Sunday, January 29, 2017

29 01 2017 காலை 11 30 மணி
கவி வளநாடனின் ‘அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்’
நூல் அறிமுக விழா உரை


புலம் பெயரும் சொற்கள்
எஸ்.சங்கரநாராயணன்

வி வளநாடனின் இந்தச் சிறு நூல் இதயத்தோடு உறவாடும் விதத்தில் அவர் இதயத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கிறது. வட்டார வழக்குகள் இலக்கியம் ஆகுமா, என்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இந்தப் பத்திகளை இலக்கியம் என்று உரசிப் பார்த்து உண்மை உரைப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
வட்டார வழக்குகள், சொற்களில் ஏற்றிய வட்டாரப் புழுதி. அந்த மண்ணின் நிறமும் மணமும் நமது உயிரோடு பின்னிப் பிணைந்தவை அல்லவா? ஒரு வட்டார வழக்கு உரையாடலில் அந்த வார்த்தைகளைப் பேசும் மனிதரின் ரசனை, ருசி மற்றும் வாழ்க்கை சார்ந்த அவனது கவனங்கள், அவனது வயது, ஊர்மண் சார்ந்த அவனது பிடிப்பு, என எத்தனையோ விஷயங்களை நாம் அவதானிக்க முடிகிறது. எல்லாருக்கும் பொத்தம் பொதுவான ஒரு மொழிஉரைநடையில் இது சாத்தியமே இல்லை. மொழி, அதைவிட வாழ்க்கை முக்கியம் நமக்கு. ஆகவே வாழ்க்கையை அதிகமாய் நமக்கு அதன் கதகதப்புடன் கைமாற்றி விடுகிறது வட்டார அடையாளங்களுடனான புழங்கு மொழி. நம் கட்டாயத் தேவை அது என்றே சொல்வேன்.
அந்த மொழியில் அதைப் பேசும்போதும் கேட்கும்போதும் அந்தப் பகுதிக்கே நாம் பயணிக்க வாய்க்கிறது. இந்த ருசி அறிந்தவராய் வளநாடன் இருக்கிறார். தம் பகுதி, தம் மக்கள் என்று அவர் இந்த நூலில் கொண்டாடுகிறார். மனிதனை விதந்தோத அவர் கற்பனைக்குத் தாவவில்லை. எங்கும் வெளியே தேடவில்லை. தம் மக்களை அவர் அப்படி நேசிக்கிறார். அவர்களை நமக்கு அறிமுகம் செய்விக்கத் துடிக்கிறார்.
ஆகவே இந்நூல். குவைத்தில் இருந்து தம் சாளரம் வழியே தனது மண்ணைப் பார்க்க முடிகிறது அவருக்கு.
அவர் ஊரின் ‘பாய்’ ஒருவர் ஓவியர். ஊரின் எந்தமத ஓவியங்களுக்கும் அவரைத்தான் நாடுவார்கள் என்று ஆரம்பிக்கிறது புத்தகம். சாதிகளைத் தாண்டி கலாச்சாரமும் ஒத்தது அறியும் மனப் போக்கும் சமரசங்களுடனான பிரியமும் வாழ்வை அழகாக்கி விடுகின்றன.
கிராமங்கள் அழிந்துபட, மனிதர்களும் தூர்ந்து போனார்கள் என்கிறார் வளநாடன். அதற்காக வருத்தப் படுகிறார். இறந்த காலம் பொற்காலம், நிகழ்காலம் அதுபோல் இல்லை, ஒருமாற்று குறைந்தது நிகழ்காலம், என்கிறாரா, என்றால் இல்லை. அந்த மக்களை நான் உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்… என்கிறார். கால வழக்கில் அவர்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கிறார். ஊருக்கு ஒத்துமை பேசியவரின் மகன் வரப்பு விவகாரத்தில் கேஸ் போடுகிறான், என ஒரு இடத்தில் வருத்தப் படுகிறார்.
ஏன் அவருக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. வளநாடன் குவைத்க்காரர். அவ்வப்போது நம் மண் அழைக்க வந்து இங்கே உலவிவிட்டுப் போகிறார். தமிழ் மனம் அவருடையது. குவைத்தில் வாழ்ந்தாலும் அது இங்கேயே சுற்றி வருகிறது. தமது பால்யகால அனுபவங்களை, அவர் கண்ட காட்சிகளை, கோலங்களை எல்லாம் அசைபோட்டுப் பார்த்து மகிழ அவருக்கு வேண்டியிருக்கிறது. ஏ.சியில் அமர்ந்தபடி ஆலமரக் காற்றை யோசிக்கிற மனசு அவருடையது.
எளிய மனசு. இந்த நூலில் வரும் ஒவ்வொரு சம்பவமும் ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. அழகியல் சார்ந்தவை. ஆனால் அரசியல் சார்ந்தவை அல்ல. சாமானியனுக்கு அரசியல் தேவை இல்லை என்கிறாரா வளநாடன்? தெரியவில்லை.
அய்யனார் கோவில் அமைந்துள்ள நிலம் ஒருகாலத்தில் அபுபக்கருக்குச் சொந்தமாய் இருந்தது, என்பது ஒரு பத்தி. இந்த அபுபக்கர் தமிழ் பேசுகிற நபர். உருது அவருக்குத் தெரியாது. இவர்கள் ஒருகாலத்திய இந்துக்கள் என்பதும், பிறகு மதம் மாறினார்கள், என்பதும் என் கணிப்பு. இதுதான் இதன் பின்னுள்ள அரசியல்.
அப்படியும் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். ஜோரான விஷயங்கள் நமக்குக் கிடைக்கும்.
வாழ்க வளநாடன். வாய்ப்புக்கு நன்றி.
·       
91 97899 87842


Wednesday, January 18, 2017


art jeeva
  • தேநீர்

எஸ். சங்கரநாராயணன்
 திகாலை நாலரை. அதுதான் அவர் விழித்துக் கொள்ளும் நேரம். சிவகுருவுக்கு அலாரமே தேவை இல்லை. விளக்கைப் போடாமல் போய்ப் பல் விளக்கினார். கோபால் பல்பொடி. உள்ளறையில் மகனோ மருமகளோ புரண்டு படுப்பதைக் கேட்டார். அதிகச் சத்தமாய்க் கொப்பளிக்கிறேனோ, என நினைத்தார். சட்டையை மாட்டிக் கொண்டார். இப்பவெல்லாம் காலையில் குளிர்கிறது. கைத்தடி கிடையாது. கண்ணாடியும் இல்லை. இருட்டில் காலால் துழாவி செருப்பை மாட்டிக் கொண்டார். கதவை உள்பக்கமாகப் பூட்டி சாவியை உள்ளே சணல் மிதியடிக்கு எறிந்தார். அது சற்று குறி பிசகி டைல்ஸ் தரையில் விழுந்து டைல்ஸ் முனகியது. ச், என்றபடி தெருவில் இறங்கினார்.
வெளிச்சமே இல்லை. மகா அமைதி. லேசான குளிர். தெரு தாண்ட வழியில் சாமி, கூடச் சேர்ந்து கொண்டார். சாமி மேலத் தெரு. வத்தக் காய்ச்சிய ஒல்லி உடல். கடந்த நாலைந்து வருடங்களாக அவர்கள் இப்படி அதிகாலையில் சேர்ந்து கொள்கிறார்கள். துரை இப்போது வருவது இல்லை. அவர்கள் எல்லாரையும் விட மூத்தவர் துரை. மாடியில் இருந்து இறங்கும்போது லாத்தி அவர் அடிபட்டுக் கொண்டார். காலில் கட்டு. அவர் அறைக்குள்ளேயே நடமாடுகிறாப் போல ஆகிவிட்டது. சாமியின் நல்ல சகா அவர்.
பேசாமல் நடந்து கொண்டிருந்தார்கள். சிறிது செருமிவிட்டு, "என்ன, நல்லாத் தூங்கினீரா?" என்று கேட்டார் சிவகுரு. சிலுசிலுவென்று கிளம்பிவந்த காற்று உடலைச் சிறிது நடுக்கியது. "ம். ம்" என்றபடி வேட்டியைக் கட்டிக்கொண்டார் சாமி. அவரது மருமகள், மகனோடு கோபித்துக்கொண்டு பிறந்த வீடு போயிருக்கிறாள். மகன் வீட்டில் உம்மென்று இருக்கிறான். இருவருக்கும் என்ன தகராறு தெரியவில்லை. இவள் இருந்தால் மருமகளை இப்படி உதறிவிட்டுப் போக விட்டிருக்க மாட்டாள். இதெல்லாம் எப்படி சுமுகமாகும், நாம என்ன செய்ய, எதுவும் புரியவில்லை. அவர் கவலைகள் அவருக்கு. சிவகுரு, சாமி, இரண்டு பேருமே அதைத்தான் பேச விரும்பி, அதைத் தவிர்த்தாப்போல சும்மா பேசிக்கொணடு வந்தார்கள்.
சின்ன ஊர். மேல்தளம் போட்ட வீடுகள் குறைவு. ஓடும் கூரையுமான வீடுகள் அதிகம். எட்டு பத்து தெருக்கள். தாண்டி நாலா பக்கமும் வயல் வெளி. எல்லாம் இப்போது வறண்டு காய்ந்து கிடக்கிறது. சுப்ரமணியர் படித்துறை இப்போது மணல்வெளியாய்க் கிடக்கிறது. பதினெட்டு படிகளும் தெரிகின்றன. தண்ணீரே இல்லை. மழைக்காலத்தில் அதில் நாலு படிகள் தெரிந்தால் அதிகம். அனுமன் மலையில் இருந்து, மழைபெய்தால் ஐந்தாறு மணி நேரத்தில் தண்ணீர் விறுவிறுவென்று இங்கே ஓடிவந்துவிடும். இப்போது மலையே காய்ந்து விட்டது. அந்தக் கோவிலும் படித்துறையும் தண்ணீர் இல்லாமல் தன் சோபையை இழந்து நிற்கிறது.
கோவில்பக்கமாக ராமையாவின் தேநீர்க்கடை. அதிகாலையில் சின்னப்பா வந்து பசுவை நிறுத்திப் பால் கறந்து தந்துவிட்டுப் போவான். வெளிச்சம் பிரிந்தும் பிரியாமலுமான காலையில் அவனது போணியில் காலைத் தளிர் வெளிச்சமாகவே பால் உள்ளே நிறையும். ஊரில் பாதிக் கிழவர்களுக்கு அந்தப் பசுவின் பாலில் காலை முதல்தேநீர் குடிக்க என ஒரு கிறுக்கு இருந்தது. தெரு விளக்கு அநேகமாக எரியாத அந்த இடத்தில் ராமையாவின் கடையில் பெட்ரோமாக்ஸ் ஆஸ்துமா நோயாளி போல தஸ் புஸ் என்று எரிந்து கொண்டிருக்கும். நீள இரு பெஞ்சில் கிழவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள். கடைக்கு இந்தப் பக்கம் ஒன்று அந்தப் பக்கம் ஒன்று என இரண்டு பெஞ்சுகள். நேரம் ஆக ஆக கிழவர்கள் ஐந்தாறுபேர் என அதிகரித்தார்கள்.
·        
சிவகுரு வந்தபோது அழுக்குச்சாம்பல் போன்ற பெட்டை நாய் ஒன்று அவர்களைப் பார்க்க எழுந்தோடி வந்தது. மூஞ்சூறு நிறத்தில் அதன் முகம கூட ஒடுங்கி எலியாய்க் கண்டது. அப்போதுதான் சின்னப்பா வந்தான். மாட்டை ஒருகையிலும் சைக்கிளை ஒரு கையிலுமாகப் பிடித்தபடி வந்தான். மடி பெருத்த சிவலைப் பசு. இடப்பக்கம் வலப்பக்கம் என மடி அசைந்தசைந்து வரும் பசு. நாலு ஈனி விட்டது. ஒண்ணரை லிட்டர் ரெணடு லிட்டர் வரை காலையில் கறக்கும் அது. "வாங்க பெரியப்பா," என கழுத்தில் கயிறு தொங்க சிரித்தான் சின்னப்பா. "என்னடா இன்னிக்கு நீ லேட்டா?" என்றார் சிவகுரு. "மாடு தூங்கிட்டது பெரிப்பா," என்றான் அவன் சிரித்தபடி.
ராமையா எப்போது தூங்குவார், எப்போது எழுந்து கடை திறப்பார் தெரியாது. இந்த இடத்தில் தேநீர்க்கடை போட வேண்டும் என்றும், அதை இப்படி அதிகாலையில் திறக்க வேண்டும் என்றும் எப்படித்தான் அவர் முடிவு செய்தாரோ? அவருக்கும் வயது, அதாகிறது அறுபது தாண்டி. அந்த ஊரில் அநேகம் பேருக்கு பிறந்த வருடமே தெரியாது. அவருக்கே காலையில் தேநீர் தேவைப்பட்டதோ என்னவோ. எதோ ஊரில் இருந்து பிழைக்க என்று இங்கே வந்து கடை போட்டவர். அவரைத் தேடி அவர் உறவு சொந்தம் என்று யாரும் வந்து சிவகுரு பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. ராமையா எப்பவும் சுத்தபத்தமாக நெற்றி நிறைய திருநீறுடன் இருப்பார். முதல்தேநீரை முருகர் படத்தில் வைத்துவிட்டு வேலையை ஆரம்பிப்பார். கடைக்கு வரும் எல்லாருமே அவருக்கு முருகர் தான். "வாங்க முருகா" என்று பிரியமாய் அழைப்பார். பளீரென்று அந்தச் சிரிப்பு. தூய வெள்ளைப் பற்கள்.
சுற்றிலுமான அந்த அமைதியில் தனியே ஒரு வெளிச்சத் தீவாய்க் கிடந்தது கடை. அதிகாலைத் தேநீருக்கென முந்தைய இரவே சிவகுருவின் மகன் அவரிடம் பணம் தந்து விடுவான். மருமகளை அந்நேரத்தில் எழுப்புவது அவருக்கே சரி என்று படவில்லை. இராத்திரி பதினொரு மணிவரை அவர்கள், மகனும் மருமகளும் என்னதான் வேலை செய்வார்களோ? கதவைச் சாத்திக்கொண்டு அவர் படுத்து விடுவார். தனிக்கட்டை. மனைவி இறந்து ஐந்து வருடம் ஆகிறது. அவள் இறந்தபின் காலையில் வழக்கம்போல எழுந்து கொள்வதும் கொஞ்சம் திகைப்பாய் இருந்தது. பிறகுதான் இங்கே அதிகாலையிலேயே தேநீர் கிடைக்கிறதைக் கேள்விப்பட்டதும் ரொம்ப உற்சாகமாகி விட்டது. விழிப்பு வந்தும் சும்மாவாச்சும் வெளிச்சம் வரும்வரை படுக்கையில் உருண்டு கொண்டு கிடக்க வெறுப்பாய் இருந்தது. ஆறரை மணி வாக்கில் பால் வரும் வீட்டில். பால்காரன் மணி அடிக்கவே தான் மருமகள் ரேணுகா எழுந்து கொள்வாள். பிறகு அவள் முகம் கழுவி பல் தேய்த்து வாசல் தெளித்து கோலம் போட்டு, அப்புறமாய்ப் போய்ப் பாலைச் சுட வைக்க வேண்டும்.
·        
சுடச்சுட முதல் வாய்த் தேநீரை உறிஞ்சினார் சிவகுரு. அந்தக் கதகதப்பு உள்ளே இறங்குவதை அனுபவித்து "ஹா" என்றார் சாமி. நாய் அவர்கள் ஒவ்வொருவராய் முகம் பார்த்து நின்றது. "நம்ம துரை, அவருக்கும் வீட்ல முழிப்பு வந்திருக்கும்யா. ஆனால் அவரால இங்க வர முடியல்ல பாவம்," என்றார். "வேளை கெட்ட வேளையில தூங்கறதே ஒரு வியாதிதான் அப்பா" என்றார் சிவகுரு. "வீட்டிலயே அடைஞ்சி கெடந்தால் சரின்னு மதியம் ஒரு தூக்கம் போடத் தோணும். ரொம்ப அலுப்பா இருக்கும். சின்ன வேலை கூட நம்மால முடியாதுன்னு சோம்பேறித்தனங் காட்டும் உடம்பு. என்ன உடம்புன்னாலும் நடமாட்டத்தை நிறுததிறக் கூடாது."
சிவகுரு எழுந்து பாட்டில் ஒன்றில் இருந்து வர்க்கி ஒன்றை எடுத்து நாய்க்கு வீசிப் போட்டார். அவர் எழுந்தபோதே நாய் உடலை அப்படியொரு நெளி நெளித்தது. "ஆமாம் முருகா" என்று சிரித்தார் ராமையா. "தலைவலி, ஜுரம்னு என்ன இருந்தாலும் நான் காலைல கடை திறந்துருவேன் முருகா. உடம்பு சொல்றபடி நாம கேட்கக் கூடாது. நாம சொல்றபடி தான் உடம்பு கேட்கணும் முருகா" என்றபடி சிறிது இருமினார். "அண்ணாச்சி உடம்பைப் பாத்துக்கிடுங்க" என எச்சரித்தார் சிவகுரு. அதற்குள் நடுத்தெரு சுப்ரமணி வந்து சேர்ந்தார். "நமக்கு ஒரு டீ போடுங்க" என்றபடி தலைக்குக் கட்டிய துண்டை அவிழ்த்து உதறி தோளில் போட்டுக் கொண்டார். வயல்பக்கம் ஒதுங்கி காலைக்கடன் முடித்திருக்கலாம் அவர். மணிக்கு தமிழ்ப் பற்று உண்டு. கலைஞரின் ரசிகர். திமுக கூட்டங்கள் நடந்தால் தவறாமல் போய்வருவார். "என்னமா தமிழ் பேசறாங்க" என்பார். என்றாலும் ஆன்மிகக் கூட்டங்கள் பிடிக்காது.
அவர் வந்து எதிர் பெஞ்சில் அமர்ந்து கொண்டபடியே "என்ன குரு? இந்த வருசமாவது மழை கிழை உண்டா? போன வருசம் கவுத்திட்டது நம்மள..." என்று பேச்செடுத்தார். நாய் ஒரு எதிர்பார்ப்புடன் அவர்கிட்டே வந்து நின்றது. ''சனியனே'' என அவர் துண்டை உதறினார். நாய் ஒரு துள்ளலுடன் விலகிப் போனது. ஆறு மணி வாக்கில் செய்தித்தாள் வரும். சைக்கிளில் போய் பக்கத்து டவுணில் இருந்து சிவநேசன் வாங்கி வருவான். போகும் வழியில் தேநீர்க்கடையில் செய்தித்தாளைப் போட்டுவிட்டுப் போவான். அதுவரை பொதுவாக அவர்கள் பேசிக் கொள்வார்கள். செய்தித்தாள் வந்ததும் அதை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக் கொள்வார்கள்.
தினத்தந்தி. 'கள்ளக்காதல், கொலை, கொள்ளை, சிறப்பிதழ்' தினசரி வெளியிடுவார்கள். பக்கத்துப் பக்கம் தங்க நகை போல கொலை கொள்ளை என அலங்கரித்துக் கொள்ளும். தலைப்புச் செய்தி என்று ஒன்றை வைத்துக் கொண்டு தொடர் செய்தியாக அதைத் தொட்டே அடுத்தடுத்த பக்கங்களில் துணைச் செய்திகள். செய்திகளை ஒரு சுவாரஸ்யமான கதை போல் தருவது தினத்தந்தி. முன்னெல்லாம் தலைப்புகளில் நிறைய ஆச்சர்யக் குறிகள் போட்டார்கள்! இப்போது இல்லை!!
ஒருதரம் பக்கத்து வேலம்பட்டியில் கொலை ஒன்று நடந்துவிட்டது. கணவனே மனைவியைக் குத்திக் கொலை பண்ணிவிட்டான். நல்ல பய அவன். பாவம் என்னமோ ஒரு வேகம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு எகிறிட்டான் போல. தினத்தந்தி நிருபர் வந்து அந்த வீட்டில் படம் வாங்கிப் போனார். "கலர்ப்படம் இல்லியா?" மறுநாள் அதைப்பற்றி தேநீர்க்கடையில் பெரிய விவாதம் நடந்தது. "இவளுகளுக்கு ஆசைய்யா. துட்டு எவ்வளவு இருந்தாலும் பொம்பளைங்களுக்குத் திருப்தி வர மாட்டேங்குது. காசு ஆசை காட்டி, எதும் வாங்கிக் குடுத்து கிடுத்து அவங்களை ஆம்பளைங்க ஏமாத்திர்றாங்க." துரைதான் ஆவேசமாய்ப் பேசியது. அவர் பெண் ஒருவனைக் காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதம் பிடித்தது. கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் அவனோடு வாழ முடியாமல் திரும்பி வந்துவிட்டது. அந்தக் கோபம் அவருக்கு. நல்லவேளை கௌரவம் பார்க்காமல் திரும்ப வந்தது. தற்கொலை கிற்கொலைன்னு போகவில்லை.
போயிருந்தால் தினத்தந்தி நிருபர் அவங்க வீட்டுக்கு வந்திருப்பான். கலர்ப்படம் கேட்பான். அட அந்தப் ¢பெண்ணைக் கலர்ல எடுத்தாலும் படம் கருப்பு வெள்ளையாத்தான் தெரியும். அது வேற கதை.
·        
தேநீர்க்கடை என்றாலும் பீடி சிகெரெட் விற்பனை கிடையாது. ராமையா அதை விரும்பவில்லை. "அப்பிடி லாபம் சம்பாதிக்கணுமா முருகா," என்பார். வர்க்கி, வாழைப்பழம், பன் என வைத்திருப்பார். டீக்கடையில் கிளாஸ் கழுவுகிற தண்ணீரை ஒரு பாத்தி எடுத்து ஓரத்துக் குழியில் விட்டிருப்பார். ரொம்ப வெயிலானால் நாய் அந்த ஈரத்தில் படுத்துக் கொள்ளும். அப்படியே மல்லாக்க அது உருண்டால் எலி போலவே இருக்கும் பார்க்க. ராமையா வாழைப்பழத் தோலை வீணாக்காமல் ஒரு கூடையில் போடச் சொல்வார். தினமும் லெட்சுமி வந்து அதைத் தன் ஆட்டுக்கு என எடுத்துப் போவாள். சுப்ரமணிக்கு தேநீர் சக்கரை இல்லாமல் போட வேண்டும். குருவுக்கு அரைச் சர்க்கரை. அவர் இப்போது பையனுடன் வேற்றூர் போய்விட்டார். யார் யாருக்கு எந்த ருசியில் போட வேண்டும் என்பது இந்த வருடங்களில் ராமையாவுக்கு அத்துப்படி. துரைக்கு லைட் டீ. பால் வாசனை வரவேண்டும். அந்தக் கூட்டத்தில் முதலில் கடைக்கு வருகிறவர் துரைதான். பாவம் அவர் வீட்டைவிட்டு இறங்க முடியாமல் ஒடுங்கி விட்டார்.
"போயிப் பாத்தீங்களா முருகா? எப்பிடி இருக்காரு?" என்று கேட்டார் ராமையா. யாருக்கும் புரியவில்லை. "யாரு?" என்றார் சாமி. "அதான்... துரையைப் பாத்திட்டு வந்தீங்களா? எப்பிடி இருக்காரு?" சிவகுரு நேற்று அவரைப் பார்க்கப் போயிருந்தார். "நல்லாதான் இருக்காரு. கால் வீக்கம் இன்னும் வடியல. சட்னு கால் பிசகி திரும்பிக்கிட்டது போல. ஊனி நடந்தால் வலி சுண்டுதுங்காரு. என்ன அவசரம். மெதுவாச் சரியாவட்டும். பேசாம வீட்ல ஓய்வெடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்."
"காலைல வந்து நம்ம கூட உட்கார்ந்து, இப்பிடி டீ சாப்பிட்டுக்கிட்டே நாலு வார்த்தை பேசணும்னு இருக்கு அவருக்கு" என்றார் மணி. "எனக்குந்தான் ரவி ஊருக்குப் போனது கையொடிஞ்சாப்போல ஆச்சி," என்று பெருமூச்சு விட்டார். ரவியின் கடைசிப் பையனின் சம்சாரம் முழுகாமல் இருக்கிறாள். மருமகளுக்குப் பிரசவ சமயம் என்று ரவியும் அவரது மனைவியும் கிளம்பிப் போனார்கள். "இவபாடு கழுதை ஓடிப்பிடும். எம்பாடுதான் திண்டாடிரும்யா" என்றார் ரவி. "அங்கபோயி நான் என்ன செய்யறது, தெரியல. இங்க ஒண்டியாளா நீரு மாத்திரம் எப்பிடி இருப்பீரு? சோத்துக்கு என்னா பண்ணுவீரு?... அப்டிங்கா இவ..." காலை பத்து மணிக்கு பஸ் ஏறினாலும், அன்றைக்குக் காலையில் அவர் நண்பர்களோடு வந்து தேநீர் அருந்திவிட்டுத்தான் போனார்.
·        
போன வாரம் வரை அவர்கள் ஜமாவில் கிருஷ்ணன் இருந்தார். கிருஷ்ணன் ரிடையர்டு போஸ்ட் மாஸ்டர். ரொம்ப வேடிக்கையான மனுசன். அவர் இருக்கும் இடம் எப்பவுமே கலகலப்பாக இருக்கும். வேடிக்கை பண்ணுவார். இந்தக் கையில் காசை வைத்து மூடிக்கொண்டு அடுத்தாள் காதில் இருந்து எடுத்துக் காட்டுவார். விடுகதை போடுவார். புதுப்புது செய்திகள் சொல்வார். "நம்ம போஸ்ட் ஆபிஸ், அதுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமாவே?" என்றார் ஒருநாள்.
ஆங்கிலேயனின் மெயில் வண்டி, லாரி போல் பெரிய வண்டி, சிவப்பு வண்ணத்தில் தினசரி பிரதான சாலைவழியே போகும்போது அந்தந்த ஊருக்கு உண்டான தபால்களை ஊருக்கு வெளியே போட்டுவிட்டுப் போகும். இப்போது செய்தித்தாள் பண்டல்களை பஸ்சில் கொண்டு வந்து போடுகிறார்களே, அதைப்போல. எந்த ஊருக்கான தபால்கள், எங்கே போட வேண்டும் எனத் தெரிய ஊர் எல்லையில் ஒரு 'போஸ்ட்', அதாவது கம்பு ஊனி அடையாளம் வைத்திருப்பார்கள். உள்ளூரில் இருந்து சைக்கிளில் போய் அந்தத் தபால் பைகளை எடுத்து வரவேண்டும். அந்த போஸ்ட் ஊனிய ஆபிஸ் என்பதால் அதற்குப் பினனாளில் 'போஸ்ட் ஆபிஸ்' என்றே பேர் வந்துவிட்டது.
கிருஷ்ணன் போன வாரம் இறந்து போனார். நல்லாதான் இருந்தார். காலை நாலரை மணி தேநீர் கூட வந்து அருந்தினார். சிவகுருவின் நல்ல சிநேகிதர் அவர். அவரிடம் வேடிக்கை யெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்குப் போனார். சிவகுருவும் கிளம்பினார். காலை நாலரை மணிக்கு அவர்கள் ஒன்று கூடினால், மெல்ல வெயில் ஏறும். தேநீர்க்கடைப் பக்கம் புளிய மரம் ஒன்று உண்டு. அதன் அடியில் நிழல் மெல்ல அவர்களை விட்டு விலகி பெஞ்சுகளில் வெயில் எட்டும் வரை அங்கேயே இருப்பார்கள். பிறகு பிரிய மனம் இல்லாமல் பிரிவார்கள். வீடு அவர்களுக்கு போரடித்தது.
சிவகுரு வீட்டுக்கு வந்திருக்கக் கூட மாட்டார். பத்தே நிமிடம். கிருஷ்ணனின் பையன் சைக்கிளில் வந்து முச்சிறைக்க நின்றான். "அப்பா..." என்றான். மூச்சிறைத்தது. "என்னாச்சிடா?" என சிவகுரு வீட்டைவிட்டு வெளியே வந்தார். "உடம்பு சரியில்லை" என்று சொல்வான் என்றுதான் பதறியது. எதிர்பார்க்கவே இல்லை. வந்து "ரேவதி?" என்று மனைவியைக் கூப்பிட்டார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். "தண்...ணீ?" என்றார். அவள் இவரைப் பிடிப்பாளா, தண்ணி எடுத்துவரப் போவாளா. அவர் நிலைமையே அவளுக்குத் தலையைச் சுற்றியது. தண்ணீருடன் அவள் திரும்பி வருமுன் இறந்திருந்தார்.
"கிருஷ்ணன் போனதுலயே நீரு ஆளு அசந்திட்டீருய்யா" என்றார் மணி சிவகுருவைப் பார்த்து. சில நாட்கள் கிருஷ்ணன் வீட்டிலேயே கூட இரா தங்கியிருக்கிறார் சிவகுரு. கண்ணதாசன் பாடல்களை ரசித்து ரசித்துப் பேசுவார் கிருஷ்ணன். கண்ணதாசனை ஒருதரம் நேரில் பார்த்திருக்கிறார். அதைக் கட்டாயம் சொல்லி சந்தோஷப் பட்டுக் கொள்வார். கண்ணதாசன் இறந்தபோது செய்தித்தாளில் போஸ்டர், பிரபல பின்னணிப் பாடலாசிரியர் மரணம், என சஸ்பென்ஸாய்ப் போட்டார்கள்.
கிருஷ்ணனின் சாவுக்கு ராமையாவும் வந்திருந்தார். கூடவே நாயும் சிறிது தூரம் ஓடிவந்தது. மதியம் தான் எடுத்தார்கள். ராமையா கடையை மூடுவதே இல்லை. கடைக்கு, சொல்லப்போனால் கதவுகளே கிடையாது. மரத்தடியில் ஒரு மரத்தடுப்பு. பெஞ்சு. ஒரு மேசைஉயர பெஞ்சில் கரி அடுப்பு போட்டு பாய்லர். மண்ணெண்ணெய் ஸ்டவ். உள்ளே கூரை எடுத்த சிறு பத்துக்குப் பத்து தட்டி மறைப்பு. கயிற்றுக் கட்டில் கிடக்கும். அதனடியில் சொற்ப உடைமைகளுடன் ராமையாவின் டிரங்குப் பெட்டி ஒன்று. இரவு ஏழு எழரை மணிக்கு மேல் கடைக்கு ஆள் வராது. சீக்கிரம் எட்டுக்கெல்லாம் படுத்து விடுவார் ராமையா. பெட்ரோமாக்ஸை அணைத்து விடுவார்.
சில ராத்திரிகளில் பொழுது போகவில்லை என்றால் சிவகுருவும் அவருடன் இருட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். நாய், அதுவும் அருகே வந்து படுத்துக் கிடக்கும். அது யாரைப் பார்த்தும் குரைத்ததே கிடையாது. யாரையுமே அது சந்தேகப்பட்டதே கிடையாதோ என்னவோ. கிருஷ்ணன் இறந்த பிறகு ஒரு ராத்திரி ராமையாவுடன் வந்து தங்கினார். சிவகுரு நல்ல சங்கீத ரசிகர். சங்கீதம் என்றால் கச்சேரி கிச்சேரி எல்லாம் கிடையாது. ராகங்களும் தெரியாது. சினிமாப் பாடல்கள். "டி எம் எஸ் மாதிரி பாட இனி ஒருத்தன் வரணும்யா," என்று மனசாறச் சொல்வார். டி எம் எஸ் இறந்த செய்தியை தினத்தந்தியில் பார்த்தபோது அழுதேவிட்டார். கடையில் தொங்கும் போஸ்டர் சஸ்பென்ஸாய், 'பிரபல பின்னணிப் பாடகர் மரணம்' என்று சொன்னது. முதல் பக்கம் செய்தி. இரண்டாம் பக்கம் பிரமுகர்கள் புகழாரம். மூணாம் பக்கம் அவரது உடல் கண்ணாடிப் பெட்டிக்குள், என படம். இன்னொரு பக்கத்தில் வாழ்க்கைக் குறிப்பு. ஒரு பக்கம் முழுசும் பிரபலங்கள் வந்து மாலை அணிவிக்கும் புகைப்படங்கள். அந்தப் பேப்பரை இன்னமும் வைத்திருக்கிறார்.
ராத்திரிகளில் ராமையாவுடன் அவர் தங்கினால் கயிற்றுக் கட்டிலின் பக்கத்தில் வாசல்பெஞ்சுகளை உள்ளே கொண்டுவந்து சேர்த்துப் போட்டுக்கொண்டு அவர் பக்கத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு பாட்டெடுப்பார். வெளிச்சம் இல்லாத இரவு. பெட்ரோமாக்ஸ் அணைத்தாகி விட்டது. "ஆடாத மனமும் உண்டோ?" என்று ஒரு பாட்டை இருட்டில் ஆரம்பித்தார். ஒவ்வொரு பாட்டாக மாறிக்கொண்டே வந்தது. இடையில் பாட்டை சிவகுரு நிறுத்தி, "கண்ணதாசனைப் பத்தி கிருஷ்ணன் பேசணும்யா" என்கிறாப் போல எதாவது பேசினார். ராமையாவிடம் இருந்து பதில் வரவில்லை. அவர் எப்பவோ தூங்கி யிருந்தார்.
·        
எல்லார் கஷ்டங்களையும் கவலைகளையும் ராமையா புன்னகையுடன் கேட்டுக் கொள்வார். தினத்தந்தி படித்தால் சுப்ரமணி சாணக்கியன் சொல், ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார், எல்லாமே வாசிப்பார். நாய் அவரிடம் மட்டும் சற்று தள்ளியே நிற்கும். அவருக்கு இந்த நாயைப் பிடிக்காது. நாளிதழ் பார்த்து அவர்கள் போட்டுக்கொள்ளும் சின்னச் சண்டைகளையும் ராமையா வேடிக்கை பார்ப்பார். அதில் அவர் குறுக்கிட மாட்டார். எல்லாருமே அவருக்கு நண்பர்கள். ஊரில் சண்டை வந்து சில பேர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பார்கள். ஆனால் ரெண்டு பேருமே அவர்கடைக்கு தேநீர் அருந்த என்று வந்து போகிறவர்களாக இருப்பார்கள்.
ராமையா சட்டை அணிந்து பார்த்திருக்கவே முடியாது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்து படித்து ஆளாகிய ராஜேந்திரன் அன்றைக்கு, வேலை கிடைத்துப் போனபின், ரெண்டு வருடம் கழித்து ஊர் திரும்பினான். ராஜேந்திரன் வீட்டில் மின்சாரம் கிடையாது. இங்கேதான் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் வந்து உட்கார்ந்து படித்து பாஸ் பண்ணினான் ராஜேந்திரன். பஸ் அவனைக் கோவில் தேரடிப் பக்கம் இறக்கி விட்டுவிட்டுப் புழுதி பறக்கப் போய்விட்டது. அதிகாலை அஞ்சு மணி. நாய் தலைதூக்கிப் பார்த்தது. அதற்கு ரொம்ப சந்தோஷம். கீச் கீச் என்று எலியாகவே குரல் எடுத்தது நாய். இந்நேரம் நம்ம ஊருக்கு யார் வர்றாங்க, என்று கிழவர்கள் பெஞ்சில் அமர்ந்தபடி திரும்பிப் பார்த்தார்கள். "அட ராஜேந்திரனா? என்னப்பா எப்பிடி இருக்கே?" என்று கூப்பிடடார் சிவகுரு. "நல்லா யிருக்கேன் ஐயா" என்று அவர் காலைத் தொட்டு வணங்கினான் ராஜேந்திரன். அந்த மரியாதை மனசைத் தொட்டது. "நல்லாருப்பா. நல்லாரு" என மனசாற வாழ்த்தினார் சிவகுரு. "டீ சாப்பிடு."
நாய் புட்டத்தை ஆட்டியாட்டி அவன் மேல் தாவ முயன்றது. "சாப்பிடுவோம். நம்ம ஊர் டீ சாப்பிட்டு வருசமாச்சுதே?" என்று ராஜேந்திரன் சிரித்தான். நாயை நெற்றியில் தடவிக் கொடுத்தான். அப்படியே கண்ணை மூடிக் காட்டியது நாய். நல்ல உடை உடுத்தி ஆளே பெரியாம்பளை ஆகியிருந்தான். ராஜேந்திரன் சொன்னான். "மாமா, உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்" என்றான். தன் சூட்கேசில் இருந்து, அழகான சட்டை ஒன்று, எடுத்தான். ஆரஞ்சு வண்ணம். "இது உங்களுக்கு மாமா" என்று ராமையாவிடம் நீட்டினான். ராமையாவுக்கு அதைப் பார்க்க கண் பனித்து விட்டது. அவர் ஊர் எது, உறவு எது என்று அதுவரை யாருக்குமே தெரியாது. ராஜேந்திரன் "மாமா" என்று உறவு சொல்லி எப்படி அவரிடம் பாசம் காட்டுகிறான், என்று அங்கேயிருந்த பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ராஜேந்திரன் ஒரு வர்க்கி பிஸ்கெட்டை எடுத்து கையை உயர்த்தி நாய்க்குக் காட்டினான். க்விக் என விநோத சத்தத்துடன் நாய் உற்சாகமாய்த் துள்ளியது.
கிழவர்கள் கூடும் இடம் என அது ரொம்ப முக்கியமான இடமாக ஆகிப் போயிருந்தது. யாரையாவது தேடி வர வேண்டியிருந்தால் அங்கே முதலில் வந்து "நம்ம சாம்பமூர்த்தி இந்தப் பக்கமா வந்தாப்லியா?" என்று ராமையாவிடம் விசாரித்துப் போனார்கள். அந்த ஊரில் யாரைப்பற்றி வேண்டுமானாலும் ராமையாவிடம் கேட்கலாமாய் இருந்தது. அந்த ஜமாவுக்கு ராமையா எதாவது ஒருவகையில் துணை. பேச்சுத்துணை, தேநீர்த்துணை. "நம்ம சேது வந்தா, இப்ப பஸ்சுல வந்து இறங்குவாப்டி. இந்த நாநூறு ருவ்வாய நாங் குடுத்ததாக் குடுத்திருங்க" என்று கொடுத்துவிட்டு சைக்கிளில் ஏறிப் போவார்கள். நம்பகமான ஆள். வார்த்தை தவற மாட்டார். எல்லாருக்கும் உதவும் சுபாவம். சிவகுருவின் பாடல்களின் ரசிகர். "ஏரிக்கரையின் மேலே, நல்லாப் பாடறீங்க" என்பார். "ஏய் அது அந்தக் காலத்துல காதலியைப் பார்த்து பாடியிருப்பாரு" என்று சாமி சொல்லிச் சிரிப்பார். சாமிக்கு ராமையாவின் பக்தி பிடிக்கும். "வாய் மணக்க மணக்க முருகா முருகா... ன்றாரேய்யா" என்பார்.
·        
காலை நாலரைக்கு சிவகுரு வழக்கம் போல விழித்துக் கொண்டார். போய்ப் பல் தேய்த்தார். கோபால் பல்பொடி. வீட்டை உள் பக்கமாகப் பூட்டிவிட்டுத் தெருவில் இறங்குமுன் சாமி அவரைப் பார்க்க எதிரில் வந்தார். "என்னய்யா?" என்றார் சிவகுரு பதறி. இருவருமாய் ஒடினார்கள். தேநீர்க்கடையில் பெட்ரோமாக்ஸ் எரியவில்லை. அவர்களைப் பார்த்ததும் நாய் எழுந்தோடி வந்தது. கயிற்றுக் கட்டிலில் ராமையா கைமடங்க குப்புறக் கிடந்தார். அவர் கிடந்த நிலையே கலவரப் படுத்தியது. போய் அவரை நிமிர்த்துமுன் உடல் குளிர்ந்து சில்லென்றிருந்ததை உணர முடிந்தது. "ஒத்த ஆளா என்னால இவரை நிமிர்த்திப் போட முடியலய்யா" என்றார் சாமி. அப்போது தான் சின்னப்பா சைக்கிளை உருட்டியபடி மாட்டுடன் வந்தான். அவனும் ஓடிவந்தான். கட்டப்படாமல் மாடு அப்படியே நின்றது. பெரிய பெரிய மூச்சுகளாய் அது விடுவதே பெட்ரோமாக்ஸ் ஏற்றினாப் போலக் கேட்டது. நாய் யாரையும் சட்டை செய்யாமல் ஒரு இடம் பார்த்துப் போய்ச் சுருண்டு கொண்டது.
"ஐயய்ய" என்றான் சின்னப்பா. அவசரமாக சைக்கிளில் ஏறிப்போய் சிகாமணியைக் கூட்டிவந்தான். சித்த மருத்துவம் தெரிநதவன் சிகாமணி. அவன் நாடி பார்த்துவிட்டு அடங்கிவிட்டதாகச் சொன்னான். அதற்குள் சுப்ரமணி வந்திருந்தார். கூட்டத்தைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக அவர் வந்தார். ராமையாவின் வேட்டியாலேயே அந்தக் கயிற்றுக் கட்டிலில் முகத்தை மூடினார்கள். எல்லாருக்குமே ஒரு திகைப்பு ஆளை மருட்டியது. எத்தனை நல்ல மனுசன். ஊருக்கே உபகாரமான ஆள். ஆறு மணிக்கு பேப்பர்காரன் வந்தான். ஊருக்குள் பேப்பரில் இல்லாத செய்தி ஒன்றை அவன் கொண்டு சென்றான்.
சைக்கிள் கேரியரை விட மகா பெரிய மரப் பெட்டியில் பேக்கரி ஐட்டம் எடுத்துக்கொண்டு வரும் கேசவன், அவனும் வந்தான். வாரம் இருமுறை வந்து சரக்கு போட்டுவிட்டுப் போவான் அவன். ''ஐய எந்தா இது'' என அவன் இறங்கி சைக்கிளை ஸ்டாண்டு போட்டான். நாய் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. பொதுவாக கேசவனைப் பார்த்ததும் அது உற்சாகமாக ஓடிவரும். கேசவன் அதற்கு ஒரு வர்க்கி போட்டான். அதைக்கூட அது தொடவில்லை. மரணம் அதற்குப் புரிந்தாப் போல இருந்தது. நாய்கள் தாம் எத்தனை சூட்சுமமாக இயங்குகின்றன.
யாருக்குமே என்ன பேச, என்று தெரியவில்லை. அந்தக் கிழவர்களில் யாரோ ஒருவர் வர முடியாமல் போகலாம். வெளியூர் போகலாம். இறந்தும் போகலாம்... என்றாலும் மற்றவர்களுக்கு அந்தக் கடையில் சந்திக்க முடிந்தது. ரயில்வே ஸ்டேஷன் ஜங்ஷன் போல. அங்கே அவர்களால் கூடமுடிந்தது. இப்போது எதிரேபாராமல், ராமையாவே இறந்து போனார். இனி அதிகாலைத் தேநீர்? அவர்கள் எங்கே இப்படிக் கூடிப் பேச முடியும்? சுப்ரமணி "ராஜேந்திரனுக்குத் தந்தி தரலாம்," என்றார் ஒரு யோசனை போல. அவனுக்கு எப்பிடியும் தகவல் தர வேண்டும், என அவர் நினைத்தார். பஞ்சாயத்துத் தலைவருக்கு யாரோ தகவல் சொன்னார்கள். அவர் டவுணில் இருந்து பெரிய மாலை வாங்கிவரச் சொல்லியனுப்பினார். யாரோ சைக்கிளில் போனார்கள். அவர் மாலையுடன் வந்து ராமையாவுக்குப் போட்டுவிட்டு கும்பிட்டார்..
நேரம் ஓடியது. கூட்டம் சேர்ந்தபடி யிருந்தது. பலபலவென்று விடிந்திருந்தது. கிழவர்களுக்கு ரொம்ப அசதியாய் இருந்தது. சாமியிடம் தலையாட்டிவிட்டு சிவகுரு வீட்டைப் பார்க்கக் கிளம்பினார். "போயிட்டு ஒரு அரைமணி கழிச்சி வரேன்" என்றார். "நானும் வரேன்" என்றார் சாமி. வீட்டைப் பார்க்க நடந்தார்கள். வாசலில் சிவகுருவின் மருமகள் ரேணுகா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் வருவதைப் பார்த்தாள் ரேணுகா. அவர்கள் முகத்தைப் பார்த்தாள். "என்னாச்சி மாமா?" என்று சிவகுருவிடம் கேட்டாள் ரேணுகா. "நம்ம டீக்கடை ராமையாம்மா..." என்றார். உடம்பு சிறிது தூக்கிப்போட்டது. "இறந்துட்டாரு."
"ஐயய்ய, எப்ப?" என்றாள் ரேணுகா. "காலைல நாங்க போனபோதே இறந்து கிடந்தாரு" என்றார் சிவகுரு. "உள்ள வாங்க. நீங்களும் வாங்க" எனறு சாமியை அழைத்தாள் அவள். "ஒரு நிமிஷம். டீ போடறேன்" என்றாள் ரேணுகா.
·        

91 97899 87842

இருவாட்சி இலக்கியத் துறைமுகம் இதழ் 8ல் வெளியானது

Monday, January 9, 2017

நன்றி நவின விருட்சம் இதழ் 101
Art madhiyazhagan subbiah maddy

மகிழ்ச்சியின் தூதுவன்

எஸ். சங்கரநாராயணன்
 ஞாயிற்றுக்கிழமையின் அடையாளமாக அவன் மாறிப் போயிருந்தான். காலையில் லேசாய் வெயில் மேலெழும் நேரம் வருவான். அவன் வருமுன்னே அவனது புல்லாங்குழல்ச் சத்தம் வரும். சாத்திய கதவுகளுக்கு உள்ளேயும் பாயும் வல்லமை பெற்றிருந்தது அது. எல்லாருக்குமே அந்தச் சத்தம் பிடித்திருந்தது. சாத்திய கதவுகள் அந்தச் சத்தத்தில் திறந்தன. அது ஞாயிறு காலையின் சத்தங்களில் ஒன்றாக ஊரில் எல்லாரிடமும் பதிவும் ஆகியிருந்தது ஆச்சர்யம்.
எதோ மூங்கிலை வெட்டி துளைகள் இட்டு, கிடைத்த சாயம் ஏற்றிய குச்சி அது. அதில் காற்று மாட்டிக்கொண்டாப் போல ஒரு சத்தம் வந்தது. அவனே அதை, அந்தக் குழலைச் செய்திருக்கவும் கூடும். அதை வைத்துக்கொண்டு அவன் கன ஜோராய் சில பாடல்கள் வாசித்தான். சிரமமான மெட்டுக்கள் அல்ல அவை. என்றாலும் அந்த மெட்டுக்களை அந்தக் குழலுக்குள் மடக்கி நீட்டி அவன் உற்சாகமாய் சாமர்த்தியமாய் வாசித்தாப் போலத்தான் இருந்தது. துணியை மடித்து அயர்ன் பண்ணி அணிந்து கொண்டாப் போல!
எனக்கு அவனைப் பிடித்திருந்தது. அவனிடம் ஒரு தட்டி கட்டிய கழி இருந்தது. துப்புரவுத் தொழிலாளியின் தெருவைப் பெருக்கும் தட்டி போல. ஆனால் அதை நிமிர்த்திப் பிடித்திருந்தான். ஆங்கில 'ஒய்' போன்ற தட்டி. அதில் அங்கங்கே விதவிதமான புல்லாங்குழல்களைச் செருகி எடுத்து வந்தான் அவன். அது தவிர சின்னச் சின்ன காகிதக் காத்தாடிகள், ஓலைக் காத்தாடிகள் என வகைவகையாய் அதில் மாட்டி வைத்திருப்பான். அந்தக் காத்தாடிகளையும் அவனே செய்திருக்கலாம். ஸ்வைங் என அந்தக் கழியை அவன் தூக்கிக் குலுக்க காத்தாடிகள் ஜிலுஜிலுவென்று சுழலும். மாட்டு மணிகள் சிலவற்றையும் அதில் கோர்த்துக் கட்டி வைத்திருந்தான். இனிய நாதம் தந்தபடி கூட வந்தது தட்டி. கொலுசு அணிந்த பெண் போல.
தவிர முதுகில் பூணூல் என மாட்டித் தொங்கவிட்ட நீள வார் வைத்த பை ஒன்று. அதில் எத்தனையோ குழந்தைப் பொக்கிஷங்கள். விசில்கள். ஊதல்கள். பீப்பீக்கள். விதவிதமான வண்ணங்களில் பலூன்கள். சைக்கிளுக்குக் காத்தடிக்கிற ஒரு பம்பு, அதையும் பெல்ட்டில் மாட்டி கட்டிக் கொண்டிருப்பான். ஒரு சில பலூன்களை ஆப்பிள் போலவோ, வேறு வடிவங்களிலோ ஊதி தட்டியில் கட்டிக் கொண்டிருப்பான். எழும்பி ஆடியபடி அவை கூட வரும். இடப்பக்க வலப்பக்க ஆப்பிள் பலூன்கள் தலைகளாகக் காணும்.அவனே பத்து தலை ராவணனாகி விட்டாப் போல. காற்றை உள்ளேயும் வெளியேயும் கொண்டாடும் பலூன்கள். அவன் தோளில் கருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று விதவிதமான கயிறுகள். அரைஞாண் கயிறுகள். நோன்புக் கயிறுகள், என தொங்கிக் கொண்டிருக்கும். தட்டியில் பிளாஸ்டிக்கில் வாட்சுகள், முள்ளைத் திருகி நகர்த்தி மணி வைக்கலாம். ஆனால் ஓடாது. மஞ்சள், நீலம், சிவப்பு, பச்சை என வண்ண வண்ணக் கண்ணாடிகள். கீச் கீச் ஊதல் உள்ளேவைத்த பொம்மைகள். தொட்டு அமுக்கவே அவை கீச்சிடும். ஸ்டிக்கரில் டாட்டூக்கள். ஒரு குழந்தையின் விளையாட்டு அறையையே வைத்துக்கொண்டு நகர்கிறான் அவன். அந்தப் பொருட்களை அநேகம் அவனே செய்திருப்பான். விசில், அதை தட்டி மடக்கி உள்ளே இலந்தைப்பழக் கொட்டை ஒன்றை வைத்திருப்பான். விசில் ஊத ஊத அந்தக் கொட்டை சுழல்வது ஒரு அழகு. அந்தச் சத்தம் சற்றே அதிர்வுடன் ர்ர்ர் என்று வெளியே வருவது இன்னும் விறுவிறுப்பு. வண்ண வண்ணக் காகிதங்களை வைத்து அவன் செய்யும் காத்தாடிகள். எத்தனை ஆசையாய்ச் செய்து கொண்டு வந்திருக்கிறான் இவன், என்று தோணும்.
குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரு கூறாக எடுத்து வந்தான் அவன். மகிழ்ச்சியின் தூதுவன்.
தலையில் முண்டாசு. அதில்கூட காத்தாடி ஒன்றை, கிரீடத்தின் சிறகு போல குத்திக்கொண்டு வருவான். ஒரு ராஜகுமாரன் போல மனசில் நினைப்பா அவனுக்கு. கழியை முட்டிக்கு மேலே தூக்கிய நிலையில் அணைத்துக்கொண்டு மத்த கையால் புல்லாங்குழலைப் பிடித்தபடி வாசித்துக்கொண்டே வருவான். சுருள் சுருளான சங்கதிகள் கொண்ட உற்சாகப் பாடல்கள். அவன் நடக்க நடக்க தலைக் காத்தாடி, அதுவேறு சுழல்வது குழந்தைகளுக்குப் பரவசமான வேடிக்கை. எல்லாத்தையும் விட அவன் குழலோசை. அடிபட்ட நாயின், அல்லது சடன் பிரேக் போட்ட வாகனத்தின் ஒரு கீச் தான் அதில் இருந்து வரும். அதாவது வாசிக்க மத்த யாருக்குமே, குழந்தையோ பெரியவர்களோ... அதைவைத்து அவன் மெட்டுக்கள் வாசிக்கிறான். நமக்கு அது அடையாளம் புரிகிறது. தெரு தாண்டும் வரை அவன் வாசிக்கிற நாலு மெட்டில் ஒண்ணு சமீபத்திய மெட்டாய் இருக்கும். அல்லது பிரபலமான மெட்டாய் இருக்கும். மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு, சித்திரம் பேசுதடி. அவனுக்கு எத்தனை பாடல்கள் வாசிக்கத் தெரியுமோ தெரியவில்லை.
தூரத்தில் அவனது சத்தம் கேட்டதுமே அத்தனை குழந்தைகளுமே ஊய்யென்று உற்சாகப்பட்டு பரபரத்துக் கிளம்பி வீட்டுக்குள்ளிருந்து தெருவுக்கு ஓடிவரும். காத்துக்குக் காத்தாடி விர்ரென்று அசைந்தாப் போல அவனது குழல் சத்தம் அவர்களுக்குள் ஒரு அசைவை ஏற்படுத்தி விடுகிறது போலும். வீட்டுக்குள் அதுவரை தூங்கிக் கொண்டிருந்த குழந்தையே கூட விலுக்கென்று விழித்து எழு,ந்து உட்கார்ந்து கொள்ளும். கைக்குழந்தை வைத்திருக்கிறவர்கள் புன்சிரிப்புடன் அவர்களே வேடிக்கை காட்ட என்று வாசலுக்கு இடுப்புக் குழந்தையுடன் ஓடிவந்து நின்றார்கள். வேடிக்கை பார்க்கிறவர்களை வேடிக்கை பார்க்க, என்று பெரியவர்களும் வந்து நின்றார்கள். எல்லா வீட்டு வாசல்களும் சட்டென மனிதர்களால் நிறைந்தாப் போலிருந்தது. பிள்ளைகள், வாலிபர்கள், பெரியவர்கள் எல்லாருடைய முகமும் அப்போது பிரகாசமாய் மலர்ந்திருந்தது.
குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே அவன் மகிழ்ச்சி அளிப்பவனாய் இருந்தான். இந்துக்களின் சான்ட்டா கிளாஸ் அவன். அவன் கையில் ஏந்தி வரும் தட்டி, அதுவே கிறிஸ்துமஸ் மரம்!
அவனை மற்ற நாட்களில் பார்க்க முடிவது இல்லை. ஒருவேளை அவனை பஸ் நிறுத்தம் அருகில், பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் என பார்க்க முடியுமோ என்று நான் தேடியும் இருக்கிறேன். பஜார்ப் பக்கம் திடீர் திடீரென்று வியாபாரங்கள் நடக்கும். ஒரு சைக்கிளில் இருந்து ஜவுளிகள் இறக்கி விலை கேட்கச்சொல்லி, ஒருதரம் ரெண்டுதரம் மூணுதரம், என்று ஏலம் விடுவார்கள். எதையெடுத்தாலும் பத்து ரூவா என்று திடீர்க் கடைகள் தெரு ஓரங்களில் போடுவார்கள். ஊர்த்திடலில் அரசியல் கூட்டங்கள் எதாவது நடந்தால், சாயந்தரத்தில் இருந்தே கட்சிப் பாடல்கள், ஹனிபா பாடலோ, சி. எஸ்.ஜெயராமன் பாடலோ காதைப் பிளக்கப் போடுவார்கள். மெல்ல கூட்டம் சேரும். அண்ணாதுரை எப்பவோ செத்தாச்சி. ஜெயராமனுக்கு இன்னும்அழுகை நிற்கவில்லை.
அப்படி இட்ங்களில் எல்லாம் கூட அந்தக் குழல்க்காரனை என் கண்கள் தேடின. அவன் தட்டுப்பட்டதே இல்லை. அவன் இந்த ஊரே இல்லை என்றுதான் தோன்றுகிறது. நடந்தே தான் வருகிறான். சைக்கிள் போல எதுவும் அவனிடம் இல்லை. எந்த ஊரில் இருந்து இவ்வளவு தூரம் நடந்து வருகிறானோ தெரியாது. இதில் என்ன லாபம் கிடைத்து விடும்? நடந்தே வேறுஊருக்கு வந்து வியாபாரம் செய்கிறானே, என்றிருந்தது. அவனுக்கு இந்த வேலை பிடித்திருக்க வேண்டும். தனது சொந்தக் கவலை என்ன இருந்தாலும் ஊருக்குள் நுழைகிற அந்த நேரம் அவன் தன்னையே புதுப்பித்துக் கொள்கிறானோ. அது அவனுக்கும் வேண்டியிருக்கிறதோ என்னவோ, என்று நினைத்தேன்.
·        
அடுத்த வீட்டில் ரஞ்சினி. நாலாம் வகுப்புக் குழந்தை. அதற்கு தலைமுடி இன்னும் நீளமாய் இருந்திருக்கலாம் என்கிற ஆசை. தூக்கித் தூக்கி முன்னால் விட்டுத் தடவிக் கொண்டிருக்கும். நல்ல நாள் விசேஷம் என்றால் பட்டுப்பாவாடை அணியப் பிடிக்கும். கண்ணுக்கு மை. பின்னலோடு சௌரி சேர்த்து இடுப்பு வரை நீட்டிக்கொண்டு, அப்போது அவள் நடையே எத்தனை மாறிப்போகும். உலகமே துச்சம் அப்போது அவளுக்கு. அடியே ஒரிஜினல் தலைமுடி இருந்தால் எங்கபாடு அவ்ளதான். இடுப்பு சுளுக்கிக்கப் போறதுடி குட்டி. எதிர்வீட்டில் சேகர் என்ற பையன். தெருவில் வரும்போது எதாவது கல்லை வீடுவரை எத்திக்கொண்டே வருவான். வாயில் எப்ப பார், இந்த வயசிலேயே விசில். குறும்பு கொப்பளிக்கும் கண்கள். ஊரில் பெரியவர் சின்னவர் என்று இல்லாமல் எல்லாருக்கும் பட்டப்பேர் வைத்துத் திரிகிறான்.
எனக்குக் கூட எதாவது வைத்திருப்பான்.
சற்று உள்ளொடுங்கிய வீட்டில் அந்தக் குழந்தை மகேஸ்வரி. இன்னும் ஒரு வயசு ஆகவில்லை அதற்கு. வேத்து முகம் கிடையாது. எல்லாரையும் பார்த்துச் சிரிக்கும். வாயில் விரலைப்போட்டுக் குதப்பி உடம்பெல்லாம் எச்சில் வழியும். உடம்பே சப்பாத்தி மாவாட்டம் தொப்பையை அமுக்கச் சொல்லும். இப்பவே அதுக்கு தலை முடி புசுபுசுவென்று நிறைந்து காடாய்க் கிடக்கிறது. மகேஸ்வரியை யிட்டு அவள் அம்மாவுக்கு ரொம்பப் பெருமை. எப்பவும் அவள் குழந்தையை இடுப்பில் இருந்து இறக்கி விடவே மாட்டாள்.
எதிர்சாரியில் மாடிவீட்டில் குடியிருக்கும் ரங்கசாமிக்கு ஒரு பெண், ஒரு பையன். இரண்டுமே சின்னஞ் சிறுசுகள். எப்பவும் அவர்கள் வாசலிலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று ஊவென்று அவர்களின் சத்தம் கேட்கும். யாராவது கீழே விழுந்திருக்கலாம். சண்டை வலித்து அடிபட்டுக் கொண்டிருக்கலாம். வெளியே வந்து பார்க்கவே வேண்டியது இல்லை. அந்த சைரனுக்கு அம்மா மாடியில் இருந்து இற்ங்கிவந்து குழந்தையை மொத்துவதும் கத்துவதும் கேட்கும். அம்மா வந்தவுடனேயே அவனோ அவளோ அழுவதை நிறுத்தி யிருப்பார்கள். என்றாலும் அவளை வரவழைத்த பின் வெறுமனே அவள் திரும்ப மேலே போக மாட்டாள். குழந்தையை ஒரு சாத்தாவது சாத்தினால்தான் அவளுக்குத் திருப்தி.
அந்தத் தெருவில் பத்து பதினைந்து குழந்தைகளுக்கு மேல் இருக்கிறார்கள். காலையும் மாலையும் தெருவே அமளிதுமளிப் பட்டது. இராத்திரியானாலும் தெரு விளக்கடியில் பையனும் பொண்ணுமாய்க் கலந்தே விளையாடினார்கள். அடிக்கடி பெத்தவர்கள் வீட்டுக்குள்ளே யிருந்து வந்து அவர்களைக் கூப்பிடுவார்கள். “வரேம்மா. நீ போ.” திரும்ப விளையாட்டு தொடரும்.
ஞாயிறானால் இந்தச் சத்தம் இரட்டிப்பாகி விடும். அத்தோடு இந்தக் குழல்க்காரன் வேறு வந்துவிட்டுப் போயிருப்பான். ஆளுக்கு ஒரு பீப்பீ, அல்லது ஊதலை வைத்துக்கொண்டு நமது காதைப் பதம் பார்த்துவிடும். கையில் காத்தாடி வைத்துக்கொண்டு சர்ர்ரென்று ஓடும் சேகர். அட டவுசரைப் பிடி பிடீய். நல்லவேளை. மானம் காப்பாற்றப்பட்டது. வாங்கிய பலூன்கள் எலலாம் அரை மணி ஒரு மணியில் படார் படாரென்று அது வேறு வெடிக்கும். சிறிது கூர்மையான எந்தப் பகுதியில் பட்டாலும் பலூன் தாங்காது. இனி அவர்கள் அடுத்த ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும். விசிலோ கண்ணாடியோ குழலோ, கூட சில நாட்கள் உழைக்கும். அதனால் தான் அவன் தினசரி வராமல் ஞாயிறுகளில் வருகிறானோ என்றிருந்தது.
·        
ஆறு மணிக்கு நாளிதழ் வந்துவிடும். நான் வாசல்பக்கம் நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்வேன். ஞாயிறுகளில் நான் நாளிதழைப் பிரித்தாலும் மனம் லயிக்காது. அந்தக் குழல்க்காரனை நான் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தேன். குழந்தைகள் எல்லாருமே அவனை எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். அது சரி. ஆனால் நானும்! எனக்கே அதில் சிறு சிரிப்பு இருந்தது. அவன் தெருவின் அந்த மூலையில் தலையைக் காட்டினாலே ஹுவென்று பிள்ளைகள் அவனைப் பார்க்க தலைதெறிக்க ஓடும். அவனும் உற்சாகமாகி விடுவான். குழலை தேர்ந்த ரசிகர் கூட்டத்தின் முன்னால் வாசிப்பதைப் போல உடம்பையே ஆட்டி, ஆட்டி, பாம்புக்கு மகுடி வாசிக்கிறாப் போல வாசிப்பான்.
குழல்ச் சத்தம் கேட்டது. நான் புன்னகையுடன் நிமிர்ந்து தெருவின் அந்த ஓரத்தைப் பார்த்தேன். அவன் பின்னால் ஒரு பெண்குழந்தை விந்தி விந்தி வந்து கொண்டிருந்தது. ஞாயிறு காலையிலும் பள்ளிச் சீருடையிலேயே இருந்தது அது. அவன் நின்றான். கையால் முட்டியைத் தொட்டு அழுத்தியபடியே நடந்து வந்தது அது. “என்ன பாப்பா?” “பலூன்...” என்றது அது. “காசு?” “காசு இல்ல” என்றது அது. “அப்பாட்ட கேளு.” “அப்பா இல்ல...” என்றது அது. எந்தத் தெருக் குழந்தை தெரியவில்லை. “அம்மா?” “அம்மா வேலைக்குப் போயிருக்கு” என்றது குழந்தை. அவன் குழந்தையைப் பார்த்தான். “பலூன் இல்ல. போ” என்றான். நடையை எட்டிப் போட்டு வந்தான்.
குழலைத் திரும்ப வாயில் வைத்து ஊத ஆரம்பித்தான். தெருக் குழந்தைகள் பெரிதாய் இரைச்சலிட்டு வீடுகளில் இருந்து வெளியே பாய்ந்தன. மதகுகளைத் திறந்தாப் போலிருந்தது பார்க்க. அந்த போலியோ குழந்தை, அவன் பின்னாலேயே வந்தது. மகேஸ்வரியைத் தூக்கிக்கொண்டு அம்மா வாசலுக்கு வந்தாள். என்ன சத்தம் கேட்டாலும் அம்மாவைப் பார்த்து வாசலைப் பார்க்கக் கைகாட்டும் அது. இன்னும் பேச்சு வரவில்லை. ஆனால் ஜாடையாலேயே ஊரை வித்துரும் அது.
மகேஸ்வரியைப் பார்த்ததும் குழல்க்காரன் நின்றான். ஒரு பீப்பீயை வெளியே எடுத்தான். குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. அவன் குழந்தையைப் பார்க்கக் குனிந்தான். அது எதிர்பாராத நேரம் அவன் கிட்டத்தில் வந்து ப்பீ... என ஊதினான். ஒருவிநாடி விக்கித்து பின் குழந்தை கெக் கெக் என்று சிரித்தது. சுற்றியிருந்த எல்லாக் குழந்தைகளும் சிரித்தன. அந்த போலியோ பெண், அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. குழந்தை சிரிப்பை நிறுத்திவிட்டு அவன் முகத்தைப் பார்த்தது. அவன் திரும்ப அதன் தொப்பையில் காத்து படும்படி ப்பீ... என ஊதினான். திரும்ப கெக் கெக் கெக் என்று குழந்தை அடக்க மாட்டாமல் சிரித்தது.
அதன் அம்மாவுக்கு முகமெல்லாம் மலர்ந்து பூரித்தது. அவன் குழந்தையிடம் பீப்பீயை வாயில் வைத்தான். ஃப்பூ என்பது போல ஊதிக் காட்டினான். குழந்தை வாயில் பீப்பீயை வைத்துக்கொண்டு அது ஃப்பூ, என்றபோது ப்பீ... என்று பெரும் சத்தம் வெளியே வந்தது. குழந்தை கெக் கெக் என்று சிரித்தது. அதன் கண்ணெல்லாம் பெரிசாகி சிரிப்பு முகம் உடம்பு என்று வழிந்தது. அதன் அம்மாவுக்கு அதைவிடச் சிரிப்பு. ஃப்பூ, என்றான் அவன். ப்பீ... என்றது குழந்தை. கெக் கெக் என்று அது சிரித்தபோது சுற்றி நின்றிருந்த எல்லாக் குழந்தைகளும் ஹோவென்று சிரித்து அந்தக் குழந்தையின் தொபையைத் தொட்டு மேலும் உசுப்பேற்றினர். பெத்தவள் ஒரு ஐந்து ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினாள். “நேத்துலேர்ந்து குழந்தைக்கு ஜுரம். இப்பதான் சிரிக்குது” என்றாள் அவள்.
ஒரு வியாபாரம் ஆனதும் கிடுகிடுவென்று வியாபாரம் சூடு பிடித்தது. பலூன் கேட்ட பிள்ளைகளுக்கு அவன் விதவிதமான உருவங்கள் செய்துகாட்டினான். கிடுகிடுவென்று அவன் பலூனுக்குள் காற்றடைக்கிற வேகம் அற்புதமாய் இருந்தது. பொம்மென்று பலூனில் உள்ளே காற்று நிறைவது பசியடங்கிய குழந்தையின் வயிறு போல் உப்பல் கண்டது. நீளமான பலூனில் அங்கங்கே அமுக்கி விட்டு அதை நெளி நெளியாய் மேடு பள்ளங்களாய் ஆக்கினான். ஓரிடத்தில கயிறால் கட்டி மேலது தலை, கீழது உடம்பு என்று வித்தியாசம் காட்டினான். கண்களை மையால் வரைந்தான். பேப்பரால் மூக்கை ஒட்டினான். ரெண்டு காதுகள், கைகள் கால்கள் என தனித்தனி சின்ன பலூன்களை குழாய் போல நீளமாய் ஊதி சேர்த்துக் கட்ட பூனை போலவும், நாய் போலவும் விறுவிறுவென்று உருவங்கள் முளைத்தன.
ஒரு நீலக் கண்ணாடி வாங்கிக்கொண்ட குழந்தை அதை அணிந்துகொண்டு உலகமே நீலமயமாய் ஆகிப்போனதில் ஆச்சர்யப்பட்டது. இன்னொரு குழந்தை பச்சைக் கண்ணாடி வழியே பார்த்தது. அப்புறமாக அக்கா தங்கை ரெண்டு பேரும் கண்ணாடிகளை மாற்றிக்கொண்டு பார்த்தார்கள். ஒரே சிரிப்பு அதுங்களுக்கு. சேகர் ஒரு விசில் வாங்கிக்கொண்டு அங்கே வந்து நின்ற நாயின் கிட்...ட்டே போய் பிர்ர் என்று ஊத நாய் பதறி ஓட்டம் பிடித்தது. எல்லாரும் சிரித்தார்கள். ஏழெட்டு பலூன்கள், விசில், ஊதல் கண்ணாடிகள், என்று ஓரளவு வியாபாரம் ஆனது. அவன் சட்டென்று திரும்பி அந்த போலியோ பெண்ணைப் பார்த்தான். ஒரு ஆப்பிள் பலூனை எடுத்து அவளிடம் “இந்தா” என்று நீட்டினான். அவள் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டாள். “வீட்டுக்குப் போ” என்றான் அவன். அவள் காலை விந்தி விந்தி கிளம்பிப் போனாள்.
·        
இதை எழுத நடுங்குகிறது கை. அடுத்த ரெண்டு மூணு நாளில் அந்தக் குழந்தை, மகேஸ்வரிக்கு உடம்பு ஜாஸ்தியாகி விட்டது. என்ன சாப்பிட்டாலும் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. கை வைத்தியத்துக்கு ஜுரம் கட்டுப்படவில்லை என்றானதும் டாக்டரிடம் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ரெண்டு நாள் ஆஸ்பத்திரியிலேயே வைத்து  வைத்தியம் பார்த்தார்கள். என்ன ஆயிற்று, குழந்தை எப்படி யிருக்கிறது, யாருக்குமே தெரியவில்லை. தெருவில் மத்த குழந்தைகளின் விளையாட்டே அடங்கி விட்டது. எல்லாருக்குமே மகேஸ்வரி ஞாபகம் தான்.
ஒரு ராத்திரி, வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். ஆமாம். வெள்ளி தான். தெருவில் ஹோவென்று சத்தம். காரில் வந்து இறங்கினார்கள். மகேஸ்வரி உயிர் பிழைக்கவில்லை. எல்லாம் சட்டென்று கண்ணைக் கட்டித் திறந்தாப்போல இருந்தது. அந்த ராத்திரியிலும் தெருவே கூடிவிட்டது. அட, உற்சாகமாய் பீப்பீ ஊதிய குழந்தை. அத்தனை ஜுரத்திலும் எப்படி விளையாடியது. குழந்தையின் அம்மா, அவள் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை. அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து வீட்டுக்கு உள்ளே அழைத்துப் போனார்கள். சனிக்கிழமை, அதை அடக்கம் செய்கிற நாள் அன்றைக்கு தெருவே கூடிவிட்டது. அம்மாக்காரி மயங்கியே விட்டாள். அவளையே இப்போது சரியானபடி பார்த்துக்கொள்ள வேண்டுமாய் இருந்தது.
அந்த ஞாயிறு நன்றாகவே விடியவில்லை. போன வாரம் இதே தெரு எப்படி கலகலப்பாய் இருந்தது. நான் நாளிதழுடன் வாசல் வந்து உட்கார்ந்திருந்தாலும் எனக்குப் பதறியது. ஐயோ அந்தக் குழல்க்காரன். வந்துவிடுவானோ, என்று இருந்தது. இப்போது அவன் வராவிட்டால் நல்லது, என்று பதறியது எனக்கு. அந்தக் குழந்தையின் அம்மாவை சமாதானப் படுத்தவே முடியாமல் போகும். மத்த பிள்ளைகள் கூட, அவன் வரவேண்டாம் என்றுதான் நினைப்பார்கள், என இருந்தது எனக்கு.
சாதாரணமாய் ஒரு ஏழு ஏழரை மணி வாக்கில் வருவான் அவன். மணி பார்த்தேன். ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்குப் பதட்டமாய் இருந்தது. மகேஸ்வரியின் அம்மா. அவள் கூட இந்நேரம் அந்தக் குழல்க்காரன் வருவதைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருப்பாள் என்று பட்டது. வராதே அப்பா. அவன் இருக்கும் இடம் தெரிந்திருந்தால் நான் நேரே போயே சொல்லிவிட்டு வந்திருக்கலாம். இப்போது அவன்... வரப்போகிறான். குழலோசை கேட்ட மாத்திரத்தில் இந்த அம்மா, அழுது ஓலமிடப் போகிறாள். இதைத் தவிர்க்க முடியாதா? கடவுளே அவன் வரக்கூடாது. நான் நாளிதழைப் பிரிக்கவே இல்லை. மடியில் கிடந்தது பேப்பர்.
மணி ஏழு தாண்டி விட்டது. எந்நேரமும் அவன் வருவான். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. வழக்கமாய் அவன் வரும் நேரம் இது. இப்படியே மௌனமாய் அமைதியாய்க் கடந்துவிட்டால் நல்லது. அடுத்த வீட்டுப் பெண் ரஞ்சினி வாசல் பக்கமாய் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்ப உள்ளே போனாள். ஆக அவள் காத்திருக்கிறாள். இப்படியே எல்லா வீடுகளிலும் குழந்தைகள் காத்திருக்கின்றனவோ என்று தோன்றியது. என்றாலும் அவன் வரக்கூடாது, என்று தான் நான் நினைத்தேன். இந்தத் துயரம் சிறிது அடங்கட்டும். கடவுளே அவன் வரவேண்டாம்.
ஏழே முக்கால். அவன் வரவில்லை, என்பதில் எனக்கு சிறு ஆசுவாசம் வந்தது. ஏன் வரவில்லை தெரியவில்லை. நல்லவேளை வரவில்லை. எனக்கே உள் புழுக்கமாய் இருந்தது. அப்போது ரஞ்சினி என்பக்கம் வந்து நின்றது. “என்னம்மா?” “காத்தாடி மாமா?” என்றாள் அவள். “வரல்ல” என்றேன் நான். “ஏன்?” என்றாள் அவள். அவள் நெற்றி சுருங்கியது. அப்பாவிடம் அவள் காசு வாங்கிக் கையில் வைத்திருந்தாள். “தெரியல” என்றேன் நான். என்றாலும் எனக்கு அது ஆசுவாசமாய்த் தான் இருந்தது.
சிறிது உலாவிவிட்டு வரலாம் என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். இது என்ன, தேவையில்லாமல் எங்காவது நானே என்னை மாட்டவைத்துக் கொள்கிறேனா என்று இருந்தது. ஆனால் பாவம். மகேஸ்வரி. என்ன அருமையான குழந்தை. யார் கண் பட்டதோ? கால்போன போக்கில் நடந்தேன். ஒரு வாரம்கூடத் தவறாமல் வருவான் அந்த குழல்க்காரன். ரஞ்சினிக்கு அவன் காத்தாடி மாமா. இன்று... என்னாயிற்று அவனுக்கு? ஏன் அவன் வரவில்லை. நான். அதுவரை அவன் வர வேண்டாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவன். என்னாச்சி? அவன் ஏன் வரவில்லை?... என மனம் கிளை பிரிந்தது.
ஆத்தங்கரை மண்டபம் பக்கம் இருந்து வந்தது அந்தச் சத்தம்.. குழல்ச் சத்தம். அது அவன்தான். அவனேதான். அந்தச் சத்தம் எனக்குத் தெரியும். ஆனால். இங்கே என்ன செய்கிறான்? அவனைப் போய்ப் பார்க்கலாம் என்று இருந்தது. அந்தக் குழல் வாசிப்பு. வழக்கமான வாசிப்பு அல்ல அது. அதில் அப்படியொரு சோகம் இருந்தது. மனதை உருக்கும் சோகம். ஏன் இத்தனை சோகம்? நேரே அவனைப் போய்ப் பார்க்க, என் பாதங்கள்... நின்றன. அவனுக்கு சேதி தெரிந்திருக்கும் என்று திடீரென்று எனக்குத் தோன்றியது.
திரும்பி வீட்டைப் பார்க்க நடக்க ஆரம்பித்தேன்.
·        

91 97899 87842

Saturday, January 7, 2017

சிறுகதை – நன்றி பரணி காலாண்டிதழ்
Art Jeeva


மொழிசாராத் திரைப்படங்கள்
எஸ். சங்கரநாராயணன்

குளிக்கப் போகிறோம், என்றுதான் நினைத்தாள், என்றாலும் முகத்துக்கு ரோஸ் பவுடர் போட்டுவிட்டான் சிங்காரம். லிப்ஸ்டிக் வேறு. கருப்பு முகத்துக்கு அது பாந்தமாகவும் இல்லை. காட்சிக்கான உடை... உள்ளாடையின் எலாஸ்டிக் நாடாக்கள் அதிக நீளமாய் வைத்திருந்தார்கள். ஆம்பிளை உடைக்கு இந்த மெனக்கெடல் கூடக் கிடையாது. வெறும் இடுப்புத் துண்டு. அதுவே போதும். லைட். கேமெரா. ரோலிங். ஸ்டார்ட் ஆக்ஷன்... “நல்லா ஈடுபாடா முகத்தில் பாவனை பண்ணும்மா.” அந்த வெளிச்சத்தில், அத்தனை சூட்டில் பாவனையாவது... கண்ணே கூசும். இப்போது பரவாயில்லை. பழக்கம் வந்துவிட்டது.
இது எத்தனாவது படம் என்பதே நினைவில் இல்லை. என்றாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது வேடிக்கை! அல்லது அது வருத்தமாகவும் இருக்கலாம். ஆனால் அவள் வருத்தப்படுவது இல்லை. வருத்தப்பட்டு ஆவது என்ன? அவள் வருத்தப்பட்டால் அதைக் கரிசனமாய் விசாரிக்க யார் இருக்கிறார்கள்? கரிசனப்பட ஆள் இல்லாமல் போனால் அழுகை, சிரிப்பு ரெண்டுக்குமே அர்த்தங் கிடையாது.
ஆனால் ஒண்ணு. அவளைப் பற்றிய அநேக விஷயங்கள் ஊரில் நிறையப் பேருக்கு, அவள் வீட்டில் யாருக்குமே, தெரியாது. அவள் சென்னையில், குடும்பத்தில் எல்லாரும் மதுரையில். அப்பா இல்லை. குடிகார அண்ணன். தங்கைக்கு அவளே கல்யாணம் பண்ணி வைத்தாள். அவளை அவர்கள் முற்றுமாக அறிய மாட்டார்கள். வீட்டின் நடுவே முற்றம் என்றோ, காட்டின் நடுவே பொட்டல் என்றோ, தலையின் மத்தியில் சொட்டை என்றோ கூட... அதை உருவகப்படுத்தலாம், அவள் நிலைமையை.
கூட யார், என்று பார்த்தாள். காளிமுத்து. அப்ப பரவாயில்லை. அனுசரணையானவன். சில சமயம் வெளிநாட்டில் இருந்து வந்து படம் எடுப்பார்கள். பாடாய்ப் பாடுபட வேண்டியதாகி விடும். கதை திரைக்கதை வசனம் எதுவும் அற்ற படங்கள் அவை. மொழிசாராத் திரைப்படங்கள். நாயகன் வெளிநாடு, நாயகி லோக்கல் என்பதே சகஜம் இங்கே. அநேகப் படங்களுக்கு டைட்டிலே கிடையாது. நடிக நடிகை பேர் கூடக் கிடையாது. ஆம்பளை. பொம்பளை. அவ்வளவே. மகா அடையாளம் அது. அந்த வேறுபாடுகளை நாங்களே இதோ தெள்ளத் தெளிவாக அடுத்து விளக்கப் போகிறோம் படத்தில். அது போதாதா?
அதில்கூட பெண் பெண் வகை தனி. அலிகளும் சிலசமயம் இடம் பெறுவது உண்டு. ஒரு ஆண், ரெண்டு பெண். ரெண்டு ஆண், ஒரு பெண், நிறைய ஆண்கள் நிறையப் பெண்கள், என வகை வகையாக எல்லாம் படங்கள் வந்தாயிற்று. கடலை மாவில் எத்தனை விதவிதமாக பட்சணங்கள் செய்கிறார்கள். அதைப்போல. விதம் விதமான ருசிகள் மனுசனுக்கு வேண்டித்தான் இருக்கிறது. பிரதான படம் ஓடுகையில் குபீரென்று தியேட்டர் உள்ளே குதிக்கிற படங்கள். அதுவரை சளசளவென்று சப்தமாய் இருந்த சனங்கள் கப் சிப். வாயைப் பிளந்து ஒரு பார்வை. கூட்டத்தில் நடுத்தர வயசும், கிழவர்களும் அதிகம்.
இப்படி பிட் ஓடும் படக்காட்சிகளுக்கு பெண்கள் முற்றாக அனுமதி இல்லை. சில இலக்கியக் கூட்டங்கள் கடைசி சனிக்கிழமை, ரெண்டாவது ஞாயித்துக்கிழமை என்று குறிப்பிட்ட நாளில் நடப்பது இல்லையா. அப்படி ஏற்பாடுகள் இதற்கும் உண்டு. அந்நாட்களில் ஊரே பரபரத்தது. எப்படியோ காதுங் காதுமாக எல்லாம் பரவியது. இலக்கியக் கூட்டத்துக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு. இலக்கியக் கூட்டங்களுக்கு டீ பிஸ்கெட் போண்டா என்று தந்தாலும் கூட்டமே வராது. இதற்கு? அந்தாக்ல அப்புதுய்யா!
தனியே முழுப் படமாகவும் சில பிரத்யேகத் திரையிடல்கள், தீவிர ரசிகர்களுக்காக, அவர்களது ஆத்ம திருப்திக்காக என உண்டு. சென்சாருக்கே போகாத திரைப்படங்கள். சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளும் திரும்பச் சேர்ந்துகொள்ளும் படங்கள். காமெராவில் ஆன் ஆஃப் தெரிந்தால் அவன் ஒளிப்பதிவாளன். இயக்குநர் தேவையே இல்லை. அல்லது தயாரிப்பாளரே இயக்குநர். நாயகரும் கூட சில சமயம் அவரே.
கதை? அந்த நிமிஷம் தோன்றிய கதை தான். அங்க அவன் உட்கார்ந்திருக்கான். நீ கைல பால் சொம்பு, அல்லது தம்ளர். (எது இருக்கோ அது.) எடுத்திட்டுப் போறே. உள்ளே பால் இல்லாட்டியும் பரவாயில்ல. அவன்கிட்டே நீ போனதும் உன் முந்தானை சரியுது. நல்ல சினிமாவில் இது சிம்பாலிக் ஷாட்! இப்படி முதல் நான்கு நிமிடங்கள் தாண்டியதும் எல்லாப் படங்களும் ஒரேமாதிரி ஆகிப் போகின்றன.
அவன் உட்கார்ந்திருப்பான். கதவு தட்டப்படும். போய் அவன் திறந்தால் அவள் நிற்பாள். பிறகு அதே சம்பவங்கள். அவள் உடைமாற்றிக் கொண்டிருப்பாள். சன்னல் வழியே ஒருவன் பார்ப்பான். கதவைத் தாளிடாமல் ஏன் அவள் உடைமாற்றினாள் தெரியவில்லை. அவன் உள்ளே நுழைந்துவிடுவான். அவனைப் பார்த்து அவள் அதிர்ச்சி யடையவேண்டும். முகத்தில் சலனமே இல்லாத ஒரு நடிப்பு. பிறகு அதே சம்பவங்கள். இம்மாதிரி திரைப்படங்களில் குளிக்கும் போது கூட யாரும் கதவைத் தாளிடுவது இல்லை. அதைத்தான் வள்ளுவர், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்... என்கிறாரோ என்ன கண்றாவியோ?
கொங்குதேர் வாழ்க்கை, என ஓர் 'இறையனார் பாடல்'. பெண்ணின் கூந்தல், அதற்கு இயற்கையிலேயே மணம் இல்லை, என்று பொருள், பரவலான வெளிப்படையான பொருள் உண்டு. தேர்ந்த வித்தகர்கள், தும்பியிடம் நாயகன் யோசனை கேட்கிறானே? ஆகவே பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இல்லை, என்பது பூடகப் பொருள், என்று வாதிடுவார்கள். அதைப்போல?...
பெண் கதவைத் தாளிடாமல் குளிக்கப் போனால், அவள் இவன் உள்ளே வருவதை எதிர்பார்த்தாள், விரும்பினாள், என்றும் ஆன்றோர் பொருள் கொள்ளக் கூடும்.
கல்யாண வீடியோக்கள் பார்த்தால் காட்சிகளுக்கு சம்பந்தம் இல்லாமல் எதாவது இன்ஸ்ட்ருமென்ட்டல் இசை அல்லது பிரபல சினிமாப் பாடல், பின்னணியில் ஓடும். கல்யாணப் பெண் திரும்பத் திரும்ப நாலா திசையிலும் பார்த்துச் சிரிக்கிறதை பின்னணி இசை இல்லாமல் பார்க்க சகிக்காது. அதை எவ்வளவு நேரம் பார்ப்பது? சில வீடியோக்களில் பின்னணி இசையுடனேயே பார்க்க சகிக்காது. அதற்காக இளையராஜாவைப் போய் யாரும் தொந்தரவு செய்வது இல்லை. அதைப்போல இதிலும், இந்தப் படங்களுக்கும் இளையராஜா கட்டுப்படி ஆகாது.. இதிலும் இசை அல்லது ஒட்டாத ஒலிகள் (உதடு ஒட்டிய ஒலிகளும்) சேர்ப்பு உண்டு. இளையராஜா இசையமைத்த சினிமாப் பாட்டு எதாவது எடுத்துப் போட்டுக் கொண்டால் ஆச்சு. (அப்போது அது மொழிசார்ந்த திரைப்படமும் ஆகிவிடும்.) ஒருவகையில் இதுவும் கல்யாண வீடியோ என்று சொல்லலாம். பார்ட் ட்டூ. அதாவது பார்ட் ஒன்னின் மிச்ச சொச்சம். அல்லது தொடர்ச்சி.
பார்ட் ட்டூ என்றாலும் சில வேறுபாடுகள் உண்டு. எந்தக் கல்யாண வீடியோவிலும் குளியல் காட்சிகள் இடம்பெறா. முழு அலங்காரமும் தலை நிறையப் பூவூம் வெட்கமுமாகவே பெண்ணைப் பார்க்கலாம், அதாவது கல்யாணத்தில். அதேபோல இந்த பார்ட் ட்டூ - இடுப்பில் வெறுந் துண்டுடன் மாப்பிள்ளை. இப்படி கல்யாண வீடியோ? வாய்ப்பே இல்லை. பார்ட் ஒன், விதவிதமான ஆடைகள் அணிவது. பார்ட் ட்டூ, அவற்றை அவிழ்ப்பது. அன்றைக்கு ஒரு கலைப்படத்தில், பாவ மன்னிப்பு பாடலே சேர்த்திருந்தார்கள். ஆடை யின்றிப் பிறந்தோமே, ஆசை யின்றிப் பிறந்தோமா?
அவர்கள் ஆசையுடன் ஆடையின்றிக் கிடந்தார்கள்.
·       
ஊருக்கு ஒதுக்குப்புறமாக காலியான வீடு. பெரிய விளக்குகள் எல்லாம் கட்டுப்படி ஆகிறது இல்லை. அதிகபட்சம் ஜுனியர் விளக்குகள். 500 வாட், 1000 வாட் பல்புகள். இந்தப் பக்கம் ஒண்ணு. அந்தப் பக்கம் ஒண்ணு. விளக்கு நிற்கிறதோ, படக்குழுவின் கையோ விரலோ வேலைசெய்கையில் படத்தின் ஃப்ரேமுக்குள் வரக் கூடாது. அநேகமாக வந்துவிடுகிறது. அதுகூடப் பரவாயில்லை. படப்பிடிப்பு நடக்கிறது. குளிக்கப் போன பெண் ஷவரைத் திருகினால் தண்ணீர் வரவில்லை. காமெராவைப் பார்த்து கையால் 'இல்லை' என உள்ளங்கையை மேல்பக்கமாகத் திருப்பிக் காட்டுகிறாள். அதெல்லாமும் நடந்தும் கட் பண்ண முடியாமல் போகிறது. எடிடிங் கூட அற்ற திரைப்படங்கள்.
இம்மாதிரிப் படங்களில் நடிக்கவும் சிறு அனுபவம் தேவையாய்த்தான் இருக்கிறது. எது நடந்தாலும் கலவரப்படாமல் முகத்தில் புன்னகை மாறாமல் நடிக்க முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. காமெரா பக்கம் இருந்து இப்படிச் செய், அப்படிச் செய், என கட்டளைகள் வரும், அதை முகத்தில் நடிப்பில் காட்டாமல் அதன்படி செய்ய வேண்டும். அத்தனை வெக்கையில் உடம்பில் வியர்வை ஆறாகப் பெருகி ஓடுவதைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டியிருக்கிறது. காமெராவுக்கு மறைக்காமல் ஒத்துழைப்பு தர வேண்டியிருக்கிறது. கூச்சப்பட்டால் அத்தனையும் வீண். அந்த வகையில் அவளுக்கு நல்ல பேர் இருந்தது. நல்ல அனுபவம் இருந்தது. என்றாலும் பாவம் கல்யாணம் தான் ஆகவில்லை.
அவர்களுக்கு என்ன தேவை என்பது அவளுக்குத் தெரியும். அதை சிறிது மிகையாகச் செய்து, தன்யோசனையில் அவள் இன்னும் சிறப்பாக்கிக் காட்டினாள். அதாங்க அனுபவம்ன்றது. தனியே முகம் மாத்திரம் காமெராவில் வரும்போது உதட்டைக் கடிப்பதில் அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள். அவளது முத்திரை அது என இந்நாட்களில் ஆகியிருந்தது. அதற்காகவே அவளுக்கு லிப்ஸ்டிக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. லேசாக முன் பின் ஆடியபடியே முகத்தை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திருப்பி உதட்டைக் கடித்தல். படம் பார்க்கிறவன் பேஜாராயிற மாட்டானா?
காட்சி சிறப்பாக வந்தால் எடிடிங் செய்து இன்டர்கட்டில் இதை அடிக்கடி காட்டினால் இன்னும் ஆவேசக் கிளர்ச்சியாய் இருக்கும். சில சமயம் காட்சியில் தவறுகள் நிகழ்ந்து விடும்., வெளிச்சம் குறைந்து, விளக்கு அணைந்து தகராறு செய்தாலோ, மினசாரமே துண்டிக்கப் பட்டாலோ, இந்த இடைக்காட்சியைக் காட்டி, பின் சம்பவத்தைத் தொடரலாம்! ஆக இந்த அளவில் அது சினிமாவின் நுணுக்கமான உத்தியும் ஆகிறது. உத்தி தப்பாகிப் போவதும் உண்டு. அவர்கள் சல்லாபத்தில் இருக்க, மெல்ல சுவருக்கு நகர்ந்தது கேமெரா. சுவரில் ஒரு கடவுள் படம். கையை உயர்த்தி ஆசி வழங்கும் கடவுள்.
ஒளி ஏற்பாடுகளை முடித்து படப்பிடிப்பு துவங்க, சில படங்களில் 'அவன்' சரியாக ஒத்துழைக்காமல், ஒத்து வராமல் படப்பிடிப்பு திகைத்து விடுவதும் உண்டு. அப்போது படக்குழுவில் யாராவது நாயக அந்தஸ்து திடீரென்று அடைவர். மணக்கோலம் பார்க்க வந்தேன். மணமகன் ஆனேன், என நம்மில் ஒரு பாட்டு உண்டு. அதைப்போல. படத்தின் தயாரிப்பாளர், அநேகமாக அவரே பல சந்தர்ப்பங்களில் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்வதும் உண்டு. ஆனால் 'அவள்' சரியாக ஒத்துழைக்கா விட்டால் தான் விஷயம் இன்னும் கடுமையாகி விடும். எடுபடாமலே போய்விடும். மாற்று நடிகையை உடனே தேடிக் கொண்டுவர முடியாது. படப்பிடிப்பை ரத்து செய்யவும் முடியாது.
“சனியன் இவ காமெரா இல்லாமல் நல்லா ஒத்துழைச்சாளேன்னு கூட்டியாந்தேன்” என்பார் தயாரிப்பாளர்.
·       
அவள் இடத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரவே ஒண்ணரை மணி நேரம் எடுக்கிறது. நாலு தெரு தள்ளி பஸ்சில் இறங்கி, பஸ்சின் ஆண்களின் பார்வைகளைத் தவிர்த்த மாதிரியும், தவிர்க்காத மாதிரியும் கடந்து போவாள். சில ஆண்கள் அவள் பின்னால் வருவார்கள். வந்தபின், தெருநாயை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குள் போய்விடும் சிறுவனைப் போல, அவளைத் திகைக்க வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அவள் எப்படி, என அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். அவ்வளவுதான், என அறிய அவளுக்கு ஆயாசமாய் இருக்கும். இந்த ஆண்கள் விவரமானவர்கள் தான். இப்படிப் பெண்களை அவர்களுக்கு மோப்பம் பிடிக்கத் தெரிகிறது. இழுத்திப் போர்த்திக் கொள்ளலாம். அதற்காக இத்தனை தடவையா?
நாலு தெரு கடந்து இந்த வீட்டுக்கு வந்தாள். வீடு வெளியே பூட்டியிருந்தது. அதை அவள் எதிர்பார்த்திருந்தாள். பின் வழியாக உள்ளே வந்தாள். உள்ளே என்ன நடக்கிறது யாருக்குமே தெரியாது. ஒருநாள் முழுக்க அங்கே உள்ளறையில் விளக்கு எரியும். என்றாலும் வெளியே எதுவுமே தெரியாது. மகா அமைதியாகக் கிடந்தது தெரு.
பசித்தது வரும்போதே. நேற்றே கூட அவள் சாப்பிட்டிருக்கவில்லை. கொஞ்சம் வெளியே போய் வந்தாள். எதுவும் சிக்கவில்லை. யாரும் அவளைப் பின்தொடரவில்லை. ஒருத்தன்... கிழவன். அவளுக்குப் பிடிக்கவில்லை. ஹ்ம். அவனை விட்டிருக்க வேண்டாம், என இப்போது மறுநாள் நினைத்தாள். உள்ளே மணி டிபன் பாக்சில் இருந்து அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் சாப்பாட்டுக் குரலில் “வாக்கா” என்று தலையாட்டினான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு இன்னும் பசித்தது.
காளிமுத்துவும் அப்பதான் வந்திருந்தான். “என்னடா லேட்டு?” என்று சாமியப்பன் அவனைக் கோபமாய்க் கேட்டார். “பிள்ளைக்கு உடம்பு சரியில்லை சார்” என்றான் அவன் தயக்கத்துடன். “எதாவது சாக்கு உங்களுக்கு...” என்றார் அவர் எரிச்சலுடன். எனக்குக் கல்யாணம் ஆகவில்லை, என்பது என் பிரச்னை என்றால், கல்யாணம் ஆனது இவன் பிரச்னை, என நினைத்துக் கொண்டாள் அவள். காளிமுத்து அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். அவளும் புன்னகைத்தாள்.
சாமியப்பன் மணி சிங்காரம் என்கிற இந்த காம்பினேசன் அவளுக்குப் புதிது அல்ல. ரெண்டு வாரத்துக்கு ஒரு படம் எடுக்கிறார்கள். இதில் நடிக்க அவ்வப்போது புதுசாயும் ஆள் கொண்டு வருகிறார்கள். ஒருமுறை கனகா என்கிற புதிய பெண்ணுடன் அவளே நடித்திருக்கிறாள். கனகாவுக்கு அது புது அனுபவம். “சொல்லிக் குடுங்கக்கா,” என்று அவளைப் பார்த்துச் சிரித்தாள். “கேள்விப்பட்டது இல்லியா நீ? சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை” என்றாள் இவள். கனகாவுக்கு அத்தனை படிப்பு கிடையாது. இவள் சொன்னது அவளுக்குப் புரிந்ததா தெரியவில்லை. ஹ்ம். படிப்பு என்ன? அவள் பத்து வரை படித்தாள். அதனால் என்ன பயன்? இந்த ரெண்டு பேருக்கு இடையே என்ன வித்தியாசம்? அதொண்ணுங் கிடையாது தான்.
தொலைக்காட்சி பேட்டி என்று போனால், அரைமணி நேரக் கணக்கு. பேட்டி சிறப்பாக இருந்தால் அப்படியே அடுத்த அரைமணிக்கும் ஷுட் பண்ணி, ரெண்டு பகுதிகளாக ஒளிபரப்புவார்கள். அதைப்போல, சின்னப் படங்களாக முடிந்துவிடும் படங்கள் சில. சில படங்கள் ஒரு மணி அளவில் கூட நீளும். அதற்கேற்ப சம்பளம் கூடத் தருவார்களா இங்கே? மாட்டார்கள். என்ன நீ, சரியாவே பண்ணல?.. என்று புலம்பியபடியே தான் கணக்கு பைசல் பண்ணுவார்கள். சில குடிகார ஆட்களையும் சமாளிக்க வேண்டும். (கனகா, ஆள் கில்லாடி. அவளே குடிக்கிறாள். அவளே இவளுக்குப் பாடம் எடுக்கலாம் சில விஷயங்களில்.)
தெரியாத இடங்களில் நடிக்கவோ, கூப்பிட்டால் போகவோ அவள் தயங்கினாள். எல்லாம் நல்லபடியா போயிட்டே இருக்கிறாப் போல இருக்கும். திடீரென்று எல்லாமே குழம்பி ஸ்தம்பித்து விடும். ஒருநாள் ரெய்ட் என்று பயமுறுத்துவார்கள். ஒருநாள் போலிஸ்காரனே இளித்தபடி உள்ளே வருவான். ஹா, படம் எடுக்கிற ஆள் ஒவ்வொருவனும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு ருசி. அதைப்போலவே படங்களிலும் சம்பவங்கள் அமைகின்றன. மென்மையான கடுமையான வக்கிரமான... என பலவகைக் காட்சிகள்.
மணி நல்ல பையன். அவனுக்கு ஒரு விதவை அக்கா. எப்ப அவன் வேலை என்று போனாலும் சாப்பாடு கட்டிக் கொடுத்து விடுகிறாள். “ஒருநாள் வீட்டுக்கு வாங்கக்கா” என்றுகூட அவன் பிரியமாய் அழைத்தான். எப்ப வாய்க்குமோ தெரியவில்லை. மணி அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். “என்னக்கா?” அவன் காதில் “பசிக்குதுறா” என்றாள். “ஐயோ முன்னாடி சொல்லியிருக்கக் கூடாதா? இப்பதான் நான் கொண்டுவந்ததைச் சாப்பிட்டேன்” எனற்வன் “ஃப்ளாஸ்க்ல டீ இருக்கு... கொண்டுவரேன்” என்று போனான்.
“என்ன?” என்றார் சாமியப்பன். மணி ஃபிளாஸ்க்கைத் திறப்பதைப் பார்த்துவிட்டு “அதுக்குள்ளியா? இன்னும் வேலை ஆரம்பிக்கவே இல்லை?” என முகம் மாறினார். “அதைக் கண்டுக்காதீங்கக்கா” என்றபடி ஒரு பாலிதின் கப்பில் டீயை நீட்டினான் மணி. சின்னப் பலகையில் த்ரீ பின் பிளக் பாயிண்ட்டுகள் எடுத்து அதில் இருந்து பெரிய பல்புகளுக்கு இணைப்பு தந்திருந்தது. விளக்கை அவன் ஆன் செய்ய அந்த அறையே மகா வெளிச்சமாகிப் போனது. சுவரின் காரை உதிர்ந்த பகுதிகள் இன்னும் விகாரமாய்த் தெரிந்தன.
அவள் உடைகளை, நீள எலாஸ்டிக் ப்ரா வகையறா, வாங்கிக்கொண்டு உடைமாற்ற பக்கத்து அறை தேடினாள். “இங்கியே மாத்திக்க. என்ன இப்ப?'' என்றார் சாமியப்பன். இடுப்பில் துண்டுடன் காளிமுத்து. கையில் வாட்ச், “இருக்கட்டும்” என்றார் சாமியப்பன். உடைகள் இல்லாவிட்டாலும், பெண்ணுக்கு தங்க அரைஞாண் மாதிரி ஏதாவது, காதில் குண்டலங்களோ வேறு கழுத்து நகைகளோ இருக்கட்டும், என அவர் நினைத்தார். சில சனியங்கள் முழுசாய் உரித்துப் பார்க்க சகிக்காது. எத்தனை படம் எடுத்திருக்கிறார்.
இவள் பரவாயில்லை. கனகா எல்லாம் சுட்டுப்போட்டாலும் கேமெரா முன் லாயக்கே இல்லை. பின்? லாயக்கு... என்றாலும் நம்ம தேவை இதுதானே? கேமெரா 'முன்' தானே? வயசு என்னாவுது? இருபத்தி நாலு அஞ்சி இருக்கும் கனகாவுக்கு. அப்பறம் என்ன “சொல்லிக் குடுங்கக்கா?” எரிச்சலாய் வந்தது அவருக்கு. “அவளுக்கே கல்யாணம் ஆகல்ல. நாங்கதான் சொல்லிக் குடுக்கணும்...” என்றார் சாமியப்பன்.
படப்பிடிப்பு ஆரம்பிக்கு முன் காளிமுத்துவுக்கு வயிர்க்க ஆரம்பித்திருந்தது. அந்த அறையே புழுங்கித் தள்ளியது. விளக்குகள் ஒளிரும் வெளிச்சம் வேறு. அவனுக்கு சம்பந்தம் இல்லாமல் புது டர்க்கிடவல் அவன் இடுப்பில். அவளுக்கும் புதிய உடைகள். உடனே நனைக்கப் போகிறார்கள் அதை. நீள எலாஸ்டிக் பட்டி வைத்த உள்ளாடை. அவளைப் பார்த்தான். அங்கேயே உடை மாற்றிக் கொண்டிருந்தாள் அவள். அவள் கூச்சப் படுகிறதைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனும் அவளுமாய் முன்பே நடித்திருக்கிறார்கள். அவள்வீடே கூட போரூர் தாண்டி எங்கேயோ. எப்படி இதில் வந்து ஜோதியில் கலந்தாள் தெரியவில்லை.
அவன் வந்தது விபத்து போலத்தான். அவன் ஒரு எலெக்ட்ரிஷியன். இம்மாதிரி ஒரு படத்தில் மின்சார வேலைக்கு என வந்தவன், நாயகன் சரியாக நடிக்காததில், இவனுக்கு ஒரு இது. “நான் வேணா நடிக்கட்டுமா சார்?” என அவனே வாயை விட்டான். ஆளும் நல்லா 'பாடி'யா இருந்தான். அன்றிலிருந்து அவனைக் கூப்பிட்டு விட ஆரம்பித்தார்கள். நாலைந்து கம்பெனிகளை அவன் அறிவான்.
அவள் தயாராகி விட்டாள்.
·       
போய் உட்காரும்மா. நீ எதோ புத்தகம் படிக்கிறே. (அது ஒரு மாதிரியான புத்தகம், என தனியே சொல்ல வேண்டியது இல்லை.) அப்படியே உணர்ச்சிவசப் படறே. (உதட்டை அவள் கடிக்கப் போகிறாள். லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள வேண்டும், என நினைத்தாள் அவள்.) அடுத்த ரெண்டாவது நிமிஷம், மொபைலை எடுத்துப் பேசறே. அப்பறம் கதவு தட்டப்படுகிறது. அவன் உள்ளே வருகிறான். (துண்டோடவா?... என அவன் கேட்கவில்லை. இந்தப் படத்தில் எல்லாம் லாஜிக் ஏது? உடையை அவிழ்க்கிறதே நேர விரயம் என்கிற கட்சி உண்டு இங்கே.)
நல்லவேளை டீ கிடைத்தது, என நினைத்தாள் அவள். கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. அல்லாமல் வயிற்றுப் பகுதியைத் தடவித் தடவி அவள் உதட்டைக் கடித்தால் பசி என்றுதான் பாவனை வந்திருக்கும். குஜிலி என்று போட்ட ஒரு புத்தகம் வைத்திருந்தார்கள். கையில் எடுத்து பிரித்து வாசிப்பதாக பாவனை செய்ய ஆரம்பித்தாள். என்ன பக்கம், என்ன வாசிக்கிறாள் கேமெராவில் தெரியாது. அதன் வெளி அட்டை, யாரோ குஜிலி, அதுமாத்திரம் தெரியும் ஃப்ரேமில்.
காளிமுத்து காத்திருந்தான். குழந்தைக்கு உடம்புக்கு இப்ப எப்பிடி இருக்கிறது தெரியவில்லை. பக்கத்து வீட்டு உமாபதியிடம் அம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு வந்து மனைவியிடம் தந்திருந்தான். “24 மணிநேர ஆஸ்பத்திரி எங்கயாச்சும் காட்டுடி,” என்றுவிட்டு வந்தான். காட்டினாளா தெரியவில்லை. ஊரில் எளிய சனங்களைப் பார்க்கும் பாதிபேர் கம்பவுண்டர்களாக இருக்கிறார்கள். இல்லாட்டி போலி டாக்டராகக் கூட இருக்கிறார்கள். குடுக்கற அம்பது ரூபாய், மருந்துடன் சேர்த்து, அதற்கு சர்ட்டிஃபிகேட்டை வெரிஃபை பண்ண முடியுமா?
“கதவுக்கு அந்தப் பக்கமாப் போயி நில்லுப்பா” என்றார் சாமியப்பன்.
அந்தக் காட்சிகள் முடிந்துவிட்டன என்பதையே அவன் கவனிக்கவில்லை. நீள எலாஸ்டிக் நன்னாதான் வேலை செய்யுது. “அக்கா இன்னொரு டீ?” என்று கேட்டான் மணி. நல்ல பையன் அவன். வேணாம், என்று மறுத்தபடி மேலே துண்டால் போர்த்திக் கொண்டாள். அவளே தன் உடைகளை நெகிழ்த்திக் கொள்வதாகக் காட்சி முடிந்திருந்தது. மொபைலில் அழைத்துப் பேசியும் ஆயிற்று.
விளக்குகளை வாசல் பார்க்கத் திருப்பி வைத்தார்கள். அதற்கு சிறிது நேரம் பிடித்தது. உடம்பில் வழிந்த வியர்வையைக் கைக்குட்டை எடுத்துத் துடைத்துக் கொண்டாள். சீக்கிரம் குளித்துவிட்டால் நல்லது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி. சாமியப்பன் கண்டிப்பாகக் குளியல் காட்சி எடுப்பார். என்ன சோப் வாங்கி வைத்திருக்கிறார் தெரியவில்லை. சாண்டல் சோப் எல்லாம் கிடைக்காது. ஹமாம் இல்லாட்டி சந்திரிகா.
வாசல் கதவைப் போய்த திறந்தாள். அவன் காளிமுத்து. இடுப்பில் துண்டுடன். அவனே பாத்ரூமில் இருந்து வந்தாப்போல இருந்தது. அவள் அப்படியே சுவரைப் பார்ககத் திரும்பி திகைப்டன் நெஞ்சை, உஙளளாடைக்கு மேல் பிடித்துக் கொள்கிறாள். அவன் வந்து அவள் கூந்தலை சற்று விலக்கிக் கன்னத்தில் உதடுகளால் உரசுகிறான். குண்டலங்கள் ஆடின. இளையராஜாவுக்கு வேலை. சாமியப்பன் மேலும் கதையைச் சொல்லித் தரத் தேவையில்லை. அதுக்கப்புறம் வழக்கமான படமாக அது மாறிவிட்டது.
கைகளோட கைகள் பிணைகின்றன. விரல்களோடு விரல்கள் சேர்கின்றன.  அவனிடம் இருந்து ஒரு சூயிங்க வாசனை. சில ஆட்களுடன் சாராய நெடியுடன் நடிக்க வேண்டியிருக்கும் அவளுக்கு. அவளது மேக்அப் பவுடர் அவனுக்கு நெடியடித்தது. காதில் குண்டலங்கள் அணிந்திருந்தாள். அவள் அசையுந்தோறும் குண்டலங்கள் ஆடின. சிவப்பான அதரங்கள் துடித்தன. சாமியப்பன் எல்லாவற்றையும் உற்றுப் பார்த்தபடி யிருந்தார்.
“ரைட்” என்றார் அவர் திருப்தியுடன். அப்படியே அவளை நடத்தி கட்டிலுக்கு அழைச்சிக்கிட்டு வரே...”
காமெராவை லேசாய்த் திருப்பினார். திரும்ப விளக்குகளை அணைத்து இடம் மாற்ற வேண்டியிருந்தது. திரும்பப் போர்த்திக் கொண்டாள் அவள். காளிமுத்து “உன்னை மதுரையில பார்த்தேனே?” என்றான். ஆச்சர்யத்துடன் அவனைப் பார்க்கத் திரும்பினாள். “அப்பிடியா? எப்ப?” என்றாள். “போனவாரம்...”
“ஆமா. தங்கச்சி பொண்ணுக்குக் காது குத்து. போயிருந்தேன்” என்றாள் அவள். “எங்க பாத்தீங்க?” என்று கேட்டாள். “மேல மாசி வீதில” என்றான். “நீங்க எங்க அந்தப் பக்கம்?” என்று அவள் கேட்டாள். அவர்கள் பேசியதைக் கேட்டபடியே விளக்குகளை சிங்காரம் மாற்றிக் கொண்டிருந்தான். “என் மனைவியோட மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தேன்” என்றான் அவன்.
“கூப்பிட்டுப் பேசியிருக்கலாமே?”
“கூட இவ இருந்தா” என்று அவன் சிரித்தான். “அவகிட்ட உன்னை எப்பிடி அறிமுகப் படுத்தறது... அப்டின்னு ஒரு யோசனை” என்றான். அவளுக்கு வருத்தமாய் இருந்தது. “தெரிஞ்சவங்கன்னு சொல்லலாம் இல்லே?”
“அவளுக்கு நான் சினிமாவுல நடிக்கிறதாத் தான் தெரியும். என்ன சினிமா என்ன விவரம், தெரியாது” என்றான் அவன். “நான் எப்பிடிச் சொல்றது?” என்றான். “ஒருநாள் என்னையும் ஷுட்டிங் கூட்டிட்டுப் போங்கன்றா அவ!”
ஹ்ம்” என்றாள் அவள். “அன்னிக்குப் பாத்தா... கனகா, அவ தங்கச்சியையே கூட்டியாந்திட்டா” என்றாள்.
சிரித்தார்கள். சிங்காரம் தலையாட்டினான். பீடி குடிக்காமல் அவனால் இருக்கவே முடியாது. அறையெங்கும் பீடி நெடி அடித்தது. சாமியப்பன் காமெராவில் படுக்கையைப் பார்த்தார். கோணமும் வெளிச்சமும் சரியாக இருந்தது. “நான் வேணா சம்பளத்துல பாதி தரட்டுமா?” என்றாள் அவள். அவனுக்குப் புரியவில்லை. “என்னது?“ என்று அவளைப் பார்த்தான். “இல்ல, பிள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னீங்களே. அதான் செலவுக்கு...” அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. “இல்ல பரவால்ல. தேங்ஸ்” என அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
“அப்படியே அவளைக் கூட்டிட்டு படுக்கைக்குப் போ” என்றார் சாமியபப்பன். அவள் மேல்துண்டை உதறிவிட்டு உள்ளாடைகளுடன் நின்றாள். அவன்  அவளைக் கிட்டேவந்து அணைத்தான். போன காட்சியில் கை எங்கே யிருந்தது நினைவு இல்லை. ஷாட் கன்டினியூட்டி செட் ஆவுமா தெரியவில்லை. அதைப் பத்தி சாமியப்பன் கவலைப்படப் போவது இல்லை என்றும் தெரியும் அவனுக்கு.
லைட், என்றார். வளிக்குகள் பளீரென எரிந்தன. காமெரா. ஸ்டார்ட். ரோலிங். ஆக்ஷன்... என்றார் சாமியப்பன்.
இதன் தொடர்ச்சியை வெள்ளித்திரையில் காண்க.
·       


storysankar@gmail.com 91 97899 87842