Thursday, April 21, 2016

தீ யி னா ற்  
சுட்ட மண்
எஸ். சங்கரநாராயணன்

உலகநாதன் ரொம்ப நிதானமான மனுசன். ஊர் எல்லையில் இன்றைக்கும் அவர் வடித்த பொம்மை, ஐயனார் உருவச்சிலை இருக்கிறது. அடேடே அந்தக் கண்களின் உக்கிரம், கையில் வீச்சரிவாள், ஒரே வீசு. எதிராளி தலை துண்டாத் தெறிச்சி விழும்… என்று பயமுறுத்துகிற அளவில் இருக்கும். இத்தனை நிதானமான மனுசன் வாலிபப் பிராயத்தில் வேகமும் பரபரப்புமாய் வளைய வந்திருப்பார் என்று தோன்றியது.
எல்லாம் அலையடங்கி இப்போது நிதானப் பட்டிருந்தது. அவர் ஞாபகமாய் இன்னும் ஊரில் எத்தனையோ சுடுமண் சிற்பங்கள். குதிரைகள். மான்கள். ஆடுகள். மாடுகள்… அவற்றின் வண்ணக் குழைவுகளே ஆச்சர்யப் படுத்தும். மேல்சட்டை போடாமல் ஆனால் முண்டாசு கட்டாமல் பார்க்க முடியாத கிராமத்து மனுசனுக்குள் ஒரு கலைஞன் இருந்து அவரை உசுப்பி ஆட்டுவித்துக் கொண்டிருந்தான் போலும். சிறு போகம் விளைய சாப்பாட்டுக் கவலை எதுவுங் கிடையாது. கோடையோவெனில் வாசல் வேப்ப மரத்தடிக் காற்றில் படுத்துக் கொண்டபடியே என்னமாச்சும் பாட்டு எடுப்பார். அந்தக் கால பாகவதர் பாட்டு. வெறும் கேள்வி ஞானம்தான். சுருளி எப்பவாவது வந்தால் மரக்காலைத் தட்ட தாளமும் சேர்ந்து கொள்ளும். தாளம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். அதைப் பத்தி என்ன? சந்தோசம் முக்கியம் இல்லியா?
மகனுக்குக் கல்யாணம் பண்ணினார். பேரனைப் பார்த்ததுக்கும் அதுக்கும் அவருக்கு சந்தோசம் தலைகால் புரியவில்லை. எப்பவும் பேரனைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அலைந்தார். பேரனை யாரும் ஒத்த வார்த்தை சொல்லிடப்டாது. கண்டமேனிக்குக் கோவம் வந்துரும் அவருக்கு. பேரனிடம் உயிரையே வைத்திருந்தார் அவர். அவனது சிறு நடை, பேச்சு, சிரிப்பு எல்லாமே அவருக்கு கன வேடிக்கையாய் இருந்தது. “பாட்டையாவுக்கு வாலிபம் திரும்பிட்டாப்ல இருக்குதே,” என்று ஊரில் கேலியடித்தார்கள். அதுவரை ஆலமரச் சருகுகளாய் உலர்ந்து உதிர்ந்த அவரது பொழுதுகள் அர்த்தமுள்ளதாக அலங்கரிக்கப் பட்டு விட்டாற் போலிருந்தது. உள்ளே சந்தோசம் நுரைத்துச் சுழித்தது.  பேரன் முகத்தில் அவர் தன் முகத்தைக் கண்டாரோ என்னமோ? யாராவது வீட்டுக்கு வந்த விருந்தாளி அவரிடம் போய் “யோவ் பரவால்லியே. பயபுள்ள உம்மமாதிரியே இருக்கான்…” என்றால் அவர் முகம்தான் எவ்வளவு மலர்ந்துவிடும். வாயில் யாரோ சர்க்கரையைக் கொட்டினாற்போல இருக்கும். கண்ணில் வரிகள் விரிந்து சுருங்கும். உலகமே மறந்து பேரனே உலகமாய்க் கழிந்தது காலம்.
இந்தப் பரந்த உலகத்தை நான் அவனுக்கு அறிமுகப்படுத்துவேன். “பார் இது மரம். இது காகம். காகம் எப்பிடிக் கத்தும்? கா… கா…” என்று ஆரம்பித்து பையன் வளர வளர கதைகள் சொன்னார். அவரிடம் இன்னும் இன்னுமாய்க் கதைகள் பெருகின. கற்பனையின் கரைகள் விரிந்து கொடுத்தன. பழைய கதைகள். புதிய கதைகள். பழைய கதைகளை இட்டுக்கட்டிய புதிய கதைகள். பழைய கதைகளில் புதிய திருப்பங்கள். புதிய முடிவுகள்… அந்த முடிவுகளை அவன் யூகிக்க முடியாத அளவில் அவர் தனக்குள் சுவாரஸ்யமாய் முடிச்சுகள் போட்டார். தாத்தாவின் உடல்சூடு அவனுக்கும் வேண்டியிருந்தது. வாய்விரிய ஆச்சர்யத்துடன் விரலைச் சப்பியபடி மூக்கு ஒழுகு அவன் கேட்டுக் கொண்டிருக்கிறபோது அவருக்கு உலகம் மறந்திருந்தது. உலகம் துச்சமாய் இருந்தது.
அப்பா ஒருநாள் அவனைத் தூக்கிப்போய் ஐயனாரைக் காண்பித்துத் தந்தார். “உங்க தாத்தா செஞ்சதுடா இது.” ஹா, என்றான் உலகநாதன். எத்தனை பெருசு இந்தச் சிலை! அந்தக் குதிரையே எத்தனை உயரம்… இதுல இந்த ஐயனாரு ஒரே தவ்வாத் தவ்வி எப்பிடி உக்காந்தாரு? ஐயனார் பெரிய ஆளாத்தான் இருக்கணும். “ஆமா. பெரிய ஆள்தான். அவரு ஊருக்கே காவல் தெய்வம்லா…” என்றார் அப்பா. “இன்னிக்குங்கூட ராத்திரில மக்கா, எப்பவாச்சும் பத்து பனிரெண்டு மணி வாக்குல ஒண்ணுக்கு நெருக்கிச்சின்னா என்னியவோ உங்க தாத்தாவையோ எளுப்பித்தான் வாசலுக்கு வரோணும். கேட்டியாடே?”
“ஏன் அப்பிடி?” என்றான் உலகநாதன்.
“ராத்திரிக்கு ஐயனாரு இந்தக் குதிரைல டக்டக்னு ஊருக்குள்ள உலா வருவாராக்கும். நான் வீட்டுக்குள்ளாற படுத்துக் கிடக்கறப்ப முழிப்பு வந்தா ஐயனாரு வர்றதைக் கேட்டிருக்கேன்…”
“பொய்யி.”
“நெசம்டா மவனே.”
பையனுக்கு உற்சாகமாகி விட்டது. “எய்யா இன்னிக்கு நான் உறக்கம் முழிக்கப் போறேன்… ஐயனாரு வருவாரா பாக்கட்டும்…” என்றான். “பாரு… பாரு.” அப்பா சிரிக்கிறார். அவருக்குத் தெரியாதா? எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் நம்ப சாமி (உலகநாதனை தாத்தா பேர் சொல்லி வீட்டில் யாரும் அழைப்பதில்லை.) ஒம்பது ஒம்பதரைக்கெல்லாம் சாமியாடிறாதா?
பயபுள்ள பரவால்ல. தைரியமான ஆள்த்தான். ஐயனாரோட அந்தக் கண்ணைப் பார்த்து பயந்துருவானோன்னு தான் காட்டிப் பாத்தது. யாரோட பேரன்… என்றிருந்தது. தாத்தா இன்றைக்கும் காடு கழனிக்கு ராத்திரி நேரம் போக நேர்ந்தால் தனியாகத்தான் போவார், வருவார். கையில் டார்ச் எதுவும் வைத்துக் கொள்ள மாட்டார். இந்த வயசிலும் ஒரு வேட்டைநாயின் கண்ணும் காதும் அவருக்கு வாயத்திருந்தன. இடுப்பு பின்பகுதியில் சிறு கத்தி எப்பவும் இருக்கும். இதுவரை அதை அவர் பயன்படுத்த நேர்ந்ததில்லை. நொங்கு வெட்டவும் பதனிக்கு மட்டையைத் தோது பண்ணணுவும் தொன்னை தைக்கவும் அதை வெளியே எடுத்துப் பார்த்திருக்கலாம்.
தாத்தா சொன்ன கதைகளில் உலகநாதனுக்கு அலிபாபா கதை ரொம்பப் பிடிக்கும். டக்டக் டக்டக். குதிரை போவதையும் வர்றதையும் தாத்தா அருமையாச் சொல்லுவார். அவனுக்கே சுயமாய்க் கற்பனைகள் இருந்தன. குதிரை மீதேறி அலிபாபா பறக்கிறது நம்ம ஐயனார் பறக்கறாப்ல இருக்கும். அவனுக்கு ஐயனார் தான் அலிபாபா. அவரும் ராத்தரி தானே ஊருக்குள்ள வாராரு? அவனின் நியாயங்கள் வேறானவை. யாருக்கும் தெரியாது. அவன் ஐயனாருக்கு அலிபாபான்னே பட்டப்பேர் வெச்சிட்டான். அப்பாவுடன் குளிக்க, வயல் வரப்பு பார்க்கன்னு அவன் வெளியே போனான். தாத்தா கூடப் போனால் தோளில் தூக்கிவைத்துப் போவார். “ஏல நான்தான் குதிரை. நீதான் ஐயனார்!” வேடிக்கை பார்த்தபடி போக ரொம்ப ஜாலியா இருக்கும். உயர உயரத்து மரக் கொப்புகளை ஒடித்துக்கொண்டே போகலாம். ஏ அப்பா நான் எவ்ள உயரம்னிருக்கும். ஆனால் கூட ஐயனார் நிக்காரே அந்த உயரம் வர முடியாது. இன்னாலும் சந்தோசத்துக்குக் குறைவில்லை. ஆனால் அப்பா கூட அதெல்லாம் நடக்காது. அப்பாவைத் தூக்க்ச்சொன்னா, “நடந்தது வந்தா வா. இல்லே இங்கியே கெட”ன்னுருவாரு.
ஊரைவிட்டு எந்த எல்லை தாண்டிப் போனாலும் ஐயனாரைக் கும்பிட்டுவிட்டு ஐயனாரைத் தாண்டித் தான் போகணும். ஊர் அமைப்பு அத்தகையது. பஸ்சு வரும் வழி அதுதான். எந்த தூரத்தில் இருந்தும் ஐயனாரைப் பார்த்தபடியே அவன் போவான். அப்பாவோ தாத்தாவோ என்னவாச்சிம் பேசிக்கொண்டே வருவார்கள். அவன் மனம் பாதி ஐயனாரிடமே இருக்கும். அலிபாபா… என்று கத்தி கையாட்டத் தோணும். அதிலும் அந்த அலிபாபா காட்டுக்குள்ள வந்து, குகை முன்னால நின்னுகிட்டு குகையைத் திறக்க ஒரு மந்திரம் சொல்வாம் பாரு. திறேந்திடு சீசேம்! அதைக் கேட்கக் கேட்க அவனுக்கு அத்தனை பரபரப்பாய் இருக்கும்.
தாத்தா அந்தக் கட்டத்தை ரொம்ப நல்லாச் சொல்வாரு. “குகைக் கதவு திறந்திச்சா. மக்கா அந்தக் காடே ஒரே வெளிச்சமாயிட்டு. உள்ள அவன் என்னென்னமோ வெச்சிருக்கான். தங்கம். வைரம். மாணிக்கம். மரகதம்… அத்தனையும் ஒண்ணு சேர்ந்தா மக்கா எத்தனை வெளிச்சம் இருக்கும் பாத்துக்க. மனுசன் நுழைய முடியாது. கண்ணே கூசிரும்ல…” அவனுக்கு அப்பவே கண் கூசுகிறாப் போல ஆயிட்டது.
இப்பவும் திருவிழாக் காலங்களில், வேண்டுதல் என்று தாத்தாவிடம் சுடுமண் சிற்பம் கேட்டு ஆள் வந்து போகிறது. உலகநாதன் மறுத்து விடுகிறார். “முன்னப் போல முடியலய்யா…” என்கிறார். “கைல நடுக்கம் வந்திட்டில்லா. சரியா வராது” என்று விடுகிறார். அப்படி கேட்டுவிட்டுப் போன நாட்களில் தாத்தா மனசில் தனது பழைய காலங்களை அசைபோடுவார். வெளியே சிறு வெளிச்சம் பூசிய முகம் அதைச் சொல்லும். ஆனால் பக்கத்தூர் அடுத்தூர் என்று எத்தனை சிற்பங்கள் செய்து அளித்த கை… எப்படி ஓய்வெடுத்துக் கொண்டது என்று அவருக்கே ஆச்சர்யம்.
ஆ பேரனிடம் மனம் திரும்பி விட்டது. என் கவன எல்லைகள் மாறிவிட்டன. என் உலகமே இவன் காலடி நிழலில் அடங்கி விட்டது. பிள்ளையா இது… கடவுள் ஐயா கடவுள். அவர் கண்கள் பனித்தன. எப்படி இத்தனை பாசம் வைத்தோம் அவருக்கே ஆச்சர்யம். கிழவி இறந்துபோனதும் அவர் யாருடனும் மனம் ஒட்டாமல் இருந்தார். பெத்த மகன், அவனிடம் கூட ஒட்டுதல் குறைந்துவிட்டது. மருமகள் முகத்தை இன்றுவரை நேராய் நிமிர்ந்து பார்த்தது இல்லை. ஏனோ சிறு தயக்கம். ஆனால் இந்தப் பயல், பேரப்பிள்ளை பிறந்த அந்த நாள்… ஆகாகா… அவர் வாழ்வில் பொன்னாள். மனம் மிதந்து கொக்கரித்தது. ஒரு இடத்தில் இருள் தாவ, மீண்டும் தன்னைப்போல வேறொரு காரணமாய் வெளிச்சம் புகுந்த கணங்கள். விடியலை அறிவிக்க கூரையேறித் தொண்டை விரைக்கக் கூவும் சேவலாய்த் தன்னை உணர்ந்தார். அவர் முகத்தின் மலர்ச்சி கண்டு மகனுக்கும் மருமகளுக்கும் சிரிப்பு.
பையனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிப்போய் அவரே கூட்டி வருவார். வெயில் கணக்கு உண்டு. சரியாக ஒரு நிமிடம் ரெண்டு நிமிடம் முன்னதாகவே பள்ளிக்கூட வாசலில் காத்திருப்பார். “தாத்தாவ்…” என ஓடிவரும் பயலிடம் கொடுக்காப்புளி என்று எதுனாச்சும் மடியில் இருந்து எடுத்து நீட்டுவார். உரிமையோடு யானை மேலே அம்பாரி போல அவன் அவர்தோளில் ஏறிக்கொள்வான். வயதாக ஆக அவன் உடம்பு அவரால் தூக்க முடியாத அளவு கனத்தது. அட அவருக்கும் வயதாகவில்லையா என்ன? ஆனாலும் இறங்கு என்று சொல்ல மனம் வராமல் தூக்கித் திரிவார். அவர்பையன் சைக்கிள் பழகியவன். கடைசிவரை தாத்தா சைக்கிளைத் தொடவே இல்லை. எத்தனை தூரத்துக்கும் நடைதான். பஸ்சே ரெண்டாம் பட்சம் தான். நடராஜா சர்விஸ், என்பார்கள் கிராமத்தில்.
“இறக்கி விடுங்க அவனை. பிளளையக் கெடுத்து வெச்சிட்டீரு…” என மகன் அவரைத் திட்டுவான். அவர் சிரிப்பாரே யொழிய பதில் எதுவும் சொல்லமாட்டார்.
சாதாரணமாகவே நம்ம உலகு அத்தனை ஆரோக்கியமாக இல்லை. பூச்சியரித்த நெற்பயிர் மாதிரி தான் இருப்பான். தலைமுடியே அடர்த்தியாய் இராமல் உள்மண்டை தெரிகிறாப் போல இருக்கும். கரப்பான் பூச்சி கீச்சி நக்கிட்டதோ என்னமோ. குச்சி முடிகள்.
ஊரெங்கும் காலரா வந்தது. பக்கத்தில் பக்கத்தில் என தாவி வந்து பரவியது காலரா. தாத்தா அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே பயந்தார். பிள்ளைகள் வயிற்றுப் போக்கு வந்து சுருண்டு சுருண்டு விழுந்தார்கள். நாலுநாள் அஞ்சுநாள் வயிற்று நோவு. ஆறாவது நாள் பிள்ளை உசிரை விட்டது. அத்தனைக்கு வெயில் போட்டு மனுசனை வாட்டி வதைத்தது. இளநீரை சீவிச் சீவி குடிக்க என நீட்டினார். மடி மீதே வைத்துக் கொண்டார் தாத்தா. ஆனாலும் உலகநாதனுக்குக் காய்ச்சல் கண்டது ஒருநாள்.
இரவும் பகலுமாய்த் தாத்தா அவன் பக்கத்திலேயே இருந்தார். உள்ளூர் மருத்துவச்சி பத்தாது என்று டவுன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு ஓடினார்கள். தாத்தாவின் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை. ஐயோ இவன் இவருக்காகவாவது பிழைக்க வேண்டுமே என்றிருந்தது. எந்தச் சாப்பாடும் உடம்பில் ஏறவே இல்லை. வயிற்றுப்போக்கு கடுமையாய் இருந்தது. உடம்பே மெலிந்து சருகாய் கரும்புச்சக்கையாய் ஆகிப்போனான். அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அந்த விலா எலும்புகளின் எடுப்பும் அடங்கலும், தாத்தா அவனைப் பார்த்து விம்மி விம்மி அழத் துவங்கினார். அவன் விழித்துக் கொண்டாலோ அழுத சாயலே இல்லாமல் “அட விடுறா. எல்லாம் சரியாப் போகும்டா என் தங்கக்காசு” என்று அவன் நெஞ்சை வருடிக் கொடுத்தார். எத்தனை எலும்புக் கூடாகிப் போனான்.
“தாத்தா ஒரு கதை சொல்லு.”
“என்ன கதை போ. கதைல்லா வேணா…”
“சொல்லு தாத்தா. திறந்திடு சீசேம்… அந்தக கதை…”
“இப்பவா?”
“ஏன்?”
“சரி” என்று தாத்தா அலிபாபாவின் திருடர்கள். அரண்மனையில் பிடிபட்ட அந்தப் பகுதியைச் சொன்னார். “ஒவ்வொரு பீப்பாய்க்குள்ளியும் ஒரு திருடன் பாத்துக்க. நல்லா சுடச்சட எண்ணெயைக் காச்சிக் காச்சி ஊத்துனானுங்களா…”
“கீக்கீக்” என்று உலகு சிரித்தபோது இருமல் வந்தது. “வேணாண்டி தங்கம்” என்று தாத்தா அவன் நெஞ்சை உருவி விட்டார்.
மறுநாள் அவன் செத்துப்போனான்.
எத்தனை சோகமான நாட்கள் அவை. தாத்தாவின் உயிர் பிரிந்த நாள் அது. உலகமே இருண்ட நாள். தாத்தாவை சமாதானப் படுத்தவே முடியல்ல. தலைல தலைல அடிச்சிக்கிட்டு அழுதார். பிரமை பிடிச்சாப்ல சுணங்க அப்பிடியே திகைச்சி நிக்கிறார். அப்பிடி அவரு இடிஞ்சி போயி நின்னு ஊரே பாத்தது இல்லை. கிழவி செத்தப்ப கூட தாத்தா தைரியமாத்தான் தேத்திக்கிட்டார். சமாளிச்சிட்டார். இது… கண்ணு போயி கண்ணு வந்து திரும்ப கண்ணு போனாப்ல இல்லியாவே ஆயிட்டது. ஆண்டவன் குடுக்குறாப்ல குடுத்து இப்ப கையை இளுத்துக்கிட்டானே.
படுத்தால் படுத்த கிடக்கை. சோறு தண்ணி எடுக்காமல் அப்படியே கிடந்தார். யார் சொல்லியும் கேக்கல. யாராலும் அவரை சமாதானப் படுத்த முடியல்ல. அவர் மனசு அடங்கறாப்ல இல்ல. “மனுசன்னா கஷ்டம் வாரதுதான். எய்யா நாங்களே பெத்த பிள்ளையப் பறி கொடுத்திட்டு நிக்கம். நீரு வேற இப்பிடி சோறெடுக்காம, உறங்காமக் கொள்ளாம உடம்பைப் போட்டு வருத்திக்கிட்டா நாங்க என்னா செய்யிறது? நாம வாங்கி வந்த வரம் அப்டின்னுதான் நினைச்சித் தேத்திக்கணும்… எழும்புங்கய்யா. ஒரு வாய் தேத்தண்ணி குடிப்பீங்க…” என்று மகன் ரொம்ப வற்புறுத்தினான்.
அவனைப் பாக்கவும் பாவமாத்தான் கெடக்கு. தாத்தாவை அவன் எத்தனை மட்டு மருவாதியா நடத்துறான். தினசரி அவர் செலவுக்காசு – ஒரு பொடிமட்டை. டீக்காசு. கூட ரெண்டு பேரோட டீ சாப்பிடலாம். வெத்தலை, ஒரு வாய்க் கசப்புன்னா தேவைப்படலாம்… என்று காசு கேட்டுத் தந்திட்டுத்தான் வெலைக்கே வெளிய இறங்குவான். மருமகளிடம் கேட்க அவர் சுணங்கினார் என்று தெரிந்து வைத்திருந்தான். சூட்சுமந் தெரிந்தாளுதான். பையன் அத்தனைக்குச் சொன்னானேன்னு எழுந்து பல் விளக்கி தேத்தண்ணி குடித்தார். மனசெல்லாம் பேரப் பிள்ளைதான். அவனை மாரோடு அள்ளி எடுத்து மண்ணுக்குள் வைத்ததை நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. இதை எப்படி மறக்க என்று திகைப்பாய் இருந்தது.
அன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். கிக்கிக் என்று சிரிப்பு. தூக்கிவாரிப் போட்டது. உலகு உட்கார்ந்து சிரி சிரியென்று சிரிக்கிறான். “ஏல என்னாச்சி, இப்பிடிச் சிரிக்கே?” “அந்த அலிபாபா கதை…” என்கிறான் உலகு. அதற்குள் விழிப்பு வந்துவிட்டது. கோட்டிக்காரப் பய. சாகுற வயசாடே இது உனக்கு… நினைக்கவே அழுகை வந்தது. எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தார். மகனும் மருமகளும் இன்னும் துட்டிக்கு வந்தவர்களும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். திடுதிப்னு என்ன அலிபாபா கதை ஞாபகம். உலகு என்னவோ சொல்ல வந்தாப்ல இருந்தது. அதற்குள் விழிப்பு வந்துட்டது.
கதையிலேயே அவனுக்குப் பிடித்தமான இடம். அந்த குகை திறப்பதுதான். ‘திறந்திடு சீசேம்!... குகை திறந்தால்… என்ன வெளிச்சம்! என்ன வெளிச்சம்!” என்பார். அத்தனை ரசிப்பான் அவன்.
மறுநாள் காலை வீட்டில் எலலாரும் விழித்துக் கொண்டபோது எல்லாரும் ஓர் ஆச்சர்யமான காட்சியைப் பார்த்தார்கள்.
சக்கரம் சுற்றிக் கொண்டிருந்தது.
கிழவன் மண் குழைத்துக் கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்திருந்தான். அவன் கையில் நடுக்கம் இல்லை. எப்படித்தான் அந்தப் பழைய வேகத்தை எட்டினானோ… என்ன பொம்மை  வரப் போகிறதோ… என்று எல்லாரும் பார்த்திருந்தார்கள். காத்திருந்தார்கள்.
கிழவனோ யாரையும் கவனிக்கவே இல்லை.
*

 91 97899 87842 - storysankar@gmail.com

Sunday, April 17, 2016

வண்ணச்சீரடி

எஸ். சங்கரநாராயணன்
 னந்தி இப்போது நடக்க ஆரம்பித்திருந்தது. வீட்டு வராந்தாவில் நடைவண்டி வைத்து அதை நடத்தினால் என்ன வேகம். வேகம் அதிகரிக்க அதிகரிக்க நடை தறிகெட்டு ஒரு ஓட்டம். ‘பாத்து. மெதுவா மெதுவா’ என்று பிடிக்க வந்தால் கையைத் தட்டிவிட்டு விடுகிறது.
அந்த விளையாட்டுக்கு அம்மா ஐஸ்வண்டி என்று பேர் சொல்லிக் கொடுத்திருந்தாள். ‘ஸ்’ என்று உயரத்தில் வைத்திருக்கும் நடைவண்டியைக் காட்டும் அது. தடதடவென்று தொடையெல்லாம் அதிர ஒரு நடை, நடையோட்டமாகி, நேரேபோய் சுவரில் டமாரென்று முட்டி, வண்டியைத் திரும்ப இழுக்கத் தெரியாமல் நிற்கும். வண்டியைத் திரும்ப இழுத்தால் டப்பென்று தரையில் உட்காரும். தானே எழுந்துகொள்வதாக வண்டியைப் பிடிக்க, வண்டி அதன்மேல் கவிழும்.
அவள் குழந்டிதயைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அவளிடம் பாராட்டை எதிர்பார்த்தது அது.  தவறி விழுந்தால் கூட சிரிக்க வேண்டும் என்றால் எப்படி? என்ன ஒரு அராஜக ராஜாங்கம் நடத்துகிறது, என்று ஆச்சர்யமாய் இருக்கும் அவளுக்கு.
நன்றாக ஓடிச்சாடும் வயது. இந்நேரம் சாப்பாடு விஷயத்தில் நாம் சரியாக ஈடு கொடுக்க வேண்டாமா?... என்று கவலையாய் இருக்கும். ஃபேரக்ஸ் ஆரம்பித்திருந்தாள். பருப்பை மையாய்ப் பிசைந்து நெய்யூற்றி கைபொறுக்கும் சூட்டில் ஊட்டினாள். காரட் மாதிரி மென்மையான காய்கனிகள் சேர்த்துக் கொண்டாள். காரம் அதிகம் இல்லாதபடி கொஞ்சம் ரசத்தெளிவு. எல்லாம் சனி ஞாயிறுகளில் மாத்திரமே வாய்க்கிறது பாவம். மற்ற நாட்களில் ஹாட்பேக் இட்லிதான் என் கண்மணிக்கு. அதையும் அது துப்பத் துப்ப போக்கு காட்டி ஊட்ட வேண்டும். நாலு திசைகளிலும் அதை கவனப்படுத்தி சுவாரஸ்யப்படுத்தி, ராத்திரிப்போது என்றால் நிலா காட்டி, உம்பாய் காட்டி… குனிய நிமிர முதுகு கடுத்து மூச்சு விட்டுப்போகிறது. அப்போதுதான் வயிற்றை நிரப்ப முடியும். வயிற்றை அமுக்கிப் பார்த்து (குழந்தை கண் வரியோட கூச்சத்தில் சிரிக்கும்.) வயிறு நிறைய எந்த ஆயா சோறூட்டுகிறாள்?
ஆனந்தி நல்லவேளை படுக்கையில் மூச்சா போவதை நிறுத்திவிட்டது. பாதிக் குழந்தைகளை ஆயா அப்படியே நீந்த விட்டிருப்பதை அவளே பார்த்திருக்கிறாள். அதைப்பற்றிக் கேட்க பயம். என் குழந்தையை ஒழுங்கா கவின்சிக்கோடி தாயே அது போதும், என்றுதான் மனதில் படுகிறது. இப்படி ஈரத்தில் விடுவது எத்தனை கிருமிகளை உற்பத்தி செய்யும், பரவச் செய்யும், என்று கூடவே கவலை வருகிறது. இதெல்லாம் பார்க்க சனியன் வேலையும் வேணாம், ஒண்ணும் வேணாம் என்று உதறியெறியத் துடிப்பாய் இருக்கிறது. எல்லாம் தக்கணத்து சிந்தனைகள். மறுநாள காலை வழக்கம் போல குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு ஓடி கிரீச் போக, குழந்தை அழ அழ, (அங்க பார் ஐஸ் வண்டி. ஐ சூப்பர்! இந்த ஆயா.) பஸ் பிடிக்க ஓடியாகிறது.
சில நாட்களில் அவள் கிரீச்சுக்கு வரும்போது ஆனந்தி தூங்கிக்கொண்டிருக்கும். தூங்கும் குழந்தைகள் அதிக கனமாய் இருக்கின்றன ஏனோ. தூங்கினாலும் திடீரென்று விசும்புவதும், வாயில் விரல் போட்டு சர்ர் சர்ரென்று சப்புவதுமாய் சலனப்படும். கூர்ந்து பார்த்தால் அதன் கண்ணுக்குள் ‘பாப்பா’ அசைவதைக் காணலாம். இதும் மனசுல என்ன நினைப்பு ஓடுது, அது என்ன கனவு காணுது என்று தெரிந்துகொள்ள ஆசையாய் இருக்கும் அவளுக்கு.
அப்போதுதான் தூங்கி எழுந்து கொண்டிருந்தது போலும். ஆனந்தி உற்சாகமாய் இருந்தது. ஜன்னல் பக்கம் எக்கி நின்றபடி ஜன்னலில் கன்னத்தை அழுத்தி வைத்துக்கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது.ஜன்னல் கம்பியின் ஈர ஜில்லிப்பு அதற்குப் பிடித்திருக்க வேண்டும். எத்தனை முறை அந்த ஜன்னலை நக்கிச் சுவைக்கிறதோ, என்ற கவலை வந்தது. இது எதைப் பார்க்கிறது என்று கவனித்தாள். காம்பவுண்டுச் சுவரின் அந்தப் பக்கம் வேலிக்குள் இருந்த பசுந்தழையை எட்டிப் பிடிக்க முயன்ற ஆட்டை கவனித்துக் கொண்டிருந்தது குழந்தை. முன்காலை உயர்த்தி நின்றபடி ஆடு குழையைக்


கடிக்க முயன்றது.
‘‘ஏய் பப்ளிமாஸ்!”
அம்மாவின் குரல் அதற்கு நன்றாகத் தெரியும். சட்டென்று சிரிப்புடன் அது திரும்பித் தேடியது. அம்மாவைக் கண்டதும் அது ஜன்னல் பக்கமிருந்தே விரலை நீட்டி “தூ…” என்று கை நீட்டியது.
“இரு வரேன்” என்று அவள் உள்ளே வந்தாள். குழந்தை ஜன்னலில் நிற்கையில் அது உயரம் கொடுத்திருப்பது தெரிந்தது.
அவள் குழந்தையுடன் வெளியே வந்தாள். வெளியே வந்த ஜோரில் அது அந்த ஆட்டை எட்டித் தொட முயன்றது. “ஏய் முட்டும் அது…” என்று அதைப் பின்னால் இழுத்தாள் அவள்.
இன்றைக்கு அலுவலகத்தில் வேலை  கொஞ்சம் அதிகம் தான். ஐந்து மணி பார்த்து அவள் எழுந்து கொண்டதில் மேனேஜருக்கு சிறு வருத்தம். “நான் போய் குழந்தையையும் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகணும் சார்” என்றாள் சித்ரா. “நல்ல சாக்கு கிடைச்சது உங்களுக்கு. ம். போங்க போங்க” என்றார் அவர். அவர் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி விட்டன. இந்தக் கவலைகள் அவருக்கு இல்லை.
அடடா க்ரீச்சிலேயே உட்கார்ந்து இதற்குத் தாய்ப்பால் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம் என்று பட்டது. குழந்தையின் வயிற்றை அமுக்கிப் பார்த்தாள். (கெக் கெக் என்று சிரிக்கிறது அது.) பசியாய் இல்லை. நல்லவேளை. தவிரவும் பசித்தால் அதுவே முந்தானைக்குள் முகத்தைத் தேய்த்து கேட்டு வாங்கிக் கொள்ளும்.
பஸ் நிறுத்தத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. ஆட்டோவும் டூ வீலர்களுமாய் இங்கே அங்கே என்று தெருவே பரபரத்துக் கிடந்தது. இடையே ஒரு நாய் அடிபடுகிறாப் போல ஓடியது. வண்டிகள் நெருங்கி வந்து பிரேக் போட்டதில் கிரீச் என்று பிரேக் பிடிக்கும் சத்தம். (கிரீஸ் இல்லை என்கிற சத்தம்.)
கூட்டம் பார்த்ததும் குழந்தை பரபரப்படைந்தது. அதன் மூச்சிலேயே ஒரு சுறுசுறுப்பு. எல்லாவற்றையும் ஒரு மலர்ச்சியேடு அது பார்த்தது. நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோவின் ஹாரனை அது அடிக்க முயன்றது. அதற்கு கை எட்டாத அளவில் தள்ளி நின்றுகொண்டாள் சித்ரா. அவளை எத்தி உந்தித் தள்ளி குழந்தை கீழே இறங்க முயன்றது.
“அஸ்ஸோ… அந்த மாமா அடிப்பா” என்று அவள் ஆட்டோ டிரைவரைக் காட்டினாள்.
சட்டென்று குழந்தை ஒரு விரைப்புடன் ஆட்டோ டிரைவரை நோட்டம் பார்த்தது. பின் திரும்பி இவளைப் பார்த்தது.
“கீய.”
“ஐய. கீழெல்லாம் ஒரே ஆய்” எனறாள் அவள். “அதோ அக்கா பார்.”
“க்கா.”
“ம்.”
பஸ் நிறுத்தத்தில் வேறொரு சிறுமி நின்றிருந்தாள்.
சிறுமி அவள் கைப்பையையே பார்த்தது. குழந்தையை விட சிறுமி படபடப்பாய் உணர்ந்தாள்.
கைக்குள் தட்டுப்பட்டது டியோடரன்டா பாப்பின்ஸ் ரோலா தெரியவில்லை. வெளியே எடுத்துப் பார்த்தாள். போலோ.
தா, என்று கை நீட்டியது குழந்தை.
சிறுமி குழந்தயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தை இடது கையை நீட்டியது. “அந்தக் கை” என்றாள் அம்மா. அந்தக் கைக்கு ஒரு போலோ கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு குழந்தை திரும்பவும் இடது கையை நீட்டியது. “அடிச் சமத்தே” என்று அம்மா சிரித்தாள். அதன் இடது கையில் இன்னொரு போலோ கொடுத்தாள். “ஒண்ணொண்ணாச் சாப்பிடணும்” என்றாள் அம்மா.
ஒன்றை வாயில் போட்டு சாப்பிட்டபடி குழந்தை சிறுமியைப் பார்த்தது. அதன் கண்ணைப் பார்த்தது. சட்டென்று அவசரமாய் இன்னொன்றையும் அது வாயில் போட்டுக் கொண்டது. சிறுமி முகத்தை மாற்றிக் கொண்டாள். இனி குழந்தையிடம் அவள் பார்க்க எதுவுமில்லை.
பஸ் நிறுத்தத்தில் கூட்டம் சேர்ந்துவிட்டது. வரும் பஸ்சே கூட்டமாய் வரும். இங்கே வேறு கூட்டம். என்ன செய்ய, எப்படி வீ5ட்டுக்குப் போய்ச் சேர,திகைப்பாய் இருந்தது. இந்தக் கூட்டத்தின் நடுவே ஒரு மாடு புகுந்து இடையே சுவாதீனமாய்க் கடந்தது. எல்லாரும் பதறி ஒதுங்கி வழிவிட்டார்கள். குழந்தை கை நீட்டி எக்கி அதன் கொம்பைப் பற்றி இழுக்க முயன்றது. மாடு தலையை இயல்பாய் ஈயை விரட்டும் முயற்சியிலோ என்னமோ இடப் பக்கமாய் ஒரு வீசு வீசியது. சட்டென்று பயந்து அம்மா குழந்தயை இழுத்துக் கொண்டாள்.
“பாத்தியா. உம்பாய் முட்டும் தொடப்டாது.”
“கீய” என்றது குழந்தை. வாயில் பெப்பர்மின்ட்டை அது நறுக்கென்று கடித்த சத்தம் கேட்டது. முழு வாயில் ஊற வைத்து சாறை உறிஞ்சும் பொறுமையை அது இழந்திருந்தது. என்ன இந்த அம்மா, நம்மை டபாய்க்க்கிறாள், என்று அஇதற்குத் தோன்றியதோ என்னவோ.
குறைந்தபட்சம் ஷேர் ஆட்டோ மாதிரி கிடைத்தால் நல்லது. ஓரளவுக்கு வசதியாய்ப் போகலாம். இந்த நெரிசலில் பஸ்சேறி குழந்தையுடன் அவள் நிற்க முடியாது. ஒருத்தியும் எழுந்துகொண்டு அவள்உட்கார என இடம் விட்டுத்தர மாட்டளுகள். ஆண்களாவது சிலர் இரக்கப் படுகிறார்கள். பெண்களோ எனோ இரக்கப் படுவதேயில்லை.
இவள் வழிக்கு வரமாட்டாள், என்கிறதாய் குழந்தை அம்மாவிடம் நம்பிக்கை இழந்தது. தானே கீழே இறங்க அது முன்பக்கமாகக் குனிந்தது. அம்மாவின் புடவை சரிந்து சேலை விலகியது. தோள்ப் பக்கம் புடவையை பிளவுசுக்குள் செருகியிருந்தாள். அவள் பின் போடவில்லை. சட்டென்று புடவை விலகி உருவிக்கொண்டு வெறும் ஜாக்கெட்டும் தோள்களும் தெரிந்தன. “எய் அம்மா அப்றம் அடிப்பேன்” என்று அம்மா திரும்ப குழந்தையை மேலேற்றிக்கொண்டே திரும்ப புடவையை ஜாக்கெட்டுக்குள் சொருகிக்கொண்டாள்.
குழந்தை சுற்றுமுற்றம் பார்த்தது. யப்பா. எத்தனை கூட்டம். இவர்கள் அத்தனை பேரையும் ஒருசேரப் பார்க்க அதற்கு சந்தோஷம் கிறுகிறுவென்று போதையேறியது.
யாரோ ஒரு சிறுவன் சைக்கிளில் குரங்குப் பெடல் போட்டபடி மணியை கிணுங் கிணுங்கென அடித்தபடியே போனான். குழந்தை அந்த ஒலியால் உற்சாகப்பட்டு சைக்கிள் போவதையே பார்த்தது. அது அம்மாவைப் பார்த்தபடியே “ஸ்” என்றது.
“ஆமாண்டி குஞ்சலம்” என்றாள் அம்மா.
பஸ் நிறுத்தத்தில் இளைஞன் ஒருவன் குழந்தை அவனைக் கைகாட்டி அம்மா முகத்தைத் திருப்பி “ஜ” என்றது. அம்மா திரும்பிப் பார்த்தாள். பின் குழந்தை முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். “ஐய அது ராஜா மாமா இல்லடி.”
நல்லவேளை. ஷேர் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
வீடுவரை அந்த ஆட்டோ  வருவதில்லை. திருமண  மண்டபத்தோடு ஆட்களை இறக்கி விட்டுவிட்டுத் திரும்பி விடுகிறது. சிறிது தூரம் அவள் உள்ளே நடக்க வேண்டியிருந்தது.
அவள் ஆட்டோவில் இருந்து இறங்கினாள்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்தாள். ஒருபக்கம் கைப்பை. உள்ளே டிஃபன் பாக்ஸ்,விகடன். குழந்தையின் சிறு தேவைகளுடன் கர்ப்பமான பசு வயிறாய் கூடவே தனிப் பை ஒன்று. கூடவே குழந்தை. நடக்க சிரமமாய் இருந்தது.
தெரு நடமாட்டம் இல்லாமல் காலியாய் அமைதியாய்க் கிடந்தது. இரவு துவங்கிய வேளை. வெயில் மஞ்சளோடு தெருவில் சோடிய விளக்குகளின் மஞ்சள் பூச்சு வேறு.
கை வலித்தது. முன்னே குனிந்து குழந்தயை இறக்கியவாறே “கீய” என்றாள்.

“நானாம்“ என்றது குழந்தை. திமிறி விரைத்து அவளோடு சாய்ந்துகொண்டது.
* *
91 97899 87842 storysankar@gmail.com