Sunday, December 28, 2014

தமிழ்மகனின் புதிய சிறுகதைத் தொகுதி ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ வெளியீட்டு விழா உரை

தமிழ்மகனின் புதிய சிறுகதைத் தொகுதி
‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘
வெளியீட்டு விழா உரை
எஸ். சங்கரநாராயணன்

கவிக்கோ அரங்கம், மயிலை
28,12,2014 மாலை 06 மணி
நூல் வெளியீடு உயிர்மை பதிப்பகம்


 ஜ ன் ன ல் ம ல ர்
  
தினைந்து இருபது வருடங்களுக்கு முன்பே, தமிழ்மகனின் ஒரு புத்தகத்துக்கு முன்னுரை தந்திருக்கிறேன். ‘தமிழ்மகன் ஆற்றுப்படை‘ என்று அதற்குத் தலைப்பு வைத்ததாக நினைவு. இப்போதும் அதே வேலையை, இரண்டாம் முறையாகச் செய்ய வந்திருக்கிறேன். அவரது ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ நூலை வெளியிடவும், அவரை வாசகருக்கு சிபாரிசு செய்யவுமாக இப்போது இங்கே என் பணி அமைகிறது.

     எனக்கு தமிழ்மகனின் எழுத்து பிடித்திருக்கிறது. ஆகவே இரண்டாம் முறையும வந்திருக்கிறேன். எல்லாருக்கும் தமிழ்மகனின் எழுத்து பிடிக்கும். உறுத்தாத, வாசிக்க சிரமம் இல்லாத எழுத்து அவருடையது. பிரமைகள் அற்றது அது.  தத்துவார்த்த அலட்டல்கள் அவரிடம் இல்லை. ஆகவே அது அவரது எழுத்திலும் இல்லை. அதனால், தன் பாத்திரத்தையும் வாசகனையும் அவர் ஒருபோதும் இவ்விதத்தில் தொந்தரவு செய்வது கிடையாது. வாழ்க்கை ஒருபோதும் தத்துவங்களால் ஆளப் படுவதே இல்லை. சாமானிய வாழ்க்கையில் தத்துவங்களுக்கு இடம் இருக்கிறதா என்ன? அடுத்த நொடி என்னவாகும் என்றறியா எளிய சராசரி வாழ்க்கை, நம்மையும் அது இழுத்துக்கொண்டு ஓடுகிறது. அதை சற்று எட்ட நின்று வேடிக்கை காட்டவும், வேடிக்கை பார்க்கவுமாக ஒரு சராசரி மனநிலையிலேயே கதைகளை எழுத தமிழ்மகன் முடிவு செய்கிறார். அதுவே நியாயம் என அவர் உணர்கிறார். இந்தப் பாத்திரங்கள் உணராத ஆத்ம அழுத்தம், தத்துவ தரிசனம் என்றெல்லாம் அவர் வாசகனைக் குழப்புவது இல்லை. பாத்திரங்களுக்கு அவ்வளவில் பெரிதும், தான் நியாயம் செய்வதாகவும் உணர்கிறார்.

     கடைசிவரி வரை வாசகனை அழகாக சிரமம் இல்லாமல் கூட நடத்திக்கொண்டு வந்து, தன் தெரு வந்ததும் பிரிந்து செல்லும் நல்ல நண்பனைப் போல, அவர் விடைபெற்றுக் கிளம்பி விடுகிறார். சுவாரஸ்யமான கதைகள் இவை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கதைகள். எதிர்பாராத முடிவுகள் இருக்கலாம். அவை திடுக்கிடும் திருப்பங்கள் அல்ல.

     எம்.ஏ. இலக்கிய மாணவர் இவர். கல்லூரிக் காலங்களில் ருஷ்யாவின் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், அன்டன் செகாவ், கோகல், துர்கனேவ் என்று ஒரு வாசிப்பு. பிறகு பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன்,, அப்புறம் அடடே, சுஜாதா… என வாசிப்பு வரிசையை விரிவுபடுத்தி யிருக்கிறாற் போலிருக்கிறது. இவை எல்லாமான கதைப்போக்குகள் இந்தச் சிறுகதைகளில் காணக் கிடைக்கின்றன.

     சுஜாதாவின் அஸ்திரங்களைக் கையாண்டு, இன்றும் அவரது வாரிசுகளாக எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டே வருகிறார்கள். ‘பத்திரிகைப் பேராளுமை‘, என்று சுஜாதாவைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அவை இன்றைய இளைஞர்களின் எழுத்தை பாதிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். அவரது மேற்கத்திய இலக்கியத் தாக்கமான எழுத்து என்றால் இரவிச்சந்திரன், இரா. முருகன் போன்றோர், மர்மக்கதை என்றால் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போனறோர் நினைவு வருகிறார்கள். இந்திய சாமான்யன் சார்ந்த எழுத்துச் சுழிப்புகளுக்கு தமிழ்மகன் சுஜாதாவின் அடையாளங்களுடன் எழுதுவதாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் அபசாரம் அல்ல. மேலை நாடுகளில் ஸ்கூல் ஆஃப் ஹெமிங்வே, ஸ்கூல் ஆஃப் சாமர்செட் மாம் என்று நம்மால் அடையாளங் காட்ட முடிகிறது அல்லவா? கற்றாரைக் கற்றாரே காமுறுவர். அந்த ரகம் இது.

     தவிரவும் இப்படி அடையாளமான எழுத்து, அது சுஜாதாவின் சாதனை. சுஜாதாவின் பெருமை.

     கதைக்களன் என ஒரு தேர்வு நிகழ்த்துகையில், கதைகளில் ஒரு புதிதான முடிச்சைப் போட தமிழ்மகன் முயல்கிறார். ஆனால் அதை சாதாரணத் தளத்தில் நிகழ்த்திக் காட்டுவது தன் சவாலாக அவர் ஏற்கிறார். அ. முத்துலிங்கம் போல ஒரு பளீரென்ற முதல் வரி அமைக்க முயல்கிறார். அந்தக் கதை சார்ந்த பின்னணிக்கு சில செய்திகளை, விவரங்களைத் திரட்டிக் கொள்கிறார். அதுவரை பரவலாக அறியப்படாத தகவலாக அது இருந்தால் சிலாக்கியம். அது, அந்தத் தகவல்கள் படைப்பில் இன்னும் மெருகூட்டும். சுவாரஸ்யம் கூட்டும், ஒரு கொத்துமல்லி, பெருங்காய எஃபெக்ட் தரும். அதை இந்த சாமான்யப் பாத்திரத்தோடு கதைசொல்கையில் இணைக்க, முடிச்சுப் போட கதையில் ஒரு கயிற்று முறுக்கம் அமைகிறது. சம்பவத் தேரை இந்தக் கயிறு கொண்டு இழுக்க வெள்ளைப் பக்கங்களான வீதியில் கதைத் தேர் பவனி காண்கிறது.

     என்றால் கதை சொல்ல அவர் தன்னை தூரத்திலேயே நிறுத்திக் கொள்கிறார். ஜன்னல் மலரை அதோ என்று காட்டுகிறார். இதோ, அல்ல. அதோ. தன் நிழல் போலும் அதில் கலவாமல், ,கவியாமல் காய் நகர்த்தி, கதை நகர்த்துகிறார். ஆகவே தான் இந்தக் கதைகளில், நான் என வரும் பாத்திரங்கள் உட்பட, எங்கேயும் தமிழ்மகன் தட்டுப்படுவதே இல்லை. அதேபோல இவர் தேர்வு செய்யும் பாத்திரங்கள் எதையும் இவர் தன் விமர்சனமாகக் கொச்சைப்படுத்துவதும் இல்லை. பாத்திரங்களுக்கு சக பாத்திரங்கள் சார்ந்து விமர்சனங்கள் உண்டு. அது தமிழ்மகனின் விமர்சனம் அல்ல. கதையின் போக்கு அது.

     தமிழ்மகன் பெரும்பாலும் எளிய உரையாடல்களுடனேயே பாத்திரங்களை நகர்த்திச் செல்கிறார். எழுத்தாளனாக தான், தன் முகம் அடையாளப் படாமல் இருக்க அவர் இப்படியொரு வகைமையை தன்சாதக அம்சமாக நினைத்திருக்கலாம். உரையாடல் இடையிலான பத்திகளில் வரும் விவரணைகளும் பாத்திரங்களின் நினைவு ஓட்டமாகவே மேலும் கதையை விரிப்பது அவருக்குப் பிடிக்கிறது. அப்போது கதையில் ஒரு மகா நம்பகத்தன்மை வாய்த்து விடுவதை நான் முன்பே அவர் கதைகளில் அவதானித்து, அவரை என் முன்னுரையில் வியந்திருக்கிறேன். சட்டென வாசகனை இப்படி கதையில் ஈடுபடுத்த, ஈர்த்துவிட, ஒன்றச் செய்துவிட அவரால் முடிகிறது.

     இதை விளக்குவோம். ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். தினக்கூலி என்று இவன் போய் வரிசையில் நிற்கிறான். இருபது பேர் தேவை, என்றால் வந்திருப்பதோ எண்பது பேர். மேஸ்திரி வந்து அந்தக் கூட்டத்தை நோட்டமிடுகிறான். நீ, நீ - என ஒவ்வொருவராய் ஒருபக்கமாய் ஒதுக்குகிறான். என்னைக் கூப்பிடாமல் விட்டுவிடுவானோ என்று இவன் பதட்டப்படுகிறான். மேஸ்திரி நீ, என்று இவனையும் இப்போது இழுத்துக் கொள்கிறான். உடனே தனக்கு வேலை கிடைத்து விட்டதாக அவன் மகிழ முடியவில்லை. இப்படி தனியே ஒதுக்கியவர்களை வேலைக்கு வேணாம் என்று வெளியே அனுப்பி விடுவானோ, என்று இவன் பயப்பட்டான்… என எழுதிச் செல்கிறார் தமிழ்மகன்.

     இப்படி இடங்கள் இந்தக் கதைத் தொகுதியிலும் உண்டு. தகவல், என்று ஒரு கதை. கண்காணிப்பு காமெரா பொருத்திய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு சுத்திகரிப்புத் தொழிலாளி. அவனை விசாரணைக்கு அழைத்துப் போகிறார்கள். அந்த அதிகாரி அறையைத்தான் தான் சரியாக சுத்தம் செய்யவில்லையோ, என்று யோசித்தபடியே போகிறான், என எழுதுகிறார் தமிழ்மகன். பக்கத்து வீட்டு அன்க்கிள் சினிமாவுக்கு அழைத்துப் போகிறார். படம் முடிந்து வெளியே வந்தபோது “படம் நல்லா யிருந்ததா?“ என்று கேட்கிறார். செலவு செய்து அழைத்துப் போனவரின் மனம் நோகக் கூடாது, என்று அவன் “நல்லா இருந்தது“ என்று சொல்கிறான். இப்படி நுணுக்கமான பதிவுகள் தான் கதையை நிமிர்த்தி எழுத்தாளுமையை உயர்த்தி வாசகரிடம் காட்டும். வாழ்த்துக்கள் தமிழ்மகன்.

     பளிச்சென்ற வார்த்தை வியூகங்களில் கதை நகர்வது கதையின் சுவாரஸ்யத்துக்கு கட்டுக்கோப்புக்கு அவசியமாகிறது. வார்த்தைச் சிக்கனமும், சுருங்கச் சொல்லி காட்சியை விளக்கி விடுவதும் இவர் அறிந்து வைத்திருக்கிறார். தன் நண்பனுடன் காஷ்மீருக்கு ஊர் சுற்றிப் பார்க்க வந்தவன் அவன். நண்பனின் தங்கை மெஹரின் அழகில் கிறங்கி விடுகிறான். அதை எழுத்தாளர் விவரப் படுத்தும் லாவகம் அருமையானது.

     “சலீம் காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எல்லாம் எனக்கு சாதாரணமாக இருந்தன. பனித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், ஸ்வெட்டர் போட்ட மனிதர்கள், ஆவி பறக்கும், ஆனால் சூடாக இல்லாத டீ, எல்லாமே சாதாரணமாகத்தான் இருந்தது. “மோதிலால் நேரு படித்த பள்ளி இதுதான்“ என்றான்.“

     அப்போதெல்லாம் ஆச்சர்யப் படாத கதாநாயகன். அந்தப் பெண் மெஹர் படித்த பள்ளியைக் காட்டுகிறான். அதை ஆச்சர்யமாகவும் தவிப்புடனும் பார்க்கிறான் கதாநாயகன், என விவரிக்கிறார் தமிழ்மகன்.

     தி. ஜானகிராமன் ஒரு கதையில் எழுதுவார். கோவில் சந்நிதியில் தேவதாசி சாமி கும்பிட வரும்போது கூட்டம் மொத்தமும் சாமியையா பார்த்தது, அவளைப் பார்த்தது, என எழுதுவார். அதைப் போன்ற நல்ல உத்தி தான் இது.

     நிகழ்காலச் சூழல் சார்ந்த கதைக் கரு தேர்வு இவரது கதைகளின் வெற்றிக்கு முக்கிய அம்சம் என்று சொல்ல முடியும். கதையில் இதுவரை சொல்லாத கோணத்தில் கதையை யோசிக்க முடியுமா என்கிற தேடல் இவரிடம் காண முடிகிறது. முன்பே இவரது வேறு வேறு தொகுதிகளிலும் இந்த அம்சம் இவரை மிகுந்த தனித்தன்மையுடன் அடையாளப்படுத்தி விடுகிறது. அவ்வகையில் இவரது ‘எட்டாயிரம் தலைமுறை‘ எனக்குப் பிடித்த இவரது கதைகளில் ஒன்று. உதயகண்ணன் தொகுதி ‘வானவில் கூட்டம்‘ உலகத் தமிழ்ர் கதைகள் தொகுதியிலும் அது சிறப்பிடம் பெற்றது.

     காதலர் தினம் பற்றிய கதை. காதலைச் சொல்ல ரோஜாப் பூ தரும் வழக்கம் எப்படி வந்திருக்கக் கூடும்? – என தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு அதன் விளைவான ஒரு புனைவை அவர் தருகிறார்.

     இந்தத் தொகுப்பின் முதல் கதையான ‘நினைவின் நிழ்ல்‘ கதையே இப்படியான ஒரு மாற்றுக் கோண சிந்தனை வாய்த்த கதைதான். கோமாவில் கிடக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. எல்லாரையும் போல பிற பாத்திரத்தின் வழியாக கோமாவில் கிடப்பவரைக் காட்டும் நடைமுறைப் பாணியைத் தவிர்த்து, கோமாவில் கிடந்தாலும், நினைவில், புலன்களில் சுற்றுச் சூழலை எப்படி நோயாளி அவதானிக்கிறார் என்று கதையை விரித்துச் செல்கிறார் தமிழ்மகன். புதிய  வாசகஅனுபவமாய் அமைகிற கதை.

     அவர் காதுபடவே “இவருக்கு நினைவு இல்லை. இவர் பிழைக்க மாட்டார்“ என்று மருத்துவர்கள் இவர் மனைவியிடமும், நண்பனிடமும் பேசகிறார்கள், என கதை நகர்கிறது. நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கதை இது.

     மூன்று துண்டுகள் போல தனித்தனியே காட்டி மூணையும் ஒன்றாக்கி கதையை முடிக்கிற உத்தியும் இவருக்கு எழுதப் பிடித்திருக்கிறது. இதில் பாம்பாட்டி பற்றிய ஒரு கதையும், மஞ்சு அக்கா பற்றிய கதையும் இப்படியே வளர்கின்றன.

     பாம்பாட்டி ஒருவனைக் கதாநாயகன் பஸ் நிறுத்தத்தில் சந்திக்கிறான். பாம்புக்கு முட்டை வாங்கிக் கொடுக்கும்படி பணம் கேட்கிறான் பாம்பாட்டி. அவனுடன் அது சிநேகம் பாராட்டிக் கொண்டிருப்பது இவனுக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. அது தானாகவே இவனோடு வந்து சேர்ந்துகொண்டது, என்கிற தகவலையும் பாம்பாட்டி சொல்கிறான்.

     அதன்பிறகு பாம்புகள் பற்றிய ஒரு கூட்டத்தில் சில தகவல்கள் அறிகிறான் இவன். பாம்பு திரும்பத் திரும்ப ஒருவனைக் கடித்தால் அவன் அந்த விஷத்தை முறிக்கிற சக்தி பெற்றுவிடுகிறான். பாம்புகள் உடலில் சுரக்கிற ஒரு திரவத்தினால் சோடிப் பாம்புடன் இணை சேர்கின்றன, பாம்பை அடிக்கும் போது அந்த திரவம் வெளியே வரும், அதைத் தேடி சோடிப் பாம்பு, தன்சோடி மரணமடைந்த இடத்துக்கு வரும், போன்ற விவரங்கள் தெரிகிறது.

அந்தப் பாம்பாட்டி பற்றி அறிந்த ஒருவர் கூட்டத்தில் பார்வையாளராக இவனுக்கு அறிமுகம் ஆகிறார். அந்தப் பாம்பாட்டியின் மனைவி பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும் அவர் சேதி சொல்கிறார்.

     மனைவியைக் கடித்த பாம்பை அவன் கொன்றிருப்பான், எனவும், அதன் சோடிப் பாம்பு அதே இடத்துக்கு வந்தபோது இவன் அதை வளர்க்க ஆரம்பிக்கிறான், எனவும் யூகங்களுடன் கதை முடிகிறது. பாம்புக்கடியால் விஷம் ஏறாத பாம்பாட்டி அவன். ஆதலால் பாம்புகளிடம் அவன் பயமற்று சிநேகம் பாராட்டுகிறான். அவளோ பாம்புக்கு பயந்ததாலேயே ஆபத்து உணர்ந்து பாம்பு அவளைக்  கடித்து அவள் இறக்க நேர்கிறது… எனவும் கதையில் கிளைக்கதைகளை நாமாக யூகிக்க வைக்கிறார் தமிழ்மகன்.

     தொகுப்பின் ஆகச் சிறந்த கதை ‘தகவல்‘ என்பது என் கணிப்பு. ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் துப்புரவுப் பணிக்காரனின் கதை. தெருவில கையை விட்டுவிட்டு சைக்கிளில் போகிற ஒருவனை எச்சரிக்க அவன் சன்னலில் இருந்து வீசியெறிந்த காகிதம் அவன் வேலைக்கே உலை வைக்கிறது. அலுவலக ரகசியங்களைக் கடத்தி வெளியே கொண்டு செல்வதாக அவனைப் போலிசில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள். கச்சிதமாய் இந்தக் கதையில் கதாபாத்திரத்தோடு நெருக்கமாய் காட்சிகளைப் பின்னிச் செல்கிறார் தமிழ்மகன். வீணான விவரங்களோடு, சுவாரஸ்யம் கருதி சேர்க்கலாம் என்கிற விவரங்களோ இல்லை. அது நல்ல விஷயம் தான். ஒரு ஜெர்மானியக் கம்பெனியுடன் இணைந்து பணியாற்றும் கம்பெனி இது. இதன் வேலை நேரமே ஜெர்மானிய நேரம் தான். அதன்படி இவன் காலை 7,28க்கு உள்ளே நுழைந்து மாலை 4,32க்கு வெளியே போக வேண்டும். சந்தேகப் பின்னணியில் மாட்டிக்கொண்ட இவன் போலிசாரால் விசாரணைக்கு என்று அழைத்துப் போகப்படும்போது திரும்பி மணி பார்த்தான். மணி 4,32 என முடிக்கிறார் கதையை.
    
இது தான் சுஜாதாவின் பாணி. கதையில் பயன்படுத்திய ஒரு விவரத்தை சற்றும் எதிர்பாராமல் முடிவில் அவர் பயன்படுத்துவார். எனக்கு அந்த உத்தி பிடிக்கும்.

     ஒரு வேடிக்கை கருதி ஜெர்மன் கதை ஒன்று சொல்கிறேன். ஒரு போர்க்காலப் பின்னணியில் நதிக்கரையில் பாலத்துக்கு கீழே அமர்ந்திருக்கும் ஜெர்மன் சிப்பாய். அந்தப் பாலம், அந்த நதி, என எல்லாவற்றையுமே அவன் ஓவியம் ஒன்றில் பார்த்திருப்பான். யார் அந்த ஓவியர் என்று தனக்குள் முட்டி மோதி யோசித்தபடி இருப்பான். அந்த ஓவியர் பெயர் நினைவுக்கு வராது. இந்நிலையில் அதிகாரி ஒருவர் அந்தப் பக்கம் வந்து அவனது அடையாள அட்டை கேட்பார். அதை எங்கோ தவற விட்டிருப்பான் அவன். நான் ஜெர்மன் படைக்காரன் தான், என அவன் வாதிடுவதை அவர் ஏற்கமாட்டார். பெரும் சிக்கலாகி விடும். பிடிவாதமாக அவனை விசாரணைக்கு என்று வண்டியில் ஏற்றுவார் அவர். அவன் வண்டியில் ஏறும் அந்தக் கணத்தில் அவனுக்கு ஞாபகம் வரும் – அந்த ஓவியர் வான்கோ, என்று முடியும் அந்தக் கதை.
    
ஜான் அப்டைக் எழுதிய ‘வால்ட்டர் பிரிக்ஸ்‘ கதையும் இப்படித்தான். மனைவியின் நினைவாற்றலின் முன் தன்னை பலவீனமாக உணரும் கணவன். ஒரு பழைய சிநேகிதனின் பெயரை அவளுக்கு நினைவூட்டத் திணறுவான். அந்த விஷயத்தையே மறந்து அவள் அவனோடு உரையாடிக் கொண்டிருப்பாள். திடீரென்று அந்த உரையாடல் இடையே புன்னகையுடன் கணவன் “அவன் பெயர் வால்ட்டர் பிரிக்ஸ்“ என்பான், என்று முடியும் அந்தக் கதை.

தமிழ்மகனின் எழுத்து சமத்காரமான, உத்தி பூர்வமான எழுத்து. தன்னை பிற எழுத்தாளர்களில் முழுக்க வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள அவர் முயல்கிறார். பாம்பாட்டி, ஐ.டி. போன்ற கதைகளில் அவர் வெற்றியும் பெறுகிறார். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் அவர் வேறுபட்ட தளங்களை கையெடுத்துக் கொள்கிறார். அலுப்பூட்டாத நடையில் சுவாரஸ்யமான தகவல்களுடன் அவர் கதையை உரையாடல் பாணியில் அடுக்கிச் செல்கிறார். பாத்திரங்களும் இயல்பாய், அதிதங்கள் அற்று உரையாடுகின்றன.
    
அப்புறம், திருக்குறளை, எழுதுகையில் ஞாபகம் வந்தால் கதைகளில் இயல்பாகப் பயன்படுத்தி விடுகிறார். கச்சிதமான புதிய உவமை வீச்சுகள். இந்தக்காலக் கதை என அவற்றை உணர்த்த உவமைகளின் வாசனை அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கிறது. சம்பவத்தைக் காட்சிப் படுத்த உவமைகள் எப்பவுமே பேருதவி செய்கின்றன.
    
அழகு பிம்பம் சார்ந்த மஞ்சு அக்காவை பின்னாளில் நினைப்பதைப் பற்றி எழுதுகிறார் தமிழ்மகன்.

“நினைவின் ஆழத்தில் நிறம் மங்கி, சாயம் இழந்த மயில் தோகைபோல் . . .“

இன்னொரு இடம் – அதிகாரியின் தொந்தி பற்றிய வர்ணனை. தொந்திக்கு மேல் அரிசி மூட்டைக்குப் பட்டை கட்டிய மாதிரி பெல்ட்.“

அவள் சிரிக்க எத்தனிக்கும் போது முன் இரண்டு செவ்வகப் பற்கள் மட்டும் கார்ட்டூன் முயலுக்கானது போல் வெளியே தெரியும்.“ (நாங்கள் அணில் பற்கள், எனறோ வாழைப்பூ போல என்றோ தான் எழுதுகிறோம்.)

போலிசிடம் சிக்காமல் தப்பித்து சுவாமி சத்தியானந்தா நேபாளுக்கு, அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பித்துப் போக முயற்சிக்கிற கதை ஒன்று இருக்கிறது. கல்யாண அலங்காரத்துடன மாப்பிள்ளை யார் என்றே தெரியாமல் காத்திருக்கும் மணப்பெண் பற்றிய கதை இருக்கிறது. அதிகாரியைச் செருப்பால் அடிக்க என்று சந்தர்ப்பம் தேடி அவர் கூடவரும் தொழிலாளி கதை இருக்கிறது.

அவரது இளம் வயதிலேயே ‘ஆறறிவு மரங்கள்‘ போன்ற கவிதைத் தொகுதிகளை வாசித்திருக்கிறேன். ‘முப்பது வயதில் விதவைகள் இருக்கலாம். முதிர் கன்னிகள் இருக்கிறார்கள் இங்கே‘ என்று கோபம் தெறிக்க எழுதியவர் அவர். இன்னுமான அதே வேகமும் ஆத்திரமும் கோபமும இவரிடம் மிச்சம் இருக்கின்றன. ‘நியாயச் சங்கிலி‘ என்ற கதையில் திடுதிப்பென்று இப்படி ஒரு வாக்கியம் குதிக்கிறது.

“கோடி கோடியாக ஊழல் செய்கிறவர்கள், ஆயிரக் கணக்கில் ஊழல் செய்கிறவர்களை வேலையை விட்டு அனுப்புவது என்ன நியாயம்?“

வித்தியாசமான கதைக் களங்களுக்காகவும், சுவாரஸ்யமான வாசிப்புக்காகவும் தமிழ்மகன் தனக்கான கவனம் பெற்று விடுகிறார்.

மஞ்சு அக்கா பற்றிய புத்தகம் இது. அடுத்து தன் அண்ணன் பற்றியும், தம்பி தங்கை பற்றியும் அவர் எழுத வேண்டும், என்று காத்திருக்கிறேன்.
    
·        *

Mob 91 97899 87842

Saturday, December 27, 2014

சிறுகதை
எஸ்.எம்.எஸ்.

சைலபதி

*
உங்களில் எத்தனை பேர் மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் பார்த்தீர்கள்? அது சற்று முன் வெளிவந்த படம். இது 2011 கல்கி இதழில் வெளியான என் நண்பனின் கதை. 2013ல் அப்துல்காதரின் குதிரை புத்தகத்திலும் இது இடம் பெற்றுள்ளது. இதற்கும் மிஷ்கின் இயக்கிய பிசாசு கதைக்கும் ஒட்டுதல் உறவுகள், தாயாதி முறை, பங்காளி முறை இருக்கா இல்லையா?
*

வர், பார்ப்பதற்கு நாகரிகமான ஒரு மருத்துவரையோ வழக்கறிஞரையோ போலத்தான் இருந்தார். அமானுஷ்யத்தன்மை ஏற்படுத்தும் எதுவும் அங்கு இல்லாதது என் கற்பனைகளைப் பொய்யாக்கியது. எத்தனை நாகரிகமாக இருந்தாலும் எனக்கு அந்த இடம் மிகவும் வெறுப்பையே தந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான் ஒன்றும் பகுத்தறிவுப் பாசறைக்காரனல்ல என்றபோதும் இவற்றிலெல்லாம் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையிருந்ததில்லை. ஆனாலும் வேறு வழியில்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டேன். 

பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார்.

"என்ன பிரச்சினை?" 

என் உதடுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டன. ஏற்கெனவே மனதுக்குள் இரண்டு, மூன்று முறை சொல்லிப் பார்த்துக் கொண்டுதான் வந்து சேர்ந்தேன் என்றபோதும், தயக்கம் ஒரு பருந்தாக மாறி என் வார்த்தைகளைத் தின்றுவிட்டிருந்தது போலத் தோன்றியது. அவர், தயக்கமின்றிப் பேசும்படி வற்புறுத்தினார்.

"எனக்கு தினமும் ஒரு எஸ்.எம்.எஸ் வருகிறது, அதுவும் நூற்றுக்கணக்கில்!"

"சரி, என்ன செய்தி வருகிறது?"

"ஹாய், ஹவ் ஆர் யூ? என்று"

"இதில் ஒன்றும் தவறில்லையே!"

"ஆம். செய்தியில் தவறில்லைதான்."

"பிறகு?… அனுப்புகிறவரா?"

"நீங்கள் என் சிக்கலை நெருங்கிவிட்டீர்கள்."

"யார் அது?"

"என் நண்பன் ஜேம்ஸ்."

"இதில் சிக்கல் எங்கே என்று சொல்ல முடியுமா?" 

நான் அவரை உற்றுப் பார்த்தபோது அவர் அசிரத்தையான பார்வை ஒன்றை என் மீது வீசினார்.

"ஜேம்ஸ் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது."

இப்போது பார்த்தேன், அவர் அசிரத்தை விலகி விழிப்படைந்தவராக இருந்தார். 

குரலைச் சரி செய்துகொண்டு, "இது ஒன்றும் வோடஃபோன் ஜோக் இல்லையே" என்றார்.

"நிச்சயமாகயில்லை!"

அவர் சுவாரசியமுற்ற மனிதரைப் போலப் பேசத் தொடங்கினார்.

"ஜேம்ஸ் உங்கள் நண்பர் என்றீர்கள்? நெருங்கிய நண்பரா?"

"அப்படிச் சொல்வதற்கில்லை, பொதுவாகவே எனக்கு நண்பர்கள் குறைவு. ஜேம்ஸ் மட்டும்தான் கொஞ்சம் நெருக்கம். அவ்வளவுதான்."

"ஏன், நட்பு என்றால் பிடிக்காதா?"

"அப்படிச் சொல்வதற்கில்லை, ஆனாலும் நான் நண்பர்கள் என்று யாரையும் நெருங்கவிடுவதில்லை. பெரும்பாலும் அவர்கள் தொந்தரவுகளைக் கொண்டு வருபவர்கள் என்பது என் அனுபவம்." 

"நீங்கள் ஒருவகையில் கொடுத்து வைத்தவர், இன்னொரு வகையில் பாவம்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"இறந்தபிறகும் நலம் விசாரிக்கும் நண்பன் உங்களுக்குக் கிடைத்திருக்கிறான். அந்த வகையில் கொடுத்துவைத்தவர். ஆனாலும் உங்கள் கருத்தை உறுதி செய்யும்படிக்கு, இறந்த பின்பு கூடத் தொல்லை தருகிறவர்கள்தான் நண்பர்கள் என்கிற அனுபவமும் உங்களுக்கு வந்து சேர்ந்த விதத்தில் பாவம்."

அவர் பேச்சை நான் ரசிக்கவில்லை. அவர் நையாண்டி செய்வதாகப்பட்டது. ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர் என்கிற அளவில் உதவுவார் என்று நம்பித்தான் இவரிடம் வந்திருக்கிறேன். வேறுவழியில்லை என்று பட்டது. 

"சார்! கொஞ்சம் சீரியஸாகப் பேசலாமே?"

"நிச்சயமாக! நீங்கள் பதட்டமடைய இதில் ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்கள், எதை வைத்து இறந்துபோன உங்கள் நண்பன்தான் எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக முடிவு செய்கிறீர்கள்? அவர் எண்ணிலிருந்து யாராவது விளையாடலாம் அல்லவா? குறிப்பாக, சிறுபிள்ளைகள்?" 

"அதற்கு வாய்ப்பேயில்லை" என்று சொல்லி என் பையிலிருந்து இரண்டு செல்போன்களை எடுத்துப் போட்டேன்.

"இதில் ஒன்று என்னுடையது, மற்றொன்று ஜேம்ஸுடையது. இந்தச் சிக்கல் தொடங்கிய சில நாட்களிலேயே அவன் வீட்டில் இந்த ஃபோனைக் கேட்டு வாங்கிக்கொண்டேன். அவன் இறந்தது முதல் இந்த எண் அணைத்துதான் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதுவரை!"

"எஸ்.எம்.எஸ் அனுப்ப இப்பொழுதெல்லாம் செல்போனும், சிம்கார்டும்கூடத் தேவையில்லை. கணினி மூலமாகக்கூட அனுப்பமுடியும்."

"ஆமாம், அந்தத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் 'வாய்ப் டெக்னாலஜி'. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை."

அவர் இப்போது என் சிக்கலில் அதிக ஆர்வம் உடையவராக எனக்குத் தெரிந்தார். காரணம், காதலியின் உதடுகளை உற்றுநோக்கும் காதலனைப்போல என் உதடுகளையே நோக்கி அதிலிருந்து வரப்போகும் வார்த்தைகளில் ஆர்வமுடையவராய் இருந்தார்.

"ம். மேலும் சொல்லுங்கள்!"

"எஸ்.எம்.எஸ்-கள் வருவதெல்லாம் இரவு நேரங்களில்தான். ஆனால் அதுவல்ல முக்கியம். அது வரும் சில நிமிடத்திற்கு முன்பு யாரோ என்னைத் தொட்டு எழுப்புவது போலிருக்கும். கண்விழித்துப் பார்த்தால், அறையில் இருள் ஒரு பூதத்தைப்போல வளர்ந்து பரவியிருக்கும். இரவு விளக்கு அதன் பற்களைப்போல ஒரு மெல்லிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும். நான் அதிர்ந்து அடங்கும் நொடியில் எஸ்.எம்.எஸ் வந்து சேரும்."

"பிறகு?"

"பிறகென்ன? இப்போதெல்லாம் வீட்டின் எல்லா விளக்கையும் எரியவிட்டுக் கொண்டுதான் படுத்துக் கொள்கிறேன். ஆனாலும் பயம் நிரந்தரமாகிவிட்டது இந்த எஸ்.எம்.எஸ்-களைப் போல. நிரந்தரமாக அது ஒரு நடுக்கமாகி, என் நரம்புகளில் குடிகொண்டுவிட்டது. பகலில் கொஞ்சநாட்கள் தொந்தரவு இல்லாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது பகலிலும் தொடர்கிறது. அணைத்து வைத்துவிட்டு வேலைபார்க்கவும் முடியாத நிலை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள்தான் உதவவேண்டும்!"

அவர் விரல்களில் அகப்பட்டு உருளும் பென்சில், சுருங்கும் நெற்றி ஆகியன 'அவர் சிந்திக்கிறார்' என்று எனக்குச் சொல்லின. 

"கிட்டத்தட்ட உங்கள் சிக்கலை நெருங்கிவிட்டேன். ஆனாலும் முடிவுக்கு வர எனக்கு இன்னும் சில தகவல்கள் வேண்டும். அதாவது உங்கள் நண்பனைப் பற்றி... அவன் மரணத்தைப் பற்றி… முடிந்தவரை சொல்லுங்கள்!"

ஜேம்ஸ் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த ஊருக்குக் குடிவந்த முதல் நாளில்தான் அவன் அறிமுகமானான். வேலை நிமித்தம் நான் சென்ற அலுவலகத்தில் அவனைச் சந்தித்தேன். நீண்டநாள் பழகியவனைப்போல அவன் பேசினான். அவன் என்னை நண்பனாக்கிக் கொண்டான். நகரில் நான் எதற்கும் தேடியலைய வேண்டியதாயில்லை. எல்லாம் அவனால் எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அவனிடம் மட்டும் நான் மனம் திறந்து பேசுபவனாக ஆனேன். வேறு யாரோடும் நான் நட்பு பாராட்டவேயில்லை. அது தேவையாக எனக்குத் தோன்றவில்லை. அவனிடம் இருந்த ஒரே தொந்தரவு அவன் செல்போன்தான். செல்போனிலிருந்து கணக்கற்ற எஸ்.எம்.எஸ்-களை எல்லாருக்கும் அனுப்பியபடியிருப்பான். அவன் எஸ்.எம்.எஸ்-களோடுதான் பொழுது விடியும், பொழுது அடையும். ஆனாலும் அவனுக்காக நான் அதையெல்லாம் வெறுப்பதில்லை. அவன் பற்றிய எந்த நினைவும் அவன் இருக்கும் வரைக்கும் நான் என் மனதில் சேகரித்துக் கொண்டதில்லை. ஆனால், அவன் மரணம் அவை அத்தனையையும் ஒரே நொடியில் என் மனதில் அழியாத மைகொண்டு எழுதிவிட்டது. காரணம், அவன் எவ்வளவு தூரம் நல்லவன் என்பதுதான்.

"இந்த நகரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துகள் நடக்கிறது நாம் காணும்படி… அப்படி ஒன்றை நீங்கள் கண்டதுண்டா? கண்டால் என்ன செய்வீர்கள்? போய் யார் என்றாவது பார்ப்பீர்களா? நான் பார்ப்பதில்லை. ஒருவேளை நீங்கள் பார்க்கலாம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவர்களைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் போவோம், சொல்லுங்கள்? எனக்குத் தெரிந்த வரை மிகக்குறைவு அல்லது சில ஊர்களில் இல்லவேயில்லை. ஏன் கேட்கிறேன் என்கிறீர்களா? ஜேம்ஸ் அப்படி ஒரு விபத்தைக் கண்டால் ஓடிப்போய்ப் பார்ப்பான், அவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவான். அப்படி அவனால் உயிர் பிழைத்தவர்கள் சிலர் அவனை வாயார வாழ்த்தி அவனைப் பேசியதை நானே கேட்டதுண்டு. ஆனால், வாழ்த்துகளும் வசவுகளும் கலியுகத்தில் யாரையும் பாதிப்பதில்லை என்பதை அவன் வாழ்க்கை மூலம்தான் நான் உணர்ந்துகொண்டேன். அவன் விபத்துக்குள்ளான நாளில் அவன் உயிருக்குப் போராடியபோது இந்தப் பெருநகரத்து மக்கள் யாரும் அவனைக் காக்க முயற்சி செய்யவில்லை. ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனை போய்ச் சேர்ந்தபோது அவன் செத்திருந்தான்!"

துக்கம் தனது வலிமையான கரங்களால் என் குரலை நெரித்தது. அதன் வலி பெருக, கண்கள் சில நீர்த்துளிகளைச் சிந்தின. அவர் மௌனமாக இருந்தார். நான் அடுத்த வார்த்தை பேச எத்தனை நாள் ஆனாலும் அதற்காகப் பொறுமையோடு காத்திருப்பவரைப்போல அவர் இருந்தார்.

துக்கம் பெருகுகிற வேளையில்தான் வார்த்தைகள் எல்லையின்றி வாயில் ஊறிவந்தவண்ணம் இருக்கின்றன எனப்பட்டது. இன்னும் எனக்குப் பேசவேண்டும் போலிருந்தது.

"நான்தான் அவனுடலை மார்ச்சுவரிக்குச் சென்று அடையாளம் காட்டினேன். எனக்குள் ஒரு கோழை இருப்பது அன்றுதான் நிரூபணமானது. பிணவறைக்குச் சென்று அடையாளம் காட்டித் திரும்புமட்டும் என் இதயத்துடிப்பின் ஓசை கேட்டே நடுங்கிக் கொண்டிருந்தேன். அவன் மனைவியும் பிள்ளைகளும் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுத ஒலிக்கு அஞ்சித் தூரமாக ஓடி ஒளிந்துகொண்டேன். அவர்களின் பிளவுற்ற குரல்கள் கேட்டு விழித்துக்கொள்ளும் இரவுகள் அன்று முதல் தொடர்ந்தன."

அவர் எழுந்து வந்து என் தோள்களைத் தொட்டார். அது என்னை அமைதிப்படுத்தும் முயற்சி என்று தோன்றியது. 

"மை டியர் ஃப்ரண்ட்! உன் பிரச்சினை வினோதமானது! ஆனால், மிகவும் பழையது. இறந்தவர்கள் யார் மூலமாகவோ அல்லது ஒரு பொருள் மூலமாகவோ, வாழ்பவர்களோடு பேசுகிற கதைகளை நீ கேட்டிருப்பாய். அப்படிப் பேசும் நபரையோ அல்லது பொருளையோ எங்கள் வழக்கில் 'மீடியம்' என்று சொல்வதையும் நீ அறிந்திருக்கக்கூடும். உன் நண்பன் உன்னோடு பேச விரும்புகிறான். அதற்காக எஸ்.எம்.எஸ்-ஸை மீடியமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவ்வளவுதான்."

"அவ்வளவுதான் என்றால், நான் எப்படி அவனோடு பேசுவது? அவன் என்னோடு பேச என்ன காரணம்?"

"பொதுவாக இப்படித் தானே முன்வந்து பேசுபவர்கள் தரப்பில் தேவை ஏதாவது இருக்கும், இருக்கலாம். அதை அவர்களே சொல்லுவார்கள். ஆனால், அதற்கு முதலில், நாம் நம்மோடு பேசுபவர் இறந்துபோன நபர்தான் என்பதை நம்ப வேண்டும்! இதில் பயப்பட ஒன்றும் இல்லை. உன்னோடு பேசுவது உன் நண்பன்தான் என்று புரிந்துகொள்! உன் மனதுக்குள்ளாக நீ அவனை நெருங்கிப் பேசு! நிச்சயம் அவன் இந்த முறையிலோ அல்லது வேறுவழியிலோ உன்னோடு பேசி, தன் தேவையைச் சொல்லுவான். பேச முயற்சி செய்! பயப்படாதே! உடலற்ற ஆவிகள் உடலுள்ள நம்மை ஒன்றும் செய்யாது. அதிலும், உன் நண்பன் நல்லவன் என்று நீதானே சொன்னாய்?"

*******

நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்தது மாணிக்கத்தின் வீடு. போலீஸ் ஸ்டேசனில் இருந்து முகவரியைப் பெற்றுக்கொண்டு வருகிறேன். என் நிலை எனக்கே பரிதாபமாக இருந்தது. யாரைப் பார்க்கப் போகிறோம், எதற்காகப் பார்க்கப் போகிறோம் என எதுவும் தெரியாமல் ஒரு எந்திரத்தைப்போல அலைந்து திரிகிறேன். இதைத் தவிர்க்கவும் முடியாது. பொதுவாகவே நண்பர்களின் தொந்தரவுகளைத் தவிர்ப்பது மிகவும் சிரமம். அதிலும், இறந்துபோன நண்பனின் வேண்டுதல்கள் என்றால் எப்படி? ஜேம்ஸ்தான் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான் என்று நம்பத் தொடங்கிய நாளிலிருந்து, வரும் எஸ்.எம்.எஸ்-கள் எல்லாம் 'மாணிக்கத்தை உடனடியாகப் போய்ச் சந்தி' என்பதுதான். ஆரம்பத்தில், தினமும் ஒன்று இரண்டுதான் வந்துகொண்டிருந்தன. ஆனால், ஒருசில நாட்களிலேயே அது வழக்கம்போல எண்ணிக்கையற்று வரத் தொடங்கிவிட்டது. இப்பொழுது வேறுவழியே இல்லை. எனக்கும் ஜேம்ஸுக்கும் பொதுவாக மாணிக்கம் என யாரையும் தெரியாது. தொடர்ந்து சிந்தித்ததில்தான் தெரிந்தது. ஜேம்சை விபத்துக்குள்ளாக்கிய வேன் டிரைவர் பெயர் மாணிக்கம் என்று. 

மாநகரப் பேருந்தில் ஜேம்ஸ் வந்திருக்கிறான். பேருந்து நிறுத்தம் எவ்வளவு ஓரமாய் இருந்தாலும் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்துவது என்னவோ நடுரோட்டில்தான். அப்படி நடுரோட்டில் நிறுத்திப் பயணிகளை இறக்கியிருக்கிறான் ஜேம்ஸ் வந்த பேருந்தின் ஓட்டுநர். அப்போது, இடதுபுறம் சீறிப் பாய்ந்து வந்த வேன் ஜேம்ஸை இடித்துத் தள்ளியது. ஜேம்ஸ் தூக்கி வீசப்பட்டான். வேன் டிரைவர் தப்பியோட முயலவில்லை. போலீஸ் வரும்வரை அங்கேயே இருந்தான். போலீஸ் அவனைக் கைது செய்தது. எனக்கு, நடுரோட்டில் நிறுத்திப் பயணிகளை இறக்கிய ஓட்டுநரையும் கைது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஆனால், அது வேறு யாருக்கும் தோன்றவில்லை. 'அவன்தான் வேன் டிரைவர்' என்றும், 'அவன் பேர் மாணிக்கம்' என்றும் சொன்னார்கள். நான் அவனைப் பார்த்தேன். பார்ப்பதற்கு அவன் முரட்டு மனிதனாக இருந்தான். அவன் கண்களில் விபத்து நேர்ந்ததற்கான பதற்றம் துளியும் இல்லை. 

மீண்டும் அவனை வழக்கு விசாரணை நாட்களில் பார்த்ததுண்டு. அவன் பார்வை ஒரு மிருகத்தைப்போல என்னைப் பார்த்ததுபோல் இருந்தது. ஜேம்ஸின் மனைவி, குழந்தைகளை அவன் பார்த்த பார்வை அச்சமூட்டுவதாக இருந்தது. அத்தகைய ஒரு மனிதனைப் போய்ப் பார்க்க ஜேம்ஸ் என்னைத் தூண்டுவானேன்? நானும் அதை மதித்து இங்கு வருவானேன்? ஒருவேளை, அவனால் தன் மனைவி, குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என ஜேம்ஸ் அஞ்சுகிறானா? அப்படியென்றால் நான் இதில் என்ன செய்ய? அல்லது என்ன செய்யமுடியும்? அவனைச் சந்தித்துப் பேசினால் அடிவிழாமல் தப்புவோமா? பயம் இருந்தும் இங்கு வரத் துணிந்ததுதான் என்ன? இல்லை, நானாக வரவில்லை. என்னை இயக்குவது நான் இல்லை என்று எனக்குத் தோன்றியது. இதோ மாணிக்கத்தின் வீடு. குரல் கொடுத்தேன். அவன் மனைவி வந்தாள். அவள் இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது. அதன் தலை வறண்டு அழுக்கேறியிருந்தது. அவள் முகத்திலும் வறுமையின் ரேகை அழுத்தமாய்த் தெரிந்தது. 

"மாணிக்கம் இல்லையா?"

"அவர் எங்க ஊட்ல இருக்கிறாரு? சாமீன்ல வந்த நாள்லயிருந்து டாஸ்மாக்லதான் கிடக்குறாரு. நீங்க யாரு சார்?"

நான் பதில் சொல்லவில்லை. "டாஸ்மாக் எங்க இருக்குது?" என்றேன்.

அவள் காட்டிய பாதையில் டாஸ்மாக் வந்து சேர்ந்தபோது அங்கு மாணிக்கம் இல்லை. ஆனால், எல்லோருக்கும் அவனைத் தெரிந்திருந்தது.

"இப்போதான் சார் போனாப்ல. செம டைட்டு! எப்படினாலும் ரயில் கேட்டைத் தாண்டியிருக்காது சார். விரசலாப் போனாக்கா அவனப் புடிச்சிரலாம்."

வேகமாக நடந்தேன். சில நிமிடங்களில் கேட் வந்துவிட்டது. கேட் மூடியிருந்தது. கேட்டிற்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் யாரும் இல்லை, என்னைத் தவிர. எங்கு போயிருப்பான் என்று யோசித்தபடியே கேட்டிற்குள் குனிந்து வந்தேன். தொலைவில் ரயில் வரும் ஓசை கேட்டது. எந்த டிராக்கில் வருகிறது என்று பார்ப்பதற்காக இருபுறமும் பார்த்தேன். அப்போதுதான் ஒரு மனிதன் தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுப்பது தெரிந்தது. ரயில் கத்தும் ஓசை கொஞ்சம் சமீபமாகியிருந்தது. அந்த மனிதன் சரியாக ரயில் வரும் தண்டவாளத்தில்தான் தலை வைத்திருந்தான். என்னுள் பதட்டம் தொற்றிக்கொண்டது. எழுந்துகொள்ளும்படிச் சத்தமிட்டபடியே அவனை நோக்கி ஓடினேன். அவன் காதுகளற்றவனைப்போல நகராதிருந்தான். ரயில் அவனை நெருங்கிவிடும் தொலைவை எட்டிவிடும் தூரத்திலிருந்தது. என்னால் அதற்குள் அவனருகே செல்ல முடியுமா என்று தெரியவில்லை. என் சக்தியை ஒன்று திரட்டி ஓடினேன். காலத்தில் நொடிகள்கூட எவ்வளவு முக்கியம் என்று புரிந்த கணம் அது! இன்னும் சில நொடிகள் ரயில் தாமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். கண்ணிமைக்கும் பொழுதில் தாவி அவனை இழுத்து அப்புறம் போட்டுவிட்டுப் பார்க்கவும் ரயில் கடக்கவும் சரியாகயிருந்தது. ரயில் தோற்றது என்று எண்ணிக்கொண்டேன். அது சரி, ரயில் என்ன, உயிர்காக்கும் மனுசத்தன்மையோடு ஓடுகிறபோது இந்த உலகில் எல்லாம் மனிதனிடம் தோற்கும் என்று பட்டது.

ரயில் பெரும் சத்தத்தோடு கடந்துபோகும் வரை காத்திருந்தேன். பின்பு தோன்றிய வெளிச்சத்தில்தான் பார்த்தேன், அது மாணிக்கம்! நான் தேடிவந்த மாணிக்கம். என்ன நடக்கிறது இங்கு?

"மாணிக்கம்… மாணிக்கம் என்ன இது? என்ன காரியம் பண்றீங்க?"

அவன் ஈனஸ்வரத்தில் அழுது கொண்டிருந்தான். 'என்னையேன் காப்பாத்துனீங்க?… என்னையேன் காப்பாத்துனீங்க?...' என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

நான் ஒன்றும் புரியாத நிலைமையில் இருந்தேன். அவனை நிதானப்படுத்தி, கைத்தாங்கலாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றேன். தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன். இப்போதும் அவன் அழுகை நின்றபாடில்லை. 

"என்னாச்சு மாணிக்கம்? ஏன் அழுறீங்க? என்ன யார்னு தெரியுதா சொல்லுங்க!"

"தெரியுது சார்! நீங்க நான் கொன்ன ஜேம்ஸோட ஃப்ரண்ட்."

"சரி, ஏன் தற்கொலை பண்ணிக்கப் போனீங்க? நான் மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும் சொல்லுங்க?"

"செத்துப் போயிருப்பேன் சார், செத்துப் போயிருப்பேன். அதுக்குதான் முயற்சி பண்றேன், அது எனக்கு வரமாட்டேங்குது. என்னைக்கு அவர அடிச்சிக் கொன்னேனோ அன்னைக்கே பாதி செத்துட்டேன். அவர் பொஞ்சாதி புள்ளைகள பாத்தப்போ மீதியும் செத்துட்டேன். பாவம் சார்! ரெண்டு பசங்க. அதுவும் சின்னப் பசங்க. அவர் இல்லாதைக்கு அதுங்க என்னா சார் பண்ணுங்க? நான் அன்னைக்குக் குடிச்சிருந்தேன் சார்! பொதுவா, குடிச்சாக்கா நான் வண்டி ஓட்டுறதில்ல. அன்னைக்கு மொதலாளி என்ன வம்பு பண்ணி அனுப்பிச்சான் சார்! நான் வேணாம்னுருக்கணும், சொல்லலயே! என்னா வேகம்னு எதுவும் தெரில. பாவம் சார் அவரு! பாத்தாலே பாவமா இருந்தது. அப்படி ஒரு மனுசனக் கொன்னுட்டு என்னா சார் வாழ்க்க? ஜெயில்லயே ரெண்டு தபா சாவ டிரை பண்ணினேன், முடில. காப்பாத்திட்டானுங்க. இங்க வந்து சாவலாம்னா நீ காப்பாத்துற. நா என்னதான் பண்றது?"

எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஜேம்ஸ் இன்னும் மாறவேயில்லை, இறந்தபிறகும்!


* *


shylapathy@gmail.com Mob 91 97899 92848

Wednesday, December 24, 2014

short story

மீனாக மாறியவன்

எஸ். சங்கரநாராயணன்

கிராமமெல்லாம் முகம் மாறி ரொம்பக் காலமாச்சு. இப்போது அந்தப் பழைய முகத்தைப் பார்க்க எத்தனை ஆசையாய் இருக்கிறது... 

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு முகம் இருந்தது. சட்டென்று அடையாளங் காண்கிற முகம். அணிகிற வஸ்திரங்களின் அடர்சாயம் போல. கிழவன்கோவில் என்றால் கொடுவாள் மீசைக்கார முனி. காவல்தெய்வம். அதன் கோவில்கொடை. திருநாள்க் கொண்டாட்டம்...
 

திறந்த வயல்வெளியும் அங்கே புதுசு புதுசாய்க் கோடையில் பறவைகள் வந்தடைவதுமான 'மாந்தோப்பு'....
 

இப்போதுபோல அப்போது பத்து நிமிஷத்துக்கொருதரம், பதினைந்து நிமிஷத்துக்கொருதரம் பஸ் கிடையாது. இத்தனை வாகனப்புகை கிடையாது. ஊர் சுத்தமாய் இருந்தது. எப்பவாவது வரும் பஸ். வரப்போக அதன் பின்னால் கிளம்பும் புழுதி. ஊய்யென்று அதன் பின்னால் ஓடிச்செல்லும் பொடிசுகள். ''வாங்கண்ணே, வாங்க மாமா, செளக்யந்தானே?'' என்று ஏற்றிக் கொள்கிற கண்டக்டர்.
 

எங்கள் ஊருக்கு என்ன அடையாளம்?
 

ஆ, ஹிக்கிரிகிரி! ஆச்சரியம். ஒரு கிறுக்குப்பயலை வைத்து, அதுவும் எங்கிருந்தோ எப்படியோ மழைத்தண்ணீர் போல வந்து ஊரில் சேர்ந்து கொண்டவனை கிராமத்தின் முகமாகச் சொல்வது, அது நினைவில் தங்குவது விநோதமானதுதான்.
 

அவன் பேர் யாருக்கும் தெரியாது. அவன் ஊரும், அவனைப் பற்றிய விவரங்கள் எதுவுமே யாருக்குமே தெரியாது. என்றாலும் அவனும் மனிதன் என்கிற அளவில் எப்படியோ ஊரின் ஓர் அங்கமாகிப் போனான், என்று தோன்றுகிறது.
 

யாரோடும் பேசமாட்டான். மேற்சட்டை போடாத உடம்பு. யாரிடமும் கைநீட்டி நின்று காசு கேட்க மாட்டான். தெருத் தெருவாகச் சுற்றித் திரிவான். கோயில்மாடு என்று சுதந்திரமாய்ச் சுற்றித் திரிகிற அந்த மனிதனைப் பற்றி எல்லாருக்கும் ஒரு பிரியம் எப்படியோ வந்திருந்தது. பசித்தால் ஏதோவொரு வீட்டு வாசலில் வந்து நிற்பான். ''ஹிக்கிரிகிரி!'' என்று விநோதமாய் ஒரு சத்தம் எழுப்புவான். அப்போது விரல்கள் பத்தையும் ஒரு விநோதமான மடிப்பில் சுருட்டி வாயை மறைத்துக் கொள்வது ஞாபகம் இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டு அம்மாவோ, யாராவது ஒரு பெண்மணியோ ஒரு தையல் இலையிலோ வாத இலையிலோ சோறும், அதன் தலையில் ஊற்றிய பழைய குழம்பும் கொண்டுவந்து தர, அதை அந்தத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடுவான். அவன் சாப்பிடுவதில் காணாததைக் கண்ட அவசரம் இராது. ருசித்துச் சாப்பிடுவான். ரொம்ப உற்சாகமாகி வி ட்டால் சாப்பிடும்போதே ஒரு சத்தம் கொடுப்பான். ''ஹிக்கிரிகிரி!'' எங்கள் ஊர்ப் பிள்ளைகளுக்கும், எல்லாருக்குமே பிடித்த, பழகிப்போன சத்தமாக அது ஆகியிருந்தது.
 

எங்கள் ஊரை அவன் நேசித்தான். நாங்களும் அவனை நேசித்தோம் என்பது அவன் காணாமல் போகும்வரை எங்களுக்குத் தெரி யாது. எங்கள் கிராமத்து தேவதையாக எத்தனை கம்பீரமாக சுதந்திரமாக வளையவந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே அனைவருக்கும் ஒரு சிரிப்பு. இளம் பிள்ளைகள், வாலிபப் பசங்கள் அவனைப் பார்த்ததுமே, ஊய்யென்று பஸ் புழுதி போலக் கிளம்பி ''ஹிக்கிரிகிரி'' என்று குரல் கொடுப்பார்கள். அவன் திரும்பி அவர்களைப் பார்ப்பான். அவனும் சட்டென்று விரல்களை விநோதமாய் மடித்துச் சிறு துள்ளலுடன் சுருட்டி, அதே சப்தமெழுப்புவான். ''ஹிக்கிரிகிரி!'' அதுதவிர அவனிடம் வேறு பேச்சே கிடையாது. அவனது பாஷை அது. வேறும் அலைத் தளும்பல். ஹிக்கிரிகிரி!
 

ஊரணிக்கரைப் பிள்ளையார்த் திண்ணையில் வாசம். மேலேயிருந்து நிழலைக் கொட்டும் ஆலமரம். அதன் சொகமான காற்று. எந்த மனுசனுக்கும் எந்த வெயிலுக்கும் அங்கே வந்தால் தூக்கம் சொக்கும். ஊர்மாடுகளெல்லாம் பிரியமாய் வந்தடைந்து கால்பரப்பி கூட்டங் கூட்டமாய் உட்கார்ந்து அசைபோடும் இடம் அது. அவன் எழுந்து சிலசமயம் கூத்துமேடை ராஜாபோல திண்ணையில் நடப்பான். இடுப்பில் அட்டைக்கத்தி இல்லாத ராஜா. மேற்சட்டை கூடவும் போடாத ராஜா. இங்குமங்குமாய் உலாத்தியபடி அவன் அப்படியென்ன யோசிக்கிறானோ? யாருக்குத் தெரியும்?
 

சில சமயம் தனிமையான அமைதியான சப்தமற்ற தருணங்களில் படித்துறையில் இறங்கி தண்ணீர் தழுவுகிற முதல் சில படிகளை வேடிக்கை பார்த்தபடி நிற்பதை கவனி க்கலாம். பெளர்ணமி வெளிச்சம். பால்மழை. கஷ்கத்தில் கிச்சு கிச்சு மூட்டினாப் போலக் கரைப்படிகளைச் சிரிக்க வைக்கும் அலைகள். அந்தத் தண்ணீருக்குள்ளிருந்து கிளுகிளுவென்று மேலேறிவரும் காற்று முட்டைகள். மீனின் மூச்சுக் காற்று அது, என அவனுக்குத் தெரியுமா?... அந்த அமைதிக்கு கரைநோக்கி மேலே வந்து கரையோரம் நடமாடும் மீன்கூட்டம். அவைகளை வெகு சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருப்பான். தன்னைப் பார்க்கவென்றே அவை வருகிறதாய் அவன் ஒருவேளை நினைத்துக் கொண்டிருக்கலாம். அவன் நீரில் இறங்கியோ குளித்தோ யாரும் பார்த்ததில்லை. என்றாலும் அவன் சுத்தமாய் இருந்ததாகவே நாங்கள் உணர்ந்தோம். கிராமத்துப் புழுதியுடன்!
 

ஊரில் வருஷா வருஷம் புதுமழை பெய்ததும் ஊரணிக்கும் ஊரெல்லை ஓடைக்கும் புதுத்தண்ணி வரும். ஊரையே உற்சாகப் படுத்திக் கொண்டு உள்நுழையும் தண்ணீர். அப்போது அவனையும் பிடிக்க முடியாது. அவன் நடையில் ஒரு துள்ளல் - தெரிப்பு தெரியும். வேகம் - விறுவிறுப்பு தெரியும். கண்ணில் என்ன பிரகாசம்! இன்னமும் இதோ உள்ளே அது பத்திரமாய் இருக்கிறது. அந்தக் குரலுங்கூட, என்பதையும் விஸ்தரிக்க வேண்டியதில்லை.
 

புதுத்தண்ணி வரவர புது மீன்களின் வரத்தும் அதிகமாகி யிருக்கும். இருளைத் தழுவிக் கிடக்கிற கரைநோக்கி அலைதழுவிக் கிடக்கிற படிகளில் கூட்டங் கூட்டமாய் மேலே வந்து பார்க்கிற மீன்கள். திடுமென டிரில் மாஸ்டரின் உத்தரவின் பேரில் அவையனைத்தும் விஷ்க்கென ஒரு திரும்பு திரும்பி உள்ளே மறையும் சத்தத்துக்கு அவனுள் ஒரு சிலிர்ப்பு வெட்டும். மாட்டின் உடம்பில் ஏற்படும் தோலின் அதிர்வு போல.
 

வருஷா வருஷம் ஊர்ப் பொதுவில், அந்த மீன்களுக்குக் குத்தகை விடுவார்கள். இந்தப் பிள்ளையார் மேடைப்பக்கம்தான் ஊர் கூடி ஏலம் நடக்கும். அநேகமாக அதுவும் ஒரு பெளர்ணமி ராத்திரியாகத்தான் இருக்கும். ஆடும் மாடும் மீன்களும் காற்றும் நடமாடித் திரியும் அந்தப் பிரதேசம் வெறிச்சிட்டு விடும். அவனும் - ஹிக்கிரிகிரி - அப்போது காணாமல் போயிருப்பான். அப்போது மாத்திரம் ஊருக்குள் யார்வீட்டு மாட்டுத் தொழுவத்திலாவது திண்ணையிலாவது படுத்துக் கொள்வான். மீன்களை வேட்டையாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. மனுசன் - அதிக அறிவுள்ள மனுசன் - இப்படியெல்லாம் பண்ணினால், அப்பிராணி மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டால், அதுங்க பாவம் என்ன பண்ணும், என அவன் வருத்தப் பட்டாப் போலிருக்கும். தனக்குள் என்னென்ன யோசனைகள் வைத்திருந்தானோ அவன்.
 

அப்போதெல்லாம் ஊர்ஜனங்கள் ஒத்துமையாய் இருந்தார்கள். கோயில் குருக்கள் முதல் வயல்வேலை சம்சாரி முனுசாமி வரை அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். கோயில் குருக்கள் மாட்டுக்காரனை டேய் போட்டு அழைப்பதில் ஒரு பிரியம் இருக்கும். ''நம்ம வீட்டெருமை கன்னு போட்டது சாமி'' என்று சாமியப்பன் சொல்ல, ''பேஷ். வெள்ளைக்கிழமை, விசேஷம். உன் தொழுவம் பெருகட்டும்டா'' என்று குருக்கள் மனசார வாழ்த்துவதைப் பார்க்கலாம். கிராமத்துப் புழுதியெல்லாம் போய் தார்ரோட்டில் வாகனப்புகை வந்து ஊரே மாறிப் போயாச்சு.
 

ஊரில் புதுப் பணக்காரர்கள் முளைத்தது ஞாபகம் வந்தது. அதான் மனம் இத்தனை சுத்தியடிக்கிறது. அப்போதுதானே பிரச்னை வந்தது. அது ஜாதிக் கலவரம் இல்லை ஸ்வாமி. பணக்கலவரம். அதுமாத்திரம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை வெளிப்படையாகச் சொல்ல எல்லாருக்கும் பயம். குடிகாரனிடமும் பணவெறி பிடித்துத் திரிகிறவனிடமும் யார் பேசுவார்கள்? பேசினால் அவர்களுக்கு ஏறுமா?
 

மணவாளன் கையில் எப்படியோ பணம் புரண்டது. அது கள்ளச் சாராயம் காய்ச்சியோ, ஏழை பாழை வயிற்றில் அடிச்சோ எப்படி யெல்லாமோ சம்பாதிச்ச பணம். இல்லாட்டி இத்தனைச் சுருக்கில் இத்தனைப் பணமும், ஊர் எல்லையில் சம்சாரிகளின் நிலத்தையெல்லாம் பேரம் பேசியும் அடித்துப் பிடுங்கியும் சுத்தி வளைத்திருக்க முடியுமா அவரால்?
 

மீன் குத்தகை பத்திப் பேசவந்தால் புதுப்பணம் பத்தியும், ஜாதி சமாச்சாரத்தையும் யோசனை பண்ணாமல் முடியாது.
 

வருஷா வருஷம் போட்டியில்லாமல் பஞ்சாயத்துத் தலைவர் சிவகுருநாதன் குத்தகை எடுத்துவிட்டுக் கோயிலுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவார். ஊரில் அவரை எதிர்த்துப் பேசியோ மரியாதைக் குறைவாய் நடத்தியோ பார்க்க முடியாது. ஊர்ப் பெரியதலை அவர்தான். நாட்டாமை - நியாயஸ்தர் அவர்தான். தமிழில் சினிமாக்கள் ஆட்சி வந்ததும், நாட்டாமைகள் எப்படியோ வில்லன்களாகிப் போனார்கள். எல்லார் வீட்டுக் கல்யாணத்துக்கும் அவர் வகை என்று பெரியசீர் போகும். ஊர்க்கோவிலுக்குக் கொடை என்றால் பெரிய நோட்டு அவர் முதலில் வைப்பார். அவர் பணத்தைத் தக்க வைத்துக்கொள்ள, அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள, என்று அதற்கும் ஆயிரம் தர்க்கவாதங்கள் பண்ணலாம். இந்தக் காலத்தில் அதை மறுக்கவும் வேணாம். விஷயம் என்னன்னா, அது ஜாதிப் பிரச்னை இல்லை! அது முக்கியம்.
 

ஏலநாளில் பஞ்சாயத்துக் குத்தகையில் சிவகுருநாதனுக்கு எதிராக ஒரு குரல். அது மணவாளனின் குரல் என யூகிப்பதில் சிரமம் இல்லை. ஊர் அதற்கப்புறமே அத்தனை சுரத்தா ய் இல்லை. பணக்காரனைச் சுத்தி நாலுபேர். பைத்தாரனைச் சுத்தி நாலுபேர் என்பது சொலவடை.
 

ஊர் ரெண்டுபட்டது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
 

செய்தித்தாளிலெல்லாம் எங்க ஊர் பத்திச் செய்தி வந்தது. எங்கள் ஊருக்குள் முதல்முறையாகப் போலிஸ் வந்தது. நொந்தவன் அப்பிராணி அத்தோடு சில கயவாளிகளையும் அது அள்ளிக்கொண்டு போனது.... நாய்வண்டி போல.
 
வெளியிறங்க முடியவில்லை. வேலை கீலை என்று போய்வருகிறவர்கள் பயந்து பயந்து நடமாட வேண்டிய சூழ்நிலை. எப்படி இருந்த ஊருக்கு இப்படி சீக்கு வந்துவிட்டதே. 

புதுத்தண்ணியும் புதுப்பணமும் பலிவாங்கும் என்று சொல்வார்கள். பண வரத்து ஊரையே ரெண்டாக்கி விட்டது. ஒரு பக்கம் சிவகுருநாதன் - பரம்பரைப் பணம். அவர் ஜாதிக்காரர்கள்.... இன்னொரு பக்கம் மணவாளன். அவர் ஆட்கள். குத்தும் வெட்டும் கொலையும்...
 

பக்கத்தூர் கிழவங் கோவில் கொடையில் முக்கியமான அம்சம் கிடாவெட்டு. ஐயோ நாங்கள் அந்தப் பக்கம் போக மாட்டோம். பதறும் குறும்பாட்டைப் பிடித்து வைத்துக் கொண்டு கழுத்தில் அரிவாளால் ஒரே போடு. தலை தெரித்து விழுமாம். சில சமயம் சாமியாடி ஒருத்தன் ஒரு குட்டியைப் பிடித்துத் தூக்கி, பல்லால் கடித்து அதன் ரத்தத்தை உறிஞ்சியபடியே உடலை விட்டெறிவானாம். நாங்கள் பார்த்ததில்லை. இதை நின்று வேடிக்கை பார்க்க முடியுமா என்ன? டவுசர் நனைஞ்சிரும் பார்க்கிறபோதே.
 

பிள்ளையார் சாதுவான கடவுள். ஊரணிக்கரைப் பிள்ளையார் முன்னிலையில் ஒருவன் குத்துப்பட்டுக் கிடந்தான்.
 

அவன் மணவாளனின் சகா என்று பேசிக் கொண்டார்கள். காட்டில் தீ பற்றிக் கொண்டால் என்னாகும்? அந்தக் கதை ஆகிவிட்டது.
 

விஷயம் விஷம்போல ஜிவுஜிவுத்துப் பரவியது. ஊரெங்கும் காலரா போல அந்த வியாதி, வெக்கை பரவியது. விலுக்கென்று எப்படியோ எங்கெல்லாமோ தீப்பற்றி எரிகிறது. ஊரே கலகலத்துப் போகிறது. மரங்களே நடுங்கின. அறுவடை வயல்களும் இந்தத் தீக்கு விதிவிலக்கல்ல. ஊருக்கெல்லாம் நிழலை வாரிக்கொடுக்கும் ஓடையோரத்து விருட்சங்களே அந்தச் சூட்டில் பட்டையுரிந்து திகைத்தாப் போலிருந்தது.
 

இடையில் நாங்கள் அவனை - ஹிக்கிரிகிரி - மறந்து போயிருந்தோம். கிராமத்தின் முகமே மாறிவந்தது. அதன் உக்கிரம், கொடூரம் சகிக்கக் கூடியதாய் இல்லை. ஊரில் அத்தனை அக்கிரமங்களுக்கும் மணவாளனின் ஆட்கள் சிவகுருநாதனையும், சிவகுருநாதனின் ஆட்கள் மணவாளனையும் காரணம் காட்டினார்கள். இடையே ஹிக்கிரிகிரி என்ன ஆனான், எங்கே போனான், யார் கண்டது? யாருக்கு அவன் நினைவு வந்தது. அவன் பசிபற்றி யாருக்கு யோசனை வந்தது... எல்லாருக்கும் அவரவர் பற்றிய பயம். உயிர்ப்பயம். அவரவர் பெண்டாட்டி பிள்ளைகள் குடும்பம் பற்றிய பயம்.
 

இரவுகளில் இப்போதும் அந்த அமைதி இருந்தது. என்றாலும் இது வேறு மாதிரியானது. திக்கென்ற அடிவயிற்றுக் குளிருடன் பயத்தில் விக்கித்துத் திணறும் குழந்தையின் வாய்மூடல் அது. அது மெளனமாகுமா? புயல் வருகிற அறிகுறி அல்லவா அது?
 

ஹிக்கிரிகிரி தனித்து அந்த இரவில் நடக்கிறான். ஊரே பயந்து நடுங்கிக் கதவைச் சாத்திக் கிடந்தது. அவனுக்குப் பசிக்கிறது. ஏதோவொரு வீட்டு வாசலில் ஹிக்கிரிகிரி நின்று ஒரு நிமிடம் பார்க்கிறான். ஜன்னல்களும் சாத்திக் கிடக்கின்றன. கதவு திறக்கப்படவில்லை. ஊருக்குச் சீக்குப் பிடித்திருந்தது... அவன் வாசலில் நின்றபடி பசிக்கிற வயிற்றைத் தடவியபடி திடீரென்று கத்துகிறான். ''ஹிக்கிரிகிரி!''
 

நேரமாகிறது. கதவு திறக்கப்படவே யில்லை. காத்திருந்ததுதான் மிச்சம். அவன் நாலுவீடு தாண்டித் தள்ளாடி நடக்கிறான். பசி. வயிற்றைத் தடவிக் கொள்கிறான்.
 
யானைப்பசி. யானைத் தள்ளாட்டம். இன்னொரு வீட்டு வாசலில் நிற்கிறான். அந்த வீட்டின் தாயை, அவள் குழந்தையை அவனுக்குப் பிடிக்கும். அம்மா நானும் உன் குழந்தைதானே?... வெளியே பூட்டு தொங்குகிறது. எங்கே அவர்கள்? ஊரைவிட்டு எப்போது ஏன் வெளியேறினார்கள்?
 

ஏமாற்றமாய் இருந்தது. கவலை. அவனும் ஊரைவிட்டுப் போய்விடுவான், என்று நாங்கள் உள்ளே படுத்தபடி யோசித்துக் கிடந்தோம். யாரும் கதவைத் திறக்க நினைக்கவில்லை. ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து ராப்பாடி - குறி சொல்லி உடுக்கையடித்தபடி வரும் குடுகுடுப்பைக்காரன் - ராப்பாடியை வேடிக்கை பார்க்கிறதைப் போல வேடிக்கை பார்க்க ஆசைப்பட்ட குழந்தைகளைத் தாய்மார்கள் இழுத்துப் பொத்திக் கொள்கிறார்கள்.
 

அவனது தனித்த திகைத்த குரல் ஊரெங்கும் கேட்கிறது. அதுதான் நாங்கள் அவன் குரலைக் கடைசியாய் கேட்டது.
 

மறுநாள் ஹிக்கிரிகிரியைக் காணவில்லை.
 

அவன் ஒருவேளை ஊரைவிட்டுப் போயிருக்கலாம், என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம்.
 

மறுநாள் ஊரில் புதுப் பிரச்னை கிளம்பியது. ஊரணிக்கரை முழுக்க நாற்றம் சகிக்க முடியவில்லை. ஊரணியில் கூட்டங் கூட்டமாய் மீன்கள் செத்து மிதந்தன. ஊரணித் தண்ணியில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள். யார் இதைச்
 
செய்திருப்பார்கள்?
 

மணவாளன் புதுக்குத்தகை எடுத்ததில் ஆத்திரப்பட்டு பண்ணையாரி ன் ஆட்கள் இதைச் செய்ததாக ஆத்திரத்துடன் மணவாளன் மீசையை முறுக்கினான். விஷயம் இன்னும் உக்கிரமாகும் போலிருந்தது. ஊரின் பயம் அதிகரித்தது. விவகாரம் இத்தோடு அடங்காது... இன்னும் முற்றும் போலிருந்தது.
 

திடீரென்று பிரச்னையில் புதுத் திருப்பம் ஏற்பட்டது. சிவகுருநாதனின் ஆட்கள் ஒரு புதுக்கதை கிளப்பி விட்டார்கள்...
 

எங்கே ஹிக்கிரிகிரி? அவனை ஆளையே காணவில்லை. அவன்தான் - சோறு கிடைக்காத ஆத்திரத்தில் ஊரணியில் விஷயத்தைக் கலந்துவிட்டு ஊரைவிட்டே போய்விட்டதாக குருநாதன் தரப்பில் பேசினார்கள்.
 

அப்போதுதான் ஊருக்கே ஹிக்கிரிகிரியின் ஞாபகமே வந்தது. அவன் இல்லை என்பதே பிரக்ஞையில் உறைத்தது.
 

யாருக்குமே அந்த வாதத்தில் நம்பிக்கை இல்லை. சே, அவன் அப்படிச் செய்திருக்க நியாயமே இல்லை. அவன் அப்பிராணி, அவன்மேல் பழிபோடுதல் அபாண்டம், என்று எல்லாருமே நினைத்தோம். நினைத்தோ மே யொழிய யாருமே பேசவில்லை. என்ன பேச? அவனவனுக்கு பயம். எதையாவது பேசி, யாருடைய எதிர்ப்பையும் சம்பாதிக்க அவனவனுக்கு அவனவன் குடும்ப பயம்.
 

ஹிக்கிரிகிரிதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றார் குருநாதன்.
 

அவன் ஆளையே கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஊரைவிட்டு வெளி யேறி விட்டதாய் நாங்கள் நினைத்தோம். ஊரே ஊனமாகி விட்டதாய் துக்கமாய் நினைத்துக் கொண்டோம். ஐயோ இவன் வரமாட்டானா, என்று குழந்தைகள் நினைத்தன. அந்தகச் சத்தம் - ஹிக்கிரிகிரி - அதை எப்படி மறக்க முடியும்?
 

விஷயம் ரெண்டுநாளில் எல்லாருக்கும் தெரிந்தது.
 

ரெண்டாவது நாள் ஹிக்கிரிகிரியின் ஊறிய உடல், ஊதிய பிணம் ஊரணிக்கரையில் ஒதுங்கியது.
 

பசித்துத் தள்ளாடி ஊரணிப்பக்கம் ஹிக்கிரிகிரி நடக்கிறான். அம்புபட்ட பிராணியின் நடையின் தள்ளாட்டம். எப்படியோ ஊரணிக்கரை வந்து சேர்கிறான். மெல்ல அவன் ஊரணிக்கரை படிகளில் இறங்கி, பசியுடன், அந்தத் தண்ணீரைப் பருக ஆரம்பிக்கிறான்.
 

அப்போதுதான் அவன் மீனாக மாறியிருக்க வேண்டும். மனிதவாசம் பார்த்து பயந்து விஷ்க்கென அவன் நீரடிக்குப் பதுங்கி யிருக்க வேண்டும்.
 

அப்போதுதான் அவன் வயிறு நீரால் நிரம்பி யிருக்க வேண்டும்.
 

அப்போதுதான் புதுத் தண்ணீருக்குப் பலிவாங்கும் பசி அடங்கியிருக்க வேண்டும்.
 
Monday, December 22, 2014

வனாந்திர ராஜாமிகைய்ல் பிரிஸ்வின் (ருஷ்யா)
தமிழில் எஸ். சங்கரநாராயணன்


ரு கோடைநாளில் நடந்தது இது! மழைக்கு முந்தைய வனாந்திரம் பற்றி இப்போது சொல்கிறேன்!
ஒவ்வொரு சின்ன இலையும், பைன்மரத்தின் ஒவ்வொரு ஊசியும் முதல்மழையின் முதல்துளியை அனுபவிக்க ஆவேசப் பட்டன. ஒவ்வொரு சிற்றுயிரும்கூட மழை பற்றிய சுத்த சுயமான பிரக்ஞையில் உறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடி நான் போனேன். எல்லாமே, மனிதர்களைப் போலவே, என்னைத் திரும்பிப் பார்த்தன, ஏதோ நான்தான் கடவுள்போல!.... மழையை அனுப்பச் சொல்லி என்னிடம் அவை கெஞ்சுவதாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்!

"வாங்க பெரியவரே...." நான் மழையிடம் பிரார்த்தனை செய்தேன். "நாங்க காத்துக் காத்து அலுத்துப் போனம்யா. எப்பிடியும் நீரு வர்ற ஆள் தானே? அதான்.... ம்... வெரசா வந்து சேரும்!"

ஆனால் மழை என்னை சட்டை பண்ணுகிறாப்போல இல்லை. புதுசா நார்த்தொப்பி ஒண்ணு நான் மாட்டிக்கிட்டிருந்தேன். மழை பெய்தால் அதோட கதி அதோகதிதான்!.... தாங்காது என்று நினைத்துக் கொண்டே வரும்போது, ஒரு வசமான பிர் மரத்தை நான் கவனித்தேன்!

நல்ல நிழலாய் மொத்த முழுமைக்கும் விரிந்து பரவியிருந்த மரம்! அதன் கொப்புகள் எல்லாம் கீழ்ப்பக்கமாகச் சரிந்திருநதன. பருவம் தாண்டிப்போன பிறகு, சூரிய வெளிச்சம் தேடி இப்போ கிளைகள் மேல்நோக்கித் தூக்க ஆரம்பித்திருந்தன. மெல்ல மெல்ல நன்றாய்க் கீழிறங்கி, பூமியைத் தொட்டு, அபபடியே கவிழ்ந்தாற்போல வேர்விட்டு பூமியை அவை பற்றிக் கொண்டிருந்தன!

சில கொப்புகளை ஒடித்து, பக்கத்து தடுப்பையெல்லாம் பலமாக்கிக் கொண்டேன். உள்ளே நுழைய வழியும் தோது பண்ணிக்கொண்டேன். சில கொப்புகளைத் தரையில் பரப்பி உள்ளே உட்காரவும் ஒழுங்கு பண்ணிக் கொண்டேன்! உள்ளேபோய் உட்கார்ந்து சாவகாசமாய் மழையுடன் என் பேச்சைத் தொடரலாமென்று பார்த்தால், அப்போதுதான் எனக்கு எதிர்த்த மாதிரி... மரம் ஒண்ணு... தீ பற்றிக் கொண்டதைக் கவனித்தேன். சட்டென்று ஒரு பெரிய கொப்பை ஒடித்து சின்னச் சின்னதாகச் சேர்த்து விளக்குமாறு மாதிரி கொத்தாய்ப் பிடித்துக்கொண்டு தீயில் அறைந்து அறைந்து அணைத்தேன்! மரத்தைச் சூழ்ந்துகொண்டு பட்டையை அது சுவைப்பதற்குள், உள்ளே ஓடும் கூழையே அது கரியாக்குமுன் நல்ல வேளை! நான் அதை அணைத்துது விட்டேன்!

அந்த மரத்தடியிலோ குப்பை செத்தை எரித்த அடையாளம் எதுவும் இல்லை! அது பசுக்கள் மேய்கிற இடமும் அல்ல!... ஆக இடையன்கள் கூமுட்டத்தனமாக தீயினைப் பற்றவைத்து விட்டாற் போலவும் தெரியவில்லை! ஊமைக்குசும்பு நிறைந்த என் சின்ன வயதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்!.... யாரோ சேட்டைக்காரப் பையன் மரம் வடித்த பிசினில் தீமூட்டி, எண்ணெய் பொங்கி அது பைத்தியம் மாதிரி உஸ்ஸென்று சிரிக்கிறதைப் பார்க்க ஆசைப்பட்டிருப்பான்!

அந்த வயதில் தீக்குச்சி கொளுத்திப் போட்டு மரத்தை எரிய விடுவது ரசமான விஷயந்தான்! பிசினை எரிய விடுகையில் அந்த படுவா ராஸ்கல் திடீரென்று என்னை கவனித்துவிட்டு, பக்கத்துப் புதருக்குள் எங்காவது பம்மிக் கொண்டிருக்க வேண்டும்! அதனால், நான் என்பாட்டுக்குப் போகிறாப்போல, விசில் அடிச்சிக்கிட்டே சும்மா முப்பதடி போய்விட்டு, திடீரென்று புதருக்குள் எட்டிப் பார்த்துவிட்டுத் தலையை இழுத்துக் கொண்டு.... ஒரு சுண்டெலி போல கச்சிப்பென்று காத்திருந்தேன்!

அந்த படுவா என்னை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்கவில்லை! ஏழெட்டு வயசிருக்கும் அவனுக்கு! சூரிய வெளிச்சம் வாங்கி வாங்கி பழுப்பான தைரியமான கண்கள்! கச்சலான கச்சிதமான உடம்பு! டவுசர் மாத்திரம் மாட்டியிருந்தான்! புதருக்கு வெளியே வந்து நான் எட்டிப் பார்த்த பகுதியில் ஒரு விரோதமான பார்வையுடன் தேடினான் அவன்!

ஒரு பிர் மரக் கம்பைக் கையில் எடுத்து என் திசையில் அவன் சர்ர்ரென்று வீசியெறிந்தபோது, அவன் விசிறியடித்த வேகத்துக்குத் தானே ஒரு ரவுண்டடித்தான்! ஆனாலுங்கூட அந்த வனாந்திர ராஜா நிலை தடுமாறாமல் சமாளிச்சி நின்னான்! தன் டவுசர் பைக்குள் கைவிட்டபடியே அவன் மரத்தில் நெருப்பு பற்ற வைத்த இடத்தை நோட்டம் பார்த்தபடி சொன்னான் - "வெளிய வா ஜேனா! அந்தாளு போயாச்சி!"

அவனைவிட வயசில் கொஞ்சம் பெரியவளான நெட்டையான பெண் ஒருத்தி, பெரிய கூடையுடன் வெளியே வந்தாள்! "ஜேனா?" என்றான் அவன். "என்னாச்சி தெரியுதா?"

அமைதியான விசாலமான கண்களால் அவள் அவனைப் பார்த்தாள். "என்னாச்சி?" என்று மட்டும் கேட்டாள்.

"ஹா, ஹா... உனக்குத் தெரியல!" அவனுக்குச் சிரிப்பு! "அந்தாளுமட்டும் சரியான சமயத்தில் வந்து தீயை அமத்திருக்காட்டி.... முழு காடுமே குப்புனு பத்திக்கிட்டு எரிஞ்சிருக்கும்! பாத்திருக்கலாம்!"

"நீயொரு மடையன்!" என்றாள் ஜேனா.

"சரியாச் சொன்னே ஜேனா!" என்றேன் நான் வெளியே வந்தபடி! "இப்பிடியொரு காரியத்துக்குப் பெருமையடிச்சிக்கிற பைத்தியக்காரத்தனம்!...". நான் சொல்லி முடிக்கு முன்னால் அந்த, யாருக்கும் அடங்காத பயல் எடுத்தான் ஓட்டம்! ஆனால் ஜேனா அவன் பின்னாலேயே ஓடிப்போக முயற்சி செய்யவில்லை. சிறிது அதிர்ந்தாற்போல புருவத்தை நெறித்து என்னை அவள் பார்த்தாள்.

எதையும் கவனித்து உள்வாங்கிக் கொள்ளக்கூடிய சின்னப்பெண்! விஷயத்தை விளக்கி அவளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, அவள் மூலமாக அந்த வனாந்திர ராஜாப்பயலைக் கையோடு பிடிக்கலாம் என நான் நினைத்தேன்! இதற்கிடையே எல்லா ஜீவராசிகளும் மழை மழை என்று ரொம்பவே தவிக்க ஆரம்பித்தாற் போலிருந்தது!

"ஜேனா?" நான் கூப்பிட்டேன். "பாத்தியா, ஒவ்வொரு குட்டி இலையும், புல் தாளும் எப்பிடி மழைக்காகக் காத்திட்டிருக்கு.... இந்தக் காட்டுக்கொடி கூட ஒரு கொம்பைக் சுத்திக்கிட்டு மேலே எட்டிப் பாத்து, தண்ணி குடிச்சிப் பாக்கத் தயாரா இருக்கு பார்!"

என் பேச்சு அவளுக்கு வேடிக்கையாய் இருந்தது. அவள் உற்சாகமாகிப் புன்னகத்தாள்.

"வாங்க பெரியய்யா!" நான் மழையிடம் சொன்னேன். "நாங்க ஏற்கனவே நொந்து நூலாயிட்டோம். சட்டு புட்டுனு இப்பவே வருவீங்க... ஆமாம்!"

ஆனால் இப்போ மழை சொன்னபடி கேட்டது! அந்தச் சின்னப் பெண் அட, என்கிறாப் போல என்னைப் பார்த்தாள்! எல்லாம் தமாஷ் போல இருந்தது.... ஆனால் மழை வருகிறதே!.... என்கிற மாதிரி அவள் உதடுகளில் ஆச்சரியம்!

"ஜேனா?" என்று நான் அவசரமாய்க் கூப்பிட்டேன். "அந்தப் பெரிய கூடையில் என்ன வெச்சிருக்கே?"

அவள் காட்டினாள். இரண்டு பெரிய நாய்க்குடைகள்! என் புதிய நார்த்தொப்பியை அதனுள் போட்டு இலை தழைகளால் மூடினோம். நான் தயார் பண்ணியிருந்த கூண்டுக்குள் நுழையுமுன்னால், இன்னும் கொஞ்சம் கிளைகளை முறித்து, நாங்கள் நனையாதபடிக்கு வசதி பண்ணிக் கொண்டு, உள்ளேபோய் உட்கார்ந்தோம்!

"வாஸ்யா?" அவள் கத்தினாள். "கிராக்குத்தனம் பண்ண வேண்டாம்! வெளிய வா!"

மழை துரத்திவிட்டதில், அந்த வனாந்திர ராஜா மேலும் தாமதிக்காமல் உடனே அங்கே வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டான்! என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவன் பேச ஆரம்பிக்கு முன்னால், ஒற்றை விரலை உயர்த்தி நான் அவனை எச்சரித்தேன்! பேசவே கூடாது!

நாங்கள் மூன்று பேரும் அசையாமல், சத்தமே போடாமல் அங்கே உட்கார்ந்திருந்தோம்! காட்டுக்குள், ஒரு பிர் மரத்தடியில், கதகதப்பான கோடை மழைக்காய் ஒதுங்கிக் கொள்ளும் அனுபவத்தின் ஜாலியை விளக்கிச் சொல்லவே முடியாது! கொண்டையுடன் காட்டுச் சேவல் ஒன்று அடர்ந்த மரத்தின் நடுப்பகுதிக்கு வந்து எங்கள் கூண்டுக்கு மேற்பக்கம் இறங்கியது! தொங்கும் ஒரு கிளைக்குக் கீழே பதுங்கிக் கொண்ட சிறு குருவியை நாங்கள் பார்த்தோம்! முள்ளம்பன்றி ஒன்றும் உள்ளே வந்து சேர்ந்து கொண்டது! முயல் ஒன்றின் புதுநடை!

மழை தொடர்ந்து கொட்டிக் கொண்டே, தனது ரகசியங்களை மரத்துக்குச் சொல்லிக் கொண்டே யிருந்தது!

நாங்கள் வெகுநேரம் மௌனமாக, ஆனந்தமாக உட்கார்ந்திருந்தோம்! காட்டின் நிஜமான ராஜாவாகிய மழை, எங்கள் ஒவ்வொருவரின் காதிலும் ரகசியங்களைக் கிசுகிசுத்தாற்போல இருந்தது!