Friday, January 30, 2015

short story

*
ஈருடல் ஓருயிர்

எஸ். சங்கரநாராயணன்
(

தானறியாத அசதியில் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அதற்கு உடம்பு சரியில்லை. மூச்சு விடும்போதே நெஞ்சில் கர் புர்ரென்று சளிக்கட்டு கேட்கிறது. இருந்த சளிக்கு உடம்பில் சூடு அதிகப்பட்டு லேசான ஜுரம் வேறு.. இரவு நெடுநேரம் வரை கண் திறக்காமல் சிணுங்கிக் கொண்டே இருந்தது. மாத்திரையோ மார்பில் தடவிவிட்ட மருந்தோ பெரிதும் பயன்படவில்லை.

     எப்படியும் டாக்டரிடம் கூட்டிப் போனால் தான் சரியாகிறது. என்னதான் கைவைத்தியம் என்று போராடினாலும் டாக்டரிடம் போய் அவரது தட்சிணையை வைத்துவிட்டால் அநேகத்தரம் சரியாகி விடுகிறது. அவள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள். பத்து மணியளவில் தான் டாக்டர் வருவாள். நல்லவேளை. குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. அவள் விறுவிறுவென்று வீட்டு வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள். பத்துப் பாத்திரங்களே தேய்ககாமல் கிடந்தன. வீடே கூட்டவில்லை இன்னும். அவளுக்கே வீட்டைப் பார்க்கப் பிடிக்கவில்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் என்னவேலை ஓடுகிறது...  அதுவும் குழந்தைக்கு முழிப்பு வந்துவிட்டால் அது அழ ஆரம்0பிக்கிறது. பால் கொடுத்தால் வேண்டாம் என்று புறக்கணிக்கிறது. அம்மாவின் உடல்சூடே ஆறுதல் அதற்கு. அம்மாவை விடாமல் ஒட்டிப் படுத்துக்கொண்டு மார்பையோ புடவையையோ பிடித்துக் கொண்டு எப்படித் தூங்குகிறது… இன்னும் பேச்சு வரவில்லை. அதற்குள் என்ன சூட்சுமமாய் இயங்குகிறது.

     குழந்தை நன்றாகத் தூங்கும்வரை காத்திருப்பாள் அவள்.  குழந்தையின் தலையை ஆதரவாய்த் தடவிக் கொடுப்பாள். உச்சந் தலையைத் தடவத் தடவ சாதாரண நாளிலேயே அதற்கு தூக்கம் சொக்கும். அதன் பிஞ்சுக் கைகளில் இருந்து மெல்ல புடவையை உருவிக் கொள்வாள். அதற்கு சத்தம் கேட்காமல் அடிமேலடி வைத்து அந்த அறையைவிட்டு வெளியேறுமுன்… சட்டென்று உடல் பதற விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிடும். பொல்லாத போக்கிரிக் குட்டி! அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும். திரும்பப் போய் அந்தப் பூவை அள்ளிக் கொள்வாள். எப்போதும் அப்படிப் பக்கத்திலேயே இருக்க வேண்டும் அதற்கு. இதுபற்றி அவளிடம் ஒரு பெருமிதமான அலுப்பு இருந்தது.

     குழந்தையை விட்டுவிட்டு வேலைக்கு என்று இறங்கவே அவளுக்கு இஷ்டம் இல்லை. மூணுமாத பிரசவ விடுப்பு முடிந்து விட்டது. இனி சம்பளமில்லாத விடுப்பு தான், என்றானதும் அவள் வேலைக்குத் திரும்பப் போகவேண்டிய நிலை இருந்தது. அப்படியும் ஒரு மூணுமாதம் சம்பளமில்லாமல் வீட்டில் இருந்தாள். குழந்தை வளர்கிறதையும், அது முகம்பார்த்துச் சிரிக்கிறதையும் பார்க்கப் பார்க்க மனசெல்லாம் பாலாய்ப் பொழிந்தது அவளுக்கு. இப்போது சப்தங்களை கிரகிக்கவும் சிறு சப்தங்களை அதுவே உருவாக்கவும் பிரக்ஞை வந்திருந்தது அதற்கு. பசி என்றால் முன்பெல்லாம் தன்னைப்போல அழும். இப்போது பிரக்ஞைபூர்வமாய் அது அழுதது. அது அவளுக்குப் புரிந்தது. குழந்தை அழுவதைப் பார்த்ததும் பதறி என்ன கைவேலை இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு ஓடிவருவாள் அவள். அவள் கிட்டே வந்ததும் சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்கும் பார். என்ன சாமர்த்தியமாய் இருக்கிறது இது, என்று ஆனந்தத் திணறலாய் இருந்தது அவளுக்கு. வேண்டுமென்றே திரும்ப முகத்தை மறைத்துக் கொண்டால் திரும்ப அழ ஆரம்பிக்கும். ‘‘ஏய் கள்ளழுகைக் குட்டி!‘‘ என்று தூக்கிக்கொள்ளும் போது விரலைப் போட்டு குதப்பிக்கொண்டே சிரிக்கும். இதற்குத்தான் எத்தனை அறிவு என்று மனம் கிறுகிறுக்கும். ‘ஆமா அது ஆய் போனாக்கூட அத்தனை அறிவோடச் செய்யறதுன்னு உனக்குப் பூரிப்பு‘ என்று கிண்டலடிப்பார் இவர். இவருக்கு வேற வேலையென்ன!

     பசியற்ற நேரங்களில் தானறியாமல் அது சில சப்தங்களை எழுப்பும். கிர்ர்ர். பிறகு திரும்ப அந்த சப்தம் தொண்டையில் எப்படி உற்பத்தியாகிறது என்று கண்டுகொள்ள முயற்சி செய்யும். அதையே திரும்பத் திரும்ப அது சொல்லிப் பார்த்துக் கொள்ளும். அது சப்தங்களை உணர ஆரம்பித்ததும் அதை அவள் ஊக்குவிக்க ஆரம்பித்தாள். அதைப்பார்க்க குனிந்து அதே சப்தங்களை அவள் எழுப்பிக் காட்டினாள். அதே ஸ்தாயியில் அவளும் அதே சப்தத்தை குழந்தையைப் பார்த்து எழுப்பினாள். குழந்தை சிரித்தது. பின் உற்சாகமாய் சிறிது கழித்து அம்மாவை முகத்தைப் பார்த்தபடி அதே சப்தத்தை அது இழுத்தது. கிர்ர்ர். ரொம்பப் பேசத் தெரிந்தாற் போல பாவனை அதற்கு. அவளும் திரும்ப அதே சப்தத்தை எழுப்பி எழுப்பி அதைப் பேச வைத்தாள். சுற்றிலும் உலகமே அப்போது அவளுக்கு மறந்து போயிருந்தது. குழந்தையோடு விளையாடுவது பரவச போதையாய் இருந்தது.

     பிறகு அவள் இந்த சப்தங்களை குழந்தைக்கு மாற்றிக் காட்டினாள். கிர்ர்ர். அதை சற்று நீட்டி இழுத்துச் சொன்னாள். கொஞ்சம் குழம்பி, ஆனால் குழந்தை சட்டென்று அதை உடனே உள்வாங்கிக் கொண்டது. அதுவும் சிறிது நேரத்தில் அதே சத்தத்தை வெளியேற்றியது. அம்மாவுடன் பெரிதும் பேசுகிறதாய் அதற்கு எண்ணம். பெற்றவளுக்கோ வானத்தில் மிதக்கிற பிரகாசம். இப்போது அவள் கிர்ர்ர்ர்ர் என்று சத்தம் இழுத்து விட்டு உடனே சட்டென்று சுருக்கி கிர் என்று அதன்முன் குனிந்.து நிறுத்தினாள். சிறு அதிர்ச்சி தருவதைப் போல. பயமற்ற சிறு அதிர்ச்சி. முதலில் விக்கென்று விக்கி உடனே மீண்டு அது சிரித்தது. குழந்தை சிரிக்கிறபோது அதன் முகமெல்லாம் கண்ணெல்லாம் கன்னமெல்லாம் அந்தச் சிரிப்பு வழிந்தது. கெக் கெக் என்ற அவளது சிரிப்புச் சத்தம் அறைகளை நிறைத்தது. சிரிப்பு ஓய்ந்ததும் திரும்ப அம்மா அந்த அதிர்ச்சியைத் தரமாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன் அம்மாவைக் குறிப்புப் பார்வை பார்த்தது. இந்தக் குட்டி மூளைதான் எத்தனை குறும்பாய் ஊடாடுகிறது! திரும்ப அதை அவள் செய்தாள். கெக் கெக் என்று குழந்தை வயிற்றை எக்கிச் சிரிக்கிறது. இதை ரசிப்பதில் குழந்தைக்குக் கொஞ்சம் ஆர்வம் வற்றுகிறாப் போலிருந்தால் அவள் இப்போது குழந்தைக்குப் பழகிவிட்ட அந்த அதிர்ச்சியைத் தந்தபடியே, அதன் தொப்பையை அமுக்கிக் கொடுத்தாள். கூச்சம் தாளாமல் குழந்தை உற்சாகப்பட்டு திரும்பச் சிரிக்க ஆரம்பித்தது.

     எல்லா விளையாட்டும் ஓய்ந்து குழந்தை சோம்பிக் கிடந்தது பார்க்க சகிக்கவில்லை. ஒருநாள் முழுக்க ஜுரம். கைவைத்தியத்துக்குக் கட்டுப்பட்டு விடும் என்றிருந்தது பிசகோ என்று பட்டது. அவளுக்கு வருத்தமாய் இருந்தது. நேற்றே டாக்டரிடம் கூட்டிப் போயிருக்கலாம். அம்மா பார்த்துக்கொள்வாள் என்று குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு அங்கிருந்து… நேரமாகி விட்டது… ஆட்டோ பிடித்து அவள் அலுவலகம் போனாள். அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. அம்மா வீட்டில் போன் இல்லை. பேசவும் முடியாதிருந்தது. செல் வாங்கிக்கொள்ளவில்லை அம்மா. அவள் அந்தக்கால மனுஷி. வாங்கிக்கொடுத்தாலும் தூக்கி வைத்துவிடுவாள்… அம்மாவிடம் குழந்தை பற்றி தகவல் கேட்கவும் முடியாதிருந்தது. அதற்கு ரொம்ப முடியவில்லை என்றால் அம்மாவை பக்கத்துப் பலசரக்குக் கடை பிசிவோவில் இருந்து கூப்பிடச் சொல்லிச் சொல்லியிருக்கிறாள். பிசிவோ எண்ணையும் வாங்கிவைத்துக் கொண்டிருந்தாள்.

     அவள் படும்பாடு, அம்மாவுக்கு எல்லாம் வேடிக்கை போலிருந்தது. “சளிக்கட்டு தாண்டி. அதுக்கு இந்த அலட்டல் அலட்டிக்கறியே…“ என்று புன்னகைத்தாள். சட்டென்று அம்மாமேல் கோபம் தான் வந்தது. சமாளித்துக் கொண்டாள். இப்போது அவள் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன் என்று உதவிசெய்கிற நிலையில் அவளால் கோபித்துக்கொள்ள முடியாது. இவர்கள் எங்களையெல்லாம் வளர்த்த முறை தெரியாதாக்கும், என்ற ஆத்திரம் உள்வெம்மையாய்ப் பரவியது. எனக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது… அவள் சிறிது மூச்சு வாங்கிக்கொண்டாள். ஒருவேளை அம்மா சொல்வது உண்மையாய் இருக்கலாம். அவள் தனக்குள் புன்னகை செய்துகொள்ள முயன்றாள். கல்யாணம் ஆனதும் எப்படி வேறாளாய்ப் போனேன்… அம்மாவிடம் தொப்புள்கொடி அறுத்துக் கொண்டாற் போல பிரமை சூழ்ந்தது. என்னுலகம் கிளை பிரிந்துவிட்டது. என் ஞாபகங்கள் பிரக்ஞைகள் கிளை பிரிந்துவிட்டன. ஆ, கைக்குழந்தையின் முன்னால் கணவன் பற்றிய கவனங்களே ஒருமாற்று குறைந்து தான் போனது! அது உண்மைதான்.

     அலுவலகத்தில் அவளுக்கு பக்கத்து சீட் சியாமளாவுடையது. அவள் குழந்தைக்கு எட்டு மாதமாகிறது. குழந்தையை அலுவலகம் எடுத்துக்கொண்டு வந்துவிடுவாள். கீழே க்ரீச் இருக்கிறது. அங்கே விட்டுவிட்டு அவ்வப்போது போய்ப் பார்த்துவிட்டு வரலாம். அதற்குப் பசிக்கிற நேரம்பார்த்துப் போய்ப் பால் கொடுத்துவிட்டு வரலாம். குழந்தையின் நியதிகள் அவளுக்குத் தெரியும். டைப் அடித்துக்கொண்டே யிருப்பாள். இப்ப மூச்சா போயிருக்கும், ஆயா துணி மாத்தினாளோ இல்லையோ… என்று எழுந்துபோய்ப் பார்த்துவிட்டு வருவாள். மேலேயிருந்து போன் பண்ணி குழந்தைக்கு பிஸ்கெட் எடுத்துத் தரும்படி சொல்வாள்.

     இப்படி போன் அழைப்புகள் ஆயாவுக்கு எரிச்சல் ஏற்படுத்தும். தெரியும். தன் வேலைகளை இன்னொரு நபர் நினைவு படுத்துவது யாருக்கும் உவக்காதுதான். தவிரவும் அங்கே சியாமளாவின் குழந்தை மாத்திரம் அல்ல, நிறையக் குழந்தைகள் இருக்கின்றன. ஆயாவுக்கு இருப்பதோ இரண்டு கைதானே? எத்தனை வேலைதான் செய்ய முடியும்? எப்பவாவது ஆயாவுக்கும் சியாமளாவுக்கும் இதைப்பற்றி வாக்குவாதம் வருவது உண்டு.

     “எது சொன்னாலும் உனக்கு எரிச்சல் வருது ஆயா. உனக்குக் கொஞ்சம் பொறுமை வேணும்“ என்றாள் சியாமளா.

     “உங்களுக்கும்…“ என்று அப்போது ஆயா பதில் சொன்னாள்.

     எல்லாம் இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பேச, யாருக்குப் பரிந்துபேச தெரியவில்லை. நாளைக்கு ஆயாவிடம் நானும் குழந்தையை ஒப்படைத்தால் இவள் சரியாய்ப் பார்த்துக்கொள்வாளா, என்கிற கவலைதான் அப்போது மனசில் வந்தது.

     “எத்தனையோ ஆயா பாத்தாச்சி. நம்ம க்ரீச்சுக்கு ஒரு நல்ல ஆயா கிடைக்க மாட்டேங்கறாளே…“ என்றாள் சியாமளா இவளைப் பார்த்து. லேசாய்த் தலையாட்ட ந்னைத்து மௌனமாய் அவளையே பார்த்தாள் இவள். “ஆமா, இந்தச் சம்பளத்துக்கு வேற எவ வேலைக்கு வருவா?“ என்று ஆயா முதுகுக்குப் பின் முணுமுணுப்பது கேட்டது.

     குழந்தையைத் தானும் க்ரீச்சில் போட்டுவிடும் யோசனை நேற்று ராத்திரி பூராவும் தோணிக்கொண்டே யிருந்தது. ஜுரம் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆயாவே ஜுர சமயம் குழந்தைகளைக் கொண்டுவர வேண்டாம், என்பாள். அது மத்த குழந்தைகளுக்கும் பரவி விடக் கூடாது, என்பது ஆயாவின் கவலை. அது சரிதான்.

     அம்மா பெரியண்ணாவுடன் இருந்தாள். அவன்வீடுதான் எப்பவும் அவளுக்கு ஒசத்தி. “இங்கவந்து ரெண்டுநாள் இரு“ என்றால் இருக்கமாட்டாள். அங்கேதான் அவளுக்கு ஒட்டுகிறது. மாப்பிள்ளை முன்னால் இங்கே அவள் வேற்று மனுஷியாய் சங்கோஜப்பட்டாப் போலிருந்தது. மருமகளை இப்படி அவள் ஏனோ நினைக்கவில்லை! அம்மா காபி சாப்பிடும் போது மாப்பிள்ளை எதிரே வந்தால் சட்டென எழுந்து நின்று முந்தானையை இழுத்துப் போர்த்திக்கோள்வாள். அத்தனை மரியாதை. அவளையும் மாப்பிள்ளையையும் ஒண்ணாய் உட்கார்த்தி வைத்துச் சாப்பாடு போடுகிறாள். ஆனால் ஒருநாளும் கூடஉட்கார்ந்து சாப்பிட மாட்டாள். “ஏம் மாமி நீங்களும் கூட உட்கார்ந்திடலாமே“ என்று இவர் சொல்லத்தான் செய்கிறார். கூச்சத்துடன் சிரிக்கிறாள் அம்மா.

     அம்மா இந்தவயதிலும் வெட்கப்படுவது என்னவோ போலிருக்கிறது. எங்களுக்கெல்லாம் இப்பவே அந்த சபைக்கூச்சம் இல்லாமலாச்சு. படித்தது, வேலைக்குப் போனது என்று பெண்கள் சற்று பெரிய சுற்றாய் வளைய வருகிற காலம் இது- மதியங்களில் கூட அலுவலகத்தில் ஆண்களோடு சேர்ந்து அரட்டை அடித்தபடி சாப்பிடுகிறார்கள் பெண்கள்.

     கல்யாணம் ஆன புதிதில் மனம் இப்படி அம்மாவைத் தேடவில்லை, என்ற நினைப்பு திடீரென்று எழுந்தது. அப்போதெல்லாம் தனிமை வேண்டியிருந்தது. அவளும் கணவனும் மாத்திரமேயான உலகம் ஆனந்தமாய் இருந்தது. குழந்தை பிறந்ததே பெரியண்ணா வீட்டில் தான். சிறிய நகரத்துவீடு. வாடகைவீடு. அத்தனை ஜனம் அங்கே இருக்க சிரமந்தான். தண்ணிக் கஷ்டம் வேறு. இவர்தான் வரும்போதெல்லாம் “நம்ம வீட்டுக்கு வந்துரு. நம்ம வீட்டுக்கு வந்துரு“ என்று தவித்தார். சீமந்தம் முடிந்த ஒருமாதத்தோடு அம்மா அவளைத் தன்னுடன் வரும்படி சேர்த்துக் கொண்டாள். அதிலிருந்து மனுசன் ‘பட்டினி‘. அதுதான் கிடந்து தவிக்கிறார், என்று சிரிப்பு வந்தது.

     “தனியா நான் எப்படிக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியும்?“ என்றாள் அவள்.

     “உங்க அம்மாவும் வந்து நம்மகூட இருக்கலாமே?“ என்று இவர் யோசனை சொன்னார்.

     “அவ இங்கியே என்னை இருக்கச் சொல்றா“ என்றாள் அவர் கன்னத்தைத் தடவிக் கொடுத்தபடி. அவர் “சிரிக்காதே. நான் உங்க அண்ணனோட பேசறேன்“ என்றார். அவர் ஒரு கணக்குப் போட்டார். அடேயப்பா, எல்லாரும் அவரவர் தேவை என்று எப்படியெல்லாம் கணக்குப் போடுகிறார்கள், என்று ஆச்சர்யமாய் இருந்தது அவளுக்கு. பெரியாண்ணாவும், இவள் பிரசவம் என்று வந்து உட்கார்ந்ததில் தனிமைக்குத் தவித்திருப்பான். ஆக அம்மாவை அழைத்துப் போக மாப்பிள்ளைக்குச் சம்மதம் கிடைத்துவிடும், என்பது அவர் கணக்கு.

     “அம்மா நீ வேணா கொஞ்சநாள் ருக்மணியோட இருந்துட்டு வாயேன்?“ என்றான் ராஜாமணி. அம்மா அவனைப் பார்த்தாள். பிறகு காலண்டரை எடுத்து வைத்துக்கொண்டு இவள் புறப்பட் ‘நல்ல நாள்‘ பார்க்க ஆரம்பித்தாள்.

     அண்ணாவுக்கு இரண்டு குழந்தைகள். அவைகள் தான் பாட்டி கிளம்பிப் போவதற்கு முகம் சுண்டின. “போய்ட்டு இன்னும் ஒருமாசம் ரெண்டுமாசத்ல வந்துர்றேண்டி கண்ணுகளா. நீங்க நன்னாப் படிக்கணும்.கேட்டதா?“ என்று குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள் பாட்டி.

     அவள் கிளம்பி வந்தவுடன் கணவனுக்கு போன் பண்ணினாள். வீட்டில் இங்கே போன் இருக்கிறது எத்தனை சௌகர்யம். அவரே வந்து கூட்டிச் செல்வதாய்த்தான் இருந்தது. அலுவலகத்தில் யாரோ ‘வி.ஐ.பி‘ வருவதாக அழைப்பு வந்து போய்விட வேண்டியிருந்தது. “ஆட்டோ பிடிச்சி வந்துரு. வந்த உடன்னே எனக்கு போன் பண்ணு“ என்று சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

     அன்றைக்கு சாயந்தரம் இவர் வரும்போதே மல்லிகைப் பூ வாங்கி வந்தார். அதைப் பார்த்ததும் “ஓகோ சாருக்கு மல்லிப்பூ வாரமா?“ என்று கிண்டல் செய்ய வாய் வந்தது. பக்கத்தில் அம்மா, என்று மௌனம் காத்தாள். அம்மா ஒரு பார்வை பார்த்தாள். எதோ சொல்ல நினைத்தாள். மாப்பிள்ளை அதை கவனித்து விட்டார்.

     “என்ன மாமி?“ என்று கேட்டார் அவர்.

     அம்மா இழுத்துப் போர்த்திக் கொண்டு எழுந்து நின்றாள். இவள் முகத்தைப் பார்த்தபடி “இல்ல. பச்ச உடம்பு. அதோட இந்தச் சமயத்ல மல்லிப்பூவெல்லாம் வேணாம். குழந்தைக்கு அந்த வாசனைல்லாம் ப்டாது...“ என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

     மாப்பிள்ளை முகம் அசடு வழிந்தது. “சாமிக்குப் போடுங்கோ“ என்று சாமி படத்தின் முன்னே பூவை வைத்துவிட்டு அவர் உள்ளே போவதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. காபி கொடுக்கப் போனபோது அருகே இழுத்துக் கொண்டார்.

     “சுவாமிக்கு மல்லிப்பூ வாரமா?“ என்று கேட்டாள் ருக்மணி.

     “இல்ல. உங்கண்ணாவுக்கு…“ என்றபடி அவர் பெருமூச்சு விட்டார்.

     சொன்னபடி இரண்டு மாதத்துக்கு மேல் அம்மாவுக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. அண்ணாவீட்டுக்குக் கிளம்பியே விட்டாள். ஆத்திரமாய் வந்தது. இவரே தாள மடியாமல் “ஏம் மாமி இருந்துதான் போங்களேன்?“ என்று சொல்லிப் பார்த்தார். “இல்ல. எப்பிடியும் ருக்கு இன்னும் மூணு மாசம் லீவு போடறா. குழந்தையும் கொஞ்சம் பெரிசாயிட்டது. தனியே குளிப்பாட்ட கொள்ள இவளுக்கு முடியறது. ஆத்திர அவசரம்னா கூப்பிடுங்கோ. வந்து பாத்துட்டுப் போறேன். அங்க ஜமுனாவும், வேலைக்கும் போயிண்டு குழந்தையும் வெச்சிண்டு திண்டாடறாளோல்யோ. குழந்தைக்கு முடியலன்னா தகவல் சொல்லுங்கோ. அல்லது அங்க வந்துருங்கோ. எப்படியும் டாக்டர் அங்கதானே இருக்கா?“ என்று அம்மா இவளைப் பார்த்தபடியே பேசினாள். அதற்குமேல் அம்மாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

     அம்மாமேல் அப்போது அவளுக்குக் கோபம்தான் வந்தது. என்றாலும் தனியே தானே குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், இவளை எதிர்பார்க்கக் கூடாது, என்கிற வீம்பும் வந்தது கூடவே. முதலில் தனியே குழந்தையைப் பார்த்துக்கொள்வது சிரமமாய்த்தான் இருந்தது. எதிர் ஃப்ளாட் மாமியிடம் அம்மா கூடமாட அத்தியாவசியத்துக்கு உதவும்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத் தான் கிளம்பினாள்.

     தனியே தானும் குழந்தையுமான நாட்கள் அற்புதமாய்த்தான் இருந்தது. குழந்தை தூங்கும்போது தூங்கி அது எழுந்துகொள்ளும் போது எழுந்துகொள்ள வேண்டியிருந்தது. அதற்குத் தூக்கம் வர0வில்லை என்றால் இரவெல்லாம் கொட்டமடித்தது. இப்போது குழந்தை வெளிச்சம் பார்த்து சிரிக்க ஆரம்பித்திருந்தது. வெளிச்சம் அதைப் பரவசப் படுத்தியது. பார்வை கவனக்குவிப்பு இல்லாமல் அது வெளிச்சத்தையே பார்த்தவண்ணம் இருந்தது. இப்போது பார்வை நிலைகொள்ள ஆரம்பித்தது. தன்னைப்போல் அதன் உலகம் விரியத் துவங்கியது, பாராசூட் விரிந்தாப் போல! காதுகளுக்கு ஒலிகள் பழக ஆரம்பித்திருந்தன.

     மகாலெட்சுமி என்று குழந்தைக்குப் பெயர் வைத்தாலும் எப்படியோ எல்லாக் குழந்தைக்கும் போலவே அதற்கும் தன்னைப்போல பட்டப்பேர் அமைந்துவிட்டது. ஜுஜு. இப்போது ஜுஜு என்ற அழைப்புக்கு அது திரும்பிப் பார்த்தது. அது தன் பெயர்தான் என்று அதற்குப் புரிந்தாற்போல் இருந்தது. ஒலிகளைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது அது. கைகால் அசைப்பு பற்றிய கவனங்களும் அதற்கு வந்திருக்கலாம். இதெல்லாம் எங்கே எப்படித்தான் அது கற்றுக்கொள்கிறதோ என்றிருந்தது. உடனே “பகவானா?“ என்று இவர் கிண்டலடிப்பார்.

     இன்றைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டதில் சற்று ஆசுவாசமாய்க் கிளம்பலாம், என்று அவள் நேரங்கழித்து எழுந்துகொண்டாள். இரவெல்லாம் தூங்க முடியாமல் அவதிப்பட்டது குழந்தை. நெற்றியில், நெஞ்சில், மூக்கைச் சுற்றியும் என்று அம்மா சொன்னபடி அவள் சுண்ணாம்புப் பத்து போட்டாள். துர்நீரை அது இழுத்துவிடும். ஆரத்தி கரைத்தாப் போல சிவப்பாய்ப் பத்து. அதைப் பார்த்ததும் இவளுக்குத் திகைப்பாய் இருந்தது. “மகாலெட்சுமின்னு அழகாப் பேர் வெச்சிட்டு, துர்க்கையாட்டம் ஆக்கிப்பிட்டியே?“ என்கிறார் இவர். குழந்தைக்கு உடம்பு சரியில்லை, இப்படி பட்டுக்கொள்ளாமல் பேசுகிறாரே, என்று ஆத்திரமாய் வந்தது அப்போது.

     “நான் இங்கே தனியா ஒரு மனுஷி அல்லாடறேன். வேடிக்கையா இருக்கு உங்களுக்கு“ என்கிறபோது கண்ணீர் கொட்டிவிட்டது. “ஐம் சாரி. வேணா இப்பவே டாக்டர்கிட்டே காட்டிறலாம். இப்ப மணி என்ன? எட்டரை. பரவால்ல. போலாம். வண்டில பின்னல உட்காருவியா?“ என்றவர் குழந்தையைப் பார்த்துவிட்டு “இந்த பத்தெல்லாம் அழிச்சிட்டு வரணும்“ என்றபோது சிரிப்பு வந்துவிட்டது. இந்த ஆம்பிளைங்களிடம் ரொம்ப சிரித்துவிடவும் கூடாது. குழந்தை தூங்கிட்டதா, என்று பார்த்துவிட்டு “நீ என்ன டயர்டா இருக்கியா?“ என்று தோளில் அழுத்துவார்.

     வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மணி பார்த்தாள். பத்து. எதற்கும் டாக்டர் இருக்கிறாளா, என்று போன் பண்ணி சரிபார்த்துக் கொண்டாள். “வாங்களேன்?“ என்று டாக்டரே எடுத்துப் பேசியது ஆறுதலாய் இருந்தது. விறுவிறுவென்று குளித்து புடவைக்கு மாறினாள். கண்ணாடி பார்த்து நெற்றியில், உச்சி வகிட்டில் குங்குமம் வைத்துக்கொண்டாள். பவுடர் தீற்றி யிருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டாள். சிறிது பர்ஃப்யூம் அடித்துக் கொண்டாள். திரும்ப முகம் பார்த்துக் கொண்டாள்.

     அதுவரை குழந்தை எழுந்துகொள்ளவே இல்லை. சிணுங்கவே இல்லை. அமைதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தது. அதைத் தூக்கி ஈரத் துண்டால் துடைத்து விட்டபோது குழந்தைக்கு நன்றாக வியர்த்திருந்தது. ஜுரம் விட்டிருந்தது. சளி அடங்க ஆரம்பித்து அந்த கர்ர் புர்ர் நெஞ்சடைப்பு இல்லை. அவளுக்குத் திருப்தியாய் இருந்தது. பத்து போட்டது நல்ல விஷயந்தான். திரும்ப மணி பார்த்தாள்.

     வேலைக்குக் கூட போய்விடலாம். பெர்மிஷன் சொல்லிவிடலாம் என்றிருந்தது. அதற்குள் குழந்தை விழித்துக்கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தது. “அடிக் குஞ்சலமே“ என்று முத்தமிட்டாள் அதை. திறந்து மார்பைக் காட்டினாள். தட்டாமல் பால் குடிக்க ஆரம்பித்தது குழந்தை.

     அம்மாவிடம் விட்டுவிடலாமா, க்ரீச்சில் விடுவதா, என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
**

+ 91 97899 87842

Monday, January 26, 2015

WAR
Fight for no man’s land
Before and after

5140
எஸ். சங்கரநாராயணன்

ங்க பகல்லியே பாலில் ஆடை கட்டினாப்போல வெயில். நம்மூரில் நிலாப்போல இங்கத்திய சூரியன். ஏந்திக் குடிக்க முடிஞ்சா எத்தனை ருசியாய் இருக்கும் என்று கிடந்தது. ராத்திரி பனிப்பொழிவு கடுமையாய் இருந்தது. சும்மாயில்லை... கடல்மட்டத்தில் இருந்து பதினைந்து பதினாறாயிரம் அடி உயரப்பகுதி என்கிறார்கள். அந்த மலைக்குப் பேர் கிடையாது. மனித நடமாட்டமே இல்லாத எல்லை வளாகம். பூகோளக் குறியீடா அதுக்கு எங்களிடம் 5140 என்று பெயர். மலையில் உயரம் அது. 5140 மீட்டர்.

பகலில் எதிரி முகாமை நோக்கி மேலேறிப் போக முடியாது. அவனுங்க மே...ல இருந்தாங்க. நம்மாளுங்க மேலேறி வரவர சுட்டுத் தள்ள சவுரியமாப் போச்சு. மலையானா நேர் செங்குத்து. குத்திக் குத்தி ஊனிக்கிட்டு ஏறணும். கை விட்டுப் போவும்லா. எங்க ஆபிசர் சொல்றமட்டும் நிக்காமக் கொள்ளாமல் ஏறிட்டே போகணும். இடைல ஒய்வெடுக்க இயலாது. எல்லாரும் ஒரேபோக்கில் முன்னே போறதுதானே நல்லது? அவசரப்பட்டு முன்றேர்றவன் முதல்ல மாட்டிக்குவாப்ல. அது சாவை நோக்கி முன்னேறினா மாதிரி ஆயிப்போகும். அதோட இல்ல விவகாரம்... அடுத்தடுத்து வர்றாளுகளையும் அவன் மாட்டி விட்ருவான். எதிரி உஷாராயிருவானில் ?

மெல்ல இருள் திரள மேலேறணும். கொட்டும் பனி. மைனஸ் நாற்பது டிகிரின்னா பாத்துக்கலாம் நீங்க. அதுல ஏறணும். ஒரு சத்தம் இருக்காது. எப்பவாவது குண்டு வந்து விழும். அல்லது ஆபிசர் சொன்னாக்க நாங்க சுடுவம். அங்கேர்ந்து அடிச்சான்னா குண்டு வர்ற ஃபோர்ஸ் கீழ விழ விழ அதிகமாகும்ல... நாங்க மேலபாத்து அடிக்கிறோம். வெளிச்சமே கிடையாது.

அவனுங்க அப்பப்ப வானத்ல தீபாவளி மாதிரி பட்டாசு போடுவாங்க. அந்த இடமே கண்ணை அடைக்கிறா மாதிரி ஒரு வெளிச்ச அப்பல். என்ன வெளிச்சம். என்ன வெளிச்சம்... அந்த வெளிச்சத்தில் எங்களைக் கண்டு குண்டடிப்பான் எதிரி. பூமியே அதிரும். நம்ம கூட வந்திட்டிருக்கிற பார்ட்டில ஒராளோ நிறையப்பேரோ குண்டுல மாட்டிக்கிட்டு சாகலாம். எதைப்பத்தியும் கவலைப்பட முடியாது. வசம் கிடைச்சா பதுங்கு... மேஜர் சார் சொன்னா மேல மேலன்னு ஏறிட்டே போகவேண்டிதான்.

என்ன முக்கியமான விசயம்னா பக்கத்ல இருக்கிறவன் செத்தான்னா கவலைப்பட நேரம் கிடையாது. ஐய இத்தனைநேரம் கூடப் பேசிட்டே வந்தானே... நேத்து ஒண்ணா ரம் அடிச்சமேன்னு யோசிக்க முடியாது. அந்தப் பனிக்கு உடம்பு விழுந்தமேனிக்கு அப்டியே கிடக்கும். பிற்பாடு வந்து அந்த உடலை எடுத்துக்குவாங்க. பனி மேலும் கொட்டாம இருக்கணும். பனி விழுந்தா ஆளை அப்டியே போட்டு மூடிரும். உடலைக் கண்டுபிடிக்கவே முடியாமப் போயிருமே...

நாம சிகரத்தைக் கைப்பற்றிக்கணும். நம்மாளுங்களை எண்ணி, இல்லாத ஆளுங்களைத் தேட ஏற்பாடுகள் செய்யணும். கீழ விழற ஆளை விட்டாலும் அவன் ஆயுதத்தை விடமுடியாது. எங்களுக்கே தேவைப்படும். தவிர எதிராளி கையில் ஆயுதம் கிடைச்சிறப்டாது... ஏற்கனவே ஆளாளுக்கு இருவது முப்பது கிலோ சுமை. சாப்பாடு, கம்பளிஉடை, தண்ணி. எங்க ஆயுதம். அத்தோடு இந்த ஆயுதமும் சிலசமயம் சுமந்துகிட்டு மேலேறணும்.

முந்தா நேத்து நம்மாளு அடிச்ச அடில ஒராளு நேரா என்னைப் பாத்து விழுந்தான். ஏ கொடும்பாவி, மோதிருவான் போலுக்கேன்னு சுவரோட பம்மிக்கிட்டேன். கிட்ட வர்றப்ப ''நாயே''ன்னு என்னையறியாம அலறிட்டேன். அவனும் என்னென்னவோ அலறிட்டேதான் வுளுந்தான். பயக்குரல்லா? இருந்த ஆவேசத்தில் எங்க குரலே, எங்க பாஷையே எங்களுக்குப் புரியல, அவன் பேசறதா புரியும்?

எதிரி மே...ல இருக்கான். நாங்க கீழேர்ந்து ஏறிப்போயி அவனை விரட்றதுன்னா சும்மாவா? அவனுங்கள்ல ஒராளைச் சுட்டுத்தள்ள நம்மாளுகளில் நாலைந்து பேரைக் காவுகொடுக்க வேண்டிவரும் சிலசமயம். பனியானா கொட்டிக்கிட்டே யிருக்கு. எங்க உடையெல்லாம் நனைஞ்சி போச்சு. பாறை வழுக்குது. வேடிக்கையா என்னமாச்சும் சிறு சத்தமாப் பேசி மனசை ஆத்திக்கர்றதுதான்... வாகாப் பாறை அமைஞ்சா தங்கிகிடத் தோது. மேல்ப்பக்ம் மறைச்சாப்ல அமையணுமே?

ரேடியம் வாச்சில் மணி பார்ப்பார் மேஜர். வந்த வேகம் பரவால்ல - அல்லது பத்தாது... இந்த வேகத்தில் போனால் எப்ப மேல போயிச் சேரலாம்... அது இதுன்னு கணக்கு சொல்வார் எங்க ஐயா சண்முகம். அவரைத் தவிர நாங்க எல்லாருமே இளரத்தம். அதுல அவருக்கு ரொம்ப சந்தோசம். ''நம்ம பசங்க அதெல்லாம் வெட்டிட்டு வான்னா கட்டிட்டி வர்ற பார்டிங்க'' என்பார் உற்சாகமாய். நல்ல ஊக்கமான மனுசன்.

எங்கூட மலையேர்றதுல இடதுபக்கம் வீரபாண்டி. சரியான தெக்கத்திக் கள்ளன். தனியா அவனை விட்டா கிடுகிடுன்னு ஏறிருவான். சொந்துாரு மயிலம்பாறைன்றான். ஏழாம் படாலியன்லேர்ந்து எங்ககூட வந்து சேந்துக்கிட்டான். சரியான கொரங்குப் பிறவின்னேன்... சிரிக்கிறான்.

வலது பக்கம் தாமு. அவனும் தமிழ் ஆளுதான். கேரளாப் பூர்விகம். தமிழ்... பேசுவான், எழுதப் படிக்கத் தெரியாது. ''அம்மைட்ட குடிச்ச பாலெல்லாம் கக்கிருவம் போலுக்கே'' என்கிறான் தாமு. ''ஏன் உனக்கு இன்னும் கலியாணம் ஆகல்லியா?'' என்று நான் அவனைக் கேட்க, இந்தப் பக்கம் பாண்டி சிரிக்கிறான். தாமுவுக்குப் புரியவில்லை.

அபப்ப குண்டு திடும் திடும்னு விழுது. நாலைஞ்சி மலைலயும் ஒண்ணா தேடுதல் நடக்குது. நம்ம நாட்டுப்புறத்துல சந்தரமகாலிங்கம் கோவிலுக்கு காட்டுக்குள்ள வரிசை வரிசையாப் போவம். அதும் மாதிரி. அங்கியும் யானையை விரட்ட, சிங்கம் புலி விரட்டன்னு வேட்டு போடுவாங்க. இந்த வேட்டு மனுசங்களையே விரட்ட.

அந்தமட்டுக்கு எப்டியோ தமிழாளுங்க நாங்க மூணுபேர் ஒண்ணா மேல வர்றோம். எங்க மேஜர் சாரும் தமிழ். நல்லதாப் போச்சு. இருநுாறடி ஏறவும் கொஞ்சம் சமதரை வந்தது. மேல லேசா மறைப்பு- பரவால்ல.

'சார்?'னு மெதுவாக் கூப்ட்டேன். அவர் புரிஞ்சிக்கிட்டாரு. ''சரி, அஞ்சே அஞ்சு நிமிசம்''ன்னாரு. தங்கமான மனுசன் அவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். கிளம்பு முன்னால் அவர் பாடம் நடத்தினாரு பாரு- எங்க எல்லாத்துக்கும் சிரிப்பு. ரஞ்சன்சிங் எங்களுகள்ல இறுக்கமான ஆளு. அவனே லேசாப் புன்முறுவல் பூத்தான். அடிச்ச ஜோக்குக்குச் சிரிச்சானோ சம்முகம் சார் பேசற இந்திக்குச் சிரிச்சானோ?

ஆளாளுக்கு முதுகில் சிறு மண்ணெண்ணெய் விளக்கு. இந்த நாற்பது டிகிரி பனியில், என்னதான் உடம்பை மூடி கம்பளி போட்டுக்கிட்டாலுமே கைகாலெல்லாம் ரத்தம் உறைஞ்சிரும் போலுக்கு. எதாவது வீட்டுஞாபகம் வேறஞாபகம் வெச்சிக்கிட்டு இருந்தாப் பரவால்ல. கவனத்தைச் சிதறவிட்டா எதிரி வாய்ல நேராப் போயி விழவேண்டிதான். விளையாட்டு போல ஏறினாத்தான் 'அதுவரை' தெம்பு இருக்கும். தாக்கு பிடிக்க முடியும். நம்மால முடியாட்டி ஆறால முடியும்னா மாதிரி ஒரு வைராக்கியம் வேணும். நமக்கு ஒண்ணும் ஆகாதுன்னு ஒரு தைரியம்.

முன்னால எங்க மதுரைவீர சாமி நிக்கிறா மாதிரி நினைச்சுக்குவேன். அது நம்மளைக் காப்பாத்தும். ''ஏத்தி விடப்பா துாக்கி விடப்பா''-ன்னு சபரிமலையில் போல என்னவோ முணுமுணுத்தான் தாமு. நெத்தில சந்தனம் வெச்சிக்கிட்டு சாமி கும்பிட்டுட்டு அப்றந்தான் அவன் மலையேற ஆரம்பிச்சான்.

உயரத்லேர்ந்து பார்த்தா வெளிச்சம் மறைச்சாப்டிக்கு மேலாப்ல துணிமறைப்பு வெச்சிக்கிட்டு என்னைத் திரும்பச் சொல்லி என் விளக்கை ஏத்துகிறான் தாமு. அவனும் பாண்டியும் விரலை விறுவிறுன்னு தேச்சி சூடுபடுத்திக் கிட்டாங்க. எனக்கும் கண்டிப்பா வேணும். பாண்டி அவன் கைய என்கையோட தேய்ச்சான். எல்லாம் பானட் பிடிக்கிற கைங்க- ஒரே சொரசொரப்பு.

பாண்டி வெளிப்படையாச் சிரிக்கிறானே தவிர உள்ளூற அவனுக்கு எதோ படபடப்பு. அவனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வீட்டில் இருந்துதான்னு நினைக்கிறேன். பிரிச்சி வாசிக்க நேரமில்லை- ஏற ஆரம்பிச்சாச்சி. அதைப் படிக்கிற ஆர்வம் அவனுக்கு. அடக்க மாட்டாமல் மூட்டையைப் பிரிச்சான். ''என்ன?''ன்றாரு மேஜர் சார். ''ஒரே நிமிஷம் ஐயா''ன்னுக்கிட்டே கடிதத்தை வாசிக்க ஆரம்பிச்சான். பொதுவா ஒரு குடும்பத்துக் கடிதத்தை இன்னொருத்தன் வாசிக்கிறதில்லை. சிலசமயம் ரொம்ப நெருக்கமான சிநேகிதனா இருந்தால் அவனே தகவல் சொல்வாப்டி. நாங்க கேட்டுக்குவம்... கடிதத்தை வாசிக்க வாசிக்க பாண்டி அழுகறாப்ல இருந்தது. எங்களுக்குப் பதறிட்டது... ''என்ன பாண்டி?''

''ஒண்ணில்ல... என் பொண்டாட்டி... கடைசியா ஊர்போயி, அவளைப் பார்க்காமல் நேரா இங்க வந்திட்டேனில்லியா? அதைக் குறைப்பட்டு எழுதீர்க்கா...''

''நம்ம அவசரம் அப்டியப்பா... இப்ப யுத்தம் முடிஞ்சிரும். யுத்தம் முடிஞ்சா?...''
'
'முத்தம்! ' ' என்கிறான் தாமு.

''ஏல உனக்கு இன்னமும் கல்யாணமே ஆகல்ல... யாருக்கு முத்தம் குடுப்பே?'' என்றேன் நான்.

''அம்மைக்கு...'' என்று பாண்டி சிரித்தான்.

''எதிர் வீட்ல யாரும் ஆள் கீள் பாத்து வெச்சிருக்கியா?''

''ஐய அதெல்லாமில்ல'' என்றவன் தயங்கி ''முறைப்பொண்ணு இருக்கு...'' என்றான் வெட்கத்துடன். அந்தக் கெரசின் விளக்கொளியில் மழுமழுவென ஷேவெடுத்த அவன் முகம் எத்தனை ஜ்வலிப்பாத் தெரியுது... அவன்னில்லை, எல்லாருமே அவனவன் ஊர்ஞாபகத்ல இருக்காங்க. பாழாப்போன யுத்தம் வந்துவிட்டது இடையே...

பாண்டி அவசர அவசரமாய்ப் பையில் இருந்த இன்லெண்ட் லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்தான்.

பிரிய மனைவி வேணி அறிவது. 5140-லிருந்து இக்கடிதம் எழுதுகிறேன். இங்கே எனக்கு எல்லாம் நன்றாய் இருக்கிறது. நீ கவலைப்படாதே. போர் முடிந்து நேரே வீடு வருவேன். தம்பி-மச்சினி கல்யாணத்துக்குதான் நிற்க முடியவில்லை. நம்வகைக்கு ஐந்நுாறு ரூபாய் அளவில் நீயே பார்த்துச் சீர் செய்துவிடு. மகன் மயிலாண்டி படிக்கிறானா? சரியாப் படிக்காட்டி உடனே டியூஷன் வைத்துவிடு- பணத்தைப் பத்திப் பார்க்காதே. இந்த இரவுக்குள் 5140-ஐப் பிடித்து விடுவோம்.

ஒவ்வொரு வரியாய்ச் சொல்லிக் கொண்டே எழுதினான் பாண்டி. எனக்கும் கடிதம் எழுத ஆசை வந்தது. நேரங் கிடையாது. இதுவரை மேஜர் சார் பொறுமை காத்ததே எனக்கு ஆச்சரியம். ''ம்... ம்...'' என்று காத்திருக்கிறார் ஐயா. பரீட்சை ஹாலில் ''நுால் கட்டிட்டு எழுதுங்க, கட்டிட்டு எழுதுங்க'' என்பார்களே... அது ஞாபகம் வந்தது.

அந்த அஞ்சி நிமசத்தில் ரஞ்சன்சிங் சின்னத் துாக்கம் போட்டுட்டான். ஆள் என்ன திடகாத்திரமா இருக்கான்... ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. ரம் போட மாட்டான். மட்டன் தொடமாட்டான். சப்பாத்தி. பிய்த்து மடக்கி அதை வாய்க்குள் திணித்துக் கொள்வது யானை தீனி தின்பதுபோல் இருக்கும்.

''ம்... ரெடி. கிளம்பலாம்'' என்றார் சார்.

திரும்ப எங்கள் பயணம். விளக்கை அணைத்தாகி விட்டது. இது வேறு உலகம். கை வலிக்கிறது. எத்தனை அடி இன்னும் ஏறணுமோ... நிச்சயம் எதிரி உஷாராய் இருப்பான். நாங்க மொத்தம் சுமார் நாப்பது பேர் எங்க படையில். இன்னும் தள்ளித் தள்ளி பத்திருபது கம்பெனி இருக்கும். எங்க நாப்பது பேர்ல எல்லாருமே பத்திரமாப் போய்ச்சேர எந்த உத்தரவாதமும் கிடையாது.

எல்லாம் எங்க எல்லார்த்துக்கும் தெரியும். அதை நினைக்கக் கூடாது இப்ப- ஒருவேளை நான் செத்துப் போகலாம். இவன்... அவன்... அதைப்பத்தி என்ன? எதைப்பத்தி நினைக்கப்டாதுன்னு மனசுக்குக் கட்டுப்பாடு இடறோமோ அப்பதான் மனசு அதையே நினைக்கும். இந்த மருந்தைக் குடிக்கையில் குரங்கை நினைக்காதேன்னு டாக்டர் மருந்து கொடுத்த கதையாட்டம்!

தண்ணி தாகம் எடுத்தது. ஓய்வெடுத்த சமயத்தில் குடிச்சிருக்கலாம். பாண்டி நெகிழ்ந்தது ரொம்ப சங்கடமாப் போச்சு. தண்ணி குடிக்க விட்டுப் போச்சு. என்ன தண்ணி இது ருசியே இல்லாம. தண்ணின்னா நம்ம தாமிரவர்ணித் தண்ணிதான். கோயம்புத்துார்க்காரன்னா சிறுவாணிம்பான். தஞ்சாவூராள் காவேரி.... வால்பாறைக்காரன் அர்ச்சுனாவூத்தும்பான்.

யாரும் பேசிக்கல. ஓய்வெடுத்தப்ப கொஞ்சம் தமாசாப் போசிக்கிட்டோம்தான். அதனாலியே இப்ப அவனவன் சீரியஸாயிட்டாப்ல இருந்தது. நாங்களும் அலுப்பா யிருந்தோம். சரியான ராத்திரி. ரெண்டு நாளாத் துாக்கம் கிடையாது. நேத்து நம்மாளுங்க இன்னொரு மலையைப் பிடிச்சாங்க. எப்படியும் எல்லாம் நம்ம பூமி. நாம எல்லாத்தையும் பிடிச்சிருவம். எத்தனை காவு வாங்குது. அதான் பிரச்னை. வெற்றி நிச்சயம்... அதைத்தான் தாமு கடிதத்தில் எழுதினாப்ல.

பாண்டிக்கு மனசுபூராவும் வீட்டுஞாபகமா இருக்கும்னு நினைக்கிறேன். இந்தப் பக்கம் தாமுவுக்கு பதிலா ரஞ்சன்சிங். தாமு கொஞ்சந் தள்ளி ஏறுவான் போல. என் கண்ணில் படவில்லை அவன். ரஞ்சன்சிங்கோட என்ன பேசன்னிருந்தது. அவனைப் பார்க்கவே விளையாட்டு மறைஞ்சி ஒரு விறைப்பு வந்திருது. கூடிய சீக்கிரம் அவனுக்குப் பிரமோஷன் வந்திரும். அடேயப்பா, குறிபார்த்துச் சுடறதில் ஆள் எம்டன். அவன்கூட நின்னு நாம சரியாச் சுட்டா அதில் அவனுக்கு ரொம்ப சந்தோசம். எதுக்குமே சிரிக்காதவன் சரியா வேலைசெஞ்சாச் சிரிக்கிறான். அவன் சந்தோசம் வேலை செய்வதில் இருந்தது.

நல்ல செங்குத்து மலைதான். அந்தப் பக்கம் எப்பிடியிருக்கும் தெரியாது. அசந்து மறந்து கீழ பாத்திறப்டாது. தலையே சுத்தீரும். பகீர்னிருக்கும்... எல்லாம் ஓரளவு பழகியிருந்தது எங்களுக்கு. அதனால பரவால்ல. இந்தத் தீவிரவாதிங்க எப்பிடி இதுக்கெல்லாம் பழகிக் கிட்டாங்க ஆச்சரியமா இருக்கு. வெறி. ஆக்கிரமிப்பு வெறி.

அடப்பாவி மக்கா. இந்தவெறிய 'வாமடையாத்' (வாய்மடை... கால்வாய் என்பதன் சொலவடைப் பிரயோகம்) திருப்பி விட்டு என்னென்னமோ ஆக்கபூர்வமாச் சாதிக்கலாம்டா. இப்பிடி செத்து அழிய ஆசைப்படறானுகளே. நம்ம நல்லாத்மாக்களையும் பலி வாங்கறானுங்களே... 'பெரிய' கைங்க இவங்களை - வேலை கேட்கிற இளவட்டங்களைப் பிடிச்சி வளைச்சி மாட்டிர்றாங்க, பாவம்.

திடுதிப்னு மேல பட்டாசு வெளிச்சம். சுரீர்னு எறும்பு கடிச்சாப்ல எல்லாரும் சுறுசுறுப்பாயிட்டோம். கண்ணே தெரியல. குருடாக்கும் வெளிச்சம். மேலேர்ந்து படபடன்னு சுடறானுங்க. யாருக்கும் பக்கத்ல இருக்கிறவனைப் பார்க்க நேரமில்லை. இதான் சமயம். நாடி நரம்பெல்லாம் யுத்தத்தின் சூடு. ஆவேசம். நாங்களும் விடல்ல. ரஞ்சன்சிங், பார் என் அடியை... படபடன்னு ஒரே சத்தத்காடு. பதுங்கிப் பதுங்கி மேலேறிக்கிட்டே சுடறோம். இடையிடையே ஹா ஹான்னு சத்தம். யாருக்கு என்ன ஆச்சி புரியாத நேரம். பரபரப்பு. கிட்டத்தட்ட மேட்டை எட்டிட்டாப்லதான்னிருக்கு. நம்ம விமானங்கள்வேற மேல ஒத்தாசைக்குன்னு வந்திட்டது. மேலயிருந்து அவர்களின் தாக்குதல். அவர்கள் வந்ததே எங்களுக்குத் தனி உற்சாகம். அட்றா மாப்ளை. விடாதே எதிரியை... தரையாலயும் வானத்திலும் சுத்தி வளைப்பு. போட்டுத் தாக்கு!

''ஐயோ''ன்னு இந்தப் பக்கத்லேர்ந்து சத்தம். அது பாண்டிதான். தாவி அவனைப் பிடிக்க முடியுமா பார்த்தேன். அவன் பைதான் கையோட வந்தது. பாண்டி கீழ விழுந்தான். அதெல்லாம் பொழைச்சிக்குவான்னு நினைச்சிக்கிட்டேன். யோசிக்க நேரமில்லை. தாமதிக்கிற யோசிக்கிற ஒவ்வொரு கணமும் என் உசிருக்கு ஆபத்து.

அவன் சுமையையும் ஏத்திக்கிட்டேன். உள்ளே அவன் சம்சாரம் எழுதிய கடிதம். அவனது பதில்க் கடிதம். என் நினைவுகளைப் புறந்தள்ளினேன்... பாண்டிக்கு என்னவோ நெருடல் இருந்தது. ஒருவேளை நாம் சுடப்படுவோம் என அவன் யூகித்தானோ என்னமோ?

எனக்கு ஆவேசம் வந்தது. சரமாரியாச் சுட்டுக்கொண்டே மேலேறினேன். எனக்கு முன்னால் வேகமாகப் பலஅடிகள் முன்னேறியிருந்தான் ரஞ்சன்சிங்.

*
எனது யுத்தம் சிறுகதைத் தொகுதியில் இருந்து
91 97899 87842


Saturday, January 10, 2015

ஊமையொருபாகன்

எஸ். சங்கரநாராயணன்


* * *

சைக்கிளில் அவளை ஏற்றிக் கொண்டு நாகலூரணி போய்ப் படம் பார்த்தார்கள். வாத்தியார் படம்னு ஆசைப்பட்டு சிவாஜி படம்கூட இல்லாமல் ஜெய்சங்கர். அவன் படத்தில் விநோத ஜும்பர ஜும்பா தாளத்துடன் ஒரு பாட்டு இருக்கும். அப்பாவைக் கொன்னவனைப் பழி வாங்குவான்.ரில் பாதி பேர் சுப்ரமணி. அப்ப மீதி பேர்? அவர்கள் வேற்றூரில் இருந்து பிழைக்க வந்தவாளா இருக்கும்.

ஊர் நடுவாந்திரத்தில் உப்பளமேடு போல சிறு குன்று. அறுவடை நெல் குவிச்சாப்போல. அதன் உசரத்தில் கோவில். அதைப் பாக்க கொள்ளை ஜனம்.

வந்து சேரும் ஜனங்களிலும் பாதி பேர் சுப்ரமணி. அடிவாரத்தில் நாவிதர்கள் - சுப்ரமணிகள் - கத்தி விரித்துக் காத்திருப்பார்கள். சிறு பிள்ளைகள் தென்னை மட்டையை நார் உரிச்சாப்போல... முடியுடன் உட்கார்ந்து மொட்டையாய் எழும். எதிரே ஊரணி. குளித்து மண்டைக்கு சந்தனாலங்காரம். புதுத்துணி உடுத்தி, பிற்பாடு பார்த்துச் சிரிக்க கந்தசாமி ஸ்டூடியோவில் ஒரு ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டு, மேடேறி சாமி கும்பிடும் இந்த மொட்டைகளைப் பார்த்து அடிவாரக் குரங்குகளுக்கே பயமாய்க் கெடக்கும்.

ஊரில் எல்லாவனும் சுப்ரமணியாத் திரிஞ்சால் என்ன செய்யிறது? சுப்ரமணி சுப்ரமணியப் பார்த்து "சுப்ரமணி" என்று கூப்பிட வேண்டியிருக்கிறது. அப்பகூட திரும்பிப் பார்த்தவன் வேறு சுப்ரமணி. ஆக, மனுஷாளுக்குப் பட்டப்பேர் வைக்கிறது அங்கே நிர்ப்பந்தம் ஆச்சு. குள்ளமணி, தென்னைமணி, நெளிசல்மணி (மண்டைக்கோணல் அத்தகையது), லேடிமணி (நடை ஸ்டைல் அப்பிடியப்போவ்!), லூசுமணி, வியர்வைமணி, பீடிக்காதன், டப்பாக்கட்டு, மைனர், கோகுல்சாண்டல்...

நம்மாள் பள்ளிக்கூட மணி. அவன் ஜோலியே அதுதான். பள்ளிக்கூடத்தில் மணியடிக்கிற உத்தியோகம். காலையில் சீக்கிரமே வந்து பள்ளிக்கூட கேட்டு - கதவைத் திறக்கிறவன் அவனே. தண்ணி பிடிச்சி வராண்டா அண்டாவில் ஊத்தணும். ஊமைச்சி வந்து வெளி வளாகங்களைப் பெருக்குவாள். அது காலையில்... வகுப்பறைகளை மாலையில் பூட்டுமுன் பெருக்க ஊமைச்சி கூட ரெண்டாளுகள் உண்டு.

பாவம் பள்ளிக்கூட மணி! முதல் ஆளா காலையில் வந்து, சாயந்தரம் கடைசி ஆளாப் போகணும். வகுப்பறைகளைப் பூட்டி சாவியை எட்மாஸ்டர் ரூம்பில் மாட்டிவிட்டு கேட்டு - கதவை - மூத்திரக்குறியைக் கூசச்செய்கிற அளவில் அது ஒரு கிரீச்செடுக்கும்... சார்த்திப் பூட்டிக் கொண்டு கிளம்ப மணி ஐந்து ஐந்தரை தாண்டி விடும்.

நல்லவன். அப்ராணி. வெகுளி. எப்பவும் மூக்கு ஒழுகிக் கிடக்கிறது. பேச்சில் ஒரு கொணகொணப்பு. எனினும் உற்சாகத்துக்குக் குறைவில்லை. கதவைப் பூட்டிய ஜோரில் எதிர்க் கடலைக் கடையில் நிலக்கடலை ஒரு பொட்டலம் வாங்கிக் கொண்டு, தெரிஞ்ச அழகில் "சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ... செந்தாமரை இரு கண்ணானதோ" பாடியபடி வீடு திரும்புவான். வாயில் ரெகார்டு மாத்தினாப்போல பாட்டு மாறிக்கொண்டே வரும். நாலாம் பாட்டு ரெண்டுவரி மூணுவரி பாட வீடு வந்திரும்.

வயசான தாயார். நல்ல சினிமாப் பிரியை அவள். ஆனா எம்ஜியார் பிடிக்காது. அவள் சிவாஜி கட்சி. நல்ல குடும்பம்சமா அழுகைப் படமா எடுப்பான். அம்மா செத்திட்டா எப்பிடி உருகுகிறான்!

எலேய் நாஞ்செத்தா அழுவியாடா சிவாஜி மாதிரி?... என்று ஏக்கமாய்க் கேட்டாள் அவனை.

செத்த அம்மாவை வெச்சி அழுறதா பெருமை? எங்க தலைவர் அம்மாவை உயிரோட இருக்கறப்பவே உக்கார வெச்சி மடிமீது படுத்துக்கிட்டு - இந்த வாலிப வயசில்! - அம்மா நீ வாழ்கன்னு பாடறாரு... அதை ரசிக்க மாட்டங்கையே?... என்பான். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்... என்று பாடியபடி மணி வெளியே போனான். என்னத்த வெற்றி? ஊர்க் கோமாளியாட்டம் திரிகிறான் இவன்... என்று பெருமூச்சு விட்டாள் அம்மா.

அம்மாவுக்கு வயசாயிட்டது. வீட்டுப்பாட்டை முன்னைப் போல கவனிக்கக் கொள்ளவில்லை. நடக்கையில் லேசா லாந்தித் தள்ளுது. சிவாஜியின் சோகநடை... மறதி அதிகமாச்சி. எலேய் நீ கல்யாணங் கில்யாணம் கட்டப்படாதா?... என்று ஸ்கூல்மணியிடம் அவள் கேட்டாள்.
நான் ரெடி! எனக்கு எவன் பொண்ணு தருவான்? - என்றான் ஸ்கூல், நிலக்கடலை மென்றுகொண்டே. இந்தா அம்மா, என்று கூட ஒரு பொட்டலம் அவன் வாங்கி வந்திருக்கலாம். ஒருநாளும் மாட்டான். கேட்டால், துட்டு இல்லம்மா; தொந்தரவு செய்யாதே.... என்பான். அவன் திங்க மாத்திரம் துட்டு இருந்தது அவனிடம்.

சம்பளத் துட்டு என்று ஏதோ வந்தாலும் நாலு ஆம்பளைகள் அவன் இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி பைக் காசைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அய்யாவை ஆஸ்பத்திரில சேக்கணும். க்ஷயரோகம் முத்தி பக்கத்தூர்வரை போணுண்டா.... ஒரு பத்து - நூறு தேறுமா ஒன்ட்ட? - என்கிறார்கள்.

சுப்ரமணிக்கு ஐயா இல்லை. செத்திட்டாரு. ஆமாமாம். செத்தன்னிக்கு சுவர்ப்பக்கம் திரும்பி கைவெச்சிக்கிட்டு அழுகிறான். அத்தனையாய் ஊறுகாய்க் குலுக்கலாய் அவன் அழவில்லை என்று அவங்கம்மாவுக்கு வருத்தம்.

"ஐயய்ய! இந்தா" என்று உருகினான் சுப்ரமணி. ஐயா பத்தி யார் பேச்செடுத்தாலும் காசு காரண்டி. பக்கத்து நாகலூரணியில் பெரியாஸ்பத்திரி. அங்கதான் சேர்ப்பதாகச் சொல்லி துட்டு வாங்கிப் போனான். பல்லு-மணி. நாகலூரணி வெத்திலை ரொம்ப கிராக்கி ஐட்டம். எட்மாஸ்டர் அதன் ரசிகர். ஆட்டுஜென்மம். வாயில் எப்பவும் குழை வேண்டும் அவருக்கு. மூணு நாளுக்கொரு முறை சைக்கிளில் சுப்ரமணி நாகலூரணி போய் வெத்திலை வாங்கி வந்து தருவான். மேல்த்தண்ணி ஊத்தி ஊத்தி வெச்சுக்குவார்.

தர்மாஸ்பத்திரியில் விசாரித்தான் சுப்ரமணி. "க்ஷயரோகக் கேஸ்னு யாராவது சுப்ரமணியங் கோவில்லேந்து அட்மிசன் ஆனாங்களா?" – சீட்டெழுதறவன், "அவர் போனவாரமே செத்திட்டாரே" என்கிறான். பயந்தே போனான் ஸ்கூல்மணி. "சரியாப் பாருய்யா... நேத்தைய அட்மிட். பேரு வேல்ச்சாமி..." என்றான் சுப்ரமணி.

அப்டியாளே வரவில்லை. அப்றம் பல்லுமணி வீட்டுக்குப் போனா, "எலேய்! என்ன இந்தப் பக்கம்” என்று வீட்டில் அவனை விசாரித்தவரே அவர்தான். "தர்மாஸ்பத்திரியில நீரு செத்திட்டதாகச் சொன்னாங்க. அதாம் பாத்திட்டுப் போலாம்னு வந்தேன்" என்றான் ஸ்கூல்.

"செத்தாச் சொல்லி விடுங்க" என்று சைக்கிள் ஏறினான்.

அவனுக்கு ரொம்ப வருத்தமாய் இருந்தது. எப்படியெல்லாம் ஏமாத்துகிறார்கள்; பொய் சொல்லுகிறார்கள் நாட்டில்?... அவன் மூஞ்சியில் - ஏமாறுகிற மூஞ்சி, என்று எளுதி ஒட்டீர்க்கோ தெரியல. அதிலும் ஒவ்வொருத்தனும் விநோதக் காரணங்களாய்ப் பொய் சொல்கிறான். உடனே பணம் பேர்த்தி விடுகிறான் இவனிடம் இருந்து. பையில் துட்டு தங்குவதேயில்லை. இவன் பையில் துட்டு சேர்ந்த ஜோரில் பறவைக்குப் பழவாசம் போல் அவனவனுக்கு மூக்கரிப்பு.

இவன் மூக்குதான் வாசனையெடுக்காது. ஜலதோஷம்லா!

"எலேய்! லோகத்ல எல்லார் மேலும் உனக்கு இரக்கம்டா... உங்கம்மாவைத் தவிர" என்று அம்மா கத்துகிறாள். கத்திப் பேசுதல் அவளது சுபாவம்.

சிவாஜி ரசிகையாச்சே!

ஸ்கூலுக்கும் கல்யாணம் முடிக்க ஆசைதான். வயசாவலியா? தை தாண்டினா நுப்பது. பெத்தவ சரியில்லை. படம் பாக்கணும். வீட்டு வாசலில் பக்கத்துக்காரிகளிடம் சினிமாக் கதை பேசணும். வீட்டைத் திறந்து போட்டுக்கிட்டு நிலைப்படியே தலையணையாய் குறட்டையெடுக்கத் தூங்கணும். பேச்சுதான் சத்தம்னா குறட்டை அதைவிடப் பெரிய எடுப்பு.

சிவாஜி குறட்டை விடுவானா தெர்ல.

அட, ஸ்கூலுக்கு அடிச்சதய்யா லக்கி பிரைஸ்!

காலையில் பள்ளிக்கூட கேட்டு - கதவைத் திறக்கிறான் மணி. அவன் வரும்வரை காத்திருந்தாள் ஊமைச்சி. அவ பேர் ராணி. அவனைப் பார்த்து அன்றைக்கு அவள் சிரிச்ச சிரிப்பில் என்னவோ ஒரு குறுகுறுப்பு தெரிந்தது அவனுக்கு. அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது அந்த உணர்ச்சி. காலைல மஞ்ச பூசிச் சுத்தமாக் குளிச்சி தெளிச்சிச் சிறு பொட்டும் வெச்சி டைட்டு ஜம்பருடன் (ஜம்பர் - பிளவுஸ்) வந்திருந்தாள். ஒருமாதிரி மஞ்சளில் புடவை. தலையில் மஞ்சக் கனகாம்பரம்.
பேசுவது கிளியா?... என்று சம்பந்தம் இல்லாத பாட்டு பாடியபடி கதவைத் திறந்தான் மணி. அவன் உள்குறி சிலிர்க்க கேட்டு - கதவு திறக்கிறது.

அடுத்த வாரம் ராணியின் ஐயா செத்துப் போனபோது விக்கி விக்கி அழுகை வந்தது ஸ்கூலுக்கு. சிவாஜி அழுகை. அவங்கம்மாவுக்கே ஆச்சரியம். இது காதல் அல்லாமல் வேறென்ன?... பூங்காவில் பின்தண்ணி பொங்கப் பொங்க அவனும் ராணியும் பாடுகிறார்கள்.

"பாட்டா? அவ ஊமைச்சிம்மா..." என்கிறான் மணி.

"ஊமைச்சியா?"

"மனோகரா அளவில் உன்னோடு சண்டை போட ஆள் இல்லை" என்று சிரித்தான்.

கோவிலில் எளிய கல்யாணம். அவள் ராணி என்றால் நான் ராஜா. ராஜாமணி என்று சிரித்துக் கொண்டான். தலை கிறுகிறுத்துக் கிடந்தது. பெண் நன்றாய்ப் பாடணும் என்று அவனுக்குத் தன் மனைவியை இட்டு முன்பு கனவுகள் இருந்தன. பாட்டு ரசனையாவது வேணும். ரெண்டும் இல்லை அவளிடம்.

நீ எம்ஜியார் ரசிகையா சிவாஜி ரசிகையா?... என்று அவளிடம் எப்படி கேட்பது தெரியவில்லை. பெரிசாய்ச் செவ்வகம் வரைஞ்சாப்ல காட்டி படம் கிடம் பாப்பியா?... என்று விசாரித்தான் மணி.
 

'நான் படம் பார்த்ததேயில்லை' என்கிறாள் ஜாடையில். நாட்டில் சினிமா போகாத ஜென்மம், அதும் பெண் ஜென்மம்... அவனுக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது.

முதலிரவு அன்று அந்தப் பேசாத வாய்க்கு சூப்பரான முத்தம் தந்தான் மணி. வெத்திலை போட்டிருந்த அவள் வாய் கிளிமூக்காய் ஜொலித்தது. மூக்குக்குக் கீழே இன்னொரு மூக்கா இது!...
சைக்கிளில் அவளை ஏற்றிக் கொண்டு நாகலூரணி போய்ப் படம் பார்த்தார்கள். வாத்தியார் படம்னு ஆசைப்பட்டு சிவாஜி படம்கூட இல்லாமல் ஜெய்சங்கர். அவன் படத்தில் விநோத ஜும்பர ஜும்பா தாளத்துடன் ஒரு பாட்டு இருக்கும். அப்பாவைக் கொன்னவனைப் பழி வாங்குவான். தலைவர் ஆளும் சூப்பர் கலர். படமும் கலர். ஜெய்சங்கர் படம் கறுப்பு-வெள்ளை.

அதைப் பத்தி என்ன? யார் படம் பார்த்தார்கள்?

வரும் வழியில் மைனர் மணியிடம் மாட்டிக் கொண்டார்கள். கிண்டல் நப்பி எடுத்திட்டாப்ல. எலேய்! பொண்ணு ஜோரா இருக்குடா! நீ எத்தினி தரம் என் சைக்கிளை அண்ணே ஒர்ரவுண்டுன்னு கேட்டு பூக்கடை காய்க்கடைன்னு போயிருக்கே... என்று சிரித்தவன், எனக்கு ஓர் ரவுண்டு தாடா இப்ப!... என்று அசிங்கமாய்க் கண்ணடிக்கிறான்.

கோபங் கோபமாய் வந்தது. என்ன பேச அவனிடம்? அழுகை வீங்கிய முகத்துடன் அழ முடியாமல் தாண்டிப் போக வேண்டியதாப் போச்சு. வழியிருட்டில் சைக்கிள் தடுமாறியது கல்லில்.
 

அப்பதானய்யா அந்த அதிசயம் நடந்தது. அவனை நிறுத்தச் சொல்லி ராணி வண்டியில் ஏறியமர்ந்து கொண்டது. அவளே ஜோராய் அவனைப் பின்னால் உட்கார வெச்சி விட்டாள் சவாரி வீடு வரை. சைக்கிள் திக்காமல் திகைக்காமல் ஓடி வந்ததே, பாக்கணும்! வாசல் எட்டியதும் அப்டியே அவளை அலாக் தூக்கு தூக்கி மாப்ளை ஒரு கிஸ் அடிச்சான். அக்குள் வாசம் பிடிச்சான். அம்மா கதவைத் திறக்கிற சத்தம். பிரிந்து கொண்டார்கள்.

ஜாடையாய், மைனர் மணியோடு சேராதே. அவன் கெட்டவன்... என்றாள் ராணி. சரி என்றான் ராஜாமணி. அவளோடு ஜாடையாய்ப் பேச சகஜப்பட்டிருந்தான் இந்நாட்களில்.

துட்டு... எந்துட்டு... என்று சுண்டிக் காட்டுகிறான் ராஜா. தரணும் அவன். ஏமாத்திட்டான்... சொல்லும்போதே வருத்தமாகி விட்டது. அவளுக்குத் தாளவில்லை. அவனைத் தன் வெத்துமார்பில் அப்படியே சாய்த்துக் கொண்டாள். நான் இருக்கேன், சிரிக்கணும்... என்றாள் குறிப்பாய். எப்பெரும் ஆறுதல் அவனுக்கு! அவள் மடியில் படுத்துக் கொள்கிறான்.

காலையில், எவ்ளவு துட்டு... என்று விசாரித்துக் கொண்டாள். பிறகு... ஆமாம் நேரே மைனர் வீட்டுக்குப் போனாள். அறச்சீற்றம் அது. ஏமாத்தறீங்களாடா நாய்ங்களா?

வீட்டு வாசல்பக்கம் காவல்நாய் குரைத்தது. குனிந்து ஆவேசமாய்க் கல்லை எடுத்தாள் ராணி. பயந்தோடிப் பாய்ந்தோடிப் போனது நாய்.

என்... புருஷன்... என்று தாலியைக் காட்டினாள். துட்டு... என்று சுண்டிக் காட்டினாள். ஐந்நூறு... என்று காற்றில் எழுதிக் காட்டினாள். எங்க?... என்று கேள்வி கேட்டாள். மௌனாக்னி அது. எல்லாம் ஜாடை. வார்த்தையைவிட உக்கிரம் பெருகியது அதில்.

திருப்பித் தா... வாங்காமல் போக மாட்டேன்... அடம் பிடித்து அங்கேயே உட்கார்ந்தாள்.

ஊமைச்சி பணத்துடன் வீடு திரும்பினாள்.

••

storysankar@gmail.com Mob 91 97899 87842

Wednesday, January 7, 2015

ஒளிந்து கொண்டிருக்கும் தாய்

*
எஸ். சங்கரநாராயணன்

மொட்டை மாடியில் இருந்து சூர்யோதயமும் அஸ்தமனமும் விவரிக்க இயலாத கிளர்ச்சி அனுபவமாய் இருந்தனது.

ஊரில் அவன் பிளாட், தரைத்தளமும் இல்லாமல் மேல்தளமும் இல்லாமல் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும். மொட்டைமாடி மேல்தளத்துக்காரர்களின் குத்தகை போல. மேல்மாடியில் தளத்தையே மறைத்து அட்ச தீர்க்க ரேகைகளாய்க் கொடிகள்., எப்பவும் யார் வீட்டுத் துணிகளாவது காய்ந்து கொண்டிருக்கும். உள்ளே முகம் தெரியாமல் ஒரு குழந்தை உரக்கப் பாடம் படிப்பது மாத்திரம் கேட்கும். காற்றாடக் கொஞ்ச நேரம் போய் உட்கார முடியாது.

மாடியில் இருந்து தெருக்கோடியும் அதைத் தாண்டி ஊரெல்லை வரை கூடப் பார்க்க முடிகிறது. பால்காரன். கோலம் போடும் பெண்களின் முதுகுப்புறம். புதுப்பட அறிவிப்புப் பலகையுடன் சினிமா வண்டி.

தூரத்துப் பசிய வயல்கள். காற்றுக்குப் பயிர்கள் ஒருசேரத் தலையசைப்பது என்ன அழகு... எம்பியெஸ்ஸின் சேர்ந்திசை போல. நடுவே பாம்பாய் வளைபாதையில் பஸ்ஸோúô லாரியோ சைக்கிளில் மனிதர்களோ போவது தெரியும். தோள்ச் சுமையுடன், குளித்த ஈர உடைகளுடன் ஜனங்களின் நடமாட்டம் பார்க்கலாம். காலை இருள் பிரியப் பிரிய மஞ்சளாய் ஆரஞ்சாய் நீர்த்த நீலமாய் நிறக்கலவை உருமாறி வழிந்தோட, சட்டென்று பாலாய்ப் பொங்கியது வானம்.

சுமதிக்கும் இந்த ஊர் பிடித்துப் போயிற்று. அவனாவது சிறு வயதிலில் இருந்து கிராமத்துச் சூழலில் பழகி, பின் காலத்தின் நெருக்குதலில் நகரம் ஒதுங்கி, இப்போது மீண்டும் இழந்த அழகுகளைத் திரும்பப் பெற்றவனாக இருந்தான். இவளுக்கு இங்கே ஒத்துப் போகும் என்று எதிர்பார்க்கவில்லை.
நகரத்தில் பிறந்து வளர்ந்தவள் அவள். சதா புதுப் புது அனுபவங்களுடன், பரபரப்பானது அவளது அன்றாடம். காத்திருப்பது என்பது பொழுதுகளை வீணடிப்பது என்றே அவள் உணர்கிறாள். காத்திருப்பின் கவிதைத்தன்மையை அவள் உணர்ந்தவள் இல்லை. எல்லாம் தன் வசம், தன் அறிவின் நிழலில்... என்கிற அவளது அணுகுமுறையில் அவனுக்கு அதிக உடன்பாடு இல்லை, அது தவறு என்று அவனால் சொல்ல முடியாவிட்டாலும் கூட....

திண்ணை வைத்து உள்நீளமான வீடுகள். பெண்கள் வாசல் திண்ணையில் தானியங்கள் புடைத்துக் கொண்டு, உட்கார்ந்து தலைகோதிச் சிக்கெடுத்துக் கொண்டு, வாசலில் நெல்லோ மிளகாயோ பரத்தி அளைந்தபடியே சினிமாக்கதை பேசினார்கள். சுமதி வருவதை கவனித்து அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு வெட்கமாய்ப் புன்னகைத்தார்கள். பேசும் கதையை விட அவர் களுக்கு சுமதி சுவாரஸ்யமாய் இருந்தாள்.

காலை விடியலில் ஆற்றங்கரைக்கோ ஊருணிக்கோ போய்த் துவைத்துக் குளித்து அவர்கள் ஈர உடைகளைத் தோள்களில் குவித்துக் கொண்டு,. ஈர மணலின் குறுகுறுப்பும் புடவைத் தடுக்கலுமாய்ப் புது நடை நடந்து வந்தார்கள். வீட்டில் குளியல் அறையில் குளிப்பவள் என்று சுமதி மீது அவர்களுக்கு மரியாதை இருந்தது.

கோயிலுக்கோ கடை கண்ணி என்றோ அவள் வெளியே கிளம்பினால் அவர்கள் அவளை வைத்த கண் வாங்காமல் கவனித்தார்கள். அவள் அணிந்து கொள்ளும் உடை, அதை அவள் அணிந்து கொள்ளும் முறை, அவள் செய்துகொள்ளும் அலங்காரம்.... இதைப் பற்றி யெல்லாம் அவர்கள் பிறகு பேசிக் கொண்டார்கள். சிறு உதவி என அவள் விரல சைத்தாலே அவர்கள் சிரமேற்கொண்டு அதைச் செய்து கொடுத்தார்கள்.

தான் கொண்டாடப் படுவதை, குறைந்தபட்சம் தன் அருகாமை உணரப் படுவதை அவள் விரும்பினாள், என அவன் நினைத்துக் கொண்டான். அது அவளது இயல்பு. வீட்டில் அநேக சந்தர்ப்பங்களில் அவள் தன் அப்பாவைக் கைனடிக் ஹோண்டா வில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்தில் விட்டிருக்கிறாள். கல்லூரிக்குப் போய்விட்டு, வீடு திரும்பத் தாமதமாகி விட்டால், தனியே ஆட்டோ பிடித்து வீடு வந்து விடுவாள்.....

இன்றைக்கும் எங்கள் விஜயாவுக்குத் தனியே கல்லூரி போய்வரத் தெரியாது. "அவ என்னிக்குதாம்மா கத்துப்பா?" என்று அவன் கேட்டால்,"கூடப் போய்ட்டு வாங்க. பஸ் ஸ்டாண்டு வரைதானே? அதுகூட முடியலியா உங்களுக்கு? வேற எதுக்குடா நீங்க கூடப் பொறந்திருக்கீங்க?" என்பாள். அம்மா சொன்னால் சரி, மாற்றிப் பேச யாருமில்லை அங்கே.

மூன்று படுக்கையறைகள் கொண்ட பெரிய ஃபிப்ளாட்டில் அவன், அண்ணா வெங்கடேசன், அவன் மனைவி சந்திரா, குழந்தை ரேணுகா, தங்கை விஜயா, அவனும் சுமதியும், கூட அம்மா.... என்று கூட்டுக் குடும்பமாக வாழ்வதே சுமதிக்கு என்னமோ போலிருந்தது. கல்யாணம் ஆனதும் சின்னஞ் சிறுசுகளைத் தனிக் குடித்தனம் வைக்கிறதைப் பார்த்துப் பழகியவள் அவள்.

நடுவாய், வட்டத்துக்குள் பம்பரமாய், அச்சாய் வளைய வந்தாள் அம்மா. எத்தனை மணிக்குப் படுத்தாலும், வழக்கமான காலையில் அம்மா விழித்துக் கொள்வாள்.... இன்னிக்கு ரேணுகா வுக்குச் சீக்கிரம் போகணும்னாளே, முரளிக்கு இன்ஸ் பெக்ஷன்னானே.... அவளுள் உள் நரம்புக்குள் செய்தி துடித்துக் கொண்டிருந்தது. அதுதான் அவளது அலாரம்.

அம்மாவின் குடைக்குள் எல்லாரும் அங்கே அடங்கிக் கிடந்தாற் போலிருந்தது. சுமதிக்கு. ஆண்களே அவளது ஆளுமைக்குக் கீழ்ப் படிந்தவர்களாக வளைய வந்தது அதிசயம் போலவே பட்டது. ஆண்மை என்பது முரட்டுத்தனமும் வலிமையும் வேகமும் எனவே அவள் அறிந்திருந்தாள். அவள் தம்பி சேகர் - கம்பியூட்டர் கம்பெனியில் வேலை அவனுக்கு. பரபரப்பானவன். ஓய்வே கிடையாது. அவன் பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும். நுனி நாக்கு ஆங்கிலம். அம்மாவே அவனை, சின்னப் பையன்... என் வயிற்றில் பிறந்தவன் என அணுக முடியாது.

சுமதி கல்யாணமாகி வந்த தினத்தில் எல்லாருமே வீட்டில் இருந்தார்கள். வீடே கலகலப்பாய் வெளிச்சமாய் இருந்தது.... அவன் சற்றே பெருமையுடன் சுமதியைப் பார்த்தான். ஒரே வீட்டில் இத்தனை மனிதர்கள் அடைசலாய் அதுவும் உற்சாகமாய் இருப்பதே அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சாதாரண அந்த வீட்டுக் கூட்டமே அவளுக்குக் கல்யாணக் கூட்டம் போல இருந்தது.... தன் வீட்டின் அமைதியில் அவள் நெவில் ஷுட், மேரி கொரல்லி என்று யாரையாவது வாசித்துக் கொண் டிருப்பாள். ரேடியோ கேட்பாள். சில சமயம் கூடவே பாடுவதும் உண்டு.

இத்தனை மனிதர்கள் மத்தியில் வாழவே அவளுக்குத் திகைப்பு. ரகசியங்களை, அந்தரங்கங்களை இழந்தாற் போலிருந் தது. நடமாடவே கூச்சமாய் இருந்தது. அந்தரங்கத்தைப் பேணுதல் காற்றில் அலையும் சுடரைக் கைக்குள் பேணுதல் போல.... அந்தரங்கம் ஒரு மனிதனின் உள் அழகுகளைப் பெருக்குகின்றதுன. என் தாயாரைக் காட்டிலும் சேகரின் உலகம் பெரியது என்பதைது நாங்கள் யாவருமே உணர்கிறோம்....

எல்லாரும் ஒருசேர வீட்டில் இருப்பது சுமதிக்குத் தலைவலி தந்தால், மாமியாருக்கு அது எத்தனை சந்தோஷம் தந்தது!. வீட்டில் முறுக்கோ, உளுந்து வடையோ, அடையோ பண்ணவும்.... மருதாணியரைத்து வரிசையாய் ஆட்களை உட்கார்த்தி உள்ளங்கையில் இட்டுவிடவும்... மாமியார் புது வேலைகளில் உற்சாகப் பட்டாள். இருக்கிற வேலைகளே திகைப்பளிக்கும் எனக்கு... என சுமதி நினைத்துக் கொண்டாள். மாமியார் இரவில் ஒரு கல்சட்டி நிறையச் சாதம் பிசைந்து மாடிக்கு எடுத்து வந்தாள். வடுமாங்காய் பிய்த்துப் பிய்த்துச் சேர்த்தபடி சுற்றிலும் எல்லாரையும் உட்கார வைத்துக் கொண்டு கை கையாய்ப் போட்டாள்.... கோவிலில் பிரசாதம் என்று சுண்டல் தருகிறாற்போல., அம்மாவின் கைமணமே அலாதிதான், என்று அவள் கணவனும் போய் உட்கார்ந்து கொண்டான். சீச்சீ, என்ன இது வெட்கமில்லாமல்.... என்றிருந்தது. இந்த லெட்சணத்தில் அவளை வேறு சாப்பிட அழைக்கிறான். பசியில்லை, என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. சின்னவர் பெரியவர் வித்தியாசங் கூடவா இல்லாமல் போகும்?

இன்னொரு பெண்தானா நான் இவளுக்கு? கல்யாணம் என்பது இன்னும் சற்றுப் பொறுப்புக் கூடிய நிலையெனவே அவள் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு புதிய வீட்டுக்கு வந்திருந்தாள். தற்காத்து, தற்கொண்டாற் பேணி.... தனது வியூக எல்லைகளை, சிறகுகளை விரித்துக் கொள்ள அவள் எதிர்பார்த்திருந்தாள்.

முதலில் அவனுக்குப் பிரியமானவளாகி, அவன் தேவைகளை உணர்ந்துகொண்டு, தனது அருகாமையை அவன் உணர வைத்து, திருமண வாழ்க்கையைச் சற்று மேம்பட்டதாக ஆக்க, அவளுக்கு இங்கே வேலையே இல்லாமல் போயிற்று.... இங்கே வந்து மாமியாரிடம், அவள் என்னைப் பற்றிக் குறை சொல்வதைக் கேட்டுக்கொண்டு நிற்கிற சங்கடம் நேருமோ.... என்கிற பிரச்னை இல்லாததில் முதலில் ஆசுவாசமாய்க் கூட இருந்தது. நாளாவட்டத்தில், இலாகா ஒதுக்கப் படாத மந்திரி போல, தானே ஒதுக்கப் படுகிறோமோ என்கிற உணர்வைத் தாள முடியவில்லை.

சிறகுகள் முளைத்த பின்னும் அடைகாக்கப் படுகிற நிலை, தாய்மைக் கதகதப்பில் இதம் தேடுகிற எளிய நிலை.... அதிலும் இந்த விஜயா கொஞ்சுகிற சீராடல், அதை வாங்கித் தா, இதை வாங்கித் தா.... அம்மாவிடம் என்ன பேச? வேறெதற்குக் கூடப் பிறந்திருக்கீங்க? நாளைக்கு அவள் இன்னொரு வீட்டுக்குப் போகப் போகிறவள்.... என்று ஆரம்பித்து விடுகிறாள்.

வீட்டு வேலைகள் என்று அதிகாரப் பீடத்தில் அமர்ந்து கொண்டாள் அம்மா., சுமதியும் சந்திராவும் அம்மாவின் குற்றேவல்களுக்கு, சமையல் அறைக்கு வெளியே காத்திருந் தார்கள். காய்கறி நறுக்கிக் கொடுக்க வேண்டும். போய்த் தண்ணீர் எடுத்து வர வேண்டும்.... இப்படி. சீச்சீ, புருஷனுக்குச் சமைத்துக் கூடப் போட முடியாமல் ஒரு கல்யாண வாழ்க்கை எத்தனை அசுவாரஸ்யமானது!....
சமையல் ஆனதும், முதலில் ஆண்கள் சாப்பிட, அம்மா மேற்பார்வையில் இவர்கள் பரிமாற வேண்டும். ""“முரளிக்கு வெண்டைக்காய் போடு இன்னும் கொஞ்சம்''” என்பாள் அம்மா. யார் யாருக்கு என்ன பிடிக்கும் என்று அவளுக்குத் தெரியும். திட்டமான உப்பு - கார கைப்பக்குவம். ருசி ஒருநாளும் மாறியதேயில்லை... எப்படி என்று ஆச்சரியமாய் இருக்கும்.

அவள் சாப்பிட உட்கார்ந்தபோது அம்மா அவளை, எலுமிச்சபழ ரசத்தைக் கையில் வாங்கிக் குடிக்கச் சொன்னாள். எனக்குப் பிடிக்கும் என்று எப்போது கண்டு பிடித்தாள், தெரியவில்லை. "தெரியும்" என்று அம்மா புன்னகைக்கிறாள்.

"சரிம்மா,. ஸ்வீட்டில் எனக்கு எது பிடிக்கும், சொல்லுங்க பாக்கலாம்?"என்று வேடிக்கைபோலக் கேட்டாள் சுமதி.

"ஜாங்கிரி."

"எப்பிடிம்மா கண்டுபிடிச்சீங்க?" என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் சுமதி.

"உன் முதலிரவு அறையில் பார்த்தேன். காலைல அதைத்தான் மிச்சம் வைக்கல நீ..."

"ஒருவேளை இவர் சாப்பிட்டிருந்தா?" என்று வெட்கம் இடறக் கேட்கிறாள்.

"அவனுக்கு ஜாங்கிரி பிடிக்காது !"

நான் கவனிக்கவில்லையே என நினைத்துக் கொண்டாள் சுமதி. அவளுக்கு வருத்தமாய் இருந்தது.

பொறுப்புகளைத் தான் ஏற்றுக்கொண்டு காலை நேரத்தில் அவனை அலுவலகத்துக்கு அனுப்பும் வரை பம்பரமாய் அல்லாடி, அவனை அனுப்பியதும், ஸ் என்ற ஆசுவாசத்துடன் அலுப்புடன் நாற்காலியில் உட்கார்கிற நிலையை அவள் ஏக்கத்துடன் விரும்பினாள்.

அம்மாவின் ராஜ்யம்.... அவள் ஆள்வதைப் பற்றிக் கூட இல்லை.... எங்களுக்கெல்லாம் இலாகாக்களே இல்லையே? மாதம் பிறந்ததும் சம்பளம் வாங்கி எல்லாரும் அப்படியே அம்மாவிடம் கொடுத்து நமஸ்கரித்தார்கள். கைச் செலவுக்கு தினசரி அம்மா விடமே கேட்டு வாங்கிக் கொண்டார்கள். எனக்கு ஒரு அவசரச் செலவு வரும் என்றால், நான் என்ன செய்வது? மாமியாரிடம் கேட்பதா? அவளிடம் அனுமதி வாங்கிக் கொண்டு செலவு செய்வதே, அந்த நிர்பந்தமே பிடிக்கவில்லை. இதற்கு ஒரு வழி பண்ணியே ஆகவேண்டும்.... என்று உட்புழுக்கமாய் உணர்ந்தாள்.

மொட்டைமாடியில் துளசிச்செடி தொட்டிக்குள் காடென மண்டிக் கிடக்கிறது. காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு அம்மா மாடிக்குப் போனால், சந்திரா கூடப் போகிறாள். கொடித்துணிகள் அம்மா மேல் படாமல் பிடித்துக் கொள்வாள். அம்மா துளசிக்குத் தண்ணீர் ஊற்றிப் பிரதட்சிணம் செய்வாள். வணங்குவாள். சந்திரா மாதவிலக்கான ஒரு தினம் பொறுப்பு சுமதிக்கு வந்தது. ஏன் விஜயா போகட்டுமே.... என்று கோபம் கோபமாய் வந்தது."எங்கம்மா கிட்ட நீ ஏனோ வேத்துமுகம் காட்டறே!? பெரிய மன்னி அம்மாட்ட எவ்ளோ பிரியமா நடந்துக்கறா பாத்தியா?" என்கிறான் முரளி.

"அ..." என்று சிரித்தாள் சுமதி. "அவளை மனசைத் திறந்து பேசச் சொல்லிக் கேக்கணும் நீங்க. நீங்க ஆம்பளைங்க! கேப்பீங்களா? மாட்டீங்க...." என்கிறாள் சுமதி. "நீங்க கேட்டுப் பாருங்கோ. உங்கம்மாவை நார் நாராக் கிழிச்சித் தோரணம் கட்டிருவா... நானாவது பேசி ஆத்திக்கறேன். உங்கண்ணா பேசவே விட மாட்டார் போலருக்கு."

"எங்கம்மாவுக்கு அதிகாரப் பித்தோ ஆட்சி போதையோ கிடையவே கிடையாது. சின்ன வயசிலேயே எங்கப்பா தவறிட் டார். அஸ்ஸோúô.... அப்ப மட்டும் அம்மா தலை நிமிரலைன்னா எங்க கதி? நினைச்சிப் பாரு!. வீட்ல இன்னிக்கு நிறைஞ்ச மனுஷியா வளைய வரா. அதுக்கு தன்னையும் எங்களுடன் கூட தயார் பண்ணிண்டவ அவ. இல்லையா?"


அவள் முகம் சுருங்கப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. "அம்மாகிட்ட நீ கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு இவளே. அவ உன்னைத் தன் பொண்ணு மாதிரிதானே நடத்தறா? ஏதாவது வித்தியாசமா நடத்தறாளா, பேசறாளான்னு சொல்லு. பாக்கலாம்..."

அவன் வண்டி ஒழுங்காக ஓடும் வரை ஏன் கவலைப் படுகிறான்?. தன் ஸ்தானம் பற்றிய பிரக்ஞை உள்ள மாமியார், எங்கள் ஸ்தானங்களை அலட்சியப் படுத்துவானேன், என்றிருந்தது சுமதிக்கு. ஆம்! நான் இந்தக் காலப் பெண். அடக்குதலோ அடங்குதலோ இரண்டும் இல்லை. நாம் சுதந்திர உணர்வுடன் பரஸ்பர சுதந்திரத்தை மதித்து அங்கீகரித்து அனுமதித்து வாழ்வோம். அதுவே நியாயமானது.... இந்தப் பணிவு, மாமியாரிடம் வாலைக் குழைத்து வளைய வருவது போலியானது. அல்லவா?

"புரியலியே" என்றான் அவன். "உன் சுதந்திரம் எந்த அளவுல குறைப்பட்டுப் போச்சுன்றே? அம்மா உன்னை எந்த அளவுக்காவது கட்டுப் படுத்தறாளா? இந்த மாதிரிதான் உடையுடுத்தணும், இப்படிதான் இருக்கணும்.... வாசல்ல வந்து வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கக் கூடாது. இதைப் பேசணும், இதைப் பேசக் கூடாதுன்னு அட்வைஸ் பண்றாளா? உன் இஷ்டப்படிதானே இருக்கே நீ? அப்பறமென்ன?"

இவனிடம் பேசிப் பிரயோஜனமில்லை. இஅவன் ஒரே மாதிரி சிந்தித்துப் பழக்கப் படுத்தப் பட்டவன். மாற்று யோசனைகள் அற்றவன் இவன். அம்மா தியாகி. அவ முகம் கோணக் கூடாது... என்பதை மனசில் ஆழ வைத்துக் கொண்டிருக்கிறான். சென்டிமென்ட் அம்மாவின் சந்நிதிக் கற்பூரம்.

"இங்க பாரு!. இப்ப.... உன்ட்ட எப்படிச் சொல்றது?... ம்! இப்ப நாங்க அம்மா கீழ இருக்கம்ன்றே, எங்களுக்குக் கல்யாணமாகி தனிக் குடும்பம்னு ஆனப்பறம்.... தனிக்குடும்பம்ன்றதையே நாங்க நம்பல. சரி அதை விடு. இந்த வயசுலயும் அம்மாவைத் தலைமைச் செயலகமா வெச்சி இன்னும் குழந்தையாவே நாங்க நடமாடறதா நீ நினைக்கறே. இல்லையா?... சரி, அட ஒரு போதாத காலம். அம்மாவுக்கே ஏதாவது ஆயிட்டதுன்னு வையி. இந்தக் குடும்பம் திகைச்சு நின்னுடாது. அடுத்த பெரிய உறுப்பினர் தலைமை ஸ்தானம் எடுத்துப்பான். எங்க விஜயா கல்யாணமும் அம்மா இருந்தாலும் இல்லாட்டியும் ஜாம் ஜாம்னு நடந்துரும். அதைவிட...." என்று நிறுத்தினான்.

"இப்ப.... எனக்கோ அண்ணாவுக்கோ கூட ஏதோ ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சின்னா, அப்பவும் உனக்கோ மன்னிக்கோ பெரிய அளவுல வாழ்க்கை சீரழிஞ்சிறாது. இங்க சௌரியம் பண்ணிக் குடுப்பா அம்மா. புரியுதா? உங்களை விட்ற மாட்டா. அதான் கூட்டுக் குடும்பத்தோட மகிமை. அதாவது தனிக் குடித்தனத்துல ஒரு இழப்பு மரம் முறியறாப்ல திகைக்க அடிச்சுடும். கூட்டுக் குடும்பம்னா அதே இழப்பு கிளை முறியறாப்ல...."

விஜயாவை எங்க போனாலும் கூடப் போய்க் கூட்டி வருவது, அண்ணன் தங்கைப் பாசத்தை உணர்வு மங்கவிடாமல் காக்கிற அம்மாவின் உபாயம் அல்லவா? நாளை அவ கல்யாணம் என்று வரும்போது சகோதரர்கள் வேத்துமுகம் காட்டிவிடக் கூடாது. என் சம்பளம் இவ்வளவு... நான் இவ்வளவுதான் தர முடியும்... என்பதான பிரச்சிசனைகளை அம்மா கவனமாய்த் தவிர்க்க விரும்புகிறாள். சரிதானே? இதையெல்லாம், இந்த அழகுகளையெல்லாம் தொலைத்து விட்டு, வாழ்க்கையை நம்பிக்கை அடிப்படையில் எளிமையாக்கிக் கொள்ளாமல், அறிவு அடிப்படையில் சிக்கலாக்கிக் கொள்வது தேவைதானா, என்பது அவன் கட்சி.

அம்மாவின் ஜெராக்ஸ் நகல்கள் இவர்கள். அன்பினால் அந்த வீடு முழுவதும் அவள் நிரம்பியிருந்தாள். குழந்தைகளுக்குப் பாட்டி என்றால் உயிர். தாய்ப்பால் ஒன்றுதான் அவள் கொடுக்கவில்லை. இருந்தால் அதையும் அவள் கொடுத்திருப்பாள்.... இந்த வயசிலும் இவனும் குடிக்கத் தயார், என நினைக்கையில் சிரிப்பு வந்தது அவளுக்கு.

அவன் அம்மாவை அவன் புரிந்து கொள்ள வேண்டுமானால், நானோ, இவரோ, வேறு பிரஜைகளோ.... தான், தனது என்கிற சுயரூபங்களுடன் நடமாடி அல்லது உருப்பெருகிக் காட்ட வேண்டும். அதை அம்மா எப்படி எடுத்துக் கொள்வாள் என அவன் நேரடியாய்ப் பார்க்க வேண்டும். நினைவு அளவிலேயே இவன் திகைக்கிறான். விபரீதங்கள் நிகழ்ந்து விடுமோ எனப் பதைபதைக்கிறான். இவளால் எதும் குழப்பம் விளைந்து விடுமோ எனப் பதறுகிறான்.... என்ன செய்ய!...
.
அப்போதுதான் அந்தச் செய்தி வந்தது.
அவனுக்கு வருத்தமான, அவளுக்கு உற்சாகமான செய்தி. "டிரான்ஸ்ஃபரா, எந்தூருக்கு?" என அவள் ஆர்வமாய்க் கேட்டாள்.

ஆ. ஒருவழியாய் மனைவியானேன் என்று சுமதி ஆசுவாசப்பட்டாள். இங்கே வந்ததில் விடுபட்டாற் போலிருந்தது. நீளப் பெரிய வீடு, அவளது ஆளுமைக் கீழ் வந்தது... எவ்வளவு நிம்மதியாய் இருக்கிறது. "ரேணுகாவுக்குப் பரிட்சை. சுமதி கொஞ்சம் டி.வியை அணைச்சிர்றியா?" பாலமுரளி பாடறான். ஜாலமுரளி. கொஞ்சமாச்சும் ரசனை இருக்கா இதுங்களுக்கு? மாடில போய்த்தான் படிக்கட்டுமே என்றிருக்கும். எப்பவும் டி.வி முன்னாடியா நான் உக்காந்திருக்கேன். ஒரு அரைமணி நான் பாக்கறேன். விடக்கூடாதா?.... "பெரியம்பி தலைவலின்னு லீவு போட்டுட்டு வந்து படுத்துண்டிருக்கான். பாடாதே...." எல்லாம் நான் சொல்வதை நீ செய், ரகக் கட்டளைகள். அப்பா எவ்ளவு ஆர்வமாய்ப் பாட்டு சொல்லி வைத்தார். பாடப்பாட ராகம் மூட மூட ரோகம்....

சுவாமி விளக்கேற்றி முன்னால் உட்கார்ந்து கொண்டு நாலு கீர்த்தனை பாடினாள். நிதி சால சுகமா?... இல்லவே இல்லை. சுதந்திரம் வேண்டும். அதுதான் சுகம். சத்தமில்லாமல் பின்னே வந்து கேட்டுக் கொண்டிருந்தான் முரளி. இவள் கவனிக்கவேயில்லை. கையைத் தட்டி "கல்யாணி. இல்லே? பிச்சிட்டியே" என்கிறான். இத்தனை நாள் இந்த ரசனையை எங்கே வைத்திருந்தான் தெரியவில்லை.

இந்தச் சமையல்.... அதுதான் கொஞ்சம் பிசிறடித்தது. ஒருநாள் உப்பு தூக்கல். ஒரு தினம் உப்பு போட மறந்தே போனாள். புளி கூடிப் போனது. மாமியார்க்காரி ஆளுகையில் அத்தனை பேரையும் தன் கைமணத்தால் கட்டிப் போட்டிருந்தாள். இப்போது சமைத்து இறக்கவே சிறிது உதறலாய் வெட்கமாய் இருந்தது.

"சாம்பார் பரவால்லியா?" என்று கேட்டால் புன்னகைக்கிறான். அதுவும் கேட்டால்தான். அவளுக்கு அழுகையும் உட்குமுறலுமாய் இருந்தது. சமையல் முன்னப்பின்ன இருந்தால்தான் என்ன? நாளா வட்டத்தில் கத்துக்க மாட்டேனா?...

கொஞ்சம் அசந்து மறந்து வேறு வேலையில் இருந்து விட்டால் சட்டென்று அடுப்பில் கருகுகிற வாசனை. கதவைத் தாழ் போட வந்து, வாசலில் யாரோடோ ஒரு வார்த்தை பேசுமுன் உள்ளே பால் பொங்கி அடுப்படி யெங்கும் சிரித்துக்கொண்டு கிடக்கிறது. கேலிச் சிரிப்பு. ஏதாவது சரியாக வரவில்லை என்றால் அவளுக்கு அவமானமாகி அழுகை வந்து விடுகிறது. "ஐயய்ய.... நீ கிளம்பற முன்னாடி அம்மாட்டக் கத்துக்க வேண்டிதானே?'' என அவளை அணைத்துக் கொண்டான் முரளி. தெரியாது என்று மாமியார் முன் நிற்க சங்கோஜம். அதைச் சொல்ல முடியுமா? "நீ இன்னும் எங்கம்மாவை வேத்தாளாத்தான் பாக்கறே...." என்று வருத்தப்படுவான்.

நம்பிக்கையுடன் பரிமாறப்படும்போது அன்பு இரட்டிப்பாகிறது. துயரம் பாதியாகிறது அது சரிதான். அன்பு என்பது சிறு சிறு அளவில் காட்டிக் கொள்வதும் உள்ளடக்கியதுதான். இந்தக் குடும்பச் சூழலில் சீராடும் விஜயா எங்கிருந்தாலும் நல்லாருப்பா. அம்மா வளர்ப்பு முறை அப்பிடி....

"உனக்கு ஒரு அவசர உதவின்னா உங்க சேகர்... என்ன பண்ணுவான்? பணம் அனுப்புவான். கூடக் கூட்டி வெச்சிக்க நினைப்பானா? சொல்லு பாப்பம்? எல்லா சந்தர்ப்பங்களையும் பணத்துனால நிரப்பிற முடியுமா?" என்பான் முரளி. "நீயும் போய் அவன் நிழல்ல நிக்க விரும்ப மாட்டே. அது வேற விஷயம்...."

இந்த கிராமமும் இந்த ஜனங்களும் அவளைக் கொண்டாடினார்கள். அவனுக்கு அது ஆறுதலாய் இருந்தது. இந்த இடைவெளி அம்மாவை அவள் புரிந்து கொள்ள உதவும் என முரளி நம்பினான்.

அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது. அவன் முகம் மலர கடிதத்தைப் பிரிப்பதைப் பார்த்தாள். புன்னகை செய்து கொண்டாள். அற்புதமாய் இருக்கும் அம்மாவின் கடிதங்கள். அவனை தூரத்தில் அனுப்பிய பாவனை இராது அதில். சங்கடமிராது.... அவளுக்குத் தெரியும். அம்மா எப்போதும் தன் குழந்தைகளின் அருகில் இருக்கிறாள். குழந்தைகள் அவள் அருகில் இருக்கின்றன.... இடையே காலமும் தூரமும் ஒரு பொருட்டல்ல அவளுக்கு.

எதிரே தூணருகே நின்றபடி அம்மா பேசுவது போலவே இருக்கிறது. அவனை, அவளை, புது ஊரை என்று விசாரித்து எழுதியிருக்கிறாள் அம்மா. சமையல் எப்படிப் பண்ணுகிறாள் சுமதி, என்கிற கேள்வியை வாசித்துவிட்டு அவன் உரக்கச் சிரித்தான். அவளுக்கு என்னவோ போலிருந்தது. கவலைப்படாதே, அவள் சாமர்த்தியசாலி, தானே எல்லாம் கத்துக்குவா.... என்று முடிகிறது அம்மாவின் கடிதம்.

அவன் சிரிப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் திரும்பவும் அழுகை வந்து விட்டது. "அடி அசடே, எவ்ளோ தைரியமா, நினைச்சதையெல்லாம் நீ எங்கிட்ட பேசறே? இப்பிடி அழலாமா? என்ன ஆயிட்டது இப்போ?"

"போயி சமையற்கலை, மீனாட்சியம்மாள் புத்தகம் வாங்கிட்டு வாங்க.... அப்பறம் பாருங்க" என்கிறாள் சுமதி.

"டசின்ட் மேட்டர் பேபி" என்கிறான் அவன். "இங்க பாரு. நீ என்ன நினைக்கிறே, அம்மாவோட சமையல் அவள் கையிலயா இருக்குன்னு நினைக்கறே? வெறும் டெக்னிக் சார்ந்த விஷயம்னா நினைக்கறே? கம்பியூட்டர் மியூசிக்குக்கும் கிரியேட்டிவ் மியூசிக்குக்கும் வித்தியாசம் இல்லியா?"
அவள் அவனைப் பார்த்தாள்.

"வெறும் மோருஞ்சாதம்.... அம்மாவைப் பிசைஞ்சி போடச் சொல்லு... ஆகா ஆகான்னிருக்கும். உனக்கே தெரியும், அது பூராவும் அம்மாவோட அன்புடி. அந்த ஊர்ச் சமையல், அந்த ஊர்ப் பருப்புன்னில்லை... நம்ம வீட்ல, இங்க வந்து அம்மா கரண்டியப் பிடிக்கட்டும். ஊருக்கே வாசனை தூக்கறது... எப்பிடி? முரளிக்கு இது பிடிக்கும். சுமதிக்கு இது பிடிக்கும்னு பாத்துப் பாத்து அவ பண்றா.... அந்த ஆசை. பிரியம்.... அதில்லையா முக்கியம்.... எனக்கு ஆசையில்லியான்னு உடனே ஆதங்கப்படாதே. உன் பிரியத்தை நீ ரொம்பச் சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக்கறே. நீ, உன் புருஷன்... தவிர வேற உலகத்தைப் பார்க்க மாட்டேங்கறே நீ. அம்மாவையே.. உன்னோட என்னைப் பங்கு போட்டுக்க வந்திட்டா மாதிரி நினைச்சி நீ மயங்கறே. தடுமார்றே. அது தேவையே இல்லை. ஒருத்தனுக்கு அம்மாவும் முக்கியம். மனைவியும் முக்கியம். ரெண்டும் வேற வேற நிலை. இல்லையா?"

இந்தப் பிரச்னை எப்படி முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. குழப்பமாய் இருந்தது. ஆனால் எதிர்பாராமல், தற்செயலாய் நிகழ்ந்தது அந்த முடிவு. ஆச்சரியம்.

இந்த ஊரில் அவளுக்குக் கிட்டிய மரியாதை, தனது பழக்க வழக்கங்களினாலும் கூட என அவள் உணர்ந்திருக்க வேண்டும். அது ரீதியான தனது ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமுகமாகவும் இருக்கலாம். அல்லது, வீட்டில் தனக்குக் கிடைத்த உபரி நேரத்தைப் பயன்படுத்து முகமாகவும் இருக்கலாம். சுவாமி விளக்கேற்றி தினப்படி பூஜைகளை அவள் மேற்கொள்ள ஆரம்பித்தாள்.

அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதிகாலை தன்னைப்போல எழுந்து கொள்கிறாள். பின்முற்றத்தில் துளசிச்செடி வைத்திருந்தாள். குளித்துவிட்டு ஈரத்துண்டில் கூந்தலை முடிந்தபடி, மடிசார் கட்டிக்கொண்டு, துளசிக்கு நமஸ்காரம் பண்ணுகிறாள். தெரு ஜனங்கள் அவளைப் பார்த்து மரியாதையுடன் கை கூப்புகிறார்கள். வாசலுக்கு வந்து சூரியனைப் பார்த்து வணங்குகிறாள். வாய் தன்னைப்போல சுலோகங்களை முணுமுணுக்கிறது. பூஜையறை சந்தனமும் ஊதுபத்தியும் கற்பூரமும் மணத்துக் கிடக்கிறது.

அம்மா என்றொரு அன்பு மகா சமுத்திரம். அம்மா.... என அவன் வாய் முணுமுணுக்கிறது. எங்களுக்கு மட்டுமா அவள் அம்மா... அலுவலக நண்பர்கள், கல்லூரி சிநேகிதர்கள் அத்தனை பேருக்கும் அவள் அம்மா. அவள் கையால் தோசை வார்த்துச் சாப்பிட வேண்டும் என்றே அலுவலகத்தில் இருந்து வருவார்கள். "உங்க வீட்டு மிளகாய்ப்பொடி ஏ ஒன்."

அன்றைக்கு சுமதியின் சாப்பாட்டைச் சாப்பிட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனான். அவள் கையைப் பிடித்து முத்தங் கொடுத்தான். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு அம்மா இருக்கிறாள். மறைந்துகொண்டு, என நினைத்துக் கொண்டான் அவன்.

*

storysankar@gmail.com – Mob 91 97899 87842

Monday, January 5, 2015

நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன்
வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி


*
பதிப்புரை

சங்கராபரணம்


96-ம் ஆண்டு.

தினமணி கதிரில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். ஞாநி தினமணி கதிர் பொறுப்பாசிரியராக இருந்தார். 'எஸ்.சங்கரநாராயணன் எவ்வளவு அருமையாக எழுதுகிறார்... ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான இடம் ஏன் கிடைக்கவில்லை' என்று கேட்டார். அந்த உரையாடலின் போது எஸ்.சிவகுமார், கவிஞர் ராஜமார்த்தாண்டன் ஆகியோர் இருந்தனர். அபிப்ராயங்கள் வளர்ந்தன.

நான் அந்த இடத்தில் இருந்தேன். அவர்கள் எல்லோரையும்விட சங்கரநாராயணன் எனக்கு நல்ல நண்பர். சில நேரங்களில் நல்ல ஆசானாக இருப்பவர். எனக்கு அந்த விவாதம் தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதலாக இருந்தது.

இறுதியில் ஞாநி கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. 'திறமைமட்டும் இருந்தால் இலக்கியத்தில் புகழின் உச்சத்தை அடைய முடியாதா? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?'

என்னவெல்லாமோ செய்கிறார்கள். கேள்விப்படுகிற விஷயங்கள் கூச்சத்தைத் தருகின்றன. ஓர் எழுத்தாளன் செய்யக் கூடாததை எல்லாம் செய்து, எழுதிப் பிழைக்கிறார்கள். சங்கரநாராயணன் அப்படியானவர்களில் ஒருவராக இல்லாததே பெருமை.

எஸ்.சங்கரநாராயணன் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியவர். 75 நூல்களுக்கு மேல் எழுதியவர் என்பதைவிட, முக்கியமானது ஒன்று உண்டு. பல இளம் எழுத்தாளர்களை அவர்களின் முதல் சிறுகதைகளிலேயே இனம் கண்டு, எழுதத் தூண்டுகிறவர். பல எழுத்தாளர்களுக்கு இல்லாத இந்தக் குணம்தான் அசாதாரணமானது. இலக்கிய உலகில் அவருக்கு அது ஏற்படுத்தியிருக்கும் இடம், மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத பாக்கியம்.

***
சிறுகதை எத்தனை அபூர்வமான கலைவடிவம்?
ஒரு நல்ல சிறுகதையின் முதல் வரியே நம்மை புதிய சூழலுக்குப் பழக்கிவிடுகிறது.

'தேவகி அக்காவை பொண்ணு பார்க்க வந்தார்கள்." வம்சம் என்ற இந்தத் தொகுப்பின் முதல் கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

'கிளிமூக்கு மங்கலம் நேர்வழி போனால் மூணரை கிலோ மீட்டர். குறுக்கு வழியில் போனால் முந்திப் போய்விடலாம்..'

இது இரண்டாவது கதையின் ஆரம்பம்.

ஹென்றியின் கடைசி வரி ஒட்டுமொத்த கதையையும் புரட்டிப் போடுவதுபோல, நல்ல சிறுகதை எல்லாமே நம்மைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் நல்ல ஆரம்பத்தோடுதான் தொடங்குகின்றன. சங்கரநாராயணன் கதைகள் எங்கே ஆரம்பிக்கப்பட வேண்டுமோ அங்கே ஆரம்பமாகி, எங்கே முடிய வேண்டுமோ அங்கே முடிகின்றன.
எழுத்தாளனுக்கு இதைவிட வேறு என்ன கொடுப்பினை வேண்டும்?

***
எழுத்தாளர் சங்கரநாராயணன் எனக்கு சிறுகதை எழுதக் கற்பிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் நான் எழுதிய சிறுகதைகள் மூலமாகவே அந்தக் கற்பித்தல் தொடங்கும். பத்திரிகையில் நான் எழுதிய சிறுகதை ஒன்று வெளியாகும். அந்தக் கதையைத் தொட்டு பத்து கதைகளையாவது சொல்வார். கதையோடு கதைகளை உரசிப் பார்த்துக்கொள்வதற்கான ஓர் அனுபவம் அது. ரஷ்ய, ஜெர்மன், லண்டன், அமெரிக்க… என கதைகள் விவாதம் விரியும். அனுபவமும் விரியும்.

மிக வேகமாக படிக்கவும் எழுதவும் தெரிந்தவர். எனக்குத் தெரிந்து எழுத்து அவருக்குத் தவம். இப்படிச் சொல்வது பழைய உவமைதான். என்றாலும் இதைவிட பொருத்தமான உவமை என்னிடம் இல்லை. எழுத்தைத் தவமாக நினைக்காத எத்தனையோ பேருக்கு அந்த உவமை வீணாகிவிட்டது என்றும் நினைக்கிறேன்.

நான் பத்திரிகையில் இருப்பதால் தொடர்ந்து அவரிடம் இருந்து கதைகள் வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன். கேட்டதும் கொடுப்பவர் கிருஷ்ணர் மட்டுமா, சங்கரும்தான். ஓவியரிடம் படம் வரையச் சொல்லிவிட்டு கதை கேட்கலாம். அவ்வளவு வேகம். இவர் விஷயத்தில் வேகம், விவேகம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

***
இவருடைய எழுத்துக்களின் ரசவாதம் அபரிமிதமானது. இருட்டில் லாரியில் பயணம் செய்வதை எழுதினால் (லாரி) நமக்கு குளிரும் குலுக்கலும் ஏற்படும். கட்சிக்காரர்கள் ஸ்ட்ரைக் நடத்தினால் பதற்றம் தொற்றிக்கொள்கிறது (கதவடைப்பு). ஒரு சூழ்நிலைக்குள் நம்மை லாகவமாக அழைத்துச் செல்வதில்- கதையின் மனச் சித்திரத்தை உருவாக்குவதில் - எஸ்.சங்கரநாராயணன் சூரர்.

திருட்டு என்ற கதை. அதில் இருட்டும் திருட்டும் போட்டிபோட்டு விரட்டும். திருடனின் உத்தி, அவனுடைய மனஓட்டம்... இப்படியாக விவரித்துச் செல்கிறார். நாமும்கூட நேர்மையான போலீஸ் அதிகாரி இருப்பதுபோல ஒரு நேர்மையான திருடனாக இருக்கலாம் போல ஆசை ஏற்படுகிறது. 247 எழுத்துகளை வைத்துக்கொண்டு இவர் செய்யும் ரசவாதம் இது.

இந்தத் தொகுப்பில் சௌந்தர்ய லஹரி, பழையன புகுதலும் புதியன கழிதலும், மேளா ஆகியவை மனப் பிறழ்வைச் சுற்றிச் செல்லும் கதைகள். பைத்தியங்களில்தான் எத்தனை வகை?

புத்திசாலியாக இருந்தாலும் வேலை கிடைக்காது என்கிற சேக்ஸ்பியரும் வெங்காயமும் கதை, எத்தனை புத்திசாலித்தனமான கதை?

வம்சம், துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை, நாங்கள், ஊதல் உதைபட வாழ்தல், ஒலிச்சித்திரம், மெழுகுவர்த்தி, ரசாபாசம் போன்றவை யூகிக்க முடியாத திருப்பங்கள் கொண்டவை. ஆனால், யாரும் யூகித்துவிடக் கூடாது என்ற பிரயத்தனம் தொனிக்காதவை. அதுதான் கதையின் முடிவின்போது ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

***
சமகால எழுத்தாளர்கள் பலரை எனக்கு நேரடியாகத் தெரியாது. அவர்களில் பலரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் சங்கரநாராயணன். அவர்களில் சிலரைப் பற்றிய அபிப்ராயங்களை என் மனத்தில் உருவாக்கிவிட்டவரும்கூட.

அவை பெரும்பாலும் என் சொந்த அனுபவத்திலும் சரியாகத்தான் இருந்தது. இருவரும் ஒரே மாதிரி யோசிக்கிறோமா? இல்லை. இருவருக்கும் சில அலைவரிசை பொருத்தம்.

***
என்னை முதன்முதலாக சிறுகதை எழுத்தாளராக அங்கீகரித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் எஸ்.சங்கரநாராயணன் ஒருவர். புகழேந்தி தங்கராஜ், பாவண்ணன் போன்ற சில முதல் முக்கியமானவர்கள் உள்ளனர்.

என்னைப் பதிப்பாளராக அங்கீகரிப்பதில் ஒரே முக்கியமானவர் சங்கரநாராயணன் மட்டும்தான். ஒரே நேரத்தில் இரண்டு நூல்களைப் பதிப்பிக்கக் காரணமாக இருக்கிறார். எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் எழுதிய 'எல்லா கோட்பாடுகளும் அனுமானங்களே' என்ற கட்டுரைத் தொகுப்பும் 'நன்றி ஓ ஹென்றி' சிறுகதை தொகுப்பும் என்னைப் பொக்கிஷம் புத்தக அங்காடியின் 'அதிபரா'க்கி உள்ளன. அவருக்கு நன்றி.

ன்னுடைய சிறுகதை தொகுப்பு ஒன்றுக்கு அவர்  எனக்கான ஆற்றுப் படை ஒன்றை முன்னுரையாக எழுதினார். இது அவருக்கு நான் சூட்டும் ஆபரணம்

அன்புடன்,
தமிழ்மகன்
4.1.15