன் சிந்திக்கிறான். பிறிதின் நோய் தன் நோய் என உணர்கிறவன் எழுத்தாளன் ஆகிறான். அவன் தனக்கும் பிறர்க்குமாக சிந்திக்க ஆரம்பித்து விடுகிறான் தன்னைப்போல. நெல்லுக்கும் புல்லுக்குமான பிரவாகம் அது.

நீரின் அழகு பள்ளத்தை நிரப்புதல். பள்ளங்கள் காத்திருக்கின்றன. நீருக்கு அது தெரியும். தெரிந்தவர்கள் எழுத்தாளர்கள் ஆகிறார்கள்.

இது தனக்கே உள்ளே நிகழும் ஓயாத பயிற்சி. ஓய்வு அதற்கு இல்லை. எழுத்தாளனுக்கு ஓய்வு இருக்கிறதா என்ன? இருப்பதாகத் தெரியவில்லை. அவன் எப்பவுமே எதையாவது சிந்தித்தபடியே இருக்கப் பழகிப் போகிறான். ஈர நிலம் அவன்.

இதில் பழகப் பழக நயம் பட உரைத்தல் சித்திக்கிறது. சில பேர் சொல்வதை விளங்கச் சொல்கிறார்கள். நயம்பட நகைச்சுவையாக உரைக்கிறார்கள் சிலர். அதன் தத்துவ தரிசனத்தை விளக்க வந்தார் பலர். ஒன்றைக் கண்டடைந்தவன் அதை உடனே மௌனமாக எல்லார்க்கும் அறிவிக்கிறான்.

யாம் பெற்ற இன்பம், பெறுக வையகம்.

துன்பமும் பெறுக.

இதிலும் சில கேணிகளின் நீர் தித்திப்பாய் அமைகிறது போல, பாற்கடலில் சுனாமி போல ஒரு பக்குவப்பட்ட எழுத்தாளன் தான் அறிந்த அல்லது விளக்கிச் சொல்லிக்கொண்டு வந்த யதார்த்த நிலையை ஒரு படி தாண்டி தன் மனதின் தரிசனத்தோடு வாழ்க்கையையே, அதன் யதார்த்தத்தையே செம்மைப் படுத்தி எடுத்துக் காட்டும் போது, வாழ்வின் விஸ்வரூபத்தை வாசகன் கண்டடைய வாய்க்கிறது.

புல்லில் பனி. பனியில் பனை…

உலகளாவிய தளத்தில் அது ஒட்டுமொத்த மானுடத்தை வாரியணைத்து விம்மி விகசித்து நிற்கிறது. அதாவது யதார்த்தத்தை எழுத வந்த ஓர் எழுத்தாளனுக்கு அதன் மனக் குழைவில் தன்னைப்போல ஓர் பரிணாம உச்சம் சில சமயம் வாய்க்கிறது. 

ஆமாம். பரிணாம உச்சம் தான்.

ஏற்கனவே வேறு பகுதிகளில் சொன்னதுதான். என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்ல எனக்குப் பிடிக்கிறது.

தமிழின் முதல் இலக்கியத் தரமான நாவல் தந்தவர் ராஜம் ஐயர். அவரது நாவல் ‘கமலாம்பாள் சரித்திரம்.’  கதாநாயகர் குப்புசாமி ஐயர் வீட்டில் திருடு போய்விடும். இரவில் அவன் திருட வந்தபோது வீட்டில் விழித்துக் கொள்வார்கள். திருடன் அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து பின்கட்டு வழியே வெளியே ஓடுகிறான். பின்கட்டில் வைக்கோல் புடைப்பு இருக்கும். தன்னைத் துரத்தி வந்தவர்களின் கவனத்தைத் திசை திருப்ப அந்தத் திருடன் தான் வைத்திருந்த தீப்பந்தத்தை அந்த வைக்கோல் புடைப்பில் எறிந்துவிட்டு ஓடுவான். எல்லாரும் உடனே வைக்கோல் புடைப்பின் தீயை அணைக்கப் பரபரப்பார்கள். திருடன் தப்பி ஓடி விடுவான்.

பிறகு நாலைந்து நாளில் அந்தத் திருடனைப் பிடித்து விடுவார்கள். கோர்ட்டில் கேஸ் நடக்கும். அந்த விசாரணையைப் பார்க்க அந்த வீட்டுச் சொந்தக்காரர் குப்புசாமி ஐயரும் கோர்ட்டுக்குப் போயிருப்பார்.

நீதிபதி தீர்ப்பு வழங்குமுன் ஓர் ஆச்சர்யமான காரியம் செய்வார். எந்தக் கோர்ட்டிலும் அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை. யதார்த்தத்தை மீறி நாவல் ஆசிரியர் ராஜம் ஐயரின் கனிந்த மனது இப்போது எழுதிச் செல்கிறது.

நீதிபதி குப்புசாமி ஐயரைப் பார்த்து, “நீங்கள் குற்றவாளியிடம் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்பார்.

ஆச்சர்யமான கேள்வி, ஆச்சர்யமான நிகழ்வு அல்லவா?

குப்புசாமி ஐயர் எழுந்துகொண்டு திருடனைப் பார்த்துச் சொல்வார். அதுதான் நாவலின் உச்சம், என நான் நினைக்கிறேன்.

“என் வீட்டில் நீ திருட வந்தாய் அப்பா. நகை, பணம், பாத்திர பண்டங்கள் திருடிப் போனாய். இதுநாள் வரை அது எனக்குப் பயன்பட்டது. இனி அது உன்னிடம் இருப்பதால் உனக்குப் பயன்படும். ஆனால் வைக்கோல் போர் மீது தீவட்டி வீசி வைக்கோல் போரையே எரித்துவிட்டுப் போனாயே? அதை உனக்கும் இல்லாமல், எனக்கும் இல்லாமல், யாருக்குமே உபயோகம் இல்லாமல் வீணாக்கி விட்டாயே? அதுதான் எனக்கு வருத்தம்” என்பார்.

எழுதும்போது மானுடனாக அந்த எழுத்தாளனே ஒரு தேவதூதனாய் எழுதல் காண்க.

நல்ல எழுத்து ஒரு பயற்சியில் அந்த எழுத்தாளனை, பிறகு அவனால் மற்றவர்களை ஓர் உன்னத உயரத்துக்கு உயர்த்தி விட்டுவிடும், என்று சொல்ல முடிகிறது.

புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதை நினைவு வருகிறது. அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சுதேசமித்திரன் இதழுக்கு  என்று திடீரென ஒரு சிறுகதை மாலைக்குள் எழுதித்தரச் சொல்லிக் கேட்கிறார்கள். பத்திரிகையில் திடீர் இடைவெளிகள் ஏற்படும்போது அச்சிட்டு நிரப்ப வேண்டிய நெருக்கடி என்பது எல்லாப் பத்திரிகைகளிலும் இயல்புதான்.

அலுவலகத்தில் தலைக்கு மேல் கடகடத்து ஓடும் மின் விசிறியின் வெக்கை. உள்ளே டிரெடில் ஓடும் நாராச ஓசை. இதன் நடுவே புதுமைப்பித்தன் கதை யோசிக்கிறார். மதியத்துக்குள் கதை தந்து அது அச்சாகவும் வேண்டும்.

அவர் எழுதுகிற கதையில் ஒரு காட்சி. தாமிரவருணி நதியின் ஒரு துவைகல். அதில் சின்னப் பெண் ஒருத்தி அமர்ந்து கால்களைத் தண்ணீருக்குள் வைத்திருக்கிறாள். மெல்ல அவள் காலை வெளியே எடுக்கிறாள். பளீரென்ற அந்தக் கால்களில் வெள்ளி கொலுசு சூரிய ஒளியில் தகதகவென்று மினுங்குகிறது. திரும்ப அந்தச் சிறுமி கால்களைத் தண்ணீருக்குள் அமிழ்த்திக் கொள்கிறாள். சூரியனுக்கு அந்தப் பளீர்க் கால்களையும் அதில் மினுமினுக்கும் அந்தக் கொலுசையும் இன்னொரு தரம் பார்க்க ஆசையாய் இருக்கிறது.. என எழுதுகிறார் புதுமைப்பித்தன்.

அதன் அடுத்த வரி இன்னும் உச்சம் – சூரியனே யானலும் என்ன? குழந்தை காலைத் தூக்க காத்திருக்கத்தானே வேண்டும்?

எங்கோ ஊரில் இருக்கும் தன் பெண் குழந்தையை (தினகரி) நினைத்தபடி அவர் கைகள் தன்னைப்போல இப்படி கொண்டாட்டமாய் எழுதிச் செல்கின்றன என்று தெரிகிறது.

குழலினிது யாழினிது, என்றும், சிறு கை அளாவிய கூழ், என்றும் வள்ளுவர் ஒர் உன்மத்த நிலையில்தானே எழுதி யிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

சக உயிர்களை நேசிக்கும் பாங்கு, அதுவும் தனக்குப் பிறந்த குழந்தையை நினைத்தபடி மனசை மீட்டும் பாங்கு, அதைப் புன்னகையோடு வாசகனுக்குக் கைமாற்றும் அற்புதம், எத்தனை பேருக்கு இத்தகைய தருணங்கள் வாய்க்கும்?

அன்பின் உயர்நிலையை எழுத்தாளர் சைலபதி தமது ‘பெயல்’ நாவலில் இப்படி எழுதிக் காட்டுகிறார். சென்னையின் பெருமழைக் காலத்தில், அந்த ஊழிப் பேராட்டத்தில் மனசின் தன்வயம் இழந்துவிட்ட ஒரு பாத்திரம். பேச்சே ஒடுங்கி தன்னுள் அதிர்வுகளால் பள்ளமாகிப் போனவன் அவன். அவனைத் திரும்ப மீட்கப் போராடும் அவன் மனைவி. மெல்ல அவன் தன்னிலை மீள ஆரம்பிக்கையில் அவளுடன் கலவி சுகம் காண என்று லகிரியுடன் அவள் கையைப் பற்றுகிறான்.

கலவி முடிந்ததும் இவருக்குப் பசிக்குமே, என்று அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அடுப்பில் குக்கர் வைத்து சோறு ஆனதும் அணைத்து விட்டு, அவன் அணைக்க அவன் அருகில் வந்தாள், என எழுதிக் காட்டுகிறார். பெண் என்பவள் தாயின் பேரன்பின் பிரதி அல்லவா? எத்தனை உயர்வான சித்தரிப்பு பெண்ணைப் பற்றி…

ஒரு யதார்த்தச் சித்திரத்தில் சட்டென பறவையாய் ஒரு தேர்ந்த எழுத்தாளன் உயர்ந்து பறக்க ஆரம்பிப்பதை வாசகன் கண்டடைவது பேரனுபவம் தான்.

தமிழின் முதல் நாவலாசிரியர்களில் மற்றொருவரான அ. மாதவையா தமது ஒரு நாவலில் இப்படியொரு காட்சி அமைக்கிறார்.

பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். இரு சாராருக்கும் பிடித்து விடுகிறது. உடனே தாம்பூலம் மாற்றி உறுதி செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். வெற்றிலை மாற்றிக் கொள்கிற அந்த நேரம் பார்த்து மின்சாரம் துண்டிக்கப் பட்டு இருட்டாகி விடுகிறது. அப்போது ஒருவர் சொல்கிறார். “பக்கத்து வீட்டில் விளக்கு எரிகிறது. எதிர் வீட்டில் எரிகிறது. உலகம் பூராவும் வெளிச்சமாய்த்தான் இருக்கிறது. நல்ல சகுனம் தான். தட்டு மாற்றிக் கொள்ளலாம்…”

அப சகுனம், சுப சகுனம் என்றெல்லாம் கிண்டல் வைக்காமல் படிக்கிற வாசகரும் ஏற்றுக் கொள்கிற அளவில் எப்படி நைச்சியமான உரையாடலை ஆசிரியர் முன் வைக்கிறார் பாருங்கள்.

சைலபதி எழுதிய இன்னொரு கதை ‘மாயச்சேலை.’ இந்தக் கதை வாய்வழிக் கதையாக முற் காலத்தில் சுற்றி வந்ததா தெரியாது. நான் கேள்விப்பட்டது இல்லை. திரௌபதியின் துகில் உரி படலத்தைப் பற்றி, அரசை எதிர்க்க முடியாத மக்கள் மத்தியில் உலவி வந்த சிறுகதையாக வடிவமைக்கப் பட்ட கதை இது.

திரௌபதியை துச்சாதனன் துகில் உரிய வரும்போது சபையே அதிர்ந்துபோய் எதிர்க்கத் திராணி யில்லாமல் மௌனமாய் விக்கித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. திரௌபதியின் ஐந்து கண்வன்மார்களும் பேசாமல் தான் அமர்ந்திருக்கிறார்கள். அதே அரங்கத்தில் நூறு கௌரவர்களின் மனைவிமாரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரௌபதியின் அண்ணனாக கோவிந்தன் என்ற பாத்திரம் வருகிற.து. கோவிந்தனுக்குத் தன் தங்கை மேல் கொள்ளைப் பிரியம். அவன் அவளிடம் உனக்கு எப்ப என்ன ஆபத்து வந்தாலும் என்னைக் கூப்பிடு, எப்படியாவது நான் வந்து உன்னைக் காப்பாற்றுவேன், என்று சொல்லி யிருக்கிறான்.

துச்சாதனன் அவளது சேலைத் தலைப்பைப் பிடித்து இழுக்கிறான். தன்னைக் காப்பாற்ற அண்ணன் ஒருவனால்தான் முடியும் என்று தோன்றவே “கோவிந்தா…” என்று கதறுகிறாள் திரௌபதி.

கோவிந்தன் எப்ப எந்த ஊர், எந்த நாடு போனாலும் அங்கங்கே கிடைக்கிற வித விதமான சேலைகளைத் தன் தங்கைக்கு என்று ஆசையுடன் வாங்கி வாங்கிச் சேர்ப்பான். திடீரென்று அவனுக்கு தனது தங்கை ‘கோவிந்தா.. கோவிந்தா..” என்று ஆபத்தில் அலறும் சத்தம் அவன் மனசில் கேட்கிறது.

கோவிந்தன் தான் தங்கைக்கு என்று வாங்கிச் சேர்த்து வைத்திருந்த புடவைகளை ஒவ்வொன்றாக அவளுக்கு அனுப்ப ஆரம்பித்தான். வண்ண வண்ணமான விதவிதமான புடவைகள் திரௌபதி உடம்பின் மேல் வந்து அவளை மூடிக்கொண்டே இருக்கின்றன.

வண்ண வண்ணமான விதவிதமான புடவைகள். எத்தனை வகையான புடவைகள் அவை. வெவ்வேறு ஊர்களின் அடையாளங்கள் அவை.  எத்தனை யெத்தனை புடவைகள்…

கௌரவர் நூறு பேரின் மனைவிமார்கள் எல்லாம் அதைப் பார்த்து ஆச்சர்யமும் திகைப்பும் அடைகிறார்கள். அவர்களுக்கு அந்தப் புடவைகளைத் தாங்கள் கட்டிக்கொண்டு அழகு பார்க்க ஆசை வருகிறது.

புடவைகளை உரித்து எறிந்தபடி இருக்கிறான் துச்சாதனன். கௌரவர்களின் மனைவிமார் பாய்ந்து வந்து ஆளுக்கு ஒரு புடவையாக எடுத்துக் கொண்டு தாங்கள் அணிந்து பார்க்க உள்ளே ஓடுகிறார்கள். நூறு பேரும் விதவிதமான நூறு புடவைகளைக் கட்டிக்கொண்டு திரும்ப அந்த சபைக்கு வருகிறார்கள். மற்றவர்கள் முன் காட்டி பெருமைப்படஅவர்களுக்கு ஆசை.

புடவைகளை அவிழ்க்க அவிழ்க்க வந்துகொண்டே யிருந்ததில் துச்சாதனன் களைத்துப் போய் அப்படியே தன் முயற்சியைக் கை விடுகிறான்.

அத்தனைபேர் முன்னால் தன் மானம் பறி போகாமல் காக்கப் பட்டு விட்டதை நினைத்ததும் திரௌபதிமுறையிLவதை நிறுத்தி விடுகிறாள்.

அவளிடம் இருந்து பிரார்த்தனைக் குரல் நின்று போனதும் அவளது அண்ணன் புடவை அனுப்புவதை நிறுத்தி விடுகிறான்.

அவன் நிறுத்திய கணம் அந்த மாயக் காட்சி கரைந்து போகிறது. இப்போது அந்த நூறு மனைவிமார்… புதுப்புடவை கட்டி சபைக்கு அழகு காட்ட வந்தவங்க, அவங்க சேலையும் மறைஞ்சி போய், அத்தனை பேரும் நிர்வாணமா நின்னாங்க…

சபை நடுவில் கௌரவர்கள் ஒரு பெண்ணைக் களங்கப் படுத்த நினைத்தால், இப்போது அவர்கள் அத்தனை பேரின் மனைவிமார்களுமே சபை நடுவில் நிர்வாணமாக நிற்க சேர்ந்து விடுகிறது.

பொது சனத்தின் குரலாக இப்படி கதையை முடிக்கிறார் சைலபதி.

•••

Thursday, December 23, 2021

 ஜன, - மார்ச் 2022 சங்கு இதழில் என் சிறுகதை

டிங்கு

எஸ்.சங்கரநாராயணன்

 

குழந்தையின் பெயர் சரவணமூர்த்தி. தாத்தாவின் பெயர் அது. பெயர்சூட்டும் வைபவத்தில் அதன் காதில் ஓதிய பெயர் அதுதான். என்றாலும் குழந்தைகளுக்குச் செல்ல அடிப்படையில் ஒரு பெயர் அமைந்துதான் விடுகிறது. குழந்தையின் பெயர் டிங்கு. எப்படி யார் வைத்தார்கள் அந்தப் பெயர் அதுவே யாருக்கும் நினைவில்லை. என்றாலும் அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. வயிற்றை எக்கி எக்கித் தவழ ஆரம்பித்ததில் இருந்தே அவனிடம் ஓர் அசாத்திய வேகம் இருந்தாற் போலிருந்தது. உலகைக் கட்டியாள்கிற வேகம். பெற்றவளுக்கு மூச்சு திணறியது அவனைச் சமாளிக்க. தவழ்ந்து போய்ச் சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்ற குழந்தை தானே நடக்க முயன்று பொத்துப் பொத்தென்று விழுந்தது. என்றாலும் திரும்ப எழுந்துநின்று ஒரு குடிகாரத் தள்ளாட்டத்துடன் சிரித்தது அம்மாவைப் பார்த்து. ஒரு ராணுவ உடற்பயிற்சி பொல காலைத் தூக்கித் தூக்கி வைத்து சற்று தடுமாறி, ஆனால் அம்மாவை எட்டிவிட்டது குழந்தை. அதற்கு ஒரே சிரிப்பு.

நடக்கத் தெரிந்தபின் அதை வீட்டில் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டிப்போட வேண்டி யிருந்தது. இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது அது அடிக்கடி. அதை ஏமாற்ற அம்மா சில சமயம் ஒரு கயிற்றால் அதன் இடுப்பைத் தொட்டுவிட்டு கட்டிப்போடாமல் விட்டுவிட்டாள். அது தெரியாமல் குழந்தை உம்மென்று உட்கார்ந்திருந்தது. பாவமாய் இருந்தது அதைப் பார்க்க. அம்மாவை அது வா வா என்று கூப்பிட்டு அவிழ்த்துவிடச் சொல்லி அழுதது. அழுகை ஜாஸ்தியாகும் வரை அவள் பொறுத்துப் பார்த்தாள். பிறகு வேறு வழியில்லாமல் அவிழ்த்து விட்டாள். சட்டென முகம் பூரித்தது குழந்தை. ஏற்கனவே அதற்கு கன்னமும் தொப்பையும் சற்று பூரி உப்பல்தான். அதன் மடைகள் திறந்து கொண்டன.

துணி துவைக்கிற பிளாஸ்டிக் அண்டாவில் தண்ணி நிரப்பி உள்ளே உட்கார்த்தி வைத்தால் டப் டப் என்று தண்ணியை அடித்து விளையாடிக் கொண்டிருக்கும். தவழ ஆரம்பித்த போதே சிறு அறை தாண்டி வீடு முழுதும் வளைய வந்த குழந்தை. நடக்க ஆரம்பித்த பின் தன் உலகத்தை, அதன் விஸ்திரணத்தை இன்னும் பெரிசாக்கிக் கொள்ள ஆவேசப் பட்டது.  அந்த மொத்த வீடும் அதற்குப் போதவில்லை. வெளியே போக அது ஆசைப்பட்டது. வாசல் வரை போய், கதவின் கம்பிகள் வழியே வெளியே பார்த்துக்கொண்டு நின்றது. யப்பா, வெளி உலகம் எத்தனை பெரியது. எத்தனை விதவிதமான ஓசைகள் அங்கே. பரபரப்பு மிக்க வெளி உலகம். ஹ்ம். நான் இங்கே உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறேன்,  என குழந்தை துக்கப் பட்டது.

அது அம்மாவை வரச்சொல்லி தூக்கிக் கொள்ளச் சொல்லி அடம் பிடித்தது. வேறு வழியில்லாமல் வந்து தூக்கிக் கொண்டால், என்ன கனம்… வெளியே கையைக் காட்டியது. உள்ளே ஆயிரம் வேலை கிடக்கிறது. இதை இப்ப வெளியே தூக்கி வெச்சிக்கிட்டு நிக்க முடியுமா? மாட்டேன்னா விடாது… என நினைத்துக் கொண்டாள். முளைச்சி மூணு இலை விடல்ல. அதற்குள் இந்த வேலை வாங்குகிறது. அதிகாரம். அடாவடி. பிடிவாதம். என்றாலும் அம்மாவை ஐஸ் வைக்க அவ்வப்போது கிட்ட வரச்சொல்லி ஒரு முத்தம், கன்னத்தில் ப்ச்க்… கொடுத்து விடுகிறது. அத்தோடு சிலிர்த்துப் போகிறது அவளுக்கு. குழந்தையை எப்படிச் சமாளிக்க வேண்டும் என அம்மா கற்றுக் கொள்ளுமுன் இந்த லங்கிணி அம்மாவைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டு விட்டது!

அதை நீளக் கயிற்றில் கட்டிப் போட்டுவிட்டு அம்மா உள் வேலைகள் செய்தாள். கயிறு அனுமதிக்கும் தூரம் வரை போய் வாசல் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றது டிங்கு. தாழ்ப்பாள் அதற்கு எட்டாத உயரத்தில் இருந்தது. கையை நீட்டி உயரம் எட்டுமா என்று பார்த்தது அது. துள்ளிக் கூடப் பார்த்தது. நிற்பது பலப்பட்டதும் துள்ளுவது அதனால் முடிந்தது இப்போது. ஒரு துள்ளல் துள்ளி சப்பென கீழே உட்காரும். தாழ்ப்பாளைத் திறந்தால் வெளியே ஓடிவிடலாம். முடியவில்லை. உள்ளே வேலை பார்த்தபடியே அம்மா டிங்குவிடம் ஒரு பார்வை வைத்துக் கொண்டிருந்தாள். எப்போ என்ன திரிசமன் செய்யுமோ என திக் திக் என்றிருந்தது அவளுக்கு.

ஜன்னலின் இரும்புக் கம்பிகளை நக்கிச் சுவைக்கிறது குழந்தை. கம்பியைப் பிடித்து ஆட்டுகிறது. பெரிய பீமன் என்று நினைப்பு அதற்கு. தொடைகள் தூண்கள். என்றாலும் சாப்பிட அடம். சாப்பிட்டால்தானே உடம்பில் தெம்பு இருக்கும்? கைச்சூட்டில் சாதம் எடுத்துக் கொண்டு அதில் வேகவைத்த பருப்பு சேர்த்து நெய் ஊற்றி மையாய்க் குழைத்துப் பிசைந்து சிறிது காரம் சேர்க்கலாம் என்று ரசத்தையும் அதன் மேல் விட்டுப் பிசைந்து எடுத்துக் கொண்டு வருவாள். நமக்கே சாப்பிட ஆசையாய் இருக்கும். குழந்தை முதல் வாயையே த்தூ என்று துப்பிவிடும். பிறகு அதைச் சாப்பிட வைக்க அம்மா உபாயங்கள் செய்வாள்.

முதல் கட்டமாக வாசல் கதவைத் திறந்து, (ஆகா… என உடலை அலையாய்ப் பொங்க வைக்கும் டிங்கு.) வாசல் வாத மரத்தடியில் அதை இடுப்பில் ஏந்திக்கொண்டு காக்காய் குவ்வி காட்ட வேண்டும். அப்படியே எதாச்சும் அதனுடன் கதை போலப் பேச வேண்டும். “ஒரு ஊர்ல ஒரு குவ்வி இருந்திச்சாம்… என்ன இருந்தது?” வ்வி. வேடிக்கை பார்த்தபடியே அது கதை சுவாரஸ்யத்தில் வாயைத் தன்னைப்போலத் திறக்கும். சாதம் உள்ளே போவதே தெரியாது.

“காக்கா எப்டிக் கத்தும்?”

“க்கா… க்கா…” என்று சொல்லிக் காட்டும் குழந்தை. இப்போது அதற்கு ஒலிகள் வாயில் இருந்து எழும்ப ஆரம்பித்திருந்தன. க்கா, என அது வாயைத் திறக்க அம்மா ஒருவாய் ஊட்டுவாள். “ஆட்டோ எப்பிடிப் போகும்?” அதற்குத் தெரியும். குழந்தைக்குத் தடுப்பூசி போட அவள் அதை ஆட்டோவில் கூட்டிப் போயிருக்கிறாள். வழியில் நெரிசலை விலக்க டிரைவர் ஹாரனை (ப்பாய்ங்! பாய்ங்க்!) அடித்தபோது சட்டென அந்தப் புது ஒலியில் குழந்தை பரவசப் பட்டது. அம்மாவைப் பார்த்து அது சிரித்தது. அம்மா “ஆமாண்டா கண்ணு..” என அதைத் தொப்பையை அமுக்கி (ப்பாய்ங்! பாய்ங்க்!) குனிந்து முத்தமிட்டாள். எப்படியும் சிறிது நேரத்தில் ஊசி போடும்போது அது அழப் போகிறது, என நினைக்க அவளுக்குப் பாவமாய் இருந்தது.

குழந்தை அம்மாவைவிட்டு எகிறி அந்த ஹாரனை அடிக்க முயன்றது.

வாசலில் போகும் எல்லாரையும் அது விளையட வா என்று அழைத்தது. தெருவில் யாராவது அதைப் பார்த்து விட்டு நின்றால் வரச்சொல்லி பூட்டிய கதவைத் திறக்கச் சொல்லி கை காட்டியது. ப்பா, ம்மா, வா, த்தூ… (துப்புவது அல்ல. தூக்கு, என்பது பொருள்.) சிறு சிறு உடைபட்ட வார்த்தைகள். சில ஒலிகள். டுர்ர். க்கா. அதன் உலகின் மொழி மெல்ல விரிவு பட்டு வந்தது. தா, என்றால் கொடு. த்தா, என்றால் தாத்தா. சென்னைப் பக்கம் அதுவொரு கெட்ட வார்த்தை.

வெகு சுருக்கில் அது பேச ஆரம்பித்து விட்டது. அதையிட்டு அம்மாவுக்கு ஒரு அலுப்பான பெருமிதம். “நல்லா ஷ்பஷ்டமாப் பேசறதே…” என்று எல்லாரும் பாராட்டினார்கள். மதியம் அவள் சிறிது தூங்கினாள். அது அவளுக்கு முன் எழுந்து கொண்டால், “அம்மா அம்புட்டு மணியும் ஆயாச்சு. எந்திரி” என அவளை உலுக்கியது. முதல் பிறந்தநாள் வந்தபோது ஊரார் கண்ணே பட்டுவிடுமோ என்று பயந்தாள். முழுக்க முழுக்க அவளே குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டி யிருந்தது. அவள் கணவனுக்கு பணி மாற்றலாகிப் போனதில் இருந்து தனியொரு மனுஷியாய் அவள் டிங்குவுடன் அல்லாடினாள்.

அவள் தாய் கொஞ்சநாள் வரை ஒத்தாசை என்று கூட இருந்தாள். பிறகு மூத்த பிள்ளையிடம் போய்விட்டாள். இல்லாவிட்டாலும் டிங்கு பாட்டிக்கு அடங்கவில்லை. அவள் மடியில் இருந்து இறங்கி ஓட்டமாய் ஓடி தெருவுக்குத் தாவியது. தெருவில் எதாவது காரோ ஆட்டோவோ வந்தால்?... என கதி கலங்கியது பாட்டிக்கு. டிங்குவுக்கு இருக்கிற அறிவுக்கு இப்போது அது தெருவில் வருகிற மாடு, ஆடு, ஐஸ்வண்டி எல்லாவற்றையும் அம்மாவுக்கு அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. அம்மா எல்லாம் பார்த்துவிட்டு ஆமாண்டா, என்று அதைப் பாராட்டியாக வேண்டும்.

அதைச் சமாளிக்க முடியாமல் அம்மா டிங்குவைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குப் போனாள். அநேகமாக தினசரி அவள் கோவிலுக்குப் போவது என்று வழக்கமாகி விட்டது அவள் இருந்ததே ரங்கநாத சுவாமி கோவில் தெருதான். முன் பக்கம் மேட்டுத் தெரு. கோவில் பக்கம் பள்ளத் தெரு. அவள் பள்ளத் தெருவில் இருந்தாள். கோவிலின் பூஜை மணிகள் இயங்கும் தோறும் குழந்தை சிலிர்த்து விரைத்தது. பரபரப்பானது. பூஜை என்பது ஒலிப் பிரளயமாய் இருந்தது அதற்கு. என்னவோ நடக்கிறது அங்கே. உடனே போய்ப் பார்க்கத் துடிப்பாய் இருந்தது டிங்குவுக்கு.

பழைய காலப் பெரிய கோவில். முன்னே பெரிய வளாகம் இருந்தது. நல்ல பத்து நாற்பது தூண் எடுத்த மண்டபம் இருபுறமும். கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் என்று விழாக் காலங்கள் அமர்க்களப் படும். திவ்யப் பிரபந்த வகுப்புகள் வாரம் ஒரு நாள் இருக்கும். நடுவே பாதை. யாரோ மன்னன் கட்டிய அந்தக் காலக் கோவில். கோவிலைப் பார்க்கப் போகும்போதே குழந்தை உற்சாகம் அடைந்தது. உடனே அம்மாவிடம் இருந்து கீழே வழுகி இறங்க முட்டியது. அதன் ஓட்டமும் சாட்டமும் அவளால் சமாளிக்க முடியவில்லை. ஒண்ணை நினைத்தால் உடனே அதைச் சாதிக்க அதற்குத் தெரியும். இந்த வயதிலேயே இப்படி நமக்குத் தண்ணி காட்டுதே என்று அவள் மலைப்பாள்.

காலையில் மாலையில் என்று அந்தக் கோவில் திண்ணைகளில் சிறுவர்கள் சிறுமிகள் அலை பாய்வார்கள். விட்டுவிட்டு சதுர எல்லை அளவில் தூண்கள் இருந்ததால் ஒன்றில் இருந்து மற்றதற்கு அவர்கள் தாவித் தாவி விளையாடுவார்கள். அத்தனை பேரோடும் போட்டி போட டிங்கு ஆர்வப்பட்டது. யாராவது பந்து வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தால் டிங்கு அங்கே போய் நின்று “நானும்…” என்றது.

தெருப் பிள்ளைகளுக்கு டிங்குவைப் பிடிக்கும். அதை நடுவில் நிறுத்தி அதனிடம் பந்தைக் கொடுத்து எல்லாரும் வட்டமாய் நிற்பார்கள். டிங்கு ஒவ்வொருவருக்காய்ப் பந்தைப் போடும். டிங்கு எல்லாரையும் தன் வீட்டுக்கு விளையாட அழைத்தது. “எங்க வீட்லயும் பெரிய பந்து இருக்கு” என்றது. எல்லாரும் சிரித்தார்கள். ”நீ சாக்லேட் பிஸ்கெட்னு சாப்பிட்டால் எங்களுக்குத் தர மாட்டேங்கறியே?” என்று ஒரு பெண் கேட்டாள். குழந்தை சிறிது யோசித்தது. “அம்மா தருவா” என்றது. எல்லாரும் திரும்ப ஹோ என்று ஒரு சத்தம் கொடுத்தார்கள். வீட்டிலானால் அம்மா டிங்கு கூட விளையாடுவாள். ஊரிலிருந்து அப்பா வந்திருந்தால் அவர் விளையாடுவார். “ஸ்சோ. ஒருநாள் ரெண்டுநாள் என்னால சமாளிக்க முடியல்ல இவனை. நீ எப்பிடித்தான் சமாளிக்கறியோ…” என்பார் அப்பா.

பக்கத்து எதிர் வீட்டுக் குழந்தைகளுடன் விளையாட விடலாம். தன் மேற்பார்வை இல்லாமல் டிங்குவை அனுப்ப அம்மா சம்மதப் படவில்லை. சட்டென எங்காவது விழுந்து வைத்தால் அவளால் தாங்க முடியாது. அவள் தன் அம்மாவையே இந்தளவில் நம்புவது இல்லை. இது பற்றி அவள்அம்மா “ஏண்டி நாங்கள்லாம் உங்களை வளர்த்து ஆளாக்கல்லியாக்கும்…” என்று நொடித்துக் கொள்வாள்.

அதனால் தான் கோவிலுக்குக் குழந்தையை எடுத்து வந்தாள் அம்மா. அம்மாவுக்கு ஆசுவாசமான கணங்கள் அவை. அப்படிப் போய் விளையாடினால்தான், ஆட்டம் போட்டால்தான் ராத்திரி தூங்கும். இல்லாவிட்டால் அவ்வளவுதான். விடிய விடிய அது அம்மாவிடம் என்னவாவது பேசிக் கொண்டே யிருக்கும். அதைத் தூங்க வைப்பது பெரும்பாடாகி விடும். ஓடியாடி விளையாடி விட்டால் வீட்டுக்கு வந்து நாலு வாய் அவள் ஊட்டுமுன்னரே தலை துவண்டு தூக்கம் அதற்கு ஆளைத் தள்ளும், தோசைக்கு மாவாட்டும் குழவிக் கல் போல!

அதனால்தான் அதற்குக் குழவிக் கல் என்று பெயர் வந்ததோ என்னவோ!

கோவில் பக்கம் நிறையக் கடைகள் இருந்தன. அரைஞாண் கயிறு, மஞ்சள் கருப்புக் கயிறுகள், சோழிகள், பல்லாங்குழிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், மேலே மெத்தென்று விழுகிற பந்துகள், கீச் கீச் ஷுக்கள், ஊதல்கள், பீப்பீ, வாசனை சீயக்காய்த் தூள், ஃப்ரேம் போட்ட சுவாமி படங்கள், மண் மற்றும் பீங்கான் தீப விளக்குகள், சிம்னி, விளக்குத்திரி, தீப எண்ணெய், விபூதி, குங்குமம், நாமக்கட்டி, வயர்க் கூடைகள், கிளிப்புகள், அலுமினியப் பாத்திரங்கள், சுலோகப் புத்தகங்கள் என்று விற்பனை செய்யும் கடைகள். விளக்கு போட்டு வெளிச்சமாய்க் கிடந்தது வளாகம்.

கோவிலில் யானை ஒன்றும் இருந்தது. தாழ்வாரத்தில் தென்னையோலை பிய்த்துப் போட்டிருப்பார்கள். அதன் காலடியில் பாகன் இருப்பான். ஆடியாடி அது ஓலையைக் கடித்துக் கொண்டிருக்கும். சில சமயம் அது கவளம் கவளமாய் பாகன் ஊட்ட ஊட்ட சாப்பிடுவதைக் கூட்டிப்போய் டிங்குவுக்குக் காட்டி யிருக்கிறாள் அம்மா. அந்தப் பாகனுக்கு டிங்குவைப் பிடிக்கும். டிங்குவிடம் கொடுத்து ஒரு வாழைப் பழத்தை யானைக்குக் கொடுத்தாள் அம்மா. “எனக்கு வேணும்” என்று வைத்துக் கொண்டது டிங்கு. பாகனுக்குச் சிரிப்பு.

அம்மா பாகனிடம் ஐந்து ரூபாய் கொடுத்தாள். பாகன் சந்தோஷப்பட்டு குழந்தையை வாங்கி அது அழ அழ யானையின் மேல் தூக்கி வைத்துக் கொண்டான். பிள்ளைகள் எல்லாரும் சுற்றி நின்று கை தட்டினார்கள். அதைப் பார்த்ததும் டிங்குவும் அழுத கண்ணுடன் கை தட்டியது. எல்லாரும் சிரித்தார்கள். அப்பவே அது யானையிடம் பயம் கொள்வதை விட்டுவிட்டது.

சிறிது விளையாடியதும் அம்மா சுவாமியைப் பார்க்க என்று குழந்தையைக் கூப்பிட்டாள். “நான் வர்ல” என்றது குழந்தை. அம்மாவுக்குச் சிரிப்பு. “அப்ப அம்மா உன்னை விட்டுட்டு நான் மட்டும் போட்டுமா?” என்று கேட்டாள். “நீங்க பத்திரமா டிங்குவைப் பாத்துக்குவீங்களா?” என்று மற்ற சிறுவர் சிறுமிகளிடம் கேட்டாள். “நீங்க போயிட்டு வாங்க மாமி” என்றார்கள் பிள்ளைகள். “போகாதே. நீ இரும்மா” என்றது டிங்கு. அதன் விளையாட்டை அம்மா பார்த்து ரசித்துச் சிரிக்க வேண்டும், என்று இருந்தது. “அப்ப நீ வா என் கூட..” என்றபடி அம்மா குழந்தையை வாரிக்கொண்டு உள்ளே போனாள். விரைப்பாய்க் கொஞ்சம் முரண்டிப் பார்த்தது டிங்கு. பிறகு ஒன்றும் வேலைக்காகவில்லை என்று அடங்கி விட்டது.

கோவிலுக்குள் என்றால் அம்மா இறக்கி விட மாட்டாள். அதற்குத் தெரியும். முன்பு போல இல்லை டிங்கு. ரெண்டு வயதாகப் போகிறது. உடம்பு கனத்தது.  அந்தப் பெரிய வளாகமும் அதன் ஓடியாட வசதியான திடலும் திண்ணைகளும் டிங்குவைப் பரவசப் படுத்தின. குறிப்பாக குழந்தைகளின் ஹோவென்ற இரைச்சல். அவர்கள் எதற்குச் சிரிக்கிறார்கள் என்றே புரியாத போதும் டிங்குவும் கூடச் சேர்ந்து கொண்டு கை தட்டி ஹோவென்று கொக்கரித்தது.

ரங்கநாத சுவாமி சந்நிதியில் கூட்டம் இருந்தது. காத்திருக்க வேண்டி யிருந்தது. டிங்குவுக்குப் பொறுமை இல்லை. அம்மாவின் இடுப்பில் இருந்தது அது. கீழே வழுகி யிறங்க முயன்றது. அம்மா விடவில்லை அதை அடக்க என்ன செய்வது… அம்மா அங்கே கட்டி யிருந்த மணியைப் பார்த்தாள். டிங்குவை அங்கே அழைத்துக்கொண்டு போய் டிங் என மணி அடித்துக் காட்டினாள். சட்டென அதன் உடம்பில் அந்த அதிர்வலைகள். குழந்தை தான் பயந்ததை நினைத்துச் சிரித்தது. “நீயும் அடிக்கறியா?” என்று அம்மா அதை மணிக்குக் கிட்டத்தில் கொண்டு வந்தாள். டிங் என மணி அடித்தது டிங்கு. அதற்கு ஒரே சிரிப்பு. மெல்ல வரிசை நகர ஆரம்பித்தது. திரும்ப மணி அடிக்க என்று மணியையே பார்த்தபடி வந்தது டிங்கு.

“அங்க பார் சாமி பார்…” என்று காட்டினாள் அம்மா. “பொம்மை” என்றது டிங்கு.

அம்மா சிரித்தாள். வீட்டில் நிறைய மரப்பாச்சி பொம்மைகள் இருந்தன. அதை சட்டென டிங்கு ஞாபகம் வைத்துக் கொண்டு சொன்னதாக அவளுக்குச் சிரிப்பு. அதன் உலகில் கடவுளா? குழந்தைகளே கடவுள்தான்… என நினைத்துக் கொண்டாள்.

“வாம்மா போலாம் வீட்டுக்கு…” என்றது டிங்கு. அர்ச்சகர் கற்பூரம் கொண்டு வந்தார். அம்மா அந்த தீபத்தைத் தொட்டு டிங்குவின் கண்ணில் ஒத்தினாள். டிங்குவிடம் ஐந்து ரூபாய் கொடுத்து கற்பூரத் தட்டில் போடச் சொன்னாள். “எனக்கு…” என்றது டிங்கு. அவள் சிரித்து “தட்டுல போடணும்..” என்றாள். “சாக்லேட்” என்றது டிங்கு.

அம்மா அந்தப் பணத்தை அதனிடமிருந்து பிடுங்கி கற்பூரத் தட்டில் போட்டாள். குருக்கள் சிரித்தபடி அதன் தலையில் சடாரி வைத்தார். “தொப்பி!” என்றது டிங்கு.

டிங்கு அவசரமாய்க் கீழே இறங்க மீண்டும் முயற்சி செய்தது. அம்மா அதற்கு சுவாமியைக் காட்டி, “பொம்மை இல்லடா உம்மாச்சி” என்று சொல்லி அதன் கைகளைப் பிடித்துக் குவிக்க வைத்தாள்.

“வேண்டிக்கோ” என்றாள் அம்மா. “சரி” என்று சமத்தாகக் கையைக் கூப்பியது டிங்கு.

“சுவாமி…” என்றாள் அம்மா. “சுவாமி” என்றது டிங்கு.

“எனக்கு நல்ல புத்தி குடு” என்றாள் அம்மா.

“அம்மாவுக்கு நல்ல புத்தி குடு” என்றது டிங்கு.

***

(சங்கு)

Saturday, December 4, 2021

 நிசப்த ரீங்காரம் பகுதி 2

வருத்தப்பட்டு உயிர் சுமக்கிறவர்கள்

 


ளமை இருக்கும் வரை இருந்த இறுக்கமான கட்டுக்கள். பிடிமானங்கள் முதுமையில் சற்று தளர்ந்து தான் போகின்றன. உடல் தளர்வுக்கும் மனத் தளர்வுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை, என்றுதான் தோன்றுகிறது. வாழ்க்கை அத்தனை உற்சாகமானது இல்லை போலத்தான் தெரிகிறது, இப்போது.

இதை ஒரு காலத்தில் உற்சாகமாக நான் உணர்ந்து கடந்திருப்பதே இப்போது யோசிக்க வியப்பாக இருக்கிறது.

அதிகம் வெற்றிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட மனது. எப்போது அது தோல்வி சார்ந்து கவனப்பட அல்லது கவலைப்பட ஆரம்பித்தது தெரியவில்லை. உடல் சுணக்கம் காட்டும்போது யோசனைகள் உட் சுருண்டு கொள்கிறது போலும். குளிர் தாளாமல் தன்னையே சுருட்டிக் கொண்டு ஒடுங்கிக் கொள்ளும் நாட்டு நாய் போல.

இடுக்கண் வருங்கால் நகுக, என்கிறார் வள்ளுவர். அது வயசான காலத்தில் அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டதாய் இருக்கலாம்.

இடுக்கண் மாத்திரமே வந்தால் என்ன செய்வது?

நான் மறு கன்னத்தைக் காட்டினேன். இரண்டிலும் அறை வாங்கியவன், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

பஸ் நிறுத்தத்தை அடையுமுன் வந்து நின்ற பேருந்தை ஓடி எட்டி நான் ஏறிக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. அது என் இறந்த காலம். இப்போது அது என்னால் முடியாது. என் ஓட்டங்கள் அடங்கி விட்டன. இது நிகழ்காலம். எனது நிகழ்காலம் ஒருவிதத்தில் எனக்கு, நான் இறந்த காலம்.

சில நாட்களில் நான் பஸ்ஸைத் தவற விடும் கவலையுடன் நடந்தபடி பரபரப்பாவதை உணர்ந்த கண்டக்டர் எனக்காக பஸ்ஸை நிறுத்தி காத்திருந்து என்னை ஏற்றிக் கொண்டு விசில் தருகிறார். நன்றி நண்பா.

விசில் அடிக்கும் எல்லாப் பையன்களும் கெட்டவர்கள் அல்ல, என்று புரிகிறது.

இப்போது இவ்வாறாக இந்த கண்டக்டருக்கு நான் கடன்பட்டு விடுகிறேன். இவர் என்றில்லை. என்மேல் இரக்கம் சுரக்கும் எல்லாரிடத்தும் நான் கடன்பட்டு விடுகிறதாக அல்லவா ஆகி விடுகிறது.

எனக்கு கடன் வாங்குவது ஒப்புதல் இல்லை. ஒரு காலத்தில் நான் கடன் இல்லாமல் வாழ்ந்தவன்.

இலங்கை வேந்தனாகக் கலங்குகிறேன்.

இதை எப்படி எவ்வாறு நான், என் இந்த முதுமைக் காலத்தில் திருப்பி அளிக்க முடியும்?

கடன் அன்பை முறிக்கும் என்றால், நான் கடன் படாமல், அந்தக் கண்டக்டர் இரக்கம் காட்டாமல், நான் முனைந்து ஓடி அந்த பஸ்சில் ஏற முயன்று தடுமாறிக் கீழே விழுந்திருந்தால், அதுவும் எலும்பை முறிப்பதாக ஆகி விடாதா?

நாம் எப்படி வாழ வேண்டும் என நாமே முடிவு செய்கிறாற் போல, நமது இறுதி நாட்களையும் நாமே முடிவு செய்தால், செய்துகொள்ள முடிந்தால், உலகம் இப்போது ஒருவேளை பாதி காலியாகி யிருக்கும்.

வாழ்கிற ஆசைக் காலம், அது போய் இப்போது சாகிற ஆசைக் காலமாக அல்லவா ஆகிவிட்டது.

நான் காத்திருக்கிறேன் ரயில் நிலையத்தில். என் ரயில் இன்னும் வரவில்லை. எப்போது வரும்? யாரிடம் கேட்க முடியும்?

பிறை நிலவு சூடிய சிவனாம். வழுக்கைத் தலையை அப்படிப் பார்த்திருப்பர்.

வயதானதில், புலன்கள் ஒடுங்க ஆரம்பித்து விட்டன. புலன் ஒடுக்கம் அவசியம் என்ற முன்னோர் வாக்கு, அது இப்போது தன்னைப்போல பலிதம் ஆகி விட்டது. ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.

‘பாட்டும் பரதமும்’ என்று ஒரு திரைப்படம். பி.மாதவன் படம் அது. அதில் ஒரு நாட்டியப் பெண்ணைப் பற்றி இப்படி வசனமும் அதற்கு பதிலும் வரும்.

“இவங்கதான் பரத நாட்டிய தாரகை •••••ஆறு வயசில் ஆட ஆரம்பிச்சாங்க. இப்ப வயசு அறுபது. இன்னமும் ஆடிட்டு இருக்காங்க.”

இதற்கு அடுத்த நபர், நாகேஷ் என நினைவு. பதில் சொல்லுவார். “அறுபது வயசானால் இவங்க ஏன் ஆடணும்? உடம்பு தன்னால ஆடுமே.”

இன்னொரு நகைச்சுவை கூட நினைவு வருகிறது.

“அந்த வீட்டு வாசல்ல ஆம்புலன்ஸ் நிக்குதே?”

“அந்த வீட்டுத் தாத்தாவுக்கு ஐம்புலன்சும் அடங்கிட்டதாம்.”

என் கண்கள் அத்தனைக்குத் தெளிவாகப் பார்க்கும் திறனை இழந்து விட்டன. நான் கண்ணாடி அணிகிறேன். காதுகள் ஒடுங்கி விட்டன என சிலர் ஒலிகளை விஸ்வரூபித்துக் கேட்கும் கருவிகள் அணிகிறார்கள்.

இதைப் பற்றியும் ஒரு பிரபல நகைச்சுவை உண்டு.

ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அவர். எதோ கல்யாணத்துக்கு அழைப்பு வரப் பெற்றவர், அலுவல் முடிந்து அந்தக் கல்யாண வரவேற்புக்குப் போக நினைத்தார். மாலையில் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வெளியே கார் வரை வந்துவிட்டார். கல்யாண மண்டபம் பெயர் என்ன, என யோசித்துப் பார்த்தார்.

அவரிடம் கல்யாணப் பத்திரிகை இருந்தது. ஆனால் அதைப் பிரித்து வாசிக்க அவருக்குக் கண்ணாடி தேவைப் பட்டது. கோட் பாக்கெட்டுக்குள் கைவிட்டுப் பார்த்தால் கண்ணாடி இல்லை. அவர் கண்ணாடியை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வந்திருந்தார்.

பரவாயில்லை, என்று தெருவில் எதிரே வந்த ஒருவனிடம் அவர் கல்யாணப் பத்திரிகையைக் காட்டிக் கேட்டார். “இதுல என்ன கல்யாண மண்டபம்னு போட்டிருக்கு?”

அதற்கு அவன் சொன்ன பதில், பல்கலைக் கழகத் துணைவேந்தரையே தூக்கிவாரிப் போட்டது.

அவன் சொன்னான். “சாமி எனக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. நானும் உங்களை மாதிரிதான்…”

உடல் தளர்ந்து விட்டது. எனது நடைவேகம் மட்டுப்பட்டு அபார நிதானம் வந்துவிட்டது. நடக்கையில் பிடித்துக் கொள்ள கை எதையாவது தேடுகிறது.

இரண்டு கால்கள் அல்ல, இப்போது எனக்கு கால்கள் மூன்று. இனி? அடுத்து… நான்கு கால்களும் அற்ற கட்டில், என்னைத் தூக்கிச் செல்ல ஒருவேளை வரும். அதுவரை நான் மூன்று கால்களுடன் நடமாடிக் கொண்டு, காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

மரணத்தை விட, இந்தக் காத்திருத்தல் உக்கிரமான விஷயமாய் இருக்கிறது. மரணம், அது கிட்டே வராமல் தூரத்தில் இருந்தே போக்கு காட்டுகிறது. மரணம் என் முன்னே கேலியுடன் அடிக்கடி வந்து நின்று போக்கு காட்டிவிட்டு காணாமல் போகிறது. அது கடைசியாக எப்போது வந்தது? நான் காத்திருப்பதை அது எப்படி அறிந்து கொண்டது?

ஒரு காலத்தில் எனது உற்சாகத்தில் என் மனக் கேணி தொட்டனைத்து ஊறியது.

இப்போது என் மனக் கிணற்றில் சொற்கள் வற்றி விட்டன. ஒலிகளே எனக்கு அலுப்பாய் இருக்கிறது. என் நிசப்தமோ ரீங்கரிக்கிறது. காதுகளில் தேவையற்ற ஒலிகள். சட்டென எழுந்துகொள்ள முயன்றால் என் மூளையில் எதோ மிருகம், கிர்ர் என உறுமுகிறது.

இத்தனை நாள் எனக்குப் பணிந்து வேலைசெய்த அவயவங்களின் வலி முனகல் அது.

தெருவில் தூரத்தில் இருந்தே மணியடித்தபடி வரும் தபால்காரன். எனக்குச் சொல்ல அவனிடம் சேதி எதுவும் இல்லை. கடிதம் எதுவும் எனக்கு வருவது இல்லை.

ஒருவேளை என்னைப் பற்றிய கடைசிச் செய்தியை நாளை ஒருநாள் அவன் பிறருக்குச் சொல்வானாய் இருக்கும்.

ஹ்ம். பிரச்னை என்னவென்றால், வயதான காலத்தில் இளமையாய் உணர ஆசைப் படுவது அதைவிட அபத்தமானதாய், ஆபாசமாய் அல்லவா ஆகி விடுகிறது.

ஒரு பிரபலமான ஆங்கிலக் கதை சொல்வோம். எழுதியவர் குஷ்வந்த் சிங். கதையின் தலைப்பு ‘பாட்டம் பின்ச்சர்ஸ்.’ அதாவது, புட்டம் கிள்ளுகிறவர்கள் என்று சொல்கிறார். குஷ்வந்த் சிங் என்ன இளந்தாரியா? வாலிப மிடுக்கனா என்ன? அதொன்றும் இல்லை. அட, அது தனி பஞ்சாயத்து.

இப்போது கதை. என் நினைவில் இருக்கிற அளவில் சொல்கிறேன்.

ஓர் இளைஞன். சந்தைப் பகுதி வழியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவன் எதிர்பாராத அளவில் ஒரு காட்சியை கவனிக்கிறான். கிழவர் ஒருவர். சந்தைப் பகுதியில் பெண்கள் பிளாட்பாரம் பார்க்க குனிந்தபடி சாமான்கள் எதோ வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிழவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர் பாட்டுக்கு அந்தக் கூட்டத்தின் நடுவே புகுந்து புறப்படுகிறார். யாரும் அவரை கவனிக்கவில்லை.

நல்ல நெரிசல். உள்ளங் கையை விரித்தபடி கிழவர் கூட்டத்தில் கலக்கிறார். குனிந்த வாக்கில் சாமான்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் ஒவ்வொரு புட்டமாக அவர் கை தடவி வருடிக் கொண்டே செல்கிறது. யாரும் நிமிர்ந்து அவரைப் பார்க்கவில்லை. யாராவது பார்த்தாலும் அதற்குள் அவர் அவர்களைக் கடந்து போயிருப்பார்.

கிழவர் மாட்டிக் கொள்ளவில்லை.

பையனுக்குச் சிரிப்பு. நல்ல ரசனைக் காரராக இருப்பார் போல இருக்கிறதே. கிழவரானால் எனன, அவருக்கு இப்படி ஓர் ஆசை.

மறுதரம் அதே சந்தைப் பகுதி வழியாக பையன் போனபோது அவனுக்குக் கிழவன் நினைவு வருகிறது. அதிர்ஷ்டக்கார மனுசன், என னநினைத்துக் கொண்டவனுக்கு திடீரென ஓர் உந்ததுதல் வருகிறது. நாமும் அவரைப் போல அனுபவித்தால் என்ன?

தன்னை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அந்தக் கூட்ட நெரிசலில் அவன் பார்க்கிறான். வியாபார மும்முரம். பெண்கள் குனிந்த வாக்கில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பையன் மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த நெரிசலுக்குள் நுழைகிறான். தன் உள்ளங் கைகளை விரித்துக் கொண்டு ஊடே கடந்து நடக்கிற சாக்கில், ஓர் இளம் பெண்ணின் பிருஷ்டப் பகுதியை அவன் வருடித் தந்தபோது, சட்டென நிமிர்ந்து அவள் அவன் கையைப் பிடித்து விடுகிறாள்.

“ராஸ்கல் என்ன காரியம் பண்ணினே?” என அவனைச் செருப்பைக் கழற்றி அடித்து கூச்சல் போடுகிறாள். அவனால் திமிர முடியாமல் அவனை அழுத்தித் தரதரவென இழுத்துக் கொண்டு போலிஸ் நிலையம் விரைகிறாள்.

அவன் எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் அவள் விடுவதாக இல்லை. போலிஸ்காரனுக்கும் இவனை எச்சரித்து விட்டுவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவள் சமாதானம் அடையவில்லை.

போலிஸ் நிலையத்தில் இருந்து அவள் தன் அப்பாவுக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்கிறாள்.

அவள் அப்பா போலிஸ் நிலையத்துக்கு வருகிறார். பையன் அவரைப் பார்த்ததும் அதிர்ந்து போகிறான்.

அவன் நேற்று சந்தையில் பார்த்தானே, பெண் புட்டங்களை வருடியபடி போன அதே ரசனைக்கார மனுசன். அவர்தான் அவளது அப்பா.

“என்ன விஷயம்?” என்று அப்பா மகளை விசாரிக்கிறார். “இவன்… என் பின் பக்கத்தைத் தடவினான் அப்பா” என அவள் முறையிடுகிறார்.

அப்பா திகைத்து அப்படியே நிற்கிறார்.

ஒருவிநாடியில் சமாளித்துக் கொண்டு சொல்கிறார்.

“பாவம் சின்னப் பையன் தெரியாமப் பண்ணிருப்பான். விட்ருங்க.” கதை இப்படி முடிகிறது.

இப்படியான கதைகளை யெல்லாம் எப்பவாவது தான் வாசிக்க வாய்க்கிறது. வெல்டன் குஷ்வந்த் சிங்.

முதுமையான கதாநாயகன் கொண்ட ஓர் ஆங்கிலப் படம் ஞாபகம் வருகிறது.

வயதான மனுசனுக்கு இந்த வயதில் காதல். அதுவும் ஓர் இளம் பெண்ணிடம் என்பது கதை. அவர் காதலியைச் சந்திக்கிற உற்சாகத்துடன் வீட்டில் இருந்து கிளம்பி காரில் ஏறி அமர்ந்தால் காரில் ‘செல்ஃப்’ எடுக்காது!

எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள்…

ஒரு மலையாளக் குறும்படம். டி.வி தொடர் என்று ஞாபகம்.

ஒரு பெண்ணை லாம்ஜ் ஒன்றுக்குத் ‘தள்ளிக்’ கொண்டு வந்தவன், அவன் ஆள் குட்டை. லாட்ஜ் அறைக்கு அவளை அழைத்துப் போனால் அந்த அறைக்கு தாழ்ப்பாள் உயரத்தில் இருக்கும். குட்டையான அவனுக்கு எட்டாது. துள்ளித் துள்ளி தாள் போடத் தவிப்பதாக காட்சி!

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘ஓல்ட் மேன் அன் தி சீ’ நினைவில் உள்ளதா? நிற்க. இடைச் செருகலாய் ஒரு சேதி பரிமாறி விட்டு மேலே செல்ல விருப்பம். இந்தத் தலைப்பில் வரும் ஓல்ட் மேன், என்ற வார்த்தையைத் தமிழில் ‘கிழவன்’ என மொழிபெயர்க்கிறார்கள். அது தவறு. ஓல்ட் மேன், என்பது ஆங்கிலத்தில் ஒரு மரியாதையான விளிச்சொல். தமிழில் கூட கிழவன், கிழத்தி என்ற சொற்கள் மரியாதையாகவே சங்க காலத்தில் குறிப்பிடப் பட்டன.

ஓல்ட் மேன், என்றால் ஒரு கப்பற் படையின் தலைவன், கடலை நன்று அறிந்தவன் என்ற உள்ளடக்கத்தில் தான் ஹெமிங்வே அந்தச் சொல்லைப் பயன்படுத்தி யிருக்கிறார். கடல் சார்ந்த அநேக விஷயங்கள் அறிந்த அவனை இக்காலச் சூழலில் வெறுமனே கிழவன், என அழைப்பது அவனது இயலாமைத் தன்மையைத் தூக்கிப் பிடிப்பது போல ஆகவில்லையா?

இதே நாவலை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். ஓல்ட் மேன் அன் தி சீ, தலைப்புக்கு என் மொழிமாற்றம் ‘பெரியவர் மற்றும் கடல்’ என அமைகிறது. என் மொழிபெயர்ப்பில் இந்த நாவலை வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பார்க்கலாம்.

பெரியவர் மற்றும் கடல், நாவலின் கதாநாயகன் சாண்டியாகோ. எண்பது நாட்களாய் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று ஒரு மீன் கூட அவன் வலையில் சிக்காமல் வெறும் கையுடன் கரை திரும்புகிறான்.

அசோகமித்திரன் எழுதிய ஒரு சிறுகதையில் ஒரு வயதான மனிதர் வருகிறார். ஏறத்தாழ எழுபது வயது டாக்டர் ஒருவர். தினசரி அவர் தன் கிளினிக் வருவார். அவரது கிளினிக்கின் மூடு கதவுகள், தனித் தனி மரப் பலகைகளால் ஆனவை. ஒவ்வொன்றாக எடுத்து வைத்து கதவைத் திறக்க வேண்டும்.

அவரைப் பார்க்க பார்வையாளர் என்று யாருமே வர மாட்டார்கள். அவரும் நம்பிக்கை இழக்காமல் தினசரி வருவதும் கதவுகளை சிரமப் பட்டுத் திறந்து வைத்துக் கொண்டு தனது நோயாளிக்காகக் காத்திருப்பதுமாக இருப்பார்.

ஒருநாளும் அவர் சம்பாத்தியம் என்று பணம் வீட்டுக்குக் கொண்டு வந்ததே இல்லை. அவர் மனைவிக்கு இது குறித்து எரிச்சலும், தன் கணவர் மீது ஆத்திரமும் உண்டு. சில நாட்களில் அவர் இரவு வீடு திரும்பும் போது, வாசலில் அவர் வந்துநின்று கதவைத் தட்டிக் கூப்பிட்டாலும் அவள் திறக்க மாட்டாள். அவருக்கு அது அவமானமாய் இருக்கும். இதற்கு என்ன செய்வது?

அன்றைக்கும் டாக்டர் கிளினிக்கை மூடிவிட்டு வீடு திரும்பினார். கதவுப் பலகைகளை எடுத்துச் சாத்த யாராவது உதவி செய்வார்களா என்று பார்த்தார். அவரைத் தெரிந்த நண்பர் ஒருவர் தெருவில் போய்க் கொண்டிருந்தவர் “டாக்டர், கிளம்பிட்டீங்களா?” என்றபடி வந்து கதவுப் பலகைகளைச் செருகி மூட உதவி செய்தார்.

“வாங்களேன் வீடு வரை பேசிட்டே போகலாம்…” என்றார் டாக்டர். இருவரும் பேசிக் கொண்டே தெருவில் நடந்து போனார்கள்.

தன் வீட்டு வாசல் வந்ததும் டாக்டர் அந்த நண்பரிடம் “என் பேரைச் சொல்லி சத்தமாக் கூப்பிடுங்க…” என்றார். நண்பருக்குப் புரியவில்லை. என்றாலும் அவர் கதவைப் பார்த்து சத்தமாய் “டாக்டர்?” என்று கூப்பிட்டார்.

டாக்டரின் மனைவி கதவைத் திறந்தபடி “அவர் இல்லியே. கிளினிக் போயிருக்கார்” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே விருட்டென்று டாக்டர் தன் வீட்டுக்குள் நுழைந்தார். புன்னகையுடன் நண்பரிடம் “போய்ட்டு வாங்க” என்றார்.

இந்தக் கதைக்கு சிரிப்பதா அழுவதா?

இப்படி ஒரு இரண்டுங் கெட்டான் சம்பவத்தை தாஸ்தயேவ்ஸ்கி கூடச் சொல்கிறார். ஒரு மிருகக் காட்சி சாலையில் அவரும் நண்பரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். முதலை ஒன்று நீண்ட வாயைப் பிளந்தபடி இருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நண்பன் சட்டென தடுமாறி அந்தக் குளத்துக்குள் நேரே முதலையின் வாய்க்கு உள்ளேயே விழுந்து விடுகிறான். ஒரு நிமிடம் சத்தம் போடக் கூடத் தோன்றாமல் விக்கித்து விட்டார் தாஸ்தயேவ்ஸ்கி.

வாய்க்குள் போன நண்பன் போராடியபோது முதலை திரும்ப வாயைத் திறந்தது. விர்ரென்று வெளியே வந்தான் நண்பன். அவனது துடிப்பில் அவனது கண்ணாடி தெறித்து வெளியே விழுந்தது. திரும்ப முதலை அவனை வாயை மூடி உள்ளே இழுத்துக் கொண்டது.

திடீரென்று அவன் இப்படி வெளியே வந்ததும் கண்ணாடி தெறிந்து விழுந்தபின் மறுபடியும் முதலை வாய்க்குள் போனதுமான அந்த நிகழ்வில் நான் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தேன். என எழுதுகிறார் தாஸ்தயேவ்ஸ்கி.   

அடுத்த வரியை இரண்டு பத்தி முன்னால் சேர்த்து வாசிக்கலாம். வெல்டன் அசோகமித்திரன்.

•••

Wednesday, November 3, 2021

 அமுதசுரபி தீபாவளி மலர் 2021

அலையுறக்கம்

எஸ்.சங்கரநாராயணன்

 வர் பெயர் ரத்தின சபாபதி. அவர் பெயர் அவருக்குத் தெரியாது. அதாவது தன் பெயரையே அவர் மறந்து போயிருந்தார். பெயர் என்று இல்லை. அவருக்கு என்னதான் நினைவில் இருந்தது? யாருக்குமே அதைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை. மனைவி சாமுண்டீஸ்வரி. அவள் முகம் அவருக்குத் தெரிந்திருக்கலாம். பெரிதாய் அதைத் தாண்டி அவளுக்கு அவர் மனதில் அடையாளங்கள் இல்லை. அறிவு தாண்டி, பிடரிப் பக்கம் இருக்கும் சிறுமூளை, முகுளத்தின் இயக்கம் மாத்திரம் அவரிடம் செயல் பட்டதா ஒருவேளை?

மனதையே தொலைத்து விட்டாரோ அவர்?

பள்ளி வயதில் ஒரு சிறுகதை வாசித்திருக்கலாம். ஒரு ஈ, அதற்குத் தன் பெயரே மறந்து விடும். அது ஒரு கன்றுக் குட்டியிடம் போய், தன் பெயர் என்ன என்று கேட்கும்… கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, தாயை வளர்த்த ஆயா.. இப்படி ஒவ்வொருத்தரிடமாக அந்த ஈ, தன் பெயர் என்ன, என்று கேட்டுத் திரியும். கடைசியில் ஒரு கழுதைதான் அதைப் பார்த்து ஈஈஈ… என்று இளிக்கும். உடனே அதற்கு தன் பெயர் ஞாபகத்துக்கு வந்துவிடும், என்று கதை. அந்தக் கதையை ரத்தின சபாபதியும் பள்ளி வயதில் அறிந்திருப்பார். இப்போது அவருக்கே அவர் பெயர் உட்பட எதுவுமே நினைவில் இல்லாமல் ஆகிவிட்டது.

அவர் உயிர் மாத்திரம் மிச்சமாய் இருந்தார். சிரிப்பு இல்லை அவரிடம். அழுகையும் இல்லை. எப்படியோ இந்திரியங்கள் வேலை செய்கின்றன. வேளைக்குச் சாப்பிட வேண்டும் என்று கூடத் தெரியாது. பசிக்குமா? ஆனால் அதைச் சொல்லத் தெரியாது. வார்த்தைகள் இறந்து போயிருந்தன அவரிடம். வாய், பேச அல்ல. உணவு உண்ண மாத்திரமே.

மகா அமைதி ஓர் இருட்டைப் போல அவருள் கவிந்திருந்தது. மனம் குகையாகி, சூனியமாகி விட்டது. அதில் எண்ணவோட்டங்கள் இல்லை. அசைவுகளே, சலனங்களே இல்லை. உணர்வுகளே இல்லை. எப்படி இப்படி ஆயிற்று? வயதாகிப் போனால் மூளையும் தளர்ந்து விடுமா? பெரிதான எந்த உணர்ச்சிகளும் மழுங்கி, இல்லாமல் போய் விடுமா? மூளை கூட ஓய்வை விரும்பி இப்படிச் செய்து விடுகிறதா?

அவரது பேட்டரி ஃபியூஸ் போய்விட்டதா?

ஆனால் ஏனோ பிடிவாதமாய் விழித்திருந்தார். ஏன் தெரியவில்லை. “படுங்க” என்றால் படுத்துக் கொள்வார். “கண்ணை மூடிக்கங்க” என்றால் மூடிக் கொள்வார். ஆனால் தூங்க மாட்டார். தானறியாமல் அவர் தூங்கினால் உண்டு. எப்போது தூங்குவார். எப்போது விழித்துக் கொள்வார், யாருக்குமே தெரியாது. அவருக்கே தெரியாது. அவள் பக்கத்தில் படுத்திருப்பார். திடீரென்று பதட்டத்துடன் எழுந்து உட்கார்வார். மூச்சிரைக்கும். என்ன, என்று கேட்டால் சொல்லத் தெரியாது. மனவெளியில் தேங்காய் விழுந்திருக்குமோ? “பேசாம படுத்துக்கோங்க” என்று சொல்வாள் சாமுண்டீஸ்வரி. திரும்ப அவள் அருகில் அவளை ஒட்டிக்கொண்டு படுத்துக் கொள்வார்.

காலைக் கடன்கள் தன் பாட்டில் பார்த்துக் கொள்கிறார் என்பது சிறு ஆறுதல்.  அலுவலகம் போகுமுன் அவரைப் பையன்தான் குளிப்பாட்டி விட வேண்டும். காபியோ, டிபனோ கூப்பிட்டு கையில் தர வேண்டும். வந்து நின்று கேட்கத் தெரியாது. பசிக்கிறதா, என்று கேட்டால் சொல்லத் தெரியாது. “சாப்பிட்டுருங்க” என்று இட்லி சட்னியுடன் தட்டைக் கையில் தர வேண்டும். சாப்பிடுவார். பிறகு “தட்டை சிங்க்ல போட்ருங்க.” போய்ப் போடுவார். “கையலம்புங்க. வாயைக் கொப்பளிக்க வேணாமா?” என்று கட்டளைகள் தந்தால் அவர் கீழ்ப் படிந்தார்.

எந்தச் செயலையும் அவர் செய்ய யாராவது சொல்ல வேண்டி யிருந்தது. வராந்தாவில் படிந்த நிழல் போல அவர் உள்ளம் காலியாய் வெறுமையாய்க் கிடந்தது. ஆனால் புலன்கள் வேலை செய்யாமல் இல்லை, என்றுதான் சொல்ல வேண்டும். உடம்பில் வலி தெரிகிறது. காது கேட்கிறது. கண் பார்க்கிறது. வாசலில் போஸ்ட்மேன் சைக்கிள் மணி அடித்தால் திரும்பிப் பார்க்கிறார். எழுந்து போய்த் தபாலை வாங்கி வருகிறார். ஆனால் தபால் வாங்கத்தான் போகிறரா என்று பார்த்துக் கொள்ள வேண்டி யிருந்தது.

வாசல் கதவைத் தாளிட்டால் போதாது. பூட்டு போட்டு எப்போதும் பூட்டி வைக்க வேண்டி யிருந்தது. அவர் யோசனையில் என்ன இருந்ததோ இல்லையோ. வாசல் கதவு திறந்திருக்கிறதா என்று உஷாராய்ப் பார்த்தபடி இருந்தார் அவர். அது ஏன், யாருக்கும் புரியவில்லை. வீடு அவருக்குச் சிறை போல இருந்ததா? இங்கே எல்லாரும் அவரைக் கட்டுப் படுத்தினார்களா? அப்படி அவர் உணர்ந்தாரா என்ன?

பிள்ளை ராமசுப்பிரமணியன் அவரை மரியாதைக் குறைவாய் நடத்தியதே இல்லை. அப்பாவுக்கு ஞாபகம் பிசக ஆரம்பித்த நாளில் இருந்து, அவன் அலுவலகம் போகு முன்னால் அம்மாவிடம், “அப்பாவைப் பார்த்துக்க அம்மா. அலட்சியமா இருந்திறாதே. வெளிய விட்றாதே” என்றெல்லாம் எச்சரிக்கை செய்து விட்டுத்தான் கிளம்பினான். கையில் சாப்பாடு கட்டி எடுத்துப் போகிற பிள்ளை. மதிய இடைவேளையில் வீட்டுக்கு அம்மாவின் அலைபேசியில் பேசுவான். தவறாமல் “அப்பா சாப்பிட்டாரா?” என்று அக்கறையாய் விசாரிப்பான்.

மருத்துவரிடம் காட்டியாயிற்று. அவரும் கொஞ்ச காலம் மருந்து என்று தந்தார். எதுவும் பலிக்கவில்லை. கடைசியில்  “இதை ஒண்ணும் செய்ய முடியாது. அவருக்கு வேற தொந்தரவு எதுவும் இல்லை இல்லையா? அதை நினைச்சி சந்தோஷப் பட்டுக்கங்க” என்று சொல்கிறார். ஒரு வகையில் அப்படித்தான் சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

வாசலில் காய்கறி வந்திருந்தது. உள்ளே பார்த்தபடியே சாமுண்டி கதவைத் திறந்தாள். படுத்திருந்தார் அவர். காய்கறிக்காரி கொஞ்சம் பேச்சு சுவாரஸ்யம் உள்ளவள். எதையும் விஸ்தாரமாய் நீட்டி முழக்கிப் பேச வேண்டும் அவளுக்கு. சில பேர் காபி குடித்தால் டபாராவையும் தம்ளரையும் விலக்கி உயரத்தில் இருந்து காபியை ஊற்றி ஆத்தி அப்புறம் குடிப்பார்கள். அதைப் போல. ‘‘நேத்து பூரா எங்க வூட்டுக்காருக்கு ஜுரம்” என்று எதாவது அவளுக்குப் பேச கிடைத்துக் கொண்டே யிருந்தது. சாமுண்டி தலையாட்டி கேட்டுக் கொண்டே யிருக்க வேண்டும். வாசலில் அவள் குரலைக் கேட்டுவிட்டு அப்படியே வந்து கதவைத் திறந்திருந்தாள் மாமி. தேவைப்பட்ட காய்கறியைப் பேரம் பேசி வாங்கி, பணம் எடுக்க உள்ளே போனாள்.

திரும்பி வந்து, பர்சை எடுத்துக் கொண்டு, சில்லரைகளைச் சரியார்த்து எண்ணி, அவளிடம் தந்துவிட்டு திரும்ப கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே வந்தவள் சுதாரித்து உள்ளறையைப் பார்த்தாள். மின்விசிறி மாத்திரம் ஓடிக் கொண்டிருந்தது. அவர் இல்லை. அட. ஒரு நிமிஷம். அதுக்குள்ள காக்கா ஓஷ்..ன்றாப் போல. அவர் மறைந்து விட்டார். இவருக்கு இதே வேலையாப் போச்சு, என்றபடி குளியல் அறைப் பக்கம் தேடினாள். கதவு வெளியே தான் தாள் போட்டிருந்தது. அதை அவர் திறந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு செகண்டு போதும் அவருக்கு. தூங்கறாப் போல படுத்திட்டிருந்திருக்கார். நான் உள்ள வந்த நேரம் பார்த்து நழுவிட்டார். இனி அவரை எங்கயாவது போய்த் தேடி கண்டு பிடித்துக் கூட்டிவர வேண்டி யிருக்கும். சம்பவாமி யுகே யுகே... மாமி பெருமூச்சு விட்டாள்.

•••

வண்டியில் இருந்து கட்டவிழ்த்துக் கொண்ட காளை மாட்டைப் போல விறுவிறுவென்று உற்சாக நடையிட்டார் ரத்தின சபாபதி. வாசல் கதவு திறந்து கிடந்தாலே அவருக்கு உடனே வெளியே இறங்க என்று ஒரு அவசரம், ஒண்ணுக்கு போல முட்டி விடுகிறது. ஒண்ணுக்கு வந்தால் பாத்ரூம் போக வேண்டும். இவர் எங்கே போகிறார், தெரியாது. வெளியே அவருக்கு என்ன வேலை?  ஒரு வேலையும் கிடையாது.

ஆனால் இந்த வெளி, அதன் பிரம்மாண்டம், சுதந்திரக் காற்று அவரைப் பரவசப் படுத்தி யிருக்க வேண்டும். தெருவில் யாரையும் அவருக்கு அடையாளம் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தாலும் அவருக்கு அவர்களைத் தெரியாது. அவரிடம் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் அடையாளங்கள் இல்லை.

ரத்தின சபாபதி விறுவிறுவென்று நடந்து போய்க் கொண்டிருந்தார். யாரும் பின்னால் தேடி வந்து விடுவார்களோ, இதோ தன்னைக் கூப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம் மாத்திரம் இருந்தது அவரிடம். நேர் ரோட்டில் போனவர் அங்கே தெருவோரம் படுத்திருக்கிற நாயைப் பார்த்தார். அவருக்கு பயமாய் இருந்தது. நாய்கள் உக்கிரமானவை. உர்ர் என அவை மெல்ல கோபத்துக்கு சுருதி சேர்க்கின்றன. அவற்றின் கண்களுக்கு ‘சூம் இன்’ ஆகிறாற் போல நாம் அவற்றை கிட்டே நெருங்க நெருங்க அவை சுருதி பெருக்கி மைக் ஆன் செய்தாற் போல ஆவேசம் பெறுகின்றன. நாய் துரத்தினால் அவருக்கு ஓடக் கூட தெரியாது. கடகடவென்று எந்தக் காரியமும் ஆற்ற அவர் லாயக் இல்லை. சும்மா இருக்கையில் வேகாக நடப்பார். வேகமாக நடக்கச் சொன்னால் நின்று விடுவார் திகைத்து.

கண்மூடிக் கிடந்தது நாய். மெல்ல அடிமேல் அடி வைத்து பூமிக்கே தெரியாமல் தெருவின் மறு பக்கம் நடந்தார். நெஞ்சு படபடத்தது. நாய் சட்டென தலை தூக்கி யிருந்தால் பொத்தென அங்கேயே விழுந்திருப்பார். அந்த பயத்துக்கு கடவுளிடம் பிரார்த்தனை செய்யக் கூட அவருக்குத் தெரியாது.

நாயைத் தாண்டிவிட்டதை அறிந்ததும் திரும்ப பாதுகாப்பாக உணர்ந்தார். அடுத்த சந்தில் டிரான்ஸ்பாரம் இருந்தது. அந்தப் பக்கமாகத் திரும்பி விட்டார். நாயைப் போல அந்த டிரான்ஸ்பாரமும் உர்ர் என்று உருமிக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு அவர் பயப்படத் தேவை இல்லை. நல்ல வெயில். அவர் கிளம்பிய அவசரத்துக்குக் காலில் செருப்பு அணிந்துகொண்டு வரவில்லை. செருப்பு அவர் நினைவிலேயே இல்லை. பாதம் சுட்டது. ஸ் ஸ், என காலை எட்டு வைத்து நடந்தார். சிறு நிழல் கண்டால் ஆசுவாசம் வந்தது. ஆனால் நிற்காமல் தொடர்ந்து நடந்தார்.

மேல் சட்டையும் இல்லை. கையில் பணமுங் கிடையாது. பணம் இருந்தாலும் செலவு பண்ணத் தெரியாது. தனக்கு இது வேண்டும், என்று சொல்லத் தெரியாது. எந்த உத்தேசமும் அற்ற நடை. லேசான காற்று அவரது மார்பு முடிகளைச் சிலிர்க்க வைத்தது. எத்தனை தூரம் இப்படியே போகப் போகிறார் அவருக்கே தெரியாது. எந்தத் தெருவில் இறங்கி வந்தார், அவர் வசிக்கும் தெரு என்ன, எந்த நினைவும் அவரிடம் கிடையாது. அவருக்கு திரும்ப தன் வீட்டுக்குப் போக வழி தெரியாது. நம் வீட்டுக்கு இப்போது இடப்புறம் திரும்பிப் போக வேண்டுமா, வலப்புறமா எதுவுமே அவர் மனக் குறிப்பில் இல்லை.

திடீரென்று அப்படியே நின்றார். கால் சுட்டது. அவருக்குத் திகைப்பாகி விட்டது. நான் என்ன செய்கிறேன்? எங்கே போகிறேன்? ஏன் வீட்டை விட்டு வெளியேறினேன்? இப்படி யெல்லாம் யோசித்தார் என்பது அல்ல. அவர் கேள்விகள் அற்ற திகைப்புடன் இருந்தார். ஆனால் தான் பாதுகாப்பு அற்று இருப்பது போலத் தோன்றியது. சிறு பயம் வந்தது.

எதோ தர்காவில் இருந்து அந்நேரம் துஆ ஓதுவது சத்தமாய்க் கேட்டது. திடீரென்று பெருஞ் சத்தமாய் அது கேட்டபோது துணுக்குற்றார். சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தார். மசூதியை நோக்கி நடந்து போனார். சத்தம் வராமல் இருந்திருந்தால் அவர் அந்தப் பக்கம் போயிருக்க மாட்டார்.

“சாமி என்ன இங்க வந்திருக்கீங்க?” என்று ஒரு பாய் அவரைக் கேட்டார். தாடி வைத்த பாய். ஹஜ் போய் வந்திருப்பார் போல. ரத்தின சபாபதி பதில் பேசாமல் நின்றார். “எதுவும் திங்க வேணுமா?” என்று கேட்டார் அந்த பாய். அதற்கும் அவர் பேசாமல் நின்றபடி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். “சாமி வூட்டுக்குப் போங்க“ என்று அவர் கைகாட்டினார். அவர் கை வலது பக்கம் காட்டியது.

ரத்தின சபாபதி வலது தெருவில் நடக்கத் துவங்கினார். வலது தெருவில் போனால் தன் வீடு வந்துவிடும் என நம்பினாரா அவர்? சின்னச் சின்னத் தெருக்கள் தாண்டி இப்போது பெரிய சாலை வந்துவிட்டது. சின்னத் தெருவிலேயே அவரை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத பட்சம் பிரதான சாலையில் அத்தனை கூட்டத்தின் நடுவே யார் அவரைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்.

இடதும் வலதுமாக சைக்கிள்கள், கார்கள் என்று சாலை பரபரப்பாய் இருந்தது. நடைபாதையிலேயே நிறையக் கடைகள் இருந்தன. அதனால் மக்கள் நடைபாதையை விட்டு நடுத் தெருவில் இடித்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்ள். சாமான் வாங்கிய கனமான பைகளுடன் முகத்தில் அந்த பாரத்தின் இறுக்கத்துடன் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பரபரப்பும் அத்தனை கூட்டமும் அவருக்கு வேண்டி யிருந்திருக்கலாம். தனியே நடந்து போவதற்கு இது எத்தனையோ பரவாயில்லை, என அவர் நினைத்திருக்கலாம். அல்லது தன் வீட்டை எப்படியும் அடைந்தே தீர வேண்டும். நாம இப்பிடி கிளம்பி வந்தது தவறு என்கிற பயம் அவரை முட்டித் தள்ளி யிருக்கலாம். அவர் நடையில் வேகம் இருந்தது.

அடிக்கொரு தரம் பயம் எதாவது ஒரு ரூபத்தில் அவரைத் திகைக்க வைத்தது.

மேல் சட்டை இல்லாத உடம்பு சுட்டது. வியர்க்க ஆரம்பித்து விட்டது. இருந்த நடை வேகத்துக்கு மூச்சு திணற ஆரம்பித்து விட்டது. ஏன் இத்தனை வேகம், அவருக்கே தெரியாது. இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டும் தெரியவில்லை. வீடு வந்து விட்டால் நல்லது. ஆனால் வீடு எங்கே யிருக்கிறது? எப்படியும் வீட்டைத் திரும்பப் போய் எட்டிவிட வேண்டும். என் வீடு எங்கே, என்று யாரைக் கேட்பது? எப்படிக் கேட்பது?

மருட்சி மாத்திரமே அவரிடம் இருந்தது.

கால் வலிக்கிறாற் போல இருந்தது. சுற்றிலும் ஜனங்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதில் எங்கே உட்கார்வது? அந்தப் பிரதான சாலையில் மரங்களே இல்லை. எங்காவது பெரிய கட்டடம் அமைந்து அங்கே நிழல் இருந்தால் அந்த நிழலில் சிறு வியாபாரிள் கடை போட்டிருந்தார்கள். அல்லது அந்த நிழலில் வாசனங்ளை நிறுத்தி யிருந்தார்கள். இன்னும் சிறிது போனால் சம்பிரமமாய் மாடு ஒன்று உட்கார்ந்திருந்தது. அவர் அடைய நிழலே இல்லை.

கால் சுட்டது. இருந்த வெயிலுக்கு சட்டை இல்லாத உடம்பே சுட்டது. மண்டை கொதித்தது. திடீரென்று அவர் வாழ்க்கை துன்ப மயமாகி விட்டது. பெரும் பயமும் திகைப்பும் அவரை ஆட்கொண்டன. என்றாலும் அவர் நடையை நிறுத்தவில்லை. இப்படி எத்தனை நேரம், எவ்வளவு தூரம் நடந்து கொண்டே இருக்க முடியும் தெரியவில்லை. சிறு நிழல் இருந்தால் அவர் அப்படியே படுத்து விடவும் கூடும். தாகமாய் இருந்தது. அது அவரது சங்கடத்தை இன்னும் அதிகப் படுத்தியது. ஹா, என வாயைத் திறந்து மூச்சு விட்டார்.

•••

சாமுண்டிக்கு அவர் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியவிலலை. அதே தெருவில் ருக்மணி மாமி வீட்டு வாசலில் தபால் பெட்டி உண்டு. சிவப்பு சட்டென மனசில் தட்டும் நிறம். அதனால் பெரும்பாலும் மாமி வீட்டைத் தாண்டும்போது தபால் பெட்டியை ரத்தின சபாபதி பார்த்துவிட்டு அந்த வீட்டை ஒட்டிய தெருவில் திரும்புவார்.

வீட்டில்தானே, என்று சாமுண்டி நைட்டி அணிந்திருந்தாள். இவரைக் காணவில்லை என்றதும் சட்டென வெளியே இறங்கி யிருந்தால் அவரை எட்டிப் பிடித்திருக்க முடியும். மாமி அவசர அவசரமாக நைட்டியில் இருந்து புடவையை மாற்றிக் கொண்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே கிளம்புமுன் ரத்தின சபாபதி பக்கத்து வேறு சந்து வழியே திரும்பி யிருக்க வேண்டும். நெடிய சாலை காலியாய் கிடந்தது. ஈஸ்வரா, இப்போது என்ன செய்ய? இவரை எங்கே யென்று தேட புரியவில்லை.

அவருக்கே தன்னைப் போல வழி விசாரித்துக் கொண்டு வீடு வரத் தெரியாது. எங்காவது மலங்க மலங்க முழித்துக் கொண்டு நிற்பார். தெரிந்தவர் யாராவது கண்ணில் பட்டால் பிறகு அவரைக் கையைப் பிடித்து வீட்டில் கொண்டு வந்து விடுவார்கள். தெரியாதவர்களிடம் அவர் உதவி பெற முடியாது. ஓரு முறை அவர் காணாமல் போய் வீடு திரும்ப ஏழெட்டு மணி நேரம் ஆகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ளி யிருக்கும் பாவம். ராமசுப்பிரமணியன் அலுவலகம் விட்டு வந்து, பின் அவனும் அவனது சகாக்கள் இரண்டு மூன்று பேருமாய் ஆளுக்கு ஒரு திக்கில் பிரிந்து தேடி ஒரு பஸ் நிறுத்தத்தில் அவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டுபிடித்து கூட்டி வந்தார்கள். அன்றைக்கு சாமுண்டி அவரைத் திட்ட ஆரம்பிக்கு முன், “அம்மா முதல்ல அவருக்கு சாதம் போடு. அவர் சாப்பிட்டு எத்தனை நாழி ஆயிட்டது” என்று மகன் நினைவு படுத்தினான். அவசர அவசரமாக அவர் சாப்பிடுவதைப் பார்த்து அழுதான் அவன்.

எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் நாலு நாளைக்கு ஒரு தரம் அவருக்கு எப்படியோ கதவு திறந்திருப்பது தெரிந்து விடுகிறது. அது திறந்திருப்பதைப் பார்த்த ஜோரில் சவாரி விட அவருக்கு ஒரு பதட்டம் எப்படியோ வந்து விடுகிறது. அப்படி வெளியே என்னத்தைப் பார்த்து சுவாரஸ்யப் படுகிறாரோ தெரியவில்லை. அவர் சட்டைப் பையில் முகவரியோ, அலைபேசி எண்ணோ இருந்தாலாவது யார் பார்த்தாலும் தகவல் சொல்ல முடியும். எந்த சுய அடையாளங்ளும் இல்லாமல் தெருவோடு அதுவும் யாரிடமும் பேசாமல் போகிற நபரிடம் யார் என்ன கேட்பார்கள்?

•••

தெருவில் அவரை ஒருவன் வழி மறித்தான். “சாமி நீங்க இந்த ஏரியாதானா?” அவர் சட்டை யில்லாமல் இருந்ததால் அவனுக்கு அப்படியொரு நம்பிக்கை. அவர் பதில் சொல்லாமல் அவனையே பார்த்தார். “இந்த அட்ரஸ் எங்க இருக்கு சாமி?” என்று அவரிடம் ஒரு காகிதத்தை நீட்டினான் அவன். அவர் அவனுக்கு என்ன பதில் தர முடியும் தெரியவில்லை. “சாமிக்கு எழுதப் படிக்கத் தெரியாதா?” என்றபடி அவன் அவரைக் கடந்து போனான்.

இனியும் நடக்க முடியும் என்று தெம்பே இல்லை அவருக்கு. ரொம்ப தூரம் வந்திருப்பார் போல இருந்தது. அவர் வீடு எங்கே என்றே குழப்பமாய் இருந்தது. அவரிடம் அடையாளங்ளும் இல்லை. வார்த்தைளும் இல்லை. திடுதிப்பென்று அவர் நின்றார். அவர் தாண்டிச் செல்ல முடியாதபடி அந்தச் சந்தையில் சினை மாடு ஒன்று பெரு வயிறுடன் மறைத்து நின்றிருந்தது. சட்டென கொம்பு சிலுப்பி அவரை ஒரே முட்டு முட்டினால்… என அவருக்கு பயமாய் இருந்தது.

தெருவைப் பார்த்தால் தெருவை அடைத்துக் கொண்டு வாகனங்கள் சர்ர் சர்ரென்று விரைகின்றன. இப்போது என்ன செய்வது? மாட்டை எப்படித் தாண்டிப் போவது? அது சாத்தியமாகப் படவில்லை. சட்டென அந்த வாகன நெரிசலுக்கு ஊடே நீச்சல் அடிப்பது போல பாய்ந்தார் அவர். கிரீச் கிரீச்சென பிரேக்குகள் பிடித்த சத்தம். ஒரு இரு சக்கர வாகனம் அவரை மோதி முட்டித் தள்ளியது. பயத்துடன் அப்படியே நடுத் தெருவில் விழுந்தார். பயத்தில் அவரிடம் இருந்து எந்த சப்தமும் எழவில்லை. உடம்பு  கிடுகிடுவென்று நடுங்கியது. விழுந்த வேகத்தில் வேட்டி விலகி தொடைப் பக்கமெல்லாம் சூரியன் சுட்டது. அப்படியே எழுந்து நின்றார். அந்த வரிசையில் எல்லா வாகனங்ளும் நின்று விட்டன. அதைப் பார்த்தார். திடீரென்று அதைப் பயன்படுத்தி அவர் சாலையைக் கடந்து எதிர்ச் சாரிக்கு ஓடினார். தன்மீது மோதிய வாகனத்தைக் கூட அவர் பார்க்கவில்லை.

திரும்ப வாகனங்கள் நகர ஆரம்பித்தன. வாகனத்தின் எதோ பகுதி இடித்து அவரது முழங்கைப் பக்கம் சிராய்ப்பு கண்டு காயத்தில் இருந்து இரத்தம் வழிந்தது. அது அவருக்குத் தெரியாது. “சாமி என்ன காரியம் பண்ணிட்டீங்க?” என்று எதிர்ச் சாரியில் நுங்கு விற்றுக் கொண்டிருந்த பெண் ஒருத்தி எழுந்து வந்து அவர் கையைப் பிடித்து ஓரம் நகர்த்தினாள். “ஐயோ கைல ரத்தம்… படுபாவிப் பய இடிச்சிட்டானா?” என்றாள். தன் சேலையைக் கிழித்து அவருக்குக் காயம் துடைத்து கட்டு போட்டாள். அவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“எங்க சாமி வந்தீங்க?” என்று கேட்டாள் அவள். “யார் வூட்டு சாமியோ தெரியலயே?” என்றபடி அவள் அவரைப் பார்த்து “பதிநி குடிக்கறீங்களா?” என்று கேட்டாள். உண்மையில் அவரும் அந்த வெயிலுக்கு அந்த உபசரிப்பு தேவை என  உணர்ந்திருக்கலாம். ஒரு பனையோலையைக் குழிததுக் கட்டி அதில் பதனீர் ஊற்றி அவரிடம் நீட்டினாள். அவர் சட்டையே அணிந்திருக்கவில்லை. அவரிடம் பணம் இல்லை, என்று அவளுக்குத் தெரியும்.

பக்கத்து வீட்டுப் பிள்ளை ராகவன், காலையில் பரிட்சை அவனுக்கு. பள்ளிக்கூடம் அவனுக்கு அன்றைக்குப் பாதிநாள் தான். பள்ளி விட்டு ஆட்டோவில் அவன் திரும்பி வந்து கொண்டிருந்தவன், எதிர்ச்சாரியில் ரத்தின சபாபதியைப் பார்த்தான். “அன்க்கிள் வண்டியை நிறுத்துங்க” என்று கத்தி நிறுத்தச் சொன்னான். ஆட்டோவை நிறுத்தி விட்டு, தெருவைக் கடந்து ஓடிவந்தான்.

“தாத்தா, என்ன இங்க நிக்கறீங்க?” அவர் பையனைப் பார்த்தபடி நின்றார். அவனை அவர் அடையாளம் கண்டு கொண்டாரா தெரியவில்லை. ஆனால் இந்நேரம் அவர் சோர்வா யிருந்தார். “எங்களுக்குத் தெரிஞ்ச தாத்தாதான்” என்று ராகவன் நுங்குக்காரியிடம் சொன்னான். “தம்பி உனக்கு இவங்க வீடு தெரியுமா?” என்று கேட்டாள் அவள். “தெரியும்” என்று தலையாட்டினான் ராகவன். “தாத்தா, வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்…” என்று அவர் கையைப் பிடித்து இழுத்தான். அதற்கே காத்திருந்தாப் போல சமத்தாக சொன்னபடி கேட்டார் அவர்.

ஆட்டோவில் அவரையும் ஏற்றிக் கொண்டார்கள்.

வீடு பூட்டி யிருந்தது. சாமுண்டி வர அவர்கள் காத்திருந்தார்கள். மாமி ஐந்தாறு நிமிடங்ளில் அங்கே வந்து சேர்ந்தாள். தூரத்திலேயே அவர்கள் காத்திருப்பது தெரிந்தது. மாமி விறுவிறுவென்று வந்து கதவைத் திறந்தாள். “இவரை எங்கடா கண்டு பிடிச்சே? ரொம்ப தேங்ஸ்டா. நீ நன்னா யிருக்கணும்…” என்றபடியே மாமி கதவைத் திறந்தாள். “நான் ஊர் முழுக்க தேடிட்டு வரேன்…” என்றாள்.

“வரேன் மாமி” என்று ராகவன் தன் வீட்டுக்குப் போய் இறங்கிக் கொண்டான்.

எதுவுமே நடக்காத மாதிரி ரத்தின சபாபதி உள்ளே வந்து தன் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டார். உள்ளே வந்தாள் மாமி. அவர் கைக் கட்டைப் பார்த்துவிட்டு “ஐயோ என்னாச்சி உங்களுக்கு?” என்று பதறினாள். அவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். “நன்னா பட்ருக்கு. வெளிய போகாதீங்கன்னா கேட்டாதானே?... செப்டிக் ஆகாம இருக்கணுமே ஈஸ்வரா” என முனகினாள் மாமி. “இருங்க, வெந்நீர் வெச்சி துடைச்சி விடறேன்” என வெந்நீர் போட உள்ளே போனாள்.

மாமி கவனிக்கவில்லை. வாசல் கதவு திறந்திருந்தது.

மாமி ஒரு பாத்திரத்தில் வெந்நீர், ஈரத்துணி மற்றும் டெட்டாலுடன் வந்தபோது ரத்தின சபாபதி அறையில் இல்லை.

(அமுதசுரபி தீபாவளி மலர் 2021)