Wednesday, November 29, 2017

'விறகு' – வெட்டி
 
அன்டன் செகாவ்
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

''தர்மப்பிரபு, உங்கள் பரிவுப் பார்வையை என்மீது செலுத்துங்கள். நான் மூணு நாளா எதுவுமே சாப்பிடவில்லை. கடவுளாணை. குளிருக்கு ஒதுங்க விடுதிச் செலவுக்கான அஞ்சு கோபெக், அதுவே என்னிடம் கிடையாது. ஒரு கிராமத்தில் அஞ்சு வருஷம் நான் பள்ளிக்கூட வாத்தியாரா வேலை பார்த்தவன். ழெம்ஸ்ட்வோ விவகாரத்தில், அதில் சம்பந்தப்படவே இல்லாத போது,  எவனோ என்னையும் மாட்டிவிட்டுட்டான். இப்ப வேலை யிழந்து நிற்கிறேன். ஒரு வருஷமாய் இப்படி போக்கத்துப் போயி அல்லாடித் தவிக்கிறேன்...''
      இவர் ஸ்கோர்த்சவ். பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் வழக்கறிஞர் அவனைப் பார்த்தார். கந்தையான அவனது கருநீல மேல்கோட்டு. இரத்த சோகையான குடிபோதைக் கண்கள். செம்மைப்பட்ட கன்னங்கள்... அவனை எங்கேயோ பார்த்தாப் போல் இருந்தது.
       ''... இப்ப எனக்கு காலுகா மாநிலத்தில் ஒரு வேலை கிடைச்சிருக்கு...'' அவன் தொடர்ந்தான். ''என்கிட்ட தம்பிடி கிடையாது. எப்படி அங்க நான் போக முடியும்? கருணை காட்டுங்க புண்ணியவான். கேட்க அவமானமாகத்தான் இருக்கிறது. ஆனால்... என் சூழல்... எனக்கு வேற வழியில்லை...''
      அவன் ஷூக்களின் பனியுறைகளைப் பார்த்தார் அவர். ஒண்ணு பாத அளவே மறைத்திருக்க, மற்றது உயர்காலணி போல காலுக்கு மேல்வரை போர்த்தியிருந்தது. ஆ, ஞாபகம் வந்தது.
      ''தபாரு, நேத்து முந்தாநாள் நான் சதோவாய்த் தெருவில் உன்னைப் பார்த்தேன். அப்ப என்ன சொன்னே? கிராமத்துப் பள்ளிக்கூட வாத்தியார்னு நீ உன்னைப் பத்திச் சொல்லலியே? ஒரு மாணவன், உன்னை வெளிய அனுப்பிட்டாங்கனு சொன்னே?''
      ''இல்ல, இல்லவேஇல்லே. அப்படி இருக்க முடியாது ஐயா.'' அவன் குரலெடுக்காமல் திணறலாய்ச் சொன்னான். ''நான் கிராமத்து வாத்தியார்தான்... வேணுன்னால் என் அடையாளக் காகிதங்களைக் காட்டுவேன் ஐயா.''
      ''பொய் மேல் பொய்யா, போதும் எனக்கு. நீ மாணவன்னு தான் சொன்னே, எதுக்காக உன்னை வெளியேத்தினாங்க, அதைப்பத்தியும் என்ன சொன்னே, ஞாபகம் இருக்கா?'' ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் அவர் முகம் சிவந்தது. அந்தப் பராரியைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார். ''இது கண்டிக்கத்தக்க பித்தலாட்டம். அப்டியே உன்னைப் போலிசில் பிடிச்சிக் கொடுப்பேன்... ராஸ்கல். நீ ஏழை. பசித்திருக்கிறாய்... ஆனால் அதுக்காக இப்படி வெட்கங்கெட்டு பொய் சொல்லி புரட்டித் திரிய உனக்கு எந்த உரிமையும் இல்லை!''
      வீட்டின் வாயிற்கதவை அந்தப் பராரி இறுகப் பற்றிக்கொண்டான். எழுந்து பறக்க வாட்டம் பார்க்கும் பறவையாய் வெறிக்கும் பார்வை. 
      ''நான்... பொய் சொல்லல்ல ஐயா'' என அவன் முணுமுணுத்தான். ''என் காகிதங்களை வேணா காட்டறேன்றேன்ல?...''
      ''அதை யார் நம்பறது?'' அவருக்கு இன்னும் ஏமாற்றப்பட்ட கடுப்பு. கிராமத்து மத்த வாத்திமாரின், பிற மாணவர்களின் இரக்கத்தை சம்பாதிக்க உனக்கு இப்படி ஒரு நாறப் பொழப்பு. கேவலமான ஈனப் பொழப்பு. உன்னையெல்லாம் சும்மா விடறதாவது?''    
      ஆத்திரக் குமுறலில் அவர் அவனை வசைமாரி பொழிந்தார், இரக்கமே யில்லாமல். பொய் அவருக்குப் பிடிக்காது. துக்கப்பட்டவரிடம், இரக்கம் காட்டுவது அவர் சுபாவம். ஆனால் பொய் சொல்லி அதைச் சம்பாதிப்பது? அவருக்கு ஆத்திரமும் வெறுப்பும் மண்டியது. அவரது நன்னடத்தையில் அவன் சாணியடித்தான். அவர் மனசாரச் செய்ய நினைக்கிற உதவி, ஏழைகளுக்கு அவரால் முடிந்த உபகாரம்... அதையே அவன் கேலியாக்கி விட்டான்...
      பிச்சைக்காரன் முதலில் சமாளிக்கப் பார்த்தான். சத்தியம் பண்ணிப் பார்த்தான். அப்புறம் அப்படியே தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றுவிட்டான்.
      ''ஐயா...'' நெஞ்சில் கை வைத்துச் சொன்னான். ''உண்மையாய்ச் சொன்னால்... நான்... சொன்னது பொய்தான் ஐயா! நான் மாணவனுமல்ல, வாத்தியாருமல்ல... எல்லாமே இட்டுக்கட்டியவை. ருஷ்யாவின் இசைக்குழுவில் நான் இருந்தேன். எனது மொடாக்குடியினால் என்னை அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். ஆனால் நான் என்ன செய்ய சொல்லுங்கள். கடவுளாணை, நம்புங்க. பொய் சொல்லாமல் நான் எப்பிடி வாழறது... நிசத்தைச் சொன்னால் யாராவது எனக்கு பிச்சை போடுவார்களா? நிசத்தைச் சொன்னால் எனக்கு வயித்துல ஈரத்துண்டு தான். பசியிலும் தங்க விடுதி கிடைக்காமல் இந்தக் குளிரிலும் நான் விறைத்துப் போவதே கண்டபலன். நீங்க சொல்றது சரி. எனக்குப் புரியுது. ஆனால்... நான் என்ன செய்ய?''
      ''என்ன செய்யன்னா கேட்கிறே?'' அவன் அருகே போனார். ''எதாவது வேலை செய்து... உழைச்சி வாழணும்.''
      ''உழைப்பு... எனக்குத் தெரியாம என்ன? எனக்கு எங்க வேலை கிடைக்கும்?''
      ''பைத்தாரத்தனம்... நீ இளமையா, உடம்பு வலிமையோட, கிழங்காட்டம் இருக்கே. நீ தேடினால் உனக்கு வேலை கிடைக்கும். ஆனால் நீ சோம்பேறி சுப்பன். உடம்ப அசக்கவே யோசிக்கிறாய். குடி வேற. விடாக்குடி மொடாக்குடி! இப்ப நீ செஞ்சிட்டிருக்கறதெல்லாம் வெறும் பொய்யி, பித்தலாட்டம்... உன் உடம்புலயே ஊறிப்போன குணங்கள் அவை. பொய் சொல்றது, பிச்சை எடுக்கறது, அதைத் தவிர வேற எதுக்கும் லாயக் படமாட்டே. ஒழுங்கான மரியாதையோட நீ வேலை ஏத்துக்கிட நினைச்சால், இந்நேரம் நீ எந்த அலுவலகத்திலாவது வேலையில் இருப்பாய். ருஷ்ய இசைக்குழுவில் இருப்பாய். பில்லியர்ட் பந்து பொறுக்கிப் போடக்கூட போகலாம். லேசான வேலை. சம்பளம் உண்டு. உடல் அலுப்பு கிடையாது. ஆனாத் ..... நீ உடம்பு வணங்க வேலை செய்ய மனசு வைக்கல. வீட்டு உதவியாளாகவோ, கம்பெனி எடுபிடியாகவோ கூட நீ சரிப்பட்டு வரமாட்டே. யாருக்கும் அடங்கிப்போக, பணிய உனக்கு வணங்காது. நீ உடம்பை அசக்கவே யோசிக்கிறாய்.''
      ''நீங்க சொல்றது...'' என்றான் அவன். ஒரு வறண்ட புன்னகை. ''உடம்பு வளைச்சிச் செய்யிற எந்த வேலை எனக்குக் கிடைக்கும்ன்றீங்க? ஒரு கடைக்காரனா ஆக எனக்கு வயசு தாண்டிட்டது. கடை வைக்க சிறு பையனா ஆரம்பித்து படிப்படியா வரணும். வீட்டு வேலைக்கு என்று என்னை யார் வெச்சிக்குவா? நான் அப்படி ஆள் அல்லன்னு பார்த்தாலே தெரியுது. தொழிலாளியாப் போறது...  அதுக்கும் அந்த வேலை தெரியணும். எனக்கு அதொண்ணும் தெரியாதுங்களே...''
      ''இழவெடுத்தவனே, எதுக்கும் சாக்கு போக்கு சொல்றதே உனக்கு வழக்கமாயிட்டது. அட வெறகு வெட்டறதுகூட வேலைதான். நீ அதை விரும்புவியாக்கும்?''
      ''அந்த வேலைகூட கிடைக்கணுமே ஐயா. கிடைச்சால் மறுக்கமாட்டேன். இப்ப வழமையா வெறகு வெட்டிப் பிழைக்கறவனுகளே வேலையில்லாமல் அலைகிறார்கள்...''
      ''வெட்டிவீரமணிகள் எல்லாரும் பேசும் பேச்சு இது. வேலையைச் சொல்லுங்கன்றே. வேலை தந்தால் உடனே தட்டிக் கழிக்கறே. நான் வேலை தரேன். விறகு வெட்டும் வேலை... செய்யறியா?''
      ''நிச்சயமா... செய்யறேன் ஐயா...''
      ''ஆகா. பார்க்கலாம்... நல்லது, ரொம்ப நல்லது...'' அவர் படபடத்தார். உள்ளூற சந்தோஷத்
டன் கைகளைத் தேய்த்துக் கொண்டார். சமையல் அறையில் இருந்து சமையல்காரியை அழைத்தார்.
      ''பாரு ஓல்கா,'' என்றார். ''இந்தாளை லாயத்துக்குக் கூட்டிப்போ. கொஞ்சம் விறகு பிளக்கட்டும்...''
      திகைப்புடன் தோளைக் குலுக்கியபடி வேண்டா வெறுப்பாக அவன் சமையல்காரியைப் பின்தொடர்ந்தான். அசமந்த நடை, அதிலேயே தெரிகிறது... பசிக் கொடுமையாலோ, பணம் கிடைக்கும் என்றோ அவன் அவளுடன் போகவில்லை. அவரது குத்தல் வார்த்தைகள் ஏற்படுத்திய அவமானம்... அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட நேர்ந்துவிட்ட சூழல், அதுவே அவனைக் கால்நகர்த்திச் செல்கிறது. குடித்திருந்த வோத்கா வேறு ஆளைத் தள்ளாட்டிச் சென்றது. உடம்பு ஜுரம் கூட இருக்கலாம். அவனுக்கும் வேலை செய்கிற யோசனையே இருந்ததாகத் தெரியவில்லை.
      அவர் கிடுகிடுவென்று உணவுக்கூடத்துக்கு வந்துவிட்டார். அங்கிருந்து லாயமும் தெரியும். ஜன்னல் வழியே வெளி முற்ற நடவடிக்கைகளையும் பார்க்கலாம். சமையல்காரியும் அந்தப் பராரியும் பின்வாசல் வழியே முற்றத்துக்கு வந்து பனிச்சேற்றை மிதித்தபடி லாயத்துக்குப் போவது தெரிந்தது. ஓல்கா அவனைக் கோபத்துடன் பார்க்கிறாள். தாடையை இடித்துக்கொண்டு ஆத்திரமாய் லாயத்தின் கொண்டியைத் திறந்தாள். க்ளாங்கென ஓலமிட்டு விரியத்திறந்து கொண்டது கிராதிக்கதவு.
      நானும் இவனுமா அவ காப்பி நேரத்தில் இடைஞ்சலாயிட்டம்... என நினைத்தார் அவர். என்னமாய்ப் படம் எடுக்கிறாள் இவள்!
      அந்தப் போலி ஆசிரியன், அதாவது போலி மாணவன்... ஒரு மரத்துண்டுக் குவியலில் அமர்ந்தான். அவர் பார்த்தார். அப்படியே சிவப்புப் புள்ளியிட்ட கன்னங்களை கையால் தாங்கிக்கொண்டான். எதோ யோசனை செய்தான். சமையல்காரி அவனைப் பார்க்க ஒரு கோடரியை எறிந்தாள். ஆத்திரமாய் காறித் துப்பினாள். அவளின் உதடுகளின் துடிப்பில்... வசைமாரி பொழிகிறாள், என்று புரிந்துகொண்டார். அவன் வேணாவெறுப்பாய் ஒரு மரத்துண்டைத் தன் பக்கமாய் இழுத்து தன் கால்களுக்கு இடையே போட்டுக்கொண்டான். கோடரியை ஏனோதானோவென்று அதன்மேல் வீசினான். மரத்துண்டு ஒரு சிறு துள்ளலில் நழுவி விழுந்தது. திரும்ப அதைத் தன்பக்கமாய் இழுத்து... கையை ஊதிக்கொண்டான். திரும்ப கோடரியை உயர்த்தி, பூட்சையோ விரலையோ வெட்டிக்கொள்கிற பயத்துடன்... மரத்துண்டு திரும்ப உருண்டது.
      அவரது கோபம் இப்போது அடங்கிவிட்டிருந்தது. தன் மீதே அவருக்கு வெட்கமாய்ப் போயிற்று. அட ஒரு ஒண்ணுக்கும் உதவாத உதவாக்கரையை குடிகாரனை, ஒருவேளை காய்ச்சல் கூட அவனுக்கு இருக்கலாம்... கடுமையான கரடுமுரடான வேலை கொடுத்து, அதுவும் இந்தக் குளிரில், வாட்டுகிறோம்.
      ம் பரவாயில்லை. அவன் செய்யட்டும்... என நினைத்தபடி எழுந்து உள்கூடத்துக்குப் போனார். அவன் கஷ்டப்படட்டுமே. அவன் நல்லதுக்குத் தானே நான் அவனை இப்படி வேலை வாங்குகிறேன்...
      ஒரு மணி நேரத்தில், ஓல்கா வந்து, விறகு வெட்டப்பட்டு விட்டதாகச் சொன்னாள்.
      ''இந்தா, இந்த அரை ரூபிளை அவனிடம் கொடு'' என்றார் அவர். ''அவனுக்கு இஷ்டமானால் பிரதி மாதம் முதல் தேதி வரலாம், வந்து விறகு வெட்டித் தரலாம்... அவன் எப்ப வந்தாலும் நான் வேலை தருவேன்னு சொல்.''
      அடுத்த முதல் தேதி அந்தப் பிச்சைக்காரன் திரும்ப வந்து, திரும்ப அரை ரூபிள் ஊதியம் வாங்கிக்கொண்டான். அவனால் நிற்கவே முடியவில்லை. அதன்பின் அடிக்கடி அவன் வந்துபோக ஆரம்பித்தான். அவன் வரும்போதெல்லாம் எதாவது வேலை, இருந்தாலும் இல்லாவிட்டாலும், புதிதாய்க் கண்டுபிடித்தாவது தந்தார். வெளி முற்றத்துப் பனியைக் கூட்டச் சொன்னார். லாயத்தைச் சீரமைக்கச் சொன்னார். மிதியடிகளை தரைக் கம்பளிகளை உதறி தூசி தட்டச் சொன்னார். எப்பவுமே அவனுக்கு முப்பது முதல் நாற்பது கோபெக்குகள் சம்பளம் தந்தார். ஒருதடவை பழைய கால்சராய் கூட கொடுத்தனுப்பினார்.
      ஓர் இட மாற்றத்தின் போது அவனையும் சாமான்களைக் கட்டவும் எடுத்துச் செல்லவும் உதவச் சொன்னார்.  அந்த சமயம் அவன் ரொம்ப அயர்ச்சியாய் மயக்கத் தள்ளாட்டமாய் உம்மென்று இருந்தான். சரக்குவேனில் மேசைநாற்காலிகள் ஏற்றும் போது கூட தலையைத் தொங்கப் போட்டபடி நடமாடினான். அவற்றை அவன் தொடவே இல்லை. குளிரில் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது சோம்பலையும், பலவீனத்தையும் பார்த்து சாமான் ஏற்ற வந்தவர்கள் கேலியடித்தபோது அப்படியே திகைத்தாப் போல நின்றான். ஒரு காலத்தில் நல்ல உடுப்பாய் இருந்திருக்கலாம் என்கிற அவன் கோட்டின் கிழிசல்கள் அவர்களுக்கு வேடிக்கையாய் இருந்தன. வேலையாட்கள் போனதும் அவர் பராரியைக் கூப்பிட்டு விட்டார்.
      ''ம். என் உபதேசங்களை நீ காதுகொடுத்துக் கேட்டிருக்கே. அவற்றுக்கு நல்ல பலன் கிடைச்சாப்ல நினைக்கிறேன்...'' என்றபடி அவனுக்கு ஒரு ரூபிள் தந்தார். ''நீ வேலை செய்யச் சுணங்கவில்லை. துடிப்பாய் ஆகி வருகிறாய்... உன் பேர் என்ன?''
      ''லுஷ்கோவ்.''
      ''இதைவிட நல்ல வேலை தரலாம்னு பார்க்கிறேன் உனக்கு. இந்தளவு கடும் வேலை அல்ல, லுஷ்கோவ். உனக்கு எழுத வருமா?''
      ''வரும் ஐயா.''
      ''நான் ஒரு சீட்டு தரேன். நாளை இதை எடுத்துக்கிட்டுப் போ, என் சிநேகிதன் உனக்கு நகல் எடுக்கிற வேலை தருவான். ஒழுங்கா வேலை செய். குடிக்காதே. நான் சொன்னதை மறக்கக் கூடாது நீ. வாழ்த்துக்கள்!''
      அவருக்கு ஒரு மனிதனை நல்வழிக்குக் கொண்டுவந்ததில் திருப்தியாய் இருந்தது. லுஷ்கோவைத் தோளில் தட்டிக் கொடுத்தார். அவன் கிளம்பியபோது கை கூடக் குலுக்கினார்.
      அந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்டு போனவன் தான். லுஷ்கோவ் பிறகு விறகு உடைக்க என்று வரவேயில்லை.
      இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஒருநாள் திரையரங்கு ஒன்றில் நுழைவுச் சீட்டு வாங்க என வரிசையில் நின்றால், பின்னால்... ஒரு சின்ன உருவம். ஆட்டுக் கம்பளி கழுத்துப்பட்டி வைத்த உடை. தொப்பி கூட பூனைத் தோல். கோபெக்காக சில்லரைகளை எடுத்து,. மெல்லிய குரலில் அவன் காலரிக்கு சீட்டு வாங்கிக்கொண்டான்.
      ''ஏய் லுஷ்கோவ்? நீயா?'' அட நம்மாள்... ''என்னப்பா பண்ணிட்டிருக்கே இப்ப? எப்பிடி இருக்கே?''
      ''நல்லா இருக்கேன் ஐயா. இப்ப ஒரு நோட்டரி கிட்ட வேலையா இருக்கிறேன். 35 ரூபிள் தர்றாரு...''
      ''ஆகா... கடவுள் சித்தம். யதேஷ்டம் தான். ரொம்ப சந்தோஷப் படறேன் அப்பா. ரொம்ப... ரொம்ப சந்தோஷப் படறேன். லுஷ்கோவ், உனக்குத் தெரியுமா? ஒருவகையில் நீ எனக்கு கடவுள் கொடுத்த பிள்ளை போல. நான்தானே உனக்கு நல்வழி காட்டிவிட்டது. அப்ப, அன்னிக்கு நான் உன்னை என்னவெல்லாம் திட்டினேன், ஞாபகம் இருக்கா? அந்த வசவு தாளாமல் அப்படியே தரையோடு குறுகிப் போயிட்டே, இல்லியா? ம். நல்லது. என் வார்த்தைகளை அப்படியே பிடிச்சிக்கிட்டு, ஞாபகம் வெச்சிக்கிட்டு... நீ... இவ்வளவு தூரம்...''
      ''உங்களுக்கும் நன்றி ஐயா'' என்றான் லுஷ்கோவ். ''அன்னிக்கு உங்க வீட்டாண்ட நான் வந்திருக்காவிட்டால், நான் வாத்தியார்னும், மாணவன்னும் தான் சொல்லித் திரிஞ்சிக்கிட்டிருந்திருப்பேன். உங்க வீட்லதான் எனக்கு விமோசனம் கிடைச்சது. உண்மைதான் அது. நான் பாதாளத்தில் இருந்து மேலேறி வந்திட்டேன்...''
      ''எனக்கு அதுல அபார சந்தோஷம் அப்பா.''
      ''உங்க நல் உபதேசங்களுக்கும் உபகாரங்களுக்கும் நன்றி ஐயா. அன்னிக்கு நீங்க குடுத்த டோஸ்.... அருமை. உங்களுக்கும் உங்க சமையல்காரிக்கும் நான் கடன் பட்டிருக்கிறேன். அந்த நல்ல மனசுப் பெண்ணைக் கடவுள் காப்பாற்றுவார். அன்னிக்கு நீங்க குடுத்த அறிவுரை, அருமை. என் வாழ்நாள் முழுக்க நான் அதற்காக  உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன். அதுண்மை. ஆனால் உங்க சமையல்காரி, ஓல்கா, அவள்தான் என்னைக் கடைத்தேற்றியது...''
      ''அதெப்படி?''
      ''ஆமாம். அது எப்பிடின்னா...  நான் விறகு வெட்டன்னு உங்க கிட்ட வருவேன். வந்தால் அவள் ஆரம்பிப்பாள். ஆ குடிகாரா... கடவுளே கைவிட்ட கபோதி நீ. இன்னும் உனக்கு இழவு வரமாட்டேங்குதே... என்னைத் திட்டியபடியே என் எதிரே உட்கார்ந்து கொள்வாள். வருத்தத்துடன் என் முகத்தைப் பார்ப்பாள். அரற்றுவாள். ஏ துக்கிரி! உலகத்தில் சந்தோஷமே பார்க்காதவனே! நீ போய் எரிஞ்சி சாம்பலாகப் போறதும் நரகத்தில்தான்... கேடுகெட்ட குடிகாரா! அழுமூஞ்சிப் பீடை!... அப்படியே புலம்பிக்கிட்டே இருப்பாள். என்னைப் பார்த்ததில் அவள் அப்படியே நிலைகுலைந்து விடுவாள். மாலை மாலையா கண்ணீர் விடுவாள். ஆனால் என்னை எது ரொம்ப பாதிச்சது தெரியுங்களா ஐயா? எனக்காக அவள்தான் விறகு உடைத்தாள்! உங்களுக்குத் தெரியுமா ஐயா, ஒரு துண்டைக் கூட நான் பிளந்ததே இல்லை. அவளே எல்லா விறகையும் பிளந்து போட்டாள்! என்னை எப்பிடிக் காப்பாற்றி விட்டாள்! என்னை அவள் எப்படி மாற்றிக் காட்டினாள்! அவளைப் பார்த்தபடி நான் எப்படி குடியை நிறுத்தினேன்... எனக்கு விளக்கத் தெரியவில்லை. அவள் சொன்னதும், அவள் என்னிடம் காட்டிய புனிதப் பண்பும் தான் என் ஆழ் மனசில் பதிந்து என்னை மாற்றியது, என்று சொல்லலாம். நேரமாச்சி ஐயா. மணி அடிக்கப் போறாங்க...''
      லுஷ்கோவ் குனிந்து வணங்கி காலரியைப் பார்க்க நகர்ந்தான்.
---
The Begger _ by Anton Chekhov
Trs. in Tamil by S. Sankaranarayanan
M 97899 87842
email  storysankar@gmail.com


Tuesday, November 21, 2017

ஒரு லட்சம் புத்தகங்கள்
 
சுஜாதா
  •  

சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
-மகாகவி
Welcome to delegates of Bharathi International
நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.
"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."
"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"
"பேரறிஞர் அண்ணாங்களா?"
"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"
"அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்"
டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக "வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்."
"எதுக்கு?" என்றார் டாக்டர்.
"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க."
"உண்மையிலேயே தெரியாதுங்க"
"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்."
"ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது."
"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க"
"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க"
"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...?"
"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது.." டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..
"வள்ளுவர் சொல்லிக்காரு-
`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.
இப்ப யாருங்க பார்ப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு..."
ரிஸப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், "ஸர் யூ ஹேவ் எ மெஸேஜ்" என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள். "செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்" நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம்? புரியவில்லை. "தாங்க்ஸ்" என்று அவளைப் பார்த்தபோது "யூ ஆர் வெல்கம்" என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.
கூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி...
"டாக்டர் வணக்கம்"
"ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப?"
"உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க..."
"உத்கல் எங்க இருக்குது?"
பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ` என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.
"இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி"
"ஆ. ஐ ஸீ" என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.
"யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ?"
"நோ... ஐம் பிரிஸைடிங். மத்தியானம்... ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்?"
"எஸ். காண்ட் ஸ்பீக்."
"இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது"
"அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை.."
"டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?"
"சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா?"
"ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா....? என்னுடைய பைல்ஸுக்கு ஒத்துக்கிடலை."
"பாக்கலாங்க. முதல்ல ஆகட்டும்" செல்வரத்னம்... எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே. ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.
மணிமேகலைக்குச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.
மெஸ்ஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது "அவன் சர்வதேசக் கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடினான் அவனன்றோ" என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள் யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.
டாக்டர் லேசாக,
`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்...`
என்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.
"வணக்கம் ஐயா"
"வணக்கம். நீங்க"
இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
"கண்டு கன காலம்" என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.
எங்கோ பார்த்திருக்கிறோம்? மையமாக... "வாங்க. எப்ப வந்தீங்க?"
"இஞ்சாலையா?"
இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.
"நீங்கதானா செல்வரத்னம்?"
"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்." இப்போது முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.
"எங்க வந்தீங்க?"
"சும்மாத்தானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்." மனசுக்குள் மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும் "வாங்க வாங்க. உள்ள வாங்க." என்றார்.
அறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.
"விழாவில எண்ட பேச்சும் உண்டு," என்றான்.
"அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து?"
"ஆமாம்."
"ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப.."
இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன...
"உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?"
"ஊர்ல யாரும் இல்லிங்க"
"அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?"
"தங்கச்சி இல்லைங்க," என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.
"என்ன சொல்றீங்க?"
"எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க"
"அடப்பாவமே. எப்ப? எப்படி?"
"ஆகஸ்ட் கலகத்திலதாங்க"
"ஐயையோ, எப்படி இறந்து போனாங்க?"
"தெருவில வெச்சு... வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்."
டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,
"ஏதாவது சாப்பிடறீங்களா?"
"கோப்பி" என்றான்.
"இத்தனை நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது."
"அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,"
"சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது?"
"நிகழ்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?"
"அப்படியா?"
"அருமையான புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீதங்கள்` 1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங் களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில எரிச்சாங்க."
"அடடா"
"அதை நான் சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்."
"எங்க சொல்ல விரும்பறீங்க?"
"இன்றைய கூட்டத்திலதான்"
"இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே"
"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?"
"கட்டாயம். கட்டாயம்"
"அதைத்தாங்க சொல்லப் போறேன்."
"அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே.."
"இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்."
டாக்டர் சற்றே கவலையுடன் "குறிப்பா என்ன சொல்லப் போறீங்க?" என்றார்.
"சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்."
"புரியலீங்க"
"ஐயா. நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு.. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா? டேப்ரிக்கார்டர் கொண்டு வந்திருக்கியா?
தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை. சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்னு பேரு. எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும், கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.
1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு `இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா?"
"எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு..."
"வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல்வாதிவாதிங்ககிட்டயா? ஏடிஎம்கே-காரங்க `இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க, டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே`ங்கறாங்க"
"இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க..."
"சொல்றேங்க. எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க - நாங்க அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க. ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக் கமேன்னாங்க.."
"நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க."
"அந்தப் புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவேம்.. கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே.. கண் முன்னாலயே. .." அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.
"ரொம்ப பரிதாபங்க"
கொஞ்ச நேரம் அழுதுவிட்டு "எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. " சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு, "எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?"
டாக்டர் மூக்கைச் சொறிந்து கொண்டார். "இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க..."
"அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா?
சொந்த சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ – கிளியே
செம்மை மறந்தாரடீ
-ன்னு பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?"
"அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்.."
"எனக்கு இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச் சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப் போறேன்."
"என்ன புத்தகம்?" என்றார் கவலையோடு.
"இந்த மாநாட்டு மலரை"
"எதுக்குங்க அதெல்லாம்...?"
"பாரதி சொன்னதை எதும் செய்யாம ஏர்கண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்?" அவன் எழுந்து வணங்கி விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.
டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம், ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். "பிப்பி கால்.. டாக்டர் மணிமேகலை"
பத்து நிமிஷத்தில் கால் வந்தது.
"மணி.. நான்தான்"
"என்ன, விசாரிச்சிங்களா? கிடைச்சிருச்சா?"
"ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்."
"அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க..."
"மணி. ஒரு சின்ன சிக்கல்..."
"என்னது? அருணாசலம் மறுபடி பாயறாரா?"
"அதில்லை மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்."
"பேசட்டுமே. உங்களுக்கென்ன?"
"அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்."
"என்ன செய்யப் போறான்?"
"யாழ்ப்பாணத்தில் லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம் வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து..."
"த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்"
"எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க"
"என்ன. கேக்குதா?"
"கேக்குது, கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்."
"எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?"
கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.
"என்ன செய்யச் சொல்றீங்க?"
"எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு.."
"அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க"
"எப்படியாவது.."
"வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்."
"சரி மணிமேகலை"
"கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு.."
டெலிபோனை வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி
இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு "எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே எண்ணல் வேண்டும்..." என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர் "தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே.." என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.
இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.
"முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்." என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.
"ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி..."
டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில் ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த் தார்.
பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.
"அடுத்து பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்."
தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.
டாக்டர் இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை.." என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.
செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை.


Friday, November 10, 2017

நன்றி நவம்பர் இதழ் கவிதை உறவு
யானைக் கூண்டு
எஸ். சங்கரநாராயணன்

ரண்டு ஊர்களுக்கு இடையே ஒரு காலத்தில் வனாந்திரமாய் இருந்திருக்கலாம் அந்த இடம், இப்போது ஆள் அரவமற்று. அமைதி அங்கே ஒரு நீர்க்குட்டை போலத் தேங்கிக் கிடந்தது. பெரும்பாலும் தரைப் பொட்டல். திடல் போல பூமி வெள்ளரியாய் வெடித்துப் பிளந்து கிடந்தது. நடுவே பாழடைந்த கோவில் ஒன்று. அதைப் பார்க்க வருவாரும் இல்லை. பராமரிப்பாரும் இல்லை. பூமியில் விலக்கி வைக்கப் பட்டாப் போல துண்டாடப் பட்ட இடமாய் அந்தப் பிரதேசம். மேலேறிச் செல்ல கற்கள் தாறுமாறாகக் கிடந்தன. சிலாட்களுக்கு பற்கள் இப்படி முளைத்து வளர்ந்து காணக் கோரமாய் இருக்கும். கோவில் மொத்தமுமே புதர் மண்டி செடி கொடிகளால் மூடி குகை மாதிரிக் கிடந்தது. சிலந்திகளின் வாசஸ்தலம். ஒட்டடை விலக்கிப் போக வேண்டும்.
சந்நிதியின் முன்னே ஒரு துரு பிடித்த காண்டாமணி. அதன் நாக்கு அசைவதை நிறுத்தி யுகங்கள் கண்டிருந்தன. பிறரது துக்கத்தை அறிவிக்கிற காண்டாமணி. அம்மனைக் கண்திறக்க இறைஞ்சுகிற காண்டாமணி. அதுவே, தான் பயன்படுத்தப் படாத துக்க அமைதியில் உறைந்து கிடக்கிறது. சந்நிதிக்குள் காளி. பத்ரகாளி. விளக்கு மாத்திரம் எண்ணெய்க் கரியுடன் தொங்குகிறது. வஸ்திரமும் காணாத விக்கிரகம். யாருமற்ற இந்தத் தனிமை அவளுக்கு எப்படி இருக்கும்? சூலாயுதம் ஏந்திய கரம். கூடவே அபய ஹஸ்தம் காட்டும் இன்னொரு கரம். அதைக் கொள்வார் இல்லை என்ற நிலை.
கொடியில் ஊர்ந்தபடி நகரும் பாம்போ, பொத்தென்று கீழே தவறி விழுந்து ஓடும் அணிலோ தவிர சப்தங்கள் இல்லை. அமைதிக் குட்டையில் ஒரு ப்ளக். அவ்வளவே. சில சமயம் வண்டுகள் ருய்யென்று விமான இரைச்சல் போட்டபடி ஒரு வட்டமடித்துவிட்டுப் போய்விடும். திரும்ப அமைதி பாசிபோல் மூடிக் கொள்ளும். வாயடைக்கப்பட்ட மௌனத்தின் ஆட்சி அது. அமர்ந்த நிலையில் அப்படியே அம்மன், சுற்றிலும் எதிலும் அசங்கல் கூட இல்லாத பட்சம், அவள் கால்மாற்றி உட்காரக் கூட இயலாதிருந்தாள். முதுகு வலி கண்டிருக்கலாம். அவள் விழிகள் திறந்திருந்தாலும் எதையாவது அவள் பார்க்கிறாளா என்பதே ஐயம் தான். காட்சிகள் கண்ணுக்குள் நகரா உறைவு கண்டிருந்தன.
பூமி சுழலுவதையே அங்கே நிறுத்திக் கொண்டிருந்தது. காற்றின் அசைவோ, மரங்களின் சிணுக்கமோ கூட இல்லை. இந்த உறைந்த நிலை இப்படியே எவ்வளவு நாள் இருந்தது. இன்னும் எவ்வளவு நீடிக்கும். மௌனத்தில் சிறு வெடிப்பு எப்போது எப்படி நிகழும். தானே இயங்க முடியாத காளியம்மன். இப்போது முகத்தில் கூட அந்த உக்கிரம் சிறிது அடங்கினாப் போல ஆகியிருக்கலாம். யாராவது தன்னை உலுக்கி அசைக்க அவள் காத்திருந்தாள். துக்கத்துடன் ஒரு விடுதலைக்கு தானே ஏங்கிக் கிடந்தாள். திகைத்து விக்கித்துக் கிடந்தது மௌனம்.
ஆகா வந்தான் ஒருவன். ஒரு யுவன். யார் அவன், எங்கேயிருந்து வருகிறான். எப்படி அங்கே வந்து சேர்ந்தான். நல்ல நிலா வெளிச்சம். பூமிக்கு புண்ணியாகவசனம் செய்தாப் போல நிலாச்சொம்பில் இருந்து பால் அந்தப் பிரதேசத்தில் ப்ரோஷணம் பண்ணப் பட்டிருந்தது. புனிதமாக்கப் பட்டுக் கிடந்தது வெளி. தோள் குலுக்கிய உற்சாக நடை. அவன் பாட்டுக்கு வந்தான். அந்த வெளியின் வெண்மைப் பளபளப்பு திகட்டத் திகட்ட எதோ பாடியபடி வந்தான். என்ன பாடல்? பாடலா அது… த்தூ. என்ன ராகம்? அபஸ்வரம். சீச்சி. உன்மத்த உளரல். ஆனந்தத்க்கு மொழி ஏது. பிதற்றல் வாழ்வின் உன்னத போதை. கொல்லென்று பூத்துச் சிரிக்கும் மலர்க் காடாய்க் கிடந்தது வெளி. ஒரு மலர் இல்லை. என்றாலும் நிலா, ஐஸ்கிரீமாய் உருகி வழியும் நிலா. பூமியின் கவிந்த இருள் எனும் விக்கிரகத்துக்கு பாலாபிஷேக நேரம். ஹ்ரும், என்று கண் சிவக்க செருமிக் கொண்டான். அப்படியே துள்ளினாப் போல நடை. வேட்டிக்குள் கால் வீசி வீசி, கால் வேட்டிக்கு வெளியே வரவர ஒரு குளிர்ச்சி உள்ளே பாய்ந்து தடவி நிறைக்கிறது. ஒரு கெட்ட வார்த்தையை உரக்கச்சொல்லி சிரிக்கிறான். வாய் நிறைய மேலும் மேலும் கெட்ட வார்த்தைகள் பொங்கின. இயற்கை தரும் போதை…
சட்டென நின்றான். பார்த்தான். என்ன இடம் இது. எதோ கோவில். என்ன கோவில் இது? எத்தனை காலமாக இப்படி மூடிக் கிடக்கிறதோ. கொடிகளும் புதருமாய் உள்ளே புதையல். திரும்ப ஒரு பன்றிச் செருமல். செறிவாய் உணவெடுத்த இன்ப ஏப்பம் அது. இது மனதின் பசி. இன்னிக்கு எதோ விசேசம்னு நினைச்சமே. சரிதானப்பா… உள்ளே வந்து அந்த மண்டபத்தில் காண்டாமணியைப் பார்த்தான். மங்கலான ஒளி. அதன் தொங்கும் நாக்குக்குக் கீழே நின்று பார்த்தான். என்ன ஆபாசமடா இது… என்று சிரித்தான். வெளியால பாத்தா பொம்பளையாள் பாவாடையாட்டம். கோவில்ல கெட்ட காரிய ஞாபகமா. திரும்பச் சிரித்தான். எல்லாவற்றுக்கும் சிரிக்க ஆரம்பித்திருந்தான். என்னா இன்னிக்குச் சிரிப்பு சிரிப்பா வருது.
போதை தான். நிலாவே போதைதான். நமக்கே இப்பிடிக் கெடக்கே. இந்த மனம் பிசகிய ஆட்கள் இங்க வந்தால் அவனுங்க நிலைமை என்னாவும்? நான்? மனம் பிசகவில்லையா எனக்கு? இன்னும் பிசகவில்லையா? எந்தப் பைத்தியம் தன்னைப் பைத்தியம்னு ஒத்துக்கிட்டது. எந்தக் காலத்தில்… இன்னொரு கெட்ட வார்த்தை. அட காளி… அர்ச்சனை கேட்ட காது. நான் பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டா இருந்தே பாவம். இன்னும் நாக்கை நீட்டிக்கிட்டு எதுக்கு ஆவேசம்? வாய் வலிக்கப் போவுது. மூடிக்கோ… சிரித்தான். ஈஸ்வரி. நீ என்ன நினைக்கே? நான் பைத்தியந்தானா.
ஆக மனுசாளுக்கு வாழ்க்கையில என்ன முக்கியம். துட்டு. துட்டு இருந்தா உறவு சொந்தம் பந்தம் எல்லா கச்சடாவும் தானே வரும். மரம் பழுத்தால் வௌவால் வர்றா மாதிரி. துணிப் பொட்டலத்தை அப்படியே கடாசினான். உள்ளே என்னவோ உலோகம். தட்டாய் இருக்கலாம். சப்தித்தது. இடுப்பு முடியில் இருந்து தீப்பெட்டி எடுத்தான். சந்நிதி கிட்டே போய் குச்சியைப் பற்ற வைத்தான். கட்டை விரலால் இட்ட சந்தனம் போல கோவியாய், பொட்டு போல அதில் சுடர் கிளம்பியது. பத்ரகாளி அம்மன் முகம் அந்த ஒளியில் பொலிந்தது. இங்க தனியா என்னடி பண்றே.. என்று கேட்டான் அவன். மனித வாடையே இல்லாமல், குரல் ஒலிகளே இல்லாமல் இருந்த இடம் இப்போது சிறிது கலங்கினாப் போல இருந்தது. குட்டை நீரின் மேற்பரப்பில் மழை புள்ளி யிட்டாப் போல.. ஏண்டி தனியா இருக்கியே. உனக்கு பயமா இல்லியா?... என்று கேட்டான். எனக்கா? ஹா எனக்கென்ன பயம்… என்றான். பின் சிரித்து, அதான் கூட நீ இருக்கியே, என்றான். பயப்படாதே. என்றான். நான் இருக்கேன், என்றான்… வாய்க்கு வெளியே சிவப்பு வெத்திலையாய்த் தனியே நாக்கை நீட்டி நிற்கிறாள் பத்ரகாளி. பார்க்க பயமாய் இல்லை. அவன் அதைப் பற்றி அலட்டிக் கொண்டதாகவே இல்லை.
ஆனால் அத்தனை உற்சாகமானதா வாழ்க்கை. இந்த இடம், இந்தப் பயணம், இந்த நிலாக் கொண்டாட்டம். பொழுது மென்மை கண்டிருக்கிறது. கடும் தோல்விகள் கசப்புகள் ஏமாற்றங்கள், ஆகியவை அவனை வீட்டை விட்டுத் துரத்தி யிருந்தன. அவனால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியவில்லை. சற்று நிதானப்பட்ட போது இந்த உற்சாகத்துக்கு அர்த்தமே இல்லை என நினைத்தானா. என்னாச்சி எனக்கு, என குனிந்து தலையை உதறிக் கொண்டான். ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். வெளியே வந்தான். ஐயோ அற்புதமாய்க் காய்ந்தது நிலா. ஐயோ இந்தப் புகையில்… நிலா அழுக்காயிருமோ என்று இருந்தது. இந்த அழுக்குகளைத் துடைக்கத் தானே வருகிறது ஒளியும் மழையும்.., என்று நினைத்தான். அப்படியே படியேறி வந்து வாசல் பார்க்க ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். காலை நீட்டிக் கொண்டான். இதமாக இருந்தது. தொடை வரை தடவித் தந்தான். புகையை உள்ளிழுத்து ஸ்ஸ் என ஒரு சத்தம் கொடுத்தான். இத்தனை தூரம் நடந்து வந்ததற்கு கால் வலி தெரியவில்லை… இருட்டானால் வலி தெரிந்திருக்கலாம். கிளம்பியிருக்கவே மாட்டான். எங்காவது முடங்கி யிருப்பான்.
ஏ தூங்கிட்டியா?... என உள்ளே பார்த்துக் கேட்டான். என்னால தூங்க முடியுமா தெரியல்ல, என்றான். நானும் உன்னைப்போல, என்றான். சிரித்தபடி அநாதை, என்றான். பிறகு அழுதான். அவ… என்றவன் நிறுத்தி சந்நிதியைப் பார்த்தான். உனக்கு எப்பிடி அவளைத் தெரியும். செண்பகவல்லி… பேர் நல்லாருக்கா?.. என்றான். எனக்கு அந்தப் பேர் பிடிச்சிருந்தது. சட்டென அவனுக்கு உடம்பு தூக்கிப் போட்டது. இருமல் வந்தது. நெஞ்சைத் தடவிக் கொண்டான். பீடியை உதறித் தூர எறிந்தான். நல்லாதான் வெச்சிக்கிட்டேன் அவளை… என்றான். ஓடிப் போயிட்டா, என நிறுத்திவிட்டு பின் தொடர்ந்து பேசினான். அழகா இருப்பா. ரொம்ப அழகா இருப்பா. அவளை என்னால மறக்க முடியல்ல. வெறுக்க முடியல்ல. அவளை யாராலும் வெறுக்க முடியாது. உன்னால கூட, என்று திரும்பிச் சொன்னான்.
நல்லாதானடி ஒன்ன வெச்சிக்கிட்டேன்? அப்படியே மல்லாக்கப் படுத்துக் கொண்டான். உனக்கு என்ன குறை வெச்சேன்? நான் தான் உன்னோட குறையா… என்றான். நீ வேற இடத்தில் வளர வேண்டிய விதையா?... என்றான். ஈஸ்வரி, கேட்டியா?... என்றான். நான் வேலைக்குப் போயிட்டு திரும்பி வீட்டுக்கு வரேன். வீடு இருட்டிக் கிடக்கு. திறந்து கிடக்கு வீடு. இங்க எப்படிக் கெடக்கு? அதைப் போல. ஆனா இங்க நீ இருக்க… இது ஓ வீடு. அங்க?...
விளக்குப் பொருத்த வேண்டிதானே? செண்பகவல்லி, என்ன பண்றா இவ? நான் உள்ளே போனால் காலியாக் கெடக்கு வீடு. சின்ன வீடுதான். ஒரே அறை. அதில் தேட என்ன இருக்கு. அவ வத்திப் பெட்டியா என்ன? கீழே மேலே குனிஞ்சி நிமிர்ந்து தேடறதுக்கு. வெளிய குடி தண்ணி எடுக்க கிடுக்கப் போயிட்டாளா. அவளோட பெட்டி, அங்க இல்லை. அட அவ போயிட்டான்னு உடனே புரிஞ்சது. அத்தனை அழகு எனக்குன்னு பெருமையா இருந்தேனே. அது பகீர்னு இருந்தது. ரெண்டு நாளா எதோ தன் யோசனையா இருந்தா. நான் என்னன்னு புரிஞ்சிக்கறது. ஆனால் இப்பிடி ஒரு காரியம் அவ பண்ணுவான்னு நான் எப்பிடி எதிர்பார்க்க முடியும்? யாரால எதிர்பார்க்க முடியும்? அவளை நான் பூ மாறி வெச்சிக்கிட்டேன். அவ பக்கத்ல இருந்தாலே எனக்கு மனசு நெறைஞ்சிரும்… ஹ்ம், என்றான். தலையை உதறிக் கொண்டான்.
ஈஸ்வரி கேட்டியா? தூங்கிறாதே. உனக்குச் சொல்ல ஆள் இல்ல. எனக்கு கேட்க ஆள் இல்ல… இனி அவ வரமாட்டான்னு தோணிட்டது எனக்கு. அவங்க ஐயா வீட்டுக்கு ஒரு போன் போட்டுக் கேட்கலாமான்னு இருந்தது. நான் கேட்கல்ல. அவ அங்க போயிருக்க மாட்டான்னு எனக்குப் பட்டது. யானையைக் கூண்டுக்குள்ள அடக்க முடியுமா? நான் நினைச்சது தப்பாப் போயிட்டது. ஈஸ்வரி. யானைன்னா அவ கறுப்பு யானை இல்ல. சிவப்பு யானை. நம்மாளுகள்ல செவப்புத் தொலி பாக்கறதே அபூர்ம்லா? அத்தனை அழகு அவ. அவ போன பிறகு வீட்ல என்ன இருக்கு அவ அடையாளமான்னு தேட வெச்சிட்டாளே பாதகத்தி. இந்தோ… என துணிப் பொட்டலத்தில் இருந்து ஒரு ஸ்டிக்கர் பொட்டுப் பட்டையை எடுத்து நீட்டினான். சிரித்தான். ஒரு பொட்டைப் பிரித்து தன் நெற்றியில் ஒட்டிக் கொண்டான். நீ வேணா ஒண்ணு வெச்சிக்கோ. ஜோரா இருக்கும்.
எங்க போயிட்டாளோ? எப்பிடி அப்பிடி ஒரு முடிவு எடுத்தா? நான் தெரிஞ்சிக்கிட்ட செண்பகவல்லி இல்லை அவ. அது இப்பதான் எனக்கு உறைக்குது. அவள் எப்படின்னு நான் புரிஞ்சிக் கிட்டிருக்கணும். அதும்படி நான் நடந்துக்க முயற்சி பண்ணி யிருக்கணும். ஐய அவ கெடச்சதுமே நான் அந்தாக்ல மிதந்துட்டேன். இனி என் வாழ்க்கைல எல்லாமே சந்தோசம் தான்னு நெனைச்சிட்டேன். நான் அவ என்ன நினைக்கிறான்னு யோசிக்கவே இல்லியோ என்னவோ. அதைப் பத்தி கவலைப்படவே இல்லையோ என்னவோ. தப்பு பண்ணிட்டேனே ஈஸ்வரி… என தலையில் சின்னதாய் அடித்துக் கொண்டான்.
ஒரு வேகம் வந்தது எனக்கு. ஒருநாள்ப் பூரா அழுதுகிட்டு கெடந்திருக்கேன். கதவைச் சாத்திக்கிட்டு வெளியே வரவே இல்லை நான். அப்பறமா அட கோட்டிக்காரப் பயலே. உன் அழுகைக்கு என்ன அர்த்தம்? இப்ப அழுது என்ன பிரயோசனம்… கண்ணைத் துடைச்சிக்கிட்ட போது ஒரு வைராக்கியம் வந்தது. நான் முயற்சி பண்ணுவேன். அவளை எப்படியாவது திரும்பிப் பார்த்து அழைச்சிக்கிட்டு வருவேன். வா செண்பகவல்லி. உன்னை நான் நல்லா வெச்சிப்பேன். நான் அவளைத் தேடிப் புறப்பட்டேன்.
கால் போன திக்கு. மனம் போன போக்கு. யாராண்டையும் விசாரிக்க என்ன ,இருக்கு? சொல்லு என்ன இருக்கு, என்று காளியைப் பார்க்க திரும்பிப் படுத்துக்கொண்டான். சிரித்தான். நாம ஆர்ட்டக் கேட்டாலும் நம்மள மேலும் கீழும் பார்க்கறாங்க. பாவமாப் பாக்கறது. இல்லாட்டி இளக்காரமாப் பாக்கறது. அவமானமா இருக்குது. அட என் தப்பு என்னா இருக்குது இதுல? எனக்குத் தெரிஞ்ச அளவு அவளை நல்லா வெச்சிக்கிட்டேன். ஆனால் என் சம்பாத்தியம் அவளுக்குப் பத்தல. என் ருசி அவளுக்குப் பத்தல. நான் என்ன செய்யறது? இதுக்கு மேல என்கிட்ட இல்லடா கண்ணா. திரும்ப அழுகை துளிர்த்தது கண்ணில். இவளால நான் என் குடியையே விட்டேன். செலவு கட்டுப்படி ஆவல்ல. கூட அவ இருந்தாளா,. அதைவிட போதை என்னா இருக்குது லோகத்துல. என்னா ஈஸ்வரி, பொம்பளைன்னாலே போதை தானே. ஹா, என்றான். யார் மேலயும் எது மேலயும் ரொம்ப பிரியம் வைக்கக் கூடாது பாத்துக்க. வெச்சா? ஒரு நா இல்லாட்டி ஒரு நா ஆப்பு நிச்சயம். ஹ்ரும் என்றான் நெஞ்சைத் தடவியபடி. சாப்பிட்டுர்லாமா?
துணிப் பொட்டலத்தை முடிச்சு பிரித்தான். உள்ளேயிருந்து ஒரு உணவுப் பொதிவை எடுத்தான். எப்ப எங்கே வாங்கினானோ. ஏ நீ சாப்பிட்டியா இவளே?.. என்றான். பாவம் எத்தனை பசியா இருப்பியோ. எத்தனை நாள்ப் பசியோ உனக்கு.. என்றான். என் பாடு தேவல… வா. வரியா. வந்து பக்கத்ல உக்காந்து ஒரு வாய் சாப்பிடுவே. சர்க்கரைப் பொங்கலும் அதுவுமா நல்லா சாப்பிட்டிருப்பே. இது எதோ ஒண்ணு… பசிச்சா சாப்பிடுவேன். இல்லாட்டி இதை விட்டெறிஞ்சிருவேன். அந்த இலையைக் கிழித்து கொஞ்சம் சோறு அதில் வைத்தான். ஹ்ம்… என்று சிறிது முனகினான். தண்ணி பாட்டிலை எடுத்து திறந்து வைத்துக் கொண்டான். அவன் வைத்ததற்கும் அதற்குள் பாட்டில் உள்ளே தண்ணி சிறிது குலுங்கியது.
ஆனா ஒண்ணு ஈஸ்வரி. இப்பிடி ஊர் ஊராத் திரியிறது… நல்லாதான் இருக்கு… என்றான். எனக்குப் பிடிச்சிருக்கு, வேற வழியில்லையில்லா, என்றபோது தொண்டை அடைத்தது. வீட்ல இருக்க முடியாது. அவ கூட இருந்த வீடு. நான் அவளை விரும்பறேன். செண்பகவல்லி. நான் உன்னை விரும்பறேன். ஏன் நீ எனக்கு அப்பிடி ஒரு காரியம் பண்ணினே.  ஹா, என்றான். ஈஸ்வரி, எனக்குப் புரியல்ல. நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன்… என்றான். ஒரு வாய் தண்ணி குடித்தான். லேசாய்ப் புரையேறியது. என்னை யார் நினைக்கப் போறா, என்று சோகமாய்ச் சிரித்தவன்… ஈஸ்வரி, நீ நினைச்சியா? ஒருவாய்ச் சோறு போட்டுக் கொண்டான். ஊறுகாய் தேடித்தடவி எடுத்து கடித்துக் கொண்டான். புளிப்பான காரம் ஸ் என்று ஏறியது. தேள் கொட்டினாப் போல.
கொஞ்ச நேரம் பேசவில்லை. ஈஸ்வரி கால்மாற்றி உட்கார்ந்து கொண்டதை அவன் பார்க்கவில்லை. கிடுகிடுவென்று சாப்பிட்டு முடித்தான். அப்புறமும் பேசவில்லை. தண்ணி நிறையக் குடித்த களக் களக் சத்தம். வாயைத் துடைத்தபடி வெளியே பார்த்தான். எத்தனை அருமையான இரவு. இட்லிக்கு அரைத்த மாவு போல கெட்டியான ஒளி. கொழகொழத்து கை பிசுபிசுத்தா மாதிரி இருந்தது. வெளிச்சத்தில் இந்த இடம் இப்பிடிக் கிடக்கு. இருளில் எப்படி இருக்குமோ, என நி9னத்தான். பயந்து கிடக்குமோ. உலகமே ரெண்டு வகை. வெளிச்சத்தில் ஒரு வகை. இருட்டில் இன்னோரு வகை. சந்தோசம் என்பது வெளிச்சம். துக்கம் இருள். சந்தோசத்தில் லோகம் ஒரு வகை. வருத்தத்தில் எதிர் மாதிரி. எது உண்மையான லோகம்…  ஒரு நாடகமேடையில் போல இங்கேயிருந்து அங்கே அங்கேயிருந்து இங்கே என நடந்தான். இன்னோரு பீடி? வேண்டாம் என நினைத்தான். காலடியில் பாளம் பாளமாய்க் கிடந்தது திடல். ஓரிரு புற்கள் உள்ளே யிருந்து மூக்கு மயிராய் நீட்டிக் கிடந்தன. பனி விழுந்த ஈரம் காலில் தட்டியது. செருப்பில்லாமல் இருந்தான்.
திரும்பிக் கோவிலைப் பார்த்தான். யாரோ பெண். யாரது? சிவப்புப் புடவை. ஈஸ்வரி நீயா என்று கத்தினான். வளையல் சத்தம். யாரோ சிரித்தா மாதிரிக் கூட இருந்தது. கிட்டே போய்ப் பார்த்தான். யாரும் இல்லை. சில சமயம் ராத்திரி படுத்துக் கிடக்கறப்போ ஈஸ்வரி, என்று உள்ளே கர்ப்பகிரகத்தைப் பார்த்துச் சொன்னான். செண்பகவல்லி வந்து தலைமாட்டுல நிக்கிறா மாதிரிக் கூடத் தோணும். அவ எங்க வரப் போறா. எங்க போனாளோ. என்னவோ யோசிததா மாதிரி நிறுத்தினான். ஆனா… என்றான். என்னால ஏன் அவளை மறக்க முடியல? அவ என்னை எப்படியோ மறந்திட்டா. எப்பவோ மறந்திட்டா. என்னை விட்டு அவ போயிட்டா. சிறிது மௌனம். பெருமூச்சு விட்டான். செவப்பா அழகா இருப்பா. எனக்குக் கொடுப்பினை இல்ல.
உற்சாகம் பீரிடும் போது கெட்ட வார்த்தைகளை வாரி யிறைத்தபடி யிருந்தான் அவன். இப்போது எவ்வளவோ நிதானப் பட்டாப் போலிருந்தது. உற்சாகம் பிறரோடு பகிர வல்லதாகவும், துக்கம் தனக்குத் தானே மாத்திரமே பேசிக் கொள்வதாகவும் ஆகி விடுகிறது. அல்லது துயரம் உன்னை மௌனமாக்கி விடுகிறது. என்னை உனக்குப் புரியுதா ஈஸ்வரி, என்றான். எனக்குப் பைத்தியம் ஈஸ்வரி. ஆமா. அவ மேல பைத்தியம். இப்ப பைத்தியம் முத்திட்டது. இந்தப் பௌர்ணமி வெளிச்சம் எனக்குக் குறுகுறுன்னு இருக்கு. லேசா நெஞ்சு விம்முது. அட சனியனே நான் சந்தோசமா இருக்கேனா துக்கமா இருக்கேனா, அதே தெரியலியே. அப்ப என்ன? அப்ப நான் பைத்தியம்னு தானே அர்த்தம். அஹ்க். உரக்க ஒரு கெட்ட வார்த்தை சொன்னான்.
மண்டபத்துக்கு வந்து படுத்துக் கொண்டான். நேரம் என்ன தெரியவில்லை. நேரம் தெரிஞ்சி என்ன ஆவப் போவுது. பெரிய கலெக்டர் உத்தியோகம் பாழாப் போவுதா? எனக்கு என்ன ஆனா என்ன? என்னைப் பத்திக் கவலைப்பட ஆரிருக்கா?... நெஞ்சு ஏறியேறி இறங்கியது. அழாதடா என்றான் தனக்குள். அப்படியே ஒரு தரம் சந்நிதியைப் பார்த்தான். என்ன தோணியதோ. ஒரு தரம் கை குவித்து வணங்கினான். இன்னொரு கெட்ட வார்த்தை. நிலா மேகத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கலாம். அதுதானோ என்னவோ. சட்டென இருட்டு கொடுத்தது. சந்நிதிக்குள் பத்ரகாளி அவனுக்குத் தெரியவில்லை. கரும் பலகையில் எழுதிப் போட்டதை வாத்தியார் அழித்தாப் போலிருந்தது.
வெயில் வந்திருந்தது. பத்ரகாளி மீண்டும் மாளாத் தனிமைக்கு ஆளாக வேண்டி வந்தது. ஒலிகள் மெலிந்து ஒடுங்கி கரைந்திருந்தன. யாராவது கெட்ட வார்த்தையாவது பேசக் கூடாதா என்ற கணங்கள். ஒலி உயிரின் அடையாளம் அல்லவா. சந்நிதியில் இருந்து எழுந்து வெளியே வந்தாள். அவன் கிட்ட வந்து பார்த்தாள். அவன் எழுந்து கொள்ளவில்லை. மல்லாக்க அவன் கிடந்த கிடக்கை. அவன் எழ மாட்டான் என்றிருந்தது. அவன் விழிகள் திறந்திருந்தாலும் எதையாவது அவன் பார்க்கிறானா என்பதே ஐயம் தான். காட்சிகள் கண்ணுக்குள் நகரா உறைவு கண்டிருந்தன. காய்ந்த இலைச் சருகில் அவன் அவளுக்காக நேற்று வைத்த சாதம் எறும்பு அரித்துக் கிடந்தது. ஒலிகளைத் தொண்டைக்குள் அமுக்கித் தொங்குகிறது காண்டாமணி. அமைதி மீண்டும் அங்கே பாசி போல் கவிய ஆரம்பித்திருந்தது.

  •  storysankar@gmail.com / 97899 87842