Friday, December 25, 2020

 2006ம் ஆண்டின் சிறந்த நாவல்

 


நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

15

மனிதர்கள்

கடலில் வலைவீசி

மீன் பிடிக்கப் போனால்,

கடல்

அலைவீசி

மனிதனைப் பிடிக்க

ஊருக்குள் வந்திருந்தது.

இது அலை வலை. நீர் வலை.

மதங்கொண்ட யானைபோல, அலை முட்டிஇழுத்த ஜோரில், பிய்ந்தும் நைந்தும் பயன்படாதுபோன பொருட்களை உதறி, தூ என அலட்சியத் துப்பல் துப்பி விட்டு, கடல் மீண்டும் திரும்பிப் போனாப் போல.

கடலின் ஆக்ரோஷத்துக்கு எதுதான் தப்பித்தது...

மரங்களே பெயர்த்தெடுக்கப் பட்டு மிதக்கின்றன. எத்தனை மனித உடல்கள், கட்டில்கள், பீரோக்கள், வீட்டு சாமான்கள், பெட்டிகள்... என்று திறந்தும் திறக்காமலும் கரைகளில் கிடக்கின்றன. கடலில் அடித்துப் போயிருக்கின்றன.

வரதட்சிணைக் கொடுமைக்கார மாப்பிள்ளை போல.

ஊர் மறுபடி அவலஊளையுடன் விழித்துத் தன்னிலை திரும்புகிறது. எங்கெங்கு பார்த்தாலும் ஒப்பாரிச் சத்தம். மரண ஓலம். வலியின் அழுகை. இழப்பின் புலம்பல். துயரத்தின் பைத்தியக்கார கையறு நிலை.

கடல்கரை ஓரம் குழந்தைகளை, தத்தம் பிரிய உறவினர்களை, அவர்கள் தேடித் திரிகிறார்கள். கிளிஞ்சல்கள் தேடி அலையும் விளையாட்டு கண்ட கரைகள், இப்போது அந்த அழுகை ஊர்வலத்தில் விக்கித்துத் திகைக்கின்றன.

ஆசிர்வதிக்க உயரும் கை பார்த்திருக்கிறோம். இது தேங்காய்விடல் போட உயர்ந்த அலையின் கை. அதன் கைச்சுருளில், தேங்காயாக, ஆ, மனிதர்கள்...

சர்ச் வளாகத்து தேவ ஊழியர்களில், காயம்பட்டு சிகிச்சை வேண்டியிருந்தவர்கள் தவிர, மற்றவர்கள் மீட்புநடவடிக்கைகளில் சுறுசுறுப்பாகி விட்டார்கள். ஊரின் தன்னார்வ அமைப்புகளும் பதறிக் கண்விழித்து செயலில் இறங்குகின்றன.

கடலை மாவில் வாழைக்காயைச் சீவி முக்கிமுக்கி பஜ்ஜிபோடும் வீராச்சாமி, அவனே சகதியில் முங்கிக் கிடக்கிறான். நீரும் அழுக்கும் சொட்டச்சொட்ட அவனை வெளியே எடுக்கிறார்கள். வெளியே எடுத்து, சற்று அழுக்குகளை அகற்றிப் பார்க்கும்வரை, இறந்த சடலம் யார் என்ன, விவரம் யாருக்குமே தெரியாது.

பிணங்கள் வரிசைவரிசையாய்ப் பார்வைக்கு அடுக்கப் படுகின்றன. இன்னார் என அடையாளப்பட்ட சாவுகள் பெயர் குறித்துக்கொள்ளப் பட்டு அந்தப் பிணங்கள் தனியே வைக்கப் படுகின்றன. எல்லாவற்றையும் மிக சீக்கிரம் அப்புறப்படுத்தியாக வேண்டும். வியாதி வெக்கைகள் இனி கிளம்பும். கடுமையான நாற்றம் கிளம்ப ஆரம்பிக்கும். அப்புறம் - பொதுமக்கள்.... மீதி இருக்கும் ஜனங் கள்... அவர்கள் மனப்பதிவில் இருந்து, இந்த சூழ்நிலைப் பிறழ்வில் இருந்து, மீள வேண்டும்... அது எல்லாவற்றிலும் முக்கியம்.

உதவிக்கு ஓடி வந்தவர்களில், இந்துக்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள், என்ற பேதம் இல்லை. ஜாதிபேதம் இல்லை. வர்க்கபேதம் இல்லை.

கடலுக்கு, இயற்கையின் சீற்றத்தில் நல்லம்சங்களும் நிகழ்கின்றன. எந்தப் பேரழிவும் பாடங்களைப் புகட்டவல்லதாகவே இருக்கிறது. மனிதனை மனிதனாக்கவும் சில இக்கட்டுகள், அக்கட்டுகளைத் தளர்த்தவல்ல இக்கட்டுகள்... வேண்டித்தான் இருக்கிறது. சில இக்கட்டுகளில் அவன் திரிந்து போவதாக அல்லவா பொதுவான கணிப்பு இருக்கிறது...

ஊரை சுத்தப்படுத்த வந்ததா கடல்?

மனிதன் தன் உண்மையான சொரூபத்தை, சக்தியை அறிய, உணர வைக்க இயற்கை இப்படியும் வழிகாட்ட முனைகிறதா என்ன?

 



நாலுபக்கமும் கடல் பெருவெளி. தண்ணீர் வளாகம். நீலப் பெருவெளி. நீள மாலையை அரைவட் ட அரைவட்டமாய்க் கட்டி, விழா மேடையில் அலங்கரித்தாற் போல, உட்சிறு குழிகளுடன் தளும்பும் நீர். யாரோ செய்யும் கச்சேரிக்குத் தலையாட்டினாற் போல. திடீர்ப்பைத்தியம், ஒரு தூக்கத்துக்குப் பின், சமாதானமாகிப் போனாற் போல...

அம்மைத் தழும்பெனத் தளும்பும் மேல்மட்டம்.

துவையல் அரைக்கிற, கொத்திவிட்ட அம்மி!

கடல் பசியடங்கிக் கிடந்தது.

இழவு ஊர்வலம் தாண்டிப்போகையில் பூ உதிர்த்துக்கொண்டே போனமாதிரி, கடல் திரும்பிய வழியெங்கும் என்னமோ என்னென்னமோ பொருட்கள். உடல்கள்... கரையில் மாத்திரங்கூட அல்ல. கடல் தழுவிய சிறு உட் தூரம் வரை கூட அல்ல... கடலுக்குள் வெகுதூரம் வரை சாமான்கள் மிதந்தன. முங்கிக் கிடந்தன.

மிதக்காமல் உள்முங்கிப் போன சாமான்களுக்குக் கணக்கு இல்லை.

அடித்த பின் கோபமடங்கி சமாதானம் ஆகிவிட்ட அம்மா போல... கடல்.

மேல் நீளவானம். கீழ்ப் பெருங்கடல். நடுவே காற்று. ரோந்து சுற்றும் காற்று. தெருநாய் போல கொள்கையில்லாமல் ரோந்து சுற்றும் காற்று.

பல்லக்குபோல மிதந்து போய்க்கொண்டிருக்கிறது மரம் ஒன்று. பெரிய மரம்தான். மேலே கிளை விரிப்பு எடுத்த மரம். தண்ணீரில் மூழ்கியவன் கைதூக்கி உதவி கோரினாற் போல, கையறு நிலையில் கை விரி கோலம்... மரம் கிளைஉயர்த்தியபடி மிதந்து கொண்டிருந்தது. கூடவே மரங்கள் சிலவும், வீட்டின் கூரைகள் எனவும், பலகைகள் எனவும்...

கூடவே அ வ னு ம் ...

சிவாஜிக்கு மயக்கம் தெளிகிறது. மெல்ல மெல்ல, அலை அவனை இரக்கத்துடன் உசுப்பினாற் போல. கடல் உட்சுருட்டிய ஆவேச இழுப்பில் அவன், சர்ரென்ற வேகத்துடன், தன்னிலை இல்லாமல் - சுதாரிக்கவும் கூடாமல், கடலுக்குள் அடித்துச்செல்லப் பட்டான். கடலலை நாக்குபோல அவனை உட்சுருட்டி உருட்டியது. யானையின் - நீர்வாளியில் இருந்து போன்ற, தும்பிக்கை உறிஞ்சல்... கடலின் ஜீரண இந்திரியத்தில் அவன் உட்சிக்கிக் கொண்டான். ரவுடி ஒருவன் சீழ்க்கை அடிக்க நாக்குசுழித்தாற் போல அலை உட்குழிவு கொண்டது... என்றாலும், ஆகா - எதோ மரத்தின் கிளையில் அவன்சட்டை மாட்டிக் கொண்டிருக்கிறது. உள்ளே வாரி இழுக்கப்பட்ட மரம், மளுக்கென மேலேறி, மேல்தளத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டது.

மளுக்கென அவனையும் உயரே - அம்மாவின் ஒக்கலில் பிள்ளை போல - கூடவே அவனும்.

கண் விழித்துப் பார்த்... ஆ, மிதந்து கொண்டிருந்தான். நினைவு சுதாரித்தபோது உடலசைவில் உடம்பே ஒருதரம் கடலில் மளுக்கென முங்கி எழும்பியது. சில்லென்றிருந்தது தண்ணீர். உப்புத் தண்ணீர். என்ன சில்லிப்பு. என்ன குளிர்.

பதறி விழித்து சுற்றுமுற்றும் பார்த்தான். மேலே, கீழே, என தூர தூரத்துக்கும் நீலம். நீளம். நீலம். திகட்டும் நீலம். வேறு காட்சியே இல்லை. வேறு நிறமே இல்லை. பரவாயில்லை. நீலம். அமைதியின் நிறம்...

முதுகில் சட்டை மாட்டிக் கொண்டிருந்த கிளையைப் பார்த்தான். மெல்லிய மாட்டல்தான். சற்று அது பிடிவிலகி, நழுவி, உருவியிருந்தால் கூட அவனுயிர் போயிருக்கும்...

ஆகா நான் பிழைத்துக் கொண்டேன். ஆகா. ஆகாகாகாகா.... என உயிரெழுச்சி கொண்ட கணங்கள். பைத்திய வெறி. சிரிக்க ஆவேசப்பட்டான். ஆனால் நிலவரம் அத்தனை சிலாக்கியமாய் இல்லை. அவன் கடலில் மிதந்து கொண்டிருந்தான். கடல் என்றால், ஆழ ஆழமான கடல். எத்தனை ஃபர்லாங், எத்தனை மைல் ஆழத் தண்ணீரோ... இதில் மனிதனின் அடையாளம் சிறுபுல் அளவு கூட, மிதக்கும் பாசி அளவு கூட இல்லை. கடல்பாசிகள் ஐம்பது, நூறு மீட்டர், என நீண்டு கிடக்கின்றன கடலில்.

அவன் கடலின் சிறு துளி.

அத்தனை மகிழ்ச்சிகொள்ளும் படியாயெல்லாம் இல்லை நிலைமை. தனக்குள் சொல்லிக்கொண்டான்... மரணம் எப்போதும் காத்திருக்கிறது அவனுக்கு. எதுவும் நிகழலாம்.

உடம்பில் தெம்பே இல்லை. இரத்தமே காணாத உடல்போல, அலுத்துக் கிடந்தது உடம்பு. மரத்துக் கிடந்தது. எத்தனைநாளாக நான் மிதந்து கொண்டிருக்கிறேன்? பசிக்கும் வயிறை என்ன செய்யப் போகிறேன்... எப்படி சமாளிக்கப் போகிறேன்? மரச் சிறு துண்டு - அது தந்த சிறு புகலிடம்... தற்செயலாய்க் கிட்டிய ஆதரவுக்கரம்... சிறு இலைபோல அவன் மரத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கிறான்... அந்தப் பிடி விட்டுவிட்டால் அவன் கதி அதோ கதிதான்.

கரை சமீபத்தில் இல்லை. அது புரிகிறது. கண் பார்வை தேடிய தூரம் வரை... தூ-ஊஊஊ-ரம் வரை கரை... ம்ஹும், இல்லை. அவன்... அவன் இப்போது என்ன - ?????? - செய்ய வேண்டும்? அவனால் ஆகக்கூடுவது என்ன?

? ? ? ? ?

உண்மையில் தண்ணீர் அபார சில்லிப்பாய்க் கிடந்தது. கைகால்களை அசைக்கவே பெரும் பிரயத்தனம் வேண்டியிருந்தது. உடல் மரத்து, விரைத்து, அவயவங்கள் சொல் கேளாத அளவு, கனம் கட்டியிருந்தன.

மேல் வெயிலில், சிறிது அலைக்கூரையின் மேல்தளம் சமாளிக்கக் கூடிய அளவில் அவனைக் காப்பாற்றி யிருக்கலாம். இன்னும் அவன் முங்கிவிட்டால் கடும்குளிரை அவன் சந்திக்க, எதிர்கொள்ள வேண்டிவரும்... நினைக்கவே அபார பயம் வந்தது. என்ன ஆழம்டா இது... நினைத்தாலே மயக்கம் வரும் ஆழம். சின்ன வார்த்தைதான்... என்றாலும் அதற்குள் எத்தனை மிரட்டல்... நீச்சல் தெரியும் எனக்கு, என கடலைப் பார்த்து உளறுவதில் அர்த்தம் இல்லை. பயமே ஆளைக் கொன்றுவிடும் ஆழம் அது.

சட்டை பட்டன்களைக் கழற்றி, மெல்ல மெல்ல, தன்னை விடுவித்துக் கொண்டான். இரு பதறாதே. தயவுசெய்து பதறாதே... இருந்த ஆதரவை நழுவவிட்டு விடுவோமோ என்கிற பதற்றம் அது. ஆகா இப்பெரும் உலக பிரம்மாண்டத்தில் நான்... நான் மாத்திரமே. யாருமே இல்லை. பறவைகள்கூட வானத்தில் காணவில்லை... கரை எதுவும் பக்கத்தில் இல்லை என அதுவே சொல்லாமல் சொல்லி, கொல்லாமல் கொல்கிறது. நான் பயணித்துக் கொண்டிருக்கவில்லை. மிதந்து கொண் டிருக்கிறேன். கடலலை என்று இருந்தால் நம்மை இழுத்துப் போகும். எங்காவது ஒதுங்கவும் இடம் கிடைக்கக் கூடும். நான் அப்படியே நிலைத்து வெறுமே அசைவுகண்டு கொண்டிருக்கிறேன். கோவில் யானை.

கடலோடு கடலாக நான் தளும்பிக் கொண்டிருக்கிறேன்.

தூங்கும் மனிதனின்... மூச்சுக் காற்றில் அசைவுறும் மூக்கு துவார மயிர்.

கடல். திக்கு திசை அறியவொண்ணாக் கடல். எந்தப்பக்கம் போனால் கரைவரும்... எந்த திசையில் கரை சீக்கிரம் வரும்... எவ்வளவு சீக்கிரம் வரும்... எந்த முடிவும் இல்லை அவனிடம். யூகிக்கவும் முடியாத நிலைமை. வெறுமை... திகைப்பையே அச்சத்தையே அந் நினைவுகள் தரக்கூடும். அட அதிர்ஷ்டம் இருந்தால் பிழைத்துக் கொள்வோம் என, நம்பி வாழ வேண்டிய முயற்சி என... எதாவது செய்ய வேண்டிய நிலை. பிழைக்க மன்றாடுவேன். போராடுவேன்... சாவை, மிக அருகில், அல்லது வாழ்வை, மிக அருகில் அவன் சந்திக்கக் கூடும்.

காத்திருப்பது வாழ்வா? சாவா?

என் அப்பா ராணுவவீரர். கடுமையான பொழுதுகளுக்கு சகஜமானவர் அவர். நான் அவர் மகன். போராட வேண்டும். நான் வெற்றிபெற்றாக வேண்டும். நான் உயிரோடு இருக்கிறேன். நான் பிழைத்து விடுவேன். கரையை எட்டி விடுவேன்... ஆமாம் அதை நான் நம்ப வேண்டும்... தேவையற்று பயப்படுவதால் என்ன நிகழ்ந்து விடும்... அதனால் ஒரு பயனும் இல்லை.

ஆ அது... என்னால்... என்னால் முடியுமா?

முடியும்! முடியும்! முடியும்!

முடிய வேண்டும். முடிந்தாக வேண்டும். கட்டாயம். கட்ட்ட்டாயம்...

தலையை அங்கீகாரத்துடன் மேலிருந்து கீழ் ஆட்டிக் கொண்டான்...

ஆனால் சூழல் மிகக் கலவரப்படுத்துவதாய் இருந்தது. சுற்றிலும் பார்த்தான் அவதானிப்புடன்.

குப்பைகள். அது ஒரு விஷயமில்லைதான். ஆ பிணங்கள் சிலவும். ம்... சரி... சற்றுதள்ளி ஒரு பருத்த மரம் மிதந்தது. ஆகா வாழ்வின் ஒளிக்கீற்று, என அதைக்கண்ட பரவசம்... பயமும், இல்லை பரவசமும் மாறி மாறி, நிழல் - ஒளி, என மாறி மாறி, தடுமாறி... தன்னுள்ளே புரண்ட கணங்கள்.

இவனது மரத்தைவிட அது பருமனானது. இவன்மரம், இவன் மேலே ஏறி அமரமுற்படும் போதெல்லாம், பொதுக், என முங்கியது. கடைசிவரை இவன் அதைப் பற்றியபடியேதான், பிடி விடாமல், வேறு வழி வகைகளைப் பார்க்கவேண்டும், என ஆயாசமாய் இருந்தது. அது உள்ளமுங்குந்தோறும் பகீரென்றது அடிவயிறு. காலி வயிறு. பசித்த வயிறு.

ரொம்பக் குளிர்கிறது தண்ணீர். இப்படியே நனைந்தபடியே போய்க்கொண்டிருக்க முடியாது. அந்த மட்டுக்கு தலை, வெளியே, நீர் மட்டத்துக்கு மேலே, இருந்ததில், உலர்வு கண்டு... காய்ந்துவிட்டது. வெயிலின் சூட்டுக்கு அவனுக்கு முழிப்பு வந்திருக்கிறது.

உடலை சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். உடல் முழுவதையும்...

மீண்டும் உடல் முழுவதையும், அவன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். உயிர் பிழைத்தலுக்கு அது மிக முக்கியம்.

உலகம் சட்டென்று எத்தனை பயங்கரமாய், பூத உருக் கொடுத்து விட்டது.

கூட யாருமே இல்லை.

ரோந்து சுற்றும் காற்று. எனினும் சத்தமே கிடையாது. கனமான ஷு அணிந்தும், ராணுவவீரன் சத்தமே இல்லாமல் வருகிற மாதிரி...

கூட யாருமே...

இருக்கிறார்கள். பிணங்கள்! சுற்றிலும் மிதக்கும் பிணங்கள். அவர்கள் இறந்து போயிருக்கலாம். இவனைப்போல மூச்சுமாத்திரம் மீதம் இருக்கிறவர்கள், இன்னும் கண்விழிக்காதவர்கள் கூட இருக்கலாம்...

தனக்கு விழிப்பு வந்தாப்போல அவர்களுக்கும் விழிப்பு வரலாம். ஒருவேளை அவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணை, என அமையலாம்...

கீழே யாரோ பெரும் பாத்திரத்தைப் பற்றவைத்தாப் போல... எத்தனை பயங்கரம். கடல் பொங்கி, அடுப்பில் வைத்த பால்போல உயர்ந்து சீறி... நினைவில் அதன் விபரீதம் தட்டுமுன்... என்னென்னவோ நிகழ்ந்து விட்டன.

கடல்கரைப் பக்கம் எத்தனையோ பேர் இறந்து கிடப்பார்கள்.

திடீரென உடம்புக்குள் ஒரு உலுக்கல். சோகம் எக்களித்து வாந்திபோல மேலெழுந்தது. உரக்க அழ விரும்பினான். தொண்டை கட்டியிருந்தது. உடம்பில் தெம்பே இல்லை.

இல்லை. நான் அழக்கூடாது. அழக்கூடாது - என சத்தமாய் உயிரைத் திரட்டி அந்த வெளியில் கத்தினான். இது பைத்தியக்காரத்தனம். தெரியும். கத்தினான். முடிந்த அளவு உரக்க்க்க்க்கக் கத்த்த்தினான்!

தன் குரல் தனக்கே தெம்பாய் உணர வேண்டியிருந்தது. கட்டிய தொண்டையைச் செருமி, சரி செய்து கொள்ள வேண்டி யிருக்கிறது... கடல்வெளியெங்கிலும் சத்தமேயில்லை. மௌனம். பெரும் மௌனம். சிறு காற்றுக்கு, கடல் மேல்த்தண்ணீர் மாத்திரம், யாரோ சலிக்கிறாப்போல ஆடுகிறது. ரயில் ஆட்டம்.

உடல் தெம்பை விட்டுவிடாதே, என எச்சரித்தது மனம்.

அழாதே. சிரிக்காதே. கத்தாதே. தெம்பைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் நீ கட்டாயம். எத்தனை நாள் மிதந்தாயோ? இன்னும் எத்தனைநாள் இப்படியே போக வேண்டுமோ? கடலைப்பற்றி எதுவும் தெரியாது. திசை தெரியாது. நீச்சல்? நம்ம நீச்சல் எல்லாம் ஒரு கணக்கில் சேர்த்தியா என்ன?

அதிர்ஷ்டம் சார்ந்த கணங்கள். நல்லா நீஞ்சி என்ன? கரைக்கு நேர்-எதிர் திசைல, ப்பா ப்பா என மூச்சிரைக்க நீஞ்சிறப்டாது.

அதை நினைச்சி கலவரப்படவும், அவநம்பிக்கைப்படவும் தேவை இல்லைதான்... என்ன செய்ய வேண்டும் இப்போது நீ?

யோசி யோசி யோசி...

பிணங்களைப் பார்த்து மிரளாதே.

எத்தனை நாட்கள் இப்படி மிதந்து கொண்டிருந்தேன். இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே மிதக்க வேண்டும்... என்றெல்லாம்... அதைரியமான சிந்தனைகளை அகற்றி எறி. அந்தக் குப்பையோடு அவநம்பிக்கையை வீசி எறிந்து விடு...

நான் பிழைத்துக் கொள்வேன்.

உன்னை நம்பு.

அப்பாவை தைரியமாய்த் தோளில் தூக்கிப்போய்ப் புதைத்தவன் நான். அப்பா...

அ-ப்-பா! எனத் தானறியாமல் அந்த வெளியில் கத்தினான்.

எனக்குத் தெம்பு தாருங்கள். நீங்களும் இப்படியேதான். காயம்பட்ட காலுடன், எடுக்கப்பட வேண்டிய கடும் காயத்துடன் பனிவெளியில் கிடந்தீர்கள். ஆ பிழைத்து எழுந்து வந்தீர்கள்... நொண்டி நொண்டி...

தெம்பு தாருங்கள் அப்பா...

எனக்குப் பைத்தியமா. தெரியவில்லை.

எதாவது செய்யடா நாயே. சும்மா மிதந்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. பெரும் பெரும் மீன்கள் உன்னை... வந்து உன் தொடையைப் பதம் பார்ப்பதற்குள்... எதும் அடுத்த விபரீதம் வருவதற்குள் முடிந்த அளவு உன்னை, உன் மனத்தை சூடேற்றிக்கொள்.

பசிக்க ஆரம்பித்தது.

சாப்பிட்டு எத்தனைநாள் ஆயிற்று தெரியாது. பசி ஒரு பொருட்டல்ல. சின்ன வயசில் இருந்தே பசி தாங்கியவன். அப்பாவை, சாவின் உச்சியில் இருந்து அவர் தன்னைத்தானே மீட்டுக்கொண்டதை அறிந்தவன்...

இத்தனைநாள்ப் பசிக்கு திடுதிப்பென கடின உணவுகள் சரி வராது. குமட்டும்... குடிக்கிறாப் போலப் பழகி, முழு நீர்ப்பாகம், பிறகு கஞ்சிப் பாகம்... கூழ்... பின் மெதுவே சோறு என வர வேண்டும்.

பசி ஒரு வெறிபோல பிடுங்கி எடுக்கிற காலகட்டத்தைத் தாண்டியிருந்தான். நல்ல விஷயம். வயிறு எதாவது தரக் கெஞ்சுகிறது. முதலில் இந்த பிரம்மாண்டமான தனிமை... மிரட்டும் எதிர்காலம் பற்றிய பயம்... மரண பயம்... ஆ - அதெல்லாம் இல்லை. நான் நான்... பிழைத்துக் கொள்வேன்!

தெரு வித்தைக்காரனின் குழந்தை, வெற்றுக் கம்பத்தில் உச்சிவரை ஏறி, பல்டி அடித்து, பின் பத்திரமாய்க் கீழிறங்கி வரவில்லையா?

ஆ நான் பிழைத்துக் கொள்வேன்!

அவன் திரும்பவும் கத்தினான் - ஏ பிணங்களே நான் பிழைத்துக் கொள்வேன்...

எல்லாருமே சடலங்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்... பார்த்தால்.... ஒரு பத்து பன்னிரண்டு வரை கண்ணுக்குத் தெரிகிறது. அப்பாலும் சில மிதக்கலாம்.

மரத்தின் பிடியில் ஆசிர்வதிக்கப்பட்டவன் நான். ஆகவே தலை வெளியேஇருக்கையில், சூர்யன் பட்டு, கதகதப்பு பட்டு, நான் உயிர் மீண்டேன். அவர்கள்... அதோ அந்தப்பெண்... அவள் இறந்திருக்கிறாள். உடம்பில் துணி கிழிந்து, விலகி, கண்கள் பொங்கி, தவளையை விடப் பெரிய கண்கள், எனப் பிதுங்கி வெளித்தெரிந்த கோரம்...

அழகியாக அவளுள் பிரமைகள் இருந்திருக்கலாம்.

பயப்படாதே.

ஆமாமாம். த ள் ளி த் த ள் ளி, பிடியின்றி, கடல் மேல்பரப்பில் மிதப்பவை பிணங்களே. அவை உள்ளமுங்கி, தண்ணீர் குடித்து, உடல் உப்பி, மிதந்து வருகின்றன. உடல் குப்பிகள். பல நாட்கள் மூழ்கியபின் அபரிமிதமான தண்ணீர் உட்புகுந்து உடலே பூதாகரமாகி அவை மிதக்கின்றன... எத்தனை நாட்களாக மிதக்கின்றன. எப்போது இறந்தன...

அவை நாறக் கூடும். ச், அந்த நாற்றத்துக்கு மீன்கள் படையெடுக்கக் கூடும். நான் சுதாரித்தாக வேண்டும்.

மீன்கள் என்றால், ஒரு படகுஅளவு கூட, கடலில் பெரிய பெரிய மீன்கள் உள்ளன, என்கிறார்கள். சுறாக்கள் வரலாம்... எதுவும் நிகழலாம். எப்போதும்...

எதற்கும் தயாராக இருக்க வேண்டும் நான். பயந்து ஆவதென்ன?

உடல் அழுகும் கெட்ட வாசனைக்கு, ஒரு கடலளவு மீன்கள், படையெடுத்து வந்தால் என்னால் சமாளிக்க முடியுமா? தாக்குபிடிக்க முடியுமா?

எதாவது செய். செய்தாக வேண்டும் நான்...

***

கடைசிப் பகுதி அடுத்த வாரம்...

91 9789987842 - 91 9445016842

 

Friday, December 18, 2020

 2006 தமிழக அரசு பரிசு பெற்ற நாவல்

 

நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

14


ங்கோ, கடல் அடியில் ஏற்பட்ட பூகம்பம்.... நிலப்பகுதியில் நிகழ்ந்திருந்தால் நிலைமை மேலும் கொடூரமாய் ஆகியிருக்கும் போலிருக்கிறது. இத்தனைதூரம் தள்ளி, நம்ம ஊரிலேயே ஒரு ஆட்டம் ஆடிட்டதுன்னா பெரிய அதிர்ச்சிதான், என நினைத்தான்.

சிவாஜிக்கு பயமாயும் சுவாரஸ்யமாயும் இருந்தது.

அவன் போகும் வழியாவிலும் ஜனங்கள் பூகம்பம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். நம்ம நாட்டிலேயே இதற்குமுன் வந்த பூகம்பம் பற்றி - எதோ லட்டூராமே - எங்கருக்கோ?... பேரைப் பார்த்தால் திருப்பதி பக்கம் போலிருந்தது - அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்போது லட்டுக்கணக்கான - ச்சீ, லட்சக்கணக்கான ஆட்கள் செத்துப் போனார்களாம்.

பொதுவாக ஊர் ஆபத்தின் சாயலே இல்லாமல்தான் இருந்தது. வெயில் உக்கிரப்பட்டு சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் அடங்கியிருந்தார்கள். சிலர், வந்தமா, தேவாலயத்தைப் பார்த்தமா, என்று கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். அவர்கள் வெறிபிடித்தாப்போல ஒரேநாளைக்கு டஜன்சாமி பார்ப்பது என்று பஸ் கட்டிக்கொண்டு டூரில் வந்தவர்கள். நிறைய பேர் இந்துக்கள். பார்க்கிறது வேடிக்கை. எந்த சாமின்னா என்ன... போற வழிதானே, ஆண்டவரையும் ஒரு விசிட் பார்த்துருவம்... என வந்து போனார்கள்.

அவர்கள்... கிளம்பிப் போய்விட்டார்கள். டஜனில் எந்த சாமியின் பார்வைக் கரிசனம் விழுந்ததோ... அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

ஊர் அமைதியாய் இருந்தது. தேவனே சமாதானத் தூதுவன். அவரது தேவாலய வளாகத்து உத்திரங்களில் பக் பக் என்று மாடப்புறாக்கள் தொண்டையை விக்கிக் கொண்டு ஃபேஷன் ஷோ நடை நடந்தன. கடல்கரைமணல் கொதித்தது. பிச்சைக்காரர்கள் கொட்டாவி விட்டார்கள்.

அல்போன்ஸ் ஐயா அடுத்த நோட்டிஸ் எழுத ஆரம்பித்து விட்டாரா, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாரா தெரியவில்லை. அருமையான மனிதர் அவர். மிகப் பிரியமாக அவனுடன் பேசுவார். தேவாலய ஊழியர்களுக்கென்று அருகிலேயே குடியிருப்புகள் இருந்தன. ஐயாவின் அறை பெரியது. ஜன்னல் கதவைத் திறந்தால் காற்று, சுதந்திரமான பூனைபோல உள்ளே, சுழித்து வளைய வரும். அவரே ஒரு பூனையும் வளர்க்கிறார். பூனைகள் முதுகை வான்பார்க்க சட்டென உயரே தூக்கினாற்போல வயிற்றைப் பதுக்கிச் சோம்பல் முறிக்கின்றன.

அந்தப் பூனை மியாவ், என அழைப்பது, மீனவர்கள் ஐயாவை சாமியோவ், என அழைப்பதுபோல் இருக்கிறது.

உண்மையில் இந்த தேவாலயப் பகுதி சுற்றுலாப் பயணிகள் வருகைக்காக சுத்தப்படுத்தப் பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது... சற்றுதள்ளி மீனாங்குப்பம். படகுத்துறை. நீளப்படகுகள் காயப்போட்ட தாவணிபோல, தண்ணியில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஓட்டைப் படகுகள் கரையிலேயே ஏற்றப் பட்டிருக்கும். பெரிதோ பெரிதான வலைகள் விரித்துக் காயப் போட்டிருப்பார்கள்.

அதைப் பார்த்துவிட்டு, ஒரு குழந்தை சொல்கிறது - அங்க பாருங்க டாடி, கடல்ல இல்ல, மணல்லியே வலைவிரிச்சி மீன் பிடிக்கறாங்க!

வெயிலுக்காக மீனவர்கள் அணியும் தொப்பி விநோதமானது... கூம்புவடிவத் தொப்பிகள். பிராமண வீட்டுக் கல்யாணப் பருப்புத் தேங்காய் போல!

ஏன் அப்பிடி ஒரு வடிவம்? ஓ காத்துக்கு, வெயிலுக்குத் தூக்காதில்ல?...

அதிகாலையிலேயே மீனவர்கள் மீன் பிடிக்க என கடலுக்குள் போகிறார்கள். வெளிச்சம் உட்புகா இரவுகளிலேயே, அந்த வளாகத்தில் மீனவர்கள், கடல் மணலில் மண்டியிட்டுத் தொழுது கிளம்புவதைப் பார்க்கலாம். வெயில் ஏறுமுன் அவர்கள் தண்ணீரில் இறங்கி கடலுக்குள் வெகுதொலைவு போய் மீன் பிடிக்கிறார்கள். அதிகாலையிலேயே அந்த வட்டாரம் பரபரப்பாக இருக்கும். சிறிதுகழிந்து சுற்றுலாப் பயணிகள் சூர்ய உதயம், என்று வேடிக்கை பார்க்க வந்து விடுவார்கள். அவர்கள் சூர்ய உதயம் பார்த்தபின் திரும்பவும் தூங்கப் போய்விடலாம்!

கடலின் உட்பகுதி ஆழங்களில் வெயில் நேரத்தை விட அதிகாலையில், அந்த அமைதியில், மேல்குளிர்ச்சியில் மீன்கள் அதிக சுதந்திரமாய் உணர்ந்தன. மீனவர்களுக்குத் தோதான நேரம் அதிகாலைதான். தவிரவும் வெயிலில் வேர்க்க விறுவிறுக்கப் போவது சீக்கிரம் உடம்பை அயர்த்திவிடும். அந்த அதிகாலையிலேயே அவர்கள் உடம்பே வியர்வையில் குளிக்கிற அளவில் உழைக்கத்தான் செய்கிறார்கள்.

என்றாவது மீனவர்களுடன் படகில் கடலுக்குள்போக ஆசைப் பட்டிருந்தான் சிவாஜி. அல்போன்ஸ் ஐயாவிடம் தன் விருப்பத்தை ஒரு வெட்கத்துடன் ஒருநாள் தெரிவித்தான். ஏற்பாடு செய்வதாக ஒரு புன்னகையுடன் அவன் தலையை வருடிக் கொடுத்தார்.

அப்போதுகூட உலகம் நன்றாய்த்தான் இருந்தது. தேவாலயத்தெருப் பக்கம் திரும்புகிறான் சிவாஜி. சைக்கிளில் இறங்கி அந்தப் புதைமணல் வெளியில் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடக்கிறான். தற்செயலாகக் கடலைப் பார்த்தான்...

உள்மனம் எதோ படபடத்தது. ஏன், எப்படி, தெரியாது. கடல் அவனுக்குப் பிடிக்கும். ஓய்வற்றது கடல். நீலப் பெருவெளி கடல். மேல்நுரைகள் வெள்ளிச் சிரிப்பு சிரிப்பது, கடல் பல் தேய்க்கிறாப் போல இருக்கும்.

கடலைப் பார்த்தான். கடலில் என்னவோ மாற்றம். என்ன? என்ன?.... என உணருமுன் அடடா, கடல், ஒரு பாம்புபோல, ஆவேசமாய் எழுந்து கொண்டிருந்தது. அவனுக்கு பயமாய்க் கூட இல்லை. அதற்குக்கூட நேரம் இல்லை.

பாம்பென்றால், நினைத்துப் பார்க்க முடியாத, பெரிய பாம்பு. தலைதூக்கிக் காணவேண்டிய உயரமோ உயரம். கண் கிட்டத்தில்கூட அல்ல. எங்கோ தூரத்தில். பதற வேண்டிய அளவில் அது கலவரப்படுத்தவும் இல்லை... ஒருதலை கூட அல்ல. ஐந்து தலைநாகம்... பத்துதலை ராவணன், என்பார்களே அதேபோல அகல எடுப்புடன் அலை... ஆவேசமாய் உசுப்பிவிடப் பட்டாப் போலிருந்தது. சில ஆட்கள் பேசிட்டே யிருப்பான். திடீர்னு கோபம் உக்கிரப்பட்டு, கெட்ட கெட்ட வார்த்தைச்சொரிவுடன் சண்டை ஆரம்பிச்சிருவான். அதைப்போல... பேன் பாத்தாப்ல இருக்கும் குரங்கு. திடீர்னு காதைக் கடிச்சிரும்... அதைப்போல.

அவன் அடைந்தது ஆச்சரியமா திகைப்பா தெரியாது.

ஆனால் நினைவின் வேகத்தைவிட வேகமாய் அந்த மாபெரும் அலை அவனைநோக்கி பல்லைக் காட்டினாப் போலச் சீறி, கடல் அவனை இழுத்துக்கொண்டது. சுவீகரித்துக் கொண்டது. கவர்ந்து கொண்டது... அந்த வளாகம் அளவு பெரிய நீளப் படுதா அது. அதையும் தாண்டிய படுதா...

பிற்பாடு வந்த செய்திகளின்படி, அது தமிழ்நாட்டின் எல்லை பூராவும் விரிந்த பெரும் படுதா. தென்னை மரங்களையே சிறிதாக்கிவிட்ட உயரம். வந்த வேகமோ காலக் கணக்குக்கும் அப்பாற் பட்டது.

சு னா மி, என பிற்பாடு அறியப் பட்டது அது.

அந்த வளாகத்தையே அந்த தேவாலயத்தையே முழுங்கிக் கொண்டது அலை.

எப்படி அப்படி உயர்ந்து சீற முடிந்தது அதனால்... அல்போன்ஸ் ஐயாவின் பூனைபோல, முதுகு உயர்த்தி, வயிற்றைச் சுருக்கி?...

>>> 

அந்த ஊர் டூரிஸ்டு கைடுகளே கற்பனை செய்யமுடியாத, ஆனால் உண்மையில் நிகழ்ந்த சரித்திரம்.

வைகறைவாசல் மரணவாசலானது.

கடல் கொந்தளித்த உயரத்திற்கு, ஊர் முக்கியஎல்லை வரை, ஒரு கிலோமீட்டர் வரை எட்டி, தொட்டு, மீண்டிருந்தது. கபடி கபடி கபடி... தப்பிக்க நினைக்கவே முடியாத நிலை. யாரும் யூகிக்கவே முடியாத நிலை.

யார் என்னவேலை செய்து கொண்டிருந்தாலும் கொள்ளைக் கும்பல் போல சர்வ அலட்சியமாய் கடல் உள்ளே நுழைகிறது. சுருட்டி இழுத்து வெளியே கொண்டு வந்தது. மொட்டைமாடியில் துணி காயப்போட எனப் போனவர்களே தாக்குப்பிடிக்க முடியவில்லை. வீட்டுக்குள் படுத்திருந்தவர்களே எதிர்க்க முடியவில்லை. கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. ஆனால் என்ன, பிய்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தது கடல். கதவு கதவாக மிதந்து போனது கடல் அலைகளில். மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு மிதக்கின்றன எதுதான் மிதக்கவில்லை. கடல்கரைப் படகுகள், டூரிஸ்டு பஸ்கள், ஊருக்குள் எறியப் பட்டிருக்கின்றன.

சாப்பிட்டு விட்டு எறியப்பட்ட வாழைப்பழத் தோல்கள் போல...

வீட்டுக்குள் இருந்தவர்களில் கடலால் இழுத்து சுவர்களில் அறையப் பட்டவர்கள் அநேகம். காயம் பட்டவர்கள் அநேகம். தப்பிக்கப் போராடினார்கள் என்பதல்ல... கடலின் உள்வாங்கலின் போது அவர்கள் எங்கெங்கோ மாட்டி, செருகி, சிக்கிக் கொண்டிருந்தார்கள். கடல் அவர்களை இழுக்க இழுக்க அவர்கள் சிக்கிக் கொண்டிருந்தார்கள். சதை கிழிந்து, உடைகள் கிழிந்து, கைகால்கள் உடைந்து, உறுப்புகள் நசுங்கி, அவயவங்கள் இடிபாடுகளில் சிதிலங்களில் மாட்டிக் கொண்டு, என்று நிறையப் பேர் தப்பித்திருந்தார்கள். உயிர் பிழைத்திருந்தார்கள்.

இறந்து போயிருந்தால் எத்தனையோ உத்தமம், என அவர்கள் நினைத்தார்கள்...

தேவாலயத்தை மையப்படுத்தி வளர்ந்த ஊர். தேவாலயம் கடல்கரையில் அமைந்திருந்தது. ஆக கிட்டத்தட்ட ஊரின் பெரும்பகுதியைக் கடல் அழித்திருந்தது. அந்தக்கால ராஜா தண்டனைதந்த மாதிரி... பட்டத்து யானைபோல் அலை, ஏறி, காலை உயர்த்தி, மிதித்திருந்தது. பூமிக்கோளமே வெடித்து விட்டதா? திருஷ்டிப் பூசணி.

ஊரின் பள்ளமான பகுதிகளில் கடல்நீர் நிரம்பித் தேங்கி நின்றது, திரும்பிப் போகாமல். மனிதப் பிணங்கள், ஏராளமான பிணங்கள் அந்த நீர்க்குட்டைகளில் செருகப் பட்டிருந்தன. அவற்றில் குழந்தைகள் அதிகம். சுற்றுலாப் பயணிகள் அதிகம். மொட்டைகள் அதிகம். குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள் எல்லாம் பிய்த்தெறியப் பட்டிருந்தன.

சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவன் கார்மேல் செத்துக் கிடந்தான். டூரிஸ்ட் வண்டியில் பெட்டிகளுடன் அவன் அறையப் பட்டிருந்தான். சைக்கிள் வேறெங்கோ இழுத்துச் செல்லப் பட்டிருந்தது. எங்கும் எங்கெங்கும் மரணத்தின் கோரத் தாண்டவம்.

திருவிழா சீசனை உத்தேசித்து அங்கே ஒரு சர்க்கஸ் கம்பெனி டேரா போட்டிருந்தது... கூண்டுக்குள் மிருகங்கள். வெளியே வரமுடியாமல் இறந்து போயின. அந்தப் பெட்டிகளை தாயம் விளையாட்டில் 'டைஸ்' உருட்டுவதைப் போல... உருட்டி.க் கவிழ்த்திருந்தது பேரலை.

ஆ - இறந்து கிடக்கிறது சர்க்கஸ் யானை. மனிதர்கள் எம் மாத்திரம்.

ஊருக்குள் தெருவெங்கும் மீன்கள், கடல் ஜீவராசிகள் சிதறிக் கிடக்கின்றன. கடல் அலை இழுத்து வந்த மீன்கள். இந்த மனிதப் பிணங்களின் நடுவே, எதோ புதுவீட்டில் கட்டிய திருஷ்டிபொம்மை. முழு ஆள் அளவு - அதுவும் கிடக்கிறது.

கடல்ஜீவராசிகளைக் கரைகளில் எறிந்தும், மனுஷர்களைக் கடலுக்குள் இழுத்தும்... என்ன உக்கிர உன்மத்த வெறித் தாண்டவம்.

பாதிஉயிர் போய் ஊசலாட்டத்தில் பேரலறல் அலறும் மனிதர்கள். கைதிருகப் பட்டவர்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல... சொந்தக்காரர்கள் யாரும், ஒருவர் அருகில் ஒருவர், என இருந்தால்தானே? எத்தனை பேர் பிழைத்தார்கள், யார் யார் இறந்து பட்டார்கள்... எத்தனை பேரைக் கடல் உள்ளே சுருட்டிச் சென்றது தெரியாது. எங்கிருந்தோ மனிதர்களை இங்கேகொண்டு போட்டிருக்கிறது கடல்... பிணமாக. அவரை அடையாளங்காண இனி ஏற்பாடுகள் தனி. இந்தப் பகுதி மக்கள் எங் கெல்லாம் கிடக்கிறார்களோ.

கடல் ஊருக்குள் வந்ததும் திரும்பிப் போனதுமான நிகழ்வுகள் துரிதமானவை. யாரும் என்ன நடக்கிறது என்றே சுதாரிக்க முடியாத கணங்கள். அதிகபட்சம் இரண்டு மூன்று நிமிடங்கள் என இருக்கலாம். ஆழிப் பேரலை. ஊழிப் பேரலை.

கடல் ஊருக்குள் நுழைந்த வேகத்தில் தப்பித்தவர்கள், கூட கடல் திரும்பி வந்தபோது, மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். போன வேகம் அதிகம், என்றால், திடீரென மனசு மாறி, உட்சுருண்டு, திரும்பிய வேகம், அதனினும் அதிகம். தவிரவும், எதிர்பாராதது இரண்டுமே. மனிதனால் முடிவெடுக்க முடியாத நிலை.

போனவேகம் கோபம், என்றால் திரும்பியவேகம் பயம் என்கிறாப் போல. கடலுக்கு யார்மேல் கோபம். அட இந்த உக்கிரத்துக்குப் பிறகு எதற்கு பயம்? நியதிகளை மீறியதில் நடுக்கமா, பதட்டமா அதற்கு?

மனம்மாறித் திரும்பி விட்டதா?

கடல்கரை வளாக நெடுகிலும் சடலங்கள். காங்கிரஸ் தொப்பிபோல் கிடந்த உடைந்த படகுகளில் சில கடலில் வீசப் பட்டிருக்கின்றன. கரைமேல் புரட்டி இழுக்கப்பட்ட படகுக்குழிகளில், மணலும், நீரும், பிணங்களும்.

எங்கெங்கும் குழந்தைகள் பிணங்கள் அதிகம். தப்பிக்க வழிவகை தெரியாத சிறார்கள்... குழந்தைகள்... மழலைகள்...

கும்பகோணத்தில் தீ. கொடும் தீ. குழந்தைகளைச் சாப்பிட, இயற்கை ருசி கண்டுவிட்டதா? முன்னர் தீ. இப்போது தண்ணீர்.

ஆட்கொல்லிப்புலி போல, ஆட்கொல்லி இயற்கை...

மீனாங்குப்பம் போல பாதிக்கப்பட்ட இடம் வேறெதுவும் இல்லை. குடிசை எதுவுமே மிஞ்சவில்லை. நெடுக ஒரு கிலோமீட்டர் அளவு நீண்ட குடிசைகள் வரிசை. உட்பக்கத்துச் சிறுசந்துகள் அமைந்த வளாகம். முந்நூறு நானூறு குடிசைகள்... தரையோடு தரையாகக் கிடந்தன எல்லாம். கதவுகளில் இருந்து பெட்டிபடுக்கை அத்தியாவசியப் பொருட்கள்... அம்மிகளையே கூட காணவில்லை.

கடலுக்குள் போன மீனவர்கள் கதி என்ன தெரியவில்லை! அது தனிக் கதை...

ஒருவேளை கடல்கொந்தளித்து உயர்கையில், அவர்களில் சிலர் படகைத் திறம்படச் செலுத்தி, அலைகளோடு பயணம் செய்து ஓட்டி, தப்பித்திருக்கவும் கூடும்...

ஆனால் அவர்கள் வீடுதிரும்பி, தம் உறவினர்களைத் தேடவேண்டி வரும்... அவர்கள் நிலைபற்றிப் பதற வேண்டி வரும்.

உலகத்தின் காட்சிகள் மாறிவிட்டன.... நிமிடங்களில்.

நாடகத்தில் புதிய படுதா இறக்கினாப் போல...

மாலையில் பெருங்கூட்டம் வரும், என அல்போன்ஸ் ஐயா எதிர்பார்த்திருந்தார். அந்த சமயம் இந்த அலைக் கொந்தளிப்பு நிகழ்ந்திருந்தால், கூட்ட மொத்தமும் அலைப் பிரவாகத்தில் மாட்டிக் கொண்டிருக்கும். ஆஸ்பத்திரியில், உடைந்த கைக்குக் கட்டு போட்டார்கள் அவருக்கு. எழுதுகிற வலது கை. பாவம்.

கேள்விப் பட்டவரை, தமிழ்நாட்டின் கிழக்கு எல்லைக் கடல் கிராமங்கள் அனைத்திலுமே, கடல் ஓர் ஆவேசஎடுப்பு எடுத்திருந்தது...

அதிலும் சில கிராமங்கள் தப்பித்திருந்தன. ஆச்சரியம்... சிறுகீறல் கூட இல்லாமல் தப்பித்திருந்தன!

அந்தச் சில இடங்களில் கடல் ஊருக்குள் வரவில்லை... உள்சுருக்கிக் கொண்டது உடலை. அல்போன்ஸ் ஐயாவின் பூனை வயிற்றை உள்ளிழுத்துக் கொள்வது போல... கடல் இருந்த பகுதிகள் விறுவிறுவென்று தரை தெரிந்தன. புது மண்மேடுகள் உருவாயின. கடல், கடலுக்குள் போவதை, அவர்கள் ஆச்சர்யமாய்ப் பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோமீட்டர் அளவுகூட இருக்கலாம் என்கிறார்கள். சிறிது நேரந்தான் அதுவும்... ஐந்தாறு நிமிடங்களில் கடல், திரும்ப தளும்பித் தளும்பி பழைய அளவுக்கு வந்து சேர்ந்து விட்டது. சில அரசியல்வாதிகள் ராஜினாமா செய்து விட்டு, மெல்ல வாபஸ் பெற்றுக் கொள்வார்கள். அதைப் போல. கோபித்த மனைவி படுக்கையில் அருகில் வந்தாப் போல. சமாதானம். சமாதானம்.

அப்போது அவர்கள். பக்கத்து கிராமத்து தமது மீனவச் சகோதர சகோதரிகள் இத்தகைய பேரழிவில் சிக்கிக் கொண்டிருப்பார்கள், என நினைத்திருக்கவும் வாய்ப்பில்லை.

வந்திறங்கியது செய்தி - இடிபோல. மரணித்த பக்கத்துகிராம மனுசர்களுக்காக அழுவதா, தாம் தற்செயலாகப் பிழைத்ததற்கு ஆனந்திப்பதா எனவே அவர்கள், மூச்சுத் திணறித் திக்குமுக்காடிப் போனார்கள்.

பிழைத்தவர்கள் பல்லாண்டு வாழ்க!

நல்வாழ்த்துக்கள்!

 ---

சனிக்கிழமை தோறும் தொடர்கிறது

91 97899 87842 / 91 94450 16842

storysankar@gmail.com

 

Saturday, December 5, 2020

 2006 ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு 

நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

13

தேவாலய வாசல்பகுதிகளில் உயரமாய் நிழல் வசதி பண்ணியிருந்தது அம்பது நூறு மீட்டர் அளவு. ஓரங்களில் நிறைய கடைகள். பெரிய பெரிய மாலைகள் கட்டிக் கொண்டு - ஏற்கனவே சிலுவையில் சிரமப்படும் யேசு... ஆளுயர மாலை! - ஆளுயர அளவு கூட மெழுகுவர்த்திகள் விற்பனைக்குக் கிடைத்தன. மெழுகுவர்த்தி ஓ.கே. உலக்கை போல. யானைத்தந்தம் போல அடுக்கப்பட்டோ நெட்டுக்குத்தலாக நிறுத்தப்பட்டோ பார்வைக்கு வைத்திருந்தார்கள். பொரி, கருப்பட்டி மிட்டாய், பனைஓலைகளில் தொப்பிகள், பல்வேறு ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள்... சிஸ்டர் நௌரோஜி முதல், ஜாலி ஆபிரஹாம், ஜேசுதாஸ், மற்றும் குரல் உள்ள யாரெல்லாமோ, பாடத் தெரியும் என நம்புகிற யாரெல்லாமோ, துட்டு கையில் புரள்கிற, பாட்டு ஆசையுள்ள யாரெல்லாமோ பாடிய ஒலிநாடாக்கள் கிடைத்தன. அந்த ஒலிநாடாக்களில் ஜிஞ்சிருஜிங்சிங் என்று கிதார் அதிர்வு அதிகமாய் இருந்தது. வளாகத்தில் எந்தக் கடையிலாவது எப்பவும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது. சிலாட்கள் எப்பவும் வெத்திலை பாக்கு அதக்கித் திரிவான். அதைப் போல... பொதுவான ஒலிநாடாக்கள் தவிர, வைகறைவாசல் ஆண்டவரை முன்னிலைப்படுத்தி புகழாரப் பாடல்கள்.

கடலலை தாலாட்டும் எங்கள் ஏசு

மனமே நீ அவருடன் மண்டியிட்டுப் பேசு...

வளாக வாசல்களில் லாட்டரிச்சீட்டு, தண்ணீர்ப் பாக்கெட், முப்பது நாளில் ஆங்கில பாஷை என்று புத்தகம் - பைத்தாரன்தான் பள்ளிக்கூடம் போய் பத்து வருஷம் பதினோறு வருஷம் என்று ஆங்கிலம் படிப்பான் போலிருக்கிறது!... ஆண்மைக்குறைவு புத்தகம், - ஆட்டோபயாகிரஃபியா மாப்ளே?... நல்லாத்தான் விக்குது. அதுக்குப் பிரார்த்தனைன்னு வந்து போறானுங்களா என்ன! - மோட்டார் ரீவைண்டிங், அசைவ சமையல், பணம் சம்பாதிப்பது எப்படி? - முல்லா நசுருதீன் பஞ்சதந்திரக் கதைகள் - தெனாலிராமன், மரியாதைராமன், விக்கிரமாதித்தன்... தென்னிந்தியப் பழமொழிகள் 400, அ ஆ இ ஈ படத்துடன் அணில் ஆடு இலை ஈக்கள் விளக்கப் புத்தகம் என்றெல்லாம் கையில் சுமந்து விற்றுத் திரிந்தார்கள்.

அதோ ஒருத்தன் கிழிஞ்ச டவுசருடன் தோள்நிறைய புதுடவுசர், கைநிறைய ஜெட்டி, என விற்றுத் திரிகிறான்.

வாசனை பிடிச்சிப் பாருங்க, என கைமேல் இழுவி, ஒரிஜினல் சென்ட் என விற்பனை. ஒரிஜினல் தேன், ஒரிஜினல் நரிக் கொம்பு. ஒரிஜினல் மூலிகை, வேர், நாட்டு மருந்துச் சரக்குகள் விற்கும்... ஒரிஜினல் குறவர்கள்.

அதை நம்பி வாங்கிச் செல்லும் ஒரிஜினல் லூஸ்கள்!

சுற்றுலாக்காரர்களுக்காக... முப்பதுநாளில் தமிழ் பேச, புத்தகம் வந்திருக்கிறதா தெரியவில்லை...

ஹோட்டல்கள் வாசலில், அண்ணாச்சி வாங்க, என்கிற அழைப்புகள், ஓசியில் டிபன் காபி தர்றாப் போல.

கீ செய்ன், பைகள், குழந்தை பொம்மைகள், கடல் சோழிகள், பெண்களுக்கே யுரிய... ஸ்டிக்கர் பொட்டு, காதுரிங், டிராப்ஸ், சாந்து, ஹேர்பின், ஸ்லைடுகள், நகப்பூச்சுகள், உதட்டுச்சாயம், டென்னிகட் போல தைத்த, கூந்தல் முடிகிற துணி வளையங்கள்... சின்னப் பிள்ளைகளுக்கான சிவப்பு, கருப்பு, பச்சை என விநோத நிறங்களில் கண்ணாடிகள், விளையாட்டு டுப்பாக்கிகள், அரைஞாண் கயிறுகள், ஊதல்கள், (அப்பா ஊதல் வாங்கிக் குடு... போடா நாயே, சும்மா ஊதிட்டே கெடப்பே. காதை அடைக்கும்... இல்லப்பா, நீ தூங்கினபிறகு ஊதறேன்...)

ஆ - அந்தக் கோவில் பிதாமகர் யேசுபிரானின் படம் வரைந்தது - பாயில், காகிதத்தில், துணியில் என பல்வேறு விதங்களில் விற்பனைக்குத் தொங்கின. கர்ச்சீப்கள், துண்டுகள், ஜெட்டிகள், பனியன்கள்... பனியன்களில் விதவித வாசகங்கள். இப்போதெல்லாம் ஜெட்டியிலும் வாசகங்கள்... போஃபர்ஸ்.

ஜெட்டி சரியா இருக்குமா, என்று இடுப்பு சைஸ் வைத்துப் பார்க்கும் உஷார் பார்ட் டிகள்... விட்டா அங்கியே போட்டுப் பாப்பான்யா... பிளாஸ்டிக்கில் பந்துகள், பேட்கள், செஸ் போர்டு, பெல்ட்கள் தொங்கும் கடைகள், சோடா வெற்றிலை பாக்குக் கடைகள், கரும்புச் சாறு அங்கேயே பிழிந்து தருகிற கடைகள், டீக்கடை வாசலிலேயே பஜ்ஜி, சிப்ஸ் போட்டு... பார்க்கிறவன் வாயில் உமிழ் சுரக்க வைக்கிற உத்திநுணுக்கமான கடைகள்...

கடைக்காரன் ஏமாறும் நேரத்தை எதிர்பார்த்து, உமிழ்நீர் சுரக்க சுற்றி வருகின்றன - நாய்கள்!

அண்ணாச்சி மணி என்ன? - என ஒரு பிச்சைக்காரன் கேட்க, வெறுப்புடன், ஏல மூதேவி உனக்கு மணிதெரிஞ்சி எந்தக் கோட்டையப் புடிக்கப் போற - 'ஒன்பது இருபது'... என்று சொல்லிச்செல்லும் ஒருவன்.

பெரிய உள்விஸ்தீரணமான ஆலயம்தான். யாரோ வெள்ளைக்காரன் எப்போதோ கட்டியது. அவனுக்கே தெரியாத சரித்திரங்கள் இப்போது அந்த ஆலயத்தைப் பற்றிப் புழங்குகின்றன. வெளிநாட்டுப் பயணிகள் ஆவென வாயைப் பிளக்க வைக்கிற சரித்திரங்கள்.

டூரிஸ்டு கைடு உணர்ச்சிபூர்வமாய்ச் சொல்ல, ஐஸ்கிரீம் சப்பியபடி கேட்கும் கூட்டம்.

காலாவட்டத்தில் சர்ச் புதுப்பிக்கப் பட்டுவிட்டதாக பயணிகள் நம்ப வைக்கப் பட்டிருக்கலாம்.

நமமூர்க்காரர்கள் சவடால் நிபுணர்கள்.... அடேய் காந்தி கண்ணாடி என்ட்ட இருக்கு...

ஏல நாசமாப் போறவனே இதுவா?

ஆமாண்ணாச்சி, முதல்ல ஃப்ரேம் மாத்தினேன். பிறகு கண்ணாடி மாத்தினேன்.

இந்துக் கோவில்களுக்குப் பழமை அதன் பெருமை என்கிற பிரமை. இப்போது கோவில்களின் அருகே கோவில் கோபுரங்களைவிட உயரமாக ஃபிளாட்கள் வந்து விட்டன. தெருவில் இருந்து பார்க்க, மனிதர்களே கோபுரத்து பொம்மைகளைப்போல் தெரிகிறார்கள்!

கோபுரத்து பொம்மைகள் மனிதர்களை அண்ணாந்து பார்க்கின்றன!

ரோல்டு கோல்டு மாலைகளில், அலுமினிய மாலைகளில், தனி டாலராகவும் சிலுவையில் யேசு விற்பனைக்குக் கிடைத்தார். நிறையப் பேர் அங்கே பிரார்த்தனை என்று வந்துபோகிற வழக்கமும் ஏற்பட்டிருந்தது. பிரார்த்தனை என்றால் பல்வேறு விதம் அதில். பெரும்பாலோர் தம் ஊரில் சலூனே இல்லாத மாதிரி அங்கேவந்து மொட்டை போட்டுக் கொண்டார்கள்.

மண்டைகள் பல விதம். அவனவன் மண்டையில் எத்தனை விதமான நெளிசல்கள்! டிங்கரிங் தேவைப்படும் மண்டைகள்!... பித்தளைப்பாத்திரம் போல் பளபளத்தன சில மண்டைகள். பாசி படிந்த ரசக்குண்டான். வெல்லக் கட்டிகள் போல். முடி உரிக்கப்பட்ட தலைகள் என்றாலும், பார்க்க உரிக்கப்படாத தேங்காய் போல சில மண்டைகள்.

இவர்களைப் பார்த்து வெளிநாட்டுக்காரர்கள் சிலரும் மொட்டைபோட்டுத் திரிந்தார்கள். புடவை கட்டிய வெளிநாட்டுப் பெண்மணிகள், முந்தானை பற்றிய கவனம் இல்லாமல் அலட்சியமாய் நடமாடினார்கள். டட்டர டட்டட் டாய்ங்... பட்டுப்புடவை கட்டி மாராப்பு கழணடு விழுந்த பணக்காரப் பைத்தியம். கைப் பகுதியில், முழங்கைக்குமேல் 'டாட்டு' டிசைன் வரைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். நம்பூர் 'பத்திக்' போல...

அந்தப் பக்கங்களில் நடமாடினால் பொழுதுபோவதே தெரியாது. பர்ஸ் திருடுபோவதேகூட தெரியாது!... வேதக்கோவில் வாசல்பக்கமாக திடீர் திடீரென்று டூரிஸ்ட் பஸ்கள் வந்து நிற்கின்றன. உடனே ஒரு இளங் கூட்டம் வெள்ரிப்பிஞ்சூ, வெள்ரிப்பிஞ்சூ... அல்லது தண்ணீர்ப் பாக்கெட், என்று கத்தி அந்தப் பஸ்ஸை நோக்கி தேங்காய் விடலுக்குப் பாய்கிறதைப் போலப் படையெடுக்கின்றன. பஸ் வந்துநின்ற ஜோருக்கு உடனே ஹோட்டல்களில் இருந்து புதுப்படப் பாடல் கேட்கிறது.

ரா ரா சரசுக்கு ரா ரா...

கெட்ட லாட்ஜா அது?!...

வர்ற ஆளையும் பயமுறுத்தாதீங்கப்பா!

சிலர் சாமி பாட்டு, அந்த ஊர் ஆண்டவர் பாட்டு என்று போடுவதும் உண்டு. 'பெலந் தந்தார் - எனக்கு பெலந் தந்தார்', என்று அல்போன்ஸ் ஐயா பாடிய பாடல்கூட உண்டு. வேறு சிலர் லியோனி பட்டிமன்ற நகைச்சுவை வைக்கிறார்கள்.

சின்ன இடம் தமிழ்நாடு... அதுலயே ஒவ்வொரு இடத்லயும் பாஷையை ஒவ்வொரு மாதிரிப் பேசறான். ஒரிடத்ல தண்ணியை குவளைல மோண்டு ஊத்துன்றான். இன்னொரு இடத்ல?.... (சிரிப்பு) அர்த்தமே எக்குத் தப்பாப் போயிருதில்லே!...

சட்டென அந்த உலகம் சுறுசுறுத்துப் போகிறது. வர்றவனை ஏமாற்ற அவசரம். போட் டி.

கூட்டத்தோடு கூட்டமாய் ஆடுகள் மாடுகள் - ஆமாம் போலிஸ்காரர்களும் நடமாடுகிறார்கள். எல்லாருமே, ஏப்ப சாப்பையா எவனாவது மாட்டுவானா, என்று அலைகிறார்கள். எங்க போகிறார்கள் தெரியாது. சும்மா நோட்டம் பார்த்தபடி. கால்போன போக்கில்...

போலிஸ்காரர்கள் பிச்சைக்காரர்களை அதட்டுகிறார்கள்.

அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குத்தான் குஷ்டரோகம் வரும்... ஏனெனில் அங்கே குஷ்டரோகப் பிச்சைக்காரர்களுக்குதான் அதிகம் பிச்சை விழுகிறது. அவர்கள் சொறிந்துகொண்டே காசுப் போணியை நீட்டுகிறார்கள்.

இத்தனைக்கும் நடுவே ஒராள் எப்படியோ - காலை எத்தனை மணிக்கு அங்கேவந்து வரைந்தானோ - யேசுபிரானை வண்ணப்பொடிகளால் ஓவியம் வரைந்து வைத்திருக்கிறான். அதற்குச் சிலர் சில்லரை எறிகிறார்கள்.

டப் டப் என்று மேல் மூடியைத் தட்டியபடி ஐஸ்கிரீம் வண்டிகள்.

மன ரீதியாகவும் கடல் ரீதியாகவும் அந்த இடம் ஜனங்களைக் கவர்வதாய் இருந்தது.

கச்சக் கச்சக்... அச்சு இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. தொலைபேசி ஒலிக்க, ரத்னசபாபதி அதை எதிர்பார்த்தவனாய் இருக்கிறான். 'ஆமாம் ஐயா. எல்லாம் சரியாயிட்டது ஐயா. உங்க வேலைதான் ஐயா எடுத்துச் செஞ்சிட்டிருக்கோம். மாலைக்கூட்டத்துக்கு விநியோகம் செஞ்சிறலாம் ஐயா... சரி ஐயா. நல்லது ஐயா. மணி என்ன? ஒன்பது முப்பது இல்லியா. ஆச்சி ஒரு அவர், ஒன்ரை அவர்ல முடிச்சி பையன்ட்டக் குடுத்து டெலிவரி பண்ணிர்றேன். நன்றி ஐயா. பேமென்ட் விஷயம்?... சரி ஐயா சரி ஐயா. ஐய அதைப்பத்தி என்ன...'

தொலைபேசியை வைத்துவிட்டு, என்னத்த தொழில் பண்ண, அவசரம் அவசரம்ன்றாங்க பேமென்ட் பண்ண ஒரு அவசரமுங் காணம்... என்கிறான்.

பூகம்பம் வந்தது காலை பத்து தாண்டி. முக்கியமாய் இங்கே ஏற்பட்ட பாதிப்பைவிட, வேறு கீழ்க்கடல் நாடுகளில் கடுமையாய் இருந்தது என்கிறார்கள். ஒரு முன்தகவல் இல்லை. எதிர்பார்ப்பு இல்லை.

கச்சக் கச்சக் …

திடுதிப்பென்று பூமியே ஒரு ரயில்-ஆட்டம் ஆடியது. மாவு சலிக்கிறாப் போல. ஆனால் சர்ரியான ஆட்டம். கட்டடமே ஆடியது. ரா ரா சதஸுக்கு ரா ரா!... ஃபோர்மேனுக்கு அது புதிதல்ல. தண்டபாணி வேலையை முடிச்சிட்டா நேரா வீட்டுக்குப் போகமாட்டான். லேசா தாகசாந்தி பண்ணிக்கிர்றதுதான். ஊத்திக் குடுத்தாளே ஒர் ரவுண்டு ... உலகம் சுத்துதடி பல ரவுண்டு... கேஸ்தான்.

தெளிவாக உணர முடிந்தது எல்லாராலும். நெல்லரைக்கும் கடையில் அரிசியில் கல் நீக்க இப்படித்தான் மிஷின் ஆடிட்டே இருக்கும். தண்டபாணி, அட நான் தண்ணிகூட அடிக்கலையே இன்னாங்கடா இது, என நினைத்தான். மண்பானைத் தண்ணீர் குடிக்க, என டம்ளருக்குக் குனிந்த சிவாஜி, சுவரில் முட்டிக்கொண்டான். ரத்னசபாபதி உட்கார்ந்திருக்கிற போதே, அவன் முன்னால் இருந்த மேஜை, சர்ரென இடம்பெயர்ந்தது, சிறிது. ஐயோ துட்டு! திரும்பவும் அவனிடமே வந்து, சற்று கோணலாய் நின்றது. அப்ப்பா பரவால்ல!... அவனுக்குச் சிறிது தலைசுற்றல் மாதிரித் தோணியது. இரத்த அழுத்தக் கோளாறா, என நினைத்தான்.

ஆனால் ஆட்டம் நிற்கவில்லை. நன்றாக ஒரு முப்பது விநாடிகள் வரை நீடித்தது. எலி தட்டிவிட்டாப் போல உயரத்து சாமான்களில் சில கீழே விழுந்தன. அச்சகவாசல் குண்டம்மாவின் பழங்கள் கிடுகிடுவென உருண்டு நடுத்தெருவுக்கு ஓடின. அவைகளில் ஒன்றிரண்டு, வரும் வாகனங்களின் அடியில் நசுங்கிப் பிதுங்கின.

இயற்கை எனும் ராட்சஸன், பூமிக் கட்டிலில் கெட்ட காரியம் பண்ணினாப் போல!...

தெருவில் கூக்குரல் கேட்டது. 'எல்லாரும் வெளிய ஓடி வாங்க. பூகம்பம்... பூகம்பம்!' பஜாரில் கூட்டநெரிசல். எல்லாரும் பதறி வெளியே ஓடிவந்தார்கள். தெருவில் இருக்கிறவர்கள் கூட நிதானமற்று இங்கும் அங்கும் ஓடினார்கள். முடிவு என எதையும் எடுக்கமுடியாத நிலை. எல்லாரும் நிலை குலைந்து கலவரப்பட்டு பிரமித்திருந்தார்கள். அச்சகத்தில் பைன்டர் ராமசாமி அப்போதுதான் வேலைக்கு வந்தவர் - வெள்ளைச்சட்டைப் பிரியர் அவர் - சட்டையைக்கூட கழற்றியிருக்கவில்லை. வாசலைப்பார்க்க முதலில் ஓடியவர் அவர்தான். அவர்கள் அனைவரிலும் வயதானவர் அவர்தான்... அது சரி, எத்தனை வயதானால் என்ன, உயிரின்மேல் ஆசை குறையப் போவதில்லை.

யாரோ சொன்னார்கள் என்று எல்லாருமே வாசலுக்கு ஓடிவந்து விட்டார்கள். உள்ளே இருப்பதால், கட்டடம் இடிந்து விழுந்தால் இடிபாடுகளில் மாட்டிக் கொள்கிற பீதி, அவர்களிடம் இருந்தது. தெருவும் ஆபத்து அற்றது, என்று கூற முடியாது. கட்டடம் நம்மீது விழலாம். தெருத் தரை கீறல்விட்டுப் பிளக்கலாம்...

பூகம்பம். எதுவும் நடக்கலாம். எதையும் யூகிக்க முடியாத நிலை அது. பூமிக்கு அப்பால் ஐந்து பத்து கிலோமீட்டர் அடியில் நிகழும் சம்பவம். மேல்தளத்தில் ஆட்டம். கீழே, பூமியின் தகடுகளே அல்லவா, நகர்ந்து, வெடிப்பு விடுகின்றன.

இசகு பிசகான நேரம். பதட்டம். அவசரத்ல அண்டாலயே கை நுழைய மாட்டேங்கு து... என்பதான நேரம்!

இருபது நிமிடமா அரைமணிக்கும் அதிகமா தெரியாது. எல்லாரும் தெருவுக்கு வந்து, கலவரமும், லேசான பீதிச் சிரிப்புமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். அச்சக தார்ணாப் பொம்பளை ஒருவழியாக எழுந்து கொண்டிருந்தாள். நாலுகடை தள்ளி தவணைமுறையில் டி.வி., ஃப்ரிஜ், தட்டுமுட்டு சாமான்கள் விற்கும் கடை... தொலைக்காட்சியை ஆன் செய்திருந்தார்கள். ஒரே கூட்டம். ஒருநாள்க் கிரிக்கெட் பார்க்கிறாப் போல.

தமிழ்நாடு முழுதும் கடலோரப் பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டதாகப் பதிவுகளை அவசரச் செய்தியாக தொலைக்காட்சி, ரிப்பன்போல ஓடும் எழுத்தில் அறிவித்தது. உயிர்ச்சேதம், பொருட்சேதம் பற்றிய விவரங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன.

சற்றுநேரங் கழித்து கீழைநாடுகளில், குலுக்கல் எட்டு புள்ளிகளுக்கும் கூடுதல், எனவும் கட்டடங்கள், குறிப்பாக அடுக்கு மாடிகள் பல தரைமட்டமாகி விட்டன, என்றும் பயமுறுத்தியது. உற்சாகமான ஊரே சட்டென முகம் மாறிவிட்டது. வெளியூர் ஜனங்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். தங்கள் ஊரில் நிலவரம் எப்படி என அறிய அவர்கள் அவசரப் பட்டார்கள். கவலைப் பட்டார்கள். தொலைபேசி பூத்களில் ஏராளமான கூட்டம். வசதி படைத்தவர்கள் காதில் செல்ஃபோனுடன் பேசியபடி நடமாடினார்கள்...

வைகறைவாசலில் ஒரு பாத்திரக்கடையில், சுவரில் வெடிப்பு விழுந்திருந்தது. தொங்க விட்டிருந்த வாளிகள், பாத்திரங்கள் உருண்டு தாறுமாறாய்க் கிடந்தன. வெண்கலக் கடையில் யானை புகுந்தாப்போல ஆகியிருந்தது நிலை.

ஒரு தொலைக்காட்சியில், செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறபோதே, ஏய் எல்லாமே ஆடுது... ஆடுது... என்றபடி அவர் வெளியே பரபரப்புடன் எழுந்து போனதையே காட்டினார்கள்.

ஊரிலேயே சில பகுதிகளில் குலுக்கலே இல்லை, எனப் பேசிக் கொண்டார்கள். தெருவில் வாகனத்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் தங்களால் பூகம்பத்தை உணர முடியவில்லை என்றார்கள்.

திரும்ப பூமி அதிருமா, என எல்லாருக்குமே, உள்ளே புதிரான சந்தேகம் இருந்தது. எல்லாரும் கவனமாகவே இருந்தார்கள்.

ரத்னசபாபதிக்கு திரும்ப அச்சகத்தில்போய் அமரவே மனம் ஒப்பவில்லை. ஆபத்துக் கட்டம் நீங்கி விட்டது, என்று யாராவது அறிவிக்கக்கூடாதா, என்றிருந்தது. மேஜைக்கு அப்பால் அவன் உட்கார, திரும்பவும் பூகம்பம் வந்தால், எழுந்து, வெளியே ஓடிவர நேரம் எடுக்கும்...

துட்டை எண்ணி எடுத்துச் சட்டைப் பாக்கெட்டில் உஷார்ப் படுத்தி யிருந்தான்!

ஆனால் அவன் உள்ளேவந்து உட்காரும் வரை, சிவாஜி உட்பட யாரும் வேலைசெய்ய என உள்ளே நுழையப் போவதில்லை! அவர்களுக்கு என்ன, கதைபேசிச் சிரித்தபடி பொழுதை ஓட்டிவிட்டு, சம்பளமும் வாங்கிக் கொள்ளலாம். உண்மையில் வேலை, முடிகிற கட்டத்தில் இருந்தது.

உள்ளே தொலைபேசி ஒலிக்கிறது. போய் எடுத்தான்.

'ஆமாம் ஐயா, இங்க பெரிசா பாதிப்பு ஒண்ணும் இல்லிங்கய்யா... கூட்ட மொத்தமும் வெளிய தெருவுக்கு வந்திட்டது. பாத்திரக்கடை ஒண்ணு. வடிவேல் நாடார் கடை... பழைய கட்டடம் அது. ஓனர் காலி பண்ணு பண்ணுன்னிட்டிருந்தாரு... மாட்டேன் மாட்டேன்னு டேக்கா குடுத்திட்டிருந்தாப்ல... கட்டடமே விரிசல் விட்ருச்சி. இனி இருன்னாலும் இருக்க மாட்டாரு!...'

'பூமியை நான் அதிரப் பண்ணுவேன்...' என்று எங்க வேதத்தில் வசனம் இருக்கு - என்றார் அல்போன்ஸ் ஐயா.

'நீங்க என்ன புது நோட்டிஸ் எழுதப் போறீங்களா ஐயா' என்றான் கவலையுடன் ரத்னசபாபதி.

பூகம்பம் கடுமையாய்த் தாக்கியது இந்தோனீஷியாவில். மின்கம்பங்களே சாய்ந்து கிடந்தன. மின்சாரம் முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. சிறிதுநேரம் விட்டு விட்டு தரை ஆடிக்கொண்டே இருந்தது. ஜனங்கள் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள். எல்லாரும் தெருவில் நிற்கிறார்கள். இடிபாடுகள் குவியல்களாக எங்கு பார்த்தாலும் கிடக்கின்றன. சில கட்டடங்கள் எப்படியோ அந்த அதிர்வில் பிழைத்தாற்போல தனித்து நிற்கின்றன. ஒரு மாடிக்கட்டடம் பெயர்ந்து விழுந்து, அதன் பின்புறக் கட்டடம் தெரிகிறது.

குபீர் குபீரென்று தீ பற்றிக் கொள்கிறது அங்கங்கே. எப்படி தீ வெடிக்கிறது என்று யூகிக்கவே முடியவில்லை. சட்டென காற்று உயர்ந்து கிளம்புகிறது. தீ மேலே பார்க்க புழுமாதிரி நடனம் ஆடுகிறது. நல்ல பகல் வெயில். புகை. தீயின் உருக்க வெப்பம். பதட்டம். தூசிப் படலம்.

தீ காற்றின் திருப்பப்படியும் விருப்பப்படியும் தாவித்தாவி, தெருவில் கட்டடங்களுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. தீயை அணைக்க, அந்தந்த கட்டடத்தில் வேலைசெய்கிற ஆட்கள் முயல்கிறார்கள் என்றாலும், வேறு வெளிஉதவி, என யாரும் கிடையாது. அவரவர், அவரவர்சார்ந்த பயத்தில் இருக்கிறார்கள்.

புகை உள்சுருளல்களுடன் பந்துபந்தாய் மேலே எழும்புகிறது. முடியவிழ்ந்து சுதந்திரப் பட் ட மயிர்க்கற்றை. சலூனில் வீசியெறிகிறாப் போல.

தெருவில் ஓடிவந்து நிற்கிறவர்களே கூட, வேடிக்கை பார்த்தபடி நிற்கிறார்களே தவிர, யாரும் பிறத்தியார் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவரவர் கவலை அவரவர்க்கு.

தான், அதிகபட்சம் தன் குடும்பம், தன் நண்பர்கள்... அவர்களால் அக்கறை காட்ட முடிந்த எல்லை அவ்வளவே. எல்லாரும் உதவிக்கு என்றுபோய், தாங்கள் பிரச்னையில் சிக்கிக் கொள்வோம், என வெகுவாக உள்ளுக்குள் பயந்தார்கள். எல்லாரும் எத்தகைய மோசமான விளைவுக்கும், அந்த நொடியில் தயாராய் இருந்தார்கள். எந்த மோசமான செய்தியையும், அவர்கள் மேலும் அதிர்ச்சியடையாமல் ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் தெரிந்தது.

யாரும் யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எதையும் விவாதிக்கவில்லை. ஆனால் எல்லாரும் எல்லாவற்றையும் கவனத்துடன், பயத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். எதுவும் இதுகுறித்து செய்வதற்கில்லை, என அறிந்தவராய் இருந்தார்கள். அபாயகட்டம் நீங்கிவிட்டதாக உணர்வு வரும்வரை, அவர்கள் வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிந்தது.

கட்டட அடியில், இடிபாடுகளில், எத்தனைபேர் சிக்கிக் கொண்டார்கள் தெரியாது. திடீர் திடீரென அழுகுரல்கள் கூக்குரல்கள் கேட்கின்றன. யாரும் அருகே போகவில்லை. விடாமல் பூமி ஆடிக்கொண்டே யிருக்கிறது.

எல்லாருக்கும் காலம் வேடிக்கைகாட்டிக் கொண்டிருப்பதைப் போலவே காட்சிகள் அமைகின்றன. கோரக்காட்சிகள்.

பெரிய கட்டடங்களில் குபீரெனப் பரவும் வெப்பம் அபரிமிதமாய் இருக்கிறது. தெருவெங்குமே அனல் பறக்கிறது. சில கட்டடங்களில், உள்ளே படார் படார், என்று மரச் சட்டங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், கம்பியூட்டர்கள் என வெடிக்கின்றன...

பாப்கார்ன் பொறிக்கிறாப் போல...

செய்திகளும் வரத் தொடங்குகின்றன. வைகறைவாசல் ஜனங்களை மேலும்மேலும் பயமுறுத்துகின்றன அவை.... கிழக்குக்கரை நெடுகவே கிழிஞ்சி கெடக்கப்போவ்... என்று ஜனங்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

தவணை டி.வி. கடையில் வாசல்க் கூட்டம் அதிகரித்து விட்டது. சங்க நோட்டிஸ் அறிவிப்பது போல, உண்மையிலேயே அது மாபெரும் தார்ணாதான். திரும்ப ஒரு பூகம்பக் குலுக்கல் வந்தால், கடைக்காரர்கள் வெளியே ஓடிவர முடியாது... அவர்கள், டி.வி. ஒளிபரப்பை அணைத்து விடலாமா, என்றுகூட நினைத்தார்கள்.

ஆனால் அவர்களுக்கும் செய்தி வேண்டியிருந்தது.

கட்டடங்கள் விரிசல் விடுகின்றன. அல்லது இடிந்து விழுகின்றன. அல்லது தீப்பற்றிக் கொள்கின்றன. காற்றில், சேதமடையாத கட்டடங்களுக்குக் கூட தீ துள்ளுகிறது. தாவுகிறது. பரவுகிறது.... எல்லாம் செய்திகளில் ரிப்பனாக ஓடுகிறது. டி.வி.யில், விடாமல் சமையல் குறிப்பு, பாட்டுப் போட்டி, தொலைக்காட்சித் தொடர், நேயர் விருப்பப் பாடல் என நிகழ்ச்சி அது பாட்டுக்கு. ஒரு பக்கம் உலகத்தில் செத்துக்கொண்டே யிருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. செய்திகள் வந்துகொண்டே யிருக்கின்றன. கவுண்டமணி செந்திலை எத்திக்கொண்டே இருக்கிறான்.. ஜனங்கள் சிரிக்காமல் பார்க்கிறார்கள்...

ஒரு கடல்கரை ஊரில், தீயில் இருந்து தப்பிக்க, ஜனங்கள் தண்ணீரில் - ஆறுகள் குளங்களில் கடலில் போய் நிற்கிறார்கள், என்று தெரிவித்தார்கள்.

சிவாஜி? ... என்று கூப்பிட்டான் ரத்னசபாபதி.

நிகழ்ச்சிகள் இவனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தன. வைகறைவாசலில் நிலைமை சாவகாசமாய், செய்திபரிமாறிக் கொள்கிற அளவில் இருப்பதாகவே அவன் நினைத்தான். இங்கே பதிவான பூகம்பம் நின்று, ஒருமணி நேரம் வரை ஆகியிருந்தது. ஜனங்களும் சிறு ஆசுவாசத்துக்கு வந்திருந்தார்கள். எங்கோ நிகழ்ந்த பூகம்பத்தின் பக்க விளைவு இது.

நோட்டிஸ் அச்சடித்து முடிந்தாகி விட்டது.

சிவாஜி?... என்று கூப்பிட்டான் ரத்னசபாபதி.

சிவாஜி நோட்டிஸ் பார்சலைப் பெற்றுக் கொண்டான். ஊர்முழுக்க வேடிக்கை பார்க்க நல்ல வாய்ப்பு அவனுக்கு, என்றுதான் தோன்றியது...

இனி பூகம்பமோ, அது சார்ந்த ஆபத்தோ, இங்கே இல்லை, என நினைத்தான். வைகறைவாசல் பாதுகாப்பாக இருப்பதாகவே நினைத்தான்.

கடல்கரைப் பக்கம், வேடிக்கை பார்க்கும் உற்சாகத்துடன், சைக்கிளை மிதித்தான்.

•••

சனிக்கிழமை தோறும் தொடர்கிறது

storysankar@gmail.com

91 97899 87842 / 91 94450 16842