Sunday, September 10, 2017


Short story நன்றி குமுதம் தீராநதி செப்டம்பர் 2017
ILLUSTRATION jeeva 


மூன்று
கோர்ட் ஊருக்குத் தள்ளி இருந்தது. அத்தனை பெரிய அத்துவான வெளியில் தனியே ஒரு கட்டடம். ஏரிக்குள் லாரி லாரியாய் மண் அடித்து மேடாக்கிக் கட்டியிருந்தார்கள். இரவு ஏழரை எட்டுக்கு மேல் நடமாட்டம் வற்றி விடும். அத்தனை பெரிய மைதானமே ஜிலோன்னு கிடக்கும். அதென்னவோ வெள்ளைக்காரன் யோசனை, அரசாங்கக் கட்டடங்கள் என்றால் செவேல்னு இருக்கிற சம்பிரதாயம். தூரத்தில் இருந்து பார்க்க அந்தக்கால கேவா கலர் திரைப்படம் போல. அலிபாபா நாற்பது திருடர்கள்… இது திருடர்களை விசாரிக்கிற இடம். கோர்ட்.
நீள வராந்தாக்கள். பத்திருபது அறைகள். வழக்குகள் நடைபெறும் ஆறு ஏழு அறைகள். சிவில் கோர்ட். கிரிமினல் கோர்ட். ஃபேமிலி கோர்ட், என வர்க்கங்கள். ஒவ்வொரு வராந்தாவின் மூலையிலும் எர்கூலருடன் ஜில்லென்ற தண்ணீர். தம்ளருக்கு சங்கிலி போட்டிருக்கும். நோட்டிஸ் போர்டு. கண்ணாடிக்குள் அந்த வாரம் எந்தெந்த வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன என பட்டியல். அதன்படி எல்லாருக்கும் சம்மன் அனுப்பி யிருப்பார்கள். அறைகளுக்கு உள்ளே எட்டிப்பார்த்தால் நீதிபதி அமரும் மேடை. மேசை நாற்காலி எடுப்பாய்த் தெரியும், கல்லாவில் ஓட்டல் முதலாளி போல. வாதி பிரதிவாதிகளை விசாரிக்க அவர்களுக்கு ஒரு கூண்டு. ஒரே கூண்டுதான். நீதிக்கு முன் அனைவரும் சமம்தானே.
வக்கீல்மார் உட்கார நாற்காலிகள் போட்ட நீண்ட மேசை. பேப்பர் வைத்து அதில் எழுத முடியாத அளவு சொரசொரப்பான மேசை. ஆம்பளை மேசை. ஏனெனில் அதற்கு டிராயர் உண்டு. மேல்பட்டைகள் ரெண்டும் இடைவெளி விட்டு ஓட்டை கோடு போல, வகிடு போல தெரியும் மேசை. எதாவது நோட்டை வைத்து அதன்மேல் பேப்பர்வைத்து எழுதுவார்கள். பெரும்பாலும் கையெழுத்துப் போடுவார்கள். வழக்குக் காகிதங்களை நீளவாக்கில் மடிக்கிறார்கள். கோர்ட் காகிதங்களில் வைக்கும் சீல்களுக்கு நீலம் கருப்பு சிவப்பு பச்சை என தினுசு வண்ணங்களும் உண்டு. அதற்கேற்ற அர்த்தங்களும் இருக்கலாம். மேசையில் கட்டு கட்டாக ரப்பர் பேண்ட் போட்ட வழக்குக் காகிதங்கள். அன்றைக்கு விசாரணைக்கு வரும் வழக்கு அடுக்குகள் அவை. மற்றவை அதோ மூலையில் இருக்கிற மர பீரோவில் பூட்டுபோட்டு, எட்டு போல் பூட்டி, பத்திரமாய் இருக்கின்றன. காயடிக்கப்பட்ட மாடுகளின் விரைகள் போல் தொங்கும் பூட்டுக்கள்.
சன்னலோர மூலையில் ஒரு பியூன். அவன் உட்கார ஸ்டூல். பியூன்களுக்கு நாற்காலி கிடையாது. எதிரே ஒரு பாடாவதி மேசை. அங்கங்கே மை சிந்திக் கிடக்கும். ஓரத்தில் மைகளைத் துடைத்த கைக்குட்டை அளவு கந்தல் துணி. சன்னல் ஒட்டி ஒரு பசைச் சட்டி இருக்கும். பியூன்களுக்கு விநோதமான தலைப்பாகை, விரைத்த வெள்ளை உடை, சட்டைக்குப் பூணல் போல குறுக்குப் பட்டி உண்டு. அத்தனை கெட்டியான வெள்ளை உடை ஸ்டார்ச் போட்டுத் துவைத்ததில் அரிப்பு தரும். இருக்கிற வெயிலுக்கு உள்ளே புழுங்கும். வழக்கு துவங்க, பியூன் வாதி பிரதிவாதிகளை ஏனோ மூணு முறை கூப்பிடுகிறான். எப்பவோ ஒரு செவிடன் வழக்கு தொடுத்திருக்கலாம். பார்வையாளர்களுக்கு தனி பெஞ்சு உண்டு. பார்வையாளர் கூட்டத்தில் வழக்கு போகும் போக்கு பற்றி சலசலப்பு வந்தால் நீதிபதி மேசையைத் தட்டுகிறார். பனங்காட்டு நரி அவர்.
எதற்கு சுத்தியல் அவர் வைத்திருக்கிறார் என்பது அப்பதான் நமக்கே புரிகிறது.
கோர்ட்டுக்கு என சில சம்பிரதாயங்கள் வேடிக்கையானவை. கருப்பு கோட் அசைய சினிமாப் பிசாசுகளாய் அலையும் வக்கீல்கள். நீதிபதி தலைக்கு சில சமயம் செயற்கை முடி அணிகிறார். கரிகால் சோழன் கதை வெள்ளைக்காரனுக்கு எப்படித் தெரிந்ததோ. அவர் மேசைக்கு நேர் கீழே, மேடையை ஒட்டி ஒரு டைப்பிஸ்ட். கோர்ட் நடைமுறைகளை அவர், கோர்ட் நடக்க நடக்க தடதடவென்று தட்டச்சு செய்கிறார். மர மாடிப்படியில் யாரோ உருண்டு விழுகிறாப் போலக் கேட்கிறது. எப்பவுமே அவர் சற்று எரிச்சலுடனும் வாழ்க்கை சார்ந்த அலுப்புடனும் காணப்படுகிறார். வாழ்க்கை அத்தனை சுலபமானதல்ல என அவர் நினைப்பது போல் தெரிகிறது. விசாரிக்கப்படும் வழக்குகளால் அப்படி நினைக்கிறாரா, அவரது குடும்ப வாழ்க்கையே சற்று இம்சையில் உள்ளதா என தனியே பிரிப்பது கடினம். ரெண்டுமே இருக்கலாம்.
மாலை நாலரை ஐந்து மணிக்கெல்லாம் கோர்ட் நடைமுறைகள் முடிந்து விடும். நீதிபதிகள் கிளம்பி விடுவார்கள். நீதிபதிகளுக்கு தனி குவாட்டர்ஸ் உண்டு. தினசரி அவர்களை அழைத்துவர வாகனம் உண்டு. கோர்ட் முடிந்தும் அரை மணி நேரம் வரை அந்த எழுத்தருக்கு வேலை இருக்கலாம். வாதி அல்லது பிரதிவாதி அவரிடம் எதும் கையெழுத்தில் வாங்கிச்செல்ல காத்திருக்கலாம். வாய்தா பெற்ற வழக்குகளோ, வேறு யாருக்காவது சம்மன் அனுப்புதலோ என வக்கீல், அல்லது வழக்குக்காரர் பிரதி வாங்கிக்கொள்ள காத்திருப்பார்கள். தட்டச்சர் கையெழுத்து இட்டுத்தர பியூன் அதை வாங்கி சாப்பா வைத்துத் தர அவனுக்கு பக்ஷீஸ் உண்டு. அவர்களிடம் அவர், தட்டச்சர் பெரும்பாலும் சலித்துக்கொண்டே வேலை செய்கிறார். பியூன்கள் நீதிபதி இருக்கிற நேரம் தவிர மற்ற நேரம் வெளியே எங்காவது சுற்றப் போய்விடுகிறார்கள். எக்ஸ்ட்ரா வருமானம் வரும் நபர்கள் எல்லாருக்கும் கெட்ட பழக்கங்கள் சேர்ந்து கொள்கின்றன. சொந்தக் காசுக்காரன் என்றால் ஒரு மனைவியையே திருப்திப் படுத்த முடியாமல் திண்டாட வேண்டியிருக்கிறது.
ராத்திரி வேளையில் கோர்ட்டுக்கு போலிஸ் பந்தோபஸ்து உண்டு. என்றாலும் எவன் அங்க வந்து திருடப்போகிறான், என்ற அலட்சியத்தில் ரிடையர் ஆகிற வயதிலான போலிஸ்காரர்கள் அங்கே அந்தவேலையை விரும்பி வருகிறார்கள். ஓட முடியாதவர்கள். அல்சர் போன்ற அஜீர்ணக் கோளாறுகள் அவர்களுக்கு இருக்கின்றன. கோர்ட் வளாகத்துக்கு வெளியே கோவில் திருவிழாவுக்குக் கடைபோட்டாப் போல இங்கேயும் திடீர் தோரணைக் கடைகள் உண்டு. தட்டச்சு எந்திரங்கள், கணினிகள், ஒளிநகல் எடுக்கும் கடைகள். ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு தட்டச்சு எந்திரம் என சில எளிய கடைகள். மேசை நாற்காலி என்றே இல்லாமல் வராந்தாவிலேயே அமர்ந்துகொண்டு மனு எழுதித்தர காத்திருக்கும் நபர்கள். அவர்கள் ஏனோ சட்டைப் பையில் ரெண்டு மூணு பேனா வைத்திருக்கிறார்கள். மனு எழுதச்சொல்லி கேட்டுவரும் நபர்களை அவர்கள், இந்த மூஞ்சியா இந்த மூஞ்சியா, என பசித்த நாயாய்ப் பார்க்கிறார்கள்.
அதிகபட்சம் இரவு எட்டு மணி. அதற்கு மேல் வளாகமே வெறிச்சோடி விடும். ஊருக்குள் அழைத்துப் போகிற கடைசி டவுண்பஸ் ஆறரையோடு சரி. முதல் பஸ் காலை ஒன்பதரை. மற்ற நேரம் அங்கே வர ஆட்டோ தான். மத்த நேரம் அந்தப் பெரிய வளாகம் மொத்தமுமே தனிமைப்பட்டு விடும். வராந்தா விளக்குகள் விடிய விடிய எரிந்தபடி யிருக்கும். என்றாலும் பயமின்றி பெருச்சாளிகள் நடமாடும். மனித அரவங்கள் இல்லை என்றாலே அவை உற்சாகப்பட்டு விடுகின்றன. அந்த வெறுமையும் தனிமையும் புதிதாய்ப் பார்க்கையில் சற்று பயமாய் இருக்கும். இப்படி அத்துவான வெளி பிரம்மாண்டங்களில் தான் பேய் பற்றிய கற்பனைகள் உருவாகின்றன. செக்யூரிட்டி போலிஸ் என இங்கே இரவுவேலைக்கு வர்றாட்கள் அதனால்தான், சற்று தைரியப்படுத்திக் கொள்ள, லாகிரி வஸ்துக்கள் பழகிக் கொள்கிறார்கள். முனகியபடி எதாவது மூலையில் அவர்கள் புரண்டு கொண்டிருப்பார்கள்.
ஒருமுறை சனி ஞாயிறு என இரு விடுமுறை நாட்கள் அமைந்த சமயம், தெருநாய் ஒன்று கோர்ட் உள்ளே எப்படியோ மாட்டிக்கொண்டது. வெள்ளி இரவு கவனிக்காமல் அதை உள்ளே வைத்துப் பூட்டியிருந்தார்கள். எப்படியோ அது சமாளித்திருக்கிறது. சனி இரவு. அதற்குப் பசி தாளவில்லை. இரவுப்பணி காவல்காரர் வந்து பாயை உதறி விரிக்… உள்ளேயிருந்து சத்தம். யாரோ இளம்பெண் அழுகிறாப் போன்ற ஊளை. கதவைப் பிறாண்டி பிறாண்டி சத்தங்கள். துள்ளிவிட்டார் அவர். ஒற்றை ஓட்டம். அலறி வயர்லெஸ்சில் பதறிப் பதறிப் பேசினார். ஸ்ஸார்…பேய் சார்… எங்கய்யா? கோர்ட்ல… என்னய்யா உளர்றே? இல்ல சார். கேஸ் தோத்துப்போன யாரோ பெண் பிள்ளைதான்… தற்கொலை பண்ணிக்கிட்டு… காவல்துறை ஜீப்பில் வந்தது. ஆமாம். உள்ளேயிருந்து அழுகையாய் அவல ஊளை. அரைமணி நேரம் அப்படியே விவாதங்கள். ஒருத்தர் தைரியமாய், அந்த அறைச்சாவியை வரவழைத்துத் திறந்தால், வள் வள் என்று வெளியே ஓடியது நாய். கடும் பசி அதற்கு.
காலை பதினொரு மணி என்றால் முழுப் பரபரப்பாக இயங்கும் வளாகம் அது. சைக்கிளில் டீ விற்று உற்சாகமாய்த் திரிவார்கள். முடிச்சு முடிச்சாய் சனங்கள் நிழல்கண்ட இடத்தில். எல்லார் முகத்திலும் கவலை பூசியிருக்கும். வம்புக்கிழுத்து கேஸ் போட்டவன்தான், ஜெயித்து விடுவோம் என அபார நம்பிக்கையில் உற்சாகம் பொங்கத் திரிவான். மத்த நபர்கள்? காலம் அவர்களை மாங்கொட்டையாய் சப்பி வீசியிருந்தது. வாதி உடல்கொழுத்தும் பிரதிவாதி மெலிந்தும் காணப்பட்டார்கள்.
சுந்தர குருக்களுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. பெண்ணைக் கட்டிக்கொடுத்த இடம் சரியாக அமையாமல், இருந்த சொற்பப் பணத்தைவைத்து அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார்… அத்தனை செலவும் விரயம். அக்கடா என்று உட்கார ஓய முடியவில்லை. பெண்ணும் அவனோட வாழ மாட்டேன், என்ற திரும்ப வந்துவிட்டது. பெண்களைக் கைநீட்டி அடிக்கக் கூசாத ஆம்பளை. கேட்டால், கேள்விக்கு பதிலில்லை என்றால் கை நீட்டி விடுகிறான். குடிப் பழக்கம் கூட இருக்குப்பா, என்று அவள்  சொன்னபோது ஈஷ்வரா என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். கோர்ட் வரை அவர்கள் ஏறி யிறங்க வேண்டியதாகி விட்டது. மனசு தாளவில்லை அவருக்கு. வழக்கு வாய்தா விசாரணை… எல்லாமே அவருக்குப் புதுசு. ஏற்கனவே அவர் கைங்கரியம் பார்க்கும் கோவிலில் நிலைமை அத்தனை சௌஜன்யமாய் இல்லை. இதில் இவளுக்கு வேறு வழக்கு வியாஜ்யம் என்று அலைய வேண்டியதாய் இருந்தது. நிலைமை ஒரடி ஏறினால் ரெண்டடி சறுக்குவதாய் இருந்தது.
டீ வேணுமா சாமி? ஏலக்கா இஞ்சிலாம் போட்டு… வேணாம்ப்பா. உனக்கு வேணுமாடி?... ம்ஹும் என்றாள் அவள். இந்தபார், விசுக் விசுக்னு எதுக்கெடுத்தாலும் இப்பிடி கண்ணக் கசக்கப்டாது சௌதா, என்றார் அவர் கனிவான கண்டிப்புடன். திரும்பிப் பார்த்தார். இன்னா சாமி, டைவர்ஸ் கேசா? டீ வேணான்னா நீ கிளம்புப்பா. இப்டிதான் சாமி, போனவாரம்.. நல்லவேளை. அதற்குள் டீ, என யாரோ அவனைக் கூப்பிட்டார்கள்.
விசாரணை என உள்ளே போனாள் சௌதாமினி. அவர் போகவில்லை. உள்ளே பெண் என்றும் பாராமல் அவளை என்னவெல்லாம் கேட்கிறார்கள். ஹா என்ற பெருமூச்சுடன் அங்கிருந்த கல்லில் அமர்ந்தார் சுந்தர குருக்கள். ஆண்டவா, எனக்கு ஒரு நல்ல வழி காட்டப்டாதா… என்றபடி அந்த இடத்தை ஒருமுறை பார்த்தார். அவர் சாய்ந்திருந்த மரம், வேப்பமரத்தில் அரசு பாம்பு போல் சுற்றி வளைத்துப் படர்ந்திருந்தது. ஆச்சர்யமாக அதை முழுசும் பார்த்தார்.
ஒரு மணி நேரத்தில் சௌதாமினி திரும்பி வந்தாள். அவள் கண் சிறிது கலங்கி யிருந்தது. “கவலைப்படாதேம்மா… எல்லாம் ஒரு கை பாத்திர்லாம்” என்றார் அவர் உற்சாகமாக. அவரது உற்சாகம் அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
வேம்பும் அரசும் பின்னிக் கிடந்த அந்த வளாகத்தில் திடீரென்று விநாயகர் சிலை ஒன்று வந்து சேர்ந்தது. வேம்புதான் விநாயகர். அரசுதான் கோர்ட்… என்று நினைத்துக் கொண்டார். ஏற்கனவே மர விஸ்தீரணத்தைச் சுற்றி ஒரு மேடை போல் உட்கார்வதற்காக அமைக்கப் பட்டிருந்தது. பிள்ளையார் ஒரு அதிகாலை நேரம் அங்கே வந்து ஜம்மென்று அமர்ந்துகொண்டார். கவலையோடு கோர்ட் வாசலில் காத்துக் கிடந்தவர்கள் எல்லாரும் பிள்ளையாரைப் பார்த்ததும் தோப்புக்கரணம் போட்டு கன்னத்தில் டப் டப்பென்று அடித்துக்கொண்டு மனசுக்குள் பிரார்த்தனை செய்துவிட்டுப் போனார்கள். “கவலைப் படாதீங்கோ. ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்… உங்க காரியம் ஜெயம்” என்றபடி சுந்தர குருக்கள் எல்லாருக்கும் வியூதி விநியோகித்தார்.
சங்கட ஹர சதுர்த்தி போன்ற விசேஷ தினங்களில் சிறப்பாக அருகம்புல் மாலையும் புது வஸ்திரமுமாய் விநாயகர் ஜ்வலிக்க ஆரம்பித்தார். யாராவது மண்டகப்படி ஏற்றுக்கொண்டார்கள். ஒரு பால் அபிஷேகம், ஸ்வாமி மனசு குளிரப் பண்ணினால் அப்பறம் உங்களுக்கு என்ன குறை? ஒரேநாளில் நிறைய அபிஷேக வாய்ப்பும் கிடைத்தன. ஸ்வாமிக்கு குளிரில் உடம்பே நடுங்கிவிடும் போலிருந்தது. அப்படி ஆகிவிடக் கூடாது, என்று நாலைந்து பேரை ஒரே சமயம் வரச்சொல்லி, ஒரே சொம்பு பாலுடன் குருக்கள் அபிஷேகம் காட்டினார். எல்லாரும் அவரவர் மண்டகப்படி என நினைத்து பரவசப் பட்டார்கள்.
கோவில் பக்கமாக ஏழைப்பெண் ஒருத்தி புஷ்பம், தேங்காய் பழம், திருஷ்டிக் கயிறு, அருகம்புல் என விற்க ஆரம்பித்தாள். அபிஷேகத்துக்குப் பால் வேணுன்னால் முதலிலேயே அவளிடம் சொல்லிவிடலாம். சர்க்கரைப் பொங்கல் எல்லாம் குருக்களே வீட்டில் இருந்து செய்து எடுத்து வருவார். சைக்கிளை விற்று விட்டு இப்போது ட்டூ வீலர் வாங்கியிருந்தார். ருத்ராட்சத்தைத் தங்கத்தில் கோர்த்து அணிந்து கொண்டிருந்தார். உடம்பில் சந்தனம் மணத்தது. நம்ம கையில என்ன இருக்கு, என்றார் மோதிரக் கையை ஆட்டியபடியே. எல்லாம் அந்த அந்த ஈஷ்வரன் செயல், என்று அடிக்கடி சொன்னார். கேட்டவர்கள் எல்லாரும் ஆகா, என்று தலையாட்டினார்கள்.
பிறகு கோர்ட்டில் வேலை செய்கிற யாருடையதோ உதவாத பிள்ளையை உட்கார்த்தி, பீடி சிகெரெட் விற்கிற பங்க் கடை, அதை ஒட்டி ஃப்ரூட் மிக்சர், கிரேப், ஆரஞ்சு, ரோஸ்மில்க் கலந்து விற்கிற ஜுஸ்கடையும் வந்தது. இடமே நெரிசல்பட்டு ராவணன் தலைகளாய் பக்கவாட்டு வளர்ச்சி, விரிவு, வீக்கம் காண ஆரம்பித்தது.
இந்த இடத்தில் இந்த விநாயகரை அப்புறப்படுத்த யாரும் முயலக்கூடாது, என்பதில் குருக்கள் ரொம்ப யோசனையாய் இருந்தார். கோர்ட்டில் வேலை செய்கிறவர்கள், வந்து போகும் அரசு சார்ந்த அதிகாரிகள் எல்லாரிடமும் ஒரு டொனேஷன் ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு பணம் வாங்கினார் குருக்கள். அரசு ஜீப் வந்தால் கோவில் வாசலில் தான் நின்றது. போலிஸ்காரர்களும் அங்கேதான் குழுமினார்கள். போலிஸ் கூட்டிவந்த கைதி விநாயகரைப் பார்த்து விலங்கு போட்ட கையுடன் ஒரு கும்பிடு போட்டான். அவனையும் தள்ளிப் போனார்கள். பாலும் தண்ணீருமாய் ஊற்றி ஊற்றி வேம்பும் அரசும் கிடுகிடுவென வளர்ந்தன. இரவுகளில் அரச மர இலைகளின் சலசலப்பு கேட்க வெகு சுகம்.
ஒருநாள் பணிக்கு வந்த மேஜிஸ்டிரோட் வாசலிலேயே நின்று ஷுவைக் கழற்றிவிட்டு விநாயகரை வணங்கினார். உள்ளேயே பக்தர்கள் நின்று சேவிக்க என விசாரணைக் கூண்டு போல குருக்கள் அமைத்திருந்தார். நீதிபதியே அங்கே வந்து கூண்டில் நின்று கடவுளிடம் விசாரணைக்கு என நின்றாற் போல நின்றார். எல்லாம் ஈஷ்வரன் செயல். குருக்கள் கற்பூரம் காட்டி எடுத்து வந்து அவர்முன் நீட்டினார். இனி கோவில் அங்கே நிலைகொண்ட மாதிரிதான், என்றிருந்தது அவருக்கு. சாமி எங்க கிட்டல்லாம் வாங்க மாட்டேளா?... என்று கேட்டுவிட்டு மாஜிஸ்டிரேட், அவரே ஒரு ஐந்நூறு, சலவைத்தாள் நோட்டு தந்தார்.
எதிர்பாராமல் ஒரு சிசி டிவி ஃபுட்டேஜில் அவர், நீதிபதி சிக்கியிருந்தார்.
வளாகம் களைகட்ட ஆரம்பித்திருந்தது. ஊருக்குள் இருந்தெல்லாம் சனங்கள் வந்து கும்பிட்டுவிட்டுப் போனார்கள். கோர்ட்டில் சிறு எடுப்பாய் இருந்த பிள்ளையார் இப்போது சிறு சுவர், பாத் ரூம் அளவு சதுர மறைப்புடன் (அடிக்கடி அபிஷேகம் வருதோல்லியோ?) அமர்ந்து அருள் பாலிக்க ஆரம்பித்திருந்தார். கோவிலைத் தாண்டித்தான் கோர்ட்டுக்குப் போக வேண்டும். பிரதான சாலையில் இருந்தே பார்க்க கோவில் தெரிந்தது.
வாதி ஒருநாள் வந்து விநாயகரிடம் பிரார்த்தனை வைத்துவிட்டு வஸ்திரம் சார்த்தி விட்டுப் போனால் மறுநாள் பிரதிவாதியும் வந்தான். அவனுக்கும் பிரார்த்தனை இருந்தது. நான் செயிக்கணும், என்பது தான் எல்லாரது பிரார்த்தனையும். நியாயம் அநியாயம்? அது தனிக் கணக்கு. லோகம் அப்படி.
வழுவழுவென்று சலவைக்கல் பதித்த தரையுடன் கோவில் இந்நாளில் வளர்ச்சி கண்டிருந்தது. எனினும் சந்நிதி முன் அந்த விசாரணைக் கூண்டு… அந்த பாவனை மாறவில்லை. கோர்ட் வளாகத்தில் அவனவனுக்கு சொந்தமாய் ஆயிரம் கவலைகள். தீர்ப்பு எப்படி அமையுமோ, என திகைப்பாய் நடமாடும் சனங்களுக்கு கோவில் வரப் பிரசாதம் தான். எனக்கு இந்தக் காரியம் மாத்திரம் பலிதம் ஆவட்டும். இந்தக் கோவிலுக்கு நான் இந்தச் செலவு ஏத்துக்கறேன், அந்தச்செலவு ஏத்துக்கறேன், என்று பிரார்த்தனைகள் வர ஆரம்பித்திருந்தன. அதில் பத்தில் ஒன்று பலிதம் ஆனால் கூட கோவில் அதனால் வளர்ச்சி கண்டது. அதைத் தொடர்ந்து மேலும் பிரார்த்தனைகள், புதிது புதிதாய் மேலும் வேண்டுதல்கள்…
கோவில் மேல் பிடிப்பு கண்ட அந்த மேஜிஸ்டிரேட் காரியம் பலிதம் ஆனது போலிருக்கிறது. அவர் விநாயகரிடம் அபார பிடிப்பு காட்ட ஆரம்பித்திருந்தார். அதே மேஜிஸ்டிரேட்டிடமே தன் மகளின் வழக்கு விசாரணைக்கு வரும்படி சுந்தர குருக்கள் பார்த்துக் கொள்ளவும் முடிந்தது. சௌதாமினி விரும்பியபடி விவாகரத்து கிடைத்தது. அதைவிட அதிசயம், அவளது வழக்கை எடுத்து நடத்திய வக்கீல், ரமணன் நல்ல பையன். கோர்ட்டில் அவளை எழுப்பி என்னவெல்லாமோ கேள்விகள் எதிர்த்தரப்பு வக்கீல் கேட்ட போதெல்லாம் அவனுக்கு ஆவேசம் வந்ததை கவனித்தார் குருக்கள்.
விவாகரத்து கிடைத்ததும் சௌதாமினி அவனையே கல்யாணம் பண்ணிக் கொண்டாள்.
வாசல் பக்கமாக சின்ன குடம் ஒன்றை உண்டியலாக வைத்திருந்தது காலப் போக்கில் பெருகி இப்போது இரும்புப் பெட்டியாக மாறி விட்டது. சிவனை மறைக்கிற நந்தி போல கோவிலுக்குள் நுழையும் இடத்திலேயே உண்டியல். கோவில் பூட்டி யிருந்தாலும் மதிய நேரங்களில் கூட பிரார்த்தனை என்று வெளியில் இருந்தே மூடிய கதவைப் பார்த்துக் கும்பிடுகிறவர்கள் கிரில் கதவுக்கு உள்ளே கைநீட்டி உண்டியலில் காணிக்கை போட வசதியாய் இருந்தது.
கூட்டம் பெருக ஆரம்பித்தபின் ஊரில் இருந்து தன் தம்பியையும் குருக்கள் வரவழைத்துக் கொண்டார். படிப்பு வராமல், வைதிகமும் பிடிபடாமல் ஒருமாதிரி அவன் திகைத்துக் கொண்டிருந்தான். மந்திரம் எல்லாம் தெரியாது. அவர் கற்பூரம் காட்டும் சமயம் மணி அடிப்பான். ஒருகையில் மணி, மறுகையில் கற்பூரம் என்று சமாளிக்க அவருக்கே வராது. அவர் இல்லாத சமயம் கற்பூரம் காட்டுவான். அவருக்காக அவன் சிகெரெட் பழக்கத்தை தியாகம் பண்ண வேண்டியிருந்தது. அவருக்குத் தெரியாமல் ராத்திரிகளில் அவன் சிகெரெட் குடிக்கிறானோ தெரியாது.
அந்தக் கோவிலைத் தாண்டினாலே வாடிய பூவும் பாலுமான கலவை மணம் அடிக்க ஆரம்பித்திருந்தது. அத்தனை பெரிய வளாகத்தில் தனியே படுக்க வேண்டியிருந்த போலிஸ் இப்போது பிள்ளையார் கோவில் பக்கமாக வந்து படுக்க ஆரம்பித்திருந்தார். இருக்கிற பயத்துக்கு, ஒரு பாதுகாப்பாக, கூட சாமி இருப்பது நல்ல விசயம் தான். கோர்ட் வளாகத்தின் முன்னெடுப்பாக முகத்தில் மூக்கு போல வளர்ந்திருந்தது கோவில். குருக்களைத் தெரியாதவர் இல்லை. குருக்களுக்குத் தெரியாத மாஜிஸ்டிரேட் இல்லை. விசேஷ நாட்களில் தவறாமல் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் அவர்களுக்கு எடுத்துப் போய்த் தந்தார் சுந்தர குருக்கள்.
எப்பவும் பரபரப்பான வளாகம் அது. கோவில் பக்கம் அரசு அதிகாரிகள் நடமாடுகிறார்கள். காவல்துறை அதிகாரிகளும் வந்து போகிறார்கள். எப்பவும் ஜன நடமாட்டமும் இருக்கிறது. இரவில் கூட சக்தி விநாயகர் என்று போர்டு, மினுக் மினுக் என விளக்கு எரிகிறது அங்கே. செக்யூரிட்டி வந்து அங்கே படுத்துக் கொள்கிறார்… ஆனால் யாருமே எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.
குருக்களுக்கு அதிகாலை ஐந்து மணிவாக்கில் அலைபேசியில் தகவல் சொன்னவர் போலிஸ்காரர். அவர்தான் செக்யூரிட்டி டூட்டி அன்றைக்கு. குருக்கள் உடனே பைக்கில் விரைந்து வந்து பார்த்தார். மினுக் மினுக் என இன்னமும் விளக்கு துடித்துக் கொண்டிருந்தது. கிரில் கதவு திறந்து கிடந்தது. உள்ளே உண்டியல் உடைக்கப் பட்டிருந்தது. எட்டு போல் பூட்டியிருந்த பூட்டு மூன்று போல் தொங்கிக் கொண்டிருந்தது.