Wednesday, May 4, 2022

 

May 2022 / பேசும் புதிய சக்தி இதழுக்கு நேர்காணல்

உரையாடல் – நா. விச்வநாதன்

பதில்கள் எஸ்.சங்கரநாராயணன்

 


Ø “எழுத்து என்பதே வாசகன் மீது

Ø நிகழ்த்தப்படும் சிறிய வன்முறை.”

-----

நிறைய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைகள், கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் எனப் போட்டிருக்கிறீர்கள். எல்லாமே வாசக கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன. இது ஒருவகையில் வெற்றி என்றாலும் எழுத்தின் நோக்கம் பூர்த்தியானதா? சாதனை எனக் கொள்ளலாமா?

• என்னைப் பேட்டி என்று அழைத்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும். ஆமாம். ஒருவேளை நிறையத்தான். எல்லாமாக ஒரு நூறு நூல்கள் இருக்கலாம். திரும்பிப் பார்த்தால் எனக்கே இது ஆச்சர்யம் தான். வாசகர்கள் மாத்திரம் அல்ல, என் பதிப்பாளர்களே (ஏறத்தாழ ஒரு டஜன்) எனது சிறந்த ரசிகர்கள், எனது முதல் வாசகர்கள் அவர்களே. இது என் அதிர்ஷ்டம் என்றே கொள்ளலாம்.

கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன என் எல்லாப் படைப்புகளும், என நீங்களே அங்கீகாரம் அளித்தபின் வேறு யோசனை எதுவும் இந்தப் படைப்புகள் பற்றி எனக்குத் தேவை என்ன இருக்கிறது?

 

என் எழுத்தின் நோக்கம் பூர்த்தியானதா, என்றால், எழுத்தின் ஒரே நோக்கம் அதுதான்… வாசகனை வெற்றிகரமாகச் சென்றடைவது. அது பூர்த்தியாகி விட்டது.

எல்லாருக்கும் எழுத்தின் ‘நோக்கம்’ என்று ஒன்று, எழுத ஆரம்பித்தவுடனே அல்ல, காலப்போக்கில் எழுத்துடன் இணையும். தான் அறியாத தன்னை எழுத்தில் அந்த எழுத்தாளன் அடையாளம் காண முடியும். எழுத்தின் அற்புதம் அது. அதற்கும் பூர்த்தி என்பது இல்லை. அது பல அளவுகளில் பரிமாணம் அடைந்தபடியே கூட வரும் ஒன்று. வயதும் எழுத்தின், வாழ்க்கையின் அனுபவமும் சேரச் சேர அது மாறும் அல்லது புதிய திசைகளில் பயணிக்கும். அதுவே வளர்ச்சி நிலை. அதற்கும் பூர்த்தி என்பது… உண்டா என்ன?

---

எதற்கும் முன்மாதிரி தேவை இல்லை தான். ஆனாலும் ஒரு முன்மாதிரி இருந்தால் ஒரு நூலிழை நுனியைப் பிடித்துக் கொண்டு சரசரவென்று போக முடியும். செய்யும் காரியம் சுலபமாகும். அநேகர் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு இராமாயணம், மகாபாரதம் முதலில் முன்மாதிரிகளாக இருக்கின்றன. படைப்பாளி விரும்பியோ விரும்பாமலோ  மனதிற்குள் இவை வந்து உட்கார்ந்து விடுகின்றன. உங்கள் எழுத்தை எப்படிச் சொல்லலாம்? அவற்றின் தொடர்ச்சியா அல்லது வெற்றிடத்தில் இருந்து புதிதாகத் தொடர விடுவதா?

·       நீங்களே ஓர் எழுத்தாளர் என்ற அளவில் படைப்புத் தளத்துக்கு ஒரு ‘வியூகம்’ தரப் பார்க்கிறீர்கள். அவற்றில் உங்கள் ‘யூகம்’ அதிகமாய் இருக்கிறது. கால காலமாக நமக்குள் பழக்கப் படுத்தப்பட்ட மரபுகள், மதிப்பீடுகள் சார்ந்து நம் மனமும், அதன் வழி சிந்தனைகளும் இயங்குகின்றன. இதில் ‘கலை’ எங்கே பிறக்கிறது? கலை ஒரு முரண் அம்சத்தில் இருந்து பிறக்கிறது. பொதுக் கருத்தில் இருந்து மாறுபட்ட அல்லது விலகிய சுயம்புவான ஒரு கருத்து, அல்லது மாற்றம் எழுத்தின், கலையின் ஆதார சுருதி. ஒத்த கருத்தில் இருந்து விலகிய ஒரு குரல் அது. தனிக் குரல். உங்களில் தனிக் குரலாக அது துவங்கி வாசகனிடம் பரிமாறப் படுகிறது.

 மாற்றங்களே வாழ்வின் ஆதாரம். சுவாரஸ்யம். மாற்றமே அடுத்த கட்டத்துக்கு நகர, முன்னேற வழி தரும் அல்லவா?

 அதாவது… முன்மாதிரி எதற்கு? அதைப் போலச் செய்யாமல் இருப்பதற்கே. ஏற்கனவே சொல்லப்பட்டதற்கு நகல் எடுக்கத் தேவை என்ன இருக்கிறது?

 எனக்கு முன் எழுதிய படைப்புகளை கணக்கில் கொண்டு அதன் தோளில் ஏறி உலகைப் பார்க்கிறேன் நான்.

 கதையின் களம் என்ற அளவில் கூறிய களமாக இருந்தாலும் அதன் கூறும் முறையிலாவது ஒரு புது அம்சம் என் கதைகளில் இருக்கும்.படி நான் பார்த்துக் கொள்வேன்.

---

குபரா, தி.ஜானகிராமன், எம்விவி, ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா போன்ற காத்திரமான எழுத்து வரிசை இருக்கிறது. இவர்களை இலக்கிய குருமார்கள் என சிலர் சொல்கிறார்கள். எழுத்துக்கு ‘எக்ஸ்ப்ரி டேட்’ உண்டா?

• சர்வ நிச்சயமாக உண்டு. மேற்சொன்னவர்கள் அந்தந்த காலத்தின் அடையாளங்கள். அந்தக் கால யதார்த்த உலகம், அதன் லொளகிகம் எப்படி இருந்தது, என அவர்கள் மூலம்தான் நாம் அறிய வேண்டும். அவர்கள் என்று இல்லை. எல்லாருமே, நான் உட்பட, எழுத்தில் நிகழ்காலத்தின் சூட்சுமங்களை எட்டிப்பிடிக்கவும் சுட்டிக் காட்டவும் பிரயத்தனம் செய்கிறோம். நிகழ்காலம்தான் வாழ்வின் ’சுவாரஸ்யம். இறந்த காலமோ, எதிர்காலமோ பெரிதும் பொருட்டன்று, என்றே சொல்கிறது வாழ்க்கை. தோல்வி அல்ல, தோல்விக்குப் பின், வெற்றி மாத்திரம் அல்ல, வெற்றிக்குப் பின்னான பெரிய விஸ்திரணம் வாழக் கிடக்கிறது. அதை ஒவ்வொரு துளியாக, நிகழ் அம்சங்களுடனேயே தான் நாம் கடக்க முடியும்.

நீங்கள் அடையாளம் காட்டிய இந்த எழுத்து குருமார்கள், அவர்களும் தங்கள் இறந்த காலத்தில் இருந்து விடுபட்டு நிகழ்காலத்தின் தரிசனங்களில் தான் படைப்புகளைத் தந்தார்கள். 

 காலம் காலமான மதிப்பீடுகளை ஒரு கதையில் ஜெயகாந்தன் மாற்றிப் பார்க்க முயல்கிறார். ஓர் உதாரணத்துக்கு இந்தக் கதையைச் சொல்கிறேன்.

கணவன் இல்லாத சமயம் அவன் மனைவியை அவளது சிநேகிதன் ஒருவன், அவளைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். பக்கத்து, எதிர்வீட்டு மனிதர்கள் அதை ரசாபாசமாய் உணர்கிறார்கள். அவர்களில் ஒருத்தர் கணவன் வீடு வந்ததும் “உன் மனைவியைப் பார்க்க யாரோ ஒரு ஆம்பளை வந்து போனான். அவள் தனியாக அவனை உள்ளே அழைத்துப் பேசிக் கொண்டிருந்தாள்” என்று சொல்கிறார்கள்.

 உடனே அந்தக் கணவபன் பேச வந்தவனிடம் கோபப் படுகிறான். “என் வீட்டில் நடந்த நிகழ்ச்சி. நீங்கள் எதற்கு இத்தனை ஆர்வம் காட்ட வேண்டும்? என் மனைவியைப் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் வேலை வேவு பார்ப்பது அல்ல. இனி இப்படிப் புரளிகளைக் கிளப்பிக் கொண்டு அலையாதீர்கள்” என அந்த வதந்தி கிளம்புமுன் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கிறான்.

ஜெயகாந்தன் தன் காலத்தைத் தாண்டி எப்படி முன் நிற்கிறார் என்று நான் வியக்க முடிகிறது.

 (புன்சிரிப்பு.) அந்தக் கதைக்கும் முன்மாதிரி தேட முயல வேண்டாம். நல்ல கதை என்றால் முன்மாதிரி இருக்காது.

 ஒரு கதையில் சொல்லப்பட்ட விஷயம் புதியதாய் இல்லாத பட்சம், அது ஏற்கனவே எக்பயர் ஆகி விடுகிறது ஸ்வாமி!

 காலம் தோறும் மாற்றங்கள் நிகழும்போது கலை வழி சொல்லப்படும் சேதிகளும் ‘அவ்ட்டேட்’ ஆவது இயல்புதான் அல்லவா? இதுகுறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இயலாது. கலையின் விதி இது.

எழுத்துக்கும் ஃபேஷன் உண்டு.

---

நடுத்தர வர்க்கத்துப் பிரச்னைகளை மையமாக வைத்தே இன்றுவரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. முழக்கம் சார்ந்ததோ, புரட்சியை நோக்கிய எழுத்து என்ற வகைப்பாடும் இருக்கிறது. மனோவியல் சார்ந்த எழுத்தே வாசகனை உடனடியாகச் சேர்கிறது. உங்கள் எழுத்துவகை என்ன?

• ஓர் எழுத்தாளன் என்ற முமைறயில் புனைவு சார்ந்த உங்கள் கருத்துகளோடு என்னிடம் கேள்விகள் நீட்டப் படுவதாக உணர்கிறேன். பரவாயில்லை. எழுத்தின் அத்தனை வகைமையும் எனக்கு சம்மதம். நான் எல்லா விதங்களிலும் முயன்று பார்க்க பெரு விருப்பு உள்ளவன். உண்மையைச் சொல்லப்போனால், நீங்கள் இப்படி, உங்கள் எழுத்து இப்படித்தான், என்று வரையறுக்க முடியாத அளவில் நான் விதவிதமாக முயல விரும்புகிறேன்.

---

படைப்புகளுக்கான கருப்பொருள் அன்றிலிருந்து இன்றுவரை ஒன்றுதான். வேறு வேறு வடிவங்களில் சொல்லப் படுகிறது. எழுத்துக் கலைஞனின் சாமர்த்தியம் சார்ந்தது இது. வாசகனிடம் கொண்டுசேர்க்க இது சிறந்த உபாயம். மனிதனின் புற மாற்றங்களை எழுதுவதே கூட இவ்வகைதான். இன்றைய படைப்புகளை ‘பிரதிலிபி’ என்று அழைக்கலாமா? எழுத்து என்ற என் சொல் பயன்பாடு, உங்கள் எழுத்தையும் சேர்த்ததான்

• இந்த உலகம், அதன் தாத்பரியங்கள், காரண காரியங்கள்… என்ற பெரும் அலைக்கழிப்புகளில் தளும்புகிறது வாழ்க்கை. ஒரே விஷயத்தைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம், என்று சொல்லத் தெரியவில்லை. நம் ஒவ்வொருவரின் உலகமும் சிறியது. சுயநலமானது. எழுத்து எல்லாருக்குமான தளத்தில் இயங்கினால் நல்லது. அது அத்தனை சுலபம்அல்ல.

 உலகப்  பெரும் இலக்கியங்கள் காட்டும் மனிதன் பொது மனிதன். எல்லாருக்கும் விளங்கும்படி, எல்லாருக்கும் பொருந்தும்படியான பாத்திரங்கள் அவை. அப்படியான படைப்பாளிகளே உலகை வழிகாட்ட வல்லவர்கள். கடும் பயிற்சியும், மனதில் தேக்கிய வானளாவிய அன்பும் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் அவை. மனதின் நேர்மை எழுத்தில் வெற்றிகளை அழைத்துக் கொண்டு வந்து சேர்க்கும். இதில் கலைத்திறன் என்பது தனி சமாச்சாரம்.

 அத்தோடு எழுத்தில் களமாக புற உலகம், அக உலகம் என்பது எல்லாம் அவரவர் தேர்வு அலலவா?

---

அறிவியல் மாற்றங்கள் கூட  எழுத்தை அசைத்துப் பார்க்கவில்லை. மனதைப் புரிந்துகொள்ளும் கலையை எழுத்தால் கற்பிக்க முடியுமா? அது சிரமமானதா?

• வாழ்வின் மாற்றங்கள் எழுத்தில் வராமல் எப்படி? எழுத்து தன்னியல்பாக நிகழ் காலத்தைப் பிரதிபலிக்க வல்லது. அந்தந்தக் காலத்து விஷயங்களை அது கட்டாயம் அடையாளப் படுத்திய வண்ணமே வெளிப்படும்.

மனதின் எண்ணவோட்டங்களை எழுத்து முன்வைக்க முயல்கிறது. அது சாத்தியமா, என்றால் எழுத்தின் இயல்பே அது. எழுத்தின் தாத்பர்யமே அது அல்லவா?

அதற்கான முயற்சி அது. அது சிரமமானதா என்றால், எனக்குத் தெரியாது. முயற்சியில் உங்கள் கவனக்குவிப்பு சார்ந்த விஷயம் அது.

---

தங்கள் கவலைகளை நேசிக்கும் மக்களும் இருக்கிறார்கள். கொண்டாட்ட மனநிலையை சட்டெனப் பிடித்துக்கொள்ள முடியவில்லை. பழைய இலக்கியங்கிளலாவது போரையும் காதலையும் தாண்டிய நுட்பமான விஷயங்கள் விவரிக்கப் படுகின்றன. இங்கோ எழுத்து அழுமூஞ்சி எழுத்தாகவே இருக்கிறது. இது மிகை இல்லை. எப்போது பார்த்தாலும் வாழ்தல் கொடிது, என்பதுதான்…

• சட்டென பிசிறடிக்கிறீர்கள் நா. விச்வநாதன். நாம் வாசித்த உலகம் சிறியது. உலக இலக்கிய வளாகம் மாணப் பெரியது. இந்தப் பேட்டியின் தொடக்கத்தில் என்ன சொன்னீர்கள்? நம் முன்னோடிகள், என ஒரு வரிசை தந்தீர்கள்… அவர்கள் எல்லாரும் அழுமூஞ்சிகளா? பழையகால எழுத்தில் தான் வறுமையில் செம்மை கொண்டாடப் பட்டது. வறுமையில் செம்மை என்பது வாழ்வின் ஒழுக்கங்கள் என்று பெருமிதம் சொன்னார்கள். அவை சமூகத்தில் வரையறுக்கப் பட்ட ஒழுக்கங்கள் தான். இல்லாதவன் தனக்குத் தானே பெருமை கொள்ள காரணங்கள் தேடி, கண்டடைந்து தன்னளவில் தானே புளகாங்கிதம் அடைவது தான்.

 அவரவருக்கு அமைந்த வாழ்க்கைச் சூழல், அது சார்ந்த மதிப்பீடுகள் நபருக்கு நபர் மாறுகிறது. எத்தனை மனிதர் உள்ளாரோ அத்தனை வித்தியாசம் உ ண்டு இவ்வுலகில். இதில் நம் கண்ணில் பட்டதை வைத்து உலகத்தை எடை போடுவதையே நான் மறுக்கிறேன்.

 புதிய எழுத்தைத் தேடிக் கண்டடைய வேண்டும். வேறு வழியில்லை.

தற்கால இலக்கியச் சூழல் முற்றிலும் அவநம்பிக்கை தருகிற நிலையில் எனக்குப் படவில்லை. தற்போது கூட, ஓரு மாதம் முன்னால், தற்காலச் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து, ‘மாசறு பொன்’ என நான் வெளியிட்டேன். எல்லாரும் சமகால எழுத்தாளர்கள். பத்து கதைகள். அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை. (பதிப்பாளர் உதயகண்ணன் அலைபேசி 94446 40986)

 அவ்வப்போது சமகால எழுத்துகளில் என்னைக் கவர்ந்தவற்றை நான் இப்படி தனித் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறேன்.

 முதல் தொகுதி ‘ஆகாயப் பந்தல்.’ பிறகு பரிவாரம், யானைச்சவாரி, வேலைசூழுலகு, தருணம், என முயற்சிகள் தொடர்கின்றன.

இவற்றில் முழுக்க இசை சார்ந்த கதைகள் தொகுக்கப்பட்ட ‘ஜுகல்பந்தி’ தனிச் சிறப்பு வாய்ந்ததாக எனக்குப் பேர் தந்தது.

---

எழுத்து உபதேசகமா? எழுத்தாளர் உபதேசியா? ஏனெனில் தமிழ்ச்சூழலே தர்ம சாஸ்திரங்களை  போதிக்கும் களமாகவே இருக்கிறது. தமிழகம் போல் அறநூல்கள் பெருக்கம் வேறெங்கும் இல்லை. உங்கள் படைப்புகளில் அற உணர்வுகளை எப்படிக் கையாள்கிறீர்கள்? அறங்களின் விவரிப்பு, அதன் பாஷ்யங்கள் இலக்கிய வகை சார்ந்ததா?

• அப்படியா? அறநூல்கள் ஒரு காலச் சூழலில் பெருகியவையாகவே நான் நினைக்கிறேன். நான் பிறந்ததே ஸ்ரீவைகுண்டம். ‘நீதிநெறி விளக்கம்’ தந்த குமரகுருபரர் பிறந்த ஊர். இப்போது யார் அறநூல் எழுதுகிறார்கள்? எழுதினால் யார் வாசிப்பார்கள்? பள்ளிக்கூட ஆசிரியராலேயே மாணவர்களைக் கண்டிக்க முடியவில்லை. அறமே வெல்லும், என்பது பொய், என்று எல்லாரும் நினைக்க ஆரம்பித்த காலம் இது. சுஜாதா ‘வாய்மையே (சிலசமயம்) வெல்லும்’ என தொடர்கதை எழுதினார்.

 யோக்கியன் வரான், சொம்ப எடுத்து உள்ள வை, என்கிற பழமொழி புழக்கத்தில் உள்ள பூமி இது.

 இது ஒருபுறம் இருக்க, எழுத்தாளன் உபதேசி அல்ல, என்று சொல்லவே விருப்பம். ஆனால் அதில் உண்மை இல்லை. மாற்றுக் கருத்தை அல்லது ஒரு கதையில் ஒரு சம்பவத்தை நாம் எடுத்துக் காட்டும்போதே அது மறைமுகமாக உபதேச நெடி பெற்று விடுகிறது.

 எழுத்து என்பதே வாசகன் மீது நிகழ்த்தப்படும் சிறிய வன்முறை, என்றுகூடச் சொல்லலாம். எழுத்தாளன் ஓடக் கற்றுத் தருகிற நொண்டி, என்பார்கள். பெரும்பாலான உபதெசிகள் வாழ்வில் தோற்றுப் போனவர்கள்தாம். வெற்றி பெற்றவன் உபதேசம் எல்லாம் பண்ணிக்கொண்டிருக்க மாட்டான். அவனுக்கு அடுத்த வேலை இருக்கும். அவன் அதற்குப் போய்விடுவான்.

 இன்றைய சமூகத்தில் வாழ்க்கைமுறைகளே மாறிப் போயின அல்லவா? கூட்டுக் குடும்பம் என்கிற ஐடியாலஜியே, கான்சப்டே தேய்ந்து வருகிறது. தம்பதிகள் குழந்தைகள் பிறப்பதைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். தள்ளிப் போடப் பார்க்கிறார்கள். அப்படியும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். இதெல்லாம் பண்பாட்டைச் சிதறடிக்கவே செய்கிறது. நிறையக் குழந்தைகள் இருந்த வீடுகளில் பாசமும், அன்புப் பரிமாறலும் சகஜமாய் இருந்தது. உடன்பிறப்புகள் இல்லாமல் வளரும் குழந்தைகளிடம் சுயநலமே, அதிகார பாவனைகளே வளரும் அல்லவா?

 இப்போது முன்பத்திகளில் பேசிய விவரங்களைக் கோர்த்துக் கொள்ளலாம். காலந்தோறுமான மாற்றங்களில் மதிப்பீடுகள் மாறி விடுகின்றன. ஆகவே அமர இலக்கியம் என்று ஒன்று இருக்க வாய்ப்பே இல்லாமல் போகிறது.

அறங்கள் உபதேசமும் அற நூல்களும் ஒரு பக்கம் இயங்கியபடியே இருக்கும். இப்போது தன்னம்பிக்கை நூல்கள் அதிகம் விற்பனை ஆவதாகத் தெரிகிறது. (அதற்கு முன் தாயத்து விற்றார்கள்.) இவையெல்லாம் கட்டிக்கொடுத்த சோறு தான். அவரவர் தம்மளவில் எழுந்து கொண்டால்தான் உண்டு. இவை உதவுமா, என்று தெரியாது. தோல்விகளும் நெருக்கடிகளும் கற்றுத்தரும் பாடம், அது புத்தகங்களில் கிடைக்காது.

---

அனுதாபப்பட வேண்டியவர்களைப் பாத்திரங்களாக மாற்றுவது ஒருவகை யுக்திதான். என்ற பேச்சு இருக்கிறது. அனுதாபம் கவனத்தை ஈர்க்கும், என்ற மனோவியல் பிழையானது. அதை எழுத்திற்குள் கொண்டுவருவது எழுத்துப் பயிற்சி இல்லாதவர்களின் வேலை. இன்று பெரும்பாலான எழுத்துக்கள் இப்படித்தான். அவர்கள் தனித்தனி குழுக்களாக இயங்குகிறார்கள். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பாராட்டிக் கொள்கிறார்கள். அடிப்படை நோக்கம் கவன ஈர்ப்பே. எழுத்தின் பலவீனத்தை இட்டு நிரப்ப எனலாம். இலக்கியக் கூட்டங்கள் பயிற்சிப் பட்டறைகளாக இருக்க வேண்டும். நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நடப்பு புரிந்திருக்கும். உங்கள் பதில் சரியாக இருக்கும். தீர்வு நோக்கியதாக இருக்கும்…

• எல்லாக் காலத்திலும் எல்லா விதமான இலக்கிய கோஷங்களும், வேடிக்கைளும் இருக்கின்றன. நீங்கள் நிறைய முன் தீர்மானங்களுடன் உரையாடுகிறீர்கள். எனக்கு உவப்பு இல்லாத இலக்கிய சர்ச்சைகளையோ, குழு மனப்பான்மையையோ நான் சட்டை செய்வதில்லை. அலட்டிக் கொள்வதும் இல்லை. ‘‘இலக்கியக் கூட்டங்கள் பயிற்சிப் பட்டறைகளாக இருக்க வேண்டும்” என்று சொல்கிறீர்கள். யாருக்குப் பயிற்சி? வாசகனுக்கா? எழுத்தாளனுக்கா? விமிரிசகனுக்கா? இதுதான் சட்டாம்பிள்ளைத் தனம்., ஒருவகை குழு மனப்பான்மை என இதையும் சொல்லக் கூடாதா?

நண்பர் நா. விச்வநாதன், பரந்த உலகம் இது. இங்கே எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. இருக்க வேண்டும். அதுதான் நியாயம்.

---

இந்தக் குழுக்களின் பேரிரைச்சலில் இருந்து உங்கள் எழுத்தும் நீங்களும் ஒதுங்கி இருக்கிறீர்கள்.  தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அசல் எழுத்தும் வைத்திருக்கிறீர்கள். இந்த இலக்கிய ‘தாலிபான்கள்’ உங்கள் எழுத்தை எப்படிப் பார்க்கிறார்கள்? கருத்து வந்ததா? சாதுவான எழுத்து என்ற ஒரு வாக்கியமாக – அதுவே விமரிசனமாக  இருக்கிறது. ஓர் உரையாடலில் கேட்டது. சாதுவான எழுத்து என்பது சரிதானா?

• தவறல்ல. அது அவர் கருத்து. அவர் கருத்துக்கு நான் கருத்து சொல்வது முறையும் அல்ல. ஆனால் எந்த விமரிசனத்தையும் உடைக்கிற அளவில் வேறு புதிய தளங்களில் நான் இயங்க பிரியப் படுவேன்.

சமீபத்திய தொற்று பரவல் காலத்தில் நான் எழுதிய கதைகள் அனைத்தும், உறவுகளை வலுப்படுதத்துவதாகவே அமைத்துக் கொண்டேன். வேலையை வீட்டில் இருந்தபடியே செய்கிற வாழ்க்கை அமைப்பு. கணவன் மனைவி வேலைக்குப் போகாமல் ஒரே வீட்டில் அலுவலகப் பணி செய்கிற சூழல். குழந்தைகளுக்கும் கல்விக் கூடங்கள் திறந்திருக்கவில்லை. இந்நிலையில் பிணக்குகளைக் கணக்குச் சொல்லாமல், இணக்கஙகளை என் கதைகளில் நான் பதிவு செய்ய நினைத்தேன்.

பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் அன்புசார்ந்த உலகத்தை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டி யிருப்பதாக நினைக்கிறேன். கூட்டுக் குடும்ப அமைப்புகள் கட்டு தளர்ந்து விட்டன. பெரியவர்களே தங்கள் பிள்ளைகளை, பெண்களை தனிக்குடித்தனம் என்று வைத்துவிடுகிறார்கள். ஒரு குழந்தை, இரு குழந்தை என்ற அளவில் பெற்றுக் கொள்கிறார்கள். தான் தன் சுகயநலம் சார்ந்த இந்த உலகத்தில் விட்டுக் கொடுக்கும் பண்பு குறைந்து வருவதான கவலை எனக்கு உண்டு. அதேபோல வேலைக்குப் போகும் பெண்களிடத்தில், பெண்மை சார்ந்த கனவுகள் சார்ந்த அழகியலை நான் திரும்ப அடையாளப் படுத்தவும் முயல்கிறேன்.

குழந்தை பிறப்பதை  தள்ளிப்போட்ட ஒரு தம்பதி. பக்கத்து வீட்டில் வாடகைக்கு வரும் இன்னொரு தம்பதி. அவர்களின் சிறு பெண் குழந்தை ஒன்று கொலுசு சப்திக்க இங்குமங்கும் ஓடித் திரிகையில் அந்த வளாகமே கலகலாப்பாகி விடுகிறது. இந்த தம்பதிகள், குறிப்பாக மனைவி தானும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக ஒரு கதை.

(புன்சிரிப்பு) சாதுவான கதைதான்…. இல்லையா?

அன்புசார்ந்த உலகை மீண்டும் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அதை வன்முறையால் கொண்டுவர முடியுமா என்ன?

---

வெளியே எவ்வாறு வேடிக்கை பார்க்கிறீர்களோ அவ்வாறே உலகில் நிகழ்வதை வேடிக்கை பார்க்கப் பழகிவிட்டால் எழுத்தாளனே சாட்சியாக நிற்கிறான். எழுத்து – எழுதுவது மகத்தானது என்ற கருத்தும் இருக்கிறது. எழுத்தாளன் ஒரு சாட்சிதானா? உடலுழைப்புத்தொழில் தாண்டி மனவுழைப்புத் தொழில் எனலாமா?

• எழுத்து என்பதே வாழ்க்கை பற்றிய அவதானிப்பு தான். அதை வேடிக்கை பார்ப்பது என்கிறீர்கள். வேறு வார்த்தை என்றாலும், அத்தனை அலட்சியம் தேவையா? எழுத்து என்பதே அவனது, எழுத்தாளனது மனசாட்சி தானே? பார்த்ததில் பகிர்வதில் அவனது பங்கு அதுவே அவனது குரல். அவனது பார்வை. அவனது விமரிசனம். வாசகனின் மனதில் ஒரு நிகழ்வை அவன் கற்பனையாகவோ, நடந்ததையோ தற்குறிப்புடன் நிகழ்த்திக் காட்டுகிறான். எதை அவன் முன்னிறுத்துகிறான் என்பதில் அவனது அடையாளமும் இருக்கத்தான் செய்கிறது.

---

எழுத்தாளனின் படைப்பு எண்ணிக்கை கூடக் கூட அவர்கள் சிறந்த எழுத்தாளர் என்ற ஒரு கணக்கு இருக்கிறது. தலையணை சைஸ் நூல்கள் எழுத்தாளரை தர நிர்ணயம் செய்கின்றன. இதில் ‘கன்டென்ட்’ பின்னுக்குப் போய்விடுகிறது. மௌனியும் ப.சிங்காரமும் கூட இன்றும் கொண்டாடப் படுகிறார்கள், என்பது ஏன் மறந்து போனது? எழுத்துப் பெருக்கம் வளர்ச்சியின் அளவீடா?

• நிறைய தடாலடிகள் பேசுகிறீர்கள். இது விமரிசனமோ, கரிசனமோ அல்ல. உங்கள் பார்வை.  அதிகப் படைப்புகள் தந்தால் சிறந்த எழுத்தாளர் என்ற கணக்கு யார் தந்தது? தலையணை சைஸ் நூல்கள், என அலட்சியமாய் ஓர் எள்ளல். ஒருமுறை திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆத்திரத்துடன் பாரதிராஜாவுக்கு “உங்களால் கருப்பு வெள்ளையில் என்னைப்போல வெற்றிப்படம் தர முடியுமா?” என சவால் விட்டார். பாரதிராஜா ஏன் கருப்பு வெள்ளையில் திரைப்படம் எடுக்க வேண்டும்?

நாவலின் அளவு சிறியது என்ன பெரியது என்ன? அதன் தரம் பார்த்து நாம் பேசலாம். தலையணை சைஸ் என்றெல்லாம் பொத்தம் பொதுவாகச் சொன்னால், அதுவும் அவற்றை வாசிக்காமல் பேசினால் முறையல்ல அது.

மௌனி, சிங்காரம் இன்னும் கொண்டாடப் படுகிறார்கள்… சரி. அதற்கென்ன?

விவாதங்கள் செய்யலாம். பெரும்போக்கான கருத்துகளுக்கு அரட்டைக்கான மரியாதையே கிடைக்கும். ஆரோக்கியமானது அல்ல இது. திண்ணையில் கூடச்சேர்ந்து கும்மியடிக்க நான் தயாரில்லை.

---

கிட்டத்தட்ட நூறு தொகுதிகளைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்கு கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன.  உங்கள் எழுத்து வெற்றிகரமானது என்று சொன்னாலும் வாசகன் அப்படிக் கருதினாலும் உங்கள் எழுத்தின் சுயம் குறித்து உங்கள் கருத்தே முக்கியமானது. பாஷ்யங்களின் கருத்து முடிவுகளை விட மூலம் கூறும் கருத்து சிறந்தது. அசலானது. உங்கள் எழுத்தில் ஓர் அலட்சியம் இருக்கிறது, என்று உங்கள் நண்பர் ஒருவர் சொன்னார். எனக்கும் அவர் நண்பரே. அலட்சியம் என்பதை கர்வம் எனலாமா? எழுத்தாள கர்வம் என்று இருக்கிறது. இருக்க வேண்டும். இது கூடுதல் தகுதிதான். என்ன சொல்ல வருகிறீர்கள்? கர்வம் பெருமைதான்…

• நண்பர் சொன்னார்… என்றெல்லாம் சுற்றி வளைப்பானேன்? நான் கர்வி என்று சொல்ல வருகிறீர்கள். சரி.

---

சுற்றிலும் எவ்வளவோ நடக்கின்றன நல்லதும் கெட்டதுமாய். அப்படியே மிகை அலங்காரம் ஏதுமின்றி, மிகை விவரணங்கள் ஏதுமின்றி பதிவு செய்வதே உத்தமமானது , என்ற கருத்தும் இருக்கின்றது. கலைஞன் அவ்வாறு இருந்தால் அவன் எழுத்தும் தட்டையாகத்தானே இருக்கும்? அலங்காரங்கள் இயற்கையானவை. இதில் முற்போக்கு, பிற்போக்கு என்ற வாதத்தை முன்வைப்பதே செயற்கை. அபுனைவு எழுத்து குற்றமுடியதா? புனைனவு தூய்மையானதா?

• (புன்சிரிப்பு) அலங்காரங்கள் இயற்கையானவை – என்ன சொல்லாடல் இது. முதற் சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் ஒட்டாத, இரண்டே சொல் வாக்கியம். மற்றபடி உங்களுக்கு எழுத்து பற்றி சில பிரத்யேகக் கருத்துருவாக்கம் வைத்துக்கொண்டு பேச வந்திருக்கிறீர்கள்.

தூய்மை, குற்றம்… இதெல்லாம் என்ன பார்வை…

----

உங்கள் கதைகளில் ஒரு தர்க்கம் இருக்கிறது. நம் மரபே தர்க்கம் சார்ந்தது. நான் அந்த மரபில் இல்லை. என் வழி தனி மரபில் இருப்பது, என்று உங்கள் எழுத்தின் வழி மென்மையாகச் சொல்கிறீர்கள். நாட்டார் புனைவுகளில் இருந்தே இந்த மிகைபடக் கூறல், தர்க்கம் எல்லாம் வந்துவிட்டது. அவ்வளவு விஷயங்களையும் வாசகன் பிரித்துப் பிரித்துப் புரிந்துகொள்ள வேண்டுமா, என்ற கேள்வி என்னிடம் இருக்கிறது. வாசகனை சிரமப்படுத்தக் கூடாது, என்பது முக்கியம்.

• தர்க்கம் கூடாது என்கிறீர்களா? தர்க்கம்தான் கதையின் ஆதார சுருதி. முன்பு சொன்னேன் அல்லவா? வாசகன் மீதான சிறு வன்முறை, அது இந்த தர்க்க அம்சம்தான். தர்க்கம் என்பது ஒரு கதையின் நேர்கோட்டுப் பாதை. கதையின் நிகழ்ச்சிகள் காரண காரியம் அற்று இயங்குமா என்ன- (வாசகனை சிரமப்படுத்தக் கூடாது என்பது முக்கியம்.) என் வாசகர் அறிவாளிகள். அவர்கள் சிரமப்பட மாட்டார்கள். கும்பகோணம் டிகிரி காபி, வேணுமானால் நாலு எட்டு நடந்து போனால்தான் கிடைக்குங் காணும்…

----

உங்கள் ‘நந்தவனத்துப் பறவைகள்’ விடாமல் வாசித்துக் கொண்டிருப்பவன் நான். உங்கள் எழுத்தின் வழி உங்களை தரிசிக்க என்னால் முடிகிறது. சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் கூட என்னால் முடிகிறது. எனக்குப் பிடித்தமாயிருப்பதாலா – இந்த மதிப்பீடு சரியானதுதானா? என் ருசி அனைத்து வாசகருக்குமான ருசி இல்லை. உங்கள் ருசியும் அதுவாக இருக்க முடியாது தானே?

• ஆ, நந்தவனத்துப் பறவைகள், என் முதல் நாவல். அதன் நாயகன் பெருமாள்சாமி. ஒரு அப்பாவி. தன்னம்பிக்கை குறைவான பாத்திரம். நம் எல்லாரிடமும் நாம் மட்டுமே அறிந்த அசட்டுத்தனங்கள் உண்டு. அதை அந்தப் பாத்திரம் மூலம் நான் சொன்னபோது அது ரசிக்கப் பட்டது. அது ஒரு ‘யுனிவர்சல்’ கதாபாத்திரம். அதன் வெற்றியும் தோல்வியும் நம்மில் அடையாளப்பட வல்லது… என எழுதும்போதே நான் அறிவேன். 

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கு அது, வெளிவந்த ஜோரில் பாடமாக்கப் பட்டது. எத்தனை பெரிய மரியாதை அது. அச்சில் வந்த என் முதல் நாவல் அது. நான் அதே பல்கலைக் கழகத்தில் இளங்கலை வேதியியல் படித்தவன். இந்த கௌரவம் நான் எதிர்பார்த்திருக்க வாய்ப்பே இல்லை

அது மத்த 99 புத்தகம் பற்றிப் பேசாமல் முதல் நாவல் பற்றி உற்சாகமாய்ப் பேசுகிறீர்கள்…

 பரவாயில்லை. பேசிய அளவு சந்தோஷம்.

---

எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும் சமூகம் நம்மை ஒருவித சிறைக்குள் தள்ளி விடுகிறது. அது நரகம். இந்த நரகத்தில் இருந்து விடுதலைக்கான வழியை எழுத்து காட்டுமா?... என்ற கனவு முக்கியமானது தானே?

• கனவு காண்பவனுக்கானது அல்ல எழுத்து. என் கதாபாத்திரங்களும் பாயைப் பிறாண்டுகிறவர்களுக்கானது அல்ல. ஆண்மைக்குறைவு உள்ளவன் லேகியம் வாங்கித் தின்னலாம். பீமபுஷ்டி அல்வா அல்ல எழுத்து.

வாசகன் கூர்மையானவன் ஐயா. அவன் அறிவுரை யாசித்து, எழுத்தாளன் வீட்டுவாசலில் நிற்கிறவன் அல்ல.

---

ஒரு நேர்காணலில் சொல்லி யிருக்கிறீர்கள். “எதனால் எழுதுகிறேன்… என்றால என் இருப்பை நியாயப் படுத்திக்கொள்ள. ஒழுங்குகள் முக்கியமானவை. ஒழுங்குகள் சார்ந்த விஷயத்தில் மரணபயம் இல்லை. ஏன் ஒழுங்குகள் கவர்ச்சிகரமானவை. மரணத்தை மீறி வாழ்க்கையில் நெடுந்தூரப் பயணம் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது.” இந்தக் கலையைத்தான் வாசகனுக்குக் கடத்துகிறீர்களா?

• அன்பும் எளிமையும் திறந்த மனதும் நேர்மையும் போதும். மானுடம் வெல்லும். வெல்ல வேண்டும், என்று நான் எழுதுகிறேன். பேட்டிக்கு நன்றி. உங்கள் கேள்விகளால் ஊர் உலகம் சுற்றிவிட்டு என் படைப்புகளைப் பற்றிப் பேசவே இல்லை. எனக்கும் அது கூச்சமாய் அமைந்திருக்கும்.

முன்அனுமானங்களும் மதிப்பீடுகளுமாய் உரையாடினீர்கள். என்னளவில் நிறைய உங்களிடம் நான் முரண்படுகிறேன். என்றாலும் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. வணக்கம்.

• • •

  

Tuesday, May 3, 2022

 

பத்தி எழுத்து • நிசப்த ரீங்காரம் • பகுதி 7

சொற்களின் பகடையாட்டம்

எஸ். சங்கரநாராயணன்

 


ர் எழுத்தாளன் என்ற அளவில் சொற்களை, அதன் கவித்துவ எழுச்சியுடன் நகர்த்தப் பிரியம் கொண்டவன் நான். என் பாணி அது. கதை சொல்லும் உணர்ச்சி வியூகத்தை வாசகனுக்குக் கை மாற்ற நான் எழுத்தில் வாசனை நிரப்புகிறேன்.

“அதிகாலைப் பனி மூட்டத்தில் கதவைத் திறந்தாள். வாசலில் அவன் நின்றிருந்தான். ஒரு கனவின் தொடர்ச்சி போல இருந்தது அது.”

என்றாலும் மேடைப் பேச்சு சார்ந்து எனக்குப் பயிற்சி இல்லை என்ற வெட்கம் எனக்கு உண்டு. பணி என்று நான் சென்னைக்கு இடம் பெயர்ந்த காலங்களில் (தபால் தந்தித் துறை, என்கிற பி எஸ் என் எல்) எழுத்தும் என்னோடு இணைந்து கொண்டது.

அப்போது (1980) ‘இலக்கிய வீதி’ என, இளம் எழுத்தாளர்களின் பாசறை ஒன்று விநாயகநல்லூர், வேடந்தாங்கலில் இயங்கி வந்தது. அதன் மாதாந்திரக் கூட்டங்கள் ஓர் உயர்நிலைப் பள்ளியில் மதுராந்தகத்தில் நடத்துவார்கள். அதன் அமைப்பாளர் இனியவன். (வணக்கம் இனியவன்.) அதில் இளம் எழுத்தாளர்கள் நாங்களும் பிற புத்தகங்களைப் பற்றி விவாதம் நிகழ்த்துவோம்.

அவை உப்பு பெறாதவை, என இப்போது புன்னகையுடன் நினைத்துக் கொள்கிறேன்.

என்றாலும் இளமையின் தினவு நாட்கள் அவை. எல்லாவற்றையும் அசட்டுத் தன்னம்பிக்கையுடன், புன்னகையுடன் எதிர்கொண்ட பருவம். வாழ்வில் எல்லாமே அழகு தான். உற்சாகம் தான். விதி என்பது நம்மை ஒரு பூனையாய்த் தூக்கி பாற்கடலில் அருந்தக் காட்டிக் கொண்டிருக்கிறது, என்கிற மிதப்பு. கனவு சுமந்த பருவம்.

தெருவில் நான் இறங்கினால் மரங்கள் எனக்கு சாமரம் வீசுகின்றன.

அந்தக் காலங்களில் தான் தமிழ்ப் பல்லைக் கழக மேனாள் துணைவேந்தர் திரு ஔவை நடராசனாரின் நட்பு கிடைத்தது. (வணக்கம் ஐயா.) மனிதர் சொல்வேந்தர். எந்தச் சூழலையும் ஆதரித்தும் புறக்கணித்தும் பேச வல்லவர். அவரோடு பல கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன்.

அந்நாட்களில், என் இளமை நாட்களில், அவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருந்த புதிது. ‘தலைமைச் செயலகம்’ என்னை வரச் சொல்லி விடுவார். எனது காலைப்பணி (ஷிஃப்ட்) முடித்து நான் அங்கே போய்விட்டால் சிறு அரட்டை முடித்து மாலை அலுவலகம் விட நடந்தே நாங்கள் அவர்வீடு, அண்ணாநகர் வரை பேசியபடி வருவோம். கூகுள் வரைபடம் இந்த தூரம் 10.6 கிமீ என்று காட்டுகிறது.

கால்வலி கூடிய பொற்காலங்கள் அவை.

அவர் வாசித்த ஏராளமான புத்தகங்கள் பற்றி அளவளாவுவோம். அவர் பேசுவார். மிகுந்த அக்றையுடன் எனது எழுத்து பற்றி அவர் விசாரிப்பார். என் வீட்டிலேயே அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளாத நாட்கள் அல்லவா அவை… நான் எழுதிய நுட்பமான வரிகளை, அப்படியாய் நான் கருதிக் கொண்ட வரிகளைப் பற்றி அவரிடம் சற்று கழுத்து விரைக்கச் சொன்னால், அவர் இன்னொரு உச்சத்தை எடுத்துக் காட்டுவார்.

பொற்காலம்… கால்வலியை மறக்கவும்.

ஐயா, இன்றைக்கு என் கதையில் விதி பற்றி ஒரு வரி எழுதினேன். அவர் தலையாட்டுவார். “காலம், அது மனிதனைப் பறக்கவிட்டு இறக்கைகளைக் கத்தரிக்கிறது.”

பட்டினத்தார் எப்படிச் சொல்கிறார் பார், என்பார் அவர். “சாகப்போகிற பிணங்கள் செத்த பிணத்தைத் தூக்கிச் செல்கின்றன.”

பல நூறு புத்தகங்களின் பிழிவு அவர். அவரது பேச்சுபாணியைப் பற்றியே கூட நான் அவரிடம் சரளமாகக் கிண்டல் பண்ணி யிருக்கிறேன். அதான் சொல்கிறேனே. வயசு அப்படி. சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. அதை அவர் எளிய புன்னகையுடன் எதிர்கொண்டது அவரது பெருந்தன்மை.

ஐயா, எனக்கும் மேடையில் பேசக் கற்றுத் தாருங்கள், என்று அவரிடம் கேட்டிருக்கிறேன். உனக்கெல்லாம் மேடை வேண்டாம். எழுத்தில் நீ கவனம் செலுத்துகிறாய் அல்லவா. அது போதும்… என்று என்னை அவர் அடக்கி விட்டதாகவே தோன்றுகிறது. இது நல்லதா கெட்டதா தெரியாது. அது நான் மேடை யேறி யிருந்தால் ஒழிய கண்டுகொள்ள முடியாத விஷயம் அல்லவா.

என்றாலும் பேச்சுத் துணை என்று அவர் தனது காரில் பல்வேறு இடங்களுக்கு, ஊர்களுக்கே கூட அழைத்துச் சென்றிருக்கிறார். எத்தனையோ அனுபவங்கள். இந்தத் தலைப்பில் அவை வேண்டாம். என்றாலும் ஒரு நிகழ்வைச் சொல்லியாக வேண்டும்.

மிக அருமையான மனிதர். ஒரு மேடையில் டாக்டர் ஔவை இருக்கும்போது, கிருபானந்த வாரியார் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு சின்னப் பெண், பதின்ம வயது இருக்கும், சட்டென எழுந்து வாரியாரிடம் “நீங்கள் முன்னுக்குப் பின் முரணாக அல்லவா பேசுகிறீர்கள்?” என்று கேள்வி கேட்டாள். மொத்தக் கூட்டமே திகைத்துப் போயிற்று. அத்தனை கூட்டத்தில் ஒரு போலிஸ் அதிகாரி, உட்கார்ந்திருந்த மனிதர்களைத் தாண்டி, அந்தச் சின்னப் பெண்ணிடம் போய் அவளை அப்புறப்படுத்த முனைந்தார்.

உடனே பரிதவித்துப் போய், ஔவை நடராசனார் மேடையில் ஓரமாக நின்றிருந்த ஒரு காவல் உயரதிகாரியை அழைத்து அவரது காதோடு, “அந்தப் பெண்ணைத் துன்புறுத்தாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என அவரையும் அனுப்பி வைத்தது நினைவு வருகிறது. மாற்றுக் கருத்தை அவர் எதிர்கொள்ளும் அழகு, என உணர்ந்த கணம் அது.

ம். மேடைப்பேச்சு எனக்குக் கொடுப்பினை இல்லாமல் ஆயிற்று. மேடைப்பேச்சு சாமர்த்தியம் இந்தக் கால கட்டத்தில் தேவையாய்த் தான் இருக்கிறது. செட்டியார் முறுக்கா சரக்கு முறுக்கா, என்றால் செட்டியார் முறுக்குதான் இன்றைய தேவை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் வகையறா பேச்சால் தங்களை முட்டுக் கொடுத்துக்கொள்ள வசதி வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன அல்லவா…

மேடைப்பேச்சு வாய்ப்புகளை நானே ஒரு பெருங்காலம் வரை தவிர்த்தேன் என்றும் சொல்ல வேண்டும். என்றாலும் மேடைப் பேச்சின் உத்திகளை ரசித்திருக்கிறேன்.

தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் ஒரு விழா நினைவு வருகிறது. பரிசு வழங்கியவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த மேடையில் கே. பாக்கியராஜ் கலைமாமணி விருது வாங்கினார். அது நினைவு உள்ளது. அதைவிட முக்கியம் அன்றைய சிறப்புப் பேச்சாளர் நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன்.

ஒரு நிதியமைச்சராகச் செயலாற்றுவது எத்தனை சிரமம் என்கிற மாதிரி நாவலர் பேச்சைத் துவங்கினார். யாராவது வந்து தங்கள் பொருட்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்பு கேட்டுக் கொண்டே யிருப்பார்கள். யாரையும் திருப்திப் படுத்த முடியாத பதவி இது. ஒருவர் கோரிக்கையைப் பரிசீலித்து அவரது பொருளுக்கு வரி குறைத்தால், அந்த நிதியிழப்பைச் சரிகட்ட மற்றொரு பொருளின் விலையை ஏற்ற வேண்டியதாகி விடும். அதனால் அந்த மற்ற பொருள் விலையேற்றத்திற்கு வேறொரு தரப்பில் அதிருப்தி சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும். அந்தப் பொருள் விலை அதிகமானதால் அதை வணிகம் செய்யும் நபர்கள் குறைப்பட்டுக் கொண்டு அவர்களும் கோரிக்கை வைக்க என்று எங்களைச் சந்திக்க வருவார்கள். கடைசிவரை எல்லாரையும் திருப்திப் படுத்த ஒரு அமைச்சரால் முடியவே போவது இல்லை… என்றெல்லாம் உரையாற்றிக் கொண்டே வந்தவர்… பிறகு பேச்சின் போக்கை இப்படி மாற்றினார்.

ஆனால் கலைஞர்கள் வாழ்க்கை அதிர்ஷ்டகரமானது. கலைஞர்களால்தான் ஒருசேர ஒரு மொத்தக் கூட்டத்தையும் திருப்திப் படுத்த முடிகிறது. ரசனை அடிப்படையில் மொத்த சனக் கூட்டமும் கலைஞனைத் தான் கைதட்டி உற்சாகப் படுத்திப் பாராட்டி ஆரவாரித்து மகிழ்கிறது.

தானும் மகிழ்ந்து, அதேசமயத்தில் பிறரையும் மகிழ்விக்க ஒரு கலைஞனால்தான் முடிகிறது.

அத்தகைய சிறப்பு மிக்க கலைஞர்களைப் பாராட்டி உயர்த்தி கௌரவிக்க வேண்டும். அதற்காகத்தான் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு அரசு கலைமாமணி விருதுகள் அளித்து கௌரவம் செய்கிறது… என்று அழகாக தேரை நிலைக்குக் கொண்டுவந்தார்.

சுமார் நாற்பது ஆண்டுகள் முன்பாக நடந்த இந்த நிகழ்ச்சியும், அவரது உரையும், அதன் உத்தியும் இன்னும் மனதில் தங்கி புன்னகைக்க வைக்கிறது.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓர் உரை இப்படி நகர்கிறது. நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம். அல்லது இவரது சுய தயாரிப்பாக இருக்கலாம். எனினும் அந்தப் பேச்சின் சாராம்சம், உத்தி… அது அழகானது.

பிபிசி (பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்) ஓர் உரைக்காக சர்ச்சில் டாக்சியில் செல்கிறார். டாக்சி டிரைவருக்கு அவரைத் தெரியாது. டிரைவரிடம், நான் வேலையை முடித்துக் கொண்டு நாற்பது நிமிடத்தில் திரும்பி வந்து விடுவேன். எனக்காகக் காத்திருக்க முடியுமா, என்று கேட்கிறார். மன்னிக்கவும், என்னால் முடியாது, நான் ரேடியோவில் வின்ஸ்டன் சர்ச்சில் உரைவாற்றுவதைக் கேட்க நான் வீடடைய வேண்டும், என்கிறான்.

ஆகா என் உரையைக் கேட்க என்று ரசிகன் ஒருவன்… என பூரிக்கிறார் சர்ச்சில். அப்போதும் தான் யார் என்பதை அவர் அவனிடம் காட்டிக் கொள்ளாமல், புன்னகையுடன் ஒரு பத்து பவுண்டு பணம் இனாமாகத் தருகிறார். பிறகுதான் அவர் எதிர்பாராதது நடந்தது.

பத்து பவுண்டுப் பணத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்ட அவன் சொல்கிறான். “எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கிறேன் ஐயா. அந்த சர்ச்சில் நாசமாப்போகட்டும். அதைப் பத்தி என்ன…”

பிபிசி உரையில் இப்படி ஒரு சம்பவத்தைச் சொல்லிப் பேச்சை இப்படித் தொடர்கிறார் சர்ச்சில். “லட்சியவாதம், கொள்கைப்பிடிப்பு எல்லாமே பணத்தின் முன்னால் சட்டென மாறிப் போகிறது என்று நாம் இதைவைத்துப் புரிந்து கொள்ளலாம். நாடுகளே பணத்துக்கு விற்கப் படுகின்றன. ஒன்றாய் இருந்த குடும்பங்கள் பணப் பிரச்னை வந்து பிரிந்து சிதறிப் போகின்றன. நண்பர்கள் பணத்தினால் விலகிப் போகிறார்கள். பணத்துக்காக சனங்களைக் கொலை செய்கிறார்கள். மனிதர்கள் பணத்தின் அடிமைகள் ஆகி விடுகிறார்கள்….” என அடுக்கி ஆர்ப்பரித்துச் செல்கிறார் சர்ச்சில்.

இது ஓர் ‘இட்டுக்கட்டிய கதை’யாகஇருக்கலாம். சர்ச்சில் நாட்டின் பிரதம மந்திரி. ஏன் டாக்சியில் செல்ல வேண்டும்? அவருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாதா, என்ற கேள்வி வருகிறது. அத்தோடு, அந்தக் காரோட்டி, அவன் அவரது பேச்சின் ரசிகன். ஆனால் அவனுக்கு சர்ச்சிலை முக அளவில் அடையாளம் தெரியவில்லை… என்பதும், காதைக் காட்டு, பூ வைக்கிறேன்… என்ற த்வனியிலேயே இருக்கிறது.

ஆயினும் சர்ச்சில் தன் இயல்புப் படி எப்பவுமே பளிச்சென்ற சொல்லாடலால் முத்திரை பதிப்பவர். ஒருமுறை சர்ச்சிலும் இன்னொரு அரசியல்வாதியும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச என்று வந்திருந்தார்கள். கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம். அந்த அரசியல்வாதிக்கு இத்தனை கூட்டம் நமக்காக என்று ஆச்சர்யம். இறுமாப்பு வேறு. அவர் புன்னகையுடன் சர்ச்சிலைப் பார்த்துச் சொன்னாராம். “பாத்தீங்களா, நம்ம பேச்சைக் கேட்க இவ்வளவு பேர்…”

அதற்கு சர்ச்சில் சிரித்தபடி இப்படி பதில் சொன்னார். “அட நீங்க வேற. சனங்களுக்கு வேடிக்கை பார்க்கிற உற்சாகம். அவ்வளவுதான். இப்பவே நம்மைத் தூக்கில் போடப் போறதா அறிவிப்பு செஞ்சி பாருங்க. இதைப்போல பத்து மடங்கு கூட்டம் வரும்!”

இப்படிக் கதைகள், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சில், முசோலினி, வாஷிங்டன், என்று தலைவர் பேர் மாறி மாறி உலவும். கண்டுகொள்ளக் கூடாது.

நாம் பேச்சாற்றல் பற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்கு வரலாம். 

இன்னும் சிலர், தனக்கு முன்னால் பேசியவர்களை கவனித்து தங்கள் பேச்சில் அந்த முந்தைய உரையைத் தொட்டு அல்லது விமரிசித்து தங்கள் பேச்சை வளர்த்துச் செல்வார்கள். ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் அனுராதா ரமணன் பேசினார். அந்த விழாவுக்கு ஒரு பத்திரிகை ஆசிரியர் வந்திருந்தார். அனுராதா ரமணன் தனது உரையில், உங்கள் பத்திரிகையில் பிரபலமானவர் கதைகள் மாத்திரம் தான் வாங்கி வாங்கி வெளியிடுகிறீர்கள். என் போன்றவர்கள் கதைகள் அனுப்பினால் வாசிக்காமலேயே திருப்பி அனுப்பி விடுகிறீர்கள், என்று பேசினார். அனுராதா ரமணனுக்கே இந்த நிலைமையா, என்று தோன்றியது.

“என் கதைகளை வந்த ஜோரில் அப்படியே திருப்பி விடுகிறார்கள். இரண்டு மூன்று நாளில் என் கதை திரும்பி வந்து விடுகிறது. உதவி ஆசிரியர் அவற்றை வாசிக்கிறாரா என்றே தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள, ஒருமுறை நான் என் கதை எழுதிய காகித மடிப்பில் பவுடர் தெளித்து அனுப்பி வைத்தேன். அந்தக் கதையும் உடனே திரும்பி வந்துவிட்டது. நான் அந்க் கதையைப் பிரித்துப் பார்த்தால் கதையில் நான் கொட்டி அனுப்பிய பவுடர் அப்படியே உள்ளே இருந்தது…” என்றார் வேடிக்கையாக.

அதையடுத்துப் பேசிய பேச்சாளர் யார் என நினைவு இல்லை. அவர் இப்படித் தொடர்ந்தார். “அனுராதா ரமணன் அவர்களே, கதையில் பொடி வைத்து எழுதுங்கள். பிரசுரம் ஆகும். தனியே பொடி வைத்து அனுப்பிப் பயன் இல்லை…” என்று பேசி அரங்கம் அதிர கைதட்டல் வாங்கிக் கொண்டார்.

எஸ்.வி. சேகர் போன்றவர்கள் பேசினால் தன்னைப் போல பேச்சில் ஒரு சிந்தனை நகர்வைக் காட்டுவார். அது அவரது பாணி. நமது சிந்தனையோடு சேர்ந்து பயணிக்கிற பாவனை காட்டுவார். ஆனால் சட்டென அவர் லயம் பிரிந்து வேறு திசை காட்டும்போது குபீரென்ற நகைச்சுவை வெளிப்படும்.

ஏழு மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டும். கூட்டமே வரவில்லை. அரங்க வாசலில் சபா ஆட்கள் யார் உள்ளே வந்தாலும், டிக்கெட் இருக்கா, டிக்கெட் இருக்கா, என்று கேட்டு மடக்குகிறார்கள். மணி ஆறு ஐம்பது ஆகிவிட்டது. இனியும் கூட்டம் சேராவிட்டால் நாங்கள் வெறும் நாற்காலிகளைப் பார்த்து நாடகம் நடத்துகிறாற் போல ஆகிவிடும். சபாக்காரர்களிடம் நான், டிக்கெட் கேட்காதீங்க. உள்ள வரவங்க வரட்டும். நாடகம் பார்க்க நாலு பேராவது வேண்டாமா, என்று சொல்லி சமாதானப் படுத்தி விட்டேன்.

பிறகு பத்து இருபது பேர் உள்ளே வந்தார்கள். சரி. இதுக்கு மேலே காலம் தாழ்த்த வேண்டாம் என்று நாடகத்தை ஆரம்பித்து விட்டோம். நாடகம் போர் அடிச்சதா, வெளியே மழை பெய்து விட்டுவிட்டதா, தெரியவில்லை. பத்து நிமிடத்தில் திரும்ப கூட்டம் கலைந்து பாதிப்பேர் அரங்கத்தை விட்டு வெளியேற எழ ஆரம்பித்தார்கள். அப்பதான் நான் மேடையில் அறிவித்தேன். “வெளியே போக நூறு ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும்.”

டாக்டர் ஔவை அவர்களுடன் பழகிக் கொண்டிருந்த காலத்தில் என் இளமைத்  தினவுடன் நான் சொன்ன எத்தனையோ பகடிகளை அவர் நெளிசல் எடுத்திருக்கிறார். ஒருமுறை நான் அவரிடம் இப்படிச் சொன்னேன். “அன்று கோபியரிடம் வஸ்திரங்களைப் பறித்துக் கொண்ட அதே கண்ணன், இன்று திரௌபதி மானங் காக்க ஆடைகளை வழங்கினான்.” உடனே அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னார். “இங்க எடுத்து அங்க கொடுத்ததாகச் சொல்லணும்ப்பா” என்றார். எத்தனை வேகமாகச் சிந்திக்கிறார் இவர், என்றிருந்தது.

ராணி வார இதழில் பொதுவாக கருத்துப் படங்கள் அத்தனை நுட்பமாக அமையும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒருமுறை அந்த அதிசயம் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆரை மலையாளி என்று பேசியிருந்தார். அதற்கு எம்.ஜி.ஆர் “நான் தமிழன்தான்,” என்று தன்னிலை விளக்கமும் தந்தார். இதைக் கேலியடித்து ராணி வார இதழ் வெளியிட்ட கருத்துப் படம் இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. படத்தில் எம்.ஜி.ஆர். பேசுவது போல இருந்தது. அவர் பேசுகிறார். “ஞான் தமிழகத்தில் ஜனிச்சு.”

சாமர்த்தியமாகவும் சமாளிக்கிற விதமாகவும் பேசுவது உரையாற்றுவதில் ஒரு முக்கிய அம்சம். மொத்த சனத்தின் கவனத்தையும் அப்போது ஈர்த்து விடலாம். அதற்கு சில நகைச்சுவைத் துணுக்குகள் பெரிதும் உதவுகின்றன. கவிஞர் நா.காமராசன் ஒருமுறை பேசியது இப்போது நினைவு வருகிறது.

கல்லூரிப் பேராசிரியை ஒருத்தி தன் மாணவனையே காதலித்து, திருமணமும் செய்து கொண்டார். அவருக்கும் அந்த மாணவனுக்கும் பெரும் வயது வித்தியாசம் இருந்தது. அதைச் சமாளிக்க அந்தப் பேராசிரியை சொன்னாராம். “என்ன செய்வது, வகுப்புக்குத் தாமதமாக வருவதைப் போலவே அவன் இந்த உலகத்துக்கும் தாமதமாக வந்திருக்கிறான்.”

சில பிரபல பாடகர்கள் தங்கள் கச்சேரி சோபிக்காமல் போகிற சந்தர்ப்பங்களில் தங்களுக்குப் பிடித்த கீர்த்தனைகளை எடுத்துப் பாட ஆரம்பித்து முட்டுக் கொடுத்து விடுவார்கள். அது ஒரு உத்திதான்.

பிரபல பேச்சாளர் என்றால் கைவசம் கட்டாயம் சில நகைச்சுவைத் துணுக்குகள், அல்லது மேற்கோள்கள் கட்டாயம் வைத்திருப்பார்கள். டாக்டர் ஔவை புத்தக வெளியீடு என்றால் “மை பென் இஸ் மை வெப்பன்” என்று பேசுவார். இளையவர் எடுத்த விழா என்றால், “பொதுவா இளைஞர்கள் ஒன்றுகூடி ஒத்துமையா விழா எடுத்தால் ஆச்சர்யம் தான். ஒருமுறை ஒற்றுமை சங்கம்னு ஆரம்பித்தார்கள். அதற்குப் பேசப் போய்வந்தேன். ஆறே மாதத்தில் அதில் நாலு பேர் தனியாப் போயி ‘அதிதீவிர ஒற்றுமை சங்கம்‘ னு துவங்கி அதுக்கும் என்னைப் பேசக் கூப்பிட்டார்கள்.”

அவரது ஸ்டாக் நகைச்சுவையில் உடனே என் நினைவுக்கு வருவது.

பொதுவா நாம இந்தியர்கள் உயரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு தாழ்வான இடத்தில் சாப்பிடுவோம். உயரமா பலகை போட்டு அமர்வோம். தரையில் இலை போட்டுச் சாப்பிடுவோம். வெள்ளைக்காரன் எல்லாரும் தாழ்வான இடத்தில் அமர்வார்கள். உயரமான இடத்தில் சாப்பிடுவார்கள். அதாவது நாற்காலியில் அமர்ந்து மேசையில் சாப்பிடுவார்கள்…

“எங்க வீட்டுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்தான். அவனுக்குப் பலகை போட்டு இலை போட்டோம். இலைல உட்கார்ந்து விட்டான்.”

• • •