Sunday, February 24, 2019

உவகச் சிறுகதை / ஜப்பான்
நன்றி - மகாகாவி ஜனவரி 2019 இதழ்

ஜே

யாசுனாரி கவாபாட்டா
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

வைகறைப் பொழுதில் இருந்தே ஜே உரக்கப் பாட ஆரம்பித்திருந்தது.
மழைத் தடுப்பான கதவுகளை அவர்கள் ஒதுக்கித் திறந்தார்கள். பைன் மரத்தின் கீழ்க் கிளையில் இருந்து மேலெழுந்து அது பறந்ததை எல்லாரும் பார்த்தார்கள். ஆக அது திரும்பி வந்திருந்த மாதிரிதான் பட்டது. காலை உணவுவேளையின் போது அதன் சிறகடிப்பு கேட்டது.
“ஐய அந்தப் பறவை ஒரு இம்சை.” தம்பி எழுந்துகொண்டபடியே சொன்னான்.
“சரிடா சரிடா” என அப்பத்தா அவனை அடக்கினாள். “அது தன் குஞ்சைத் தேடுதுடா. நேத்து அதன் குஞ்சு கூட்டில் இருந்து கீழ விழுந்திட்டது போல. நேத்தி அந்தி சாயறவரை அது இங்கிட்டும் அங்கிட்டுமா பறந்துக்கிட்டே யிருந்தது. குஞ்சு எங்கன்னு அது இன்னும் கண்டுபிடிக்கலையோ என்னவோ? ச். என்ன நல்ல அம்மா அது, இல்லே? காலை வெளிச்சம் வந்த ஜோரில் திரும்ப என்ன ஏதுன்னு பாக்க வந்திருக்கு.”
“அப்பத்தா அழகா எல்லாம் புரிஞ்சிக்கறா” என்றாள் யோஷிகோ.
அப்பத்தாவின் கண்கள் ஒண்ணும் தரமில்லை. ஒரு பத்து வருசம் முன்னாடி அவள் ‘நெஃப்ரைட்டிஸ் ஒன்’ வந்து சிரமப்பட்டாள். அதைத் தவிர, அவளுக்கு உடம்புக்கு வந்ததே கிடையாது. என்றாலும் பள்ளிச்சிறுமியாய் இருந்த காலத்தில் இருந்தே அவளுக்கு கேடராக்ட், கண்புரை இருந்தது. மங்கல் மசங்கலாய்த் தான் அவளது இடது கண்ணில் பார்வை இருந்தது. இப்போது சாதக் கிண்ணத்தையும் சாப்ஸ்டிக்குகளையும் யாராவது அவளுக்குக் கையில் எடுத்துத் தர வேண்டி யிருக்கிறது. வீட்டுக்குள் பழகிய இடங்களில் அவள் சகஜப்பட்டாள் என்றாலும் தோட்டத்துக்குத் தனியே அவளால் போக இயலாது.
வெளியே பார்க்கிற கண்ணாடித் தள்ளு கதவுகள் பக்கமாக சில சமயம் அவள் வந்து உட்கார்வாள். அல்லது நின்றுகொண்டே கூட சன்னல் வழியே வரும் சூரியக் கதிர்களை விரல்களால் தள்ளினாப் போல அசைத்தபடியே வெளியை வேடிக்கை பார்ப்பாள். இங்கே அங்கே என்று பார்வையை ஓட்டியபடியே அப்படி வெறித்துப் பார்ப்பதே மொத்த வாழ்க்கைக்குமாகவும் இனி இருக்கிற பொழுதுக்குமாகவும் அவள் கைக்கொண்டாள்.
அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் யோஷிகோவுக்கு அப்பத்தாவையிட்டு பயமாய் இருக்கும். அப்பத்தாவின் பின்பக்கம் போய் அவளைக் கூப்பிட உந்தப் படுவாள். என்றாலும் சந்தடி செய்யாமல் நழுவி விடுவாள்.
கிட்டத்தட்ட பார்வை இல்லாத அப்பத்தாதான், ஜே பறவையின் குரலைக் கேட்டவள், அதன் நிலைமையை நேரிலேயே பாத்தாப்போலப் பேசுகிறாள். யோஷிகோவுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
காலை உணவு முடிந்து பண்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது ஜே பக்கத்து வீட்டுக் கூரையில் இருந்து கூவல் எடுத்தது.
புழக்கடைத் தோட்டத்தில் ஒரு வாத மரம் இருந்தது. ரெண்டு மூணு பெர்சிம்மன் மரங்களும். அந்த மரங்களை அவள் பார்த்தாள். ரொம்ப மெல்லிய சாறல், மரத்தின் அடர்த்தி இல்லாமல் தனியே அதைப் பார்த்தால் மழை பெய்வதே கண்ணில் படாது.
ஜே வாத மரத்துக்கு மாறிக் கொண்டது. பிறகு தாழ இறங்கி ஒரு சுற்று பறந்து விட்டு திரும்ப கிளைக்குப் போனது பாடிக் கொண்டே.
தாய்ப் பறவை, அதன் குஞ்சு இந்தப் பக்கம் தான் எங்கோ இருக்கிறது என்பதால் அதனால் அங்கேயிருந்து போக முடியவில்லையோ?
அவளுக்குக் கவலையாய் இருந்தது. யோஷிகோ தன் அறைக்குப் போனாள். காலைக்குள் அவள் தயாராக வேண்டும்.
கண்ணாடி முன்னால் போய் அமர்ந்தபடி அவள் விரல் நகங்களை, நகங்களில் வெள்ளைத் திட்டுகளாய்ப் பூ விழுந்திருந்ததைப் பார்த்தாள். நகங்களில் பூ விழுந்தால், எதும் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அவள் செய்தித்தாளில் வாசித்திருக்கிறாள். அது வைட்டமின் ‘சி’யோ எதுவோ, குறைந்தால் அப்படி பூ விழுகிறது. ஓரளவு திருப்தியாகவே அவள் அலங்காரம் செய்து கொண்டாள். அவளது புருவங்களும் அதரங்களும் மகா கவர்ச்சிகரமாக ஆகியிருந்தன. அடடா அந்த கிமோனோ, அதுவும் அட்டகாசம்.
அம்மா வந்து அவளுக்கு உடை உடுத்த உதவ வரட்டும் என காத்திருக்கலாம் என்றுதான் நினைத்தாள். பிறகு காத்திருப்பானேன், நல்லது. நானே உடுத்திக்கறேன், என முடிவு செய்துகொண்டாள்.
அவங்க அப்பா அவர்களை விட்டு தனியே வாழ்ந்து வந்தார். இப்போது அப்பாவுடன் இருப்பது அவர்களுடைய சின்னம்மா.
அப்பா முதல்மனைவியை, அவர்களின் அம்மாவை விவாகரத்து செய்தபோது யோஷிகோவுக்கு வயது நாலு. தம்பிக்கு ரெண்டு. அப்பா அவளை விவாகரத்து ஏன் செய்தார், என்ன காரணம்? அம்மா வெளியே போகையில் பளபளவென்று உடையணிந்து பகட்டு காட்டினாள் என்றும், ஊதாரி என்றும் காரணம் சொன்னார்கள். ஆனால் யோஷிகோவுக்கு யூகம் வேறு மாதிரி இருந்தது. காரணம் அதைவிடப் பெரியது. அதைவிட ஆழமானது, என்றிருந்தது.
தம்பிக்காரன் குழந்தையாய் இருந்தபோது அம்மாவின் ஒரு புகைப்படத்தைக் கண்டெடுத்தான். அதைக் கொண்டுவந்து அப்பாவிடம் காட்டினான். அப்பா வாயே திறக்கவில்லை, என்றாலும் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அந்தப் படத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுவிட்டார்.
யோஷிகோவுக்கு பதிமூணு வயசாகையில், புது அம்மாவை அவள் வீட்டுக்கு வரவேற்றாள். பின்னாட்களில் அவள் நினைத்துக் கொண்டாள், எனக்காகத் தான் இந்தப் பத்து வருடங்களாக அப்பா மறுமணம் முடிக்காமல் தனிமை காத்தார். சின்னம்மா நல்ல மனுசிதான். இல்லத்தில் அமைதி எந்த அளவிலும் பங்கப் படாமல் தொடர்ந்தது.
தம்பி மேல்நிலைப் பள்ளிப் படிப்பு என்கிற இளவாலிப வயசுக்கு வளர்ந்தான். ஒரு விடுதியில் வெளியே தங்க வேண்டியதானது. அப்புறந்தான் சின்னம்மாவையிட்டு அவனது பார்வை குறிப்பிடத் தக்க அளவில் மாற ஆரம்பித்திருந்தது.
“அக்கா, நான் நம்ம அம்மாவைப் பாத்தேன். அவளுக்கு இன்னோரு கல்யாணம் ஆகி, இப்ப அசபுவில் இருக்கா. அக்கா, நம்ம அம்மா நிசமாவே ரொம்ப அழகு. என்னைப் பாத்ததுல அவளுக்கு ரொம்ப சந்தோசம்.”
திடீர்னு இதைக் கேட்டதும் அவளுக்குப் பேச வார்த்தையே வரவில்லை. முகம் வெளிறி உடம்பே ஆடிவிட்டது.
அடுத்த அறையில் இருந்து சின்னம்மா அங்கே வந்து உட்கார்ந்து கொண்டாள்.
“அது நல்ல விசயம், நல்ல விசயம். சொந்த அம்மாவை நீ போயிப் பாக்கறது, அது மோசமான விசயம் இல்லை. சகஜந்தான் அது. இந்த நாள் வரும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அதைப் பத்தி நான் ஒண்ணும் நினைக்கல்ல.”
அப்படி அவள் சொன்னாலும் அவள் சுரத்தே குறைந்துபோய் பலவீனமாய்த் தெரிந்தாள் இப்போது. யோஷிகோவுக்கு அவளைப் பார்க்க நொந்த நூலாய், தொட்டாலே மளுக்கென முறிகிற அளவில் இத்துப்போய்ச் சிறுத்துத் தெரிந்தாள்.
தம்பி சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டான். அட நாயே உன்னை அறைஞ்சா என்ன, என அவனைப் பற்றி யோஷிகோவுக்குக் கோபம் வந்தது.
“யோஷிகோ, அவனை எதுவும் சொல்லாதே. நீ பேசப் பேச அவன் இன்னும் மோசமாத் தான் ஆவான்” என்று தணிந்து சின்னம்மா சொன்னாள்.
யோஷிகோவின் கண்கள் தளும்பின.
அப்பாபோய் விடுதியில் இருந்து தம்பியைத் திரும்பக் கூட்டி வந்துவிட்டார். ஆக அத்தோடு அந்த விவகாரம் முடிந்துவிடும், என யோஷிகோ நினைத்தாள். ஆனால் அப்பா சின்னம்மாவைக் கூட்டிக்கொண்டு வேறு ஜாகைக்கு, அவர்களைப் பிரிந்து போய்விட்டார்.
அதில் ரொம்பவே பயந்துவிட்டாள் யோஷிகோ. ஆண்வர்க்கத்தின் கோபத்தினாலும் ஆத்திரத்தாலும் அவள் தானே நசுஙகிப் போன மாதிரி இருந்தது. எங்களுடைய அம்மாவுடனான எங்களின் பந்தம், அதனால் அப்பாவுக்கு எங்க மேலயே வெறுப்பாகி விட்டதா? வெடுக்கென்று எழுந்துபோன தம்பி, அவன் வீம்பும் கூட அப்பாவுடையது மாதிரி தான், என்று தோன்றியது.
ஆனாலும் அப்பாவின் அந்த சோகமயமான பத்து வருடங்கள், மணமுறிவுக்கும் மறுமணத்துக்கும் இடைப்பட்ட அந்த பத்து வருடத்தின் வலி, அதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆக, அவர்களை விட்டுவிட்டு தனியே போய்விட்ட அப்பா, அவளுக்கான ஒரு கல்யாண யோசனையுடன் திரும்ப வீட்டுக்கு வந்தார். யோஷிகோவுக்கு ஆச்சர்யம்.
“உன்னை ரொம்ப சிரமப் படுத்திட்டேம்மா. உன்னோட இப்பத்தைய சூழல் எல்லாம் மாப்ளையோட அம்மாகிட்டச் சொல்லியிருக்கேன். மருமகள்ன்றா மாதிரி இல்லாமல், அங்க போயி நீ உன்னோட பால்யகால சந்தோசங்களைத் திரும்ப அடையறா மாதிரி வெச்சிக்கணும்ன்னு அவகிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்.”
அப்பா இப்பிடிச் சொன்னபோது யோஷிகோவுக்கு அழுகையே வந்திட்டது.
யோஷிகோ கல்யாணம் ஆகிப் போயிட்டால், தம்பிக்கும் அப்பத்தாக்கும், அவர்களைப் பார்த்துக்கொள்ள அனுசரணையான பெண் துணை இல்லாமல் போகும். இனி ரெண்டு குடித்தனம் இல்லை, ஒண்ணுதான், என முடிவானது. அப்பா இங்கே வந்துவிட வேண்டும். பிறகு யோஷிகோ திருமணத்துக்குத் தலையசைத்தாள். அப்பாவைப் பார்த்து, அவள் கல்யாணம் என்றாலே கவலை தரும் விசயமாக நினைத்திருந்தாள். ஆனால் ஏற்பாடுகளும் பேச்சு வார்த்தைகளும் நிகழ நிகழ, கல்யாணத்தில் அத்தனைக்கு பயப்பட ஏதும் இல்லை என்று இருந்தது.
அலங்காரம் முடிந்ததும் யோஷிகோ அப்பத்தா அறைக்குப் போனாள்.
“அப்பத்தா இந்த கிமோனோவில் சிவப்பைப் பாத்தியா?”
“எதோ கலங்கலா சிவப்பு தெரியறாப்ல இருக்கு. என்னன்னு பாப்பம்” என அப்பத்தா அவளைத் தன்பக்கம் இழுத்தாள். கிமோனோவையும் அதன் நாடாக்களையும் கண் கிட்டத்தில் பார்த்தாள்.
“அடி யோஷிகோ, எனக்கு உன் முகமே மறந்து போச்சு. இப்ப உன் முகத்தைப் பார்க்க ஆசையாக் கெடக்கு எனக்கு.”
யோஷிகோ புன்னகைக்க முயன்றாள். மென்மையாய் அவள் அப்பத்தாவின் தலையை வருடினாள்.
வெளியே வந்து அப்பாவையும் வந்திருக்கிற மத்த ஆட்களையும் பார்க்கத் துடிப்பாய் இருந்தது அவளுக்கு. யாரும் இன்னும் வரவில்லை. உள்ளே அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இப்படி வெட்டியாய் எத்தனை நேரம் காத்திருக்கிறது? வெளியே தோட்டம் வரை போனாள். உள்ளங்கையை உயர்த்திக் காட்டினாள். ரொம்ப சன்னத் தூறல் தான். அவளது உள்ளங்கையே நனையவில்லை அந்த மழையில். தன் கிமோனோவை சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டு அந்தக் குற்று மரங்களூடே, மூங்கில் குத்துக்கு உள்ளே என யோஷிகோ துழாவித் தேடிப் பார்த்தாள். ஆ அதோ.. செழித்து உயர்தோங்கிய புல்லுக்கு உள்ளே… அந்தக் குஞ்சுப் பறவை.
அவளது இதயப் படபடப்பு அதிகமானது. மெல்ல ஊர்ந்தாப்போல அவள் நெருங்கினாள். குட்டி ஜே தனது தலையை கழுத்துப் பக்க இறகுகளுக்குள் புதைத்துக் கொண்டது. அதனிடம் அசைவே இல்லை. அதைக் கையில் எடுக்க முடிந்தது. அதன் உடம்பில் தெம்பே இல்லை போல் இருந்தது. யோஷிகோ சுற்றித் தேடிப் பார்த்தாள். எங்கே அந்த அம்மாப் பறவை. அதைக் காணவே இல்லை.
யோஷிகோ வீட்டுக்குள் ஓடி வந்து கத்தினாள். “அப்பத்தா, குஞ்சு ஜேயைக் கண்டுபிடிச்சிட்டேன். இதோ என் கையில. ரொம்ப சோர்வா இருக்கு அது.”
“ஓ அப்பிடியா? அதுக்குக் கொஞ்சம் தண்ணி குடு.”
அப்பத்தா ரொம்ப அமைதியாய் இருந்தாள்.
சாதக் கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணி ஊற்றி குட்டிப் பறவையின் மூக்கை அதில் அழுத்தியபோது அது நீரை அருந்தியது. அதன் தொண்டை விடைத்து பார்க்க அழகாய் இருந்தது. பிறகு, ம், அது தேறிவிட்டதா? அது இசைக்க ஆரம்பித்தது. “கி கி கி… கி கி கி.”
தாய்ப் பறவை சந்தேகம் இல்லாமல், குஞ்சின் குரலைச் செவி மடுத்து, எங்கிருந்தோ பறந்து வந்துவிட்டது. தொலைபேசி மின்கம்பியில் வந்து அமர்ந்தவண்ணம் அது இசைத்தது. குஞ்சுப் பறவை யோஷிகோவின் கைகளில் படபடத்தபடி அது மீண்டும் பாடியது. “கி கி கி.”
“அடாடா அம்மாக்காரி வந்திட்டது எத்தனை ஜோரான விசயம்! அதை அதோட அம்மாகிட்டயே ஒப்படைச்சிரு, ஜல்தி” என்றாள் அப்பத்தா.
யோஷிகோ திரும்ப வெளியே தோட்டத்துக்குப் போனாள். தாய் ஜே தொலைபேசி மின்கபியில் இருந்து கிளம்பி கூடவே சிறிது தள்ளியே பறந்து வந்தது. ஒரு செர்ரி மர உச்சியில் இருந்து அது யோஷிகோவையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
தன் உள்ளங் கையில் இருந்த குஞ்சு ஜேயை தாய் பார்க்க என்கிறாப் போல உயர்த்திக் காட்டிவிட்டு யோஷிகோ அதைத் தரையில் விட்டாள்.
உள்ளே வந்து கண்ணாடி வழியே வெளியே தோட்டத்தை யோஷிகோ பார்த்தாள். தன் குஞ்சுவின் ஆகாயம் பார்த்த மழலை இசையைக் கேட்டு அந்த வழியைப் பின்பற்றுகிறாப் போல தாய்ப் பறவை மெல்ல கிட்டே வந்தது. பக்கத்தில் இருந்த பைன் மரத்தின் ஆகத் தாழ்ந்த கிளைக்குத் தாய் வந்தது. குஞ்சு படபடவென்று தன் சிறகை அடித்தது. பறந்து அப்படியே தாயை எட்டிவிடுகிற துடிப்புடன். தட்டுத் தடுமாறி எழும்பி பொத்தென்று விழுந்தது குஞ்சு. கீச் கீச்சென்று அதன் இசை ஓயவில்லை.
தாய்ப் பறவை இன்னும் கூட எச்சரிக்கை காத்தது. இன்னும் கீழே இறங்கி குஞ்சின் அருகே நெருங்காமல் இருந்தது.
கொஞ்சநேரத்தில் அது தன்னைப்போல குஞ்சின் பக்கத்துக்குப் பறந்து வந்தது. குஞ்சின் சந்தோசத்துக்கு அளவே இல்லை. தலையை இப்படி அப்படி அது சிலுப்பிக் கொந்தளித்தது. பப்பரக்கா என விரிந்த ரெண்டு சிறகும் நடுங்கியது அதற்கு. தாயின் அருகே வந்தது. அம்மா, சந்தேகம் இல்லாமல், குஞ்சுக்கு என எதோ உணவு எடுத்து வந்திருந்தது.
அப்பாவும், சின்னம்மாவும் சீக்கிரம் வந்தால் தேவலை, என நினைத்தாள் யோஷிகோ. அவங்க இப்ப வந்தால், இந்தக் காட்சியைக் காட்டலாமாய் இருந்தது.
(ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில்
லேன் டன்லப் மற்றம் ஜே. மார்டின் ஹோல்மேன்.)
storysankar@gmail.com
91 97899 878421 - 91 944 501 6842Tuesday, February 19, 2019


உலகச் சிறுகதை

நடக்க முடியாத நிஜம்
சார்லஸ் மெய்கிவி (ஆஸ்திரேலியா)
தமிழில் - எஸ். சங்கரநாராயணன்

புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரே பானைப் பட்டணத்துக்கு என் எஃப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்குமுன்னமே அங்கே சிலர் கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும். அவனைக் கண்டுபிடித்தது நான்தான்.
      இப்ப மட்டுமல்ல எப்பவுமே அவன் நல்ல நண்பனாக யாருக்குமே அமைந்ததில்லை. நிதானமா இருந்தான்னா எரிச்சலூட்டுவான். குடிபோதையிலோ எதுக்கும் லாயக்கில்லாதவனாய் ஆகிப் போனான். சிரமதசையில்தான் வாழ்ந்தான் என்று தோணுகிறது. ஆனால் கஷ்டம் யாருக்குத்தான் இல்லை...
      புதன்கிழமை காலை, பதினேழாம் எண் காற்றாலைவரை நான் வாகனமெடுத்துப் போனேன். எங்கள் குடோனுக்குத் தேவையான தண்ணீர் சரியாக வந்து கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருந்தது. காற்றாலை அருகில் ஒரு இருநூறு மீட்டர் கிட்டத்தில் போயிருப்பேன். அதோ கார் ரேடியேட்டரின் குழாய் போல எதோ ஒன்று. எவருடைய காராவது வழியில் பிரேக்டெளன் ஆகி வில்லங்கப்பட்டிருப்பார்களோ... ஆ அது ஒரு நீண்ட கருத்த பல்லி. அப்படியே அந்த மட்டப்பாறைமேல் செத்தசவமாய்ச் சுருண்டு கிடக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு அது நிழலைவிட்டு வெளியே வந்து இப்படி மாட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அதுக்கே தெரிய வேண்டாமா?
      பக்கத்திலேயே நொந்து மெலிந்த சில கால்நடைகள் தள்ளாடி ஆலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. பட்டணத்தில் வாகனப்புகைபோல அப்போது புழுதி மேலெழுந்தது. அவை தண்ணித் தொட்டியை அடைந்து வாயை வைத்து அந்த வெந்நீரை வயிறார உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தன. சரியான தாகம் போல. களைத்திருந்த சில பட்சிகளும் கீழிறங்கி வந்தன. தாகசாந்தி பண்ணிக் கொண்டன. பின் மீண்டும் நிழல்தேடிப் பறந்து போயின. அறிவாளிப் பறவைகள். வெக்கையில் இருந்து தப்பிக்க அவை வழிவகை தேடின. மனிதனுக்கு இந்தளவு உஷார் கிடையாது. நானே வெந்துக்கிட்டிருந்தேன். மணி ஒன்பதரைதான் ஆகிறது...
      என் வண்டிக்குத் திரும்புகிறேன். மாட்டுக் கூட்டத்துள் தடுமாறியபடி ஒரு காளைமாடு முட்டிமோதி ஊடறுத்து வந்தது. ஒட்டலும் உரசலும் மறுத்தலும் முரண்டுதலும் இடித்து நகர்த்தலுமாய் ஒரே களேபரம். கொம்புச்சண்டையாகி ரகளையாகி விடுமோ என்றிருந்தது. ஆடி அசைந்து தள்ளாடி அவை தண்ணீர்த் தொட்டியை நெருங்கின. கால்பந்தாட்டம் முடிந்தபின் ரசிகர்கள் வளாகத்துக்குள் நுழைகிறதைப் போல அவை ஒருசேர தொட்டியை எட்ட முயன்றன. எதிர்பார்க்கவேயில்லை. தொட்டியின் துருப்பிடித்த இரும்புக் கால்கள் சட்டென நொறுங்கின. தோட்டதில் உட்காரும் பெரிய பெஞ்சை மடித்தாப் போல தொட்டி சரிந்தது. உள்ளேயிருந்த பழுப்புத் தண்ணீர் சரிந்து மண்தூசியில் குட்டையாய்த் தேங்கியது. காற்றாடி இன்னும் சுழன்று கொண்டிருந்ததால், உடைந்த தண்ணீர்க் குழாயில் இருந்து இன்னமும் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தேன்.
      சோனி மாடுகள் எல்லாம் அசந்துபோய் அந்தத் தரையை வெறித்தன. சட்டென்று விடுபட்டாப்போல அவை காலை உதறி தூசியெழுப்பி தெற்கு நோக்கி நடையிட்டன. எங்காவது நிழலோ தீவனமோ தேடி அவை புறப்பட்டிருக்கலாம்.
      என்னிடம் அந்தத் தொட்டியைச் சரிசெய்ய கருவிகள் இல்லை. அந்த சோலி காத்திருக்க வேண்டியதுதான். சுவரில் ஏறி அந்தக் குழாயை நேராக்கி வைத்தேன். இதாவது மேலும் சேதமடையாமல் மிஞ்சட்டும். அடுத்த வேலை இருந்தது. கிளம்பினேன்.
ரே பான் ஒண்ணு ஒண்ணரை குப்பி ரம் செவ்வாய் மாலையில் குடித்துத் தீர்த்திருந்தான். கீழ்ப்பக்கம்  முக்னித் நிலையத்தில் ரே பான்தான் பொறுப்பாளன். புதன் காலையில் கிடங்கின் கட்டாந்தரையில் அவன் படுத்துருண்டு கொண்டிருந்தான். அதிர்ஷ்டம்தான். அவன் கூரையடியில் இருந்தான். இல்லாட்டி அந்தக் கருத்த பல்லிபோல அவனும் வெயிலில் வெந்து விரைத்துத் துவண்டிருப்பான். குறட்டை. வாயிலிருந்து கெட்டியான கூழாய் வழியும் ஜொள்ளு.
      பிறகு அந்தக் காலைநேர உஷ்ணம் நாற்பதுக்கு எகிறியது. மனுசனால் பழக்கப்படாத ஒரு ஓட்டகமந்தை பதினேழாவது காற்றாலை நோக்கி நடையிட்டது. முள்ளுக்காட்டு வழி. துருப்பிடித்த காலித் தொட்டிதான் அவற்றுக்கு வாய்த்தது...
      பாலைவனப் பிராணிகள். தண்ணீரை அவை மோப்பம் பிடிக்க வல்லவை. ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை. கடும் தாகத்தில் அவை வந்திருக்கலாம். வெப்பசூழலில் ஒட்டகங்கள் பத்து பன்னிரெண்டு நாளுக்கொருதரம் தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் பாலைவனத்தின் சுதந்திரமான இந்தப் பிராணிகள் மேலதிக நாள்கூட தாக்குப் பிடித்து வந்திருக்கலாம்.
      அடுத்து தண்ணீர் கிடைக்கிற இடம் என்றால் பக்கத்தில் பொறுப்பாளன் வீடு, பதினோரு கிலோமீட்டர் தூரத்தில். உண்ணியேறிய அந்தப் பிராணிகள் சாவதானமாக ரே பானின் கீழ்ப்பக்கக் குடியிருப்பு நோக்கி வாகனத்தடத்தைப் பார்த்துக் கிளம்பின. அப்புறமாய் நான் அந்த மூன்றுகுளம்பு பாதத் தடங்களை கவனித்தபோது நினைத்தேன். இருபதும் அதற்கதிகமாகவும் ஒட்டகங்கள் வந்திருக்கலாம். வரைபடமோ தெருவில் வழிகாட்டும் அடையாளங்களோ இல்லாமல் அவை போகுமிடம் அறிந்தவை. தேவை தண்ணீர். அந்த அவசரமே அவற்றுக்கு வழி காட்டிப் போக வல்லதாய் இருக்கலாம்... நீங்கள் இதை மறுக்கலாம்!
      குடிபோதைத் தூக்கத்தில் இருந்து ரே பான் கண் விழித்தான். எப்பிடியோ எழுந்து உட்கார்ந்து விட்டான். வியர்வை பெருகி சட்டையே நனைந்திருந்தது. முகத்தில் கண்களில் உதடுகளில் என்று டஜன் கணக்கில் ஈக்கள் வந்து மொய்த்தன. தகரக்கூரையில் இருந்து வெல்டிங் செய்கிறாப் போல வெப்பம் இறங்கிக் கொண்டிருந்தது. உலர்ந்துபோன எலும்புத் துண்டாய் அவன் தொண்டையே வறண்டுகிடந்தது.
      மூலையில் சில பெட்டிகள். அவற்றில் சில வாகனஉதிரி பாகங்கள், சமையலறையில் கழுவ உதவும் உபகரணங்கள், மற்றும் கொண்டுவரப்பட்ட சில சாமான்களும் சுவரோரம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அந்தப் பக்கமாய் மூப்பது நாற்பது பெரிய எண்ணெய்ப் பீப்பாய்கள். மோட்டார் ஆயில். ரசாயனப் பொருட்கள். சில காலியாகவும் இருந்தன. அவரச ஆத்திரத்துக்கு அந்தக் காலி பீப்பாய்களில் தண்ணீர் எடுத்து வருவதும் உண்டு. அடிக்கடி அவன்போய்க் கொண்டு வருவான்.
      ரே எழுந்து வாசலை நோக்கித் தள்ளாடிப் போனான். தலைபாரம். முந்தைய ராத்திரியின் போதை இன்னும் விலகவில்லை போல.
      பிற்பாடு நான் அவனோடு பேசிக் கொண்டிருந்தபோது, அப்போதுகூட அவன் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கவில்லை. பதட்டம் விலகாமல் அவன் சொன்னது சரியாக விளங்கவில்லை... கிடங்கின் கதவை அவன் திறக்கிறான். நேரே முகம்நீட்டும் பயங்கரமான பாலைவன ஒட்டகம். அதன் பிளந்த, எச்சில் ஒழுகும் உதடுகள். தடுமாறும் காலுடன் பின்வாங்கினான். டஜனோ அதற்கு மேலோ ஒட்டகங்கள் ஒடுங்கிய வாசலுக்குள் பிதுக்கிக்கொண்டு புகுந்தன. முதலில் அவை அவனை சட்டைசெய்யவில்லை. அவனுக்குப் புரிந்தது, எல்லாப் பிராணியும் இப்பிடி உள்ள புகுந்தால் கிடங்கின் கதி அதோகதி.
      ''வெளிய போங்க பேமானி முண்டங்களா... போங்க. போங்க வெளிய!'' என்று அலறினான்.
      ஒட்டகங்கள் திரும்பி அவனைப் பார்த்து, அசுரவேகமாய் வாசலை மறித்துக் கொண்டு நின்றன. ஒன்றை ஒன்று இடித்துத் தள்ளிக் கொண்டன. விநோதமாய் அவை முனகி ஓலமிட்டன. நீளமான பாம்புபோன்ற அவற்றின் கழுத்துகள் ஆடி ஒன்றையொன்று முட்டிக் கொண்டன. சுவரோரம் அடுக்கி வைக்கப்பப்பட்டிருந்த பெட்டிகளை அவை முட்டித்தள்ளின. கெட்டியான பச்சை எச்சில் முட்டைகளுடன் அவற்றின் வாயில் இருந்து நுரையாய் வழிந்தது. அறையெங்கும் ஒட்டக நாற்றம்.
      பான் ஒரே விநாடியில் சுதாரித்தான். அதுகள் உக்கிரப்பட்டிருக்கின்றன, தெரிந்தது. அந்தக் கடுப்பில் அவை எத்தனை ஆபத்தானவை... அதை அவன் விளக்காவிட்டாலும் எனக்குப் புரிகிறது. வெலவெலத்திருந்தான். இந்த பாலை ஒட்டகங்கள் மனுசனின் கைப்பகுதியிலிருந்தும் கழுத்திலிருந்தும் ஒரு பெரிய பட்டாணி அளவு சதையை அப்படியே கடித்து எடுக்க வல்லவை. ஒரு பழைய கதைகூட உண்டு. திமில் சிலிர்த்த ஆண் ஒட்டகத்திடம் ஒரு ஆசாமி மாட்டிக்கிட்டான். வந்த ஆத்திரத்தில் அந்த ஒட்டகம் அவன் நெற்றியையே ஒட்டுமொத்தமாய் ஆப்பிளைக் கடிக்கிறாப் போல கடிச்செடுத்திட்டதாம்.
      ஒருக்களித்து மெல்ல அடிவைத்தான் பான். பீப்பாய்கள் பக்கம் போனான். தகரபிரமிட் மேல் ஏறி தடுமாறினான். அந்தநேரத்தில் அந்த இடம்தான் அவனுக்குப் பாதுகாப்பு தர முடியுமாய் இருந்தது... ஆ அதுவே ஒரு கெட்ட கனவின் ஆரம்பம்.
      முதலில் அந்தப் டிரம்களின் அதிக உயரத்துக்கு அவன் ஏறிவிட்டான். அப்படியே உட்கார்ந்திருக்கலாம். இந்த மிருகங்கள் வெறுத்துப்போய் அந்த இடத்தைக் காலி செய்து போய்விடும். ஓட்டகத்துக்கு ஏறத் தெரியாது, ஆகவே நமக்கு ஒரு வில்லங்கமுங் கிடையாது. ஆனால் ஒரு பயில்வான் ஒட்டகம் ஒரு டிரம்மை முகத்தின் பக்கவாட்டில் முட்டியது.
      மிரண்டுபோய் பான் அடுத்த டிரம்முக்குத் துள்ளினான். வெறிபிடித்த இந்த மிருகங்களை விட்டு எட்டிப் போய்விடலாம். எதிர்பார்க்கவேயில்லை. டிரம் மூடி துருப்பிடித்துக் கிடந்தது, சட்டென்று அவன்பாரம் தாளமாட்டாமல் உள்வாங்கியது. துண்டுதுகளாய் ஆரஞ்சு நிறத்தில் பொடிந்து உதிர்ந்தது. அவனது ரெண்டு காலுமே பொளக்கென்று உள்ளே போனது. உடையுடுத்திக் கொண்டாப்போல அவன் இடுப்புவரை மறைத்து நின்றான்.
      ஒருவிநாடி பத்திரமாய் இருக்கிறதாய் நினைத்தான். ஆனால் ஆடிக்கொண்டிருந்தான். நிலைதடுமாறினான். பீப்பாய் அசைந்து உருள ஆரம்பித்தது. அவனால் அதை நிறுத்த முடியவில்லை. உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டு முடங்கிக் கொண்டான். துணிதுவைக்கும் எந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டாப் போலிருந்தது. பீப்பாய் முன்பக்கம் உருண்டது. எங்கோ முட்டி துள்ளி எகிறி திரும்ப அந்த பீப்பாய்க் குவியலோடு வந்து சேர்ந்தது.
      கலவரப்பட்ட அந்த ஓட்டகமந்தைக்கு நடுவில் அது வளைந்து நெளிந்த பக்கமாய் அப்படியே நின்றது. வெளியே எடுத்த கார் என்ஜின்போல ஒட்டகங்கள் அபார இரைச்சலோடு அடித்தொண்டையில் கத்தின. அவை துள்ளி அந்த பீப்பாயை எத்தின. மகா ஆக்ரோஷமாயிருந்தன அவை. கர்ஜித்தன. என் ஆயுசில் நான் கேட்டதிலேயே கோரமான அலறல் அது, என்றான் பான்.
      ஓரத்து இரும்புத் தூண்கள் கட்டுக்கட்டாக அந்த பீப்பாய்மேல் விழுந்தன. உலோக ஜெயில்! மேலும் எண்ணெய்ப் பீப்பாய்கள் முட்டித் தள்ளப்பட்டு அவனைச் சுற்றி விழுந்தன. அரைடன் எடையுள்ள ஒரு ஒட்டகம் நீளமான குழாயைப் பொருத்தியிருந்த பட்டையை உருவி அவனைப் பார்க்க விட்டெறிந்தது. இதனால் மேலும் கலவரப்பட்டும் ஆத்திரப்பட்டும் போயின பிராணிகள்.
      நம்ம கதை முடிஞ்சிட்டது, என்றே பான் நினைத்தான். வெச்சி நசுக்கப் போகுது. எத்தித் தள்ளப் போவுது. அல்லது கடிச்சே சாவடிக்கப் போவுது. மவனே பொழச்சிக் கிடந்தா இந்தத் தண்ணியடிக்கிற பழக்கத்தை விட்டுறணும். எப்பிடியாவது பொழைச்சிக்கிட்டா, வேலைக்காராள்கிட்ட நல்லதனமா நடந்துக்கணும்... கிடங்கை ஒழுங்கா பாத்துக்கணும். தண்ணி வசதியை எப்பவும் வெச்சிருக்கணும்... துருப்பிடித்த பழைய அந்த டின்னுக்குள் என்னென்னவோ யோசனைகள், பிரதிக்ஞைகள்! வாழ்க்கை, அவன் வாழ்க்கை, இத்தனை முக்கியமான விஷயமாய் அதுவரை உணர்ந்ததேயில்லை!
      ஒருவழியாக விஷயம் அடங்கியது. ஒட்டகங்கள் நிதானப் பட்டன. வெளியேறின. தொட்டியில் நிறைய தண்ணீர் குடித்தன. திரும்ப பாலைவனம் பார்க்க நடையிட்டன. நான் நினைக்கிறேன் - அதுகளின் காரியம் முடிந்தது. கிளம்பிப் போய்விட்டன.
புதன்கிழமை மாலைவாக்கில் நான் பானின் இடத்துக்குப் போனேன். வெப்பம் முப்பதுகளுக்குக் கீழே இறங்கி விட்டிருந்தது. வீடு காலியாக இருந்தது. அது ஆச்சர்யமாய் இல்லை. நான் ஒருவனே இங்கே இன்னும் இன்னும் வேலையை உதறிவிட்டுப் போகாதவன். வாசலில் ஜீப் நின்றது. பானைக் காணவில்லை. உள்ளே எல்லாமே காரேபூரேயென்று கிடந்தது, அதுவும் வழக்கந்தான். ரெண்டு மூணு தடவை நான் கூப்பிட்டுப் பார்த்தேன். பதில் வரவில்லை. கிடங்கைச் சுற்றி அவன் பேரைக் கூப்பிட்டபடி போனபோதுதான் அந்த அலறல்!
      கிடங்கு பற்றி வெளிப்பார்வையில் வித்தியாசமில்லை. டிரம்கள், தூண்கள், வயர்கள், பலகைகள், மற்றும் உலர்ந்த ரத்தம் என்று எங்கும் தெரிந்தது. பிராணிக் கழிவுகள் கிடந்தன. தரையெங்கும் சிதறிக் கிடக்கும் பெட்டி உடைசல்கள். மேகம்போல ஈக்கூட்டத்தின் ஙொய்ய். எஃக்கிரும்புச் சுவர்கள் மோதி வளைக்கப் பட்டிருந்தன. கதவே தொங்கிக் கொண்டிருந்தது. சூறாவளி வந்து போனாப் போல.
      ''நீங்க வந்ததுல சந்தோஷம்.'' பான் டிரம்முக்குள் இருந்து கூப்பிட்டான். ''க்ரிக்கி, சும்மா நின்னுட்டிருக்காதே முட்டாப்பய மவனே, வந்து என்னை வெளிய எடு.'' அதே கடுப்பேத்தும் குரல்.
      ''கால் உடைஞ்சிட்டாப்லிருக்கு. தோள்லயும் வலி. நான் உடம்பே வளைஞ்சி கெடக்கேன்... ஆஆஆஆ!'' முனகினான். ''ஆஆஆ.''
      ''என்னாச்சி?'' அவன்முன் குனிந்து கேட்டேன். ''எதும் சண்டை கிண்டை போட்டியா? என்னாது தலைல, ரத்தமா?''
      ''ம், தக்காளிச்சாறு இல்லை அது'' என்றான் அவன்.
      ''ஆ சரி, சொல்லு என்னாச்சி?''
      ''துரு... ஆஆஆஆ. கேடுகெட்ட துரு!'' என்று முனகினான். சோகக் குரல். ''துரு, அதுதான் பிரச்னை.'' கண்கள் சுழன்றன. தாடை துவண்டு மயக்கமானான்.
      அப்ப அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. பிறகுங்கூடப் புரியவில்லை.
      அவனை என்னால் வெளிக் கொண்டுவர முடியவில்லை. மோதலில் அவன் கால் பிரண்டிருந்தது. அதை மேலும் கெடுத்து விட்டு விடுவேனோ என்று பயமாய் இருந்தது. தோள்பட்டை பொம்மி மேலெழுந்திருந்தது. ஒரு எலும்பு உடைந்து எக்குத் தப்பா கோணிக் கொண்டிருக்கலாம். தலையில் ஆழமாய்க் காயங்கள். வேறிடங்களிலும் அடி பட்டிருந்தது. பட்டணத்தில் உள்ள செவிலி ஒருத்திக்கு ரேடியோவில் தகவல் சொன்னேன். உடனே அவனை அழைத்து வருகிறதாகச் சொன்னேன்.
      வாகனத்தில் சாமான் அடுக்கும் வின்ச் மூலம் டிரம்மைத் தூக்கினேன். உள்ளே ரே பான்!  எஃப் -250 மாடல் வண்டி. பின்பக்கமாய் டிரம்மை வைத்தேன். அது உருண்டுவிடாமல் முட்டுக் கொடுத்தேன். அவன் தலைக்கும் உடம்புக்கும் மெத்தை தலையணை என்று வைத்தேன். அவனுக்கு நினைவு திரும்பியதும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தந்தேன். நாற்பத்தியிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் மருத்துவமுகாமுக்கு வண்டியை ஓட்டிப் போனேன்.
      பெரியவர் டெட் ஹார்பர் டிரம்மை வெட்டும் எந்திரக் கருவியால் ரெண்டு பாதியாய்த் திறந்தார். பானின் காதில் பஞ்சடைத்தோம். எந்திரச் சத்தத்தில் செவிடாகி விடக் கூடாது. தலைக்குமேல் ஈரப் போர்வை போர்த்தினோம். எந்திரத்தில் இருந்து கிளம்பும் தீப்பொறிகள் அவனைச் சுட்டுவிடக் கூடாது. வெட்டி முடித்து அவனை ஒரு மருத்துவப் படுக்கையில் தூக்கி வைத்தோம். வானரோந்துப் பணியில் இருக்கும் மருத்துவரை உடனே அழைக்கப் போனாள் செவிலி. அத்தனை மோசமாய் இருந்தான் அவன்.
      வியாழன் புலர்காலை. விமானம் வர நாங்கள் காத்திருந்தோம். அப்போதுதான் ரே பான் தன் கதையைச் சொன்னான். நடக்க முடியாத, அவனால் நடக்க முடியாத கதை. ஆனால் அது நிஜம். அவனது உடைந்த குறுகிப்போன உடம்பே சாட்சி.
      அந்த நோயாளிப் படுக்கையை விமானத்தில் ஏற்றியபோது அவன் சொன்ன கடைசி வார்த்தைகள் - ''துருதான். மூலப் பிரச்னையே துருதான்...''
ரே பான் பின்னால் அந்தப் பகுதிக்கு வரவேயில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்தபின் அவன் குடியை ஏறக்கட்டிவிட்டு தெற்குப் பக்கமாய்ப் போய்விட்டான் என்றார்கள் சிலர். டார்வின் நகரத்துக்கு குடிபோய்விட்டாக சிலர். என்னாச்சி தெரியவில்லை, ஒருவேளை அது தெரியாமலேயே போய்விடக் கூடும். என்றாலும் ஒட்டகங்கள் அவனைப் பார்க்க வந்த நாள்... அதை ஜனங்கள் வெகுகாலம் பேசிக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

>>> 
RUST/Charles Maekivi
நம்ம தாஸ்தயேவ்ஸ்கி கூட இதேமாதிரி ஒரு விநோத சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறார். ஒரு மிருகக் காட்சி சாலையில் நண்பனுடன் முதலை ஒன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, நண்பன் வழுகி முதலைத் தொட்டிக்குள், திறந்திருந்த முதலைவாய்க்குள் விழுந்து விடுகிறான். வாயைமூடி, முழுங்க முடியாமல் திரும்ப முதலை வாயைத்திறக்கையில் அவன் விலுக்கென்று மேலே வரும்போது அவனது பரிதவிப்பில் அவன் கண்ணாடி துள்ளித் தனியே வெளியே விழும். திரும்ப அவன் உள்ளே போய்விடுவான். நடந்த நிகழ்ச்சியின் நம்பவியலாத் தன்மையில் சட்டென்று தாஸ்தயேவ்ஸ்கி (நான் என்று அமைந்த கதை) விழுந்து விழுந்து சிரிப்பார். ரொம்ப நீண்ட கதை. ஆனால் அவரது பிற கதைகளைப் போல சத்தாய் அது வளம்பெறவில்லை என்று தோன்றியது.
      துரு - என்ற தலைப்பை ஒட்டுவதற்குள் வம்பாடு படுகிறார் இந்த ஆசிரியர். அப்படி நிறுத்தியும் அது ரொம்ப சுவாரஸ்யமான தலைப்பாகப் படவில்லை. உரையாடலில் போல இருமுறை தலைப்பை அழுத்துகிறார். குறிப்பிடாமலே புரிந்திருக்கும் அது. பாலைவனத்தில் ஒரு விநோத சம்பவம். வாசிக்கப் புதிதாய் இருந்தது. சார்லஸ் மெய்கிவி கல்வித்துறையில் பணியாற்றுகிறார். மாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரைப் புத்தகங்கள், வீட்டுப்பாடத் துணைநூல்கள் என எழுதுகிறார்.
*
storysankar@gmail.com
91 9789987842 - 91 9445016842

Monday, February 18, 2019


சிறுகதை

நீரால் அமையும்
எஸ். சங்கரநாராயணன்
*
ம்மன்கோவிலில் அருகே, யானையாய்க் கட்டிக் கிடந்தது தேர். நல்லா நாலாள் உயரத்துத் தேர். வருடம் ஒருமுறை அதை சுத்தம் செய்து, மராமத்து பார்த்து, தேர் இழுப்பார்கள். தைப்பூச திருவிழாக் காலங்கள் உற்சாகமானவை. ராஜேஸ்வரி திருவிழா பார்க்க வீட்டோடு வந்திருக்கிறாள். கோவிலடியும், அந்தத் தேர் வளாகமும், திடலும் எல்லாமே திருவிழாச் சமயங்களில் எப்படி ஜோராய்க் கனவுச்சாயல் கொண்டு விடுகின்றன. திடல் பரபரத்து விடுகிறது. பொறிகடலை, ஷர்பத் கடைகள். மனுசத் தலையும் பாம்புஉடலுமான நாககன்னிகை. அதைப் பார்க்க அழைக்கிற வித்தியாசமான 'ர்ரூம்' அதிர்வு ஒலி. ஊரில் பத்துக்கு ஆறுபேர் மொட்டையடித்து, தலையில் சந்தனம் பூசித் திரிகிறார்கள்... காலத்தை அனுசரித்து, இப்போது திடீர் புகைப்படக் கடைகள். கொடக், என்ன பேர் இது? படம் எடுக்கிற சத்தமா! - அதில் விஜய், விக்ரம், சூர்யா பிளைவுட்-உருவங்கள். கூடநின்று படம் எடுத்துக் கொள்ளலாம். கம்பியூட்டரில் ராசி பலன். என்றாலும் ஒருபக்கம், லேகிய விற்பனை. பீமபுஷ்டி அல்வா. ஜோதிகா வளையல். கையில் வாச் கட்டினாப்போல ஜவ்வு மிட்டாய். ட்ர்ரிங் என்று மணியோசையுடன் சுத்தும் ராட்டினம்... இதெல்லாம் இல்லாத திருவிழாவா!
ஆ, வேங்கடபதி. ஆள் சூரன்லா! - பக்கத்தூர், நாலு திசையிலும் அவனை எல்லாருக்கும் தெரிந்திருந்தது. திருவிழாப் போட்டிகளில் அவனுக்கு ரசிகர் கூட்டமே உண்டு. லாரியாபீசில் மூட்டைதூக்கும் வேங்கடபதி. அரசியல்கூட்டம் போட்டால், கூட்டம் துவங்குமுன், ஏழை வயிறு எரியுது, எரியவில்லை அடுப்பு - என்றெல்லாம் கட்சிப்பாடல் பாடும் வேங்கடபதி. வெறும்பல்லால் ஒரு லாரி பாரத்தை இழுத்துக் காட்டிய வேங்கடபதி.
அந்த ஊரில் சீசனுக்குத் தக்கபடி வாழைத்தாரோ, பருத்தியோ, சீசனை உதறிவிட்டுச் சொன்னால், சுண்ணாம்புக் கல்லோ, ஆத்துமணலோ லோடு போய்க்கொண்டே யிருந்தது. சுருளிமலை, பெரியதாவணி, கலங்கல்குளம், தேவிபட்டினம் வழியே கிளம்பும் காட்டாறு, ராஜபாட்டையாய், அம்மன்கோவில் தாண்டி சந்தைச்சாவடி, நொய்யல் வரை நீளப் போகிறது. நல்ல அகலப்பாதை. நடுநடுவே புல்லும் புதருமாய்ச் சிறுமேடுகள் வழுக்கை மண்டையில் சிறு பிசிறு முடிகள் போல. திடீரென்று ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். சுருளிமலையின் இடுப்பிலிருந்து நீர்க்குழந்தை கோபித்துக்கொண்டு இறங்கி ஓடிவந்தாப்போல... ''பிடி... பிடீய்,'' என்று மலையால் பின்னால் ஓடிவர முடியுமா!
மேற்கே மலைமேலே மூட்டம் பார்த்தாலே, யாரும் ஆத்துப்பாதையில் இறங்க மாட்டார்கள். அங்கே கொட்டும் மழைக்கு கால் அவர், அரை அவரில் காட்டாற்றில் வெள்ளம் முட்டிப் புறப்பட்டு விடும்... சந்தைச்சாவடி யிலிருந்து ரஸ்தாவழி சுத்து. பஸ்சுக்குத் துட்டுச் செலவு. சனியன் நேரங்காலமே கிடையாது. வந்தால் உன் அதிர்ஷ்டம். யோசியாமல் ஆத்துமணலில் இறங்கி, நிழலாகவே ஊர்வந்து சேரலாம். அலுப்பா யெல்லாம் இராது. ஒர்ருவா, வேர்க்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து, ஒண்ணொண்ணா வாயில் எறிந்தபடி, ஆனந்த நடைதான் உத்தமம். சைக்கிளில் மணல்வெட்டித் தள்ளிவிட்ரும். சனியன் உருட்டக்கூட இயலாது.
ராஜேஸ்வரிக்குப் பார்த்த மாப்பிள்ளை டெய்லர் - அம்மன்கோவில் ராமசுப்பு. தனியன். அம்மா செத்து, புல் முளைத்து விட்டது... கோவிலடி தொட்டாப்போலத் துவங்கும் சந்நிதித் தெருவில் கடை கடையில் அமர்ந்தபடி கோவில், திடல், தேர், திடலில் அவிழ்ந்து கிடக்கும் வண்டிகள், மாப்பிள்ளைக்கல் சகலமும் தெரியும். கோவில் எதிர் மண்டபத்தில் ஆடுபுலியாட்டம், தாயக்கட்டம் எப்போதும் யாராவது விளையாடிக் கொண்டிருப்பார்கள்... கடையைப் பலகைபலகையாய் எடுத்துத் திறந்து-மூட வேண்டும். ரஜினி பீடி குடிப்பதுபோல வண்ணக்கலரில் - புத்தம்புதிய காபி - 'ராமசுப்பு ஜென்ட்ஸ் ஸ்பெஷல் லிஸ்ட்'. ஓவியனுக்கு வரையத் தெரிந்த ஒரே ஓவியம். சலூன்கடையில் கார்த்திக் வரையச் சொன்னால், கழுத்தில் மப்ளருடன், ரஜினிசாயலில் வரைந்து கொடுத்தான். வாயில் பீடிக்குபதில் பீடா.
சூர்யாவுடன் நின்றபடி ராமசுப்பு எடுத்துக்கொண்ட படம் பார்த்தாள் ராஜேஸ்வரி. படத்தில் அங்கங்கே சிவப்பு தீற்றியிருந்தது. ராமசுப்பு மாத்திரம் கருப்பாய் இருந்தான். நறுக்கிய கோட்டு மீசை. வத்தலான தேகம். கருவாடு போலிருந்தான்... தையல் மிஷினோடு படம் எடுத்துக் கொண்டிருக்கலாம்.
அம்மன்கோவிலடி மாப்பிள்ளை, என்றுதான் முதல் யோசனை. உடம்பில் பித்தளைநகை - வாடகை - கனக்கக் கல்யாணம். தாலிகட்டிய ஜோருக்கு டெய்லருக்கு முகம் பொங்கியாச்சு... இத்தனை அழகாய் ஒரு பெண்டாட்டியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. நமக்குக் கல்யாணமே ஆவாதோன்னு ஒரு இதுவில் இருந்தான்! - டிரங்குப்பெட்டி ஒண்ணு. உள்ளே அடர் வண்ணத்தில் சில புடவைகள், ஜம்பர்கள். புருசனுக்கு ஜம்பர் தைக்கத் தெரியாது, என நினைத்துக் கொண்டாள். ஒரு பவானி ஜமுக்காளம். பாய், தலையணை. பெரிய அண்டாவில் கொஞ்சம் அரிசி, புளி, வத்தல் என்று ஜாமான்கள் தந்தனுப்பினார் ஐயா. தனியே வண்டியில் மெய்ன் ரஸ்தா வழி அது வர, அவர்களுக்கு உட்கார இடம்ஒதுக்கித் தந்தார்கள். பெத்தவர்கள் வண்டியில் வரட்டும்... ''ஆத்துவழி நடந்தே போவமே...'' என்றாள். தொண்டையில் கோலிகுண்டாட்டம் எலும்பு துருத்திய மாப்பிள்ளை. தாலிகட்டும்போது இருமினான். பெண்டாட்டியுடன் பேசவே அவனுக்கு வாயெல்லாம் பல். பெரிய சிவப்பு ஜவ்வு ஈறுகள். புளியம்பழம் பல்லில் மாட்டினா மாதிரி.
''என் போட்டோப் படத்தைப் பார்த்துத்தானே சம்மதிச்சே?'' மணல்வெளியில் ஒருபக்கமாய்ச் சாய்ந்தபடி நடந்து வந்தான். மாப்பிள்ளைக்கிறுக்கு அது!
''படத்துல உங்ககூட நின்னுட்டிருந்தாரே அதாரு?''
''அதா, சூர்யா. நடிகர்!''
''அவர்தான் மாப்பிள்ளைன்னு நினைச்சிட்டேன்...''
அவனுக்கு என்ன பதில்சொல்ல தெரியவில்லை.
''அவரு உங்க பிரெண்டா?'' அவன்முகம் வாடியதைப் பார்த்து என்னவோ போலாகி விட்டது. ''அவரைவிட நீங்க நல்லாயிருக்கீங்க'' என்றாள்.
''நில்லு...' என்று அவளை வழிமறித்துக் கத்தினான் ராமசுப்பு திடீரென்று. பாம்பு ஒன்று. என்ன பாம்பு தெரியவில்லை. மணலில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தது. நடைச்சத்தம் கேட்டு பரபரத்து, விலுக்கென்று திரும்பியது.
புதர் வழியே வெளிச்சம் துட்டுத் துட்டாய்ச் சிதறியிருந்தது. நிழல்கள் காற்றுக்குத் தரையில் ஆடின.
''பயப்படண்டாம்'' என்று குரல் கேட்டது. வேங்கடபதி! - பின்னால் வந்து கொண்டிருந்தான் போலும். ஐயோ அவர்கள் பேசிக்கொண்டு வந்ததை யெல்லாம் கேட்டிருப்பானோ? அவள் வெட்கப்பட்டாள். அவளைத் தாண்டியபோது, அவளிடமிருந்து மஞ்சளும் பவுடருமான ஒரு வாசனை, புதுப்பெண் வாசனை, அவனைத் தீண்டியது. நீ...ளமான தொங்கட்டான். விறுவிறுவென்று பாம்பை நோக்கிப் போனான். உஸ்ஸென அது பால்ப்பொங்கலாய் எழுந்தது. விநாடிநேரத்தில் வேங்கடபதி பாம்பைக் கழுத்தில் பற்றியிருந்தான். என்ன நடந்தது? பாம்பே உணர முடியாத வேகம்... விர்ரென்று ஒரு சுற்றுச் சுற்றி வேலியோரம் வீசினான். விழுந்து, திகைத்து, விறுவிறுவென்று மறைந்தது.
''என்னா புது மாப்ளை? பொண்ணை இப்பிடித்தான் முத முதலா நடத்திக் கூட்டி வாரதா?'' பதில்கூட எதிர்பார்க்காமல் முன்னால் போய்விட்டான். அவன் திரும்பிப் பார்ப்பான் என நினைத்தாள். என்ன வேகம்! பாம்பு வேகம்... அவள் வேங்கடபதியை அறிந்திருந்தாள்.
ஒரு வளையம் நிறைய முறுக்கு - பத்து ஐம்பது முறுக்கு இருக்கும். ''எலேய் இதில் ஒரு இருபது முறுக்கையும் தின்னுறணும். எப்பிடிங்கே? வலதுகையால முறுக்கை எடுத்து வாயில போடணும். இடதுகை ஆள்காட்டி விரல் இருக்கில்ல, அதை ஆட்டிக்கிட்டே, ஆட்டத்தை நிறுத்தாமல் திங்கணும். முடியுமாடே, எவனாவது பந்தயத்துக்குத் தயாரா?''
கூட்டமே நின்று வேடிக்கை பார்க்கும். கண்நிறைய எதிர்பார்ப்பும் சிரிப்பும். ரெண்டு முறுக்கு, மூணு முறுக்குக்கு மேல் திங்க முடியாமல், விரல் ஆட்டுவதை நிறுத்தியதால், அவ்ட் ஆகி விடுவார்கள்! கூட்டமே கலீரென்று சிரிக்கும். ''எலேய் வேங்கடபதி, நீ வரல்லியா ஆட்டத்துக்கு?'' என்று உசுப்பி விடுவார்கள்.
''எத்தினி முறுக்கு திங்கணும்?''
''இருபது.''
''இன்னிக்கு வவுறு சரியில்லப்பா...'' என்று பிகு பண்ணிக் கொள்வான். பிறகு இருபத்தியிரண்டு முறுக்கு தின்று காட்டுவான். ராஜேஸ்வரி தன்னை மறந்து கைதட்டினாள். வயிறு சரியாயிருந்தா பூராத்தையுமே தின்னுருவாப்டியம்மோவ்!
தனியே அவள் முயன்று பார்த்தாள். முறுக்கைக் கடித்தபடி விரலையும் நிறுத்தாமல் ஆட்ட. ஒரு முறுக்கே முடியவில்லை! சிரிப்பாய் இருந்தது.
கோவிலடி வளாகத்தில் மாப்பிள்ளைக்கல் என்று உருட்டைக்கல் கிடக்கும். அதை வேங்கடபதியின் அப்பாவுக்குப் பிறகு, து¡க்க முடிந்த ஒரே ஆள், வேங்கடபதிதான்...
''மாப்பிள்ளைக்கல்லை உங்களால து¡க்க முடியுமா?'' என்று ராமசுப்புவிடம் கேட்டாள் ராஜேஸ்வரி.
''என்னால உன்னியே து¡க்க முடியாது!'' என்று ராமசுப்பு சிரித்தான்.
''பயந்திட்டியா?''
''நீங்க இருக்கீகளே? என்ன பயம்?'' என்றாள்.
''சரி'' என்று கிட்டேவந்து அவள் தோளைத் தொட்டான் சிரிப்புடன்.
''ஆத்தி, யாராச்சும் வரப்போறாக...' என்றாள் வெட்கத்துடன்.
''இங்க ஆரு வருவாக. பாம்புதான் வரும்...''
லாரியாபிஸ் தாண்டி, முள்ளை வெட்டி, இழுத்து வந்துகொண்டிருந்தாள். சாக்குச் சிப்பம் ஒன்றில் படுத்தபடி வேங்கடபதி பாடிக்கொண்டிருந்தான். டியெம்மெஸ் குரலில், எம்ஜியார் பாட்டு. தொட்டால் பூ மலரும்... அவளை கவனித்து, பாட்டை நிறுத்தி எழுந்துகொண்டான். அவளும் நின்றிருந்தாள். நல்லாத்தான் பாடுறான். அன்னிக்கு ஓடையில - பேச வெட்கமாய் இருந்தது. ஆம்பளையாள், அவனே பேசினால், பேச்சுக் கொடுக்கலாம்... என்ன பேச நாமளா, என்று திகைப்பாய் இருந்தது.
வேட்டியை டவுசருக்குக் கீழே இழுத்துவிட்டுக் கொண்டான். நீ...ளமான தொங்கட்டான். அழகாய்த்தான் இருந்தாள்.
அன்றிரவு ஏனோ திரும்பத் திரும்ப அந்தப் பாட்டு வந்தது. தொடாமல் நான் மலர்ந்தேன். அவளது உற்சாகம் அவளுக்கே ஆச்சர்யம். எங்களூர் வந்திருக்கிறான். கபடிப்போட்டி, ராவாட்டத்தில் டியூப்லைட் வயர் உயரம் துள்ளும் வேங்கடபதி. மோட்டார்கிணற்றுக்குக் குளிக்கப்போனால், தோப்புப்பக்கம் கரலாக்கட்டை சுத்துகிறான். ஒரு அந்தர்பல்டி அடித்து, அப்படியே திரும்ப மணலில் நிற்கிறான். உடம்பெங்கும் எண்ணெய்ப் பளபளப்பாய் வியர்வை.... அம்மன்கோவில் தேர்!
நாவலூர் வாய்க்கால் திருப்பத்தில், விறகு ஒடித்துத் திரும்புகையில், வசம்மாய்க் காலில் ஒரு முள். ஊ... என்று கத்திவிட்டாள். ''என்னாச்சி என்னாச்சி?'' என்று ஓடிவந்தவன் வேங்கடபதி. அங்கே ஏன் வரவேண்டும்? சட்டென அவளை அமர்த்தி, காலைப்பற்றி, முள்ளைப் பிடுங்கி யெறிந்தான். வெற்றிலை போடுவான் போல. காலை ஊன முடியுமா தெரியவில்லை. உள்ளங்கையால் சூடுபறக்க விறுவிறுவென்று தேய்த்தான். முள்ளொடிக்கும் பொம்பளைக்கு எதுக்கு, உடம்பு முகம் கழுத்து அக்குள்னு, இம்புட்டு பவுடர்?... தேய்த்த சூடு  மூளைவரை ஏறியது. நீ...ளத் தொங்காட்டானை ராத்திரிகூட மாத்த மாட்டாளா?
தானறியாமல் அவன் தோளைப் பற்றியிருந்தாள். கண் மூடியிருந்தாள். ''உன் பேரென்ன?'' என்றான். வெற்றிலை மணத்தது கிட்டத்தில். என்ன பவுடர் இது? - குட்டிகுரா. முள்ளுக்கட்டு தள்ளிக் கிடந்தது. கட்டு இறுக்கம் தளர்ந்திருந்தது. ''இது தப்பு'', என்றான் எல்லாம் முடிந்தபின். ''எது?'' என்று அப்பாவிபோலக் கேட்கிறவளைப் பார்த்துச் சிரித்தான்.
''ஊருக்குத் தெரிஞ்சா?''
''தெரியவேணாம்.''
''உனக்கு ஆனாலும் தைரியம் சாஸ்தி ராஜேஸ்வரி.''
''உங்கள விடவா?'' என்றாள். ''கவ்னர் புகையிலையா இது?'' என்று த்தூ, என்று துப்பியபடி கேட்டாள்.
“இன்னா இது, பீடிக்கும் புகையிலைக்கும் கவர்னர் பேரு வைக்காக... எந்த கவர்னரு புகையிலை போடுதாரு...?” என்றான் அவன்.
“இதா. இந்த கவர்னர்!” என்றாள் அவன் கன்னத்தில் கன்னம் வைத்து.
ராமசுப்பு வரும்வரை அவள் கதவுசாத்திக் கனவுகள் கண்டாள். வஜ்ரதேகம். கையை மடித்தபோது நரம்புகள் பச்சைப் பாம்புகளாய்க் கிளைவிரித்தன. அவன் காட்டும் வேகம்... நம்பவே முடியவில்லை. மனசின் கணக்குகள் வேறுதான்.
''பொழுதன்னிக்கும் மிஷின்லியே கெடக்கேனா? காலே மரத்து வெரச்சுப் போச்சுடி...'' என்றான் ராமசுப்பு. ''கைகால் பிடிச்சு விடறியா?''
''காதுல ஏது தொங்கட்டான் புதுசா இருக்கு?''
''வாங்கினேன்...'' என்றாள்.
கடைகண்ணிக்குப் போவதென்றாலும் லாரியாபிஸ் வழியே போகிறதாக வழக்கமாச்சு. கோலிசோடாவை கட்டைவிரலால் உள்ளே அழுத்தி உடைத்துக் குடிக்கிற வேங்கடபதி. அவனைப் பார்க்கவே அவளுக்கு திசுவெங்கும் திகுதிகுத்தது. எனக்கு என்னவோ ஆகிவிட்டது. தலைக்குள் பேன்பூச்சியாய் அரிப்பு. விடாத அரிப்பு.
சிறுமழைக்கும் தும்மியபடியே உள்ளே வரும் ராமசுப்பு.
''படுங்க பேசாத...'' என்று போர்த்தி விட்டாள்.
''நான் தூங்கறேன். உனக்குதான் என்மேல எவ்வளவு அன்பு ராஜேஸ்வரி...'' என ராமசுப்பு அந்தக் கைக்கு முத்தம் கொடுத்தான். ''ஏது வளைய, புதுசா?''
''வாங்கினேன்'' என்றாள். அவன் தூங்கிப் போனான்.
''இந்தா தீப்பெட்டி. இதுல ஒரு குச்சி விடாம பத்தவெச்சிக் காட்டணும். முடியுமா?'' என்றான் வேங்கடபதி அவள் மடியில் படுத்தபடி.
''உங்களால முடியுமா?''
''நேத்து பந்தயத்துல செயிச்சிக் காட்டினேன்...'' என்றவன், சட்டைக்காலரில் ஒரு இழுவு இழுவி ஒரு குச்சியைப் பற்றவைத்தான்.
''ஆத்தி, என்னியவே சூடாக்குதீயளே?'' என்று ஒரு புகையிலை முத்தங் கொடுத்தாள்.
கிளம்ப மனசில்லாமல் கிளம்பியபோது, ஆடாதோடை இலை பிடுங்கிப் போனாள். ''அவியளுக்கு சளிக்குக் கஷாயம் போடலாம்...''
தீபாவளி சீஸனுக்கு மழை முட்டிவந்தது. சட்டுச் சட்டென்று பொழுது இருட்டுக் கொடுத்தது. ராமசுப்பு வேலை மும்முரத்தில் இருந்தான். எல்லாம் ஆம்பளையாள் உடைகள். சீட்டித் துணிகள். நறுக்கி நறுக்கிக் குப்பைகள் குவிந்தன. காஜா எடுக்க அவன் ராஜேஸ்வரியைக் கூப்பிட்டான். அவசரம், பட்டன் வாங்க, கடைகண்ணி என்று அவன் வெளியே கிளம்பினால், கடையில் பதில்சொல்ல என்று அவளை வைத்துவிட்டுப் போனான். பாதிநாள் மழையில் நனைந்தபடி இருமிக்கொண்டே வந்தான். படுக்க, ஓய்வெடுக்க முடியாத வேலை. ''இதா சீஸன்... கைல வாங்கின துணிமட்டுக்குக் குடுக்க வேணாமா?'' என்றவன், மனசாரச் சிரித்தான். ''நீ வந்த ராசி. நல்ல பிக்அப்!'' என்கிறான்.
அநேகமாக தினசரி மழை பெய்தபடி யிருந்தது. ''எப்போது போனாலும் ராத்திரி அதெல்லாம் வந்திருவேன். கவலைப்படாதே'' என்றுவிட்டுப் போனான் ராமசுப்பு. டவுண்வரை போய் நூல்கண்டும், புதுமோஸ்தர் பட்டன்களும் வாங்க அடிக்கடி போய்வர வேலை இருந்தபடியிருந்தது.
லாரியாபிஸ் காலியாய்க் கிடந்தது. சரக்குவண்டி ரத்தாகி, தினசரி லோடு என்று அமையவில்லை. அடிக்கிற மழைக்கு சாக்கை விரித்துப் படுத்துக் கிடந்தான் வேங்கடபதி. சரியான மழை. சுளீர் சுளீர் என மின்னல்கள் வானத்தைக் கிழித்தன. சாப்பிடக் கொள்ள போய்வரவே சிரமமாகி விட்டது. மதியத்துக்கே இத்தனை இருட்டும் மூட்டமும்... மேற்கே மலைப்பக்கம் நல்ல மழை என்கிறார்கள்... என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ''எய்யா?'' என்று யாரோ பதறி ஓடிவரும் சத்தம்.
''ஆரு?'' ஊற்றி முழக்கிக் கொண்டிருந்தது மழை. ''என்ன ராஜேஸ்வரி?'' என்று வெளியே வந்து அவளைப் பார்த்தான். மழையில் நடுங்கி நின்றிருந்தாள். ''அவுக இன்னும் வரல்ல...''
''வருவாரு. வருவாரு...'' என்றான் கையமர்த்தி.
அவள் அழுதாள். ''இல்லய்யா. அவுக எப்பவுமே ஆத்துப்பாதை வழியாத்தான் வருவாக....''
''ம்''
''ஆத்துல வெள்ளம் ஓடுது!''
''ஓ'' என்றவன் பரபரப்பாய்த் தெருவில் இறங்கினான். ''நீ வீட்டுக்குப் போ. அவனை நான் பாத்துக்கறேன்...'' என்று ஓடினான்.
பத்து எம்பதடி அகல ஆறு. காட்டாற்று வெள்ளம் நுரைத்துச் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. புதுத் தண்ணீர். சிவந்து கோபமாய் ஓடிக்கொண்டிருந்தது. நீர்மட்டம் விறுவிறுவென்று ஏறியபடி வந்தது. இதுதான் பாலாற்றில் சங்கடம். எப்ப வெள்ளம் வரும், எத்தனை வேகம் வரும், யாருக்கும் யூகிக்கவே முடியாது. பொழுது இருட்ட ஆரம்பித்து விட்டது. அவன் விறுவிறுவென்று ஆற்றில் இறங்கினான். இடுப்பளவு ஆழம். வெள்ளத்துக்கு எதிர்த்து நடக்கத் திணறலாய் இருந்தது. டார்ச் கீர்ச் எடுத்து வந்திருக்கலாம்... நேரமில்லை. ராஜேஸ்வரியின் அழுத முகம். தலையை உதறிக் கொண்டான். மழை பிய்த்து உதறிக் கொண்டிருந்தது.
''ராமசுப்பூ?'' என்று இருட்டைப் பார்க்கக் கத்தினான். ஊய் ஊய்யென்று காற்று கிளம்பியிருந்தது. இருட்டு கவிந்து சகலத்தையும் மூடிக்கொள்ளும் போலிருந்தது. எப்ப ஊரைவிட்டுக் கிளம்பினானோ? மாட்டிக் கொண்டிருப்பானோ, அல்லது ஊரிலேயே தங்கி விட்டானோ? நான் வெட்டியாய் அலைகிறேனோ?... ராஜேஸ்வரியின் அழுத முகம் சகிக்கவில்லை...
''ரலாமசுப்பூ? ராமசுப்பூ?'' என்று குரல் கொடுத்துக்கொண்டே போனான். எங்கிருந்தோ நாயொன்று நீந்தியபடி அவனைத் தாண்டிப் போனது. நாய் நதியோட்டத்தோடேயே போய் வசம்பார்த்து ஒதுங்கிக் கொண்டுவிடும்...
நல்ல இழுவை வெள்ளம். வெள்ளம் அதிகரித்தாற் போலிருந்தது. காலடியில் மண் பறித்தபடி இரைச்சலாய் ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம். மூச்சிறைத்தது அவனுக்கு. தலையை முங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை மட்டுப்பட்டால் பரவாயில்லை. மழை ஆனால் குறைகிறாப்போல இல்லை. நல்ல வீதியகல ஆறு. எந்தப்பக்கம் மாட்டி ஒதுங்கித் தத்தளிக்கிறானோ. இந்த இருட்டில் கண்டுபிடிக்கக் கூட முடியுமா தெரியவில்லை. ஆற்றின் சத்தம் ஹோவென்ற பேரிரைச்சல். பள்ளிக்கூடம் விட்ட குழந்தைகளாட்டம் கும்மாளமிட்டது ஆறு. ''ராமசுப்பூ?'' என்று கத்தினான்.
ஹ்ரும், என்று எங்கிருந்தோ முனகல் கேட்டது. ''சுப்பூ?'' என்று கத்தினான். ''ம்'' என்றது குரல். ''பயப்படாதே சுப்பு. வந்திட்டேன்...'' - ''ஹ்ரும்'' - முனகல் திசையில் விறுவிறுவென்று போனான். நினைத்த வேகத்தில் போக முடியவில்லை. வெள்ளம் இப்போது தோளுக்கு வந்திருந்தது. என்ன சுழிப்பு. என்ன நுரை. கொஞ்சம் அசந்தாலும் ஆளை உருட்டி இழுத்துப் போய்விடும். நடை என்ன. தாக்குபிடிச்சு நிற்கவே திணறியது. கடும் இருட்டு. குப்பையும் செத்தையுமாய் மிதந்தன. மண்வாசனை. சிவப்புத் தண்ணீர்... காபி, டீ போல ஒரு நிறம்.
''ஹ்ரும்...''
புதரில் செருகிக் கிடந்தான் ராமசுப்பு. அரைமயக்கம். ''வந்திட்டேன் சுப்பு...'' என்று அவன் இடுப்பைத் தொட்டான். இடுப்புக்குக் கீழே தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்தது அவனை. அந்தப் பக்கம் ஏதோ மேடு. கையில் எந்த மரத்தின் கிளையையோ பற்றிக் கொண்டிருந்தான். ரொம்ப பயந்திருந்தான்.
''என்னைப் பிடிச்சிக்க ராமசுப்பு. நான் இருக்கேன்...''
ராமசுப்பு அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான். ''பயப்படாதே ராமசுப்பு.'' திரும்பும் வழி அத்தனை சிரமமாய் இராது. ஆற்றின் போக்கோடு போவதுதான். காலை மாத்திரம் ஜாக்கிரதையாய் ஊனி, ராமசுப்புவைத் தோளில் அழுத்திக் கொண்டு, விர்ரென்று போனான். நதியோட்டத்தோடேயே, ஆனால் மேட்டுப்பக்கம் பார்த்து பார்த்து, ஊனி, வேகத்தைத் தளர்த்திப் போனான். திடுதிப்பென்று தரை சீராக இல்லாமல் பள்ளமாய்க் கிடக்கும். துழாவி எட்டுவைத்துப் போகவேண்டி வந்தது. அசந்து மறந்தால் ஆளை விழுத்தாட்டி இழுத்து உருட்டிரும்.
நதியோட்டத்தில் திரும்பும் தூரம் யோசனையாய் இல்லை. ஆனால் எதிர்த்துப் போக எவ்வளவு சிரமப்பட வேண்டியதாகி விட்டது... ராமசுப்பு தோளில்... குழந்தைபோல!
படித்துறைப் பக்கம் ஜனங்கள் காத்திருந்தார்கள். அவனைப் பார்த்ததும் கயிறு வீசிப் போட்டார்கள். ரெண்டு மூணு முறை கயிறு அவனை எட்டவில்லை. அவன் பிடித்துக் கொண்டதும் அப்படியே இழுத்தார்கள்.
ராமசுப்புவின் வயிற்றை அமுக்கி மயக்கம் தளர்த்தினான். ''ஒண்ணுமில்ல. பயந்திருக்காரு...'' என்றான்.
வீட்டில் கொண்டுபோய்ப் படுக்கவைத்தபோதும் மழை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. மணி பத்து. காலை அரக்கப் பரக்கத் தேய்த்து சூடுபடுத்தினான்.  மெல்ல தெளிவு வந்ததும், ராமசுப்பு கையெடுத்துக் கும்பிட்டான்.
பதில் சொல்லாமல் வேங்கடபதி எழுந்து லாரியாபிஸ் வந்தான். ஈரத்துணிகளைப் பிழிந்து துவட்டிக் கொண்டான். என்ன மழை, என்று நினைத்துக் கொண்டான். ராமசுப்பு கையெடுத்துக் கும்பிட்டதை நினைத்துக் கொண்டான். பயந்து விட்டான், என்றிருந்தது.
காலையில் வெள்ளம் மட்டுப் பட்டிருந்தது. வெள்ளம் பார்க்க ஊரே திரண்டிருந்தது. அவனருகில் வந்து நின்றாள் ராஜேஸ்வரி...
''எப்பிடி இருக்காரு?''
'தூங்கறாரு...'' என்றாள்.
''போ. அவரைப் பாத்துக்க பத்திரமா. ரெண்டுபேரும் நல்லாருங்க'' என்றான் வேங்கடபதி.
>>> 
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842
Thursday, February 14, 2019
ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்
முழுத்தொகுப்பு
எஸ். ங்கரநாராயணன்

றிவிற் சிறந்த இந்த அவையை, இந்த அருமையான மாலை நேரத்தில் வணங்கி மகிழ்கிறேன். தோழி ஜெயந்தி சங்கரின் இதுவரை வெளியான மொத்தக் கதைகளையுமாகத் தொகுத்த நூல் வெளியீட்டு விழா இது. ஒரு எழுத்தாளனின் அல்லது எழுத்தாளினியின் வெற்றியின் முதல் படிக்கட்டு அல்ல, இரண்டாவது படிக்கட்டாகவே இதை நான் பார்க்கிறேன். மூன்றாவது மைல்கல் என்றுகூட இதைச் சுட்டலாம். காரணம் ஜெயந்தி சங்கரின் பெரும்பாலான கதைகள் பரவலாய்ப் பல்வேறு சஞ்சிகைகளிலும், இணையதள இதழ்களிலும் முதல் பிரசுரம் கண்டவை. பின் அவை நூல்களாக ஒருங்கமைவு கண்டன. இப்போது அவற்றின் மகா மாலை உருவாக்கப்பட்டுள்ளது. அறுபதடி ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்துகிறாப் போல ஒரு பிரம்மாண்டம் இதில் நமக்குக் கிடைக்கிறது. அவருக்கும் ஹா, என்கிற ஒரு திகட்டலும், சிறு புன்னகையும் சிறு கர்வமும் கூட இதில் கிடைத்திருக்க வேண்டும். எனது இரு பெருங்கதைக் கொத்துகள் இப்படி கலைஞன் பதிப்பகம் தயவில் வெளியானபோது எனக்கும் இப்படி ஒரு நெஞ்சுவிரித்த சுவாசம் வந்தது. அப்படியொன்றும் நமது வாழ்க்கை, அதுசார்ந்த கணக்குகள், யோசனைகள், அப்படியாய் நாம் செலவழித்த மணித்துளிகள் வீணாகிப் போய்விடவில்லை என்கிற சிறு ஆசுவாசம்.  அன்றாட நியதிகளிலும், புதிதாய் அவ்வப்போது தலைகாட்டும் நெருக்கடிகளிலும் இடையிடையே காலத்தை மிச்சம் பிடித்து, சேமித்து, சேகரித்த நிமிடங்களில் தேடிய பொக்கிஷங்கள் இவை அல்லவா? இவை ஆவணங்கள். – ஆனாலும் இவை என்னை அடையாளப் படுத்துகின்றன.
ஜெயந்தி சங்கரின் ஒரு நாவலுக்கு முன்பு நான் முன்னுரை தந்திருக்கிறேன். அப்போது அது சொல்லோவியம் என்கிற இணையதள இதழில் தொடராக வந்து கொண்டிருந்தது. அவர் எழுத்தில் ஒரு இரைச்சலான உற்சாகமும், கன்றுக்குட்டித் துள்ளலும் பார்த்து மகிழ்ந்த கணம் அது. திண்ணை என்கிற இணையதள இதழில்தான், அவரது நாலேகால் டாலர், என்ற சிறுகதை வெளியானபோதுதான், அவரை அடேடே, என நான் கவனிக்க நேர்ந்தது. சாயல்கள் இல்லாத,அதேசமயம் ஓர் எளிமை எனக்கு அந்தக் கதையில் கிடைத்தது. இந்த எழுத்துக்கு நெடும் பயணம் உண்டு என உணர்த்தியது அந்தக் கதை. பெருந்திரட்டாக அது இன்று ஆலமர உருக் கண்டது காலம் செய்த கொடைதான். எப்பெரும் முயற்சி இது. பதிப்பாளர் காவ்யா சண்முகசுந்தரம் இதை துணிச்சலுடன் சாத்தியம் ஆக்கியிருக்கிறார். அவர் முயற்சியால் இது இன்று வெளியிடப்படுகிறது. அவரது முயற்சிகள் வெல்க, என மனதார வாழ்த்துகிறேன்.
கதைகள் பற்றிய என் சாயல், என் பாணி, என் சிந்தனைக்குவிப்பு வேறு. ஜெயந்தி சங்கர் அவ்வகையில் வேறொரு துருவத்தில் இருக்கிறார். அதனாலேயே அவர் கதைகள் எனக்கு எப்பவுமே ஆச்சர்யம் தருவதாக இருக்கிறது. என் கதைகள் அவரை ஆச்சர்யப்படுத்தும் என்றே நான் நம்புகிறேன். நிலைக்களன்கள், சம்பவங்கள், பாத்திர வார்ப்புகள், உரையாடல்கள், முடிவு,என எல்லா விதங்களிலும் அவர் என்னில் இருந்து மாறுபடுகிறார். வேறுபட்டு சிந்திக்கிறார். அவர் எனக்குக் காட்டித் தரும் உலகம் புதியதாகவே எனக்கு வாய்க்கிறது.
அவரது பாத்திரங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் எனக்கு புதிய உலகை அறிமுகம் செய்ய வல்லதாய் இருக்கிறது. முழுக்க முழுக்க நகரச் சூழல் சார்ந்த பிரச்னைகளாக அவை அமைகின்றன. அவரது மனமே கிராமத்தில் அல்ல, நகரத்தில் புழங்கி ஒருவித கவனக் கூர்மையுடன் பரபரப்பாக இயங்குவதாய்த் தெரிகிறது. உற்சாகக் கொப்பளிப்பு அதில் தெரிகிறது. புதுவெள்ள நுரைச் சத்தம். காலம் உருண்டோடுகிறது. அவருக்கும் ஆண்டொன்று போனால் வயது ஒன்று போகும்… ஆனால், இந்தக் கதைகளில் இயங்கும் அவர் மனம்… அது பொய்யோ என நினைக்க வைக்கிறது.  இதுவே அவர் பெற்றுவந்த வரம்தான். இன்னும் நிறைய எழுதப்போகிறார் இவர். இன்னொரு ஆஞ்சநேயரும், நாம் அவருக்கு அளிக்கிற வடைமாலையுமாக இலக்கிய உலகில் ஜொலிக்கப் போகிறார். நல்வாழ்த்துக்கள்.
புனைவு சார்ந்து எனக்கு சில தன்னொழுங்குகள் இருக்கின்றன. அதாவது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இப்படியாய் ஒரு தன்னொழுங்கு உண்டு. அவை சமுதாய ஒழுங்குகளோடு ஒத்துப் போக வேண்டியது கூட இல்லை. ஆனால், ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு தன்னொழுங்கு,  ஆதார சுருதி இருக்கத்தான் இருக்கிறது.
வாழ்க்கை அல்ல புனைவு. புனைவு என்பது வாழ்க்கையின் கெட்டிச்சாயம். சுண்டக் காய்ச்சிய பால் போன்ற விஷயம் அது. வாழ்க்கை தர்க்கத்தில் அடங்காதது. கற்பனைக்கு அது உள்ளடங்குவதே இல்லை. அதுவே அதன் ஆச்சர்யமும், சுவாரஸ்யமுமாய் இருக்கிறது. பல்வேறு நிலையற்ற ஒழுங்கற்ற வடிவங்களின் கோர்வையாகவே இயற்கையின் செயல்பாடுகள் இருக்சகின்றன. அதன் ஒழுங்குகளில் ஒரு சீரற்ற தன்மை, பிசிர் இருக்கிறது. வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிற இந்த மனித உயிருக்கு இது ஆயாசப்படுத்தும் அம்சமேதான். கனவுகளும் எதிர்பார்ப்புகளுமான மனிதன், ஆகவே அதன் பயனான ஏமாற்றங்களும் அதிருப்தியும் சந்திக்க நேர்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஆகவே சமுதாயம் சில ஒழுங்குகளைக் கட்டமைத்து ஓரளவு சீரான பயணத்தை, பாதையை மானுடத்துக்கு வழங்கப் பார்க்கிறது. இங்கேதான் கலை உதவிக்கு வருகிறது என்பேன். அது சீரற்ற தன்மையையும் சுட்டி, அதைச் சீராக்குகிற மனித யத்தனத்தையும் முன்வைத்து ஒரு பயிற்சிக்களத்தை சித்திரமாய்க் காட்டுகிறது கலை. கலைக்கு தர்க்கம் முக்கியம். ஒழுங்கு முக்கியம். ஒழுங்கானதற்கு ஒரு அழகு உண்டு. வாழ்க்கை அழகானதுதான் என்கிறது கலை. உலகில் அழகற்றது எதுவும் இல்லை. இதைச் சொல்ல, இப்படிச் சொல்லித் தர, இப்படிப் பார்க்கப் பயிற்றுவிக்க ஒரு கலைஞன் பிறக்கிறான்.
ஆனால், கலை என்பது ஒத்திசைவா? என்றால் அல்ல. கலை என்பது முரண். ஒரு விஷயத்தில் ஒருவன் முரண்படும்போதுதான் சிந்தனை பிறக்கிறது. மாற்றுக் கருத்து, அல்லது அதுவரை புலப்படாத ஒன்று அதில் கிடைத்தால் கலைஞன் அதைக் கைமாற்ற உந்தப் படுகிறான்.
வாழ்க்கை புனைவு வடிவங்களை கலைஞன் மனத்தில் அள்ளிக் குவித்துக் கொண்டே இருக்கிறது- கொடியில் தொங்கும் சட்டையின் நிழல் வி.வி.கிரி போலிருந்தது என்று வைதீஸ்வரன் ஒரு கவிதை சொல்வார். சில காட்சிகளே போதும் ஒரு பாத்திரத்தின் உள்ளக் கிடக்கையை அப்படியே முன் நிறுத்திவிடும். பிச்சைக்காரி/ குழந்தைக்கு வைத்தாள்/ திருஷ்டிப் பொட்டு, என நான் ஒரு முறை எழுதினேன்.
ஆனால்,, சந்தித்த மனிதர்களை வைத்து அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி புனைகதைகளை எழுதுவது எனக்கு உவப்பாய் இல்லை. அவர்களைப் பற்றிய என் அபிப்பராயங்களை பகிரங்கப் படுத்துவதில் எனக்கு கூச்சம் உண்டு. அடிப்படையில் அவர்களைப் பற்றிய என் புரிதல், அதுவே முழுக்க சரி என நான் என்னையே அங்கீகரிப்பது இல்லை. நாளை அந்தப் பாத்திரங்களைப் பற்றிய என் கணிப்புகள் ஒருவேளை தவறாகவும் அமையலாம். அப்போது அவற்றை பகிரங்கப்படுத்திய நான் வெட்கப்பட நேரவே செய்யும் என்கிற கவலை எனக்கு உண்டு. இந்தக் கவலையை மீற,புறந்தள்ள எப்போதுமே நான் முன்வந்தது இல்லை.
ஆச்சர்யகரமாக, ஜெயந்தி சங்கரின் கதைகள் உண்மை சார்ந்தவை. அவற்றின் புலம் நிசமானது. சம்பவங்கள்கூட நிஜத்தின் உக்கிரம் சமந்தவை. அவை பிரச்னைகளை ஆதாரமாகக் கொண்டு ஒரு வலிமையான சூழலை உருவாக்கி கதைகளில் நம்மைச் சிக்க வைக்கின்றன. பிரச்சினைகளின் வீர்யத்தை அப்படியே மேல்தோல் உரித்தாப்போல பதிவு செய்கிறதில் அவர் மிக்க ஈடுபாட்டுடன் இயங்குகிறார். வாழ்க்கையின் நேரடி அனுபவத்தில் அலலாமல் இது சாத்தியமே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது. வேடிக்கை, கேளிக்கைக் கதைகள் அவரிடம் இல்லவே இல்லை. அறவே இல்லை. இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அல்ல. பொழுதுபோக்கு அம்சம் அதில் கிஞ்சித்தும் தேவை இல்லை என்பது ஜெயந்தி சங்கரின் தீர்மானம்.
நான் தயங்குகிற ஒரு விஷயம்.இவரால் கையாளப்படுவதை நான் ஆச்சயத்துடன் கவனித்து மகிழ்கிறேன். ஜெயந்தி சங்கரின் சிறப்பு என்ன எனில், இந்தப் பாத்திர வார்ப்புகள் பற்றிய தன் அபிப்பிராயத்தை எப்படியோ இவர் கதையில் தவிர்த்துவிட்டு, கதை சொல்லப் பழகி யிருக்கிறார். ஜெயந்தி சங்கரின் பேரடையாளம் இது. பாத்திரங்களின் இயங்குதளம் பற்றிய அவரது, ஜெயந்தி சங்கரது விமரிசனத்தை நாம் எங்குமே கண்டுபிடிக்க முடியவில்லை. கவனப்படுத்தும் பாத்திர வார்ப்புகளை விருப்பு வெறுப்பு அற்ற நிலையில், தன் கருத்தை முன் நிறுத்தாமல் அவரால் பகிர முடிகிறது. இந்த நிலையை அடைய ஒரு முதிர்ச்சி நிலை கட்டாயம் வேண்டும். வாழ்க்கையிலேயே யாரையும் குறையெனக் காணாத நல்ல மனசு வேண்டும். அல்லது அதற்கான பயிற்சி வேண்டும். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பார் வள்ளுவர். நல்லவை நன்மை பயக்கிறதில், தன்னையும் வளர்த்துக் கொள்ளும் பாங்கு அவர் எழுத்தில் அவருக்கே கூட,  அதனால் நமக்கும் சித்திக்கிறது என்று சொல்லலாமா?
ஒரு கதைஞரின் ஒட்டுமொத்தக் கதைகளில் அந்த எழுத்தாளர் பற்றிய கவனம் வாசகனுக்குத் தட்டவே செய்யும். அவ்வகையில் ஜெயந்தி சங்கர் பெருமைப்பட அவரது ஒவ்வொரு கதையுமே அவரது முத்திரையை, சுமக்காமல் சுமந்து, பொலிவதை அவதானிக்க முடிகிறது. காவ்யா இல்லாமல் இந்தத் தொகுப்பு சாத்தியமே இல்லை. என்ற அளவில் பதிப்பகத்துக்கு மீண்டும் என் பாராட்டையும் வாழ்த்தையும் சொல்லி அமர்கிறேன்.
(டிஸ்கவரி புக் பேலசில் - நூல் வெளியீட்டு உரை)