Wednesday, March 11, 2015

short story - japan


வங்க வேங்கையின் 
கடைசி கணங்கள்
யோகோ ஒகாவா (ஜப்பான்)
* * *
தமிழில் எஸ். சங்கரநாராயணன்


புறவழிச் சாலையை விட்டு நதியோரமாய் தெற்காக... பாலத்தைத் தாண்டுகையில் சின்னதாய்த் தயக்கம். திரும்பி... ஊருக்குள்ளே நுழைந்திருந்தேனானால்... ஒரு சில நிமிடங்களில்... 'அவளது' அடுக்ககத்தில் இருந்திருக்கலாம்.
     மகா புழுக்கமான மதியம். காற்றே இல்லை. சாலையோர மரங்களெல்லாம் விதிர்விதிர்த்து நின்றன. கொதிக்கும் கல்த்தரையின் அனல் கானல். எதிர்ப்பக்கமிருந்து வரும் கார்களின் மீது பட்டுத் தெறித்து வரும் சூரியன் கண்ணைக் குருடாக்கியது. காரின் குளிர்சாதனத்தை முழுசாய் முடுக்கியும் ஜன்னல்வழியே பீரிட்டுப் பாயும் சூட்டை வேட்டை ஆட இயலவில்லை. கார் ஸ்டீயரிங்கே கொதித்தது. கைகள் கொதித்தன.
     வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்தே எனக்குள் பைத்தாரக் கணக்குகள். அடுத்த நிறுத்தத்தில் சிவப்பு கிடைத்தால் யூ டேர்ன் அடி. வீடு திரும்பு. எதிரே வெள்ளி வண்ணத்தில் பந்தயக் கார் வருகிறதா, பயணத்தைத் தொடர். வளர்ப்புப் பிராணிகள் கடையில் நேற்று பார்த்தேனே, டெரியர் நாய்க்குட்டி, போகையில் அது விற்கப்பட்டிருந்தால் வந்த வழி திரும்புவேன். வரும் பஸ் ஸ்டாண்டு, வரிசையாய் மூணு பஸ், அப்படியானால் அவளது அடுக்ககம் நான் போவேன்.
     எதிரே பந்தயக் கார் வருகிறதா என நான் எதற்காக எதிர்பார்க்கிறேன், நாய்க்குட்டி வித்திருந்தா என்ன, வித்திருக்காட்டா என்ன? இப்பகூட ஒண்ணுமில்லை, திரும்பிவிடலாம். ஆ அவளோடு நேருக்கு நேர் இன்னிக்கு மோதிப் பார்த்து விடலாம்... என்றும் உள்ளே பொங்கிய ஆத்திரம். அதுவும் இருக்கிறது.
     பாலத்தை எட்டுமுன், போக்குவரத்து மந்தமானது திடீரென்று. எதுவும் விபத்தாய் இருக்கலாம். பாதிவழி மடக்கப்பட்டு ஒருபாதி வழியே விடப்பட்டிருந்தது. வானொலியைப் போட்டேன். கர்ர் புர்ரென்று சத்தம். அணைத்து விட்டேன். அங்குலம் அங்குலமாய் நகர வேண்டியிருந்தது. காலில் வேக அடக்கியை, அழுத்தியபடி உருட்டினேன் காரை.
     அவளைப் பார்த்த கணத்தில், நான்... என்ன செய்யப் போகிறேன்? ஆயிரம் முறை இதையே கேட்டுக் கொண்டாயிற்று. ஓங்கி பளார். ஒரு அறை? ஏண்டி சக்காளத்திச் சனியனே... என மாறி மாறி... வசைமாரி? மரியாதையா என் புருஷனை என்னாண்ட திருப்பிக் கொடுத்திரு. சீச்சீ... என்ன அபத்தம். இந்தக் கேவலத்தை விட பேசாமல் அவனை விட்டுவிட்டு தேமேன இருந்துவிடலாம்.
     இனிய மதிய வணக்கம்.... முட்டாள்த்தனமாய் வாழ்த்தலாம். என்னவோ அவள்தான் என் எல்கேஜி மகளின் வாத்திச்சி போல!
     இவன், என் கணவன் அமெரிக்காவுக்கு மூணு நாள் முன்னால் ஒரு மருத்துவ மாநாடு என்று கிளம்பிப் போயிருக்கிறான். இந்த வாய்ப்பினால் நான் சட்டென மும்முரப் பட்டிருக்கிறேன். அல்லாமல், நேரே அவள்வீட்டுக்குப் போய் அவனையும் அவளையும் ஒருசேர நான் எதிர்கொள்ள எனக்கு தைரியமே, அதற்கான யோசனையே கிடையாது. அவன் போகட்டும் ஊருக்கு, என நான் பொறுமை காத்தேன். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை தான்.
     ஒருவரை யொருவர் அணைத்தாப் போல அவர்களை நான் நிர்வாணமாகப் பார்த்திருந்தால் கூட நான் அதிர்ச்சி அடைந்திருப்பேன் என்று சொல்ல முடியாது. இத்தனை காலமும் அந்தரங்க கணங்களில் அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள், எனக்குத் தெரியாதா என்ன? அவர்கள் ஏற்கனவே ஏடாகூடமான நிலையில் இருக்கையில், நானும் போய் இன்னும் அதை அதிகம் குழப்பணுமா என்ன? அதெல்லாம் வேணாம். அவன் இல்லாத வேளையில் நான் அவளைச் சந்திக்கலாம் என்றிருந்தேன். ஆறஅமர, ரெண்டு பேருமே ஒத்துப்போகிறாப் போல சமதையாப் பேசி சமாதானத்துக்கு வரலாம்...
     இவன், எங்க வீட்டு ஆத்மா போயிருக்கிறானே, என்ன மாநாடு அது? அதே என் ஞாபகத்தில் இல்லை. சுவாசம் சம்பந்தப்பட்ட மருந்துகளில் இவன் ஈசன். ஈசனோஃபிலியோவில் எதோ சொல்வார்கள், பல்மானரி இன்ஃபில்ட்ரேட்ஸ், அதன் அறிகுறிகளைக் கையாள்வதில் சமர்த்தன். எனக்கு இதைப்பத்தியெல்லாம் விளக்கிச் சொல்வதில் அவனுக்கு அக்கறையும் கிடையாது... எனக்கும் கிடையாது, அதையும் சொல்லவேண்டும். ம். ஆனால், அவளுக்கு இதுபற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு பல்கலைக்கழக மருத்துவமனையில் அவள் மதிப்புமிக்க காரியதரிசி.
     அந்த மாநாடு, அது என்ன மாநாடு தெரியவில்லை, என்பதில் ஆற்றாமைகொள்ளத் தேவையில்லையோ? அவள் ஒண்ணாய் நிர்வாணமாய்... அதைப் பற்றியும் அலட்டிக்... ஆனால் அது அப்படியாய்த் தானே இருக்கிறது. எப்படியெப்படி யெல்லாமோ என் பொறாமையும் பொருமலும் என்னை உருக்குலைக்கிறது.

**
போக்குவரத்து ஊர ஆரம்பிக்கிறது. பாலத்தடியில் ஒரு குடும்பத்தின் சமையல் நடந்துகொண்டிருக்கிறது. இறைச்சி வேகிற மணம் எழுந்து சூழலை நிறைத்தது. வீதியின் வெப்பம் இன்னுமாய் உணர்கிறாப் போல இருந்தது இப்போது. மணல்தரைக் கம்பங்களில் சீகல் பறவைகள் அந்த வாசனையில் கிறங்கி யமர்ந்திருந்தன. நதியில் புள்ளிகளாய் நீர்விளையாட்டில் திளைத்தபடி மனிதப் புள்ளிகள். சிறு உருவில் மீன்பிடி படகுகள். வாகன நெரிசல் பொறாத ஓர் உருமலில் அவை சற்று அதிர்ந்தபடி எழும்பிப் பறந்து திரும்ப அடங்கின. கண்கூசுகிற பிரகாசத்தில் தூரத்து நீர்ப்பரப்பு மினுங்கியது.
     எதோ சரக்குவாகனம் பாலத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்தது. கண்ணுமண்ணு தெரியாத வேகத்தில் நிதானம் இழந்து  நடுச்சுவரில் டமால் பண்ணியிருப்பான். ஓட்டுநன் இருந்த பக்கம் சிதைந்து, ஒரு டயர் கழண்டு பாலச்சுவரையே துள்ளித் தாவிவிட்டது. கொண்டைவிளக்குகள் ஒளிர ஒரு அவசரவூர்தி, காவல்துறை ஊர்தி மற்றும் மீட்பு ஊர்தி என்று இடம் பரபரப்பாகி யிருந்தது.
     இத்தனை அமர்க்களத்தில் அதன் ஓட்டுநன் உயிரோடு பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஸ்டீயரிங்கே ஆளைக் குத்தி எலும்பை சதையைக் குதறியிருக்கும். ஆனால் அந்தத் திகில் தீவிரத்தை தெருவில் சிந்தியோடியிருந்த தக்காளிகள் மாற்றின. மீட்புப்ணிகளின் அவசரமும் பரபரப்பும் எனக்குப் புரிகிறது. ஐய எதும் வயலுக்குள்ள புகுந்துட்டமோ, இது என்ன அபூர்வமான சிவப்பு புஷ்பம்... என்று காட்சி வந்தது மனசில். ஐய ஓட்டுநனின் ரத்தம்தான் இப்படி தெருவில் தீவுகளாய்...
     இல்லை. அவை தக்காளிகள். மழுமழு பளபள கனிகள். யாரோ வேலையாள் ஒரு வாருகரண்டியால் அவைகளை ஒதுக்கித் திரட்டுகிறான். அவை கரண்டிக்குள் அடங்காமல் வழுகி யோடுகின்றன. விபத்துப் பகுதியில் நிறைய சனம் திகிலுடன் வேடிக்கை பார்க்க, யாரோ விபத்தான வாகனக் கதவை ஒரு மின்சாரரம்பம் கொண்டு அறுக்கிறார்கள்.
     என் கார்முன்னாலும் சில தக்காளிகள். என் டயரடியிலும் சில நசுங்கியிருக்கலாம். மளுக்கென அவை அமுங்குவதை என்னால் உணரமுடியவில்லை. அவைகள் எதிர்ப்பாய் முரண்டாமல் அப்படியே தரையோடு சப்பளிந்துவிட்டன போலும்.
     மத்த கார்கள் அந்தத் தக்காளிகளை நசுக்காமல் போக முடியுமா பார்த்தார்கள். நானோ விடாதே, எத்தனை தக்காளிகளை நசுக்க முடியுமோ பார்க்கலாம் என செயல்பட்டேன். பத்துக்கு மேல் நசுக்கிவிட்டால், நான் பயணத்தை மேலே தொடர்வேன். இப்படியே வீதி எதுவரை போகிறதோ அதுவரை போகலாம். கண்ணாடி வழியே பின்பக்கம் பார்க்க, சிவப்புக் குழம்பு தரையில் பீரிட்டு நீள்ப்பட்டையாய்... ஒராளைத் தாக்கும்போது எப்படி இருக்கும்? இந்தத் தக்காளியை நசுக்கினேனே அப்படியா இருக்கும்? நசுக்கிய தக்காளிகளை எண்ண ஆரம்பிக்கிறேன். ஒண்ணு ரெண்டு மூணு நாலு ஐந்து...

**
அவளை ஒரே ஒருதரம் தான் நான் பார்த்திருக்கிறேன். அதுவும் தொலைவில் இருந்து. சில ஆராய்ச்சிக் குறிப்புகளை இவன் மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தான். அவனுக்காக அதை எடுத்துவர நான் அங்கே போகநேர்ந்தது. வழியில் தான் காரியதரிசியின் ஒதுக்கிடம். சட்டென எட்டிப் பார்த்தேன். பார்த்த ஜோரில் அவள்களில் யார் இவனது சிநேகிதி என்று கண்டுகொண்டேன். அவளுகளில் யாரையுமே நான் அதுநாள் வரை பார்த்தது கிடையாது. என்றாலும் இவன் ஆள்... அது 'அவள்' தான். அவளைப் பற்றி, அவர்களைப் பற்றி. அவன் வீடுதிரும்பாத நாட்களில் நான் யூகித்த கற்பனைக் காட்சிகளுக்கு அவளே பொருந்திவந்தாள். ஒரு அடுக்கக அறை. அடிக்கடி போகும் விடுதியின் உணவுமேசை. அப்புறம் ஆஸ்பத்திரியில் நடமாட்டம் இல்லாத பின்கட்டு.
     ஆனாலும் அன்னிக்குப் பார்த்த அந்தப் பெண்ணின் முகம் அத்தனை துப்புரவாக ஞாபகம் இல்லை தான். அந்த சிகையலங்காரமோ, ஒப்பனையோ... ப்ச். நினைவுக்கு வரவில்லை. ஒரு சிக்கலான வேலை மும்முரம் அவளுக்கு. பரபரப்பாய் இருந்தாள் அன்றைக்கு, அவ்வளவே நினைவில். தன் மேசைப்பக்கம் நின்றிருந்தாள். கைநிறையக் காகிதங்களை உலைத்து அடுக்கியபடி யிருந்தாள். அவள் விரல்கள் காகிதக் குவியலுக்குள் பொறுமையின்றி அலைந்தன. சிலவற்றில் குறிப்பு எழுதி, சிலவற்றைக் கிழித்து எறிந்தபடி, சிலவற்றில் மேல்கொம்பாய்க் காகிதம் குத்தினாள். நெகிழ்ந்த கசகச கேசம் முகத்தில் பாதியை மறைத்திருந்தது.
     மேசைத் தொலைபேசி ஒலி. ஏய் யாராவது இந்தச் சனியனை எடுத்துத் தொலைங்கடி... என இரைகிறாள். ஹா ஒருவழியாக காகிதங்களைச் சீரமைத்திருந்தாள். என்றாலும் முதுகுக்குப் பின்பக்கம் யாரோ விரட்ட, திரும்ப பயத்துடன் அவற்றை சரிபார்க்க ஆரம்பிக்கிறாள். ஆனால் எத்தனை தடவை அடுக்கினாலும் விஷயம் சரியாய் வரவில்லை போல. எதோ சரியாக வராததாக அவளுக்கு அவநம்பிக்கையாய் இருந்தது. அப்பதான் எழுதியிருந்த குறிப்புகளை யெல்லாம் சரசரவென்று அழிக்கிறாள். மடிக்க பிரிக்க, அங்கங்கே ஸ்டாம்ப் அடிக்க, மனம்சொன்னதை யெல்லாம் செய்கிறாள் போல. இப்படியே காலம் பூராவும் அவள் திக்கித் திணறுவாளாய் இருந்தது. ஆனால் அவள் பதட்டப்பட பட வேலை இன்னும் இன்னுமாய்க் குழம்பி, காகிதங்கள் மேலும் கசங்கி... அவளுக்கு உதவவும் யாரும் வரவில்லை.
     நான் கடைசியில் அவளை அப்படியே விட்டுவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிவிட்டேன். அழகாய் நறுவிசாய் அவள் வேலை செய்கிறதைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். இவன் தந்த காகிதங்களை அட்டகாசமாய் தட்டச்சு செய்து அவன்மேசையில் வைப்பாள், என்பதாய் நினைத்து வந்தேன். ஆனால் இப்படி அவளே தன் காரியங்களைக் கோணாமாணா ஆக்கிக்கொண்டிருந்தாள். இவளிடம் போய் நான் பொறாமைப் படுவதா?

**
நகரக் கூடத்தின் பக்கமாக நிறுத்துமிடம். அங்கேயிருந்து அவள் அடுக்ககம் வரை கொஞ்சம் நடக்கலாமாய் இருந்தது. அவள் வீட்டுப்பக்கமாகவே இடம் பார்த்து வண்டியை விட்டிருக்கலாம் தான். இம்மாதிரி நாளில் கார் நிறுத்தக்காசு தருவதே அதிகப்பிரசங்கித்தனம் என்று தோன்றியது. அடுக்கக எண் ஐந்நூத்தியெட்டு. அஞ்சி. பூஜ்யம். எட்டு. எண்ணைச் சொல்லிக்கொண்டே காரைவிட்டு வெளியேவந்தேன். ஸ்ஸப்பா. காளவாய்ச் சூடு. வெளியே இறங்கிய கணம் குப்பென பொங்கிய வியர்வை. முகத்தில் பார்த்துப் பார்த்துச் செய்திருந்த அலங்காரமும் பௌடரும் உருகிக் கரைந்தன.
     நடை. நாளிது வரை எப்படியெல்லாம் நான் புறக்கணிப்பட்டு, நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறேன் என ஒண்ணொண்ணாய் மனசில் ஏற்றிக்கொண்டேன். என் கணவனுக்கு இன்னொரு தொடுப்பு என ஆரம்பித்த நாள் முதலே இந்தப் பொருமலும் புலம்பலும் ஆரம்பித்துவிட்டன, ஒரு சடங்கு போல. கசப்புகளை நான் என் குழந்தைப் பருவத்தில் இருந்தே தேடி என் புண்களைக் கீறிக் கொள்கிறவளாய் இருந்தேன். எப்போதெல்லாம் எப்படியெல்லாம் யார் யாரெல்லாம் என்னைத் துன்புறுத்தினார்கள். இப்படியாய்... நான் அவஸ்தைப்படவே பிறந்தவள். இதற்கு என் கணவன் ஒருவனையே குற்றப்பத்திரிகையில் தாக்கீது செய்து தாக்குவது தகாது. இதில் மற்ற சிகாமணிகளுக்கும் குறைவில்லாத பங்கு இருக்கிறது... என எனக்குள் சொல்லிக்கொண்டேன். அதாவது என் இந்த இம்சை எனக்கு மாத்திரமானது என்றோ, இவனால் எனக்கு மாத்திரம் நிகழ்த்தப்படும் கொடுமை என்றோ கொள்ளவேண்டியது இல்லை, என எனக்குள் சிறு ஆறுதல்.
     முதலில் எனக்கு ரெண்டோ மூணோ தான் நிகழ்வுகள் ஞாபகத்தில் தட்டின. ஆயினும் மெல்ல நினைவுகள் இன்னுமாய் தெளிவாகவும் ஆழமாகவும் என்னுள் உருவாக ஆரம்பித்தன. நான் சுத்தமாய் மறந்தே போன நிகழ்வுசுளே கூட உற்பத்தியானாப்போல மேல் அடுக்குக்கு வந்தன.
     கின்டர்கார்டன் பருவம். நடனம் ஆட என நாங்கள் ஜோடி சேர்கிறோம். எல்லாருக்கும் ஜோடி அமைய நான் மாத்திரம் துணை கிடைக்காமல் தனியே. கடைசியில் ஆசிரியருடன் சேர்ந்து நான் நடனம் ஆட வேண்டியிருந்தது. ரொம்ப அவமானமாய் இருந்தது. மத்ததை விட, ஒரு பள்ளி, அதில் ஒத்தைப்படை எண்ணிக்கையில் தான் பிள்ளைகள் படிக்குது, என்றால் என்ன ...த்துக்கு ஜோடி ஜோடியா ஆடுங்கன்னு சொல்லணும்? பள்ளிக்கூடத்தில் இன்னொண்ணு கூட நடந்தது. கல்விசுற்றுலான்னு கிளம்பிப் போகையில், போய்த் தங்குகிற விடுதியில் எனக்கு அறை எடுக்கவே விட்டுவிட்டார்கள். அட நாமதான் தப்பா பார்க்கிறோமா, என திரும்பவும் என் பெயரைத் தேடுகிறேன். அந்தப் பட்டியல், அதில் என் பெயர், ம்ஹும் இல்லை. ஆனால், இதை யாரும் வேணுன்னு பண்ணியிருப்பார்களா என்ன, அதெல்லாம் இருக்காது, என்று சொல்லிக்கொண்டேன்... ஆனால் மனம் சமாதானம் ஆக மறுக்கிறது. நான் அந்தச் சுற்றுலாவுக்கே போகாமல் விட்டுவிட்டேன். என் பேர் இல்லை என்பதானாலா? அல்ல. அன்றைக்குக் காலையில் நான் எழுந்தபோது... எனக்கு தொண்டை வலி!
     பதினைந்து வயதில்... அதிகமாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு... தற்கொலைக்கு எனக்கு வேண்டியஅளவு துக்ககரமான காரணம் இருந்தது அப்போது. என்ன அது, அது இப்போது ஞாபகம் வரவில்லை. வாழ்க்கையில் விரக்தி தட்டியிருக்கலாம். எது எப்படியோ, அன்றைய தினம் நான் மொத்தமாய் 18 மணி நேரம் தூங்கினேன். திரும்ப எழுந்துகொண்ட போது முழுசாய் நான் துக்கத்தில் இருந்து ¢மீண்டிருந்தேன். உடம்பே எடையற்றிருந்தது. கழுவிவிட்ட சுத்தமாய் இருந்தது மனம். அட நான் இறந்துவிட்டேனோ, என்ன மாற்றம் இது, என்றே நினைக்க வேண்டியிருந்தது. இதில் என்ன விஷயம் என்றால், என் குடும்பத்தில் நான் தற்கொலை முயற்சி செய்தேன் என்பதே யாருக்கும் தெரியாது!
     இது நேற்றைக்கு நடந்தது. சிகையலங்காரத்துக்கு நான் போயிருந்தேன். கூந்தல் பின்பகுதியை லேசா டிரிம் பண்ணுடின்னு அவளிடம் நான் சொன்னேன். அவளுக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை போல, வேண்டா வெறுப்பாய் க்ளிக் க்ளிக் என்று கத்திரியை சத்தம் பண்ணினாள்... எல்லாம் எனக்குத் தெரியும், என்கிறாப் போல. ரொம்ப வயசானவள் கூட இல்லை. குட்டி. தொழிலிலும் கத்துக்குட்டியாட்டம் தெரிந்தது. என்றாலும் என்ன ஆங்காரம்.

**
திரும்ப சுதாரிக்கிறேன். ஆகா, வழியை எங்கோ தவற விட்டிருக்கிறேன். நகர வரைபடத்தை நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் வந்தேன். இந்த கொதி வெயிலில் நகரமே கலைந்து கிடந்தாப் போலிருந்தது. ஒரு முக்கில் நான் திரும்பும் தோறும் அது எனக்குப் புதிய சந்தாகவே, ஞாபகத்தில் இருந்த சந்தின் அடையாளங்கள் அற்றிருந்தது. நடைபாதையின் சனங்கள் தெளிவற்றுக் கடந்தார்கள். பூனை ஒன்று பாதை நிழலில் சோம்பல் முறித்தது.
     கூரைகளின் வரிசை அப்படியே நீண்டு தூரத்தில் மணிக்கூண்டின் பின்பகுதி வரை போயிற்று. மணிக்கூண்டின் மணி ரெண்டு முறை அடித்தது கேட்கிறது. காற்றே அசையாத நாள் தான் என்றாலும் அந்த அதிர்வு ஒலி என் தலைக்குமேலே சுழன்று வந்து என் காதுக்கு இறங்கியது. அது அடங்கிய ஜோரில், என்ன இது நெடி. லேசான இனிப்புச் சுவையின் கடும் மணம். ஆனால் மூக்கைச் சுளிக்க வைக்கிற மணம் அல்ல அது. மூச்சை நன்றாக உள்ளிழுத்தேன். அப்படியே அந்த வாசத்தைப் பிடித்தபடி நடந்தேன். என்னவோ பாசி போல, என முணுமுணுத்துக் கொண்டேன்.
     அது ஒரு பெரிய கல்வீடு. இரும்பு மகாக் கதவு பாதி திறந்து கிடந்தது. பெரிய ஓக் மரத்தின் அபார நிழல்க் குளுமை. யோசிக்காமலேயே நான்பாட்டுக்கு உள்ளே நுழைகிறேன். வீட்டின் சன்னல்களைப் பார்த்தபடியே வீட்டைப் பார்க்க நடக்கிறேன். வீட்டைத்தாண்டி மேலப் பக்கமாய் வீட்டின் பின் கட்டை நோக்கி - வாசம் என்னை அழைத்துப் போனது.

     அருமையாய்ப் பராமரிக்கப்பட்ட அழகானதோர் தோட்டம். பாதையின் இரு மருங்கும் அழகாய்க் கத்தரிக்கப்பட்ட செடிகளின் அணிவகுப்பு. கொடிகளில் சில புஷ்பங்கள் இன்னும் பறிக்கப்பட்டாமல் மிச்சமிருந்தன. அரங்க நடுவே சுத்தத் தண்ணீர் ஊற்றாய்ப் பொங்கிச் சிதறுகிறது. ஜல ஜாலம். அந்த ஊற்றுக்கு அருகில்... தரையில் அப்படியே கால் அகட்டிப் படுத்தவாக்கில் ஒரு வேங்கை. அதன் முன் குனிந்தவாக்கில் பெரியவர் ஒருவர்.
     'என்ன பண்றீங்க ஐயா?'
     'வா வந்து பார்...' என்றார் அவர். அங்கே என்னைப் பார்த்ததில் அவர் வியப்பு எதுவும் காட்டவில்லை.
     'அது இறந்துட்டதா?'
     'இன்னும் இல்ல'. அவர் என்னைக் கிட்டே கைகாட்டி அழைக்கிறார்.
     ஊற்றுப் பக்கத்தில் காற்று ஜிலுஜிலுத்தது. சிறு பட்சிகளின் இசைக்குரல். நகரத்தின் அத்தனை வெக்கையும் திடுமென்று காணாமல் போனாப் போல.
     பெரிய வேங்கை அது. கல்திண்ணைக் குழிவில் அப்படியே நீட்டிக் கிடந்தது. கால்கள் துவண்டு கிடந்தன. பாதி திறந்த வாய். சிரமத்துடன் பலவீனமாய் மூச்செடுத்தது அது.
     'உடம்பு முடியல்லியா இதுக்கு?'
     'ம். இன்னும் ரொம்ப நேரம் இது தாளாது.' பெரியவர் மண்டியிட்டு அதன் பாதத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டார். அதன் அருகில் நான் நிற்பதில் எனக்கு பயமோ பதட்டமோ இல்லாத அளவில் அவர் இயல்பாய் நடந்துகொண்டார். இன்னுமாய் கிட்டத்தில் என்னை அழைத்தார். அந்த கடுங் கோடையில் முழுச் சொக்காய் சராய் போட்டிருந்தாலும் அவருக்கு வயிர்வைப்பாடே இல்லை போலிருந்தது. அந்த மேல்கோட்டு அழகாய்   இருந்தது. ஒரு கழுத்திறுக்கமான போ-டை. முத்துக் கங்கணங்கள். படிய வாரிய வெண்சிகை.
     அவர்பக்கமாய் நானும் மண்டிபோட்டேன். அந்த வேங்கையின் முதுகைத் தொடுகிற உந்துதலை என்னால் தவிர்க்க முடியவில்லை. அந்தப் பாசி நெடி... அது இதனிடம் இருந்துதான் வருகிறது போல. அந்த உடம்பின் கதகதப்பு. அந்த உயிரின் கதகதப்பு அது. இது வைக்கோல் கன்றுக்குட்டி போல இல்லை. நிஜம். கற்பனை வஸ்து அல்ல இது. என் உள்ளங்கையில் அதன் துடிப்பு தெரிகிறது.
     'யப்பா பெரிய உருவம் தான்...' கிசுகிசுத்தேன்.
     ம். ம்... என்றபடி அவர் தொடர்ந்து அதை வருடித் தந்தார். மரங்களில் கசியும் வெளிச்சத்தில் அதன் மஞ்சள், கரும் பட்டைகள் மினுங்கின. அழகழகான வரிகள், அதன் ஆகுருதி... எல்லாமே 'கன' கச்சிதம். சாய்ந்து சுருண்டிருந்தாலும் இதோ எழுந்து தாக்கிவிடுமாய்த் தோற்றம். அழுத்தமான பாதங்கள். அரைவை அரசனான தாடைகள். எட்டிப்பார்க்கும் கடவாய்ப் பற்கள். அதன் ஒவ்வொரு இம்மியும் ஒரு வேலைக்கானதாய்த் தெரிந்தது. வேட்டையாட அதற்கு உதவவென்றே வடிவமைக்கப் பட்டிருப்பதாய்த் தோன்றியது.
     'இது நீங்க வளர்த்ததா?'
     'ஆமாம்,' என்றார் அவர். மெலிதாய் அது முனகியபோது உடம்பெங்கும் ஒரு துடிப்பு அலை.
     'பாவம்' என்றேன் நான். அதை முதுகில் வருடுவதையே நான் கவனமாய்ச் செய்துகொண்டிருந்தேன். கெட்டித் தோல். மிருது. தொட சுகம். அதை வருடுந் தோறும் அதனிடமிருந்து அந்த பாசி நெடி உயர்ந்து காற்றில் பரவியது.
     'ம்... இப்ப பார்...' அவர் என்பக்கமாய் முதன்முறையாய்த் திரும்பி, புன்னகைத்தார்.
     வேங்கையின் காதுகள் தொய்ந்து விழுந்தன. நாக்கு தள்ளியது. அது மெல்ல அடங்க ஆரம்பித்தது. கடைசியாய் மிச்சமிருந்த சிறு தெம்புடன் மெல்ல பெரியவரின் பக்கமாய் அது அசைந்தது.
     'ம். இப்ப ஆயிரும்' என்றார் அவர். அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டார். தன் முகத்தோடு அதை அப்படியே உரசிக்கொடுத்தார்.
     தோட்டத்து ரோஜாக்கள் அசைந்தாடின. புல்வெளியில் பூச்சிகளின் கொட்டம். ஊற்றில் இருந்து பனித்தூவலாய் எங்கள் மேல் சிதறும் துளிகள்.
     அவர்களிடையேயான கடைசித் தருணங்களின் அந்தரங்கத்தில் நான் என்னை இடைஞ்சலாய் உணர்ந்தேன். 'நான் உங்களுக்கு....'
     'ஏன் அப்பிடிச் சொல்றே?' என்றார் அவர். நான் சொன்னதில் அவர் கொஞ்சம் வருத்தப்பட்டாப் போலிருந்தது. 'நீ கட்டாயம் எங்ககூட இருக்கணும். எங்ககூட வேணும் நீ.' அப்படியே அந்த வேங்கையை இரக்கம் சுரக்கப் பார்க்கிறார் ¢அவர்.
     அது மூச்சுவிட மேலும் திணற ஆரம்பித்தது. அதன் தொண்டைக்குள் கடமுடா. உலர்ந்த சொர சொர நாக்கு. அதை முதுகில் வருடித் தருவதை நான் நிறுத்தவேயில்லை. என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.
     அப்படியே அதை அவர் தன் முகத்தோடு தழுவிக்கொள்கிறார். வேங்கையின் கண்கள் திறந்து அவரைப் பார்த்தன. அவர் அருகிலேயே இருக்கிறார் என்று சிறு ஆசுவாசம் அதற்கு. கண்கள் திரும்ப மூடின.
     அந்த இரண்டு தேகங்களும் ஒன்று கலந்தன. அவர் கன்னம், அதன் தாடை. அவர் மார்போடு அதன் கழுத்து. பாதங்கள். கால்கள். அந்த போ-டையும் அதன் வரிகளுமாய்க் கலந்து கரைந்து ஓருருவாய். வேங்கை ஒருமுறை உருமியது. அதன் அதிர்வு அடங்க என் கைக்குக் கீழே அதன் துடிப்பும் அடங்கியது. கடவாய்ப் பற்களின் கிட்டிப்புகள் நின்றன. உள்ளாழத்தில் இருந்து இறுதி மூச்செடுத்தது வேங்கை. எங்கள் மேல் கவியும் மௌனம்.
     பெரியவர் இன்னுமாய் அதைக் கையில் வைத்திருந்தார். எத்தனைக்கு முடியுமோ அத்தனைக்கு சத்தமில்லாமல் நான் எழுந்தேன். மெல்ல அடிமேல் அடி வைத்து தோட்டத்தை விட்டு வெளியேறினேன்.
     கார்ச்சாவியைத் திருகுகிறேன். அப்படியே ஒரு விநாடி என் உள்ளங்கைகளைச் சோதித்துப் பார்க்கிறேன். நானும் அவருமாய் என்ன செய்தோம், நினைத்துப் பார்க்கிறேன். சாவியை முடுக்குகிறேன். திரும்பும் வழியில்... தக்காளிகள்... இல்லை. ஒன்றுகூட இல்லை.


*
The Last Hour of the Bengal Tiger
By Yoko Ogawa,
translated from the Japanese by Stephen Snyder


Monday, March 2, 2015

சைலபதியின் புதினம் - தேவன் மனிதன் லூசிஃபர்


*
மனிதத்தைத்
தேடிப் புறப்பட்டவனின்
கதை:
*

முனைவர் கு. ஞானகுரு
துணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, 
தாகூர் கலைக்கல்லூரி, புதுச்சேரி-8.
 * *
காலத்தின் அவசர கதிக்குள் அறங்கள் முகமிழந்துவிட்டன. சக மனிதர்கள், அவர்களின் உணர்வுகள், அவர்களுடனான உறவுக் கலப்புகள் இவை எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு காரணத்தைக் கண்டறிந்து விலகிவிடத் துடிக்கிறது மனித மனம். தனக்குள் தன்னைக் குறுக்கி தனக்கான உண்மைகளை நியாயப் படுத்தியபடி முன் நகர்கிறான் அவன். ஏற்கனவே சொல்லப்பட்ட பேருண்மைகளைக் கடந்து, தனக்கான வழிகளை உருவாக்கிக் கொள்கிறான் அவன். சமூகம் சிறக்க அவனிடம் எந்தத் திட்டமோ, அவாவோ, முயற்சியோ இல்லை. அவன் அதை விரும்பவும் இல்லை. நிறைவின்மையின் விளிம்பில்தான் எப்போதும் அவனின் நிற்றல் தொடர்கிறது. எல்லாத் தருணங்களிலும், எல்லாவற்றையும் விமர்சிப்பதனூடாக தேவனாகிவிட முடியும் என்கிற நம்பிக்கையில் திளைக்கிறான் அவன். ஆனால், அது எப்போதும் சாத்தியமாகாது. காலம் அவனுக்குப் பொறுப்பை உணர்த்தும் என விடை பகர்கிறார் சைலபதி.
* *


முன்னுரை:

இப்பெருவெளிப் பரப்பை நிர்க்கதியாக விட்டுச் செல்ல மனமில்லாத தேவன், மனித இனத்தைப் படைத்து, தனது பாவக் கணக்கைத் தொடங்குகிறார். உண்மையாக இருந்த லூசிஃபரை பாதாளத்தில் தள்ளியதன்மூலம், இப் பூவுலகில், நிரந்தரமாகப் பாவத்தை விதைக்கிறார். பல்கிப் பெருகிய பாவங்களுக்குத் தானே முன்வந்து, ரத்த சாட்சியாக மரித்து, மூன்றாம் நாள் உயிர்ப்படைந்து, மானுடம் மீண்டெழ, ஒரு நெடிய பயணத்தைத் தனது சீடர்களினூடாகத் தொடங்கி வைக்கிறார். ஆழமாக வேரூன்றி, பல கிளைகளாக விரிந்து, பலமாகக் கட்டப்படுகின்றன திருச்சபைகள். ஆனால், தேவன் நினைத்திருந்த தூய ரட்சிப்பும், மானுட அன்பும் இத்திருச்சபைகளாலேயே நசுக்கப்பட்டு, கேலிப்பொருளாகிவிடும் என்பதை அவர் ஒருபோதும் எண்ணிப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த அசாதாரணமான வெளியில், மனிதத்தைத் தேடிப் புறப்படுகின்றான் ஒருவன். அவனின் தேடலும், கண்டடைவுமே, ‘தேவன் மனிதன் லூசிஃபர்’ என்னும் படைப்பாக்கம்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பின்புலமாகக் கொண்டச் சைலபதி, சமூகத்தின் இடுக்கில் கோரைப் பற்களுடன் ஒளிந்துகொண்டு, கணத்திற்குக் கணம் மனித நேசிப்பைக் குதறிக் கொண்டிருக்கிற சமூக அவலத்தை, அதன் சூட்சுமங்களை, ஆரவாரமற்ற முறையில் அவிழ்க்க எத்தனித்ததன் வெளிப்பாடே இப்படைப்பு. நிறைவற்று, நிலையில்லாது நீண்டுகொண்டிருக்கும் மனிதத் தேடல்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடத்தைச் சுட்ட முனைகிறது இப்புதினம். அவன் தேட விழைவது எது? அது கண்டடையப் பட்டதா?... என்கிர வினாவிற்கு விடை பகர்வதை மைய நோக்கமாகக் கொள்கிறது இக்கட்டுரை.

மதம் என்கிர மனித எதிர்மை:

நிகழ்கால சமூக அரசியலில், மிகப்பெரிய மனித அழிவைக் கட்டவிழ்த்துள்ளவை மதமும் மத போதனைகளுமே. இறைவன் போதித்தவைகளாகச் சொல்லப்படுகிறவைகளுக்கு எதிரானவற்றையே மதவாதிகள் செய்கின்றனர். மனித நேயத்தைக் கிஞ்சிற்றும் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்க அவர்கள் தயாராக இல்லை. போலித்தனங்களையும், பொய் புரட்டுகளையும் அங்கிகரித்து, மெய்களை, தங்கள் அருகில் அண்டாமல், கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். இந்நிறுவனம் வலுப்பெற, எல்லோரும் சகலவற்றையும் தியாகஞ் செய்யத் துணியவேண்டும். கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை. அவரவர்களின் காணிக்கைகளுக்கேற்ப அளக்கப்படுவார்கள். பாவக் கணக்கு குறையும். இத்தகு சூழலில்தான், ஒரு பண்பாட்டுக் கலப்பினைக் கட்டமைப்பதனூடாக, மனித மீட்சியை மீட்டுவிட இயலும்  என்கிற உந்துதலை பக்குவமாக, பக்கச் சார்பற்றநிலையில், தன் புதினத்தின் மைய இழையாக்கியிருக்கிறார் சைலபதி.

உச்சபட்ச அவமானங்களை, ரணங்களை, வேதனைகளை, வலிகளைக் கடந்து, சகித்து தங்களின் வாழ்தலினூடாக மேம்பட்ட தேடல் உடையவனாக மனிதனை மாற்றிவிட வேண்டும் என்கிற முயற்சியில் இறுதிவரை போராடிப் பார்க்கிறார்கள் சைலபதியின் கதை மாந்தர்கள். ஆனால், வருவாய்ப் பெருக்கம் அதனூடான ஆலய விரிவாக்கப் பணிகளை முதன்மைப் படுத்தி, மனிதப் பண்படுத்தலை புறந்தள்ளுகிறது மதம். அதிகாரம் மிக்க தலமை பீடத்தைக் கைப்பற்ற, சாமானியர்கள், குற்றவாளிகளாக்கப்பட்டு, திருச்சபைகளுக்கு வெளியே தூக்கி எறியப்படுகிறார்கள். உண்மையை உரத்துப்பேச ஆலயங்களினுள் அனுமதி இல்லை. வெற்றுச் சடங்குகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மனித இறைநாட்டம் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இந்த சமூக ஒழுங்கின்மைகளை, மனித இருப்பின் அவலங்களை அம்பலப்படுத்த, பாஸ்டர் ஜீவானந்தம் என்கிற லட்சியக் கதைமாந்தரை, சாத்தான் என்கிற கற்பனைக் கதைமாந்தரை, ஹரி என்கிற யதார்த்தக் கதைமாந்தரை வார்க்கிறார் சைலபதி. இம் மூவரோடும் பிணைக்கப்பட்டிருக்கிற உறவுகளுடனான அவர்களின் ஊடாட்டங்கள், எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கண்டடையப்படும் தீர்வுகள் என விரிகிறது இப்புதினம்.

தேவன் எழுப்ப நினைத்த ஆலயம்:

மனிதனுக்குள் அன்பை விதைத்துச் சமாதானத்தை மலரச் செய்து, அதனூடான சமூக ஈடேற்றத்தினை எதிர்பார்த்தார் தேவன். ஆனால், அவரையே சிலுவையில் ஏற்றியது மனிதகுலம். இந்த இயேசு காவியத்தை எழுதிக் கொண்டிருக்கும் சாத்தான், தேவன் எழுப்ப நினைத்த ஆலையத்தின் உண்மைப் பொருளை உணர்ந்த மனிதராக பாஸ்டர் ஜீவானந்தத்தைப் பார்க்கிறான். நியாயமான உபதேசத்தின் காரணமாக திருச்சபையிலிருந்து குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு வெளியேறும் பாஸ்டர் ஜீவானந்தம், புதுச் சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருடன் பலமுறை உரையாடி, உண்மை ஊழியத்தின் மறைபொருளையும், அதன் இன்றைய தேவையையும்  அறிகிறான் அவன்.

“சாத்தான் தெரிந்தோ தெரியாமலோ நீ உண்மை ஊழியத்தின் சபைன்னு சொன்னியே! அதுதான் என் கனவு. ஆரம்பத்துல நிச்சயமா ஒருத்தர்கூட என்னோட போராட வருவாங்கன்னு நான் நினைக்கல. ஆனா இன்னைக்குப் பாத்தியா ஆறு பேரு! ஆறுபேரும் ஆர்வமா இருக்காங்க. என் ஜெபம் எல்லாம் ஆண்டவர் இவங்க கூட இருந்து இவங்க நல்ல மாதிரிகளா வரணும். இவங்களால அநேகம்பேர் நல்வழிக்குத் திரும்பணும். இந்த ஆறு பேர் ஆறாயிரம் பேரா மாறணும். இந்த நகரமே நல்லவர்களைக் கண்டு பயப்படணும். அதுதான் என் லட்சியம். நிச்சயம் இதை முன்வைச்சு ஒரு சபை வரணும். ஏன்னா ஏற்கனவே இருக்கிற அமைப்புகள்ள சில மாற்றங்கள் வேணும். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில இருக்கிற மதத்தைக் கொஞ்சம் பழுது பார்க்கணும். மதவாதிகளோட சட்டங்களைக் கொஞ்சம் கழட்டி ரிப்பேர் செய்யணும்.’
{பக் : 204.}

பாஸ்டர் ஜீவானந்தத்தின் மொழிகளோடு, தன் தந்தை கூறியவற்றையும் நினைவுபடுத்திப் பார்க்கிறான் சாத்தான்.


“மனுஷன மனுஷன் அன்பா நடத்துறதுதான் பிரதானம். மக்கள் மேல அன்பாயிருக்கிறது தான் ஊழியம்! சுயநலமில்லாம இருக்கிறதுதான் கிறிஸ்துவோட வழி! அநியாயத்தக் கண்டு பொறுத்துக்காம இருக்கிறது ஆண்டவரோட குணம்! அன்பு அன்புங்கிறோமே இயேசு சாமியே, சாட்டையை எடுத்து அடிச்சு விரட்டீயிருக்கார்! யார? அவரோட கோயில தன்னோட பிழைப்புக்காகப் பயன்படுத்தினவங்கள! அது மாதிரி  அக்கினியா இருக்கணும்.”
{பக் : 152.}

மேலும், பாஸ்டர் ஜீவானந்தம் விரும்பிய சமூக மாற்றத்தினை நிகழ்த்த, மனிதனை எவ்வாறு நகர்த்திச் செல்வது என்பதையும் பின்வரும் பகுதிகள் உணர்த்துகின்றன.

“இன்றைய காலத்தின் தேவை அன்பு ஒன்றுதான் சாத்தான். சகமனிதன் மேலான அன்பு. இந்த உலகத்தில் ஒருவன் பசியால் சாகையில் மற்றொருவன் சுகபோகங்களில் திளைக்கின்றானே! இது என்ன மாதிரியான மனநிலை. காட்டுவிலங்குகளுக்குச் சொல்லும் வலியதில் வலியது வாழும் என்கின்ற சித்தாந்தத்தை மனிதர்கள் கைக்கொண்டு உலகை ஒரு சுடுகாடாக மாற்றுவது எப்படி சரியாகும்?’ {பக் : 218.}

“மனிதர்களுக்குள்ளாக தேவனின் தன்மையும் லூசிஃபரின் தன்மையும் சாத்தானின் தன்மையும் இருக்கிறது. இந்தக் காலத்து ஊழியம் என்பது, மனிதருக்குள்ளாக இருக்கும் சாத்தானுக்கு எதிராக அவனுக்குள்ளாக மறைந்திருக்கும் தேவனை அறிமுகப்படுத்துவதுதான். சாத்தானிலிருந்து லூசிஃபர், லூசிஃபரிலிருந்து கர்த்தர் என ஒவ்வொரு கட்டமாக மனிதனை மாற்றுவது.’ {பக் : 219.}

இப்படியாக, மனிதருக்குள் இருக்கிற மனிதத்துவத்தைக் கட்டி எழுப்புகிற ஒன்றாகத்தான் மதம் செயலாற்றவேண்டும் என்கிற சலபதியின் எண்ணம் புலனாகிறது.

நெருக்கடியும் தேர்வும்:

வாழ்க்கையைச் சிக்கலில்லாமல் நகர்த்திச் செல்ல மனிதன் மேற்கொள்கிற முயற்சிகள், பல நேரங்களில், நெருக்கடிகளையே அவனுக்குத் தந்துவிடுகின்றன. நிரந்தர தப்பித்தலுக்கு வழிதேடி, அதில் தோற்று, அப்போதைக்கு மட்டுமான மார்க்கம் ஒன்றைக் கண்டறிந்து ஆசுவாசமடைகின்றான். மீண்டும் அச்சிக்கல் தலைதூக்க, அவன் அதுகாறும் பற்றியிருந்த அடையாளங்களை விடுத்து, இன்னொன்றைப் பற்றிக் கரையேற எண்ணுகின்றான். தேர்ந்தெடுப்பின் பிந்தைய விளைவுகள் குறித்த எந்தச் சலனமும் அற்றவனாக வாழ, தன்னைத் தயார் செய்துகொள்கிறான் அவன். ஆனாலும், நின்று நிதானிக்க, காலம் அவனுக்கு வாய்ப்பளிக்க மறுக்க, அங்குமிங்கும் முட்டிமோதி, உடைந்துநொறுங்கி, சுற்றிச்சுழன்று, தன்னிலையிழந்து தனக்கான மீட்பரைத் தேடுகின்றான். தனக்கான வழிகள் தன்னால்தான் அடைக்கப் பட்டன என்பதை அப்போதுதான் அவன் உணரத் தொடங்குகிறான். ஆனால், அவனை அவ்வாறு செய்ய ஊக்குவித்தவை, சமூக விழுமியங்களே என்பதை நாம் ஈண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அவற்றுள், சக்தி மிக்கதாகவும், கொடூரமானதாகவும் திகழ்வது மதம். தான் பற்றிய கொழுகொம்பினூடாக ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கும் மனிதனைத் தொடர்ந்து காயடித்துக் கொண்டிருக்கிறது அது.

மனிதக் கடைத்தேற்றலுக்காக அவனாலேயே உருவாக்கப் பட்ட அது, சத்தமின்றி அவனைக் கொன்றழித்துக் கொண்டிருக்கிறது. அன்பையும், நேர்மையையும், இரக்கத்தையும் தன்னுள் விதைத்து, தூய இருதயத்தை உறுதிப் படுத்துகிற ஒரு செயலியாக அது இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கை, அதன் உள்ளீடுகளால் தகர்க்கப் படுகையில், மனிதன் துவண்டு விடுகிறான். பிராமண இளைஞன் ஹரி, தனது வாழ்க்கயை ஏற்றமிக்கதாக அமைத்துக்கொள்ள, பழைய அடையாளங்களைத் துறந்து, கிறிஸ்துவத்தைத் தழுவுகிறான். அவன் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறது. ஆனாலும், அவனின் வறட்டுத்தனமான இறை நம்பிக்கை, தூய காதலை நிராகரிக்க உந்தித் தள்ள, நாளடைவில் மனப்பிறழ்வடைகிறான். அவன் அதுகாறும் நம்பியிருந்த ரட்சிப்போ, திருச்சபையோ அவனைக் காப்பாற்றவுமில்லை; கண்டுகொள்ளவுமில்லை. இந்நிலையில், உண்மையான மானுட அன்பைப் புரிந்துகொள்ள இயலா நிலைக்கு ஹரி தள்ளப்பட்டதன் பின்புலத்தை, மிக நேர்த்தியாகப் பதிவு செய்கிறார் சைலபதி.

“ஹரியிடம் நம்பிக்கையிருக்கிறது. காரணம் அவனிடம் இப்பொழுது பணம் இருக்கிறது. அவன் இவையெல்லாம் கர்த்தர் தந்தது என்று  நம்புகிறான். அவனுக்குச் சொல்லப்பட்ட போதனைகளும் அதுதான். கர்த்தர் அதைத் தருவார், இதைத் தருவார் என்று வளர்ந்த வைராக்க்கியக்காரன் ஹரி. ஆனால், கர்த்தர் மீதான அன்பு என்பது தனியான ஒன்று அல்ல. நாம் பார்க்கின்றவர்கள் மேல் செலுத்துகிற அன்பு. பழகுகிறவர்களிடம் வைக்கிற பாசம். இதெல்லாம்தான் என்பதை அவனிடம் யார் சொல்வது?” {பக் : 174.}

“பிரச்சனை ஹரியுடையதுமல்ல! கர்த்தருடையதுமல்ல! சபை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஊழியர்களுடையது! ஒரு சபையின் உறுப்பினன் அந்தச் சபையின் குடும்பத்து உறுப்பினன் இல்லையா? அவன்மேல் அக்கறையும் அடையாளமும் கொண்ட ஊழியக்காரர்கள் இருக்க வேண்டாமா! ஏற்கனவே இருக்கும் கிறிஸ்தவர்களையே கவனித்துக் கொண்டிருந்தால் புதிதாய் வருபவர்களை யார்தான் வழிப்படுத்துவது? வெளிப்படையாகப் பேசி சிக்கல்களைத் தீர்க்கும் அமைப்புகள் சபையில் வேண்டும். அப்படி ஒன்று வரும்போது ஹரி போன்றோரின் சிக்கல்கள் குறையலாம்.’
{பக் : 190.}

இவ்வாறு, மதத்தைத் தாண்டிய மனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் சைலபதியின் தேடல்/விருப்பம் புதினம் முழுமையும் ஓங்கி ஒலிக்கிறது.

கண்டடைவின் நிறைவின்மை:

காலத்தின் அவசர கதிக்குள் அறங்கள் முகமிழந்துவிட்டன. சக மனிதர்கள், அவர்களின் உணர்வுகள், அவர்களுடனான உறவுக் கலப்புகள் இவை எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு காரணத்தைக் கண்டறிந்து விலகிவிடத் துடிக்கிறது மனித மனம். தனக்குள் தன்னைக் குறுக்கி தனக்கான உண்மைகளை நியாயப் படுத்தியபடி முன் நகர்கிறான் அவன். ஏற்கனவே சொல்லப்பட்ட பேருண்மைகளைக் கடந்து, தனக்கான வழிகளை உருவாக்கிக் கொள்கிறான் அவன். சமூகம் சிறக்க அவனிடம் எந்தத் திட்டமோ, அவாவோ, முயற்சியோ இல்லை. அவன் அதை விரும்பவும் இல்லை. நிறைவின்மையின் விளிம்பில்தான் எப்போதும் அவனின் நிற்றல் தொடர்கிறது. எல்லாத் தருணங்களிலும், எல்லாவற்றையும் விமர்சிப்பதனூடாக தேவனாகிவிட முடியும் என்கிற நம்பிக்கையில் திளைக்கிறான் அவன். ஆனால், அது எப்போதும் சாத்தியமாகாது. காலம் அவனுக்குப் பொறுப்பை உணர்த்தும் என விடை பகர்கிறார் சைலபதி.

பாஸ்டர் ஜீவானந்தம் தாக்கப்பட்டு இறக்குந் தருவாயில், தனது புதிய லட்சிய சபையை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டு இறக்கிறார். அவனால்தான் அந்தச் சபையை வலுவாக வளர்த்தெடுக்க இயலுமென நம்புகிறார். கேள்விகளோடு தன் வாழ்க்கயை அதுகாறும் நடத்திவந்த சாத்தான், பெரும் பொறுப்பைச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். எதிர்பார்க்காத இந்த நிகழ்வு, அவனை தேவனாகும் முயற்சியில் கண்டிப்பாக உந்தவே செய்கிறது. அவனே இனி வெளிச்சமாகப் போகிறான் எனும்போது, நமக்கு ஏற்கனவே பழகிப்போன, சாத்தான் வேதம் ஓதுதல் என்கிற கருத்தாக்கம், இப்புதினத்தினூடாக சுக்குநூறாக்கப் படுகிறது.

காலம் காலத்துக்கான ஒரு மாதிரியை அவர் உருவாக்குகிறார். அவர்களோடு இருக்கிறார். அவர்கள் மரணத்திற்குத் துணிந்து மக்களின் விடுதலைக்காய் பாடுபடுவதற்குத் துணை செய்கிறார். அவர்கள் காலத்தில் அவர்கள் சாகவும் சாகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குப் பின் அவர்கள் போட்டுவைத்த வழியில் அநேகம்பேர் நடக்கிறார்கள். அது தேவனில் வழியாக இருக்கிறது.’
{பக் : 210.} என தனது இயேசு காவியத்தை நிறைவு செய்கிறான் சாத்தான்.


“சாத்தான் முடிந்தவரைக்கும் தான் மாறாமல் தன் இயல்பு மாறாமல் இருக்கப் பார்க்கிறான். எப்போதும்போல காலம் மட்டும் தான் தொடர்ந்து ஜெயிக்கும் ஆட்டக்காரன். சாத்தான் கேள்விகள் மட்டும் கேட்டுக் கொண்டும் பொறுப்புக்கள் ஏற்காமல் விமர்சித்துக் கொண்டும் வாழ்க்கை முழுமைக்கும் இருந்துவிட நினைத்தால் அது நடக்குமா?’ {பக் : 220.}

எல்லோருக்குமான வினாவாக இதை முன்வைக்கும் சைலபதி, தவறுகளிலிருந்து திருந்த ஒரு ‘மாதிரி‘ கிடைத்து அவன் முதல் அடி எடுத்து வைக்கிற பட்சத்தில், கண்டிப்பாக அவனைப் பின்தொடர மனித குலம் தயாராகும் என நம்பிக்கை வித்தைப் பதியமிடுகிறார். அத்துடன், கூர்ந்து அவதானித்துக் களையப்பட வேண்டிய மதத்தின் பின்னுள்ள அரசியலையும் தோலுரித்துக் காட்டுகிறார் சைலபதி.

முடிவுரை:

சமகால சமூக ஜனநாயகத்தில், அதிகார மையப் புள்ளியாகிப்போன மனிதத்தை நிராகரிக்கிர மதவாதத்தை, தனது புதினத்தின் கருவாக்கிக் கொண்டதன்மூலம், கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளியாகி விடுகிறார் சைலபதி. அவரின் ஆர்ப்பரிப்பற்ற சனாதனத்தின் குரலை புதினம் நெடுகிலும் கேட்க முடிகிறது. யதார்த்த வாழ்வின் இருண்ட தருணங்கள், கடக்கப்பட வேண்டிய, கிழிக்கப்பட வேண்டிய, எதிர்நீந்தி மீண்டேற வேண்டிய திறவுகோலாக மாறும் என்பதை உரத்துச் சொல்கிறார் சைலபதி. மனிதனுக்குத் தேவன் தரவந்த விடுதலயை லூசிஃபர் அளித்து அரவணைக்கிறான். அறிவாகிய வெளிச்சத்தை எல்லோருக்குள்ளும் கடத்திவிட வேண்டும் என்பது அவனது விருப்பமாக இருக்கிறது.

அவனது பயணம் நெடியது; முடிவற்றது. மனிதம் மனிதனைத் தாண்டி எங்கும் போய்விடவில்லை. அவனுக்குள்ளே அவன் அறியாதவாறு ஒளிந்துகொண்டுள்ளது. மதத்தின் பிடியிலிருந்து அதை மீட்டெடுக்க முயன்றதன் வெளிப்பாடே இப்புதினம். நேர்மையை, அன்பை, இரக்கத்தை முதன்மைப் படுத்திய பாஸ்டர் ஜீவானந்தத்தின் புதிய சபைக்கு வருபவர்களின் அதிகரிப்பு, மகத்தான மனிதத்துவம் மீளவும் மலரும் என்பதையே காட்டுகிறது.


புதினம்: தேவன் மனிதன் லூசிஃபர்,
எழுத்தாளர் : சைலபதி,
*
விலை : ரூ.150/பக்கங்கள் : 224. பதிப்பகம் : இராசகுணா பதிப்பகம்,
எண். 28, முதல் தளம், 36வது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர்,
புழுதிவாக்கம், சென்னை-600 091.